Tag Archives: பன்னாட்டு நிறுவனங்கள்

இன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்?

26 பிப்

நேற்று [24.02.2016] கடையநல்லூர் புதுத்தெருவில் வசிக்கும் 19 வயது மாணவன் மர்மக் காய்ச்சலுக்கு பலியானான் எனும் செய்தியை செவியுற்ற போது இப்படித் தான் மனம் எண்ணியது, “இன்னும் எத்தனை பேர் பலியாக வேண்டும்?” ஒரு நெடுங்கதை தொடர்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இப்படி மரணம் நிகழ்ந்தவுடன் நகரில் குப்பை கூழங்கள் பெருகி விட்டன, கால்வாய்கள் சாக்கடையாகி விட்டன, மனிதக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுகின்றன என ஏதேதோ காரணங்கள் கூறுவதும் வழக்கமாகி இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு காய்ச்சல் பொழுதில் இத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பை இங்கு மீள்பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என எண்னுகிறேன்.

கடையநல்லூரின் கழிவுகள் அகற்றப்படுவதற்கு இரண்டு கால்வாய்கள் இருந்தும், அவை இரண்டுமே பராமரிக்கப்படாமல் சாக்கடைகளாகிவிட்டன. மட்டுமல்லாது ஆக்கிரமிப்புகளும் அந்தக் கால்வாய்களை தோற்றத்திலும் கூட சாக்கடைகளாக உருமாற்றிவிட்டன. சுகாதாரக்கேடு என்று மக்களை மட்டும் குற்றம்சாட்டுவதில் பொருளில்லை. ஏனென்றால், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவக் கழிவுகளை கால்வாயில் தான் கொட்டுகிறார்கள். மனிதக் கழிவுகளை கால்வாயில் கலப்பது சுகாதார சீர்கேடுதான் என்றாலும், ஒட்டுமொத்தக் காரணத்தையும் அதன் தலையில் சுமத்துவது மெய்யான காரணத்தை மறைப்பதற்காகத்தான். பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் திறந்தவெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். பலரை மரணத்தில் தள்ளக்கூடிய மர்ம நோய்கள் எதுவும் அன்றைய காலங்களில் பீடித்ததில்லை. இன்று பெரும்பாலான வீடுகளில் நவீன கழிப்பறைகள் இருந்தும், திறந்தவெளிகளெல்லாம் மறிக்கப்பட்டு கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றப்பட்ட பின்பும் புதுப்புது நோய்கள்.

நகராட்சி பெருகும் மக்களுக்கு ஏற்ப சுகாதாரத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. யாராவது தலைவர்கள் வந்தாலோ, அல்லது இதுபோன்ற நோய் பீடிக்கும் நேரங்களிலோ சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பொடியை தூவி விடுவதும், எப்போதாவது கொசு மருந்து அடிப்பதும் தான் பெரிய அளவிலான சுகாதார நடவடிக்கைகள். சுகாதாரத்திற்கென எந்த திட்டமிடாமலிருப்பதும், கால்வாய்களை பராமரிக்காமல் நீர் தேங்கவிட்டு ஊரையே சாக்கடையாக்கியிருப்பதும் தான் மெய்யான காரணம்.

அப்படி என்ன தான் பிரச்சனை கடையநல்லூரில்? கடையநல்லூர் மட்டுமே அசுத்தமாக இருக்கிறது என்று யாராலும் கூற முடியாது. நீர்நிலைகளை பராமரிப்பிலிருந்து அரசு என்று விலகிக் கொண்டதோ அன்றிலிருந்தே எல்லா ஊர்களிலும் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சாக்கடைகளாக மாறி விட்டன. நகர் நிர்வாகம் தனியார்மயமாகியதும், நகர் மன்றம் என்பது ஊழலை பிழைப்புவாதத்தை பரவலாக்குவதும் தான் என்றான பின் நகரின் மீதான, நகர மக்களின் மீதான அக்கரை என்பதை எதிர்பார்க்க முடியுமா? நகர நிர்வாகங்கள் சீரழிந்து போய் ஊழலை கீழ்மட்டம் வரை பரவலாக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கும் பொதுவான அம்சம் என்றாலும் கடையநல்லூரில் ஆண்டுதோறும் கோடைகாலத் தொடக்கங்களில் தவறாமல் அந்த மர்மக் காய்ச்சல் வந்து சிலரைக் கொன்று செல்வதின் தனிச் சிறப்பான காரணம் என்ன? கடையநல்லூரின் இந்த குறிப்பான நிலமைக்கு நகர் நிர்வாகச் சீர்கேடு என்ற பொதுவான காரணத்தை கூறி விலகிச் செல்ல முடியுமா? யார் பொறுப்பேற்பது? யார் விளக்குவது?

எனவே, பொதுவான காரணங்களைக் கூறி கடையநல்லூரின் குறிப்பான பிரச்சனையை தள்ளிவைக்க முடியாது. ஆண்டு தோறும் கடையநல்லூரைத் தாக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு தனிப்பட்ட காரணம் ஏதோ இருந்தாக வேண்டும். அந்தக் காரணத்தை கண்டறிந்து களையாத வரை கடையநல்லூரின் தொடர் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது. இதை கண்டறிந்து நீக்குவதை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடாதவரை அரசின் கடையநல்லூர் நகராட்சியின் செவிட்டுச் செவிகளில் இது ஏறப் போவதில்லை. அப்படியான சமரசமற்ற போராட்டத்துக்கு மக்களே நீங்கள் தயாரா? இதற்கு பதில் கூறாமல் உயிரிழப்புகளை கண்டு இரக்கப் பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

Advertisements

ரூ 3,74,937 கோடி ஊழல்!

21 மார்ச்

ஆண்டுதோறும் (இந்திய) மத்திய அரசின் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை – அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசின் பட்ஜெட்.  அதற்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே சம்பளப்பிரிவினர் என்று சொல்லப்படுகின்ற 2 சதவீதமாகவுள்ள நடுத்தர வர்க்கம், அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கிற திருவாளர் பொதுஜனம் ஆகிய அனைவரும் பரபரப்பாக இதில் அளிக்கப்படவுள்ள‌ சலுகைகளில் பெருமளவு தனக்குத்தான் கிடைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு இருப்பார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் செய்தித்தாள்களில் நிதியமைச்சர் பெரிய பெட்டியுடன் வரும் படம், பாராளுமன்ற உறுப்பினராயிருக்கின்ற தனது அபிமான நடிக, நடிகையரில் எவ‌ரேனும் இருவரது புகைப்படங்களுடன் செய்திகள் வந்தவுடன் மேலோட்டமாக சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரிக்கு என்ன சலுகை என்பதைப் பார்த்து விட்டு முனகி க்கொண்டே சம்பளப் பிரிவினர் ஒதுங்கி விடுவர்.  திருவாளர் அன்றாடங் காய்ச்சியோ சிகரெட், பீடி விலை உயர்ந்திருக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதோடு அவரது கடமை முடிந்தது. ஆளும் ஓட்டுக் கட்சியினர் எதையும் படித்துப் பார்க்காமல் எளியோருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் என்ற பேட்டியையும், எதிர் கட்சியானால் வருகின்ற தேர்தலைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிற ஆசை வார்த்தை பட்ஜெட், மற்றபடி ஏழை எளியோருக்கு எதுவும் சொல்லப்படவில்லை.  இதில்லை – அதில்லை என்று அறிக்கையோடு அவர் பணியும் முடிந்து விடும்.  மாவட்டந்தோறும் இருக்கிற சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற முதலாளிகளின் சங்கத்தில் யார் தலைவராக இருக்கிறாரோ அவர் சார்ந்த வணிகத்திற்கு சலுகை இருந்தால் அதைச் சிறந்த பட்ஜெட் என்றும், அவருக்கு சலுகை இல்லையெனில் அந்த வியாபாரத்தைக் குறிப்பிட்டு அதற்கு சலுகை வழங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களது பணி முடிந்து விடும்.

சம்பளப் பிரிவினரிடமும், அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாங்கும் உணவு உள்ளிட்ட பொருட்களிலும் கராராக வரி வசூல் செய்யும் அரசு, வரிச்சலுகை, வரி வசூலாகா விட்டால் தள்ளுபடி என்பதெல்லாம் அனைத்து பட்ஜெட்களிலும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக  பி.சாய்நாத், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எழுதியிருக்கிற கட்டுரையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

 

ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் !

பி.சாய்நாத்

இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது.  இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை  மட்டுமே.  இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை.  இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல.  கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்.

பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது.  டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது.  விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது.  அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.  உண்மையில்  பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது.  இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது.  தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது.  உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம்.  வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம்.  இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது.  கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.

இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது.  வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே  கேள்விப்பட்டிருக்கலாம்.  மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை.  சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.  தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது.  மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன.
ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர்.

பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம்.  ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.  இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வ‌தில்லை.  மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே.  சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).

இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது.  ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.  பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக  மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது).  ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும்.  மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல.   இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது.  தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).

இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்.  ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக  எவ்வளவு தொகை என்று பார்க்கலாம்.  தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி.  நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி.  கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை.  இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்).  இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.  நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்).

கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது.  இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல.  மாறாக, அரசின் கொள்கை முடிவு.  இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட்.  இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.  சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை.  கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது.  மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.  சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம்.  2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது.  கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது.  ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘.  ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு.  பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது.  அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

_________________________
நன்றிதி இந்து 07/03/11)
தமிழாக்கம் : சித்ரகுப்தன்
_________________________

நன்றி: வினவு

மீண்டும் சௌதியில் சலுகைகள், உரிமைகளுக்கான மக்கள் போராட்டம் என்னானது?

19 மார்ச்

நேற்று (18/03/2011 வெள்ளி) சௌதியின் மன்னர் அப்துல்லா, சௌதி மக்களுக்கு 500 பில்லியன் ரியால் அளவுக்கு சலுகைகளை, திட்டங்களை அறிவித்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் சலுகைகளையும் மானியங்களையும் அள்ளிவீசும் அளவிற்கு அரசை தங்களின் சிறு அசைவின் மூலம் தள்ளியிருக்கிறார்கள் மக்கள். இதுவரை சௌதியில் ஆங்காங்கே நடந்த கிளர்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் துப்பாக்கி ரவைகளையும், கவச வாகனங்களையும் காட்டிய சௌதி அரசு இப்போது சலுகைகளை காட்டியிருக்கிறது என்பதே சௌதி மக்கள் இனியும் அமைதியாக இருப்பார்களா எனும் ஐயம் ஆள்பவர்களுக்கு தோன்றியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேநேரம் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக காட்டிக்கொண்டே அவர்களை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்திய தந்திரங்கள் தான் இவைகளில் தொழிற்படுகிறது. அறிவிக்கப்பட்ட 500 பில்லியன் திட்டங்களை உற்று நோக்கினாலே இதைக் கண்டுகொள்ள முடியும். 5 லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்காக 250 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பில்லியன் மருத்துவமனைகள் கட்டுவதற்கு. வீடு கட்டுவதற்கான கடன் 3 லட்சம் ரியாலிலிருந்து 5 லட்சம் ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட சலுகைகளில் பாதிக்கு மேலாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான இந்த அம்சங்களை மறைப்பதற்காக, சௌதி அரசு பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பன போன்ற இனிப்புகள் தடவப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலைவசதி வேண்டும் என்று காலம் காலமாக போராடிய கிராமப்புற மக்களுக்கு காவல்துறை மூலம் குண்டாந்தடி பரிசு வழங்கிய மத்திய மாநில அரசுகள், திடீரென உள்கட்டுமானத்தை பெருக்குகிறோம் என்ற பெயரில் கிராமங்களை வழவழப்பான சாலைகளால் இணைத்தன. கிராம மக்களின் நலன்களுக்காக செய்ததாக பிரச்சாரம் செய்தன. ஆனால், தானியக் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை தங்களின் தங்களின் கிடங்குகளுக்கு கொண்டு செல்வ‌தற்காக தனியார் நிறுவனங்களுக்காக சாலை வசதிகளை ஏற்படுத்தித்தந்தன என்பது தான் மெய்யான காரணம்.

அது போலவே, கடந்த உலக பொருளாதார நெருக்கடியில், அரபுலகின் நாடுகளில் திவால் நிலைக்கு செல்லுமளவுக்கு பொருளாதாரம் தள்ளாட ஓரளவுக்கு சமாளித்து நின்றது சௌதியின் பொருளாதாரம் மட்டுமே. காரணம் எமிரேட்டுகளைப்போல சௌதியின் பொருளாதாரம் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில்களையே சார்ந்து நிற்காதது தான். ஆனால், அதன்பிறகு பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சௌதியில் காலூன்றத் துடித்தன. இப்போது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. மத ரீதியான வரலாற்று தலங்களான மக்கா, மதீனா உட்பட சௌதியில் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றன.

முகம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாற்றப்பட்டதை கண்டித்தும், கதீஜாவின் வீடு கழிப்பிடமாக மாற்றப்பட்டதை எதிர்த்தும், அப்ரஜ் அல் பைத் கோபுரம் (மக்கவின் கடிகார கட்டிடம்) வெளிநாட்டு உதவியுடன் கட்டப்பட்டதற்கும், மக்காவின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சீனாவிலிருந்து முஸ்லீமல்லாத நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கிளம்பிவரும் எதிர்ப்பை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் வீட்டுக் கடன்கள் உயர்த்தப்பட்டிருப்பதையும், கட்டுமான திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதையும் புரிந்து கொள்ள முடியும். ஆக மக்களுக்கு வழங்குவது போல் போக்கு காட்டிவிட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் போகின்றன. தெளிவாகச் சொன்னால் மக்களை போராடத்தூண்டும் புறக்காரணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் (11/03/2011 வெள்ளி) மக்கள் பொது இடங்களில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்தி பரவியது. சிறிய அளவில் நடந்த சில நிகழ்வுகளைத் தவிர பெரிதாக எதுவும் நிகழவில்லை. ஆனால் குறித்த நாளுக்கு முன்னதாகவே சௌதி அரசு, முன்னணியில் செயல்படப்போகும் பலரை உளவறிந்து ரகசியமாக கைது செய்து விட்டிருக்கிறது. அந்தவகையில் சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர வேறொன்றும் நிகழாதவாறு சௌதி அரசு வெற்றிகரமாய் நிலமையை சமாளித்திருக்கிறது. ஆனால் இவைகளை எதிர்காலத்திலும் அப்படியே சௌதி அரசால் கையாண்டுவிட முடியாது. நஜ்ரான் பகுதிகளில் முன்பொருமுறை தோன்றிய கம்யூனிச இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதைப் போல் இனியும் சௌதி அரசு செய்து விட முடியாது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

கட்சிகள் + நன்கொடை = ஊழல்

24 பிப்

தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ… ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த கட்சிகளின் வருமானங்கள், அது தொடர்பாக அக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள் போன்ற விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இவற்றைப் பெற்று வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.

2007 – 08 மற்றும் 2008 – 09ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள வருமானம் ரூ 717 கோடியே 69 லட்ச ரூபாய்!

பாஜக மட்டும் இளைத்ததா என்ன… ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கட்சி ரூ 343 கோடியே 8 லட்சம் ஈட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ 251 கோடியே 76 லட்சமும், ஏழைப் பங்காளர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ரூ 122 கோடியே 53 லட்ச ரூபாயும், சமாஜ்வாடி கட்சி ரூ 71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் ரூ 57 கோடியே 40 லட்சமும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ 6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றுள்ளது.

2007 – 08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008 – 09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பாஜகவுக்கு 6 கோடி ரூபாயும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

இவை வெளியில் தெரிந்த கணக்கு மட்டுமே. மறை முகமாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் இதைவிட இருமடங்கு இருக்கும் என்கிறது இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமைப்பு.

இப்படியெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது எதற்காக? ஜனநாயகத்தை தழைக்கச் செய்யவா… ம்ஹூம்!

ஆட்சியிலிருக்கும் கட்சி மூலம் அதிக காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியாக உள்ள முக்கிய கட்சி அந்த காரியங்களைக் கெடுக்காமல் இருக்கவும்தான்

**********************************************

கோடிகளில் குளிக்கும் இந்த ஓட்டுக்கட்சிகளுக்கு, வரி ஏய்ப்பு முதல் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு கருப்புப்பணத்தை குவித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும்? ஓட்டுக்கட்சிகளுக்கே தெரியாத அவர்களில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நன்கொடைகளை அள்ளி வீசுகிறார்களா? ஒன்றுக்கு பத்தாக திருப்பியெடுக்கும் உத்திரவாதமில்லாத எதையும் எந்த முதலாளியும் செய்வதில்லை. இந்த நன்கொடைகள் தான் தொழிற்கொள்கை வழிமுறைகளை, சலுகைகளை தீர்மானிக்கின்றன. ஆக தங்களுக்கு சாதகமாக விதிமுறைகளை வளைப்பதற்காக கொடுக்கப்படும் லஞ்சம் தான் இந்த நன்கொடைகள்.

அலைக்கற்றை விற்பனையை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்கு பணம் கொடுத்ததுதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால், இவற்றை நன்கொடைகள் என்று குறிப்பிடுவது அயோக்கியத்தனமானது. அதேநேரம் இந்தியாவில் செயல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு தரகு நிறுவனங்களுக்கு சாதகமானவையே அன்றி மக்களுக்கு சாதகமானவை அல்ல. என்றால் இதை எப்படி ஜனநாயக அரசு என்று கூறமுடியும்?

தேர்வு நேரத்தில் மின்தடை அதிகரிப்பு

18 பிப்

மதுரை மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடை அமலில் உள்ளது. எனினும், அறிவிக்கப்படாத மின் தடை நகரில் கூடுதலாக ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணி நேரமும் அதிகரித்துள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு நேரத்தில் மின் தடையால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் மின் தேவை சுமார் 10 ஆயிரம் மெகாவாட். அனல், நீர் மின் நிலையங்களில் உற்பத்தி நடக்கிறது. இதுபோதுமானதாக இல்லை. காற்றாலை மின் உற்பத்தி அவ்வப்போது கைகொடுத்து வருகிறது. ஆண்டு தோறும் சீசன் நேரமான ஜூலை முதல் நவம்பர் இறுதி வரை நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 முதல் 2,500 மெகாவாட் என காற்றாலை மின் உற்பத்தி நடக்கிறது. மற்ற நாட்களில் சொல்லும்படியாக இல்லை. கடந்தாண்டு பெய்த மழையால் நீர் மின் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. நீர் நிலைகளில் போதுமான அளவு தண்ணீர் இருந்தாலும் உற்பத்தி பெரிதளவில் இல்லை.

மின் தடை நேரம் அதிகரிப்பு: மின் பற்றாக்குறையை சமாளிக்க, அறிவிக்கப்பட்ட இரண்டு மணி நேர மின் தடையை வாரியம் அமல்படுத்தியுள்ளது. சில நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் நகரில் கூடுதலாக ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணி நேரமும் அறிவிக்கப்படாத மின் தடை அமலாகி உள்ளது. விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் முறையாக இல்லை. எந்த நேரத்தில் மின் சப்ளை கிடைக்கிறதோ, அப்போது விவசாய பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களுக்கு கடும் பாதிப்பு: வரும் மார்ச் 3 முதல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 தேர்வு முடிந்ததும் மார்ச் இறுதியில் இருந்து ஏப்.,10 வரை 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. தேர்வுக்காக, மாணவர்கள் தயாராகி வருகின்றனர். காலை 6 மணிக்கே மின் தடை செய்வதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் முடியும் வரை மின் தடைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நீர் மின் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் இருப்பதால் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் வாரியம் ஈடுபட வேண்டும்.

70 மெகாவாட் பற்றாக்குறை

மின் தடை நேரம் அதிகரிப்பு குறித்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் ஆ. நச்சாடலிங்கம் கூறும்போது, “”கடந்த பிப்., 9ல் பவர் கிரிட்டிற்கு 9,657 மெகாவாட் தேவைபட்டது. தற்போது 10,620 மெகாவாட் தேவைப்படுகிறது. சுமார் 1,000 மெகாவாட் வரை பற்றாக்குறை உள்ளது. மதுரை மண்டலத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தற்காலிகமாக நகரில் ஒரு மணி நேரமும், புறநகரில் இரண்டு மணி நேரமும் மின் தடை செய்யப்படுகிறது. தேர்வு காலங்களில் மாணவர்கள் பாதிக்கப்படாத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படும்,” என்றார்.

**********************************************

அறிவிக்கப்பட்ட மின்தடை, அறிவிக்கப்படாத மின்தடை என்று எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கிறது, கோடை காலம் வந்துவிட்டாலே தேர்வு நேரம் என்று விலக்கின்றி எல்லா முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலும் மின்பற்றாக்குறை என்று காரணம் கூறி மின்வெட்டை கொண்டுவருவது வழக்கமாக ஆகிவிட்டது. மின்பற்றாக்குறை என அரசு கூறும் அனைத்து காரணங்களும் மக்களுக்கு சொல்லப்படும் சமாதானங்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. எப்படியென்றால், பன்னாட்டு நிறுவங்களுக்கு நாளின் ஒரு நொடியில் கூட தடையில்லாத மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கிறது அரசு. மின்சாரம் பற்றாக்குறை என்றால் அவர்களுக்கும் மின்தடையை செய்வது தானே.

அமைதியாக காரணங்களை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே நம்மால் முடியுமென்றால், தேர்வு நேரமென்ன எல்லா நேரங்களிலும் மின்தடையை அனுபவிக்கத்தான் வேண்டும்.

ஊழலுக்கு எதிராக, தமிழகம் தழுவிய மக்கள் இயக்கம்!

15 பிப்

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை

கார்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!

தனியார்ம்யமே இதன் ஆணிவேர்

தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்!

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

 

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றழைக்கப்படும் பகர்கொள்ளை, தி.மு.க.வின் முதற்கொள்ளை அல்ல. திருக்குவளை அரச குடும்பத்தின் புலிகேசிகள் பகலில் அமைச்சர்களாகவும் இரவில் கொள்ளையர்களாகவும் இருந்து நடத்தி வரும் கொள்ளையின் உச்சகட்டம் தான், இந்த 1,76,000 கோடி ஊழல்.

இது வரலாறு காணாத பெரும் ஊழலாக இருப்பதும் ஒருவகையில் இந்தக் கொள்ளைக் கூட்டத்திற்கு சாதகமாகி விட்டது. தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனி, சிமெண்டு கம்பெனி, மணல் கொள்ளை, கட்டைப் பஞ்சாயத்து என்ற பல்வேறு தொழில்களில் 100 கோடி, 200கோடி என்று பொதுச்சொத்தை கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தின் மாநில திருட்டுகளை மறைத்து விட்டது இந்த தேசியத் திருட்டு.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் உண்மையான சூத்திரதாரிகளான டாடா, அம்பானி, ஏர்டெல் அதிபர் மித்தல் போன்ற கார்பரேட் முதலாளிகளும், ‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு விட்டார்கள். கொள்ளையை பங்கு போட்டுக்கொள்வதில் இந்தக் கார்பரேட் குடும்பங்களுக்கிடையில் தோன்றிய மோதலும், கருணாநிதி குடும்பத்துக்குள் ஏற்கனவே நடந்து வரும் குத்து வெட்டும் சந்திக்கின்ற சங்கமத்தில், தவிர்க்க முடியாமல் வெளிக்கிளம்பி வந்து விட்டது , ஸ்பெக்ட்ரம் ஊழல்.


‘ராசா-ராடியா-கனிமொழி’ கூட்டணி

 

சி.பி.ஐ. விசாரணை, உச்சநீதி மன்றத்தின் கண்கானிப்பு, ஊழல் தடுப்பு சட்டம் என்ற நாடங்கங்கள் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை வாயைப் பிளந்து கொண்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, திரை மறைவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்களுக்கிடையிலான மோதலில் மூன்று அப்பாவி தினகரன் ஊழியர்களைக் காவு வாங்கிய அழகிரியும் மாறன் சகோதரர்களும் இன்று கட்டித் தழுவிக்கொள்கிறார்கள்.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், வங்கி ஊழல், எல்.ஐ.சி ஊழல், அரிசி கடத்தல் ஊழல் என்று அடுக்கடுக்காக ஊழல்கள் அம்பலப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஊழலின் தொகையும் 1000கோடி, 10,000கோடி என்று உயர்ந்து கொண்டே போகிறது.

உயர்ந்து கொண்டே போகும் ஊழல் தொகையைப் பத்திரிக்கையில் பார்க்கும் போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு சாபம் கொடுத்துவிட்டு ‘உயர்ந்து கொண்டே போகும் விலைவாசியை சமாளிப்பது எப்படி’ என்ற கவலையில் மூழ்குகிறார்கள் மக்கள். அதற்கும் இதற்கும் உள்ள உறவு மக்களுக்கு புரிவதில்லை. இந்த ஊழல் தொகையெல்லாம் யாரோ யாரிடமிருந்தோ அடித்த கொள்ளை என்று நினைத்துக் கொண்டிருப்பதால் மக்களுக்கு கோபமும் வருவதில்லை. “நீ திருடன்… நீ திருடன்” என்று திருடர்கள் தமக்குள் நடத்திக் கொண்டிருக்கும் இந்த பங்கு பிரிக்கும் தகராறை, டீவி சீரியல் போலப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் பறிகொடுத்த மக்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழலையே எடுத்துக்கொள்வோம். 400 கோடி ரூபாய்க்கு அலைக்கற்றையை அரசிடமிருந்து வாங்கி, அதை 1200கோடிக்கு டோகோமோ என்ற ஜப்பான் கம்பெனிக்கு விற்றிருக்கிறார் டாடா. 12000க்கு மேல் இன்னொரு 12000 கோடி லாபம் வைத்து மொபைல் கட்டணமாக நம்மிடமிருந்து வசூலிக்கிறது டோகோமோ கம்பெனி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. அன்றாடம் பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 1,76,000கோடியை அடைக்கப்போவது நாம் தான். டாடா, அம்பானி, மித்தலின் சொத்து மதிப்பை உயர்த்தப் போகிறவர்களும் நாம் தான்.  அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்ததற்காகத்தான் அமைச்சர் ராசா வுக்கு இலஞ்சம்.


ஸ்பெக்ட்ரம் டாடா

 

அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் இலஞ்சத்தை, முதலாளிகள் நம்மிடமிருந்து தான் உறிஞ்சி எடுக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல்களில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலாளிகள் கொடுக்கும் இலஞ்சம் என்பது நம்மையும், நம்முடைய நாட்டின் பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கான இலஞ்சம். மக்களோ சட்டப்படி தங்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெறுவதற்கே இலஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ரேசன் கார்டுக்கும் சாதிச் சான்றிதழுக்கும் மக்கள் கொடுக்கும் ரூ.100, 200 இலஞ்சம் என்பது வயிற்றுப்பாட்டை சமாளிப்பதற்கு மக்கள் வயிறெரிந்து கொடுக்கும் இலஞ்சம்.

இலஞ்சமும் ஊழலிம் முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு மட்டும் தான் அது பாதகமாக இருக்கிறது. இரண்டு ரூபாய் இலஞ்சம் கொடுத்தால் பத்து ரூபாய் எடுத்து விடுவார்கள் முதலாளிகள். பன்னிரெண்டு ரூபாயையும் மறைமுக வரியாகவும், விலைவாசி உயர்வாகவும் தங்கள் தலையில் சுமப்பவர்கள் மக்கள் தான்.

“12,000 கோடிக்கு விற்றிருக்க கூடிய அலைக்கற்றையை 400 கோடிக்கு டாடாவுக்கு கொடுத்தது சட்டப்பூர்வமானது தான்” என்று அடித்து பேசுகிறார் ராசா. அவருடைய தலைவர் கருணாநிதியோ, சென்னையில் 650 கோடி ரூபாய் முதல் போட்டிருக்கும் நோக்கியா கம்பெனிக்கு 650 கோடி மானியம் தருகிறார். உலகச்சந்தையில் டன் 7000 ரூபாய்க்கு விற்கும் இரும்புத் தாதுவை வெறும் 27 ரூபாய்க்கு முதலாளிகளிடம் விற்கிறது இந்திய அரசு. 500 கிராமங்களில் இருந்து பழங்குடி மக்களை அடித்து விரட்டி விட்டு அந்த கிராமங்களை டாடாவின் சுரங்க கம்பெனிக்கு சொந்தமாக்குகிறது சட்டீஸ்கர் மாநில அரசு. ஆறுகள், குளங்கள், மலைகள், காடுகள், விளைநிலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இப்படி விலைபேசப்படுகின்றன. இதெல்லாம் பகற்கொள்ளை, மோசடி என்று நமக்கு பச்சையாகத் தெரிகிறது.

ஆனால் இவ்வாறு நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் முதலாளிகளிடம் ஒப்படைப்பது தான் பொருளாதாரத்தை முன்னேற்றும் என்றும், வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்றும், இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்துமென்றும் எல்லா கட்சி ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள். அதைத்தான் ராசாவும் சொல்கிறார். இந்தக் கொள்ளையெல்லாம் சட்டவிரோதமாக அல்ல, சட்டபூர்வமாகவே அமல்படுத்தப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பது இது தான். இது தேச முன்னேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் தேசத்துரோகம். இது ஊழலின் புதிய பரிணாமம். நல்லதைப்போல சித்தரிக்கப்படும் நயவஞ்சகம். கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையை மறைத்துவிட்டு அரசியல்வாதிகளையும்  அதிகாரிகளையும் மட்டுமே மக்களின் எதிரிகளாகக் காட்டும் கண்கட்டு வித்தை. உண்மையில் ஊழல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ‘எஸ் பாஸ்’என்று என்று முதலாளிகளுக்கு தொண்டூழியம் செய்யும் கையாட்களே. இந்தக் கொள்ளைக்கூட்டத்தின் உண்மையான ‘பாஸ்’ கார்பரேட் முதலாளிவர்க்கம் தான்.

1990 முதல் தனியார்மயக் கொள்கைகள் தீவிரமாக அமலாகத் தொடங்கிய பிறகுதான் ஊழல்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது; தொகையும் உயர்ந்திருக்கிறது; கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்தும் பல கோடியாக உயர்ந்திருக்கிறது. 200 ஆண்டுகளில் பிரிட்டிஷ்காரன் இந்தியாவிலிருந்து அடித்துச்சென்ற கொள்ளையை விட கடந்த 20 ஆண்டுகளில் இவர்கள் அடித்திருக்கும் கொள்ளை அதிகம் என்று கூறுகின்றன சர்வதேச ஆய்வு நிறுவனங்கள். எனினும் யாராவது தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா, ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா?

1991 முதல் 1996 வரை ஜெயா-சசி கூட்டம் தமிழகத்தை கொள்ளையடித்தது. அதைக்காட்டி ஆட்சிக்கு வந்த கருணாநிதி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவுக்கு எதிராக டஜன் கணக்கில் வழக்கு போட்டார். “வருமானத்துக்கு அதிகமாக 55 கோடி சொத்து சேர்த்தார்” என்ற ஒரு வழக்கு மட்டுமே பெங்களூரு நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கிறது. 55 கோடிக்கு 15 ஆண்டுகள் என்றால், 1,76,000 கோடிக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? இப்படியே வாய்தா ராணிகளுக்கும் வாய்தா ராசாக்களுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு எந்த காலத்தில் நாம் ஊழலை ஒழிப்பது?

இன்று எல்லாவிதமான கொள்ளைகளும் சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப் பட்டுவிட்ட நிலையில், எந்த சட்டத்தைக் காட்டி நீதிமன்றத்தில் வாதாடுவது? கொள்ளைதான் சட்டம் என்றாகிவிட்ட பிறகு, பறிமுதல் செய்வது தானே நீதியாக இருக்க முடியும்? கொலைதான் வழிமுறை என்று திரியும் ரவுடிகளுக்கு உருட்டுக் கட்டை தான் பதிலடி தரமுடியும். இராக்கின் எண்ணைய் வளத்தைக் கொள்ளை யடிப்பதற்காகவே அந்த நாட்டை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு ஆக்கிரமிக்கும் வேலையே இல்லாமல், இந்தியாவின் வளங்களைப் பன்னாட்டு முதலாளிகளிகளுக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு, 70 இலட்சம் கோடி ரூபாயை தமது பங்காக ஒதுக்கி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறது ‘கார்ப்பரேட் முதலாளிகள் – ஓட்டுப்பொறுக்கிகளின் கூட்டணி’. இவர்களுக்கும் உலகப் பெரும் கொள்ளையனான அமெரிக்காவுக்கும் என்ன வேறுபாடு? அங்கே இராக் மக்கள் ஆயுதத்தை எடுத்ததனால் தான் அமெரிக்காவுக்கு அச்சம் வருகிறது – இங்கே? ஆ.ராசாவோ அழகிரியோ மாறனோ அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்றா அஞ்சுகிறார்கள்? தோற்றே போனாலும். அவர்கள் கொள்ளையிட்ட மக்கள் சொத்து அடுத்த நூறு தலைமுறைக்குக் காணும்! தேர்தல் மூலம் தான் இவர்களைத் தாண்டிக்க முடியும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வரை, அவர்களும் நோட்டை நோட்டை எண்ணிக் கொண்டிருப்பார்கள் – மக்களுடைய ஓட்டை விலை பேசுவதற்கு!


‘கல்லுளிமங்கன்’ மன்மோகன்

 

தேர்தல் மூலம் இவர்கள் யாரையும் தண்டிக்க இயலாது என்பது நாட்றிந்த உண்மை. எனினும் இந்த உண்மையைத் தங்கள் கொள்கையாகக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும் தான். ‘வழக்கு, வாய்தா, தேர்தல், ஓட்டு’ என்று கொக்கு தலையில் வெண்ணைய் வைத்தி, 60 ஆண்டுகளில் ஒரு கொக்கு கூடப் பிடிபட வில்லை. திருடர்கள் நம் கண் முன்னால் திமிராக நடமாடுகிறார்கள், அவர்களுடைய திருட்டு சொத்துகளோ நம் கண் முன்னால் கட்டிடங்களாக உயர்கின்றன. கார்களாக பவனி வருகின்றன. நாம் அஞ்சி ஒதுங்கும் வரை அவர்களை அச்சுறுத்த முடியாது. நாம் சிறை செல்லத் தயாராக இல்லாதவரை, அவர்களையும் சிறைக்கு அனுப்பமுடியாது.

ஊழல் பெருச்சாளிகளை வீதிக்கு இழுப்போம்! மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்குவோம்! அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்து மக்களுக்குப் பங்கிடுவோம்! நக்சல்பாரிப் பாதையில் திரள்வோம்

 

ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!


அரசு கொள்கை முடிவின் படி, சட்டபூர்வமாகவே இதற்கு வழி வகுப்பது தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்!


*இந்தப் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக்கொடுத்து பங்கு வாங்குபவர்களே அதிகாரிகள், அரசியல்வாதிகள்!


*தனியார்மயத்தையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும் ஒழிக்காமல் ஊழல் ஒழிப்பு என்று பேசுவது பித்தலாட்டம்!


*கார்ப்பரேட் முதலாளிகள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தப்பிக்கும் வகையில் வழக்கை ஜோடிப்பதுதான் சி.பி.ஐ-இன் சிறப்பு திறமை!


இவர்களை நிரபராதிகள் என்று விடுவிப்பது தான் உச்சநீதி மன்றம் உயர்நீதி மன்றங்களின் திருப்பணி!


*எந்த ஊழல் கூட்டணிநம்மைக் கொள்ளையிடுவது என்பதற்கு நாமே லைசன்சு கொடுப்பது தான் தேர்தல்!


எல்லா கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளையும் நாமே தண்டிப்பது தான் நக்சல்பாரிப் பாதை!


***************************************************

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952

ஸ்பெக்ட்ரம் எனும் கூட்டுக்கொள்ளை

20 நவ்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. இந்தியா இதுவரை காணாத பெரும் தொகை இழக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களைத் திருப்திப்படுத்த தேசத்துக்கு நஷ்டம் விளைவிக்கும் அளவுக்கு துணிந்திருக்கிறார்கள் அதிகாரத்திலுள்ளோர். ‘வெள்ளையர் காலத்திலும் நடந்திராத கொள்ளையாக அல்லவா இருக்கிறது’ என நடுநிலையாளர்கள் மனம் கொதித்துப் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 ஜி விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிகட்டும் வகையில், குறைவான தொகைக்கு உரிமம் பெற்ற அத்தனை நிறுவனங்களிடமும், இன்றைய மார்க்கெட் ரேட்டை வசூலிக்க அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.

ஒரு வேளை இது நடந்தால், பலரும் கவனிக்காமல் விட்ட ஒரு கேள்வி விசுவரூபம் எடுக்கும்.

அது… இந்த 2 ஜி உரிமத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்கள் கொடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம்!

அரசுக்கு ரூ 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுவதற்காகக் கொடுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி லஞ்சப் பணம்!!

இந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் எப்படி திருப்பி வசூலிக்கப் போகின்றன? துறைக்குப் பொறுப்பானவர்கள், ஒதுக்கீடு செய்தவர்களின் சட்டையைப் பிடித்து திரும்ப எடுத்து வையுங்கள் அந்தப் பணத்தை என்று கூற முடியுமா…

இதனை எப்படி வெளிக் கொண்டுவர முடியும்? என்ற கேள்வி எழலாம். அரசு மனது வைத்து நேர்மையான விசாரணையை மேற்கொண்டால், வெளிக்கொணர முடியும். ஒரு வகையில் இந்தப் பணம் மொத்தமும் கணக்கில் வராத கறுப்புப் பணம். நியாயமாக அரசுக்கு சேர வேண்டிய பணம். அதை எப்போது அரசு கையகப்படுத்தப் போகிறது?

விசாரணை என்ற கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி, இந்த லஞ்சப் பண விவகாரத்தை அப்படியே கண்டுகொள்ளாமல் விடும் பட்சத்தில், இந்தத் தனியார் நிறுவனங்கள் திருடனுக்கு தேள்கொட்டிய மாதிரி வாய் மூடி மவுனம் சாதித்து, பொருத்தமான தருணத்தில் மீண்டும் காரியம் சாதித்துக் கொள்ளப் போகும் அபாயமும் இதில் உள்ளது!

எனவே இந்த ஊழல் முன்னிலும் பல மடங்கு அதிகமாக நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே தவறு செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதோடு, இந்த தவறைச் செய்ய கைமாறிய பெரும் தொகையைக் கண்டுபிடித்து வெளிக் கொணர்வதும் அவசியம்.

கட்சி சார்பற்ற பார்வை கொண்டவர்களுக்கு இன்னமும் கூட சின்ன நம்பிக்கையைத் தந்துவரும் டாக்டர் மன்மோகன் சிங் அரசு, செய்யுமா இதை?

*********************************************************

ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் இப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள், தனிப்பட்ட ஒருவரோ ஒரு கட்சியோ செய்த ஊழல் என்று. ஆனால் உண்மையில் இது கூட்டுக்கொள்ளை.

இந்த ஊழல் குறித்த முழு விபரங்களையும், அது எப்படி கூட்டுக்கொள்ளையாக இருக்கிறது என்பதையும், இதுபோன்ற ஊழல்கள் நடப்பதன் கார்ணம் என்ன என்பதையும், வருங்காலத்தில் இதுபோன்ற ஊழல்களை எப்படி தடுக்கலாம் என்பதையும் மிகத்தெளிவாக விளக்குகிறது இந்தக்கட்டுரை.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: மறுகாலனியாக்கத்தின் பம்பர் பரிசு

இந்திய அதிகாரிக்கு சீனா விசா தர‌மறுப்பு: இந்தியாவும் தந்த விசாவை ரத்து செய்தது

27 ஆக

இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிக்கு சீனா விசா மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இரு சீன அதிகாரிகளுக்குத் தரப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது.

வடக்கு கமாண்ட் ராணுவ உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வால், சீனா செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் அதிகாரி என்பதைக் காரணம் காட்டி அவருக்கு சீனா விசாமறுத்துள்ளது.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், அதிகாரி ஜஸ்வால், ஜம்மு காஷ்மீர் பொறுப்பை வகிப்பதால் அவருக்கு விசா தர மறுத்துள்ளது சீனா. இது ஏற்றுக் கொள்ளமுடியாதது என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக சீனா அங்கீகரிக்கவில்லை. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு தனி விசாவைத் தந்து இந்தியாவை தேவையில்லாமல் விஷமத்தனமாக சீண்டி வருகிறது.

சீனாவின் இந்த செயலை தொடர்ந்து இந்தியா கண்டித்து வருகிறது. இந்த நிலையில் ராணுவ உயர் அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்துள்ளது.

இதையடுத்து இரு சீன அதிகாரிகளுக்குத் தரப்பட்ட விசாவை இந்தியா ரத்து செய்துள்ளது.

********************************************************

இப்போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரி(!) பாகிஸ்தான் அல்ல சீனாதான். சீனா உலக வல்லரசாக வளர்ந்து வருவதாக அமெரிக்கா நினைக்கிறது. தன்னுடைய பிராந்திய ஆதிக்கத்துக்கு சீனா எதிராக வரலாம் என இந்தியா நினைக்கிறது. இதனால் ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை தட்டிவைக்க இந்தியாவை தனது அடியாளாக பயன்படுத்துகிறது அமெரிக்கா. இந்திய அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தம் கூட இந்தப் பின்னணியில் இணைத்துப் பார்க்கத்தக்கது. இந்தப் பின்னணியில் தான் இந்தியா தன் இராணுவச் செலவினங்களை அதிகரித்து வருகிறது. இந்த இராணுவவாதப் போக்கை மக்களையும் ஏற்கச்செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், சீனா குறித்த வெறுப்பு திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. அண்மையில் இந்திய சீன காஷ்மீர் எல்லை குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் பெரிதாக கிளப்பப்பட்டதையும் தற்போது அதுகுறித்த செய்தியோ தொடர் நடவடிக்கைகளோ இல்லாதிருப்பதையும் நினைவுபடுத்திப் பாருங்கள்.

சீனா உட்பட உலகின் எல்லா நாடுகளுமே தன்னுடைய இராணுவ வல்லாதிக்கத்துக்காகவே பாடுபட்டு வருகின்றன. அதன் பின்னணியில் பெரு நிறுவனங்களும் முதலாளிகளும் இருக்கிறார்கள். சண்டையிட்டுக் கொண்டாலும் கூடிக் குலவினாலும் அது வர்த்தக நலன்களை முன்னிட்டே இருக்கும். அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.

உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் மக்கள் இது போன்ற செய்திகளின் பின்னுள்ள அரசியலைப் புரிந்துகொள்ள முன்வரவேண்டும்.

கடையநல்லூர் பகுதிகளில் அதிகரிக்கும் மின்வெட்டு

27 ஆக

கடையநல்லூர் மின்கோட்டத்திற்குள்பட்ட புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல கட்டங்களாக மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர்.

புளியங்குடி துணைமின் நிலையத்திற்குள்பட்ட சொக்கம்பட்டி பகுதியில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.


ஆனால், இப் பகுதியில் கடந்த பல நாள்களாக காலை, பிற்பகல், மாலை, இரவு என பல நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவி வருகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 20 நிமிஷங்கள் முதல் 30 நிமிஷங்கள் வரை மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த மின்தடையை சரி செய்யவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*************************************************

கடையநல்லூர் பகுதிகளில் மட்டுமல்ல, நகரம் கிராமம் என்ற பாகுபாடின்றி அனைத்துப்பகுதிகளிலும் கூடுதல் குறைவாக மின்வெட்டு நீக்கமற நிறைந்திருக்கிறது. மக்களின் மின்சார நுகர்வு அதிகரித்து விட்டது, போதிய மின் உற்பத்தி நடைபெறவில்லை, காற்று வீசாததால் காற்றாலைகளிலிருந்து கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்கவில்லை, அணைகள் வரண்டு கிடப்பதால் நீர்மின்சாரம் கிடைக்கவில்லை, என்று அரசு காரணம் கூறுகிறது. ஆனால் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் 24 மணிநேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இவைகளெல்லாம் மின் உற்பத்தியையும், பகிர்மானத்தையும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையின் முன்னேற்பாடுகள். மக்கள் திரண்டெழுந்து போராட்டம் நடத்தாதவரை இதற்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாது.

%d bloggers like this: