நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?

29 ஆக

கடையநல்லூர். பசிய வயல்கள் சூழ இருந்தாலும் இது கிராமமல்ல. தொழிற்சாலைகளோ, உற்பத்திக்கூடங்களோ இல்லையெனினும் இதை நகரமல்ல என தள்ளிவிட இயலாது. மக்கள் தொகை அல்லது மக்கள் நெருக்கம், வாழ்முறையில் நுகர்வுப்பொருளாதாரத்தின் தாக்கம், மனோவியல் இவைகளில் நகரியம் அடையாளப்பட்டிருக்க; மக்களோ விரக்தியை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் நிற்கும் ஓர் ஊர். பொருளியல் ஆசைகள் கடையநல்லூரில் போதாமையை ஏற்படுத்தியிருக்க வெளிநாடுகளின் ஈர்ப்பு மோகமாய் தொடங்கி இன்று கடையநல்லூரின் இயல்பாகவே மாறி நிற்கும் தருணம் இது. இதில் அப்படியே ஆற்றுப்பட்டு போய்விடுவதா? இல்லை ஆராய்வதா? உலகளாவிய தாக்கங்கள் கடையநல்லூரிலும் கிளைவிட்டிருக்கையில் நம் பார்வையில் சுருக்கங்களை அனுமதிப்பதா? இல்லை விசாலப்படுத்தலா?

சில பத்தாண்டுகளுக்கு முன்னுள்ள கடையநல்லூருக்கும் இப்போதைய கடையநல்லூருக்கும் உள்ள வித்தியாசத்தை பளீரிட்டுக்காட்டுபவை கட்டிடங்கள். இரண்டாண்டுகள் கடந்து விடுப்பில் ஊர் வந்தால் நிதானித்துச்செல்லும் அளவிற்கு கவனம் ஈர்ப்பவை புதுப்புது வீடுகள். ஆனால் பழைய மனிதர்கள், பழைய சிந்தனைகள். தங்கை தம்பி திருமணம், படிப்பு, பெற்றோரின் மருத்துவ நிர்ப்பந்தங்கள் கூடவே சொகுசு தேடும் வாழ்க்கை. இவைதாம் நம்மை வெளிநாட்டில் விதைத்து வைத்திருக்கும் காரணிகள். நம் தேவைகள் தீர்ந்தனவா? தொடர்கின்றன. கண்முன்னே தொங்கும் புல்லை எட்டிப்பிடிக்க நுரை ததும்ப ஓடும் குதிரையைப்போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மை ஆசுவாசப்பட விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் நம் வாழ்முறைகளை நின்று கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமா?

எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் கட்டுமான வேலைகளைப்போலவே இன்னொன்றும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது நம் கவனத்தை ஈர்க்காமல். கடையநல்லூர் கடைவீதியிலும்(பஜார்) சாலையிலும் இருக்கும் மொத்த கடைகளில் நிரந்தரமாய் இருப்பவைகளை கணக்கிட்டால் 25 விழுக்காடுதான் தேறும். ஏனைய கடைகளெல்லாம் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் வேறு கடையாக மாறிவிடும் அல்லது வேறொருவர் கைகளில் சென்றுவிடும். இதற்கு என்ன காரணம்? வெளிநாட்டில் பொருளீட்டி,  ஊரில் நிரந்தரமாக இருந்துவிட மாட்டோமா எனும்  ஏக்கத்துடன் பற்பல ஆலோசனைகளுடன் கடைவைக்கும் ஒருவர் வெகுவிரைவிலேயே விற்றுவிட்டு மீண்டும் பயணத்தை தயாரிப்பதன் காரணம் என்ன?

முப்பாட்டன் காலம் தொடங்கி நாம் ஏதாவது ஒரு வெளிநாட்டுடன் பந்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது வளைகுடா நாடுகள். ஆனால் முன்னர் இல்லாத ஒரு தன்மை இந்த வளைகுடா பயணத்தில் இருக்கிறது. அது நம் தொழிலை இழந்த தன்மை. பர்மா, ரங்கூன், மலேயா, பினாங்கு, சிங்கை என நாம் நாடு மாறி மாறி ஓடிய போதெல்லாம், தறிநெசவு என்னும் கடையநல்லூரின் மரபுத்தொழிலை நாம் விட்டுவிடவில்லை. அது நம்மை தற்காத்தது, ஆசுவாசப்படுத்தியது, தெம்பூட்டியது, சுயச்சார்பை நமக்கு கற்றுத்தந்தது. இன்றும் அது நம்முடன் இருந்திருந்தால் நம் சிறு முதலீட்டில் ஆரம்பிக்கும் தொழிலை நிச்சயம் தற்காத்திருக்கும், நம் பாலைவன வியர்வையின் பலனை நமக்கே பரிசளித்திருக்கும். ஒரு துணைத்தாங்குதலாக இருந்து நம் பயணங்களின் வேகத்தை மட்டுப்படுத்தி வீடுகளில் ஆளில்லாத நிலையை மாற்றியிருக்கும். ஆம் வளைகுடா பயணங்களுக்கு முன்புவரை யாரும் ஊரோடு வெளிநாடு சென்றுவிடவில்லை, ஒரு தெருவுக்கு பத்து இருபது பேர் தான் வெளிநாட்டில் இருந்தனர். உழைக்கத்தகுதி இல்லாதவர்களும் பெண்களும் மட்டுமே ஊரில் இருக்கும் இன்றைய நிலைக்கு பெரிதும் காரணமாக இருந்த தறிநெசவை விட்டுவிட்டதற்கு நாம் மட்டும் தான் பொறுப்பாளிகளா? இல்லை. நாம் மட்டுமே இதற்கு பொறுப்பாளிகளல்ல. அரசியலும் தான் காரணம்.

திமுக, அதிமுக; காங்கிரஸ், பிஜேபி என்று கட்சிகளின் பின்னே முழக்கமிட்டுச்செல்வதும், அதுவா இதுவா என்று போட்டி போட்டு சண்டையிட்டுக்கொள்வதும் தான் அரசியலா? அல்லது கருணாநிதி, ஜெயலலிதா; சோனியா, மன்மோகன், அத்வானி, ராஜ்நாத்சிங் இவர்களெல்லாம் என்ன சொன்னார்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்துவைத்துக்கொள்வது தான் அரசியலா? இல்லை நம் நாட்டை யார் நிஜமாக ஆள்கிறார்கள்? அந்த அரசு யாருக்கு ஆதரவாய் செயல்படுகிறது? அந்த அரசின் செயல்திட்டம் என்ன? எந்த அடிப்படையில் அந்த செயல் திட்டம் வகுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கு நம்மை பாதிக்கிறது? நமது சூழ்நிலைகள் எந்த அளவுக்கு அரசின் செயல்பாடுகளினால் மாற்றமடைகிறது என்பன போன்றவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான் அரசியல். இது எனக்கு தேவையில்லை என யாரும் மறுக்க முடியாது, ஏனென்றால் இது நம்முடைய வாழ்வோடு தொடர்புடையது, நம்மை பாதிக்கக்கூடியது. விசயத்திற்கு வருவோம். நீண்ட நெடுங்காலமாக, மரபாக நம்மோடு தொடர்ந்து வந்த நெசவுத்தொழில் திடீரென நசிவுற்றதன் முதல் காரணம் ராஜீவ் காந்தி அரசு கைத்தறிக்கான சிறப்பு ரகங்களை ரத்து செய்தது தான். அதற்கு முன்பு கைத்தறிக்கான ரகங்களை விசைத்தறியிலோ, வேறு ஆலைகளிலோ உற்பத்தி செய்துவிட முடியாது. கைத்தறிக்கான ரகங்களை கைத்தறி மூலம் மட்டும் தான் நெசவு செய்ய முடியும். இதை நீக்கியதால் தான் கைத்தறிகள் நலிவடைந்தன. இதனுடன் நாம் அதற்காக முன்னர் போராடியதைப்போல் போராடாமல் வெளிநாட்டில் சம்பாதித்து சொகுசாக வாழலாம் எனும் எண்ணமும் சேர்ந்து கொள்ள நம்மூரை விட்டு நெசவுத்தொழில் அகன்றது. இது காங்கிரஸின் செயல் பிஜேபியோ அல்லது வேறு கட்சிகளோ இருந்தால் இதை செய்திருக்காது என்றெல்லாம் கூறமுடியாது. எல்லாக்கட்சிகளின் செயலும் இப்படித்தான் இருக்கும். ஏனென்றால் பெயர்களில் வேறுவேறாக இருந்தாலும் எல்லாக்கட்சிகளின் செயல்பாடும் ஒன்றுதான். இன்னும் தெளிவாகசொன்னால் எந்தக்கட்சியாலும் இப்படியான செயல்களை செய்யாமல் இருக்க முடியாது.

நாம் கைத்தறி நெசவை விட்டுவிட்டதன் பலன் பொருளாதாரங்களில் மட்டும்தானா? இன்று நம் உழைப்பில் பாதி மருத்துவச்செலவுகளுக்காக கரைகிறது. அதிகாலையிலும், பின்மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தெரியும், ஆரோக்கியத்தை நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது. நம்மிடம் தறி இருந்திருந்தால் அது நம்மிடமிருந்து உழைப்பை வாங்கிக்கொண்டு ஆரோக்கியத்தை பரிசாக தந்திருக்கும். மரங்கள் தீய காற்றை உள்ளிழுத்துக்கொண்டு அதற்குப்பதிலாக சுவாசிக்கத்தகுந்த நல்ல காற்றை பரிசளிப்பதுபோல்.

தறித்தொழில் என்பது கேவலமானதா? அதில் கிடைக்கும் வருமானம் குறைவு என்பதைத்தவிர வேறெந்தக்குறையும் இல்லாத அது எப்படி இழுக்கானதாகும்? இந்தத்தொழிலுக்காக நாம் போராடிய போராட்டங்கள் மறைந்து விடவில்லை. பீஸ் ஒணம் என்றும் சொஸைட்டி என்றும் பலரின் நினைவுகளில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நண்பர்களே, நம‌தூர் நெசவுத்தொழிலின் முழு பரிமாணங்களையும் எடுத்துவைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. வெளிநாடு நம்மை வளப்படுத்தியிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களை நீங்கள் எடுத்துவைக்கவேண்டும் என்பதற்கான முன்னூட்டமாகத்தான் இவைகளை கூறியிருக்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை கூர்மையாக எடுத்துவைப்பதன் மூலம் இந்த விவாதக்களத்தை நாம் மென்மேலும் வளர்த்தெடுக்க‌ முடியும். அப்படி வளர்த்தெடுப்ப‌தன் மூலம் சரியானதை தெரிவுசெய்து அதை நமக்கான முன்னேற்றமாய், நமதூருக்கான முன்னேற்றமாய் ஏன் பயன்படுத்தக்கூடாது?

வாருங்கள் நண்பர்களே, உங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பின் ஊடாக தொடர்ந்து இன்னும் பலப்பல பதிவுகளை பல்வேறு தலைப்புகளில் அலசுவோம்.

**************************************************************

இந்தக் கட்டுரையும் இதனைத்தொடர்ந்து இன்னும் சில கட்டுரைகளும் கடையநல்லூர்.ஆர்க் எனும் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன, ஆனால் பிற்பாடு நீக்கப்பட்டுவிட்டன. தேவை கருதி அக்கட்டுரைகள் தொடர்ந்து இங்கு வெளிவரும் மட்டுமல்லாது மேலும் தொடரும்.

Advertisements

3 பதில்கள் to “நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?”

  1. R.Ravichandran ஓகஸ்ட் 29, 2010 இல் 7:31 பிப #

    Cent percent correct i agree with this

Trackbacks/Pingbacks

  1. நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்? | Kadayanallur.org - ஓகஸ்ட் 24, 2011

    […] பதிவு: நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

  2. இதோ இன்னோரு கடையநல்லூர் « - ஜனவரி 2, 2012

    […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: