தொகுப்பு | ஜனவரி, 2011

கடையநல்லூர் நகராட்சிக்கு புதிய தலைவர்

29 ஜன

கடையநல்லூர் நகராட்சி தலைவராக துணைத்தலைவர் காளிராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடையநல்லூர் நகராட்சி தலைவர் இப்ராகிம் காலமானதையடுத்து ஏற்பட்ட காலியிடத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்திருந்தது.

இதற்கான மனுத்தாக்கல் நேற்று காலை நடந்தது. துணைத்தலைவர் காளிராஜை தவிர வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அப்துல்லத்தீப் அறிவித்தார்.

தச்சை மண்டல சேர்மன் சுப்பிரமணியன், வேணி பஸ் உரிமையாளர் வேணி பாலசுப்பிரமணியன், யூனியன் தலைவர்கள் சட்டநாதன், காமராஜ், வட்டார காங்., தலைவர்கள் செல்வராஜ், சுந்தரய்யா, மாவட்ட காங். துணைத்தலைவர்கள் மாரியப்பன், முருகேசன், மாவட்ட காங். எஸ்சி. எஸ்டி பிரிவு தலை வர் வேலுச்சாமி, தென்காசி நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங். தலைவர் பாக்கியராஜ், யூசுப், ஆலடி சங்கரய்யா, எம்எல்ஏ அலுவலக மேலாளர் செல்வராஜ், ராம்மோகன் உட்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நகராட்சி புதியதலைவர் காளிராஜ் கூறுகையில், “ கடையநல்லூர் நகராட்சி யில் நிலவிவரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு அறிவித்துள்ள ரூ.23 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்து வேன்” என்றார்.

கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட காளிராஜிக்கு தேர்தல் அதிகாரி அப்துல்லத்தீப் சான்றிதழ் வழங்கினார்.

**************************************************

காலியாக இருந்த இடத்திற்கு புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதைத்தவிர வேறு எந்த மாற்றமும் நகராட்சி நிர்வாகத்தில் வந்துவிடப்போவதில்லை.

திருப்பூர் சாயப்பட்டறைகளை மூட நீதி மன்றம் ஆணை

29 ஜன

Thiruppur Dying Units

திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து சாயப் பட்டறைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம், வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அந்த மாவட்டத்தின் நீர்வளம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. நொய்யல் என்ற ஆறே முழுமையாக மாசடைந்தது.

சாயப்பட்டறைகளிலிருந்து கழிவுகள் வெளியேற்றப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், கழிவுகளை வெளியேற்றும் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, நொய்யல் ஆறு ஆயக்கட்டுதாரர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து கழிவுகளைச் சுத்திகரிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் வரை வெளியேற்றப்படும் கழிவுகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்ற சாயப்பட்டறை உரிமையாளர்கள், இந்தத் தடை காலாவதியான பிறகும், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை.

எனவே இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. மொத்தமுள்ள 713 சாயப்பட்டறைகளில் 413 சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்கவில்லை என்றும், இவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நொய்யல் ஆற்றின் மூன்று வெவ்வேறு இடங்களில் நீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
பரிசோதனையின் முடிவில், நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் தொடர்ந்து கலப்பதால், ஆற்று நீர் மேலும் மாசடைந்துள்ளது தெரியவந்தது.

தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பதற்காக, சாயக் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. ஆனால், சாயப்பட்டறைகள் தொடர்ந்து சுத்திகரிக்காத கழிவுகளை வெளியேற்றி வந்துள்ளன. இந்த சாயப்பட்டறைகளை மூடுவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற பிறகே, சில பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியாது.

சாயப்பட்டறைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே நொய்யல் ஆற்றை நச்சுக் கழிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

திருப்பூர் பகுதியில் உள்ள அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக மூட வேண்டும். இந்தப் பட்டறைகளுக்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.

இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், முழுவதும் சுத்திகரிக்கப்படுவதை உறுதிசெய்யாத வரை அவை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படக் கூடாது.

அனைத்து சாயப்பட்டறைகளையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழு தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு பட்டறைக்கும் முழுமையான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும்.

அந்தப் பட்டறைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கலாமா என்ற அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும். கழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்புகள் இல்லாத சாயப்பட்டறைகளுக்கு, அந்தக் குறையை சரிசெய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அந்தப் பட்டறைகளை குழுவினர் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

கழிவுகளை முழுவதுமாக சுத்திகரிக்கும் அமைப்பு உள்ள சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிடலாம். எனினும், இந்தப் பட்டறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

சுத்திகரிப்புக் கருவிகளை சோதனையிடுவதற்காக தாற்காலிகமாக மின் இணைப்பு வழங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்யலாம். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற வேண்டும்.

கிரிமினல் நடவடிக்கை…

சோதனையின் போது சாயப்பட்டறைகளில் கூடுதலாக கருவிகளோ, பைப் இணைப்புகளோ இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றி சாயப்பட்டறைகளிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும்.

அதேபோல், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நோட்டீஸுக்கு பிறகும் கழிவுகளைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் பொருத்தாமல் இருந்த பட்டறைகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயப்பட்டறைகள் உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காலக் கட்டத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிந்தவர்களின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

**************************************************

ஒன்றா, இரண்டா எத்தனை முறை சாயப்பட்டறை முதலாளிகளுக்கு நீதிமன்றங்களால் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது இதுவரை. சுத்தீகரிப்பு முறைகளை நவீனப்படுத்த வேண்டும், மேம்படுத்த வேண்டும் என எத்தனை முறை ஆணையிட்டிருக்கிறது. அத்தனையும் முதலாளிகளால் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டிருக்கின்றன. நொய்யல் ஆறும் ஒரத்தநாடு அணையும், தேக்கிவைக்கவும் முடியாமல், திறந்துவிடவும் முடியாமல் சாயப்பட்டறை கழிவுகளால் நிரம்பியிருக்கின்றன. இப்போது மீண்டும் ஒரு ஆணை. ஆணையிடுவதும் அது குப்பைக்கூடைக்குள் போவதையும் இன்னும் எத்தனை முறை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்?

ஏக்க‌ ஓடை

28 ஜன

ச‌ல‌ச‌ல‌த்து ஓடும்
ஓடையின் ச‌த்த‌ம்

 
அத‌ன‌ருகே அம‌ர்ந்தால்
உயிரையும் வ‌ருடிச்செல்லும்.

 
அறுத்துக் க‌ளைத்த‌வ‌ன்
விய‌ர்வை சும‌ந்து
அந்த‌ நீருக்கும்
புது வாச‌ம் வ‌ரும்.

 
ம‌லையில் ம‌ழை பெய்து
க‌ல‌ங்கி வ‌ந்தாலும்
எங்க‌ள் ம‌ன‌ம்போல‌
ச‌ட்டென‌த்தெளியும்.

 
கெண்டையும் கெழுத்தியும்
ப‌ய‌மின்றி
எங்க‌ள் உட‌லோடு பேசும்.

 
கோடை வ‌ந்தால்
ம‌ழ‌லைய‌ர் விளையாட‌
ம‌ன‌தோடு இட‌ம்த‌ரும்

 
எங்க‌ள் ஓடைக்கு
இன்று

 
முக‌த்தில் விழுந்த‌
அம்மைப் ப‌ள்ள‌ங்க‌ளாய்
ஆங்காங்கே காய‌ம்.

 
பொல்லா ம‌ருந்துக‌ள்
வ‌ய‌ல்க‌ளை வ‌தைத்த‌து.

 
அள‌ந்து வ‌லித்த‌ கைக‌ள்
க‌ளை ப‌றித்து வ‌லித்த‌ன‌.

 
நில‌மே அசைவ‌து போல்
ப‌சுமையாய் அசையும் வ‌ய‌ல்க‌ளில்

 
அசையாம‌ல் எழுந்த‌
ம‌ச்சு வீடுக‌ளின்
உய‌ர‌ம் பார்த்து
ஓடையில் ம‌ண்வெட்டிக‌ள் இற‌ங்கின‌.

 
ஒன்றா இர‌ண்டா?
அடிப்பானை சோற்றை சுர‌ண்டும்
க‌ர‌ண்டியைப்போல‌
ஓடையின் ம‌டியை சுர‌ண்டிய‌
எந்திர‌க் கைக‌ள்

 
ஆற்று ம‌ண‌ல்
அர‌சு நில‌ம் என்றாரே

 
ஓடையில் ம‌ண‌லெடுத்து
எங்க‌ள்
வ‌யிற்றில் போட்ட‌ பாவிக‌ள்.

 

 

நசீபா காஹ்தூன்

தமிழக மீனவர்களுக்கான இணையக்குரல்

28 ஜன

டிவிட்டர் எத்தனையோ போராட்டங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.

இப்போது எகிப்தில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பிற்கும் இதன் முன்னோடியாக க‌ருதப்படும் டுனிசியாவின் மல்லிகை புரட்சிக்கும் டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவைகள் முக்கிய பங்காற்றியதாக கருதப்படுகிற‌து.

இதெற்கெல்லாம் முன்பு மால்டோவாவில் டிவிட்டரால் புரட்சி வெடித்தது.சில‌ நேரங்களில் எதிர்ப்பு அலையை உண்டாக்கவும் குறிப்பிட்ட பிரச்ச்னை குறித்த விழ்ப்புணர்வு ஏற்படுத்தவும் டிவிட்டர் பதிவுகள் உதவியிருக்கின்ற‌ன.

இந்த வரிசையில் இப்போது தமிழகமும் சேர்ந்திருக்கிறது.

ஆம், இலங்கை கடற்படையால் தமிழக‌ மீனவர்கள் தொடர்ந்து கொடுரமாக படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக டிவிட்டரில் குரல் கேட்க துவங்கியுள்ளது.

டிவிட்டரில் செயல்படும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழ்க மீனவர் நலனில் அக்கறை கொண்டவர்கள் தொடரும் மீனவர் படுகொலைகள் தொடர்பான குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டரில் குறும்பதிவுகளை வெளியிடும் வசதியோடு மறுபதிவு(ரீடிவீட்)பதில் அளிப்பது போன்ற பல வசதிகள் இருக்கின்றன.

இதே போலவே குறிப்பிட்ட தலைப்பிலான பதிவுகளை சக டிவிட்டர் பயனாளிகல் மத்தியில் கவனத்தில் கொண்டு வர அவற்றை ஹாஷ்டாக்(#)என்னும் குறியோடு வெளியிடும் வசதியும் உள்ளது. இப்படி ஹாஷ்டாக் குறியை பயன்படுத்தும் போது ஒரே தலைப்பிலான குறும்பதிவுகள் தனித்து தெரியத்துவங்கும்.

அந்த பிரச்ச‌னைக்கு ஆதரவு தேட விரும்பினால் சக டிவிட்டர் பயனாளிகளையும் ஹாஷ்டாக் குறியை சேர்த்து கொள்ளுமாறு கேட்கலாம்.இப்படி ஹாஷ்டாக் குறியோடு பதிவுகள் வெளியாகும் போது அந்த தலைப்பு டிவிட்டரில் மேலோங்கும் வாய்ப்பை பெற்று பரவலான கவனத்தை ஈர்க்கும்.

டிவிட்டரில் ஒரு தலைப்பு மேலெழுந்தது என்றால் உடனே அது ஊடகம் முதல் அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைக்கும். இதே போல தான் இப்போது டிவிட்டரில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் படுகொலை தொடர்பான கருத்துக்கள் குறும்பதிவுகளாக வெளியாகி கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளன.

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கொலைவெறி தாக்குதல் தொடர்கதையாகியுள்ள நிலையில் இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் அரசு தீவிரம் காட்டாத நிலையில் எல்லோர் மனதிலும் ஒரு ஊமை கோபம் குடிக்கொண்டிருக்கிற‌து. இந்த கோபம் தான் டிவிட்டரில் குறும்பதிவுகளாக பொங்கி கொண்டிருக்கிறது.மீனவர் படுகொலை தொடர்பான பதிவுகளை வெலியிடுபவர்கள் சக குறும்பதிவர்களையும் இதே போன்ற பதிவுகளை எவ்ளியிடுமாறு கேட்டுக்கொண்டனர்.அதில் டிஎன்பிஷர்மேன் என்னும் ஹாஷ்டாகை தவறாமல் சேர்த்து கொள்ளுமாறும் குறிப்பிட்டனர்.

இதன் பார்த்தவர்கள் அவற்றை மறுபதிவு செய்ததோடு தங்கள் பங்கிற்கு கருத்துக்களை தெரிவிக்கவும் செய்தனர்.இவ்வாறு டிஎன்பிஷர்மேன் ஹாஷ்டாக்கோடு வெளியான பதிவுகள் தனித்து தெரியத்துவங்கின. இந்த பதிவுகள் மீனவர்கள் படுகொலை தொடர்பான கவலையையும் கோபத்தையும் ஆவேசத்தையும் பிரதிபலித்தன.தொடர்ந்து பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் அடாவடி செயலை கண்டிப்பதோடு இந்த விஷயத்தில் இந்திய மற்றும் தமிழக அரசின் மவுனத்தையும் கண்டிக்கும் வகையில் பதிவுகள் அமைந்திருந்தன. ஒரு டிவிட்டர் பதிவு இந்திய கடற்படையின் சீருடை என்ன புடவையா என கேட்டது. பல‌ பதிவுகள் மீனவர் கொலையை தடுத்து நிறுத்தாமல் நிதி கொடுத்து கை கழுவுவதை கண்டனம் செய்தன.

இலங்கை கடற்படையை கண்டிக்கும் பதிவுகளும் அதிகம் வெளியாயின. நம்மூர் அரசியல்வாதிகளின் அலட்சியம் மற்றும் பாராமுகத்தை விமர்சிக்கும் பதிவுகளும் அதிக்கம் செலுத்தின. படுகொலையை தடுத்து நிறுத்த செய்ய வேண்டியவற்றையும் பதிவுகள் வலியுறுத்தின.

ஊடக‌ங்கள் இந்த பிரச்சனையை உரிய முரையில் கவனிக்காமல் இருபத‌ற்கும் கண்டன குரல்கள் எழுந்தன. திடிரென பார்த்தால் த‌மிழ் டிவிட்டர் வெளியில் மீனவர்களுக்காக ஆதரவு அலை உருவாகி சுழன்ற‌டித்து.

பலர் மீனவர்களுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டதோடு இது போன்ற‌ ஆதரவு திரட்டும் முயற்சியை உள்ளபடியே வரவேற்றும் மகிழ்ந்தனர். தென்னரசு போனர் டிவிட்டர் பதிவர்கள் டின்பிஷர்மேன் என்னும் குறிப்போடு பதிவிடுமாறு ஓயாமல் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இதன் பயனாக தமிழர்களின் இணைய‌கோபம் கரைபுரண்டோடுகிற‌து. இதனிடையே சேவ் டிஎன்பிஷர்மேன் ஆர்ஜி என்னும் இணையதளமும் அமைக்கப்பட்டு இந்த பதிவுகள் ஒருங்கிணைக்கப்ப்பட்டு வருகிறது.மீனவர் படுகொலை தொடர்பான கட்டுரைகள் மற்றும் இணைப்புகள் சம‌ர்பிக்க வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மீனவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த துயரத்தை வெகுஜன கோபமாக மாற்றும் முதல் முயற்சியாக இதனை க‌ருதலாம். இந்த இணைய இயக்கம் நிற்காமல் வெல்லட்டும்.

நன்றி: சைபர் சிம்மன்

**********************************************

இணைய தளம்

டுவிட்டர்

ஃபேஸ்புக்

அனுராதபுரம் சிறையில் நடப்பது என்ன?

27 ஜன

தமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையையிட்டு அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் மீண்டும் நேற்று புதன்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதேநேரம் கைதிகளை பார்க்க வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் சிறைச்சாலைக்கு வெளியே உறவினர்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கட்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பதையிட்டு தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் பின்னர் அதனைக் கைவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் நேற்று புதன்கிழமை, தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கூறி சிறைச்சாலை கூரை மீதேறி சுமார் 50 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளைப் கொடிகள், பதாகைகள் ஆகியவற்றை ஏந்தியவாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதிகளை நேற்று பார்வையிட வந்த உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அநுராதபுரம் குருநாகல் பிரதான வீதியில், அனுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாகவுள்ள ஜயந்த மாவத்தையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அந்த இடத்திலிருந்து கலைப்பதற்கான முயற்சிகளை பொலிஸார் மேற்கொண்டதுடன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இதேவேளை அநுராதபுரச் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர் உள்ளிட்ட சுமார் 50 பேரிடம் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் சிறைச்சாலை வளாகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அநுராதபுரத்துக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் பலியானதுடன் 26 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தீர்மானத்தின்படி விசாரணைக்கான விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான அறிக்கையை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்குமாறு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கோரியுள்ளார்.

இந்த அறிக்கை கிடைத்த பின்னரே அநுராதபுரம் சிறைசாலையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு நிர்வாக ரீதியான காரணம் இருக்குமாயின் அதை நிவர்த்தி செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.

**********************************************

இலங்கையில் இனவழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது, வெளியுலகத்திற்கு செய்தி செல்லாதவாறு தடுத்துவிட்டால் எதையும் செய்யலாம் என்பதே சிங்கள அரசின் நிலையாக இருக்கிறது. இதோ, அதை உறுதிப்படுத்துகிறது எமக்கு கிடைத்த ஒரு தகவல்

“நேற்று நான்கு மணியிலிருந்து சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக
கைதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உண்ணாவிரதம் இருப்பவர்கள் நேற்றிலிருந்து சாப்பாடும் எடுக்காமல்
இருக்கிறார்கள். அதனை சிறைச்சாலை நிர்வாகம் கணக்கில் எடுக்காமல்
இருக்கின்றது. அதாவது அடிப்படை வசதிகளான நீர் உணவு இருப்பிடம் போன்ற
பிரச்சினைகளை வைத்துத்தான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது. 48
மணித்தியாலங்கள் கடந்துள்ள போதும் இதுவரையும் சிறைச்சாலை அமைச்சு கூட
எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு அடித்து அடக்கச் சொல்லி தகவல்
வந்ததாக சிறைச்சாலை நிர்வாகமும் மேலும் சில சிவில் குண்டர்களும்
பொலிசாரும் சேர்ந்து கைதிகளுக்கு அடித்து கல்லெறிந்து பிரச்சினைகள்
இடம்பெற்றுக் கொண்டுள்ளதுடன் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகமும்
மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை விசேட பாதுகாப்பு எனச் சொல்லி தனியாகத்தான்
அடைத்து வைத்திருக்கின்றாhகள். கைதிகள் எங்குமே ஓட முடியாத படியாக உள்ள
நிலையில் நால்வருக்கு வெடி பட்டு தலையில் ரத்தம் ஓடிக் கொண்டிருக்குது.
அவர்களை தூக்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை
உறுதிப்படுத்தமுடியவில்லை.

நான் இப்ப மதிலுக்கு பக்கத்தில் படுத்திருந்துதான் கதைக்கிறன். அரசியல்
கைதிகள் எங்கும் ஓட முடியாத நிலை. துப்பாக்கிச் சூடு முற்று முழுதாக
எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றது. இருவருக்கு காலில்
வெடிபட்டும் கிடக்கிறார்கள். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கோண்டு போவதற்கு கூட வழியில்லை”

மீனவர்கள் போராட்டம், இது தொடக்கமாக இருக்கட்டும்

27 ஜன

இலங்கைக் கடற்படையின் தாக்குதலைக் கண்டித்தும், இதைத் தடுக்க தவறிய மத்திய அரசு மற்றும் தமிழக அரசுகளைக் கண்டித்தும் கடலோர மாவட்டங்களில் இன்று மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. மீன்பிடி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சென்னையில், திருவொற்றியூர் மீனவர்கள், எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக முடியாமல் தேங்கி நின்றன. போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.

இதேபோல மெரீனா கடற்கரைப் பகுதி மீனவர்கள், காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்ததால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஸ்டிரைக் நடந்தது. மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமித்தல் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று சாலை மறியல் செய்தனர். காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, மீமித்தல் கடைவீதியில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் பஸ் மறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேதாரண்யம் மீனவர்கள் கடந்த 4 நாட்களாக மீன்பிடிக்கப் போகவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மீனவர்கள் கறுப்பு தினம் அனுஷ்டிப்பு

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் வீடு மற்றும் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை படுகொலை செய்வதைக் கண்டித்தும், இப்பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் குடியரசு தினமான நேற்று கருப்பு தினம் கடைபிடித்தனர்.

மாவட்டம் முழுவதும் இலங்கை ராணுவத்தை கண்டித்தும் போஸ்டர் ஒட்டினர். மேலும் வேம்பார், திரேஸ்புரம், தருவைகுளம், மீன்பிடி துறைமுகம், புதிய துறைமுக கடற்கரை பகுதி, பழைய காயல், புன்னகாயல், வீரபாண்டியன் பட்டிணம் ஆகிய கடலோர பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட் வீடுகள், படகுகளில் கறுப்பு கொடி கட்டப்பட்டுள்ளன.

மேலும் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

***********************************************************

அடையாளப் போராட்டம், எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக போராட்டம் என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் எருமைத்தோலை ஊடுறுவிச் செல்லாது என்பது முன்பே பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கன்யாகுமரி முதல் சென்னைவரை ஒட்டுமொத்தமாக மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் இறங்க வேண்டும். தங்கள் போராட்டத்தின் நியாயங்களை மக்களை உணரச் செய்து அவர்களையும் இணைத்துக்கொண்டு சமரசமற்று போராட்டங்களை முன்னெடுக்காதவரை அரசை செயல்படத்தூண்ட முடியாது. இந்த ஒரு நாள் அடையாள் போராட்டத்தில் அரசு காட்டும் அலட்சியத்தை மீனவர்கள் பாடமாக கொள்ள வேண்டும்.

துனீசியாவைத் தொடர்ந்து எகிப்து, மக்கள் புரட்சி பரவுகிறது

27 ஜன

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை எதிர்த்து ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக் கூட்டங்களுக்கு தடைவிதித்திருந்தும் அதை பொருட்படுத்தாது ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலைத்தனர்.

ஹோஸ்னி முபாரக் (82) கடந்த 30 ஆண்டு காலமாக எகிப்து அதிபராக சர்வாதிகார ஆட்சி புரிந்து வருகிறார். பொறுமையை இழந்த மக்கள் அவரது கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். உடனே கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது.

இதனால் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு போலீசார் உள்பட 4 பேர் உயிர் இழந்தனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 150 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் தஹ்ரிர் ஸ்கொயரில் தான் போராட்டத்தை நடத்தினர். அங்கு போலீசார் 50 கண்ணீர் புகை குண்டு வீசியதில் அந்த இடமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்து முழுவதும் போராட்டம் நடந்தது.

தடையை மீறி போராட்டக்காரர்கள் நேற்று கெய்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடினர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ” உணவு, சுதந்திரம் மற்றும் சமத்துவம்” வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

வடக்கு சினாயில் கிராமத்தினர் வாதி அல் நட்ரூன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏராளமான வாலிபர்களை விடுவிக்குமாறு நேற்று இரண்டாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தினர்.

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் முதலில் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. பின்ர் கையால் எழுதப்பட்ட சிறு துண்டுகள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தஹ்ரிர் ஸ்கொயரில் கூடிய மக்களிடையே கொடுக்கப்பட்டது. இந்த தகவலை அல் ஜெசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அங்கு கூடியவர்கள் அதிபர் முபாரக் மற்றும் பிரதமர் அஹமது நசீப் பதவி விலக வேண்டும் என்றும், பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசை உருவாக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

*********************************************

உலகெங்கும் உணவுப்பொருட்களின் விலையுயர்வு மக்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராடத் தூண்டியுள்ளது. பலம்பொருந்திய சர்வாதிகாரிகளானாலும் மக்கள் எழுச்சி பெற்றுவிட்டால் தாக்குபிடிக்கமுடியாது எனும் உண்மை துனீசியாவில் காட்டப்பட்டிருக்கும் அடுத்தகணமே எகிப்தில் மக்கள் போராடத் தொடங்கியிருக்கிறர்கள். முதலாளித்துவம் இனியும் தன் கொடூரங்களை மறைத்து பவனிவரமுடியாது என்பதையே இவை உணர்த்துகின்றன.

எகிப்திய போராட்டத்திற்கான உங்கள் ஆதரவை இந்த முகநூல்(ஃபேஸ்புக்) இல் தெரிவியுங்கள்.

விரிவான விபரத்திற்கு தோழர் கலையரசனின் இக்கட்டுரையை படியுங்கள்
எகிப்தில் மக்கள் எழுச்சி! துனிசிய புரட்சியின் எதிரொலி

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

26 ஜன

நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அள‌க்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் ‘தேசபக்த’ நடிகைகளை “வந்தே மாட்றோம்” என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி பெருமிதமாய் கொண்டாடுகிறது அரசு. இருக்கட்டும், எதற்காக இந்த கொண்டாட்டங்கள்? முடியரசாக இருந்தபோதும், காலனியரசாக இருந்தபோதும், இப்போதும் எந்த அரசும் குடிமக்களுக்கான அரசாக இருந்ததில்லை. என்றால் இந்த கொண்டாட்டங்களின் பொருள்?

 

முதலில் இதை சுதந்திரமான அரசு என்று கூறுவதே தவறான கூற்று. நாட்டு மக்களின் மீது அனைத்து அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த பொருளாதார கொள்கைகளிலேயே தனிப்பட்டு செயல்படமுடியாமல் அன்னிய ஆதிக்க நாட்டின் நலன்களுக்கு உதவிடும் வகையிலும், சொந்த நாட்டின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும் திணிக்கப்படும் கொள்கைகளால் செயல்படும் ஒரு நாட்டின் அரசை சுதந்திரமான அரசு என்று எப்படி கூறமுடியும்? தனக்குத்தானே சுதந்திரமாக இல்லாத ஒரு அரசை தன்னுடைய மக்களுக்கான அரசு என்று எந்த அடிப்படையில் கூறுவது?

 

நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் வாழ்வாகவும் இருக்கும் விவசாயத்தை முற்றாக துடைத்தொழிப்பதற்கு நாள் குறித்துக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது அரசு. பசுமைப்புரட்சி எனும் பெயரில் விளை நிலங்களில் இரசாயண உரங்களைக் கொட்டி மலடாக்கி, நீர் ஆதாரங்களை பராமரிக்க மறுத்து விவசாயிகளின் சொந்தச் செலவில் நிலத்தடிநீரை பயன்படுத்தவைத்து; அதிக மகசூல் தரும் விதைகள் என்று அதிக வளத்தையும், அதிக தண்ணீரையும் இறைத்தெடுக்கும் விளைமுறைகளை திணித்து; பணப்பயிர்கள் என்று ஆசை காட்டி உணவுப்பயிர்களை விட்டு விலக்கி கடைசியில் லட்சக்கணக்கான விவசாயிகளைக் கொன்று குவித்து, வெற்றிகரமாக விவசாயத்தை கருவறுத்து வீசியிருக்கும் இந்த அரசை, குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

நாட்டின் கனிம வளங்களையெல்லாம் அற்ப விலைக்கு விற்று, சொற்ப வேலைவாய்ப்பை உண்டாக்குவதால் சலுகை எனக்கூறி எல்லாவித வரிகளையும் விலக்கி, லாப உத்திரவாதம் என்று சுற்றுச்சூழலை, நீர்நிலைகளை, விவசாய நிலங்களை, காற்றை மாசுபடுத்த அனுமதித்து, உற்பத்திச் செலவைக் குறைப்பது என்ற பெயரில் தொழிலாளர்களை கசக்கிப்பிழிவதை கண்டும்காணமலும் இருந்து, வேலையிழப்பு பயம்காட்டி தொழிலாளர்களின் உழைப்பாளிகளின் எல்லவித உரிமைகளையும் பரித்தெடுத்து, இயல்பாக இவைகளை எதிர்த்துக் கிளர்ந்தெழும் போராட்டங்களை அடக்க அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி, அனைத்து வகையிலும் முதலாளிகளின் லாப வெறிக்காக உழைக்கும் மக்களை வதைக்கும் இந்த அரசை குடிமக்களுக்கான அரசு என்று கூறுவதெப்படி?

 

வணிகர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என எந்தப்பிரிவு மக்களையாவது விட்டுவைத்திருக்கிறதா இந்த அரசும் அதன் கொள்கைகளும். பின் எந்த அடிப்படையில் குடிமக்களுக்கான அரசுமுறையாக இந்த அரசை கொண்டாடுவது? நாட்டு மக்களின் நலன்களுக்கான திட்டம் என விளம்பரப்படுத்தப்பட்டு தொடங்கப்படும் எந்தத்திட்டமும் அதன் உள்நோக்கில் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. எல்லாத்தட்டு மக்களுமே அரசின் திட்டங்களினால் பாதிப்படையவே செய்கிறார்கள். கடவுள் என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை எனும் ஆன்மீக நம்பிக்கையையும், நடப்பில் நாம் முனைந்து உழைக்காமல் எதுவும் நடப்பதில்லை எனும் யதார்த்தத்தையும் தனித்தனியாக புரிந்துகொண்டு எப்படி மக்கள் செயல்படுகிறார்களோ, அதுபோலவே குடி மக்களுக்கான அரசு என்பதையும், அரசு நமக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதையும் தனித்தனியாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். முன்னது கற்பிதமாகவும், பின்னது நடைமுறையாகவும் கடைப்பிடிக்கப்படுவதனால் தான் அவர்களால் ஒரு கொண்டாட்டமாக குடியர‌சு தினம், சுதந்திர தினம் போன்றவற்றை கொண்டாடமுடிகிறது.

 

ஒரு போதையான மயக்கத்தைப் போல் நாட்டு மக்களிடம் மந்தை மனோநிலையை உருவாக்கி கொண்டாட்டத்தைத் திணிப்பதையே தேசபக்தியாக உருவகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நாடு என்பது அனைத்து வகையிலும் அதன் மக்களை எதிரொலிப்பது, அனைத்து வகையிலும் அந்த மக்களை மறுதலித்துவிட்டு அதையே நாட்டுப்பற்று என்பது உச்சகட்ட மோசடி. இந்த மோசடியின் குறிய‌டையாளமாகத் தான் கொடியேற்றிக் கொண்டாடுவது.

 

ஆனால் பாஜக கும்பல் இந்த கொடியேற்றுவதில் கூட தங்கள் பாசிச அரசியலை காட்டிக்கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்படுவதற்கு துணை நிற்கும் ஒரு கட்சி கொடியேற்றுவதை உரிமையாக முன்வைக்கிறது. காஷ்மீரின் சிரிநகரில் லால்சௌக் பகுதியில் கொடியேற்றுவதற்கு நாட்டின் பல பகுதியிலிருந்தும் பேரணியாக செல்வது என்று அறிவித்திருக்கிறது. இதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆளும் காங்கிரஸ் கும்பல் அனுமதிக்க மறுக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியரசு தினத்தன்று கொடியேற்றுவது மக்களைன் உரிமை என்றும், அதைத்தடுப்பது தீவிரவாதிகளை, பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் செயல் என்றும் விளக்கம் சொல்லி போலியான நாட்டுப்பற்றை விசிரிவருகிறது.

 

அயோத்தி ராமர் கோவில் விவகாரம், கட்டைப்பஞ்சாயத்திற்குப் பிறகு உ.பி.யில் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பது நிச்சய‌மில்லை; குஜராத் படுகொலை போல ஒரு கலவரத்தை நடத்தினால், அதற்கு எதிர்வினையாகக் குண்டு வெடிக்கும் உத்தரவாதம் உண்டே தவிர, நாடெங்கும் வாக்குகளை அள்ள முடியுமா என்பது ஐயம்தான். அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தால், அமெரிக்க முதலாளிகளுக்கு கோபம் வந்து, முதலுக்கே மோசமாகப் போய் விடும். விலைவாசி உயர்வினால், தற்பொழுது பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மாநிலங்களிலும் அதிருப்தி தலைவிரித்தாடுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை மறைப்பதிலும், கூட்டுக்குழுவை தீர்வாக காட்டி கூச்சலிட்டு முடக்கியதிலும் கொஞ்சம் பலன் கிடைத்திருப்பதாய் தெரியவே அதே வழியில் இந்த கொடியேற்றலை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

 

காஷ்மீர் இந்தியாவின் பகுதி, அங்கு கொடியேற்றுவதை தடுக்க நினைப்பது பிரிவினைவாதம், தேசவிரோதம் என நினைப்பவர்களுக்கு, அந்த மக்கள் தாங்கள் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருப்பதாக கருதப்படுவதை எதிர்க்கிறார்கள் என்பது நினைவுக்கு வருவதேயில்லை. பிரிவினைவாதம் என்பவர்கள் அந்த மக்களுக்கு விரோதமாக அவர்களின் நிலத்தை இந்தியாதான் தன் இராணுவ பலத்தினால் பிடித்து வைத்திருக்கிறது என்பது நினைவுக்கு வருவதேயில்லை. அந்த மக்களிடமே வாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று ஐநாவிடம் வாக்குறுதி கொடுத்திருந்தும் இன்றுவரை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது நினைவுக்கு வருவதேயில்லை.

 

இதுபோல் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்து போலியான, போதையான நாட்டுப்பற்றை மக்களிடம் ஊட்டுவதன் மூலம் தங்களின் கோரமுகத்தை மறைத்து வருகிறார்கள். இவற்றினின்று விடுபட்டு மக்கள் உண்மையை உணரும் நாள் தான் கொண்டாட்டத்திற்கு போராட்டத்திற்கு உரிய நாளேயன்றி, நாளை (ஜனவரி 26) எந்தவிதத்திலும் கொண்டாட்டத்திற்கு உரியதல்ல‌.

 

நன்றி: செங்கொடி

எதிர்ப்பு நடவடிக்கையா?, சில்லரை வன்முறையா?

25 ஜன

சென்னை எழும்பூரில் உள்ள சிங்களர்களால் நடத்தப்படும் இலங்கை மகாபோதி சங்கத்தில் நேற்று இரவு திடீரென சிலர் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் புத்த பிக்குகள் உள்பட ஐவர் காயமடைந்தனர்.

எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது.இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர்.

இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள். நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி,டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின.

கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

*******************************************************

இதுவரை நானூறுக்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டிருந்தும் அதை தடுக்கும் நோக்கிலான எந்த நடவடிக்கையையும் மைய அரசு எடுக்கவில்லை, மாநில அரசுக்கு அதற்கான அதிகாரமில்லை. அதேநேரம், அந்த கடல் பிராந்தியத்திலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்துவது இந்திய அரசுக்கும் தேவையாக இருக்கிறது. அதனால் தான் இது போன்ற நிகழ்வுகளின் போது நடவடிக்கை எடுக்கிறோம் என்று அறிக்கைவிட்டு மக்களை சமதானமடையச் செய்வதில் மட்டுமே முனைகிறார்கள்.

இதில், மனுக்கொடுப்பது, கோரிக்கை விடுப்பது அதிகபட்சமாக கடலுக்குள் போகாமலிருப்பது, உண்ணாவிரதம் போன்ற அடையாள எதிர்ப்புகளோடு மக்கள் முடங்கிவிட வேண்டுமா? ஆக, வேறுவிதத்தில் தங்கள் எதிர்ப்புகளிக் காட்டவேண்டிய நிர்பந்தத்திற்கு அரசுகள் மக்களைத் தள்ளுகின்றன. அதன் விளைவுகள் தான் இது போன்ற நிகழ்வுகள்.

ஆனால் இது தனி அமைப்புகள் மீதான தாக்குதலாக சில்லறை வன்முறையாக முடிந்துவிடக்கூடாது. எல்லாத்தரப்பு மக்களையும் விளக்கி உடனிணைத்துக்கொண்டு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடவேண்டும், தாக்குதல் தொடுக்க வேண்டும். மக்களை இதற்குமேலும் ஏமாற்ற முடியாது எனும் எண்ணத்தை மைய அரசுக்கு ஏற்படுத்தினாலொழிய இந்த மீனவர் படுகொலையில் அரசு எதுவும் செய்ய முன்வராது என்பதே உண்மை.

ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

24 ஜன

வினவில் திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

வெளியே தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது “இந்த படத்தை பாக்காதீங்க, கதையே இல்லை” என்று ஒரு ஆட்டோ ஓட்டுநர் அவரது நண்பரிடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அதுவேறு வயிற்றில் பீதியைக் கிளப்பியது. வளாகத்தில் விஜயின் காவலன் படத்திற்குத்தான் கூட்டம் கொஞ்சம் அதிகம். ஆடுகளத்திற்கு அந்த அளவுக்கில்லை. சன் டி.வியின் ஏகபோகம் உருவாக்கியிருக்கும் சதுரங்க ஆட்டத்தில், விஜய் போன்ற நட்சத்திரங்கள் தாமே உருவாக்கியிருந்த இமேஜை துறக்க முடியாமல் அதனாலேயே சிக்கிக் கொண்டிருக்கும் கதையை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

சமீப காலமாக கிராமங்களை மையமாக வைத்து நிறைய படங்கள் வருகின்றன. யதார்த்தத்தில் கிராமப்புறங்கள், விவசாயத்தை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வரும் நிலையில் தமிழ் சினிமா மட்டும் நாட்டுப்புறங்களின் மேல் அளவிலா காதல் கொண்டிருக்கும் மர்மமென்ன?

சிலம்பு வாத்தியாரைப் போல சேவல்களை பழக்கி சண்டைப் போட்டிக்கு விடும் பேட்டைக்காரனாக கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன். அவரிடம் சேவல்களை பழக்கும் சீடர்களாய் தனுஷும், கிஷோரும். கிஷோர் மதுவறை நடத்தும் வசதியானவர். தனுஷ் அப்படியில்லை. வெறுமனே எடுபிடியாக வருகிறார். ஏதாவது ஒரு போட்டியிலாவது பேட்டைக்காரனை வெல்ல வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு வரும் இன்ஸ்பெக்டராக ரத்தினம்.

இடையில் ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சியோடு தனுஷின் காதல். அப்புறம் முழு வீச்சாக நடக்கும் பிரம்மாண்டமான சேவல் சண்டை போட்டி. போட்டியில் குருவின் மதிப்பீட்டை பொய்யாக்கி, அவரது உத்திரவை மறுத்து  தனுஷின் சேவல் வெற்றி பெறுகிறது. சீடனின் வெற்றியை சீரணிக்க முடியாமல் பிறகு அவனையே பழி தீர்க்க முயலும் பேட்டைக்காரன். கிஷோர், தனுஷ் இருவரையும் மோதவிட்டு, காதலியை பிரித்து, அதற்காக இளம் வயது மனைவியை விரட்டி, எல்லாம் செய்கிறார் ஜெயபாலன். இறுதியில் அவர் மனம் திருந்தியோ இல்லை இன்னும் தனுஷை பழிவாங்க வேண்டுமென்றோ தற்கொலை செய்ய, அந்த பழியுடன் தனுஷ் காதலியோடு ஊரைவிட்டு போகிறார்.

முற்பாதியில் தனுஷின் காதல். பிற்பாதியில் ஜெயபாலனது துரோகம். இரண்டு உணர்ச்சிகளும் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவை. முன்னது இதயத்திற்கு தாலாட்ட, பின்னது வயிற்றில் பதைபதைப்பை உருவாக்கும். அந்த பலத்தில் இந்த இரு உணர்ச்சிகளையும் சேவற் சண்டை பின்னணிக் களத்தில் துணிந்து  கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இது போதாதா? கிராமம், முதன்முறையாக சேவற் சண்டை களம் என்று அறிஞர் பெருமக்கள் பாராட்டுகிறார்கள்.

முதலில் காதல். இது கதையோடு பொருத்தமின்றி திணிக்கப்பட்ட காதல் என்று சிலருக்குத் தோணலாம். எந்தக் கதையில் காதல் இயல்பாக வந்திருக்கிறது? ஆஸ்திரேலியா போக வாய்ப்பிருக்கும் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், சேவற் சண்டைக்காக ஊரைச் சுற்றும் ஒரு லுங்கி கட்டிய இளைஞனை காதலிக்கும் அபத்தம் இருக்கட்டும். அதிலும் தனுஷ் வம்படியாகத்தான் அந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக வலிந்து சுற்றுகிறார். அவரைத்தான் காதலித்தாக வேண்டுமென்ற நிலையில் அந்தப் பெண் வேறு வழியின்றி காதலிக்கிறாள்.

அந்த வகையில் தமிழ் சினிமா காதலின் ஜனநாயகத்தைக் கூட இன்னும் கற்றுத் தரவில்லை. மட்டுமல்ல, அந்த இடத்தில் ஆணாதிக்க சர்வாதிகாரத்தையே இளைஞர்களின் ஆளுமைப் பண்பாகவும் உணர்த்துகிறது. படியாத மாட்டை படிய வைப்பது போல அந்த பெண்ணை படியவைக்கும் தனுஷின் முயற்சிகளில் தங்களது ஆளுமைகளை உணர்கிறார்கள், கைதட்டும் இரசிகர்கள். காதல் என்பது இருபாலாரின் சமத்துவத்தையும், அதன் பால் வரும் விருப்பத் தெரிவையும் கொள்ளாமல் இருந்தால் அது காதலா, இல்லை பெண்டாளும் ‘கொலை’யா?

ஏழை இளைஞன் தனது வீரத்தால் பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிப்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே தொடர்கிறது. பரிசாரர்கள் புடை சூழ வாழும் அந்த பெரிய இடத்து மங்கைகள் பின்னர் காதலனுக்காக குடிசையில் மூக்கு சிந்தி அடுப்பூதும் தியாகத்தை ஏற்கிறார்கள். யதார்த்தத்தில் இது சாத்தியமா? படத்தில் டேபிள் மேனர்சோடு விருந்துண்ணும் நாகரீகம் உள்ள அந்த பெண் ஒரு நாள் தனுஷோடு சுற்றிவிட்டு, பிய்த்துப் போட்ட புரோட்டாவை சாப்பிட்டுவிட்டு, கை கழுவிய பின் உடையில் துடைக்கும் தனுஷைப் போலவை துடைக்கிறாள். இயக்குநரின் மெய்சிலிர்க்க வைக்கும் ‘டச்’!

இது போல பல படங்களில் பார்த்திருக்கிறோம். மாளிகையிலிருந்து இறங்கும் பெண்கள் குடிசைகளில் ஒன்றி வாழ்வதையும், ஐந்து நட்சத்திர விடுதிகளில் உண்ணும் வழக்கமுள்ளவர்கள், கையேந்தி பவன்களில் இரசித்து சாப்பிடும் அழகையும் சகித்திருக்கிறோம். இது சாத்தியமே இல்லை என்பதை அறிந்தும் நமது இரசிகர்கள் ஏன் இரசிக்கிறார்கள்? இது யதார்த்தமே இல்லை என்று தெரிந்தும் இயக்குநர்கள் தொடர்ந்து இப்படி ஏன் படுத்துகிறார்கள்?

வெள்ளையும் சொள்ளையுமாக உள்ள அழகு பெண்களை துய்க்க விரும்புவதாக, ஏழைகளை இப்படித்தான் இழிவு படுத்த வேண்டுமா? அப்படி ஒரு விருப்பமிருந்தால் அது விமரிசனத்திற்குரியதா இல்லை போற்றுதலுக்குரியதா? நுகர்வுக் கலாச்சாரம் வழங்கியிருக்கும் வாழ்க்கையை நிறைவேற்ற ஓடியும் வாடியும் வரும் பெண்கள் இப்படி தங்களது நிலையிலிருந்து அதை துறந்து விட்டு சாமியார் போல வருவார்களா என்ன? புறாக்கள் சூழ, தோட்டமே பூத்திருக்க, தளைய தளைய கட்டிய பட்டுச் சேலையுடன், இத்தாலி பாணி நவநாகரீக கிச்சனில் லியோ காபி போட்டு, லேப்டாப்பில் கணவனுடன் மகிழ்ந்திருக்கும் அந்த பெண், தெருவில் குப்பை அள்ளும் இளைஞனைப் பார்த்து காதலிக்கிறாள் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

காதலைக் கூட யதார்த்தமாக, அந்தெந்த வர்க்கங்களின் வாழ்க்கை பிரச்சினைகளோடு காட்டினால் குடி முழுகிவிடுமா என்ன?

அடுத்தது கிராமம்.

கிராமமென்றால் வெள்ளேந்தியான மனிதர்கள், மீசையை உருவும் வில்லன்கள் என்ற ஃபார்முலாவை ஆடுகளத்தின் இயக்குநர் வெற்றி மாறனும் மீறவில்லை. சமீப காலமாக நிறைய படங்கள் கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து வருகின்றன. இந்த போக்கில் நாம் இன்றைய கிராமங்களை மட்டுமல்ல, நேற்றைய கிராமங்களையும் உண்மையாக பார்க்க இயலாது என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?

தனுஷின் தந்தை இறந்துவிட, அவரது தாய் ரேஷன் கடைக்கு சென்று, பையனுக்கு ஆக்கிப் போட்டு, அவன் கோபத்தில் ஏறியும் பொருட்களை கண்டு புலம்புவதை நிறுத்தி இறுதியில் இறந்தே போகிறாள். சேவல் வாத்தியாரோடு ஊரைச்சுற்றி வரும் தனுஷ், காதலிக்கிறார், நண்பனுடன் குடிக்கிறார், சேவலை பாசத்துடன் வளர்க்கிறார். உழைக்கும் பெண்களது காசில் குடித்துவிட்டு ஊரைச் சுற்றும் ஆண்கள்தான் தமிழக கிராமத்து யதார்த்தம்.

அந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டும் அந்த விதவை பெண்ணை அரட்டி மிரட்டுகிறார் தனுஷ். அவரது மிரட்டலைப் பார்த்து கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். விமரிசனத்திற்குரியது இங்கே பாராட்டப்படுகிறது என்றால் என்ன பொருள்? அந்தப் பிரச்சினை படத்தின் மையப் பொருளிலேயே இருக்கிறது. சேவற்சண்டை என்ற பொழுது போக்கு ஓரிரு பத்தாண்டுகளுக்கு முன்னர் பிரபலமாக இருந்திருக்கலாம். குறுகிய வாழ்க்கையைக் கொண்டிருக்கும் கிராமத்தில் இத்தகைய சேவல் வளர்ப்பு, புறா வளர்ப்பு, மாடு வளர்ப்பு, ஜல்லிக் கட்டு போன்றவை வீராப்பு, கௌரவத்தின் அடையாளமாக கூட இருக்கலாம்.

“சேவற் சண்டை போட்டி என்பது கஞ்சி குடிக்கும் உயிர்ப்பிரச்சினை அல்லை, அது மானப்பிரச்சினை” என்று தனுஷ் வசனம் பேசுகிறார். இரசிகர்களும் அதை தமது பிரச்சினையாக ஏற்கிறார்கள். பாரம்பரிய விவசாயத்தை பறித்தெடுத்துவிட்டு, விவசாயத்தை அடிமைகளின் தொழிலாக மாற்றிவரும் மான்சாண்டோ காலத்தில் எது மானப்பிரச்சினை? விளைபொருளுக்கு விலை இல்லாமல் கமிஷன் மண்டி வணிகர்களிடமும், அம்பானியிடமும் அடிபணிந்து நிற்கையில் போகாத மானம் சேவலுக்காக போகிறது என்றால்?

எனில் அத்தகைய அர்த்தமற்ற மானம் இங்கே இடித்துரைக்கப்படவேண்டும். மாறாக அது ஒரு மகாபாரதப் போராக மாபெரும் கௌரவப்பிரச்சினையாக காட்டுகிறார், இயக்குநர். சமூக உறவுகளோடு நெருக்கமாக வாழும் கிராம சமூகத்தில், முழு வாழ்க்கையும் அங்கேயே பிறந்து மரிக்க வேண்டுமென்ற குறுகிய வட்டத்தில் இத்தகைய சேவல் சண்டைகள் கூட வாழ்வா, சாவா பிரச்சினையாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் அது அந்த குறுகிய உலகின் மீதான யதார்த்தமான விமரிசனப் பார்வையாக பார்வையாளனுக்கு உணர்த்தப்பட வேண்டும்.

சான்றாக, கிராமங்களில் வாழும் சாதி ஆதிக்கமே இத்தகைய சேவல், மாடு பிடி சண்டைகளின் அடிநாதமாக இருக்கிறது. தேவர் வீட்டு சேவலை, பள்ளர் வீட்டு சேவல் வென்று விட்டது என்றால் வரும் சண்டைதான் அந்த குறுகிய உலகின் அற்பத்தனத்தை விரிந்த அளவில் காட்டும். ஆள் போட்டு வளர்க்கும் கவுண்டரின் மாட்டை, ஒரு அருந்ததி இளைஞர் அடக்கிவிட்டார் என்றால்தான் அங்கே கதையே எழும். அதன்றி இங்கே மானம் ஏது? சாதியின்றி எடுக்கப்படும் ஒரு படம் எங்கனம் கிராமப் படமாக இருக்க முடியும்? ஆதிக்க சாதி பெண்ணை ஒரு தலித் மணந்துவிட்டால் ஏற்படும் பதட்டங்கள்தான் சேவல் சண்டையிலும் இருக்க முடியும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் உண்மையிலேயே சமகால வாழ்க்கையை நெருங்கிச் சென்றிருக்க முடியும். அத்தகைய தைரியமில்லாததால் இயக்குநர் இதை துரோகத்தின் கதையாக எடுத்திருக்கிறார்.

சாதி ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் ஜனநாயகம் இல்லை. அங்கே நிலவுவது நிலவுடைமை வர்க்கங்களின் கட்டைப்பஞ்சாயத்துதான். ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமை மறுப்பிலேயே நீதி நியாயம் என்பது நாட்டுப்புறங்களில் பேசப்படும். அதிலும் விவசாயத்தை மையமாக கொள்ளாமல் வெறுமனே சேவல் வளர்ப்பு என்று இருக்கும் போது அதில் சம்பந்தப்பட்டவர்களிடம் என்ன நீதி இருக்க முடியும்? கிராமத்து லும்பன்களான இவர்களிடம் சேவற் சண்டைகளில் கிடைக்கும் பணம், புகழ்தான் முக்கியமென்றால் அதற்காக இவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் நீதி, நியாயம் என்று ஒரு கதை செய்வது பொருத்தமாக இல்லையே?

சாதி மற்றும் நிலவுடைமை ஆதிக்கம் கோலேச்சும் கிராமங்களில் மூத்தோர் சொல் தட்டக்கூடாது என்பது ஒரு வகையில் ஜனநாயக மறுப்புதான். அந்த ஜனநாயக மறுப்பின் அற்பத்தனத்தை காட்டவேண்டுமென்றால் அது விரிந்த சமூக யதார்த்தத்தில்தான் சாத்தியம். சேவற் சண்டை வாத்தியாரது கோணத்தில் அதைக் காட்டும்போது அது ஏதோ ஒரு வில்லனது நடவடிக்கையாக சுருங்கி விடுகிறது. ஏனெனில் தந்தை, பண்ணையார், கணவன், அண்ணன், ஆதிக்க சாதி என்று எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மூத்தோர் அதிகாரத்தால் பல்வேறு வகைகளில் மக்கள் துன்பப்படுகிறார்கள். அதற்கு கிராமத்தின் மையமான பொருளாதார வாழ்விலிருக்கும் பாத்திரமே பொருத்தமாக இருக்கும்.

சேவற்சண்டை தொடர்பாக போலீசு, அரசியல் கட்சிகள், சாதி, ஊர் கௌரவம், என்று சமூகம் தழுவிய பின்னணியோடு இந்த கதை இருந்திருந்தாலும் இதன் பரிமாணம் விரிந்திருக்கும். அதற்கு மாறாக நாயகன்,காதல், வில்லன் என்று எளிமைப்படுத்தப் பட்ட சுருங்கிய இடத்திலேயே கதை சுற்றுவதால் பார்வையாளன் இதில் எதையும் புதிதாகப் பெறப்போவதில்லை.

இது வெற்றிமாறனுக்கு மட்டும் நேர்ந்த விபத்தல்ல. தமிழ் சினிமாவின் எல்லா இயக்குநர்களும் கதை என்றாலே அதை சில உணர்ச்சிகள், பாத்திரங்களின் வழியாக மிக மிக எளிமைபடுத்தியே உருவாக்குகிறார்கள். ஆனால் இத்தகைய கதைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் (80.90களில்) அது சம கால கேரளத்தின் வாழ்வோடு வண்ணமயமாகவும், விரிந்த அளவில் வாழ்க்கையை உணர்த்துவதாகவும் இருந்திருக்கும். சங்க இலக்கியங்களிலிருந்தெல்லாம் சேவற் சண்டைகளை ‘ஆய்வு’ செய்து சேகரித்திருக்கும் இயக்குநர் சமகால கிராம வாழ்வு குறித்து எதையும் பார்த்த மாதிரி தெரியவில்லையே?

எனினும் இந்தப்படத்தின் பாத்திரங்களும், கதை அமைப்பும், காதலை தவிர்த்துவிட்டு பார்த்தால் அழுத்தமாகவும், இயல்பாகவும் படைக்கப்பட்டிருப்பதாக சிலருக்குத் தோன்றலாம். அதற்கு காரணம் நட்பு, துரோகம், அவலம், கையறுநிலை முதலான உணர்ச்சிகளை சமூக யதார்த்தத்தில் பட்டை தீட்டப்படாத சினிமா புனைவு மூலம் நாம் ஒரு இரசனையாக பயன்றிருக்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் நமது வாழ்க்கையில் கூட இத்தகைய பிரச்சினைகளே ஆழமான முக்கியத்துவமின்றி நெடுங்காலம் மனதை ஆக்கிரமித்திருக்கும் வண்ணம் வாழ்கிறோம். அற்ப விசயங்களுக்காக ஆழமான மன பாதிப்பு அடைவது உண்மையென்றாலும் அதுவே வாழ்க்கையின் ஆழம் ஆகிவிடாது இல்லையா? அதனால்தான் இந்த படம் பாத்திரங்களின் சித்தரிப்பில் கொண்டிருக்கும் ‘ஆழத்தை’  சமூக வாழ்க்கையில் கொள்ள வேண்டிய ஆழமாக பயணிக்கவில்லை. நாமும் தெரிந்த உணர்ச்சிகள், அறிந்த அனுபவங்கள் என்று அதிலேயே நின்றுவிடுகிறோம்.

கிராம வாழ்க்கையில் இருந்து கொண்டு கதை சொல்வது வேறு. ஒரு கதைக்காக கிராமத்தை பின்னணியாகக் கொள்வது வேறு. அந்த வகையில் இந்தப் படம் தொப்பிக்காக தலையை வெட்டுகிறது. நல்ல நடிப்பு, ஒளிப்பதிவு, அசலான கிராமக் காட்சிகள் எல்லாம் இருந்தும் இது வழக்கமான ஃபார்முலா கதைகளை பார்த்த எரிச்சலையே தருகிறது.

இதுதான் உண்மையான கிராமத்தை காட்டுவதாக நம்புபவர்கள், உண்மையான கிராமத்தை காட்டினால் என்ன சொல்வார்களோ தெரியவில்லை. நகரத்தின் வாழ்வை அனுபவித்துக் கொண்டே, அதை ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் எப்போதாவது கிராம வாழ்வு குறித்து ஏங்குவது போல பேசுவார்கள். அத்தகைய அக்மார்க் நகரத்து மனிதர்களுக்கு இந்த சினிமா கிராமம் நிச்சயம் பிடிக்கும்.

 

நன்றி: வினவு