பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?

26 செப்

 

உதாரணங்கள் மட்டுமே உண்மையாகி விடுவதில்லை எனும் பதிவுக்கு மிகு விரைவாக சில பின்னூட்டங்களில் பதில் கூறியிருக்கிறார் நண்பர் குலாம். ஆனால் வழக்கமான மதவாத உத்திகளுடனே அவர் பதில் இருக்கிறது. உறைந்து போயிருக்கும் அந்த மதவாதத்தை உடைப்பதற்கு ஏதுவாக இன்னும் எத்தனை பின்னூட்டங்களை வேண்டுமானாலும் எழுதட்டும், நான் காத்திருக்கிறேன் உருக்குவதற்கு.

 

நண்பரின் முதல் பின்னூட்டத்தின் படி, இதுவரையில் மதவாதிகள் கடவுள் என்பதை எல்லாவித புரிதலுக்கும் அப்பாற்பட்ட நிலையிலேயே கூறிவருகிறார்கள். ஏனென்றால் எந்தவிதத்திலும் கடவுளுக்கு என்னனவிதமான ஆதாரக் குறியீடுகளையும் காட்டிவிட முடியாது. அதற்கு பதிலாக நண்பர், கடவுளை இங்கு பார்க்க முடியாது என்பதற்கான பதிலாக கூறியிருக்கிறார். கண்ணால் காண்பது மட்டுமே இங்கு பிராச்சனையல்ல. ஏதாவது ஒரு ஆதாரக் குறியீடு .. .. இதுதான் மையம், அந்த இடுகையின் சாராம்சமும் அதுதானல்லவா? எந்த ஒரு ஆதாரக் குறியீடும் கடவுளின் இருப்பை முன்வைத்து காட்டிவிட முடியாது என்றால் மதவாதிகள் எந்த அடிப்படையில் கடவுள் இருக்கிறது என்கிறார்கள்? நான் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டும் பதில் சொல்லப்படாத கேள்வி இது தான். நம்பிக்கையாளர்கள் கடவுளை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் உறுதியான ஒன்றாகவா? நம்பிக்கையாகவா? இப்போது குலாம் உறுதிப்படுத்தலாம். கடவுள் என்பது அவரது நம்பிக்கைதான் என்றால் இந்த இடத்திலேயே விவாதத்தை முடித்து விடலாம். ஆனால் அவர் கடவுள் உறுதியாக நிலவுகிறது என்கிறார். உறுதியாக ஒன்று நிலவ வேண்டும் என்றாலே அங்கு ஆதாரம் வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லையென்றாலும், ஆதாரம் காட்ட முடியாது என்றாலும் அது நம்பிக்கை. ஏதாவது ஒரு நிலையில் இருக்க வேண்டும். இரண்டிலும் இருக்க முடியாதல்லவா? விக்ஸ் எப்போதும் விக்ஸ் தான். ஆனால் அது என்ன பொருளில் ஆளப்பட்டது. விக்ஸ் என்பது நம்பிக்கை, மருந்து என்பது ஆதாரம். நம்பிக்கையை சுற்றிச்சுற்றி எழுதிவிட்டு அதை ஆதாரம் என்று கூறக்கூடாது. ஆனால் குலாம் உட்பட மதாவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். விக்ஸை சுற்றிச் சுற்றி எழுதி விட்டு அதை மருத்துவர் எழுதிய மருந்து போல காட்டுகிறார்கள்.

 

நண்பரின் இரண்டாவது பின்னூட்டத்தில் கூறப்பட்டவைகளுக்கும் மேலுள்ளதே போதுமானது. ஆனால் அதில் ஒரு துணைக் கேள்வி இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது \\\அறிவியலால் உணர்த்த முடியாதது கடவுள் என்கிறேன். அதற்கு அறிவியலால் உணர்த்த முடியும் கடவுள் இல்லையென்பதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள்/// இதற்கு நான் மறுப்புக் கட்டுரையில் நேரடியாகவே பதில் கூறியிருக்கிறேன். \\\எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும்/// அறிவியலுக்கு ஆட்படும் கடவுள் அறிவியலுக்கு ஆட்படாத கடவுள் என்றெல்லாம் தனித்தனியாக ஒன்றுமில்லை. கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக ஒரு சாராரால் நம்பப்படுகிறது. அது நம்பிக்கையா? மெய்யா? எனும் பிரச்சனைக்குத்தான் அறிவியலின் துணை கொண்டு ஆராய்கிறோம். எனவே உட்பட்டது உட்படாதது என்றெல்லாம் பிரிவினை செய்வதற்கு வாய்ப்பில்லை. யாரை நோக்கி விரல் சுட்டப்பட்டிருக்கிறது என்பதை மறைத்து விரல் விளையாட்டுகள் வேண்டாமே.

 

நண்பரின் மூன்றாவது பின்னூட்டத்தில் ’தவறான புரிதல்’ கட்டுரையில் நண்பர் எழுதியிருந்த ஒரு வாக்கியத்துக்கு நான் கூறிய பொருள் தவறு என்று கூறி அவரே பொருளும் கூறியிருக்கிறார். அதற்கு இப்படி எச்சரிக்கையும் செய்திருக்கிறார். \\\ஒருவர் என்ன கூற விரும்புகிறார் என்பதை அவர் தான் சொல்ல முடியும். நாமாக தீர்மானித்தால் அது நமது சுய தீர்மானிப்பே!/// சரி இப்படியெல்லாம் பீடிகை போட்டுவிட்டு நண்பர் கூறும் பொருள் என்ன? \\\ஆரம்பத்தில் நான் கண்ட இறை நிராகரிப்பாளர் தங்களை நாத்திகவாதிகள் என இந்த சமூகத்தில் அடையாளம் காட்டுவதற்கு மறுத்த கடவுள் என்ன தெரியுமா? தீப்பெட்டி அட்டையிலும், பட்டாசுகளை சுற்றி இருக்கும் தாளிலும் அச்சாகி இருக்கும் உருங்களையும், பூஜை புனஸ்காரங்கள் தேவைப்படும் கடவுள்களையுமே/// இது நண்பரின் வாக்கியத்திற்கு அவரே கூறும் அருஞ்சொற்பொருள். அதன் பொருளாக நான் குறிப்பிட்டிருந்தது என்ன? \\\வெவ்வேறு மதங்களில் கூறப்படும் கடவுளின் தன்மைகள் குறைவுடையதாய் இருக்கின்றன, கடவுளை மறுப்பவர்கள் இந்த குறை தன்மையுடைய கடவுளின் குறைகளையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நாங்கள் கூறும் கடவுள் குறைகளே இல்லாதவர். எனவே குறைவுடைய கடவுளை மறுத்து கடவுள் மறுப்பாளரான நீங்கள் அதையே குறையில்லாத கடவுளுக்கும் நீட்டிக்கிறீர்கள் என்பது தான் அவர் கூற வருவது/// இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? அவர் என்ன கூறியிருக்கிறாரோ அதையே நான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறேன். பின் ஏன் இந்த சுற்றாடல்கள்? இதே பின்னூட்டத்தில் இப்படியும் கூறியிருக்கிறார் \\\இப்படி இருந்தால் கடவுள் இல்லை, இப்படி இருக்கவும் கடவுளால் முடியாது, – ஆக கடவுள் என்று ஒன்று இல்லை என கூற வேண்டும்/// இப்படித்தான் நான் கூறியிருக்கிறேன். கடவுள் என்பதன் தன்மையாக பொதுவாக கூறப்படுவது என்ன? ஒரு குறிப்பிட்ட காலவரை இல்லாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் என்பது தானே. இதற்குத்தான் நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை. எனவே கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்று கூறியிருக்கிறேன். நண்பர் படிக்கவில்லையா? \\\எப்போதும் நிலைத்து நின்று இயங்கிக் கொண்டே இருக்கும் பொருள் என்று எதுவும் இருக்க முடியாது, நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை என அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது/// கடவுள் இல்லை என்பதற்கு இதைவிடவும் வேறு சான்று வேண்டுமா? இதுபோல் கடவுளாக கூறப்படுவனவற்றின் தன்மைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டும் அறிவியலோடு உரசிப் பார்க்கலாம்.

 

இந்த இடத்தில் மதவாதிகள் செய்யும் வழக்கமான குயுக்தி ஒன்றையும் நினைவு படுத்திவிடலாம். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விடுவார்கள். நிரூபித்தால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார், அகப்பட்டால் அவர் கடவுளாகவும் இருக்க முடியாது என்பார்கள். எந்த வழியிலும்(கவனிக்கவும் கண்ணால் காண்பது மட்டுமல்ல) தென்படாத கடவுளை நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக இருக்கிறது என நீங்கள் கூற முடியும் என்றால், அவ்வாறு நாங்கள் நம்புகிறோம் என்பார்கள். அப்படியென்றால் அது நம்பிக்கை தானே உறுதியானது இல்லையே என்றால், இல்லையில்லை கடவுள் உறுதியாக இருக்கிறது என்பார்கள். உறுதியாக இருக்கிறது என்றால் அறிவியல் ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டால், கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்பார்கள் .. .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .. .. அப்பா இப்பவே கண்ணைக் கெட்டுதே .. .. என்ற வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நண்பர் குலாம் தாம் இப்படி அல்லர் என கூற விரும்பினால் நம்பிக்கையா உறுதியானதா என்று தெளிவுபடுத்தலாம், அவரால் முடிந்தால்.

 

