இதோ இன்னோரு கடையநல்லூர்

2 ஜன

 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய ஊர்களைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 28000 நெசவாளர் குடும்பங்களில் நெசவுத்தொழில் செய்தார்கள். ஆனால் இப்போது 1300 நெசவாளர்களே இருக்கிறார்கள். காரணம் என்ன?

 

செங்குந்தபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் குமாரிடம் பேசினோம். “பட்டுக்கு பாகு காய்ச்சி சேலை நெய்வது ரெம்பக் கஷ்டம். காலையில் இருந்து சாயங்காலம் அரை வேலை செய்தால்தான் 150 ரூபாய் கூலி கிடைக்கும். அதுவும் இப்போது ஒழுங்காக கிடைப்பதில்லை. கேட்டா, கோஆப்டெக்ஸில் இருந்து பண்ம் வரவில்லை என்கிறார்கள். அதனால் எங்களுக்கு கூலி கிடைக்க வாரக் கணக்கு, மாதக்கணக்கில் ஆகிறது. தாக்குப் பிடிக்க முடியாமல் எங்க ஊர்க் காரர்கள் எல்லாம் குடும்பத்துடன் சென்னையில் இருக்கும் பெரிய கடைகளில் கூலி வேலை செய்வதற்காக போய் விட்டார்கள். எங்களைப் போன்ற ஒரு சிலர் தான் வழியில்லாமல் இங்கேயே முடங்கிக் கிடக்கிறோம்” என்றார் வருத்தமாக.

 

சுந்தர விநாயகா கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான உலகநாதன், “நாங்கள் நெய்யும் பட்டுச் சேலைகளை தமிழக அரசு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலமாக தள்ளுபடியில் விற்கிறார்கள். அந்த தள்ளுபடியை அரசு மானியமாக தருவது தான் வழக்கம். ஆனால் அரசு கடந்த சில ஆண்டுகளாக மானியத்தை கொடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு பணம் இன்னும் வரவே இல்லை. எங்கள் பகுதியில் இருக்கும் 27 சங்கங்களில் சில சங்கங்களில் மட்டும் தங்களுடைய சொந்தப் பணத்தில் நெசவாளர்களுக்கு கூலி கொடுக்கிறார்கள். மற்றவர்களால் அப்படி முடிவதில்லை. அதனால் எங்களுக்குச் சேரவேண்டிய ஒரு கோடி ரூபாயை அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதோடு, கைத்தறி நெசவாளர்கள் நலனுக்காக எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட இலவச வேட்டி சேலை திட்டத்தை பவர் மெசின் மூலம் செய்வது நியாயமா? எங்களுக்குத்தான் அந்த ஆர்டரைத் தரவேண்டும். அப்போது தான் நாங்கள் நிம்மதியாக வாழமுடியும்” என்றார்.

 

இது ஜூனியர் விகடன் 18.12.2011 இதழில் வெளிவந்த செய்தி. இது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முந்திய கடையநல்லூரை நினைவுபடுத்துகிறதா? இது கடையநல்லூர் போன்று ஏதோ ஒரு சில பகுதிகளில் மட்டுமோ, கைத்தறி நெசவு போன்று ஏதோ ஒரு தொழிலில் மட்டுமோ நடைபெறும் நிகழ்ச்சியல்ல. மக்கள் தங்கள் வாழ்வை கடத்த செய்து கொண்டிருக்கும் அத்தனை தொழில்களுக்கும், அனைத்து ஊர்களுளிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

அரசுகள் மக்கள் நலம் சார்ந்து திட்டங்களை தீட்டுவதும் இல்லை, நடைமுறையில் இருக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதும் இல்லை. 80களில் தொடங்கிய ’குறுக்கீடில்லாத மறுகாலனியாக்கத்தை’ பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் படிப்படியாக அரசுகள் கொண்டு வந்தன. இதன் மைய நோக்கமே அரசு நடத்திக் கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து விலகி அவற்றை தனியார்மயமாக்குவது, அரசின் கொள்கையை முழுக்க முழுக்க நிறுவனங்களுக்கு சாதகமானதாக மாற்றுவது, சட்டரீதியாக நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் மக்களைச் சுரண்டி லாபமீட்டுவதற்கு தடையாக இருக்கும் அனைத்திலும் திருத்தம் செய்வது தேவைப்படும் புதுச்சட்டங்களை இயற்றுவது போன்றவை தான்.

 

இதன் அடிப்படையிலேயே கைத்தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு, வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பும், நிதி உதவிகளும் படிப்படியாக நிருத்தப்படுதும், கைத்தொழில்களுக்கு என்றிருக்கும் சிறப்பு ரகங்களை பெரும் தொழிற்சலைகளில் உற்பத்தி செய்ய அனுமதிப்பதும் நடந்து வருகிறது. இதன் மூலம் வாழ வழியற்றுப் போகும் உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த முயற்சிகளினால் வேறு தொழில்களுக்கு போகும் போது அங்கும் இதுவே மீள நடக்கிறது.

 

குறிப்பாக கூறினால், ஆண்டாண்டு காலமாக விவசாயம் செய்துவந்த விவசாயிகள், நசுக்கும் அரசின் திட்டங்களினால் மூன்று லட்சம் விவசாயிகள் வரை தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சக்கணக்கானோர் தங்கள் நிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு விவசாயக் கூலிகளாகவும், கூலித் தொழிலாளர்களாக நகரங்களுக்கு இடம் பெயர்ந்தும், பெட்டிக்கடைகளை வைத்து வியாபாரம் செய்தும் காலங் கடத்துகிறார்கள். குறுதொழிற்கூடங்கள் அரசின் ஊக்கமின்மையால் நசிவுற்று அதில் ஈடுபட்ட மக்கள் சில்லரை வணிகத்திற்கு வந்திருக்கிறார்கள். தற்போது அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை அனுமதித்திருப்பதன் மூலம் மக்களை அங்கிருந்தும் விரட்ட முயற்சிக்கிறது.

 

கடையநல்லூரைப் பொருத்தவரை முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை கைத்தறி நெசவு தான் மக்களுக்கு இருந்த ஒரே வாழ்வாதாரம். இன்று கைத்தறி நெசவு வழக்கொழிந்து போகும் கடைசி எல்லையில் நிற்கிறது. பிற பகுதிகளில் மக்கள் கூலிவேலைக்கு சென்றார்களென்றால் கடையநல்லூரில் அது வெளிநாட்டு கூலிவேலையாக மாறியது. வெளிநாட்டு நாணயமாற்று மதிப்பு விகிதம் ஒப்பீட்டளவில் கடையநல்லூர் மக்களை ஓரளவு செழிக்க வைத்திருந்தாலும், நிலமை மாறிக் கொண்டிருக்கிறது. வளைகுடா நாடுகளில் சொந்த மக்கள் வேலையில்லா திண்ணாட்டத்தில் இருக்கும்போது வெளிநாட்டினருக்கு வேலை கொடுப்பதா எனும் அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், ஊதியக் குறைப்பு, சலுகைகள் வெட்டு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை முடிந்தவரை குறைக்க முயற்சி செய்கிறது.

 

இன்னும் கடையநல்லூர் மக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைத்ததால் தாங்களே முன்வந்து கைத்தறி நெசவை கைவிட்டதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கைத்தறியின் சிறப்பு ரகங்கள் விசைத்தறிகளிலும் உற்பத்தி செய்யலாம் எனும் சட்டத்திருத்தமே கடையநல்லூர் பகுதிகளில் கைத்தறி நெசவை ஒழித்தது என்பதே உண்மை. வெளிநாட்டு வேலைவாய்ப்பும் அருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கடையநல்லூருக்கான மாற்றுத் தொழில் என்ன? என்பது தான் மக்கள் முன்னிற்கும் முதன்மைக் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். மாறாக முன்னிற்கும் இந்த பிரச்சனை குறித்த புரிதல் ஏதுமற்று, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திய வளத்திலும், அந்த வளத்தின் விளைவால் ஒருபக்கம் ஏற்பட்ட மேட்டிமைத் தனத்திலும், கலாச்சார சீரழிவுகளிலும், மறுபக்கம்  மதப் பிடிப்பிலும் ஊறிக் கிடப்பது மக்களைப் பீடித்திருக்கும் நோய். இந்த நோய்க்கான மருத்துவமே இன்று கடையநல்லூரின் முதல் தேவையாக இருக்கிறது.

 

தொடர்புடைய கட்டுரைக‌ள்

நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?

கடையநல்லூர் பொருளாதாரம்: அடையாளமா? ஆழமா?

கடையநல்லூரை எப்படி பார்ப்பது?

கடையநல்லூரும் உகந்த தொழில்களுக்கான மனோநிலையும்

கடையநல்லூரின் மாற்றங்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: