அறிமுகம்

கடையநல்லூர். திருநெல்வேலி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகராட்சியும், இரண்டாவது பெரிய நகருமான‌ இந்த ஊர், மதுரை செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் (NH 208) குற்றாலத்திலிருந்து 22 கிமி தொலைவிலும் மதுரையிலிருந்து 145 கிமி தொலைவிலும்; மதுரை கொல்லம் இருப்புப்பாதையில் தென்காசிக்கும் சங்கரன் கோவிலுக்கும் இடையிலும் அமைந்திருக்கிறது. பசிய வயல்கள் சூழ இருந்தாலும் கிராமமல்ல. பெரிய‌ தொழிற்சாலைகளோ, உற்பத்திக்கூடங்களோ இல்லையெனினும் நகரமல்ல என தள்ளிவிட இயலாது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்டிருக்கும் இவ்வூரின் முதன்மையான தொழில்களாக நெசவும் (கைத்தறி நெசவு) விவசாயமும் இருந்தன. ஆனால் தற்போது அப்படி எதையும் குறிப்பிட்டுவிடமுடியாதபடி, நெசவுத்தொழில் கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டது, விவசாயம் அதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிவது தான் முக்கியத் தொழிலாக குறிப்பிடும் அளவில் இருக்கிறது.

 

கடையநல்லூரின் வரலாறு சற்றேறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடங்குகிறது. கேரள மலப்புரத்திலுள்ள முஸ்லீம்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கடையநல்லூர் பகுதிக்கு வந்து தங்கியதாகவும், சேர மன்னர்களின் பரம்பரையில் வந்த பாளையக்காரர்களின் வேலைக்காரர்களும் கால்நடை பராமரிப்பவர்களும் தங்குவதற்காக கடையநல்லூர் பகுதியில் நிலம் ஒதுக்கிக்கொடுத்து தங்கவைத்ததாகவும் இரண்டு விதமாய் கூறுகிறார்கள். இரண்டையுமே உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.

 

18ஆம் நூற்றாண்டிலிருந்து கடையநல்லூரின் தொழிலாக இருந்து வந்திருக்கும் நெசவுத்தொழில் சங்கரன் கோவில் பகுதியிலிருந்து பரவியதற்கு ஆதாரமாக நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நெசவாளர்கள் சாம்புகளைக் கொடுத்துவிட்டு நூல் சிட்டங்களை பெற்று வந்ததற்கான பற்றுவரவு ஏடு தங்கள் வீட்டில் நீண்ட காலமாக இருந்ததாக சிவராம பேட்டையைச் சேர்ந்த சண்முகையா எனும் பெரியவர் தெரிவிக்கிறார்.

 

கடையநல்லூரின் இயற்பெயர் அல்லது பழையபெயர் கடையாலீஸ்வரநல்லூர். கடையால் (கிணற்றிலிருந்து நீர் இறைக்க பயன்படுத்தப்படும், இரும்பால் செய்யப்பட்ட வாளி போன்றதொரு பாத்திரம்) ஒன்றை ஈஸ்வரனாக உருவகப்படுத்தி வணங்கப்பட்ட கோவில் என தலபுராணம் கூறும் கோவிலான கடையாலீஸ்வரன் கோவில் இருக்கும் ஊர் என்பதால் கடையாலீஸ்வரநல்லூர் என வழங்கப்பட்டு பின்னர் கடையநல்லூர் என மருவியது. இந்தக் கோவில் மேலக் கடையநல்லூரில் இருக்கிறது.

 

52 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியிருக்கும் கடையந‌ல்லூரின் மொத்த மக்கள் தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 75,612. ஆண்கள் 49 விழுக்காடும், பெண்கள் 51 விழுக்காடும் உள்ளனர். மக்களில் பட்டியல் வகுப்பினர் 44 விழுக்காடும், முஸ்லீம்கள் 40 விழுக்காடும், ஏனையோர் 16 விழுக்காடும் உள்ளனர். மக்களின் சராசரி கல்வியறிவு 65 விழுக்காடு.

 

216 தெருக்களைக் கொண்டிருக்கும் இந்த ஊர் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. தென்காசி பாராளுமன்ற தொகுதியின் ஒரு பகுதியாகவும், தனித்த சட்டமன்ற தொகுதியாகவும் கடையநல்லூர் இருக்கிறது. தற்போதைய பாராளுமன்ற உறுப்பினாராக லிங்கம்(சிபிஐ), சட்டமன்ற உறுப்பினராக பீட்டர் அல்போன்ஸ்(காங்கிரஸ்) ஆகியோர் இருக்கின்றனர்.

 

இரண்டு தனியார் அரபு மொழிக் கல்லூரிகள், இரண்டு தனியார் கல்லூரிகள் (விவசாயம், மருந்தியல்) உட்பட 17 கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. பொழுதுபோக்கிற்காக இரண்டு திரையரங்குகளும் இருக்கின்றன.

வரைபடம்

செயற்கைக்கோள் பார்வை

பருந்துப் பார்வை

நகராட்சி அலுவலகம்

பேருந்து நிலையங்கள்

தொடர்வண்டி நிலையம்

காவல் நிலையம்

அரசு மருத்துவமனை

நெசவுத்தொழில் – பாவு ஆத்துதல்(மலரும் நினைவுகள்)

அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி

அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி

தாருஸ்ஸலாம் மேல் நிலைப் பள்ளி

ஹிதாயத்துல் இஸ்லாம் மேல் நிலைப் பள்ளி

மசூது தைக்கா மேல் நிலைப் பள்ளி

உலகா உயர் நிலைப் பள்ளி

ஃபாத்திமா மருந்தியல் கல்லூரி

மங்கள சுந்தரி திரையரங்கு

மஹாராஜா திரையரங்கு

நண்பர்களே,

உங்களிடம் கடையநல்லூர் குறித்து தகுந்த படங்கள் இருந்தால், குறிப்பாக கடந்த காலங்களை நினைவுகூறும் வகையிலான படங்கள் இருந்தால், உங்கள் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.

 

3 பதில்கள் to “அறிமுகம்”

  1. மீனாட்சி பிப்ரவரி 22, 2011 இல் 8:17 பிப #

    தலைவா,

    எத்தனி டாஸ்மாக் இருக்குன்னு சொல்லலியே

    • syed ஏப்ரல் 29, 2011 இல் 1:03 முப #

      dear ms.meenakshi,

      do you want quater Or half?

    • brdrr ஜனவரி 1, 2012 இல் 11:05 முப #

      This is not a joke question, it is very serious question.To day every one wants to ask ourselves how much we are really worried about our people.

பின்னூட்டமொன்றை இடுக