இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

19 ஜூன்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

நன்றி: வினவு

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: