தொகுப்பு | ஓகஸ்ட், 2011

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

29 ஆக

”எல்லா போராட்டத்தையும் ஜனநாயக முறைப்படி செய்யறோம். அரசும் போலீசும் நம்ம போராட்டங்களுக்கு பாதுகாப்பு தர்றோங்கிற பேர்ல வேடிக்கை பார்க்குதே தவிர, நம்ம கோரிக்கைகளை புரிஞ்சுக்கறதில்ல, ஏத்துக்கறதில்ல, நிறைவேத்தறதில்ல. இது தெரிஞ்சும் நாம ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப வெவ்வேறு கோரிக்கைகளுக்காக ஒரே மாதிரி அடையாளப் போராட்டமா நடத்தி, முடிச்சுட்டு போயிடறோம். இதனால யாருக்கு என்ன பயன்? வேற போராட்ட வழிமுறைகளை நாம யோசிச்சா, செயல்படுத்தினா என்ன?”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் செங்கொடி

கேட்ட செங்கொடியை உற்றுப் பார்த்தார் சந்திரசேகரன். சுருக்கமாக சேகர். செங்கொடிக்கு சித்தப்பா. குழந்தை முதல் அவர்தான் செங்கொடியை பார்த்துப் பார்த்து வளர்த்தார். 10 வயதில் தன் அப்பாவை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்து அவருக்கு சிறைத்தண்டனை வாங்கிக் கொடுத்த அந்த விநாடி முதல், இதோ 21 வயது இளம் பெண்ணாக வளர்ந்திருக்கும் இந்த நொடி வரை, செங்கொடிக்கு எல்லாமும் சித்தப்பாதான். சகலமும் ‘மக்கள் மன்றம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்தான். செங்கொடியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சேகருக்கு முழுமையாகத் தெரியும். அதனாலேயே செங்கொடி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார். காரணம், இதே கேள்விக்கான விடையைத் தேடிதான் அவரும் பல ஆண்டுகளாக மனதளவில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் இருவரும் ஆகஸ்ட் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கை கோர்த்த படி கலந்து கொண்டனர். இதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை இந்திய குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து மூவரும் செப்டம்பர் 9-ம் தேதி அன்று தூக்கில் இடப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனை எதிர்த்துதான் அந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில்தான் இருவரும் கலந்துக் கொண்டிருந்தார்கள். செங்கொடி கேட்ட கேள்விக்கு ஒருவேளை சற்றுத் தள்ளி கைகோர்த்தபடி நின்றிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி விடையளிக்கலாம் என்ற ஆர்வத்தில் சேகர் எட்டிப் பார்த்தார். முழக்கங்கள் எழுப்புவதில் மும்முரமாக இருந்த வைகோ, இவர்களை கவனிக்கவில்லை. சரி என்று சேகரும் அமைதியாகிவிட்டார்.

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

தோழர் செங்கொடியின் இறுதி கடிதம்

ஆனால், செங்கொடி அமைதியடையவில்லை என்பதும், அவருக்குள் எழுந்த கேள்விக்கான பதிலை அடுத்த இரண்டு நாட்களில் அவரே கண்டடைவார் என்பதும், தனக்கு சரியென்று பட்ட அந்த விடையை தன் உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு தெரிவிப்பார் என்பதும், சித்தப்பா சேகர் அறிந்திருக்கவில்லை.

சரியாக ஆகஸ்ட் 28-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் முன்னால் செங்கொடி தன்னைத்தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டார். துடி துடித்து இறக்கும் கடைசி நொடி வரை, ‘மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள்… அவர்களை விடுதலை செய்…’ என்று முழக்கமிட்டபடியே உயிர் துறந்தார்.

தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல்என்னுடைய உடல்இந்த தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன்செல்கிறேன்.

இப்படிக்கு

தோழர் செங்கொடி

என்று அவரால் எழுதப்பட்ட கடிதம் அனைவரையும் படிக்கச் சொல்லி படபடத்துக் கொண்டிருந்தது.

ஜன் லோக்பால் மசோதா கோரி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே, தனது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அன்று காலை 10 மணியளவில்தான் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டிருந்தார். அதே தினத்தின் மாலையில்தான், தமிழக மக்களின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளாத அரசை கண்டித்து செங்கொடி தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.

______________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!”இப்படி அவ செய்வானு நாங்க நினைச்சே பார்க்கலீங்க…” காஞ்சிபுர மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் கட்டடத்தை வெறித்துப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார் சேகர். நள்ளிரவின் அடையாளம் அந்த மருத்துவமனைக்கு நூறடி தள்ளித்தான் தெரிந்ததே தவிர, பிரேத பரிசோதனை கிடங்கின் வாசல் முழுக்க உக்கிரத்தின் வெளிச்சம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

”பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி, இதோ இந்த ஆஸ்பத்திரி வாசல்லதான் சரஸ்வதி அழுதுகிட்டு நின்னா. தப்புத் தப்பு செங்கொடினு கூப்பிட்டாதான் அவளுக்கு பிடிக்கும். சரஸ்வதிங்கிற தன் பேரையே அவ மறந்துட்டா. காரணம், அந்தப் பேரை வைச்சது அவ அப்பா.

ஓரிக்கை கிராமத்த சேர்ந்தவங்க நாங்க. எங்கண்ணன் பேரு பரசுராமன். செங்கொடிக்கு தங்கச்சியும், தம்பியும் பொறந்ததும் அவங்கம்மா இறந்துட்டாங்க. உடனே எங்கண்ணன் ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா, சும்மா சொல்லக் கூடாது, வந்த மகராசி செங்கொடியையும் அவ தம்பி, தங்கச்சியையும் தன் கொழந்தைங்க போலவே பார்த்துகிட்டா. அதனாலயே செங்கொடி அந்த மகராசியை ‘சித்தி’னு கூப்பிட மாட்டா. ‘அம்மா’னுதான் வாய் நிறைய கூப்பிடுவா.

எங்கண்ணன் கூலித் தொழிலாளிங்க. நாடாறு மாசம், காடாறு மாசம்னு கிடைச்ச வேலைய செய்துட்டு இருப்பாரு. பல நேரம் வேலையே இல்லாம சும்மாவும் இருப்பாரு. சுபாவத்துல நல்லவரு. ஆனா, அதிகம் குடிப்பாரு. அதனாலயே அப்பப்ப அவருக்கு கிறுக்கு பிடிச்சுக்கும். தன் ரெண்டாவது பொண்டாட்டிய, செங்கொடிய, அவ தம்பி, தங்கச்சிய அது மாதிரி நேரத்துல அடிப்பாரு. தன்னை அடிக்கிறத கூட அந்த மகராசி தாங்கிட்டா. ஆனா, தன்னோட கொழந்தைங்களா நினைக்கிற மூத்தா தாரத்து பசங்களை எங்கண்ணன் அடிக்கிறதை அவங்களால தாங்கிக்க முடியலை.

ஒருநாள் இத தட்டிக் கேட்டாங்க. உடனே எங்கண்ணன், அந்த மகராசி மேல கெரசின் ஊத்தி கொளுத்திட்டாரு. அதிர்ந்து போய் செங்கொடியும், அவ தங்கச்சியும் இத பார்த்துட்டு நின்னாங்க. செங்கொடி சுதாகரிக்கறதுக்குள்ள அவ தங்கச்சி, ‘அம்மா’னு கத்திகிட்டே போய் அந்த மகராசிய கட்டிப் பிடிச்சிகிட்டா. இதைப் பார்த்த செங்கொடி அழுது கூச்சல் போட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவங்க ஓடி வந்து நெருப்பை அணைச்சு ரெண்டு பேரையும் இதோ, இதே ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு வந்தாங்க.

கடைசில செங்கொடியோட தங்கச்சியதான் காப்பாத்த முடிஞ்சுது. ‘அம்மா’னு அவ பாசமா கூப்பிட்ட அந்த மகராசிய காப்பாத்த முடியலை. சொன்னா நம்ப மாட்டீங்க. 10 வயசு பொண்ணா, தைரியமா, செங்கொடி அவ அப்பாவ போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!‘மக்கள் மன்றம்’ அமைப்போட நான் ஆரம்பத்துலேந்தே தொடர்புல இருக்கேன். என் மூலமா செங்கொடிக்கும் அந்த மன்றத்தோட பழக்கம் உண்டு. அதனால நேரா அவ மன்றத்துக்கு வந்து தங்க ஆரம்பிச்சா. நாலு வருஷம் எங்கண்ணன் வேலூர் ஜெயில்ல இருந்துட்டு திரும்பி வந்தாரு. ஆனா, செங்கொடி அவரை மன்னிக்கவும் இல்ல… ஏத்துக்கவும் இல்ல. இந்த 11 வருஷங்களா தன் அப்பாகிட்ட ஒரு வார்த்த கூட அவ பேசலைனா பார்த்துக்குங்க…

அவள நினைச்சு நான் ரொம்ப பெருமை படுவேன். ஆனா, அவ ‘அம்மா’வ நெருப்புக்கு பறிகொடுத்துட்டு எந்த இடத்துல நின்னு அழுதாளோ… அதே இடத்துல அதே மாதிரி எரிஞ்சு கரிக்கட்டையான அவள பார்த்து நான் அழுவேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலைங்க…” கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக தத்தளித்தபடி அழுத சேகர், சட்டென்று  மேற்கொண்டு பேச முடியாமல் கதற ஆரம்பித்தார்.

காவல்துறையின் சைரன் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று ஒலி எழுப்பியபடி யாராவது பிரச்னை செய்கிறார்களா என்று பார்த்துவிட்டு நகர்ந்தது. ஆங்காங்கே சிதறியிருந்த நான்கைந்து காவலர்கள் அந்த இருட்டிலும் கண்ணாடி மூடப்பட்ட வாகனத்தை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார்கள்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

ஆற்றாமையில் காஞ்சி மக்கள் மன்றத்தினர்

__________________________________

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் மகேஷ்

”இருளர் சமுதாயத்துக்கு எப்படியாவது கல்வி அறிவு கொடுத்து அவங்களை முன்னேற்றணும்ங்கிறதுனுதாங்க என்னோட லட்சியம். அதுக்காகத்தான் கீழ்கதிர்பூர் கிராமத்துல ‘மக்கள் மன்ற’த்தை நடத்திகிட்டு இருக்கேன்…” நடந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகாததால், மகேஷின் (மக்கள் மன்றத்தின் அமைப்பாளர், பெண்) குரல் கம்மியிருந்தது.

”காஞ்சிபுரம் மாவட்டத்துல இருளர் இன மக்கள் அதிகம். அதுல பெரும்பாலானவங்க அவங்க குழந்தைங்களோட செங்கல் சூளைல கொத்தடிமையா இருந்தாங்க. நாங்கதான் பெரிய அளவுல போராட்டம் நடத்தி அவங்கள எல்லாம் மீட்டோம். இதுக்காக சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்களுக்கு போய் தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்.

அப்படித்தான் ஓரிக்கை கிராமத்துக்கு நாங்க போயிருந்தப்ப செங்கொடி எங்களுக்கு அறிமுகமானா. அப்ப அவ 5வது படிச்சுட்டு இருந்தா. ரொம்ப சூட்டிகையான பொண்ணு. அதே நேரத்துல நிறைய கேள்விகள் கேட்டுகிட்டே இருப்பா. எல்லாமே அறிவியல் தொடர்பா இருக்கும். இந்தப் பொண்ணை நல்லா வளர்த்து ஆளாக்கணும்னு நாங்க மன்றத்துல பேசுவோம்.

இந்த நேரத்துலதான் செங்கொடியோட சித்தி இறந்து போனாங்க. அதுக்கு காரணம் அவ அப்பாங்கிறதால திரும்ப அவ தன்னோட கிராமத்துக்கு போக விரும்பலை. நேரா இங்க வந்துட்டா. எங்க அமைப்பை சேர்ந்தவங்கதான் அவள எங்க பொண்ணு மாதிரி வளர்த்தோம்.

ரொம்ப சாப்ட் டைப். அதே சமயத்துல ரிசர்வ்ட் டைப்பும் கூட. அவளுக்கு எழுத, படிக்கத் தெரியுங்கறதால எங்க கிட்ட வந்ததும் நாங்க வைச்சிருக்கிற புத்தகங்களை எடுத்து, புரியுதோ, புரியலையோ படிப்பா. சந்தேகத்தை கேப்பா. அவள தொடர்ந்து ஸ்கூலுக்கு அனுப்ப நாங்க முடிவு செஞ்சோம். ஆனா, தீர்மானமா பள்ளிக்கு போகறதை மறுத்துட்டா. இங்கேந்தே படிக்கிறேன்னு சொல்லிட்டா. வற்புறுத்தி பார்த்த நாங்க, அவ போக்குலயே விட்டுட்டோம். ஆனா, பிரைவேட்டா அவள படிக்க வைக்கிறதை மட்டும் நாங்க நிறுத்தலை.

எங்க கூடவே நாங்க கிராமங்கள்ல பிரச்சாரம் பண்ண போறப்ப வருவா. ‘நம்ம சமுதாயம் முன்னேறணும்னா நாம எல்லாம் படிக்கணும்’னு தன்னை விட வயசு குறைஞ்சவங்ககிட்ட பக்குவமா எடுத்து சொல்லுவா. வார இறுதில படிக்கிற பசங்களுக்கு நாங்க டியூஷன் மாதிரி எடுப்போம். அப்ப சொல்லிக் கொடுக்கறதுல முதல் ஆளா செங்கொடிதான் வந்து நிப்பா.

அவளுக்கு இசையில ஆர்வம் அதிகம். பறைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சானா, இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். எப்படிப்பட்ட வலு உள்ளவங்களும் ஒரு மணி நேரத்துக்கு மேல பறை அடிக்க மாட்டாங்க. கை வலிக்கும். ஆனா, செங்கொடி தொடர்ந்து பல மணி நேரங்கள் விடாம பறையடிப்பா. எங்களுக்கே அதை பார்க்க ஆச்சரியமா இருக்கும்.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!இப்படி கலை மூலமா பிரச்சாரம் செய்யறது அவளுக்கு பிடிக்கும். அதனால மனமுவந்து அவ இதை செய்வா. ‘சென்னை சங்கமம்’ல அவளோட நிகழ்ச்சி நடந்திருக்கு. எந்நேரமும் புத்தகமும் கையுமா இருப்பா. ‘இவர்தான் லெனின்’ நூல் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். குறைஞ்சது முப்பது முறையாவது அந்த நூலை படிச்சிருப்பா. அதை மனப்பாடமா ஒப்பிப்பா. ஆனா, அர்த்தம் புரிஞ்சுதான் அவ அப்படி செய்வா.

சேகுவேரா, நெல்சன் மண்டேலா, தந்தை பெரியார், பகத்சிங் நூல்கள்னா அவளுக்கு அவ்வளவு விருப்பம். இவங்களோட புகழ்பெற்ற வாசகங்களை அப்படியே அந்தந்த நேரத்துக்கு எது சரியா இருக்குமோ அப்ப சொல்லுவா.

‘உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும், அந்த அநீதியை எதிர்த்து எவர் ஒருவர் போராடுகிறாரோ, அவரும் சே-வும் தோழரே…’ங்கிற சேகுவேராவோட வாசகம் செங்கொடிக்கு அவ்வளவு பிடிக்கும்.

ஒருமுறை ஒருத்தர் செங்கொடிகிட்ட… ‘ஏம்மா, படிப்புல இவ்வளவு ஆர்வம் காட்டறியே… பேசாம தபால்ல டிகிரி படி’னு சொன்னாரு. அதுக்கு யோசிக்காம செங்கொடி சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘நான் மக்களை படிக்கறேன். இதுதான் இருக்கிற கல்வியிலயே உயர்ந்த கல்வி. எந்த டிகிரியும் இதுக்கு ஈடாகாது. இந்தப் படிப்பு எனக்கு போதும்…’

இப்படிதான் செங்கொடி, இருந்தா… வாழ்ந்தா. இதுக்காகவே நாங்க நடத்தற அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்லயும் கலந்துகிட்டா. பத்து நாட்கள், இருபது நாட்கள், ஏன் 60 நாட்கள் கூட இதுக்காக சிறைல எங்களோட இருந்திருக்கா. புழல், வேலூர்னு செங்கொடி பார்க்காத சிறை இல்ல.

பாரதிதாசன் பாடல்கள அவ்வளவு அழகா, உணர்வோட பாடுவா. 2009- மேக்கு பிறகு அவ அதிகம் பாடி ஆடினது, ‘களத்திலிருக்கும் அம்மாவுக்கு கடிதம் எழுதுகிறேன்…’, ‘இமயத்தின் சிகரத்திலே எங்கள் விடுதலையின் முழக்கங்கள்…’

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

மக்கள் மன்ற குழந்தைகளுடன்

பொதுவா நாங்க இணையத்துல வினவு, கீற்று போன்ற தளங்கள்ள சமூக நிலமைகள் சார்ந்து எழுதப்படற கட்டுரைகளோட பிரிண்ட் அவுட் எடுத்து அதை படிச்சுட்டு விவாதிப்போம். அந்த விவாதங்கள் எல்லாத்துலயும் செங்கொடி பங்கேற்பா. தவறாம தன்னோட கருத்து, விமர்சனத்தை முன் வைப்பா. ஆனா, எந்தச் சூழ்நிலைலயும் நாங்க, தனி நபர் போராட்டத்தையோ அல்லது சமூக நிலை சார்ந்த தற்கொலை முயற்சியையோ ஆதரிச்சதில்ல. அவ்வளவு ஏன், செங்கொடி கூட தன்னோட கருத்தை முன்வைக்கும்போது இதைப் பத்தி பேசினதும் இல்ல. ஆதரிச்சதும் இல்ல.

முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு பிறகு அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா. அதுக்கு பிறகு தொடர்ச்சியா ஈழம் தொடர்பா படிக்கறது, காணொளிகளை பார்க்கறதுனு இருந்தா. ராஜீவ்காந்தி கொலை வழக்குல குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரறிவாளன், முருகன், சாந்தனோட கருணை மனுக்கள் ஜனாதிபதியால நிராகரிக்கப்பட்டதும் நிலை கொள்ளாம தவிச்சா. அவங்க மூணு பேரையும் எப்படியாவது காப்பாத்தணும்னு சொல்லிகிட்டே இருந்தா. அவங்களுக்காக நடந்த அத்தனை ஆர்ப்பாட்டம், போராட்டத்துலயும் கலந்துகிட்டா.

பைக் ரேலி வேலூருக்கு போனப்ப செங்கொடியும் வந்தா. ஆனா, இயக்கம் சார்பா ஒருத்தர்தான் சிறைக்குள்ள போய் அவங்க மூணுபேரையும் பார்க்க முடியும்னு நிலை இருந்ததால என்னை உள்ள அனுப்பிட்டு அவ வேலூர் சிறைக்கு வெளிலயே காத்திருந்தா. நான் திரும்பி வந்ததும் ‘அவங்க மூணு பேரும் எப்படி இருக்காங்க… மன உறுதி எப்படி இருக்கு’னு துருவித் துருவி கேட்டா.

சென்னை கோயம்பேடுல வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கறதை கேள்விப்பட்டதும் அங்க போகணும்னு துடிச்சா. ஆனா, படிக்கற பசங்களுக்கு பாடம் சொல்லித் தர வேலை இருந்ததால அவள நாளைக்கி (ஆகஸ்ட் 29, திங்கள்கிழமை) கூட்டிட்டு போறதா சொல்லியிருந்தோம்…”

அதற்கு மேல் பேச முடியாமல் பல நிமிடங்களுக்கு அழுத மகேஷ், சற்றே நிதானப்பட்டதும் தொடர்ந்தார்.

”சனிக்கிழமை அன்னிக்கி நளினி – முருகனோட மக, அரித்ராவோட குரலை டிவில கேட்டா. அதுக்கு அப்புறம் அவ தன்னோட வசத்துலயே இல்ல. ’21 வருஷங்கள்ல ஒரேயொருமுறைதான் தன் அப்பா – அம்மாவ அரித்ரா பார்த்திருக்காளா?’னு திரும்பத் திரும்ப கேட்டா.

முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தப்ப முத்துக்குமார் தன்னைத்தானே எரிச்சுகிட்டது செங்கொடி மனசுல ஆழமான தழும்பா பதிஞ்சு போச்சு. முத்துக்குமாரோட இறுதி ஊர்வலத்துல கூட எங்களோட கலந்துகிட்டா. அரித்ராவோட குரல், அவளோட தழும்பை கீறி விட்டா மாதிரி இருந்திருக்கணும். ஒரு மாதிரி மவுனமாவே இருந்தா. நாங்க அவளுக்கு உடம்புதான் சரியில்லை போலனு கோயம்பேடு உண்ணாவிரதத்துக்கு இன்னிக்கி (ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28) காலைல கிளம்பி போனோம்.

மாலை 5 மணி போல திரும்பி வந்த எங்களுக்கு செங்கோடிய காணாதது முதல்ல பெரிசா தெரியலை. ஏன்னா, அவ பக்கத்துல இருக்கிற முந்திரிதோப்புக்கு அடிக்கடி போய் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பா. அதுமாதிரி போயிருக்கா போலனு நினைச்சோம்.

ஆனா, டிவிஎஸ் 50 எக்ஸ்எல் வண்டி, வழக்கமா நிக்கிற இடத்துல இல்ல. அலுவலகத்துல இருந்த பிள்ளைகளும் செங்கொடி அக்காவ ரொம்ப நேரமா காணும்னு சொன்னாங்க. அப்படியே உடம்பெல்லாம் பதறிடுச்சு. முந்திரிதோப்புக்கு வண்டில போக மாட்டா. அதனால நாங்க எல்லாரும் நாலா பக்கமும் சிதறி செங்கொடிய தேடினோம்.

அப்பத்தான்…”

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!

தோழர் செங்கொடி சடலமாக

வார்த்தைகள் தடைப்பட, குரல் மேலும் உள்ளிரங்க வெடித்து அழுதார் மகேஷ்.

அவர் விட்ட இடத்திலிருந்து சில நிமிடங்களுக்கு பிறகு மேகலா தொடர்ந்தார். ”அப்பதான் தாலுகா ஆபீஸ்ல ஒரு பொண்ணு தன்னைத்தானே எரிச்சுகிட்டதா ஃபோன் வந்தது. பதறிப் போய் ஜி.எச்.சுக்கு ஓடினோம். அது செங்கொடிதான்னு அடையாளம் தெரிஞ்சதும் அப்படியே நாங்க நொறுங்கிட்டோம்.

தாலுகா ஆபீஸ் இருக்கிற வளாகத்துலயேதான் தீயணைப்பு நிலையமும் இருக்கு. ஆனா, எங்க தன்னோட போராட்டத்தை அணைச்சுடப் போறாங்களோனு மண்ணெண்ணெய்க்கு பதிலா பெட்ரோலை செங்கொடி பயன்படுத்தியிருக்கா. இதுக்காக தாலுகா ஆபீஸ் பக்கத்துல இருக்கிற ‘வினாயகா பெட்ரோல் பங்க்’ல பாட்டில்ல வாங்கியிருக்கா.

மக்கள்கிட்டேந்துதான் பாடம் படிக்கணும்னு சொல்லிகிட்டு இருந்தவ எதனால இப்படியொரு முடிவு எடுத்தானு தெரியல…” மேகலாவாலும் அதன் பிறகு பேச முடியவில்லை. திருமாவளவன், வைகோ, கொளத்தூர் மணி… என அடுத்தடுத்து தலைவர்கள் மகேஷை பார்ப்பதற்காக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த களேபரத்தில் இன்று காலை 7 மணி அளவில் கலைந்த உடைகளுடன் வந்து சேர்ந்த ஒரு பெரியவர், மருத்துவமனையின் வாசலிலேயே அமர்ந்துவிட்டதை யாரும் கவனிக்கவில்லை.

செங்கொடியின் கடிதத்தை நகலெடுத்து அனைவருக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தவர்கள், அந்தப் பெரியவரின் கரங்களிலும் ஒரு நகலை திணித்துவிட்டு சென்றார்கள். அதில் எழுதப்பட்ட வாசகங்களையே உற்றுப் பார்த்த அந்தப் பெரியவர் அழுத்தம் திருத்தமாக சொன்னார்:

”உணர்ச்சிவசப்பட்டு எதுக்காக இளைஞர்கள் இப்படியொரு காரியத்தை செய்யறாங்க? இதனால யாருக்கு லாபம்? போராடறதுக்கு இதுவா வழி? எனக்கு வயசாகிடுச்சு. இல்லைனா மக்களை திரட்டி கைல துப்பாக்கிய எடுத்திருப்பேன்…”

‘அடையாளப் போராட்டத்துக்கு பதிலா வேறு போராட்ட வழிமுறையே இல்லையா…’ என்று தன் சித்தப்பாவிடம் கேள்வி கேட்ட செங்கொடி, இந்தப் பெரியவர் சொன்ன பதிலை குறித்தும் யோசிக்க வழியின்றி சாம்பலாகிவிட்டார்.

எந்த முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை தட்டி எழுப்பியதை போல் தன் உடலும் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படட்டும் என்று நம்பிக்கையுடன் செங்கொடியை அழுத்தம்திருத்தமாக எழுத வைத்ததோ -அந்த முத்துக்குமாரின் அப்பாதான் அந்தப் பெரியவர் என்பதை சூழ்ந்திருக்கும் தலைவர்களை கடந்து யாரால் செங்கொடியிடம் இப்போது சொல்ல முடியும்?

அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார்முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!! படங்கள்!!!செங்கொடியின் உடலை வேண்டுமானால் பெட்ரோல் எரித்திருக்கலாம். ஆனால் அந்த இளம்பெண்ணின் உள்ளத்தை மொன்னையான தமிழக அரசியல் சூழல்தான் எரித்திருக்கிறது. ஆகவே இது வெறுமனே தீக்குளிப்பினால் நடந்த தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது சுயவிமரிசனம் செய்து கொள்ளட்டும்.

மூவர் தூக்கிற்கு காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான நமது போராட்டம் மக்கள் அரங்கில் தொடரட்டும். செங்கொடி எனும் அந்த இளம்பெண்ணின் உயிரை இனி மீட்க முடியாது. ஆனால் அந்தப் பிஞ்சு உள்ளம் கவலைப்பட்ட சூழ்நிலையையாவது மாற்றுவோம்.

தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!

___________________________________________

– வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து
______________________________________

முதல் பதிவு: வினவு

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

26 ஆக

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்!

அனைவரையும் விடுதலை செய்!

ஆர்ப்பாட்டம்

 

27.8.2011

பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

மாலை 4.30 மணி

தலைமை

 

தோழர் வே.வெங்கடேசன்,

சென்னைக் கிளை செயலாளர்,

ம.க.இ.க, சென்னை.

சிறப்புரை

 

தோழர் மா.சி. சுதேஷ் குமார்

மாநில இணைச் செயலாளர்,

பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

 

  • தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து  பெற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனையா?

  • 21 ஆண்டுகள் சிறை தண்டனை, அதுவும் போதாதென்று மரண தண்டனையா?

  • அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை  பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்துள்ள காங்கிரசு பரம்பரையின் போர் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?

முதல் பதிவு: புமாஇமு

பெண்களை அடிமைப்படுத்தும் சமூகம் தலைநிமிர முடியாது – சித்தி ஜுனைதா பேகம்

25 ஆக

இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம் என்பவர் யார்? இவரைத் தந்த ஊர் எந்த ஊர்? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழில் பெண் படைப்பாளிகள் இன்றும் குறைவாகவே காணப்படுகின்றனர். இப்படி இருக்கும் இன்றைய சூழலில் 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்துப் பணியை தொடங்கிய பெண் படைப்பாளிதான் இந்த சித்தி ஜூனைதா பேகம். 1917-ம் ஆண்டு நாகூரில் பிறந்தவர்.

மூன்றாம் வகுப்பே படித்தவர். 16 வயதிலேயே எழுதத் தொடங்கியவர். கிட்டத்தட்ட 64 ஆண்டுகளுக்கு முன்னால் 21 வயதில் ‘காதலா கடமையா’ என்ற அபூர்வ புரட்சி நாவலை எழுதியவர். ‘காதலா கடமையா’ நாவலை எழுதியதன் மூலம் முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்த நாவலைப் படித்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. காரணம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1958-ல் தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படக் கதை காதலா கடமையா நாவலின் கதையோடு ஒத்திருந்ததுதான். இத்துடன் பெண்ணுள்ளம், இஸ்லாமும் பெண்களும் உள்பட பத்து நூல்களை சமுதாய நலனுக்காக எழுதியவர். 1998ம் ஆண்டு 81-ம் வயதில் தம்முடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டார். ஆம், அந்த ஆண்டுதான் அவர் மறைந்தார்.

ஒரு நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இளவரசனுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கச் செய்யும் சதிகாரர்கள் தங்களுக்கு வேண்டிய ஒருவனுக்கு முடிசூட்ட ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நேரத்தில் இளவரசனைப் போல் உருவ ஒற்றுமையுடைய ஒருவன் வெளியூரில் இருந்து வருகிறான். அவனைச் சந்தித்த இளவரசனின் ஆதரவாளர்கள் தற்காலிகமாக அவனுக்கு முடி சூட்டுகின்றனர். மக்களும் இளவரசியும் அவனை உண்மையான இளவரசன் என்றே நம்புகின்றனர். நாட்டுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தீட்டுகிறான். இறுதியில் சிறை வைக்கப்பட்ட உண்மையான இளவரசனை , இளவரசனாக நடிப்பவன் மீட்டு வருகிறார்.

‘காதலா கடமையா?’ நாவலின் இந்தக் கதைச் சுருக்கம்தான் நாடோடி மன்னனுக்கு அடிப்படைக் கதையாக அமைந்திருந்ததை காண முடிந்தது.

நாடோடி மன்னனுக்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவர் ரவீந்தர் (இயற்பெயர் : ஹாஜா முஹைதீன்). இவரும் நாகூரைச் சேர்ந்தவர். 74 வயதான இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவரிடம் நேரில் சென்று ‘காதலா கடமையா’ நாவல் தாங்கள் வசனம் எழுதிய நாடோடி மன்னன் படக்கதையுடன் ஒத்துள்ளதே என்று கேட்டேன். அதை அவர் ஒப்புக் கொண்டார்.

நாடோடி மன்னன் கதை விவாதத்தின்போது  எம்.ஜி.ஆர் அவர்கள் ரவீந்தரிடம் பாதிக்கதை வரையில் சொல்லிக்கொண்டு இருந்தபொழுது  மீதிக்கதையை ரவீந்தர் சொல்லி முடித்தார். இதைக் கேட்டு வியந்த எம்.ஜி.ஆரிடம் ‘காதலா கடமையா?’ என்ற நாவலில் படித்த கதைதான் இது என்று ரவீந்தர் தெரிவித்தார்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசனாக நடிப்பவன் மக்களுக்காக போடும் சமுதாய நலத்திட்டங்கள் சிறப்புக்குரியதாக அமைந்தது. இதே திட்டங்கள் நாடோடி மன்னன் படத்திலும் மக்களிடத்தில் பரபரப்பை உண்டாக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது.

‘காதலா கடமையா?’ நாவலில் மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் :

1. 18 வயது முதல் 45 வயதுக்குள் புத்தகப் பயிற்சி அளித்து கல்வியில் ஆர்வத்தை ஊட்ட வேண்டும்.
2. வைத்திய வசதிகள்
3. பயிர்த்தொழில், குடிசைத் தொழில் பெருக்குதல்
4. பெண்களுக்கு பள்ளிக்கூடம் அமைத்தல். உயர்கல்விச்சாலையும் அமைத்தல். அனாதை விடுதி, தனி மருத்துவமனை அமைத்தல்.
5. ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க வசதி.
6. ஏழை பணக்காரர் வேற்றுமையை நீக்குதல்

இதே கருத்துக்கள்  நாடோடி மன்னன் திரைப்படத்தில்  இளவரசனாக நடிப்பவன் போடும் சட்டமாகும்.

1. ஐந்து வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு கல்வியைக் கட்டாயமாக்குதல்
2. பயிர்த்தொழில் செய்தல்
3. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் நிலையங்களைக் கட்டுதல்
4. பயிர்த்தொழில் செய்தல்
5. கல்வி வைத்திய வசதி ஏற்படுத்துதல்
6. வாழ்விழந்த பெண்களுக்காக செலவிடுதல், மருத்துவமனை அமைத்தல்
7. குடிசை வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி ஏழை பணக்காரர் வேறுபாடு நீக்குதல்
8. வயோதிகர், கூன், குருடு, முடம் போன்றோர்க்கு உதவி செய்தல்
9. கலப்புத் திருமணங்கள் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புச் சலுகை
10. உழுபவனுக்கே நிலம் சொந்தம்
11. கற்பழித்தால் தூக்கு தண்டனை
…. என்று இடம் பெற்றுள்ளன.

‘காதலா கடமையா?’ நாவலின் சமுதாய கருத்துக்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்த காரணத்தால் நாடோடி மன்னனில் அதே கருத்துக்களுடன் சில புதிய சிந்தனைகளையும் சேர்த்து ரவீந்தர் வசனமாக எழுதியுள்ளார்.

நாவலில் இடம்பெறும் திட்டங்களும் படத்தில் இடம்பெறும் திட்டங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பதைக் காணலாம்.

நாடோடி மன்னனில் இளவரசனாக நடிப்பவனிடம் அவன் காதலி ,’அத்தான் நாம் காதலோடு பிறப்பதில்லை. கடமையோடுதான் பிறக்கிறோம். உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டால் நாடு நலம் பெறும்’ என்று குறிப்பிடுகிறாள். ‘காதலா கடமையா?’ என்ற நாவலின் தலைப்பு நாடோடி மன்னன் திரைப்பட வசனத்திலும் அப்படியே வந்துள்ளது. இது வசனகர்த்தா ரவீந்தரிடம் நாவலின் தலைப்பு ஏற்படுத்திய ஆழமான தாக்கமாகக் கருதலாம்.

‘காதலா கடமையா?’ நாவலில் இளவரசன்  சிறை வைக்கப்பட்டு இருக்கும் தீவு மாளிகையும், இளவரசனாக நடிப்பவன் சண்டையிட்டு மீட்கும் காட்சியும் நாடோடி மன்னன் திரைப்படத்திலும் அப்படியே இடம் பெற்றுள்ளன.

இதைப்போல நாடோடி மன்னன் திரைப்படத்தில் வரும் பல காட்சிகள் ‘காதலா கடமையா?’ நாவலில் வரும் காட்சிகளைப் பின்பற்றி அமைத்து இருக்கின்றன.

‘காதலா கடமையா?’ நாவல் நாடோடி மன்னன் திரைப்படம் முழுவடிவம் பெறுவதற்கு முன்னோடியாகவும் பின்னோடியாகவும் அமைந்துள்ளது.

இனிய தமிழ்நடையில் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய ‘காதலா கடமையா?’ நாவலுக்கு மதிப்புரை வழங்கிய உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் ‘‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூல் எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகிறது. பொதுமக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்’’ என வரிக்கு வரி வியந்து போற்றுகிறார் தமிழ்த் தாத்தா. இந்த மதிப்புரையே சித்தி ஜூனைதா பேகத்திற்கு கிடைத்த தமிழ்ப் பரிசாகக் கருதலாம்.

இஸ்லாமியப் பெண்கள் எழுத முன்வராத அந்தக் காலத்தில் பெண்ணியச் சிந்தனையை முன்னிறுத்தி ‘எந்தச் சமூகம் பெண் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதோ  அந்தச் சமூகம் ஒரு காலத்திலும் தலைநிமிர்ந்து நிற்க முடியாது’ என்று ‘காதலா கடமையா?’ நாவலில் துடித்துக் கூறியுள்ளார்.

சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், பட்டினத்தார் பாடல் முதலியவற்றை தம்முடைய நாவலில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்

இவரது படைப்புகள் புரட்சிமிக்க கருத்துக்கும், பெண்ணியச் சிந்தனைக்கும் இனிய தமிழ் நடைக்கும் ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கும் சான்றாக உள்ளன. இதைப்போல தமிழ்-தமிழின உணர்வும் இவருடைய உள்ளத்தில் மேலோங்கி நிற்பதை இவரது நாவலில் காண முடிகிறது.

1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கி விட்ட காலகட்டத்தில் சித்தி ஜூனைதா பேகம் அவர்கள் தாம் எழுதிய காதலா கட¨மாயா நாவலில் ‘தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய்நாட்டை மீட்பதற்காக உடல், பொருள், ஆவியை தத்தஞ் செய்த பெரியோரைப் பின்பற்றுவேன்’ என்று எழுதி இருப்பது இவரது தமிழ் இனப்பற்றை காட்டுகிறது.

தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி!

நன்றி : டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது, தினகரன்

 

முதல் பதிவு: ஆபிதீன் பக்கங்கள்

மேலதிக விபரங்களுக்கு

காதலா கடமையா வாசிக்க

தமிழர் புத்தாண்டு

23 ஆக

கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் புத்தாண்டு ரத்து செய்யப்பட்டு சித்திரை மாதம் முதல் நாளிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த சட்டசபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி மாறியதும் தி.மு.க., கொண்டு வந்த பல்வேறு திட்டங்களான கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச கலர் டி.வி., திட்டம் , இலவச வீடு வழங்கும் திட்டம் சமச்சீர் கல்வி (கோர்ட்டு போய் தப்பியது ) , புதிய தலைமை செயலகம் மாற்றம் ரத்து என உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

 

தை மாதம் முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என தி.மு.க., சட்டம் இந்நிலையில் இயற்றியது.இன்றைய சட்டசபையில் இன்று தமிழக அரசு ரத்து செய்தது. மீண்டும் சித்திரை முதல் நாளில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் என்று புதிய சட்ட மசோதாவை அவையில் அரசு தாக்கல் செய்தது. இதற்கு கம்யூ., கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ம.க., எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. 

 

பல்லாண்டு காலம் நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்ற வேண்டாம் என தொல்லியல், வானிலை நிபுணர்கள் தெரிவித்த கருத்தின்படி இந்த மாற்றம் கொண்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தை மாதம் ( பொங்கல் நாளில் ) கொண்டாடப்படுவது மக்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் இருந்ததாகவும் அரசு தனது மசோதாவில் கூறியுள்ளது. இந்த மசோதாவை அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தாக்கல் செய்தார். இதன் படி சித்திரை ஒன்று ஏப்ரல் 14 ம் தேதி தமிழ்புத்தாண்டாக கொண்டாடப்படும்.

*************************************************

தமிழர் புத்தாண்டு சித்திரையில் தொடங்கப்படுவதே சரியானது. பண்டைய தமிழர்கள் இரண்டு அடிப்படையிலிருந்து ஆண்டுத் தொடக்கத்தைக் கணக்கிட்டனர்.

1. கதிரவனின் வடக்கு நோக்கிய நகர்வின் தொடக்கம்.

2. தலைநகருக்கு நேர்மேலே கதிரவன் வரும் நாள்.

இந்த அடிப்படையில் ஆண்டுக்கணக்கை உருவாக்கிய தமிழர் தங்களுடைய தலைநகர் மூலமதுரைக்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளும், வடக்கு நோக்கிய நகர்வின் தொடக்கமும் ஒன்றாக இருப்பதனால் இன்றைய சித்திரை மாதத்தை ஆண்டுத்தொடக்கமாக கொண்டனர். முதல் கடல்கோளுக்குப் பிறகு தலைநகர் மூலமதுரையிலிருந்து கதவபுரம் எனும் கபாடபுரத்திற்கு மாற்றம் பெற்றது. இதனால் கபாடபுரத்திற்கு நேர்மேலே கதிரவன் வரும் நாளான இப்போதைய தை மாதத்திற்கு ஆண்டுத்தொடக்கம் மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட இந்த ஆண்டுமுறையே எகிப்து வழியாக உலகெங்கும் பரவி இன்று சில மாற்றங்களுடன் ஜனவரியில் தொடங்கும் கிரிகேரியன் ஆண்டாக நடப்பில் இருக்கிறது.

தை தான் ஆண்டுத்தொடக்கம் என்றால் தலைநகர் கபாடபுர‌த்திற்குப் பிறகு மணலூர், கொற்கை என மாறி இன்று சென்னையில் இருக்கிறது. இவைகளை கணக்கில் கொண்டால் ஆண்டுத்தொடக்கம் சித்திரையாகவும் இருக்காது, தையாகவும் இருக்காது. இன்றைய சூழலுக்கு ஏற்ப தலைநகர் மாறும்போது ஆண்டுத் தொடக்கத்தை மாற்றுவதும் அறிவுக்குகந்ததல்ல. ஆகவே தமிழன் காலக் கணிப்பில் ஆண்டுக் கணக்கை உலகிற்கு வழங்கிய சித்திரையை தொடக்கமாக கொள்வதே சரியானது.

ஆனால், தற்போது ஜெயலலிதா தையிலிருந்து சித்திரைக்கு மாற்றியிருப்பது மேற்கண்ட அடிப்படையில் அல்ல. ஜெயாவிடம் இருப்பதெல்லாம் திமுகவிற்கு எதிர்ப்பு என்பது மட்டும் தான். சித்திரையாக இருந்தாலும் தையாக இருந்தாலும் அதனால் தமிழர்களுக்கோ மக்களுக்கொ ஒரு பயனும் இல்லை. இவர்களின் ஓட்டுப் பொறுக்கி நாய்ச் சண்டையில் பண்டைய தமிழர்களின் அறிவுத்தடம் சிதையாமல் காப்பாற்றப்பட வேண்டும்.

ரியாத்தில் புதிய ஜனநாயகம்

22 ஆக

 

 

 

 

 

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

தற்போது ”புதிய ஜனநாயகம்” எனும் மார்க்சிய லெனினிய மாத இதழ் ரியாத்திலும் கிடைக்கிறது. சமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி மார்க்சியக் கண்னோட்டத்தில் எடுத்தியம்பும், மக்களை அரசியல் விழிப்புணர்வை நோக்கி நகர்த்திச் செல்லும் மாத இதழான புதிய ஜனநாயகம் இப்போது ரியாத் மாநகரில் பத்தாவில் லக்கி ரெஸ்டாரண்ட் எதிரிலுள்ள பானூஸ் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. நண்பர்கள் இச்செய்தியை தமிழ் தெரிந்த அனைவரிடமும் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்.

 

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

21 ஆக

 

சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் காயிதேமில்லத் திடலில் தொழுகை நடத்த யாரை அனுமதிக்கலாம் எனும் கேள்வியுடன் ஒரு இடுகை இடப்பட்டிருந்தது.  அதுகுறித்தான என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை.

 

இதைக் கண்டதும் சிலருக்கு கோபம் வரலாம் ‘இது எங்கள் பிரச்சனை இதில் கருத்து கூறுவதற்கு நீயார்?’ என்று. பொதுவெளிக்கு வந்த ஒரு பிரச்சனையில் யாரும் தங்களுடைய கருத்தைக் கூறலாம். அடுத்து நாங்கள் நீ என பிரிப்பதற்கு இது ஆன்மீகப் பிரச்சனை அல்ல. பெருநாள் தொழுகை எத்தனை ரக் அத்துகள் நடத்துவது என்பதில் பிரச்சனை வந்தால் அது ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் ஒரு பொது இடத்தில் தனிப்பட்ட எந்தக் குழுவுக்கு தொழுகை நடத்த அனுமதி தருவது எனும் பிரச்சனையை தனிப்பட்டதாகவோ, ஆன்மீகம் சார்ந்ததாகவோ குறுக்கிவிட முடியாது.

 

நான் இங்கு பேசவிருப்பது குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு அனுமதி கொடுக்க வேண்டும், பிரிதொரு குழுவுக்கு அனுமதி கொடுக்கக் கூடது என்பது குறித்தல்ல.  தொழுகை நடத்துவது என்பதில் தொழிற்படும் அரசியல் குறித்தே நான் கூற விரும்புகிறேன்.

 

தற்போது தொழுகை நடத்த தங்களுக்கே அனுமதி தரப்படவேண்டும் என உரிமை கொண்டாடும் மூன்று குழுக்களும் முன்பு ஒரே குழுவாக இருந்தவை தான். ஆன்மீக பரப்பலை மட்டுமே தங்களின் முதன்மையான நோக்கமாக அறிவித்துக் கொண்ட இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் மொத்தக் குழுவிலிருந்து தனித்தனியாக பிரியும் போது கூறிக் கொண்ட காரணம் என்ன? மைய இலக்கான ஏகத்துவத்தில் கருத்து வேறுபாட்டுக்கோ, ஐயத்திற்கு கொஞ்சமும் இடமில்லை. மாறாக அதை அடைவதற்கான பாதை, நிர்வாகச் சிக்கல்கள், தனிப்பட்ட ஒழுக்கங்கள் போன்றவைகளே பிரிவதற்கான காரணங்கள் என முன்னிருத்தப்பட்டன.  இது சரியானால்; தொழுகை நடத்துவது என்பது அவர்களின் மைய இலக்கில் அடங்குவது. இதில் அவர்களுக்குள் பேதம் ஒன்றுமில்லை. ஆனால் அதை எங்கு நடத்துவது என்பதில் தான் சிக்கல்.

 

பெருநாள் தொழுகை திறந்தவெளியில் நடத்தவேண்டும் என்பது ஆன்மீக விரும்பம் (சுன்னத்) என்றால் கடையநல்லூரில் திடல்களுக்கு பஞ்சமா? அட்டக் குளம் இருக்கிறது, தெப்பத் திடல் இருக்கிறது, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் திடல் இருக்கிறது, அரசு ஆண்கள் பள்ளிக் கூடத்தில் இருக்கிறது, ஒவ்வொரு தெருவையும் திடலாக பயன்படுத்தலாம், அவ்வளவு ஏன்? போக்குவரத்தை மறித்து கடைவீதியையே திடலாக கருதி ஒரு குழு ஏற்கனவே தொழுகை நடத்தியிருக்கிறது. இவைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காயிதே மில்லத் திடலுக்கு போட்டி போடுகின்றன என்றால் அதில் உள்ளாடும் காரணம் என்ன?

 

ஏகத்துவ வணக்கத்தில் ஒற்றுமை உண்டு பாதையில் தான் வேறுபாடு என்றால் ஒரே திடலில் ஒருமைப்பட்டு தொழுகை நடத்தும் சகிப்பு அவர்களுக்கு வந்திருக்கும். அல்லது ஒன்றன்பின் ஒன்றாக கூட தொழுகை நடத்தியிருக்க முடியும். ஒரே பள்ளியில் ஒவ்வொரு குழுவும் தனித்தனி ஜமாத் நடத்திய இவர்களுக்கு இது முடியாத காரியமா என்ன? என்றால் இப்போது போட்டியிடுவதன் பொருள் என்ன?

 

காயிதே மில்லத் திடல் என்பது கடையநல்லூரில் பொதுக் கூட்டங்களுக்கு பொதுக் காரியங்களில் கூடுவதற்காக பரவலாக அறியப்படும் திடல். இந்தத்திடலில் அதிகக் கூட்டம் திரட்டி தொழுகையை நடத்திக்காட்டினால் தான் கடையநல்லூரைப் பொருத்த அளவில் அந்தக் குழுவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படும். அதற்காகத்தான் இந்தப் போட்டி. ஆம், இது எந்தக் குழுவுக்கு கடையநல்லூரில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க நடத்தப்படும் போட்டியே அன்றி, தொழுகை நடத்துவதற்காக நடத்தும் போட்டியல்ல.

 

ஓட்டுக்கட்சி அரசியல் இயக்கங்கள் தங்களின் செல்வக்கை காட்டுவதற்காக பிரியாணிப் பொட்டலமும் குவாட்டரும் கொடுத்து கூட்டம் காட்டுகிறார்கள். இவர்களோ ஆன்மீகத்தை பொட்டலம் கட்டிக் கொடுத்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முனைகிறார்கள்.  இவர்களின் செல்வாக்கை நிரூபிக்கவா உங்கள் ஆன்மீகத்தை அடகுவைக்கப் போகிறீர்கள்?  கடையநல்லூர் முஸ்லீம்களே சிந்தியுங்கள்.

 

அடுத்து ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. கடையநல்லூர் முஸ்லீம்களின் ஆன்மீகப் பற்று எத்தகையது? இது விலகி நிற்கும் தனித்த ஒரு கேள்வியல்ல. ஏன் இவர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க போட்டியிடுகிறார்கள் என்பதற்கான காரணமும் இதில் உள்ளடங்கியிருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் மதத்தையும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை. மதம் சமூகம் உள்ளிட்ட அனைத்திற்குமான வழிகாட்டி தான் இஸ்லாம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆண்டுக்கொருமுறை ஜக்காத்தையும், பித்ராக்களையும் வாரி வழங்குவார்கள்.  அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிறார உண்ணுவது ஆகுமானதல்ல என்று ஹதீஸ்களை நீட்டி முழக்குவார்கள். ஆனால் கடையநல்லூரில் எத்தனை குடும்பங்கள் வருமானமின்றி பசித்திருக்கின்றன என்பது தெரியுமா இவர்களுக்கு? எத்தனை வீடுகளில் பெண்கள் உழைப்பின்றி தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருக்க அவர்களின் துவைத்தல், பாத்திரம் துலக்குதலை ஏழைப் பெண்கள் செய்து வயிறு காக்கிறார்கள் தெரியுமா இவர்களுக்கு? இங்கு முஸ்லீம்களின் ஈகை குணத்தை இடித்துக் காட்டுவதோ, அவர்களின் மதப்பற்றை கேள்விக்குள்ளாக்குவதோ என்னுடைய நோக்கமல்ல. அவர்கள் செயல்களின் விளைவறியாத் தன்மையை உணர்த்துவதே நோக்கம். 

 

கடையநல்லூரின் ஏழ்மைக் குடும்பங்களைத் திரட்டி அவர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்திற்கு நன்கொடை தாருங்கள் என்று கேட்டால் சில ஆயிரங்கள் பிரியுமா? ஆனால் கடையநல்லூரில் ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என நன்கொடை கேட்டபோது நாற்பதே நாளில் நாற்பது லட்சம் பிரிந்திருக்கிறது.  கடையநல்லூரில் இன்றும் சில பள்ளிவாசல்கள் நோன்புக் கஞ்சிகளை ஊற்றிவைத்துக் கொண்டு பேரித்தம் பழத்திற்கு யாரும் தானம் தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்க, சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பள்ளிகளோ ஸகருக்கும், இஃப்தாருக்கும் பிரியாணி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்த வித்தியாசம் தோன்றியது எப்படி? கடையநல்லூரின் பாரம்பரியத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழில் கைத்தறிகளுக்கான சிறப்பு ரகங்கள் எனும் காப்பு நீக்கப்படுகிறது எனும் ஒற்றை உத்தரவால் நசிவுற்றபோது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கைகொடுத்தது. அதேநேரம் வெளிநாட்டு பணமதிப்பின் மிகைவித்தியாசம் கடையநல்லூர் மக்களை செழிக்க வைத்தது. (இதன் விளைவுகள் குறித்து விரைவில் இன்னொரு கட்டுரை வெளிவரும்) இதேவேளையில் இந்தியாவில் பார்ப்பனிய பயங்கரவாதிகளால் அயோத்தி பாபரி பள்ளி இடிக்கப்பட முஸ்லீம்கள் மனதில் தோன்றிய அச்ச உணர்வை இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் 80களின் பிற்பகுதியில் தோன்றிய இஸ்லாமிய இயக்கங்கள், ஏற்கனவே இருந்த நடைமுறை சார்ந்த இயக்கங்களை பின்னுக்குத் தள்ளி வெகுவேகமாக முன்னேறின. அவர்களின் உழைப்பும், தர்க்க ரீதியான பேச்சும் மக்களை ஈர்த்தன. கடையநல்லூரில் இதன் பலன் பொருளாதாரத்தில் எதிரொலித்தது.

 

சமூகப் பிரச்சனைகளை விட பள்ளிவாசல் கட்டுவது கடையநல்லூர் மக்களை வெகுவாக ஈர்த்தன் பின்னணியை இதனுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் பள்ளிவாயில்களிலேயே ஐவேளைத் தொழுகைக்கு சில வரிசைகளைத்தாண்டி கூட்டம் சேராத போது இத்தனை பள்ளிவாசல்கள் ஏன்? எனும் கேள்வி யாரிடமும் எழவில்லை. இதை ஆன்மீகமாய் காட்டி அறுவடை செய்தபோது அவர்களுள் பிளவுகளும்  தவிர்க்க முடியாததாயின. இதோ அந்த பிளவுகள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க போராடுகின்றன.

 

இதை ஆன்மீகமாக, உங்களின் மத விவகாரமாக பார்த்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீகள் என்பதே பொருள். சிந்தித்துப் பாருங்கள், சிறுநீர் கழிப்பதற்குக் கூட வழிகாட்டியிருப்பதாக கூறும் இஸ்லாத்தைக் காட்டி ஒரே ஊரில் ஒரு பெருநாளை மூன்று வெவ்வேறு தினங்களில் கொண்டாட உங்களை வழி நடத்தியிருக்கின்றன இந்த இயக்கங்கள். நீங்கள் சிந்திக்க மறுக்கும் வரை இந்த இயக்கங்கள் உங்களின் முதுகில் அமர்ந்து கொண்டு ஆன்மீகம் எனும் கேரட்டை உங்கள் முகத்தின் முன்னே நீட்டிப் பிடித்து உங்களை குதிரையாகப் பயன்படுத்தும். இதை நீங்கள் எப்போது உணரப் போகிறீர்கள்? எப்போது உணர்த்தப் போகிறீகள்?

 

அவசியம் பார்க்க வேண்டிய படம் ஆரக்‌ஷன்

18 ஆக

கடந்த வெள்ளியன்று வெளியான ‘ஆரக்க்ஷன்’ (இடஒதுக்கீடு) திரைப்படம், வெளியாகும் முன்பே பஞ்சாப், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் சிற்சில அமைப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆரக்க்ஷன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு எதிரே கடந்த இரு தினங்களில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளனர். பா.ம.க-வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகவும் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் கூறி வருகின்றன. தடை செய்த மாநில அரசுகளோ, சட்டம் ஒழுங்கை திரைப்படம் சீர்குலைத்து விடுமென கூறுகின்றனர். உண்மையில், ஆரக்க்ஷன் எதிர்க்கப்பட வேண்டிய படமா? இத்திரைப்படம் தலித்துகளுக்கு எதிரானதா? சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடியதா?

முதலில் திரைக்கதையை சுருக்கமாகப் பார்ப்போம். பிரபாகர் (அமிதாப்) எனும் ஒரு தனியார் கல்லூரி முதல்வர், கல்வியை தொழிலாக அல்லாமல் சேவையாகக் கருதுகிறார். வறிய, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக தனிப்பட்ட வகுப்புகள்(tuition) நடத்தியும், உதவிகள் செய்தும் முன்னேற்றுகிறார். இதன் மூலம் கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சில முதலாளிகளுக்கும், அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கும் ஆளாகிறார். இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு வருகிறது. இதற்கான எதிர்ப்புக் குரல்களும், ஆதரவுக் குரல்களும் கல்லூரிக்குள்ளும் அரங்கேறத் துவங்குகின்றன.

இதனிடையே துணை முதல்வர் மித்திலேஷ் (மனோஜ் பாஜ்பாய்) தனியே கோச்சிங் சென்டர்கள் நடத்தி வருவதைக் கண்டறியும் பிரபாகர், மித்திலேஷின் மீது நடவடிக்கை எடுக்க முனைகிறார். ஆனால், மாநிலக் கல்வி அமைச்சருடனும், சில கல்லூரி நிர்வாக முதலாளிகளுடனும் கைகோர்த்துள்ள மித்திலேஷ், பிரபாகரை வெளியேற்றத் திட்டமிடுகிறான். பிரச்சினை முற்றுகிறது. இதனையொட்டி பிரபாகரை பேட்டியெடுக்க வரும் ஒரு பத்திரிக்கையாளரிடம், தான் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாக பிரபாகர் தெரிவிக்கிறார். பத்திரிக்கையோ பிரபாகர் தமது கல்லூரியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவிருப்பதாக எழுதுகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் மித்திலேஷ் முதலானோர் பிரபாகரை வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். பிரபாகரும் வெளியேறுகிறார். அவரது நண்பரது குடும்பத்தினர் வசிப்பதற்காக அவர்  அளித்த வீட்டில், மித்திலேஷ் சாதுர்யமாக தனது கோச்சிங் சென்டரை அமைக்கிறான். தனது வீட்டை பறிகொடுக்கும் பிரபாகர், இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம், கல்வி வணிகமயமாவதற்கு எதிராகப் போராடி வெல்கிறார்.

இடஒதுக்கீடு எதிர்ப்பு, கல்வி வியாபாரம் ஆகிய இரு ஆதிக்க சாதி-உயர் வர்க்கக் கண்ணோட்டங்கள், மனோபாவங்கள், போக்குகளுக்கு எதிராக வெளிவந்துள்ள மேற்கூறிய திரைக்கதை கொண்ட திரைப்படத்தைதான் தலித் எதிர்ப்பு, இடஒதுக்கீட்டு எதிர்ப்புத் திரைப்படம் என எதிர்க்கிறார்கள். உண்மையில், இத்திரைப்படத்திற்கு எதிராக பா.ஜ.கவினரும், அன்று மக்களை பரிதவிக்க விட்ட AIIMS மாணவர்களும், தெருக்கூட்டும் போராட்டம் நடத்திய ‘Youth for Equality’ குலக்கொழுந்துகளும் தான் போராடியிருக்க வேண்டும். ஆனால், வேடிக்கை என்னவென்றால், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிப் போராடும் பகுஜன் சமாஜ், வி.சி, பா.ம.க தொண்டர்கள் இத்திரைப்படத்தை தடை செய்யப் போராடுகின்றனர்.  நேற்று மதியம் சென்னை ஈகா தியேட்டரில் புகுந்த பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் திரையிடலுக்கு எதிராகக் கலகம் விளைவிக்க, மீதமிருந்த காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘கற்பி, ஒன்று சேர், கலகம் செய்’ என்றார் அம்பேத்கர். ‘கற்பி’ எனும் சொல்லும், பொருளும் மட்டும் உ.பி முதல் தமிழகம் வரை தலித்தியப் பிழைப்புவாதிகளால் ஒருமித்தமாக ‘தீண்டத்தகாத’ பொருளாக ஒதுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவாக், பஜ்ரங் தள் செய்ய வேண்டிய ‘சமூகப் பணியில்’ பகுஜன் சமாஜ் கட்சி ஈடுபடும் அவலத்தை நாம் காண நேர்ந்திருக்கிறது.

இந்த கண்மூடித்தனமான ஆர்ப்பாட்டங்களுக்கு தேசிய பட்டியலிடப்பட்ட சாதியினர் கமிஷனின் தலைவர் பி.எல்.புனியாவின் கருத்துக்கள்தான் அடிப்படையாக விளங்குகின்றன. புனியா திரைப்படத்தைக் கண்ணையும், காதையும் திறந்து வைத்துதான் பார்த்தாரா என உண்மையிலேயே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், அவர் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடும் காட்சிகள் அனைத்திலும் சாதி வெறிக்கு சரியான பதிலடி தரப்படுகிறது. காட்சிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்டோரின் நியாயம் வலியுறுத்தப்படுகிறது. அதன் பிறகும், புனியா முன்வைத்த அடிப்படையற்ற கருத்துக்களை முன்வைத்துதான் தற்பொழுது மடத்தனமான ஆர்ப்பாட்ட அக்கப்போர்களை அரங்கேற்றி வருகின்றனர்.

உதாரணங்களாக, திரைப்படத்தின் முதல் பாதியில், தீபக் குமார் (சயீப் அலி கான்) இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்களை ஆவேசத்துடனும், கூர்மையாகவும் தவிடுபொடியாக்குகிறார். பிரபாகர் இடஒதுக்கீட்டின் நியாயத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும் எடுத்துரைக்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களின் மூலமாகவும், சம்பவ அமைப்புகள் மூலமாகவும் இடஒதுக்கீடு குறித்த விவாதம் திரைக்கதையினூடாகக் கட்டியமைக்கப்படுகிறது.

தீபக் குமார், மித்திலேஷ், சுசாந்த் (பிரதீக்) ஆகியோருக்கிடையில் நடைபெறும் விவாதத்தில், கஷ்டப்பட்டு முன்னேறுமாறு நக்கலாக சாடுகிறான் மித்திலேஷ். “கஷ்டப்படுவதைப் பற்றி எங்களுக்கு கூறுகிறாயா? உனக்கு சவரம் செய்யவும், உடை வெளுக்கவும், உனது உள்ளாடைகளைக் கூட வெளுக்கவும், நாற்று நடவும், பாரம் சுமக்கவும், மாடு அறுக்கவும் நூற்றாண்டுகளாக உழைத்து உழைத்து ஓடாகத் தேயும் எங்களுக்கு, கஷ்டப்படுவதைப் பற்றி நீ கூறுகிறாயா?” என தீபக் கேட்கும் பொழுது, “வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவளவுல…” பாடல்தான் நினைவுக்கு வந்தது. தகுதியை வைத்து போட்டியிடு, ஏன் ஒதுக்கீடு கேட்கிறாய் என சுசாந்த் வினவ, “உண்மைதான். போட்டி போடலாம். ஆனால், பந்தயமென்றால் ஒரே கோட்டில் நின்றுதான் ஓடத் துவங்க முடியும். எனது சகோதரன் மலத்தை அள்ளி சுமந்து, சுத்தம் செய்து விட்டு வந்துதான் படிக்க முடியும். எனது சகோதரி  அன்றாடம் பத்து மைல் நடந்து பத்துக் குடம் தண்ணீர் சுமந்து வந்த பின்னால்தான் புத்தகத்தைத் தொட முடியும். நீ அலுங்காமல், குலுங்காமல் காரில் வந்திறங்கி படிப்பாய். இதுதான் சமமான போட்டியா?” என பதிலிறுப்பான் தீபக்.

பிறிதொரு காட்சியில், இலவசமாகப் பாடம் நடத்தும் பிரபாகரிடம் சில பெரிய மனிதர்கள் தமது பிள்ளைகளுடன் வந்திறங்கி தமது பிள்ளைகளுக்கு மட்டும் தனி வகுப்பு நடத்துமாறும், ஏனெனில் மற்ற பிள்ளைகள் அருகில் வந்தாலே நாறுகிறதென்றும் கூறுகின்றனர். “உங்கள் சிந்தனைதான் நாறுகிறது. எனக்கு எல்லா மாணவர்களும் ஒன்றுதான். எல்லோருக்கும் ஒரே வகுப்புதான்” என்பார் பிரபாகர். பிரபாகருக்கும், தீபக்கிற்குமான உரையாடலில் தீபக், பிரபாகரின் நடுநிலைமையை தனது தீர்க்கமான கேள்விகளால் சுட்டெரிப்பான். பிரபாகரின் மகள் (தீபிகா படுகோன்) கசப்புணர்வை மறக்கக் கூடாதா என வினவ, “இது நூற்றாண்டுகளாக எம்மை வாட்டும் துயரம்.” என பதிலளித்து விலகுவான் தீபக். பிரபாகருக்கும், அவரது மகளுக்கும், அவரது மனைவிக்கும் இடையில் நடைபெறும் விவாதங்களில் ‘மேன்மக்களின்’ இடஒதுக்கீட்டு எதிர்ப்பை சுருக்கமாகவும், ஆழமாகவும் மறுத்துரைப்பார் பிரபாகர்.

தீபக் குமார் ஆக்ரோஷமாக முன்வைக்கும் கருத்துக்கள் இந்தி வணிக சினிமாவில், ஏன், இந்தியாவில் எந்த வணிக சினிமாவிலும் நாம் ஒருபோதும் காணாதது. அதுவும், ஆதிக்க சாதித் திமிர்க் கோலோச்சும் வட மாநிலங்களில், இத்தகைய வசனங்கள், தடை செய்யப்படாத இடங்களிலாவது ஒலிக்கும் என்று நினைத்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே வேளையில், கருத்தாக்க ரீதியாகவே திரைப்படத்தின் கருத்துக்களில் குறிப்பிடத்தக்கதொரு தவறும் இருக்கிறது. அதாவது, அரசு கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகுவதும், அதன் மூலம் கல்வி வணிகமயமாதல் நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க அரசு ஒடுக்கப்பட்ட சாதியின மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை படிப்படியாக கடந்து வரலாம் என்ற கருத்தும் இலை மறை காயாக முன்வைக்கப்படுகிறது. திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும் அக்கருத்தை ஒரு செய்தியில் வெளிப்படுத்துகிறார்.

அடிப்படையில், தனியார்மயம்-தாராளமயக் காலகட்டத்தின் மாறிய கல்விக் கொள்கைகள் காரணமாகவே, உள்நாட்டு கல்வி வியாபாரிகளையும், பன்னாட்டு கல்வி வியாபாரிகளையும் கொண்டு கல்வியைச் சந்தைமயப்படுத்துவது, அரசு படிப்படியாக விலகிக் கொள்வது எனும் உலக வங்கியின் கட்டளைக்கேற்பவே, கல்வியில்தனியார்மயம் புகுத்தப்பட்டது.  இன்று புற்றீசல்களாக பெருகியும் நிற்கிறது. இதற்கு இடஒதுக்கீட்டைக் காரணமாக்குவது ஆதிக்கசாதி-உயர் வர்க்கத்தினரின் கல்விச் சந்தை நோக்கிய நகர்வுக்கு நியாயம் கற்பிப்பதாக அமைகிறது. அதே வேளையில், தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டுமா என்பதிலும் திரைப்படம் தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

எனவே, திரைப்படத்தின் இரண்டாம் பகுதி கல்வி வணிகமயமாதல் போக்கை பொதுவில் எதிர்க்கும் சில கருத்துக்களை முன்வைத்தாலும், முதல் பாதியில் உள்ள தெளிவான இடஒதுக்கீட்டு ஆதரவு நிலையிலிருந்து நழுவி, குழப்பத்துடனும், தயக்கத்துடனும் நகர்ந்து செல்கிறது. வேறு வழியின்றி, கற்பனையான முடிவில்லாத முடிவுக்கு, செயற்கையான தீர்வாக கல்லூரியின் நிறுவனர் மீண்டும் பிரபாகரை கல்லூரி முதல்வராக்குவதாகவும், அவர் அங்கே இலவசமாக ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதாகவும்  முடிவடைகிறது. முதல் பாகத்தில் அழுத்தமாகக் கட்டியமைக்கப்படும் திரைக்கதை, பிற்பாதியில் ‘சினிமாத்தனமாக’ முடிவுறுவது தற்செயலானதல்ல. மாறாக, உள்ளடக்கரீதியாக எடுத்துக் கொண்ட இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை அதன் ஒட்டுமொத்தத்தில் ஆய்வு செய்வதிலும், அதற்கான சரியான தீர்வுகளை நோக்கிப் பயணிப்பதிலும் உள்ள கண்ணோட்டப் பிரச்சினையே காரணமாக விளங்குகிறது. அதே வேளையில், திரைப்படத்தை உள்வாங்காமல் இக்கருத்தை விவாதிப்பது சாத்தியமில்லை. ஆனால், இங்கே என்ன நடைபெறுகிறது? தலித்துகளையும், இடஒதுக்கீட்டையும் இழிவுபடுத்துவதாக கிளப்பி விடப்பட்டுள்ள ஒரு வதந்தியின் விளைவாக திரைப்படத்தைக் காண்பதே சிக்கலாகியுள்ளது.

படத்தின் திரைக்கதை ஆசிரியர் அஞ்சும் ராஜாபாலி ஒரு செய்தியில் குறிப்பிடுகிறார். “இத்திரைப்படம், சாதியம் எனும் பழைய தீராத காயத்தை நேரடியாக எதிர்கொள்கிறது. அதன் விளைவாக, நமது சமூகத்தில் காலங்காலமாக நிலவும் பல்வேறுபட்ட தப்பெண்ணங்களையும், காழ்ப்புணர்ச்சிகளையும் திரைப்படம் எதிரொலித்தாக வேண்டியுள்ளது. இல்லையேல், ஒரு ஊக்கமான விவாதம் சாத்தியப்படாது. திரைப்படத்தின் நாடகத்தன்மையின் மீதோ, மக்களது கவனத்தை ஈர்ப்பதற்கான அதன் இயலாமை குறித்தோ, பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை திரைப்படம் சரியாகவே விவாதிக்கிறது. “

இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை இத்திரைப்படம் சரியாகவே விவாதிக்க முயல்கிறது என்று சொல்லலாம். ஆம், இது ஒரு முழுநிறைவான திரைப்படம் அல்ல. ஆனால், ஒரு அவசியமான விவாதத்தை ஒடுக்கப்பட்டோர் தரப்பில் நின்று எழுப்புவதற்கான கூறுகளைக் கொண்ட திரைப்படம். ஆனால், அப்படியொரு விவாதத்திற்கான சாத்தியப்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டு விட்டன என்பதைத்தான் தற்பொழுது காண்கிறோம். இத்திரைப்படம் உண்மையில் அனைவரும் காண வேண்டிய திரைப்படம் என்பது மாத்திரமல்ல, பரவலாக பிரபலப்படுத்தப்பட வேண்டிய படமும் கூட. முற்போக்காளர்கள் இத்திரைப்படத்திற்கு எதிராக அல்ல, மாறாக திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு பரவலாக கொண்டு செல்லவும், மாணவர்களுக்கு இலவசக் காட்சிகள் ஏற்பாடு செய்யக் கோரியும் தான் போராட்டம் நடத்த வேண்டும். அவ்வகையில், நிகழ்ந்து கொண்டிருக்கும் கண்மூடித்தனமான எதிர்ப்பை, எதிர்த்து முறியடிக்க வேண்டும். சில மாநில அரசுகள் சொல்வது போல் இத்திரைப்படம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முன்வைக்கும் கருத்துக்களால் சட்டம் ஒழுங்கு கெடும் என்றால், அத்தகைய அநீதியான சட்டம் ஒழுங்கு கெடுவதே மக்களுக்கு நல்லது.

முதல் பதி்வு: போராட்டம்

அன்னா ஹஸாரேவாம், உண்ணாவிரதமாம், ஊழல் ஒழியுமாம்

17 ஆக

அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம். 25,000 பேர் வரை அங்கு கூட அனுமதிக்கிறோம். தேவைப்பட்டால் உண்ணாவிரதத்தை நீட்டிக்க அனுமதிக்கிறோம் என்று கூறிய டெல்லி காவல்துறையின் நிபந்தனையை ஏற்க அன்னா ஹஸாரே மறுத்து விட்டார். இதனால் அவர் இன்றைக்குள் திஹார் சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்புகள் மங்கியுள்ளன. இழுபறி நீடிக்கிறது.

காவல்துறையின் எந்த நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என ஹஸாரே கூறிவிட்டார். மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திஹார் சிறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டார்.

நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

ஆனால் அன்னாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க அரசு தயாராக இல்லை. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க அன்னா தயாராக இல்லை. இந்நிலையில் அன்னா 1 மாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் அரசோ 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அன்னா டெல்லி ராம்லீலா மைதானத்தில் 1 வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் அரசு விரும்பினால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளறது.

ஆனால், அரசின் நிபந்தனைகளை ஏற்க அன்னா மறுத்துவிட்டார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அவர் விரும்பும் இடத்தில், விரும்பும் காலம் வரை உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார்.

ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் இதே ராம்லீலா மைதானத்தில் தான் உண்ணாவிரதம் இருக்க வந்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசு மேலும் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்லீலா மைதானத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகளை எந்த நேரத்தில் எந்த அளவில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அவற்றை அன்னா சட்டையே செய்யவில்லை.

இன்றைக்குள் வர மாட்டார் அன்னா-கிரண் பேடி:

இதற்கிடையே இன்று திஹார் சிறை முன்பு கூடியிருந்த அன்னா ஆதரவாளர்களிடையே கிரண் பேடி பேசுகையில், அன்னா இன்றைக்குள் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை. எனவே இங்கு யாரும் கூடியிருக்க வேண்டாம். மாறாக இந்தியா கேட்டுக்குச் செல்லுங்கள். இது அன்னாவின் வேண்டுகோள் என்றார்.

இந்தியா கேட்டில் மக்கள் கூட்டம்:

அன்னாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று மாலை முதல் இந்தியா கேட் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். அங்கு ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும், அன்னாவை வாழ்த்தியும் கோஷமிட்டிபடி மக்கள் குழுமியிருந்தனர்.

*********************************************

ஊழலின் கோரங்களிலிருந்து மக்களை மறக்கடிக்க இப்படியும் சில கோமாளிக் கூத்துகள். விரிவாய் தெரிந்து கொள்ள கீழ்காணும் கட்டுரைகளைப் படியுங்கள்.

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

 “உண்ணா” ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

 அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்

கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகளை மீண்டும் தப்பிக்க விட்டுவிட்டோம்

16 ஆக

கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகள் என்று தலைப்பிட்டு கடந்த மாதங்களில் சில கட்டுரைகளை எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சில தகவல்களையும் விளக்கங்களையும் தர வேண்டியதிருக்கிறது. தொடர்ச்சியாக எமக்கு வரும் மின்னஞ்சல்கள் அதை அவசியப்படுத்துகிறது.

குறிப்பிட்ட அந்த நிகழ்வுக்கு முன்னும் பின்னும் பாலியல் அத்துமீறல்களாக பல நிகழ்வுகள் நடந்திருந்தும் குறிப்பாக ஹமீதா விவகாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டது ஏன்?

பாலியல் அத்துமீறல்கள் என்பது கடையநல்லூருக்கு மட்டுமேயான தனிப்பட்ட பிரச்சனையல்ல, அது குறிப்பிட்ட காலப்பகுதியோடு தொடர்புடைய பிரச்சனையும் அல்ல. உலகம் முழுவதிலும் எல்லா காலங்களிலும் தொடர்ந்து வரும் பிரச்சனை.  அந்தந்த சமூக போக்குகளைக் கொண்டு கூடுதலாகவோ குறைந்தோ இருக்கும்.  ஆனால் கடையநல்லூரைப் பொருத்தவரை இந்த சமூகப் பிரச்சனையை ஆன்மீகப் பிரச்சனையாகவும், ஆன்மீக வழிகளில் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும் என்பதாகவும் பிரதாபிக்கப்பட்டது. மட்டுமல்லாது, இந்த ஆணாதிக்க சமூகத்தில் முழுமையான புரிதலின்றி ஆணாதிக்க அடக்குமுறைகளே பெண்களுக்கான சிறந்த நடைமுறைகள் என்பதாகவும் வழி காட்டப்பட்டன.

குறிப்பாக இந்த விவகாரத்தில் இது ஒரு பாலியல் அத்துமீறலாக மட்டும் இருக்கவில்லை. மாறாக ஒருங்கிணைந்த, திட்டமிட்ட, பெண்களை சீரழிக்கும் தன்மை கொண்ட ஒரு கும்பலின் சதிச் செயலாகவும்; சமூகத்தில் பதவிகளையும், மதிப்பையும் கொண்டு மறைந்திருந்து, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்காக, உயர்வுக்காக பெண்களை பகடைக் காயாக பயன்படுத்தும் நோக்கமாகவும் இருப்பதால் அந்தக் கயவர்களை சமூகத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த விவகாரம் நல்லூர் முழக்கத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதற்கு முன்போ, பின்போ பாலியல் மீறல்கள் கடையநல்லூரில் நடக்காமலில்லை.  ஆனால் அவைகளெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் ஒழுக்க மீறல்கள். தனிப்பட்ட மனிதர்களின் ஒழுக்க மீறல்களும் அது ஆணானாலும் பெண்ணானாலும் கண்டிக்கப்பட வேண்டியவை தான். என்றாலும், கடையநல்லூரில் பெண்களின் மீறல்களை மட்டும் மிகைப்படுத்தி கிசு கிசு பாணியில் நான்கு நாட்கள் பேசுவதும், அப்படியான பெண்கள் வட்டாரத்தில் இருக்கலாமா? வீட்டை அடித்து நொறுக்கு என்று இளைஞர்கள் கூச்சலிடுவதும் சரியான நடவடிக்கைகள் அல்ல.  இவ்வாறான கிசு கிசு பாணி ஆதங்கத்தையும், ஆணாதிக்க திமிர்த்தனங்களையும் நல்லூர் முழக்கம் வெளிப்படுத்த முடியாது.

இந்த விவகாரத்தில் கடைசியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன் விவகாரம் மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.  இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சிட்டி பீர் நிபந்தனை பிணையில் கோவில்பட்டியில் கையெழுத்துப் போட்டுக் கொண்டு சுதந்திரமாக திரிகிறார். மற்றொருவரோ அதே பழைய டம்பங்களுடன் ஊரில் இருக்கிறார்.  தொடர்புடைய பெண்ணோ தன் கணவருடன் வேறொரு ஊரில் வசித்து வருகிறார்.  விவகாரம் சுமூகமாகிவிட்டது, ஊர் அமைதியாகிவிட்டது, இளைஞர்கள் புதிய பிரச்சனைகளை கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமூகத்தில் அம்பலப்படுத்தப்பட்டே ஆகவேண்டிய ஆணாதிக்கப் பொறுக்கிகளோ இன்னும் ஊரில் மறைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் தொடங்கியிருக்கவும் கூடும்.

காவல்துறை முனைப்பாக இந்த வழக்கில் செயல்படுமா? நிச்சயம் செயல்படாது, மூடி மறைக்கவே முயலும். ஏனென்றால் இந்த விவகாரத்தில் பலனடைந்தவர்களில் காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்.  அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவர், ”நான் யாரையும் சும்மா விடமாட்டேன், அவர்களை வீதிக்கு கொண்டுவராமல் ஓயமாட்டேன்” என்றெல்லாம் சவால் (சவடால்) விட்டார். தற்போது அவரும் என்ன காரணத்தாலோ அடங்கியிருப்பதாக தெரிகிறது.

என்றால் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்துவதிலும், மறைந்திருக்கும் ஆணாதிக்கப் பொறுக்கிகளை அப்படியே விட்டுவிடுவதிலும் கடையநல்லூர் மக்களாகிய உங்களுக்கு சம்மதமா? ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது திரைப்படமும் அல்ல, யதார்த்தத்தில் யாரும் கதாநாயகர்களும் அல்ல. யாரோ போராடி டிஷ்யூம் டிஷ்யூம் சண்டையிட்டு நீதியை நிலைநாட்டிவிடுவார்கள் என்று நீங்கள் நம்பியிருக்க முடியுமா? அல்லது துஆ கேட்டு பிரச்சனையை சரி செய்துவிட முடியுமா? பிரச்சனைகளுக்கு எதிராக போராட முன்வராதவரை எதற்கும் தீர்வில்லை.

அந்த ஆணாதிக்கப் பொறுக்கிகள் தொடர்ந்து மறைந்திருப்பதற்கும், தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்வதற்கும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். சமூகத்தில் இருக்கும் மதிப்பும், அதிகாரபலமும், பணபலமும் அதற்கு அவர்களுக்கு துணை செய்யும்.  இத்தோடு அவர்கள் முடித்துக் கொள்வர்கள் என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா? அல்லது அவர்களின் கைகள் நமக்கு நெருங்கிய பெண்கள்வரை நீளாது என்பதற்கு எதுவும் சான்றுகள் இருக்கிறதா? அல்லது எங்கோ நடக்கும் பிரச்சனையை நாம் ஏன் தடுக்க நினைக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? தீப்பெட்டி வந்து உரசும் வரை பற்றாமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் தீக்குச்சிகள் அல்லவே.

இந்தப் பிரச்சனைகளை நல்லூர் முழக்கத்தில் எழுதிய போது இஸ்லாம் ஆணாதிக்க மதமா? என்று கோபப்பட்டவர்கள் உண்டு.  ஆனால் இது போன்ற பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்று சிந்தித்தவர்கள் இல்லை. அவ்வாறு சிந்திக்க நினைப்பவர்கள் ஒன்று சேர்வோம். நல்லூர் முழக்கத்தை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். நாம் அமைதியாக இருந்தால் அது அந்த பொறுக்கிகளின் செயல்களுக்கான அங்கீகாரமாகவே மொழிமாற்றம் செய்யப்படும்.

வாருங்கள்! ஒன்று சேர்வோம்! இந்தப் பிரச்சனைக்கு மட்டுமல்ல, சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் எதிராக நம்முடைய கைகள் உயரட்டும்.

சரிகிறது அமெரிக்க அட்டை கோபுரம்

15 ஆக

அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.

இந்த வீழ்ச்சிக்கு ‘ஹிண்டன்பர்க் பயங்கரம்’ எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி…

ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.

இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.

இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.

**************************************************

அமெரிக்கா என்றால் பணக்கார நாடு என்று தான் பலரும் நினைப்பர். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடன்களில் உருண்டு கொண்டிருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் பலம் வாய்ந்த நாடு என்ற பெயரினாலும் உலகின் வர்த்தகங்கள் பெரும்பாலும் டாலரில் நடப்பதாலும் எல்லா நாடுகளும் அமரிக்காவுக்கு கடன் கொடுக்க தயாராக இருக்கின்றன. ஏற்கனவே கொடுத்த கடன்கள் மீட்கப்படவேண்டுமென்றால் அமெரிக்க பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டும். பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டுமென்றால் மீண்டும் கடன் கொடுக்க வேண்டும். இப்படியான கடன் சுழற்சியிலேயே அமெரிக்க பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் மொத்தக் கடன் தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சுவிட மறந்து விடாதீர்கள், 14 லட்சத்து 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிபிற்கு 45 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்) இப்போது கடன்களுக்கான அமெரிக்காவின் மதிப்பீடு சரிந்திருப்பதால் உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன.

 இன்று அல்லது நாளை; நாளை அல்லது இன்னொரு நாள் அமெரிக்கா வீழ்வது உறுதி.