ஐவர் குழு தலைமை நீதிபதியின் குசும்பு

2 ஜன

முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்டினால் அதை தமிழகமும், கேரளாவும் இணைந்து பராமரிக்க முடியுமா என்று இன்றைய விவாதத்தின்போது ஐவர் குழு தலைவரான உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கேட்டார். இதற்கு தமிழக வக்கீல்கள் கடும் எதிர்ப்பும், ஆட்சேபனையும் தெரிவித்தனர்.

நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இன்று காலை டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தின் அலுவலக வளாகத்தில் கூடியது. அப்போது சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று வந்த தொழில்நுட்ப நிபுணர்கள் தத்தே, மேத்தா ஆகியோர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

பின்னர் தமிழகம் மற்றும் கேரள மாநில வக்கீல்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். கேரளவக்கீல்கள் முதலில் பேசினர். அப்போது அவர்கள் ஏற்கனவே கூறி வந்ததையே திரும்பக் கூறினர். கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன் வாதிடுகையில், முல்லைப் பெரியாறு அணை தொடர் பூகம்ப நிகழ்வுகளால் வலுவிழந்து, பலமிழந்து காணப்படுகிறது. அணையில் விரிசலோ, உடைப்போ ஏற்படவில்லை என்றாலும் கூட அணை பலமாக இல்லை. இதனால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நூறாண்டுகளைத் தாண்டி விட்ட அணையை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் திரும்பத் திரும்ப பழுது பார்த்துக் கொண்டிருப்பது. எனவே புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று கூறினார்.

பின்னர் பிற்பகலில் தமிழக அரசின் வக்கீல்கள் குரு கிருஷ்ணகுமார், உமாபதி ஆகியோர் வாதாடினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், கேரள அரசு பொருத்தமற்ற, உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களையும், வாதங்களையும் தொடர்ந்து தந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை மிகப் பலமாக உள்ளது. அணையில் எந்த இடத்திலும் உடைப்போ, விரிசலோ இல்லை. கேரளாவின் வாதம்தான் மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே அதைத்தான் ஐவர் குழு நிராகரிக்க வேண்டும். கேரளாவின் வாதத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், புதிய அணை கட்டினால் இரு மாநிலங்களும் இணைந்து அதை பராமரிக்க முடியுமா என்று கேட்டார். இதைக் கேட்டு தமிழக வக்கீல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நீதிபதியின் இந்தக் கேள்வியை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஆட்சேபிப்பதாகவும் கூறிய தமிழக வக்கீல்கள், புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தமிழகத்தின் கருத்தைப் பதிவு செய்தனர்.

************************************************************

அணை பாதுகாப்பாக இருக்கிறதா இல்லையா? என்பதை ஆராய்வது தான் ஐவர் குழுவின் பணி. அந்த ஐவர் குழுவின் நிபுணர்கள் இருவர் நேரடியாக அணைக்குச் சென்று ஆராய்ந்து அறிக்கையை அளித்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை நாளை தான் பரிசீலிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் ஐவர் குழுவின் தலைவரான  முன்னாள் நீதிபதி, “புதிய அணையைக் கட்டி அதை இரண்டு மாநிலங்களும் இணைந்து பராமரிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமென்ன? ஒருவேளை தமிழகத்தின் கருத்தை அறிய விரும்பியிருக்கிறார் என்றால், “இப்போது இருக்கும் அணையிலேயே கேரளா விரும்பும் பலப்படுத்தலைச் செய்தால் தமிழகத்துடன் ஒத்துழைக்கத் தயாரா?” என்று கேரள வழக்குறைஞர்களிடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை.

ஏற்கனவே மத்திய அரசு கேரளாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது. அணை பகுதிக்கு மத்திய படையின் பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு, இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையில் கேரளாவின் எதிர்ப்பை மீறி தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று கூறிய மத்திய அரசு; பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் எனும் கேரளத்தின் கோரிக்கைக்கு தமிழகத்திற்கு தகவல் கூட தெரிவிக்காமல் பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைத்தது. இது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை அணுகும் விதமா?

நீதிபதிகளானாலும், மத்திய அரசானாலும், கேரள ஓட்டுக் கட்சிகளானாலும் பிரச்சனையை ஏதாவது வழியில் திசை திருப்பி புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். தமிழக ஓட்டுக் கட்சிகளுக்கும் இதில் பெரிதாய் ஆட்சேபம் ஒன்றுமில்லை. இல்லையென்றால் தமிழகத்தின் கையிலிருந்து அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு, மீன் பிடித்தல், காவல் பணி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கேரளத்திடம் தாரை வார்த்திருப்பார்களா? அனைவரிடமும் இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை ஓட்டுக் கட்சிகளை புறக்கணித்து தன்னெழுச்சியுடன் நடத்தப்பட்டு வரும் தமிழக மக்களின் போராட்டங்கள் தான்.

தங்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் அந்த அணையை தமிழக மக்கள் கைவிட மாட்டார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: