பாலாற்றுச் சிக்கல்: தண்ணீர் வருமா? தனியார்மயமா?

25 செப்

“பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்தால் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை செல்ல விடாமல் தடுப்போம்’ என, ஆந்திரா விவசாயிகள் அறிவித்தனர்.


பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்ட ஆந்திர அரசு ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அணை கட்டும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், “இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சில நாட்களாக ஆந்திரா அரசு அணை கட்டும் கணேசபுரத்தில், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.


ஆந்திரா வனத்துறை அமைச்சர் பெத்த ராமச்சந்திர ரெட்டி, நீர் பாசனத்துறை அமைச்சர் பொன்னால லட்சுமணய்யா ஆகியோர், நேற்று முன்தினம் மாலை, அணை கட்டும் இடத்தை பார்வையிட்டு கூறியதாவது: இப்பகுதியில் 1,000 அடிக்கு கீழே நிலத்தடி நீர் மட்டம் சென்றதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக இங்கு அவசரமாக, அணை கட்ட வேண்டிய நிலை உள்ளது. நதிநீர் பிரச்னையில் யாருடனும் ஆந்திரா அரசு ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த சட்டங்களும் எங்களை கட்டுப்படுத்தாது. இங்கு 16 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட சிறிய அணை கட்டப்படும். பாலாற்றில் வரும் 53 டி.எம்.சி., தண்ணீரில், 16 டி.எம்.சி., தண்ணீரை எடுக்கும் உரிமை ஆந்திராவுக்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளபடி, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.


பாலாற்றில் வரும் தண்ணீரில் 43 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை தமிழகம் பயன்படுத்தவில்லை. நாங்கள் மனிதாபிமானத்துடன் சென்னைக்கு 15 டி.எம்.சி., கிருஷ்ணா தண்ணீரை வழங்கி வருகிறோம். தண்ணீருக்காக நாங்கள் யாருடனும் சண்டை போடத் தயாரில்லை. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் கட்டும் இந்த சிறிய அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாலாற்றின் குறுக்கே 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், இரு பெரிய அணைகளை கர்நாடக அரசு கட்டி, அதன் மூலம் 489 ஏரிகளை நிரம்பிய போது, தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் ஜனவரி மாதம், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அணை கட்ட மத்திய வனத்துறை அமைச்சகம், ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


குப்பம் மண்டல் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வர ரெட்டி, செயலர் நாக நாராயணா ஆகியோர் கூறுகையில், “”கணேசபுரத்தில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால், சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் செல்லாமல் தடுப்போம்,” என்றனர். அணை கட்ட கூலித் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டது. 100க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் வந்துள்ளனர். கணேசபுரம் – குப்பம் சாலை, மூன்று கோடி ரூபாயில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டும் பணி துரிதமாக துவங்கும் என்பதால், தமிழகத்தில் பாலாற்றை நம்பியுள்ள விவசாயிகள், பொது மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.


ஆன் – லைன் மூலம் டெண்டர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி குறித்து ஆந்திரா மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே 25 அடி உயரம், 125 அடி அகலத்தில் அணை கட்டப்படுகிறது. இதற்கு ஆந்திரா நீர் பாசனத்துறை, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இரு ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்படும். அணை கட்ட, ஏற்கனவே ஆன் – லைனில் விடப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்னும் சில தினங்களில், ஆன் – லைனில் மூன்று தொகுப்பாக டெண்டர் விடப்படும். முதல் டெண்டர் அணை கட்டவும், இரண்டாவது டெண்டர் அணைக் கட்டில் இருந்து தண்ணீர் செல்ல கால்வாய்கள் அமைக்கும் பணிக்கும், மூன்றாவது டெண்டர் அணைக்கட்டைச் சுற்றி இருக்கும் பகுதியின் அபிவிருத்தி பணிக்காகவும் நடைபெறும். தடுப்பணை கட்ட, ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அணை கட்டும் இடத்தை பார்வையிட உள்ளார்.

*********************************************************************

பாகிஸ்தானுடன், பங்களாதேஷ் உடன் ஆற்று நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் பிரச்சனையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாநிலங்களுகிடையிலோ தீராத குழப்பங்கள். தண்ணீர் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் சூழலில் தடுப்பணைகளினால் மட்டுமா பாதகம் வந்துவிடப்போகிறது. ஆந்திராவிடம், கன்னடத்திடம், கேரளத்திடம் தண்ணீர் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அதேநேரம் தண்ணீர் வியாபாரிகளோ ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீர்வள‌த்தையே மொத்தமாக கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தானிய கொள்முதலை அரசு நிறுத்திக்கொண்டு தனியார் கொள்முதலை அறிமுகப்படுத்தியதும் ரிலையன்ஸ் முதலான தரகு நிறுவனங்கள் கிராமப்புறங்களில் கொள்முதல் நிலையங்களைத் திறந்தன. அதுவரை கிராமப்புற சாலை வசதி கேட்டுப் போராடிய மக்களுக்கு லத்திக்கம்மை காட்டிய அரசுகள், தரகு நிறுவனங்களின் தானியப் போக்குவரத்திற்காக கிராமப்புற சாலை வசதிகளை ஏற்படுத்திய போது, கிராமப்புற மக்களுக்காக அதைச் செய்வதாக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதேபோல் இப்போது காட்டாறாய் கவனிப்பற்று ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகட்டி தனியார்களின் வசதிக்காக முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால் பிரச்சாரமோ விவசாயிகளின் பாசனத்தேவைகளுக்காக தடுப்பணைகள் கட்டுவதாக. விவசாயத்தை ஒழித்துக் கட்டுவது அரசின் கொள்கையாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது யாருடைய வசதிக்காக இந்த அணைகள்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: