ஆத்மாவும் அதுபடும் பாடும் 2

2 பிப்

ஆத்மா, சொர்க்கம், நரகம், உலகம் அழியும் என்ற கருத்துக்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. மதங்களாக, புரோகிதத் தொழிலை முன்நிறுத்தாத பழங்குடி மலைவாழ் மக்களிடம்  ஆத்மா, சொர்க்கம், நரகம், உலகம் அழியும் போன்ற இக்கருத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை. துர் சக்திபடைத்த தெய்வங்கள் இவ்வுல வாழ்க்கையில் தமக்கு துன்பத்தை தருவதாகவும், நல்ல தெய்வங்கள் தம்மை அந்த துர்தேவதைகளிடமிருந்து (இயற்கை பேரழிவிலிருந்து) காப்பதாகவும் மட்டுமே நம்புகிறார்கள்.


இதற்கு ஒரு காரணம் உள்ளது. ~கடவுள் நம்பிக்கையை~ ஒரு அடக்குமுறைக் கருவியாக இவர்கள் பயன்படுத்தவில்லை.. அதனால் சொர்க்கம் என்ற ஆசையூட்டலும் நரகம் என்ற பயமுறுத்தலும் இவர்கள் உருவாக்கவில்லை. அதனாலேயே இருவகைப்பட்ட தெய்வங்களுக்கும் பலியிட்டு வணங்குகின்றனர். இறந்தபின்னான உயிர் பற்றியோ உடல் பற்றியோ இவர்களிடம் எந்தக்கருத்தும் இல்லை. செத்துவிட்டான் அல்லது துர்தேவதை சாகடித்து விட்டது என்பதற்குமேல் அவர்களிடம் எந்தக்கருத்தும் இல்லை. புரோகிதத் தொழிலையும் சொத்துடமையையும் ஆதரிப்பவர்கள் மட்டுமே மதம் என்ற அடக்குமுறைக் கருவிக்கு சொந்தக்காரர்கள்.

 

இறந்துவிட்ட ஒருவரின் உயிர் (ஆத்மா)பற்றி இசுலாம் என்ன கூறுகிறது?

 

ஒரு உயிர் இறந்துவிட்டால் ஒட்டுமொத்தமான செயல்களை நிறுத்திவிட்டது என்று பொதுவாக நாம் நம்புகிறோம்.  அப்படி இல்லை; அது சாப்பிடுகிறது, நடக்கிறது என்று நான் கூறினால் என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ‘’ஒரு மாதிரியாக’’ என்னைப் பார்ப்பீர்கள். காரணம் இவைகளை எல்லாம் ஒரு உயிர் நிறுத்திவிட்டதை கண்கூடாக நாம் பார்த்து உணர்ந்தபிறகே செத்துவிட்டதாக நம்புகிறோம். புதைத்தும் விடுகிறோம்.


மாறாக இறந்துவிட்ட ஒரு உயிர் நாம் பேசுவதைக் கேட்கிறது, சிந்திக்கிறது என்று கூறினால் அதுவும் உலகை ஆட்டிப்படைக்கும் மதங்களின் புனித நூல்கள் கூறினால்? ஏற்பதா கூடாதா என்ற சிக்கல் வந்துவிடுகிறது. நம்பமாட்டோம் என்று நாத்திகர்கள் கூறினாலும் அவர்களிடம், அது காதால் கேட்கவில்லை, சிந்திக்கவில்லை என்று நிருபியுங்கள் என்று கூறினால் அவர்களாலும் என்னதான் செய்யமுடியும்?. உடல் உறுப்புகள் அழிந்துவிடுகிறதே என்று நாத்திகர்கள் வாதிடலாம். அதனை மத நம்பிக்கையாளர் அறியவே செய்வார்கள். உடல் அழிந்தாலும் ஆத்மா கேட்கிறது, சிந்திக்கிறது என்று கூறினால்? அதனால் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் இப்படிச் சொல்கிறவர்களின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் தீர்மானிக்கிறது. எனவேதான் மதங்கள் ‘நம்பிக்கையின்’’ மீது கட்டமைக்கப்படுகிறது. அதுபோல பார்த்துணர முடியாதவைகள்மீது தன் கற்கனைகளை கட்டவிழ்த்து விடுகிறது.


இதில் ஒன்றுதான் உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்கிறது என்ற கற்பனையும். பாவம் செய்த ஆத்மா பேயாக வந்து மனிதனை ஆட்டிப்படைத்த கற்பனை இதற்கு ஒரு சிறந்த சான்றாக உள்ளது. நகரமயமாக்களும், ஒளிமயமான இரவுகளும், மருத்துவத் துறையின் மனநோய் ஆய்வு வளர்ச்சியாலும் பேய், ஆவி மீதான கற்பனைக்கோட்டை நொறுங்கி விழுந்துவிட்டது. இன்னும் எச்ச சொற்ப நம்பிக்கையாளர்களும் அவர்களை ஏமாற்றுபவர்களும் இருந்தாலும் தர்க்கரீதியாக கட்டமைப்பாளர்களும் பிழைப்புவாதிகளும் காணாமல் போய்விட்டனர். ஆனாலும் உயிர் பிரிந்து சொர்க்கத்திற்கு செல்கிறது என்றும், ஆத்மாவின் ஊர் சுற்றும் உலாதான் உங்களின் கனவு (தூங்கும்போது கானும் நிஜக்கனவைச் சொல்கிறேன்) என்றும் அவர்கள் சொல்லுவதை ஒற்றைவரியில் மறுத்துவிட முடியுமா? அவர்களும் உங்களை சும்மா விட்டுவிடுவார்களா? காலத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப அவர்கள் கைவசம் அறிவியலும் விஞ்ஞானிகளும்  தயாரவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானியின் விளக்கத்தைப் பார்ப்போம்.


திரு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தமது குர்ஆன் மொழிபெயர்ப்பில் தன்னுடைய குறிப்பு பகுதியில் (குறிப்பு எண் 39;42) பின்வரும் அறிவியலை எழுதியுள்ளார்.

 

இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக்கழத்தில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஞினியரிங் பிரிவில் தலைவராக பணியாற்றும் அப்துல்லா அலிசன் (இசுலாத்தை தழுவியபிறகு இட்ட பெயர்) அறிவு மற்றும் உணர்வுகளுக்கு பதிலளிக்கக்கூடிய இசுலாத்துடன் உடனடியாக அறிமுகமாகிக் கொள்ளுமாறு மேற்கத்திய மற்றும் உலக விஞ்ஞானிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய அவருடைய மின் மற்றும் மின்னணுக் கருவிகளின் துணைகொண்டு நடத்திய ஆய்வுமூலம் ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலில் இருந்து வெளிச்செல்கிறது என்றும் அது எப்பொழுது திரும்புகிறதோ அப்பொழுது விழிப்புணர்வு ஏற்படுகிறது என்றும் ஆனால் மரணத்தில் அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை என்பதையும் கண்டறிந்தார். இந்த ஓரு கண்டுபிடிப்புடன் மேலே சொல்லப்பட்ட விஞ்ஞான மாநாட்டிற்கு தேவையான ஆய்வுக் கட்டுரையை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டபொழுது குர்ஆனில் இது குறித்த வாசகத்தை கண்டதும் அவருடைய பிரமிப்புக்கு அளவே இல்லாமல் போனது.


அந்த வசனம் அவரது கண்டுபிடிப்பை முற்றிலும் ஆமோதிப்பது போலவே அமைந்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பிரிவைச்சேர்ந்த டாக்டர் எஹ்யா அலிமுஷ்ரபின் துணையோடு தூக்கமும் மரணமும் ஒரே வழியைச்சார்ந்தவைதாம் என்று விஞ்ஞானபூர்வமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் கூறியபிரகாரம் நிறுபித்துக் காட்டுகிறார்.

 

இதைப்படித்த்தும் ஒருபக்கம் அதிர்ச்சியாகவும் மறுபக்கம் பரிதாபமும் ஏற்பட்டது. இப்படி ஒரு விஞ்ஞானியால் கூறவும் முடியுமா? இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் முடியும் என்றே தோன்றுகிறது. மதங்களுக்கு எதிரான பிரச்சாரம் தவிர்கப்படுமானால் அதிலும் அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்துவதை நமக்கேன் வம்பு என்று இருந்தால் இதற்குமேலும் கூறமுடியும் என்பதே உண்மையாக உள்ளது. இன்னொரு விஞ்ஞானியிருக்கிறார். அவருக்கு இந்த கண்டுபிடிப்பு என்ன உணர்வை தோற்றுவித்ததோ தெரியவில்லை. இதற்கு இப்படிச்சொல்வதைவிட வேறுவிதமாக கண்டுபிடித்துச் சொல்வோம் என்று தோன்றியது போலும். இந்த விஞ்ஞானியும் இன்னொரு விஞ்ஞானியை துணைக்கும் அழைத்துக் கொண்டார். இந்த விஞ்ஞானியின் விளக்கத்தை பார்ப்பதற்குமுன் அந்த விஞ்ஞானியின் அறிவியலுக்குள் சற்று செல்வோம்.


நீங்கள் தூங்கும் ஒருவரை பார்த்திருக்கிறீர்களா? என்ன அற்பத்தனமான கேள்வி என்று தோன்றலாம். ஆனாலும்  இது போன்ற அற்பத்தனமான கேள்விகளை இக் கட்டுரையில் கேட்பது தவிர்க்க முடியாதது. தயவு செய்து ஒருமுறை தூங்கும் ஒருவரை சற்று கவனமாக பாருங்கள். அடுத்து நான் சொல்பவற்றை உண்மையா என்று ஆய்வு செய்யுங்கள்.


இரவு உணவுக்குப்பின் தூங்கச் சென்று தூங்கும் ஒருவரை கவனியுங்கள். அவரின் இதயம் துடிக்கிறது. மூச்சு இழுத்துவிடுகிறார். ஒரு நிலையில் படுத்திருந்தவர் திரும்பி படுக்கிறார். கொசுவத்தியை கொலுத்திவைக்க மறந்துவிட்டதால் கொசு கடித்த இடத்தை சொறிந்து கொள்கிறார். ஒரு சிலர் ஏதோதோ முனகுகிறார்கள். ஒரு சிலர் ஒரு சில தெளிவான சொற்களையும் சொல்கிறார்கள். ஒரு சிலர் ஏதோ சொல்லிக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பூட்டிய கதவை திறந்துகொண்டு வெளியே செல்லவும் முயற்சிக்கிறார். புரண்டு புரண்டு படுத்தவர் திடுப்பென்று எழுந்து அவசர அவசரமாகச் சென்று சிறுநீரோ, மலமோ கழிக்கின்றார். பெரும்பாலான குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீரைக் கழித்துவிடுகின்றன. ஒரு சில பெரியவர்களும் கூட அப்படித்தான்.


‘’கண்ணே எழுந்திருமா’’ என்று அம்மா பலமுறை அமைதியாக எழுப்பியும் அசையாமல் கிடந்தவர் ‘’டேய் எழுந்திரு’’ என்று சற்று குரலை உயர்த்தியதும் விழித்து விடுகிறார். சிலர் அதற்கும் மசியவில்லை. இரண்டு தட்டு தட்டிதான் எழுப்ப வேண்டியுள்ளது. இதில் ஒரு ஆச்சரியமான நிகழ்வும் உள்ளது. அந்தச் சூழ்நிலைக்கு அவர்தான் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்றால் சிறு ஒலியைக்கேட்டாலும் படக்கென்று எழுந்துவிடுகிறார். ஆனால் அருகிலுள்ளவர்களோ ஏதும் அறியாதவர்களாக நிம்மதியாக தூங்குகிறார்கள். இரவுவிளக்கு வெளிச்சத்தில் தூங்கிங்கொண்டிருந்தவர் குழல்விளக்கை இயக்கியதும் சிறிது நேரத்தில் புரண்டு வெளிச்சம் முகத்தில் படாதவாறு திரும்பி படுத்துக்கொள்கிறார். சிலர் இந்த வெளிச்சத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாக உறங்குகின்றனர். இன்னும் ஒரு அதிசயமான செயல் ஒன்றும் நடைபெறுகிறது. யோசித்து யோசித்து விடைகிடைக்காமல் தொடர்ந்து அதற்கான விடையைத் தேடி சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் பலருக்கு தூக்கத்தில் விடை கிடைத்த அதிசயங்களும் உள்ளன.


இன்னும் எத்தனை எத்தனையோ செயல்கள்கள். அத்தனையையும் நீங்கள் ஏதாவது கருவிகொண்டு ஆய்வு செய்து பார்க்கவேண்டிய அவசியம் உள்ளதா? வெற்றுக்கண்களுக்கு புலப்படக்கூடியவைகளே இவைகள்.


இது மட்டுமல்ல. உங்கள் கண்களுக்கு புலப்படாத, தொட்டுணறமுடியாத செயல்களும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இரவு உண்ட உணவு செரிமானச் சுழற்சியடைகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரைப் பிரித்தவண்ணம் செயல்புரிந்துகொண்டே இருக்கிறது. இதயமோ ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல் இரத்தத்தை பம்ப் செய்துகொண்டே இருக்கிறது. அந்த இரத்தத்தை நுரையீரல் வெளியிலிருந்து உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனைக்கொண்டு சுத்தப்படுத்திக்கொண்டை இருக்கிறது. இன்னும் செல்களின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் அழிவு என்று எண்ணற்ற செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளை ஒரு படிப்பறிவில்லாதவர்கள்கூட மறுக்க முடியாத அளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தூங்குவது  என்றால் என்ன? மூளை ஓய்வு எடுக்கிறது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். அதுவும் தவறுதான். உடலின் செயல்கள் அணைத்தும் மூளையால் இயக்கப்படுகிறது என்று அறிவியல் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தூங்குபவனிடமும் கேள்வி புலன், பார்வைப் புலன், தோல்களின் உணர்வுப் புலன் ஆகியவை செயல்படுவதை பார்த்தோம். அது மட்டுமல்லாது நம் விருப்பத்திற்கு கட்டுப்படாமல் (அனிச்சையாக) நடைபெறும் அணைத்து உடல் உறுப்பின் செயல்களும் தூங்கும்போதும் செயல் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மூளை ஓய்வு எடுத்தால் இச்செயல்கள் எவ்வாறு நடைபெறும்?


பார்வை, மற்றும் கேள்வி புலன்களை மட்டும் (கண் மற்றும் காதுடைய செயல்களை மட்டும்) கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி மட்டுமே ஓய்வு எடுக்கும் செயலைச் செய்கிறது. இதுவே தூக்கம். அதுவும் ஒரு குறிப்பிட் அளவு விகிதத்திலே மட்டும்தான். உணர்வின் அளவு மீறும்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவிடுகிறது.


தூக்கம் என்பது உடல் உழைப்பினால் எற்படும் அயற்சியின் அளவைப் பொருத்துள்ளது. அப்படி என்றால் உடலின் உறுப்புகளும் தூக்கத்தில் ஓய்வு எடுப்பதாகத்தான் பொருள்படும். இந்த ஓய்வுக்கும் நான் குறிப்பிட்டுள் மூளை எடுக்கும் ஓய்வுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. மூளை ஓய்வு என்பது அதுவும் ஓரு குறிப்பிட் பகுதி மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு உணர்வுத்திறனை குறைத்துக்கொண்ட ஓய்வு. உடலின் புறவேலைகளைச்செய்யும் உறுப்புகளின் ஓய்வு என்பது உணர்வுத்திறனை இழக்காத உழைப்பிலிருந்து மட்டுமான ஓய்வு. உடல் உள் உறுப்புகள் எப்பொழுதும் ஓய்வு எடுப்பதே இல்லை.


இப்படி என்னவேண்டுமானாலும் தூக்கத்தில் நடக்கட்டுமே. அப்துல்லாஹ் அலிசன் ஏதோ ஒன்றுதானே பிரிந்து செல்வதாக கூறுகிறார். இதை எப்படி மறுக்க முடியும்?


நாம் பார்த்த தூங்குபவனின் செயல்கள் அனைத்தும் இறந்தவனுடைய உடலில் நடைபெறுவதில்லை. இறந்தவர்களுடை உடலில் ஏறபடும் மாற்றம் என்ன? இறந்தவர் ஆடாமல் அசையாமல் மரக்கட்டையாக கிடக்கிறார், உடலின் சூடு சில மணிநேரத்திற்குள் மறைந்து சில்லிட்டுவிடுகிறது. உடல் நிறம் வெழுத்துவிடுகிறது. நாம் கத்தி கொண்டு கிழித்தாலும் எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. 20, 25 மணிநேரத்திற்குப்பிறகு உடல் அழுகி நாற்றமடிக்கத் தொடங்குவதுடன் சதைகள் கழன்று விழத் தொடங்குகிறது. புறநிலைத் தோற்றமான இவைகளுடன் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் இறந்தவுடனே செயலிழந்து விடுகிறது என்பதையும் நாம் இன்று நிருபிக்கத் தேவையில்லை. இவை அனைத்தும் அலி அசனும் திரு.வஹ்ஹாப் அவர்களும் அறியாததில்லை. இங்கேதான் ஆன்மீகத்தின் புனித அறிவு தந்திரமாக வேலைசெய்கிறது. பிரிந்த அந்த ஏதோ ஒன்று திரும்பிவந்தால் விழிப்பு ஏற்படுகிறது. திரும்பி வராவிட்டால் மரணம் ஏற்படுகிறது” என்று சொல்லாடல் தந்திரத்துக்குள் புகுந்துக் கொள்கிறார். செத்தவனும் தூங்குபவனும் ஒன்றுதான் என்று நேரடியாக சொல்வதை தவிர்த்துவிடுகிறார்.  என்ன செய்வது! அவர் விஞ்ஞானியாயிற்றே! அப்படி அவரால் கூறமுடியுமா!


இங்கு நீங்கள் சற்று கவனமாக படிக்கவேண்டும். அந்த ஏதோ ஒன்று தூங்குபவனிடமிருந்து பிரிந்து விட்டாலும் தூங்குபவனிடம் நான் முன்பே பட்டியலிட்டுள்ளபடி எண்ணற்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதாவது தூங்குபவனுடை இந்த எண்ணற்ற செயல்களை அந்த ஏதோ ஒன்று கட்டுப்படுத்தவில்லை என்பது இதன் பொருள். அந்த ஏதோ ஒன்று திரும்பி வராவிட்டால் மரணம் என்றால் இறந்தவனுடைய உடலிலும் துங்குபவனுடை செயல்கள் போல் எல்லாம் நடைபெற வேண்டும். ஆனால் நேர் எதிர்மரையாக செயல்கள் உள்ளது. அதனால் தூங்குபவனும் இறந்தவனும் ஒரே இயற்பியல் நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானால் அந்த ஏதோ ஒன்றின் ஆய்வு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?


குர்ஆன் வசனம் 39;42, உயிர்களை அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும்  தன் உறக்கத்தில் மரணிக்காமலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு தூக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணைவரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்திற்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” என்று கூறுகிறது.


இறந்தவனுடைய உயிர்களை அல்லா கைப்பற்றி தன்னிடம் வைத்துக்கொள்வதோடல்லாமல் எவர் ஒருவர் எப்பொழுதெல்லாம் தூங்குகிறார்களோ அப்பொழுதெல்லாம்கூட அவரது உயிரை அல்லா கைப்பற்றிக் கொள்கிறான். தனது மஹ்புல்-லஹபூல் பலகையில் (ஒவ்வொருவரின் தலைவிதியையும் எழுதிவைத்துள்ள பலகை) ஒருவரின் வாழ்நாள் எவ்வளவு நாள் என்று எழுதிவைத்துள்ளானோ அந்த நாள் வரை தினமும் திருப்பி அனுப்பிவைத்து உலகில் உடலுடன்கூடி உயிராக வாழ வைக்கிறான். என்று இந்த வசனம் கூறுவதுடன் சிந்திக்கின்ற மக்களுக்கு இந்த உண்மையில் அல்லா ஒருவன் இருக்கிறான் எனபதற்கான சாட்சியாக உள்ளது என்றும் கூறுகிறது.


இது தொடர்பான நபிமொழிகளையும் பார்ப்போம்.

புகாரி எண்; 595 அபுகதாதா கூறியது.

நாங்கள் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களை சற்று இளைப்பாறச் செய்யலாமே!’ என்று கேட்டனர். “நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் “நான் உங்களை எழுப்பிவிடுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் படுத்துக்கொண்டனர். பிலால்(ரலி) தம்முதுகை தமது கூடாரத்தின் பால் சாய்துக் கொண்டார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று என்று கேட்டார்கள். “இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால்(ரலி) கூறினார்கள். “நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பும்போது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பும்போது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு “பிலாலே, எழுந்து தொழுக்கைக்கு பாங்கு சொல்வீராக” என்றார்கள்.


இந்த நபிமொழி, தூக்கத்தில் அல்லா உயிர்களை கைப்பற்றி கொள்வதால் நாம் விரும்பும் நேரத்தில் விழிக்க முடியாது என்றும், அல்லா விரும்பும் போது அந்த உயிர்களை திருப்பி அனுப்பிய பிறகே விழிக்க முடியம் என்று நபி கூறியதாக கூறுகிறது.

 

புகாரி 1127:

நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் என்னிடமும் பாத்திமா அவர்களிடமும் வந்தார்கள், நீங்கள் இருவரும் தொழவில்லையா என்று கேட்டார்கள். அப்போது நான் ~அல்லாவின் தூதரே! எங்களின் உயிர் அல்லாவின் கையில் உள்ளன. அவன் எழுப்பும்போதுதான் நாங்கள் தொழமுடியும்.~ என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லளானார்கள். பின்னர் தமது தொடையில் அடித்து ~மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்~ என்று கூறிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.


தூங்கும்போது உயிர்களை அல்லா கைப்பற்றிக்கொள்கிறான். அது திருப்பி அனுப்பப்படும்போதுதானே விழித்தெழ முடியும்! விழித்தெழுந்தால்தானே கடவுளை தொழமுடியும்! என்று அலி அவர்கள் முகம்மதுநபிக்கு பதிலாக கூறும் நபிமொழித் தொகுப்பு இது.


தனது தவறுக்கு பிலால் அய்யோ தூங்கிவிட்டேனே என்று வருத்தப்படும்போது அது பிலாலின் தவறல்ல, அல்லாவின் விருப்பம் என்று கூறுகிறார். அதுவே அலி அவர்கள் தமது தவறல்ல, அது அல்லாவின் விருப்பம் என்று கூறியதும் முகம்மதுநபி எரிச்சலடைகிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.


முகம்மதுநபி சொன்ன அறிவியல் உண்மையைத்தானே (?) அலி அவர்கள் பதிலாக கூறியுள்ளார்கள். அப்படியிருக்க முகம்மதுநபி தர்க்கம் செய்வதாக ஏன் எரிச்சலடைய வேண்டும்? ஒருவேளை முகம்மதுநபி தான் சொன்னதை தானே நம்பவில்லையா? ஆனாலும் இசுலாமிய தத்துவ இயலாளர்கள் இதனை இன்றும் நம்புகிறார்கள். குர்ஆன் கூறியுள்ளதால் நம்பாமல் இருக்கமுடியுமா?

Advertisements

ஒரு பதில் to “ஆத்மாவும் அதுபடும் பாடும் 2”

Trackbacks/Pingbacks

  1. ஆத்மாவும் அதுபடும் பாடும் 3 « நல்லூர் முழக்கம் - பிப்ரவரி 4, 2011

    […] ஆத்மாவும் அதுபடும் பாடும் 2 […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: