70 லட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்

19 ஜன

கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களையே நம்பி உள்ளனர். இதனாலேயே, சுதந்திரம் அடைந்ததில் இருந்து, விவசாய தொழிலை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும், மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.மாநில அரசுகளும், விவசாயிகளுக்கு பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன. வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் கடன் ரத்து செய்யப்படுகின்றன.கடன் உதவிகள், மானியம் போன்றவை கிடைத்தாலும் விவசாயம் செய்வது எளிதான செயலாக இல்லை. எதிர்பாராமல் திடீரென பெய்யும் பெரும் மழை, பயிர் செய்ய முடியாத அளவிற்கு கடும் வறட்சி, பனி போன்றவை விவசாயிகளை அவ்வப்போது பதம்பார்த்து வருகின்றன. இதனால், இந்த ஆண்டு சிறப்பான மகசூல் கிடைக்கும் என்று, எந்த விவசாயியும் எதிர்பார்ப்புடன் இருக்க முடியாத நிலை உள்ளது.

இதனால், வாங்கிய கடனையும் சரியான தவணைகளில் கட்ட முடிவதில்லை. விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கினாலும், அதை பெறுவதற்கு சிபாரிசு, கடன் வழங்கும் அதிகாரிக்கு லஞ்சம் என்று கொடுக்க வேண்டியுள்ளதால், கடன் தொகை முழுவதும் விவசாயிக்கு கிடைக்க முடியாத நிலை உள்ளது.இதனால், தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், கடன் சுமை அதிகரித்து ஏராளமான விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடனை கட்ட முடியாமல் தன்மானம், கவுரவம் கருதி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் அதிகம்.விவசாய தொழிலில் கூலி குறைவாக இருப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர்.

இது குறித்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்களை கேட்டபோது, “விவசாய பட்டப்படிப்பு படித்து வேலை இல்லாத விவசாய பட்டதாரிகளை கிராமங்களுக்கு அனுப்பி, விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன விவசாய தொழில் முன்னேற்றங்கள் குறித்து, விவசாயிகளிடம் எடுத்துக்கூறி விவசாயத்தை வளர்க்க அரசு உதவ வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில், உலகில் விவசாய உற்பத்தி குறையும் என்று வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணாக வெங்காயம், தக்காளி போன்ற பொருட்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து விட்டன. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“கடன் தள்ளுபடி’ திட்டம் கண்துடைப்பு : மத்திய, மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து வந்தாலும் அதன் பலன், ஏராளமான ஏழை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. கடன் தள்ளுபடியை விட, பயிர் காப்பீடு திட்டத்தை அதிகரித்தால் பலன் கிடைக்கும். இந்த திட்டம் வெகுவாக நடைமுறையில் இல்லாததால், அதிக மழை, வறட்சி, பனிப்பொழிவு, புயல், பூச்சி தாக்குதல், நோய் போன்ற காரணங்களால் நஷ்டம் ஏற்பட்டு, விவசாய தொழில் முடங்கிப் போய் விடுகிறது. இதனால், விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் நாட்டிற்கும் நஷ்டம் ஏற்படுகிறது.பயிர் காப்பீட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு எளிதாக நிவாரணம் கிடைக்கும். இதனால், விவசாயி தொடர்ந்து நம்பிக்கையுடன் விவசாயத்தை மேற்கொள்ள வழி ஏற்படும்.

**************************************************

இது ஒரு திசைமாற்றும் செய்திக் கட்டுரை(தினமலர்) என்றே கொள்ளலாம். எப்படியென்றால் அரசு உதவிகள் செய்கின்ற போதிலும், இயற்கைச் சீற்றங்களினால் தான் விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகினர் என்று மனதில் பதியும் வண்ணம் இது எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல, 60களில் விவசாயிகளை விவசாயத்தைவிட்டு விரட்ட வெண்டுமென்பதற்காகவே பசுமைப்புரட்சி திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்றுவரை படிப்படியாக உரம் போன்ற இடுபொருட்களின் விலையை உயர்த்தியும், விளை பொருட்களின் விலையை குறைத்தும் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். இயற்கை உரங்களை விட்டு செயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று அரசே விவாசாயிகளை வற்புறுத்தியது. கொட்டப்பட்ட ரசாயண உரங்களால் மண் மலட்டுத்தன்மையாகியது. மறுபக்கம் நீர் நிலைகளை பராமரிக்கும் பணியை அரசு கைகழுவியது. கொள்முதலை விட்டு விலகியது. உரக்கம்பனிகள் நட்டமடைந்தால் உரமானியம் வழங்கிவிட்டு விவசாயிகளுக்கு உதவியதாக விளம்பரப்படுத்திக்கொண்டது என சொல்லிக்கொண்டே போகலாம். அரசு திட்டமிட்டு விவசாயத்தை ஒழித்துக்கட்டுகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோன பின்பும் அதை ஒரு பிரச்சனையாகவே கருதாத அரசின் அலட்சியம் ஒன்றே போதும், இவைகளை நிரூபிக்க.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: