அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது

29 செப்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது: பகுதி 2-3

பின்னூட்டங்களா பிற்போக்கு ஊட்டங்களா’ பதிவுக்கு நண்பர் குலாம் இரண்டாவது தொகுதி பின்னூட்டங்களை அளித்துள்ளார். ஆனால் முதல் தொகுதி பின்னூட்டங்களை விட இரண்டாவது தொகுதி பின்னூட்டங்கள் சற்று தெளிவாக இருப்பதாய் உணர்கிறேன். வாதங்களுக்கு கடக்குமுன் ஒன்றை தெளிவு படுத்திவிடலாம் என எண்ணுகிறேன். நண்பர் குலாம் இப்படி எழுதியிருக்கிறார் \\\எனக்குள் உங்கள் குறித்த நடுநிலைபார்வை மீது ஐயங்கொள்ள வைக்கிறது/// ஐயமெலாம் தேவையில்லை நண்பரே. நான் நடுநிலைவாதி அல்லன், மட்டுமல்லாது நடுநிலை என்பதையே மோசடியான ஒன்றாக கருதுபவன். எந்த ஒன்றிலும் என்னுடைய நிலைப்பாடு என்பது நான் எதை சரிகாண்கிறேனோ அதைச் சார்ந்தே இருக்கும். நான் ஒரு கம்யூனிஸ்டாய் இருக்க விரும்புவதால், எந்த ஒன்றையும் இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகியே சரியா தவறா என்று ஆய்கிறேன். ஆனால் என் கருத்துகளுக்கு நான் நேர்மையானவன். என் கருத்து தவறு என உணரும் அந்தக் கணமே எந்தவித அசூயைகளுமின்றி உதறிவிட்டு சரியானதின் பக்கம் வந்துவிடுவேன். சரியானதாய் இருக்கும் போது என்ன இழப்பு வந்தாலும் அஞ்சாமல் கடைசிவரை போராடுவேன். எனவே நான் சரியானதின் மீது பக்கச் சார்பாய் இருப்பவன் தானேயன்றி, நடுநிலையானவன் அல்லன்.

நண்பர் குலாம் இப்படி தொடங்குகிறார் \\\கடவுள் இல்லையென்பதை அறிவியல் ரீதியாக மெய்பிக்க சொன்னேன். அறிவியல் ரீதியாக மெய்பிக்க கண்ணெதிரே இல்லை என்ற ஒரு நிலைப்பாடு மட்டும் போதாது/// மீண்டும் நான் நண்பருக்கு கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் முதல் பதிவிலும், இரண்டாவது பதிவிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். கடவுள் நிலையாக நின்று இயங்கும் ஒன்றா? அல்லது ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் -அது எவ்வளவு நீண்ட காலமாய் இருந்தாலும்- மட்டும் இயங்குவதா? நிலையானது என்றால் அதை அறிவியல் ஒப்புக் கொள்ளாது. நிலையாக நிலைத்து இயங்கும் ஆற்றல் கொண்ட எதுவும் அறிவியலின்படி இல்லை. எனவே கடவுள் இல்லை. ஏற்கனவே இரண்டுமுறை கூறிவிட்ட பிறகும் அதை பரிசீலிக்காமல் மீண்டும் அப்படியே உங்களை கேட்கத் தூண்டியது எது சகோ.? \\\ஆய்வு ரீதியாக கடவுளின் இருப்பை மெய்பித்தால் அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// இதையும் தெளிவாகவே மறுத்திருக்கிறேன். முதலில் நீங்கள் இப்படி எழுதினீர்கள் \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும்/// இப்போது சொற்களை மட்டும் மாற்றி \\\அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// என்கிறீர்கள். இரண்டுக்கும் இடையில் நான் கூறிய பதிலை மட்டும் ஏன் சகோ பரிசீலிக்கவில்லை. சுநாமியைக் கூட மனிதன் ஆய்ந்திருக்கிறான் அளந்திருக்கிறான். அது மனிதனின் ஆளுமைக்குள் வந்துவிட்டதா என்ன? நண்பரே! இது போன்றவைகளெல்லாம் உருவேற்றப்பட்ட கடவுளின் தகுதிகள் உதிர்ந்து விடாதிருப்பதற்காக செய்யப்படும் சமாளித்தல்கள். \\\நம் ஆளுகைக்கு உட்படும் ஒன்றை எப்படி நாம் கடவுளாக ஏற்போம் என்பதே என் இப்போதைய கேள்வி/// இப்போது மட்டுமல்ல எந்தக் காலத்திலும் இதுவே ஆன்மீகவாதிகளின் கேள்வி. ஆன்மீகவாதிகள் எனும் சொல்லின் பொருளே கடவுளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதிகளுக்கு (சொத்துகளுக்கு) பங்கம் வராமல் காப்பவன் என்பது தான் பொருள். எனவே ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது.

\\\சர்வ வல்லமைப்பெற்ற கடவுளின் இருப்பை எந்த ஆளுகைக்குள்ளும் அகப்படாமல் நாத்திகவாதிகளுக்கு எப்படி நிருபிக்க வேண்டும்/// நண்பர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி மிகவும் முதன்மையானது. இந்தக் கேள்வியை குறையற உணர வேண்டுமென்றால் பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் இருப்பை இதுவரை எந்த மதவாதியும் நிரூபித்ததில்லை. நிரூபிக்க முடியாது என்பதும் அவர்கள் அறியாததல்ல. ஆனால் நிரூபிக்கக் கோரும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்படி நிரூபிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கும் ஆத்திகர்கள் தற்போது அந்தக் கேள்வியையும் நாத்திகர்களின் பக்கம் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே கூறியது தான், ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது. என்றாலும், அந்தக் கேள்வியின் உட்கிடையை சற்றே விளக்கலாம்.

‘சர்வ வல்லமை பெற்ற’ ‘எந்த ஆளுமைக்குள்ளும் அகப்படாமல்’ இவை இரண்டும் என்ன? கடவுள் என்ற ஒன்றுக்கு கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தகுதிகள். இப்படி கடவுளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள் தாம் அதை புனித வட்டத்துக்கு உரியதாக்குகிறது. அதாவது, தகுதிகள் தான் கடவுள். இப்படிப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒன்று இருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இப்படிப்பட்ட தகுதிகள் கடவுளுக்கு எப்படி வந்தன? பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இன்னோரின்ன தகுதிகளுடன் உண்மைக் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆக, சாராம்சத்தில் அந்த மனிதர் சொன்னது உண்மையா பொய்யா என்பது தான் சரியான கேள்வி. அதை ஆய்வதற்குப் பதிலாகத்தான், பேரண்டத்தின் நீள அகலங்கள், எந்த ஆளுமைகளுக்குள்ளும் அகப்பட்டு விடக்கூடாதே போன்ற பரிதவிப்புகள் எல்லாம். அவர் சொன்னது உண்மை தான் என்பதை எப்படி நிரூபிப்பது? (நண்பர் குலாமுக்கான மறுப்புரைகளை இதுவரை நான் பொதுவாகவே வைத்துக் கொண்ருந்தேன். காரணம், பொதுவான கடவுளை கேட்டாலும் இஸ்லாத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று முன்பொருமுறை அவர் பொருதியது தான். இப்போது அப்படியில்லாமல் அவரே வெளிப்படுத்திக் கொண்டதால் நாமும் அப்படியே தொடர்வோம்)

இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். கடவுள் என்பது மனிதர்களின் கற்பனை தான் என தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். அந்த கற்பனைக்குச் செய்யப்பட்ட அலங்காரத் தகுதிகளுக்கு பங்கம் வந்து விடாமல் நிரூபிக்க வேண்டும் என்று கோருவதை இன்னொரு கற்பனை வாயிலாக அறிய முயலலாம். பேரண்டப் பெருவெளியில் ரசகுல்லா எனும் பால்வீதியில், குலோப் ஜாமுன் எனும் சூரியக் குடும்பத்தின் ஜாங்கிரி எனும் கோளில் அல்வா எனும் ஆற்றல் ஒன்று இருக்கிறது. அது அனைத்தையும் மிகைத்த பேராற்றல் வாய்ந்தது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அப்படி ஒன்று இல்லை என்று அறிவியலின் படி ஐயந்திரிபற நிரூபிக்க முடியுமா? என்றால் முடியாது என்பது தான் பதில். காரணம் பேரண்டத்தில் மனிதன் அறிந்திருப்பது கொஞ்சமோ கொஞ்சத்திலும் கொஞ்சம் மட்டுமே. அப்படி ஒன்று இருக்கிறதா? என்றால் இருக்கக்கூடும். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அப்படி ஒன்று மெய்யாகவே இருக்கிறது. அப்படி ஒரு அல்வா இருப்பதால் தான் நேற்று மாலையில் நீ குடித்த தேனீர் இனிப்பாக இருந்தது, அல்வா இல்லையென்றால் தேனீருக்கு இனிப்பே வந்திருக்காது என்று சொன்னால்.. .. .. அல்வா இல்லாமல் தேனீருக்கு தனியே இனிப்பு வந்தது எப்படி? அல்வா இல்லை என்று உன்னால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? ரசகுல்லா பால்வீதியைப் பற்றியோ, ஜாங்கிரி கோளைப் பற்றியோ அறிந்து கொள்ளும் தகுதியோ, அறிவியல் உயரமோ மனிதர்களுக்கு இல்லை எனவே அல்வா இருப்பது மெய்யாகிவிட்டது. நீங்கள் அல்வாவை எந்த விதத்திலும் நம்பாத சர்க்கரை வியாதிக்காரர்களென்றால் உங்களுக்கு அல்வாவை எந்த விதத்தில் நிரூபிக்க வேண்டும் என்று பகுத்தறிவோடு சொன்னால் அந்த விதத்தில் நிரூபிக்கிறோம் என்று சொன்னால் .. .. .. சிரிக்காதீர்கள், நண்பர் குலாம் கூறுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறோம், அதில் கடவுளூக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தகுதிகளுக்கு எந்தக் குறைவும் வந்துவிடாமல் ஒரு வழி சொல்லுங்கள் அந்த வழியில் நிரூபிக்கிறோம் என்றால் அதை என்னவென்பது. கடவுளை புரிந்து கொள்ளவில்லையே என வேதனைப்படும் நண்பர் கடவுள் மறுப்பை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார். கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் பொருள் கடவுளின் தகுதிகளோடு சேர்த்து கடவுளை மறுக்கிறோம் என்பது தான். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? கடவுளின் தகுதிகளை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் மறுக்கிறோம் என்றா?

