கடந்தை வண்டுகளும் அதிகாரிகளின் அலட்சியமும்

6 அக்

கடையநல்லூர் அருகே கடந்தை (ஒருவகை பெரிய‌வண்டு) கொட்டி 50க்கும் மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். நேற்று அப்பகுதி வழியாக வந்த விவசாயிகள் பலரை கடந்தை ஓட ஓட விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினை ஒட்டி ஏராளமான வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் வன விலங்குகள் உணவிற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.


இது இப்பகுதியில் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. வன விலங்குகளின் தொல்லைகளுக்கு மத்தியில் கடந்தை கொட்டி விவசாயிகளை பரிதவிக்க வைக்கும் சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக காணப்பட்டு வருகிறது.கடையநல்லூர் நகராட்சிக்கு பிரதான குடிநீர் தரக்கூடிய பூஸ்டர் பகுதிக்கு அருகே ஆற்றுப்படுகையின் கீழ் இறக்கத்தில் 500க்கும் மேற்பட்ட கடந்தைகள் கூடுகட்டி குடியிருந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள கடந்தை ஆற்றுப்பகுதியினை ஒட்டி விவசாயம் மேற்கொள்ள வரும் விவசாயிகளையும், பொதுமக்களையும் கடந்த இரண்டு தினங்களாக பெரும் பாடாய்படுத்தி வருகிறது.


நேற்று முன்தினம் 200க்கும் மேற்பட்ட கடந்தை ஆற்றுப்பகுதிகளின் வழியாக வந்த விவசாயிகளை பல கி.மீ.தூரம் வரை விரட்டி வந்ததுடன் மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலரை கொட்டியது. முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டியதால் பாதிக்கப்பட்டவர்கள் கடையநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.நேற்று ஆற்றுப்பகுதியில் குளிக்க வேனில் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர்.


அப்போது வேனில் சென்றவர்களை கூட்டமாக கடந்தைகள் சுற்றி வந்த நிலையில் பதறிப்போனவர்கள் வேனிற்குள் சென்று கண்ணாடியை அடைத்துக் கொண்டனர். ஆனால் கடந்தை சுமார் 1 மணிநேரம் வேனை சுற்றி சுற்றி வந்துள்ளது. இதனையடுத்து பெரும் சிரமப்பட்டு அப்பகுதியிலிருந்து குளிக்க சென்றவர்கள் திரும்பி வந்துள்ளனர்.மேலும் நேற்று மாலை விவசாயம் மேற்கொண்டு திரும்பிய விவசாயிகள் பலரையும் கடந்தைகள் கூடி பல கி.மீ.தூரம் ஓட ஓட விரட்டியது. இச்சம்பவத்தால் கடையநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.


இதுகுறித்து மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி குமார் கூறுகையில், “”பெரியாற்றுப்படுகையில் நகராட்சிக்கு குடிநீர் தரக்கூடிய பூஸ்டர் அருகில் குடியிருந்து வரும் கடந்தைகள் விவசாயிகளை கடந்த 4 நாட்களாக பாடாய்படுத்தி வருகிறது. இந்த கடந்தைகள் கொட்டியதால் எனது கண்பகுதியில் கடந்த 2 நாட்களாக கடுமையான வீக்கமும், பெரும் வலியும் ஏற்பட்டுள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கடந்தை விரட்டி சென்று கொட்டும் சம்பவம் பெரும் பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அப்பகுதியில் குடியிருந்து வரும் கடந்தைகளை அகற்றிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஏராளமான விவசாயிகளுக்கு கடந்தையினால் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.

********************************************************************

கடந்தை வண்டு பிரச்சனை இப்போது மட்டுமல்ல பல ஆண்டுகளாக கடையந‌ல்லூர் பகுதிகளில் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட பருவகாலத்தில் பரவலாக வெளியில் வரும் வண்டுகளால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பதிப்பு ஏற்படுகிறது. சில ஆண்டுகளில் இது வெளிப்படாமல் போவதும் உண்டு. தொடராக ஏற்படும் இதை முழுமையாய் நீக்குவதற்கு கடையநல்லூர் நகராட்சி எந்த தொடர் நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உயிரிழப்போ, பெரிய அளவில் ஊருக்குள் பரவினால்தான் நகராட்சியின் துயில் கலையுமா?

பின்னூட்டமொன்றை இடுக