Tag Archives: தீர்ப்பு

கீழ்வெண்மணியில் நடந்தது என்ன?

30 டிசம்பர்

 

“இந்திய கிராமங்கள் மிகவும் புராதனமானவை. நிலம் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருக்கிறது. விவசாயமும், கைத்தொழில்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், வேலைப் பிரிவினைகள் மாற்ற முடியாத வகையில் கலாச்சார தர்மப்படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று கூறிய கார்ல் மார்க்ஸ், 

´நியூயார்க் ட்ரிப்யூன்´ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் “இந்தியாவின் சமுதாய அமைப்பைப் புரிந்து கொள்ள கிராமத்தின் அமைப்பைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது” என்கிறார்.

வர்க்கப் போராட்டம் இந்தியாவைப் பொருத்தவரை கலாச்சார தர்மப்படி சாதியப் போராட்டமாகவே உள்ளது என்பதும் இந்திய ஜனநாயமும் சட்டமும் அதிகார ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே இயங்குகின்றன என்பதற்கும் இந்தியாவில் தொடரும் வர்க்கப்போராட்டங்களே உலகத்திற்கு உண்மையை உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஒரு சில நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தில் ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் தான் இன்றும் இந்திய கிராமங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட சாதியார்கள் அடிமை முறையில் ஆண்டாண்டு காலமாக பெரு நிலச்சுவான்தார்களின் ஆதிக்கத்தில் உழைப்புக்கேற்ற எந்த கூலியுமற்று எந்த உரிமையுமற்று வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். 

கோடிக்கணக்கான மக்களின் நிலை இன்றும் இப்படியே தொடருகிறது!

தமிழ்நாட்டில் நடந்த வர்க்கப்போராட்டங்களில் சாதியப் போராட்டத்தின் வெறித்தனத்தின் உச்சம் எந்நிலைக்கு சென்றது என்பதற்கு கீழ்வெண்மணி கிராமத்தின் சம்பவங்களை ஆராய்வோம்.

தஞ்சை என்றதும் பசுமையும், இலக்கியமும், சிற்பங்களும், ஓவியங்களும் நம் சிந்தனைகளில் ஒடக்கூடும். ஆனால் அதையும் தாண்டி தஞ்சை மண்ணிற்குள் சர்வாதிகாரத்தில் சாதித்திமிருக்குள் உடம்பை ஊறப்போட்டு வைத்த மிருகத்தனமும், அம்மண்ணின் மைந்தர்களுக்கு உரியதாக இருந்ததை நம் இலக்கியம் இதுவரை பேசியதில்லை.

தஞ்சையில் நிலச்சுவான்தார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை ‘பண்ணையாள் முறை’ கட்டமைப்பில் வைத்திருந்தது. இதில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலங்களில் செய்யும் வேலைகளுக்கு கூலியாக 1968-வரையிலும் ஒருபடி நெற்களே கூலியாக கொடுக்கப்பட்டன. 

மேலும் வேலை நேரத்தின் போது கடுமையான தண்டனைகளும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை நேரத்தில் களைப்பாக இருந்தால் உடம்பில் இரத்தம் வரும் அளவுக்கு சாட்டையாலும், சவுக்கு தடியாலும் தண்டிக்கப்பட்டனர். மாட்டுச் சாணியை தண்ணிருடன் கரைத்து குடிக்கச் சொல்லும் தண்டனையும் கொடுக்கப்பட்டது. மறுக்கும் கூலி தொழிலாளர்கள் அடியாட்களால் உதைக்கப்பட்டனர். 

இவ் அடிமைமுறை பல நூறு ஆண்டகளாக தொடர்ந்திருந்த போதும் 1947- இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் நீடித்தது என்பதும், இந்திய அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்தது என்பதும் இன்றளவும் கேட்கக்கூடிய கேள்வியாகவே தொடருகிறது. 

1960-க்கு மேல் அப்போதைய கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த மணியம்மையும், சீனிவாசராவும் தஞ்சை விவசாயத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தி விவசாயத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தனர்.

இராஜாஜி ‘தஞ்சை மாவட்ட விவசாயிகளை கம்யூனிஸ்ட் என்கிற பேய் பிடித்திருக்கிறது´ என்று வர்ணித்ததும் அப்போதுதான். 

உழைப்புக்கு ஏற்ற கூலி வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக விவசாயத் தொழிலாளிகள் 1967-இல் முன்வைத்தனர். அதாவது இதுவரையில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாள் கூலியாகிய 1படி நெற்களுடன் மேலும் ஒருபடி நெற்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அவை. 

ஆனால் பல மிராசுதாரர்கள் விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். நமக்கு கீழே கைகட்டி வாய் பொத்தி வேலை செய்தவர்கள் இன்று நிமிர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது ஆதிக்க வர்க்கத்தால் ஜீரணிக்க முடியவில்லை. 

விவசாய தொழிலாளர் சங்கம் இருப்பதால் தான் விவசாய தொழிலாளிகள் துணிந்து நிற்கிறார்கள் என்று சங்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்தனர். சங்கத்தில் இருந்த தொழிலாளர்களை தாக்குவதும், சங்கத்தில் இருப்பவர்களுக்கு வேலை தர மறுத்து சங்கத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தனர். 

மேலும் நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில், ´நெல் உற்பத்தியாளர்´ சங்கத்தை ஏற்படுத்தினர். அதன் மூலம் உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் விவசாய தொழிலாளர்களை வரவழைத்தனர். நிலச்சுவான்தார்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே அவ்வப்போது சச்சரவுகள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. 

நிலச்சுவான்தார்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட சங்கத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய உறுப்பினர்களை கொல்லும்படி சதி திட்டம் தீட்டப்பட்டது. தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் இணைந்து இச்சதி திட்டத்தை குறித்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தாக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் புகார் கொடுத்தாலும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை. 

நிலைமை இழுபறியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் தான் 25.12.1968-அன்று மாலை 5-மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, கணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் [நாயுடு] வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிலச்சுவான்தார் சவரிராஜ் [நாயுடு] வீட்டுக்கு வந்து முத்துச்சாமி, கணபதியின் கட்டை அவிழ்த்து அழைத்துச் சென்றனர். 

அப்போது நிலச்சுவான்தார் ஆட்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த நிலச்சுவான்தார்கள் ஆத்திரம் கொண்டனர். ´கோபால கிருஷ்ண´ [நாயுடு] துப்பாக்கிகளுடன் காவல்துறை மற்றும் அடியாட்களோடு வெண்மணி கிராமத்துக்கு சென்றார். 

கீழ்வெண்மணி கிராமத்திற்குள் நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்ட விவசாயத் தொழிலாளர்களை காட்டில் மிருகங்களை வேட்டையாடுவதைப் போல் கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தினர். தற்பாதுகாப்புக்காக விவசாயத் தொழிலாளர்களும் திருப்பி தாக்கினர். இதில் பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கித் தாக்குதலில் பல தொழிலாளர்களுக்கு உடலில் குண்டுகள் பாய்ந்தன. தங்களால் துப்பாக்கி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்ந்த விவாசாய தொழிலாளர்கள் ஓடினர். 

தப்பித்து ஓட முடியாத குழந்தைகள், பெண்கள், சில முதியவர்கள் கலவரம் நடந்த தெருவின் கடைசியாக இருந்த ராமைய்யா என்பவரின் குடிசைக்குள் பாதுகாப்புக்காக புகுந்தனர். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள சிறிய குடிசைக்குள் புகுத்தவர்களின் எண்ணிக்கையோ மொத்தம் 48. 

ஆத்திரம் அடங்காத கோபால கிருஷ்ண [நாயுடு] குடிசையின் கதவை பூட்டி தீ வைக்கும்படி அடியாட்களிடம் கட்டளை இட்டார். அதன்படி குடிசையின் கதவு அடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. குடிசைக்குள் இருந்த 48-பேர்களும் மரண பயத்தில் கதறினர். குடிசையை தீ ஆக்ரோஷமாக பிடித்துக் கொண்டு தகி தகித்துக் கொண்டு இருந்தது. 

தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் மக்கள் வெளியே வந்துவிடக் கூடும் என்று அடியாட்கள் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். இருப்பினும் குடிசையில் இருந்து ஆறுபேர் வெளியே ஓடி வந்திருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் பிடிபட்டு மீண்டும் குடிசைக்குள் தூக்கியெறியப்பட்டார்கள். ஒரு தாய் தன் ஒரு வயது குழந்தையை நெருப்பில் இருந்த காப்பாற்ற வெளியே வீசினாள். பாதகர்களோ குழந்தை என்றும் பார்க்காமல் மீண்டும் குடிசைக்குள்ளே தூக்கியெறிந்தார்கள். 

இக்காட்சிகளை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 3-சிறுகுழந்தைகளும் பயத்தில் கத்தின. அவர்களையும் தூக்கி நெருப்பில் போட்டது வன்முறைக்கூட்டம். பெருங்கூச்சலும், மரண ஓலமும் வெகுநேரத்திற்கு பின்பே அடங்கியது.

சம்பவம் நடைப்பெற்ற அன்று இரவு எட்டு மணிக்கு கீவளுர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் புகாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இரவு 12-மணிக்கே காவல் துறையினர் வந்தனர். கனன்று கொன்டிருந்த குடிசையின் உள்ளே பார்த்த போது மனித உயிர்கள் கருகி தீச்சுவாலைகள் சதைகளை சாம்பல்களாக்கி விட்டிருந்தன. இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. 

மறுநாள் காலை 10- மணி அளவில் எரிந்து சாம்பலாகிப் போயிருந்த குடிசையின் கதவு திறக்கப்பட்டது. மிகச் சிறிய குடிசைக்குள் கருகிய நிலையில் 44-மனித உடல்களை எண்ண முடியாத அளவில் எலும்பும் சாம்பல் குவியலுமாய் கிடக்கிறது. அதில் மாதாம்பாள் (வயது 25) என்ற பெண் தன் குழந்தை தீயில் கருகிவிடக் கூடாதே என்று இறுக்கி அணைத்தபடி குழந்தையோடு கருகி பிணமான பின்னும் அவளுக்குள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதாக நினைத்தபடி இறந்து போய் இருந்த காட்சியும் குழந்தை தாய் மார்பின் முலையில் வாய் வைத்தபடி இறந்து கிடந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உறைய வைத்தது.

பிணங்களின் உடல்களை பரிசோதிக்கும்படி அரசாங்க டாக்டருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரில் வந்த டாக்டர் இதற்குள் புகுந்து சாம்பலாகிப் போன உடல்களை பரிசோதிப்பது சிரமம் என மறுத்துவிட்டார். இன்னொரு பக்கம் காவல்துறையோ தோராயமாக 29-பேர்தான் இறந்திருக்கின்றனர் என்று கணக்கை குறைத்து எழுத முற்பட்டது. ´இது மக்களுக்குள்ளேயே நடந்த மோதல்´ என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கதை சொல்லியது. 

நாளேடுகளில் முகப்பு செய்திகளாக கீழ்வெண்மணி படுகொலை நிகழ்வு குறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. தமிழகம் அதிர்ந்தது. கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். தி.க மற்றும் கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள். சீனாவில் வானொலியில் தொடர்சியாக கீழ்வெண்மணி கொடூரம் குறித்து செய்தி வெளியிட்டது. 

உலக நாடுகள் இந்தியாவின் ஜாதித் திமீரில் நடந்த படுகொலையைக் கண்டு உறைந்து போனது. ‘பாட்ரியாட்´, ´நியுஏஜ்´ போன்ற டெல்லிப் பத்திரிகைகள் “நாட்டுக்கே அவமானம்” என்று எழுதின. கீழ்வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது பெரியாரின் வயது 90. [ஆதாரம்: பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி 1968-டிசம்பர் 27-ஆம் தேதியில் விடுதலையில் வந்திருக்கிறது.]

28.12.1968-அன்று கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைகள் குறித்து பெரியாரிடம் தெரிவிக்கப்பட்ட உடன் அன்று மாலையே வீடு திரும்பினார். கீழ்வெண்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இரு அறிக்கைகளும் வெளியிட்டார்.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கேரளாவில் நடந்து கொண்டிருந்தது. அதில் பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் சம்பவம் நடந்த அன்றே செய்தி தெரிந்ததும் மறுதினம் கீழ்வெண்மணிக்கு வந்தனர். 

கிட்டத்தட்ட 1-லட்சம் விவசாயக் கூலி தொழிலாளிகள் கீழ்வெண்மணியில் முற்றுகையிட்டனர். எப்போது என்ன நடக்கும் என்று உணரமுடியாத வண்ணம் பதட்ட நிலையில் இருந்தது. எல்லாரிடமும் மிராசுதாரையும், அடியாட்களையும் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு மிகுந்திருந்தது. 

கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமசாமி அம்மக்களை அமைதிப்படுத்தி நீண்ட நேரம் உரையாற்றினார். கொடூரமாக நடைப்பெற்ற நிகழ்வுக்கு சட்டப்படி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவல் நிலையத்தில் கீழ்வெண்மணி படுகொலைகள் குறித்து புகார் தரப்பட்டது. கீழ்வெண்மணி படுகொலையை நேரில் பார்த்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிக்கு வந்தார்கள்.

கீழ்வெண்மணி வன்முறை நடந்தபோது போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அண்ணா முதலமைச்சராக இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோபால கிருஷ்ண [நாயுடு] உட்பட 106-பேரை காவல் துறை கைது செய்தது. கைதானவர்களில் அதிகம் பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு கொடுமைகளுக்கு பிறகும் நிலசுராந்தாரர்கள் கூட்டம் வேறொரு மோசடி வேளையில் ஈடுபட்டது.

“விவசாயத் தொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச்சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக் கொன்றனர்” என்று நிலச்சுவான்தார்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க கவனமாக வார்த்தைகள் கையாளப்பட்டு ஊடகங்களில் செய்தி வரச் செய்தனர். நெருப்புக்கு இறையாக்கப்பட்டதற்கு காரணம் சொன்ன நிலச்சுவான்தார்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற 11-விவசாயத் தொழிலாளிகளுக்கு என்ன காரணத்தை சொல்ல முடிந்தது?

போலீஸ் ஐஜி கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் துப்பாக்கிகள் 42- இருப்பதாகவும், 28-ஆம் தேதி முடிய 5-துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்று கூறியதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். மிகக் கொடுமையாக நடந்த இப்படுகொலையில் முக்கியக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண [நாயுடு]வுக்கு 1970-இல் நாகப்பட்டினம் அமர்வு நீதிபதி குப்பண்ண [முதலியார்] 10-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். 

இத்தீர்ப்புக்கு எதிராக கோபால கிருஷ்ண [நாயுடு] சென்னை உயர்நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று மேல் முறையீடு செய்தார். 4-வருடங்கள் 3-மாதங்களாக விசாரணையில் இருந்த வழக்குக்கு 1975-ஏப்ரல் 6-ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மகராஜன் கோபால கிருஷ்ண [நாயுடு] மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

“Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene.” -‘Hindu´

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.” – ´இந்து´

மேலும் “கார், நிலம், உடைமை உள்ள பணக்காரர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்று புத்திசாலித்தனமான கருத்தையும் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு அதிர்ச்சியை கொடுப்பதாக இருந்தது. ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், நீதிக்கு எதிராகவும் வழங்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது? தமிழகத்தில் மக்களிடம் எந்த சலசலப்பும் இல்லை. 

விவசாயத் தொழிலாளர்கள் விரக்தியடைந்தனர். எத்தனை சாட்சிகள் இருந்தும் ஜனநாயகமும், சட்டமும் ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன. அதன் பின்னணி அரசியல் நகர்வுகள் கொஞ்சம் நஞ்சமல்ல….

நிலச்சுவான்தார்களின் கௌரவப் பிரச்சனையாக கருதப்பட்டு எப்படியும் கோபால கிருஷ்ண நாயுடுவை வெளிக்கொணருவதில் கங்கனம் கட்டிக் கொண்டிருந்தனர். அதில் வெற்றியும் பெற்றனர். சி.பி.எம் கட்சி கீழ்வெண்மணியில் கருகி போனவர்களுக்காக நினைவு இல்லம் கட்டியது மட்டுமே அம்மக்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.

கோபால கிருஷ்ண [நாயுடு] விடுதலை செய்யப்பட்டு 12-ஆண்டுகள் சென்ற நிலையில் 1980-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் தலைமறைவு புரட்சியாளர்களான நக்சல்பாரி இயக்க கொரில்லாக்கள் மிராசுதார் கோபால கிருஷ்ணனை தியாகிகள் நினைவிடத்தின் அருகில் வெட்டிக் கொன்றனர். பிணத்தின் அருகில் ´வினோத் மிஸ்ரா´ வாழ்க! என நச்சல்பாரி இயக்கத் தலைவரின் பெயரில் துண்டு அறிக்கைகளை வீசிவிட்டு சென்றனர்.

காவல் துறை வன்முறையாளர்கள் கோபால கிருஷ்ண நாயுடுவை கொன்றதாக குற்றம் சாட்டியது. தமிழகத்தில் தொழிலாளர்களோ இனிப்பு கொடுத்து கொண்டாடினர். 

கீழ்வெண்மணி படுகொலையும் அதற்கு சட்டம் கொடுத்த தீர்ப்பின் யோக்கியதையைக் குறித்தும் கேள்வி எழுப்ப முடியாத அலட்சியத்தில் தான் தமிழக மக்களின் மனிதாபிமானம் இருக்கிறது…

மக்களின் இழிநிலைக்கு அடிப்படையாக சாதித்திமிரை ஒழித்தெடுக்கும் வேலையை சாமர்த்தியமாக அலட்சியப்படுத்துவதன் மூலம் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அடக்கியே மீண்டும் மீண்டும் ஓர் மாயைக்குள் சமூகத்தை கட்டமைக்கிறது இந்திய தேசீயம்…

வர்க்கப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் நமக்கு சட்டத்தின் பங்களிப்பின் நம்பகத்தன்மையை குறித்து பல கேள்விகள் எழுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 64-வருடங்களாகிறது. இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள், ‘நாங்களும் மனிஷன்கள் தான்டா’ என்று போராடக்கூடிய நிலையில் தான் இன்றைய இந்திய ஜனநாயகம் இருக்கிறது.

முதல் பதிவு: தமிழச்சி

கோத்ரா: தொடரும் காவித் தீர்ப்புகள்

22 பிப்

2000 பேரை பலி வாங்கிய குஜராத் கலவரத்திற்கு மூல காரணமான, கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட சம்பவ வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த ரயில் எரிப்பில் தொடர்புடைய 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் இந்த வழக்கி்ல் குற்றம் சாட்டப்பட்ட 63 பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பையொட்டி குஜராத் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு பீகார் மாநிலம் தர்பங்காவிலிருந்து குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், கோத்ரா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது ரயிலின் எஸ்-6 பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்தப் பெட்டியில் இருந்த அயோத்திலிருந்து வந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கர்சேவகர்கள் 58 பேர் பிணமானார்கள்.

இதையடுத்து குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லீம் சமுதாயத்தினரை குறி வைத்து வேட்டையாடினர் சங் பரி்வார் அமைப்பினர். மிகக் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்டன. இதில் சிக்கி 2000 பேர் பலியானார்கள். கலவரத்தில் 254 இந்துக்களும் பலியானார்கள்.

முதலில் இந்த வழக்கை, திட்டமிடாத தாக்குதலாக எப்ஐஆர் பதிவு செய்தது போலீஸ். ஆனால் பின்னர் குஜராத் அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுப் படை, இதை முஸ்லீம் அமைப்பு ஒன்று திட்டமிட்டு செய்ததாகக் கூறியது.

இந்த நிலையில் 2005ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அமைத்த கமிஷன் தனது விசாரணையில் இது விபத்தே என்று தெரிவித்தது. ஆனால் இந்த கமிஷன் சட்டத்திற்குப் புறம்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நீதி விசாரணைக் கமிட்டி, இந்த சம்பவம் திட்டமிடப்படாதது, தற்செயலாக நடந்தது என்று தெரிவித்தது.

ஆனால் 2008ம் ஆண்டு மோடி அரசு அமைத்த புதிய கமிஷன், முதலில் அமைக்கப்பட்ட எஸ்ஐடியின் கூற்றையே ஏற்று, இது திட்டமிடப்பட்ட சதியே என்று தெரிவித்தது.

இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றம், பொடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் கூறிய கூற்றை (திட்டமிடபப்பட்ட சதி அல்ல என்று கூறப்பட்டிருந்ததை) ஏற்றுக் கொண்டது.

இந்தப் பின்னணியில் இந்த ரயில் எரிப்பு சம்பவம் விபத்தா அல்லது சதியா என்ற வழக்கில் இன்று சிறப்பு விரைவு நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பி.ஆர்.பாட்டீல் தீர்ப்பை வழங்கினார்.

அவர் கூறுகையில், ஐபிசி 302 பிரிவின்படி 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். 63 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்ட சதி என்பதை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மெளலவி உமர்ஜி விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் 95 பேர் மீது விசாரணை நடந்து வந்தது. அவர்களில் 80 பேர் கைது செய்யப்பட்டு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 15 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர். 5 பேர் சிறார்களாக அறிவிக்கப்பட்டு சிறார் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 16 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

முதலில் அனைத்துக் குற்றவாளிகள் மீதும் பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இதை குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த அப்பீல் இன்னும் நிலுவையில் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் ஐபிசி மற்றும் இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கின் முக்கியத்துவம் கருதி சபர்மதி சிறை வளாகத்திற்குள்ளேயே சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு அங்கேயே விசாரணை நடந்து வந்தது.

2002 குஜராத் கலவரங்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வெளியாகியுள்ள முதல் வழக்கு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

************************************************

ஆக திட்டமிட்டு வெளியிலிருந்து தான் தீயிட்டு எரிக்கப்பட்டது என நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இது விபத்து என்றும், திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்றும் இருவேறுவிதமாக கமிசன்கள் சொல்லியிருந்த நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வெளியிலிருந்து எண்ணெய் ஊற்றி எரித்திருந்தால் பெட்டியில் வெளிப்புறம் முழுவதும் எரிந்திருக்கும், ஏனென்றால் வெளியிலிருந்து எண்ணெயை உள்ளே ஊற்றும் போது பெரும்பகுதி வெளியில்தான் வழியும். ஆனால் தீ ஜன்னல்களின் வழியாகவே தீ வெளியில் பரவியிருக்கிறது. இது பெட்டி உள்ளிருந்தே எரிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக காட்டும் ஆதாரம் என கமிசன்கள் தெரிவித்திருந்தன. மட்டுமல்லாது, இதைத்தொடர்ந்து நடந்த கலவர(!)த்திற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தங்களைச் செய்து தயாராக இருந்திருந்தார்கள் என்பதை தெகல்கா நிரூபித்திருக்கிறது. நம்புங்கள், ஆனாலும் முஸ்லீம்கள் தான் இதைச் செய்தார்கள் என்று.

மும்பை கலவரம், கோவை கலவரம், கோத்ரா என அனைத்திலும் கலவரத்திற்கான தூண்டுதல் என்ற பெயரில் முஸ்லீம்களுக்கு எதிரான வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால் கலவரம் என்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை வழக்குகள் மட்டும் பாதுகாப்பாக தூங்கிக் கொண்டிருக்கின்றன. நம்புங்கள், இந்தியா ஜனநாயக நாடு தான் என்று.

கருப்புப் பணம்: அரசுக்கு உச்ச நீதி மன்றம் கேள்வி; கூட்டு நாடகத்திற்கு சவடாலே வேள்வி

19 ஜன

நாட்டையே சூறையாடி வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக குவித்து வைத்துள்ளனர். இப்படிச் செய்தவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறது. இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் விஷயம் இது. அத்தனை நாடுகளிலும் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு தந்தேயாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக கூறியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த ராம்ஜெட்மலானி உள்ளிட்டோர் வெளிநாட்டு வங்கிகளில் குறிப்பாக லிச்சன்ஸ்டைன் வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், லிச்சன்ஸ்டைன் வங்கியில் ரூ. 70 லட்சம் கோடி கருப்புப் பணத்தை குறிப்பிட்ட சில இந்தியர்கள் குவித்து வைத்துள்ளனர். இவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் எவ்வளவு கருப்புப் பணம் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த விவரத்தை அந்த வங்கிய மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் அதை வெளியிடாமல் மறைத்து வருகிறது மத்திய அரசு. அதை தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை கடந்த முறை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, இதுகுறித்து பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. இதைத் தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் அரசின் உரிமையாகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

கருப்புப் பணத்தைக் குவித்து வைத்திருப்போர் குறித்த விவரத்தை சொல்வதில் உங்களுக்கு என்ன அவ்வளவு கஷ்டம். உடனடியாக யார் யார் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். அதை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விஷயம் என்று கூறியது.

இதையடுத்து சீலிட்ட கவரில் ஒரு பெயர்ப் பட்டியலை வைத்து அதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது. ஆனால் இதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. முழுமையான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிம்ன்றம்.

நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்புச் சட்டத்தின் கீழ் அரசு என்னவெல்லாம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை விலாவாரியாக விவரிக்க ஆரம்பித்தார்.

மேலும், லிச்சன்ஸ்டைன் வங்கியில் 26 பேர் போட்டு வைத்துள்ள வெறும் ரூ. 43 கோடி பணம் குறித்த விவரத்தை மட்டும் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு. இதைக் கேட்டதும் கடும் அதிருப்தி அடைந்தனர் நீதிபதிகள்.

இதுதான் உங்களிடம் உள்ளதா, இதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீதிபதிகள் கோபத்துடன் கேட்டனர். தொடர்நது அவர்கள் கூறுகையில், அரசு இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த மனு மீதான விசாரணையை நாங்கள் மேலும் விரிவபுடுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், முழுப் பட்டியலையும் கொடுக்க மத்திய அரசு தயங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். யாரெல்லாம் கருப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளனர் என்ற விவரத்தை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன்.

இதை ஏதோ வரிப் பிரச்சினை என்பது போல பார்க்கிறது, பேசுகிறது மத்திய அரசு. ஆனால் இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டி எடுத்துள்ளனர். இந்திய பொருளாதாரத்தையே திருடியுள்ளனர். அப்பட்டமான கொள்ளை இது. இதில் மத்திய அரசுக்கு என்ன சந்தேகம் உள்ளது. நாட்டையே சூறையாடி, சுரண்டி வெளிநாட்டு வங்கிகளில் போய்க் குவித்து வைத்துள்ளனர்.

அனைத்து நாட்டு வங்கிகளிலும் இந்தியர்களுக்கு உள்ள கணக்கு வழக்குகள், எவ்வளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தந்தேயாக வேண்டும்.

இதயத்தை சிதறடிக்கும் செயல் இது. இந்த செயலை மத்திய அரசு மறைக்க முயல்வதாக தெரிகிறது என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

********************************************

இந்த வெற்று சவடால்களால் என்ன பலன் கிடைக்கும் என்பது உச்சநீதி மன்றத்திற்கு நன்கு தெரிந்ததுதான். நாட்டு மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு விசயத்திலும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறும் நீதிமன்றம் பெருமுதலாளிகளுக்கு வழங்கும் சலுகைகளுக்கு எந்த சட்டத்திற்கும் உடன்படாதபோதும் அனுமதியளித்திருக்கிறது. வெளிநாட்டு கணக்குகளுக்கு எகிறிக் குதிக்கும் உச்சநீதி மன்றம், ஒவ்வொரு ஆண்டும் பலகோடிக்கணக்கில் வாராக்கடன் என்று அரசு தள்ளுபடி செய்கிறதே, யார் கடன்வாங்கி நொடித்துப்போனார்கள்? யாருக்கு எவ்வளவு கடன்பாக்கி என்ற விபரத்தைக் கேட்டு வாங்கி வெளியிடுமா?

அரசின் கொள்கை, செயல்பாடு எல்லாமும் நாட்டைக் கொள்ளையடித்து முதலாளிகளிடம் கொடுப்பது என்பது வெளிப்படையாகிவிட்ட பின்னரும் நீதிமன்றங்கள் இப்படி உதார் விடுவது; உண்மையான திருடனைத் தப்பவைப்பதற்காக திருடன் அதோ ஓடுகிறான் இதோ ஓடுகிறான் என கூச்சலிடுவதைப் போன்றதாகும்.

பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்

6 டிசம்பர்

Babri Masjid:  ... Babri Masjid”. Oil on

கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. சட்டப்படியான தீர்ப்பு, நியாயம், வரலாற்று உண்மை போன்றவைகளை மட்டும் அலகாபாத் கட்டப்பஞ்சாயத்து தகர்த்தெறியவில்லை, இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான இந்துத்துவ பார்ப்பனீய வெறித்தனத்தின் குறியீடான டிசம்பர் ஆறையும் கூட தகர்த்தெறிந்திருக்கிறது.

 

பாபர் என்றொரு மன்னன் இருந்தான் என்பதற்கு எல்லாவித ஆதாரங்களும் இருக்கின்றன. ராமன் என்றொருவன் இருந்தான் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. ஆனாலும் அவன் அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில் தான் பிறந்தான். இப்ராஹிம் லோடியால் தொடங்கப்பட்டு பாபரால் கட்டி முடிக்கப்பட்டது பாபரி மசூதி என்பதற்கு வரலாறு இருக்கிறது. அந்த மசூதி இந்து வெறியர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதற்கு வீடியோ ஆதாரம் கூட இருக்கிறது. ஆனாலும் அங்கு முஸ்லீம்களுக்கு இடமில்லை. பாபரி மசூதி சில நூற்றாண்டுகள் இருந்தது என்பதற்கு கண்ணால் கண்ட சாட்சிகள் கோடிப்பேர் உண்டு, கோவிலை இடித்துத்தான் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கு ஒற்றை ஒரு சான்று கூட இல்லை. ஆனாலும் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இந்த அயோக்கியத்தனத்தைத்தான் அலகாபாத் கட்டப்பஞ்சாயத்தின் அநீதிபதிகள் வெளித்தள்ளினார்கள். அமைதி இந்தியா முழுதும் மயான அமைதி.

 

தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்க வேண்டுமென அறிவு ஜீவிகள் தொடங்கி இடதுசாரிகள் என தங்களை அழைத்துக்கொள்வோர் வரை; நாளிதழ்கள் தொடங்கி நாடாள்பவர்கள் வரை அறிவுரை கூறினார்கள். சரியாக இருந்தால் ஏற்போம் தவறென்றால் கொதித்தெழுவோம் என எவரும் முழங்கவில்லை. நீதிமன்றங்களின் மீது நம்பிக்கையா? ஆண்டாண்டு காலமாக அம்மன்றங்களின் நீதிமீறல்களை கண்டுகொண்டிருந்த பின்னரும் நம்பிக்கை பிறந்ததெப்படி? அது நீதியல்ல காவி என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டிய பின்னரும் உப்புச்சப்பில்லாத வார்த்தைகளால் கடந்துபோக முடிந்ததெப்படி?

 

எந்த டிசம்பர் ஆறும் இடித்த‌ வெறிக்கு ஈடான வீரியத்தை கொண்டிருந்ததில்லை. மனுப்போடும் உள்ளீட்டைப் போன்ற‌ போராட்டங்கள் ஒப்புக்கு நடத்தப்பட்டன. ஒரு சடங்கைப்போல முடக்கப்பட்டன. காரணம் பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனாலேயே அவர்களால் பல்வேறு வடிவங்களில் கோரிக்கை விடுக்க மட்டுமே முடிந்திருந்தது. ஆனால் இந்த டிசம்பர் ஆறில் உள்ளதும் கரைந்து போனது. டிசம்பர் ஆறைத் தொடர்வோம் என்பவர்களால் கூட என்ன சொல்லிப் போராடுவது எனத்தெரியாமல் மறுகுகிறார்கள். தீர்ப்பு சரியில்லை என முனக முடிந்தவர்களால், அதை ஏற்க முடியாது எனத் திமிர முடியவில்லை. காரணம் பார்ப்பனீய சட்டகங்களுக்குள் அடைபட்டிருக்கும் அரசியல் வடிவத்திற்குள் அடங்கிக் கிடப்பதே அவர்களுக்கும் விருப்பம்.

 

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் ஜனவரி நான்கில் போராடப்போவதாக அறிவித்திருக்கிறது. அலகாபாத் அறிவித்தது தீர்ப்பல்ல கட்டப்பஞ்சாயத்து என அறிவிக்க வேண்டும், உச்சநீதிமன்றம் தானாகவே மேல்முறையீட்டை நடத்தி நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என்பது கோரிக்கைகளாம். அதுவும் டிசம்பர் ஆறில் போராடுவது அலகாபாத்திற்குப் பிறகு சடங்காகத் தெரியுமாம் அதனால் ஜனவரி நான்காம். கட்சித்தலைமைக்கு தலையாட்டியே பழக்கப்படுத்தப்பட்ட தொண்டனைப்போல், ஜமாத் தலைமை விளக்கமளித்துவிட்டால் அதை ஆறாம் கடமையாக வரித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், கேள்விகள் எழுவதில்லை. கடந்த பதினேழு ஆண்டுகளாக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒப்புக்கும் மதிக்காத நீதிமன்றங்கள் ஜனவரி நாலின் எழுச்சியை(!) மட்டும் புரிந்துகொள்ளுமா? கடந்த அறுபது ஆண்டுகளாக தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் சட்டத்தையும் நீதியையும் குப்பையில் வீசிவிட்டு காவிக்கு சாமரம் வீசியதை மௌனமாய் அங்கீகரித்துக்கொண்டிருந்த உச்சநீதிமன்றம் இந்த மேல் முறையீட்டில் மட்டும் சட்டப்படியான நீதியை வழங்கிவிடுமா? அப்படி நம்பிவிடக்கூட எந்த இடமும் இல்லாத நிலையில்; அலகாபாத்திற்குப் பிறகு டிசம்பர் ஆறு சடங்காய் தெரியும் வேறு ஒரு நாளில் என்றால் கவனிக்கப்படும் என்பதில் கொஞ்சமேனும் பொருள் இருக்க முடியுமா? இதுவரை டிசம்பர் ஆறு என்றால் முஸ்லீம்கள் எதிர்ப்புக்காட்டுவார்கள் எனும் எதிர்பார்ப்பில் ஒரு தொடர்ச்சி இருந்தது. ஜனவரி நான்கு போராட்டங்கள் தொடருமா? நாங்கள் கூறும் நீதியை அனுசரித்தால் வாழலாம் என பார்பனீயம் ஒருமுறையில் கூறுகிறது. அதையே வேறொரு முறையில் கூறுகிறது தௌஹீத் ஜமாத்.

 

 

டிசம்பர் ஆறு என்பது வெறுமனே ஒரு நிகழ்வு நடந்த நாளல்ல. அது ஒரு குறியீடு. பார்ப்பனீய அடக்குமுறையின் குறியீடு. தாமரை என்றதும் பாஜகவின் சின்னம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது புத்தரின் குறியீடு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தாமரை என்பது புத்தரைக் குறிக்கவே வரலாற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய தேர்தல் சின்னமாக்கியதன் மூலம் புத்தரிடமிருந்து அவரின் குறியீட்டை நீக்கியிருக்கிறது பார்ப்பனீயம். டிசம்பர் ஆறு என்றால் பாபரி மசூதி இடிக்கப்பட்ட நாள் என அனைவருக்கும் தெரியும். ஆனால் 1992 க்கு முன்னால் டிசம்பர் ஆறு என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? பார்ப்பனீயத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுதும் உழைத்த டாக்டர் அம்பேத்காரின் நினைவு நாள் அது. தன் வெறித்தனத்தைக்காட்ட அந்த நாளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அந்த நாள் அம்பேத்காரின் குறியீடாக பயன்படுத்தப்படுவதைத் தடுத்திருக்கிறது பார்ப்பனீயம். ஆனால் அந்த டிசம்பர் ஆறு இந்திய முஸ்லீம்களுக்கு எதிரான பார்ப்பனீய அடக்குமுறையின் குறியீடாக கடந்த பதினேழு ஆண்டுகளாக முஸ்லீம்களால் பயன்படுத்தப்பட்டுவந்தது. அதை அழித்துக்கொள்ள பார்ப்பனீயத்திற்கு வாய்ப்பை வழங்குகின்றன இந்த மதவாதம் பேசும் அமைப்புகள். இந்தக் குறியீடு இல்லையென்றால் அடுத்த தலைமுறை பாபரி மசூதி இடிக்கப்பட்டதை மறக்கும், அதற்கடுத்த தலைமுறை பார்ப்பனீய வெறியாட்டத்தை மறக்கும். வரலாறு நெடுக பார்ப்பனியம் இப்படித்தான் தன்னை மறைத்து வந்திருக்கிறது. வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள், பௌத்தம் முதல் சாங்கியம் ஈறாக எத்தனை மதங்களை, கோட்பாடுகளை தின்று செரித்திருக்கிறது பார்ப்பனீயம் என்பதை.

 

இந்தியாவின் நிர்வாக அமைப்புகள் பார்ப்பனியமயமாக்கப்பட்டு நீண்டகாலமாகிறது. சட்டரீதியாக அதை எதிர்த்து முறியடிக்க முடியாத அளவிற்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக பலம் குன்றிய இடங்களில் கூட சட்டத்தை மீறி தன்னை நிலைப்படுத்தியிருக்கிறது என்பதற்கு பாபர் மசூதி வழக்கு உட்பட பலநூறு எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். முஸ்லீம்கள் மத அடிப்படையில் நடத்தும் அடையாளப் போராட்டங்களால் பார்ப்பனீயத்தை அசைத்துவிடக்கூட முடியாது. ஆனால் அதை வீழ்த்தி முடிக்காதவரை உழைக்கும் மக்களுக்கு ஒரு விடிவும் இல்லை. இதில் முஸ்லீம்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தீண்டாமைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பொது நோக்கிற்காக மக்கள் ஒன்றுபடுவதை தடுத்துவிட‌ உலகமயம் முயன்றுகொண்டே இருக்கிறது. இவைகளுக்கு எதிராக ஒன்றுபடாமல், சமரசமற்று போராடாமல் மத அடையாளங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஒப்புக்கு நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. ஒரு பள்ளிவாசல் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டு விடுவதால் ஏழை முஸ்லீம்களின் வாழ்வில் நிம்மதி மலர்ந்துவிடுமா? மக்கள் வாழ்வுக்கான வாய்ப்புகளைப் பறித்துச் சுரண்டும் உலகமயமும், மதரீதியாக மக்களை ஒடுக்க முயலும் பார்ப்பனீயமும் கைகோர்த்துச் செயல்படும் போது அவைகளை எதிர்க்கும் போராட்டம் மட்டும் வீரியமின்றி தனித்தனியாய் நடத்துவது யாருக்கு வாய்ப்பை வழங்கும்?

 

வாருங்கள் முஸ்லீம்களே! நம் வளமான வாழ்வுக்கு எதிராக நிற்கும் அனைத்தையும் நொறுக்கி வீழ்த்தும் போராட்டங்களை கட்டியமைத்து முன்னேறுவதற்கு நாம் ஒன்றிணையவேண்டியது அவசியம். மக்களாய் பாட்டாளிகளாய் களத்தில் நிற்பது மிக அவசியம்.

 

நன்றி: செங்கொடி

ஒரு ஓவியக் கண்காட்சியும் சில கார்ட்டூன்களும்

11 அக்

ஓவியம் என்றதும் வண்ண‌ மலர்கள், பெண்கள், பனிபடர்ந்த சிகரங்கள், அழகுக் காட்சிகள் என நினைத்தீர்களா. இல்லை புரியவில்லை என்று சொன்னால் அறிவில்லை என்றாகும் என்பதால் ஆஹா என்று தலையாட்டும், புரிந்துவிட‌க்கூடாது எனும் நோக்கில் வரையப்படும் மார்டன் ஆர்ட் என நினைத்தீர்களா?

இவை உங்கள் முகத்திலறைந்து உண்மைகளைப் பேசுபவை. உறைந்து உலவும் துரோகங்களை உலுக்கி எடுத்து அம்பலப்படுத்துபவை. உங்களை அரசியல் விழிப்புண‌ர்வுக்கு ஆற்றுப்படுத்துபவை. காணுங்கள்.

This slideshow requires JavaScript.

 

 

நன்றி:
வினவு
சித்திரக்கூடம்

கல்விக்கட்டணம்: தனியார் பள்ளிக்கு ஆதரவாக ‘பெறப்பட்ட’ தீர்ப்புக்கு ஆப்பு

6 அக்

தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிட்டி பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது. பள்ளிகளின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே இந்தக் கட்டணத்தை நிர்ணயித்ததாக தமிழக அரசும் விளக்கம் அளித்தது.

ஆனால் கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளிகள் மறுத்தன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். வழக்கை ஏற்றுக் கொண்டநீதிமன்றம்  கல்வி கட்டணத்துக்கு இடைக்கால தடை விதித்தது. உடனே பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்திவிட்டன. இதனை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இடைக்கால தடையை நீக்ககோரி பெற்றோர் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை  நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், “நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும்” என்று அறிவித்துள்ளது.

“தனியார் பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது”, என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

************************************************************************

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளி முதலாளிகள் நீதிமன்றத்தை அணுகிய போது எந்த விதிமுறைகளையும், நடைமுறைகளையும் கணக்கிலெடுத்திக்கொள்ளாமல் (வேறு எதை கணக்கில் கொண்டார்?) நீதிபதி(!) வாசுகி இடைக்கால தடைவிதித்தார், மேலும் இறுதித்தீர்ப்பையும் நவம்பர் 29க்கு தள்ளிவைத்தார். இதற்கு எதிரான வழக்கில் தான் இருவர் அடங்கிய நீதிபதிகள் குழு வாசுகியின் தீர்ப்பு சரியானதல்ல என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பெற்றோரின் போராட்டம் இந்த மட்டில் முடியக்கூடியதாக இருக்கக்கூடாது. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை மக்களுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்குவது அரசின் கடமை. அந்த இலக்கை அடையும்வரை ஓய்வு தகுமானதல்ல.

கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு அறுபது ஆண்டுகள் எதற்கு?

1 அக்


ஆயிரம் ஆயிரமாய் காவலர்கள் பாதுகாப்பு, ஊர்வலம் செல்லத்தடை, ஊரடங்கு என ஏகத்துக்கும் பீதியூட்டப்பட்ட தீர்ப்பு(!) வந்தேவிட்டது. சுற்றிவளைத்து இந்துப் பாசிச வெறியர்களின் செயல் சரியானது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ள‌லாம். என்பதுதான் தீர்ப்பின் சாராம்சம். மூன்று நீதிபதிகள் (அதில் ஒருவர் முஸ்லீம்) அடங்கிய பென்ச் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மசூதியாக இருந்ததை உடைத்துத் தள்ளிவிட்டு அந்த இடம் இந்துக்களுக்குச் சொந்தம் கோவில் கட்டிக்கொள்ளுங்கள், போனால் போகிறதென்று முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் தருகிறோம் என்று சொன்னால் அதை தீர்ப்பு என்று கொள்ள முடியாது, கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்.


1992 மசூதி இடிப்பிற்கு பிறகு இந்தியா டுடே ஒரு கணிப்பை தொடர்ச்சியாக நடத்தியது. நடுநிலைமை என்ற பெயரில் அதில் கருத்துக்கூறிய அனைவரும் அந்த‌ இடத்தில் கல்லூரி கட்டவேண்டும், கக்கூசு கட்டவேண்டும் என்றார்கள். மசூதியை இடித்த பார்ப்பனிய வெறித்தனத்தை மறைத்து முற்போக்கு ஆய்வாக அந்த ஏடு அந்தக் கணிப்பை வெளியிட்டது. அந்த அளவுக்கான திரை மறைப்புகள் கூட தேவையின்றி நிர்வாணமாகவே தங்கள் பார்ப்பனச் சாய்வை வெளிக்காட்டியிருக்கிறது அலஹாபாத் உயர் நீதிமன்றம்.


இந்திய அரசியல் சாசனம் ஒன்று 1947 ஆகஸ்ட் 15 ல் இருந்தபடியே வண‌க்கத்தலங்கள் பராமரிக்கப்படும் என இருக்கிறது. இது இந்துக் கோவில்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதி. ஏனென்றால் அனேக இந்துக் கோவிலகள் சமணம் பௌத்தம் உட்பட பிற மத வணக்கத்தலங்களை இடித்துக் கட்டப்பட்டவைதான். ஆனால் 1992 வரை மசூதியாக இருந்திருக்கிறது. 1951 வரை வண‌க்கம் நடத்தப்பட்டு வந்திருக்கிறது, அதுவும் 1949ல் மசூதிக்குள் இரவோடிரவாக திருட்டுத்தனமாக உள்ளே வைக்கப்பட்ட ராமன் சிலையின் காரணமாக ஏற்பட்ட வழக்கில் தடைவிதிக்கப்பட்டதினால் தான் 1951க்கு பிறகு வணக்கம் நடத்தப்படவில்லை. ஆனாலும் இந்த விபரங்களோ, விதியோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.


ராமர் கோவிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று ஒரு நீதிபதியும், ராமர் கோவில் இடிக்கப்படவில்லை ஆனால் ஏற்கனவே சிதிலமடைந்திருந்த கோவிலின் மேல் மசூதி எழுப்பப்பட்டது என மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பை கூறியிருக்கின்றனர். ஆனால் மூவரும் ஒன்றுபடும் இடம் அந்த இடத்தில் ஏற்கனவே கோவில் இருந்தது என்பதை தொல்லியில் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன என்பதுதான். தொல்லியல் துறை எந்த தடயங்களின் அடிப்படையில் கோவில் இருந்தது எனும் முடிவை வந்தடைந்தது? தொல்லியல் துறையின் ஆய்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்பட்டதாய் தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செய்யப்பட்ட ரகசிய ஆய்வு என்றால், நாட்டின் மொத்த மக்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கும் ஒரு பிரச்சனையில் ரகசிய ஆய்வின் அடிப்படையில் தீர்ப்பளிப்பது என்ன விதமான நடைமுறை? ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் கோவிலை இடித்துத்தான் அல்லது கோவில் இருந்த இடத்தில் தான் மசூதி கட்டப்பட்டது என்று தொல்லியல் துறை நீரூபித்திருக்கிறது என்றால் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒருபங்கு இடம் கொடுக்கவேண்டிய அவசியமென்ன?


அந்த இடம் யாருக்குச் சொந்தமானது என்பதில் இரு தரப்புக்குமே சரியான ஆவணங்கள் இல்லை என தங்கள் தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள். ஆனால் கடைசி அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவ உரிமை முஸ்லீம்களிடம் இருக்கிறது. எனும்போது இந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பின் பொருள் என்ன? அப்சல் குருவின் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றாலும் தேசத்தின் பெரும்பான்மை மனசாட்சியின் விருப்பத்தின் அடிப்படையில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டதே அதே அடிப்படையில் பெரும்பான்மை இந்துக்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இடம் ஒதுக்கி தீர்ப்பளிக்கப்பட்டதா? ஆயிரமாயிரம் ஆண்டுகள் வசித்துவரும் மலைவனம் என்றாலும் பழங்குடி மக்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் ஆளும் வர்க்கங்களின் விருப்பிற்கேற்ப அந்த மலைகளும் வனங்களும் பன்னாட்டு உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தம் என்று பசுமை வேட்டை நடத்துகிறதே அரசு, அந்த அடிப்படையில் ஆளும் வர்க்கங்களின் விருப்பம் என்பதால் இந்துக்களுக்கு கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டதா?


இது நல்லதொரு தீர்ப்பு. ஏதாவது ஒரு தரப்பாக தீர்ப்பளித்து நாட்டில் மீண்டும் கலவரங்களும் கொலைகளும் நடந்து அமைதி குலைந்துபோகாமல் இரண்டு தரப்பையும் அனுசரித்து நாட்டின் பொது அமைதியையும் முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பு என்று கூட சிலர் கருதலாம். இந்துக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் கோவில் கட்டினால், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் மசூதி கட்டினால் பொது அமைதியும் முன்னேற்றமும் பாதுகாக்கப்படும் என கருதுகிறார்களா? ஒரு இடம் யாருக்குச் சொந்தம் எனும் பிரச்சனையில் நியாயமான தீர்ப்பளித்தால் நாட்டின் அமைதி கெடும் என்றால் நாட்டில் அரசின் பணி என்ன? காஷ்மீரில், வட கிழக்கு மாநிலங்களில் தங்களுக்கு உரிமைகள் வேண்டும் சுதந்திரம் வேண்டும் என போராடும் மக்களை அமைதியை கெடுப்பதாக, நாட்டை துண்டாட நினைப்பதாக கூறித்தானே ராணுவத்தி நிறுத்தி நசுக்கி வருகிறது அரசு. என்றால் பொது அமைதி என்பதன் பொருள் என்ன? மக்களுக்கு விரோதமானதாக இருந்தாலும் அரசை எதிர்க்கக்கூடாது என்பது தான் பொது அமைதியா?


இந்தத்தீர்ப்பின் மூலம் இரண்டு சாதகமான அம்சங்களை இந்துப்பாசிசங்கள் பெற்றிருக்கின்றன. ஒன்று, புராணக் குப்பைகளை அடிப்படையாக வைத்து சேதுக்கால்வாய் பணிகளுக்கு தடைவிதிக்கவைத்த பார்பனீயம் பரப்பிவரும், வரலாற்றில் இருந்திராத கற்பனைப் பாத்திரமான ராமனுக்கு, இந்த இடத்தில் தான் அவன் பிறந்தான் என்று சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றிருப்பது. இரண்டு கோவில் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருப்பதன் மூலம், ஏற்கனவே இந்து வானரங்கள் காசி, மதுரா என கொக்கரித்து வரும் நிலையில் தீர்ப்புக்கு எதிர்வினையாக முஸ்லீம்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது அதிகரிக்கும். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் பிற மதத்தினருடன் கலந்து பழகும் நிலை தவிர்க்கப்பட்டு, அவர்கள் இந்து எனும் அடைமொழிக்குள்ளே அடைபட்டுக்கிடக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.


ஆயிரத்துச் சொச்சம் சதுர அடி நிலம் கிடைத்திருக்கிறது என்பதல்ல இந்தத்தீர்ப்பு. அதிகாரவர்க்கத்திலும் அரசு எந்திரத்திலும் பார்ப்பனப் பாசிசங்களின் மேலாதிக்கம் மீண்டும் ஒருமுறை நிரூபணப்பட்டிருக்கிறது. உழைக்கும் மக்களாய் முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்புப்போர் நடத்தாதவரை இந்தப்பாசிசங்களை வீழ்த்தமுடியாது என்பதுதான் இத்தீர்ப்பின் அடிநாதமாய் ஒலிக்கிறது.

தொடர்புடைய கட்டுரை

அயோத்தி தீர்ப்பு வருகிறது: உஷார்

22 செப்

அயோத்தியி்ல் பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம்  வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கவிருப்பதால் அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழகத்தில் டி.ஜி.பி. லத்திகா சரண் உத்திரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணி்ப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களான நெல்லை,கன்னியாகுமரி , தூத்துக்குடியில் பாதுகாப்பு க்காக 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை டி.ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் எஸ்.பி.க்கள் ஆஸ்ரா கார்க்-நெல்லை, ராஜேந்திரன்-கன்னியாகுமரி, கபில்குமார் சரத்கார்-தூத்துக்குடி ஆகியோர் மேற்பார்வையில் முக்கிய பகுதிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்படுகின்றன. வாகன சோதனையும் நடத்தப்பட உள்ளது.

மணிமுத்தாறில் 500 போலீசார் அடங்கிய 4 பட்டாலியன்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். மேலும் ஊர்க் காவல்படையினர் மற்றும் 400 தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட், பேருந்து நிலையம் மற்றும் மேம்பாலங்கள் உள்ளி்ட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு பணிகள் தொடரும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெல்லை மாநகரத்தில் கமிஷனர் அவினாஷ் குமார் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

***********************************************************

கடந்த ஒரு வாரமாகவே அரசுகள் காவல்துறை மூலம் நிகழக்கூடாத ஏதோ ஒன்று நிகழப்போவதைப்போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. மத அமைப்புகள் அமைதி காக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றன. தீர்ப்பு என்ன விதமாக இருந்தாலும் அதற்கு ஒரு மதிப்பும் இருக்கப்போவதில்லை. அரசியல் நலன்களுக்காக தீர்ப்புகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்வரை மக்களுக்கு அத்தீர்ப்புகளினால் பலனேதும் விளையப்போவதில்லை.

ஒரு பிரிவோ அல்லது இரண்டுமோ தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்யத்தான் போகின்றன. மீண்டும் வழக்கு, விசாரணை பல ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு மீண்டும் முறையீடு. வழக்கு, விசாரணை, தீர்ப்பு; வழக்கு, விசாரணை, தீர்ப்பு. அமைதியாக இருந்து முறையீடு மட்டும் செய்யுங்கள். அரசின் விருப்பம் இதுதான். அயோத்திக்கு மட்டுமல்ல, அனைத்திற்கும் அரசின் விருப்பம் இதுதான். மக்களுக்கோ……?

வாழ்க ஜனநாயகம்.

அயோத்தி தீர்ப்பு மதவெறித்தீயை தணிக்குமா? தூண்டுமா?

13 செப்

அயோத்தி விவகார வழக்கில் வரும் 24ம் தேதி வழங்கப்படும் தீர்ப்பை நாட்டில் அனைத்து தரப்பினரும் பதற்றத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது.

மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந் நிலையில் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ், சர்ச்சைக்குரிய இடத்தில் 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்  இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகள் மற்றும் அனைத்து இடைக்கால உத்தரவுகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.

மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே சர்ச்சைக்குரிய நிலம் இருக்க வேண்டும் என்றும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட லக்னெள பெஞ்ச் தீர்ப்பளிக்கும் வரை இந்த நிலைமையே நீடிக்க வேண்டும் என்றும் 1994ம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் லக்னெள பெஞ்ச் தான் விசாரித்து வருகிறது.

1538ம் ஆண்டில் மசூதியை கட்டும் முன்பு அங்கு கோவில் இருந்ததா?, பாபர் மசூதி கமிட்டிக்கு 1961ம் ஆண்டில் வழக்குத் தொடர உரிமை உள்ளதா? போன்ற அம்சங்கள் குறித்து விசாரணையின் போது ஆராயப்பட்டன.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், வரும் 24ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைத்து மட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

மசூதியை இடித்தபோது உத்தரப்பிரதேசத்தில் பாஜக சார்பில் முதல்வராக இருந்த கல்யாண் சிங் கூறுகையில், ஒருவேளை இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், ராமர் கோவிலை கட்டுவதற்கு வசதியாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ராமர் மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாபர் மசூதி நடவடிக்கை  கமிட்டி சார்பாக வழக்கு தொடர்ந்த முகமது காசிம் அன்சாரி கூறுகையில், தீர்ப்பு பாதகமாக வந்தால் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று முஸ்லிம் சட்ட வாரியமும் பாபர் மசூதி கமிட்டியும் கேட்டுக் கொள்கிறது. தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்றார்.

இந் நிலையில் தீர்ப்பு வெளியானவுடன் நாடு முழுவதும் பதற்றம் ஏற்படும் என்பதால் தேசம் முழுவதுமே தீவிர பாதுகாப்பு  ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியிலும் கடும் பாதுகாப்பு:

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் 63,000 மத்திய போலீஸ் படை தேவை என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இதை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. மற்ற மாநிலங்களுக்கும் காஷ்மீர் மாநிலத்திலும், வடகிழக்கு பகுதியிலும் மற்றும் சர்வதேச எல்லையிலும் ஏற்கனவே ஏராளமான அளவில் மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கும் மத்திய போலீஸ் படைகளை அனுப்ப வேண்டியுள்ளதால் ஒரு மாநிலத்துக்கு மட்டும் 63,000 போலீஸாரை அனுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டது.

அயோத்தி பாதுகாப்புக்காக 5,000 மத்திய ரிசர்வ் படை போலீசார் அனுப்பப்படுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

**********************************************************

தீர்ப்பு எந்த விதத்தில் இருந்தாலும் இருவருமே அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பிரச்சையை தீர்த்துவைக்கும் நோக்கில் தீர்ப்பு அமையப்போவதில்லை, நீர்த்துப்போகச் செய்யும் முனைப்பிலேயே தீர்ப்பு இருக்கும். இது ஆரூடமல்ல. ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய தொல்லியல் துறையின் அறிக்கையை கேட்கும் நீதிமன்றங்களின் நினைப்பிலிருந்து தீர்ப்பு மட்டும் விலகி நிற்குமா என்ன?

ஆகஸ்ட் 15, 1947ல் இருந்த‌படியே வணக்கத்தலங்கள் மதிக்கப்படும் என்று அரசியல் சாசனம் இருக்கிறது. கோவிலை இடித்துத்தான் பள்ளி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. பார்ப்பனிய சதித்திட்டத்தின்படி படிப்படியாக வணக்கம் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்துத்தகர்க்கப்பட்டது.

பார்ப்பன பாஸிச சதிகளை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்து என தம்மை நம்பிக்கொள்வோரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ ஒன்றிணைந்து இந்த பார்ப்பனிய, அதிகாரவர்க்க கூட்டை முறியடிக்க முடியாது. வர்க்க அடிப்படையில் பாட்டாளி வர்க்கமாய் அணிதிரள்வதன் மூலம் மட்டுமே சரியான தீர்ப்பையும், தீர்வையும் பெறமுடியும்.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு, மரண தண்டனை உறுதியானது

30 ஆக

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினருக்கும் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் தொடர்பான வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளின் பஸ் அதிமுகவினரால் இலக்கியம்பட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டு எரிக்கப்பட்டது. இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாயினர்.

இதுதொடர்பாக 31 அதிமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், இந்த வழக்கை அதிமுக அரசு இழுத்தடித்தது. வழக்கில் தொடர்புடைய அதிமுகவினரை காக்க, பலியான மாணவிகளின் குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்களில் அதிமுக ஆட்சி ஈடுபட்டது.

மேலும் வழக்கை நடத்த போலீஸாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதையடுத்து வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் மாற்றியது.

வழக்கை சேலம் முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா விசாரித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்பட 123 பேர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர்.

எல்லா பிரச்சனைகளையும் மீறி இந்த வழக்க விசாரணை நடந்தது. இதில் வழக்கில் தர்மபுரி நகர அதிமுக செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன் , முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும் தலா ரூ.59,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் 25 அதிமுகவினருக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தனித்தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர்களுக்கு தலா 7 ஆண்டு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து 2 பேர் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஒருவர் விபத்தில் மரணமடைந்துவிட்டார்.

இந்த தண்டனைகளை எதிர்த்து அவர்கள் 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதில் 25 பேரின் 7 ஆண்டு தண்டனை 2 ஆண்டாக குறைக்கப்பட்டது. ஆனால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து 28 பேரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தங்களது மனுவில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரியிருந்தனர்.

மற்ற 25 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள தங்களது தீ்ர்ப்பில், பஸ்ஸை எரித்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இவர்கள் தங்களது தண்டனையைக் குறைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரிய மற்ற 25 அதிமுகவினரின் மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் உறுதி செய்து தீ்ர்ப்பளித்தனர்.

திட்டமிட்டு எரிக்கப்பட்ட பேருந்து-நீதிபதிகள்:

நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இந்தப் பேருந்து திட்டமிட்டே எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்துக்கு எதிரான காட்டுமிரண்டித்தனமான கொடூர செயல். இதுபோன்ற செயல்கள் இனி நடக்கவே கூடாது.

தங்களது சுய லாபத்துக்காக அப்பாவி மாணவிகளை படுகொலை செய்தது கொடூரமானது. இந்த வழக்கில் ஏற்கனவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை நியாயமானதே என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

*********************************************************

பல ஆண்டுகள் கடந்து இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. பல்வேறு இழுத்தடிப்புகள், முடக்கும் முயற்சிகள் என பலவற்றைக் கடந்து தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மூவருக்கான தூக்கும் ஏனையவர்களுக்கான தண்டனையும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்கக் கூடியது தான். இதுவரை அதிமுக எனும் கட்சி இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் கூறவில்லை. அவர்களை குற்றம் செய்யத் தூண்டிய உள்ளுறையான விசயம் கட்சி விசுவாசம் தான், தலைமையின் கருத்தைக் கவரவேண்டும் எனும் முனைப்புதான். அவர்கள் கட்சி விசுவாசிகள் எனும் அடிப்படையில் தான் அதிமுக ஆட்சி இருந்தபோது இந்த வழக்கை தாமதப்படுத்துவதற்கும் நீர்த்துப்போக வைப்பதற்கும் முயற்சி செய்யப்பட்டது. அந்த வகையில் அந்தக் கட்சிக்கும் இந்த குற்ற நிகழ்வில் பங்கு உண்டு. கட்சி கொல்லச் சொல்லவில்லை, பேரூந்தை எரிக்கச் சொல்லவில்லை என்று கூறிவிட்டு விலகிவிட முடியாது. தீக்குளிப்புகளைக் கூட கட்சி செய்யச்சொல்வதில்லைதான், ஆனாலும் கட்சியினர் தீக்குளித்தால் சென்று சந்தித்து குடும்பத்திற்கு கட்சி சார்பில் பண உதவி செய்வதில்லையா? இந்த வழக்கிலும் கூட கட்சி உதவிகள் செய்திருக்கக் கூடும் என்றால் குற்ற நடவடிக்கையில் கட்சிக்கு எப்படி பங்கில்லாமல் போகும்?

குற்றத்தை தடுக்காத காவலர்களுக்கு கண்டனம் மட்டும்தானா? என்றும் கூட சிலர் நினைக்கலாம். தவிர்க்கவியலாத நிலையைத் தவிர வேறு எதற்காகவும் காவல்துறை தண்டிக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை.

இது அதிமுக எனும் தனித்த ஒரு கட்சிக்கு மட்டுமல்ல, எந்த ஒரு ஓட்டுக்கட்சியும் இப்படித்தான் நடந்துகொள்ளும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை.