தொகுப்பு | திரைப்பட விமர்சனம் RSS feed for this section

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது

6 நவ்

7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல

7 ஆம் அறிவு படம் பார்த்துவிட்டு அதைப்பற்றி எழுத வேண்டும் என்று தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தங்கம் ஆசிரியர் ஷேக் மொய்தீன் அக்டோபர் 26 ஆம் தேதி “படம் எனக்கு பிடித்திருக்கிறது. படத்தை பாராட்டி வரும் தங்கம் இதழில் எழுதுவதாக இருக்கிறோம். நீங்கள் அவசியம் பாருங்கள்” என்றார். சரியென்று ஒருவழியாக குடும்பத்தோடு சென்று பார்த்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகன் கவின் சொன்னான், “தசாவதாரம் கதையையே எடுத்து இருக்காங்கப்பா. அதுலேயும் ஆரம்பத்துல அந்தக் காலத்து சம்பவம் வரும். இதுலேயும் அது மாதிரிதான். அதுல அமெரிக்காவிலிருந்து, ஒருத்தன் மோசமான கிருமியை தேடி இந்தியாவுக்கு வருவான். இதுல சீனாவுல இருந்து ஒருத்தன் வர்றான்.” என்றான்.

உண்மைதான். தசாவதாரம், வைணவப் பெருமையோடு அய்யங்கார் உயர்வை பேசியது. நேரடியான பார்ப்பனிய கருத்தை அய்யங்கார் Version ஆக காட்டியது.7 ஆம் அறிவோ, இந்து பார்ப்பனிய சார்பு நிலைக்கு தமிழன் Paintஅடித்திருக்கிறது.

தசாவதாரம், ஆம் அறிவு இரண்டும், கதையில் மட்டுமல்ல, பவுத்தம் பற்றிய கருத்துக்களை இருட்டடிப்பு செய்ததிலும் ஒரே மாதிரி இணைந்திருக்கின்றன.

தசாவதாரம், வைணவ கோயில்களை சைவர்கள் இடித்ததாக காட்டியது. ஆனால் வரலாற்றில் பவுத்த கோயில்களை வைணவர்கள் இடித்ததே அதிகம்.

ஸ்ரீ ரங்கநாதனிலிருந்து, காஞ்சிபுரம் அத்தி வரதர், திருமலை கோவிந்தா வரை அந்த சிலைகள் இருக்கும் நிலை, உலகம் முழுக்க புத்தர் சிலைகள் இருக்கும் நிலை.

குறிப்பாக பள்ளிகொண்ட நிலையிருக்கும் புத்தர் சிலை உலகப் புகழ் பெற்றது. அதுதான் ஸ்ரீ ரங்கத்திலிருக்கிறது.

போதிதர்மன், புத்தனின் பாதங்களில் சரணடைந்தான். அவன் ஒரு பவுத்தன்.

போதிதர்மன் தமிழன் என்பதினாலோ சித்த வைத்தியனாகவோ சீனாவிற்கு செல்லவில்லை. புத்தரின் கருத்துக்களை சுமந்து கொண்டுதான் அவன் சீனாவிற்கு சென்றான். போதிதர்மன் தமிழனாக மட்டும் இருந்திருந்தால், காஞ்சிபுரத்தில் அவன் இருந்த தெருவுக்கே தெரிந்திருக்க மாட்டான். பவுத்தனாக இருந்ததினால்தான், அவன் உலகமெங்கும் உள்ள பவுத்த நாடுகளில் கொண்டாடப்பட்டு, இந்து ஜாதி வெறி பவுத்த எதிர்ப்பு மன்னர்களால், தமிழகத்தில், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்பட்டான்.

புத்தரை எந்த பிராந்திய, மொழி உணர்வுகளுக்குள் அடக்க முடியும்? அவருக்கு இந்தியாவில் என்ன மரியாதை இருக்கிறது? பிறகு அவரின் சீடனுக்கு மட்டும் என்ன மரியாதை இருக்கும்? நல்லதும் கெட்டதும் புத்தருக்கு என்ன நேர்ததோ அதுவே அவர் சீடர்களுக்கும் நேர்ந்தது.

போதிதர்மனிடம் பவுத்தத்தை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமில்லை. ஆக, அவன் தமிழனல்ல. பவுத்தன்.

ஆனால், 7 ஆம் அறிவு பவுத்ததிடமிருந்து அவனை பிரித்து, தமிழனாக அடையாளப்படுத்துகிறது. சிக்கல் அதிலிருந்தே, அதனாலேயே துவங்குகிறது.

தமிழன் என்பதற்கு மொழியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லுபடியான அடையாளங்கள் இல்லை. அதனால்தான் இந்து அடையாளங்களை எல்லாம் தமிழன் அடையாளமாக காட்ட வேண்டிய மோசடியும் அறியாமையும்இணைந்து, ஆம் அறிவாக அவதாரம் எடுத்திருக்கிறது.

“இன்னைக்கு வந்திருக்கிற கடிகாரம் என்னங்க நேரம் காட்டுது, ஒவ்வொன்னும் ஒவ்வொரு நேரம் காட்டுது. எங்க பாட்டி சூரிய வெளிச்சத்த வைச்சே சரியான டைம் சொல்லுவாங்க. துல்லியமா இருக்கும். அதாங்க நம்ம தமிழனோட அறிவியல்” என்று சுவிஸ்லிருந்து வாங்கிய, கருணை கிழங்கு சைசு கடிகாரத்தை கையில கட்டிக்கொண்டு பேசுகிற ஒரு ……… மாதிரி,

இந்த படத்துலேயும் வாழ்க்கையை நவீன அறிவியல் வளர்ச்சியின் மீது வசதியாக வைத்துக் கொண்டு, வாயலேயே வடை சுடுகிற வசனங்கள் நிறைய இருக்கு.

“நாம இல்ல உண்மையான தமிழர்கள், ஆயிரம், ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி வீரத்தையும நாகரீகத்தையும் இந்த உலகத்துக்கே சொல்லிக்கொடுத்தாங்களே அவுங்கதான் உண்மையான தமிழர்கள்” என்று வசனம் பேசிவிட்டு, பிறகு ‘நவக்கிரகம், ஆரிய பட்டா, பஞ்சாங்கம், அமாவாசை’ என்று தமிழனின் பெருமையாக பேசுகிறது. ஆரிய பட்டா தமிழனா? பெயரிலேயே ஆரிய என்று இருக்கிறது.

பட்டறிவுக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை என்னவென்று சொல்வது? நல்லா.. வருது.. சொன்னா அசிங்கமாயிடும்.

நவீன தொடர்பு சாதனங்களின் உச்சமான இணையத்தில், Face Book ல் ஜாதி பெருமை பேசுகிற படித்த ஒருவனைப் போல், கிராபிக்ஸ் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, தமிழனின் பெருமையாக இந்துப் பெருமை பேசுகிறது 7 ஆம் அறிவு.

(எப்படியோ சிரமப்பட்டு சினிமாகாரனா ஆயிடுறாங்க. பிறகு கருத்து கந்தசாமியா மாறி கண்டத சொல்லி நம்ம தாலிய அறுக்குறாய்ங்க. இருக்குற முக்கியமான வேலையெல்லாம் உட்டுட்டு இந்த அக்கப்போருக்கு எல்லாம் விமர்சனம் எழுதி தொலைக்க வேண்டியதா இருக்கு.)

நம்ம ஊர்ல சண்டைன்னு வந்துட்டா மண்ண வாரி தூத்துறதுதான் வழக்கம். அதையே கிராபிக்ஸ்ல, அப்படியே புழுதிய கிளப்பி போதிதர்மன் எதிரி மேலே குப்பையை வாரி அடிப்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். இந்த முறையை சென்னை Corporation க்கு சொல்லிக் கொடுத்தா, சென்னையாவது சுத்தமாகும்.

கொடிய தொற்று நோயிலிருந்து சீன மக்களை காப்பாற்றுவதற்காக போதி தர்மன் சீனாவிற்கு போனாராம்.

ஆனால், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டில் பெரியம்மை, காலரா போன்ற தொற்று நோய்களால், சித்த வைத்தியத்தில் சிறந்தவர்களான தமிழர்கள் கும்பல் கும்பலாக செத்துக் கொண்டிருந்தபோது, போதிதர்மனாக வந்து தமிழர்களுக்கு  மருத்துவம் பார்த்தது வெள்ளைக்காரன்தான். (அவுனுக்கும் வந்துடுமோ என்ற பயம்தான்) வெள்ளைக்காரன் வருகைக்குப் பிறகுதான் பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, அற்ப ஆயுள் இந்தியர்களுக்கு, ஆயுள் 60வயதை தாண்டியது.

அதுபோல், சீன மக்களின் வாழ்க்கையை மேன்மை படுத்தியது, போதிதர்மனின் குங்பூ கலையல்ல. மாவோ என்கிற மகத்தான தலைவன் கடைப்பிடித்த மார்க்சியம் என்கிற மந்திரமே.

‘மனிதர்களை கொன்று நரபலி கொடுக்கும் நிலையில் மற்ற நாடுகள் இருந்தபோது, நாம் கலைகள் பல வற்றி்லும் மருத்துவம்…’ என்று பெருமை பேசுகிறது படம்.

போன நூற்றாண்டுவரை பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் உயிரற்ற கணவனின் உடலோடு, ஒன்றாக வைத்துக் கொளுத்திய இந்து சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி இந்த ‘பெருமையை’ கூச்சமில்லாமல் எழுத முடிந்தது?

ஹாலிவுட் படங்களை பார்த்து, வில்லனுக்கு கிறிஸ்துவ பெயர்களை வைக்கிற தமிழ் பட இயக்குநர்கள், கதாநாயகனுக்கு மட்டும் இந்து பெயர்தான் வைப்பார்கள். அதுவும் விஞ்ஞானி என்றால், கண்டிப்பாக பார்ப்பனப் பெயர்தான். இந்தப் படத்திலும் சுபா சீனிவாசன்தான் ஆராய்ச்சியாளர். (சித்த வைத்தியரான சீனிவாசன், தன் பொண்ணுக்கு வச்ச பேரப் பாரு.) இதுதான் 7 ஆம் அறிவின் தமிழ் உணர்வு.

இவர்களுக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவோ பராவயில்லை. அவரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் விஞ்ஞானிக்கு ‘முருகன்’ என்ற தமிழ் பெயரை வைத்திருந்தார்.

‘ஊழல் விஞ்ஞானியாக வருகிறவருக்கு பெயர், ரங்கராஜன்தானே. அது பிராமண பெயர்தானே’ என்று சிலர் பதில் சொல்லலாம். அது சரி, தமிழை குரங்கு என்று சொன்னவர் பெயர் நெல்சன். உளுந்தூர்பேட்டை ஊரு. அவரைத்தான் மிக அசிங்கமான வார்த்தையால் சுபா சீனிவாசன் திட்டுவார்.

தமிழுக்கு எதிராக கருத்து சொன்னவர் நெல்சன் என்கிற கிறித்துவ குறியீட்டோடு, படத்தின் கடைசியில் ‘மதம் மாற்றத்தினால் நம் அடையாளத்தை அழித்து விட்டார்கள்’ என்ற அறிவுரையை பொறுத்திப் பார்த்தால் புரியும். ஆனால், போதிதர்மனின் சிறப்பே அவர் புவுத்தனாக மதம் மாறியதுதான்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக உருவானதற்கு அவர் குடும்பத்தின் கிறித்துவ மதமாற்றம் ஒரு முக்கியக் காரணம். கிறித்துவராக இல்லாமல் இருந்திருந்தால் அவர் இசை துறைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கிறித்துவ மதம் எந்த வகையில் தமிழனின் அடையாளத்தை மறைத்தது.

(பின்னணி இசையில் ஹாரிஸ் ஜெயராஜ் அதிக சத்தத்தோடு சிரமப்படுத்திட்டாரு. பாடல்களில் இளைராஜா சாயில் அமைந்த, எம்மா..எம்மா.. காதல் பொன்னம்மா… பாடல், அபூர்வசகோதரர்கள் படத்தில் வந்த ‘உன்ன நினைச்சு பாட்டு படிச்சேன்..தங்கமே..’ என்ற பாடலை நினைவுபடுத்தியது. சூழலும் அந்த படம்போன்றே சர்க்கசில் வேலை செய்பவரின் காதல் தோல்வி. அதற்காகத்தான் அதே எஸ்.பி.பியை பாட வைத்தார்களோ? சீன இசை பாடல், ‘டிவிங்கிள், டிவிங்கள் லிட்டில் ஸ்டார்…’ Rhymes யை நினைவுட்டியது.)

“நம்முடைய வீரமும், பெருமையும் நமக்கு தெரியக்கூடாது என்பதினால், நம்ம ஆண்ட ஒவ்வொருத்தரும் அத திட்டமிட்டு மறைச்சிட்டாங்க” என்று வீரமாக பேசுகிறார் போதிதர்மனோட DNA.

சரி, வீரமா இருந்த நம்மள ஒருத்தன் மட்டுமா, ‘ஒவ்வொருத்துனும்’ எப்படி அடிமையாக்கி ஆண்டான்? அப்போ நம்ம வீரம் அப்படிங்கறது என்ன?

‘மஞ்சள உடம்புல பூசிக்கிறத மருத்துவம்ன்னு சொல்லிக் கொடுங்க..’ சரி. சொல்லிக் கொடுத்துடலாம். ஆனால், பொம்பளதான் மஞ்சள் தேச்சி குளிக்கனும்னு இருக்கே, அதுக்கு என்ன சொல்றது?

இதுபோக, சீன எதிர்ப்பு, இலங்கை தமிழர்களின் துயரங்களை நினைவூட்டுவது போன்ற வசனம் இவைகள் எல்லாம் புலம் பெயர்ந்து வாழுகிற தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்ட எப் எம் ரைட்ஸ் வசனங்களாகத்தான் இருக்கிறது. இலங்கைக்கு 7 ஆம் அறிவு போகும்போது அந்த வசனங்களை தூக்கிட்டுதான் அனுப்புவாங்க. இல்லன்னா சிங்கள அரசு இந்தப் படம் எடுத்தவங்கள சூ….லேயே சுடுவான்.

ஆனால், இங்கு இருக்கிற இளியச்சவாய் தமிழன்கிட்ட மட்டும் இடஓதுக்கிட்டுக்கு எதிரான வசனங்களோட திரையிடலாம். காரணம் நம்மதான் தமிழர்களாச்சே.

இதுல பெரிய கொடுமை படத்தோட தயாரிப்பாளர் இடஓதுக்கிட்டுகாகவே கட்சி நடத்துகிற திமுக தலைவரோட பேரன். கஷ்டம். யாருக்கு? யாருக்கோ!

***

பல்லவ மன்னர்களை தமிழர்களாக காட்டியிருக்கிறது 7 ஆம் அறிவு. அவர்கள் தமிழர்களா இல்லையா என்கிற பட்டிமன்றம் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அவர்கள் பவுத்தர்கள் இல்லை.

களப்பிரர்கள் என்கிற சமண மற்றும் பவுத்த மன்னர்களின் காலங்கள் முடிந்த பிறகு, துவங்குகிறது பல்லவர்களின் காலம். களப்பிரர்கள் சமணர்கள் என்பதினாலேயே அவர்களின் காலத்தை இருண்ட காலம் என்று, வரலாற்று ரீதியாக பொய் சொல்லப்பட்டது.

அவர்கள் நிச்சயம் தமிழர்கள் இல்லை என்பது மட்டுமல்ல தமிழின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

பல்லவர்களின் பவுத்த வெறுப்பும், சமஸ்கிருத விருப்பும், சைவ, வைணவ சமயங்களுக்கு அவர்கள் விளக்கு பிடித்த காரணத்தினாலும் அவர்களின் ஆட்சி சிறப்பானது, அவர்கள் தமிழர்கள் என்றும் கட்டுக்கதை பரப்பப்பட்டது. பல்லவர் காலத்தில்தான் தேவாரம் எழுதிய திருஞானசம்பந்தனும், திருநாவுக்கரசும் சமண சமயத்தை கொன்று, சாகும் தருவாயில் இருந்த, சைவ சமயத்திற்குப் புத்துயிர் ஊட்டினர்.

அதேபோல் வைணவத்திற்கும் பல்லவர்கள் தீவிட்டி பிடித்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவக் கோயில்களை ‘மங்களா சாசனம் செய்த திருப்பதிகள்’ என பல்லவர்களால் அழைக்கப்பட்டன. பல கிராமங்கள் கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் தானமாக தரப்பட்டன.

பவுத்தத் துறவிகளை கேலி செய்து மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தை மகேந்திர வர்மன் என்கிற பல்லவ மன்னன் வட மொழியில் எழுதியுள்ளான்.

எவனெல்லாம் சமண, பவுத்த சமயங்களை தீ வைத்துக் கொளுத்தி, சைவ சமயத்திற்கு தீவிட்டி பிடித்தானோ அவனை எல்லாம் வரலாற்று ஆய்வாளர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் போல், மகா மன்னர்கள் என்றும் பச்சைத் தமிழர்கள் என்றும் கதைகளையே வரலாறாக எழுதினார்கள்.

அப்படித்தான் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் போன்றவர்கள், ஆனந்த விகடன் கிருஷ்ணமூர்த்தியாக இருந்து பின் கல்கி அவதாரம் எடுத்த, கல்கி கிருஷ்ண மூர்த்திக்கு மகா மன்னர்களாக தெரிந்தார்கள். அதனால்தான் பொன்னியன் செல்வனில் ராஜராஜ சோழனையும், சிவகாமி சபதத்தில் நரசிம்ம பல்லவனையும் தமிழனின் சிறந்த மன்னர்களாக சித்தரித்தும் பவுத்த மன்னன் புலிகேசியை வில்லனாகவும் கதை எழுதினார்.

அதன் பொருட்டே இன்றுவரை ஆனந்த விகடன் போன்ற இதழ்கள், புலிகேசி மன்னர்களை கோமாளிகளாக சித்தரித்து தொடர்ந்து கார்டூன், ஜோக் என்று நக்கலடிக்கிறார்கள். ஆனந்த விகடனில் பயிற்சி எடுத்த ஒரு இயக்குரும் புலிகேசி மன்னனை கோமாளியாக படம் எடுத்தார்.

கல்கிக்கும், இந்திய வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அவர்களும் இவரைப்போல் நாவல்கள்தான் எழுதினார்கள்.

டாக்டர் அம்பேத்கர் சொல்வார், ‘இந்தியாவிற்கு ஒரு முறையான வராலாறு என்று சொன்னால், அது பவுத்ததிற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போராட்டம்தான்’ என்பார்.

7 ஆம் அறிவில் குறிப்பிடுகிற காலம் முதலாம் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் காலம். ஏறக்குறைய திருநாவுக்கரசு சைவ சமயம் பரப்பிய காலம்.

அதற்கு பிறகு இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேஸ்வரவர்மன் இவர்களுக்குப் பிறகு இரண்டாம் நரசிம்மவர்மன் காலம். இவன் காலத்தில்தான் தேவாரம் பாடிய சுந்தரர் இந்த மன்னனின் துணையோடு, சமண சமயத்தை சூறையாடி, சைவ சமயத்தை பரப்பிய காலம். இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட பல்லவன் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டதுதான் காஞ்சி கைலாச நாதர் கோயில்.

அந்தக் கோயில் கல்வெட்டுகளில், அவன் தன் வரலாறை முழுக்க சமஸ்கிருதத்தில் பதித்துள்ளான்.

ஆக, 7 ஆம் அறிவில் காட்டப்படுகிற போதிதருமன், பல்லவ ராஜகுமாரன் அல்ல, அவன் பல்லவர்களால் ஒடுக்கபட்ட பவுத்த போதகர். காஞ்சிபுரத்தில் இருந்த பவுத்த மடத்தில், பயின்றவர். ‘இனி இங்கு பவுத்தத்தை பரப்ப முடியாது’ என்ற காரணத்தால், சீனா சென்றவர். அவரைப் போலவே அவருடன் படித்த போதிருசி என்பவர் ஜப்பான் சென்றார்.

சரி, போதிதர்மனை தமிழன் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அந்த பெருமையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இவருக்கு 500ஆண்டுகளுக்கு  முன் வாழ்ந்த திருவள்ளுவரின் உயரிய கருத்துக்களை பின்பற்றுவதற்கு பதில், வள்ளுவரையே ‘தன் ஜாதிக்காரர்’ என்று எல்லா ஜாதிக்காரனும் உரிமை கொண்டாடுகிறான்.

இப்படி ஜாதி வெறி பிடித்த படித்த தமிழர்களிடம், போதிதர்மனை பரிந்துரைப்பதின் மூலம், இனி போதிதர்மனையும் தங்கள் ஜாதிக்காரராகத்தான் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஏனெனில் தமிழின உணர்வு, ஜாதி உணர்வில்தானே முடிகிறது.

***

இந்தப் படத்தில், நாடு கெட்டுபோவதற்கான மூன்று முக்கிய காரணங்களாக சொல்லபடுவதில் முதல் காரணம் Reservations. இடஓதுக்கீடு.

எனக்கும் கூட அப்படித்தான் தோணுது.

தந்தை பெரியார் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, கல்வியில் இடஓதுக்கீடும் கிராமப்புற பள்ளிக்கூடமும் கொண்டு வருவதற்கு பாடுபட்டார்.

ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த சமூகத்திலிருந்து படித்த வந்த சிலர், சினிமாகக்காரனாக மாறி இப்படி சமூகத்திற்கும், ஒடுக்கபட்ட மக்களுக்கும் எதிராக வாயில வர்றத எல்லாம் வசனமா எழுதிகிட்டு இருக்காங்க. இதுக்கா இவுங்க படிச்சது?

இதுக்கு இவுங்க பெசமா ஆடு, மாடே மேய்ச்சிருக்கலாம். அதுவே இவர்கள் எடுக்கிற சினிமாவை விட மேன்மையானது. சமூகத்திற்கு பயனுள்ளது.

 

முதல் பதிவு: வே.மதிமாறன்

ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?

30 அக்

இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம்.

கிபி ஆறாம் நூற்றாண்டில் காஞ்சியில் பல்லவ மன்னர் வழிமுறையில் தோன்றிய போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மருத்துவ நுணுக்கங்களையும், தற்காப்புக் கலையையும் போதித்தார். அதுவே குங்ஃபூ வுக்கும், ஜென் தத்துவத்திற்கும் தொடக்கமாக இருந்தது. ஆனால் தமிழர்கள் இன்று அவைகளை மறந்துவிட சீனர்கள் தமிழரிடம் பெற்ற கலையை தமிழர்களுக்கு எதிராகவே பயன்படுத்துகிறர்கள். இதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மையக் கரு.

சர்கஸில் வேலை செய்துயும் கதாநாயகன் இடையிடையே காதாநாயகியை காதலித்து பலநாடுகளின் கடற்கரைகளில் பாட்டுப்பாடி கடைசியில் வில்லனை அடித்து நொறுக்கி வெற்றிக் கொடிகட்டும் ஒரு சராசரி திரைப்படத்தினை பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகன் தமிழன் என்பதால் பெருமித உணர்வு கொள்கிறான். இதற்கு திரைப்படக் குழுவினருக்கு கை கொடுத்திருப்பது, வரலாற்றிலிருந்து உருவப்பட்ட ஒரு வரியும், ”தமிழன் மலேசியாவில் அடிபட்டான், இலங்கையில் அடிபட்டான், இப்போது தமிழ்நாட்டுக்குள்லேயே வந்து அடிக்கிறான்” ”ஒன்பது நாடுகள் சேர்ந்து தமிழன அடிச்சா அதுக்குப் பேரு வீரமில்லை, துரோகம்” ”மஞ்சளை விளைவிக்காத நாடுகளெல்லாம் மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கியிருக்கிறது, ஆண்டாண்டு காலமாக விளைவித்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் நாமோ ஏமாந்து நிற்கிறோம்” என்பது போன்ற சில வசனங்களும். ஒருவேளை திமுகவும் கருணாநிதியும் இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு தூரோகமிழைத்து விட்டதாக எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழர்களிடம் தன்னுடைய படத்தின் மூலம் இப்படி தமிழுணர்வை ஏற்படுத்துவது அரசியல் ரீதியாக உதவும் என்று கூட இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எண்ணியிருக்கக் கூடும்.

சீனா இந்தியா மீது நுண்ணுயிர் போர் (பயோ வார்) நடத்துவதாக சித்தரிக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் தமிழர்கள் சீனா மீது கொண்டிருக்கும் கோபம். அதாவது ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள இனவழிப்புப் போரில் இலங்கை ராணுவத்திற்கு சீன செய்த உதவிகளால் சீனா மீது தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திரைப்படத்திற்கான ஆதரவாக திருப்பிக் கொள்ளும் நோக்கத்துடனேயே சீனா அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விசயத்தில் இந்தியா குறித்து திரைப்படம் கொண்டிருக்கும் கருத்து என்ன? இந்தியாவின் போரையே நான் நடத்துகிறேன் என்று ராஜபக்சே கூறியிருந்தது குறித்து, போரில் இந்தியாவின் பங்களிப்பின் ஆதாரங்கள் குறித்து திரைப்படம் மவுனம் சாதிப்பது ஏன்?

தெளிவாகக் கூறினால் இந்தியாவின் பங்களிப்பு குறித்து திரைப்படம் மவுனம் சாதிக்கவில்லை, மறைக்கிறது. மறைப்பதோடு மட்டுமின்றி ஆதரவாக திரிக்கிறது. போதிதர்மரின் அறிவை இன்றைய தமிழர்கள் மீளப் பெறவேண்டும் என்று திரைப்படத்தில் போதிக்கப்படுவது எதற்காக? சீனா இந்தியா மீது தொடுத்திருக்கும் நுண்ணியிர் போரை எதிர்கொள்வதற்காக, சீனாவின் திட்டத்தை இந்தியா முறியடிக்க வேண்டும் என்பதற்காக. ஆக, ஈழத்தமிழர்களை கொன்றழித்த போருக்கு திட்டமிட்டு உதவிய இரண்டு நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வைத் தூண்டிவிட்டு அதை ஒரு நாட்டுக்கு ஆதரவாகவும் இன்னொரு நாட்டுக்கு எதிராகவும் திருப்புவதைத்தான் திரைப்படம் தமிழர்களிடம் கோருகிறது. இது அப்பட்டமான மோசடித்தனம் என்பதில் ஐயமொன்றுமில்லை.

பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களை, அதுவும் திரைப்படத்தின் சிறிய பகுதியாக வருவதை மட்டும் முழுமையாக எடுத்துக் கொண்டு இது போன்று அரசியல் நோக்கில் விமர்சிப்பது தேவையற்றது என்று கருதப்படலாம். ஆனால் திரைப்படம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அந்த சிறிய பகுதியை மட்டுமே முதன்மைப்படுத்தி விளம்பரங்களும், செவ்விகளும் செய்யப்பட்டன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மட்டுமல்லாது படத்தின் மையக் கருவே இது தான். படத்தைப் பார்த்துத் திரும்பும் ரசிகனிடம் அந்தப் படத்தின் அதிகான பகுதியாக வரும் பொழுதுபோக்கு மசலாத்தன காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட பழந்தமிழர் பெருமை தான் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. ஒரு திரைப்படத்தின் விமர்சனம் என்பது அந்த திரைப்படம் பார்வையாளரிடம் என்ன சொல்கிறது என்பதைத்தான் முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நேர்த்தியான படத்தொகுப்பு, திறமையான ஒளிப்பதிவு, அழகான இடங்கள், பாத்திரங்களின் நடிப்புத்திறன், உணர்வுபூர்வமான இசை போன்றவைகளை முதன்மைப்படுத்துவது, சொல்லவரும் செய்தியை தெளிவாக புரியவைக்க உதவும் அம்சங்களை எடுத்துக் கொண்டு, செய்தியை கண்டு கொள்ளாமல் விடுவது போன்றது.

அறிவியல் புனைவை கதைக் களமாக கொண்டிருக்கும் ஒரு கதையில் நோக்கத்திற்கு உதவியாக இணைந்து வரும் தொழில்நுட்ப அம்சங்கள் எவ்வளவு உயர்வானதாகவும் நேர்த்தியுடன் பயன்படுத்தபட்டிருந்தாலும் புரட்டுத்தனமான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அவைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. அறிவியல் புனைவு என்றாலே தர்க்க மீறல்களை கண்டு கொள்ளக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். என்றாலும் வெறும் நுண்ணோக்கியை வைத்துக் கொண்டு மரபணு ஏணியை பார்வையிடலாம் என்பதும், தனிப்பட்ட ஒருவர் பெற்றிருக்கும் அறிவு மரபணு வழியாக கடத்தப்படும் என்பதும், ஓரிரு நொடிகள் ஒருவரை பார்ப்பதாலேயே ஒருவரின் மூளையிலிருக்கும் சிந்தனைத் தூண்டுதல்கள் இன்னொருவர் மூளைக்குள் புகுந்து கொள்ளும் என்பதும் ’டூ மச்’சாக மட்டுமில்லை, ’ஃபோர் மச்’சையும் தாண்டியிருக்கிறது.

இறுதியாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் விடுக்கிறார். மஞ்சள் பூசுவதை ஒரு சடங்காக, கலாச்சாரமாக பரப்பாதீர்கள் அதை நச்சுக் கொல்லி எனும் அறிவியாலாக கற்றுக் கொடுங்கள் என்கிறார். அதாவது மெய்யானதை சொல்லாமல் சடங்காக, மரபாக செய்தால் காலப்போக்கில் அது மறைந்து விடும். மெய்யான பயன்பாட்டை புரியவைத்தால் மட்டுமே அது நீடித்து நிற்கும் என்று நமக்கு வகுப்பெடுக்கிறார். ஆனால் இதை அவர் பின்பற்றியிருக்கிறாரா?

தற்காப்புக் கலைகளிலும் வீரத்திலும் சிறந்து விளங்கிய தமிழன் இன்று எல்லா இடங்களிலும் அடி வாங்குகிறான் என்பது மெய்யான அரசியலா? மேலெழுந்தவாரியான உணர்ச்சியைத் தூண்டிவிடும் செயலா? ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலைக்கு ஏகாதிபத்தியங்களின் அரசியல், பொருளியல் நலன், விடுதலைப்புலிகளின் அரசியல் தவறுகள் உள்ளிட்டு பல மெய்யான காரணங்கள் இருக்கும்போது, அவைகளைப் பற்றி மறந்தும் பேசிவிடாமல், பண்டைய தமிழனின் வீரத்தையும் கலைகளையும் மறந்ததுதான் காரணம். அவற்றை தமிழன் மீண்டும் கைக்கொண்டால் திருப்பி அடிப்பதோடு மட்டுமன்றி தமிழன் என்றால் உலகிற்கு ஒருவித பயம் எழும் என்று கூறுவது மெய்யான அரசியலை மறைப்பதோடு மட்டுமன்றி, அதை அறிந்து எழுச்சி பெறவிடாமல் தடுக்கும் செயலாகவும் இருக்கிறது.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முதல் பதிவு: செங்கொடி

எங்கேயும் எப்போதும்: ஆபத்தான அழுகை!

26 செப்

 

போராடுவதற்கு போக்கற்று அரற்றுவதையே விதியாகக் கொண்ட நாடு இது. அழுவதற்கென்றே கதைகளை உருவாக்கிய மண்ணிது. நல்லதங்காளோ, அரிச்சந்திரனது மயான காண்டமோ, பாசமலரோ, பாவமன்னிப்போ எல்லாம் கிராமத்து திடலிலோ இல்லை மண் தரையுள்ள டூரிங் டாக்கிசிலோ முடிந்து போன விசயங்கள் என்று நினைத்திருந்தால் உங்கள் முடிவுகளை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! எஸ்க்கலேட்டர் வசதி கொண்ட மல்டிபிளக்ஸ் அரங்குகளில் கூட அந்த கண்ணீர்க் கதைகள் தொடருகின்றன என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா?

சிறுவயதில் கேட்ட ஆகாசவாணியின் பிரச்சாரக் கதைகளும், பிலிம்ஸ் டிவிஷனின் 20 அம்சத்திட்டக் கதைகளும் தரும் ஆயாசத்தை இந்த படமும் தருகிறது. பிலிம்ஸ் டவிஷன் படம் போட்ட பிறகு “யோவ் ஆப்பரேட்டர் படத்த போடுய்யா” என்று வரும் கூச்சல்கள் ஒரு கனவு போல இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் இரசிகர்களால் ஏகமனதாக புறக்கணிக்கப்பட்ட அதே பிலிம்ஸ் டவிஷன் உணர்ச்சியை இன்றும் ரசிக்கப்படுகிறது என்ற உண்மை கொஞ்சம் அலுப்பாகவும் இருக்கிறது. காலம் மாறினாலும் நம் மக்களது இரசனை இன்னும் மாறவில்லையே?

திரைப்பட விமரிசனம் எழுதும்போது முதலிலேயே, முன்னுரையிலேயே  அதன் சாரத்தை, ஒன்லைனை சொல்லுவது வழக்கமில்லை. சொல்லிவிட்டால் ஆர்வமாக வருபவர்களது வேகம் பட்டென தணிந்து ஸ்க்ரோல் செய்து போய் விடுவார்கள். ஆனாலும் அடக்கமாட்டாமல் இங்கே முதலிலேயே அதை சொல்ல வைத்திருப்பது நம் குற்றமல்ல, படத்தின் குற்றம்.

இந்தப் படத்தில் இரண்டு விசயங்களிருக்கின்றன. ஒன்று கொடூரமான விபத்து, மற்றொன்று இனிமையான காதல். இனிமையான காதலில் இரண்டு காதல் கதைகள் இருக்கின்றன. ஒன்று பி சென்டருக்கான சிறு நகரத்து காதல். மற்றொன்று ஏ சென்டருக்கான ஐ.டி துறை காதல். அதே நேரம் பி சென்டரின் காதல் முற்றிலும் பி சென்டருக்குரியதல்ல. அது ஏ சென்டரை நோக்கி மாறும் விசயங்களுடன் வருகிறது. அதாவது ஏ சென்டருக்கான அழகியல் மதிப்பீடுகளுடன்.

இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் சேர்ந்து ஒரு உடன்பாட்டுப் பொருளாவது போல இங்கே காதலும், விபத்தும் சேர்ந்து உங்களிடமிருந்து கட்டற்ற கண்ணீரை வரவழைக்கிறது. நேரில் பார்க்கும் விபத்தென்றால் நாம் நிச்சயம் வருந்துவோம் என்றாலும் அதில் நமக்குத் தெரிந்த காதல் ஜோடிகள், அதுவும் அவர்களது காவியமான காதல் கதைகளின் நினைவுகளோடு வருமென்றால் நாம் யாரும் கோராமலேயே கதறி அழுவோம்.

நாளிதழ்களில் மற்றுமொரு செய்தியாக மறையும் ஒரு விபத்து போன்றுதான் இது இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு விபத்தை பார்த்து நாம் அழவேண்டுமென்று நினைக்கும் இயக்குநர் அந்த உடனடி விளைவைத் தாண்டி விபத்தின் சமூகப் பரிமாணத்தை அறிந்தவராகவோ, இல்லை அது குறித்து கவலைப்பட்டவராகவோ இந்தக் கதையில் தென்படவில்லை.

ஒரு மாபெரும் வரலாற்று சம்பவத்தையோ இல்லை ஒரு மனதை வலிக்கச் செய்யும் பெரிய விபத்தோ இரண்டையும் ஒரு சில தனிநபர்களது செயலாக மட்டும் பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. தலைக்கேற்ற தொப்பியைத்தான் தேட வேண்டுமே ஒழிய தொப்பிக்காக தலையை வெட்டினால் முண்டத்திற்கான சவப்பெட்டிதான் தேவைப்படும், தொப்பி அல்ல. விபத்து குறித்த இந்தப்படத்தில் இத்தகைய விபத்து தெரிந்தே நடந்திருக்கிறது. அது இயக்குநரின் கருத்தால் விளைந்த விபத்து.

____________________________________________________________________________

இந்தத் திரைப்படம் குறித்து விமரிசனம் எழுதியிருக்கும் பதிவர்கள் பலருக்கும் கூட அந்த விபத்து நடந்திருக்கிறது. சாலை விதிகளை மதிப்போம், ஓட்டும் போது செல்பேசியில் பேசாதிருப்போம், மது அருந்தாமல் ஓட்டுவோம், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணிவோம், ஓட்டுநர்களுக்கு இந்தப் படத்தை விசேடமாக திரையிட்டு காட்ட வேண்டும் என்பதாய் அவை குவிகின்றன. இவையெதுவும் தவறல்ல. ஆனால் உடன் தெரியும் இந்தத் தவறுகளின் பின்னே நிறுவனமயமான தவறுகள் பல அடிப்படையாக இருக்கின்றன. அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டும் தொழிலாளர்களது தவறுகளல்ல.

வாகனத்தை ஓட்டும் அனைவரும் பொதுவில் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களது எச்சரிக்கையின் அளவை தீர்மானிப்பது பணிச்சூழல், குடும்பச் சூழல் குறித்த பிரச்சினைகள். பேருந்து ஓட்டுநர்களும், லாரி ஓட்டுநர்களும் எச்சரிக்கையாக இருப்பதால்தான் தமிழகத்தில் இலட்சக்கணக்கான வாகனங்கள் இருந்தும் இலட்சக்கணக்கான விபத்துக்கள் நடப்பதில்லை. நடக்கும் ஒரு சிலவற்றுக்கு கண நேர, திட்டமிடாத, எதிர்பாராத செயல்கள் காரணமென்றாலும் ஒரு ஓட்டுநரின் எச்சரிக்கை அளவு ஏன் மீறப்பட்டது என்பது குறித்து நாம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல் இந்தப்படத்தின் விளைவாய் வரும் மொக்கை மனிதாபிமானத்தில் சரணடைந்து உண்மையை தொலைத்துவிடுவோம்.

படத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பேருந்தும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தும் மோதிக் கொள்கின்றன. இவை ஏன் மோதிக்கொண்டன, யார் காரணம் என்பது குறித்து படத்தில் தெளவில்லை என்றாலும் அது தேவையுமில்லை. ஆனால் என்னவெல்லாம் காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது குறித்து இந்தத் திரைக்கதை சுட்டியிருக்க வேண்டும். அதை விடுத்து கோரக் காட்சிகளை வைத்து விபத்து குறித்து ஒரு பய உணர்வை மட்டும் இந்தப்படம் ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துகள் போதுமான பராமரிப்பில் இல்லை. தனியார் பேருந்துகளை ஊக்குவிக்கும் தனியார்மயக் கொள்கை காரணமாக வேண்டுமென்றே திட்டமிட்ட முறையில் அவை நலிந்துப் போக விடப்படுகின்றன. இரவு பத்து மணிக்கு கோயம்பேடு சென்றால் வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகளை நிறுத்துவதற்கே வழியில்லாமல் நேரக் கண்காணிப்பாளரும், ஓட்டுநர்-நடத்துநர்களும் திண்டாடுவதை பார்க்கலாம். அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ் என்று பெயர்களை தாங்கியிருக்கும் பேருந்துகள் அந்த பெயர்களுக்குரிய வசதிகள் இல்லாமல் இருப்பதும், அது குறித்து கேட்கும் மக்களிடம் நடத்துநர்கள் பேசி அலுத்துப் போவதும் அன்றாடம் நடக்கும் காட்சிகள்.

பேருந்துகளின் வெளிப்புற கன்டிஷன்களே இப்படி இருக்கும் போது அதன் உள்கட்டுமான கன்டிஷன்கள் எப்படி இருக்குமென்று யூகித்துக் கொள்ளலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ராஜபாட்டை போட்டுக் கொடுக்கும் அரசு ஒரு விரைவுப் பேருந்து நிறுவனத்தை நல்லமுறையில் நடத்துவது முடியாத ஒன்றா என்ன?

அரசால் திட்டமிட்டே உருவாக்கப்படும் இந்தச் சூழலை தனியார் பேருந்து முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வழியின்றி நடுத்தர வர்க்கமும் இங்கே அதிக கட்டணம் கொடுத்து பயணிக்கிறது. தனியார் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவது உண்மையென்றாலும் அதன் ஓட்டுநர்கள் கொத்தடிமை போல நடத்தப்படுகிறார்கள். அரசு ஓட்டுநர்களை விட மிகக் குறைந்த சம்பளம். மட்டுமல்ல, நிறுவனத்தின் பெயரை காப்பாற்றும் விதமாக குறிப்பிட்ட நேரத்தில், அதி வேகத்தில் பேருந்துகளை ஓட்டி சென்று இலக்கை அடைய வேண்டிய நிர்ப்பந்தம். அதன் கோரமுகத்தை கே.பி.என் விபத்தில் பார்த்திருக்கிறோம். இப்படி அனைவரும் அறிந்த விசயங்கள் என்றாலும் இந்தப் படம் எதனையும் கோடிட்டுக்கூட காட்டவில்லை. மாறாக படத்தில் இரு பேருந்துகள் ஓடுவதை பயமுறுத்தும் கோணங்களில், காட்சிகளில், இசையில் காட்டுகிறார்கள். கருத்து இல்லாத அந்தக் காட்சிகள் மூலம் விபத்து குறித்த ஒரு காரணமற்ற பயம் மட்டுமே தோன்ற முடியும்.

படத்தில் அரசுப் பேருந்து பஞ்சர் ஆவதும், அதன் ஓட்டுநர் அதிவேகமாக சாலையை விட்டிறங்கி ஓட்டுவதும் வருகிறது. அரசுப் பேருந்து என்றாலே மெதுவாக சென்று ஊரை தாமதமாக அடையும் என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு. இங்கே ஊரறிந்த எதார்த்தத்தைக்கூட கதைக்காக சாகடித்திருக்கிறார் இயக்குநர். உண்மையில் பராமரிப்பில்லாத அரசுப் பேருந்து, பணிச்சுமையில் இருக்கும் தனியார் ஓட்டுநர்கள் என்பதைத் தாண்டி இந்த விபத்தில் வேறு எதைக்காட்டினாலும் அது பொருத்தமற்றது. ஆனால் இயக்குநர் அப்படி எதுவும் காட்டவில்லை.

ஃபைனல் டெஸ்டினேஷன் வரிசைப் படங்களில் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் விபத்தும், மரணமும் நடக்கும் என்று மிரட்டுவார்கள். அது பாதுகாப்பாக வாழும் மேற்குல மக்களை வேறு எப்படியும் மிரட்ட முடியாது என்ற எதார்த்தத்தோடு அபத்தமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லா வகை அபாயங்களோடும் வாழும் நமது நாடுகளில் விபத்து என்பது சமூக வகைப்பட்டதாக, நிறுவன ரீதியாக இருக்கிறது. அதை வெறுமனே மொக்கை உபதேசங்களோடு கடந்துவிடலாம் என்பது இயக்குநரது துணிபு.

ஒருவேளை விபத்திற்காக காதல் கதை என்று அமைத்திருந்தால் அப்படி கொஞ்சம் ஏதாவது வந்திருக்கும். இங்கே காதலுக்காக விபத்து என்று போவதால் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவு வரவில்லை. அதனால்தான் ஆரம்பத்திலேயே விபத்து என்று காட்டியிருந்தாலும், படத்தின் முடிவை ரசிகர்கள் ஓரளவு ஊகிக்க முடியும் என்றிருந்தாலும் அது அவர்களது ரசனையை பாதிக்காது என்று இயக்குநர் நினைத்திருக்கிறார். அதில் அவர் சோடை போகவில்லை என்பதற்கு காரணம் இந்தப்படத்தை தூக்கி நிற்பது விபத்து போலத் தோன்றினாலும் அது நிற்பது உண்மையில் காதல் குறித்த சித்திரத்தில்தான். காதல் மயக்கத்தில் விபத்தின் வேர் மறைந்து போவது பார்வையாளர்கள் குறித்து இயக்குநருக்குள்ள மலிவான நம்பிக்கையைக் காட்டுகிறது.

அதிலும் ஒரு பேருந்தில் ஒரு இளம் ஜோடி, சமீபத்தில் திருமணமான ஜோடி வருகிறது. அதில் மணமகன் கொடூரமாக கொல்லப்படும் காட்சியை இடையில் காட்டி விட்டு பின்னர் பேருந்தில் அவர் மணமகளைக் கொஞ்சும் காட்சி ஒன்றே இயக்குநரது தரத்தை காட்டுகிறது. இது சென்டரல் ஸ்டேஷனில் கையை கீறி ரத்தத்தை வரவழைத்து உதவி கேட்கும் அதிரடி பிச்சைக்காரர்களின் ரசனைக்கொப்பானதாக இருக்கிறது. ஆனால் இந்த மலிவான உத்தியைக்கூட ஆழமான படிமமாக உணரும் நமது பதிவர்கள் இருக்கும் போது இயக்குநர் சரவணனை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

காதலையும், விபத்தையும் ‘பொருத்தமாக’ இணைத்து வெற்றியடைந்த படம் டைட்டானிக். டைட்டானிக்கில் கூட இறுதிக்காட்சிகளில் சாதாரண மக்களெல்லாம் உயிர் காக்கும் படகுகளில் ஏற முடியாமல் அலறும் காட்சிகள் ஒரு பின்னணியாக மட்டும் வரும். படத்தை பார்க்கும் இரசிக மனமோ காதலர்கள் எப்படியாவது பிழைக்க மாட்டார்களா என்று ஏங்கும். இங்கும் அதே கதைதான். அஞ்சலி – ஜெய், அனன்யா – சரவ் ஜோடிகளின் காதல் காட்சிகளில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ன ஆனார்கள், அவர்களது குடும்பத்தினர் எப்படி அதை எதிர்கொள்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். இதற்கு வேண்டுமானால் இயக்குநர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

நாமெல்லாம் என்றாவது ஒரு நாள் பயணம் போகிறோம். ஆனால் ஓட்டுநர்களுக்கு அது அன்றாட பிழைப்பாக இருக்கிறது என்ற முறையில் கூட அவர்கள் நினைக்கப்படவில்லை. ஒரு வேளை அவர்கள்தான் இந்தப் படத்தின் வில்லன்கள் என்று இயக்குநர் கருதியிருப்பார் போலும். ஒருக்கால் இந்த இயக்குநர் நாளையே கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விபத்தையும் காதலையும் பிசைந்து ஒரு கதை செய்தால் வில்லனாக யாரை காட்டுவார்? ஒரு சுவிட்ச்சை போட மறந்த தொழிலாளிதான் அந்த வில்லன் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா என்ன?

_____________________________________________________________________________________

படத்தில் வரும் காதல் காட்சிகள் குறித்து சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

காதலன் ஜெய்யை அதிரடியாக மிரட்டி காதலிக்கும் அஞ்சலியை எடுத்துக் கொள்வோம். இதையெல்லாம்  “ஓடிப்போயிடலாமா” என பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னரேயே மணிரத்தினம் எடுத்துவிட்டாலும், இன்றும் அதை இரசிப்பதற்கு காரணம் என்ன?

ஆணுக்கு அடங்கியவள் பெண், அவனுக்குரிய பணிவிடைகள் செய்வது பெண் என்றாலும் அந்தக்கால ஆனந்த விகடனில் கணவன் துணி துவைப்பதும், சமையல் செய்வதும், மனைவி பூரிக்கட்டையால் கணவனை தாக்குவதான ஜோக்குகள் வரும். மனைவியின் பணிவிடைகளில் சோம்பிக் கிடக்கும் கணவன்கள் அதைப் படித்து சிரிப்பார்கள். அதுதான் இது. அரதப்பழைய விகடன் முதல் அதி நவீன தமிழ் டவிட்டர்- பஸ்ஸர்களின் டைம்லன் வரை இதுதான் ஓடுகிறது. ஒரு பொதுவான சமூக யதார்த்தத்தில் ஆண்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான் என்றாலும் கதையில் அதற்கு நேரெதிராக வரும் போது தீர்மானிக்கும் அந்த ஆண் ரசிகர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். இது சிரிப்பதற்குரிய ஒன்றாக இருப்பதினாலேயே நிஜத்தில் வாய்ப்பில்லாததாக ஒன்றாக இருக்கிறது. நிஜத்தை காட்டியிருக்கும் பட்சத்தில் அங்கே சிரிப்பதற்கு ஏதுமில்லை. இந்த முரண் உங்களுக்குப் புரிகிறதா?

மற்றுமொரு சான்றைப் பார்ப்போம். படத்தில் இரண்டு ஜோடிகளின் ‘கற்பை’யும், ஒழுக்கத்தையும் அழுத்திக் காட்டுவதற்கு சில காட்சிகள் வருகின்றன. நாயகன் ஜெய், நாயகி அணியும் ஆடையின் வண்ணத்தைப் பார்த்து அதே கலரில் தினமும் சட்டை அணிகிறார். அவரோடு பணி புரியும் தொழிலாளி இரண்டு கலர் சட்டைகளை மாற்றி மாற்றி அணிகிறார். காரணம் கேட்டால் அவர் இரண்டு தெருவில் இரண்டு பிகர்களை சைட் அடிக்கிறார்.

ஐ.டி துறை நாயகனான சரவ், பொறியியல் முடித்திருக்கும் அனன்யாவை விரும்புகிறார். இவர்கள் இருவரும் கம்பெனி பேருந்தில் பயணிக்கும் போது ஒரு பெண் சரவை இரண்டு ஆண்டுகள் துரத்திக் காதலித்ததாகவும், அவர் ஏற்கவில்லை எனவும், பிறகு ஒரு அப்பாவியை திருமணம் செய்திருப்பதாக தாலியை காட்டுகிறார். பேருந்தின் பின் சீட்டில் இருக்கும் ஒரு இளைஞன்தான் அந்த அப்பாவி என்று சொல்கிறார்.

நகரப் பேருந்தில் அனன்யாவின் அருகில் பயணிக்கும் ஒரு நகரத்துப் பெண் இரண்டு காதலர்களோடு பேசுகிறாள். மற்றவர் லைனில் வந்தால் அது அப்பா என்று இருவரிடமும் மாறி மாறி பேசுகிறாள். இந்த மூன்று காட்சிகளுக்கும் திரையரங்கில் கைதட்டல் தூள் கிளப்புகிறது. காதல் ஜோடிகளின் ஒழுக்கத்தையும், ‘கற்பையும்’ ஜாக்கி வைத்து தூக்குவதற்காக இந்தக்காட்சிகள் திட்டமிட்ட முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

தங்களையும் அந்த நாயகர்கள் போல கருதிக் கொள்ளும் இரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு சிரிப்பதன் காரணம், தன்னைத் தவிர மற்றவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்று நினைப்பதால். ஆனால் எல்லோரும் தானென்று ஆனால் யார்தான் அந்த மற்றவர்கள்? ஆனால் நடப்பில் மற்றவர்கள்தான் பெரும்பான்மை எனும் போது அது இங்கே விமரிசனமாக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி விமரிசனத்திற்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டுமென்றால் அது படத்தின் மையமான பாத்திரங்களோடு இருக்க வேண்டும். ஆனால் அது துணைப் பாத்திரங்களோடு கேலிக்குரியதாக ஆக்கப்படும் போது சுயவிமரிசனம் மறுக்கப்பட்டு ஆழ்மனதில் புதையுண்டிருக்கும் கீழ்மைகள் வெறும் கேலிப்பொருளாய் பார்க்ப்படுகின்றன. இந்த முரணை அறிந்து கொள்ள முடிகிறதா?

படத்தில் அஞ்சலி அநியாயத்திற்கு பிரச்சாரம் செய்கிறார். சொல்லப் போனால் அஞ்சலியின் பாத்திரச் சித்தரிப்பு அண்ணா ஹாசாரே டைப் போலித்தனத்திற்கு பொருத்தமானதாகவும் இருக்கிறது. இறந்த பிறகு உடல் பாகங்களை தானம் செய்ய வேண்டும் என்று கையெழுத்து வாங்கும் அஞ்சலி இறுதிக் காட்சியில் அழுது கொண்டே காதலனது பாகங்களை தானமாக எடுக்க வேண்டுமென்று அரசு மருத்தவரிடம் கூறுவார். இப்படி தானமாகப் பெறப்படும் பாகங்கள் எவையும் ஏழைகளுக்காக பொருத்தப்படுவதில்லை. அவை அப்பல்லோவுக்கு சென்று பணக்காரர்களுக்கோ, வெளிநாட்டவருக்கோதான் பொருத்தப்படுகின்றன. இதற்காகவே உடல் தானம் குறித்த விழிப்புணர்வு வளரவேண்டும் என்று அப்பல்லோ முதலாளி ரெட்டி பேசியது குறித்து வினவில் முன்னர் எழுதிய பதிவு நினைவுக்கு வருகிறது.

இருக்கட்டும், இத்தகைய மனிதாபிமானியான அஞ்சலி தனது காதலனை வம்படியாக கூட்டிச் சென்று பணக்காரர்களது கடையில் 6000 ரூபாய்க்கு துணி எடுப்பதும், மேட்டுக்குடியினர் செல்லும் காபிஷாப்புகளுக்கு சென்று 160 ரூபாய்க்கு காபி குடிப்பதும், நாற்பது ரூபாயை டிப்ஸாக கொடுப்பதும், அதில் நாயகனது அறியாமையை கேலி செய்வதும் என்ன விதத்தில் பொருத்தம்? நியாயமாக தமிழ்நாட்டு காதலர்களுக்கு இந்த முதலாளித்துவ இடங்கள் தேவையில்லை என்ற விதத்தில் கேலி செய்யப்பட்டிருந்தால் நாம் பெருமைப்படலாம். ஆனால் இந்த நுகர்வுக் கலாச்சார வக்கிரங்களுக்கு நாம் அறிமுகமாகவில்லை என்று இயக்குநர் செல்லமாக கிள்ளிச் சொல்லுகிறார். அதோடு அஞ்சலியின் உடல்தானம் குறித்த பிரச்சாரம் சேரும் போது அண்ணா ஹசாரேநினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதல் குறித்த பிளாஷ் ஃபேக் நினைவுகளில் காதலின் சமூக யதார்த்தமும், அதன் பிரச்சினைகளும் மருந்துக்குக் கூட வரவில்லை. அந்த வகையில் உண்மையான காதல் படங்கள் எதுவும் தமிழில் இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றுகிறது. காதல் தோன்றும் தருணங்களை விதம் விதமாக ஆனால் அரைத்த் மாவாக காட்டும் நமது இயக்குநர்கள் காதல் தோன்றியதும் அது நிறைவேற எத்தனிக்கும் போராட்டங்களை, சமரசங்களை, குழப்பங்களை கிஞ்சித்தும் அறிந்தவர்கள் அல்லர்.

______________________________________________________

இயக்குநர் சரவணன் இந்தக் கதையை கூறியதும் தயாரிப்பாளர் முருகதாஸ் ஆடிப்போய் விட்டாராம். சரிதான். அதனால்தான் ஹாலிவுட் நிறுவனமான முர்டோச்சின் பாக்ஸ் நிறுவனமும் இதில் கூட்டுத் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறது. டைட்டானிக் அளவு செலவில்லாமலேயே இரண்டு பேருந்துகளை மோத வைத்து தமிழகத்தை அள்ளிவிடலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இனி இந்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்றால் நாம் மகிழ்வதற்கு ஏதுமில்லை.

திருமணம் செய்த இரசிகர்கள் இனி தினுசு தினுசாகக் காதலிக்க முடியாது என்பதால் விபத்தையும், திருமணம் செய்யாத இரசிகர்கள் விபத்தை ஒதுக்கி வைத்து காதலை மட்டும் நினைத்து திரையரங்கை விட்டு அகலுவார்கள். இதைத் தவிர இந்தப்படம் எதையும் ஏற்படுத்தாது. அப்படி ஏற்படுத்தியாகக் கூறப்படும் மொக்கை மனிதாபிமானங்கள் அனைத்தையும் இந்தத் திரைப்படம்தான் முதலில் கண்டறித்து கூறியதாக பெருமைப்படவும் முடியாது.

நல்லதங்காள் கதையை உற்பத்தி செய்த மண்ணிலிருந்து “எங்கேயும் எப்போதும்” போன்ற கதைகள் வந்து கொண்டேதான் இருக்கும். சமூக வாழ்க்கையில் கோபம் என்ற உணர்ச்சி பிறந்து செயலாக முடியாத நாட்டில் கண்ணீர், நிறையக் கண்ணீர் உதித்துக் கொண்டுதான் இருக்கும். சரிதானே?

 

முதல் பதிவு: வினவு

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

5 செப்

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ளH.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விடவில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும்.திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது.முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
– 
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல.அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோஇப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகைமுரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான்என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

முதல் பதிவு: வினவு

அவசியம் பார்க்க வேண்டிய படம் ஆரக்‌ஷன்

18 ஆக

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை செய்த மாநில அரசுகளோ, சட்டம் ஒழுங்கை திரைப்படம் சீர்குலைத்து விடுமென கூறுகின்றனர். உண்மையில், ஆரக்க்ஷன் எதிர்க்கப்பட வேண்டிய படமா? இத்திரைப்படம் தலித்துகளுக்கு எதிரானதா? சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியதா?

முதலில் திரைக்கதையை சுருக்கமாகப் பார்ப்போம். பிரபாகர் (அமிதாப்) எனும் ஒரு தனியார் கல்லூரி முதல்வர், கல்வியை தொழிலாக அல்லாமல் சேவையாகக் கருதுகிறார். வறிய, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக தனிப்பட்ட வகுப்புகள்(tuition) நடத்தியும், உதவிகள் செய்தும் முன்னேற்றுகிறார். இதன் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சில முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கும் ஆளாகிறார். இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு வருகிறது. இதற்கான எதிர்ப்புக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் கல்லூரிக்குள்ளும் அரங்கேறத் துவங்குகின்றன.

இதனிடையே துணை முதல்வர் மித்திலேஷ் (மனோஜ் பாஜ்பாய்) தனியே கோச்சிங் சென்டர்கள் நடத்தி வருவதைக் கண்டறியும் பிரபாகர், மித்திலேஷின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறார். ஆனால், மாநிலக் கல்வி அமைச்சருடனும், சில கல்லூரி நிர்வாக முதலாளிகளுடனும் கைகோர்த்துள்ள மித்திலேஷ், பிரபாகரை வெளியேற்றத் திட்டமிடுகிறான். பிரச்சினை முற்றுகிறது. இதனையொட்டி பிரபாகரை பேட்டியெடுக்க வரும் ஒரு பத்திரிக்கையாளரிடம், தான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பிரபாகர் தெரிவிக்கிறார். பத்திரிக்கையோ பிரபாகர் தமது கல்லூரியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவிருப்பதாக எழுதுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மித்திலேஷ் முதலானோர் பிரபாகரை வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். பிரபாகரும் வெளியேறுகிறார். அவரது நண்பரது குடும்பத்தினர் வசிப்பதற்காக அவர்  அளித்த வீட்டில், மித்திலேஷ் சாதுர்யமாக தனது கோச்சிங் சென்டரை அமைக்கிறான். தனது வீட்டை பறிகொடுக்கும் பிரபாகர், இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம், கல்வி வணிகமயமாவதற்கு எதிராகப் போராடி வெல்கிறார்.

இடஒதுக்கீடு எதிர்ப்பு, கல்வி வியாபாரம் ஆகிய இரு ஆதிக்க சாதி-உயர் வர்க்கக் கண்ணோட்டங்கள், மனோபாவங்கள், போக்குகளுக்கு எதிராக வெளிவந்துள்ள மேற்கூறிய திரைக்கதை கொண்ட திரைப்படத்தைதான் தலித் எதிர்ப்பு, இடஒதுக்கீட்டு எதிர்ப்புத் திரைப்படம் என எதிர்க்கிறார்கள். உண்மையில், இத்திரைப்படத்திற்கு எதிராக பா.ஜ.கவினரும், அன்று மக்களை பரிதவிக்க விட்ட AIIMS மாணவர்களும், தெருக்கூட்டும் போராட்டம் நடத்திய ‘Youth for Equality’ குலக்கொழுந்துகளும் தான் போராடியிருக்க வேண்டும். ஆனால், வேடிக்கை என்னவென்றால், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிப் போராடும் பகுஜன் சமாஜ், வி.சி, பா.ம.க தொண்டர்கள் இத்திரைப்படத்தை தடை செய்யப் போராடுகின்றனர்.  நேற்று மதியம் சென்னை ஈகா தியேட்டரில் புகுந்த பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் திரையிடலுக்கு எதிராகக் கலகம் விளைவிக்க, மீதமிருந்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘கற்பி, ஒன்று சேர், கலகம் செய்’ என்றார் அம்பேத்கர். ‘கற்பி’ எனும் சொல்லும், பொருளும் மட்டும் உ.பி முதல் தமிழகம் வரை தலித்தியப் பிழைப்புவாதிகளால் ஒருமித்தமாக ‘தீண்டத்தகாத’ பொருளாக ஒதுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவாக், பஜ்ரங் தள் செய்ய வேண்டிய ‘சமூகப் பணியில்’ பகுஜன் சமாஜ் கட்சி ஈடுபடும் அவலத்தை நாம் காண நேர்ந்திருக்கிறது.

இந்த கண்மூடித்தனமான ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய பட்டியலிடப்பட்ட சாதியினர் கமிஷனின் தலைவர் பி.எல்.புனியாவின் கருத்துக்கள்தான் அடிப்படையாக விளங்குகின்றன. புனியா திரைப்படத்தைக் கண்ணையும், காதையும் திறந்து வைத்துதான் பார்த்தாரா என உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அவர் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடும் காட்சிகள் அனைத்திலும் சாதி வெறிக்கு சரியான பதிலடி தரப்படுகிறது. காட்சிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்டோரின் நியாயம் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகும், புனியா முன்வைத்த அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்துதான் தற்பொழுது மடத்தனமான ஆர்ப்பாட்ட அக்கப்போர்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உதாரணங்களாக, திரைப்படத்தின் முதல் பாதியில், தீபக் குமார் (சயீப் அலி கான்) இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்களை ஆவேசத்துடனும், கூர்மையாகவும் தவிடுபொடியாக்குகிறார். பிரபாகர் இடஒதுக்கீட்டின் நியாயத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் எடுத்துரைக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களின் மூலமாகவும், சம்பவ அமைப்புகள் மூலமாகவும் இடஒதுக்கீடு குறித்த விவாதம் திரைக்கதையினூடாகக் கட்டியமைக்கப்படுகிறது.

தீபக் குமார், மித்திலேஷ், சுசாந்த் (பிரதீக்) ஆகியோருக்கிடையில் நடைபெறும் விவாதத்தில், கஷ்டப்பட்டு முன்னேறுமாறு நக்கலாக சாடுகிறான் மித்திலேஷ். “கஷ்டப்படுவதைப் பற்றி எங்களுக்கு கூறுகிறாயா? உனக்கு சவரம் செய்யவும், உடை வெளுக்கவும், உனது உள்ளாடைகளைக் கூட வெளுக்கவும், நாற்று நடவும், பாரம் சுமக்கவும், மாடு அறுக்கவும் நூற்றாண்டுகளாக உழைத்து உழைத்து ஓடாகத் தேயும் எங்களுக்கு, கஷ்டப்படுவதைப் பற்றி நீ கூறுகிறாயா?” என தீபக் கேட்கும் பொழுது, “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல…” பாடல்தான் நினைவுக்கு வந்தது. தகுதியை வைத்து போட்டியிடு, ஏன் ஒதுக்கீடு கேட்கிறாய் என சுசாந்த் வினவ, “உண்மைதான். போட்டி போடலாம். ஆனால், பந்தயமென்றால் ஒரே கோட்டில் நின்றுதான் ஓடத் துவங்க முடியும். எனது சகோதரன் மலத்தை அள்ளி சுமந்து, சுத்தம் செய்து விட்டு வந்துதான் படிக்க முடியும். எனது சகோதரி  அன்றாடம் பத்து மைல் நடந்து பத்துக் குடம் தண்ணீர் சுமந்து வந்த பின்னால்தான் புத்தகத்தைத் தொட முடியும். நீ அலுங்காமல், குலுங்காமல் காரில் வந்திறங்கி படிப்பாய். இதுதான் சமமான போட்டியா?” என பதிலிறுப்பான் தீபக்.

பிறிதொரு காட்சியில், இலவசமாகப் பாடம் நடத்தும் பிரபாகரிடம் சில பெரிய மனிதர்கள் தமது பிள்ளைகளுடன் வந்திறங்கி தமது பிள்ளைகளுக்கு மட்டும் தனி வகுப்பு நடத்துமாறும், ஏனெனில் மற்ற பிள்ளைகள் அருகில் வந்தாலே நாறுகிறதென்றும் கூறுகின்றனர். “உங்கள் சிந்தனைதான் நாறுகிறது. எனக்கு எல்லா மாணவர்களும் ஒன்றுதான். எல்லோருக்கும் ஒரே வகுப்புதான்” என்பார் பிரபாகர். பிரபாகருக்கும், தீபக்கிற்குமான உரையாடலில் தீபக், பிரபாகரின் நடுநிலைமையை தனது தீர்க்கமான கேள்விகளால் சுட்டெரிப்பான். பிரபாகரின் மகள் (தீபிகா படுகோன்) கசப்புணர்வை மறக்கக் கூடாதா என வினவ, “இது நூற்றாண்டுகளாக எம்மை வாட்டும் துயரம்.” என பதிலளித்து விலகுவான் தீபக். பிரபாகருக்கும், அவரது மகளுக்கும், அவரது மனைவிக்கும் இடையில் நடைபெறும் விவாதங்களில் ‘மேன்மக்களின்’ இடஒதுக்கீட்டு எதிர்ப்பை சுருக்கமாகவும், ஆழமாகவும் மறுத்துரைப்பார் பிரபாகர்.

தீபக் குமார் ஆக்ரோஷமாக முன்வைக்கும் கருத்துக்கள் இந்தி வணிக சினிமாவில், ஏன், இந்தியாவில் எந்த வணிக சினிமாவிலும் நாம் ஒருபோதும் காணாதது. அதுவும், ஆதிக்க சாதித் திமிர்க் கோலோச்சும் வட மாநிலங்களில், இத்தகைய வசனங்கள், தடை செய்யப்படாத இடங்களிலாவது ஒலிக்கும் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே வேளையில், கருத்தாக்க ரீதியாகவே திரைப்படத்தின் கருத்துக்களில் குறிப்பிடத்தக்கதொரு தவறும் இருக்கிறது. அதாவது, அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகுவதும், அதன் மூலம் கல்வி வணிகமயமாதல் நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு ஒடுக்கப்பட்ட சாதியின மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை படிப்படியாக கடந்து வரலாம் என்ற கருத்தும் இலை மறை காயாக முன்வைக்கப்படுகிறது. திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும் அக்கருத்தை ஒரு செய்தியில் வெளிப்படுத்துகிறார்.

அடிப்படையில், தனியார்மயம்-தாராளமயக் காலகட்டத்தின் மாறிய கல்விக் கொள்கைகள் காரணமாகவே, உள்நாட்டு கல்வி வியாபாரிகளையும், பன்னாட்டு கல்வி வியாபாரிகளையும் கொண்டு கல்வியைச் சந்தைமயப்படுத்துவது, அரசு படிப்படியாக விலகிக் கொள்வது எனும் உலக வங்கியின் கட்டளைக்கேற்பவே, கல்வியில்தனியார்மயம் புகுத்தப்பட்டது.  இன்று புற்றீசல்களாக பெருகியும் நிற்கிறது. இதற்கு இடஒதுக்கீட்டைக் காரணமாக்குவது ஆதிக்கசாதி-உயர் வர்க்கத்தினரின் கல்விச் சந்தை நோக்கிய நகர்வுக்கு நியாயம் கற்பிப்பதாக அமைகிறது. அதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டுமா என்பதிலும் திரைப்படம் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

எனவே, திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கல்வி வணிகமயமாதல் போக்கை பொதுவில் எதிர்க்கும் சில கருத்துக்களை முன்வைத்தாலும், முதல் பாதியில் உள்ள தெளிவான இடஒதுக்கீட்டு ஆதரவு நிலையிலிருந்து நழுவி, குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகர்ந்து செல்கிறது. வேறு வழியின்றி, கற்பனையான முடிவில்லாத முடிவுக்கு, செயற்கையான தீர்வாக கல்லூரியின் நிறுவனர் மீண்டும் பிரபாகரை கல்லூரி முதல்வராக்குவதாகவும், அவர் அங்கே இலவசமாக ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதாகவும்  முடிவடைகிறது. முதல் பாகத்தில் அழுத்தமாகக் கட்டியமைக்கப்படும் திரைக்கதை, பிற்பாதியில் ‘சினிமாத்தனமாக’ முடிவுறுவது தற்செயலானதல்ல. மாறாக, உள்ளடக்கரீதியாக எடுத்துக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தத்தில் ஆய்வு செய்வதிலும், அதற்கான சரியான தீர்வுகளை நோக்கிப் பயணிப்பதிலும் உள்ள கண்ணோட்டப் பிரச்சினையே காரணமாக விளங்குகிறது. அதே வேளையில், திரைப்படத்தை உள்வாங்காமல் இக்கருத்தை விவாதிப்பது சாத்தியமில்லை. ஆனால், இங்கே என்ன நடைபெறுகிறது? தலித்துகளையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்துவதாக கிளப்பி விடப்பட்டுள்ள ஒரு வதந்தியின் விளைவாக திரைப்படத்தைக் காண்பதே சிக்கலாகியுள்ளது.

படத்தின் திரைக்கதை ஆசிரியர் அஞ்சும் ராஜாபாலி ஒரு செய்தியில் குறிப்பிடுகிறார். “இத்திரைப்படம், சாதியம் எனும் பழைய தீராத காயத்தை நேரடியாக எதிர்கொள்கிறது. அதன் விளைவாக, நமது சமூகத்தில் காலங்காலமாக நிலவும் பல்வேறுபட்ட தப்பெண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சிகளையும் திரைப்படம் எதிரொலித்தாக வேண்டியுள்ளது. இல்லையேல், ஒரு ஊக்கமான விவாதம் சாத்தியப்படாது. திரைப்படத்தின் நாடகத்தன்மையின் மீதோ, மக்களது கவனத்தை ஈர்ப்பதற்கான அதன் இயலாமை குறித்தோ, பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை திரைப்படம் சரியாகவே விவாதிக்கிறது. “

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை இத்திரைப்படம் சரியாகவே விவாதிக்க முயல்கிறது என்று சொல்லலாம். ஆம், இது ஒரு முழுநிறைவான திரைப்படம் அல்ல. ஆனால், ஒரு அவசியமான விவாதத்தை ஒடுக்கப்பட்டோர் தரப்பில் நின்று எழுப்புவதற்கான கூறுகளைக் கொண்ட திரைப்படம். ஆனால், அப்படியொரு விவாதத்திற்கான சாத்தியப்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு விட்டன என்பதைத்தான் தற்பொழுது காண்கிறோம். இத்திரைப்படம் உண்மையில் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் என்பது மாத்திரமல்ல, பரவலாக பிரபலப்படுத்தப்பட வேண்டிய படமும் கூட. முற்போக்காளர்கள் இத்திரைப்படத்திற்கு எதிராக அல்ல, மாறாக திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு பரவலாக கொண்டு செல்லவும், மாணவர்களுக்கு இலவசக் காட்சிகள் ஏற்பாடு செய்யக் கோரியும் தான் போராட்டம் நடத்த வேண்டும். அவ்வகையில், நிகழ்ந்து கொண்டிருக்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பை, எதிர்த்து முறியடிக்க வேண்டும். சில மாநில அரசுகள் சொல்வது போல் இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முன்வைக்கும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு கெடும் என்றால், அத்தகைய அநீதியான சட்டம் ஒழுங்கு கெடுவதே மக்களுக்கு நல்லது.

முதல் பதி்வு: போராட்டம்

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

23 மே

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ருஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பஃபுக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பஃபுக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பஃபுக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் காதலி. ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது காதலி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ருஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ருஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

நன்றி: வெற்றிவேல்

நன்றி: வினவு

பொன்னர் சங்கர் யாருக்காக?

15 ஏப்

அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை  ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது.

இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர்  கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிக்க பலகோடிகளை செலவழித்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள், படமும் வெளிவந்துவிட்டது.

சரி!  அப்படி என்ன அண்ணன்மார்களிடம் இருக்கிறது அவர்கள் என்ன தீரன் சின்னமலை,கட்டபொம்மன் போன்று வெள்ளையனுக்கு எதிரான போரில் வீரமரணம் எய்திய மாவீரர்களா? பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு நம் மக்களுக்கு சொல்லுகின்ற பாடம்தான் என்ன? எதற்காக அண்ணன்மார் கதையை கருணாநிதி மீள் உருவாக்கம் செய்தார்?

தான் கோவையில் வாழ்ந்த காலத்தில் அண்ணன்மார் கதையை கேட்டு ரசித்து  பொன்னர் சங்கர் கதையை எழுதியதாகவும் மு.க சொல்லியிருக்கிறார். தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் மு.க வை அணணன்மார் கதை கவர்ந்திழுத்திருக்கிறதே , அப்படியானால் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.

கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் தலைவர்களான பொன்னர் , சங்கர் இருவரும் அண்ணன் தம்பிகள், இவர்களின் தங்கை அருக்காணி இவர்கள் வாழ்க்கை தான் அண்ணன்மார் கதை    இவர்களுக்கும், கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர்களின் தலைவனான தலையூர்காளிக்கும் இடையிலான சண்டையும் அதன் முடிவில் அண்ணன்மார்கள் இறப்பதே இக் கதை.  இக்கதை நடந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.

பொன்னரும் சங்கரும் இறந்த பின்பு அவர்கள் கடவுளாக்கபட்டு ஊர் ஊருக்கு கோயில் கட்டபட்டுள்ளது . கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வேளாளக்கவுண்டர் சாதிக்காக வேட்டுவகவுண்டர்களிடம் சண்டை போட்டதுதான்.

அதுவும் கொடூரமாக வேட்டுவர் மக்களை வீழ்த்தியிருக்கிறான் பொன்னர்.கீழேயுள்ள அண்ணன்மார் பாடல்களில் பொன்னர் வேடுவர்களுக்கு எதிரான போரில் வேட்டுவர்களின் ஆண் குழந்தைகளையயல்லாம் தலையை வெட்டி கொன்றதாக கூறுகிறது.

“கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு

 பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு

 வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து

 ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்”

இப்படி வெள்ளாளர்களுக்கும் வேடுவர்களுக்கும் இடையிலான போரில் அண்ணன்மார்கள் மட்டும் வீரசிங்கங்களாக்கப்பட்டது ஏன்? 

வேடுவர்கள் மீதான பகையும் அதை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதற்கும் அண்ணன்மார்கள் கதை பயன்படுத்தபடுகிறது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்களான வேடுவர்கள் இப்பகுதியில் வேட்டையாடி தொழில் செய்து வருகின்றனர் அப்போது அங்கு பிழைப்புக்காக வந்த வந்தேறிகளான கொங்கு வெள்ளார்களுக்கும்  வேடுவர்களுக்கும் போர் நடநதாக கொங்குவேளாளர்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. என்றோ ஒரு காலத்தில் எவனோ ஒரு வேட்டுவனுக்கும் வெள்ளாளனுக்கும் இடையே நடந்த சண்டையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு கோயில் நோம்பிகளில் நாடகம் போட்டு பகையயை வளர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஒட்டுமொத்த வேட்டுவர்களையும் திருடர்களாக காட்டுவதை அனுமதிக்கவேண்டுமா?

இந்த அணணன்மார் நாடகங்களையும் கோயில்களையும் எந்தவொரு வேட்டுவனும் ரசிப்பதில்லை, ஒரு சாதியையே திருடனாக அழைப்பதை யார் தான் ஏற்று கொள்வார்கள்.

இன்றைய காலகட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினரும் நண்பர்களாக இருந்தாலும் இது போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன. அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு சில ஆண்டுகளுக்கு முன் வேட்டுவக் கவுண்டர்கள் அதிகமாக வாழும் நாமக்கல் மாவட்டம் பூசாரிப்பட்டியில்  அவர்களை வமபுக்கு இழுத்து  ஒரு கலவரத்தையே உண்டாக்கினான். அதன் பின்னணியில் பொன்னர் சங்கர் கதையிருப்பதை மறுக்க முடியாது. அன்று வேட்டுவனாகவும் வெள்ளாளனாகவும் இருப்பவன் இப்போதும் அதே சாதியாக இருப்பான் என்று கூறமுடியாது.

இந்ந கதை  மூதறிஞர்(!) கருணாநிதியை கவர்ந்திழுக்க காரணம் என்ன?

ஓட்டு.

ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக வேட்டுவன்களை தாழ்த்தியும் வெள்ளாளன்களையும் உயர்த்தியும் இக்கதையை மெருகேற்றியுள்ளார் மு.க., அதற்கு காரணம் கொங்கு பகுதியில் வேட்டுவக்கவுண்டர்கள் சிறுபான்மை சமூகத்தினராகவும் பொருளாதாரரீதியில் பின் தங்கியும்உள்ளனர். ஆனால் வெள்ளாளக்கவுண்டர்கள் பெரும்பான்மையுடனும், பொருளதார பின்னணியுடனும் உள்ளனர்.

ஒரு வேளை, வேட்டுவர்கள் பெரும்பான்மையினராக இருந்திருந்தால் மு.க பொன்னர் சங்கர் எழுதியிருக்கமாட்டார். மாவீரன் தலையூர் காளி என்ற வீர புராணத்தை எழுதியிருப்பார்.

தலையூர் காளியும் பொன்னர் சங்கரும் வேட்டுவர் சாதியைசேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது இப்படி சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதி என்பதிலும் பல கருத்து நிலவுகிறது .

இன்றையக் காலக்கட்த்தில் இப்படி ஒரு கதை தேவையா . இந்த டுபாக்கூர் சாதி வெறி கதையை ரசித்து எழுதியதாக சொல்லும் கருணாநிதிக்கு சாதி ஒழிப்பு வீரரான பெரியாரின் பெயரை சொல்லும்  தகுதி கூட கிடையாது.

நடந்ததா என்ற ஐயத்துக்குறிய கதையை எழுதும் கருணாநிதி   வெள்ளையர்களுக்கெதிரான காலனியாதிக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரன் பகத்சிங்கின் கதையை எழுதுவாரா?  ஒரு வேளை பகத்சிங்கின் சாதியினர் தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளாக இருந்திருந்தால் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் .

நன்றி: தோழர் விடுதலை

ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

24 ஜன

வினவில் திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது “இந்த படத்தை பாக்காதீங்க, கதையே இல்லை” என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அதுவேறு வயிற்றில் பீதியைக் கிளப்பியது. வளாகத்தில் விஜயின் காவலன் படத்திற்குத்தான் கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆடுகளத்திற்கு அந்த அளவுக்கில்லை. சன் டி.வியின் ஏகபோகம் உருவாக்கியிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், விஜய் போன்ற நட்சத்திரங்கள் தாமே உருவாக்கியிருந்த இமேஜை துறக்க முடியாமல் அதனாலேயே சிக்கிக் கொண்டிருக்கும் கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

சமீப காலமாக கிராமங்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வருகின்றன. யதார்த்தத்தில் கிராமப்புறங்கள், விவசாயத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் நாட்டுப்புறங்களின் மேல் அளவிலா காதல் கொண்டிருக்கும் மர்மமென்ன?

சிலம்பு வாத்தியாரைப் போல சேவல்களை பழக்கி சண்டைப் போட்டிக்கு விடும் பேட்டைக்காரனாக கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன். அவரிடம் சேவல்களை பழக்கும் சீடர்களாய் தனுஷும், கிஷோரும். கிஷோர் மதுவறை நடத்தும் வசதியானவர். தனுஷ் அப்படியில்லை. வெறுமனே எடுபிடியாக வருகிறார். ஏதாவது ஒரு போட்டியிலாவது பேட்டைக்காரனை வெல்ல வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு வரும் இன்ஸ்பெக்டராக ரத்தினம்.

இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சியோடு தனுஷின் காதல். அப்புறம் முழு வீச்சாக நடக்கும் பிரம்மாண்டமான சேவல் சண்டை போட்டி. போட்டியில் குருவின் மதிப்பீட்டை பொய்யாக்கி, அவரது உத்திரவை மறுத்து  தனுஷின் சேவல் வெற்றி பெறுகிறது. சீடனின் வெற்றியை சீரணிக்க முடியாமல் பிறகு அவனையே பழி தீர்க்க முயலும் பேட்டைக்காரன். கிஷோர், தனுஷ் இருவரையும் மோதவிட்டு, காதலியை பிரித்து, அதற்காக இளம் வயது மனைவியை விரட்டி, எல்லாம் செய்கிறார் ஜெயபாலன். இறுதியில் அவர் மனம் திருந்தியோ இல்லை இன்னும் தனுஷை பழிவாங்க வேண்டுமென்றோ தற்கொலை செய்ய, அந்த பழியுடன் தனுஷ் காதலியோடு ஊரைவிட்டு போகிறார்.

முற்பாதியில் தனுஷின் காதல். பிற்பாதியில் ஜெயபாலனது துரோகம். இரண்டு உணர்ச்சிகளும் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவை. முன்னது இதயத்திற்கு தாலாட்ட, பின்னது வயிற்றில் பதைபதைப்பை உருவாக்கும். அந்த பலத்தில் இந்த இரு உணர்ச்சிகளையும் சேவற் சண்டை பின்னணிக் களத்தில் துணிந்து  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இது போதாதா? கிராமம், முதன்முறையாக சேவற் சண்டை களம் என்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள்.

முதலில் காதல். இது கதையோடு பொருத்தமின்றி திணிக்கப்பட்ட காதல் என்று சிலருக்குத் தோணலாம். எந்தக் கதையில் காதல் இயல்பாக வந்திருக்கிறது? ஆஸ்திரேலியா போக வாய்ப்பிருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சேவற் சண்டைக்காக ஊரைச் சுற்றும் ஒரு லுங்கி கட்டிய இளைஞனை காதலிக்கும் அபத்தம் இருக்கட்டும். அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.

அந்த வகையில் தமிழ் சினிமா காதலின் ஜனநாயகத்தைக் கூட இன்னும் கற்றுத் தரவில்லை. மட்டுமல்ல, அந்த இடத்தில் ஆணாதிக்க சர்வாதிகாரத்தையே இளைஞர்களின் ஆளுமைப் பண்பாகவும் உணர்த்துகிறது. படியாத மாட்டை படிய வைப்பது போல அந்த பெண்ணை படியவைக்கும் தனுஷின் முயற்சிகளில் தங்களது ஆளுமைகளை உணர்கிறார்கள், கைதட்டும் இரசிகர்கள். காதல் என்பது இருபாலாரின் சமத்துவத்தையும், அதன் பால் வரும் விருப்பத் தெரிவையும் கொள்ளாமல் இருந்தால் அது காதலா, இல்லை பெண்டாளும் ‘கொலை’யா?

ஏழை இளைஞன் தனது வீரத்தால் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. பரிசாரர்கள் புடை சூழ வாழும் அந்த பெரிய இடத்து மங்கைகள் பின்னர் காதலனுக்காக குடிசையில் மூக்கு சிந்தி அடுப்பூதும் தியாகத்தை ஏற்கிறார்கள். யதார்த்தத்தில் இது சாத்தியமா? படத்தில் டேபிள் மேனர்சோடு விருந்துண்ணும் நாகரீகம் உள்ள அந்த பெண் ஒரு நாள் தனுஷோடு சுற்றிவிட்டு, பிய்த்துப் போட்ட புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, கை கழுவிய பின் உடையில் துடைக்கும் தனுஷைப் போலவை துடைக்கிறாள். இயக்குநரின் மெய்சிலிர்க்க வைக்கும் ‘டச்’!

இது போல பல படங்களில் பார்த்திருக்கிறோம். மாளிகையிலிருந்து இறங்கும் பெண்கள் குடிசைகளில் ஒன்றி வாழ்வதையும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உண்ணும் வழக்கமுள்ளவர்கள், கையேந்தி பவன்களில் இரசித்து சாப்பிடும் அழகையும் சகித்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் நமது இரசிகர்கள் ஏன் இரசிக்கிறார்கள்? இது யதார்த்தமே இல்லை என்று தெரிந்தும் இயக்குநர்கள் தொடர்ந்து இப்படி ஏன் படுத்துகிறார்கள்?

வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா? நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் வாழ்க்கையை நிறைவேற்ற ஓடியும் வாடியும் வரும் பெண்கள் இப்படி தங்களது நிலையிலிருந்து அதை துறந்து விட்டு சாமியார் போல வருவார்களா என்ன? புறாக்கள் சூழ, தோட்டமே பூத்திருக்க, தளைய தளைய கட்டிய பட்டுச் சேலையுடன், இத்தாலி பாணி நவநாகரீக கிச்சனில் லியோ காபி போட்டு, லேப்டாப்பில் கணவனுடன் மகிழ்ந்திருக்கும் அந்த பெண், தெருவில் குப்பை அள்ளும் இளைஞனைப் பார்த்து காதலிக்கிறாள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?

அடுத்தது கிராமம்.

கிராமமென்றால் வெள்ளேந்தியான மனிதர்கள், மீசையை உருவும் வில்லன்கள் என்ற ஃபார்முலாவை ஆடுகளத்தின் இயக்குநர் வெற்றி மாறனும் மீறவில்லை. சமீப காலமாக நிறைய படங்கள் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து வருகின்றன. இந்த போக்கில் நாம் இன்றைய கிராமங்களை மட்டுமல்ல, நேற்றைய கிராமங்களையும் உண்மையாக பார்க்க இயலாது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

தனுஷின் தந்தை இறந்துவிட, அவரது தாய் ரேஷன் கடைக்கு சென்று, பையனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் கோபத்தில் ஏறியும் பொருட்களை கண்டு புலம்புவதை நிறுத்தி இறுதியில் இறந்தே போகிறாள். சேவல் வாத்தியாரோடு ஊரைச்சுற்றி வரும் தனுஷ், காதலிக்கிறார், நண்பனுடன் குடிக்கிறார், சேவலை பாசத்துடன் வளர்க்கிறார். உழைக்கும் பெண்களது காசில் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் ஆண்கள்தான் தமிழக கிராமத்து யதார்த்தம்.

அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? அந்தப் பிரச்சினை படத்தின் மையப் பொருளிலேயே இருக்கிறது. சேவற்சண்டை என்ற பொழுது போக்கு ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்திருக்கலாம். குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருக்கும் கிராமத்தில் இத்தகைய சேவல் வளர்ப்பு, புறா வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஜல்லிக் கட்டு போன்றவை வீராப்பு, கௌரவத்தின் அடையாளமாக கூட இருக்கலாம்.

“சேவற் சண்டை போட்டி என்பது கஞ்சி குடிக்கும் உயிர்ப்பிரச்சினை அல்லை, அது மானப்பிரச்சினை” என்று தனுஷ் வசனம் பேசுகிறார். இரசிகர்களும் அதை தமது பிரச்சினையாக ஏற்கிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை பறித்தெடுத்துவிட்டு, விவசாயத்தை அடிமைகளின் தொழிலாக மாற்றிவரும் மான்சாண்டோ காலத்தில் எது மானப்பிரச்சினை? விளைபொருளுக்கு விலை இல்லாமல் கமிஷன் மண்டி வணிகர்களிடமும், அம்பானியிடமும் அடிபணிந்து நிற்கையில் போகாத மானம் சேவலுக்காக போகிறது என்றால்?

எனில் அத்தகைய அர்த்தமற்ற மானம் இங்கே இடித்துரைக்கப்படவேண்டும். மாறாக அது ஒரு மகாபாரதப் போராக மாபெரும் கௌரவப்பிரச்சினையாக காட்டுகிறார், இயக்குநர். சமூக உறவுகளோடு நெருக்கமாக வாழும் கிராம சமூகத்தில், முழு வாழ்க்கையும் அங்கேயே பிறந்து மரிக்க வேண்டுமென்ற குறுகிய வட்டத்தில் இத்தகைய சேவல் சண்டைகள் கூட வாழ்வா, சாவா பிரச்சினையாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் அது அந்த குறுகிய உலகின் மீதான யதார்த்தமான விமரிசனப் பார்வையாக பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சான்றாக, கிராமங்களில் வாழும் சாதி ஆதிக்கமே இத்தகைய சேவல், மாடு பிடி சண்டைகளின் அடிநாதமாக இருக்கிறது. தேவர் வீட்டு சேவலை, பள்ளர் வீட்டு சேவல் வென்று விட்டது என்றால் வரும் சண்டைதான் அந்த குறுகிய உலகின் அற்பத்தனத்தை விரிந்த அளவில் காட்டும். ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும். அதன்றி இங்கே மானம் ஏது? சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்? ஆதிக்க சாதி பெண்ணை ஒரு தலித் மணந்துவிட்டால் ஏற்படும் பதட்டங்கள்தான் சேவல் சண்டையிலும் இருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் உண்மையிலேயே சமகால வாழ்க்கையை நெருங்கிச் சென்றிருக்க முடியும். அத்தகைய தைரியமில்லாததால் இயக்குநர் இதை துரோகத்தின் கதையாக எடுத்திருக்கிறார்.

சாதி ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. அங்கே நிலவுவது நிலவுடைமை வர்க்கங்களின் கட்டைப்பஞ்சாயத்துதான். ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமை மறுப்பிலேயே நீதி நியாயம் என்பது நாட்டுப்புறங்களில் பேசப்படும். அதிலும் விவசாயத்தை மையமாக கொள்ளாமல் வெறுமனே சேவல் வளர்ப்பு என்று இருக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் என்ன நீதி இருக்க முடியும்? கிராமத்து லும்பன்களான இவர்களிடம் சேவற் சண்டைகளில் கிடைக்கும் பணம், புகழ்தான் முக்கியமென்றால் அதற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் நீதி, நியாயம் என்று ஒரு கதை செய்வது பொருத்தமாக இல்லையே?

சாதி மற்றும் நிலவுடைமை ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் மூத்தோர் சொல் தட்டக்கூடாது என்பது ஒரு வகையில் ஜனநாயக மறுப்புதான். அந்த ஜனநாயக மறுப்பின் அற்பத்தனத்தை காட்டவேண்டுமென்றால் அது விரிந்த சமூக யதார்த்தத்தில்தான் சாத்தியம். சேவற் சண்டை வாத்தியாரது கோணத்தில் அதைக் காட்டும்போது அது ஏதோ ஒரு வில்லனது நடவடிக்கையாக சுருங்கி விடுகிறது. ஏனெனில் தந்தை, பண்ணையார், கணவன், அண்ணன், ஆதிக்க சாதி என்று எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மூத்தோர் அதிகாரத்தால் பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள். அதற்கு கிராமத்தின் மையமான பொருளாதார வாழ்விலிருக்கும் பாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

சேவற்சண்டை தொடர்பாக போலீசு, அரசியல் கட்சிகள், சாதி, ஊர் கௌரவம், என்று சமூகம் தழுவிய பின்னணியோடு இந்த கதை இருந்திருந்தாலும் இதன் பரிமாணம் விரிந்திருக்கும். அதற்கு மாறாக நாயகன்,காதல், வில்லன் என்று எளிமைப்படுத்தப் பட்ட சுருங்கிய இடத்திலேயே கதை சுற்றுவதால் பார்வையாளன் இதில் எதையும் புதிதாகப் பெறப்போவதில்லை.

இது வெற்றிமாறனுக்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல. தமிழ் சினிமாவின் எல்லா இயக்குநர்களும் கதை என்றாலே அதை சில உணர்ச்சிகள், பாத்திரங்களின் வழியாக மிக மிக எளிமைபடுத்தியே உருவாக்குகிறார்கள். ஆனால் இத்தகைய கதைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் (80.90களில்) அது சம கால கேரளத்தின் வாழ்வோடு வண்ணமயமாகவும், விரிந்த அளவில் வாழ்க்கையை உணர்த்துவதாகவும் இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்தெல்லாம் சேவற் சண்டைகளை ‘ஆய்வு’ செய்து சேகரித்திருக்கும் இயக்குநர் சமகால கிராம வாழ்வு குறித்து எதையும் பார்த்த மாதிரி தெரியவில்லையே?

எனினும் இந்தப்படத்தின் பாத்திரங்களும், கதை அமைப்பும், காதலை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழுத்தமாகவும், இயல்பாகவும் படைக்கப்பட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் நட்பு, துரோகம், அவலம், கையறுநிலை முதலான உணர்ச்சிகளை சமூக யதார்த்தத்தில் பட்டை தீட்டப்படாத சினிமா புனைவு மூலம் நாம் ஒரு இரசனையாக பயன்றிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நமது வாழ்க்கையில் கூட இத்தகைய பிரச்சினைகளே ஆழமான முக்கியத்துவமின்றி நெடுங்காலம் மனதை ஆக்கிரமித்திருக்கும் வண்ணம் வாழ்கிறோம். அற்ப விசயங்களுக்காக ஆழமான மன பாதிப்பு அடைவது உண்மையென்றாலும் அதுவே வாழ்க்கையின் ஆழம் ஆகிவிடாது இல்லையா? அதனால்தான் இந்த படம் பாத்திரங்களின் சித்தரிப்பில் கொண்டிருக்கும் ‘ஆழத்தை’  சமூக வாழ்க்கையில் கொள்ள வேண்டிய ஆழமாக பயணிக்கவில்லை. நாமும் தெரிந்த உணர்ச்சிகள், அறிந்த அனுபவங்கள் என்று அதிலேயே நின்றுவிடுகிறோம்.

கிராம வாழ்க்கையில் இருந்து கொண்டு கதை சொல்வது வேறு. ஒரு கதைக்காக கிராமத்தை பின்னணியாகக் கொள்வது வேறு. அந்த வகையில் இந்தப் படம் தொப்பிக்காக தலையை வெட்டுகிறது. நல்ல நடிப்பு, ஒளிப்பதிவு, அசலான கிராமக் காட்சிகள் எல்லாம் இருந்தும் இது வழக்கமான ஃபார்முலா கதைகளை பார்த்த எரிச்சலையே தருகிறது.

இதுதான் உண்மையான கிராமத்தை காட்டுவதாக நம்புபவர்கள், உண்மையான கிராமத்தை காட்டினால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.

 

நன்றி: வினவு

அம்பேத்கர்: அறிவுஜீவி அரசியல்

6 டிசம்பர்

“இந்தியா ஏற்றத் தாழ்வுகளின் தாயகம். பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது. அதற்கு நுழைவாயில் கிடையாது. படிக்கட்டுகளும் இல்லை. அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்த தளத்திலேயே இருக்க வேண்டியதுதான்.”

– அம்பேத்கர், பத்திரிகை தலையங்கத்தில்

 

‘தசாவதாரம்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. மணல் கொள்ளை  அரசியல்வாதியிடம் பர்மிட்டை காண்பிக்கச் சொல்லி ஒரு தலித் அமைப்பு கேள்வி எழுப்பும். “உங்கள்ல படிச்சவங்க யாருடா இருக்கா?” என்பார் அரசியல்வாதி. ‘அதெல்லாம் அந்தக் காலம். இப்பம் எங்கள்ல படிக்காதவங்க ஒருத்தனையாவது காமி பாப்போம்” என்று பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறான சூழல் ஏற்படுவதற்கு சுதந்திர இந்தியாவிற்கு முன்னரே அடித்தளம் போட்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டாக்டர்.பாபா சாஹேப் அம்பேத்கர். இந்தியாவின் தாழ்ததப்பட்ட மக்களின் முதல் பட்டதாரி வழக்கறிஞர்.  வாழ்வின் பெரும்பான்மை முழுவதையும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சமூக விடுதலைக்காகவும்  சிந்தித்தவர்; போராடினவர். தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா.

அம்பேத்கர் குறித்து NFDC தயாரித்து 1998-ல் உருவாக்கப்பட்டு 2000-ல் வெளியான திரைப்படமொன்று தமிழ் மொழி மாற்றத்துடன் சமீபத்தில் வெளியாகியிரு்ககிறது. 1998-ன் சிறந்தபடத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அம்பேத்கராக நடித்த மம்முட்டிக்கு சிறந்த நடிகர் விருதும் நிதின் சந்திரகாந்த் தேசாய்க்கு சிறந்த ஆர்ட் டைரக்டர் விருதும் கிடைத்தன. காந்தி படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற பானு அதையா இதில் பணியாற்றியுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் மூலம் இத்தனை பெரிய ஆளுமையின் முழு பரிமாணத்தை அறிந்து கொள்ள முடியாதென்றாலும், அறியாமலே இருப்பதற்கு பதிலாக இதிலிருந்து துவங்குவதற்காவது இந்தத் திரைப்படம் உதவும்.  மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒர் அமைப்பு  உருவாக்கின படத்தைக் காண மக்களே போராட வேண்டிய அவலமான சூழல். பத்து வருடங்களுக்கு முன்பாகவே உருவான திரைப்படத்தை சமீபத்தில்தான் காணும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு, அதுவும் சொற்ப திரையரங்குளில், காலை நேரத்தில். சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி.

கோடிக்கணக்கான ரூபாயில் தயாராகும் வணிகக் குப்பை திரைப்படங்கள் நிமிடத்திற்கொரு முறை விஷ அம்பாக நம் மூளைகளில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபத்தமான சூழலில் அரசே முன்வந்து வரிவிலக்கு அளித்து மக்களிடம் இதை பரவலாகக் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். அதுசரி.  ‘பெண் சிங்கத்திற்கும்’ ‘மானாட மயிலாட’ போன்றவைகளின் முன்னால் அம்பேத்கர் அப்படியொன்றும் அவசியமானவர் இல்லைதானே?

**********************************************

சரி. இப்போது அம்பேத்கர் திரைப்படத்திற்கு வருவோம்.

வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். சுமார் பத்து வருடத்திற்கு முன்பு உருவான திரைப்படத்தை இப்போது பார்ப்பதில் சில தயக்கங்கள் எனக்கு இருந்தன. ஒளிப்பதிவு எப்போது இருக்குமோ, அது நன்றாக இருந்தாலும் பிரிணட் எப்படி இருக்குமோ, முக்கியமாக தேசத் தலைவர்களின் ஆளுமைகளின் வாழ்க்கை குறித்து உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் பல எனக்கு அதிருப்தியையே தந்திருக்கின்றன. (காந்தி போன்றவை தவிர). சமீபத்தில் வெளியான பெரியார், காமராஜர் போன்று, எங்கே இதுவும் மோசமான உருவாக்கமாக இருக்குமோ என்று எணணிக் கொண்டிருந்தேன்.

என்னுடைய அத்தனை தயக்கங்களையும் தகர்த்து விட்டு இத்திரைப்படம். இந்த வருடம்தான் எடுத்தது போல் அத்தனை புத்தம் புதிதான வெளித்தோற்றத்துடனும் உள்ளடக்கத்துடனும் இருக்கிறது. தேசத் தலைவர்கள் குறித்த திரைப்படங்கள் என்றாலே, பொதுவாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சுவையான சம்பவங்களின் தொகுப்பாகவும் சமுதாயத் தொடர்பைப் பற்றி மேலோட்டமாகவும் இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் அம்பேத்கரின் அரசியல் குறித்த நிகழ்வுகளும் அது குறித்த உரையாடல்களும் முக்கியத்துவத்தோடு பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த அரசியல் ரீதியான முரண்பாடு அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

‘காந்தி ஒரு சந்தர்ப்பவாதி அரசியல்வாதி’ என்பது மாதிரியான காந்தி குறித்து அம்பேத்கர் முன்வைக்கும் விமர்சனமெல்லாம் அப்படியே பதிவாகியிருக்கிறது. சென்சாரில் எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. ‘மகாத்மாக்கள் வருவார்கள், போவார்கள், தீண்டாமை இன்னும் அப்படியேதானே இருக்கிறது’ என்கிறார் அம்பேத்கர்.

‘ காந்தி வெளிநாட்டுத் துணிகளையெல்லாம் எரித்து போராட்டம் செய்கிறாராம்’ என்று தகவல் தருகிறார் நண்பரொருவர். அதற்கு அம்பேத்கர் சொல்வது ‘அவர் எரிக்க வேண்டிய விஷயம் இன்னும் நெறைய இருக்கு”.

பரோடா சமஸ்தானம் அளிக்கும் உதவித் தொகையின் மூலமாக நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைகழகத்தில் அம்பேத்கர் கல்வி பயிலும் காட்சியோடு படம் துவங்குகிறது. ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது’ என்று கேட்கிறார்கள். ‘நான் இங்கு வந்தது கல்வி பயில்வதற்காக. இப்போது அதைத்தான் முழுக்கவனத்துடன் செய்வேன்’ என்கிறார் அம்பேத்கர். சமஸ்தானம் உதவியை நிறுத்திக் கொள்ள வேறு வழியின்றி இந்தியா திரும்புகிறார். அங்கு வரவு செலவு அதிகாரியாக பணி கிடைத்தாலும் தங்குவதற்கான இடம் கிடைக்கவில்லை.

தீண்டாமை என்னும் கருநாகம் அவர் செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து அவரைத் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது. மஹர் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த பாவத்திற்காக ஆதிக்கச் சாதியினர் எல்லா இடத்திலும் அவரை மறுக்கின்றனர். பார்சி இனத்தவர்களுக்கான சத்திரத்தில் கெஞ்சிக் கூத்தாடி தங்குகிறார். ஆனால் சில நாட்களிலேயே இதை கண்டுபிடித்து பார்சிக்காரர்கள் தடி,கம்புகளுடன் வந்து அவரைத் துரத்துகின்றனர்.

தமக்கு வேலையளித்த மகாராஜாவிடமே இது குறித்து முறையிடுகிறார். ‘உனக்கு வேலை தந்ததே நான் செய்த புரட்சி. மேலும் உன்னை ஆதரித்தால் எனக்கு தொல்லை ஏற்படும்’ என்கிறார் மகாராஜா.

சுயபச்சாபத்தினால் ஒரு பூங்காவில் அமர்ந்து அம்பேத்கர் அழும் காட்சி ஒரே ஒரு முறை காட்டப்படுகிறது. இது போல் எத்தனை முறையோ? கல்வி எனும் சாதனம் சமூக விடுதலையைத் தேடித் தரும் என்பது பொதுவான கருத்தானாலும் அது மாத்திரமே உதவாது என்பது அவருக்கு தெளிவாக புரிந்து போகிறது. தங்களுக்கான உரிமைகளை தாங்களேதான் போராடி பெற வேண்டும்.

நீருக்கும் தீண்டாமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது போலும்.

இயற்கை அனைவருக்கும் பொதுவாக அளித்துள்ள நீரை ஆதிக்கச் சாதிக்காரர்களே ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். பணியிடத்தில் அவருக்கு கீழ் பணிபுரிகிற ஆதிக்கச் சாதிக்காரன் அவருக்கு தண்ணீர் கொண்டுவர தர மறுக்கிறான்.

கல்லூரி பேராசிரியராக பணிபுரிகிற சமயத்தில் அவர் தண்ணீர் அருந்த முயல்வதை மற்ற பேராசிரியர்கள் தடுக்கின்றனர். “வேண்டுமானால் வீட்டிலிருந்து கொண்டு வாருங்கள்’ என்கிறார்கள். ‘நான் அருந்தும் நீர் தீட்டுப்பட்டுவிட்டது என்று கருதுவீர்களானால் அவரவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள்தான் நீர் கொண்டு வர வேண்டும்’ என்று பதிலடி தருகிறார் அம்பேத்கர். மேலும் ‘நீர் தீட்டுப் பட்டு விட்டால் அதைப் போக்கும் மந்திரம்தான் உங்களுக்குத் தெரியுமே. அதைக்கொண்டு நீரை சுத்தப்படுத்திக் கொள்ளுங்களேன்’ என்று அவர்களின் மூக்கை உடைக்கிறார். சம்பந்தப்பட்ட மந்திரத்தையும் ஸ்பஷ்டமாக உச்சரித்துக் காட்டுகிறார்.

மக்களிடம் அவர்களின் விழிப்புணர்விற்கான செயற்பாட்டைத் துவங்கியதுமே அவர் முதலில் கையிலெடுக்கும் போராட்டம், நகர சபையினால் அங்கீரிக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படுகிற குளங்களில் நீர் அருந்தும் போராட்டம்தான்.

பம்பாயிலிருக்கும் பிராமண எதிர்ப்புச் சங்கமொன்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்புகிறது. ஆனால் பிராமணர்களை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. அம்பேத்கர் தெளிவாக இதை மறுத்துவிடுகிறார். ‘பிராமணர்கள் மாத்திரமல்ல, அதற்கு அடுத்தடுத்த அடுக்குகளில் இருக்கும் சாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களை தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாக்கும் போது பிராமணர்களை மட்டும் எதிர்ப்பது முறையாகாது’ என்பது அவரின் நிலைப்பாடு.

மேற்படிப்பைத் தொடர்வதற்காக மீண்டும் லண்டன் பயணம். இந்தியாவில் தீண்டாமையினால் அல்லறுவது போல அங்கே இனவெறியினால் கிடைக்கிற துன்பம். ஏழ்மை வேறு. ஆனால் எதுவுமே அவரின் கல்வித்தாகத்தை தடுக்க முடியவில்லை. இந்தியாவின் சாதிஅமைப்புகள் குறித்தான ஆய்வுக் கட்டுரை பல்கலைகழகத்தால் ஏற்கப்பட்டாலும் அதன் கடுமையான மொழிநடை அவர்களை பதட்டமடையச் செய்கிறது. மாற்றி எழுதித் தரச் சொல்கிறார்கள். தன் தோழியிடம் இது குறித்து ஆத்திரத்துடன் உரையாடுகிறார். “என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கிறாள் அவள்.

அம்பேத்கர் சொல்கிறார்: ‘திருத்துவேன்’. இரு பொருள்பட என் காதில் ஒலிக்கிறது இது.

மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பியவுடன் முழு மூச்சாக தன் சமூகப் போராட்டத்தில் ஈடுபடுகிறார். காந்தி சைமன் கமிஷனை புறக்கணிக்கிற போது அம்பேத்கர் அங்கு சென்று இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் கொடுமையை விளக்கிச் சொல்லி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டிற்கான அவசியத்தை முன்வைக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் எனினும் அவர்களும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களை தனியாக பிரித்தால், சாதி இந்துக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடைவெளி இன்னும் தீவிரமாகி இரு பிரிவுகளுக்கான ஒற்றுமை சாத்தியப்படவே படாது என்பது காந்தியின் நிலைப்பாடு.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீடிக்கிற தீண்டாமைக் கொடுமை அடுத்து வரும் சில வருடங்களில் தீரப் போவதில்லை என்பது அம்பேத்கரின் யதார்த்தமான வாதம். (அம்பேத்கரின் தீர்க்கதரிசனம் இன்றும் கூட காலாவதியாகிவிடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது). முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் கூட தொகுதி ஒதுக்கீடு அளிக்க ஒப்புக் கொள்கிற காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதை மறுப்பது என்ன நியாயம் என ஆவேசமாக முழங்குகிறார் அம்பேத்கர்.  தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்களின் இனவெறி தாக்குதல்கள் குறித்து தெளிவாக அனுபவித்திருக்கிற காந்தி, இந்தியாவில் அதே நிலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது பொருத்திப் பார்க்காமல் வசதியாக மறந்து விடுவது ஏன்? என்பதும் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்வி. (ஆனால் சுதந்திர அறிவிப்பின் போது ‘பாகிஸ்தான்’ குறித்த ஜின்னாவின் கோரிக்கையை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளாதது குறித்து நெருடல் ஏற்படுகிறது. முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கரின் தீவிரமான விமர்சனங்கள் படத்தில் வெளிப்படவில்லை. சென்சாரில் துண்டிக்கப்பட்டதா என தெரியவில்லை.)

அம்பேத்கர் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதத்தை அறிவிக்கிறார். பெரும்பான்மையான மக்களின் வெறுப்பு அம்பேத்கரின் மீது படிகிறது. காங்கிரஸூக்கு எதிராக செயல்பட்டு பிரிட்டிஷ்ஷாருடன் பேச்சு வார்த்தை நடத்தும் அவரை ‘தேசத் துரோகி’ என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்.

‘தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களின் தொகுதி ஒதுக்கீடு குறித்தான அவசியத்தை காந்தியிடம் விவாதிக்கிறார். ‘தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இந்துக்களிடம் பிரிவினை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை’ என்கிற அதே பல்லவியை பாடுகிறார் காந்தி. ‘5 வருடங்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் மக்கள் மனம் மாறுவார்கள்’

இத்தனை வருடங்களாக ஏற்படாத மாற்றம் சில வருடங்களில் ஏற்படும் என்பதை அம்பேத்கர் ஏற்கத் தயாராக இல்லை. ‘தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என்கிற நிலையில்தான் ஆதிக்கச் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்தாமல் இருப்பார்கள்’.

உண்ணாவிரதம் காரணமாக காந்தியின் உயிருக்கு ஆபத்து நேரிடும் போது எல்லாத் திசைகளிலிருந்து நெருக்கடியும் அழுத்தமும் கூடுகிறது. வேறு வழியின்றி காந்தியை சந்தித்து தம்முடைய சமரசங்களை முன்வைக்கிறார். விடைபெறும் போது காந்தியிடம் சொல்கிறார். ‘காந்திஜி, அடிக்கடி உண்ணாவிரதம் என்னும் ஆயுதத்தை கையில் எடுக்காதீர்கள்’.

தாம் நிற்கிற நிலையிலிருந்து விலக மறுக்காத காந்தியின் பிடிவாதமும் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளை முழுக்க புரிந்து கொள்ள விரும்பாத அவரின் மீது அம்பேத்கர் கொள்கிற எரிச்சலும் முரணும் இத்திரைப்படம் முழுக்க பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் மனதின் ஆழத்தில் காந்தி மீது இவர் வைத்திருக்கிற மரியாதையும். காந்தி உண்ணாவிரதமிரு்க்கிற சமயத்தில், தம்முடைய உணவை திருப்பி அனுப்பி விடுவதின் மூலம் இதை உணர முடிகிறது.

தம்முடைய சமூகப் போராட்டத்திற்கு தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக இருப்பதே கசப்புடன் உணர்கிறார். ‘தீண்டத்தகாதவன்’ என்று தங்கள் மீது அழுத்தமாக குத்தப்பட்டிருக்கும் முத்திரையை இந்து மதத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே நீக்க முடியும் என்று நம்புகிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடும் போது தேர்தல் கூட்டணிக்காக பேச்சு வார்த்தை நடத்த முண்டியடிப்பது போன்று மற்ற மதங்களின் தலைவர்கள் பேரத்திற்கு வருகின்றார்கள். அவரை இந்து மதத்திலேயே தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெறுகிறது. பலத்த ஆலோசனைக்குப் பின் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலிருப்பதாக அவர் நம்புகிற பெளத்த மதத்தை தேர்ந்தெடுக்கிறார்.

சுமார் ஐந்து லட்சம் மக்களோடு அவர் பெளத்த மதத்தை தழுவுவதோடு படம் நிறைகிறது.

சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சர் பொறுப்பும் அவரைத் தேடிவருகிறது. இந்த ஆலோசனையை நேருவிடம் முன்வைப்பவர் காந்திதான். எந்த இடையூறுமில்லாமல் இதைச் செய்யலாம் என்கிற நேருவின் உத்தரவாதத்துடன் அதை ஏற்றுக் கொள்கிறார் அம்பேத்கர். குழுவிலுள்ள மற்ற நபர்கள் பல்வேறு காரணங்களினால் செயல்படாத நிலையில் தனியொருவராக இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கிறார். ஆனால் இந்து சட்ட மசோதா குறித்த பகுதிகளை நேரு ஏற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏமாற்றமும் கசப்பும் கொள்ளும் அம்பேத்கர் தன் பதவியை ராஜினாமா செய்கிறார்.
அம்பேத்கரின் தனி வாழ்க்கையும் இடையிடையில் சொல்லப்படுகிறது. வெளிநாட்டு கல்வி தொடர்பான காட்சிகளின் இடையில் சிறுவயதில் அவர் சந்திக்க நேர்ந்த தீண்டாமைக் கொடுமைகள் காட்சிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவரது மனைவியான ரமாபாய் (சோனாலி குல்கர்னி) ஒரு சாதாரண குடும்பத்தலைவி. கல்விக்காகவும் போராட்டத்திற்காகவும் தன்னை விட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிற கணவனின் அருகாமைக்கு ஏங்குகிறவர். எக்காரணம் கொண்டும் தன் குழந்தைகளின் படிப்பு தடைபட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அம்பேத்கர்.

உடல் நலிவுற்று ரமாபாய் இறக்கும் காட்சி உருக்கம். ‘வெளியே மழை பெய்கிறதா’ என்று பிதற்றுகிறார் ரமாபாய். பாவனையாய் அதை ஆமோதிக்கிறார் அம்பேத்கர். அவர்களின் இளவயதுத் திருமணத்தின் போது மழை பெய்த காட்சிகள் மிகப் பொருத்தமாய் இங்கு இணைகிறது.

முன்னரே குறிப்பிட்ட படி அம்பேத்கர் என்கிற ஆளுமை குறித்தான நல்லதொரு அறிமுகத்தை தருகிறது இத்திரைப்படம். 90 களில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், அந்தக் காலக் கட்டத்திற்காக பின்னணிகளுக்காகவும், வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்காகவும் எவ்வித சமரசங்களுமின்றி நம்பகத்தன்மையோடு பதிவாகியிருக்கின்றன. அசோக் மேத்தாவின் சிறந்த ஒளிப்பதிவு இந்த அனுபவத்தை இன்னும் உன்னதமாக்குகிறது.

கிளிஷேவான வாக்கியமாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன். இத்திரைப்படத்தின் எந்தவொரு காட்சியிலும் எனக்கு மம்முட்டி என்கிற நடிகரே தெரியவில்லை. உருவப் பொருத்தம் முதற்கொண்டு அத்தனை கச்சிதமான தேர்வு. மம்முட்டியின் அடக்கமான நடிப்பு அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததில் ஆச்சரியமில்லை.

*****************************************

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் 05.12.2010 அன்று காலை 11.15 மணிக் காட்சியில் இத்திரைப்படத்தைக் கண்டேன்.

விடாது பெய்துக் கொண்டிருந்த மழையிலும் சுமார் 40 சதவீத அரங்கம் நிரம்பியிருந்தது குறித்து மகிழ்ச்சி. திரையரங்குகளில் நடிகர்களின் புகைப்படங்களையே கண்டு எரிச்சலடைந்திருந்த கண்களுக்கு, அம்பேத்கரின் வாசகங்களும் புகைப்படங்களும் தாங்கிய பதாகைகள் மகிழ்ச்சியை ஏற்படு்த்தின. அம்பேத்கர் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு பார்வையாளர்களை வரவேற்றனர். ஓரு அரசியல் திரைப்படத்தின் காட்சிகளை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பொருத்தமான இடங்களில் கைத்தட்டல்களின் மூலம் எதிர்வினையாற்றியது குறித்தும் மகிழ்வாக இருந்தது. காந்தியைப் பற்றின அதீதமான கூச்சல்கள்தான் சங்கடத்தை ஏற்படுத்தின.

இன்னும் சில நாட்களே திரையிடப்பட இருக்கும் இதை சந்தர்ப்பத்தை வீணாக்காமல் காணுமாறு வேண்டுகிறேன். முக்கியமாக குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம்.

இந்தியா என்கிற தேசத்தின் உருவாக்த்தின் பின்னால் எத்தனை பேரின் கண்ணீரும் ரத்தமும் இருக்கிறது என்பதை இளைய தலைமுறை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். நகரங்களில் மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் கிராமங்களில் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நீடிக்கிற தீண்டாமை என்னும் கொடிய கற்பிதத்தை பற்றி அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
அம்பேத்கரின் நினைவு நாளான இன்று இந்தப் பதிவு எழுதப்படுவதின் பொருத்தம் குறித்த உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

நன்றி: பிச்சைப்பாத்திரம்

நந்தலாலா – மிஷ்கின் எனும் திருடனின் அழகியல்

29 நவ்

தமிழ் படவுலகின் பாலசந்தர்+கமலஹாசன் வகை திரைக்கதை பார்முலாவை வெற்றிகரமாக கையாண்டிருக்கும் நந்தலாலா வெற்றிபெற்றிருக்கார், சொந்தமான முயற்ச்சியில் நல்ல தமிழ் படத்தை அவரால் கொடுக்க முடியும் என நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.ஆனால் அது நிச்சயம் நந்த்லாலா இல்லை.

காலம் காலமாக தமிழ் சினிமா கையாண்டுவரும் ஒரு படத்தின் திரைக்கதையை காப்பியடிப்பது, அதில் இன்னொரு பட்த்தின் கதாபாத்திரத்தை காப்பியடித்து சேர்ப்பது, அதோடு வேறு சில படங்களின் சில காட்சிகள் கடைசியாக நம் சமுகம் என்பதற்கு சாட்சியாக சில பல காட்சிகள் ஏன்ற பார்முலாவில் வெற்றிகரமாக நந்தலாலா கிகிஜிரோ எனும் ஜப்பனிய படத்துடன் தன் புத்திசாலிதனத்தை காட்டி பெருந்திரள் சிங்சாக்கள் பாராட்டுமொரு படத்தை கொடுத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை சிறுவனின் பாத்திரப்படைப்பு எல்லாம் கிகிஜிரோ, என்ன ஜப்பான் மண்ணில் நடக்கும் கதையை தமிழ் மண்ணுக்கு மாற்றும் முயற்ச்சியில் சில வேறுபாடுகள் அவ்வளவுதான்.

மிஷ்கின் கதாப்பத்திரம் குழப்பம் என்றாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை, பல கிகிஜீரோ காட்சிகளை பார்க்க மனம் சகிக்காமல் கண்ணை மூடினால் இளையாராஜா கம்பிரமாக தெரிகிறார்.

சில சில காட்சிகளில் மிஷ்கினை க்ட்டிபிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நிச்சயம மிஷ்கினுக்கு திறமையிருக்கிறது இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. அமிர் யோகியில் ஹீரொயிஸத்தை காட்ட சோட்சி காலி ஆனால் மிஷ்கின் ந்நத்லாலாவில் கதையுடன் சேர கிகிஜிரோ பிழைத்து.

கிகிஜிரோவை பார்க்கதவர்கள் நந்தலாலவை ஆஹா ஓஹோ எனலாம், பார்த்தவர்கள் மிஷ்கின் பாத்திரபடைப்பில் மட்டும் மயங்கி மகுடிக்கு ஆடலாம் ஆனால் மொத்தம் இது ரிமேக் கண்மணிகள் செய்யும் மாய வித்தைதான். கில்லி தெலுங்கு வெர்ஷ்ன், தமிழ் வெர்ஷன் பாருங்கள் தமிழுக்கு தகுந்த நிறைய மாற்றங்கள் இருக்கும், முன்னாபாய் வசூல்ராஜவாகும் போது வரும் மாற்றங்கள் இயல்பு தான்.அதற்காக?

ஒரு கார்ட் கிகிஜிரோ இன்ஸிபிரேஷன என போட்டிருந்தால் மிஷ்கினையும் நந்தலாலவையும் கொண்டாடலாம், ஆனால் எத்தனை பேர் கிகிஜிரோவை கச்சிதமாக தமிழ்படுத்த முடியும் என்று? மற்றபடி கிகிஜிரோவை பார்க்கவேயில்லை என்று சூடம் ஏத்தி சத்தியம் செய்யும் கள்ளனை ஆதரிக்க முடியது.

ஒரு திருடனின், கொலைகாரனின் திறமையையும், அழகியலை வியக்கலாம், அதிசயிக்க்லாம், ரசிக்கலாம் ஆனால் ஆதரிக்க முடியாது.என்னை போன்றவர்கள் திருடனையே ஆதரிப்பதில்லை.

நன்றி: அக்னிப் பார்வை