நண்பர் குலாம் அடிக்கடி ஓர் ஒப்பீட்டுவமை கூறுவார், ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமானல் அதனருகே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைந்து விட வேண்டும் என்று. அறிவியல் விசயத்தில் இதுவே எதிர் விகிதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, கடவுள் கோட்டை மிக்குயர்வாக காட்ட வேண்டுமென்பதற்காக அறிவியல் கோட்டை குட்டையாக வரைந்து விடுகிறார்கள். அதனால் தான் எல்லா மதவாதிகளும் அறிவியல் குறைபாடுடையது எனும் பொருளிலேயே பேசுகிறார்கள். குலாமும் அதையே எழுதியிருக்கிறார், \\\எல்லாவற்றையும் மனித அறிவு அறிநது அதை ஆராயும் வழிமுறைகளை கண்டு அவற்றை வரையறுத்தாலும் அவை அவற்றின் எல்லைக்குள் மட்டுமே பிரயாணப்படும். மாறாக மாற்று செய்கைகளின் மீது மனித அறிவின் அறிவியல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆக ஐந்தாம் நிலையில் உள்ள ஒன்றை அதற்கு கீழாக உள்ள நான்கு நிலை கருவிகளால் ஆராய முடியாத போது எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்கு கீழுள்ள நிலைகளில் உள்ள அளவுகோல்கள் நாம் இதுவரை நம்மிடம் உள்ளது. அதை மட்டும் வைத்து எப்படி கடவுள் இல்லையென்ற முடிவுக்கு வர முடியும் சகோ/// கடவுள் ஐந்தாம் நிலை மனிதன் நான்காம் நிலை என நண்பர் வரையறை செய்திருக்கிறார். இந்த ஐந்தாம் நிலை, நான்காம் நிலை என்பது என்ன? மனித தேடலின் பாற்பட்ட நிலைகளா? அதாவது மனிதன் அறியா நிலையிலிருந்து ஒன்று, இரண்டு எனக் கடந்து நான்காம் நிலைக்கு வந்திருக்கிறானா? ஆம் என்றால் என்றேனும் ஒருநாள் மனிதன் ஐந்தாம் நிலைக்கு எட்டுவான். அப்போது இந்த விவாதத்தை என்னுடைய பேரனும், நண்பர் குலாமின் பேரனும் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் மனிதன் என்றேனும் கடவுளின் நிலையான ஐந்தாம் நிலையை அடைய முடியுமா? இதை ஒருபோதும் எந்த மதவாதியும் ஒப்பமாட்டார்கள். என்றால், நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் மெய்யான பொருள் என்ன? கடவுள் உயர்ந்தவன் மனிதன் அவன் படைப்பு. தகுதியில் படைத்தவனும் படைக்கப்பட்டவையும் ஒருபோதும் ஒன்றாகிவிட முடியாது எனும் மதக் கற்பனையை பொது உண்மை போல முன்வைக்கிறார். நான்காம் நிலை கருவிகள் ஐந்தாம் நிலையை அளக்க முடியாது என்று ஏன் கூற வேண்டும்? கடவுளை அளக்கும் தகுதிகள் மனிதனுக்கோ அவன் கருவிகளுக்கோ இல்லை எனும் நண்பர் நம்பும் நிதர்சனத்தை வெளிப்படையாக கூறிவிடலாமே. அதில் சிக்கல் இருக்கிறது. எங்கள் கடவுளே உண்மையானது என்று பிற மதத்தினிரிடையேயும், கடவுள் இல்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று நாத்திகர்களிடையேயும் வினவுவதற்கு அவர்களுக்கு அறிவியல் தேவைப்படுகிறது. மனிதர்களின் எல்லா போதுகளிலும் உடன் பயணப்படும் அறிவியலை, கடவுளை பெரிதுபடுத்த அறிவியல் குறைவுபடுத்திக் காட்டப்பட்டாக வேண்டும் எனும் தேவையை அவ்வளவு எளிதாக மதவாதிகளால் உதறிவிட முடியாது. அதனால் தான் அறிவியலைப் பிணைத்தே கடவுளை முன்னிருத்துகிறார்கள்.

இதை இன்னொரு கோணத்திலும் புரியவைக்க வேண்டியதிருக்கிறது. கடவுள் எத்தனை உயரத்திலிருக்கிறார் என்று அளந்து பார்ப்பதற்கு மனிதன் மிகுந்த முனைப்பெடுத்து புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நான் ஏற்கனவே கூறியது தான். கடவுளின் தகுதிக்கு மனிதன் உயர்ந்து அல்லது கடவுளின் இடம் தேடி சோதித்துப் பார்ப்பது மனிதனுக்கு தேவையில்லாதது. இந்த பூமியில் மனிதனுடன் ஊடாடிக் கொண்டிருக்கும் கடவுளின் ஆற்றலை சோதித்துப் பார்ப்பதே மனிதனுக்கு போதுமானது. மனிதனல்லாத எந்த உயிரினத்தின் சிந்தையிலும் கடவுள் இல்லை. பூமியல்லாத வேறெங்கும் மனிதனும் இல்லை. எனவே கடவுளின் இருப்புக்கான தேவை, அதன் ஒட்டுமொத்த செயல்பாடு என அனைத்துமே பூமியை மையப்படுத்தியே இருக்கிறது. நண்பர் குலாம் கூறும் அந்த உண்மையான(!) கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் மனிதர்களை ஒவ்வொரு கணமும் ஆட்டுவித்துக் கொண்டே இருக்கிறான். ஆக, இந்த பூமியில் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றலைத் தானே மனிதர்கள் அளக்க வேண்டியுள்ளது. பூமியை மனிதன் தன் அறிவியல் கண்களால் சல்லடை போட்டு அலசிக் கொண்டிருக்கிறான். மனிதன் மழையை அளப்பான், ஆனால் அந்த மழையை யாரும் தன் கட்டளையால் அனுப்பியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். மனிதன் மலையை அளப்பான், அதன் நீள அகலங்கள் உட்பட எந்தக் காலத்தில் அவை உயரத் தொடங்கின, ஆண்டுக்கு எத்தனை மில்லிமீட்டர்கள் உயருகின்றன என்றல்லாம் கணக்கிடுவான். ஆனால் அந்த மலையை யாரும் தன் கட்டளையால் தூக்கி நிறுத்தியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். இந்த பூமியில் அமீபா, கிளாமைடோமோனஸ் தொடங்கி நீலத் திமிங்கலங்கள் வரை படம் வரைந்து பாகங்கள் குறிப்பான் மனிதன். ஆனால் அவ்வுயிர்களை யாரும் புடம் போட்டுக் கொடுத்தது போல் தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். பூமியில் மேற்பகுதியான கிரஸ்ட் தொடங்கி மையப் பகுதியான இன்னர் கோர் வரையிலும் தன் அறிவுக் கோல்களை நீட்டுவான் மனிதன். ஆனால் அதை யாரும் வடிவமைதிருப்பதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். தன் வாழ்வின் பற்களில் எங்கெல்லாம் மனிதன் கடிபட்டு நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுளின் ஆயத்துகள் வெள்ளமென பாய்ந்துவரும். எங்கெல்லாம் மனிதன் கடவுளுக்கு நிரூபணம் கோரி நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுள் பூடகங்களுக்குள் ஒழிந்து கொள்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், குலாம் கூறும் நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் கருப் பொருள் இது தான். தெளிவாகச் சொன்னால் கடவுளின் தகுதிகள் என்பது கடவுளின் பேராற்றல்களை மட்டும் குறிப்பதல்ல, தேவைப்படும்போது கடவுளை ஒழித்து வைப்பதற்கான சூக்குமங்களையும் உள்ளடக்கியதே கடவுளின் தகுதிகள். எனவே நண்பர் குலாம் கடவுளின் தகுதிகள் என்று இறுபூறெய்தலாக குறிப்பிடும் அனைத்தையும் உள்ளடக்கி எப்படி வேண்டுமானாலும் நிரூபித்துக் கொள்ளட்டும். ஆனால், மனித வாழ்வின் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்றை ஏற்பதற்கு நம்பிக்கை மட்டும் போதாது என்பதை உணர்ந்து கொண்டாக வேண்டும்.

நண்பர் குலாம் இப்படியும் கேட்டிருக்கிறார், \\\ஆய்வு ரீதியாக அல்லது நேரடியாக கடவுளின் இருப்பை உணர்த்துங்கள் என்ற கேள்வி தாண்டி கடவுளை மறுக்க உங்களுக்கு ஏதும் காரணம் சொல்ல முடியுமா? /// எனக்கு நகைக்கக் கூட முடியவில்லை. கடவுளின் இருப்புக்கு மட்டுமே நிரூபித்தல்கள். மாறாக சமூகத் தளங்களில் கடவுளின் தேவை குறித்த தார்மீகங்கள் என்றோ இல்லாதொழிந்து விட்டன. இவற்றுக்கு ஒன்றல்ல ஓராயிரம் காரணங்கள் கூறலாம். இது குறித்து ஏற்கனவே நண்பர் குலாமுடன் சிறு விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அதை பின்னர் கவனிக்கலாம். ‘ஓர் அழைப்பு’ எனும் தலைப்பில் நண்பர் பழைய ஆக்கங்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்த விவாதத்திற்கு தேவைப்படுமாயின் நண்பர் குலாம் அந்தக் கேள்விகளை இங்கு வைத்தால் தகுந்த பதிலளிக்கலாம். அவ்வாறன்றி அந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு ஆக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் .. .. .. மன்னிக்கவும், அது தற்போது சாத்தியப்படாது, மட்டுமல்லாது திசை திருப்பலாகவும் அமையும்.

நண்பர் குலாம் அடுத்ததாக \\\மனிதர்கள் பாதிக்கபடுவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்து அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்தால் கடவுளின் இருப்பை தெளிவாய் உணர்த்தலாமே., சபாஷ்! என்ன ஒரு அறிவுப்பூர்வமான கடவுள் மறுப்பு சிந்தனை., உண்மையாகவே உங்கள் அறியாமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சகோ செங்கொடி/// என்று ஆச்சரியப்படுகிறார். எது அறியாமை? கடவுளின் இருப்பு குறித்த விவாதத்தில், அது மெய்யாக நிலவவில்லை என்பதற்கான தரவுகளாக அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக என்று மூன்று தளங்களிலும் கடவுளை மறுத்திருந்தேன். அதில் அறிவியலையும் வரலாற்றையும் நீக்கிவிட்டு சமூகத் தளத்திலுள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு எங்க கடவுளின் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறீர்களே என்று அங்கலாப்பது, எந்த விதத்தில் அறியும் ஆமையோ எனக்குப் புரியவில்லை. இதையே நான் எதிர்க் கேள்வியாக கேட்கிறேன். உங்களின் வேத வசனங்களின்படி, உங்கள் கடவுளின் கேரக்டரின்படி இந்த உலகம் மனிதர்களுக்கு அவகாசமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் இவ்வுலகிலேயே தவறுகளுக்கு தண்டனை அளித்தது ஏன்? தற்போது ஆங்காங்கே மழைத்தொழுகை நடந்து கொண்டிருக்கிறது, பிராத்தித்து மழை வரச் செய்ய முடியும் என்றால், அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிடாது என்றால், முதலாளிகளுக்கு எதிராக என்று வந்தால் அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிட்டுவிடும் என்றால், எது அறியாமை? எது அறியும் ஆமை? அந்தக் கேள்வி மக்களின் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிடுவார் என்பதற்காகவோ, கேட்க மாட்டார் என்பதற்காகவோ முன்வைக்கப்படவில்லை. கடவுளின் இருப்பு குறித்த கேள்விக்கு உலகமே பிரார்த்தித்தாலும் கடவுளின் இருப்பை நிரூபிக்கும் வாய்ப்பில்லை என்பதற்காக முன்வைக்கப்பட்டிருந்தது.

அடுத்து நண்பர் குலாம் விவாதம் குறித்தும் சில கருத்துகளை கூறியிருக்கிறார், \\\விவாதங்கள் என்பது கருத்துக்களை பரிமாறும் ஒரு கூடம் அவ்வளவே .இதில் நான் சொல்வது தான் சரியென்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் விவாதத்தின் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பொதுவில் வைக்கிறேன். மீதமுள்ள ஐம்பது சதவீகிதம் நீங்கள் வைக்கிறீர்கள். பார்வையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்/// இதை என்னால் ஒப்ப முடியாது. காரணம் இது விவாதம் என்பதன் வடிவத்தை மாற்றுவது போலிருக்கிறது. உடன்பாடில்லாத இருவேறு கருத்துகளைக் கொண்ட ஒரு விசயத்தில் விவாதம் நடத்தப்படுகிறது என்றால் அதன் பொருள், நேரடியாக அந்த இருவரின் கருத்துகளில் எது சரியான கருத்து என்பதை காரண காரியங்களுடன் இருவரின் மட்டத்தில் தீர்வை அடைவது என்பதும்; மறைமுகமாக அந்த விவாதத்தை கவனிக்கும் பார்வையாளர்கள், வாசகர்களின் அகப்பார்வையும் இது பாதித்து கேள்வியை எழுப்பி தீர்வை நோக்கி முன்தள்ளும் என்பதுமே ஆகும். அஃதன்றி, உங்களின் கருத்தை நீங்கள் கூறுங்கள் என் கருத்தை நான் கூறுகிறேன், பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றால் அது குறைபாடுடையது. விவாதத்தில் என்னுடைய பதிலை பரிசீலித்து நீங்கள் பதில் கூற வேண்டும், உங்களுடைய பதிலை பரிசீலித்து நான் பதில் கூற வேண்டும். வெறுமனே அவரவர் கருத்துகளை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தால் பரிசீலனை எங்கிருந்து வரும்? எனவே விவாதம் அதன் உள்ளார்ந்த பொருளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் ஆவல், நண்பர் குலாம் அதற்கு ஆவன செய்வார் என எண்ணுகிறேன்.

என் கருத்தை நான் கூறுகிறேன் உங்கள் கருத்தை நீங்கள் கூறுங்கள் என்று சொல்லப்படுவதன் விளைவு இப்போதே தலை காட்டியிருக்கிறது என்று கருதுகிறேன். பதில் கூறும் கடமையிலிருந்து நழுவிக் கொள்வது, கூறப்பட்ட பதிலை பரிசீலிக்க மறுப்பது போன்றவற்றையே விளைவு என கூறுகிறேன். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார். அறிவியல் ரீதியாகவும் நிரூபித்தேன், வரலாற்று ரீதியாகவும் நிரூபித்தேன். இதன் தொடர்ச்சியாக எந்த மறுப்பும் விளக்கமும் நண்பரிடமிருந்து வெளிவரவில்லை. என்றால் ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கொள்ளலாமா? மனிதன் தவிர்த்த வேறெந்த உயிரினத்துக்கும் கடவுள் குறித்த எண்ணம் இல்லை என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என்று கேட்டார், விளக்கப்பட்டது, அதன் பிறகு அது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? கடவுளை சோதிக்கும் கருவிகள் கடவுளை விட வல்லமையுடையதாய் இருக்கும் என்றார். அதை மறுத்தேன், அந்த மறுப்பை பரிசீலிக்காமலேயே அதே கேள்வியை வேறு சொற்களால் மீண்டும் கேட்டிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? இதை விவாதம் குறித்த நண்பர் குலாமின் பார்வை மீதான மீளாய்வு என்பதாக மட்டும் கொள்ளாமல் \\\இதில் எங்கே நழுவுதலும் வழுதலும் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை சகோ செங்கொடி/// என வினவப்பட்டதற்கான புரிதலும் என்பதாகக் கொள்க.

மீண்டும் வருகிறேன்.

Advertisements

4 பதில்கள் to “அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது”

 1. iniyavan செப்ரெம்பர் 30, 2012 இல் 10:28 முப #

  //அந்தக் கேள்வி மக்களின் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிடுவார் என்பதற்காகவோ, கேட்க மாட்டார் என்பதற்காகவோ முன்வைக்கப்படவில்லை. கடவுளின் இருப்பு குறித்த கேள்விக்கு உலகமே பிரார்த்தித்தாலும் கடவுளின் இருப்பை நிரூபிக்கும் வாய்ப்பில்லை என்பதற்காக முன்வைக்கப்பட்டிருந்தது.//

  நல்லதொரு விளக்கம் நண்பரே,
  “துவா”(பிரார்த்தனை)இதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.இதை முன் வைத்துத்தான் வணக்கவழிபாடுகளே நடத்தப்படுகின்றன. மனிதர்கள் பேசப்படுவதை அவன் (எந்த மொழியானாலும்)கேட்கிறான்,ஏற்கிறான்.ஆனால் அல்லாவால் நம்முடன் பேச முடியாது,நம்மால் மட்டும்(முகம்மதைத் தவிர) கேட்கவும் முடியாது. கேட்கும் சக்தி நமக்கில்லையா அல்லது நமக்கு கேட்க வைக்கின்ற சக்தி அவனுக்கில்லையா??கடவுளிடம் பிரார்த்திக்கும் உரிமையை அடுத்தவர்கள் ஏற்கக்கூடாது இடைத்தரகர்கள் கூடாது எனும் போது,செய்திகளை நமக்கு வழங்க மட்டும் வாண்தூதர்+பூமி தூதர் போன்ற இடைத்தரகர்கள் ஏனோ? நாம் கேட்கும் கேள்விகளுக்கு வாய்மூடி மவுனம் சாதிப்பது ஏனோ??

  இனியவன்…

 2. iniyavan ஒக்ரோபர் 1, 2012 இல் 1:14 பிப #

  //பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இன்னோரின்ன தகுதிகளுடன் உண்மைக் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆக, சாராம்சத்தில் அந்த மனிதர் சொன்னது உண்மையா பொய்யா என்பது தான் சரியான கேள்வி. அதை ஆய்வதற்குப் பதிலாகத்தான், பேரண்டத்தின் நீள அகலங்கள், எந்த ஆளுமைகளுக்குள்ளும் அகப்பட்டு விடக்கூடாதே போன்ற பரிதவிப்புகள் எல்லாம். அவர் சொன்னது உண்மை தான் என்பதை எப்படி நிரூபிப்பது?//

  நல்லதொரு குத்திக் காட்டல் நண்பரே இஸ்லாமியர்கள் கடவுள் உண்டா,இல்லாயா?என்று சந்தேகப்படவே கூடாது ,சந்தேகம் வந்துவிட்டாலே அவன் முஸ்லிம் அல்ல என்று பயமுறுத்தும் போது அவனுக்கு எப்படி அது பற்றிய சிந்தனை வரும்?? இந்த பிரச்சினையை சமாளிக்கத்தான் இயற்கையின் நிகழ்வுகளை கையில் எடுக்கப்பட்டு அதற்கு அறிவியல் முலாம் பூசப்பட்டு இது எப்படி நடந்தது?இது எப்படி சாத்தியமாகிறது? என கேள்விகளை திருப்பிவிடப்பட்டிருக்கிறது என்பதை நன்றாகவே நாம் உணர்ந்துவிட்டோம். இனியும் இவர்கள் பம்மாத்து பளிக்காது!!!

  இனியவன்…

 3. iniyavan ஒக்ரோபர் 1, 2012 இல் 2:00 பிப #

  //எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை.//

  எண்ணிலடங்காத தன்மைகளா? இப்பண்புகளை யார் பட்டியலிட்டது முகம்மதா? அளவுகோல் நம்மிடம் இல்லை எனும்போது அப்பண்புகளுக்குண்டான இலக்கணத்தை எவ்வாறு அளந்தார்கள்? கனவு,கற்பனை,வஹி எனும் நம்மூர் சாமியாடலான குறிசொல்வது,அற்புத தந்திர செயல் (மாஜிக்),மிருக பலி,விரதமிருந்து யாருடனாவது பேசி சிரிப்பது இதுதான் கடவுள் பண்புகளை அளக்கும் அளவுகோலா???இச் செயல்களை பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்ததால்தான் எண்ணிலடங்காத கடவுள் தன்மைகள் என ஏமாந்தார்கள், இன்று அதை செய்தால் எள்ளி நகையாடுகிறார்கள்.இருப்பினும் சாய்பாபா, நித்தியானந்தா போன்ற இன்றைய அவதாரங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அவர்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே!இந்த நூற்றாண்டிலும் இப்படி இருக்கும் போது காட்டுமிராண்டி காலத்தில் முகம்மது சொன்னதை நம்பியதில் வியப்பில்லையே!!!அது தொடர்கிறது அவ்வளவுதான்!!!!!!!

  இனியவன்….

 4. nallurmuzhakkam ஒக்ரோபர் 1, 2012 இல் 8:22 பிப #

  இரண்டாம் தொகுதி பின்னூட்டங்களுக்கான மறுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்து நண்பர் குலாம் தளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இரண்டு நாட்களாகியும் இன்னும் வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: