பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது

10 ஜன
கடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்றப்பட்டாலும், அந்த அவலங்களால் பெரும்பான்மை பாதிக்கப்பட்டாலும், அந்த மதங்களையும், அவை சார்ந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியதாகவே கருதப்படுகிறது.
மூடத்தனங்களை தோலுரிக்கும் அனைவரும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக புகார்கள் கூறப்படுகின்றன. 

இதற்கு எந்த நாடும், எந்த மதமும் விதிவிலக்காக அமையவில்லை.

எகிப்து நாட்டில் கரீம் சுலைமான் அமீர் என்ற 23 வயதுடைய சட்ட மாணவர்,

இஸ்லாம் மதத்தையும், நாட்டின் அதிபரையும், அந்நாட்டின் அல்-அஸார் மதத்தலைவர்களையும் அவரது பிளாக்குகள் (http://karam903.blogspot.com/,
http://shiningwords.blogspot.com/) மூலமாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். (அவரது வீடியோ பேட்டி: http://www.youtube.com/watch?v=Y_tARm-SF64)

ஆனால் அவரது பிளாக்கின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தால், மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் தேவையற்ற போர்களுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு ஆதரவாகவும் எழுதிய மனித உரிமை ஆர்வலராகவே அவர் செயல்பட்டு வந்துள்ளது தெரிகிறது.

சுமார் இரண்டு மாதங்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியா மாகாணத்தில் உள்ள போர்க் அல்-அராப் சிறையில் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.

அவரது கருத்துகளுக்காக அவரை சிறையில் அடைக்கக்கூடாது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரிமையை பறிக்கும் இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் மட்டுமே நடைபெறுவதாக ஒரு தவறான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பழமை வாய்ந்த மதங்களுள் ஒன்றான கிறிஸ்தவ மதமும் பகுத்தறிவுக்கு எதிரானதாகவே விளங்கியுள்ளது. மதங்களை விமர்சித்தவர்களை அதிகார பலத்தால் மண்டியிட வைப்பதும், அதற்கு மறுப்பவர்களை விஷம் கொடுத்து கொல்வதுமே அம்மதத்தின் வரலாறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல. வேதகால இந்தியாவில் சார்வாகம் மற்றும் லோகாயதவாதம் என்ற பெயரில் நாத்திகம் பேசப்பட்டுள்ளது. எனினும் அதற்கான ஆதாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன; அவ்வாறு பேசியவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதிய ராமாயணத்தில் “ஜாபாலி” என்ற நாத்திக அமைச்சர் ராமனின் பல தவறுகளை சுட்டிக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கம்ப ராமாயணத்திலோ சூத்திரனான சம்பூகன் பெயர் மட்டுமல்ல; நாத்திகனான ஜாபாலியின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் சித்தர்களின் சிந்தனை மரபென்பது மக்களின் மூடத்தனங்களை அகற்றும் பகுத்தறிவு மரபாகவே பெருமளவில் உள்ளது. எனினும் ஆதிக்க சக்திகளை கலங்கடித்த இந்த இலக்கியங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த மரபில் வந்த தோழர் பெரியாரின் போராட்ட வாழ்வு நாம் அறிந்ததுதான்.அவரது சீடர்கள் என்று கூறிக்கொள்வோரின் ஆட்சியிலும் இலக்கியம் என்ற பெயரில் மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுவது ஆன்மிக கருத்துகளே. அதற்கு மாற்றாக உள்ள இலக்கியங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றன. பாடப்புத்தகங்களில், பெரியாரேகூட பெண் விடுதலைப் போராளியாக வருகிறாரே தவிர கடவுள் மறுப்பாளராக காட்டப்படுவதில்லை.

இந்திய அரசியல் அமைப்பில் இந்திய குடி மக்களுக்காக விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளில்

“சமயம், மொழி, பிராந்தியம் அல்லது குறுகிய பிரிவுகளைத்தாண்டி வந்து, இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும் ஒன்றுபட்ட உணர்வையும் உண்டாக்கவும்;

பெண்களின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும்…”
“அறிவியல் ரீதியான அணுகுமுறை, மனிதாபிமானம் மற்றும் ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும்…”

“-ஆவன புரிவதை ஒவ்வொரு குடிமகனும் தனது கடமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்”
என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இந்தக்கடமையை யாராவது செய்யப்போனால் மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகக்கூறி குற்றவியல் சட்டம் உங்களைத் தடுக்கும்.

மதத்தின் பெயரால் செய்யப்படும் எந்த அராஜகத்தையும் விமர்சிக்கக்கூட பெரும்பாலானோர் முன்வருவதில்லை. அவர்களில் பெரியாரின் சீடர்களும், இடதுசாரிகளும் அடக்கம்.

உதாரணமாக கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற அரசு ஆதரவுடன் நடைபெற்ற பயங்கரவாதத்தை சொல்லலாம்.அந்த சம்பவத்திற்கு எதிராக தமிழகத்தில் மக்கள் மட்டுமே கொந்தளித்தனர். அரசியல் தலைவர்கள் சிலர் அந்த சம்பவத்தை ரசித்தனர். மற்ற சிலர் மவுனம் காத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக “தெஹல்கா” பத்திரிகை அண்மையில் மேற்கொண்ட புலனாய்வு இந்திய பத்திரிகை வரலாற்றில் புதிய முத்திரை பதித்தது.ஆனால் சமூகத்தில் அது எதிரொலித்ததா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சில ஊடகங்களைத்தவிர மற்ற ஊடகங்கள் கள்ள மவுனம் சாதித்தன. அரசியல்வாதிகள் அதையும் அரசியலாக்க முயற்சித்தனர். நீதிமன்றங்களோ தங்கள் “கற்றறிந்த” தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டன. ஆக மொத்தத்தில் மிகப்பெரும் சான்றாதாரங்கள் யாருக்கும் பயனின்றி போகும் நிலை.

இஸ்லாம் மதம் இந்தியாவில் சிறுபான்மையாக இருப்பதால் இதுபோன்ற பேரழிவுகளை செய்ய வாய்ப்பில்லை.ஆனால் அம்மதத்தை விமர்சிக்கும் தஸ்லீமா நஸ் ரீன் போன்றவர்களை தாக்கி அம்மத தீவிரவாதிகள் நிறைவு காண்கின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய ஏமாற்றமே கிடைக்கும்.வழக்கு தொடுப்பதிலிருந்து நீதிமன்றம் வரை பெரும்பாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியவர்கள் மதம் சார்ந்தவர்களாகவே இருப்பதால் மதரீதியான குற்றங்களில் ஈடுபடுவோர் சுலபத்தில் தண்டிக்கப்படுவதில்லை.

ஆக, கருத்துரிமை என்பது ஆதிக்கத்தில் உள்ளவர்களுக்கு இணக்கமான கருத்து உள்ளவர்களுக்கே என்பதே உண்மை நிலை. இந்த நிலை நீடித்தால் இன்று எகிப்தின் சட்டமாணவர் கரீம் சுலைமான் அமீர்-க்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ் பிளாக்கர்களுக்கும் ஏற்படாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனெனில் தமிழச்சியின் பிளாக்கில் எழுதப்பட்ட கருத்தை ஏற்கமுடியாமல் அந்த பிளாக்கையே களவாடி அழித்தவர்கள்தான் இந்தியாவின் அதிகார பீடங்களிலும் வீற்றிருக்கின்றனர்.

என்ன செய்யப்போகிறோம்?

நன்றி: மக்கள் சட்டம்

Advertisements

4 பதில்கள் to “பிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது”

 1. metro boy ஜனவரி 11, 2011 இல் 2:18 பிப #

  கிறிஸ்துவர்களும் இந்துக்களும் தம் மதத்தை விமர்சித்தவர்களை கொடுமைப் படுத்தினர் என்று சரித்திர அல்லது
  புராண சான்றுகளை சொல்லி இருக்கிறீர்கள் . ஆனால் நாம் இருப்பது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில்.
  இரண்டு ஐயங்கள்: உங்கள் கூற்றுப் படியே, ஒரு காலத்தில் நடந்து கொண்ட கிறிஸ்துவர்களும், இந்துக்களும் இப்போது அதாவது சமீப காலத்தில், பல மத சமுதாயத்தில் வாழும் போது சகிப்புத்தன்மையுடன் வாழ்கின்றனர். ஆனால் இஸ்லாமியரிடையே அந்த மாற்றம் வர வில்லை.
  இரண்டு: ராமாயணம் கதையா? அல்லது சரித்திரமா? சான்றாக எடுத்துக் கொண்டால் அதை சரித்திரம் என்றே கொள்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நன்றி.

 2. metro boy ஜனவரி 12, 2011 இல் 7:09 பிப #

  The comment sent by me yesterday has not been published.

 3. nallurmuzhakkam ஜனவரி 19, 2011 இல் 7:22 பிப #

  நண்பர் மெட்ரோ பாய்,

  பார்ப்பனிய இந்து மதம் தன்னை எதிர்த்தவர்களை எப்படியெல்லாம் தீர்த்துக்கட்டியது என்பதற்கு வரலாற்று ஆதாரங்களே ஏராளம் உண்டு. அப்படி அவர்கள் தீர்த்துக்கட்டியதைத்தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் எழுதிவைத்தனர். புராணங்கள் புனைவுகள் தான், அதிலிருக்கும் சம்பவங்கள் உண்மையிலிருந்தே புனையப்பட்டன. நந்தனை வள்ள‌லாரை எரித்துக்கொன்றது உண்மை, ஜோதியில் கலந்துவிட்டனர் என கதைகட்டிவிட்டது புனைவு.

 4. iniyavan மார்ச் 22, 2011 இல் 9:02 முப #

  இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன தீர்வு?? உலகளாவிய கடவுள் மத மறுப்பாளர்கள் ஒன்றுகூட வேண்டும். எந்த மதத்தையும் சேராதவர்கள் என்ற பட்டியலை உருவாக்கவேண்டும்.விண்ணப்பங்களில் மதம் என்ற இடத்தில் ‘மனித நேயன்’ என இடம்பெறச்செய்ய வேண்டும்.அல்லது மதம் என்ற கட்டத்தையே எடுத்துவிட்டு,எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் குற்ப்பிட வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: