கல்விக் கொள்ளையர்களுக்காகவே சமச்சீர் முடக்கம்: அரசு சுற்றறிக்கையின் மறைபொருள்

12 ஆக

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் கடந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் அமலாக்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த ஆண்டு உடனடியாக அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் பல பகுதிகளை நீக்க கல்வித்துறை முடிவு செய்தது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், “நீக்கப்பட வேண்டிய பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துவிட்டும் சில இடங்களில் கறுப்புநிற மார்க்கர் பேனா கொண்டு அடித்தும் பாட புத்தகங்களை 15-ந் தேதி விநியோகிக்க வேண்டும். 16-ந் தேதி முதல் மாணவர்கள் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை வகுப்புகளுக்கு கொண்டு வர வேண்டும். இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து கண்காணிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நீக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் :

தமிழ்பாடம்
2-ம் வகுப்பில் 5-வது பக்கம் முழுவதும் நீக்கப்பட வேண்டும். அதாவது செம்மொழி வாழ்த்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க வேண்டும். 73-வது பக்கத்தில் 3 படங்கள் நீக்க வேண்டும். அதாவது செம்மொழி மாநாட்டு காட்சிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை என்ற பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்.

3-வது வகுப்பில் 5-வது பக்கம் முழுவதும் நீக்கப்பட வேண்டும். அதாவது செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 67-வது பக்கத்தில் 2 படங்கள் மற்றும் ஜுன் 23-27, 2010-ல் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாட்டு கலைநிகழ்ச்சி, ஊர்வல காட்சி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்.

4-வது வகுப்பில் செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 74-வது பக்கத்தில் செம்மொழி மாநாட்டு படங்கள் மற்றும் அதற்குரிய விளக்கங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 75-வது பக்கத்தில் முதல் பத்தி நீக்கப்பட வேண்டும். அதாவது செவ்வியல் மொழிகளிலே செம்மாந்த மொழி நம் செந்தமிழ்மொழி என்று தொடங்கும் அந்த பத்தி முழுவதும் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

5, 7-வது வகுப்புகளில் செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 7-வது வகுப்பில் 98-வது பக்கத்தில் தொ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், கந்தசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, டி.கே.எஸ்.சகோதரர்கள், ஆர்.எஸ்.மனோகர் முதலியோர் இவர்தம் அடியொற்றி நாடகக்கலை வளர உறுதுணை புரிந்தோராவர் என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

8-வது வகுப்பில் செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 7-வது பக்கம் முதல் 12-வது பக்கம் வரை உலக தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்புகள் என்ற பகுதியில் 3 தாள்கள் கிழித்து நீக்க வேண்டும். 109-வது பக்கத்தில் தன்மான இயக்கம் . . . . தமிழ் நாடகத்திற்கு புத்துயிர் ஊட்டி வருகின்றனர் என்பதை கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும்.

9-வது வகுப்பில் செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். செம்மொழி தமிழ் வாழ்த்து உள்ள 3 மற்றும் 4 பக்கங்கள் கொண்ட தாள்களை கிழிக்க வேண்டும். 5-வது பக்கம் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும். 203-வது பக்கத்தில் தமிழ் புத்தாண்டில் தொடக்க விழா என்ற தொடர் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்க வேண்டும்.

10-வது வகுப்பில் செம்மொழி வாழ்த்து ஸ்டிக்கர் மறைக்கப்பட வேண்டும். 17-வது பக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் நிறைவுற்றது என்ற தொடர் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும். 89-வது பக்கத்தில் அறிந்து கொள்வோம் என்ற பகுதி முழுவதும் நீக்கப்பட வேண்டும்.

கவிதை நூல்களுக்கு . . . . கிண்ணமாகும்! தெவிட்டாத தெள்ளமுதமாகு மன்றோ? – முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி – இப்பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்.

100-வது பக்கத்தில் கலைஞரின் இனிய நடையை படித்தறிக. கொடிநாள் . . . . வெற்றி உங்களை தேடி வந்து மாலையிடும் என்ற பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். 239-வது பக்கத்தில் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது என்ற தொடர் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

ஆங்கிலம்
3-வது வகுப்பு ஆங்கில புத்தகத்தில் 26-வது பக்கத்தில் கடைசி பத்தி நீக்கப்பட வேண்டும். உலக தமிழ் மாநாடு 2010 ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெற்றது என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும். 27-வது பக்கத்தில் அந்த மாநாட்டுக்கு தலைவராக முதலமைச்சர் இருந்தார். மாநாட்டு கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

10-வது வகுப்பு ஆங்கில புத்தகத்தில் 177-வது பக்கம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதாவது தஞ்சை பெரிய கோவிலில் என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

சமூக அறிவியல்
4-வது வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 111-வது பக்கத்தில் சென்னை சங்கமம் பற்றிய பகுதி ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும். அதாவது நாட்டுப்புற கலைகள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளித்து கலை உணர்ச்சிக்கு விருந்தளிக்கின்றன. நாட்டுப்புற கலைகளை வளர்த்திட தமிழக அரசு ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

5-வது வகுப்பு சமூக அறிவியலில் 80-வது பக்கத்தில் 3-வது படம் நீக்கப்பட வேண்டும். அதாவது புதிய தலைமை செயலக கட்டிடம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட வேண்டும்.

86-வது பக்கத்தில் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற தொடர் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும். 114-வது பக்கத்தில் தற்போது புதிய தலைமை செயலகம் 2010 மார்ச் 13-ந் தேதி முதல் அண்ணாசாலை, ஓமாந்தூரார் தோட்டத்தில் இயங்கி வருகிறது என்ற தொடர் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

10-வது வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 111-வது பக்கத்தில் தி.மு.க. அரசு என்று தொடங்குவது முதல் 23-ம் நாள் மரணமடைந்தார் என்ற பகுதி வரை கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

112-வது பக்கத்தில் தி.மு.க.வின் என்ற சொல் கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும். அதே பக்கத்தில் 5-வது பத்தி இரண்டாவது வரியில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொல் கறுப்புநிற மார்க்கர் கொண்டு நீக்கப்பட வேண்டும்.

277-வது பக்கத்தில் தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் 3-வது வரியிலிருந்து பத்தி முழுவதும் நீக்கப்பட வேண்டும். அதாவது தமிழக அரசால் . . . . அவசர கால ஊர்தி 108 என்ற பகுதி கறுப்புநிற மார்க்கர் கொண்டு அடிக்கப்பட வேண்டும்.

***********************************************

நீதிமன்றங்களில் சமச்சீர் பாடத்திட்டம் தரமற்றது எனும் வாத்த்தைக் கொண்டு தான் தடை விதிக்க்க் கோரியது தமிழக அரசு. இப்போது அனுப்ப்ப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் அது தரமில்லாத்து எனக் கருதும் பாடங்களின் பட்டியலை அனுப்பியிருக்கிறது. அதில் பெரும்பகுதி குறிப்புகள் பாடத்திட்டத்தில் இல்லாத (தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போல் வைக்கப்பட்டிருந்த) செம்மொழிப் பாடலை நீக்குவதாகவே இருக்கிறது. ஏனையவை செம்மொழி மாநாடு பற்றிய செய்திகள் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய செய்திகள் குறித்த பாடங்கள்.

தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் எனும் அடிப்படையில் காங்கிரஸ் காமராஜர் தொடங்கி, அதிமுக எம்ஜிஆர் வரை வரலாறும் அவர்கள் செயல் படுத்திய திட்டங்களும்படங்களாக இருக்கின்றன. அந்த வகையில் திமுக கருணாநிதி குறித்த பாடங்களும் இடம்பெற்றிருப்பதை இமாலயத் தவறு என்று கூறிவிட முடியாது. வரலாற்று நூல்களில் இன்னமும் வெள்ளையர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் அவர்களின் நிர்வாகத்திறமை குறித்தும் பாடங்கள் இருக்கின்றன. கருணாநிதி குறித்த பாடங்கள் நீக்க வேண்டுமென்றால் இது போன்ற ஒரு சுற்ற்றிக்கையின் மூலம் நீக்கி விட முடியும். ஆனால் சமச்சீர் பாட்த்திட்டம் தரமற்றது என்று கூறியே கடைசி வரை அதை முடக்க நினைத்தது ஜெயா அரசு. இன்றோ தரமற்ற பாடம் என்று எதனையும் சுட்டிக் காட்ட இயலவில்லை என்பதால் தமிழக அரசின் வாதம் பொய்யானது என்றும் உள்நோக்கத்துடனானது என்றும் வெளிப்படையாகிறது.

இன்னும் தனியார் கல்வி நிறுவனங்கள் மெட்ரிகுலேசன் போன்ற பெயர்களை நீக்க முடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: