தொகுப்பு | செய்திகள் RSS feed for this section

தா. பாண்டியன் குமுறல்

21 ஜன

நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார்,

எனக்கு வெறும் அம்பேத் காரா?

tha.pa

 

முதற்பதிவு: முகநூல்

நல்லூர் நண்பர்களே! ஒரு நிமிடம் .. .. ..

20 ஆக

அன்பார்ந்த நல்லூர் நண்பர்களே!

 

காயிதே மில்லத் திடலிலோ, அல்லது வேறு ஏதோ ஓர் இடத்திலோ நோன்புப் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு; பெருநாள் வாழ்த்துகளை நேரிலும், தொலைபேசியிலும், குருஞ்செய்தியிலும், இணையத்திலும் பகிர்ந்துவிட்டு ஒழிவாய் அமர்ந்திருப்பீர்கள். அல்லது இந்த திருநாளை, கிடைத்த விடுமுறையை எந்த பொழுதுபோக்கு அம்சத்துடன் கொண்டாடுவது என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு குறுக்கீடு.

 

மேலே காணும் சுவரொட்டியை கடந்த இரண்டு நாட்களாக கடையநல்லூரின் சுவர்களில் ஆங்காங்கே நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை ஒரு தகவலாக நீங்கள் கடந்து சென்றிருக்கலாம், சிலர் இது குறித்து விவாதித்துக் கூட இருக்கலாம். நானும் இது குறித்துத் தான் உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

 

நோன்புப் பெருநாள் தொழுகையை காயிதே மில்லத் திடலில் எந்தக் கும்பல் நடத்துவது எனும் போட்டியில் வெல்வதற்கு உதவி செய்ததற்காக இந்த நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கிறது என்றும், தொழுகை என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகளிடம் எந்தக் கும்பல் தொழுகை நடத்துவது என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒவ்வொரு ஆண்டும் நாமே ஒப்படைப்பது சரியா? என்றும் அந்த வாதங்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது இது மட்டும் தானா? எழுப்பப்பட வேண்டிய முதன்மையான கேள்வி ஒன்று அந்த சுவரொட்டியில் ஒழிந்திருப்பது உங்களுக்கு புலப்ப்படவில்லையா?

 

அரசியல் என்றால் என்ன? ஜெயலலிதா என்ன சொன்னார்? கருணாநிதி என்ன செய்தார்? பிஜேபியா? காங்கிரசா? இன்னபிற பல்வண்ண ஓட்டுக் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? போன்றவற்றை வாய்களால் அலசிக் காயப் போடுவது மட்டும் தானா? அல்ல. அரசியல் என்பது; நாம் ஒரு சமூகப் பிராணி என்பதால் சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு செயல்களை, அவை ஏன் நிகழ்கின்றன? அதன் பின்னணி என்ன? எந்த நோக்கில் அது நிகழ்கிறது? என்பதை அலசி ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மைகளை தேடிக் கண்டு, அது நம் மீது என்னென்ன விதங்களில் தாக்கம் செலுத்துகிறது என்பதைத் தெளிந்து, அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான். இது தான் அரசியல் என்பதன் சாரம்.

 

இந்த அடிப்படையில், அந்த சுவரொட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் உண்மைகள் என்ன? அதற்கு நாம் என்ன எதிர்வினை புரிவது? கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பது இது போன்ற ஆன்மீக இயக்கங்கள் தாம். இத்தகைய ஆன்மீக இயக்கங்கள் மத ரீதியான ஒழுங்கை மக்களிடம் மேம்படுத்துவதே தங்களின் பணி என்று கூறிக் கொண்டு, அதற்கான முனைப்புகளில் முழுமூச்சாய் ஈடுபடுவதாகக் காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றன. ஒற்றைக் கும்பலிலிருந்து பிரிந்த பல்வேறு கும்பல்களுக்கிடையே யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்திக் காட்டுவதாலேயே இன்று கடையநல்லுர் சந்தித்துக் கொண்டிருக்கும், வேவ்வேறு நாட்களில் ஒரே பெருநாள், தொழுகைத் திடலுக்கு போட்டி உள்ளிட்ட பலவும் நிகழ்கின்றன. ‘கியாமத்து’ நாளில் எது சிறந்த கும்பல் என அறியப்படுவதற்கு இன்று எந்தக் கும்பலுக்கு மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்பது தானா அளவுகோல்? அல்லது காயிதே மில்லத் திடலில் அதிகம் பேரைத் திரட்டி தொழுகை நடத்தியது எந்தக் கும்பல் என்பது தான் அளவுகோலா? இறைவனுக்கு எது பொருத்தமானது என்பதை உங்களுக்கு பாடம் நடத்தும் இந்தக் கும்பல்களின் செயல்களில் இறைப் பொருத்தம் எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?

 

நான்கு மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்ட ஓர் அறிவிப்புக்கு இப்போது ஏன் பாராட்டுச் சுவரொட்டி? தொழுகையை யார் நடத்துவது என்பதை அமைச்சரை சந்தித்து தங்களுக்கு சாதகமாக தீர்த்துக் கொள்ள முனையும் ஒரு கும்பலுக்கு ஏன் இது கௌரவப் பிரச்சனையானது? ஏனென்றால் இது அவர்கள் நடத்தும் அரசியல். மக்களை அரசியலற்றவர்களாக தங்களின் பின்னே திரட்டி வைத்திருக்கும் பலத்தில் அவர்கள் செய்யும் அரசியல். முதலாளித்துவமும் இதைத்தான் செய்கிறது. எந்த விதத்திலும் மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே அது விரும்புகிறது. அதற்காகவே புதுப்புது பொழுது போக்குகளையும், நவீன கண்டுபிடிப்புகலையும் பயன்படுத்துகிறது. இனவெறி, மொழிவெறி, மதவெறி உள்ளிட்ட பலவற்றையும் உருவாக்கி, தூண்டிவிட்டு பயன்படுத்துகிறது.

 

அது போன்றே, இயல்பான மத வழிபாட்டு முறைகளுடன் இருந்த மக்களிடையே மதத் தூயவாதம் பேசி மக்களிடையே செல்வாக்குப் பெற்று, அந்த செல்வாக்கின் பலத்திலேயே மக்களின் அரசியலையும், சிந்தனையையும் மழுங்கடித்திருக்கின்றன இந்தக் கும்பல்கள். இதை புரிய மறுப்பவர்களுக்கு இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். 1) எந்த பேதமுமின்றி வீட்டருகே இருந்த பள்ளிவாசல் திடலில் தொழுது எல்லோருக்கும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட மக்கள், இன்று ஒரே பெருநாளை அடுத்தடுத்த மூன்று நாட்களில் கொண்டாடியதை எந்த முணுமுணுப்பும் இன்றி அங்கீகரித்தார்களே, இது எப்படி நேர்ந்தது? 2) எவ்வளவோ மோசமான கட்டுரைகளெல்லாம் இணையத்தில் இரைந்து கிடக்க ஒரு கட்டுரையை முகநூலில் பகிர்ந்தார் என்பதற்காக அவரை அடிப்பதற்கு ஆயிரக் கணக்கானோர் திரண்டார்களே. இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் தேவையா எனும் சிந்தனை யாரிடமுமே எழவில்லையே, இது எப்படி நேர்ந்தது? காரணம், கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் அரசியல் உணர்வு மழுங்கடிக்கப்பட்டு வருகிறது என்பது தான்.

 

மதங்களும் அதைத்தான் விரும்புகின்றன. எந்தப் பரிசீலனைக்கும் இடமற்று, தன்னை நம்புபவர்களுக்கே அவைகள் சொர்க்கங்களை வாக்களிக்கின்றன. மழுங்கடிக்கப்படும் அரசியல் உணர்வு, மக்களிடம் இன்னும் மிச்சமிருக்கும் தவறுகளைக் கண்டு பொங்கி எழும் தன்மை, இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளில் தோதாக அமர்ந்து கொள்ளும் இந்த மதவாதக் கும்பல்கள், மக்களின் அந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இது தான் அந்த சுவரொட்டி முகத்திலறைந்து வெளிப்படுத்தியிருக்கும் உண்மை.

 

உழைக்கும் மக்களே! அதிகாலையில் உறக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி பின்னிரவில் படுக்கையில் விழும் வரை பல்லாயிரக் கணக்கான மனிதர்களின் உழைப்பை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். உங்களோடு சேர்ந்து அந்த உழைக்கும் மக்களை பல்வேறு பிரச்சனைகள் நாலாதிக்கிலிருந்தும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, சூழல் மாசுபாடு, தனியார்மயம், ஏழ்மை, கல்வியின்மை, அடிப்படை வசதிகளின்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஊழல்கள், அடக்குமுறைகள் .. .. .. இது போன்ற எந்தப் பிரச்சனையும் உங்களுக்கு இல்லையா? இருக்கின்றன என்றால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அற்பமான முகநூல் பிரச்சனைக்கும், ஒரு குறுஞ்செய்து தகவல் மூலமும் நொடியில் உங்களால் ஆயிரக்கணக்கில் திரளமுடியும் என்றால்; தினமும் உங்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைகளை எதிர்த்து நீங்கள் ஏன் திரளக் கூடாது?

 

பிரச்சனைகளுக்காக போராடுவது குறித்து நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? சலவை செய்த வேட்டியில் தேனீர் குடிப்பதற்காகவும் இன்னும் பலவற்றுக்காகவும் நாளில் பலமுறை கடந்துபோகும் சாலைகளில் உங்களை பாதிக்கும் ஒரு பிரச்ச்னைக்காக உங்களால் நிற்க முடியாது என்றால், உங்களுக்குள் அரசியல் உணர்ச்சி எந்த அளவுக்கு வற்றிப் போய் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு காட்டுகள் வேண்டுமா?

 

இந்த வறட்சியை உங்களிடம் ஏற்படுத்தியது யார்? இதை நீங்கள் எப்படி சரி செய்யப் போகிறீர்கள்? இவைகளை அறிந்த பிறகான உங்களின் எதிர்வினை என்ன? சமூக நடப்புகளை ஊன்றிக் கவனியுங்கள், உங்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என்பதை ஆலோசியுங்கள். அவற்றை நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத் தலைமைகளிடம் முன்வைத்து கேள்விகளை எழுப்புங்கள். ஆம், உங்கள் இயக்கத் தலைமைகளிடம் நீங்கள் எழுப்பும் கேள்விகளிலிருந்து தொடங்கட்டும் உங்கள் எதிர்வினை.

தொடர்பான இடுகைகள்

திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

இஸ்லாமிய இளைஞர்களே எங்கு செல்கிறீர்கள்?

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் இறுதிப் பகுதி

25 ஜூலை

இந்த விவாதத்தின் கடைசிப் பகுதியாக காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் எந்தவித தயக்கமும் இன்றி ஈடுபடும் மதவாதிகளின் அடிப்படை குறித்து அலசலாம்.

 

ஒரு நடவடிக்கை அல்லது செயல் எந்த அடிப்படையில் ஒருவனால் மேற்கொள்ளப்படுகிறது? தன்னால் செய்யப்படும் செயல் தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் இருக்கும் போது மட்டுமே அதை செய்வதற்கான உந்துதல் அவனுக்கு கிடைக்கும். தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவு அவனிடம் எந்த வழியில் வருகிறது? ஒரு செயல், அதற்கான தூண்டுதல், விளைவு, எதிர்வினை போன்றவை தேவையானது அல்லது தவிர்க்கவியலாதது எனும் முடிவை இரண்டு வழிகளில் அடைகிறார்கள். 1. சரியா? தவறா? 2. சாதகமா? பாதகமா?

 

உலகின் பெரும்பாலான மக்கள் சாதகமானதா? பாதகமானதா? எனும் கோட்டில் நின்று தான் சிந்திக்கிறார்கள். தாம் செய்யப் போகும் ஒரு செயல் சரியானதா? தவறானதா? எனும் ஆய்வு அவர்களுக்குள் ஏற்படுவதில்லை. தவறானதாக இருந்தாலும் சாதகமானதாக இருந்தால் செய்துவிடுவதும், தாம் செய்வதையே சரி என வாதிடுவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. சரி என்று வாதிடுபவர்கள் அனைவரும் அது சரி என தெரிந்ததனால் வாதிடுபவர்கள் அல்லர். தவறு என்று தெரிந்து கொண்டே சரி என வாதிடுபவர்களே இங்கு அதிகம். இது ஏன்?

 

ஒன்று சரியா தவறா அல்லது சாதகமா பாதகமா எனும் முடிவு அந்தந்தப் பொருள் குறித்து அவர் கொண்டிருக்கும் கருத்திலிருந்து பிறக்கிறது. இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே சரியா தவறா? சாதகமா பாதகமா? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்கிறார்கள். தனக்கு சாதகமானது என்று ஒன்றைப் பற்றி கருத்து கொண்டிருக்கும் ஒருவரால் மெய்த்தன்மையில் அது பாதகமானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும் அதை தவறு என்று அவரால் தள்ள முடியாது. ஏனென்றால் அவரது கருத்துக்கு எதிராக அவரால் சிந்திக்க முடிவதில்லை. சிந்தனை கருத்து இரண்டுமே அனுபவங்களிலிருந்து அதாவது சமூகத்திலிருந்து தோன்றுபவை தான் எனும் போது ஏன் ஒருவரால் அவரின் சொந்த கருத்துக்கு எதிராக சிந்திக்க முடியாது? ஒரு பொருளைப் பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை மீறி அதே பொருளைப் பற்றிய வேறு கருத்துகளும் இருக்கக் கூடும் எனும் நிலையைச் செரிக்க அவனால் முடிவதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு கருத்து அவனுள் நம்பிக்கையாக நிலை பெற்றிருக்கும் போது அந்தக் கருத்துக்கு எதிராக சிந்தனை செய்வது என்பது சாத்தியமற்றுப் போகிறது. இந்த நம்பிக்கையின் அடிக்கல்லில் எழுந்து நிற்பது தான் மதம். மதத்திற்கு எதிரான சிந்தனை குற்றமாகவும் பார்க்கப்படுவதால் மதத்துக்கு எதிரான சிந்தனைகள் எப்போதுமே இயல்பை மீறிய விசயமாகவே இருக்கிறது.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடயேயுள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டால் யாரும் சட்டெனக் கூறுவது சிந்தனை என்பது தான். ஆனால் விலங்குகள் சிந்திப்பதில்லையா? சிந்திக்கின்றன. கழுதைப் புலிகள் கூட்டாக வேட்டையாடுகின்றனவே சிந்திக்காமல் சாத்தியமா? வேறென்ன வேறுபாடு, பகுத்தறிவா? விலங்குகளும் பகுத்தறிகின்றனவே. குறிப்பிட்ட செடியை மட்டும் உண்ணாமல் தவிர்க்கின்றன ஆடுகள். பகுத்தறியவில்லை என்றால் சாத்தியமா? மனிதர்களைப் போலவே விலங்குகளும் உழைக்கின்றன, உண்கின்றன, தாய்மை உணர்வு கொள்கின்றன. ஆனால் மனிதனைப் போல் விலங்குகளால் மீளாய்வு செய்ய முடிவதில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயல் சரியானதா? தவறானதா? தொடர்ந்து செய்யலாமா? கூடாதா? என்பன போன்ற சிந்தனைகள் அதாவது ஒன்றை ஐயப்படத் தெரியாது விலங்குகளுக்கு. அதாவது உயிர் வாழும் தன்மைக்கு பாதிப்பு நேரிடாதவரை தன்னுடைய செயல்களை மாற்றிக் கொள்வதில்லை விலங்குகள். மனிதன் எந்த நிலையிலும் மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மீளாய்வு செய்து பார்க்கும் திறனைப் பெற்றிருக்கிறான் என்பது தான் உண்மையேயன்றி; ஒவ்வொன்றையும் மீளாய்வு செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையாக இருக்க முடியாது. தான் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அது சரியா தவறா? என உள்வசமாய் சிந்திக்காமல்; சூழலுக்கான தம்முடைய எதிர்வினை சரியானதா? என்பதை ஆராயாமல் தான் நம்பிக் கொண்டிருக்கும் ஒன்றுக்கு எதிராய் இருக்கும் அத்தனையும் தவறாகவே இருக்கும் என்று எந்த மீளாய்வுக்கும் இடமில்லாமல் எந்த இடத்தில் முடிவு செய்கிறானோ அந்தப் புள்ளியிலிருந்து மூட நம்பிக்கை தொடங்குகிறது. அவன் அதை மூடநம்பிக்கை என்று வகைப்படுத்தவில்லை என்றாலும் கூட அதுவே நிஜம்.

 

ஆக, யாராக இருந்தாலும் அவர் தாம் செய்யும் செயல்களை – அது எந்த தத்துவத்தின் வழியில் வருவதாக இருந்தாலும், எந்த மதத்தின் அடிப்படையில் இருப்பதாக கொண்டாலும் – அதை மீளாய்வுக்கு உட்படுத்துகிறாரா? இல்லையா? என்பது மட்டுமே அவர் சரியான நிலைபாட்டில் இருக்கிறாரா என்பதை தெளிவதற்கான அளவுகோல். இப்போது கடையநால்லூர் நிகழ்வில் இதை பொருத்திப் பார்ப்போம். தோழர் துராப்ஷாவைத் தாக்கிய, தாக்க நினைத்த, தாக்கியதை சரி என்று எண்ணிய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் அத்தனை பேரையும் கேட்கலாம், “உங்களிடம் இன்னும் நேர்மை உணர்வு கொஞ்சமேனும் மிச்சமிருக்குமானால் தோழரை நீங்கள் தாக்கியது, தாக்க நினைத்தது, தாக்கப்பட்டதை சரி என்று எண்ணியது சரிதானா?” நீங்கள் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போக விருப்பமில்லாதவர்களாயின் நீங்கள் மீளாய்வு செய்தே தீர வேண்டும்.

 

உங்களைச் சுற்றி நடக்கும் எத்தனை நிகழ்வுகளுக்கு நீங்கள் காது கொடுத்திருக்கிறீர்கள்? எத்தனை சமூக அநீதிக்கு எதிராக நீங்கள் கொதித்தெழுந்திருக்கிறீர்கள்? உங்கள் வாழ்வை வளங்களை பறித்து உங்களை கடல் கடந்து ஓட வைத்திருக்கும் முதலாளித்துவத்தை நினைத்து நீங்கள் சினந்தது உண்டா? குறைந்தபட்சம் அதை புரிந்துகொள்ளவேனும் முயற்சித்ததுண்டா? உங்கள் கண் முன்னே லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மடிந்த போது உங்கள் தார்மீகக் கோபம் எங்கே போனது? கல்வியை கை கழுவிவிட்டு மதுவை அரசுடமை ஆக்கி ஆறாய் ஓடச் செய்திருக்கும் இந்த அரசுக்கு எதிராக உங்கள் கைகள் உயர்ந்ததுண்டா? இன்றல்ல, இரண்டல்ல .. .. சமூகத்தில் நிகழும் பெரும்பாலான செயல்களும் ஏதாவது ஒரு விதத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றன. அவைகள் குறித்த உங்கள் எதிர்வினை என்ன? உங்களை நீங்களே கேள்வி கேட்டதுண்டா?

 

ஆனால், ஆனால் கேவலம் மதத்துகு எதிராய் எழுதினான் என்ற பொய்க் குற்றச்சாட்டை அப்படியே நம்பி  தாக்கத் துணிந்தீர்களே! உங்கள் செயல் சரிதானா என சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணம் வந்ததுண்டா உங்களிடம்? என்றால் நீங்கள் எதுவாக இருக்க விரும்புகிறீர்கள்? கேள்வியை கேட்டு விட்டேன், பதிலை நீங்கள் தான் தேட வேண்டும். ஏனென்றால் நான் உங்களை உயர்தினையாய் மதிக்க விரும்புகிறேன்.

 

முதல் பதிவு: செங்கொடி

தென் மாவட்டங்களில் டெங்கு! அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

1 ஜூலை

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகளே டெங்கு பரவலுக்கு முக்கிய காரணம் !

அரசின் அலட்சியப் போக்கே உயிர் பலிகளுக்கு அடிப்படைக் காரணம் !

மனித உரிமை பாதுகாப்பு மையம் உண்மை கண்டறியும் குழு ஆய்வு முடிவுகள் !

டெங்கு காய்ச்சல் தமிழ் நாட்டை வலம் வந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக 75 பேர் வரை உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, 7 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்தது. அக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பல்வேறு தகவல்களைத் திரட்டி வந்துள்ளனர். அதனடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உண்மையறியும் குழு உறுப்பினர்கள்:-

  1. க.சிவராசபூபதி, வழக்கறிஞர், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர். ம.உ.பா.மையம்.
  2. தங்கபாண்டி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம்,துத்துக்குடி
  3. ஜெயந்தி, வழக்கறிஞர், ம.உ.பா.மையம், நாகர்கோவில்
  4. ராமர், ஆதிக்க சாதி எதிர்ப்பு கூட்டமைப்பு
  5. அப்துல் ஜப்பார், வழக்கறிஞர், திருநெல்வேலி
  6. கேபால், ம.உ.பா.மையம், நெல்லை
  7. ராஜபாண்டி, ம.உ.பா.மையம், துத்துக்குடி

கடந்த 26.5.12 அன்று நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகில் உள்ள மருதம்புத்துர்,லட்சுமியூர், ராஜபாண்டி, சுந்தரபாண்டியபுரம் ஆகிய டெங்கு அதிகம் பாதித்த ஊர்களில் நேரில் ஆய்வு செய்த போது கிடைத்த தகவல்கள் வருமாறு :-

மருதம்புத்துரைச் சேர்ந்த சுரேஷ்-பிச்சம்மா ஆகியோரின் மகன் விஷ்ணு– வயது ஒன்றே முக்கால். காய்ச்சல் வந்தவுடன் குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போகப்பட்டது. அங்கே முதலுதவி கொடுத்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 3 வது நாள் இறந்தது.

விஷ்ணுவின் தாத்தா கூறியதாவது :- காய்சல் வந்த 2வது நாள் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றோம். காய்சல் இல்லை என்று கூறினார்கள். மீண்டும் காய்சல் வந்தது. தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். டெங்கு என்று கூறி நெல்லை G.H. கொண்டு போகச் சொன்னார்கள். தென்காசியில் 4 மணி நேரம் காத்திருந்தோம். பின்னர் தான் மருத்துவர் வந்தார். சரியாக கவனிக்க வில்லை.

பென்சா-வயது மூன்று, 3 நாட்கள் காய்ச்சல். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை. அங்கே சாதாரண காய்ச்சல் என்று சொல்லி விட்டனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக் கொண்டு வந்த போதும் சாதாரண காய்ச்சல் என்று கூறி விட்டனர். நாடி பிடித்துக் கூடப் பார்க்கவில்லை. 3வது நாள் சிறுமி இறந்து விட்டாள்.

டிக்சன்-10 மாதம். பெற்றோர் சபில்தேவ்-ராதா. ஆலங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை திராவிடமணியில் சேர்க்கப்பட்டது. Vomino என்ற மருந்து கொடுத்ததில் குழந்தை 11 மணிநேரம் துங்கியதாக பெற்றோர் தெரிவித்தனர். குழந்தை ஆரோக்யமாக உள்ளதாக கூறியுள்ளனர். அரசு நடத்திய டெங்கு சிறப்பு முகாமில் காட்டிய போது டெங்கு இல்லை என்று கூறிவிட்டனர். 2 நாட்களில் குழந்தை இறந்துவிட்டது.

அபர்சிகா-11 மாதக் குழந்தை. இளையராஜா-மகேஸ்வரி தம்பதியரின் மகள். கடுமையான காய்ச்சலின் காரணமாக இழுப்பு வந்துள்ளது. பின்னர் மூக்கின் வழியாக ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டது.

லட்சுமியூரைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை கிருத்திகா தேவி. இதயத்தில் ஓட்டை இருந்ததாக திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. நெல்லை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பயனின்றி குழந்தை இறந்து விட்டது. இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் மறுநாள் வீடு தேடி வந்து அந்தச் சான்றிதழை திரும்பப் பெற்றுச் சென்று விட்டனர். சான்றிதழை ஜெராக்ஸ் நகல் கூட எடுக்க விடவில்லை. எதனால் அந்தச் சான்றிதழ் திரும்பப் பெறப்பட்டது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

ராஜபாண்டியைச் சேர்ந்த உஷா நந்தினி என்ற 10 வயது சிறுமியும், சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சீலா என்ற 18 வயது பெண்ணும் டெங்கு அறிகுறிகளுடன் இறந்துள்ளனர்.

கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-

டெங்கு-காய்ச்சல்-அறிகுறிகள்

தமிழ்நாட்டில் டெங்கினால் அதிகபட்சம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லுர் மற்றும் தட்டான்குளம், சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.5.12 அன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.

கடையநல்லுரின் சுகாதார நிலைமை படுமோசம். ஊரின் நடுவே வாய்க்கால் ஒன்று குறுக்கு வெட்டக ஓடுகிறது. இது பாசனக் கால்வாய் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கால்வாயின் இருபுறமும் உள்ள வீடுகளிலிருந்து மனிதக் கழிவுகள் முழுவதுமாக இதில்தான் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே வாய்க்கால் கரையில்தான் அரசு மருத்துவமனை, பிண அறை, ஆடு அறுக்கும் வதைக்கூடம் (Slaughter House) அனைத்தும் உள்ளன. எனவே சுகாதாரக் கேடு பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கடையநல்லுருக்கு குடிநீர் தரும் ஆழ்குழாய்க் கிணறும் இங்கே தான் உள்ளது. நீரேற்று நிலையத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. அதில் கோடிக் கணக்கில் கொசுக்கள் வாசம் செய்கின்றன. ஆற்றிலிருந்து எடுக்கப்படுகின்ற நீரோடு போர் தண்ணீரும் சேர்த்து குடிநீராக வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். கடையநல்லுர், புளியங்குடி, தென்காசி போன்ற ஊர்கள் சுகாதார சீர்கேடு நிறைந்தும், பன்றிகளின் சொர்க்கமாகவும் திகழ்வது பலமுறை ஊடகங்களால் அம்பலமாகியுள்ளது. எனவே கடையநல்லுர் எல்லாவித தொற்று நோய்களுக்கும் இருப்பிடமாக விளங்குவதில் வியப்பேதும் இல்லை தான்.

கடையநல்லுரில் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களும் டெங்குவினால் உயிர் இழந்து உள்ளனர். டெங்குவினால் இறந்த N.செய்யது மசூது என்பவரது உறவினர் ஜபருல்லா கூறும் போது, “வந்திருப்பது டெங்கு காய்ச்சல் என்று கூறவே இல்லை. குணமாகி விடும் என்று நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். போதுமான சிகிச்சை அளிக்கவில்லை. அதுபற்றிய விவரமும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. கடைசியில் நோயாளி இறந்து விட்டார். இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று ஜபருல்லா கூறினார்.

கடையநல்லுரின் சுகாதார சீர்கேடு மிகவும் பிரபலம். அதனால் தான் டெங்கி-னால் உயிரிழப்பு அங்கே அதிகம். இவ்வளவு பாதிப்புக்குப்பின், திடீரென்று 50 சுகாதாரப் பணியாளர்களை நிர்வகாகம் இறக்கி விட்டுள்ளது. அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அள்ளவும், மருந்து தெளிக்கவும் வந்த போது பொதுமக்கள் அவர்களைத் தடுத்து விரட்டி விட்டுள்ளனர். “இதுவரை இந்தப் பக்கமே வராதவர்கள் இன்று மட்டும் திடீரென்று வந்து என்ன செய்யப் போகிறீர்கள். எங்களுடைய சுகாதாரத்தை நாங்களே பார்த்துக் கொள்வோம் போங்கள்” என்று சொல்லி தடுத்துள்ளனர். அந்தளவுக்கு சுகாதாரப் பணிகள் அங்கு நின்று போயிருந்திருக்கிறது.

அறிகுறிகள் என்ன ?

டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

முதல் உதவி :-

 ”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங்கள், துய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலையும் கொடுக்கலாம் என்று மருத்துவர் மனோகரன் தெரிவித்தார். ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட்லெட்ஸ் வெகுவேகமாக குறைவதால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட்டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தனர்.

டெங்குக்கு மருந்து இல்லை :

மருத்துவ அறிவியல் வானளாவ உயர்ந்திருக்கிற இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் டெங்கு காய்சலுக்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். “சில தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும், பாதிக்கப்பட்டவரை உடனிருந்து நன்கு கவனிப்பதன் மூலம் காப்பாற்ற முடியும்” என்கிறார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை முதல்வர் மனோகரன்.

நெல்லை, துத்துக்குடி மாவட்டங்களில் டெங்கினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகள் தான். அங்கு நேரில் சென்று பார்த்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் தரையில் பாய் விரித்து படுக்க வைக்கப்பட்டுள்ளனர். போதிய கவனிப்பு இல்லை. குழந்தைகள் அதிகம் என்பதால் உடன் வருவோரின் கூட்டமும் சேர்ந்து பெருங் கூட்டமாக உள்ளது. நோயாளிகளுக்கு குடிக்க வெந்நீர் போடும் வசதி கூட இல்லை. போதிய மருத்துவர்களோ, பணியாளர்களோ, செவிலியர்களோ இல்லை. டெங்கு பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள், சிகிச்சை பற்றிய விவரம் கேட்டால் மருத்துவக்கல்லுரி முதல்வர் கூட அதற்குப் பதில் சொல்ல மறுக்கிறார். சுகாதாரத்துறை இயக்குநரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.

இப்போது மாவட்ட மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். இந்த அதிகாரி பரிசோதனைக் கூடத்தில் டெங்கு வைரஸ் கண்டறியப்பட்டத்தை கண்டித்து ஊழியர்களை கடுமையாகத் திட்டியுள்ளார். ஊழியர் தவறாக சோதனை மேற்கொண்டு தப்பான முடிவினைத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் கண்டறிந்தது உண்மைதான் என்று ஆதராப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன் விளைவாகத்தான் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மருத்துவ அதிகாரி மீரான் மைதீன் அத்தியாவசியமான எந்த நடவடிக்கையையும் தானும் செய்யமாட்டார். பிறரையும் செய்யவிடமாட்டார் என்று மருத்துவ வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட உண்மையை பரிசீலித்து உடனடி நடவடிக்கையில் இறங்கியிருந்தால் டெங்கு இந்த அளவுக்குப் பரவ விடாமல் தடுத்திருக்கலாம் என்பது பலரும் கூறும் பொதுக் கருத்தாகும். இதனை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மீரான் மைதீன் மட்டுமல்ல அரசு எந்திரத்தின் ஒவ்வொரு துறையிலும் பல அதிகாரிகள் இவ்வாறு தான் உள்ளனர். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற தன்மை. அரசும் சிக்கியவர்களைப் பழிவாங்கி விட்டு பின்னர் பிரச்சினையைக் கிடப்பில் போட்டுவிடுவது வாடிக்கை.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணக் கொள்ளை :

டெங்கு பாதித்த நபர்கள் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் அங்கு தரமான சிகிச்சை தரப்படவில்லை. மருத்துவ மனை சுத்தம் சுகாதாரமாக இல்லை. இதனால் தனியார் மருத்துவமனைக்கு மக்கள் போக ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் திராவிட மணி மருத்துவமனை, நெல்லை சுதர்சன், முத்தமிழ் மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் இறப்புகள் ஏற்பட்டுள்ளன, அநியாய கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற போதிலும் தனியார் மருத்துவமனைகளை வேறு வழியின்றி மக்கள் நாடிச் சென்றுள்ளனர்.

வழக்கம் போல தனியார் மருத்துவமனைகள் பழச்சாறும், இளநீரும், சாதாரண மருந்து மாத்திரைகளையும் கொடுத்து ரூ 30 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதால் மக்கள் கட்டாயமாக தனியாருக்குத் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை டெங்குவினால் இறந்தவர்களில் 90 விழுக்காடு பரம ஏழை மக்களே என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு நேரடியாக ரத்தம் ஏற்றுகின்றனர். ஆனால் தனியாரில் பிளேட்லெட்ஸ் ஏற்றப்படுகிறது. ரத்தம் ஏற்றுவதை விட பிளேட்லெட் ஏற்றுவதே சிறந்த பலனளிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ?

டெங்கு பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக அரசு கூறுகிறது. ஆனால் நீர்நிலைகளில், சாக்கடைகளில் மருந்து தெளிப்பது, குடி தண்ணீரில் குளோரின் கலப்பது, கிராமப்புறங்களில் டெங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, நகர்ப்புறங்களில், சுவரொட்டி, துண்டறிக்கை, ஆட்டோ பிரச்சாரம் செய்வது, அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு இவை தவிர வேறு சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

குடிதண்ணீரை மூடிவையுங்கள், காய்ச்சி குடியுங்கள், சிரட்டை, டயர், தேங்காய் மட்டை, நெற்று போன்ற சிறிய கொள்ளளவில் தேங்கும் நல்ல தண்ணீரில் இருந்து தான் டெங்கு கொசு உருவாகிறது. எனவே அவற்றைக் கண்டறிந்து அப்புறப்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. இத்துடன் கடமை முடிந்துவிட்டதாக அரசு கருதுகிறது. வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்து வருவதாகவும் அரசு சுகாதாரத்துறை ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறது. இது, டெங்கு வருவதற் கான சுற்றுச்சூழல் மக்களால் தான் ஏற்படுவது போன்ற கருத்தை உருவாக்கு கின்றது. ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை. குப்பைகளை அகற்றுவது, கழிவு நீர் வெளியேற்றும் வசதி, கழிப்பறை வசதி-இவைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

உண்மையான காரணங்கள் என்ன ?

நல்ல தண்ணீரில் தான் டெங்கு வைரஸ் உருவாகின்றது என்று சொல்லப் படுவது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. டெங்குவை ஆர்போ வைரஸ்கள் பரப்புகின்றன. மனிதர்களிடமும், கொசுக்களிடமும் மட்டுமே இந்த வைரஸ் குடியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவாது. டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் மூலம் பிறருக்கும் வைரஸ் பரவும். எனவே டெங்கு பரவுதலுக்கு மோசமான சுகாதார சீர்கேடு தான் காரணம். அதிலிருந்து தான் மானாவாரியாக கொசுக்கள் உற்பத்தியாகின்றன. கொசு உற்பத்தியைக் கட்டுப் படுத்தவில்லையானால் நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை. ஆனால் தண்ணீரைக் காய்ச்சி குடியுங்கள் என்று அரசு பிரச்சாரம் செய்கிறது. குடிநீருக்கும் டெங்குக்கும் சம்பந்தமே இல்லை.

அரசு தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பொது சுகாதார பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. எனவே தனியார் முதலாளிகள் லாப நோக்கத்தோடு மட்டுமே செயல்படுபவர்கள், அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்ற வாறு அவர்களது வேலை நடைபெறுகிறது. எனவே எல்லா நிலைகளிலும் சுகாதாரம் பராமரிப்பின்றி நோயுற்றிருக்கிறது கண்கூடு. இதில் கொசு, கிருமிகள், வைரஸ் பரவல் & ஒழிப்பும் அடங்கும்.

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொறுப்பையும் அரசு கை விடுகிறது. தண்ணீர் லாபத்துக்கென்று மாறிவிட்டது. டெங்கு பாதித்தவருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 4 லிட்டர் சுகாதாரமான (மினரல் வாட்டர்) குடிநீர் தரவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவ மனைகளில் குடிநீர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது, கட்டணக் கழிப்பறை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் குடிக்க சுடுதண்ணீர் வசதி கூட இல்லை.

அரசு மருத்துவமனைகளுக்கு அன்றாடம் கட்டுக்கடங்காத கூட்டம் வருகிறது. டெங்கு தொற்று போன்ற நேரங்களில் சொல்லவே தேவை இல்லை. இந்தக் கூட்டத்திற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவர்கள், பணியாளர்கள், கருவிகள் இல்லை. கவனிப்பும் இல்லை. அரசு மருத்துவ மனையில் கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பறை வசதி மிக மோசமாக இருப்பதால் பொது மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுவதாக மக்கள் கூறுகின்றனர்.

சோதனைக்கூட வசதி இல்லை. ரத்தத்தில் பிளேட்லெட் அளவைக் கண்டறியும் சோதனைக்கு தனியார் சோதனைக் கூடங்களில் ரூ1500/- கட்டணம். இரண்டு மூன்று முறை சோதனை செய்யும் நிலை ஏற்பட்டால் செலவு கூடுதலாகும். இந்த வசதி அரசு மருத்துவமனையில் குறைவாக உள்ளது. பிளேட்லெட் எண்ணிக்கை 3 லட்சம் இருக்க வேண்டியது 10 ஆயிரத்திற்கும் கீழே வந்துவிட்டால் இறப்பு நிச்சயம் எனும் போது ஏழை நோயாளியின் நிலை பரிதாபத்துக்குரியது.

டெங்கு பாதிப்பு முதலில் பாளை அரசு மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதை அலட்சியப்படுத்தி சோதனை முடிவு தவறு என்று ஊழியர்களைக் கடிந்து கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவர்கள் டெங்கு பற்றிய விவரங்களை உள்ளமுக்குவதற்கு செய்த முயற்சிகளே பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. ஏனெனில் காய்ச்சலில் இறந்த யாருக்கும் அவர்கள் இறப்பு சான்று தரவே இல்லை. தந்ததையும் பறித்துக் கொண்டனர்.

இது போன்ற, மக்களின் சுகாதாரம் தொடர்பான தனிச்சிறப்பான நிலைமைகள் தோன்றும் போது அதை எதார்த்தமாக திறந்த மனதுடன் பரிசீலித்து தீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கும் தன்மை நமது அரசுக்கும் அரசு எந்திரத்துக்கும் இல்லை என்பது எமது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது. இலவசங்களைக் கொடுத்து நலத்திட்டங்கள் என்று கூறும் அரசு, மக்களின் உடல்நலம் தொடர்பான திட்டங்களை அலட்சியப்படுத்துகிறது.

______________________________________________________________

மனித உரிமை பாதுகாப்பு மையம்  தமிழ்நாடு
குமரிதுத்துக்குடி மாவட்டங்கள்.

_______________________________________________________

முதல் பதிவு: வினவு

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதத்தின் ஆறாம் பகுதி

23 மே

 

இந்த விவாதத்தின் ஆறாவது பகுதியான இது, கடையநல்லூர் டிஎன்டிஜே எனும் தளத்தில் வெளியான என்னைப் பற்றிய பதிவு ஒன்றின் மறுப்பாக வருகிறது. செங்கொடியினர் காஃபிர்களே என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது மின்னஞ்சல் மூலமாகவும் பல நூறு பேருக்கு அனுப்பபட்டிருக்கிறது. அந்தப் பதிவு என்னை காஃபிர் என்று அறிவிக்கவும், நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என்னை அடக்கக் கூடாது என்றும் அறிவிக்க ஜமாத்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டி அனைவரையும் கோருகிறது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது தான் உண்மை.

ஒருவரை முஸ்லீம் என்று இவர்கள் எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்? அவர் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் வசிக்கிறரா? முஸ்லீம் பெற்றோர்களுக்கு பிறந்தவரா? முஸ்லீம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறாரா? என்பதைக் கொண்டா? இதுதான் ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கான தகுதி என்றால்; அட மூடநம்பிக்கையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் முல்லாக்களே, முதலில் உங்கள் மதத்தைப் பற்றியேனும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதற்குக் கூட எங்கள் மதத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என்பவர்களே, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்தால், இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்திருந்தால், இஸ்லாமிய பெயர் வைத்துக் கொண்டிருந்தால் ஒருவர் முஸ்லீமாகிவிடுவார் என்பதற்கு உங்கள் வேதத்திலி(குரான்)ருந்தோ, உபநிடதத்(ஹதீஸ்)திலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எந்த அடிப்படையில் என்னை முஸ்லீம் என்று கருதினீர்கள், இப்போது முஸ்லீம் அல்ல என்று அறிவிப்பதற்கு?

நான் எப்போதாவது என்னை முஸ்லீம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறேனா? இஸ்லாமியச் சடங்குகள் எதையேனும் செய்திருக்கிறேனா? என்னைத் தெரிந்தவர்களுக்கு வெகு நன்றாகத் தெரியும் நான் எப்போதும் முஸ்லீமாக இருந்ததில்லை என்று. ஆனால் இப்போது இவர்கள் கூறுகிறார்கள் \\\இப்படிப்பட்டவனை மார்க்க அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவன் என்று கருதமுடியாது. இவன் மதம் மாறிய முர்த்தத் ஆவான்///என்று. நான் மதம் மாறவும் இல்லை, முஸ்லீமாகவும் இல்லை. அறியாத வயதில் என்னுடைய பெற்றோரைக் கொண்டு நான் முஸ்லீம் என்று நீங்களாகவே கூறிக் கொண்டீர்கள். இப்போதும் நீங்களாகவே இவன் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்கிறீர்கள். நான் பிறந்தேன் வளர்ந்தேன், அறிகிறேன், சிந்திக்கிறேன், என் தேடலின் அடிப்படையில் என்னை வழி நடத்திக் கொள்கிறேன். இடையில் நீங்கள் யார் என்னை முஸ்லீம் என்றும் முஸ்லீம் இல்லை என்றும் கூறிக் கொள்வதற்கு?

சமூகத்தையும் மதத்தையும் குழப்பிக் கொள்வது இஸ்லாமியர்களின் வாடிக்கை.நம்புபவர்கள் சமூகமும் மதமும் வேறு வேறல்ல என்று நம்பிக் கொள்ளுங்கள் நம்பாதவர்கள் மீது ஏன் உங்கள் நம்பிக்கையை திணிக்கிறீர்கள்? நான் மக்கள் மத்தியில் வாழ்கிறேன் என்பது சமூகம். நான் மண வாழ்வில் இருக்கிறேன், அதன் விளைவுகளை கொண்டிருக்கிறேன் என்பது சமூகம். ஆனால் உங்கள் மததின்படி நான் ஒழுகவில்லை என்பதற்காக என் திருமணத்தை முறிப்பதற்கும், யாரும் என்னோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கும் நீங்கள் யார்?

எங்கள் திருமணத்திற்கு முன்பே நான் இறை நம்பிக்கை கொண்டவனல்ல, ஒரு நாத்திகவாதி என்பதை முறைப்படி பெண் வீட்டாருக்கு உறுதியாக தெரிவித்திருக்கிறேன். திருமணத்திற்கு முதல் நாளே திருமணம் நடத்தி வைப்பவரை அணுகி நான் நாத்திகவாதி அதனால் நீங்கள் கூறும் மந்திரம் எதனையும் நான் திரும்பக் கூறமாட்டேன். தமிழில் நீங்கள் கேட்கும் ஒப்புதலை மட்டுமே தருவேன். வேறுஎதையும் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்று அவருடன் வாதம் செய்து சம்மதிக்கச் செய்திருக்கிறேன். (என்னிடம் இன்றிருக்கும் கொள்கை உறுதி அன்று இருந்திருக்கவில்லை என்பதால் சில சமரசங்களுக்கும் ஆட்பட்டிருக்கிறேன் என்பது வேறு விசயம்) நான் ஒரு முகம்மதியனல்லன் என்பதை என் மனைவிக்கு ஐயந்திரிபற புலப்படுத்தியிருக்கிறேன். சமூக உறவு தேவை எனும் அடிப்படையில் தான் என் திருமணம் நடந்ததேயன்றி இஸ்லாமிய உறவு தேவை எனும் அடிப்படையிலல்ல. இப்போது என் மத நடவடிக்கைகள் உங்கள் விருப்புக்குறியதாய் இல்லை என்று கூறிக் கொண்டு என் மண வாழ்வில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது எவர்?

நான் இறந்தால் எந்த மையவாடியிலும் என் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். \\\இவனோ இவனது குடும்பத்தினரோ இறந்து விட்டால் முஸ்லிம்களின் எந்த மையவாடியிலும் அடக்கம் செய்யக் கூடாது/// நான் இறந்தால் முஸ்லீம்களின் மையவாடியில் என்னை அடக்கம் செய்யுங்கள் என்று யாரிடமும் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மாறாக ஒரு மருத்துவக் கல்லூரிக்கு என்னுடையை முழு உடலையும் தானம் செய்திருக்கிறேன். நான் இறந்தபின் தோழர்கள் என் உடலை அனுப்பும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள். அது குறித்து நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துக் கொள்கிறேன்.

இன்று நான் முஸ்லீம் அல்ல கூவித் திரியும் இவர்கள், நான் முஸ்லீம் அல்ல என்று என் செயல்களால் உணர்த்திய போது அதை மறுத்து என்னை அந்த மதத்துள் இருத்தி வைப்பதற்கு செய்த முயற்சிகள் எத்தனை? எத்தனை? (’இவர்கள்’ என்பதை பொதுத்தன்மையில் குறிப்பிட்டிருக்கிறேன்) என் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்ற போது இவர்கள் செய்த தடங்கல்கள் எத்தனை, ஜாதி மதம் கடந்தவர்கள் என சான்றிதழ் பதிவு செய்ய முயன்ற போது செய்த இடையூறுகள் எத்தனை எத்தனை. என்னுள் நான் எப்படி இருக்கிறேன் என்பது குறித்து கிஞ்சிற்றும் கவலையற்றவர்கள், என் வெளிச்செயல்கள் முஸ்லீம்களுக்குறியதாக இருக்க வேண்டும் என்பதில் காட்டிய தீவிரம் தான் என்னே. ஒரு நிகழ்வை எடுத்தக் காட்டுதல் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். என்னுடைய திருமண தினத்தன்று காலை, அதுவரை நான்கைந்து நாட்களாக என்னுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த என் நண்பர்கள் யாரையும் காணவில்லை. காத்திருந்தேன், நேரமாகிக் கொண்டிருக்கிறது, இனியும் தாமதிக்க முடியாது என்றாகி, நேரடியாக சென்று கேட்ட போது தான் விசயமே விளங்கியது. “நீ எங்களுடன் சேர்ந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதால் தான் நாங்கள் உன் திருமணத்தில் கலந்து கொள்வோம்” என்றார்கள். “நீங்கள் கலந்து கொள்வதுதான் எனக்கு முக்கியமேயன்றி ஒரு மதத்தின் சடங்குகள் முக்கியமல்ல” என்று அவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசலில் தொழுதேன். தன்னை முஸ்லீம் என்று கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாம் என்பது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் எனக்கு தெரிந்திருந்தது, அதனால் தான் என்னால் நண்பர்களுக்காக தொழவும் முடிந்தது. என்னுடைய ஆழம் குறித்து அலட்டிக் கொள்ளாதவர்கள், அடையாளம் குறித்தே கவலை கொண்டார்கள். இன்று அந்த அடையாளிகள் அறிவித்திருக்கிறார்கள் நான் முஸ்லீம் அல்ல என்று. முட்டாள்களா, நீங்கள் நினைத்தால் முஸ்லீம் என்று இருத்திக் கொள்வதற்கும், நினைத்தால் முஸ்லீம் அல்ல என்று விடுவிப்பதற்கும் நான் என்ன உங்கள் முகத்தில் வைத்திருக்கும் மீசையா நினைத்த போதெல்லாம் திருத்திக் கொள்வதற்கு?

அவர்களது பதிவில் சில விவரப் பிழைகளும் இருக்கின்றன. இணையப் பரப்பில் செங்கொடி என அறியப்படும் நான் செங்கொடி, நல்லூர் முழக்கம் எனும் இரண்டு வலைத் தளங்களை நடத்தி வருகிறேன். இறையில்லா இஸ்லாம் எனும் தளம் என்னால் நடத்தப்படுவதல்ல, மட்டுமல்லாது எந்த இணையக் குழுவுக்கும் நான் தலைமை தாங்கவும் இல்லை. இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடரை நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். அது முழுமையாக என்னுடைய தேடல்களின் அடிப்படையில் எழுதப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறும் எதற்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து உங்கள் யாருக்கும் விமர்சனம் இருந்தால் தாராளமாக பதிவு செய்யலாம், விளக்கம் கூறுகிறேன். சுய விமர்சனம் செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன். அதேநேரம் நல்லூர் முழக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆரம்பத்தை நோக்கி எனும் தொடர் என்னால் எழுதப்படுவதல்ல, தஜ்ஜால் என்பவரால் எழுதப்படுகிறது. என்றாலும், அதன் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. அது குறித்தும் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் பதிவு செய்யலாம். நண்பர் தஜ்ஜால் உங்களுக்கு தகுந்த விளக்கமளிப்பார். ஒரு விமர்சனம் எனும் அடிப்படையில் அதன் நிறை குறைகளை ஏற்றுக் கொள்வோமேயன்றி, காட்டுமிராண்டித்தனங்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம், தகுந்த முறையில் எதிர்கொள்வோம்.

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூரில் மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம்

16 மே

 

கடையநல்லூர் கடைவீதியில் இருக்கும் எம்.ஒய்.எம் நூலக அரங்கத்தில் கடந்த 27/04/2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மின்வெட்டு குறித்த அரங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் நாகராசன் கலந்து கொண்டு மின்வெட்டு குறித்து விரிவாக சிறப்புரை ஆற்றினார்.

 

மின்வெட்டு குறித்து அரசு திட்டமிட்டு பரப்பிவரும் பொய்ப் பரப்புரைகள், அதன் பின்னாலிருக்கும் அரசியல், மின் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது? அதற்கு யார் காரணம்? கூடங்குளம் அணு உலையை திறந்தால் மின்வெட்டு சரியாகிவிடுமா? போன்ற பல அம்சங்களை விரிவாகவும், புள்ளிவிபரங்களுடனும், தெளிவாகவும் விளக்கக் கூடியதாக தோழர் நாகராசனின் சிறப்புரை அமைந்திருந்தது. தோழரின் பேச்சை முழுமையாக கீழே இணைக்கப்பட்டிருக்கும் சுட்டியில் கேட்கலாம்.

 

பெருந்திரளான மக்களும், இளைஞர்களும் கலந்து கொண்டு அரங்கம் நிறைந்த கூட்டமாக நடந்தது. வழக்கமாக இது போன்ற கூட்டங்களில் இஷா தொழுகை நேரத்தில் கலைந்து சென்றுவிடும் மக்கள் கூட்டம் இந்த முறை தோழர் முழுமையாக பேசி முடிக்கும் வரை யாரும் கலைந்து செல்லாமல் இருந்து கேட்டது குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.

 

முழுமையான உரையைக் கேட்க இங்கு சொடுக்கவும்

 

 

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் குறித்து…

9 ஏப்

இந்த விவாதத்தின் நான்காவது பகுதியாக மக்களின் மனோநிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை ஆதரவு நிலைகளை விமர்சித்திருக்கிறோம். அதாவது கடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தை அது சரியானது தான் என ஆதரித்து நிற்பவர்களை பார்த்தோம். இப்போது அதற்கு மாற்றமான நிலையில் இருப்பவர்கள், தெளிவாகச் சொன்னால் அது காட்டுமிராண்டித்தனம் தான் எனக் கூறும் எங்களை எதிர்க்காமல் அமைதிகாக்கும் எங்களின் நலம் விரும்பிகளின் மனோநிலையையும் அலசிப்பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

 

பெரும்பான்மையாக எங்களின் உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் இந்த மனோநிலையில் இருக்கிறார்கள்.  இது அவர்கள் மீதான விமர்சனம் அல்ல. என்றாலும், அவர்கள் உளக்கிடக்கையின் தன்மையை, அது என்ன விதத்தில் பிறரிடத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையிருக்கிறது எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது.

 

இந்தப் பிரச்சனையை நாங்கள் அணுவதற்கும் பிறர் அணுவதற்கும் உள்ள பாரிய வேறுபாடு காணும் உரைகல்லில் இருக்கிறது. அது சரியா? தவறா? எனும் அடிப்படையிலிருந்து நாங்கள் அணுகுகிறோம். பிறரோ, அது சாதகமானதா? பாதகமானதா? எனும் அடிப்படையிலிருந்து அணுகுகிறார்கள்.  அதனால் தான் தற்போதைய நிலை எங்களுக்கு பாதகமானது என்பதால் வருந்துகிறார்கள், ஆலோசனைகள் கூறுகிறார்கள், எச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுவது அவசியம்.  எங்களின் தற்போதைய நிலை, அதாவது பிறந்து வாழ்ந்த ஊரிலிருந்து தனிமைப் பட்டிருப்பது, ஊராரின் புரிதலற்ற தண்டனைகளுக்கு ஆட்பட்டு நிற்பது போன்றவை எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக எந்த விதத்திலும் நாங்கள் கருதுவதில்லை. வாழ்க்கை எனும் சாலையில் ஏற்படும் திருப்பங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் அவ்வளவு தான். எங்கும், எப்படியும் எங்களால் வாழ முடியும். ஏனென்றால் அடிப்படையில் நாங்கள் சர்வதேசியவாதிகள். அதனால் தான் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் நடந்தது தவறானது என்று எங்களால் உறுதியாக நிற்க முடிகிறது.

 

ஆனால் எங்களின் நலம் விரும்பிகள் இதை இவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. இப்படி ஆகிவிட்டதே என்று கைசேதப் படுகிறார்கள். எந்த வகையிலாது இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் நடந்தது சரியா? தவறா? எனும் கேள்விக்குள் அவர்களால் புகுந்து செல்ல முடியவில்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த அவலம் ஏன் நேர்ந்தது?, அப்படி நேர்ந்ததற்கான கூறு தங்களுக்குள் இருக்கிறதா? எனும் சிந்தனைக்கு அவர்களால் வர முடியவில்லை. ஆம். அந்தக் கூறு எங்களுக்கு நெருக்கமானவர்களான இவர்களிடமும் இருக்கிறது.

 

தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாதிப்பு எனும் தளத்தின் மேல்தான் இவர்களுடைய எங்களுக்கான ஆதரவு நின்று கொண்டிருக்கிறது. நெருக்கமானவர்களாக இல்லை என்றால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடு என்று கூறியிருக்கக் கூடும். “எங்கள் உயிரிலும் மேலான நபிகளை கேவலப்படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை” என்று பின்னூட்டம் எழுதியவரின் உறவினர் ஒருவர் இப்படி இருந்திருந்தால் நிச்சயமாக அப்படி ஒரு பின்னூட்டத்தை அவரால் எழுதியிருக்க முடியாது. கைசேதப்பட்டிருக்கவும் கூடும். இதில் இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அவர்களின் கருத்தியலில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லாதது தான் காரணம். கருத்தியல் ரீதியாக இருவருமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தாம், நடைமுறையில் மட்டுமே சற்று வேறுபாடு. இதுவும் ஒருவகையில் சுயநலம் தான்.

 

அடுத்து எங்களின் நலம் விரும்பிகள் முன்வைக்கும் ஓரிரு அறிவுரைகளையும் பார்த்துவிடலாம். ஊரொடு ஒட்ட ஒழுகல் என்பது ஏற்றுக் கொள்ளத் தகாததா?

“உலகத்தொடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவி லாதார்” என்பது திருக்குறள். இதுமட்டுமன்றி பல்வேறு பழமொழிகளும், சொலவடைகளும் ’உலகொடு ஒட்டி ஒழுகலுக்கு’ மாறாக செயல்பட வேண்டாம் என வலியுறுத்துவதாக இருக்கின்றன. அதேநேரம் இதற்கு எதிரான நிலை கொண்ட பழமொழிகளும், சொலவடைகளும், வழக்காறுகளும் இருக்கவே செய்கின்றன.

“சொல்லுக சொல்லை பிரிதொருசொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு”

”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” இவைகளும் திருக்குறள் தாம். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

 

எந்த ஓர் அனுபவக் குறிப்பையும் அநீதிக்கு ஆதரவாக ஒருபோதும் கொள்ளக் கூடாது. கடையநல்லூரில் நடந்தது அநீதியா? இல்லையா? என்ற பார்வையிலிருந்து இதை அணுகுவது தான் சரியானதாக இருக்க முடியும். அந்தக் கேள்விக்குள் நுழையாமலேயே ஊரே அப்படித்தான் ஒழுகுகிறது எனவே நீயும் அப்படியே ஒழுகு என்பது பக்கப்பட்டை கட்டிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவனின் கோணத்தை மறுக்கும் அராஜகப் போக்கவும் அது இருக்கும் என்பதையும் உணர வேண்டும். சரி, ”இந்த உலகொடு ஒட்ட ஒழுகல்” என்பதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்களா? எண்பதின் முற்பகுதிகளில் தர்கா கலாச்சாரமே ஒட்ட ஒழுகலாக இருந்தது. அதை ஏன் இவர்கள் மறுத்தார்கள்? ஆக ஒட்ட ஒழுகல் என்பதைத் தாண்டி சரியா? தவறா? எனும் பார்வையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது(அது சரியான பார்வையா என்பது வேறு விசயம்). அந்த பார்வையைக் கொண்டுதான் உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறையாக இருந்த தர்கா கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அந்த அளவுகோலை ஏன் இந்த விசயத்தில் பயன்படுத்த மறுக்கிறார்கள்? ஏனென்றால் இது அவர்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதேவேளை நீ செய்தது தவறு என்று உறுதியாக நின்று சுட்டிக் காட்டவும் முடியவில்லை. அதனால் தான் அவர்களுக்கு ‘ஒட்ட ஒழுகல்’ எனும் முக்காடு தேவைப்படுகிறது. நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

என்ன தான் நீ கூறுவது சரியாக இருந்தாலும் ஊரே எதிர்த்து நிற்கும் போது அதற்கு பணிவது தானே சரியான அணுகுமுறை? இல்லை. தனக்கு ஏற்பில்லாத ஒன்றை ஊர் ஏற்று நிற்கிறது என்பதற்காக சரியான நிலைப்பாட்டை விட்டு மாறுவது பிழைப்புவாத அணுகுமுறை. ஊரே ஏற்று நிற்கும் ஒன்றை கருத்தியல் ரீதியாக தவறு என்று உணரும் போது அணுக்கமான செயலுத்திகள் மூலம் அதை ஊருக்கு புரியவைக்க முயலலாம், அதில் தவறில்லை. இந்த அணுக்கத்தை நான் எழுதும் தொடர் நெடுக நீங்கள் காணலாம். ஆனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை பிழைப்புவாதிகள் மட்டுமே செய்யமுடியும். சரி, இந்த ஊரே எதிர்த்து நிற்கிறது என்பதை எல்லாவற்றுக்கும் இவர்கள் பயன்படுத்துவார்களா? இன்று ஈரான் விசயத்தில் அமெரிக்கா எடுத்து வரும் அராஜக, மேலாதிக்க நடவடிக்கைகள் அனைவரும் அறிந்தது தான். ஊரே எதிர்த்து நிற்கிறது எனும் அளவுகோலை பயன்படுத்தி அமெரிக்கவிடம் பணிந்து போக முயலுங்கள் என்று ஈரானிடம் இவர்கள் கூறுவார்களா? இன்று ஈரான் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வெகுசில நாடுகள் கூட எதிர் அரசியல் நிலைப்பாட்டில் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களை மனதில் கொண்டே ஆதரவு நிலை எடுத்திருக்கின்றன. ஐநா அமைப்பு தொடங்கி பன்னாட்டு நிதியியல் அமைப்புகள் ஈறாக ஈரானை எதிர்க்கின்றன. இந்த பலத்துடன் ஒப்பிட்டால் ஈரானும் அதற்கான ஆதரவும் ஒன்றுமே இல்லை. இந்த நிலையில் ஈரான் குறித்த இவர்களின் மதிப்பீடு என்ன? உலகமே எதிர்த்து நிற்பதால் அமெரிக்காவிடம் பணிந்து போக வேண்டும் என்று விரும்புவார்களா? ஊரே எதிர்த்து நின்றாலும் ஈரானுக்கு ஆதரவான தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரென்ன உலகமே எதிர்த்து நின்றாலும் ஈரான் விசயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் கடையநல்லூர் விசயத்தில் ஏன் பயன்படாது? நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

அடுத்து, என்னை சற்றே வருத்தம் கொள்ள வைத்த ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர், என் கையை பிடித்து முதன் முதலில் ‘அ’ எழுத சொல்லித்தந்தவர், என்னுடைய கருத்தியல் வளர்ச்சியின் ஒவ்வொரு அலகையும் அருகிருந்து கவனித்தவர், சில போதுகளில் உற்சாகம் தந்தவர் அண்மையில் என்னுடைய தாயாரை அழைத்து, “நீ ஒழுங்காக வளர்க்காததால் தான் அவன் இப்படி ஆகி விட்டான்” என்று திட்டியிருக்கிறார். அதிர்ச்சியாக இருந்தது. இன்று நான் கொண்டிருக்கும் கொள்கை உறுதி, சமூகத்தின் மீதான பற்றார்வம் போன்றவை எல்லாம் வெறும் வளர்ப்பில் நேர்ந்த பிழை தானா? என்னை சிறு வயதிலேயே அடித்து ஒடுக்கி ஊரோடு ஒட்ட வளர்த்திருந்தால் நான் இன்று மனிதனாகி இருந்திருப்பேனா? நான் மனிதனா இல்லையா என்பதை கேவலம் ஒரு மதத்தின் நடத்தைகளா தீர்மானிப்பது? என்னிடம் பேசும் போது நேரடியாக என்னை விமர்சிக்காமல் என்னின் பாதிப்புகள் குறித்து மட்டுமே பேசியதை என்மீதான பாசம் என்றுதான் இப்போதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் தாயாரிடம் பேசும்போது நீங்கள் வேறு முகம் காட்டியிருக்கிறீர்களே. எது உங்கள் மெய்முகம் என்பதை அடையாளம் காட்ட நீங்கள் உதவினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் என்னை அருகிருந்து கவனித்து வந்திருக்கும் நீங்கள் இதை வளப்புக் கோளாறு என்று எண்ணியிருக்கிறீர்கள் என்றால்; இதுவரை நான் பார்த்த நீங்கள் திடீரென்று நான் பார்க்காத நீங்களாய் மாறியிருக்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

 

தெளிவாக ஒன்றைக் கூறவிடலாம். நாங்கள் விமர்சனம் சுயவிமர்சனத்தை மூச்சாக கொண்டிருப்பவர்கள். எங்களை மாற்ற வேண்டும் என எண்ணினால் அது வெகு எளிது. நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்படு தவறானது என்பதை உணர்த்திவிட்டால் போதுமானது. தவறான நிலைப்பாட்டில் நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்புவதில்லை. மாறாக,  சமுகரீதியான பார்வைக்கு அப்பாற்பட்டு எங்களை மாற்ற நினைத்தால் அது வெகு கடினம். ஊரல்ல, உலகமே எதிர்த்தாலும் பிழைப்புவாதியாய், காரியவாதியாய் நாங்கள் சுருங்க முடியாது. இதை நாங்கள் பெருமையாகவே அறிவித்துக் கொள்கிறோம்.வெறுமனே உங்கள் உறவினர்கள் மட்டுமல்ல, நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

 

முதல் பதிவு: செங்கொடி

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் – விவாதம் தொடர்கிறது

23 மார்ச்

இதன் முந்தைய பகுதிகளை படிக்க

 

இந்த விவாதத்தின் மூன்றாவது பகுதியாக சில இணைய மத பரப்புரையாளர்களின் பொய்யும் புனைச் சுருட்டுகளும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலில் மனிதாபிமானி என்ற பெயரில் வேறு ஏதோ ஒன்றின் அபிமானியாக இருக்கும் பதிவைப் பார்க்கலாம். அந்த பதிவை படிக்க இங்கு சொடுக்குங்கள்.

 

வினவு கட்டுரையில் தோழர் துராப்ஷா மன்னிப்பு கேட்டார். அதாவது மன்னிப்பு கேட்கவைக்கப்பட்டார் என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.மட்டுமல்லாது பின்னூட்ட விவாதங்களிலும் அவரிடமிருந்து எப்படி மன்னிப்பு பெறப்பட்டது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதையோ மறைத்து விட்டதாய் விளம்புகிறார்கள். எதையும் மறைக்காத நிலையிலேயே மறைத்து விட்டதாய் புழுகியவர்கள், தங்கள் பதிவில் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் எழுதினார்களா? \\\ இவரின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு எதிராக இருந்ததால், அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இவர் இறைநிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டார். துராப்ஷாவிடம் இது சம்பந்தமாக கையெழுத்தும் வாங்கிக்கொள்ளப்பட்டது /// வெறுமனே இறை நிராகரிப்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரா? ”உன்னுடைய எந்த விளக்கமும் தேவையில்லை. மன்னிப்பு கேட்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையும் உன் வாயிலிருந்து வெளிவரக் கூடாது” என்று குடும்பத்தாரால் மிரட்டப்படவில்லையா? வேறு வழியில்லாமல் சரி என்று சம்மதித்து மன்னிப்பைக் கேட்கவந்தால் அதையும் கூட கேட்கவிடாமல் தாக்குதல் தொடுக்கப்படவில்லையா? பொய்யாக என்றாலும் குற்றம் சாட்டப்பட்டவரிடம் எந்த விசாரணையும் செய்யாமல் ஏற்கனவே எழுதி கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் கையெழுத்து வாங்கப்படவில்லையா? இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ’அறிவிக்கப்பட்டார்’ என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து சென்றது ஏன்? அல்லது எந்த அயோக்கியர்களைக் காப்பாற்ற?

 

தோழர் துராப்ஷா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கட்டுரையை முகநூலில் அவர் பகிர்ந்தது காரணமல்ல, அரசியல் ரீதியாக அவர் செயல்பட்டதின் எதிர்விளைவு தான் என்பதை தெளிவாகவே நிருவியிருக்கிறேன். கேள்விகள் எழுப்பப்பட்டால் இன்னும் விரிவாக நிரூபிக்க காத்திருக்கிறேன். ஆனால் இந்த அபிமானிகளோ காழ்ப்புணர்வு எனும் ஒற்றைச் சொல்லில் கடந்து செல்கிறார்கள். முகநூலில் பகிர்ந்தது தான் காரணம் என்றால், இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அறியப்பட்டபோதே ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இன்றும் கடையநல்லூரில் எத்தனையோ இளைஞர்கள் நாத்திக கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளை பேசிவருகிறார்கள். ஏன் மேடைகளில் கூட முழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லையே. இவ்வாறிருக்க தோழர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட மர்மம் என்ன? அதுவும் முதலில் அவரது கடையில் வாங்காதீர்கள் என்று பள்ளிவாசலில் அறிவிப்பு அது செல்லுபடியாகவில்லை என்றதும் கடையில் குழப்பம் செய்து காவல்துறையில் முறையீடு செய்யப்பட்டது. அதிலும் தோழரின் விளக்கங்களுக்கு பதில் கூற முடியவில்லை என்றதும் ஜமாத்தார்கள் உலாமாக்கள் மூலம் நடவடிக்கை. இது ஏன்? பதில் கூற முன்வருவார்களா அபிமானிகள்?

 

அடுத்து போட்டி மனப்பான்மையால் வெளிப்பட்ட அரசியல் குறித்தும் எழுதப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில் இதை முட்டாள்தனமானது என்று கூறியிருக்கிறார்கள் அபிமானிகள். கூடவே, புத்திசாலித்தனமான கேள்வி ஒன்றையும் எழுப்பியிருக்கிறார்கள். \\\ இப்போது துராப்ஷா முஸ்லிமாகிவிட்டார். இந்த ஜமாஅத்தினர்கள் இதனை எதிர்க்க போகின்றார்களா?  /// இந்தக் கேள்விக்கும், போட்டி அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?அந்த ஊரில் போட்டி அரசியல் தான் நிலவில் இருக்கிறது என்பதற்கு கட்டுரையிலேயே எடுத்துக்காட்டுகள் கூறப்பட்டிருக்கிறது மறுக்க முடியுமா அபிமானிகளால்? நடந்தது போட்டி அரசியல், அதனை அறுவடையும் செய்து கொண்டார்கள். இப்போது சேர்ந்ததை மறுப்பதால் யாருக்கு லாபம். லாபம் இருக்கிறது என்றால் அதையும் செய்வார்கள். பதில் எழுத அபிமானிகள் தயார் என்றால் முன்னிலும் அதிகமாக விளக்க நானும் ஆயத்தமாக இருக்கிறேன்.

 

அதுசரி பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது எழுதாமல் இப்போது ஏன் எழுதுகிறோம். இதற்கு ஏற்கனவே பதில் எழுதப்பட்டிருக்கிறது. தோழரை, தோழரின் குடும்பத்தினரை, தோழரின் உடமைகளை காக்கும் கடமை எங்களுக்கு இருந்தது. அப்போதே எழுதியிருந்தால் கொலைக்கும் அஞ்சியிருக்க மாட்டார்களே இந்த பயங்கரவாதிகள்?

 

இந்த இடத்தில் இன்னொரு விளக்கமளிக்க வேண்டியதும் தேவையாகிறது. அபிமானிகளின் பதிவு வெளிவந்த நேரத்தில் அவர்களுக்கு நான் பதிலளித்திருந்தேன். ஆனால் அது வெளியாகவே இல்லை. வினவில் வெளிவந்த அந்த பின்னூட்டம் இங்கே. வழக்கமாக இது போன்ற பின்னூட்டங்களை நான் சான்றுகளுக்காக படமெடுத்து வைப்பது வழக்கம். அன்றிருந்த சூழலில் இதை படமெடுக்க மறந்துவிட்டேன். அப்படி படமெடுத்து வைத்திருந்தால் இன்று இவர்களின் கள்ளத்தனங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம். தவறிவிட்டேன். இதையே சாக்காக வைத்து அதில் எழுப்பபட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார்கள் இந்த அபிமானிகள். அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள் \\\ எவ்வளவு குரூர மாணவனிடம் வேண்டும் என்றாலும் மோதலாம். ஆனால் பொய்யர்களிடம் மோதி வென்றோ அல்லது தோற்றோ ஆகப்போவது ஒன்றும் இல்லை. ஆகவே, விடு ஜூட்……. /// இவர்களின் சான்றிதழ்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பதாலும், இவர்களிடம் பதில் வாங்க வேண்டும் எனும் ஆவலிருப்பதாலும் ஒரு வாதத்திற்காக நான் அவர்கள் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்றே கொள்வோம், கேள்விகளுக்கு பதில் கூறத் தயாரா இந்த அபிமானிகள்? (அந்தப் பதிவை எழுதிய அபிமானிகளுள் ஒருவர் இதுபோன்றே முன்பு என்னுடைய பின்னூட்டத்தை தடுத்துவைத்து தகிடுதத்தங்கள் புரிந்தார். அது இப்போது பேசப்படும் விசயங்களுக்கு வெளியிலுள்ள விசயம் என்றாலும் ஒரு தகவலுக்காக அந்த பதிவை இங்கே சொடுக்கி படித்துப் பார்த்துக் கொள்ளலாம்)  துணிவு உள்ளவர்கள் பதில் கூறட்டும். பார்க்கலாம் அவர்களின் நேர்மையை.

 

அடுத்து ஷேக்தாவூத் எனும் ஜோக் தாவூத் என்பவர் தொடர்பில்லாத வேறொரு விடயத்தோடு முடிந்திருக்கிறார். நாங்கள் கூறிய புகார் பொய்யானதல்ல என்பதற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து சம்மந்தப்பட்ட இஸ்லாமியரை உள்ளே தள்ளியிருக்கிறோம் என்பதே சான்று. இணையத்தில் அவதூற்றை கழிந்தவர்கள் அது உண்மை என நம்பினால் எங்கள் தோழர் மீது காவல் துறையில் புகார் அளிக்கட்டும். நாங்கள் சந்திக்கத் தயார். திராணி இருக்கிறதா இவர்களுக்கு? நேரடி நேரடி என்று பீலா விடும் எவரும் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டு கூறியிருக்கிறேன். அறிவு நாணயம் இருப்பவர்கள் எதிர் கொள்ளலாம்.

 

அடுத்து ஜிட்டிஜன் என்பவர் ஜோக் என்றும் பயங்கரவாதம் என்று ஏதேதோ எழுதியிருக்கிறார். அதை படித்து பொருள் புரிந்து கூறுபவர்களுக்கு பரிசு வழங்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு குழப்பம். எதை ஜோக் என்கிறார்? எப்படி பயங்கரவாதம் என்கிறார்? அவருக்கே புரிந்திருந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார் ஏன் போலீஸுக்கு போகவில்லை என்று. அவர் முகத்தில் படியும் கரியை எப்படி துடைத்துக் கொள்வார் என்று விளக்கினால், போலீசுக்கு போகக்கூடாது என்று குடும்பத்தார்கள் மிரட்டியதால் தான் போகவில்லை என்பதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார். இது மட்டுமல்லாது, சங்கர்லால் போல துப்பறிந்து ஒரு விசயத்தையும் எழுதியிருக்கிறார். நடந்த நிகழ்வு அன்றே எனக்கு தெரியும் என்பதும், வினவு கட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை தான் ’பத்திக்கிச்சு’ என்று எழுதியிருப்பதும் எப்படி எந்த விதத்தில் முரண்படுகிறது? இது எப்படி பொய்யாகும் விளக்க முடியுமா? உளறல் என்பதற்கான மெய்ப்பொருள் வேண்டும் என யாராவது தேடினால் இவரின் இந்த கண்டுபிடிப்பை பரிந்துரை செய்யலாம்.

 

அடுத்து அப்துல்லா என்பவர், அமைதியான ஊரை, கண்ணியமான மக்களின் கூட்டமைப்பை என்று உருகியிருக்கிறார். ஆனால் எது அமைதி? கண்ணியம் எங்கிருக்கிறது என்பதை மட்டும் பரிசீலனை செய்ய மறுக்கிறார். ஒரு கருத்தை ஆதரிப்பதும் ஒதுங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் எதை பொய் என்று கருதுகிறார் என்பதை அவர் வெளிப்படுத்தலாமே. அப்போதல்லவா தெரியும் எது பொய் எது உண்மை என்று. ஒதுங்கி ஓடினால் உண்மைகளை உணர முடியாது.

 

அபிமானிகளின் இந்த பதிவில் தங்கள் கருத்துகளை பின்னூட்டிய கார்பன் கூட்டாளி, ஷேக்தாவூத், முகம்மத் ஆஷிக், சிராஜ், சுவனப் பிரியன், அப்துல்லா ஆகியோர் என்னுடைய இந்த எதிர்வினை குறித்த பதில்களை தந்தாக வேண்டும். அப்படி அவர்கள் பதில் தராத பட்சத்தில் எந்த சிந்தனையுமற்ற மூடநம்பிக்கை மதவாதிகள் என்றே கருதப்படுவார்கள்.  ஏனென்றால், அநீதி என்று தெரிந்து கொண்டே அதை ஆதரிப்பவன் மூடநம்பிக்கை கொண்டவனாகத்தான் இருக்க முடியும் அல்லவா? எனக்கு ஹைதர் அலி என்றொரு நண்பர் உண்டு, அவர் என் கருத்துகளின் நண்பர் இல்லை என்றபோதிலும் எதிரி இல்லை என்பதையும் உணர்த்தியவர். இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நான் விரும்புபவர்களில் அவரும் ஒருவர். ஆனால் இதுவரை அவர் மௌனமாகவே இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய கருத்தை பதிய வேண்டும் எனும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

 

அடுத்ததாக நாம் பார்க்கவிருக்கும் தளம் கடையநல்லூர்.ஆர்க். கடையநல்லூர் தளங்களிலேயே அதிகம் கவனம் பெறும் தளம். என்னுடைய மாற்றுக் கருத்துகளையும் ஓர் எல்லை வரை அனுமதித்தார்கள் எனும் வகையில் குறிப்பிடத்தக்கதாய் இருந்தாலும், இந்த விசயத்தில் தொடக்கத்திலிருந்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அப்பட்டமாக குறுகிய மதவெறியை கொண்டதாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் நடந்த அநீதியை மறைத்து அதை மதவாத நோக்கில் சரிக்கட்டும் விதமாகவே அமைந்திருந்தது. மட்டுமல்லாது கடையநல்லூரைச் சேர்ந்த பலர் மதக் கொழுப்பு வழிந்தோட இட்ட பின்னூட்டங்களையெல்லாம் பல நாட்களாக வைத்திருந்துவிட்டு வினவில் அது குறித்த கட்டுரை வெளிவந்த பின்னர் கள்ளத்தனமாக அந்த பின்னூட்டங்களை நீக்கி விட்டார்கள். இது அவர்களின் நேர்மையற்ற போக்கிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு. இதன் பின்னரும் கூட என்னைப்பற்றிய செய்திகளை கிசுகிசுக்களாக வெளியிடுவதில் முனைப்பு காட்டினார்கள். அவற்றில் ஒன்றிரண்டிற்கு நான் பதில் எழுதியதும், நான் அவ்வாறு பதில் எழுதக் கூடாது என்பதற்காகவே தங்கள் தளத்தில் முகநூல் கணக்கில் பின்னூட்டமிடும் வசதியையே நீக்கிவிட்டார்கள். இது அவர்களின் காழ்ப்புணர்வை வெளிப்படுவதாகாதா? அது மட்டுமன்றி என்னை குறிவைத்து எழுதப்பட்ட பதிவுகளுக்கு நான் மறுப்பு எழுதி அனுப்பியபோது அதை வெளியிட மறுக்கிறார்கள், இது இந்திய அவதூறு சட்டப் பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை பெறத்தக்க குற்றம் எனும் அறிதல் கூட இல்லாமல். இவைகளெல்லாம் நேர்மைக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டும் கருவிகள்.

 

கடைசியாக ஒரு பெரியவர். கவிஞர், கவியரங்குகளிலும், பொது மேடைகளிலும் தன் கவிதைகளை வாசித்தவர். கடல்கடந்த எழுத்தாளுமைகளுடன் தொடர்பு கொண்டிருப்பவர். ஆனால் அவருடைய எழுத்தின் ஆளுமையை தெரிந்து கொள்ள இதை படித்துப் பாருங்கள். \\\ USING YOUR RIGHTS YOU HAVE NO RIGHT TO SAY YOUR FATHER AND MOTHER AS BASTARD,. SIMILARLY YOU HAVE NO RIGHT TO EXPRESS ABUSES AGAINST A RELIGION.IF YOU TAKE THE RIGHTS IN YOUR HAND I CAN CALL YOUR WIFE AND MOTHER AS PROSTITUTE. IF I SAY THIS YOUR BLOOD WILL BE BOILING. ISNT ? OUR RELIGION ISLAM IS MORE THAN OUR SOUL, MOTHER AND WIFE. IF YOU ABUSE OUR BLOOD WILL BOIL. IT IS QUIET NATURE. YOU CAN NOT SAY IT AS BRUTAL AND BARBARISM./// இது கடையநல்லூர் பிரச்சனை குறித்து கூகுள் பிளஸில் அவர் எழுதியது. இவர் வேறு யாருமில்லை. இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதமே என்று என்னுடன் விவாதிக்க வந்து விட்டு முடியாமல் பாதியிலேயே ஓடிப் போனவர். ஐயா ரத்தம் கொதிக்கும் அளவுக்கு என்ன எழுதப்பட்டிருந்தது என்று பலமுறை கேட்டாயிற்று. பதில் கூறுவதற்கு நாதியில்லை. ஆனால் இவர்கள் ரத்தம் மட்டும் கொதித்துக் கொண்டே இருக்குமாம். போங்கையா நீங்களும் உங்கள் ரத்தக் கொதிப்பும். சீக்கிரமாக மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் ஆண்டவன் உங்களுக்கு எழுதிய தேதி சீக்கிரமே வந்துவிடப் போகிறது.

 

ஒன்றை கவனிக்கலாம். வெட்டணும், கொல்லணும், புண் பட்டு விட்டது, கருத்துரிமையின் எல்லை  என்றெல்லாம் கதை பேசியவர்கள் வாருங்கள் அது குறித்து பேசுவோம் என்றதும் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். வந்த சிலரும் கூட பேசவேண்டியதைப் பேசாமல் காணாமல் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்தை மட்டும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வார்கள். என்றால் அதன் பொருள் என்ன? தாங்கள் மத வெறி பிடித்தவர்கள் என்பதையும், கடையநல்லூரில் நடந்தது காட்டுமிராண்டித்தனமானது என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள் என்பது தான். ஆனால் இது ஆவணமாக பாதுகாக்கப்படப் போகிறது. பல ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும் யாரும் உங்கள் மதவெறியின் மீதும் நேர்மையின்மையின் மீதும் காரி உமிழ்வார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

 

பின் குறிப்பு: இந்தப்பதிவு இத்துடம் முடிவடைவதைப் போன்ற தோற்றம் வந்திருக்கிறது என்றாலும் முடிந்துவிடவில்லை. இதில் இன்னும் பல விசயங்கள் பேசப்பட வேண்டியதிருக்கிறது என்பதால் தொடரும்.

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

20 ஜன

 

பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான,

மனித குலத்திற்கு எதிரான

கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!

ஆர்ப்பாட்டம்

நாள்:         21.1.2012 சனிக்கிழமை

நேரம்:        காலை 10 மணி முதல் 1 மணி வரை

இடம்:        ஜவகர் திடல், பாளை தினசரி சந்தை, திருநெல்வேலி

 

தலைமை:

வழக்குரைஞர். சே.வாஞ்சிநாதன்,

மதுரை மாவட்ட துணைச் செயலாளர், ம.உ.பா மையம்

கண்டன உரை:

வழக்குரைஞர். சி.ராஜூ,

மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா மையம், தமிழ்நாடு.

தோழர். காளியப்பன்,

மாநில இணைப் பொதுச் செயலாளர், ம.க.இ.க

பேராசிரியர். தொ.பரமசிவன்,

மேனாள் தமிழ்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை.

பேராசிரியர். வே.மாணிக்கம்,

மேனாள் தமிழ்துறைப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, பாளையங்கோட்டை.

வழக்குரைஞர். இரா.சி.தங்கசாமி,

மேனாள் நெல்லை வழக்குரைஞர்.சங்கத் தலைவர்

வழக்குரைஞர். ஜி.ரமேஷ்,

நெல்லைமாவட்டக் குழு உறுப்பினர், இந்திய பொதுவுடமைக் கட்சி(மா.லெ) விடுதலை.

வழக்குரைஞர். செந்தில்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, நெல்லை.

வழக்குரைஞர். சிவசுப்பிரமணியன்,

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், நாகர்கோவில்.

திரு. மா.விஜயக்குமார் பாக்கியம்,

நெல்லை மாநகர மாணவரணி செயலாளர், மதிமுக.

பேராசிரியர். அமலநாதன்,

நெல்லை.

தோழர். தமிழீழன்,

நெல்லை.

ஓவியர். புருஷோத்தமன்,

மே பதினேழு இயக்கம், நெல்லை.

 

புரட்சிகர கலை நிகழ்ச்சி: ம.க.இ.க மைய கலைக் குழு.

 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,

தூத்துக்குடி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

வழக்குரைஞர். க.சிவராசபூபதி,

கன்யாகுமரி மாவட்ட செயலாளர், ம.உ.பா மையம்.

 

 

  • கூடங்குளம் அணு உலைகட்டப்பட்டது நாட்டின் மின்சார தேவையினை பூர்த்திசெய்வதற்கு அல்ல; பன்னாட்டு அணு உலைமுதலாளிகளின் இலாபத்திற்காகவும், அணுகுண்டு – வல்லரசு கனவிற்காகவும் தான்.
  • தமிழக மக்களுக்கும், சிறு தொழிலுக்கும் மின்வெட்டு; பன்னாட்டு நிறுவனங்களுக்கோ தடையில்லா சலுகைவிலை மின்சாரம் – இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை! கூடங்குளம் மின்சாரம் தமிழக மக்களுக்கும் சிறு தொழிலுக்கும் என்பது அப்பட்டமான பொய்!
  • காற்றாலை, கடலலை, சூரிய ஒளி, குப்பை கழிவு என  எண்ணற்ற மாற்று மின்சாரத் தயாரிப்பு முறைகள் இருக்கும் போது, கடலோரங்கள் முழுவதும் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் அணு உலைகள் அமைக்கப்படவுள்ளது அன்னிய முதலாளிகளின் லாபத்திற்காகவே!
  • அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பான், இரஷ்யா என அனைத்து நாடுகளும் அணு உலைகளி மூடிவரும் நிலையில், அணு உலைகளை அவர்களிடமிருந்து இறக்குமதி செய்து இந்தியாவெங்கும் அமைப்பது பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் குப்பைக் கூடாரமாக இந்தியாவை மாற்றியமைக்கவே!

தமிழக அரசே!

  • கூடங்குளம் இடிந்தகரை போராட்டக் குழுவினர் மீது அரசு துரோக குற்றச்சாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறு!
  • 156 பொய் வழக்குகளை பதிவு செய்துவிட்டு போராடும் மக்களை ஆதரிப்பது போல் நடிக்காதே!
  • சிறு தொழிலுக்கும், வீட்டு உபயோகம் – விவசாயத்திற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கு!
  • பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஐடி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் சலுகை விலை மின்சாரத்தைரத்து செய்!

மத்திய அரசே! அணுசக்தி கழகமே!

  • அணு உலை பாதுகாப்பானது என்று பொய்ப் பிரச்சாரம் செய்ய மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப்பணத்தை பயன்படுத்தாதே!
  • பொய் – அவதூறு பிரச்சாரத்தை உடனே நிறுத்து!
  • அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை, இரஷ்ய இந்திய கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தை இரத்து செய்!
  • கூடங்குளம், கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளையும்மூடு!
  • மாற்றுமின்சாரத் தயாரிப்பு முறைகளை உடனே செயல்படுத்து!

மனித உரிமை ஆர்வலர்களே! பொது மக்களே!

  • தங்கள் வாழ்வினை பாதுகாக்க கூடங்குளம் – இடிந்தகரை மக்கள் போராடுவது வாழ்வுரிமைக்கான போராட்டம்!
  • அவதூறு, அச்சுறுத்தல், அடக்குமுறை என அவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு முனைவதை எதிர்க்க வேண்டியது நம் கடமை!
  • அணு உலை பாதுகாப்பானது என்ற அப்துல் கலாம் மற்றும் அணு உலைக் கழக நிர்வாகிகளின் ஆதாரமற்ற,னேர்மையற்ற பிரச்சாரத்தை புறந்தள்ளுவோம்!
  • மக்களின் உயிருக்கு தலைமுறை தலைமுறையாய் பேராபத்தை விளைவிக்க உள்ள கூடங்குளம் அணு உலை திறக்கப்படுவதை அனுமதியோம்!

 

 

புமாஇமு-வின் “நாட்காட்டி-2012”

12 ஜன

நினைவுகூற வேண்டிய சிறப்பு நாட்கள்,

பாட்டாளி வர்க்க ஆசான்களின் மேற்கோள்கள்

போன்றவைகள் உள்ளடங்கிய 2012 ஆம் ஆண்டின் நாட்காட்டியினைபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தயாரித்து வெளியிட்டு உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( அரங்கு எண்: 404-405) கிடைக்கிறது.

விலை –  ரூ 20

முதல் பதிவு: புமாஇமு