Tag Archives: விடுதலைப் புலிகள்

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தூக்குக் கொட்டடியிலிருந்து நான் கேட்பது உயிர் பிச்சையல்ல! மறுக்கப் பட்ட நீதி

12 ஆக

பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். 

நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவால் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள்முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன்  என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன்

என்பதால் மனித நேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின்  அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என்மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது  என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களை யெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப் பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

  1. திரு.இராஜீவ் அவர்களின் கொலையை நியாப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம், மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னை போன்றவர்களும்  மரணதண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.
  2. திரு.ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11-06-1991  அன்று விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட  நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.
  3. அக்கொலைக்கு பயன்பட்ட “பெல்ட் பாம்” செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழிவகுத்தக் குற்றச்சாட்டு. இதற்க்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. இந்தியா டுடே நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள்.  ஆனால்,  “சிபிஐ யால் இறுதிவரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த  “பெல்ட் பாம்” ஐ செய்தவர் யார் என்பதே என்று இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி திரு, இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா ?
  4. அந்த “பெல்ட் பாமிற்கு” 9V பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த “பெல்ட் பாம்” ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்க்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வங்கித் தந்த 9V பேட்டரி தான் பெல்ட் பாம் வெடிக்கப்பயன் படுத்தப் பட்டது என்பது  நிரூபிக்கப் படவில்லை.
  5. உண்மை என்னவெனில் நான் 9V பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9V பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கில் உள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டி கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்லவைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.
  6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதே தவறு என்று உச்சநீதி மன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்லவதோ நோக்கம் இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது.

அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு பெறப்பட்ட வாக்குமூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்குமூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்து தான் பல வாக்கு மூலங்கள் ரத்தத்தால் கையழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப் படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினைத் தருவது கிடையாது, ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. 

  1. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு.தியாகராஜன் கேரளா மாநிலத்தில் 1993 ல் நடைபெற்ற அருட்சகோதரி.அபயா கொலைவழக்கை “தற்கொலை” என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும் அவரது முறைகேட்டை எதிர்த்து அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு.தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இது பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் அவர்கள் 23-06-2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்கவேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள் தானே இவர்கள்.. 
  2. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டதால், பெரும்பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன, அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதி மன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர் நீதி மன்றம், பிறகு உச்ச நீதி மன்றம் என்று இரு முறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த செயல்பாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவி வந்தது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைப்பட்டு போனது. இப்பொழுது தடா நடைமுறை தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும், எப்பொழுது கிடைக்கும்.
  3. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.
  4. அவர் முன்னாள் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.
  5. குற்றப் பின்னனி உள்ள குடும்பத்தை சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்கிறது தடா நீதிமன்றம்.
  6. பேரறிவாளனுக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்
  7. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத்  தூக்குத் தண்டனை வழங்கப் பட்ட நிலையில் உச்சநீதி மன்றம் அதில் 22 தூக்குத் தண்டனைகளை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன்முடிவுகளுடன் விசாரிக்கப் பட்டதென்பது தங்களுக்குப் புலப் படும். சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கை பொருத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது.   

இன்னொரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றுநடுநிலையுடன் விசாரிக்கப் பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்.. ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக்கயிற்றால் நசுக்கப்படுமோ

  1. திருமதி. சோனியா காந்தி அவர்கள் இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு  அத்தண்டனை நிறைவேற்றப் படவேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.
  2. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்கு கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.
  3. 1980-களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களை போல் நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மேலும் பற்று கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலை போராட்டத்திற்காக உதவி வந்தார்கள். ஒரு நாள் கூலியை கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தார்கள். ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப்போனேன்?? ஏன் தனிமை படுத்தப்பட்டேன்??  உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப் படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நீதியரசர் திரு.வீ. ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப் படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

2.  முடிவுறா விசாரனையில், முடிவினை நோக்கித் தள்ளப்படும் அப்பாவி நிரபராதிகளின் வாழ்க்கை.

  • ராசீவ் வழக்கை விசாரிக்க  அமைக்கப்பட்ட வர்மா கமிசன் பாதியில் முடக்கப்பட்ட்து.
  • ஜெயின் கமிசன் அறிக்கையில் காங்கிரஸ்கார்ர்கள் ஒத்துழைக்கவில்லை என்ற அறிக்கையோடு நிறுத்தப் பட்டது.
  • மறுவிசாரனை, வெளிப்படையாக நடைபெறுதல் அவசியம் என வலியுறுத்தப்பட்டும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை
  • உலகம் முழுவதும் போற்றப்படும் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதியரசர் வீ.ஆர் கிருஷ்ண அய்யர், திரு.பேரறிவாளின் மடலையும் , வழக்கையும்  படித்துவிட்டு பேரறிவாளான் நிரபராதி என்று வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அவரை தண்டனைகுறைப்பு செய்து உடனடியாக சிறையில் இருந்த காலங்களை கணக்கில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து முன்னாள் சனாதிபதிகளுக்கும், பிரதமருக்கும் சோனியா காந்திக்கும்,  இன்னால் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் மேலும் தமிழ் நாட்டின் முன்னாள் முதலைமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் அழுத்தம் கொடுத்தார்.
  • முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத் மலானி , இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களும் இருப்பதாக அவர் அமைச்சராக இருக்கும் போதே அறிவித்தார்.
  • முன்னாள் மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச். சுரேஸ் அவர்களும் பேரறிவாளனை தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய அனைத்து தகுதிகளும் உள்ளதாக அறிவித்தார்.
  • சோனியா காந்தி அவர்கள், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ இவர்களை தூக்கிலிடுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. உங்களிடம் (சனாதிபதியிடம்) கருணை மனு வரும்பொழுது இவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் எழுதியிருக்கிறார்.
  • கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், முறைகேடுகள் செய்து நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்ட புலனாய்வு அதிகாரி திரு.தியாகராஜன் அவர்கள் பேரறிவாளனிடம் எடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த வழக்கின் மூலமாக ஈழ விடுதலைப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதும், அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களை கடுமையாக அச்சுறுத்துவதுமே, நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

3.  பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் கோரிக்கை.

இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கின்றேன்.. வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள், இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்..

உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்குலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.

மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான். பத்திரிக்கைகள் சித்தரித்தது போல் ராஜீவ் கொலையாளி, விடுதலை புலி என்று ஒருதலைப்பட்சமாக பார்க்காமல், அவனையும் ஒரு சக மனிதனாக மட்டுமே பாருங்கள். அவன் நிரபராதி என்று உரக்க கூறுவதை சற்றே கவனியுங்கள். அவனுக்கும் ராஜீவ் கொலை சதிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல் மற்ற இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.

தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

மாணவர்களும், சட்ட வல்லுனர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.

மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய  ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும். இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.

தமிழக மக்களின் பேராதரவுடன் இப்பொழுது ஆட்சி செய்யும் முதல்வர், தனது தற்போதைய செயல்பாடுகளினால் உலக தமிழர் அனைவரின் மனங்களிலும் போற்றப்படும் தாயாக உயர்ந்துள்ளார். அவர் தாயுள்ளம் கொண்டு, என் ஒரே மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிர் காக்கும் அணைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று மிக பணிவுடனும், நம்பிக்கையுடனும் கோரிக்கை வைக்கிறேன்.. நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.

*********************************************************

ஆமாம் நான் தமிழன் தான்,ஆனால்…

ஆனால் ராஜிவ் கொலையாளிகள், அப்சல் குரு போன்றோருக்கு கொடுத்திருக்கும் தூக்கு தண்டனையையும் எதிர்க்கிறேன் இதை பற்றி என் சுற்றத்திலும், மக்களிடமும் பிராச்சாரம் செய்வேன்.அப்சல் குருவுக்கும் சேர்த்து போராடுவதில் தமிழனாக எனக்கு பெருமையே.

அதே நேரம் நான் பேரறிவாளனுக்காக மட்டும் போராடவில்லை, அமைதிப்படை நடத்திய கொலைகளுக்கு எதிர்விணையான ராஜிவை கொலை செய்த இதர இரண்டு பேருக்கும் சேர்த்தே தான் போராடப் போகிறேன்.

கடைசி கட்டமும் தாண்டியாயிற்று, மனித உயிர் போகிறது என்று மனிதாபிமானம் மட்டும் இதற்க்கு காரணமில்லை.அதிகார வர்கம் ஆதிக்க வர்கத்திற்க்கொரு நீதியும், சாதரண மக்களுக்கு ஒரு நீதியும் வைத்துக்கொண்டு வெட்கமின்றி இருக்கிறதே அதை அம்பலபடுத்த வேண்டுமென போராடுகிறேன்.

சுய‌ந‌லமாய் ச‌ந்தர்ப‌வாதியாய் போராடப்போவ‌தில்லை ஏனென்றால் இந்த உண்மையான‌ போராட்ட‌த்தில் என‌க்கு வீழ்ச்சியே இல்லை.. (நன்றி: அக்னிப் பார்வை)

 

இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன?

19 ஜூன்

ரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!

அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆர்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது  என்ன வகை முரண்?

இரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.

கிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.

முதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.

தனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம்  சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.

இறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்?

ஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.

ஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாகவே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.

பாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.

சரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

இறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.

இந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ? ஏன்?

வெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா? பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை? ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.

ஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

விடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.

அதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள்? இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

ஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்?

மேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

அடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.

பாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.

சில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது? அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால்  எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.

நன்றி: வினவு

பார்வதியம்மாளை இறந்த பின்னும் கொலை செய்த சிங்களவெறியர்கள்

23 பிப்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் மூன்று நாய்களை சுட்டுப் போட்டதுடன், அவரது அஸ்தியையும் தாறுமாறாக அள்ளி வீசியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை தமிழ் இணையதளங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நேற்று மாலை பார்வதியம்மாளின் உடல் அஞ்சலி நிகழ்வுக்குப் பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை மயானத்துக்குச் சென்று அஸ்தியை சேகரித்த முயன்றபோதுதான் அங்கு அஸ்தி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும், பார்வதியம்மா உடல் எரிக்கப்பட்ட இடத்தில் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது.

சிங்களப் படைகளே இந்த கேவலமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என அந்தப் பகுதியினர் அச்சத்துடன் தெரிவித்தனர். நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் பார்வதியம்மாளின் இறுதிக் கிரியைகளை நடத்திய ஐயர் யார்? என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்ததாகவும் கூறினர்.

*****************************************************

இறுதிச் சடங்கிற்கான சாம்பலைக்கூட விட்டுவைக்காத மனிதத்தன்மையற்ற செயல் இது. ‘அடையாளம் தெரியாத சிலர்’ என்பது குற்றவாளிகளை மறைக்க நெடுங்காலமாய் பயன்படுத்தப்படும் உத்தி. இராணுவமோ, சிங்களவர்களோ, அல்லது வேறு யாரோ இது அவர்கள் எந்த அளவுக்கு வெறியேற்றப்பட்டு களமிற‌க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

மிருகத்தனமையைவிட கீழான இந்தக்கோரங்களுக்கு பதில் சொல்லியே தீரவேண்டும்

3 டிசம்பர்

வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.

இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 நேற்று வெளியிட்டது. பார்ப்பவர்களை கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர்.

வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வை பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின் போது, ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்த காட்சிகள் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நெஞ்சை பதறச் செய்து வருகிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 என்ற தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த கோரங்கள் அனைத்துக்கும் முக்கிய காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே லண்டனில் தங்கியுள்ள நிலையில், அதே நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4, புதிய வீடியோ காட்சிகளை நேற்று ஒளிபரப்பியது.

இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட ரவிப்பிரியா என்ற சிங்கள பெண் ராணுவ அதிகாரியின் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த சிங்கள ராணுவத்தினர் தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியினர் அத்தனை பேரையும் கற்பழித்துக் கொன்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் தெரிகிறது.

இசைப்பிரியா சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி வெளிவந்த உடனேயே, “இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உளவுத் துறை வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டதாகவும், அதற்குப் பழிவாங்கும் முகமாகவே இசைப் பிரியா சிதைக்கப்பட்டதாகவும்” செய்தியைப் பரப்பியது ராணுவம். போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க இந்த உத்தியைக் கையாண்டுள்ளனர்.

ஊடகங்களும் ஏமாந்து போய் இந்தத் தகவலை வெளியிட்டுவிட்டன. ஆனால் உண்மையில் இப்படி நடக்கவில்லை.

நிராயுதபாணியாக நின்ற செய்தியாளரும் கலைஞருமான இசைப்பிரியாவின் படுகொலையையும் அதனால் ஏற்படும் விளைவுகளின் வீரியத்தையும் குறைக்கவே அவரை பெண்புலியாக சித்தரித்து செய்தி பரப்பியுள்ளனர் சிங்களத் தரப்பில்.

அவரை கொலை செய்த போது எடுக்கப்பட்ட கோரமான காணொளியை முழுமையாக பார்த்தால் அவர் ஒரு நிராயுதபாணியாக இருப்பது தெரியவரும்.

“சிங்களத்தின் பரப்புரைகளை நம்ப வேண்டாம். செய்தியை ஆய்வு செய்த பிறகே வெளியிடவும். இசைப்பிரியா ஒரு நிராயுதபாணி. அதுமட்டுமல்ல, அவர் ஒரு இசைக் கலைஞர், செய்தியாளர், படங்களில் நடித்தவர்… இத்தகைய ஒருவரை ராணுவத்தினர் வெறியுடன் கற்பழித்து கொன்றுள்ளனர்.. இது மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை தமிழர் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

*****************************************************
இது தொலைக்காட்சி தொகுப்பாளினி இசைப்பிரியா என்றும் பிரபாகரனின் மகள் துவாரகா என்றும் இருவேறு விதமாக கூறுகிறார்கள். யாராக இருந்தாலும் இப்படி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு கணக்கற்ற தமிழ் பெண்களை வன்புணர்ச்சி செய்து வெறித்தனமாக கொற்றழித்தவர்கள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். கோரிக்கைகளின் மூலம் சர்வதேச சமூகத்தை இந்த போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க வைத்துவிடமுடியும் என எதிர்பார்ப்பது வீணானது. புரட்சிகர இடதுசாரிகளின் தலைமையில் சமரசமற்ற போராட்டங்களின் மூலமே மக்கள் அதை சாதிக்க முடியும்.

தமிழர் பகுதியைவிட்டு வெளியேறு: இலங்கை அரசின் ஆணவ உத்தரவு

21 நவ்

தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட வட இலங்கையில் செய்து வரும் நிவாரணப் பணிகள், மனிதாபிமானப் பணிகளை குறைத்துக் கொள்ளுமாறும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது பணியாளர்களை வெளியேற்றுமாறும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இலங்கை அரசு திடீர் உத்தரவு போட்டுள்ளது.

இதேபோல கடந்த ஆண்டு இலங்கை அரசு நெருக்கடி கொடுத்ததால் கிழக்கு மாகாணத்தில் வைத்திருந்த தங்களது அலுவலகத்தை காலி செய்ய நேரிட்டது செஞ்சிலுவைச் சங்கம். தற்போது வட இலங்கையிலும், பணிகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு நெருக்கஆரம்பித்திருப்பதால் அங்கிருந்தும் செஞ்சிலுவைச் சங்கம் அகல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் சரசி விஜரத்னே கூறுகையில், யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள அலுவலகங்களைக் காலி செய்து விட்டு கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து செயல்படுமாறு எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசவுள்ளோம் என்றார் அவர்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதிலும், இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்களை மறுகுடியேற்றம் செய்வதிலும் இலங்கை அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பலமான குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செய்து வரும் உதவிகளையும் நிறுத்த தற்போது இலங்கை அரசு இறங்கியுள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

********************************************************

இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. புலிகளுக்கு எதிராகத்தான் இலங்கை போர் நடத்தியது என வலிந்து இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இது அதிர்ச்சிபோல் தோன்றலாம். இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்காகவும், சிங்கள ஆளும்வர்க்கத்தின் நலனுக்காகவும்தான் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் எனும் உண்மையை உணர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசு இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பது தெரிந்ததுதான். உதவி செய்வது எனும் போர்வையில் வந்திறங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இனப்படுகொலை நடந்த இடங்களை விட்டு அகற்றினால்தான், தடயங்களை மறைப்பதற்கும், இராணுவத்தின் காப்பில் சிங்கள ஆக்கிரமிப்பைச் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். அதைத்தான் இலங்கை செய்கிறது. எல்லாம் இழந்துகிடக்கும் அந்த மக்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என ஒன்று சேரவேண்டும்.

நிருபமா ராவ் இலங்கை செல்வது எதற்கு?

30 ஆக

வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் இன்று கொழும்பு செல்கிறார். நான்கு நாள் பயணமாக செல்லும் அவர் தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இன்னும் பெரும்பாலானவர்கள் முகாம்களிலேயேதான் உள்ளனர். மறு குடியமர்த்தப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் பெரும்பாலானோர் இன்னும் சொந்த கிராமங்களுக்குப் போக முடியாத அவல நிலையில்தான் உள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லை, போரினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விமோச்சனம் இல்லை, வாழ வழியில்லை என தமிழர்கள் தொடர்ந்து பெரும் துயரில் மூழ்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கி முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில் ஒரு சிறப்புத் தூதரை அனுப்பி இலங்கை நிலவரம் குறித்த உண்மை நிலையை அறிந்து வர வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் நிரூபமா ராவ் சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர் இலங்கை செல்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் தமிழர் பகுதிகளின் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் அவர் செல்லக் கூடும் எனத் தெரிகிறது.

ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். சமீபத்தில்தான் பசில் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நிரூபமா இலங்கை வருகிறார்.

*************************************************************

தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை செல்வதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் வர்த்தக நலன்களை உறுதி செய்வதற்காகவும், இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவுமே அவர் செல்கிறார். இவரைத்தொடர்ந்து பல இராணுவ உயரதிகாரிகளும் இலங்கை செல்லவிருக்கின்றனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனும் போர்வையில் நடத்தப்பட்ட இனவழிப்பின் காரணமே வர்த்தக நலன்களுக்கு தேவையான அமைதியை உருவாக்குவது எனும் போது முட்கம்பிச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் குறித்து இவர்களுக்கென்ன அக்கரை?