நண்பரின் நான்காவது பின்னூட்டத்தில் சுரண்டலின் வடிவமாக இருப்பதால் தான் கம்யூனிஸ்டுகளால் கடவுள் மறுக்கப்படுகிறார் எனும் என்னுடைய கருத்துக்கு பதில் கூறியிருக்கிறார். பதில் கூறியிருக்கிறார் என்பதைவிட திசை திருப்பியிருக்கிறார் என்பதே சரியாகும். சுரண்டலின் வடிவமாக கடவுள் இருக்கிறார் அதாவது சுரண்டலின் வடிவமாக கடவுள் ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது என்னுடைய கேள்வி. நாங்கள் சுரண்டலுக்காக கடவுட் கொள்கையை ஆதரிக்கிறோமா? கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இல்லையா? சுரண்டலை எதிர்க்கும் விதத்தில் ஒரு கடவுட் கொள்கை இருந்தால் ஒப்புவீர்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்வி எழுப்பியிருப்பதுதான் இதற்கான  நண்பரின் பதில். இன்னொரு முறை நிதானமாக படித்துப் பார்த்தால் நான் கேட்டிருப்பது அதுவல்ல என்பது புரியும். சாராம்சத்தில் கடவுட் கொள்கை சுரண்டலே. அது நம்பிக்கை எனும் அடிவாரத்தின் மேல் மக்கள் மனதில் கட்டப்பட்டிருப்பதால் அந்த சுரண்டல் மக்களுக்கு புரியவில்லை. மக்களிடம் இருக்கும் அந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை போக்க வேண்டும் என்பதில் தான் எங்களின் ஆர்வம். கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இருக்காது, கூடுதல் தகவலாக இப்போது கம்யூனிச நாடுகள் என்று எதுவுமில்லை. கடவுட் கொள்கையிலிருந்து சுரண்டலை நீக்கிவிட்டால் அதில் எஞ்சுவது ஒன்றுமிருக்காது. சுரண்டலே இல்லாத கடவுட் கொள்கை என்ற ஒன்று தோன்றவும் முடியாது. ஏனென்றால் சுரண்டல் தீர்ந்து போய் விட்டால் கடவுளின் அவசியமும் தீர்ந்து போய்விடும். திசை திருப்பல் இல்லாமல் என்னுடைய கேள்விக்கு நண்பர் எதிர்க் கேள்வி எழுப்ப வேண்டுமென்றல் கடவுள் எங்கணம் சுரண்டலின் வடிவமாக இருக்கிறார்? என்று தான் கேட்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான கேள்வி இந்த கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் தர்க்க ரீதியான இந்த விவாதத்தை, அதில் ஒரு முடிவை எட்டாத நிலையிலேயே அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கும். அதற்கும் நாம் ஆயத்தமே என்றாலும் முடிவை எட்டிவிட்டு தொடரலாம்.

 

நண்பரின் ஐந்தாவது பின்னூட்டத்தில், அறிவியலின் புலம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நம்மால் அறியமுடியாத உயரத்தில் இருக்கிறது என்று கூறிவிடுவது மட்டுமே ஒன்று இருக்கிறது என்பதற்கான உறுதிப்படுத்தல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நண்பரோ இன்றிருக்கும் நவீன கண்டுபிடிப்புகளை 5000 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்திருக்க முடியுமா என்கிறார். இதையும் நான் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன் நண்பர் கண் கொடுக்க மறுத்திருக்கிறார். ஐந்தாயிரம் ஆண்டுகளல்ல, ஐந்து லட்சம் ஆண்டுகள் கூட ஆகட்டும் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதல்லவா கேள்வி. எக்காலத்திலும் கண்டுணரப்பட வாய்ப்பே இல்லை எனும் போது அதை உறுதியாக நிலவுகிறது என்று கூறாதீர்கள் எங்கள் நம்பிக்கை மட்டுமே என்று கூறுங்கள் என்கிறேன்.

 

இன்னொன்றும் கூறியிருக்கிறார், \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும். அப்படி அவற்றால் கடவுளை கண்டறிந்தால் கண்டறியப்பட்ட அது எப்படி கடவுளாக ஏற்க முடியும்?? கடவுளை கண்டறிந்த அதுவல்லவா கடவுளை காட்டிலும் சக்தி மிகுந்ததாக இருக்கும்/// அதாவது கடவுளை விட எதுவும் சக்தி மிகுந்ததாக ஆகிவிடக் கூடாதே என்பது தான் நண்பரின் கவலையாகத் தெரிகிறது. இவைகளெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. ஒன்றைக் கண்டறியும் சாதனம் அதைவிட உயர்ந்ததாகிவிடுமா? நுண்ணுயிர்களைக் கண்டறியும் சாதன் உருப்பெருக்கி என்றால் உறுப்பெருக்கி சாதனங்கள் நுண்ணுயிர்களை விட உயர்ந்தது என்று என்ன பொருளில் கூற முடியும்? ஒரு சாதனம் என்றாலே அது தானே இயங்கும் வல்லமை பெற்றதல்ல என்பது பொருள். தானே இயங்கும் பொருளைக் காட்டியில் இயக்கும் ஒரு பொருள் உயர்ந்தது என்று எவ்விதத்திலும் கூறமுடியாது. எனவே நண்பர் மாச்சரியங்களை விட்டுவிட்டு தேடலில் முனைவாராக.

 

நண்பரின் ஆறாவது பின்னூட்டத்தில் நம்பிக்கையா உறுதியானதா எனும் கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதாரம் காட்டமுடியாது என்றால் நம்பிக்கை என்று ஒப்புக் கொள்ளுங்கள், உறுதியானது என்றால் ஆதாரம் காட்டுங்கள். உறுதியானது ஆனால் ஆதாரமில்லை என்றால் அது போங்காட்டம் என்று கூறியிருந்தேன். நண்பர் குலாம் இதற்கு நேர்மையாக பதில் கூற வேண்டுமென்றால் நம்பிக்கையா உறுதியானதா என்பதையல்லவா தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் நண்பரிடமிருந்து இதற்கு பதில் வராது, மட்டுமல்ல, எந்த மதவாதியிடமிருந்தும் பதில் வராது. இதைத்தான் போங்காட்டம் என்பது. ஆனால் நண்பர் என்ன கூறியிருக்கிறார்? \\\கடவுளின் இருப்பு நம்பிக்கையென்றால் அதை பொய்பிக்கும் அறிவியல் நிருபணம் என்ன? அறியலை பொருத்தவரை இல்லாத ஒன்று என்று ஒன்று இல்லை. எங்கே நீங்கள் நிருபணம் தாங்களேன் கடவுள் இல்லையென்று.. கேட்காத ஒலியலைகள் உதாரணே ஆனாலும் அது உண்மை என்பதை எவரும் ஒப்பு கொள்வர். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை மதவாதிகளின் நம்பிக்கையாக நிறுவ முயலும் நீங்கள் கடவுள் இல்லா நிலையில் கேட்கும் பல கேள்விகளுக்கு போங்காட்டம் ஆட கூட வர மாட்டேன் எங்கீறீர்களே அது ஏன் சகோ?/// யாரிடம் நிரூபணம் கேட்கிறார் நண்பர் குலாம். அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிரூபணம் தந்திருக்கிறேன் கடவுள் இல்லை என்பதற்கு. இன்னும் என்ன வேண்டும்? கடவுள் இல்லா நிலையில் நீங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கு நான் பதில் தரவில்லை? கூறமுடியுமா? வேறேதாவது இடுகைக்குள் நீங்கள் அந்தக் கேள்விகளை பதிந்து வைத்திருந்தால் இங்கு அதை கேள்விகளாகக் கேளுங்கள். கேள்விகளுக்கு நான் மருள்பவன் அல்லன். இப்போது கூறுங்கள் போங்காட்டம் ஆடுவது யாரென்று.

 

நண்பரின் ஏழாவது பின்னூட்டத்தில், கடவுள் பூமியில் மட்டுமே இயங்கும் தன்மை குறித்து எடுத்துக் கொள்ளப்பட்டுளது. அதில் நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன், \\\பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா?/// இதற்கு எந்த வித பதிலையும் கூறாத நண்பர் குலாம் அதையே எதிர்க் கேள்வியாகவும் கேட்டிருக்கிறார் \\\மனித மூளையை தவிர வேறந்த உயிரின அறிவிற்கும் கடவுள் குறித்து அறிந்துக் கொள்ளவில்லை யென்பதற்கு ஆதாரம் தர முடியுமா சகோ/// என்று. பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி நண்பர் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். நான் பதில் கூறுகிறேன், மனிதனைத்தவிர வேறெந்த உயிரினத்திற்கு கடவுள் குறித்த சிந்தனை இல்லை. எப்படி? மனிதன் கொண்டிருக்கும் மேம்பட்ட சிந்தனை வடிவம் மனிதன் சமூகவயப்பட்டதன் எதிர்வினை. இப்படி மேம்பட்ட சிந்தனை வடிவம் விலங்குகளுக்கு இல்லை. ஏனைய உயிரினங்களின் சிந்தனை எல்லாம் உண்பதற்கும் உண்ணப் படாமலிருப்பதற்குமேயான பயன்பாட்டு வடிவம் தான். கடவுள் என்ற சிந்தனை தன்னைப்பற்றிய அறிதலுள்ள, தனக்கு மேலாகவும் ஒரு சக்தி இருக்கக் கூடும் எனும் புரிதலுள்ள உயிரினங்களுக்கு மட்டுமே ஏற்பட முடியும். இந்தப் புரிதல் மேம்பட்ட சிந்தனை இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் எனும் சிந்தனை வந்திருக்காது. இதை இன்னொரு வாயிலாகவும் பார்க்கலாம். ஒரு உயிரினத்திற்கு ஒரு சிந்தனை இருக்கிறது என்றால் அது செயலில் வெளிப்பட்டால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மனிதனுக்கு கடவுள் எனும் சிந்தனை இருக்கிறது என்பது அவனது செயல்களின் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. மனிதனைத்தவிர வேறெந்த உயிரினங்களிடமாவது கடவுட் சிந்தனை இருக்கிறது என்பது செயல்களில் வெளிப்பட்டிருக்கிறதா? இல்லையே, வேறெப்படி கடவுள் சிந்தனை இருப்பதாக கூறமுடியும்? நண்பர் குலாம் கேட்ட எதிர்க் கேள்விக்கு நான் பதில் கூறிவிட்டேன். என்னுடைய கேள்விக்கு பதில் கூற முடியுமா நண்பரால்?

 

அந்த பின்னூட்டத்தில் நண்பர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார். மனிதனுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கடவுள் எனும் சிந்தனை தோன்ற வேண்டிய அவசியம் என்ன? மனிதன் இயற்கை ஆற்றல்களின் மிகையைக் கண்டு பயந்தான். அதற்காக சடங்குகள் செய்தான். மறுபுறம் இனக்குழுத் தலைவர்கள் இனத்தைக் காக்கும் போரில் காட்டிய தீரமும் வீரமும் அவர்கள் இறந்த பிறகும் நினைவு கூறத்தக்கதாக, அனுபவப் பாடமாக கடந்து வந்தது. இவை இரண்டும் இணைந்தே கடவுள் எனும் சிந்தனை மனிதனுக்கு தோன்றியது. அதுவே பின்னர் சுயநலமிகளின் கைகளில் மதமாக மாற்றம் கண்டது. இனி நண்பர் குலாம் ஏன் கடவுளை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராக உருவகப்படுத்துகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.

 

நண்பரின் எட்டாவது பின்னூட்டத்திலும் கடவுட் சிந்தனை ஏன் மனிதனுக்கு வந்தது என்பதே கேள்வியாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மனிதன் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் இருக்கின்றதாக குறிப்பிடுகிறார். நான் கேட்பது ஆதாரங்கள் நிரூபணங்கள் தகவல்கள் அல்ல.

 

நண்பரின் கடைசி பின்னூட்டத்தில், சமூக ரீதியாக நான் கேட்டிருந்த அன்னிய முதலீடு குறித்த கேள்வியை திசை திருப்பி இருக்கிறார் நண்பர் குலாம். நான் கேட்டிருந்தது என்ன? கோடிக்கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றை உறுதியாக இருக்கிறது என்று நம்பப்படும் கடவுளின் துணை கொண்டு ஏன் அகற்றக்கூடாது. அதாவது பிரார்த்தனை எனும் முயற்சியைத் தவிர வேறெந்த மனித முயற்சியும் இல்லாமல் தனியார்மயம் திடீரென்று நீங்கி விட்டால் அதன் மூலம் கடவுள் இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ளலாமல்லவா? இந்த அடிப்படையில் தான் என்னுடைய கேள்வி அமைந்திருந்தது. இதை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கடவுள் இல்லை என்கிறீர்களா? என்று மடை மாற்றுகிறார். திசை திருப்பாமல் என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள் நண்பரே.

 

அடுத்து ஒரு வாசகம் எழுதியிருக்கிறார் பாருங்கள், புளகமடைந்து விட்டேன். \\\உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமோ போதாதோ.. அதை நடு நிலை வாசிப்பாளர்கள் தீர்மானிப்பார்கள். நிச்சயமாக சுய ப்ய்ரிதலை உலக உண்மையாக்க நினைக்கும் எந்த எண்ணங்களும் மக்கள் மன்றத்தில் உயிர் பெறாது/// முதல் வாக்கியத்தில் நடுநிலை வாசகர்கள் தீர்மானிப்பார்கள் என்கிறார். ஆனால் மறு வாக்கியத்திலேயே, என்னுடைய பதிலை சுயபுரிதல் என்று சுருக்கி அவருடைய விருப்பத்தை உயிர் பெறாது என்று தீர்ப்பாக கூறிவிட்டார். ஏன் உயிர் பெறுமா பெறாதா என்று அந்த நடுநிலை வாசிப்பாளர்கள் தீர்மானிக்க மாட்டார்களா? .. .. பலே! கெட்டிக்காரர் தான்.

 

நான் தெளிவாக மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது இதைத்தான். கடவுள் என்பது நம்பிக்கையா? உறுதியானதா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதிலிருந்து இன்னும் எத்தனை முறை நண்பர் நழுவிச் செல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

Advertisements

7 பதில்கள் to “பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?”

 1. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:00 பிப #

  அன்பு சகோ நேற்றே இத்தளத்திலே மேற்கண்ட மறுப்புரைக்கு விளக்கம் அளிக்க முற்பட்டேன் ஆனால் கமெண்ட் கொடுத்து பப்ளிஷ் செய்தால்

  நீங்கள் Gulam ?

  You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.
  By logging in you’ll post the following comment to…

  இப்படி காட்டுகிறது. ஆக மறுப்புரைக்கான விளக்கத்தை நான் முஸ்லிம் தளத்திலும் இட்டுள்ளேன்., இங்கும் அதை பதிகிறேன்

 2. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:01 பிப #

  அன்பு சகோ செங்கொடி.,

  மீண்டும் ஒரு பதிவிட்டு என் பதிலுக்காக காத்திருக்கிறீர்கள் .நன்று! உங்களுக்கு பதில் தரும் கால அவகாசம் இருக்கின்றது மகிழ்ச்சி., தொடர்கிறேன்.

  இறுதி பத்தியிலிருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன் உங்கள் நிலைப்பாடை தெளிவாக உணர்(த்து)வதற்கு!

  == நான் தெளிவாக மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது இதைத்தான். கடவுள் என்பது நம்பிக்கையா? உறுதியானதா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதிலிருந்து இன்னும் எத்தனை முறை நண்பர் நழுவிச் செல்லப் போகிறார் என்று பார்க்கலாம். ==

  கடவுள் உண்டென்பது இறை ஏற்பாளர்களின் நம்பிக்கையென்பது உங்கள் எண்ணம். ஆக உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நீங்கள் இருந்தால் கடவுள் இல்லையென்பதை அறிவியல் ரீதியாக மெய்பிக்க சொன்னேன். அறிவியல் ரீதியாக மெய்பிக்க கண்ணெதிரே இல்லை என்ற ஒரு நிலைப்பாடு மட்டும் போதாது என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு ஆய்வு ரீதியாக கடவுளின் இருப்பை மெய்பித்தால் அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார். ஆக நம் ஆளுகைக்கு உட்படும் ஒன்றை எப்படி நாம் கடவுளாக ஏற்போம் என்பதே என் இப்போதைய கேள்வி?

  ஆக சர்வ வல்லமைப்பெற்ற கடவுளின் இருப்பை எந்த ஆளுகைக்குள்ளும் அகப்படாமல் நாத்திகவாதிகளுக்கு எப்படி நிருபிக்க வேண்டும்? பகுத்தறிவோடு சொன்னால் கடவுளின் இருப்பை குறித்து தொடரலாம்.

  பொதுவான காரண காரியங்களை அலசி ஒன்றை மெய்படுத்தவோ அல்லது பொய் படுத்தவோ அறிவியலை நாம் துணைக்கு அழைக்கிறோம். அதனடிப்படையில் கண்ணுக்கு தெரியாத உணர்வுகளில் ஆட்படாத எதுவும் இல்லை அல்லது சூன்யம் என கூறுவது ஏற்புடையது தான். இருந்தாலும் இதில் நாம் மிக முக்கிய மையம் ஒன்று உள்ளது.

  அதை மையப்படுத்தி நான் வரைந்த ஆக்கத்தில் விளக்கியும் இருக்கிறேன். அறிவியலால் ஒன்றை தெளிவாக வரையறுக்க அதன் மூலத்தை அறிய உதவும் சாதனங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம். மாறாக மற்ற சக்திமிகு எந்த உபகரணங்கள் துணை இருந்தாலும் ஒன்றின் மூலத்தை அறிய அவற்றால் முடியாது. உதாரணத்தையும் தெளிவாக சேர்த்தே கொடுத்திருந்தேன் (உண்மையாக்கப்பட்ட உதாரணங்கள் மாறாக புனை கதைகள் அல்ல)
  இன்னும் தெளிவாக இங்கே சொல்கிறேன்., ரிக்டர், வெப்பமானி, காற்றழுத்த மானி, லிட்டர், கிலோ, பைட் போன்றவற்றை அளக்கும் அளவுக்கோல்கள் இருந்தாலும் அவற்றால் ஒருவரின் பயடேட்டாவை தெளிவாக சொல்ல முடியாது. அவர் கூறினாலோ அல்லது அவரது சார்ந்த ஆவண சான்றுகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்.
  தெட்ஸ் ஆல்!

 3. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:02 பிப #

  நான் சொல்ல வருவதும் இதுதான்., எல்லாவற்றையும் மனித அறிவு அறிநது அதை ஆராயும் வழிமுறைகளை கண்டு அவற்றை வரையறுத்தாலும் அவை அவற்றின் எல்லைக்குள் மட்டுமே பிரயாணப்படும். மாறாக மாற்று செய்கைகளின் மீது மனித அறிவின் அறிவியல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆக ஐந்தாம் நிலையில் உள்ள ஒன்றை அதற்கு கீழாக உள்ள நான்கு நிலை கருவிகளால் ஆராய முடியாத போது எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்கு கீழுள்ள நிலைகளில் உள்ள அளவுகோல்கள் நாம் இதுவரை நம்மிடம் உள்ளது. அதை மட்டும் வைத்து எப்படி கடவுள் இல்லையென்ற முடிவுக்கு வர முடியும் சகோ…

  எதுகை மோனையில் தலைப்பை வைத்து ஆக்கங்கள் வடித்தால் அனைத்தும் உண்மையென்றாகி விடாது செங்கொடி,
  உங்கள் எதார்த்த உலக புரிதலை வைத்து எதையும் உண்மைப்படுத்தலாம் என்ற எண்ணம் எனக்குள் உங்கள் குறித்த நடுநிலைபார்வை மீது ஐயங்கொள்ள வைக்கிறது.

  நீங்கள் உலகில் கடவுள் என்று கூறப்படுவதை எதிர்த்து வாதிடுகிறீர்கள் – நானோ உண்மை கடவுளை ஏற்று வாதிடுகிறேன். ஆக உங்களுக்கும் எனக்கும் இடையில் உடன்படும் ஓர் மையப்புள்ளி பொதுவாக கடவுளாக கூறப்படுபவைகளல்ல, நீங்களும் நானும் உண்மையென நம்பும் / மறுக்கும் கடவுள் குறித்தே. அதாவது உலகில் ஒரே கடவுள் அதுவும் உண்மை கடவுள். உண்டா இல்லையா என்பதே., நான் ஏற்கனவே சொன்னது தான் விமர்சிக்கும் எதுவும் அதன் மூலத்தை வைத்து விமர்சிக்கபட வேண்டும். நான் முஸ்லிம் அல்லாஹ் அல்லாத எதுவும் கடவுள் இல்லையென்கிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் குர்-ஆனிலும் நபி மொழிகளிலும் மிகைத்திருப்பதாக உணர்கிறேன். என் ஆய்வில் அவை சரியென உடன்படுகிறேன். அதற்கு எதிர்மறையான கருத்துள்ள உங்களோடு வாதிடுகிறேன். இதில் எங்கே நழுவுதலும் வழுதலும் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை சகோ செங்கொடி.

 4. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:04 பிப #

  நீங்கள் என்னோடு விவாதிக்க உடன்படுவதாக இருந்தால் உலகின் ஒரே கடவுளான அல்லாஹ் இல்லையென்பதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு தரவேண்டும். ஓரிறைக்குறித்து அறிமுகப்படுத்த படும்போதே அவர் அல்லது அது நம் புலன்களுக்கு கட்டுப்பட மாட்டாது என்றே எனக்கு பிரகடனப்படுத்தும் போது கடவுளை நம் புலன்களில் உணர்த்தப்படவேண்டும் என்றால் எனக்கு நகைப்பு தான் வருகிறது சகோ செங்கொடி.

  ஆய்வு ரீதியாக அல்லது நேரடியாக கடவுளின் இருப்பை உணர்த்துங்கள் என்ற கேள்வி தாண்டி கடவுளை மறுக்க உங்களுக்கு ஏதும் காரணம் சொல்ல முடியுமா? ஏனெனில் கடவுள் குறித்து உங்கள் புரிதல் அப்படி. நான் ஏற்கனவே உங்களிடம் விவாதிக்கும் போது கூறியது தான் கடவுள் இல்லையென்றால் இயற்கை தான் எல்லாவற்றிற்கும் தீர்வென்றால் எங்கேல்லாம் கடவுள் பெயரால் கேள்விகள் முடிச்சிடப்படுகிறதோ அனைத்து கேள்விகளுக்கும் இயற்கை பதில் தந்திருக்க வேண்டும். அதை விளக்கும் வகையிலே “ஓர் அழைப்பு” தலைப்பில் தொடர் கட்டுரைகள்.

  கடவுள் மறுக்க இயற்கை எல்லாவற்றிற்கும் பதில் தந்திருக்க வேண்டும். அதாவது பிக்பாங்க் தியரி வரை முன்னோக்கி செல்லும் உலக அறிவியல் அதற்கு முன் செல்ல வழியின்றி தவிப்பது ஏன்? இன்று நீங்களும் நானும் ஏற்பட்ட மாற்றத்தை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறோம். என் கேள்வி ஏன் ஏற்பட வேண்டும் என்பதே? உயிர்கள் உயிர் வாழ இப்பூவி மட்டுமே தகுதியானது. அப்படியிருக்க ஏன் இப்பூமீ தாண்டி ஏனைய கோள்கள். இன்னும் சொல்ல போனால் சூரிய, சந்திர கோள்கள் சார்ந்த பிரபஞ்சம் போல் இன்னும் அயிரமாயிரம் பிரபஞ்சங்கள் இருக்கின்றன. அவை படைக்கப்பட்டதன் அல்லது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? ஏனைய உயிர்கள் போலில்லாமல் மனித உயிரி மட்டும் பற்பல சிறப்பம்சங்களுடன் காணப்பட காரணம் என்ன? அதிலும் மற்ற எல்லா உயிரினங்களையும் விட பலகீன படைப்பாக இருந்துக்கொண்டு?

  வாழ்வியலை எடுத்துக்கொண்டால் மற்ற உயிரினத்திற்கு இல்லாத ஒழுக்க முறைகள் , உடலுறவில் கட்டுப்பாடு இப்படி மனிதனுக்கு மட்டும் ஏற்பட காரணம் என்ன சகோ? குறைந்த பட்சம் நீதியாவது இந்த உலகில் எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட இயற்கை ஓர் ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும் இந்த கேளவியை நான் உங்களிடம் முன்னிருத்திய போது வர்க்கரீதியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகத்தில் சூழ் நிலைக்கேற்ப எடுக்கப்படுவதே சட்டமும் நீதியும் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம். இந்த இடத்தில் கடவுளால் சம நீதி தரமுடியும் என்கிறேன் நான். இதை மறுக்கும் சாத்தியக்கூறை அல்லவா நீங்கள் தந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்லும் இயற்கை வழங்கி இருக்க வேண்டும்.

  அத்தோடு நம் வாழ்வியல் முறையையும் எப்படி நாம் தீர்மானித்து கொள்வது? என்ற கேள்விக்கும் சூழ்நிலைகளை பதிலாக்கினால் உலகில் நன்மையென்றும் தீமை என்றும் ஒன்றுமில்லை சகோ.,

 5. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:07 பிப #

  கைர்,
  எனது கடைசி பின்னூட்டதில் மனிதர்கள் பாதிக்கபடுவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்து அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்தால் கடவுளின் இருப்பை தெளிவாய் உணர்த்தலாமே., சபாஷ்! என்ன ஒரு அறிவுப்பூர்வமான கடவுள் மறுப்பு சிந்தனை., உண்மையாகவே உங்கள் அறியாமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சகோ செங்கொடி.,

  சரி நீங்கள் சொல்வதுப்போல கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். கடவுள் பாதிப்பை நீக்கி விடுகிறார். நாத்திவாதிகளில் கால்வாசி நபர்கள் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஓகே அடுத்து புயல், வெள்ளம், போன்றவை ஏற்பாடாமல் இருக்க பிரார்த்தனை அரைவாசி பேர் கடவுளை ஏற்றுக்கொள்கிறார்கள். விபத்து, ,திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சமூக கேடுகள் ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தால் அதையும் ஏற்கிறார் கடவுள் என வைத்துக்கொள்வோம் அனைத்து நாத்திக வாதிகளும் இறை ஏற்பாளர்களாகி விடுவார்கள்.,

  அப்புறம் எதுக்கு சகோ இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம்???? இன்னும் எளிதாக எல்லோரையும் ஆரம்பத்திலே முஸ்லிம்களாக படைத்திருந்தால்., நாத்திகம் என்ற பேச்சிக்கே இடம் இல்லையே சகோ… இன்று நீங்களும் நானும் கடவுளை குறித்து விவாதித்தா கொண்டிருப்போம்? குர்-ஆனை குறித்தல்லவா சிலாகித்து கூறிக்கொண்டிருப்போம்.

  உங்களுக்கு இஸ்லாம் கூறும் இவ்வுலக கொள்கை கோட்பாடுகள் குறித்த அறிவு மிகவும் குறைவென்ற நினைக்க தோன்றுகிறது சகோ. உங்களின் மேற்கண்ட எல்லா நிலை புரிதலுக்கும் ஒவ்வொன்றாக சுமார் 20 ஆக்கத்திற்கும் மேலாக நான் முஸ்லிம் தளத்தில் இட்டிருக்கிறேன் சகோ.
  இந்த ஆக்கத்தை நம் விவாத களத்தின் இரண்டாம் பகுதிக்கு பயன்படுத்த சொல்லியிருக்கின்றேன். பட் எனது நாத்திக கேள்விகள் இருபது ஆக்கங்களின் பிரதிபலித்து தான் கொண்டிருக்கின்றன சகோ. மீண்டும் கடவுள் மறுப்பு குறித்து நுனிப்புல் மேய்வதாகவே நினைக்கிறென்.

  உங்களை பொறுத்தவரை கடவுள் இல்லையென்றால் அதனால் எனக்கு எதுவும் பாதிப்பு இல்லை. ஆனால் கடவுள் இருப்பதால் எல்லோருக்கும் பாதிப்பு என்றால் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். சொல்வீர்களா? சகோ

 6. G u l a m செப்ரெம்பர் 28, 2012 இல் 6:07 பிப #

  வழக்கம் போல மிக வேகமாக மறுப்பு இடுகை. சகோ செங்கொடி சுய தீர்மானிப்புகள் உங்களுக்கு அதிகம் என்பதை தான் இந்த ஆக்கமும் உண்மைப்படுத்துகிறது.

  பை தீ வே.. விவாதங்கள் என்பது கருத்துக்களை பரிமாறும் ஒரு கூடம் அவ்வளவே .இதில் நான் சொல்வது தான் சரியென்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் விவாதத்தின் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பொதுவில் வைக்கிறேன். மீதமுள்ள ஐம்பது சதவீகிதம் நீங்கள் வைக்கிறீர்கள். பார்வையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும். யார் நழுவுகிறார்கள் என்று. ஆக தேவையில்லா வார்த்தை பிரகடனங்கள் வேண்டாமென்று நினைக்கிறேன். நீங்கள் கடவுளை ஏற்க வில்லையென்றாலும் அதனால் நாளை உண்மையாக கடவுள் இருந்தால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக உங்கள் நிலைப்பட்டில் உறுதியாக இருந்து கடவுள் இருப்பது உண்மையென்றால்.. பதில் தரும் பொறுப்பு உங்களிடமே விட்டு விடுகிறேன்.

  அரைத்த மாவையே அரைப்பதுப்போல உணர்கிறேன் சகோ செங்கொடி உங்களிடம் புதிதாக (கடவுள் மறுப்பு) கேள்விகளை எதிர்ப்பார்க்கிறேன். இதையும் ஒரு பின்னூட்டமாக வழக்கம் போல கருதாமல்… மூன்றாம் ஆக்கத்திற்கு அடிக்கல் இட்டால் அதற்கும் வாழ்த்துகள்! தொடருங்கள்.,

  மாத இறுதி மற்றும் ஏற்கனவே நிலுவையில் என் பணிகள் நிற்கிறது. அதை முடித்தாக வேண்டும். ஆக நீங்கள் மறுக்கும் இறை, நாடினால் வழக்கம்போல் இன்னும் இதுக்குறித்து விரிவாக நான் முஸ்லிம் தளத்தில் விளக்க முற்படுகிறேன்

  உங்கள் சகோதரன்
  குலாம்.

 7. iniyavan செப்ரெம்பர் 29, 2012 இல் 8:16 முப #

  தோழர் செங்கொடி,

  அருமையான விளக்கம் கடவுள் இல்லை என்பதை மறுப்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பது வேடிக்கை!! இறைத்தூதர்களாக வருபவர்கள்தான் தாங்களாகவே முன் வந்து நாந்தான் இறத்தூதர் என்றும் என்னிடமே கடவுள் அல்லது வான் தூதர் பேசினார் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். அதுவரையில் அந்த தூதரை யார் என்றே உலகுக்குத் தெரியாது,எனவே தன்னிடம் கடவுள் பேசினார் அல்லது திரைமறைவில் பேசினார் என்று சம்பந்தப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர,பொதுமக்கள் அல்லவே!! தற்சமயம் நான் ஒரு தூதர் என்று ஒருவர் தன்னை அறிமுகப்படுத்தினால் நம்மால் ஏற்க முடியுமா? எத்தனை கேள்விகள் கேட்போம்?

  இனியவன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: