Tag Archives: இளைஞர்

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?