கடவுள் குறித்த விவாத அறிவிப்பு

21 நவ்

கடவுளின் இருப்பு மனிதனுக்கு இன்றியமையாததா?

கடவுள், மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே என்னை அடையாளப்படுத்தும் கருவியாகி விடக் கூடாது என்பதில் நான் கவனம் கொள்ள விரும்புகிறேன். ஆனாலும், கடவுள் குறித்த விவாதங்களிலேயே நான் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டிய சூழல் நேர்கிறது. மனிதனின் வாழ்வில் மதமோ கடவுளோ ஆழமான பங்களிப்பைச் செய்வதில்லை. ஆனால், மேலோட்டமான பார்வையில் கடவுளே அனைத்தையும் தீர்மானிப்பதாக, தங்கள் வாழ்வை வழி நடத்துவதாக நம்பிக் கொள்கிறார்கள். ஆக கடவுள் குறித்த விவாதம் என்றால் அது வாழ்வின் ஆழமான பார்வைக்கும், மேலோட்டமான பார்வைக்குமான முரண்பாடு என்பது என்னுடைய நிலைப்பாடு.

பதிவர் குலாம் அவர்களை சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்தார். அவர் பதிவுகளின் சுட்டிகள் சிலவற்றை தந்து படிக்கப் பணித்தார். அந்த வகையில் எனக்கும் குலாமுக்குமான விவாதம் செங்கொடி தளத்தில் நடந்தது. அந்த தொகுப்பை, விரும்புபவர்கள் இங்கு படித்துக் கொள்ளலாம். அதில் அவர் பதிவுக்கு எதிர்பதிவு எனும் ரீதியில் விவாதித்துக் கொள்ளலாம், பின்னூட்டத்தில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். அப்போதிலிருந்து நல்லூர் முழக்கத்தில் எதிர்ப்பதிவு இடுவது குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். பின்னர் அவரே நல்லூர் முழக்கத்தில் அழைப்பு விடுத்தது, இந்த தொடர் பதிவுக்கான வாய்ப்புகளை துரிதப்படுத்தியது.

எதிர்ப்பதிவு வகையான இந்த விவாதத்தில் ஒரு பதிவு இடுவதற்கு ஒரு வாரகாலம் போதுமானதாக இருக்கும் என கருதுகிறேன். எனவே பதிவு இடப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் அதற்கான எதிர்ப்பதிவு இடப்பட வேண்டும். (இது குறைந்த கால அளவு என நண்பர் கருதினால் உகந்த கால அளவை குறிப்பிடலாம்) தவிர்க்க முடியாமல் ஒரு பதிவு வெளியிட தாமதமானால் அந்த காலத்திற்குள் தாமதமாவதையும், அந்தப்பதிவை எப்போது பதிவிடமுடியும் என்பதையும் குறிப்பிட்டு பின்னூட்டம் இடவேண்டும். பதிவிட்டதும் எந்தப் பதிவை மறுத்து இடப்படுகிறதோ அந்தப் பதிவில் மறுப்பு இடப்பட்டுள்ளதை பின்னூட்டம் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாதம் தொடர்பான அனைத்தையும் வெளிப்படையாக பின்னுட்டம் இடுவதன் வாயிலாகவே தெரிவிக்க வேண்டும், மின்னஞ்சல் தொடர்பு கூடாது. பொதுவான வேறு விதிமுறைகள் எதுவும் இருந்தால் நண்பர் தெரிவிக்கலாம்.

வழக்கம் போல என்னுடைய வாதங்களை தகுந்த உள்ளீட்டுடனும், போதிய வீரியத்துடனும், வீண் அலங்காரங்களோ, வசைகளோ இன்றி எடுத்துவைப்பேன் என உறுதி கூறுகிறேன்.

அடுத்து, குற்றச்சாட்டைப் போன்ற ஒன்றை என்மீது நண்பர் குலாம் சுமத்தியிருக்கிறார். \\பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்// இதில் கும்மி, தருமி ஐயா, தமிழன் போன்றோர் குறித்து அவர்களே பதில் தரும் பொறுப்புள்ளவர்கள். என்னைப் பொருத்தவரையில் நான் கடவுள் என்ற பொதுவான அம்சத்தைக் கொண்டுதான் பதில் கூறியிருந்தேனே தவிர, குறிப்பாக இஸ்லாத்தை முன்வைத்து பதில் கூறவில்லை. ஆனால் சிலவற்றை விளக்குவதற்கு இஸ்லாத்தையும் எடுத்துக் கொண்டிருந்தேன். அதேநேரம் நண்பர் குலாமின் வாதங்கள் கடவுள் மதம் என்று பொதுவான சொற்களைப் பயன்படுத்தியிருந்தாலும் அவை இஸ்லாத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தன. கடவுளுக்கான வரைவிலக்கணமாக அவர் கூறியிருந்தது ஏனைய மதக் கடவுளர்களுக்கு பொருந்தாமல் இஸ்லாமிய மதக் கடவுளுக்கே பொருந்தியிருந்தது. எனவே என்னுடைய பதிலும் இவற்றை கவனத்தில் கொண்டதாக இருப்பது தான் சரியானது. தவிரவும், நண்பரின் நோக்கம் இஸ்லாமாக இருக்கும் போது அதை தவிர்க்கவும் முடியாது.

அடுத்து, நண்பர் இரண்டு கேள்விகளை விவாதத்திற்கான முன்நிபந்தனையாக குறித்திருந்தார். \\ இஸ்லாமும் அது கூறும் கோட்பாடுகளும் இவ்வுலக வாழ்க்கைக்கு பொருந்தாதென்றால் அதைவிட விரிவாக தெளிவாக எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் வகையில் சட்டங்களை இயற்ற முடியுமா…?
கம்யூனிஷ வர்க்க சட்டங்களால் அந்நிலை முடியும் என்றால் முதலில் அந்த கம்யூனிஷம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்- பாதுக்காப்புகள் சமூகரீதியான மேம்பாடுகள் குறித்து சுருக்கமாக சொல்லுங்கள்., // கடவுள் குறித்த விவாதத்தில் சட்டங்களும், பெண்களுக்கான பாதுகாப்பும் என்ன பாத்திரத்தை வழங்க முடியும்? என எழும் ஐயத்தை ஒதுக்கிவிட்டு நண்பரின் கேள்விகளை எடுத்துக் கொள்ளலாம். முதலில் சட்டம், அரசு, வர்க்கம் என்பவை குறித்து சரியான புரிதல் இருந்தால் தான் இதற்கான பதிலை முழுமையாக உள்வாங்க முடியும்.

மனித இனம் எனும் அடிப்படையில் அனைவரும் ஒன்று என்றாலும் வாழ்நிலை, வாய்ப்புகள், உழைப்பு, உற்பத்தியின் பலன்கள் போன்றவற்றின் அடிப்படையில் மனிதர்கள் பலவாறாக பிரிந்திருக்கின்றனர். இந்த வர்க்கப் பிரிவுகளுக்கிடையே எழும் முரண்பாடுகளைத் முடித்து வைப்பதற்காக தோன்றிய அமைப்பே அரசு என்பது. அந்த முரண்பாடுகளை முடித்துவைக்கத் தோன்றிய வழிமுறைகள் தான் சட்டம் என்பது. இதில் அரசை எந்த வர்க்கம் கைப்பற்றிக் கொள்கிறதோ அந்த வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் சட்டங்கள் வடிக்கப்படுகின்றன. ஒரு வர்க்கத்திற்கு பலன் தரும் வகையில் வார்க்கப்பட்ட சட்டங்கள் அரசின் அதிகாரத்தாலும், பலத்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக ஏற்றுக் கொள்ளச் செய்யப்படுகின்றன. இதுவரை உலகில் பயன்பாட்டில் இருந்த, இருக்கும் அனைத்து சட்டங்களுக்கும் இது பொருந்தும்.

நண்பரின் முதல் கேள்வியை எடுத்துக் கொண்டால் \\எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும்// என்று இரண்டு கருத்துகளை வைத்திருக்கிறார். இஸ்லாமியச் சட்டங்கள் இந்த இரண்டையும் நிறைவு செய்தனவா? இல்லை. ஏற்கனவே இருந்த நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது தான் இஸ்லாம். இஸ்லாம் கூறும் கலாச்சார வழிமுறையை ஏற்று மரபை விட்டுவிட முன்வந்தவர்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடிந்தது தான் இஸ்லாமியச் சட்டம். ஆக, எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் அதன் பணி ஏற்கனவே இருந்துவரும் நடைமுறை வாழ்வை மாற்றுவதும், அரசின் அதிகாரத்தையும் பலத்தையும் கொண்டு அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்வதும் தான். உழைப்புக் கருவிகள் எதுவும் சொந்தமாக இல்லாத, உற்பத்தியின் பலனை குறைந்த அளவே பெறுகிற ஒரு பாட்டாளிக்கும், உற்பத்திக் கருவிகளையும், வாய்ப்புகளையும் கொண்டிருக்கும் உற்பத்தியின் பலனை அதிக அளவில் அனுபவிக்கும் ஒரு முதலாளிக்கும் பொருந்தி வருகிற ஒரே சட்டம் என்று ஒன்று இருக்க முடியுமா? ஒரு சட்டம் அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானதாக, பின்பற்றக் கூடியதாக இருக்க முடியும் என எண்ணுவதே இதில் ஆழமான புரிதல் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகத் தான் கொள்ளமுடியும்.

மேற்கூறிய அடிப்படையில் அமைவது தான் சோசலிச சட்டங்களும் என்றாலும் இரண்டு விதங்களில் அது ஏனைய சட்டங்களிலிருந்து மாறுபடுகிறது. ஒன்று, இதுவரை உலகில் அமைந்த அனைத்துவித அரசுகளும் அதன் சட்டங்களும் சிறுபான்மை வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக கொண்டு அமைந்திருக்கின்றன. சோசலிசம் மட்டுமே பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத்தை ஆளும்வர்க்கமாக கொண்டு அமைந்தது, அமையும். ஆகவே இதுவரையான சட்டங்கள் குறைந்த அளவு மக்களுக்கு சாதகமாகவும், பெருமளவு மக்களுக்கு பாதகமாகவும் இருந்த நிலை மாறி சோசலிசத்தில் பெருமளவு மக்களுக்கு சாதகமாகவும், குறைந்த அளவு மக்களுக்கு பாதகமாகவும் மாறும். இரண்டு, இதுவரை அமைந்த அனைத்து அரசுகளும் அதன் சட்டங்களும் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை தக்கவைப்பதன் மூலம் அரசு எனும் அமைப்பை நீட்டிப்பதை நோக்கமாக கொண்டவை. சோசலிசம் மட்டுமே வர்க்க வேறுபாடுகளை களைந்து மக்களை ஒரே வர்க்கமாக மாற்றும் திட்டத்துடன் அரசு எனும் அமைப்பை உதிரச் செய்வதை நோக்கமாக கொண்டது. எனவே அனைத்து அரசுகளும் வர்க்கங்களை தக்கவைத்துக் கொண்டே வர்க்கச் சட்டத்தை பொதுச் சட்டமாக மாற்றுகையில் சோசலிசம் வர்க்க பேதங்களை அகற்றி மெய்யான பொதுச்சட்டத்தை கட்டியமைக்கும் பணியை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறது. ஆகவே, ஏனைய அனைத்து சட்டங்களை விட சோசலிச சட்டமே சிறப்பானது.

இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், சோவியத்களில் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புகள். அனைவருக்கு கட்டாயக் கல்வி எனும் அடிப்படையில் (முதியோர் கல்வி உட்பட) பெண்கள் முழுமையாக கல்வியறிவு கொண்டவர்களாக ஆக்க சட்ட வழிமுறை ஏற்படுத்தப்பட்டது. குழந்தை வளர்ப்பு, சமையல் போன்ற பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவராத, அடிமைத்தளையில் கட்டுண்டு கிடப்பதை உறுதிப்படுத்தும் உழைப்பு முறையை அகற்றுவதற்காக பொது குழந்தை வளர்ப்பு மையங்களையும், பொது சமையல் கூடங்களையும் ஏற்படுத்தியது. அரசியலிலும், சட்ட வடிவமைப்பிலும் பெண்களின் கருத்துகளும், எதிர்வினைகளும் ஏற்றுக்கொண்டு நிர்வாக விதிகளை திருத்தியது. சமவேலைக்கு சமகூலி முறையை கொண்டுவந்தது, அதாவது ஒரே வேலையைச் செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே கூலி. ஆணும் பெண்ணும் சமமாக கருதப்படுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்தது. இதுபோல் நிறைய கூறலாம், சுருக்கமாக இவை போதுமானவை.

இனி விவாதக் கேள்விகளுக்குள் நுழையலாம். \\நீங்கள் கடவுள் மறுப்பாளர் என்றால் ஏன் கடவுளை மறுக்க வேண்டும்? அப்படி மறுக்கக்கூடிய கடவுள் எப்படிப்பட்டவர்?// \\கடவுள் ஏன் இருக்க கூடாது?// இதில் நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? எனும் கேள்விக்கு செங்கொடி தளத்தில் நடந்த விவாதத்தில் பதில் கூறப்பட்டு விட்டது. அது குறித்து நண்பர் மேல் விளக்கங்கள் அளிக்கும்போது விரிவாக அலசலாம். எனவே, கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை விட கடவுள் இருப்பதாக ஏன் நம்பக் கூடாது? என்பதே பொருட்பிழையற்ற கேள்வியாக இருக்கும் என கருதுகிறேன். இதை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன? இரண்டு, கடவுள் இருப்பதாக கருதப்படுவதால் மக்களுக்கு கிடைத்த தீதுகள் என்ன?

மதவாதிகளின் விளம்பல்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கடவுளின் இருப்பால் இரண்டு முதன்மையான பலன்கள் மக்களுக்கு கிடைப்பதாக கருதப்படுகிறது. ஒன்று, தவறு செய்யாமல் நேரிய வழியில் நடக்க உதவுகிறது. இரண்டு, துயரமான போதுகளில் துவண்டுவிடாமல் ஆறுதலளிக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் கடவுள் குறித்த நம்பிக்கையிலிருந்து பிறந்திருக்கிறதேயன்றி உண்மையிலிருந்து பிறந்த கருத்துகளல்ல. உலகின் பெரும்பான்மையான மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்பவர்கள் தான். உலகில் சட்டரீதியில் குற்றமிழைத்தவர்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே மிக அதிகம். எனவே கடவுள் நம்பிக்கை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது என்பது சரியான கூற்றாக இருக்க முடியாது. அதேநேரம் உலகின் பெரும்பான்மையோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களே இதில் கடவுள் நம்பிக்கையின் பங்களிப்பு இருக்கிறதா? சமூகம் தான் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. குற்றம் வெளிப்பட்டாலோ, தண்டனை கிடைத்தாலோ அதனால் ஏற்படும் சமூக மதிப்பிழப்பு தான் குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் இயல்பான கூடி வாழும் பண்பு, தனிமைப் படுத்தப்படுதலின் வலி, தண்டனையின் மீதான பயம் இவை அனைத்தும் ஒன்றுகூடித்தான் மனிதன் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பெருமளவில் தடுக்கிறதேயன்றி கடவுள் நம்பிக்கை அல்ல. கடவுளின் மீதான நம்பிக்கையும் இதற்கு உதவுகிறது என்றாலும் சமூகத்துடன் ஒப்பிடும்போது சொற்ப அளவுதான்.

எல்லா மதங்களின் கடவுளர்களும் தாங்கள் மக்களை பாதுகாப்பதாக பல வழிகளில் கூறுகின்றன. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மனிதர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்களை கடவுளால் தரப்பட்ட சோதனை எனக் கருதுகிறார்கள். அந்த வகையில் தங்களின் வணக்க வழிபாடுகளை செயல்படுத்துவதன் மூலம் அதிலிருந்து மீளமுடியும் எனும் ஆறுதல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் மெய்நிலையில் எந்த ஒரு அற்ப பிரச்சனையானாலும் அதற்கெதிராக மனிதன் போராடியே மீள வேண்டியதிருக்கிறது. யதார்த்தத்தில் தங்களின் உழைப்பும், போரட்டங்களுமே வாழ்வில் தங்களின் இன்னல்களை, பிரச்சனைகளை தீர்த்திருக்க அதற்கு மாறாக போராட்டங்களின் வெம்மைகளை தணித்துக் கொள்ள பொய்யான இளைப்பாறலை கடவுள் நம்பிக்கையின் மீது அடைகிறான். இந்த இளைப்பாறல் எந்த விதத்திலும் மனிதனுக்கு மீளாற்றலை தந்துவிடுவதில்லை. இதை கடவுள் எனும் கருத்தியல் தான் செய்யமுடியும் என்பதும் இல்லை. தனக்குகந்த எந்த அம்சத்தைக் கொண்டும் இந்த இளைப்பாறலை மனிதன் பெற்றுவிட முடியும். ஆகவே, கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தே தீரவேண்டும் எனும் அவசியம் மனிதனுக்கு இல்லை.

கடவுள் நம்பிக்கையை மனிதன் கொண்டிருப்பதால் ஏற்படும் தீதுகளைப் பார்த்தால், எல்லா கடவுளும், மதங்களும் விதிக் கொள்கையை கொண்டிருக்கின்றன. இதன் சாராம்சமான விளைவு மனிதனுக்கு இந்த உலகில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தீர்வை நோக்கி பயணப்படும் பாதையை மடைமாற்றுவது தான். என்ன நடந்தாலும் அது கடவுளிடமிருந்து வந்தது எனும் நம்பிக்கை ஒருவனிடம் ஏற்பட்டு விட்டால் அவன் நிகழ்வின் மெய்யான காரணிகளை நோக்கி நகரவே மாட்டான். உலகில் மனிதர்கள் மேலெழுந்தவாரியாக சிந்திப்பதும் பேசுவதுமே இதன் சான்று. ஏனென்றால் குழந்தைப் பருவத்திலேயே மனிதனின் சிந்திக்கும் பாதையை கடவுள் நம்பிக்கை கைப்பற்றி விடுகிறது. அதை மீறி சிந்திப்பதற்கு அவனின் சூழலும் அனுமதிப்பது இல்லை. மட்டுமல்லாது, விதிக்கொள்கையை திரளாக பார்த்தால் அது மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை என்றே பொருள் தருகிறது. ஆனால் மனிதன் சிந்திக்கிறான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கப் போவதில்லை. எனவே யதார்த்தத்திற்கு முரணான கருத்தை சிந்தையில் ஏற்றிவைத்திருப்பது தேவையற்றது.

எல்லா கடவுளின் மதங்களுமே ஏதோ ஒரு வடிவத்தில் மறுபிறப்பு கொள்கையை கொண்டிருக்கின்றன. இது மனிதர்களுக்கு ஏற்படும் சரியான கோபங்களைக் கூட தணித்து விடுகின்றன. மக்கள் விரோத செயலொன்றை சந்திக்கும் மனிதன் அதை எதிர்த்து வினையாற்றாமல் கடவுள் தண்டிப்பார் என்று தம் பலம் பலவீனம் சார்ந்து ஒதுங்கிவிடுவது கடவுளின் மறுபிறப்பு வகைப்பாட்டின் பின்னணியிலேயே வருகிறது. ஆனால் துலக்கமான வாழ்வு பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டுமே நிலவுவதால், அந்த வாழ்வில் போரட்டத்திற்கான வீரியத்தை இழந்து விடுகிறான். நிச்சயமற்றதாக இருக்கும் மறுபிறப்பிற்காக நிச்சயமான வாழ்வின் களங்கள் சிதைக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

மனிதனல்லாத பிற உயிரினங்களில் கடவுள் எனும் தாக்கம் இல்லை. ஏனென்றால் அவைகளுக்கு தமது தேவைகளைத் தாண்டிய சிந்தனை இல்லை. மனிதன் மட்டுமே சூழலை தனக்கு உகந்ததாக திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். இதில் அவனுக்கு தோன்றும் இயலாமைகளின் உருவெளியே கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்திக்கான தேவையை ஏற்படுத்துகிறது. அதேநேரம் கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது. ஆகவே கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு, மக்களுக்கு இருந்தே தீர வேண்டும் எனும் காரணி எதுவும் இல்லை என்பதால் கடவுள் இருக்கிறார் எனும் நம்பிக்கை மனிதனுக்கு அவசியமில்லை. அது மனிதனுக்கு எந்த விதத்திலும் பலன் தரப் போவதுமில்லை.

எதிர்ப்பதிவு வகைப்பட்ட இந்த விவாதத்தின் முதல் பதிவான இதில் தொடக்க வாதங்களை வைத்திருக்கிறேன். நண்பர் குலாமின் எதிர்ப்பதிவில் இருக்கும் வீரியத்தைப் பொருத்து என்னுடைய உள்ளீட்டை நான் தீர்மானித்துக் கொள்கிறேன்.

Advertisements

21 பதில்கள் to “கடவுள் குறித்த விவாத அறிவிப்பு”

 1. கோவி.கண்ணன் நவம்பர் 22, 2011 இல் 3:54 முப #

  //உலகில் சட்டரீதியில் குற்றமிழைத்தவர்களில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே மிக அதிகம். எனவே கடவுள் நம்பிக்கை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது என்பது சரியான கூற்றாக இருக்க முடியாது. அதேநேரம் உலகின் பெரும்பான்மையோர் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களே இதில் கடவுள் நம்பிக்கையின் பங்களிப்பு இருக்கிறதா? சமூகம் தான் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. குற்றம் வெளிப்பட்டாலோ, தண்டனை கிடைத்தாலோ அதனால் ஏற்படும் சமூக மதிப்பிழப்பு தான் குற்றம் செய்வதிலிருந்து தடுக்கிறது. //

  எனக்குத் தெரிந்து 100 % சரியான கூற்று

 2. G u l a m நவம்பர் 22, 2011 இல் 8:36 முப #

  அன்பு சகோ செங்கொடி.,

  எதிர் பதிவு அழைப்பு மகிழ்ச்சியளிக்கிறது.,
  எனினும் நீங்கள் சில செய்கைகளை முன்னிருத்தினால் மட்டுமே கருத்து பரிமாறிக்கொள்வது ஏதுவாக இருக்கும்.,

  எந்த செயலை செய்வதற்கும் அதன் மீதான ஆர்வமும் அது வெளிப்படுத்தும் சமூகவிளைவு ஆரோக்கியமாகவும் இருக்கும் என்ற ஆவல் மிகைக்கும் போதே அச்செயலை தொடர்ந்து செயலாற்றுவது நலம்
  ஆனால் தாங்களோ
  //கடவுள், மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே என்னை அடையாளப்படுத்தும் கருவியாகி விடக் கூடாது என்பதில் நான் கவனம் கொள்ள விரும்புகிறேன். ஆனாலும், கடவுள் குறித்த விவாதங்களிலேயே நான் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டிய சூழல் நேர்கிறது//

  அப்படியெல்லாம் உங்களை கட்டாயப்படுத்தி கடவுள் குறித்த விவாதங்களில் பங்கெடுக்க வேண்டும் என்றேல்லாம் யாரும்,நான் உட்பட அழைக்கவில்லை., மாறாக
  ஒன்றை கொள்கைரீதியாக விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி,
  அறிவியல் ரீதியாக
  தர்க்கரீதியாக
  ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. ஆக இப்படி உங்கள் பதிவுகளும் இருந்ததாலே விவாத அழைப்பு.,
  மாறாக நீங்கள் கொண்ட கொள்கையை மட்டும் முன்னிருத்தி மனித வாழ்விற்கு உகந்த வகையில் ஆக்கங்கள் எழுதினால் நேர்மறை/ எதிர்மறை பின்னூட்ட்ங்கள் என்ற அளவிலேயே கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

  ஆக சலித்துக்கொண்டு., சமூகம் மீதான அக்கறைக்கொள்ள வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுக்கோள்

 3. G u l a m நவம்பர் 22, 2011 இல் 8:37 முப #

  நீங்களோ நானோ இஸ்லாத்தை ஏற்பதாலோ – விட்டு விலகுவதாலோ., இறைவனுக்கு எந்த வித இழுக்கோ – கூடுதல் பெருமையோ ஏற்பட போவதில்லை., என்பது இஸ்லாம் கூறும் இறையியலுக்கான யதார்த்த கோட்பாடு., ஆக தனிமனித வாழ்விற்கு இந்த அடிப்படை கொள்கையே போதுமானது. ஒருவரின் வாழ்வை எப்படியும் அமைத்துக்கொள்ளலாம் என்பதற்கு., ஆனால் நன்மை செய்தும் வாழவேண்டும் என்பதற்கு நான் கொண்ட கொள்கை எல்லா வழிகளையும் ஏதுவாக பணிக்கும் போது அதன் வழியான என் வாழ்க்கை பயணம் தொடர்கிறது., இதில் நான் அனேக நன்மைகளை இனங்காண்பதால் அக்கொள்கையே பின்பற்ற அழைக்கிறேன். மாறாக எந்த கொள்கையும் விமர்சிக்கவில்லை (( இன்றுவரை எனது பதிவுகள் பிற மதங்களை சாடி பதிவிடப்படவில்லை ) ( விவாதப்பொருளாக எவையும் முன்னிருத்தாதப்படாத வரை))

  அதைப்போல இஸ்லாம் அல்லாத பிற கொள்கைகளை பின்பற்றும் நீங்கள் அக்கொள்கை உகந்ததாக கருதினால் மக்களை அதன் வழி வாழ்வியல் பயணத்திற்கு அழைக்கவேண்டும்., அப்படி அழைக்கும் போது உங்கள் கொள்கை உண்மையான வாழ்வியல் பயன்பாடு உடையதென்றால் அதை எதிர்க்கும் எத்தகைய கொள்கையும் இஸ்லாம் உட்பட திராணியற்றே போகும். ஆக இதைத்தான் உங்களை நான் செய்ய சொல்வது., ஆனால் மாறாக நாத்திக கொள்கை இஸ்லாத்தை எதிர்ப்பதை மையமாக கொண்டுள்ளது., அதை உங்கள் பதிவுகளிலே என்னால் உண்மைப்படுத்த முடியும் ஏனெனில் நீங்கள் சார்ந்த கொள்கையே விளக்கி பதிவிடுவதை விட இஸ்லாத்தை எதிர்த்து இடும் பதிவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இதுக்கு என்ன அடிப்படை காரணம் என்பது இதுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது? இஸ்லாமே உங்களைப்பொருத்த வரை கற்பனையின் கோட்டை என்றால் … ஏனைய மதங்கள் கற்பனையின் தலைநகரங்களாகவல்லவா இருக்கிறது அதை விளக்கி எங்கேயும் உங்கள் பதிவு இல்லையே ..? இதைத்தாண்டி மூன்றாம் காரணம் இருக்கிறதென்றால் நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாம் ஒன்றே ., என தாங்களும் உணர்ந்ததால்…

  சகோ நான் அக்கவுண்ட்ஸ் பயின்றாலும் அடிப்படையில் உளவியல் மாணவன் தான் நான். நம் எதிரே இருக்கும் ஒரு கோட்டை சின்னதாக்கவேண்டுமென்றால் நான் வரையும் கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக்கினால் போதும் நம் முன் இருக்கும் கோடு தானாகவே சிறிதாக போய்விடும். உலகமும் அதை உரக்க சொல்லும்., இதைத்தான் இஸ்லாம் என்றும் செய்துக்கொண்டிருக்கிறது., என்பதாலே அதன் ஊடாக என் பயணமும்…

  இதுவே இஸ்லாம் – என் சிந்தையில் நிலைப்பதற்கு காரணம்.

  //மனிதனின் வாழ்வில் மதமோ கடவுளோ ஆழமான பங்களிப்பைச் செய்வதில்லை.//
  நிச்சயமாக! அதை மேலோட்டமாக பார்க்கும் போது என் எண்ணமும் ஆரம்பத்தில் அப்படி தான் இருந்தது.

  நான் இணையத்தில் கால்பதித்த இரண்டாயிரம் ஆண்டுகள் துவக்கத்தில் கேட்கப்பட்ட- காணப்பட்ட கேள்விகளை தான் இன்று நீங்கள் முன்னிருத்தி இருக்கிறீர்கள் இதன் காரணமாகவே இஸ்லாம் என் வாழ்வியல் நிலையிலிந்து தூக்கியெறியப்பட்டது என நீங்கள் சொன்னால்… உண்மையாகவே எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது.,

  சகோ கடவுளின் பங்கீடு நேரடியாக எல்லா செயல்களிலும் இருக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான பகுத்தறிவு என்பது என்னவென்று என்னால் விளங்கமுடியவில்லை., அப்படியிருந்தால் தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்ட பகுத்தறிவுக்கு வேலையில்லை…

  குர்-ஆனை நீங்கள் திறந்த மனதோடு மீண்டும் படிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். மேற்கண்ட நிலைக்குறித்தும் நான் முஸ்லிம் தளத்தில் விளக்கியும் இருக்கிறேன் சகோ.,

  பகுத்தறிவாளர்களின் கடவுள் ! என்ற ஆக்கம் தொடர்பாக நடைப்பெற்ற விவாதமே முழுமைப் பெற வில்லையென்பது என் எண்ணம். ஏனெனில் உங்களைப்பொருத்தவரை எனக்கு பதில் தருவது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை எல்லோருக்கும் பதில் தரவேண்டும் என்ற நோக்கமும் காரணமாக இருக்கிறது.

  ஆக, எதிர்ப்பதிவு இடுவது எனக்கான பதிலாக இல்லாமல் மறுக்கும் ஆக்கத்தின் தவறுகளை மையப்படுத்திய பதிவாக இருக்கவேண்டும் என்பதே என் தரப்பு எண்ணம். உதாரணத்திற்கு செங்கொடி தளத்தில் உலக அழிவு நாளின் அடையாளங்களில் ஒன்றான அதிசய பிராணி வருகை குறித்த உங்கள் பதிவிற்கு மறுக்கும் விதமாக உங்கள் ஆக்கத்தை மையப்படுத்தி நான் இட்ட அதிசய பிராணி வருகை பதிவு – அடிப்படையில் ஏனைய உங்கள் மறுப்பாக்கமும் அமைந்தால் எல்லோருக்கும் பொதுவாக ஆக்கமாக அமையும் என்பது என் எண்ணம்.

  //கடவுள் குறித்த விவாதத்தில் சட்டங்களும், பெண்களுக்கான பாதுகாப்பும் என்ன பாத்திரத்தை வழங்க முடியும்? //
  இது நான் இஸ்லாம் அல்லாத கொள்கையே பின்பற்றுவதாக இருந்தால் அந்நிலை விளக்கத்திற்கான் என் கேள்விகள்… ஆனால் சகோ ஹைதரின் கம்யூனிஷம் -பெண்ணியம் குறித்த ஆக்கத்திற்கு உங்களின் பரந்த பதிலை எதிர்ப்பார்ப்பதால் அதுக்குறித்து இங்கு அவசியமில்லையென நினைக்கிறேன் அதற்கான மறுப்பு வெளியிட்டதுடன் அதுக்குறித்து விவாதிக்கலாம்.

  • S.Ibrahim நவம்பர் 23, 2011 இல் 7:45 பிப #

   ///அதைப்போல இஸ்லாம் அல்லாத பிற கொள்கைகளை பின்பற்றும் நீங்கள் அக்கொள்கை உகந்ததாக கருதினால் மக்களை அதன் வழி வாழ்வியல் பயணத்திற்கு அழைக்கவேண்டும்., அப்படி அழைக்கும் போது உங்கள் கொள்கை உண்மையான வாழ்வியல் பயன்பாடு உடையதென்றால் அதை எதிர்க்கும் எத்தகைய கொள்கையும் இஸ்லாம் உட்பட திராணியற்றே போகும். ஆக இதைத்தான் உங்களை நான் செய்ய சொல்வது., ஆனால் மாறாக நாத்திக கொள்கை இஸ்லாத்தை எதிர்ப்பதை மையமாக கொண்டுள்ளது., அதை உங்கள் பதிவுகளிலே என்னால் உண்மைப்படுத்த முடியும் ஏனெனில் நீங்கள் சார்ந்த கொள்கையே விளக்கி பதிவிடுவதை விட இஸ்லாத்தை எதிர்த்து இடும் பதிவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். இதுக்கு என்ன அடிப்படை காரணம் என்பது இதுவரை எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது? ///
   குலாம் ,செங்கோடிக்கு தெரியும் அவர் பின்பற்றும் கொள்கையை மக்கள் நுகர்ந்து கூட பார்க்க மாட்டார்கள் .இஸ்லாத்தை மட்டம் தட்டி காட்டவேண்டும் என்பது இவரது கம்யுனிச குருவின் கனவு.இப்னுசக்கீர் என்ற பெயரில் இஸ்லாத்தை கேளி செய்துவரும் தில்லு துறை என்ற இந்து வெறியனுக்கு லிங்க் கொடுக்கிறார் என்றால் இவரைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.சிவன் படத்துடன் வரும் இஸ்லாமிய விமர்சகர்களை வரவேற்கும் இவருக்கு கொள்கையாவது கத்தரிக்கையாவது ,புகழ் மட்டுமே

 4. G u l a m நவம்பர் 22, 2011 இல் 8:39 முப #

  //இதில் அரசை எந்த வர்க்கம் கைப்பற்றிக் கொள்கிறதோ அந்த வர்க்கத்திற்கு சாதகமாகத்தான் சட்டங்கள் வடிக்கப்படுகின்றன. //
  கிரேட் மிஸ்டேக்., இது தான் நான் முன்னிருத்துவதும்., கடவுள் என்ற ஒன்றின் தலையீடு இருக்ககூடாதென்றால் அதற்கான எல்லா தெளிவுகளையும் இயற்கை தீர்மானித்து வைத்திருக்க வேண்டும்.,

  உதாரணத்திற்கு சொல்வதாக இருந்தால்
  மீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன.
  அதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம்! தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.
  பறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது…
  இப்படி…

  இப்படி சில உயிரின பிறப்பிற்கு கடவுளின் தலையீடு என்ற ஒன்றின் தேவையில்லா நிலையே எளிதாக உணர்த்தலாம் ( முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு உடன்பாட்டிற்காக இந்த உதாரணம்)

  அதுப்போல மனித செய்கைகளின் எல்லா செயல்களுக்கும் தெளிவான தெரிதல்களை இயற்கை தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும்., ஆனால் நன்மை- தீமைகளின் விசயத்தில் அஃதின்றி பிறிதோன்றின் தலையீட்டை அங்கு அவசியாமாக்குகிறது அது தான் ஏன்…? என்று தான் நான் கேட்கிறேன்., நீங்களோ அது சாத்தியமில்லை என கூறுகிறீர்கள் சாத்தியமில்லா தன்மையின் எதிரான விளைவு வெளிப்படுத்தும் செயல் கடவுளை முன்னிருத்தியதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக வகையில் இருக்கிறது அதை ஏற்க மறுக்கிறீர்கள் .
  இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த ஆக்கம் ” ஏன் கடவுள் இருக்கவேண்டும்.?” என்ற என்பதின் கீழ் இன்னும் விளக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்.

  செங்கொடி தளத்தில் விவாத தொடராமைக்கு என் நேரமின்மையே காரணம் என்பது தாங்கள் அறிந்த ஒன்றே! ஒரு மாததிற்கு 3 ஆக்கமே என் அதிகப்பட்ச டார்கெட்டாக கொண்டு திட்டமிட்டு செயலாற்றுகின்றேன். -இன்ஷா அல்லாஹ்

  ஆக ஒருவார காலத்திற்குள் பதிவிற்கான மறுப்பானது தரப்படவேண்டும் என்பது என்னால் முடியுமா என வரையறுத்து சொல்வதிற்கில்லை., இறை நாடினால் முயற்சிக்கிறேன். அதுவரை உங்களுக்கான பதில்களுக்கு காத்திருக்கும் நான் முஸ்லிம் தள பதிவுகளுக்கு மறுப்பாக்கம் தயார் செய்யுங்கள்

  எளிதாக இனங்காண இந்த சுட்டியே பயன்படுத்திக்கொள்ளுங்கள்
  http://iraiadimai.blogspot.com/2011/11/blog-post_20.html

  எனது பணிகளுக்கு மத்தியில் உங்களுக்கான விளக்கம் தர முயற்சித்தால் இதற்கு மேல் விளக்க எனக்கு நேரமில்லை 🙂

  நன்றி
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

 5. goodposts நவம்பர் 22, 2011 இல் 11:32 முப #

  “தமிழகத்தில் பெரியார் வழி வந்த திராவிட நாத்திக பாரம்பரியம் கொண்ட கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் ஆட்சிதான் சுமார் அரை நூற்றாண்டுக்காலமாக இருந்து வருகிறது. இதனால் பொய்யும், திருட்டும், வஞ்சகமும், லஞ்சமும், ஊழலும், ஆடம்பரமும், கொலையும், கொள்ளையும், கற்பழிப்பும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால், கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களே நம் மக்களின் சீரழிவுக்கு காரணம்.”… என்று நான் சொன்னால்…? (எனக்குத் தெரிந்து இதுவும் 100 % சரியான கூற்று)

  ஹலோ… உருப்படியா மூளையை உபயோகிச்சு யோசிங்கப்பா..!

  கடவுள் தப்பு செய்யக்கூடாது என்று சொன்னதை அறிந்தும் அதை துச்சமாக தூக்கி எறிந்து விட்டு செய்கிறான் எனில்… அப்போதே அவன் கடவுள் நம்பிக்கையற்றவன் ஆகி விட்டான் என்பது உங்கள் மண்டையில் எப்படி உரைக்காமல் போயிற்று..?

 6. nallurmuzhakkam நவம்பர் 22, 2011 இல் 7:36 பிப #

  வணக்கம் நண்பர் குலாம்,

  விவாதம் குறித்து கூற வேண்டிய தகவல் எதுவும் இருந்தால் அதை பின்னூட்டங்களில் கூறுங்கள், பதிவுக்கான உங்கள் விளக்கங்களை எதிர்ப்பதிவில் கூறுங்கள். அல்லது பின்னூட்டம் மூலமாகவே விவாதிக்க முடியுமென்றால் அதை தெரிவியுங்கள் விவாதத்தை பின்னூட்ட வாயிலாக மாற்றிக் கொள்ளலாம். மற்றப்படி உங்கள் எதிர்ப்பதிவு வந்ததும் உங்களின் இந்த பின்னூட்ட வாதங்களையும் உள்ளடக்கியே பதிலளிக்கிறேன்.

  விவாதம் குறித்து இரண்டு கருத்துகளை வைத்திருக்கிறீர்கள். ஒரு வார காலத்திற்குள் முடியாதென்றால் எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? யோசனை செய்து கூறுங்கள் நான் காத்திருக்கிறேன்.

  என்னுடைய வாதத்தில் முன்னிலை வாக்கியங்களாக உங்களை நேரடியாக குறிப்பிட்டு பேசியதை நீங்கள் விரும்பவில்லை எனக் கருதுகிறேன். விவாதமென்று ஆனபின் முன்னிலை வாக்கியங்களாக பேசுவது தான் சரியாக இருக்குமென எண்ணுகிறேன். பெயர் குறிப்பிட்டு இருந்தாலும் கருத்துக்களை பொதுவாக அனைவரும் எடுத்துக் கொள்ள முடியும் தானே. என்றாலும் உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் கூறுங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

 7. G u l a m நவம்பர் 23, 2011 இல் 8:49 முப #

  அன்பு சகோ செங்கொடி

  //ஒரு வார காலத்திற்குள் முடியாதென்றால் எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? யோசனை செய்து கூறுங்கள் நான் காத்திருக்கிறேன்.//

  இதில் யோசிப்பதற்கு ஏதுமில்லை சகோ., குடும்பத்திற்காக 12 மணி நேர அலுவல் தாண்டி தான் என் எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கிறேன், ஆக திட்டவட்டமாக என்னால் சொல்ல முடியாது., எனினும் நீங்கள் முன்னிருத்தும் ஆக்கமோ -பின்னூட்டமோ என் பதில் வேண்டினால் இன்ஷா அல்லாஹ் விரைவாக பதிகிறேன்.

  ஏனெனில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தில் இணைவதற்காக செலவிடுகிறேன். என் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு இது தெரியும்.

  ஆக, இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் உங்களை கேள்விகளை கேட்க சொல்லவில்லை மாறாக பதியப்பட்ட கேள்விகளுக்கு தான் உங்களை பதில் சொல்ல சொல்கிறேன்., ஆக்கம் அடங்கிய தொகுப்பிற்கான சுட்டியும் சென்ற பின்னூட்டத்தில் கொடுத்திற்கிறேன். அதற்கான பதில்களை எல்லோருக்கும் பொதுவாக தெரிவுப்படுத்தி ஆக்கமாக இடுங்கள்

  அல்லது நான் முஸ்லிம் தளத்திற்கு மறுப்பு இடுவது மட்டும் உங்கள் நோக்கமாக இருந்தால் இன்னும் வசதி அவ்வாக்கத்தின் கீழாக பின்னூட்டமாக இடுவதே போதுமானது., இன்ஷா அல்லாஹ் அதுக்குறித்து பதில் தர முயற்சிக்கிறேன்.

  என்னால் தொடர்ந்து இணையத்தில் இருக்க முடியாதென்பதற்காகவே இந்த யோசனை. இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்! எனக்கு முன்னிருத்தப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் தந்த பிறகே என் நேரமின்மையின் காரணமாக தொடர முடியா விளக்கத்தை தந்திருக்கிறேன். செங்கொடி தளத்தில் உட்பட

  //என்னுடைய வாதத்தில் முன்னிலை வாக்கியங்களாக உங்களை நேரடியாக குறிப்பிட்டு பேசியதை நீங்கள் விரும்பவில்லை //

  அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சகோ., விவாத முறைமை நானும் அறிந்தவன் தான். நான் முன்னிருத்தும் ஆக்கங்கள் எல்லாம் நாத்திகத்தை மையப்படுத்தியே மாறாக செங்கொடியே முன்னிருத்தியல்ல., ஏனெனில் எனக்கான பதில்கள் செங்கொடி என்ற தனிமனிதனையும் தாண்டியும் நாத்திக சமூகத்திடமிருந்தும் வர வேண்டும் எதிர்ப்பார்க்கிறேன். அதே நிலை உங்கள் ஆக்கத்திலும் இருந்தால் என்னையல்லாத ஏனையோரின் கருத்துக்களும் அங்கு நிலவ வாய்ப்பிருக்கிறது.

  மற்றப்படி எனக்கான பதில்களாக உங்கள் ஆக்கங்களை முன்னிலைப்படுத்தினாலும் எனக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,நேரமின்மை என்ற ஒரு நிலையை மடடும் என்னால் சமாளிக்க கற்றுக்கொண்டால் உங்கள் கருத்துக்களுக்கு உடனுக்குடன் பதில் தர எனக்கு எந்த சிரமமுமில்லை

  நன்றி
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

 8. nallurmuzhakkam நவம்பர் 24, 2011 இல் 7:05 பிப #

  வணக்கம் நண்பர் குலாம்,

  ”பின்னூட்டங்கள் வழியாக முழுமையாக விவாதிக்க முடியாது மறுப்பாக்கம் சரியாக இருக்கும்” என்று நீங்கள் குறிப்பிட்டதால் தான், நானும் அப்படியான ஒரு எண்ணத்திற்கு வந்தேன். கேள்விகளை நீங்களே எடுத்துக் கொடுத்த அடிப்படையில் முதல் பதிவும் பதியப்பட்டு விட்டது. எனவே நீங்கள் ஒரு வாரமோ, ஒருமாதமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ ஏதேனும் ஒரு கால அளவை கூறுவதே பொருத்தமாக இருக்கும். மாறாக ’வரையறை செய்யமுடியாது’ எனும் சொல்லால் தவிர்க்க எண்ணுவது சரியாக இருக்காது.

  அடுத்து, பல தலைப்புகளிலான உங்கள் கட்டுரைகளுக்கு மறுப்பெழுதக் கூறுகிறீர்கள். செய்யலாம். ஆனால் ஒன்றைத்தொட்டு ஒன்றாக கடந்து செல்வது என் வழக்கமில்லை. எனவே எடுத்துக் கொண்ட தலைப்பை முடித்துவிட்டு நீங்கள் பரிந்துரைக்கும் அடுத்த தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். (முதல் தலைப்பை உங்களையே பரிந்துரைக்க கோரியிருந்தேன் என்பதையும் கவனிக்க)

  நான் காத்திருக்கிறேன், உங்கள் கட்டுரைக்கும், கால அளவுக்கும்.

 9. G u l a m நவம்பர் 27, 2011 இல் 11:45 முப #

  அன்பு சகோ செங்கொடி
  என் நிலைபற்றி மிக தெளிவாக விளக்கி விட்டேன்., நேரமின்மை, சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே இணையத்தில் இணையும் வாய்ப்பு…
  அத்தோடு என் நோக்கம் நாத்திகம் விளக்கம் வேண்டி பதிவுகள் இடுவது. மாறாக செங்கொடி என்ற தனிமனிதனை முன்னிருத்தியல்ல.,

  உங்கள் எழுத்து என் எண்ணத்தை பூர்த்திச்செய்யும் வண்ணம் இருப்பதாக நாம் நினைத்ததால் உங்களுடனான விவாத முறைக்கு உடன்பட்டேன்.,

  வந்தால் தான் போச்சினு சொன்னால் எப்படி? கையும்- கீப்போர்டுமாய் உட்கார முடியுமா என்ன? அயல் நாட்டில் அலுவல் புரிபவர் தான் நீங்களும் சொல்லுங்கள்:?
  அல்ஹம்துலில்லாஹ்! நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்னிடம் முன்னிருத்தப்பட்ட கேள்விகளுக்கு- என் விளக்கங்களில் எதுவும் மிச்சமில்லை., மாறாக நான் முஸ்லிம் தள பதிவுகளுக்கு விளக்கம் இல்லை

  அத்தோடு நான் ஏற்கனவே விவாதம் தொடங்கி அதற்கான ஒரு தலைப்பையும் தேர்வு செய்துக்கொடுத்து விட்டேன்

  //G u l a m
  நவம்பர் 19, 2011 இல் 4:25 மு.பகல் #
  அன்பு சகோ
  உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

  தற்போதைக்கு .,
  கடவுள் ஏன் இருக்க க்கூடாது ?
  என்பது குறித்து பொதுவான ஆக்கம் ஒன்றை வரையுறுங்கள்., அதற்கு பதில் தரும் முகமாக நான் முஸ்லிம் தளத்தில் ஏற்கனவே ஆக்கம் பதியப்பட்டு விட்டது.,

  ஆக, நீங்கள் இனி பதியப்போகும் ஆக்கத்திற்கு பதில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கிறேன்.,

  அதையும் தாண்டி ஆக்கத்தில் உங்கள் கேள்விகளை முன்னிருத்தினால் தொடர்ந்து எனது கருத்தையும் இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறேன்.,

  பதில்//

  <<<>>>>
  இப்படி

  மீண்டும் மீண்டும் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.,
  பின்னுட்டம்?
  பின்னூட்டத்தால் விவாதிக்க முடியாததற்கு நான் சொன்ன காரணம்
  பிறரின் இடை சொருகல் – அதற்கும் பதில் சொல்லும் தருணங்களில் ஆக்க கருப்பொருள் சிதையுறும் என்பதே !

  ஆனால் நான் முஸ்லிம் தள பதிவுகள் நாத்திகம்- கடவுளை மையப்ப்டுத்தி மட்ட்மே இடப்படிருப்பதால் அதன் கீழாக உங்கள் வாதங்களை பதிந்தால் அதன் தொடர்பாக மட்டுமே விவாதிப்பது எளிது. மேலும் அங்கு ஆக்கம் நீங்கலான தலையீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் என்னால் முடியும்- இன்ஷா அல்லாஹ்

  ஆக மீண்டும் கால்த்தை முன்னிருத்தி என் மீது குறை சொல்லவேண்டாம்- மறுப்பாக்கமோ அல்லது பின்னூட்டரீதியான மறுப்போ சொல்ல தயாராகுங்கள்.,

  இறை நாடினால் இனியும் சந்திப்போம்

 10. nallurmuzhakkam திசெம்பர் 3, 2011 இல் 7:34 பிப #

  நண்பர் குலாம்,

  நிச்சயமாக நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது புரியவில்லை.

  நண்பர் ஒருவர் உங்கள் பதிவுகளை அறிமுகப்படுத்தி பதில் கூற முடியுமா? எனக் கேட்கிறார். அதனடிப்படையில் நம்மிடையே செங்கொடி தளத்தில் நீங்கள் முன்னிருத்திய கேள்வியிலிருந்து விவாதம் தொடங்கியது. ஒரு கட்டத்திற்குமேல் பின்னூட்டத்தில் விவாதம் செய்வது சரியாக இருக்காது தனி இடுகையாக விவாதிக்கலாம் என்று கூறினீர்கள். மட்டுமல்லாது இந்த தளத்திற்கும் வந்து அழைப்பு விடுத்தீர்கள். அதை ஏற்று, நீங்கள் முன்னிருத்திய கேள்வியின் அடிப்படையில் விவாத இடுகையாக முதல் பதிவையும் செய்து விட்டேன்.

  எதிர் இடுகைக்கு உத்தேசமாக ஒரு வாரம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கு வசதிப்படவில்லை என்றால் உங்களுக்கு ஏற்ற ஒரு காலத்தைக் கூறுங்கள். ஒரு இடுகைக்கு ஒரு ஆண்டு ஆகும் என்றாலும் குறிப்பிடுங்கள். காத்திருக்க நான் தயார்.

  மாறாக, நான் முஸ்லீம் தளத்தில் ஏற்கனவே பதிவுகள் இட்டிருக்கிறேன். அதற்கு ஒவ்வொன்றாக மறுப்பெழுதி விளையாடுங்கள் என்றால், மன்னிக்கவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது.

  இங்கு, நேரமில்லை அதனால் கால வரம்பு கூறமுடியாது எனும் நீங்கள் வேறொரு தளத்தில் \\ நீங்கள் கொண்ட கொள்கை -நாத்திகம் பேச தயாரா நீங்கள்…? இறை நாடினால் காத்திருக்கிறேன்// என்று பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். (http://pagadu.blogspot.com/2011/12/blog-post.html
  December 2, 2011 6:56 PM) உங்களுடைய நேர நிர்வாகத்தை நான் தீர்மானிக்க முடியாது என்பதால், உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் அதை தெளிவாக எனக்கு புரியும்படி (நான் கொஞ்சம் மக்கு மாணவன் தான்) தரும்படி கோருகிறேன்.

  அல்லது,

  உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டு விவாதிப்பதென்றாலும் எனக்கு மறுப்பொன்றுமில்லை. ஆனால் ஒரு சிக்கல். என்னுடைய வாதங்களை விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்து வைக்க வேண்டும் என எண்ணுபவன். அதனால் நீளம் கொஞ்சம் அதிகமாகும். உங்களின் சொற்களில் கூறுவதென்றால் ’பக்கம் பக்கமாக’ இதை பிளாக்கர் ஏற்றுக் கொள்ளாது. என்னுடைய வாதங்களை இந்த தளத்தில் தனிப்பக்கத்தில் எழுதிவிட்டு அதன் சுட்டியை குறிப்பிட்ட உங்கள் பதிவில் இணைக்கிறேன். நீங்கள் உங்கள் தளத்திலேயே பதில் கூறலாம். ஏற்பென்றால் ஒரு பதிவை நீங்களே பரிந்துரையுங்கள்.

 11. G u l a m திசெம்பர் 4, 2011 இல் 6:13 பிப #

  சகோ செங்கொடி
  நீங்கள் சொல்வது தான் எனக்கு புரியவில்லை.,

  // நீங்கள் கொண்ட கொள்கை -நாத்திகம் பேச தயாரா நீங்கள்…? இறை நாடினால் காத்திருக்கிறேன்// என்று பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். //
  இங்கு நான் எந்த காலவரையளவை அவரிடம் முன்னிருத்தவில்லை .அப்படியிருக்க //இங்கு, நேரமில்லை அதனால் கால வரம்பு கூறமுடியாது /// என்று உங்கள் தளத்தில் கூறியது எப்படி பொய்யாகும் . அதுமட்டுமில்லாது அவரது பதிவுகளை என்னைவிட நீங்கள் தெளிவாய் பார்வையிட்டவராயிற்றே… அவரது பதிவுகள் தரம் எப்படி என்று உங்களுக்கு தெரியும்… – ஆக அவரது தளத்தில் உரையாட எனக்கு விருப்பமில்லை., ஆக அப்படியான வார்த்தை பிரயோகம்.

  //மாறாக, நான் முஸ்லீம் தளத்தில் ஏற்கனவே பதிவுகள் இட்டிருக்கிறேன். அதற்கு ஒவ்வொன்றாக மறுப்பெழுதி விளையாடுங்கள் என்றால், மன்னிக்கவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது.//

  சகோ நான் தெளிவாக சொல்லிவிட்டேன். எனது நோக்கம் செங்கொடிக்கு ஆக்கம் தயாரிப்பதல்ல… நாத்திகம் முன்னிருத்தும் முரண்பாட்டை முன்னிருத்தி பதிவிடுவது.,
  அத்தோடு //அப்படியெல்லாம் உங்களை கட்டாயப்படுத்தி கடவுள் குறித்த விவாதங்களில் பங்கெடுக்க வேண்டும் என்றேல்லாம் யாரும்,நான் உட்பட அழைக்கவில்லை., //
  ஏன்னா உங்களுக்கு வேறு வேலை இருக்கலாம் எனக்கு வேறு வேலைகளுக்கு மத்தியில் தான் இந்த வேலையும்! ஆக நான் முஸ்லிம் தளத்திற்கு மறுப்பு பதிவுகள் இடுங்கள் அல்லது அப்பதிற்கு கீழாக பின்னூட்டம் இடுங்கள்.,

  பதிவுகளால் சமூகம் பயன்பாடு அடையவேண்டும் என்பது உங்கள் நோக்கமாக இருந்தால் பக்கமாக பின்னூட்டம் இடுவதை பத்தி பத்தியாக பிரித்து அங்கே இடுங்கள்.

  வழக்கம்போல் அதிக நேரமில்லை – அடுத்த ஆக்கம் வேறு எழுத வேண்டும்.. இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்

 12. nallurmuzhakkam திசெம்பர் 4, 2011 இல் 10:38 பிப #

  நண்பர் குலாம்,

  \\பின்னூட்டம் வாயிலாக எல்லா செய்கைகளையும்- தெரிதல்களையும் முழுவதும் விவாதிக்க முடியாது…….இறை நாடினால் நான் ஏற்கனவே சொன்னதுப்போல என் கருத்துகளுக்கு உங்களின் மாற்றுக்கருத்தை ஒரு ஆக்கமாக பதிவு செய்யுங்கள் அல்லது நான்முஸ்லிம் தளத்திற்கு மறுப்பு என்ற குறீயிடுகளிலாவது பதிவு செய்யுங்கள்.இறை நாடினால் எனது ஓய்வு நேரங்களில் பார்வையிட்டு அதற்கான எனது மாற்றுக்கருத்துக்களை பதிகிறேன்//
  \\இறை நாடினால் மேற்கொண்டு கருத்து பரிமாறிக்கொள்ளலாம்//
  \\இதற்கு முதலில் பதிலிட்டால்., அதைத்தொடர்ந்து இன்னும் நாத்திகம் குறித்து ஏராளமான கேள்விகளும் கடவுள் குறித்த விளக்கங்களுடனும் தொடர்கிறேன்//
  \\உங்களிடம் அதே கேள்விகளை முன்வைத்து என் வாதங்களை தொடங்கலாம் என நினைக்கிறேன்// இப்படியெல்லாம் கூறியது நீங்கள் தானே. இதன் பொருள் என்ன? நாத்திகம் ஆத்திகம் குறித்து என்னிடம் விவாதம் செய்ய விரும்பியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி, நீங்கள் முன்னெடுத்துத் தந்த கேள்வியின் அடிப்படையில் தானே என்னுடைய முதல் பதிவை இட்டிருந்தேன்.

  இதற்கு மறுபதிவு எழுத வேண்டிய நீங்கள்; பின்னூட்டம் வாயிலாக முழுமையாக விவாதிக்க முடியாது என்று கூறிய நீங்கள்; அவசரம் அவசரமாக சில பின்னூட்டங்களில் பதில் கூற வேண்டிய அவசியம் என்ன?

  விவாதம் என்று வந்த பிறகு குறிப்பிட்ட கால அளவுக்குள் பதில் தருவதை உறுதிப்படுத்துவது தானே ஒழுங்கு. குறைந்த அளவாக ஒரு வாரமும் அதிக அளவாக ஒரு ஆண்டும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும் அதிலிருந்து நழுவுகிறீர்களே அது சரியா? \\எனது அடுத்த ஆக்கம் ” ஏன் கடவுள் இருக்கவேண்டும்.?” என்ற என்பதின் கீழ் இன்னும் விளக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்// என்று நீங்கள் கூறிய அந்தப் பதிவு எப்போது? என்று தான் கேட்கிறேன். கவனிக்கவும் இந்த கால அளவுக்குள் நீங்கள் பதில் தந்தே ஆக வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. உங்கள் வசதிப்படி எவ்வளவு காலத்தில் நீங்கள் பதிவிடுவீர்கள் என்றே கேட்கிறேன்.

  \\எனது நோக்கம் செங்கொடிக்கு ஆக்கம் தயாரிப்பதல்ல… நாத்திகம் முன்னிருத்தும் முரண்பாட்டை முன்னிருத்தி பதிவிடுவது// எனக்கு ஆக்கம் தயாரிப்பது உங்கள் நோக்கமல்ல என்றால், இங்கு அழைத்தது யார்? அழைக்கப்பட்டது யார்? மட்டுமல்லாது செங்கொடியை முன்னிருத்தி பதிவிட்டால் அது நாத்திக முரண்பாட்டை முன்னிருத்துவதாக அமையாதா? தவிரவும் நீங்கள் கருதும் முரண்பாடு முரண்பாடே தானா என்பதை எல்லோரும் அறியும் வாய்ப்பு கிட்டுமே.

  நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என நான் கூறாத போது ஏன் நீங்கள் அவ்வாறு கருதுகிறீர்கள்? அவரிடம் வாதிக்கத் தயாராக இருக்கும் நீங்கள், அந்த தயார் நிலைஇங்கு இருப்பதாக தெரியவில்லையே என்பது தான் என் கேள்வி?

  \\பதிவுகளால் சமூகம் பயன்பாடு அடையவேண்டும் என்பது உங்கள் நோக்கமாக இருந்தால் பக்கமாக பின்னூட்டம் இடுவதை பத்தி பத்தியாக பிரித்து அங்கே இடுங்கள்// இதைத்தானே நானும் கூறியிருக்கிறேன். என்னுடைய வாதத்தை உங்கள் தளத்தில் சுட்டுகிறேன். நீங்களும் உங்கள் தளத்திலேயே பதில் கூறுங்கள். \\உங்கள் தளத்திற்கு வந்து பின்னூட்டமிட்டு விவாதிப்பதென்றாலும் எனக்கு மறுப்பொன்றுமில்லை. ஆனால் ஒரு சிக்கல். என்னுடைய வாதங்களை விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்து வைக்க வேண்டும் என எண்ணுபவன். அதனால் நீளம் கொஞ்சம் அதிகமாகும். உங்களின் சொற்களில் கூறுவதென்றால் ’பக்கம் பக்கமாக’ இதை பிளாக்கர் ஏற்றுக் கொள்ளாது. என்னுடைய வாதங்களை இந்த தளத்தில் தனிப்பக்கத்தில் எழுதிவிட்டு அதன் சுட்டியை குறிப்பிட்ட உங்கள் பதிவில் இணைக்கிறேன். நீங்கள் உங்கள் தளத்திலேயே பதில் கூறலாம். ஏற்பென்றால் ஒரு பதிவை நீங்களே பரிந்துரையுங்கள்// எங்கே உங்கள் பரிந்துரை?

  இதற்கு மேலும் இணையத்தில் இணைய நேரமில்லை என்று கூறுவீர்களேயானால் …….

  நல்லது, நண்பரே சென்று வாருங்கள். உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.

  • Robin திசெம்பர் 5, 2011 இல் 12:02 பிப #

   குலாம் விவாதத்தை தவிர்க்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.

  • G u l a m திசெம்பர் 7, 2011 இல் 11:36 முப #

   அன்பு சகோ செங்கொடி.,

   என்ன விதமான புரிதல் உங்களுடையது என்று எனக்கு புரியவில்லை…
   மறுப்பாக்கம் இடுங்கள்
   உங்கள் தளத்தில் விவாதிக்கலாம் ….. என்பதெல்லாம் ஏற்கனவே என் தளத்தில் இடப்பட்ட நாத்திகம் குறித்த ஆக்கங்களை முன்னிருத்தியே… மாறாக புதிய ஆக்கம் குறித்தல்ல. அதற்கு தெளிவாய் பதில் இதுவரை இல்லை –

   பகுத்தறிவாளர்களின் கடவுள் குறித்த பின்னூட்ட ரீதியான விவாதமும் “செங்கொடி தளத்தில் ” நடைபெற்றதால் ஆக்க தொடர்பு அங்கில்லாதால் -விவாத கருப்பொருள் உள்ள நான் முஸ்லிம் தளத்தில் விவாதத்தை தொடரலாம் என்றேன் (அப்பதிவுக்கு கீழாக உங்கள்- என் பின்னூட்டம் காண்க)

   ஏனெனில் நான் முஸ்லிம் தளம் அல்லாத ஏனைய தளங்களில் எனது கருத்தை சொல்வதாக இருந்தால் நான் புதிதாக கருத்திடாமல் ஏற்கனவே உள்ள நான் முஸ்லிம் ஆக்க கருத்தை தான் மீண்டும் சொல்ல வேண்டும். ஆக இது தேவையற்ற நேர விரயத்தைதான் இருக்கும். ஆனால் நான் முஸ்லிம் தளத்தில் எனது கருத்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விட்டதால் அது தவிர்க்கப்படுகிறது அதன் கீழாக உங்கள் கருத்துக்கள் பதிவு செய்தாலே போதுமானது. நாம் ஆக்க தொடர்பாக கருத்தை அதிலிருந்து விவாதிக்கலாம்..

   கடவுள் ஏன் இருக்கக்கூடாது? என உங்களை ஆக்கம் வரைய சொன்னது உண்மைதான் – ஏற்கனவே எனது இந்த 10 தேதிக்குள் நிர்ணயக்கப்பட்ட தலைப்பு தான் அது. அதில் உங்களின் கேள்வியும் உள்ளடக்கியிருந்தால் அதற்கான தெரிதல்களையும் சேர்த்து பதிவிடுவதற்காக அப்படி சொன்னேன்
   இன்ஷா அல்லாஹ்.. 10ம் தேதிக்குள் பதிவிடுகிறேன்

   இப்போதும் சொல்கிறேன்., எனது ஆக்கத்திற்கு மறுப்பு வேண்டியே நமது அறிமுக உரையாடல் தொடர்ந்த விவாதங்களின் சாரம்சம் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

   அப்புறம் ஒரு விசயம் சகோ ராபின் சொல்வதை போல விவாத சமாளிப்புக்கான காரணமல்ல என் “நேரமின்மை” என்ற பதில்!

   நான் முஸ்லிம் தளம் தொடங்கி ஒருவருடம் மேலாகியும் இதுவரை 55 பதிவுகளே இட்டிருக்கிறேன். (6 மீள்பதிவுகள் நீங்கலாக) அப்படியிருக்க நீங்களே தெளிவாய் அறிந்துக்கொள்ளுங்கள் நான் சொல்வது உண்மையா இல்லையா என்று…
   இப்பவும் சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ் மாதத்திற்கு மூன்றே எனது நாத்திகம் குறித்த ஆக்கம் எழுதும் டார்கெட்..

   ஒன்று நான் முஸ்லிம் தளத்திற்கு மறுப்பு என தலைப்பில், எழுதுங்கள்
   அல்லது நான் மையப்படுத்திய நாத்திக ஆக்கத்திற்கு அங்கேயே பின்னூட்டமிடுங்கள்
   உங்களுக்காக இன்னும் அதிகம் இணையத்தில் இணைய இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.
   இதற்கு மேலாகவும் எதையாவது // இப்படி // அடையாளப்படுத்தி உங்களின் கருத்தை நியமென நிறுவினாலும் நோ ப்ராப்ளம்..
   நீங்கள் சொல்வதே நியாயமாய் இருக்கட்டும்…

   ஏனெனில் நான் முஸ்லிம் தள நாத்திகம் குறித்த எண்ண சிதறல்கள் ஆக்கம் மூலமாக இன்னும் பல நூறு செங்கொடிகளின் பார்வைகளை அடைய வேண்டும் என்பதே என் பேராவல்.. !

   சகோ@ ராபின் உங்கள் மீதும் சாந்தி நிலவட்டும்

   //குலாம் விவாதத்தை தவிர்க்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்.//

   அப்படியா அண்ணே… இதப்பத்தி நான் யோசிக்கவே இல்லையே…அப்புறம் சௌரியமா இருக்கீங்களா ? அங்கே இங்கேனு இப்போ செங்கொடி அண்ணே தளத்துக்கே வந்தே நம்மள பயம் காட்ட பாக்குரீங்க…

   ரைட்டு…

   அண்ணே உங்க கமெண்டும் நம்ம கமெண்டும் இருக்கிற இடத்திலெலாம் யாரு சமாளிச்சி பேசுறாங்கனு இன்னொரு தரம் பாருங்க..:)

   -இறை நாடினால் இனியும் தொடர்வோம்.

 13. G u l a m திசெம்பர் 8, 2011 இல் 4:31 முப #

  அன்பு சகோ செங்கொடி

  //கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை விட கடவுள் இருப்பதாக ஏன் நம்பக் கூடாது? என்பதே பொருட்பிழையற்ற கேள்வியாக இருக்கும் என கருதுகிறேன்//

  கடவுளை நம்புவதென்பது நம்பிக்கை சார்ந்த விசயம் – ஆனால் மறுப்பதென்பது ஒரு சாரார் கொண்ட நம்பிக்கையில் சிந்தனைரீதியான உடன்பாடில்லாமல் இருப்பது அப்படியான மறுப்புக்கு விளக்கம் முடிந்தவரை நேரடியாக விளக்கப்பட வேண்டும். ஏனெனில் நம்பிக்கை தான் விளக்கப்பட முடியாதது. ஆனால் அந்த நம்பிக்கை போலியானது என நிருபிக்க நேரடி நிருபணம் தந்தாக வேண்டும். அப்படியில்லாமல் “இருப்பதாக நம்பக்கூடாதென்றால்” அதுவும் அவர் சார்ந்த நம்பிக்கை எனும் வட்டத்திலே பதிவு செய்யக்கூடியது.

  உங்களின் மையக்கருத்து
  1. கடவுளின் பெயரால் மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள்.
  2. விதி என்ற ஒன்றை நம்புவதால் வாழ்வியல் முன்னற்றமின்மை
  3. கடவுளை நம்புவோரும் சமூகத்தில் தவறு செய்தல்
  4. மத குறுக்கீட்டால் அறிவியல் ரீதியான வளர்ச்சியின்மை.
  5. ஏனைய உயிரனங்கள் போலல்லாமல் கடவுள் என்ற நிலை ஏன் மனித சமூகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது
  போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது

  இப்போதும் பாருங்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு மத்தியில் நிலவும் சமூகரீதியான பிரச்சனைகள், மூட நம்பிக்கை தான் கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாக சொல்கீறீர்கள் மாறாக நேரடியாக இல்லை!

  சரி முதல் கேள்விக்கு வருவோம்…
  மனிதர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளுக்கு காரணம் மதம் தான் காரணமென்றால் மதங்களை பின்பற்றாவர்கள் வீடுகளிலும் தந்தை- மகன் அண்ணன்-தம்பிக்கு மத்தியில் சண்டைகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு கூட செல்கிறதே அதையும் நாம நியூஸ் பேப்பர்ல பார்க்கதான் செய்யுறோம். ஆனா அவர்கள் ஏதெனும் மதகுறீயிட்டு பெயர்களை சார்ந்திருப்பதால் அவர்கள் சார்ந்த கொள்கை முன்னிருத்தி பேசப்படுவதில்லை.

 14. G u l a m திசெம்பர் 8, 2011 இல் 4:33 முப #

  சரி விதிக்கு இப்போ வருவோம்
  பெரும்பான்மை நாத்திகர்களின் தவறான புரிதல் தான் உங்களுக்கு இருக்கிறது
  பர்ஸ்ட் இஸ்லாம் விதியை பத்தி என்ன சொல்லுனு தெரிஞ்சிகிட்டு தான் அது பத்தி விமர்சிக்கணும். ஆனா பாருங்க பிற மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராய் கடிவாளமிட்டு அதை இஸ்லாமிய விதியாய் மாற்ற முயல்கிறீர்கள்

  அல்லாஹ் நாடுறது தான் நடக்கும்னு சொல்லிகிட்டு சும்மா வெறுமன யாரையும் உட்கார சொல்லவில்லை இஸ்லாம் . ஒரு மனிதனின் மன ஓட்டத்தை நன்கு அறிந்தவன் அவனை உருவாக்கியவன். தன்னால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தான் தான் முழு காரணம் என எண்ணுவது தூய மனதின் இயல்பு. அவ்வாறு எண்ணி வருந்தும் பொறுப்புள்ள மனித மனங்களுக்கு இறை நாடியதால் தான் இப்படி ஆயிற்று என ஆறுதல் அடைவதற்காக விதியெனும் பெயரில் உளவியல் ரீதியான மன உளச்சலுக்கு மருந்தை தான் இஸ்லாம் ஏற்படுத்தி இருக்கிறது.

  சிம்ப்ளா சொல்லணும்னா தமக்கோ அல்லது தனது சமூகத்திற்கோ இழப்பை ஏற்படுத்தும் நிகழ்வுற்றுப்போன செயல்களுக்கு மட்டுமே விதியே காரணமாக்க சொல்கிறது. மாறாக நாளை உனக்கு தேர்வா.. அதற்கு இன்றே நன்றாய் படி! ஏனெனில் ((மனிதனுக்கு அவன் முயல்வதெல்லாமல் வேறில்லை அல்குர்-ஆன் ) என முன்னேற்ற பாதை நோக்கி பயணிக்க சொல்கிறது இஸ்லாம்
  மேலும் விதிக்குறித்து பார்க்க:
  http://iraiadimai.blogspot.com/2010/12/blog-post.html

  கடவுள நம்புறவங்களும் சமூகத்தில் தப்பு தானே செய்யுறாங்க… மெச கேள்வி!
  சரிதான் முஸ்லிம்கள் கூட வட்டி வாங்கத்தான் செய்யுறாங்க.. ஆனா தலைப்பில் ஒரு திருத்தம் கடவுளை நம்புறவங்க தப்பு செய்ய மாட்டாங்க – இஸ்லாம் உட்பட மதங்களை பாலோ பண்றவங்க தான் தப்பு செய்றாங்க.. இன்னும் தெளிவாக விளக்கணும்னா அடுத்த பதிவு வரை காத்திருங்கள் -இன்ஷா அல்லாஹ்)

 15. G u l a m திசெம்பர் 8, 2011 இல் 4:33 முப #

  மதக்குறுக்கீடுகள் அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு தடையாக ஒருபோதும் இருந்ததில்லை. அறிவியல் ஆக்கங்கள் பெரும்பான்மையாக மதம் சார்ந்தவர்களாகவே கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கிறது., அதிலும் குறிப்பாய் இஸ்லாமிய அறிஞர்களின் வானவியல், மருத்துவ நிபுணத்துவ கண்டுப்பிடிப்புகள் அத்துறை சார்ந்த அறிவியலுக்கே முன்னோடி எனலாம்.

  //இது மனிதர்களுக்கு ஏற்படும் சரியான கோபங்களைக் கூட தணித்து விடுகின்றன. மக்கள் விரோத செயலொன்றை சந்திக்கும் மனிதன் அதை எதிர்த்து வினையாற்றாமல் கடவுள் தண்டிப்பார் என்று தம் பலம் பலவீனம் சார்ந்து ஒதுங்கிவிடுவது கடவுளின் மறுபிறப்பு வகைப்பாட்டின் பின்னணியிலேயே வருகிறது.//

  முற்றிலும் தவறான புரிதல் அது எப்படி உங்கள் சுய கருத்தை மார்க்க வட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்ட முடிவாய் நிறுவ முயல்கிறீர்கள். இஸ்லாம் தெளிவாய் விதி குறித்து விளக்கி இருக்க அதை சார்ந்த எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்க //மக்கள் விரோத செயலொன்றை சந்திக்கும் மனிதன்// வெறுமன அமர்ந்திருந்தால் தான் கடவுள் தண்டிப்பார் என்பதே உண்மை

  //மனிதனல்லாத பிற உயிரினங்களில் கடவுள் எனும் தாக்கம் இல்லை. ஏனென்றால் அவைகளுக்கு தமது தேவைகளைத் தாண்டிய சிந்தனை இல்லை. மனிதன் மட்டுமே சூழலை தனக்கு உகந்ததாக திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். //

  மனித – ஜீன் வர்கங்களுக்கு மட்டுமே இவ்வுலகை தேர்வு களமாக்கி வைத்திருக்கிறான் இறைவன். அதற்கு துணைப்பொருட்களாக தான் இவ்வுலக உயிர்களும் – அஃறிணைப்பொருட்களும். ஆக மனித சமூகத்தை இங்கு முன்னிருத்துவது தான் பிரதான செயலாக இருப்பதால் ஏனைய உயிரினங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவைகளும் இறைவனுக்கான -இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயிரினம் தான். சரி பிற உயிரினங்களுக்கு கடவுளின் தாக்கம் இல்லை என்பதை எந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து கண்டறீந்தீர்கள் சகோ?

  //கடவுள் இருக்கிறார் எனும் நம்பிக்கை மனிதனுக்கு அவசியமில்லை. அது மனிதனுக்கு எந்த விதத்திலும் பலன் தரப் போவதுமில்லை.//
  அப்போ இச்சமூகத்திலே எங்கள மாதிரி ஆளுங்களும் கடவுளுக்கு பயந்து நன்மை செய்து வாழ்றோமே சகோ..?

  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

 16. nallurmuzhakkam திசெம்பர் 9, 2011 இல் 3:53 பிப #

  நண்பர் குலாம்,

  நீங்கள் பின்னூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறீர்களா? அல்லது மறுப்பாக்கம் இடுவதன் மூலமா? இரண்டில் ஒன்றை நீங்கள் தெரிவு செய்தாக வேண்டும். பின்னூட்டத்தில் விவாதித்தால் மறுப்பாக்கம் இடச் சொல்கிறீர்கள், மறுப்பாக்கம் இட்டால் பின்னூட்டத்தில் விவாதம் செய்கிறீர்கள். எந்த வழி என்பதை அறுதியிட்டு கூறிவிட்டால் நானும் அந்த வழியில் சமருக்கு வந்து விடுகிறேன்.

  அடுத்து பத்தாம் தேதிக்குள் இடுகை இடுவதாக கூறியுள்ளீர்கள், நன்று. ஆயினும் ஒரு திட்டமிட்ட காலத்தை நீங்கள் இன்னும் கூறவில்லை. நீங்கள் கூறும் காலம் தான் எனக்கும். அதற்குள் தான் நானும் மறுப்பிட வேண்டும்.

  மற்றப்படி நீங்கள் மறுப்பாக்கம் இட்ட பின் இதுவரை நீங்கள் வைத்த அனைத்து வாதங்களும் (பின்னூட்டம்+பதிவு) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 17. dharumi திசெம்பர் 10, 2011 இல் 9:45 முப #

  //குற்றச்சாட்டைப் போன்ற ஒன்றை என்மீது நண்பர் குலாம் சுமத்தியிருக்கிறார். \\பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்// /

  இப்பதிவில் — //குற்றச்சாட்டைப் போன்ற ஒன்றை என்மீது நண்பர் குலாம் சுமத்தியிருக்கிறார். \\பின்னூட்டரீதியாக விவாதித்த வரையில் கும்மி, தருமி ஐயா, தமிழன், செங்கொடி வரை ஒரு நிலையில் கடவுள் – நாத்திகம் குறித்த கேள்விகளுக்கு இஸ்லாத்தை முன்னுருத்தியே பதிலிட்டனர்//

  குலாமின் சில கேள்விகளுக்கு நான் பதிலிட்டேன். அதற்கான பதிலேதும் இதுவரை ஏதுமில்லை … சில கேள்விகளும் பதில்களும், பதில் கேல்விகளும் ….

  //விபச்சாரத்தையும், சீன்ன வீடு பிரச்சனைக்கும் அடியோடு ஒழிக்க ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துங்கள்.// (குலாம்.)

  //ஆணை இங்கு முன்னிருத்தி சொல்கிறானே தவிர பெண்ணிற்கு அஃது கிடையாது என்று சொல்லவில்லை.//- G u l a m

  //இதில் சமுகத்திற்கு என்ன பிரச்சனை ஐயா?// -(குலாம்)

  இப்படி ஒரு அணுகுண்டு. நாலு மனைவி வச்சிக்கிட்டா சமூகத்திற்கு என்ன பிரச்சனை என்று எளிதாகக் கேட்டு விட்டீர்கள்! அடக் கடவுளே!!

  இதற்கான பதிலை என் பதிவில் இட்டுள்ளேன். பார்க்க ….

Trackbacks/Pingbacks

 1. கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2 « - திசெம்பர் 17, 2011

  […] கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம… இவைகளில் பகிருங்கள்:மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌TwitterFacebookLinkedInEmailPrintDiggRedditStumbleUponLike this:LikeBe the first to like this . […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: