தொகுப்பு | செப்ரெம்பர், 2010

குமரிக்கடலில் ஆய்வு தேவை

29 செப்

கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மை குறித்து அறிய தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் வரலாற்றுப் பின்னணி கொண்டது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் கூறப்படுகின்றன.பெரும்பாலும் இலக்கியங்களில் கூறப்படும் விவரங்களை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அவற்றை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அகழாய்வுகள், தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இங்கு ஆதி தமிழர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு ஆதாரங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். தமிழகத் தொல்லியல் கழகம் சார்பில் நாகர்கோவிலில் அண்மையில் நடத்தப்பட்ட 20-ம் ஆண்டு கருத்தரங்கில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மையை விளக்கும் பல்வேறு கருத்துக்களை ஆய்வாளர்கள் வெளியிட்டிருந்தனர்.    மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு கல்வெட்டுகளும் இதன் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான முதல் தொல்லியல்துறை தலைவர். அவரால் கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்து புடைப்புச் சிற்ப நடுகல் கி.பி. 792-ம் ஆண்டைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது.சமணச் சிற்பங்கள் நிறைந்த சிதறால் மலைக்கோயில் ஆய் மன்னன் வரகுணன் காலத்தைச் சேர்ந்தது (கி.பி.906) எனப்படுகிறது.16-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சமணம் இங்கு செல்வாக்குடன் இருந்ததை நாகராஜா கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை, ஆய் அரசிலும், பாண்டிய அரசிலும் இருந்த இந்த நிலப்பகுதி சோழர்களின் அரசு விரிவாக்கத்தால் சோழ பாண்டியர் ஆட்சி நிலமாயிற்று.ராஜராஜனின் திருநந்திக்கரை குகை கல்வெட்டு, பெரிய குளங்கரை பாறைக் கல்வெட்டு, நாகர்கோவில் சோழபுரம், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், குகநாதேஸ்வரர் ஆலயங்கள் போன்றவற்றில் கிடைக்கும், ராஜேந்திர சோழன் முதலான பிறபெயர்களில் இடம்பெறும் சோழ வளநாட்டு.. மும்முடிசோழபுரம்.. போன்றவை சோழர்கால ஆட்சியின் நூற்றாண்டு கால வீச்சைப் புலப்படுத்துகின்றன.முதலாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திவரிகள் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு விஷயங்களை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.ஆனால் தொல்லியல் ஆய்வுகளில் கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் கன்னி நிலமாகவே இருக்கிறது. அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கருதுகோள்களும், கற்பனைகளும் ஆய்வு முடிவுகளாக பவனிவரும் நிலையுள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.எனவே அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளின் அடிப்படையில் முடிவுகளை கண்டறிய உரிய தொல்லியல் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழகத் தொல்லியல் கழகத்தின் உள்ளூர் செயலர் செந்தீ நடராசன்.முட்டம், சுக்குப்பாறை தேரிவிளை போன்ற இடங்களில் நுண் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. குழித்துறை கோணத்தில் செல்வராஜ் என்பவரால் கண்டறியப்பட்ட தாழிகள் குறித்த ஆய்வுகள் தொடரப்படவில்லை.மேற்குத் தொடர்ச்சி மலை அடுக்கின் இடையே விரவிக்கிடக்கும் இம்மாவட்டத்தின் மலைக் குகைகளை முறையான ஆய்வுக்கு உள்படுத்தினால் பிராமி கல்வெட்டுகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

மேற்கடற்கரையில் கடியப்பட்டினத்தில் கடலின் நடுவே 3 கி.மீ. தொலைவில் உள்ள திட்டு ஆடு மேய்ச்சான் பாறை எனப்படுகிறது.அதற்கு தெற்கே கடலின் அடியில் கல் மண்டப அமைப்புகள் இருப்பதை கடல்மூழ்கிகள் உறுதி செய்துள்ளனர்.குமரி நிலப்பகுதிகள் பலமுறை கடல் கோளுக்கு (சுனாமி) ஆள்பட்டிருக்கிறது. கி.பி.1500 வரையிலும் கூட இத்தகைய ஆழிப்பேரலைகளால் நிலப்பகுதி மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது.  இம்மாவட்டத்தில் கரையில் இருந்து சுமார் 20 கி.மீ. வரையுள்ள ஆழம் குறைந்த கடல் பகுதிகள் ஆய்வுக்குரியன என்றார் செந்தீ நடராசன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்ஆய்வு மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார் கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச்செயலர் எஸ். பத்மநாபன்.இதனால் இம்மாவட்டத்தின் வரலாற்று பின்னணி மக்களுக்கு தெரியவரும். கடல் ஆய்வு குறித்து ஏற்கெனவே கூறப்பட்டு வருகிறது. அதை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.கன்னியாகுமரி மாவட்டத்தின் தொன்மையை உலகறியச் செய்யும் வகையிலான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.

****************************************************************

பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கடல்கோள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கிய சான்றுகளை மட்டுமே கொண்டு பார்த்தால் பெரும் நிலப்பரப்பு குமரிக் கடலுக்குள் சுருட்டப்பட்டுக் கிடப்பதாக தோன்றும். ஆனால், ஜெயகரன் போன்றோர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு மட்டுமே கடல்கோளால் அழிக்கப்பட்டது, அதை குமரிக்கண்டமாக உருவகப்படுத்துவது தவறு என்கிறார். ஜெயகரனின் ஐயங்களுக்கெல்லாம் பதிலளித்து குமரிமைந்தன் பெரும் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது என்பதை நிறுவுகிறார். ஆனாலும் இவைகளுக்கான அறிவியல் ஆய்வுகள் மிகவும் குறைவே. இந்திய தொல்லியல், கடலாய்வுத்துறை இவைகளில் கவனம் கொண்டு ஆய்வு செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான பணியாகும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுக: நீதிமன்றம் உத்தரவு

29 செப்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தூத்துக்குடி  ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனடியாக மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனம், தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் தாமிர உருக்கு ஆலையை அமைத்தது.

இந்த ஆலையினால் ஏற்படும் தாமிர மாசினால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கடந்த 1996, 1997, 1998ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக இது தொடர்பாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


அனைத்து மனுக்களும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தன. இதன்மீது நீதிபதிகள் எலீப் தர்மாராவ், என். பால்வசந்தகுமார் ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பு:

ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள், மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியவை இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளன.

தூத்துக்குடி அருகில் உள்ள 21 தீவுகள் தேசிய கடல் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகையப் பகுதிகளைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை.

சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கக் கூடிய இத்தகைய நிறுவனம் இந்தப் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்கு அப்பால்தான் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இந்த விஷயத்தல் மீறப்பட்டுள்ளது.

எங்களிடம் உள்ள ஆவணங்களை பார்க்கும்போது, குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்ட இ.ஐ.ஏ. அறிக்கையின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற ஆலைக்கு அனுமதியை வழங்கியுள்ளன என்று தெரிகிறது. பல அம்சங்களை வைத்து பார்க்கும்போது, ஆலைக்கு அனுமதி வழங்குவதில் மத்திய அரசு தனது மனதை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது

ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதற்கு முன், மத்திய அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அந்த நிறுவனத்துக்கான அனுமதியை அப்போதே நிராகரித்திருக்கலாம்.

இந்த தொழிற்சாலை முதலில் குஜராத், கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு, அங்கு உள்ளூர் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இறுதியில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த ஆலையை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் கூட நடத்தப்படவில்லை. சட்டத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.

ஆலையை சுற்றி அமைக்கப்பட வேண்டிய பசுமைப் பகுதியின் அளவை குறைக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆலை வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு தாராள மனம் காட்டுவதற்கு என்ன காரணம்?. அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சுற்றுப்புறசூழல் விவகாரத்தில் சிகப்பு வட்டத்துக்குள் வரும் இந்த ஆலைக்கு அனுமதி வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கை கள் எடுத்திருக்க வேண்டும்.

2005ம் ஆண்டில் நீரி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆலையில் இருந்து வெவ்வேறான மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் கழிவுகள் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆர்செனிக் போன்ற மோசமான வேதிப் பொருளும், எலும்பு, பற்களை எல்லாம் அழிக்கக்கூடிய புளோரைடு அங்கிருந்து வெளியேறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வெளியில் மட்டுமல்ல, அந்த ஆலையின் உள்ளேயும் கடுமையான மாசு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை சுற்றியுள்ள இடங்கள் இந்த ஆலையின் கழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் ரசாயன பொருள்கள் கலந்து, அதனால் குடிநீரின் தரம் குறைந்துள்ளது என்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை மூலம் உறுதியாகிறது.

நிலத்தடி நீரை ஆராய்ந்தால், தாமிரம், குரோமியம், ஈயம், காட்மியம், ஆர்செனிக், குளோரைடு, புளோரைடு ஆகியவை அளவுக்கும் மிக அதிகமாக கலந்திருப்பதும் தெரிய வந்தது.

காற்று, நீர் போன்ற வாழ்வாதாரங்களை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. நீர்நிலைகளையும் காற்றையும் யார் மாசுபடுத்தினாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆலை வெளியேற்றும் மாசினால் மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான மாசுபடுதலை ஆலை உருவாக்கியது என்பதும் ஆவணங்கள் மூலம் தெரிகிறது. எனவே இப்போதாவது அது நிறுத்தப்பட வேண்டும். அதன் மூலம் இயற்கை அன்னையை காப்பாற்ற வேண்டும்.

இந்த ஆலை வெளியில் மாசை ஏற்படுத்தியது மட்டுமல்ல, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சுகாதாரத்தையும் நேரடியாக பாதிக்கச் செய்துள்ளது. இந்த ஆலையை மூடச் சொல்வதன் மூலம் அங்குள்ள ஊழியர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். ஆனால் ஆலையை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியில் இதுபோன்ற ஆலையை வைத்துக் கொண்டு, அரசு கூறும் காரணங்களை நீதிமன்றம் ஏற்காது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலத்தை நாங்கள் விட்டுவிடவில்லை.

அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், தொழிற்சாலை சட்டத்தின் 25-எப்.எப்.எப். பிரிவின்படி, அந்த ஆலையில் இருந்து நஷ்டஈட்டைப் பெற தகுதியுடையவர்கள்.

அந்த ஊழியர்களுக்கு பிற இடங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற தொழிற்சாலைகள், நிறுவனங்களில் அவர்களின் கல்வித் தகுதி, தொழில்நுட்ப தகுதி, அனுபவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து, அவர்களின் ஜீவாதாரம் வழங்க வேண்டும்.

குடிமக்களின் நலனைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தடுத்து நிறுத்த அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

******************************************************************

நீதிமன்றத் தீர்ப்பில் மக்கள் ந‌லனில் கொஞ்சமும் அக்கரையற்று, மக்கள் உரிமையை சற்றும் மதிக்காமல், சட்டத்திற்குப் புரம்பாகவே இந்த ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொடுத்த அனுமதியில் முறைகேடு என்பதல்ல. அனைத்து தனியார் நிறுவனங்களும் மக்கள் நலனை காலில் போட்டு மித்தித்துத்தான் தொடங்கப்படுகின்றன. அவர்களுக்கு லாபம் ஒன்றைத்தவிர வேறு எதுவும் கண்களில் தென்படுவதில்லை, கொள்ளை லாபத்திற்காக எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லத்தயாராக இருக்கிறார்கள்.

இது நிறுவனங்களின் விதி மீறல் குறித்த பிரச்சனையல்ல. தனியார் நிறுவனம் என்பதன் இயல்பே மக்களைச் சுரண்டுவது தான். உள்நாட்டளவிலும், பன்னாட்டளவிலும் இதுபோன்ற தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் கொள்ளை லாபத்தை உறுதிப்படுத்தும் விதமாக மக்களை ஒடுக்கும் நடைமுறைகளை செயல்படுத்துவதற்குப் பெயர்தான் அரசு என்பது. எப்போதாவது இது போன்ற தீர்ப்புகள் வருவது கூட மக்கள் நலனிலிருந்து அல்ல. வேறு வழியில்லாமல் போகும்போது தவிர்க்கவியலாமல் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

கடையநல்லூரின் குடிநீர் மேம்பாட்டுத்திட்டங்கள்

29 செப்

கடையநல்லூர் நகராட்சியில் 22 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளை உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று (28ம் தேதி) காலை ஆய்வு செய்கின்றனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைத்திடும் பொருட்டு தமிழக அரசிடம் முழு மானியத்துடன் கூடிய குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் தமிழக அரசின் சார்பில் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 22 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசன் கலந்து கொண்டனர்.

இந்த குடிநீர் மேம்பாட்டு திட்டம் மூலம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் கிடைத்திடும் வகையில் மேலக்கடையநல்லூர், தெருப்பகுதி, பேட்டை, கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம் ஆகிய பகுதிகளில் புதிதாக வாட்டர் டேங்குகள் கட்டப்படுகிறது.இதனை விரைவில் மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தும் வகையிலும் இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையிலும் கடையநல்லூரில் இன்று (28ம் தேதி) உயர்மட்ட அதிகாரிகள் குழு திட்டம் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். குழாய்கள் புதுப்பிக்கப்படுவது குறித்தும், வாட்டர் டேங்குகள் அமைக்கப்படவுள்ள பகுதிகள் தொடர்பாகவும், குடிநீர் அனைவருக்கும் சீராக கிடைத்திடுவதற்கு மேற்கொள்ள வேண்டியது குறித்தும் இந்த ஆய்வில் ஆராயப்பட உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தனியார் துறை இன்ஜினியர்கள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து 22 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டு விழா காணப்பட்டுள்ள கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகள் விரைவில் துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

*****************************************************

அண்மை எதிர்காலத்தில் இத்திட்டங்கள் கடையநல்லூர் வாசிகளுக்கு பயனளிப்பதாக இருக்கும். ஆனாலும் இதன் பின்னாலிருக்கும் உண்மைக்காராணங்கள் அறியப்படாமலிருப்பது ஆபத்தையே விளைவிக்கும். கடையநல்லூரைப் பொருத்தவரை நீர் ஆதாரங்கள் ஆறு, குளம், ஏரிகள், கால்வாய்கள் அனைத்தும் கவனிப்பாரற்று விடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததுதான், ஏன் கருப்பாநதி அணைகூட உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் சகதி சேர்ந்து நீர் சேகரமாவதை தடுக்கிறது. இவைகளை முறையாகச் செய்திருந்தால் எவ்வளவு மக்கள் தொகை அதிகரித்தாலும் தினசரி தண்ணீர் வழங்கியிருக்க முடியும். நீர் ஆதாரங்களை கவனிக்காது விட்டுவிட்டு, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளைக் கட்டுவது அறிவுடையது தானா? நீர்தொட்டிகள் இல்லாததால் தண்ணீர்பஞ்சமா? நீர் இல்லாததால் தண்ணீர் பஞ்சமா?

ஒக்கேனக்கல் நீர்த்திட்டத்திற்கு ஜப்பானிய நிறுவனம் நிதி வழங்குகிறது. ஏன் அட்டக்குளம் கரையில் சாலைகளை ஒழுங்குபடுத்தி இருக்கைகள் இடுவதற்கு தனியார் நிறுவனம் நிதி வழங்குகிறது. ஏன்? மக்களுக்கு நலம் செய்யவேண்டும் என்பதற்காகவா தனியார் நிறுவனங்கள் நிதி கொடுக்கின்றன. ஒன்றுக்கு ஆயிரமாய் திருப்பி எடுத்துக்கொள்ளமுடியும் என்பதால் கொடுக்கின்றன.

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துரை நிறுவனங்களை உருவாக்க  மக்களின் உழைப்பும் பணமும் காலமும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் இன்று சத்தமில்லாமல் தனியார்மயம் ஆகிவருகின்றன. அந்த வழியில் தண்ணீர் தனியார்மயத்திற்கு வேண்டிய வசதிகள் எல்லாம் அரசு பணத்தில் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் மக்களின் ஒப்புதலின்றி தனியார் மயமாகாப்படும் போது தம் உழைப்பினாலான பணத்தை இழப்பது மக்கள் தான். இந்த அடிப்படையில்தான் இத்திட்டங்களைப் பார்க்கவேண்டும்.

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

27 செப்

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் உளக்கிடக்கையோடு மோதும் பரிசீலனையை கோருவதால் மக்களும் கூட இதுபோன்ற செய்திகளின் கணபரிமாணங்களை நிறுத்துப்பார்க்க விரும்புவதில்லை.

“லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்” இது நேற்று வந்த செய்தி. நேற்றோ இன்றோ மட்டுமல்ல இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வந்து யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் கரைந்து போய்விடுகின்றன. இதிலிருந்து தப்பி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் இதை விவரிக்கிறார், “மதுரையில் வில்லியம்ஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அது லிபியாவில் தங்கும் வசதியுடன் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி அந்த வேலையை எப்படியாவது வாங்கிட வேண்டுமென்று அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தேன். அவர்களும் சொன்னபடி என்னை லிபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. எனக்கு தோட்ட வேலை கொடுத்தனர். இவ்வளவு பணம் கொடுத்து வந்துவிட்டோம் என்ன செய்வது என்று நான் அந்த வேலையைச் செய்தேன். அதிக சம்பளம் என்று சொன்னார்கள் அல்லவா. ஆனால் அங்கு இது நாள் வரை சம்பளமே கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஏமாந்த சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை , விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 80 பேர் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பளத்தைக் கேட்டதற்கு எங்களை கட்டிடத்தில் வைத்து பூட்டி வைத்தனர். அங்கிருந்து ஒரு வகையாக தப்பித்து இளையான்குடியில் இருக்கும் என் உறவினர்கள் உதவியால் இந்தியாவுக்கு வந்தேன். அங்கு ஆதரவின்றி அவதிப்படும் தமிழர்களை மீட்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் உடனடியாக நடவடிக்கை  எடுப்பதாகக் கூறினார்” மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பு எழுதி முன்நக‌ர்த்தலாம் அல்லது தன்னுடைய பணியில்(!) மூழ்கி மறந்துபோகலாம். நடவடிக்கை கோரிய தப்பிவந்த அந்த இளைஞரேகூட காலத்தின் சக்கரங்களுக்கிடையில் தன்னுடைய கோரிக்கையை நினைவுபடுத்த இயலாமல் போகலாம். ஆனால் புதிது புதிதாய் ஆயிரக்கணக்கான இளஞர்கள் இதுபோன்ற செய்திகளை உருவாக்க மஞ்சள் பையில் பணத்துடன் உள்ளடங்கிய கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றனர்.

நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் உலகமயமாக்கலின் விளைவாக அரசு புற‌க்கணிக்கத் தொடங்கிய 80களின் பிற்பகுதிக்குப் பிறகு, இனியும் விவசாயம் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பது விவசாயிகளுக்குப் புரியத் தொடங்கியது. நிலங்களில் விளைவிப்பது கடினமாகியது, விளைவித்தாலும் அதற்குறிய விலைகிடைப்பது அதனிலும் கடினமாகியது. நிலம் வைத்திருந்தவர்கள் வந்த விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலில் முடங்கினார்கள், விவசாயக் கூலிகளோ முதலில் தொழில் நகரங்களுக்கும், பின்னர் வெளிநாடுகளுக்கும் நவீன கொத்தடிமைகளாய் தங்களை மாற்றிக்கொண்டனர். வெளிநாடுகளில் என்னவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் தங்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வாங்கிவந்த பெரும்கடன் அவர்களுக்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்துகொண்ட தரகர்கள், தெரிந்தே, துணிந்தே போலியான விசாக்களிலும், பொய்யான வாக்குறுதிகளிலும் அனுப்பிவைத்துப் பணம் கறந்துவிடுகின்றனர்.

வெளிநாடு செல்லுமுன் விசாரித்துக்கொள்ளவேண்டாமா? பணத்தைக் கட்டுமுன் உரிமம் பெற்ற முகவர்தானா? முறையான ஆவணங்கள் தானா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டாமா? அளவுக்கு விஞ்சிய பேராசையினால்தான் ஏமாந்துபோகிறார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் அவர்களின் நடப்புச் சூழலை கருத்தில் கொள்வதில்லை. அடுத்த நாளை எப்படிக் கடப்பது எனும் சுழலில் சிக்கியிருப்பவர்களின் சஞ்சலங்கள் எதிர்காலம் குறித்த அச்சமில்லாமல் இருப்பவர்களுக்குப் புரிவதில்லை. கடன் சுமை, கடமைகள் என தத்தளிப்பவர்கள் பொய்யாக என்றாலும் சிறு நம்பிக்கை காட்டினாலும் பற்றிக் கொண்டுவிடுகிறார்கள். இதில் அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும், சீர்தூக்கிப் பார்க்கவியலா நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் அரசு தான், அவர்களின் நிலைக்கு அவர்களைவிட பெரிய குற்றவாளி.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது எந்த ஒரு அரசுக்கும் பெரும் கவலையளிக்ககூடிய, மிகுங்கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று. வேலையில்லா நிலையை அரசுதான் தன் செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்துகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்கக்கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அரசு தானே செய்யலாம் அல்லது முறைப்படுத்தலாம். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே தயங்காமல் தனியார்மயத்தைப் புகுத்துவதில் ஈடுபடும் அரசு இதுபோன்றவற்றைச் செய்யும் என்று பொய்யாகவேனும் நம்பமுடியுமா?

மக்களின் வாழ்வாதாரங்களை குலைப்பதன்மூலம் அவர்களை வறுமையில் தள்ளுவதும் அரசு, அவர்களின் வறுமைக்காப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவர்கள் ஏமாந்துபோவதற்கான வழிமுறைகளை அடைக்காமலிருப்பதும் அரசு, அதன்பிறகும் மீட்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதும் அரசு. எல்லாமுனைகளிலும் உழைக்கும் மக்களை வதைக்கும் அரசை விட்டுவிட்டு; ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ எனும் நிலையிலிருக்கும் தனிப்பட்ட மனிதனை அவன் கவனமாக இல்லாததால் நேர்ந்தது இது எனக்குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் சரியாகும்?

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரின் ஷரஃபியா பாலத்தின் அடியில் சம்பளமின்றி ஊர் திரும்ப வழியுமின்றி மாதக்கணக்காக சில இந்தியர்கள் பரிதவித்துக்கிடந்தார்கள். எந்தத் தூதரக அதிகாரிகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அண்மையில் சௌதி வந்த மன்மோகன் சிங் அனேக மனமகிழ் மன்றங்களில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தினார். ஆனால் மறந்தும் கூட சௌதியில் வதைபடும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஒரு வார்த்தையும் பேசினாரில்லை. ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு பிரதமர் தொடங்கி வெளியுறவு அமைச்சர்வரை கண்டனம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கைதாகும் குற்றவாளிகளுக்குக் கூட அரசின் சார்பில் பரிந்துபேச ஆளிருக்கிறது. மேற்குலகில் வாழும் சில ஆயிரம் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசு (வாக்களிப்பதால் பலன் ஒன்றுமில்லை என்றாலும்) வளைகுடாவில் இருக்கும் லட்சக்கணக்கானோர் குறித்து சிந்திப்பதில்லை.

ஏனென்றால் அரசு என்பது எல்லோருக்குமானது அல்ல. எல்லோருக்கும் சமமானது எனும் பாவனையில் இயங்கும் பக்கச்சார்பானது. பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு அரசு யாருக்கானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. பாட்டாளி வர்க்கத்தினருக்குத்தான் அரசு என்பது பொதுவானது எனும் மாயை இன்னும் மிச்சமிருக்கிறது. வாருங்கள், பொய்த்திரைகளை விலக்கி உண்மைகளின் வெளிச்சத்தைக் காண்போம்.

நன்றி: செங்கொடி தளம்

தென்காசி வளைவு அகற்றப்பட்டது

26 செப்

தென்காசியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 100 ஆண்டு பழமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடிக்கப்பட்டது.

தென்காசி வட்டார பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்கு மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து ஒப்புதல் வழங்கி ரூ.30 கோடி செலவில் தென்காசி-மதுரை சாலையில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்து அரசியாக எலிசபெத் ராணி பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் ஆங்கிலேய அரசு தென்காசியின் நுழைவுப் பகுதியில் ஒரு வரவேற்பு வளைவினை அமைத்தது.

நகருக்குள் வரும் பயணிகளை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த வளைவு, மேம்பால பணிகளுக்கு தடையாக இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. எனவே, நேற்று இந்த வளைவு நகராட்சி அதிகாரிகள் அனுமதியோடு இராட்சத இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

ஆங்கிலேயர் ஆண்டதற்கு சான்றாக இருந்த வரவேற்பு வளைவு அகற்றப்பட்டதை பார்த்த பல பேர் வேதனை தெரிவித்தனர். இப்பணி முடிந்தபின் இது போன்று ஒரு வளைவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*******************************************************************

பல காலமாக போராடி மக்கள் இந்த பாலப்பணியை செயல்படுத்த வைத்திருக்கிறார்கள். மக்களின் வசதிக்காக செய்யப்படும் எதிலும் வளைவு போன்ற எதற்காகவும் தயங்குவது கூடாது. இந்த வளைவை இடிப்பதற்குக்கூட மாதங்களுக்கு முன்பே அனுமதி கிடைத்திருந்தும் அதை செயல்படுத்த இத்தனை தாமதம்.

நூறாண்டு வளைவு, வெள்ளைக்காரன் கட்டியது, மீண்டும் வளைவு போன்ற சென்டிமென்டுகள் நான் நம் நிலையை உணராததன் அடையாளங்கள்.47 க்கு முன்பையும் பின்பையும் பிரிப்பது சுதந்திரமல்ல, வெறும் அதிகார மாற்றம் தான். இதில் மக்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும்.  ‌

அயோத்தியின் இருப்பு எதில் இருக்கிறது? அயோத்தி வழக்கு மனுதாரரின் விளக்கம்

25 செப்

ஊர்வலம், பேரணிகளுக்குத் தடை’, ‘கேன்களில் டீசல், பெட்ரோல் விற்கத் தடை’, ‘மொத்தம் மொத்தமாக எஸ்.எம்.எஸ் அனுப்பத் தடை’ என அரசின் ஏகப்பட்டத் தடைகளோடு நாடு முழுவதும் பெரும் எச்சரிக்கை முஸ்தீபுகள் செய்யப்பட்ட ‘அயோத்தி’ வழக்கின் தீர்ப்புக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் ஒரு இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. அந்த தீர்ப்பு குறித்து இன்னொரு தீர்ப்பு வருவதற்கு இந்த நாடு இனி காத்திருக்க வேண்டும். பொறுமையற்ற, கொந்தளிப்பான, எரிச்சல்மிக்க, சொல்லப்போனால் இதற்கெல்லாம் அவசியமற்ற இந்த நேரத்தில், தீர்ப்புக்காக காத்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும்.

1961ல் தொடுக்கப்பட்ட ‘அயோத்தி வழக்கின்’மனுதாரர்களில் உயிரோடு இருக்கும் ஒரே மனிதரான ஹசீம் அன்சாரி. ‘மசூதியைக் காட்டிலும் தேசமே முதன்மையானது’ என்று சொல்வதைக் கிண்டலாகவோ, நடிப்பாகவோ பலரும் கருதக்கூடும். அயோத்தியில் இருக்கும் அவரது வீட்டை இப்போது செய்தியாளர்கள் திரும்பவும் முற்றுகையிடுகின்றனர். ஊடகங்களின் கூத்துக்கள் அனைத்தையும் கடந்தகாலங்களில் பார்த்துவிட்ட அவர், வர இருக்கிற ‘அயோத்தி தீர்ப்பு’ தவிர மற்ற விஷயங்களையேப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

“நேற்று கியான்தாஸை சந்தித்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன்” என்று அவர் சாதாரணமாகச் சொல்கிறார். தாஸ் வேறு யாருமில்லை. ‘அகரா பரிஷத்தின்’ தலைவரும், புகழ்பெற்ற ஹனுமன் கோவிலின் குருக்களுமாவார். இந்த சர்ச்சையில் எதேனும் தீர்வு குறித்து அவர்கள் இருவரும் பேசியிருக்கக் கூடுமோ என நினைக்கத் தேவையில்லாமல் அவரே சொல்கிறார். “நீதிமன்ற வழக்கு தனி. அதனை எங்களுக்கிடையே அனுமதிப்பதில்லை. கொஞ்சம் கூட சந்தேகப்பட முடியாத உணர்வுகளை அவர் முகத்திலும், குரலிலும் பார்க்க முடிகிறது.

“எங்களிடையே கசப்புகள் இருந்ததில்லை. வழக்கு ஆரம்பிக்கும்போதும் நண்பர்களாயிருந்தோம். வழக்கு நடந்த காலங்களிலும் நண்பர்களாயிருந்தோம்” இப்படித்தான் இதர மனுதாரர்களோடு அவரது நட்பும், உறவும் இருந்திருக்கிறது. அயோத்தியின் உள்ளூர்வாசிகள் ஹசீம் அன்சாரியைப் பற்றி நிறையச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மாலையிலும் ‘திகம்பர அகாராவின்’பரமஹன்ஸ் தாஸ் வீட்டுக்கு அன்சாரி சைக்கிளில் சென்று சீட்டு விளையாடுவாராம்! “நானும் பரமஹன்ஸும் சைக்கிளில் கோர்ட்டுக்கு ஒன்றாகவேச் செல்வோம். நான் அழுத்துவேன். அவர் பின்னால் உட்கார்ந்திருப்பார். ஒருதடவை நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை அவர் கொண்டு வரவில்லை. நான் என்னிடமிருந்ததை நகலெடுத்துக் கொடுத்தேன்” என நினைவு கூர்ந்த அன்சாரி “அப்போதெல்லாம் சூழல் சேதமடையவில்லை” என்கிறார்.

அவரது வீட்டிலிருந்து ரோட்டைக் கடந்தால் இருக்கும் ‘பிரச்சினைக்குரிய இடத்தை’ அணுகுவதற்கு இன்று நான்கு அடுக்குகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவைகளைப் பார்த்தவாறே, 1949 டிசம்பரில் கடைசியாய் அவர் மசூதிக்குச் சென்ற நாளை எண்ணிப் பார்க்கிறார். அன்று இரவுதான் ராம்தாஸ் என்னும் உள்ளூர் சாது ஒருவன் மசூதியின் சுவர்களைத் தாண்டி உள்ளே சென்று ராமர் சிலைகளை வைத்ததாகவும் சொல்கிறார். அது நடந்து 12 வருடங்களுக்குப் பிறகுதான் வழக்குத் தொடுத்ததாகக் குறிப்பிடுகிறவர், “இது உள்ளூர் பிரச்சினை. பிரச்சினையின் முகத்தையே அரசியல்வாதிகள் மாற்றிவிட்டனர். இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் இப்பிரச்சினையை வேறு வகையில் கையாண்டிருப்போம்” என்கிறார். குளத்தைத் தேடி வரும் மீன்களைப் போல அரசியவாதிகளைச் சித்தரிக்கிற அன்சாரி “எப்படி குளத்தைவிட்டு மீன்கள் வெளியே இருக்க முடியும்” எனச் சிரிக்கிறார்.

அயோத்தி, அதன் வழக்கமான கதியில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு இருக்கின்றனர். குல்தீப்சிங் என்னும் ஜவான், “இப்போது அமைதியாக இருக்கிறது. தீர்ப்புக்குப் பிறகு வேறு மாதிரியாகலாம். நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார்.
நகரத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் பதற்றம் தன்னை அணுகாமல் அன்சாரி இருக்கிறார். ‘செப்டமர் 24 தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். இத்தோடு முடியட்டும் என ஆசைப்படுகிறேன். ரொம்ப காலமாக இழுத்துக்கொண்டு இருக்கிறது. 1947க்கு முன்னால் இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் சகோதரர்களாக அழைக்கப்பட்டனர். மீண்டும் அப்படியொரு காலம் வரவேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்கிறார்.

“ஒருவேளை முஸ்லீம்களுக்கு எதிராக இந்தத் தீர்ப்பு இருக்குமானால், நீங்கள் உச்சநீதிமன்றம் செல்வீர்களா?” என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. உடனடியாக, “மாட்டேன். அரசியல்வாதிகள் மேலும் அரசியல் செய்யட்டும். சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்லட்டும். நான் இதனோடு 49 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். ஒரு முடிவுக்கு வருவதையே விரும்புகிறேன்” என மறுக்கிறார். அவரது வீட்டு முகப்பில் இருக்கிற துருப்பிடித்த உலோகத்தட்டில் இருக்கும் ‘முகமது ஹசீம் அன்சாரி, மனுதாரர், வழக்கு எண் 4/89’ என்ற எழுத்துக்களும் சரியாகத் தெரியாமல் அன்சாரியின் களைப்பைச் சொல்கின்றன.

நன்றி: கடையநல்லூர். ஆர்க் தளம்

********************************************************************

சர்ச்சைக்குறிய இடம் என்று நரித்தனமாக அழைக்கப்படும் அந்த இடத்தை வழிபாட்டிடமாக பார்த்தவர்கள் ஓய்ந்துவிட்டார்கள், அல்லது ஓய்ந்துபோக வைக்கப்பட்டார்கள். அதை அரசியல் அதிகாரம் பெறும் கருவியாக கொண்டவர்கள் ஓயப்போவதில்லை, நாம் தான் அவர்களை ஓய்விக்க வேண்டும்.

மகஇக பாடல் ஒன்றின் வரிகள்,

பொறந்தாலே ராமனுக்கு ஊரே சொந்தமா?
நாங்க பொறந்த இடம் ஆஸ்பத்திரி
எழுதிக் கேட்டமா?
யாரச்சும் எழுதிக் கேட்டமா?
ஜென்ம பூமி கெடக்கட்டும் நாங்க
உழுத பூமிடா
அதை வச்சிருக்கான் வாண்டையாரு
வாங்கித் தாரியா?
கரசேவை நடத்த வாரியா?

பாலாற்றுச் சிக்கல்: தண்ணீர் வருமா? தனியார்மயமா?

25 செப்

“பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்தால் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை செல்ல விடாமல் தடுப்போம்’ என, ஆந்திரா விவசாயிகள் அறிவித்தனர்.


பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்ட ஆந்திர அரசு ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அணை கட்டும் திட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், “இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’ என, தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், சில நாட்களாக ஆந்திரா அரசு அணை கட்டும் கணேசபுரத்தில், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.


ஆந்திரா வனத்துறை அமைச்சர் பெத்த ராமச்சந்திர ரெட்டி, நீர் பாசனத்துறை அமைச்சர் பொன்னால லட்சுமணய்யா ஆகியோர், நேற்று முன்தினம் மாலை, அணை கட்டும் இடத்தை பார்வையிட்டு கூறியதாவது: இப்பகுதியில் 1,000 அடிக்கு கீழே நிலத்தடி நீர் மட்டம் சென்றதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீருக்காக இங்கு அவசரமாக, அணை கட்ட வேண்டிய நிலை உள்ளது. நதிநீர் பிரச்னையில் யாருடனும் ஆந்திரா அரசு ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த சட்டங்களும் எங்களை கட்டுப்படுத்தாது. இங்கு 16 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட சிறிய அணை கட்டப்படும். பாலாற்றில் வரும் 53 டி.எம்.சி., தண்ணீரில், 16 டி.எம்.சி., தண்ணீரை எடுக்கும் உரிமை ஆந்திராவுக்கு உள்ளது. சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளபடி, நாங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.


பாலாற்றில் வரும் தண்ணீரில் 43 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதை தமிழகம் பயன்படுத்தவில்லை. நாங்கள் மனிதாபிமானத்துடன் சென்னைக்கு 15 டி.எம்.சி., கிருஷ்ணா தண்ணீரை வழங்கி வருகிறோம். தண்ணீருக்காக நாங்கள் யாருடனும் சண்டை போடத் தயாரில்லை. எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் கட்டும் இந்த சிறிய அணையால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. பாலாற்றின் குறுக்கே 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், இரு பெரிய அணைகளை கர்நாடக அரசு கட்டி, அதன் மூலம் 489 ஏரிகளை நிரம்பிய போது, தமிழக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் ஜனவரி மாதம், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். அணை கட்ட மத்திய வனத்துறை அமைச்சகம், ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


குப்பம் மண்டல் விவசாயிகள் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வர ரெட்டி, செயலர் நாக நாராயணா ஆகியோர் கூறுகையில், “”கணேசபுரத்தில் அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால், சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் செல்லாமல் தடுப்போம்,” என்றனர். அணை கட்ட கூலித் தொழிலாளர்கள் தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டது. 100க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் வந்துள்ளனர். கணேசபுரம் – குப்பம் சாலை, மூன்று கோடி ரூபாயில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டும் பணி துரிதமாக துவங்கும் என்பதால், தமிழகத்தில் பாலாற்றை நம்பியுள்ள விவசாயிகள், பொது மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.


ஆன் – லைன் மூலம் டெண்டர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி குறித்து ஆந்திரா மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே 25 அடி உயரம், 125 அடி அகலத்தில் அணை கட்டப்படுகிறது. இதற்கு ஆந்திரா நீர் பாசனத்துறை, 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இரு ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்படும். அணை கட்ட, ஏற்கனவே ஆன் – லைனில் விடப்பட்ட டெண்டர், ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்னும் சில தினங்களில், ஆன் – லைனில் மூன்று தொகுப்பாக டெண்டர் விடப்படும். முதல் டெண்டர் அணை கட்டவும், இரண்டாவது டெண்டர் அணைக் கட்டில் இருந்து தண்ணீர் செல்ல கால்வாய்கள் அமைக்கும் பணிக்கும், மூன்றாவது டெண்டர் அணைக்கட்டைச் சுற்றி இருக்கும் பகுதியின் அபிவிருத்தி பணிக்காகவும் நடைபெறும். தடுப்பணை கட்ட, ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அணை கட்டும் இடத்தை பார்வையிட உள்ளார்.

*********************************************************************

பாகிஸ்தானுடன், பங்களாதேஷ் உடன் ஆற்று நீர் பங்கீட்டு ஒப்பந்தங்கள் பிரச்சனையின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மாநிலங்களுகிடையிலோ தீராத குழப்பங்கள். தண்ணீர் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் சூழலில் தடுப்பணைகளினால் மட்டுமா பாதகம் வந்துவிடப்போகிறது. ஆந்திராவிடம், கன்னடத்திடம், கேரளத்திடம் தண்ணீர் பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அதேநேரம் தண்ணீர் வியாபாரிகளோ ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தமிழகத்தின் நிலத்தடி நீர்வள‌த்தையே மொத்தமாக கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தானிய கொள்முதலை அரசு நிறுத்திக்கொண்டு தனியார் கொள்முதலை அறிமுகப்படுத்தியதும் ரிலையன்ஸ் முதலான தரகு நிறுவனங்கள் கிராமப்புறங்களில் கொள்முதல் நிலையங்களைத் திறந்தன. அதுவரை கிராமப்புற சாலை வசதி கேட்டுப் போராடிய மக்களுக்கு லத்திக்கம்மை காட்டிய அரசுகள், தரகு நிறுவனங்களின் தானியப் போக்குவரத்திற்காக கிராமப்புற சாலை வசதிகளை ஏற்படுத்திய போது, கிராமப்புற மக்களுக்காக அதைச் செய்வதாக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதேபோல் இப்போது காட்டாறாய் கவனிப்பற்று ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகட்டி தனியார்களின் வசதிக்காக முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால் பிரச்சாரமோ விவசாயிகளின் பாசனத்தேவைகளுக்காக தடுப்பணைகள் கட்டுவதாக. விவசாயத்தை ஒழித்துக் கட்டுவது அரசின் கொள்கையாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது யாருடைய வசதிக்காக இந்த அணைகள்?

கடையநல்லூரை எப்படி பார்ப்பது?

24 செப்

கடையநல்லூரின் வெளிநாடு பிரச்சனையைப்பற்றி அலசுமுகமாக பொருளாதாரத்தை முன்வைத்த கடந்த இரண்டு கட்டுரைகளிலும் தம் கருத்துகளை வெளிப்படுத்தி களமாட யாரும் வரவில்லை என்றாலும், தொடர்ந்து இதை முன்னெடுத்துச் செல்கிறேன். காரணம், இது பேசப்படவேண்டிய ஒன்று. இன்றில்லாவிடினும் நாளை இது இலக்கைச் சென்று தைக்கும். எனவே, தொடர்கிறேன்.

முதலில் நாம் சில பொதுமைப்பாடுகளுக்கு அல்லது புறிதல்களுக்கு வந்தாக வேண்டும். இந்த விவாதப்பொருளை முந்தள்ளியதன் நோக்கம், நமதூரின் பொதுப்புத்தியில் இருக்கும் வெளிநாடு குறித்தான முன் முடிவுகளை மறுபரிசீலனை செய்யத்தூண்டுவதாகும். இதன் பொருள் வெளிநாடு செல்லக்கூடாது என்பதல்ல. மாறாக வெளிநாட்டை தவிர வேறு கதியில்லை எனும் நிலையை கருத்தளவில் மாற்றமுனைவதாகும். இந்த நிலைபாட்டை கடந்த கட்டுரைகளில் காணலாம்.

கடையநல்லூரை மட்டும் தனியே பிரித்தெடுத்துப்பார்ப்பது ஓர் ஆய்வுக்குறிய பார்வையாக இருக்கமுடியாது. கடையநல்லூரின் வழியே உலகை காண்பதா, உலகின் வழியே கடையநல்லூரைக் காண்பதா? பூமி முழுதும் மக்களுக்கு (ந‌மக்கு) சொந்தம், நாடு என்பது நிர்வாக வசதிக்கான பிரித்தல்கள் என்பது சரியான கூற்று தான். இந்த உலகம் அப்படி அமைந்தால் தான் மக்கள் சமூகமயமாய் சமவாய்ப்பும் சம வசதியும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் நடப்பு உலகம் அப்படி இல்லை என்பதை முதலில் நாம் புறிந்துகொண்டாக வேண்டும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டாண்டு காலமாய் வாழ்ந்துவரும் சொந்த நிலத்தில் வாழ்வதற்குக்கூட அரசுடன் போராடவேண்டியவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலை உலகம் முழுவதும் பரவலாக இருக்கிறது. உலகின் எந்தப்பகுதியானாலும் அந்தப்பகுதி நிலம் கனிம வள‌ங்கள் கொண்டதாக இருந்துவிட்டால், அந்த நிலம் பெருநிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் சொந்தமாகிவிடுகிறது. அப்பகுதி மக்கள் எத்தனை நீண்ட காலம் அதில் வாழ்ந்திருந்தாலும் அதிலிருந்து பிடுங்கி எரிவதற்கு அரசே துணை நிற்கிறது. இந்த நிலையோடு கடையநல்லூரை ஒப்பிட்டால்……

நல்லூரிலிருக்கும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை எனவே கிடைக்கும் இடத்தில் வேலை பார்க்கலாம். இதில் கிடைக்கும் இடத்தில் என்பது என்ன? தொழிற்பேட்டை அல்லது நிறுவனங்கள் இருக்கும் இடம் அது வெளிநாடு என்றாலும் கூட அப்படித்தானே. ஆக வேலை வாய்ப்பு என்பது நிறுவன முதலாளிகளின் லாப வேட்கையை பொருத்தது. அவர்களுக்கு லாபம் வரும்போது நிறுவனங்களை விரிவுபடுத்துவார்கள், மக்களுக்கு வேலை வழங்குவார்கள். லாபம் கிடைக்காது என்றால்….? இதையே வேறொரு கோணத்தில் பார்க்கலாம், உலகின் மொத்த மக்கட்தொகை 700 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு மக்களுக்கும் வாழ்வளிக்கும் வகையிலான வேலைவாய்ப்பை உலகிலிருக்கும் மொத்த நிறுவனங்களும் வழங்கியிருக்கிறதா? நிச்சயம் இல்லை. உலகில் அறுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்விடம் சார்ந்த சுயவேலைகளின் மூலமே தங்களின் ஆதாரங்களை பெறுகின்றனர். நாற்பது விழுக்காட்டிற்கும் குறைவான வேலை வாய்ப்பினை உருவாக்கும் நிறுவனங்களுக்காக, உலகின் எல்லாப்பகுதி மக்களும் தங்களின் சொந்தக்காசில் கல்வி எனும் பெயரில் தங்களை தயார்படுத்திக்கொள்கின்றனர்.  அதுவும் முதலாளிகளின் நலனுக்காகத்தான். வேலையில்லாதோர் கூட்டம் வெளியிலிருந்தால்தான், வேலைக்கான ஊதியத்தை குறைக்கமுடியும். தங்களின் தகுதிக்கேற்பவும் தாக்குப்பிடிக்கும் திறனுக்கேற்பவும் மக்கள் ஓரிடத்திலிருந்து வேலை தேடி மற்றோர் இடத்திற்கு அலைபாய்ந்துகொண்டே இருக்கின்றனர் உலகம் முழுவதிலும் என்றால் மக்களை அவர்களின் வாழ்விடத்திலேயே வாய்ப்புகளை வழங்கி வாழவைக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசின் கடைமையல்லவா இது? ஆனால் அரசு என்ன செய்கிறது? கடையநல்லூரிலேயே மக்களை (உங்கள் எண்ணப்படி குறைவாகவேனும்) வாழவைத்துக்கொண்டிருந்த நெசவுத்தொழிலை ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் நிர்மூலமாக்குகிறது. இப்போது நாம் சிந்தித்துப்பார்க்கலாம் கிடைக்கும் இடத்தில் வேலை தேடிச்செல்வதில் தவறொன்றுமில்லை எனும் எண்ணம் இயல்பாகவே நமக்குள் உதித்ததா? இல்லை அப்படியான சூழல்களை உருவாக்கியதன் மூலம் அந்த எண்ணம் நமக்குள் ஏற்படுத்தப்பட்டதா?

கடையநல்லூரில் தறி நெசவில் ஈடுபட்டிருந்த மக்களை மாஸ்டர்வீவர்கள் எனும் தரகர்கள் கடுமையாக சுரண்டினார்கள், சுய மரியாதையின்றி நடத்தினார்கள் என்பதை மறுக்கமுடியாது. அனால் தமக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை சரியான திசைவழியில் அதாவது போராட்டங்கள் மூலம் தீர்க்க முனைந்தார்கள் என்ற வரலாற்றையும் நாம் மறக்கக்கூடாது. சொஸைட்டியை எதிர்த்த வேலை நிறுத்தம், மந்தையை அடைத்தாற்போல் உண்ணாவிரதம் என்பன போன்ற கடையநல்லூரின் எழுச்சிமிகு வரலாறுகளை நாம் மறந்துவிடக்கூடாதல்லவா? அந்த நேரங்களிலும் பர்மாவிலிருந்து வந்திருந்தவர்கள் மஸ்லின் ஜிப்பாவில் போராட்டத்தை ஏள‌னம் செய்தார்கள். இன்றும் அதேபோல் ஆடம்பரப்பொருட்களாலும், வாசனைத்திரவங்களாலும் வாழ்வையே ஏளனம் செய்துகொண்டிருக்கிறோம்.

உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வேலையின்மை அதிகரித்துவருவதால் மக்கள் வேறொரு உலகத்திற்கு, வேறொரு கிரகத்திற்கு வேலை தேடிச்செல்லமுடியாது. அதேநேரம் கடையநல்லூரில் தகுந்த வேலைவாய்ப்புகள் இல்லாதிருந்தாலும் கடையநல்லூரிலேயே இருந்தாகவேண்டும் என வற்புறுத்த முடியாது, அது வறட்டுத்தனமாக இருக்கும். தாராளமாக வேறு இடங்களுக்கு வேலை தேடிச்செல்லலாம். ஆனால் நம் கால் கடையநல்லூரில் ஊன்றியிருக்கவேண்டும். கடையநல்லூரில் நம்முடைய கால்கள் ஊன்றியிருப்பதற்கு இரண்டு விதங்களில் நாம் தயாராகலாம். ஒன்று, தறி நெசவை ஒரு துணைத்தொழிலாகவேனும் நாம் கைக்கொண்டிருக்கவேண்டும். முதல் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் நம் பாலைவன வியர்வையின் பலனை அது நிச்சயம் நமக்கு வழங்கும். ஏனென்றால் அது நம்முடைய மரபான தொழிலாக, நமக்கு தெரிந்த தொழிலாக இருப்பதினால். (இப்போதைய இளைஞர்களுக்கு நெய்யத் தெரியாதே என்பது இதன் பதிலல்ல, மீன்டும் நாம் அதனை சுலபமாக கற்றுக்கொள்ளலாம், எவ்வாறெனில் இன்னும் நம்மிடமிருந்து முழுமையாக அது வழக்கொழிந்துவிடவில்லை) தறி நெசவில் வருமானம் உள்ளிட்ட சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதை நாம் தீர்க்கவும் முயலவேண்டும். இரண்டு, ஊரிலுள்ளவர்கள் (ஊரிலேயே தங்கியிருப்பவர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) ஒன்றுகலந்து தோதுவான ஒரு பொதுத்தொழிலை நாம் தேர்ந்தெடுத்து அதை துணைத்தொழிலாக மேற்கொள்ளவேண்டும். அவரவர் போக்கில் ஏதோஒரு தொழில் என்பது கடையநல்லூரைப்பொருத்தவரை தோல்வியையே தழுவியிருக்கிறது என்பதாலும் பொதுவான தொழில் என்பது கலாச்சார ரீதியிலும் பலன் தரக்கூடியது என்பதோடு மட்டுமல்லாது, சிதறிப்போகாமல் தடுக்கவும் செய்யும்.

உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிக்கொண்டிருக்கின்றன. தற்காலிகமாக நிமிர்வதும் மீண்டும் வீழ்வதுமாக தடுமாறிக்கொண்டிருக்கிறது. இதன் போக்குகளை அலசிப்பார்க்காமல் கடையநல்லூரை மட்டுமே தனிமைப்படுத்திச்சிந்திப்பது நீண்டகால தீர்வாக நிச்சயம் அமையாது. ஏனென்றால் கடையநல்லூர் உலகின் ஒரு அங்கம். நம்மை பாதித்த, பாதித்துக்கொண்டிருக்கும், பாதிக்கப்போகும் பிரச்சனைகள் கடையநல்லூரிலிருந்து மட்டுமே தோன்றிவந்தவைகள் அல்ல.

எனவே நண்பர்களே, சிந்தியுங்கள், உங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனை என்று இதை ஒதுக்க முடியாது, ஏனென்றால் ஒரு திரைப்படத்தைக்காட்டிலும், ஒரு விளையாட்டைக்காட்டிலும், ஒரு பொழுதுபோக்கைக்காட்டிலும் இது நம்முடன் ஒட்டிய பிரச்சனை, நம் வாழ்வுடன் தொடர்புடைய பிரச்சனை. தீப்பெட்டி வந்து உராயும் வரை எரியாமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் தீக்குச்சிகள் அல்லவே. முதுகில் வலிக்கும்வரை உணராமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் அஃறிணை அல்லவே.

காமன்வெல்த்: இன்னும் என்ன செய்யலாம்?

23 செப்

காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும்போது இதுபோன்ற சோப்டா குடியிருப்புகள் தில்லியின் அழகைக் கெடுக்கும் என்று கூறி இடித்து அப்புறப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் குடியிருப்புகள். இதைவிடவா வக்கிரம் இருக்கமுடியும்?

காமன்வெல்த் போட்டிகள் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்  நேரடியாக தலையிட்டுள்ளார். காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் குழுத் தலைவரான ஜெயபால் ரெட்டி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லை அவர் அழைத்துள்ளார்.

டெல்லி காமன்வெல்த் போட்டியைப் பார்த்த உலக நாடுகள் சிரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒரு பக்கம் இன்னும் கட்டுமானப் பணிகளை முடிக்காமல் உட்கார்ந்திருக்கின்றனர். மறுபக்கம் கட்டிய பாலம் இடிந்து விழுகிறது. இது போதாதென்று ஃபால் சீலிங் பெயர்ந்து விழுந்து பல்லைக் காட்டியுள்ளது.

வீரர்கள், வீராங்கனைகள்,அதிகாரிகள் தங்கும் கேம்ஸ் வில்லேஜில் சாக்கடையும், மலமும் தேங்கிக் கிடப்பதாக வெளிநாட்டு அணிகள் முகம் சுளித்து கூறியுள்ளன. வீரர், வீராங்கனைகளுக்கான அறைகளுக்குள் சொறி நாய்கள் படு சுதந்திரமாக சுற்றித் திரிவிதாக காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பென்னல் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தைக் காரணம் காட்டி பல நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து போட்டியிலிருந்து விலகி வருகின்றனர். இதனால் இந்தியாவின் பெயர் படு வேகமாக டேமேஜாகி வருகிறது.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக களத்தில் குதித்துள்ளார். ஜெயபால் ரெட்டியையும், கில்லையும் அவசர ஆலோசனைக்காக அவர் அழைத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து ப.சிதம்பரம் ஆலோசனை:

இந்த நிலையில் இன்று காலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 20 பாதுகாப்பு அமைப்புகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகள், ராணுவம், விமானப்படை, சிபிஐ, என்ஐஏ, டெல்லி, ஹரியானா காவல்துறை தலைவர்கள், டெல்லி போலீஸ் கமிஷனர் உள்பட 20 பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார் ப.சிதம்பரம். இந்த ஆலோசனையின்போது உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

காமன்வெல்த் போட்டியின்போது லஷ்கர் இ தொய்பா தாக்குதல்  நடத்தலாம் என்று அமெரிக்கா எச்சரித்திருப்பதன் பின்னணியில் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கேம்ஸ் வில்லேஜை சுற்றிப் பார்த்த ஷீலா:

இந்த நிலையில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், காமன்வெல்த் போட்டி வில்லேஜை சுற்றிப் பார்த்தார். அங்குள்ள சுகாதாரக் குறைவு உள்ளிட்டவற்றையும் அவர் ஆய்வு செய்தார். கேம்ஸ் வில்லேஜை இன்று முதல் டெல்லி அரசு தனது பொறுப்பில் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************************************************************

காமன்வெல்த் போட்டியை நடத்துவது தேசியப் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்ச்சி, குறைபாடுகளை ஊழல்களை போட்டி முடிந்தபின் பார்த்துக்கொள்லலாம், இப்போது விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுகுறித்து மட்டும் சிந்திப்போம், என்றெல்லாம் பேசி முட்டுக்கொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை, அவர்களின் தேசியப் பெருமிதம் சரிந்துகொண்டே இருக்கிறது. இப்போதைய நிலையில் அவர்கள் செய்யக் கூடியது ஒன்றுதான். நாளை இடிந்துவிழப்போகும் விளையாட்டு அரங்கை குண்டுவைத்து தகர்த்துவிட்டு லஷ்கர் இ தொய்பா, ஹிர்குத் முஜாஹிதீன் என்று எதையாவது ஒரு பெயரைச் சொல்லிவிடலாம். இது வழக்கமான ஒன்றும் கூட.

என்னது…. இந்தியாவிற்கு அவமானமா?

ஆப்பிரிக்கக் கண்டத்தைவிட பட்டினி அதிகமுள்ள நாடு எனும்போது ஏற்படாத அவமானமா, இப்போது ஏற்பட்டுவிடப்போகிறது.

அயோத்தி தீர்ப்பு வருகிறது: உஷார்

22 செப்

அயோத்தியி்ல் பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம்  வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கவிருப்பதால் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் உத்திரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணி்ப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களான நெல்லை,கன்னியாகுமரி , தூத்துக்குடியில் பாதுகாப்பு க்காக 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.க்கள் ஆஸ்ரா கார்க்-நெல்லை, ராஜேந்திரன்-கன்னியாகுமரி, கபில்குமார் சரத்கார்-தூத்துக்குடி ஆகியோர் மேற்பார்வையில் முக்கிய பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்படுகின்றன. வாகன சோதனையும் நடத்தப்பட உள்ளது.

மணிமுத்தாறில் 500 போலீசார் அடங்கிய 4 பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். மேலும் ஊர்க் காவல்படையினர் மற்றும் 400 தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட், பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலங்கள் உள்ளி்ட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு பணிகள் தொடரும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகரத்தில் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

***********************************************************

கடந்த ஒரு வாரமாகவே அரசுகள் காவல்துறை மூலம் நிகழக்கூடாத ஏதோ ஒன்று நிகழப்போவதைப்போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. மத அமைப்புகள் அமைதி காக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. தீர்ப்பு என்ன விதமாக இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பும் இருக்கப்போவதில்லை. அரசியல் நலன்களுக்காக தீர்ப்புகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்வரை மக்களுக்கு அத்தீர்ப்புகளினால் பலனேதும் விளையப்போவதில்லை.

ஒரு பிரிவோ அல்லது இரண்டுமோ தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்யத்தான் போகின்றன. மீண்டும் வழக்கு, விசாரணை பல ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு மீண்டும் முறையீடு. வழக்கு, விசாரணை, தீர்ப்பு; வழக்கு, விசாரணை, தீர்ப்பு. அமைதியாக இருந்து முறையீடு மட்டும் செய்யுங்கள். அரசின் விருப்பம் இதுதான். அயோத்திக்கு மட்டுமல்ல, அனைத்திற்கும் அரசின் விருப்பம் இதுதான். மக்களுக்கோ……?

வாழ்க ஜனநாயகம்.