தொகுப்பு | ஓகஸ்ட், 2010

கல்லூரி மாணவர் தற்கொலை: கல்வி முறையின் தாக்கம்

31 ஆக

பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அக்கல்லூரி முன் மாணவர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் காலேஜ் இயங்கி வருகிறது. அதில் சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சிதம்பரசேட் என்பவரின் மகன் அரவிந்த் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சுமாராக படிக்கும் அரவிந்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று துறைத் தலைவர் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் 2 நாளாக கல்லூரிக்குச் செல்லாத அரவிந்த் நேற்று இரவு தூங்கும் போது விஷம் குடித்து விட்டு தூங்கி விட்டார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் எழுந்திராத அவர் இறந்ததை அறிந்த கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக கல்லூரி முன்பு கூடிவிட்டனர்.

தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டது என்று மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவர்கள் தாங்களு்ம் கல்லூரி ஆசிரியர்களால் நிறைய துன்பங்கள் அனுபவிப்பதாகவும், அடக்கு முறையை கல்லூரி நிர்வாகம் கைவிடாவிட்டால் அரவிந்த் எடுத்த முடிவை தான் மற்ற மாணவர்களும் எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.

ஆனால் அரவிந்தின் பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும் அரவிந்த் உடல் நல உலைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

***********************************************************

மணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது நமது கல்வி முறையின் அவலங்களைக் காட்டும் கண்ணாடி. கல்வி என்பது வாழ்வை புரிந்துகொள்ள உதவும் கருவியாக இருக்கவேண்டும். வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை நேரிய முறையில் ஆய்வு செய்வதற்கு கற்றுத்தரும் களமாக இருக்கவேண்டும். ஆனால் மதிப்பெண்களை துரத்திக்கொண்டு ஓடும் குதிரைகளைப் போல் நாம் மாணவர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதிக மதிப்பெண்களை எடுக்கும் தகுதி இல்லையென்றால் வாழும் தகுதி இருக்கிறதா எனும் ஐயப்பாட்டின் எல்லையில் கொண்டுவந்து மாணவர்களை நிறுத்தியிருக்கிறோம். இதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் விதிவிலக்கல்ல. அதனால் தான் மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து மதிப்பெண்களாக துப்பவைப்பதற்கு எந்த எல்லைக்கும் அவர்கள் செல்லத்தயாராக இருக்கிறார்கள்.

அதேநேரம் இதுபோல் ஒரு நிகழ்வு நிகழ்ந்தபின் அங்கலாய்ப்பதும், நாங்களும் இதுபோல் கல்லூரி நிர்வாகத்தினரால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என குழு சேர்வதையும் தவிர்த்து மாணவர்கள் தங்கள் நிலமைகளை உணர முற்படவேண்டும். அவைகளை எதிர்ப்பதற்காக அணிதிரள வேண்டும்.

போராட்டம் என்றதும் கல்லூரிக்கு விடுமுறைவிட்டு ஹாஸ்டலை அடைப்பது வழமையாக இருக்கும் நடைமுறை. இதை மாணவர்கள் ஒருங்கிணைவதன் மூலமே முறியடிக்க முடியும். போராடுவது ஒன்றும் தவறல்ல. உணருங்கள் ஒன்றினையுங்கள் போராடுங்கள். ஏனென்றால் போராட்டம் என்றால் மகிழ்ச்சி என்று பொருள்.

நிருபமா ராவ் இலங்கை செல்வது எதற்கு?

30 ஆக

வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் இன்று கொழும்பு செல்கிறார். நான்கு நாள் பயணமாக செல்லும் அவர் தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. இன்னும் பெரும்பாலானவர்கள் முகாம்களிலேயேதான் உள்ளனர். மறு குடியமர்த்தப்பட்டு விட்டதாக அரசு கூறினாலும் பெரும்பாலானோர் இன்னும் சொந்த கிராமங்களுக்குப் போக முடியாத அவல நிலையில்தான் உள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லை, போரினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விமோச்சனம் இல்லை, வாழ வழியில்லை என தமிழர்கள் தொடர்ந்து பெரும் துயரில் மூழ்கியுள்ளனர். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து விளக்கி முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில் ஒரு சிறப்புத் தூதரை அனுப்பி இலங்கை நிலவரம் குறித்த உண்மை நிலையை அறிந்து வர வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதையடுத்து சமீபத்தில் நிரூபமா ராவ் சென்னை வந்து முதல்வரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர் இலங்கை செல்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் தமிழர் பகுதிகளின் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசுடன் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கும், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் அவர் செல்லக் கூடும் எனத் தெரிகிறது.

ராஜபக்சேவையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார். சமீபத்தில்தான் பசில் ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது நிரூபமா இலங்கை வருகிறார்.

*************************************************************

தமிழர் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை செல்வதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் வர்த்தக நலன்களை உறுதி செய்வதற்காகவும், இராணுவ ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவுமே அவர் செல்கிறார். இவரைத்தொடர்ந்து பல இராணுவ உயரதிகாரிகளும் இலங்கை செல்லவிருக்கின்றனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனும் போர்வையில் நடத்தப்பட்ட இனவழிப்பின் காரணமே வர்த்தக நலன்களுக்கு தேவையான அமைதியை உருவாக்குவது எனும் போது முட்கம்பிச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் குறித்து இவர்களுக்கென்ன அக்கரை?

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு, மரண தண்டனை உறுதியானது

30 ஆக

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.

இதுதொடர்பாக 31 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை அதிமுக அரசு இழுத்தடித்தது. வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை காக்க, பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சி ஈடுபட்டது.

மேலும் வழக்கை நடத்த போலீஸாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது.

வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்பட 123 பேர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர்.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் தர்மபுரி நகர அதிமுக செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன் , முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 25 அதிமுகவினருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு தலா 7 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து 2 பேர் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஒருவர் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.

இந்த தண்டனைகளை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.

திட்டமிட்டு எரிக்கப்பட்ட பேருந்து-நீதிபதிகள்:

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்தப் பேருந்து திட்டமிட்டே எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இதுபோன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது.

தங்களது சுய லாபத்துக்காக அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

*********************************************************

பல ஆண்டுகள் கடந்து இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. பல்வேறு இழுத்தடிப்புகள், முடக்கும் முயற்சிகள் என பலவற்றைக் கடந்து தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூவருக்கான தூக்கும் ஏனையவர்களுக்கான தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கக் கூடியது தான். இதுவரை அதிமுக எனும் கட்சி இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் கூறவில்லை. அவர்களை குற்றம் செய்யத் தூண்டிய உள்ளுறையான விசயம் கட்சி விசுவாசம் தான், தலைமையின் கருத்தைக் கவரவேண்டும் எனும் முனைப்புதான். அவர்கள் கட்சி விசுவாசிகள் எனும் அடிப்படையில் தான் அதிமுக ஆட்சி இருந்தபோது இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்கும் நீர்த்துப்போக வைப்பதற்கும் முயற்சி செய்யப்பட்டது. அந்த வகையில் அந்தக் கட்சிக்கும் இந்த குற்ற நிகழ்வில் பங்கு உண்டு. கட்சி கொல்லச் சொல்லவில்லை, பேரூந்தை எரிக்கச் சொல்லவில்லை என்று கூறிவிட்டு விலகிவிட முடியாது. தீக்குளிப்புகளைக் கூட கட்சி செய்யச்சொல்வதில்லைதான், ஆனாலும் கட்சியினர் தீக்குளித்தால் சென்று சந்தித்து குடும்பத்திற்கு கட்சி சார்பில் பண உதவி செய்வதில்லையா? இந்த வழக்கிலும் கூட கட்சி உதவிகள் செய்திருக்கக் கூடும் என்றால் குற்ற நடவடிக்கையில் கட்சிக்கு எப்படி பங்கில்லாமல் போகும்?

குற்றத்தை தடுக்காத காவலர்களுக்கு கண்டனம் மட்டும்தானா? என்றும் கூட சிலர் நினைக்கலாம். தவிர்க்கவியலாத நிலையைத் தவிர வேறு எதற்காகவும் காவல்துறை தண்டிக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

இது அதிமுக எனும் தனித்த ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.

நம் தேவையை தீர்க்குமா வெளிநாட்டு பயணங்கள்?

29 ஆக

கடையநல்லூர். பசிய வயல்கள் சூழ இருந்தாலும் இது கிராமமல்ல. தொழிற்சாலைகளோ, உற்பத்திக்கூடங்களோ இல்லையெனினும் இதை நகரமல்ல என தள்ளிவிட இயலாது. மக்கள் தொகை அல்லது மக்கள் நெருக்கம், வாழ்முறையில் நுகர்வுப்பொருளாதாரத்தின் தாக்கம், மனோவியல் இவைகளில் நகரியம் அடையாளப்பட்டிருக்க; மக்களோ விரக்தியை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் நிற்கும் ஓர் ஊர். பொருளியல் ஆசைகள் கடையநல்லூரில் போதாமையை ஏற்படுத்தியிருக்க வெளிநாடுகளின் ஈர்ப்பு மோகமாய் தொடங்கி இன்று கடையநல்லூரின் இயல்பாகவே மாறி நிற்கும் தருணம் இது. இதில் அப்படியே ஆற்றுப்பட்டு போய்விடுவதா? இல்லை ஆராய்வதா? உலகளாவிய தாக்கங்கள் கடையநல்லூரிலும் கிளைவிட்டிருக்கையில் நம் பார்வையில் சுருக்கங்களை அனுமதிப்பதா? இல்லை விசாலப்படுத்தலா?

சில பத்தாண்டுகளுக்கு முன்னுள்ள கடையநல்லூருக்கும் இப்போதைய கடையநல்லூருக்கும் உள்ள வித்தியாசத்தை பளீரிட்டுக்காட்டுபவை கட்டிடங்கள். இரண்டாண்டுகள் கடந்து விடுப்பில் ஊர் வந்தால் நிதானித்துச்செல்லும் அளவிற்கு கவனம் ஈர்ப்பவை புதுப்புது வீடுகள். ஆனால் பழைய மனிதர்கள், பழைய சிந்தனைகள். தங்கை தம்பி திருமணம், படிப்பு, பெற்றோரின் மருத்துவ நிர்ப்பந்தங்கள் கூடவே சொகுசு தேடும் வாழ்க்கை. இவைதாம் நம்மை வெளிநாட்டில் விதைத்து வைத்திருக்கும் காரணிகள். நம் தேவைகள் தீர்ந்தனவா? தொடர்கின்றன. கண்முன்னே தொங்கும் புல்லை எட்டிப்பிடிக்க நுரை ததும்ப ஓடும் குதிரையைப்போல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்மை ஆசுவாசப்பட விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் நம் வாழ்முறைகளை நின்று கொஞ்சம் திரும்பிப்பார்க்கலாமா?

எப்போதும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும் கட்டுமான வேலைகளைப்போலவே இன்னொன்றும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது நம் கவனத்தை ஈர்க்காமல். கடையநல்லூர் கடைவீதியிலும்(பஜார்) சாலையிலும் இருக்கும் மொத்த கடைகளில் நிரந்தரமாய் இருப்பவைகளை கணக்கிட்டால் 25 விழுக்காடுதான் தேறும். ஏனைய கடைகளெல்லாம் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் வேறு கடையாக மாறிவிடும் அல்லது வேறொருவர் கைகளில் சென்றுவிடும். இதற்கு என்ன காரணம்? வெளிநாட்டில் பொருளீட்டி,  ஊரில் நிரந்தரமாக இருந்துவிட மாட்டோமா எனும்  ஏக்கத்துடன் பற்பல ஆலோசனைகளுடன் கடைவைக்கும் ஒருவர் வெகுவிரைவிலேயே விற்றுவிட்டு மீண்டும் பயணத்தை தயாரிப்பதன் காரணம் என்ன?

முப்பாட்டன் காலம் தொடங்கி நாம் ஏதாவது ஒரு வெளிநாட்டுடன் பந்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது வளைகுடா நாடுகள். ஆனால் முன்னர் இல்லாத ஒரு தன்மை இந்த வளைகுடா பயணத்தில் இருக்கிறது. அது நம் தொழிலை இழந்த தன்மை. பர்மா, ரங்கூன், மலேயா, பினாங்கு, சிங்கை என நாம் நாடு மாறி மாறி ஓடிய போதெல்லாம், தறிநெசவு என்னும் கடையநல்லூரின் மரபுத்தொழிலை நாம் விட்டுவிடவில்லை. அது நம்மை தற்காத்தது, ஆசுவாசப்படுத்தியது, தெம்பூட்டியது, சுயச்சார்பை நமக்கு கற்றுத்தந்தது. இன்றும் அது நம்முடன் இருந்திருந்தால் நம் சிறு முதலீட்டில் ஆரம்பிக்கும் தொழிலை நிச்சயம் தற்காத்திருக்கும், நம் பாலைவன வியர்வையின் பலனை நமக்கே பரிசளித்திருக்கும். ஒரு துணைத்தாங்குதலாக இருந்து நம் பயணங்களின் வேகத்தை மட்டுப்படுத்தி வீடுகளில் ஆளில்லாத நிலையை மாற்றியிருக்கும். ஆம் வளைகுடா பயணங்களுக்கு முன்புவரை யாரும் ஊரோடு வெளிநாடு சென்றுவிடவில்லை, ஒரு தெருவுக்கு பத்து இருபது பேர் தான் வெளிநாட்டில் இருந்தனர். உழைக்கத்தகுதி இல்லாதவர்களும் பெண்களும் மட்டுமே ஊரில் இருக்கும் இன்றைய நிலைக்கு பெரிதும் காரணமாக இருந்த தறிநெசவை விட்டுவிட்டதற்கு நாம் மட்டும் தான் பொறுப்பாளிகளா? இல்லை. நாம் மட்டுமே இதற்கு பொறுப்பாளிகளல்ல. அரசியலும் தான் காரணம்.

திமுக, அதிமுக; காங்கிரஸ், பிஜேபி என்று கட்சிகளின் பின்னே முழக்கமிட்டுச்செல்வதும், அதுவா இதுவா என்று போட்டி போட்டு சண்டையிட்டுக்கொள்வதும் தான் அரசியலா? அல்லது கருணாநிதி, ஜெயலலிதா; சோனியா, மன்மோகன், அத்வானி, ராஜ்நாத்சிங் இவர்களெல்லாம் என்ன சொன்னார்கள் என்ன செய்தார்கள் என்று தெரிந்துவைத்துக்கொள்வது தான் அரசியலா? இல்லை நம் நாட்டை யார் நிஜமாக ஆள்கிறார்கள்? அந்த அரசு யாருக்கு ஆதரவாய் செயல்படுகிறது? அந்த அரசின் செயல்திட்டம் என்ன? எந்த அடிப்படையில் அந்த செயல் திட்டம் வகுக்கப்படுகிறது? அது எந்த அளவிற்கு நம்மை பாதிக்கிறது? நமது சூழ்நிலைகள் எந்த அளவுக்கு அரசின் செயல்பாடுகளினால் மாற்றமடைகிறது என்பன போன்றவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப எதிர்வினை புரிவது தான் அரசியல். இது எனக்கு தேவையில்லை என யாரும் மறுக்க முடியாது, ஏனென்றால் இது நம்முடைய வாழ்வோடு தொடர்புடையது, நம்மை பாதிக்கக்கூடியது. விசயத்திற்கு வருவோம். நீண்ட நெடுங்காலமாக, மரபாக நம்மோடு தொடர்ந்து வந்த நெசவுத்தொழில் திடீரென நசிவுற்றதன் முதல் காரணம் ராஜீவ் காந்தி அரசு கைத்தறிக்கான சிறப்பு ரகங்களை ரத்து செய்தது தான். அதற்கு முன்பு கைத்தறிக்கான ரகங்களை விசைத்தறியிலோ, வேறு ஆலைகளிலோ உற்பத்தி செய்துவிட முடியாது. கைத்தறிக்கான ரகங்களை கைத்தறி மூலம் மட்டும் தான் நெசவு செய்ய முடியும். இதை நீக்கியதால் தான் கைத்தறிகள் நலிவடைந்தன. இதனுடன் நாம் அதற்காக முன்னர் போராடியதைப்போல் போராடாமல் வெளிநாட்டில் சம்பாதித்து சொகுசாக வாழலாம் எனும் எண்ணமும் சேர்ந்து கொள்ள நம்மூரை விட்டு நெசவுத்தொழில் அகன்றது. இது காங்கிரஸின் செயல் பிஜேபியோ அல்லது வேறு கட்சிகளோ இருந்தால் இதை செய்திருக்காது என்றெல்லாம் கூறமுடியாது. எல்லாக்கட்சிகளின் செயலும் இப்படித்தான் இருக்கும். ஏனென்றால் பெயர்களில் வேறுவேறாக இருந்தாலும் எல்லாக்கட்சிகளின் செயல்பாடும் ஒன்றுதான். இன்னும் தெளிவாகசொன்னால் எந்தக்கட்சியாலும் இப்படியான செயல்களை செய்யாமல் இருக்க முடியாது.

நாம் கைத்தறி நெசவை விட்டுவிட்டதன் பலன் பொருளாதாரங்களில் மட்டும்தானா? இன்று நம் உழைப்பில் பாதி மருத்துவச்செலவுகளுக்காக கரைகிறது. அதிகாலையிலும், பின்மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் தெரியும், ஆரோக்கியத்தை நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது. நம்மிடம் தறி இருந்திருந்தால் அது நம்மிடமிருந்து உழைப்பை வாங்கிக்கொண்டு ஆரோக்கியத்தை பரிசாக தந்திருக்கும். மரங்கள் தீய காற்றை உள்ளிழுத்துக்கொண்டு அதற்குப்பதிலாக சுவாசிக்கத்தகுந்த நல்ல காற்றை பரிசளிப்பதுபோல்.

தறித்தொழில் என்பது கேவலமானதா? அதில் கிடைக்கும் வருமானம் குறைவு என்பதைத்தவிர வேறெந்தக்குறையும் இல்லாத அது எப்படி இழுக்கானதாகும்? இந்தத்தொழிலுக்காக நாம் போராடிய போராட்டங்கள் மறைந்து விடவில்லை. பீஸ் ஒணம் என்றும் சொஸைட்டி என்றும் பலரின் நினைவுகளில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

நண்பர்களே, நம‌தூர் நெசவுத்தொழிலின் முழு பரிமாணங்களையும் எடுத்துவைப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல. வெளிநாடு நம்மை வளப்படுத்தியிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களே, உங்கள் கருத்துக்களை நீங்கள் எடுத்துவைக்கவேண்டும் என்பதற்கான முன்னூட்டமாகத்தான் இவைகளை கூறியிருக்கிறேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை கூர்மையாக எடுத்துவைப்பதன் மூலம் இந்த விவாதக்களத்தை நாம் மென்மேலும் வளர்த்தெடுக்க‌ முடியும். அப்படி வளர்த்தெடுப்ப‌தன் மூலம் சரியானதை தெரிவுசெய்து அதை நமக்கான முன்னேற்றமாய், நமதூருக்கான முன்னேற்றமாய் ஏன் பயன்படுத்தக்கூடாது?

வாருங்கள் நண்பர்களே, உங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பின் ஊடாக தொடர்ந்து இன்னும் பலப்பல பதிவுகளை பல்வேறு தலைப்புகளில் அலசுவோம்.

**************************************************************

இந்தக் கட்டுரையும் இதனைத்தொடர்ந்து இன்னும் சில கட்டுரைகளும் கடையநல்லூர்.ஆர்க் எனும் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன, ஆனால் பிற்பாடு நீக்கப்பட்டுவிட்டன. தேவை கருதி அக்கட்டுரைகள் தொடர்ந்து இங்கு வெளிவரும் மட்டுமல்லாது மேலும் தொடரும்.

குடிநீர்வேண்டி கடையநல்லூரில் போராட்டம்

29 ஆக

கடையநல்லூர் நகராட்சி 13வது வார்டு பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து ஏராளமான ஆண்களும், பெண்களும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை காணப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதி மக்களுக்கு குடிநீர் ஒரு குடம் கூட கிடைப்பதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், அதிகாரிகளிடம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண மனுக்கள் அளித்தும் அதற்கான உரிய நடவடிக்கை காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சி 13வது வார்டு பகுதிக்குட்பட்ட சில தெருக்களில் கடந்த சில மாதங்களாகவே ஒருகுடம் தண்ணீர்கூட சீராக கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிநீர் வழங்கிட கோரியும், ரம்ஜான் நோன்பு காலங்களில் இத்தகைய நிலை தொடர்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகராட்சி அலுவலகத்தை நேற்று(19/08/2010) காலை முற்றுகையிட்டனர். குடிநீருக்காக உரிய கட்டண தொகை செலுத்தப்பட்டும் போதுமான அளவில் குடிநீர் பெறமுடியவில்லை எனவும், பல மாதங்களாக காணப்பட்டு வரும் இந்த பிரச்னை குறித்து புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தும் பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன் முறையிட்டு வலியுறுத்தினர்.

இதனையடுத்து வார்டு கவுன்சிலர் அப்துல்காதர் முன்னிலையில் நகராட்சி இன்ஜினியரிடம் 13வது வார்டு பகுதியை சேர்ந்த முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் புகாரினை நேரடியாக தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த நகராட்சி இன்ஜினியர் 13வது வார்டுக்கு குடிநீர் சப்ளை சீராக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் அப்பகுதிக்கு குடிநீர் முறையாக கிடைத்திடும் பொருட்டு தனி பைப் லைன் அமைத்திடுவதற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

*******************************************************************

மக்கள் தன்னெழுச்சியாக எல்லா இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசுக்கெதிரான இப்போராட்டங்கள் புரட்சிகர அரசியல் கட்சிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டவை அல்ல என்றாலும், போராட்ட குணம் மக்களிடம் மாய்ந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுபவைகள். அரசு இந்தவகை போராட்டங்களை யாரையாவது அனுப்பி பேசி கலைந்து செல்லவைக்கும், மீறினால் காவல்துறை மூலம் தடியடி நடத்தி கலைக்கும். ஆனால் பிரச்சனைக்கான தீர்வு…..? கேள்விக்குறிதான். மக்கள் இவைகளை உணர்ந்து சமரசமற்ற போராட்டத்திற்கு அணி திரள வேண்டும்.

ஒசாமா பின் லேடன் யார்? ஃபிடல் காஸ்ட்ரோ விளக்கம்

29 ஆக

ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

லிதுவேனியாவைச் சேர்ந்த எழுத்தாளர் காஸ்ட்ரோவை சந்தித்தார். அப்போது உடன் இருந்த பத்திரிக்கையாளர்களிடம் காஸ்ட்ரோ பேசுகையில், சிஐஏவால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்டவர்தான் பின் லேடன். ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது அவருக்கு சாதகமாக நடந்து கொள்ளவே பின் லேடனை விலைக்கு வாங்கியது சிஐஏ.

உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் புஷ்ஷின் பிரதான எண்ணம். அதற்கு வசதியாக அவர்கள் லேடனை பயன்படுத்திக் கொண்டார்.

தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை பின்லேடன் அறிவிப்பார். அவரைத் தொடர்ந்து புஷ் எச்சரிக்கும் வகையில் பேசுவார். இரண்டுமே திட்டமிட்ட நாடகங்கள். புஷ்ஷுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்தவர் லேடன். புஷ்ஷுக்குக் கீழ்ப்பட்டவராகவே அவர் இருந்து வந்தார்.

லேடன் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்பது ஆப்கன் போர் ரகசியம் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன என்றார் காஸ்ட்ரோ.

84 வயதாகும் காஸ்ட்ரோ சில காலமாக உடல் நலம் குன்றியிருந்தார். தற்போது அவர் நலமடைந்து செய்தியாளர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிக்களுக்கும் போக ஆரம்பித்துள்ளார். வழக்கமான முறையில் செயல்பட ஆரம்பித்தது முதல் பரபரப்பு பேச்சாக பேசி வருகிறார் காஸ்ட்ரோ.

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அணு ஆயுத யுத்தம் வரும் என்று சமீபத்தில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ஒசாமா பின்லேடன்,அமெரிக்காவின் ஏஜென்ட் என அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

************************************************

அல் கொய்தா எனும் அமைப்பே உலகில் கிடையாது என்பதை ஏற்கனவே நிருவியிருக்கிறார்கள். ஐயம் கொண்டவர்கள் பக்கப்பட்டையில் (side bar) உள்ள‌ காணொளி என்பதை சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் அல் கொய்தா எனும் அமைப்பு இல்லை எனும் ஆவணப் படத்தைப் பாருங்கள்.

காமன்வெல்த்: முதலில் ஊழலைப் பார்வையிட்ட பிரதமர் இப்போது மைதானத்தைப் பார்வையிடுகிறார்.

29 ஆக

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா, நிறைவு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பிரதமர் மன்மோகன் சிங் .

காமன்வெல்த் விளையாட்டுக்கான ஸ்டேடியங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வேறு.

இதையடுத்து மத்திய அரசு தலையிட்டது. முதலில் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பின்னர் 11 அரசு அதிகாரிகள் அடங்கிய கமிட்டிஅமைக்கப்பட்டது. இதன் மூலம் சுரேஷ் கல்மாடி முன்பு குவிந்து கிடந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக நேரடி ஆய்வில் குதித்தார்.

போட்டி தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்குச் சென்று அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானம், மீடியாக்காரர்களுக்கான வசதிகள், ராயல் பாக்ஸ், ஸ்டேண்டுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு விளக்கம் கேட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், இது அழகான மைதானம். இங்கு அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டியது அவசியம். எந்த வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடுங்கள் என்று அறிவுரை கூறினார்.

அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன. 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இவற்றுக்கான ஸ்டேடியங்கள் அனைத்தையும் செப்டம்பர் 15ம்தேதிக்குள் கொடுத்து விட வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அதற்குள் முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

**********************************************************

கடந்த சில ஆண்டுகளாகவே தில்லியில் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் போட்டியை ஒட்டி வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளுக்கு அசிங்கமாய்த் தெரிவார்கள் என்று சாலையோரம் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களை தில்லியைவிட்டுத் துரத்தியது அரசு. லட்சக் கணக்கானோருக்கு உணவளித்துவந்த, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்துவந்த‌ நடைபாதை உணவகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆப்பிரிக்காவைவிட வறுமை அதிகமுள்ள நாட்டில் சில நாட்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு கோடிகோடியாய் கொட்டப்பட்டது. இவைகளையெல்லாம் ரசித்த‌ பிரதமர், ஊழல், அரங்கங்கள் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்கப்படுமா? என ஐயம் கிளம்பியதும் பதறிப் போகிறார். ஏனென்றால் அவர்களின் வல்லரசு கனவுக்கு விளையாட்டுப்போட்டிகள், தமிழர்களின் இன அழிப்புக்கு திட்டம் தீட்டிக் கொடுப்பது போன்றவை தேவையாய் இருக்கிறது. அவர்களின் வியாபரத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் தான் இந்தியா வல்லரசு என்பது பயன்படும். தில்லியைவிட்டு துரத்தப்பட்ட லட்சக்கணக்கான நடபாதை வாசிகள், உணவகங்களை நடத்தியவர்கள் போன்றோருக்கு இந்தியா வல்லரசானால் என்ன? காமன்வெல்த போட்டியை சிறப்பாக நடத்தினால்தான் என்ன?

காவல்துறையினருக்கு அடுக்கடுக்காய் வசதிகள் – காரணம் என்ன?

29 ஆக

காவல்துறையினருக்கான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இனி டபுள் பெட்ரூம் கொண்டதாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் நேற்று பேசிய முதல்வர் கருணாநிதி காவல்துறையினருக்கு சில சலுகைளை அறிவித்தார்.

முதல்வர் பேசுகையில்,

எந்த ஒரு அரசானாலும், எதிர்க்கட்சிகள் முதலில் குற்றம் சாட்டுவது காவல் துறையைத் தான். அதனால், காவல்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மாநிலத்தின் அமைதி, நல்வாழ்வு, மக்களின் உரிமைகள் காப்பாற்றப்படும் நிலை, இவையெல்லாம் அரசின் பலதரப்பட்ட அதிகாரிகள் மூலம் நடத்தப் பட்டாலும், எல்லாவற்றையும் மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டியது காவல் துறையிடம் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

குற்றங்களை களைவதற்கு எப்படியெல்லாம் முயற்சிகள் எடுத்தோம் என்பதைப்பற்றி கூறினீர்கள். இருந்தாலும், நாங்கள் கவலைப்படும் அளவிற்கு சில நிகழ்வுகள் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்துகொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது.

இது மிக, மிக முக்கியமான நேரம். நாம் விரைவில், தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளோம். தேர்தல் நேரம் பார்த்து, அரசுக்கு ஏதாவது களங்கம் ஏற்படுத்த வேண்டும்; பழி சுமத்த வேண்டும், தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்ற சில எதிர்க்கட்சியினர் இருப்பர்.

நான், எல்லா எதிர்க் கட்சியினரையும் கூறவில்லை. இதற்கென்றே, தங்களுக்கு தொண்டர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ, ஆனால், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு, பிரச்னைகளை உருவாக்கி, ஜாதிக் கலவரம், மதக் கலவரம் போன்றவற்றை ஏற்படுத்தி அரசுக்கு கெட்டபெயரை உருவாக்கலாம். இப்படி எண்ணுகின்ற நிலைமை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கட்சி சார்பற்ற முறையில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நீங்களும், நானும் சேர்ந்து தமிழகத்தில் பொது அமைதியை நிலவச் செய்வோம். தமிழகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட பாடுபடுவோம் என்பது தான் என்னுடைய கோரிக்கை. ஐந்து முறை முதல்வராக இருந்து ஆற்றிய பணிகளை நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்று முடிவுக்கு வர வேண்டிய கடமையும், பொறுப்பும் சுதந்திரமாக உங்களுக்கு இருக்கிறது. அதில், நான் தலையிடவும் மாட்டேன்; மறுப்பு கருத்து சொல்லவும் மாட்டேன்.

மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க உரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். அப்படி செய்தால், ஒரு நல்ல ஆட்சியை, அது தி.மு.க., ஆட்சி என்று நான் கூற மாட்டேன்; ஒரு நல்ல ஆட்சி தமிழகத்தில் நடைபெற நீங்களும், நாங்களும் சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று பொருள்.

ஒரே நேரத்தில் 3,000 போலீசார் பயிற்சி பெறும் வசதிகொண்ட காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படும். போலீசாருக்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டின் பரப்பளவு 550 சதுர அடியாக உள்ளது. 100 சதுர அடி சேர்த்து (டபுள் பெட்ரூம்), 650 சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகள் கட்டப்படும்.

ராணுவத்தினருக்கு உள்ளதுபோல், போலீசாருக்கு குறைந்த விலையில் பொருட்களை பெறுவதற்கு வசதியாக, மதிப்புக் கூட்டுவரி விலக்கு பெற்ற கேன்டீன் வசதி செய்து தரப்படும்.

விபத்துகளை தவிர்த்திட இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் இரவில் ஒளியை பிரதிபலிக்கும் சாதனம்பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படும். விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி தவறு செய்யும் ஓட்டுனர் களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க மையம் அமைக்கப்படும் என்றார் கருணாநிதி.

*************************************************************

எந்தக்கட்சி எதிர்க்கட்சியாக வந்தாலும் காவல்துறையைத்தான் முதலில் விமர்சிக்கும் என்கிறார் கருணாநிதி. அவர் சொல்லாமல் விட்ட இன்னொரு வசனமும் இருக்கிறது, எந்தக்கட்சி ஆளும்கட்சியாக வந்தாலும் காவல்துறைக்கு சலுகைகள் மேல் சலுகை தரத் தயங்குவதில்லை. அரசின் எந்தத் துறை நலிவடைந்தாலும் காவல்துறை மட்டும் நலிவடைவதே இல்லை. எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதிலிருந்து, வேண்டாதவர்கள் செயல்பாடுகளை உளவறிந்து சொல்வதுவரை, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் மீது ஏவி விடுவதுவரை அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது காவல்துறை தானே. காவல் துறை இல்லையென்றால் கண நேரமும் இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. தேர்தல் காலம் வேறு. ஒட்டுமொத்த மக்களையே தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஊழல் பேர்வழிகளாக மாற்றியிருக்கும் போது காவல்துறைக்கு கொடுப்பதற்கு சொல்லியா கொடுக்கவேண்டும்?

பெண்கள் விழிப்புணர்வு என்பது இருளில் தள்ளுவதா?

28 ஆக

கடையநல்லூர் ஐக்கிய ஜமாஅத் பரசுராமபுரம் வடக்கு தெரு வட்டார கமிட்டி சார்பாக பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி 23 ஆகஸ்ட் அன்று நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் கடையநல்லூர் பொறுப்பாளர் சகோதரி பிஸ்மி ஹாஜா அழைக்கப்பட்டிருந்தார் .

அவர் தனது உரையில் ரமலான் மாதத்தின் சிறப்பு பற்றியும் அதன் நோக்கமாக உள்ளச்சத்தை பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார். ஒரு பெண் என்ற அடிப்படையில் தங்களுக்கு என்னென்ன கடமைகளும் பொறுப்புகளும் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கைகளை சாடியதுடன் ஈருலக வாழ்க்கையின் வெற்றிக்கு மறுமையில் கேள்வி கேட்கப்படுவோம் என்ற அச்சம் ஒன்றே போதும் என்பதையும் ஆணித்தரமாக எடுத்துச்சொன்னார் .

பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் . இறுதியாக பெண்களின் சமூக பாதுகாப்பிற்காக ஒரு சில தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பரசுராம புறம் வட்டார நிர்வாகிகள் தங்கள் எதிர்பார்த்தது போல் பயான் அமைந்தது என்று மகிழ்வுடம் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் தன்னலமற்ற சேவைகளை பாராட்டினர்.

*****************************************************************

பெண்கள் பாதுகாப்பு(!), பெண்கள் விழிப்புணர்வு என்பதன் பொருளை மதத்தின் நுகத்தடியில் சிக்கிக் கொண்டிருக்கும் வரை சரியான திசையில் புரிந்து கொள்ள முடியாது. தொலைந்து விட்ட ஒன்றை தொலைத்த இடத்திலல்லாமல் வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காக வேரொரு இடத்தில் தேடுவது சரியானதா? இது குறித்து விரிவாக அறிந்து கொள்ள காலத்தே பின்னோக்கி பயணிக்கும் கடையநல்லூர் எனும் கட்டுரையை படிக்கவும்.

அமெரிக்கா தீவிரவாதங்களின் பிறப்பிடமாக இருக்கிறதா? பிறப்பிடமாக மாறிவிட்டதா?

28 ஆக

அமெரிக்கா விலிருந்தும் தீவிரவாதம் பரவுகிறது, தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

அதில், டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.

இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.

சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது…

மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.

ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.

இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

***********************************************************

அமெரிக்காவின் அறிக்கை அமெரிக்கா தற்போது தீவிரவாதத்தின் பிறப்பிடமாக மாறிவருவதாக குறிப்பிடுவது பொய் என்பது அனைவரும் அறிந்தது தான். உலகின் எல்லா நாடுகளுக்கும் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வது தான்அமெரிக்கா. வால்ஸ்ட்ரீட் தான் உணவுப் பொருட்கள் முதல் இராணுவத் தளவாடங்கள் வரை செயற்கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாடிகளின் சொர்க்கம். பெண்டகன் தான் உலகின் அனைத்து நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளைத் பிரசவிக்கும் கர்ப்பப்பை. இதிலிருந்து தான் அத்தனை தீவிரவாத இயக்கங்களும் முளைக்கின்றன எனும்போது இப்போது புதிதாக அமெரிக்கா தீவிர வாதிகளின் பிறப்பிடமாக மாறிவருகிறது என்பது பொய்யாகத்தானே இருக்கமுடியும்.