நீயா நானா? .. .. மூத்திரத்தைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது

3 ஜூலை

 

அழுகையை அதிகம் காட்டுவது சீரியல்கள்தான் எனும் கருத்தோட்டம் பெரும்பாலான மக்களிடம் உண்டு. டிவிதான் மக்களை கெடுக்கிறது எனும் சிந்தனை பலருக்கும் இருக்கிறது. உருப்படியான நிகழ்ச்சிகள் எதுவுமே வருவதில்லை என ஏராளமானவர்கள் அங்கலாய்க்கிறார்கள். ஆனால் இவர்கள் பலரும் நீயா நானா ஒரு நல்ல நிகழ்ச்சி எனும் கருத்தில் ஒத்துப்போகக்கூடும். நல்ல நிகழ்ச்சி என்பது நல்லதை சொல்ல வேண்டிய நிகழ்ச்சி எனும் வரையறை மாறி, கெட்டதை சொல்லாமலிருந்தாலே போதும் எனும் யதார்த்த சூழலை கணக்கிலெடுத்துக்கொண்டால்கூட இந்த விவாத நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சிதானா என ஆராய்வது அவசியமாகிறது.

செயற்கைகோள் தொலைக்காட்சி துவங்கிய காலத்தில் இருந்து ஒளிபரப்பாகிவந்த வழமையான நிகழ்ச்சிகளில் இருந்து மாறுபட்ட நிகழ்ச்சிகளை கொடுத்த டிவி எனும் பெயர் விஜய் தொலைக்காட்சிக்கு உண்டு. கருணாநிதியைவிட ஜெயலலிதா மாறுபட்டவர் என்பது எப்படி உண்மையோ அப்படிப்பட்ட உண்மைதான் இதுவும். உற்று கவனிக்கையில் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒரு பார்வையாளனுக்கு வரவேண்டிய நியாயமான கோபத்தை மழுங்கடிக்கின்றன, மனிதர்களின் மென்மையான உணர்வுகளை தூண்டிவிட்டு அதனை நிகழ்ச்சியாக்குகின்றன, என்பது புலனாகும்.

அழுகை அதிகமாக இருக்கிறது என சீரியல்களை நக்கலடிக்கும் நடுத்தரவர்க மனிதர்கள் பலரும் விஜய் டிவியை புகழ்வதை பார்த்திருக்கிறேன். சரி என்னதான் இருக்கிறது என அவ்வப்போது அந்த டிவியை பார்த்தால் அங்கு நிகழ்ச்சிகள்தான் வேறேயன்றி அழுகை அப்படியேதான் இருக்கிறது. பாட்டு பாடுபவர்கள் அழுகிறார்கள், நடனம் ஆடுவோர் அழுகிறார்கள், ஆடுவோர் பாடுவோரின் ஆத்தா அப்பனும் அழுகிறார்கள், அவ்வப்போது நடுவர்கள் அழுகிறார்கள். கருத்து சொல்வோர் அழுகிறார்கள், சரி தொலையட்டும் என சிவக்குமார் மகன் நடத்தும் கோடி ரூபாய் போட்டியை பார்த்தால் அங்கேயும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் அழுகிறார்கள். ஏதாவது எழவு வீட்டுக்கு போனால்கூட இது ஒருவேளை விஜய் டிவி படப்பிடிப்பாக இருக்குமோ என சந்தேகம் வரும் அளவுக்கு அழுகை இந்த தொலைக்காட்சியின் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

அப்படிப் பார்த்தாலும் நீயா நானா ஒன்றும் அழுகாச்சி நிகழ்ச்சி இல்லையே என யாரேனும் கேட்கலாம், அவர்களுக்கு எனது பதில் இது அழுகாச்சி நிகழ்ச்சிகளைவிட ஆபத்தான நிகழ்ச்சி என்பதே. மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும் குப்பை என்பது பார்ப்பவர்கள் எல்லோருக்கும் தெரியும். கலா மாஸ்டரும் ராதிகாவும் தங்கள் நிகழ்ச்சிகள் சமூக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகள் என சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் இங்கு கதையே வேறாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எனும் ஒரே தகுதியோடு கோபி ஒரு சுய முன்னேற்ற புத்தகம் எழுதியிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் வாழ்வை காப்பாற்ற இந்த ஒரு நிகழ்ச்சியே போதும் என்று கிளைமாக்ஸ் வைத்த தோனி எனும் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. இதெல்லாம் நீயா நானாவுக்கு இருக்கும் அறிவார்ந்த நிகழ்ச்சி பிம்பத்தையே காட்டுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பேச தெரிவு செய்யப்படுபவர்கள் பலரும் உயர் மத்தியதர வகுப்பினர் அல்லது அந்த வகுப்பிற்கான வாழ்க்கை முறையை விரும்புபவர்கள். அவர்களை மகிழ்விக்கும் தலைப்புகள் மட்டுமே அங்கு விவாதிக்கப்படும். டீக்கடைக்கு வெளியேயும் சலூனுக்குள்ளும் அரசியல் பேசுவதை வெறுக்கும் அதை வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் எள்ளி நகையாடும் இந்த கூட்டம் மயிரைப் பற்றிக்கூட கூச்சமில்லாமல் கோடிக்கணக்கான மக்கள் முன்னால் பேசுகிறது. அதற்கு சிறந்த நிகழ்ச்சி என பரவலான அறிமுகமும் கிடைக்கிறது. எப்படி சீன் போடுகிறார்கள், வழுக்கை விழுந்தவரை கல்யாணம் செய்துகொள்வீர்களா மாட்டீர்களா? என்பது மாதிரியான தலைப்புக்கள் விவாதிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி சீரியல்களுக்கு மாற்றான நல்ல நிகழ்ச்சி என அங்கீகரிக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கே அவமானகரமானது இல்லையா?

எக்ஸிபிஷனிசம் என்றொரு நோய் மனோவியாதிகளின் பட்டியலில் உண்டு. சற்று ஆபத்தான சட்டப்படி தண்டிக்க வைக்கும் வாய்ப்புள்ள நோய் அது. அடுத்தவர் அந்தரங்கத்தை திருட்டுத்தனமாக பார்த்து ரசிக்கும் மனோபாவத்தை எக்ஸிபிஷனிசம் என வரையறுக்கலாம். நீயா நானா நிகழ்ச்சி பல சமயங்களில் நம்மை இந்த வியாதியுடையோராக்குகிறது. சில வாரங்களுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் உங்கள் மனைவியிடம் பிடிக்காத இயல்பு என்னவென்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. என் மாமனார் வீட்டுக்காரர்கள் மாதக்கணக்கில் என் வீட்டில் தங்குவார்கள், அதையெல்லாம் சகித்துக்கொண்டேன். என் மனைவி எனக்கு தெரியாமல் அவர் தங்கைக்கு பணம் கொடுத்தார். இந்த பழக்கம்தான் என் மனைவியிடம் எனக்கு பிடிக்காதது என்கிறார் ஒரு கணவர். அந்த பெண்ணின் உறவுக்காரர்களுக்கு இது எத்தனை பெரிய அவமானம் என்பதை உங்களால் அனுமானிக்க முடிகிறதா?

ஆனால் இந்த மாதிரியான பதில்கள்தான் அங்கு வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு விவாதத்தில் தவறியும் நீங்கள் ஒரு நிறுவனத்தை குற்றம்சாட்ட முடியாது, சொன்னாலும் அந்த வார்த்தைகள் வெட்டப்படும். ஒரு கம்பெனிக்கு இருக்கும் மரியாதை ஒரு நேயரின் மாமனாருக்கும் தகப்பனுக்கும் இல்லையா? நிகழ்ச்சியின் சுவாரசியத்துக்கு விலை ஒரு பார்வையாளனின் குடும்ப மானம். அது அவனது வியாபாரம் என வைத்துக்கொள்வோம், ஊரான் வீட்டு விவகாரங்களை அம்பலமாக்கும் நிகழ்ச்சியை நாம் கொண்டாடுவதை என்ன பெயரிட்டு அழைப்பது? அதிகப்படியான சொந்த விவகாரங்களை கிளரும்படியான தலைப்புக்கள்தான் அங்கு விவாதத்துக்கு வைக்கப்படுகிறது. சொந்த பிரச்சனைகளுக்கு தரப்படும் அதிக அளவிலான நேரம் மற்றவர்களையும் தங்கள் சொந்த கதையை சொல்லும் ஆர்வத்தை தூண்டுகிறது. நெடுந்தொடர்கள் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் வாயிலாக உங்களை உணர்ச்சிவயப்படவைக்கிறது. நீயா நானா அந்த வேலையை செய்யும் பாத்திரங்களில் ஒருவராக நம்மை நிறுத்துகிறது. உண்மையில் எது மோசமான நிகழ்ச்சி?

இது ஏதோ ஒரு நாள் நடந்த காட்சியல்ல. மிக அதிகமான விவாதங்களின் தலைப்புக்கள் ஆண் பெண், கணவன் மனைவி எனும் இரண்டு தரப்பை மையப்படுத்தியே இருக்கின்றன. கணவனுக்கு எதிராக மனைவியையும் பேசவைப்பதும் மனைவிக்கு எதிராக கணவனை பேசவைப்பதும் ஒரு தொழில்நுட்பமாகவே இவர்களால் கையாளப்படுகிறது. சமீபத்தில் இன்னுமொரு மைல்கல்லை இவர்கள் தொட்டிருக்கிறார்கள். கணவன் அல்லது மனைவியை இழந்த 50 வயதை கடந்தவர்களுக்கான நிகழ்ச்சியாக அது ஒளிபரப்பானது. அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் பல அவர்களின் துன்பத்தை வெளிக்கொணர்வதாக இருந்ததேயன்றி துணையை இழந்த பிறகு வாழ்வை எதிர்கொள்வது எப்படியெனும் ஆரோக்யமான கருத்தை தொடவேயில்லை.

மற்றொரு விவாதம், நகரத்துப் பெண்களை ஆண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பாதது பற்றியது (தலைப்பு வேறாக இருக்கலாம்.. ஆனால் அதிகம் விவாதிக்கப்பட்டது இந்த விசயம்தான்). அதில் நகரத்துப் பெண்களுக்கு ஆதரவாக பேச வந்த சிறப்பு விருந்தினர் சாரு நிவேதிதா. எப்படி இருக்கு? இணையத்தில் தனது முகநூலில் அறிமுகமான இளம் பெண்ணிடம் அரட்டை எனும் பெயரில் பாலியல் வன்முறை செய்த சாருவை திருமணமாகாத நகரத்து பெண்கள் பற்றிய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததிலிருந்தே அவர்களுக்கு அந்த விவாதத்தின் மீதிருந்த மரியாதையை நாம் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை அமைப்பாளர்களுக்கு நித்யானந்தா கால்ஷீட் கிடைக்கவில்லையோ என்னவோ. எது எப்படியோ அங்கு போய் சாரு எந்த பெண்ணிடமும் சில்மிஷம் செய்யவில்லை எனும் அளவில் அந்த நீயா நானாவை ‘நல்ல’ நிகழ்ச்சி என நாம் ஏற்றுத் தொலைக்கலாம். ஈழப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சேவையே அந்த படுகொலைகளை விசாரிக்கச் சொல்லும் வல்லரசு நாடுகள் இருக்கையில், ஊடக வல்லரசான ஸ்டார் குழுமம் பெண்கள் சார்பாக பேச சாருவை அழைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே..

தேவையற்ற முட்டாள்தனமான தலைப்பை அவர்கள் விவாதிக்கிறார்கள் என்பது மட்டுமே பிரச்சனையல்ல. சமூகத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்பதும் கவனிக்கப்படவேண்டியதே. ஐயங்காராக பிறப்பது உயர்வானது நான் அடுத்த ஜென்மத்திலும் அய்யங்காராகவே பிறக்க விரும்புகிறேன் என சொல்கிறார் ஒரு பெண், எந்த கண்டனமும் இல்லாமல் தொடர்கிறது நிகழ்ச்சி. பேயை பார்த்ததாக சொல்பவர்கள் ஜாதகத்தை பார்த்துத்தான் எதையும் செய்வேன் என சொல்பவர்கள் என எல்லோருக்குமான தளமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. இதை சம வாய்ப்பு என்று சொல்ல இயலாது. காரணம், நடுநிலையை எல்லா இடங்களிலும் நாம் பராமரிக்க முடியாது. மோடிக்கும் அவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இசுலாமியர்களுக்கும் இடையேயான நடுநிலையை நம்மால் பராமரிக்க முடியுமா? ஆனால் அதைத்தான் தங்கள் நிகழ்ச்சியின் விதி என சொல்கிறார்கள் அவர்கள்.

அழகு எனும் சொல்லுக்கு பின்னால் பல பன்னாட்டு நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி வியாபாரம் இருக்கிறது. சிகப்பு நிறம் விரும்பப்படுவதன் பின்னால் அது ஒரு வகையில் சாதியின் குறியீடாக பார்க்கப்படும் பழக்கம் இருக்கிறது. இந்த நிஜங்களை புறக்கணித்துவிட்டு அல்லது மேலோட்டமாக விவாதித்துவிட்டு அடர் நிறத்தில் உதட்டுச்சாயம் போடலாமா வேண்டாமா என்பதை நீண்ட நேரம் விவாதிப்பது ஒரு வகையான மோசடி. மக்களை உண்மைகளில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சி. அதனால்தான் ஆரம்பத்தில் சமூக நலன் சார்ந்த தலைப்புகளை விவாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது வெறும் அரட்டையாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

அரசியல் பேச விரும்பாத, அரசியலில் ஈடுபடவிரும்பாத நவீன நடுத்தரவர்கத்தின் ஊடகமான விஜய் டிவி தனது விவாத நிகழ்ச்சிகளில்கூட அரசியலை விலக்கி வைக்க விரும்புகிறது. அதற்காவே இப்படியான மொன்னையான, கிச்சு கிச்சு மூட்டுகிற அல்லது குடும்பத்துக்குள் குத்து வெட்டை உண்டாக்கும் தலைப்புக்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றன. இலக்கிய விவாதங்களாக இருந்த பட்டிமன்றங்கள் சாலமன் பாப்பையா லியோனி குழுவினரால் வெட்டி அரட்டையாக மாற்றப்பட்டதைப் போல விவாத நிகழ்ச்சிகளில் மட்டும் இருந்த அரசியலை துடைத்து சுத்தம் செய்திருக்கிறது விஜய் டிவி.

 கொண்டாடு, அழு அதற்கு மேல் எதுவும் செய்யாதே எனும் எளிய பாடத்தை கற்றுக்கொடுக்கிறது நீயா நானா. இதே பாடத்தை கற்றுத்தரும் இன்னொரு இடம் டாஸ்மாக். களைப்பை போக்க பலர் தேநீர் அருந்துவார்கள், பலர் மது அருந்துவார்கள். எதுவானால் என்ன களைப்பு தீர்ந்தால் சரி என்று நாம் சொல்லமுடியாது. பலரும் விரும்புவதாலேயே சாராயத்துக்கு நாம் தேநீரின் அந்தஸ்தை தந்துவிட முடியுமா? நீயா நானா நிகழ்ச்சிக்குப் பின்னால் மக்களை சமூகம் எனும் அமைப்பில் இருந்து தனிமைப்படுத்தும் யுக்தி இருக்கிறது. உங்கள் வீட்டுக் கூடத்துக்கு வெளியே எந்த சிக்கலும் இல்லை என உங்களை நம்பச்செய்கிறது இந்த நிகழ்ச்சி.

சில நல்ல கருத்துக்கள் இங்கே விவாதிக்கப்படாமல் இல்லை. ஆனால் அதற்கு எதிரான மட்டமான கருத்துக்களுக்கு தரப்படும் மதிப்பே இங்கு  நல்ல கருத்துக்கும் தரப்படுகிறது. அழகு என்பதைப் பற்றி சவுக்கால் அடித்த மாதிரி ஒருமுறை பேசினார் மருத்துவர் ஷாலினி. அடுத்தவர் அழகாக இருப்பதாக சொன்னால் உங்களுக்கு (ஷாலினி) பொறாமை வருகிறது என சொல்கிறார் தொகுப்பாளர். ஆக அங்கே நல்ல கருத்து என்பது ஒரு கருத்து அவ்வளவே. சாக்கடையில் பாலைக்கொட்டினால் பாலுக்காக வருந்தலாமேயன்றி சாக்கடை சிறப்படைந்துவிட்டதாக சொல்ல முடியாது. நீயா நானாவில் அவ்வப்போது கிடைக்கும் நல்ல கருத்துக்களை நாம் இப்படித்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு சாதாரண நிகழ்ச்சியை பார்க்கும் உரிமையைக்கூட குறைசொல்ல வேண்டுமா எனும் கேள்விகள் எழும்போதெல்லாம், பார்ப்பதற்கு இருக்கும் உரிமை அதனை பார்க்காதே என சொல்வதற்கும் இருக்கிறது என நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மது அருந்துவது குற்றமில்லை என்பது அதனை அருந்தாதே என சொல்லும் உரிமையை பறித்துவிடாது. மோசமான நிகழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதும் நல்லவற்றை அறிமுகப்படுத்துவதும் பகுத்தறிவுடைய ஒவ்வொரு பார்வையாளனின் கடமை. அதிலிருந்து நாம் விலகிவிடக்கூடாது.

 

முதல் பதிவு: வில்லவன்

ஒரு பதில் to “நீயா நானா? .. .. மூத்திரத்தைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது”

  1. iniyavan ஜூலை 4, 2012 இல் 12:16 பிப #

    எங்கும் எதிலும் வியாபரம் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை தோழரே..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: