தொகுப்பு | ஒக்ரோபர், 2012

குடி: கௌடில்யன் முதல் டாஸ்மாக் வரை!

26 அக்

 

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்என்னவேண்டுமானாலும் செய்வேன்அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

– 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக ‘போராடும்’ டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!

அன்றைய தினம் ஏறக்குறைய நூறு பேர் அந்த டாஸ்மாக் கடையின் பின்புறம் இருந்தார்கள். அவர்கள் அனைவரது மனநிலையும் இதுதான். அவர்கள் உச்சரித்த எண்ணற்ற வார்த்தைகளின் சாராம்ச பொருளும் இதுவேதான்.

உழைக்கும் மக்களில் ஆரம்பித்து, அதிகார வர்க்க எடுபிடிகள் வரை சகல தரப்பினரும் அங்கு சிதறியிருந்தார்கள். மாணவர்களில் தொடங்கி வயதானவர்கள் முடிய அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். இரைச்சல்களுக்கிடையில் தங்கள் முதலாளிகளை திட்டினார்கள். மேலாளரின் கன்னத்தில் அறைந்தார்கள். மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். கல்லூரித் தாளாளரின் கைகளை ஒடித்தார்கள். காதலியுடன் முரண்பட்டார்கள். மனைவியை அடித்தார்கள். மகனுக்காக ஏங்கினார்கள். மகளுக்காக துடித்தார்கள். அப்பாவை அடித்தார்கள். அம்மாவை கொஞ்சினார்கள். அண்ணனை கொன்றார்கள். அக்காவை போற்றினார்கள். தங்கையை முத்தமிட்டார்கள். தம்பியை உதைத்தார்கள். மாநில முதல்வரை அவமானப்படுத்தினார்கள். பிரதமரின் கோவணத்தை அவிழ்த்தார்கள். மத்திய – மாநில அமைச்சர்களின் வீட்டு பெண்களை சந்திக்கு இழுத்தார்கள். கை கோர்த்தார்கள். கை குலுக்கினார்கள். கட்டிப் பிடித்தார்கள். கட்டி உருண்டார்கள். சிரித்தார்கள். அழுதார்கள். கதறினார்கள். கலைந்தார்கள்.

மறுநாள் அல்லது வரும் வார இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மீண்டும் கூடுவார்கள். திரும்பவும் கனவு காண்பார்கள். ஒரே மனநிலையை பலதரப்பட்ட வார்த்தைகளில் வெளிப்படுத்துவார்கள்.

இது ஏதோ ஒரு டாஸ்மாக் கடையில், என்றேனும் ஒருநாள் நடந்த – நடக்கும் – சம்பவமல்ல. இதுதான் தமிழகத்திலுள்ள 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளையும் சுற்றி அன்றாடம் நிகழும் நிகழ்வுகள். நகரங்களில் உள்ள 3,562 டாஸ்மாக் கடைகளிலும் கிராமப்புறங்களிலுள்ள 3,128 கடைகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் சங்கமிக்கிறார்கள். டாஸ்மாக்கே நமது ஆண்களின் புனிதக்கோவிலாக மாறிவருகிறது.

இந்த உண்மை அதிகார வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனாலும் சுவரெழுத்து எழுதவும், அரசுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகிக்கவும், அடிப்படை உரிமைக்காக சாலை மறியல் செய்யவும், தடை விதிப்பது போல் அரசாங்கம் இப்படி பகிரங்கமாக பேசுவதற்கு தடையேதும் விதிப்பதில்லை. பதிலாக தங்களைத்தான் திட்டுகிறார்கள் என்று தெரிந்தே அரசாங்கமும், தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் டாஸ்மாக்கையும், ‘பார்’களையும் ‘ஸ்பான்சர்’ செய்து நடத்துகின்றன.

———-

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

உடைமையாளர்களுக்கு சொந்தமான இந்த வாக்கியத்தை, 1500 ஆண்டுகளுக்கும் முன்பே உடைமையற்றவர்களின் மனதிலும் நாவிலும் வலுக்கட்டாயமாக ஒருவன் புரண்டு, தவழ வைத்தான். அதற்கு குடிப் பழக்கத்தையே அடிப்படை காரணமாக மாற்றினான். இதன் மூலம் அரசின் வருவாயை பெருக்கினான். அவன் கவுடில்யன். அவன் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்’ நூலில் இதுகுறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…

இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம். இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 – 03-ஆம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிகைகளையும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் கிளர்ந்து எழாமல் இருப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை திணித்தது.

குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799-ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது. அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகளை ஏல முறையில் தரகு முதலாளிகளிடம் (‘மரியாதையும் மூலதனமுள்ள பெருவியாபாரிகளிடம்’ என்பது அயர்லாந்தில் ஆங்கிலேய அரசு பயன்படுத்திய வார்த்தை) அளிப்பது. சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது. அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும், கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களை கலந்து மதுவை தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டுமென மாகாண அரசுகளுக்கு 1859ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவனிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள். தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. (1951ல் விட்டல் மல்லையா – விஜய் மல்லையாவின் தந்தை – இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார்). இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய தரகு முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது. 2010 – 11-ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் வழியாக அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.14,965 கோடி என்கிறது புள்ளிவிவரம்.

ஆனால், இந்த விவரங்கள் உணர்த்தும் செய்தியோ வேறு. நேர்முக வரிகள் குறைக்கப்பட்டு, முதலாளிகளுக்கு ஏராளமான – தாராளமான – சலுகைகள் வழங்கப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்கவே அரசாங்கங்கள் குடி விற்பனையை ஊக்குவிக்கின்றன. இங்கிலாந்தில் லாட்டரியும், மற்ற ஐரோப்பிய நாடுகளில் சூதாட்டங்களும் எப்படி உழைக்கும் மக்களை பலி வாங்குகிறதோ அப்படி தமிழகத்தில் டாஸ்மாக் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை காவு வாங்குகிறது.

————–

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”

என்ற வாக்கியம் பொருளாதார ரீதியாக ஒரு அர்த்தத்தை தருவது போலவே பண்பாட்டுக்கு ரீதியாக வேறொரு பொருளைத் தருகிறது. ஆனால், அனைத்து அர்த்தங்களின் ஆணிவேரும் ஒன்றுதான். அது, பொழுதுபோக்கையும் சேர்த்து சுரண்டுவது. இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் மேல்நிலை வல்லரசுகளின் சுரண்டல்களுக்கு ஏற்ப உலக மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக – தக்கை மனிதர்களாக – மாற்றுவதுதான் இந்த வாக்கியத்தின் பின்னால் இருக்கும் உண்மை.

இதனடிப்படையிலேயே உழைப்பு நேரங்களை எப்படி அட்டவணைப் போட்டு ஒவ்வொரு தொழிலாளியையும் நிறுவனங்கள் சுரண்டுகிறதோ அப்படி அத்தொழிலாளியின் ஓய்வு நேரங்களையும் அட்டவணைப் போட்டு சுரண்ட ஆரம்பித்திருக்கின்றன. எதைப் பார்க்க வேண்டும், எதை ரசிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எந்தத் தொழிலாளிக்கும் இல்லை. உழைக்கும் நேரம் போலவே ஓய்வு நேரமும் பறிபோய் விட்டது. அதாவது தொழிலாளர்களின் பொழுதுபோக்கு நேரங்கள், சுரண்டல் அமைப்பின் உழைப்பு நேரங்களாகிவிட்டன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வீக் எண்ட்’ கலாச்சாரம், இன்று பிரபஞ்சம் தழுவிய கலாச்சாரமாக மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகிறது.

வாரநாட்களில் 10 அல்லது 12 அல்லது 14 மணிநேரங்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படும் தொழிலாளியின் கண்முன்னால், வார இறுதி என்ற கொண்டாட்டத்தை எலும்புத் துண்டு போல காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் ‘வீக் டேஸில்’ கோழையாக – மேலாளரின் அடக்குமுறைக்கு கட்டுப்பட்டு கீழ்படிந்து – இருப்பது ‘வீக் எண்ட்’டை உத்திரவாதப்படுத்துகிறது. குடிக்கும் நேரத்தை எதிர்பார்த்தே குடிக்காத நேரங்களை கடத்தும் மனநிலைக்கு தள்ளுகிறது. ஒவ்வொரு தொழிலாளியும் குடித்துவிட்டு வேலைக்கு வரக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கும் நிறுவனங்கள், குடிக்காமல் அதே தொழிலாளி உறங்கவும் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன.

அதனாலேயே உரிமைக்காக குரல் எழுப்புவர்களின் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர், குடித்துவிட்டு ‘மாண்புமிகு’களை என்ன திட்டினாலும் கண்டுக் கொள்ளாமல் செல்கின்றனர். சாலைகளில் வண்டிகளை நிறுத்தினால் அபராதம் விதிப்பவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும்படி எப்படி நிறுத்தினாலும் புன்னகையுடன் நகர்கின்றனர். இப்படியாக பொது ஒழுங்கையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க டாஸ்மாக் அவசியமாகிறது.

ஆக, குடிப்பது என்பது உள்ளார்ந்த விருப்பமல்ல. அது திணிக்கப்பட்டது. இதுவே பின்னர் விருப்பமாக உருவெடுக்கிறது. உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து உடல் வலிமையை இதனாலேயே உழைக்கும் வர்க்கம் இழக்கிறது. அடுத்த நாள் அல்லது அடுத்த வார வேலை(களை) செய்ய வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம், என்றைக்கும் வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளுகிறது.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பெண்களுக்கு வரன் தேடும்போது மாப்பிள்ளை குடிப்பவராக இருந்தால், அந்த மணமகனை நிராகரிப்பார்கள். இன்று குடிக்கும் பழக்கம் இல்லாத நபர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்கத்தான் பெண்கள் தயங்குகிறார்கள். ‘என்றாவது குடிப்பதில் தவறில்லை’ என்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மிதமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அவ்வப்போது குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்ற தர வரிசை பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கிறது.

இப்படி மதுவுக்கு அடிமையாகி இருப்பதாலேயே குறைந்தபட்ச எதிர்ப்புணர்வு கூட இல்லாமல் போய்விடுகிறது. ஐந்து ரூபாய்க்கு தேநீர் பருகும்போது, இந்த அளவில், இவ்வளவு டிகாஷனுடன் டீ வேண்டும் என்று கேட்பவர்கள், மேஜையின் மீது ஈ மொய்ப்பதை சுட்டிக் காட்டி துடைக்கச் சொல்கிறவர்கள், டாஸ்மாக் கடையில் அவர்கள் தரும் ‘சரக்கை’ மறுபேச்சில்லாமல் தங்களுக்கு பிடிக்காவிட்டாலும் வாங்கிச் செல்வது எதனால்? சிறுநீர் கழிக்கும் இடம் அருகிலேயே இருக்க, யாரோ எடுத்த வாந்தி காய்ந்திருக்க, அதன் அருகிலேயே அமர்ந்து குடிக்க நேர்வதை அவமானமாக கருதாதது ஏன்? சில ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் டாஸ்மாக் சுவர் இடிந்து விழுந்து பல தொழிலாளர்கள் மரணமடைந்தது நினைவில் இருக்கலாம். இன்றும் பழுதுப்பட்ட சுவர்கள் பல டாஸ்மாக் கடைகளை தாங்கித்தான் நிற்கின்றன. அதன் அடியில் அமர்ந்துதான் இப்போதும் பலர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 120 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வணிக விற்பனைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படும் விழா நாட்கள், குடிப்பதற்கான நாட்களாகவும் இருக்கின்றன. உடைகளின் விற்பனை இந்நாட்களில் அதிகரிப்பது போலவே மது பானங்களின் விற்பனையும் அதிகரிக்கின்றன.

திரைப்படங்களில் வில்லன் மட்டுமே குடித்த காலம் மலையேறி, இப்போது கதாநாயகன் குடிக்க வேண்டும் என்பது ‘சாமுத்ரிகா லட்சணத்தில்’ வந்து நிற்கிறது. இந்த ‘லட்சணத்தை’ பத்திரிகைத்துறையில் இப்போது அதிகம் பார்க்கலாம். கண்முன் இருக்கும் உதாரணம், 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலை. இக்காலத்தில் இலங்கை தூதரக அதிகாரியான அம்சா, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைத்தார். அதுவரை ‘சிங்கள இராணுவம்’ என்று எழுதி வந்த ஊடகம், இந்தப் ‘பார்ட்டி’க்கு பிறகு ‘இலங்கை இராணுவம்’ என்று எழுத ஆரம்பித்தன. ஈழப்பிரச்னை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, சில கோப்பைகள் மதுவே இலங்கைத் தூதரகத்துக்கு போதுமானதாக இருந்திருக்கிறது.

இதே வழிமுறைகளை பல காவல்துறை அதிகாரிகளும், ஆணையர்களும் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். செய்தியாளர்களுக்கு ‘பார்ட்டி’ வைப்பதன் வழியாக அவர்களிடமிருந்து செய்திகளை அறிந்துக் கொள்கிறார்கள்; செய்திகள் வராமல் தடுக்கிறார்கள். பணி உயர்வு, ஊதிய உயர்வு, இட மாற்றம் போன்ற விஷயங்கள் ‘விருந்து’களில் தீர்மானமாகின்றன. இராணுவ ரகசியங்களை அறிய எந்த சித்திரவதைகளையும் அண்டை நாடுகள் செய்வதில்லை. ‘ஒரு ஃபுல்’ முழு ரகசியத்தையும் தாரை வார்த்து விடுகிறது.

குடிக்கு அடிமையான – அடிமையாக்கப்பட்ட மனிதர்களை குறி வைத்துத்தான் தரகு முதலாளிகளும் பன்னாட்டு மது உற்பத்தி நிறுவனங்களும் களத்தில் இறங்குகிறார்கள். அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 30% அதிகரிக்கும் என்கிறது புள்ளி விவரம். 2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்’ அல்லது 24 ‘ஆஃப்’ அல்லது 12 ‘ஃபுல்’ இருக்கலாம்.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் எதுவொன்றையும் மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாது. ஒன்றுக்குள் மற்றது அடக்கம். மற்றதுக்குள் இன்னொன்று அடக்கம். அந்தவகையில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அரசு சாரா அமைப்புகள் பல பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் போதை மறுவாழ்வு மையங்களை தொடங்குவதும், கவுன்சிலிங் என்ற பெயரில் ஒரு தொகையை பறிப்பதும், புதிதுப் புதிதாக மன நோய்கள் பூப்பதும், மருந்துகள் அறிமுகமாவதையும் சொல்லலாம்.

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான யுனைடட் ப்ரீவரீஸ் லிட் நிறுவனத்தின் அதிகாரியான ரவி நெடுங்காடி, ”மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்கள் குறைந்த வயதுடையவர்கள். சட்டப்படி குடிக்க அனுமதி இல்லாதவர்கள். இவர்களை குறி வைத்துதான் நாங்கள் விற்பனையில் இறங்கியிருக்கிறோம். 3500 இலட்சம் பேர் இப்போது குடிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 5 ஆயிரம் இலட்சமாக உயர்த்துவதுதான் எங்கள் நோக்கம்…” என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.

”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”  என டிராகுலாவின் பற்களை ஆல்கஹால் கொண்டு மறைத்தபடி தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் புன்னகைக்கிறார்கள். அவர்களுக்கான வார்த்தைகளை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் வாக்கியமாக மாற்றத் துடிக்கிறார்கள்.

குடி என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த சுரண்டல் மட்டுமல்ல அல்லது மருத்துவ உலகம் பட்டியலிட்டிருப்பது போல் அதுவொரு நோய் மட்டுமே அல்ல. அது உடலையும் மனதையும் ஆளுமையையும் ஒரு சேர எடுக்கும் ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு.

_________________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

__________________________________________________________
முதல் பதிவு: வினவு

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்

21 அக்
வணக்கம் நண்பர்களே,
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள்  தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும்.
அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.
ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativity] என்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

 

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர். 

 

I should much rather see reasonable agreement with the Arabs on the basis of living together in peace than the creation of a Jewish state. …the essential nature of Judaism resists the idea of a Jewish state with borders, an army, and a measure of temporal power….I am afraid of the inner damage Judaism will sustain – especially from the development of a narrow nationalism within our own ranks…
— Einstein speech in New York, 1938.
 
அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.
இது அறிவியல் பதிவு அல்ல என்பதால் ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்க தேவையில்லை.  அவர் கடிதம்  குறித்து திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அய்யாவின் இணைய தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் முழுதும் அளிக்கிறோம்.[கடிதத்தின் மொழியாக்கம் மட்டும் சிவப்பு எழுத்துக்களில் இருக்கும்]
******
ஐன்ஸ்டின் கடவுள் பற்றி கூறினார் என மதவாதிகளின்  பரப்புரைகளுக்கு  ஒருவகையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. ஐன்ஸ்டினும் கடவுள் என்பதை ஒரு கவிதை உருவகமாக பலமுறை கருத்து வெளியிட்டதன் ஒர் எதிர்பாரா ,விரும்பத் தகாத விளைவே எனலாம்.
ஆகவே ஐன்ஸ்டின் கடவுளை நம்பினார் என்னும் மதவாதிகளின் விளம்பர பிரச்சாரத்தை முழுதும் முறியடிக்க, இக்கடிதத்தை முற்றிலும் படித்து விளங்குவதின் மூலம் செய்ய இயலும்.இக்கடிதம் உள்ளிட்ட இதர ஆவண‌ங்கள் ஐன்ஸ்டின் ஒரு எதார்த்த இறை மறுப்பாளர் என்பதை தெளிவாக்குகின்றன.
இக்கடிதம் 2008ல் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது நான்(ரிச்சர்ட் டாக்கின்ஸ்) எனது அமைப்பிற்காக எடுக்க முயன்றேன்,அப்போதைய  விலை இப்போதைய ஏல தொடக்க விலை 3 மில்லியன் டாலரை[15 கோடி ரூபாய்] விட குறைவாக இருந்தாலும் என்னால் முடியவில்லை.
ஆகவே இக்கடிதத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் அதன் ஆங்கிலம்& இதர  மொழியாக்கங்களுடன்[ மூலம் ஜெர்மன் மொழி] உலக முழுதும் பரப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 
**********
இந்த தனிப்பட்ட கடிதம் அனைவருக்கும் பகிர்ந்த பொதுவான விடயம் இல்லை என்றாலும் கடவுள், மதம் மற்றும் இனம் சார் சிந்தனை போன்றவைகளின் மீதான‌ ஒரு தலை சிறந்த சிந்தனாவாதியின்  கருத்து என்ற வகையில் அறியத் தக்கதே.
இந்த ஞானியின் கடவுள்,மதம் மீதான தனிப்ப‌ட்ட ,வெளிப்படையான கருத்துகளை வெகு சிலரே சரியாக அறிந்து இருக்க முடியும் என்பதால் இக்கடிதம்  அக்கருத்துகளை ஒரு ஆவணமாக்கி அனைவருக்கும் அளிக்கிறது.
இக்கடிதத்ம் ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதால் ஐன்ஸ்டினின் உள் மனதின் உண்மையான  கருத்தை உறுதியாக தொடர்பு படுத்துகிறது.இக்கடிதத்தின் கருத்துகள் வாழ்வின் நோக்கம் பற்றிய  பல அடிப்படை கேள்விகளின் பதிலை நோக்கிய நெடுநாள் தேடலை எடுத்து இயம்புகிறது.
வாழ்வின் நோக்கம் பற்றிய உண்மைத்தேடல் உடையவர்களுக்கு இக்கடிதம் ஒரு சிறப்பு அறிமுக விளக்கமே. 
இக்கடிதம் ஐன்ஸ்டின் அபோது பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கடித குறிப்பேட்டில் ஜன்வரி 3,1954ல் பிரபல தத்துவவியலாளர் எரிக் குட்கிண்ட்[Eric B. Gutkind] அவர்கள்க்கு ஜெர்மன் மொழியின் எழுதப்பட்டது. 
இக்கடிதம் திரு குட்கிண்ட்டின் புத்தகமான  .Choose Life: The Biblical Call to Revolt”மீதான விமர்சனம் எனலாம்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலத்தில் [1954ல் ஜோம் ஸ்டாம்பர்க் ஆல்]மொழியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கிறது.
 
Key Passages:
 
கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விட‌யங்கள் அறிய‌ முடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்த‌ உடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறிய‌ ஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

 

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, …இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்… .
 
யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாத‌ அளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 
 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும். 

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.

நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[எ.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.ஆகவே சான்றுகள் உள்ள‌ உறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.
நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின்
 

***********

முழுமையான கடிதம் எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக இந்த பகுதி விளக்கி இருக்கிறது. மதபுத்த்கம் குறிப்பாக யூத கிறித்தவ மத புத்தக கதைகளும் அதன்  மீதான அரசியலே இப்போது வரை தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பதைப் புரிந்தால் இக்கடிதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரியும். ஒருவேளை ஐன்ஸ்டின் யூத மேட்டிமை கொள்கை கொண்டு இருந்தால் இஸ்ரேல் அரசியலில் முக்கிய பதவி கூட கிடைத்து இருக்கலாம்.சிந்தனையாளர்கள் மத இன சார் கொள்கை உடையவர்களாக இருக்க கூடாது என்பதன் எ.கா ஐன்ஸ்டின்தான்!! 

யூத மத இனவாதிகள் கடவுள் இஸ்ரேல் என்னும் நாட்டை தங்களுக்கு எகிப்தில் இருந்து வர வைத்து ,அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவர்களை வெற்றி கொள்ள வைத்து அளித்ததாக இன்னும் [நம்பி?!!!!] பிரச்சாரம் செய்கிறார்.

இதில் எதிர் கோஷ்டி பாலஸ்தீனர்கள் தரப்பும் இன்னும் மோசமான மதவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது அவர்கள் பக்க நியாயத்தை எடுபடாமல் செய்து விட்டது.சமீபத்தில் எந்த நியாயமான தீர்வும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இது போன்ற கட்டுக்  கதைகளை ஒழிக்காதவரை அடக்குமுறை ஆக்கிரமிப்பும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். ஐன்ஸ்டின் இதனை உணர்ந்தே பைபிள் கட்டுக் கதை, எந்த திற்மையான மதப் பிரச்சாரகரின் தத்துவ விளக்கமும் ஏற்புடையது அல்ல என அருமையாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனால் ஐன்ஸ்டின் ஆத்திகர் என்றும்,அவரின் கண்டுபிடிப்பும் எங்கள் புத்தகத்தில் சொல்லி இருக்கிறது என மத விளம்பரம் செய்யும் கோமாளிகளும் எதிர்காலத்தில் வருவார்கள் என அறிந்து இருப்பாரா??? ஹா ஹா ஹா!!

நன்றி!!

முதல் பதிவு: சார்வாகன்

ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ள மௌனம்

10 அக்

கவுண்டமணியைவிட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க’ பதிவு வெளியிடப்பட்ட செய்தியை பின்னூட்டமாக குலாமின் நான் முஸ்லிம் தளத்தில் பதிவு செய்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகி விட்டது. இன்னும் அது வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்திற்கு வரும் பின்னூட்டங்களை வெடியிடுவது குறித்த உரிமை அத்தளத்தை நடத்துபவருக்கே உரியது, அதில் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அவர் அதை என்ன காரணத்துக்காக முடக்கி வைத்திருக்கிறார் என்பதை ஆராய முடியும். இந்தப் பதிவு அந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. முதலில் அங்கு நான் பின்னூட்டமிட்டதற்கான ஆதாரத்தை கீழே தந்திருக்கிறேன்.

 

பொதுவாக பதிவர்கள் இந்த வகையில் ஒரு பின்னூட்டத்தை தடுக்கும் போது பரிசீலனையற்று திரும்பத் திரும்ப ஒரே செய்தியை கூறுவதால் அது வெளியாகவேண்டிய தேவையில்லை என முடிவு செய்வதாக கூறுவர். ஆனால் இவ்வாறான காரணத்தை குலாம் கூறமுடியுமா? அந்த கவுண்டமணி நடிப்பு இடுகையில் நான் எழுப்பியிருந்த விசயங்கள் என்ன? எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதை பொய் என்று நிரூபித்திருந்தேன். நடந்த விவாதத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்திருந்தேன். விவாதத்திற்கு அழைக்கிறீர்களே இப்போது நடப்பது என்ன? நேரடி விவாதத்தை நான் ஏன் மறுக்கிறேன் என்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஏற்கனவே பதிவெழுதி இருக்கிறேன் அதில் எழுப்பபட்டிருந்த அம்சங்களை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள்? என்று கோரியிருந்தேன். இப்படி கேள்வியெழுப்பும் பதிவை தன் பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல் ஒருவர் தடுக்க நினைக்கிறார் என்றால் அதன் பொருள் என்னவாக இருக்க முடியும், தன் குட்டு வெளிப்பட்டு விடக் கூடாது என எண்ணுகிறார் என்பதைத் தவிர.

 

குலாம் இரண்டு விதங்களில் பொய் கூறியிருக்கிறார். 1. நல்லூர் முழக்கம் தளத்தில் அவர் பின்னூட்டமிட்டு அது பதிவு செய்யக் கோருவதாக தெரிவித்ததை மறுத்து; அப்படியென்றால் அதை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தேன். இன்றுவரை அப்படி எதையும் வெளியிடவில்லை. எனவே, குலாம் அவ்வாறு கூறியது பொய். 2. அந்த திரைக்காட்சியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறினார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை என்று என்னுடைய மின்னஞ்சலின் உள்பெட்டியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிட்டிருந்தேன். மட்டுமல்லாது, மெய்யாகவே குலாம் அவ்வாறு அனுப்பியிருந்தால் தேதி நேரம் தெரியும்படி அனுப்பிய அஞ்சல் பகுதியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடும்படியும் கோரியிருந்தேன். இதுவரை அவ்வாறு குலாம் எதையும் வெளியிடவில்லை. எனவே, எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதும் பொய். தவிரவும் இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. எனக்கு மின்னஞ்சலில் திரைக்காட்சியை அனுப்பியதாக குலாம் ஏன் பொய் கூற வேண்டும்?

 

தன்னுடைய தளத்தில் குலாம், தன்னை ஒரு நேர்மையானவராக எதிர்பின்னூட்டங்களை வரவேற்கும் பண்புள்ளவராக எதையும் நேரிய முறையில் மென்மையாக அணுகும் பண்புள்ளவராக இடுகைகளின் மூலமும் வெளிப்படுத்தலின் மூலமும் தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் இதுவரை அவர் காட்டியிருக்கும் நேர்மைப் பண்புக்கு மாற்றமாக பின்னூட்டம் இடாமலேயே இட்டதாக கூறுவதை ஆதாரபூர்வமாக மறுக்கவில்லை என்றால் அது அவரது பிம்பத்தை உடைக்கும். அதேநேரம் அவரால் ஆதாரபூர்வமாக மறுகவும் முடியாது. அதனால் தான் தன்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தான் அனுப்பியதாக ஆதாரபூர்வமாய் காட்டவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் மின்னஞ்சலில் அனுப்பியதாய் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அது பற்றி குறிப்பிடுவதையோ கவனமாக தவிர்த்திருக்கிறார். இவைகளெல்லாம் அவரிடம் பதில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆனாலும் அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார். அது தான் மதத்தின் தன்மை. ஏனென்றால் அவர் மதத்தையும் கடவுளையும் நம்புகிறாரேயன்றி ஏற்கவில்லை.

 

குலாம் மட்டுமல்ல, இஸ்லாத்தை மீப்பெரும் இறும்பூறெய்தல்களாக காட்டி பதிவெழுதும் அனைவருக்கும் இவ்வாறு தனக்குத் தானே நேர்மையற்று இருப்பது தான் அடிப்படைப் பண்பாக இருக்கிறது. தான் கற்றறிந்ததை எழுதினாலும் அல்லது காப்பி பேஸ்ட் செய்து எழுதினாலும் அவர்களின் பண்பு இந்த எல்லையில் தான் நிற்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் பரிசீலனை இல்லாததே. பரிசீலனை எப்படி வரும்? மதம் என்றாலே அது பரிசீலனைக்கு அப்பாற்பட்டது தானே.

 

இப்படி பதிவெழுதி புழகமடையும் -தான் இம்மைக்காக அல்ல மறுமைக்காக எழுதுகிறேன் என்று ‘அல்டாப்பாக’ அலட்டிக் கொள்ளும்- பதிவர்களை விட்டுவிடுவோம். ‘சரியான நெத்தியடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ’ ‘நாத்திகர்களுக்கோர் செருப்படி’ ‘அல்லாஹு அக்பர், ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக’ ‘இனியும் நாத்திகர்கள் மறுத்துக் கொண்டிருக்க முடியுமா?’ என்றெல்லாம் அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமெழுதி தங்களைத் தாங்களே சுய சொரிதல்கள் செய்து கொள்ளும் சிலரையும் விட்டுவிடுவோம். ஆனால் இது போன்ற பதிவுகளை படித்து தங்கள் மத அறிவை விரிவுபடுத்திக் கொள்வதாக அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் பலரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிறேன்.

 

உங்கள் மதத்தின் உண்மைத் தனமையையும், காலத்தால் வழுவாதிருக்கும், அறிவியலால் வீழாதிருக்கும் பண்பையும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து அறிந்து கொள்ளும் நம்பிக்கையாளர்களே, யாரின் எழுத்தைப் பார்த்து உங்கள் நம்பிக்கையை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்கிறீர்களோ அவர்கள், கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடி ஒழிவதையும் நேர்மையற்ற முறையில் திருகல்கள் செய்வதையும், கவலையற்று பொய்கள் கூறுவதையும் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? மதத்தை பிரச்சாரம் செய்பவர்களே இப்படி நேர்மையற்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவர்களை அப்படி தூண்டுவது எது? எல்லாம் வல்ல அந்த வல்லாற்றல் மிக்க கடவுள் ஏன் அவர்களின் நேர்மையற்ற செயல்களை விலக்கச் செய்யவில்லை? தூய மார்க்கம் என்று கூறுபவர்கள் அனைவருமே ஓர் இடத்தில் நழுவுகிறார்கள், பசப்புகிறார்கள், திசை திருப்புகிறார்கள், கோபப்படுகிறார்கள், அல்லது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இது ஏன்? நடந்து செல்பவர்கள் தொடர்ந்து செல்ல முடியும், ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் நின்றே ஆகவேண்டும். சமூகத்தோடும் யதார்த்தத்தோடும் பொருந்திச் செல்பவர்கள் தொடர்வார்கள், சமூகத்துடன் தொடர்பற்று உச்ச சப்தத்தில் பொய்களை பேசுவோர் நின்றே ஆக வேண்டும். அதனால் தான் மதவாதிகளால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடிவதில்லை, ஏனென்றால் அவர்களிடம் உண்மையில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இதைப் படிக்கும் போது உங்களுக்கு கோபம் கூட வரலாம். ஏனென்றால், ஆண்டாண்டு காலமான மத அழுக்கு உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும். அந்த அழுக்கை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களா? என்றால் கேள்விகளைக் கேழுங்கள். கேட்கக் கேட்கத்தான் உண்மை விரியும். இதோ உங்களை வாரியணைக்க சமூகம் காத்துக் கிடக்கிறது.

 

முற்றும்.

 

பின்குறிப்பு: இந்த இடுகையும் வழக்கம் போல் குலாமின் தளத்தில் பின்னூட்டமாய் தெரிவிக்கப்படும். அதை வெளியிடுவதும் தடுத்துவிடுவதும் அவர் பொறுப்பு. ஆனால், இனியும் அதை திரைக்காட்சியாய் எடுத்து வைத்து அம்பலப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால், ஒட்டுக் கோமணமும் இல்லாமல் நிற்பவரிடம் எதை அம்பலப்படுத்த?

கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க

6 அக்

 

ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் .. .. .. எனும் பதிவுக்கு குலாம் கீழ்கண்டவாறு தன்னுடைய தளத்தில் கீழ்கண்டவாறு பதிலுரைத்துள்ளார்.

 

G u l a mOctober 4, 2012 8:46 AM

சற்றுமுன் செங்கொடிக்கு இட்ட மெயிலில்..

G u l a m gulamdhasthakir@gmail.com

11:43 PM (0 minutes ago)

 to செங்கொடி

சகோ செங்கொடி நான் இடும் பின்னூட்டம் அனைத்திற்கும் இப்படி தான் வருகிறது அதற்கான ஸ்கீன்ஸ்டார்ட் எடுத்து வைத்து என்னை மெய்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக நான் சொல்வது பொய்யில்லை என்பதற்காக தான் இந்த மெயிலிடுகை.

 வார்த்தைகளை கவனித்து பேசுங்கள் என்பது மட்டுமே என் வேண்டுகோள்

 அந்த மெயிலுடன் எனது தற்போதைய ஸ்கீன் ஸ்டார்டையும் இணைத்து அனுப்பியுள்ளேன்.

அவரது தளத்தில் தற்போது இட்ட பின்னூட்டத்திற்கும் இப்படி தான் வருகிறது

 நீங்கள் Gulam ?

 You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.

 By logging in you’ll post the following comment to ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்:

அண்ணே, செங்கொடி., ரொம்பவும் பயம் காட்டாதீங்கண்ணே,.

 சுற்றி வளைத்து பேச ஒன்றுமில்லை., நீங்கள் சவுதி அரேபியாவில் மதம் சாராத குறிப்பாய் இஸ்லாமியன் என்ற அடையாளம் சாராத நாத்திகவாதியாக தான் அச்சமுகத்தில் தான் வேலை செய்து வருகிறார்களா? அதற்கு ஆதாரம் தர முடியுமா?

 ஏன் இங்கே மட்டும் பொய்யான பரப்புரை. சவுதியில் இருந்தால் உங்கள் அட்ரஸ் கொடுங்கள் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லது இந்தியாவில் இருந்தால் விவாதத்திற்கு வர தயாரா?

 இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கண்ணே.,

 எவருக்கும் ஸாரி., எவனுக்கும் ஓடி ஒளியும் எண்ணமும், பழக்கமும எனக்கு இல்லை. கவனித்து பேச கற்றுக்கொள்ளுங்கள்

 WordPress.com / Gravatar.com credentials can be used.

 

இதில் குலாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை. இதோ என்னுடைய மின்னஞ்சல் உள்பெட்டியை திரைக்காட்சிப் படமாக கீழே இணைத்துள்ளேன். அவர் செய்ததெல்லாம் ஜிடாக்கில் ஒரு சிறிய அரட்டை தான், அதையும் படமாக கீழே இணைத்துள்ளேன்.

 

மெய்யாகவே குலாம் எனக்கு அவர் குறிப்பிட்டிருந்தபடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் அவரின் மின்னஞ்சலில் அனுப்பிய அஞ்சல் பகுதியை எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் விபரத்தை தேதி நேரம் தெரியும்படி திரைக்காட்சியாக(ஸ்க்ரீன் ஷாட்) எடுத்து அவர் தளத்தில் வெளியிடத்தயாரா? ஏன் அவரின் தளத்தில் வெளியிடக் கோருகிறேன் என்றால், மின்னஞ்சல் என்றால் அனுப்பாமலேயே அனுப்பிவிட்டேன் என்று கூறமுடியும் என்பதால் தான். ஐயோ சாமி! ஒரு பொய்யை மறைக்க இன்னும் எத்தனை பொய்களோ.

 

முதலில் குலாமுக்கு நன்றி கூறிவிட வேண்டும். ஓடி ஒழியும் இஸ்லாமிய பரப்புரை பதிவர் என்று தலைப்பு வைத்ததும் விரைந்து பதிலெழுதி ‘ஆம், நான் அப்படி ஓடி ஒழிபவன் தான்’ என நிரூபித்து விட்டாரே, அதற்கு நன்றி கூறாமலிருக்க முடியுமா? எப்படி நிரூபித்தார் என்கிறீர்களா? ஒரு கேள்வி கேட்டால் யோக்கியவான்கள் என்ன செய்வார்கள்? பதில் கூறுவார்கள். கேட்கப்பட்ட கேள்வி எதற்காவது குலாம் பதில் கூறி இருக்கிறாரா? இதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?

 

வேறு என்ன தான் கூறியிருக்கிறார்? வேறென்ன நான் சௌதியில் இருந்தபோது எப்படி இருந்தேன்? இந்தியாவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவா? பேரன்புமிக்க பெருந்தகையாளர் சகோ. குலாம் அவர்களே இதற்கும் கேட்ட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியவில்லை. அப்படித்தானே. முதலில் அதை ஒப்புக் கொள்ளுங்கள். அது தான் நேர்மை, கண்ணியம். இவைகள் உங்களுக்கு இல்லை என்று கூறுவதை விட அந்த இன்மைகளை மறைப்பதற்காகத் தான் நீங்கள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறீர்கள் என்பதே சரியானது.

 

விவாதத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறும் பேராண்மை மிக்க சகோ. குலாம் அவர்களே, இதுவரை இங்கே நடந்து கொண்டிருந்ததன் பெயர் என்ன? நேரடி விவாதம் குறித்து நான் குறிப்பிட்டிருந்த இடுகையை படித்துப் பார்த்தீர்களா? அதில் கூறப்பட்டிருப்பவை குறித்து உங்கள் கருத்து என்ன? தர்க்கம், அறிவியல் என்று சொற்களின் இடைவெளியில் புகுந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவது; முடியாது போகும் போது நேரடியாக வா என்று கூப்பாடு போடுவது, மிஸ்டர் குலாம் இது போன்ற பூச்சாண்டிகளெல்லாம் நிறையவே கண்டு விட்டோம். சரி, கடவுளின் இருப்பு குறித்து நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் அவர்களை பதில் கூறச் சொல்லுங்கள், பின்னர் நான் முடிவு செய்கிறேன், என்னுடன் நேரடி விவாதம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை.

 

வார்த்தைகளை கவனித்துப் பேச வேண்டும் என்று குலாம் கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை மீறி எந்தச் சொற்களையும் நான் பயன்படுத்தி விடவில்லை. ஆனாலும் ஒன்று சொல்லிக் கொள்ளலாம், தோற்றங்களைக் கண்டு அவருக்கான மதிப்பை முடிவு செய்யும் கெட்ட பழக்கம் எனக்கில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடை வெளியைக் கொண்டே அவருக்கான மதிப்பை தீர்மானிக்க முடியும். மட்டுமல்லாது சமூகத்தின் உயர்வுக்கு ஒருவரின் பங்களிப்பு எந்த உயரத்தில் இருக்கிறதோ அந்த உயரத்துக்குத் தான் அவர்களை மதிக்க முடியும். உள்ளத்தில் உங்களின் செயல்களை சீர்த்துக்கிப் பார்த்துவிட்டு வெளியில் போலியாய் மதிப்பளிக்க முடியாது. தவிரவும் கடந்த பதிவின் முன்குறிப்பில் இதை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

 

மதம் என்பது ஒரு போதை. ஆல்கஹால் போதையைப் பார்க்கிலும் மிகக் கடுமையாகவும், வெகு ஆபத்தானதாகவும் இருக்கும் போதை மதம். அந்த போதையை மூளையில் ஏற்றி வைத்திருப்பவர்கள் நேர்மையுணர்ச்சியை அரிக்கக் கொடுத்தவர்களாகிறார்கள். அதனால் தான் அவர்கள் வெளியில் நடித்துக் கொண்டே உள்ளுக்குள் தங்கள் மூடநம்பிக்கையை தக்கவைக்க சித்து வேலைகளில் இறங்குகிறார்கள். அவர்களிடம் தேடலைத் தூண்டுவதன் மூலமே அவர்களின் நேர்மையுணர்ச்சியை மீளமைக்க முடியும். அதற்கு உதவும் என நான் கருதுவதால் தான் அந்த சவால் அழைப்பு.

 

இறுதியாக, ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி கதவை அடைத்துக் கொண்டு மனைவியிடம் அடி வாங்குவார். ஆனால், சப்தம் மட்டும் ‘பிச்சுப்புடுவேன், அடி பின்னிப் போடுவேன்’ என்று வரும். முடிவில் கையில் கத்தியுடன் யாருகிட்டே என்று தெனாவெட்டாக கூறிக் கொண்டே வெளியில் ஓடி வருவார். மரியாதைக்குறிய சகோ. குலாம் அவர்களின் பதிலைப் பார்க்கும் போது அந்தக் காட்சி தான் நினைவில் வந்தது. ஆனாலும், கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க. (என்னை அண்ணன் என்று விளித்திருப்பதாலேயே நானும் தம்பி என விளித்திருக்கிறேன்)

ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்

4 அக்

 

முன் குறிப்பு: இந்தப் பதிவில் நான் பயன்படுத்தப் போகும் மொழிநடை என்னுடைய வழக்கமான நடையல்ல. மென்மையான மொழிநடையைக் கொண்டு ஒருவர் ஏமாற்ற முற்படுவது தெரியவரும் போது இயல்பான நடையில் இயம்புவது பொருத்தமாக இருக்காதல்லவா? ப.சிதம்பரம் மிக மென்மையாக பேசும் இயல்புடையவர்தான். ஆனால் தண்டகாரண்ய மக்கள் அவருக்கு மென்மையாக பதில் கூறுவதில்லையே. தவிரவும் நேர்மைக்கான குறியீடு மென்மை மட்டுமா என்ன?

 

முதலில் பின்னூட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்வோம், குலாம் இதை இரண்டாம் முறையாக கூறுகிறார், \\\அந்த ஆக்கத்தின் கீழாக பின்னூட்டமிட்டேன் இப்படி வருகிறது. நீங்கள் Gulam ? You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now. By logging in you’ll post the following comment to அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது: ஆக ஒருவேளை அங்கே பின்னூட்டம் வரவில்லையன்றால் .. அதற்காக இங்கே பதிகிறேன்./// நல்லூர் முழக்கம் தளம் ப்ளாக்கர் தளமல்ல வேர்ட்பிரஸ் தளம் என்பதை முதலில் குலாமுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டமிடுவதற்கு யாரும் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ப்ளாக்கர் தளத்தில் மட்டுமே அவ்வாறு பதிவு செய்யும் முறை இருக்கிறது. வேர்ட்பிரஸ் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டால் போதும் பதிவு செய்ய வேண்டியதில்லை. பிளாக்கர் தளத்தை விட வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டமிடுவது வெகு எளிது. மட்டுமல்லாது குலாம் நல்லூர் முழக்கம் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்பதை கீழிருக்கும் படம் தெளிவுபடுத்தும்.

 

மெய்யாகவே குலாம் பின்னூட்டமிட்டு அவர் குறிப்பிட்டபடியே பதில் வந்திருந்தால் அதை படமாக எடுத்து அவர் தளத்தில் வெளியிடட்டும் அதைக் கொண்டு வேர்ட்பிரஸ் தளத்தில் விளக்கம் கேட்கிறேன், “என்னப்பா பின்னூட்டமிடுவது வெகு எளிது என்று விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே. வாசகர் ஒருவருக்கு இப்படியான அனுபவம் நேர்ந்திருக்கிறதே” என்று. அடித்து விடுவதற்கும் ஒரு அளவில்லையா?

 

குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\இங்கே உண்மையை தீர்மானிப்பதற்கு உங்களையும் என்னையும் சாராத ஆட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்/// அப்படி சாராத ஆட்கள் ஆய்வு செய்து இன்னின்ன தவறுகள் உங்கள் வாதத்தில் இருக்கின்றன என எடுத்துக் கூறினால் அதை நிபந்தனையின்றி பரிசீலிக்க நான் தயார். நீங்கள் தயாரா? அது தான் என்னுடைய கேள்வி. ஆனால் பதில் கூறும் கடமையிலிருந்து தப்பிப்பதற்காகவே பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்கள் என நான் உங்களை குற்றப்படுத்துகிறேன், இதற்கு உங்கள் பதில் என்ன? பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். கடவுள் இருக்கிறதா? இல்லையா? எனும் தலைப்பில் நானும் நீங்களும் தானே விவாதம் செய்கிறோம். என்னுடைய வாதங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? அதைக் கூறுங்கள். கூறமுடியாத இடத்தில் என்னிடம் பதில் இல்லை என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுங்கள். மாறாக பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதை ஒரு திரையாக முன்வைக்காதீர்கள். (நீங்கள் பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று சுட்டும் இடங்களிலெல்லாம் பதில் கூறுவதிலிருந்து நீங்கள் ஒதுங்குகிறீர்கள் என்பதை நான் அழுத்தமாக முன்வைக்கிறேன்)

 

அடுத்து குலாம் கூறுகிறார், \\\நான் பக்கபக்கமாய் இடும் பின்னூட்டங்களை பரிசீலிக்காமல் அதற்கு பதில் தருவதாக எண்ணிக்கொண்டு உங்களின் சுய நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் சொன்னால்/// என்று. இப்படி கூறுவதற்கு குலாம் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் கூறப்படும் வாதங்களை அவர் பரிசீலிக்க மறுக்கிறார் என்று அவர் எழுத்துகளை மேற்கோள் காட்டி நான் எழுதியிருந்தேன். அதை மறுத்து எதுவும் கூறாத குலாம் நான் பரிசீலிக்க மறுப்பதாக புழுகியிருக்கிறார். எங்கே, தன்னுடைய சொற்களில் குலாம் உண்மையுடையவராக இருந்தால் அவர் கூறிய எந்த வாதத்தை நான் பரிசீலிக்கவில்லை? எடுத்துக் காட்ட முடியுமா? முடியவில்லை என்றால் திருத்திக் கொள்ளட்டும், தேடலுள்ளவராக இருந்தால்.

 

அடுத்து குலாம் இப்படி எழுதியிருக்கிறார், \\\எனது அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை என்பதை முதல் இரண்டு ஆக்கத்தின் பின்னூட்டத்தில் பார்த்தால் புரியும். வேண்டுமானால் பட்டியல் தருகிறேன். அதை இன்னும் விவரித்து தான் “ஓர் அழைப்பு” தலைப்பின் கீழ் ஆக்கங்கள் ஆக நீங்கள் பதில் தருவதாக இருந்தால் அந்த ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக தான் இருக்க வேண்டும். அதை விடுத்து நான்காம் ஆக்கத்திற்கு இதையும் உங்கள் சுய தீர்மானிப்புக்கு ஒரு பகடையாய் வைத்தால் ஸாரி நான் உங்க ஆட்டத்திற்கு வரல/// ’என்னை விட்டுவிடுங்கள்’ என்பது தான் இதில் குலாம் எனக்கு விடுக்கும் செய்தி. ஆனால் அதை வெளிப்படையாய் கூறாமல் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தன் வாசகர்களுக்கு காட்டும் விதமாய்த் தான் மேற்கண்டவைகளை எழுதியுள்ளார் என்று நான் குற்றப்படுத்துகிறேன். எந்த அடிப்படை கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லை என குலாம் கருதுகிறார்? ஏற்கனவே எழுதியதில் இருந்து அதை அவர் எடுத்துக் காட்டட்டும், பதில் கூறியிருக்கிறேனா இல்லையா என்பதை நான் காட்டுகிறேன். பட்டியல் தருகிறாராம், தரட்டும். ஏற்கனவே நான் தெளிவாய் குறிப்பிட்டிருக்கிறேன், கேள்விகளுக்கு மருள்பவன் நான் அல்லன் என்று. ‘ஓர் அழைப்பு’ குறித்தும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் பட்டியலிட்டிருக்கும் ஒவ்வொரு பதிவையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு மறுபளிக்க அதாவது குலாமின் நிலைபாட்டை அதன் அனைத்து கோணங்கள் வாயிலாகவும் எதிர்கொண்டு மறுப்பளிக்க நான் தயார். குலாம் தயாரா? பாதியில் பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று கைவிடமாட்டார் என்று உறுதியளிக்க முடியுமா? குப்பைகளுக்கு எதற்கு வண்ணச் சோடிப்புகள்? ஆட்டத்திலிருந்து ஒதுங்க நினைத்தால் குலாம் தாராளமாக ஒதுங்கிக் கொள்ளலாம். அவரிடம் பொருதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனக்கு ஒன்றும் கட்டாயமல்ல, எனக்கும் வேறு வேலைகள் இருக்கிறது. ஆனால் அதை அவர் என்னுடைய தவறாக திரிப்பதை அனுமதிக்க முடியாது.

 

அடுத்து குலாம் கூறியிருப்பது இது \\\கருத்து பரிமாற்றம் அல்லது விவாதங்கள் என்பது வேறு. தனது செய்கை தான் உண்மையானது என்பதை பொதுவில் சுய தீர்மானிப்பில் முடிவெடுப்பது என்பது வேறு. அதை உங்கள் எழுத்தில் அதிகம் காண்கிறென்/// இங்கு நடப்பது விவாதம் தானே தவிர கருத்து பரிமாற்றம் அல்ல. விவாதத்தில் என்னுடைய நிலைப்படு சரியானது எனும் அடிப்படையிலிருந்து தான் என்னுடைய வாதத்தை நான் எடுத்து வைக்க முடியும், அந்த வாதம் தவறானது என்று நிரூபிக்க வேண்டியது தான் எதிராளியின் வேலை. குலாமின் வாதங்களை அப்படித்தான் நான் தவறு என்று காட்டியிருக்கிறேன். அதை மறுக்க வேண்டிய இடத்தில் நின்று கொண்டு நான் சுய தீர்மானிப்பில் முடிவெடுக்கிறேன் என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறார் குலாம். அவர் என்ன நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அவருடைய நிலைப்பாட்டை சுய தீர்மானிப்பில் முடிவெடுத்தாரா அல்லது என்னிடம் கேட்டுக் கொண்டு முடிவெடுத்தாரா? ஆம் என்னுடைய நிலைப்பாட்டை நான் சுய தீர்மானிப்பு தான் செய்கிறேன். முடிந்தால் அதை மறுத்துப் பாருங்கள், அதற்காகத் தானே விவாதம் செய்கிறோம். அதை விட்டுவிட்டு தங்கள் சிறுபிள்ளைத் தனங்களை இப்படியா வார்த்தைகளுக்குள் ஒழித்துக் கொள்வது?

 

\\\அதுவுமில்லாமல் என்னை வெறுப்பேதுவதாக நினைத்து நகைச்சுவை எனும் பெயரில் உங்கள் எழுத்துக்களை வீணடித்திட வேண்டாம்/// மன்னிக்கவும் யாரையும் வெறுப்பேற்றுவது என்னுடைய நோக்கமில்லை. என்னுடைய வாதங்களை நகைச்சுவையாய் எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறலாமே தவிர வீணடித்திருக்கிறேன் என்று கூற முடியாது.

 

\\\எப்போதுமே நாம் சொல்வது ஒன்று தான் எந்த ஒன்றை தவறேன்று சொல்கிறோமோ அதற்கு மாற்றமாக எதை உண்மையெங்கிறோமோ அதை விளக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் உங்களை பொறுத்தவரை கடவுள் இல்லையென்றால் குறைந்த பட்சம் உங்கள் கொள்கை அல்லது கடவுளில்லா நிலையில் எப்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது என்று சொல்வீர்களா..?/// தாராளமாக. கம்யூனிசத்தை நோக்கியே எங்கள் வாழ்முறை. அதை நீங்கள் விரும்பும் எல்லை வரை விளக்கவும் விவரிக்கவும் தயார். ஆனால் அதை ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டு செய்வோம். இப்போது இந்த விவாதத்தை என்ன செய்வது? ஒவ்வொரு தலைப்பாக தாவிக் கொண்டே இருக்க வேண்டுமா? இந்த விவாதத்தில் முடிவு காணும் வரை தொடருங்கள், முடிவை காண்பதற்கு ஒத்துழைப்பைத் தாருங்கள். அதன் பிறகு அதை தனித்தலைப்பாக எடுத்துக் கொண்டு விளக்குகிறேன். இப்போது இந்த விவாதத்திற்குறிய தலைப்பில் நில்லுங்கள்.

 

\\\அவ்வாறு ஆக்கம் வரைந்து எனக்கு மெயிலிடுங்கள் கேள்விகளோடு உங்களை சந்திக்கிறேன்/// ஆம் இதையே தான் கிட்டத்தட்ட நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேள்விகளோடு தான் எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் பதில் கூறும் கடமைக்கு மட்டும் தான் நீங்கள் தயாராக இல்லை. உங்களை நோக்கி வீசப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமை உங்களுக்கு இருக்கும் போது மட்டுமே உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் வரும். அவ்வாறன்றி கேள்விகளை மட்டும் வீசிக் கொண்ண்டிருப்பேன் என்றால் அதற்கு வேறு பெயர்களுண்டு வையத்தில்.

 

\\\வர தாமதமானால் பெருமையாக சொல்லிக்கொள்ளுங்கள் குலாம் ஓடி விட்டாரென்று. ஏனெனில் என்னுடைய இலக்கு செங்கொடி மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த நாத்திக சிந்தனையை…/// ஆம் உண்மையை உரத்துச் சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை. அது எவ்வளவு கேவலமாக இருந்த போதிலும். அதனால் தான் தலைப்பையே ‘ஓடி ஒழியும்.. .. ..’ என்று வைத்திருக்கிறேன். உண்மையை பொய் போலச் சொல்வதும், பொய்யை உண்மை போலச் சொல்வதும் எனக்கு பழக்கமில்லாதவைகள். குலாம், செங்கொடியை மட்டும் உங்கள் இலக்காக கொள்ளுங்கள் என்று யாரும் உங்களைக் கோரவில்லை. உங்களை நோக்கி உங்கள் கருத்துகளை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றால் அதற்கு பதிலளிக்கும் கடமை உங்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த நாத்திக சிந்தனையில் செங்கொடி அங்கமில்லையா? செங்கொடி நாத்திக சிந்தனைக்கு வெளியில் நிற்பவரா? நாளை சிவப்புக் கொடிக்கு பதில் கூற முடியவில்லை என்றால் என்னுடைய இலக்கு சிவப்புக் கொடி மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த நாத்திக சிந்தனையை என்று கூறுவீர்களா? இன்னொரு நாள், கருப்புக் கொடிக்கு பதில் கூறமுடியாத போது என்னுடைய இலக்கு கருப்புக் கொடி மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த நாத்திக சிந்தனையை என்று கூறுவீர்களா? சிவப்புக் கொடியோ, கருப்புக் கொடியோ அல்லது வெறெந்தக் கொடியுமோ இல்லாமல் நாத்திக சிந்தனை மட்டும் தனியே முகிழ்த்தோடிவருமா என்ன? அல்லது காற்றில் அட்டைக் கத்தி வீசுவது மட்டும் தான் உங்கள் தொழிலா?

 

குலாம் நீங்கள் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் இப்படித்தான் பதிலளிக்க முடியாத இடம் வரும் போது போக்குக் காட்டி திசை மாறி ஓடியிருக்கிறீர்கள். இதோ சான்றுகள்,

 

கடவுளை நிரூபிப்பதற்கு அறிவியலைவிட தர்க்கமே சரியான வழி என நீங்கள் கூறியதும் அதனடிப்படையிலேயே கடவுள் நம்பிக்கை தவறு என்று என் மறுப்பு வாதங்களை வைத்தேன், பதிலளிக்க முடியாத இடம் வந்ததும் விட்டுவிட்டு வேறு கேள்விகளுக்கு நகர்ந்து விட்டீர்கள். அதற்கான சுட்டி இது

தொடர்ந்து நடத்த விவாதத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் பின்னூட்டத்தில் சரியாக விவாதிக்க முடியாது என ஒதுங்கிக் கொண்டீர்கள். அதற்கான சுட்டி இதோ

ஆனால் இன்றுவரை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பதிவுக்கு எதிர்பதிவு எனும் முறையில் விவாதிக்கலாம் என்று கூறிவிட்டு, கடைசிவரை ஒரு காலவரைக்குள் என்று நீங்கள் அடம்பிடித்ததற்கான சுட்டி இதோ,

 

குலாம் பதில் கூற மறுக்கும் கேள்விகள் இதோ,

 

  1. கடவுள் உண்டு என்பது நம்பிக்கையா? உறுதியானதா?
  1. அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடவுள் இல்லை என்று விளக்கிய என்னுடைய மறுப்புகளுக்கு என்ன பதில்?
  1. கடவுளை அளக்கும் கருவிகள் கடவுளை விட மிகைத்திருக்க அவசியமில்லை என்றேன், அதற்கான மறுமொழி என்ன?
  1. பூமியில் மட்டுமே இயங்கும் கடவுள் மனிதர்களின் கருவிகளில் அகப்பட மாட்டான் என்பது ஏமாற்றும் உத்தி என்று கூறியிருக்கும் என் கருத்துக்கான மறுப்பு என்ன?
  1. கடவுள் உண்டா இல்லையா எனும் விவாதத்தின் சாரம்சமே முகம்மது கூறியது உண்மையா பொய்யா எனும் கேள்விதான் என்றேனே அதற்கான விளக்கம் எங்கே?
  1. மனிதனைத் தவிர வேறு உயிரினங்களிடம் கடவுள் குறித்த சிந்தனை இல்லை என்றேன், நிரூபிக்க முடியுமா என்றார், நிரூபித்தேன், பின் அமைதியாகி விட்டாரே ஏன்?

 

ஆக மூடநம்பிக்கையை வைத்துக் கொண்டு தான் இத்தனை பீற்றல்களா? இனியேனும் சிந்தியுங்கள்.

 

குலாம் மட்டுமல்ல தமிழ் இணையப் பரப்பில் உலாவரும் பெரும்பாலான இஸ்லாமிய மதப் பரப்புரை பதிவர்கள் இப்படி மூடநம்பிக்கைச் சகதியில் ஊறிய அட்டைக் கத்திகள் தாம். ஆனால், உள்ளுக்குள் உண்மையில் புடம் போட்ட தீரர்களாய் தங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அதே அவர்களே எல்லாவித தில்லுமுல்லுகளிலும் -உப்புச் சப்பற்ற மறுமொழிகளுக்குக் கூட பதில் மொழி இட்டு அதிக கவனம் பெற முயல்வது, குழுமமாக இயங்கி மாறிமாறி பின்னூட்டங்களை இட்டுக் கொள்வது, திரட்டிகளில் ஓட்டுப் போடுவது- இறங்குகிறார்கள். சொந்த வாழ்வில் ஒழுங்கீனமாக செயல்படும் அநேகர் பொதுவாழ்வில் மதப் புனிதர்களாக உலாவருவதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். இவர்கள் மதப் பரப்புரை பதிவர்களாக உலாவரவும் செய்கிறார்கள். ஆகவே, பொழுது போக்காகவும் முகமூடியாகவும் செய்யும் இந்த மதப்பரப்புரைகளை அடையாளம் காணவும், சரியான எல்லையில் தடுத்து நிறுத்தவும் தேவை இருக்கிறது. தங்கள் பதிவுகளில் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும், தங்களின் கூறுகளில் உளப்பூர்வமான பிடிப்புடன் இருப்பதாகவும், உச்சபட்ச நேர்மையை கடைப்பிடிப்பதாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் இவர்கள், விவாதம் என்று வந்து விட்டால் திசை திருப்புவது, வார்த்தைகளுக்குள் ஒழிந்து கொண்டு சதிராடுவது என்று தங்கள் மூட நம்பிக்கைகளை தக்க வைப்பதற்கு அனைத்து விதமான தந்திரங்களிலும் இறங்குகிறார்கள். அவர்களின் இந்த புளித்துப்போன போலித்தனங்களின் நெடிகளில் தாக்குண்டு உப்பிசத்துக்கு ஆளானவன் எனும் முறையில் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

 

இதனால் சகலமான இஸ்லாமிய மதப் பரப்புரை பதிவாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்ன வென்றால், நீங்கள் விரும்பும் எந்த தலைப்பிலும் உங்களுடன் எழுத்து விவாதம் செய்ய நான் தயாராய் இருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே தேடலுடன் பரிசீலனைக்கு தயாரானவர்களாக இருந்தால், இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு களம் காண வாருங்கள் என அழைக்கிறேன்.

 

இதை குறிப்பிட்ட ஒருவருடன் நேரடி விவாதத்துக்கு வாருங்கள் என்பதன் மூலம் எதிர் கொள்ள விரும்புபவர்கள் இந்த இடுகையை பாருங்கள். இதில் எழுப்பப்பட்ட்டிருக்கும் அம்சங்களை பரிசீலித்துப் பாருங்கள் என கோருகிறேன். மட்டுமல்லாது அவருக்கும் சேர்த்தே இந்த அழைப்பு. மாறாக இதை அலட்சியத்துடன் கடந்து செல்ல விரும்புவர்கள் குறித்து நான் ஒன்றும் கூறுவதற்கில்லை, அவர்கள் அவர்களுக்கே உண்மையாளர்களாய் இல்லை என்பதைத் தவிர.