தொகுப்பு | சிறுகதை RSS feed for this section

இது கதையல்ல…

14 டிசம்பர்

அப்பவெல்லாம் இது மாதிரியான வசதிகள் இல்லாத ஒரு வறுமையான சூழல் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் தான் என் சின்ன வயசுக் காலம். நானும் சேர்ந்து எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பேரு. அரிசிச்சோறு அப்ப கொஞ்சம் அரிது…வீட்டில் தறி நெசவு வாப்பாவும் உம்மாவும் என் தாத்தா (அக்கா) வுமாக சேர்ந்து காலை நான்கு மணிக்கு மிதிக்க ஆரம்பிக்கும் பலகை சட்டக் சட்டக் என பின்னிரவு வரை ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு அந்தத் தறியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் அதன் ஒளியிலும் தொடரும்…

 

வாங்கு சொல்லியாச்சா என்று அந்த மூமின்கள் வாழும் பகுதியில் அதிகாலையில் எழும் அந்தக்கேள்வியில் ஒளிந்திருப்பது தொழுகைக்கான ஆவல் அல்ல பாவு விரிச்சுக்கட்டவும் பாவ போடவும் தான்…

 

அந்தக் காக்குழியில் ( ஆள் நின்று தறியிழுக்கும் பள்ளம் ) வாப்பா வின் உள்ளமை இப்பவும் மனதில் பிரேமில் இட்ட படமாய் உள்ளது…கடின உழைப்பாளி கடும் கோபம வரும். எங்க அண்ணன் அலி தான் வீட்டில் ரண்டாவது அவனுக்கு நெறைய படிக்க ஆசை அதனால வாப்பாவும் அவனை படிக்க வைக்க அரும்பாடு பட்டார்… அலியண்ணன் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். நானும் தான் என்வகுப்பில் நல்ல படிக்கிறவன். ஆனால் வாப்பா ஆறாவதிலேயே என்னை பாவு முடியச்சொல்லி அனுப்பிவிட்டது.. அண்ணன் படிப்புக்கு நாம எல்லாரும் ஒத்தாசை பண்ணனும் அப்படின்னு சொல்லிரும்…..காலையில் சென்று நண்பனும் நானும் பாவுல ஆளுக்கு ஒரு புறமாக இருந்து சீவி முடியுவோம் இழைகளை. பாடல்கள் பாடிக் கொண்டும் படக்கதைகளைப் பேசிக்கொண்டும் சுமார் எட்டு மணி நேரம் குறுக்கு வளைச்சு நிமிரும்போது வலிக்கும்….கிடைக்கும் அந்த ஒன்னாரூவா காசு வலியை மறக்கச்செய்யும்… வரும்போதே வாப்பா வேற ஆபர் குடுப்பார் சில நேரம் சாப்பாடு போக மிதி நேரம் முழுக்க ராத்திரி பதினொரு மணி வரையில எல்லாம் முடியுவோம்…பெரும்பாலும் சோளக்காடியும் வெங்காயமும் தான்..

 

அண்ணனும் பெரிய பத்து முடிச்சு பியூசி யும் படிச்சிட்டு காலேஜில பெரிய என்ஜினியர் படிக்க சேந்து அப்ப அப்ப ஊருக்கு வரும் வந்தால் லைப்ரரி மற்றும் சங்கம் போல இடங்களில் தான் முழுக்க தங்கும்…எங்கள்ட்ட அவ்ளவா பேசாது நல்ல ட்ரஸ் பண்ணிட்டு எங்க கண்ணுலே வராம அப்படியே விடுமுறைய கழிச்சிட்டு திரும்ப போயிரும்… வாப்பாட்ட கேட்டதுக்கு…ஏல அவன் படிச்சவன் அவனுக்கு படிப்பு தான் முக்கியம்மின்னாரு

 

எங்க தரவன் ஒரு நாள் எங்க வீட்டுக்கு வந்து எங்க எல்லோரையும் நல்லா விசாரிச்சிட்டு வாப்பா கூட எதோ ரகசியமா பேசிட்டு போனார்.. அவரு பெரிய பணக்காரர் அவர் வீடு பெரிய அரண்மனை மாதிரி கம்பியளிப் போட்டு கல்லுத் திண்ணையோட கம்பீரமா நிக்கும்…அவங்க வீட்டில் காலையில் நாஷ்டாப் பண்ணுபவர்கள்..

 

அவருக்கு கடையில போயி கலரு வாங்கி வந்து கொடுத்தேன்… வாப்பா சந்தோஷப்பட்டார்.. போனப் பெறவு அண்ணனுக்கு அவர் மகளை பேசி கல்யாணம் பண்ணப் போறதாச்சொன்னார் வாப்பா.

 

வாப்பா வுக்கு தலை கால புரியாத சந்தோசம். அதுக்குப் பிறகு சம்பந்த வீட்டிலிருந்து அரிசி தேங்காய் எண்ணெய் பலகாரங்கள் என எங்களுக்கு எப்பவும் மகிழ்வு தான்,,,,

 

அண்ணனுக்கு படிக்க வாப்பா கடன் வாங்கிய வகையில் நிறைய பாக்கி இருந்தது அத்துடன் கல்யாணத்துக்கும் சேர்த்து கொஞ்சம் கடனாக வாங்கி சோடனைக் காரில் அண்ணன் ஏறி வந்து நாலு சங்கம் பைத்து படிச்சு ஆட்டிறைச்சியுடன் அருமையாக கல்யாணம் நடந்தது…

 

ஆக அண்ணனும் மதினியும் இரண்டு நாள் சேர்ந்து எங்க வீட்டில இருந்தது தான் நான் கடசியப் பாத்தது அதுக்குப் பிறகு அவன் முழுக்க மாமனார் வீட்டில் தான் இருந்தான்…

 

இப்ப அண்ணனுடைய மக்கள் நல்ல படிப்பு படிச்சு ஒசந்த நெலையில இருக்காங்க… நான் பெருமையா எப்பவும் சொல்வேன் அவன் என் கூடப்பெறந்தவன்னு…  ஆனா அண்ணனுக்கு எங்கள தன்னுடைய உறவுன்னு சொல்ல கஷ்டமாத்தான் இருக்கும்… எங்கேயாவது கண்டால் என்னடே அப்படின்னு ஒரு கேள்வி…

 

அண்ணனின் வாழ்க்கையும் அவனது மேன்மையும் அவனது உயர்வும் பட்டினியாய் நாங்கள் ராப்பகலாய் அவனுக்காகப் பட்ட பாடும் எங்களின் ரத்தம் நெற்றி வியர்வையாய் நிலம் பார்த்தது தான்…

 

போன வாரம் வாப்பா மௌத்தாயிடுச்சு அண்ணன்தான் வந்து நின்னு எல்லா காரியமும் முன் நின்னு செய்தார்……… மையத்து சிலவுக்கு அவரும் காசு பங்கு தருவதாக சொன்னார் அட வேண்டாமே….

 

வாப்ப வின் மௌத்துக்கு மதினி வந்து விட்டுப் போய் விட்டார்கள் அண்ணனின் மக்கள் யாருமே வரவில்லை…அவர்களுக்கு படிப்பு முக்கியம் ….

 

அவங்க படிச்சவங்க பணக்காரங்க …

 

போன வாரம் சாயாக்கடையில எனது ஆறாவது வகுப்பில் பாடம் எடுத்த பழைய முத்தையா சார்வாளைப் பாத்தேன் …

 

என்னடே எப்படியிருக்க

அப்படியே உன்காலத்த கழிச்சிட்டியப்பா அடிமையாக் கெடந்து…

என் வகுப்பில ஒன்ன மாதிரி அறிவுள்ள பையனை நான் பாத்ததில்லையப்பா… நாலு எழுத்து படிக்காம ஒரு ஜென்மம் முழுசையும் கடத்திட்டியப்பா…

உங்க அண்ணன் அலிய விட நீ ரண்டு மடங்கு கெட்டிக் காரன்லடே…. போச்சப்பா உன்காலமும் இப்ப எவளவு நாளைக்கு லீவு?

எங்க சவுதியாப்பா?

 

வலிச்சது கொஞ்சம்…

 

வெள்ளை மனசு ஒன்னு சொல்லியதைக் கேட்டு இங்கு எழுத்தாக்கும் நேரத்திலும் என் கண்ணில் நீர்த்திரை…

 

கல்வி ஒருவனுக்கு உறவுகளை போற்றும் பண்பை ஒழுக்கத்தை அவனது அறிவை வளர்க்க உதவ வேண்டும்…  அவ்விதம் இல்லையெனில் அவன் கற்ற கல்வியின் பயன் தான் என்ன…உறவுகளை மறப்பதற்கும் உயரத்தில் இருந்து திமிராய் நடப்பதற்கும் தான் இந்த தம்பிகள் அண்ணன்களின் உயர்வுக்கு உரமானார்களா…

 

முதல் பதிவு: ஆழ்கடலின் மனவோட்டங்கள்

கடவுளைக் காணவில்லை

8 ஜூன்

 

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” …..

நேற்றுத் தான் இந்த செய்தியைக் கேள்விப் பட்டேன். கடவுள் காணாமல் போய்விட்டதாக XD8975HGYU0987 கிரகத்தைச் சேர்ந்த மனிதர்கள் கலிபோர்னியாவில் இருக்கும் நாசா மையத்துக்கு அவசர மின் காந்த அலை நகல் ஒன்றை அனுப்பினார்கள். இந்தச் செய்தியைக் கேட்டு நாசாவின் ” கடவுள் தேடும் பணி ” பிரிவின் தலைவர் கிரகம் வெல் அதிருந்துப் போனார். கடந்த ஐம்பது ஆண்டுகளாக கோடிக் கணக்கான டாலர்களை செலவிட்டு பால்வெளிகளை எல்லாம் சல்லடைப் போட்டுத் தேடி வருகின்றார்கள். இத்தனை நாளாகத் தேடி ஒன்றையும் கண்டுப் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தகவலை உடனடியாக இராஜாங்க செயலரின் அலுவலகத்துக்கு இரகசியமாக அறிவித்தார் அவர். 

அமெரிக்க உட்பட வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றின் இரகசியப் பிரிவுகளை உள்ளடக்கிய இக்குழுவின் கடவுளைத் தேடி விண்கலம் சில ஆண்டுகளுக்கு முன் தான் NGC 4414 விண்மீன் பேரடை கிரகங்ளின் மனிதக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஏவப்பட்டது. பிரபஞ்சத்தில் இருக்கும் மொத்த பால்வெளி கிரகங்களுக்கும் இந்தக் கலம் தமது கதிரியக்கங்களைப் பரப்பி கடவுளின் இருப்பைப் பற்றி தேடி வருகின்றார்கள். இதற்கு முன் ஏவப்பட்ட ஆதாம் விண்கலம் கடவுளைத் தேடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது NGC 1300 விண்மீன் பேரடைக் கிரகத்தில் இருந்து வந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் அது நொறுக்கப்பட்டது. 

கிரகம் வெல் பதவியேற்றதும், பல புதிய திட்டங்களை வகுத்து கடவுளைத் தேடும் பணியில் மும்முரமாக இறங்கியது இந்த மையம். தமது ஓய்வுப் பெறும் காலத்துக்குள் எப்படியாவது கடவுளைப் பற்றி எதாவது கண்டுப் பிடித்து விட வேண்டும் என்பதே இவரின் பேரவா ? ஆனால் ஆரம்பம் முதலே இவர் எடுத்த எல்லாக் காரியங்களும் தவிடுப் பொடியாகி விட்டது எனலாம். பூமியில் இருக்கும் கடும் போக்காளர்கள் பலர் கடவுளைத் தேடுவது மகாப் பாவம் எனப் பிரச்சாரம் செய்து வருவதையும் அவர் சற்று யோசித்துப் பார்த்தார். ஆனால் வெறும் சிறியக் கூட்டத்தின் போராட்டத்தைப் பொருட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியே நேரிடையாக சொன்னப் பிறகு இவருக்கு ஒரு உத்வேகம் கிடைத்தது. 

கடவுளைத் தேடும் பணி மையத்தில் எனக்கு பெரிய வேலை என்று எதுவும் கிடையாது. கிரகம் வெல்லின் உதவியாளர் மரியானா தரும் செய்திகளை வேற்று விண்மீன் பேரடைகளுக்கு மின் காந்த அலை நகல் அனுப்பி வைப்பதைத் தவிர வேறொன்றும் அங்கு செய்வதில்லை நான். சில நேரங்களில் மரியானா தனதுக் கிராமத்தினைக் குறித்து சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருப்பேன். மரியானாவுக்கு கிரகம் வெல் மீது ஒருவிதக் கடுப்பு இருக்கின்றது. காரணம் இருவரும் ஒரேக் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அதனால் ஒருவர் மீது மற்றொருவருக்கு பாசம் தானே இருக்க வேண்டும், ஆனால் இவர்களுக்கு சண்டை தான் எப்போதும். என்ன இருந்தாலும் ஹோமோ சாப்பியன்களைப் போல முதுகுக்குப் பின்னால் பேசுவது இவர்களின் வழக்கம் இல்லை. 

நீங்கள் நினைப்பது சரி தான் ! மரியானாவும், கிரகம் வெல்லும் நமது விண்மீன் பேரடையைச் சேர்ந்தவர்களே இல்லை. அவர்களின் கிராமம் என்பது மிகவும் சிறியதொரு கிரகத்தில் இருக்கின்றது. அங்கு நிலவும் வேலை இல்லாத் திண்டாட்டத்தினால் பலர் புலம் பெயர்ந்து அமெரிக்காவுக்கு வந்துவிட்டனர். இப்படி வேற்றுக் கிரக வாசிகளை இங்கு நுழையவிடுவதால் தமது வேலைகள் பறிப் போவதாக அமெரிக்காவில் பலரும் விசனப்பட்டுக் கொள்கின்றவர்களும் உண்டு. ஆனால் அமெரிக்காவோ, பிற நாடுகளோ அனைத்து கிரக வாசிகளையும் இங்கே அனுமதிப்பது இல்லை. 

பூமிக்குள் நுழைவது என்பது அவ்வளவு எளிதானக் காரியம் இல்லை. முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டுமாம். விண்ணப்பம் செய்வோர்களை தேர்ந்தெடுப்பதில் மரியானாவின் கிரகத்தில் ஒரு விசித்திர நடைமுறை இருப்பதாக அவள் ஒருமுறைக் கூறியது ஞாபகம் இருக்கின்றது. அதாவது அங்குள்ள ஆணோ, பெண்ணோ தமது கிராமங்களை புறந்தள்ளிப் போய்விட முடிவு எடுத்தால் – மீண்டும் அங்கே வரமாட்டேன் என சத்தியம் செய்துக் கொடுக்க வேண்டும். அதனை உறுதி செய்வதற்காக அனைவரின் காலில் விழுந்து எழ வேண்டுமாம். பின்னரே விண்ணப்பங்களை அனுப்ப அங்குள்ளவர்கள் அனுமதிப்பார்கள். 

விண்ணப்பங்களில் கேட்டிருக்கும் கேள்விகள் விசித்திரமானவை. எத்தனைக் கண்கள், காதுகள், மூக்குகள், வாய் என்பவற்றையும். தலை எங்குள்ளது எனவும், சுவாசிக்கப் பயன்படும் வாய் எது எனவும் கேட்பார்கள். நல்ல வேளை மரியானாவின் கிரகவாசிகளும் நம்மைப் போல ஆக்சிஜனையே சுவாசிக்கின்றார்கள். அதனால் அவர்களால் எளிதாக இங்கு வரமுடிகின்றது. கடும் உழைப்பாளிகள், வெறும் ஒரு மணி நேரம் தான் தூங்குவார்கள். பதினைந்து மணி நேரம் கடுமையாக உழைப்பார்கள். அனைத்து மொழிகளையும் கப்” பெனப் பிடித்துக் கொள்வார்கள். 

கிரகம் வெல் மீண்டும் கடுப்பாகின்றார். கடவுளைத் தேடிப் போன விண்கலத்தின் சமிக்ஞ்சைகள் மிகவும் நொந்தலாக வருகின்றது என்றத் தகவல்கள் அவரை மேலும் கலவரப்படுத்தியது. மரியானாவிடம் எதோ சொல்லி விட்டு உள்ளே சென்றுவிடுகின்றார். 

என்னிடம் வந்த மரியானா” நீங்கள் போய் ! உணவு இடைவேளை எடுத்துக் கொள்ளலாம் ”  என சொன்னாள் பச்சை நிறக் கண்கள் மிளிர. சரி ! என நானும் எனது கேபினை விட்டு வெளியேறினேன். 

சிற்றுண்டியகத்தில் அனைவரும் பரப்பரப்பாக இருந்தனர். கடவுளைக் காணவில்லை என்ற செய்தியை அறிந்து கலவரத்துடன் திரையில் வெளிப்படும் செய்தியறிக்கையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த பெண் ரோபோ, ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடும் கடும்ப் போக்காளரையும் காட்டிக் கொண்டிருந்தது. நான் அவற்றைப் பொருட்படுத்தாது, ஒரு விலன் பானத்தையும், ஒரு ரொட்டித் துண்டையும் ஆர்டர் கொடுத்துவிட்டு ஜன்னல் அருகே இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.

உணவும் வந்து சேர்ந்தது, ரொட்டியைக் கடித்தப் படியே .. சிவப்பாக மாறிய வானத்தை விறைத்தப்படியே இருந்தேன்….

திடிர் என திரையில் வெளிப்பட்ட செய்திகளைக் கண்ட சக பணியாளர்க் கூட்டம் ” ஹொய் ! ” என கத்தினார்கள். என்னாச்சு எனப் போய் பார்த்தேன். 

கடவுள் அருகில் இருக்கும் விண்கலத்தில் சமிஞ்சைகள் கிடைக்கப் பெற்றது என்ற செய்திகள் கூறியது. கடவுள் காணமல் போனதைப் பற்றி செய்திகளுக்குத் தெரியாது. அது கிரகம் வெல்லின் அலுவலகத்துக்கும் அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும். 

கடவுளுக்கும் கலகக் காரர்களுக்கும் சம்பந்தம் இருக்கின்றது என்பதை அனைவரும் அறிவோம். அது நடந்தால் மட்டுமே நாமெல்லாம் வாழ முடியும் என்ற சூழலும் இருக்கின்றது. இல்லையாயின் கலகங்கள் செய்வோர் பூமியின் அமைதியைக் குலைத்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

கடவுள் என்பது ஒரு செயற்கையாக இணைக்கப்பட்ட ஒரு கோளாகும். பூமியை ஒத்த இக்கோளுக்குத் தான் கலகங்களை செய்யும் கடவுளர் கடும்போக்காளர்களை கிரகம் கடத்த உலக நாடுகளின் சம்மேளனம் முடிவு செய்திருந்தது. காரணம் இச்சிறிய மக்கள் அடிக்கடி கடவுளின் பெயரால் கலகங்களையும், கொள்ளையடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் நடத்தி வந்தார்கள். அவர்களின் பலமும் அட்டூழியமும் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. அவர்களை இனிமேல் பூமியில் வைத்திருப்பது ஆபத்து என முடிவு செய்த உலக நாடுகள் அனைவரையும் கைது செய்து கடவுளுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஒருத் தொகுதி மக்கள் ஏற்கனவே கிரகம் கடத்தப்பட்ட நிலையில். இரண்டாவதாக சென்ற விண்கலமே ! சமிஞ்சைகள் இழந்துப் போனது. கடவுள் கிரகம் முதலில் நமது பால்வெளி விண்மீன் பேரடைக்குள் தான் இருந்தது. ஆனால் எதிர்க்காலத்தில் இங்கிருந்துப் போகும் கலகக் காரர்கள் அங்கிருந்து திரும்பி வந்து தாக்குதல் நடத்தினால் என்னவாகும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் முப்பது லட்சம் ஒளியாண்டுகள் நகர்வது போல அதனை வடிவமைத்தார்கள். ஆனால் அனைத்து கலகக் காரர்களையும் அங்கு கொண்டுப் போய் சேர்க்கும் முன்னர் திடிர் என அது காணமல் போனதே அதிர்ச்சி சம்பவமாகும். அவற்றை கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தேடியும் பயனில்லை.

இந்நிலையில் பூமியில் மிச்சம் இருந்த கலக்காரர்களும் பெருகத் தொடங்கினார்கள். அவர்களின் பலமும் அதிகரித்து வந்தது. மற்றொரு கடவுளை உருவாக்க உலக நாடுகள் திட்டமிட்டன, ஆனால் அந்த முயற்சிக்கு சில நாடுகள் போதிய ஆதரவுத் தரவில்லை. கலகக் காரர்களை கொன்றுவிடவே சில நாடுகள் விரும்பின. அது உயிரின உரிமைகளை மீறும் செயல் என பல நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த சிக்கல் தொடர்ந்துக் கொண்டு போகவே, கடவுள் தொலைந்த செய்தியை யாரும் அறிவிக்கவில்லை. இதனை எனக்கு சொல்லியப் போதும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும், உண்மையை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்னை புரோகிராம் செய்துவிட்டார்கள். 

உலகத்தின் இன்றைய நிலை மிகவும் மோசமானதாக இருப்பதை பலரும் அறியாமல் இருக்கின்றார்கள். அரசுகளும் இவற்றை மறைத்தே வருகின்றன. என்ன செய்ய ? கலக்காரர்களின் நம்பிக்கைகள் இன்னும் 2300-ம் ஆண்டிலேயே தங்கிவிட்டது. அதன் பின் சொல்லப்பட்ட கண்டுப்பிடிப்புகளால் பலவற்றை இல்லை என்பதை உலக நாடுகள் அறிவித்தன. ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் கலகக்காரர்களுக்கு இல்லாமல் போனது. இதன் விளைவு இக்கலகங்கள்.

உணவு இடைவேளை முடித்து, எனது கேபினுக்குத் திரும்பினேன். எனது கேபினின் திரையில் அந்த நிகழ்ச்சி ஓடிக் கொண்டே இருப்பதைப் பார்த்தேன்.

” ஒரு நாயிடம் போய் கடவுள் இருக்கா ? இல்லையா ? எனக் கேட்டால் அது என்ன சொல்லும் … சிந்தியுங்கள் … பதிலைக் கடைசியில் சொல்கின்றேன். ” ….. பிரபலத் தொகுப்பாளரின் வழக்கமான குரலில் யோ டிவியின் நிகழ்ச்சி அது. நாய் ” லொள் ” என்றது. ” சரியான விடை அளித்த நேயர்களுக்கு தமது மனம் விரும்பிய கேலக்ஸி மாக்னாவின் ஒரு வாரம் உல்லாச சுற்றுப் பயணத்துக்கான முழு வாய்ப்பு ” என அவர் தொடர கரவொலி அந்த அரங்கத்தில் பரவியது. 

அறைக்குள் கிரகம் வெல் கவலைத் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதை அவரின் கண்ணாடி அறை வழியாக நான் பார்த்தேன்.

நன்றி: கொடுக்கி, இக்பால் செல்வன்

செந்தீ – சிறுகதை

2 ஜன

உயர்ரக தொழில்நுட்பத்துடன் தனித்தனியாய் பிரித்து வைக்கப்பட்ட ஸ்பீக்கர்களிலிருந்து மெருகூட்டப்பட்ட இசை மென்மையாய் அதிர்ந்துகொண்டிருக்க எதிரே சன் டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் கொஞ்சம் கனமாய் சாப்பிட்டுவிட்டோமோ என்ற எண்ணத்துடன் சோபாவில் நன்றாக சாய்ந்து காலை நீட்டி டிவி பார்த்துக்கொண்டிருந்தார் காதர்பாய்.

“ஸலாமலேக்கும்” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகுமான் பாய்.

“வாலேக்கும் ஸலாம், வாங்க பாய் பார்த்து நாளாச்சு. உக்காருங்க” சோபாவில் இடம் கொடுத்தார், உள்ளே மனைவிக்கு குரல் கொடுத்தார், “அய்சா அண்ணன் வந்துருக்காங்க பாரு, குடிக்கிறதுக்கு கொண்டா”

“ம்…ம்” பெருமூச்சுடன் ஆரம்பித்தார் ரகுமான்பாய். “நாம ரெண்டு பெரும் சேர்ந்து சுத்தாத இடமே கிடையாது இந்த ஊர்ல. இப்ப சாப்பிட்டுட்டு தூங்குற நேரம் போக மத்த நேரமெல்லாம் டிவிக்கு முன்னால தான் பொழுது போகுது”

“ஆமாமா, ஒரே தெருவுல பத்து வீட்டுக்கு முன்னபின்ன இருந்தாலும் இப்படி உக்காந்து பேசி மாசக்கணக்கா ஆவுது. மூணு மாசத்துக்கு முன்னால முக்கடி வீட்டு அம்சா மவன் நிக்காவுல பேசிக்கிட்டோம்” நண்பனின் பேச்சை ஆமோதித்தார் காதர்பாய்.

“ஆமா பாய் உங்க பையங்க நல்லா இருக்காங்களா? போன் போடுராங்களா? எப்ப ஊருக்கு வர்ராங்க? மூத்தவன் வந்துட்டு போய் ஒரு ரெண்டு வருசம் இருக்குமா?”

“ஆவுது ஒண்ணேமுக்கால் வருசம் ஆவுது வர்ற நோம்புக்கு ஊர் வர்றதா சொல்லியிருக்கான். முன்னெல்லாம் கடிதம் போடுவாங்க. போன் வந்ததுலருந்து ஒடனுக்குடன் பேசிரலாம்ல. அதுவும் இந்த செல்போன கண்டுபுடுச்சாங்க சம்பாதிக்குறதுல கால்வாசி போனுக்குத்தான் போகுது”

“என்ன செய்ய பாய், நிக்காவை பண்ணிட்டு கண்காணாத தேசத்துல போய் கிடக்காங்க அப்பப்ப பேசிக்கிட்டா தான ஆறுதலா இருக்கும்”

“என்ன வெளிநாடு. நம்ம வாப்பாமார் பர்மா ரங்கூன்னு போனாங்க, நாம சிங்கப்பூர் மலேசியான்னு போனோம், நம்ம புள்ளைங்க சௌதி துபாய்ன்னு போறாங்க, நம்ம பேரங்களுக்கு அல்லா என்ன எழுதிவச்சுருக்கானோ”

“ஏன் பாய் உங்க இளைய பையந்தான் இஞ்சினீயருக்கு படிச்சிருக்கான, ஊர்ல ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணக்கூடாது? இப்ப மூணரை சதவீதம் இடஒதுக்கீடு கூட வாங்கிட்டாங்களே”

“எங்க, வாழ்க்கை பூரா இங்க இருந்து சம்பாதிக்குறதவிட துபாய்க்கு போனா பத்து வருசத்துல அதிகமா சம்பாதிச்சுடலாம்னு துபாய்க்கு போனான். எப்ப எட்டு வருசம் ஆவுது, இதோ இந்த வீடு கட்டுனது தான் மிச்சம்” சலித்துக்கொண்டார் காதர்பாய்.

“என்ன செய்யுறது பாய். நேத்து இருந்த மதிரியா இன்னிக்கு விலைவாசி இருக்குது. பத்து வருசத்துல சம்பாதிச்சுட்டு வீட்டுல வந்து செட்டிலாயிடலாம்னு பாத்தா. காலம் பூரா வெளிநாட்டுல இருந்துட்டு காலம் போன காலத்துல ஊருக்கு வந்தா இருக்குற மிச்சத்தையும் சுகருக்கும், பிளட் பிரஷருக்கும் செலவளிக்க வேண்டியிருக்கு”

“எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சாலும் சம்பாதிச்சது நம்ம கையில நிக்கவா செய்யுது?”

“நாம நெனச்சு என்ன செய்ய அந்த ரப்பு நெனக்கணுமே. அவன் யாரை நெனைக்குறானோ அவருக்குத்தான் அவனோட ரஹ்மத்த கொடுப்பான்”

“சரியா சொன்னீங்க பாய். அவன் எழுதிவச்சபடி தான எல்லாம் நடக்கும்.அப்படியும் இப்படியும் நாம புலம்புனா ஆகுறதென்ன. நம்மள படைக்குறதுக்கு முன்னே நடக்கப்போறத ஒன்ணொன்ணையும் எழுதிவச்சுட்டான், அதுபடி தான எல்லாம் நடக்கும்”

“ஆமாமா அவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும். இப்பக்கூட பாருங்க, முஸ்லீம்கள் போராடி இடஒதுக்கீடு கெடச்சுருக்குது, ஊருக்கு நூறு தர்கா இருந்தது மாறி தொழுகைக்கு கூட்டம் கூடுது. எல்லாம் அவன் செயல்”

“ஆமா பாய் உங்க பையன் நாலஞ்சு மாசமா ஊருலயே இருக்கானே திரும்ப போகலியா?”

இதை கேட்டதும் ரகுமான்பாயின் முகம் மாற்றமடைகிறது. “அதை ஏன் கேக்குறீக” என்று இருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறத்தொடங்கினார். “கடைசி பையனாச்சேன்னு அவன் விரும்புன பொண்ணையே கட்டிவச்சேன். சேப்பு கச்சிக்காரன் தங்கச்சி வேண்டாம்னு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் கேக்கல. ஆரம்பத்துல நல்லத்தான் இருந்தாங்க. இப்ப மருமக உண்டாயிருக்கா. வெக்கேசன்ல வந்தவன், குழந்தை பிறந்தப்புறம் போறேன்னுட்டு இங்கயே இருந்துட்டான். சந்தோசமாத்தான் இருந்தாங்க. பிறக்கப்போற குழந்தைக்கு என்ன பேர் வைக்குறதுண்ணு ரெண்டு பேருக்கும் சண்டை. “A” யில ஆரம்பிக்குற பேர் வச்சாத்தான் எங்க போனாலும் ரிஜிஸ்டர்ல முதல் பத்து பேருக்குள்ள வரும்ணு ஆண்குழந்தையிண்ணா அன்சாருல் அல்தாஃப்ன்னும் பெண்குழந்தையிண்ணா அஸ்வத்நிஸான்னும் அழகான பேர எம்பையன் சொல்றான். ஆனா அந்தப்பொண்ணு எந்தப்பேர் வச்சாலும் தமிழ்லதான் வைக்கனும்னு சொல்லுது. என்னா திமிர் பாத்தீங்களா?”

“என்ன தமிழ்ல பேர் வைக்குறதா?” காதர்பாய் அதிர்ச்சியடைந்தார்.

“பொட்டக்கழுதைங்க கட்டுனவன எதுத்துப்பேசுற அளவுக்கு துணிஞ்சுட்டுதுக என்ன செய்றது”

“என்ன பேசுதீங்க பாய் நீங்க. அடிச்சு மூலையில போடாம, பேசிக்கிட்டிருக்கீங்க பேச்சு” காதர்பாய் ஆவேசப்பட்டார்.

“ந‌ல்லாப்பா……..ந‌ல்லாப்பா” ரகுமான்பாயின் பேரன் ஓடிவந்தான். “சாச்சாவுக்கும் சாச்சிக்கும் சண்டை”

வெடுக்கென எழுந்தார். காதர்பாயும் கூடவே கிளம்பினார்.

*********************************

அந்தப்பெண் தரையில் அமர்ந்திருந்தாள். வாங்கிய அடியின் வலியும் அவமானமும் கண்ணீராய் வழிந்து கன்னங்களில் உறைந்திருந்தது. கண்களில் மட்டும் சீற்றம் பாவியிருந்தது.

“பெயர் மட்டுமல்ல பிறக்கும் குழந்தையின் வளர்ப்பும் என் விருப்பபடியே இருக்கும்” அந்தப்பெண்ணின் கண்களில் செந்தீ ஒளிர்ந்தது.

**********************

கலைச்சொற்கள்
‍‍‍௧) ஸலாமலேக்கும், வாலேக்கும் ஸலாம் = அஸ்ஸலாமு அலைக்கும், வா அலைக்கும் ஸலாம் = இஸ்லாமிய முகமன்.
௨) நிக்கா = நிக்காஹ் = திருமணம்.
௩) ரப்பு = ரப் = இறைவன், காப்பவன்.
௫) ரஹ்மத் = ஆண்டவனின் அருள்.
௬) தர்கா = இஸ்லாத்தில் இல்லாததாக கருதப்படும் அனால் முஸ்லீம்களிடம் இருக்கும் வழிபாட்டுமுறை.
௭) தொழுகை = இஸ்லாத்தின் வழிபாட்டுமுறை
௮) நல்லாப்பா = அப்பாவின் அப்பா
௯) சாச்சா, சாச்சி = சிற்றப்பன் சிற்றன்னை.

– நசீபா காஹ்துன்