கூடங்குளம்: பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை

28 நவ்

 

நல்லூர் முரசு நவம்பர் 18 – 24 இதழில் ஐயா சேயன் இப்ராஹிம் அவர்கள் “கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சனை என்ன?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்கள். அதில் சாராம்சமாக, அணு உலைக்கு எதிரான மக்களின் அச்ச உணர்ச்சி நியாயமானது தான் அதேநேரம் பெருகிவரும் மின் தேவையை தீர்ப்பதற்கு வேறு வழியும் இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்கள். இது ஆழமான புரிதலின்றி, குறை உண்மைகளோடு வெளிப்பட்டிருக்கும் கருத்து. முழுப் பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. அந்த வகையில் உண்மைகளை ஆழமாக விளக்குவது அவசியமாகிறது.

 

மின்சாரத் தேவைகளுக்காகத் தான் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன என்பதே மோசடியானது. நாட்டில் மின்சார பற்றாக்குறை இருக்கிறது என்பதில் ஐயம் ஏதுமில்லை. ஆனால் அந்த பற்றாக்குறை எந்த வழியில் ஏற்பட்டது? அதை எப்படி தீர்ப்பது? தனியார்மயமே நாட்டின் கொள்கையாகிவிட்ட நிலையில் ஏனைய பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே மின்சாரத் துறையும் சீரழிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக பெருகிவரும் தேவைகளுக்கு ஏற்ப மின் உற்பத்திக்கான ஆதாரங்களைப் பெருக்காமல் புறக்கணிக்கப்பட்டது. இதுதான் பற்றாக்குறைக்கான முதல் காரணம். மின் பயன்பாட்டை முறைப்படுத்தாமல் பெருமுதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தேவைப்படும் மின்சாரம் போக எஞ்சியிருப்பவை மட்டுமே மக்களுக்கு என்றுதான் அரசுகள் நடந்து கொள்கின்றன. மின் தட்டுப்பாட்டை காரணம் காட்டி மக்களுக்கு நான்கு ஐந்து மணி நேரம் மின்சாரத்தை தடை செய்யும் அரசு அவர்களுக்கு தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கி வருகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கழிப்பறையில் கூட ஏ.சி பொருத்தி பகட்டாக நூறு குடும்பங்களின் மின்சாரத்தை ஒரு குடும்பமே செலவு செய்யும் நிலையில் பகட்டுக் குடும்பத்திற்கு 24 மணிநேர மின்சாரமும் மக்களுக்கு மின் தட்டுப்பாடும். கண்ணைக் கூசும் நியான் விளக்குகளின் வெளிச்சத்தில் விளம்பரங்கள் ஜொலிக்கையில் ஏழை மக்கள் மெழுகு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றால் மின் தட்டுப்பாடு என்பதன் பொருள் தான் என்ன?

 

யாருக்கான மின் தட்டுப்பாடு என்றாலும் மின் தட்டுப்பாடு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த மின் தட்டுப்பாட்டை போக்கத்தான் அணு உலைகளா? அல்லது வேறு நோக்கங்களுக்கா? மின்சாரத் தேவைகளிலிருந்து அணுமின் திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை பன்னாட்டு ஒப்பந்த நிர்ப்பந்தங்களின் காரணமாகவே அவை நிறைவேற்றப்படுகின்றன என்பதே உண்மை. நாட்டிலிருக்கும் 18 அணுமின் நிலையங்களிலுமான மின் உற்பத்தி, மொத்த மின் உற்பத்தியில் 2.8% மட்டுமே. இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தப்படி புதிய அணு உலைகள் கட்டியமைத்தாலும், அவை அனைத்தும் முழுத்திறனுடன் இயங்கினாலும் 7% மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். 1970ல் அணு உலை திட்டங்கள் தொடங்கும்போது 2000 த்தில் 43,500 மெவா மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறினார்கள். ஆனால் 2010 ல் தயாரிக்கப்பட்டது 2,720 மெவா மட்டுமே. அதிலும் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 2005ல் உச்சகட்ட அளவாக 3,310 மெவா மின்சாரம் தயாரிக்க அணு உலைகளை இயக்குவதற்கு 4000 மெவா மின்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை அணு உலை எதிர்ப்பாளர்கள் கூறவில்லை, தீரேந்திர சர்மா எனும் அணுத்துறை பேராசிரியர் கூறுகிறார். இந்த 2.8% அணு மின்சாரத்தை தயாரிக்க ஏனைய வழியில் ஆகும் செலவைவிட 15 மடங்கு அதிகம்.

 

சரி, எவ்வளவு அதிக செலவு ஆனாலும், எவ்வளவு குறைவாக தயாரிக்க முடிந்தாலும் அணு உலை மூலம் தான் தயாரிக்க வேண்டும் என்றால் அதை உள்நாட்டிலேயே தாராளமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் ஏன் தயாரிக்க முயலக் கூடாது? அறிவியலாளர்களின் எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்திலிருந்து தான் தயாரிக்க வேண்டும் என்பது ஏன்? எந்த நாடுகளின் உதவியுடன் அணு உலைகள் கட்டப்படுகிறதோ அந்த நாடுகளில் அணு உலைகள் புதிதாக ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு மட்டுமல்ல, ஏற்கனவே இருக்கும் உலைகளும் மூடப்பட்டு வருகின்றன. அணு உலைகள் 100% பாதுகாப்பானவை என்றால் தொடர்புடைய நாடுகள் ஏன் அணு உலைகளை செயல்படுத்த மறுக்கின்றன? ஏனென்றால் அணு உலைகள் ஏற்படுத்தப்படுவது மின்சாரத் தேவைகளுக்காக அல்ல. பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காகவே அணு உலைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

 

மக்கள் போராடும் போது அவர்களை சமாதானப் படுத்துவதற்காக எதையாவது சொல்லிவைப்பது அரசின் வழக்கம். அந்த வகையில் தான் அணு உலைகள் 100% பாதுகாப்பானது, புதிய தொழில் நுட்பம் என்பதெல்லாம். கூடங்குளத்தில் தற்போது கட்டப்படுவது விவிஇஆர்1000 எனும் தொழில்நுட்பத்தில். இதே தொழில்நுட்பத்தில் 31 குறைபாடுகள் இருக்கின்றன என்று ரஷ்ய அறிவியலாளர்கள் ரஷ்ய பிரதமர் மெத்தவெதேயிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் கூறுகிறார்கள் 100% பாதுகாப்பானது என்று. விபத்து நடந்தால் அரசு எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு போபால் விசவாயுக் கசிவு ஏற்கனவே நமக்கு பாடமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை கொன்று, லட்சக்கணக்கான மக்களை இன்றுவரை ஊனமாக்கிவரும் முதல் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பிவைத்தது இந்திய அரசு. அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் என்று ஒன்றை நிறைவேற்றி 1500 கோடி கொடுத்தால் போதும் மிச்சத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதுவும் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டால் நட்ட ஈடு கோர முடியாது. அணுத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டு, அது குறித்த தகவல்கள் இரகசியமாக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் நேரடியாக வழக்கு தொடுக்க முடியாதபடி இந்திய ரஷ்ய நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரம் தான் நோக்கம் என்றால் இந்த பன்னாட்டு முதலாளிகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

 

அணு உலைகளின் முதன்மையான விசயமே அதன் கழிவு தான். இதை ஏதோ வீட்டுக் கழிவு போல் எண்ணிக் கொண்டு கடலில் கொட்டினால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பது போல் புரிந்து கொள்வது அபத்தமானது. அமெரிக்க, ரஷ்யா உட்பட இந்தியாவுக்கு அணு தொழில் நுட்பத்தை கொடுத்த எல்லா நாடுகளும் அணுக்கழிவை திரும்ப பெற்றுக் கொள்ள மறுக்கிறது. இதை இந்திய அரசு மிகுந்த பொருட் செலவில் மண்ணின் அடியாழத்தில் புதைத்து வருகிறது. ஏனென்றால் அணுக்கழிவுகள் கதிரியக்கம் மிகுந்தவை. மூவாயிரம் அடிக்குக் கீழே 2400 ஆண்டுகள் புதைத்து பாதுகாத்தால் தான் இதன் கதிரியக்க வீரியம் குறையும்.

 

வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்படுவதும், சாலை விபத்துகளில் மரணம் நேர்வதும் அணு உலை விபத்தும் ஒன்றா? பாதுகாப்பு முறைகளை இலாபம் கருதி இயக்காமல் வைப்பதன் மூலமோ, தொழிநுட்பக் கோளாறின் மூலமோ, ஒரு மனிதத் தவறின் மூலமோ நிகழ்ந்துவிடும் சாத்தியம் கொண்ட அணுவிபத்து பல கிமீ சுற்றளவில் தாவரங்கள் உட்பட எந்த உயிரினங்களும் இருக்க முடியாமல் துடைத்தெறிந்துவிடும். மட்டுமல்லாது பல தலைமுறைகளுக்கு பிறக்கும் குழந்தைகளும் அணுக்கதிர் வீச்சினால் ஊனமுற்றும் நோய்களுடனும் பிறந்து அழியும். இதை சாலை விபத்துடன் ஒப்பிடுவது அறிவார்ந்த செயலா?

 

மின்சாரத் தேவைகளுக்காக அணு உலைகளைச் சார்ந்து இருப்பது இந்தியாவின் சுயச்சார்பை அழிப்பதோடு மட்டுமின்றி அடிமைப்படுத்தலுக்கும் வழிசமைக்கக் கூடியது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்றாலோ, வெளியுறவுக் கொள்கையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றாலோ, தமக்கு ஏற்ப செயல்பட வைக்க வேண்டுமென்றாலோ யுரேனியத்தை தடை செய்தால் போதும் என்ற நிலை உருவாகும். இப்போதே பங்குச் சந்தையை கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது மிரட்டுவதை நாம் கண்டு வருகிறோம். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்தால் (அதிகார வர்க்கத்தின் பார்வையில் அது ஒரு புதையல் என்றபோதிலும்) நம்முடைய அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாக கரைகிறது. இந்த நிலையில் யுரேனியம் எனும் தூண்டிலையும் அன்னிய நிறுவனங்களின் கைகளில் கொடுப்பது எந்த விதத்தில் மக்களுக்கு உதவும்?

 

அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவை அனைத்து வீடுகளுக்கும் சி.எல்.எப் விளக்குகளைக் கொடுப்பதன் மூலம் ஈடுகட்டலாம். தொலைக்காட்சிப் பெட்டியும், மடிக்கணிணியும் இலவசமாக கொடுக்க முடியும் போது ஒவ்வொரு வீட்டுக்கும் சில விளக்குகளை வழங்க முடியாதா? மொத்த மின் உற்பத்தியில் கால் பங்கு கடக்கும் போது விரையமாகிறது. புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து பயன்படுத்துவதன் மூலம் அணுமின்சாரத்தை விட அதிகமாக சேமிக்க முடியுமே. ஓட்டுக் கட்சிகள் நிகழ்ச்சிகளின் போது திருடப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தினாலே குறிப்பிடத்தகுந்த மின்சாரம் மிச்சமாகுமே. சூரிய ஒளியிலிருந்து, கடல் அலையிலிருந்து இன்னும் மரபுசாரா ஆற்றல்களிலிருந்து மின் உற்பத்தி செய்ய என்ன ஆய்வுகள் நடத்தப்பட்டன இந்தியாவில்? அத்தனையையும் மீறி அணுமின் உற்பத்தி செய்தாலும் அது ஒருக்காலும் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்கும், பகட்டு உபயோகங்களுக்கும் தான் பயன்படப் போகிறது.

 

எனவே அணு உலைகளை அது கூடங்குளமானலும் உலகில் எந்த மூலையில் என்றாலும் அதை ஆதரிப்பது அறிவுடையவர்களின் செயலாக இருக்க முடியாது. நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பவர்கள் யாரானாலும் அவர்கள் இடிந்தகரை மக்களோடு இணைந்து போரட வேண்டியது அவசர, அவசிய கடமையாகும்.

7 பதில்கள் to “கூடங்குளம்: பொய்களைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை”

 1. சி. ஜெயபாரதன் திசெம்பர் 6, 2011 இல் 3:52 முப #

  1. கடந்த 50 ஆண்டுகளாய் அடுத்தடுத்து இயங்கும் இந்திய அணுமின் உலைகளால் ஒருவர் கூட கதிரடி பட்டு மடிய வில்லை. புகழேந்தி, ஞாநி, உதய குமார் கூறுவது போல் ஒருவர் கூட கதிரடி தாக்கிப் புற்று நோயால் மரிக்க வில்லை.

  2. 500 மெகா வாட் வரை இந்திய அணுமின் உலைகள் பலவற்றை இப்போது இந்தியரே டிசைன் செய்து அமைத்தியக்கிப் பராமறித்து வருகிறார்.

  3. அணு குண்டில் தகர்ந்து போன ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்கள் சொர்க்கபுரி போல் புத்துயிர் பெற்று இப்போது எழுந்துள்ளன.

  4. செர்நோபில், புகுஷிமா விபத்துக்களுக்குப் பிறகு செம்மையாக்கப் பட்டு இயங்கும் எந்த அணுமின் உலையும் நிறுத்தம் இதுவரை அடைய வில்லை, இந்தியாவின் கூடங்குளம் தவிர.

  5. கூலிப் பட்டாளங்கள் தமிழகத்தில் கூடங்குளத்தைத் தற்காலியமாக நிறுத்தினாலும் இந்திய அணுமின் உலைகள் இன்னும் பல்லாண்டுகள் நீடித்து இயங்கும்.

  சி, ஜெயபாரதன், கனடா.

  • சி. ஜெயபாரதன் திசெம்பர் 6, 2011 இல் 7:05 பிப #

   30 உலக நாடுகளில் கடந்த 50 ஆண்டுகளாக அடுத்தடுத்து இயங்கும் > 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் (செர்நோபில் தவிர) எந்த அணுமின் உலையிலும் கதிரடியில் மடிந்தவரும் இல்லை, புற்று நோயில் துடித்தவரும் இல்லை.

   இது மெய்யான புள்ளி விபரம்,

   சி. ஜெயபாரதன், கனடா

 2. nallurmuzhakkam திசெம்பர் 13, 2011 இல் 8:39 பிப #

  வணக்கம் ஐயா,

  நான் உங்களிடம் கேட்டது அணு உலையின் பின்னிருக்கும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கம் அல்லது இந்தியாவின் மறுகாலனியாக்கம் குறித்து.
  http://jayabarathan.wordpress.com/2011/11/04/anti-nuclear-power-activities/#comment-65115
  நீங்களோ பாதுகாப்பு குறித்து மட்டுமே பேசியிருக்கிறீர்கள்.

  மெய்யாகவே, அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால் விபத்து இழப்பீடு குறித்து அந்த நிறுவனங்கள் ஏன் அக்கரை கொள்கின்றன, நிர்ப்பந்திக்கின்றன. இந்திய ரஷ்ய ஒப்பந்தத்தின் 13 வது குறிப்பு விபத்து நேர்ந்தால் ரஷ்ய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம் என்று கூறுகிறது. நூறு விழுக்காடு பாதுகாப்பானது என்றால் இழப்பீடு தரமுடியாது என்று நிர்ப்பந்தம் செய்து அதை ஒப்பந்தத்தில் ஏற்றியது ஏன்?

  விற்பனைசெய்யப்பட்ட ஒரு பொருளில் உற்பத்தி குறைபாட்டினால் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நிறுவனத்திடம் இழப்பீடு கோருவது நுகர்வோர் உரிமை. இதை மறுத்து அணு உலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க பிரான்ஸ் நிறுவனங்கள் வற்புறுத்தி தற்போது இந்திய அரசு அந்த சட்டத்தை திருத்தம் செய்திருக்கிறது. இதன் பொருள் அனு உலையில் விபத்திற்கு வாய்ப்பு உள்ளது என்பது அல்லவா?

  போராடும் மக்களை கூலிப்பட்டாளங்கள் என இழிவுபடுத்துவது உங்களைப்போன்ற கற்றாய்ந்த பெரியோர்களுக்கு அழகா?

 3. சி. ஜெயபாரதன் திசெம்பர் 27, 2011 இல் 3:08 பிப #

  http://jayabarathan.wordpress.com/2011/12/23/50-years-achievements/ ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்.

  அணுமின் உலைகளில் மனிதத் தவறு, யந்திரக் கோளாறு, இயற்கையின் சீற்றத்தால் விபத்துக்கள் நேரலாம். அவ்விதம் விபத்துக்கள் நேர்ந்தால் அணு உலை தானாய நிறுத்தமாகி அணுப்பிளவுக்கோள்களின் எஞ்சிய வெப்பம் தணிக்க பல்வேறு ஏற்பாடுகள் கூடங்குளத்தில் உள்ளன.

  சி. ஜெயபாரதன்.

 4. சி. ஜெயபாரதன் திசெம்பர் 27, 2011 இல் 3:13 பிப #

  ////போராடும் மக்களை கூலிப்பட்டாளங்கள் என இழிவுபடுத்துவது உங்களைப்போன்ற கற்றாய்ந்த பெரியோர்களுக்கு அழகா? ////

  55 ஆண்டுகள் 25 மேற்பட்ட அணு உலைகளில் அணுசக்தி ஆக்கத்தில், பாதுகாப்பில் ஆழ்ந்த அனுபவம் பெற்ற ஆயிரக் கணக்கான இந்திய விஞ்ஞானிகள், எஞ்சினியர்களை இழிவு செய்வது உங்களைப் போன்ற கற்றோருக்கு அழகா ?

  சி. ஜெயபாரதன்.

 5. சி. ஜெயபாரதன் திசெம்பர் 27, 2011 இல் 8:19 பிப #

  அணுமின் உலை அபாயப் பாதுகாப்பு காப்பீடு பல்வேறு நிபந்தனைக்குள் வரும். பொதுவாக இவைதான்.

  1. சாதனங்கள் டிசைன், வரைவு, உற்பத்தி, சோதனை, போக்குவரத்து ரஷ்யன் எல்லை வரை : காப்பீடு பொறுப்பு : ரஷ்யா

  2. அணு உலைக் கட்டமைப்பு, சாதனங்கள் இணைப்பு, சோதிப்பு, இயக்கம், பராமறிப்பு, 30 ஆண்டுக்குப் பிறகு நிரந்தர நிறுத்தம், அணுக்கழிவுப் புதைப்பு: காப்பீடு இந்தியர் பொறுப்பு,.

  3. மனிதத் தவறு, சாதன முறிவு, இயற்கை சீற்றத்தால் அபாயம் நேர்ந்தால் அணு உலை பாதுகாப்பாய் நிறுத்தம் அடையும், எச்ச வெப்பம் தணிக்கப் பட முத்தர ஏற்பாடுகள் உள்ளன. இதில் தவறி அபாயம் ஏற்பட்டால், மக்களுக்கு ஏற்படும் விளைவுகளைக் கையாளுவது, காப்பீடு பெறுவது இந்தியர் பொறுப்பு (அணு உலை இயக்குநர், மைய அரசு, மாநில அரசு) .

  4. அமெரிக்காவின் போபால் சீரழிவுக் காப்பீடு அணு உலைகளுக்கு ஒவ்வாது.

  சி. ஜெயபாரதன்

  ++++++++++++++++++++

 6. nallurmuzhakkam திசெம்பர் 29, 2011 இல் 11:27 பிப #

  வணக்கம் ஐயா,

  அணு உலைகளை எதிர்ப்பதற்கு பாதுகாப்பு மட்டுமே காரணம் அல்ல. இதை இடுகை விரிவாகவே பேசுகிறது, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே நுகர்வோர் உரிமை என்பது தொழில்நுட்ப கோளாறுகள் அதன் தயாரிப்பு நிறுவனத்தையே சாரும். அணு உலைகளில் மட்டும் அந்த விதியை மாற்றம் செய்ய நிர்ப்பந்தித்தது ஏன்? முழுமையான பாதுகாப்பு கொண்ட அணு உலைகளை வளர்ந்த நாடுகள் ஏற்படுத்தாததும் இருப்பதையும் மூட உத்தேசிப்பதும் ஏன்? புகுஷிமா விபத்திற்கு முன்பும் கூட அறிவியலாளர்கள் பாதுகாப்பு சான்றிதழ்கள் அளித்துக் கொண்டிருந்தார்கள், என்னானது அந்த பாதுகாப்பு?

  அணு உலைகளின் நோக்கம் மின்சாரம்தானா? அதன் பின்னாலிருக்கும் அரசியல் குறித்து உங்கள் கருத்தென்ன? அனைத்தையும் இணைத்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.னாம் தொடர்ந்து பேசலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: