தொகுப்பு | மே, 2011

முதல் தலித் மில்லியனர்: இது ஒடுக்கப்பட்டோருக்கான நற்செதியா?

29 மே

Rajesh Saraiya

இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெயரையும், பெருமையும் பெற்றுள்ளார் ராஜேஷ் சரையா.

டேராடூனில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜேஷ். ரஷ்யாவில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தார். தற்போது உக்ரேனில் வசித்து வருகிறார். அங்கு பல கோடி மதிப்புள்ள ஸ்டீல்மான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற ஸ்டீல் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் டேராடூன் வந்திருந்த ராஜேஷ் கூறுகையில், மக்கள் முதலில் தங்களுக்குள் மாற வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்ற வேண்டும். உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றார் ராஜேஷ்.

டேராடூனில் தலித் சிறு தொழிலதிபர்களின் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அதில்தான் கலந்து கொண்டு ராஜேஷ் பேசினார்.

அங்கீகரிக்கப்படாத பிரிவுக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி, 88 சதவீத தலித் மக்கள் ஆதிவாசி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் செலவழிக்கிறார்களாம்.

தலித் மக்கள் சிறுதொழில் பிரிவில் பெரும் பணக்காரர்களாக என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியும் நோக்கில்தான் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராஜேஷ் சரையாவின் வளர்ச்சி இந்திய தலித் தொழிலதிபர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மேலும் பல பெரும் பணக்கார தலித்களை நாடு காணும் நிலையும் ஏற்படும் என நம்புவோம்.

****************************************

இந்தியாவிலிருக்கும் பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்டவர்களுக்கு இது ஊக்கத்தைத் தரும் செய்தியைப் போல, தலித்களும் முயன்றால் பெரும்பணக்காரர்கள் ஆகலாம் தடையொன்றுமில்லை என்று காட்டுவதைப்போல் இச்செய்தி இருப்பதாக பலரும் கருதலாம். ஆனால் இப்படி ஒருவர் பெரும் பணக்காரர் ஆகிவிடுவதால் ஒடுக்கப்படுபவர்களுக்கு சமூக ரீதியாக ஏதேனும் நல்லது நடந்துவிடுமா? பல லட்சக்கணக்கானோரை இழி நிலையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக பொருளாதார அளவில் எந்தவித நன்மையையும் செய்துவிட முடியாது. தலித் இயக்கங்கள் கூட இச்செய்தியை கொண்டாடலாம். இருபது ரூபாயில் தன் ஒரு நாளைக் கடக்கும் ஒருவரும், இந்த மில்லியனரும் தலித் என்ற அடிப்படையில் ஒன்று என்றால் தலித் இயக்கங்களின் அடிப்படையே தகர்ந்து போகும். வர்க்க ரீதியான பார்வையே சரியானது என்பதற்கு இது ஒரு தூலமான எடுத்துக்காட்டு.

ரவுடி மரியம்பிச்சை மரணம்! அதிமுக-தமுமுக ரவுடித்தனம்!! நேரடி ரிப்போர்ட்!!!

28 மே

அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!

திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர்  கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.

11 மணிக்கு  அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.

காலை  8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.

விபத்து நடந்த அன்றும்  அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான்  மரியம்பிச்சையின் இறப்புக்கு  அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.

ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.

கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.

மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)

மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம்  போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.

இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.

மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.


மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!மரியம்பிச்சை இருந்தாலும் ரவுடி, செத்தாலும் ரவுடி – நேரடி ரிப்போர்ட், படங்கள், வரலாறு!

யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!

க்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர்.  இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.

இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில்  புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப்  பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.

சொந்த  வாழ்க்கையில்  நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.

மேலும் தான்  வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின்  கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.

இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.

அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின்  மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.

திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும்  கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.

மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.

மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில்    தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும்  கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள்  போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.

உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

குறிப்பு :

1.         மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2.         பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை  கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும்  குறைத்துக்கொள்ள தயாரில்லை..

 

-தகவல், படங்கள்:  ம.க.இ.க, திருச்சி

 

நன்றி: வினவு

கடையநல்லூர்: பிரச்சனையை திசைதிருப்பும் ஆணாதிக்கம்

23 மே

கடந்த 21/05/2011 சனியன்று பரசுராமபுரம் தெரு வட்டாரத்தாரின் செயல்பாடு நடந்துவரும் இந்தப் பிரச்சனையின் ஒட்டுமொத்தத் தன்மையில் ஒரு திசை விலகலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தப் பிரச்சனையின் மையமான அந்தப் பெண் பாதிக்கப்பட்டவர் மட்டுமே என்றோ, இதில் அந்தப் பெண் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்றோ நான் கருதவில்லை. ஒட்டுமொத்த குற்றத்தில் அந்தப் பெண்ணுக்கும் உரிய பங்களிப்பு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தற்போது வட்டாரவாசிகள் அந்தப் பெண்ணை அடிக்க வேண்டும், மொட்டையடிக்க வேண்டும், ஊர்விலக்கம் செய்ய வேண்டும் என முனைந்து சனியன்று மாலையில் ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தியதில் ஊனப்பட்டுப் போனதென்னவோ அதில் தொடர்புடைய அனைவரையும் அம்பலப்படுத்த வேண்டும் எனும் நோக்கம் தான்.

இந்த கலவரச் சூழலில் தொடர்புடைய இருவருமே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்கிறார்கள். முதலில் கல்லெறிந்து தாக்கியது பெண்வீட்டார்தான் என்று வட்டாரத்தார்களும், அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்து படமெடுத்ததும், தகாத வார்த்தைகளால் திட்டியதும், பெண்களைத் தாக்கியதும் வட்டாரத்தார்கள் தான் என்று பெண்வீட்டாரும் கூறிக்கொள்கிறார்கள். எப்படி என்றாலும் இருதரப்பிலும் அடித்துமிருக்கிறார்கள் அடிவாங்கியுமிருக்கிறார்கள், வட்டாரத்தார் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வட்டாரத்தார்களும் எதிர்வழக்கு தொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

முதலில், வட்டாரத்தார்கள் ஊர்விலக்கம் செய்துவைக்க முற்பட்டது சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறானது. நிலுவையில் இருக்கும் வழக்கில் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது அந்த வழக்கு தொடர்பான விசயத்தில் வட்டாரத்தார்கள் நடவடிக்கை எடுப்பது குற்றச் செயலாகும், இது போன்று பாலியல் குற்றச்சாட்டுகள் எழும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பேதம்காட்டி நடவடிக்கை எடுப்பது ஆணாதிக்கம் சமூக அளவில் வேரோடியிருப்பதன் எடுத்துக்காட்டு. ஆண் பாலியல் குற்றம் செய்து அம்பலப்படும் போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வதும், அது போன்ற குற்றத்தை பெண் செய்யும் போது அவளின் வீட்டை அடித்து உடைப்பதும் ஊர் விலக்கம் செய்வதும் எந்த விதத்தில் சரி? ஆக வட்டாரத்தார்கள் நடந்து கொண்டது தேவையற்ற ஒன்று.

இது ஒருபுறமிருக்கட்டும். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடையநல்லூரில் விவாதத்தில் இருந்துகொண்டிருக்கும் இந்த விசயத்தில் இப்போது திடீரென்று வட்டாரத்தார்கள் நடவடிக்கை எடுக்க முன்வந்ததன் காரணம் என்ன? இந்த நடவடிக்கையால் இந்த வழக்கிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பவை தான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள்.

இந்த வழக்கில் ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்ட ஒருவரும், இன்னும் அமபலப்படுத்தப்படாமல் வெளியில் இருக்கும் ஒருவரும் இணைந்து வட்டாரத்தார்களை தூண்டிவிட்டுத்தான் இந்த சனிக்கிழமை நடவடிக்கை நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, சில மாதங்களுக்கு முன் இதே தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் அந்த வீட்டார்களை அடித்து வீட்டை உடைத்துப் போட்ட நீங்கள் இந்த சம்பவத்தில் மட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள்? எனும் ரீதியில் வட்டாரத்து இளைஞர்களை தூண்டியதால் தான் இது நிகழ்ந்திருக்கிறது.

திட்டமிட்டு ஒரு கலவரச்சூழல் உருவாக்கப்பட்டதால் இந்த வழக்கின் போக்கில் ஒரு திசைமாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் சற்றும் தொடர்பற்ற சிலர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவர்கள் தங்களுக்கான பிணை ஆணை பெறுவதற்கான முயற்சியில் இருப்பதால் இந்த வழக்கின் மீதான குவி கவனம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இந்த வழக்கோடு தொடர்புடையவர்கள் தங்களை வெளிப்படுத்தாமல் இருக்க பேரம் பேசுவதற்கான காலம் கிடைத்திருக்கிறது. மட்டுமல்லாது அவர்கள் பெரும் பணம் செலவு செய்யத் தயாராக இருப்பதால், இதில் முனைப்புடன் இருப்பது யார்? தங்களுக்கு சாதகமாக செயல்படக்கூடியவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப திட்டமிடும் வசதியும் வாய்த்திருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயமே இந்த வழக்கோடு தொடர்புடையவர்கள் காவல்துறையிலும் இருக்கிறார்கள் என்பது தான். அதனால் தான் இரவில் கொடுக்கப்பட்ட முறையீட்டு மனுவில் விடிவதற்குள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அவசரத்தின் பின்னல் வேறு என்ன நோக்கம் இருந்துவிட முடியும்?

ஆக இதன் பின்னணியில் இயங்கி பலனடைந்தவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்கான திட்டமிடுதலில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் குற்றவாளிகளை சமுகத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை இருப்பவர்களோ உணர்ச்சி வேகத்தில் காரியமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களே, பெண்ணை அடித்து தண்டிப்பதைவிட சமூகத்தில் மறைந்திருப்பவர்களை அம்பலப்படுத்துவதன் மூலமே சமூகத்திற்கு நன்மை செய்ய முடியும். உணருங்கள்.

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்!

23 மே

வானம்: ஐந்து வகை இந்தியாவின் அசல் முகம்! – திரைவிமரிசனம்

மகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.

ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ருஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.

நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு  பஃபுக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பஃபுக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.

இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.

இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.

பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.

சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பஃபுக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?

பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் காதலி. ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.

தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது காதலி வருத்தம் கொள்கிறாள்.

அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.

எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.

பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.

கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.

‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ருஷ்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.

தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.

பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.

இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.

’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது…  என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.

சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.

அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.

இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல்  காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ருஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!

நன்றி: வெற்றிவேல்

நன்றி: வினவு

எந்த மத மலத்தையும் பூசிக்கொள்ள விரும்பாதவன்

13 மே

முதலில் நான் பயன்படுத்திய ஆணாதிக்கம் என்ற சொல்லுக்கு மறுப்பு தெரிவித்தார், அதை விளக்குவதற்காக கேள்விகள் எழுப்பப்பட்டன. அதை அப்படியே விட்டு விட்டு நண்பர் ஆன்மீகத்தில் சாய்ந்தார். நண்பரின் பதிலிலிருந்தே ஆணாதிக்கத்தின் கூறுகள் மதத்தில் படர்ந்திருக்கின்றன எனக்காட்டினேன். இப்போது நண்பர் மீண்டும் முதன்மைத்தனமானவைகளைத் தவிர்த்து விட்டு துணையாக குறிப்பிட்டவைகளை மட்டும் முக்கியமானதாக எடுத்துக்கொண்டு தன் மறுப்பைத் தயாரித்திருக்கிறார். இதற்கு பதில் கூறிய பின்னர் நண்பர் அடுத்த தயாரிப்பில் வேறு தலைப்பை நாடுவாரோ….

இஸ்லாம் ஏகாதிபத்தியம் உட்பட அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்பதாக கூறியிருக்கும் நண்பரின் கூற்றை மறுக்கிறேன். பெண்ணுக்கு எதிராக ஆணின் அடக்குமுறைகளை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதை முன்பே பார்த்தோம். லாபக் கோட்பாட்டை அங்கீகரித்திருப்பதன் மூலம் உலகின் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல் அடக்குமுறைகளை ஆதரிக்கிறது இஸ்லாம். நடைமுறையில் அறுபதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் எந்த ஒரு நாடாவது ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுகிறதா?

நிலம் உள்ளவன் பயிரிடட்டும், பயிரிடாதவன் கொடுக்கட்டும் என்பதை முதல் சோசலிசம் என நீங்கள் கருதினால் எப்போது அது செயலில் இருந்தது? இப்போது ஏன் அது செயல்பாட்டில் இல்லை எனக் கூறமுடியுமா? ஏட்டுச் சுரைக்காய்களை என்ன செய்யமுடியும்?

’வியர்வை உலருமுன்’ என்பன போன்ற சொல்லாடல்கள் செயலுக்கு வரவில்லை, வருவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் கம்யூனிசம் தோன்றி வளர்வதற்கான காரணி. அடிமை முறையை பொத்திப் பாதுகாத்த ஒரு மதத்திலிருந்துகொண்டா இப்படியான சவடால்கள். கம்யூனிசத்தைத்தவிர மதங்கள், தத்துவங்கள், கொள்கைகள் உட்பட வேறெதுவும் மனித வாழ்வை, சமூக சாரத்தை அறிவியல் ரீதியாக, இயங்கியல் ரீதியாக ஆய்ந்ததில்லை. எந்த ஆய்வும், இல்லாமல், செயல்திட்டங்களின்றி செய்யப்படும் நீதிபோதனைகளினால் பலன் ஏதும் இருக்காது என்பதை கடந்த 1400 ஆண்டுகளில் நீங்கள் கண்டதில்லையா? உணர்ச்சிவயப்படாமல் சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்ததாக ஒரு பேராசிரியர் தொகுத்ததை பட்டியலிட்டிருந்தீர்கள்.

1)   இஸ்லாம் எந்த இடத்தில் குழப்புகிறதோ அதை பொருளாதார வடிவமாக முன்வைக்கிறீர்கள். ஒருவனுக்கு செல்வத்தைத்தருவதும் இல்லாமல் பட்டினி போடுவதும் இறைவன் புறத்திலிருந்து என இடும்பு பேசிவிட்டு, மறுபுறம் அதை தனி மனித திறமை என்பது போல் காட்டி அதில் ஏற்றத்தாழ்வு இயற்கை என ஏகடியம் பேசுவது எதில் அடங்கும். முதலில் உழைப்பதும் உண்பதும் மனிதன் புறத்திலிருந்தா, இறைவன் புறத்திலிருந்தா என தீர்மானமாகச் சொல்லுங்கள் பின்னர் மற்றவற்றைப் பார்க்கலாம்.

2)   வட்டிக்கு வாங்குவதற்கான புறச்சூழலை தக்கவைத்துக் கொண்டு வட்டி வாங்காதே என்பது வெற்றுக் கோசமா? இல்லையா? ஏழைகள் இருக்கும் வரை அவர்களுக்குத் தேவை இருக்கும், அதுவரை வட்டியையும் ஒழிக்க முடியாது.

3)   முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்த கூட்டுழைப்பு என்பதே மோசடியானது. உற்பத்தியின் பலன் சமூகத்தில் எவ்வாறு பங்கிடப்படுகிறது என்பதை அறிவதற்கே நீங்கள் கம்யூனிசம் கற்க வேண்டியதிருக்கும். லாபத்தையும் நட்டத்தையும் பொதுவில் வைக்க வேண்டுமென்றால் அங்கு யாரும் தொழிலாளியாகவோ முதலாளியாகவோ பாத்திரம் வகிக்க முடியுமா?

4)   ஒரு உற்பத்திப் பொருளின் சந்தை உலகளவில் விரிந்துவிட்ட பிறகு பதுக்கல் என்பதன் பொருளே மாறிப்போய்விட்டது. ஆனால் நீங்களோ உள்ளூர் பதுக்கல் பொருளில் உலகை அளக்கிறீர்கள். எது அமித லாபம் என்பதற்கு இஸ்லாத்தில் அளவுகோல் எதுவும் இருக்கிறதா?

5)   இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது சகாத் என எண்ணுகிறேன், ஏற்கனவே சகாத் என்பது இரண்டரை விழுக்காடு வரிவிதிப்பு என்பதற்கு மேல் ஒன்றுமில்லை என நான் எழுதியதற்கு மறுப்போ விளக்கமோ அளிக்காமல் மீண்டும் அதையே சுட்டுவது ஏனோ?

6)   இன்றைய முதலாளித்துவ ஜனநாயகத்தில் எந்த அரசு ஏழைகளின் தேவையை நிறைவு செய்யும்? அரசு என்பதே ஏழைகளை ஒடுக்கும் கருவியாக இருக்கும்போது அந்த அரசு ஏழைகளின் தேவைகளை நிறைவேற்ற என்ன வழிமுறையை இஸ்லாம் வைத்திருக்கிறது?

7)   8) 9) 11) தனிச் சொத்துடமை என்பதுதான் ஏழ்மையையும் சுரண்டலையும் தொடக்கி வைத்த கருவி. இதை தக்கவைப்பது தான் ஏழ்மையையும், சுரண்டலையும் வாழவைக்கிறது என்றால் தனிச்சொத்துரிமையை நீக்குவதை நோக்கி பயணிப்பதல்லவா சரியான பாதையாக இருக்க முடியும். அந்தப் பாதையின் தடங்கள் இஸ்லாத்தில் காணப்படுகிறதா?

10  உழைக்காதவர்களுக்கு உண்ணும் தகுதி இல்லை என்பது பொதுவுடமையின் ஒரு கூறு, இதை செயல்படுத்தும் வழிமுறை உண்டா இஸ்லாத்தில்?

இதயத்தில் முத்திரையிட்டு உண்மைகளை விளங்கவிடாமல் செய்யும் அறிவுசார் இறைவன் உங்களுக்கு முத்திரை எதுவும் இடவில்லை என்றால் நீங்கள் எனக்கு விளக்கப்படுத்தலாமே.

கடைசியாக, நான் பிறந்த சமூகத்தில் வாழ்வதற்கு எவருடைய அருளாசியையும் நான் கோரி நிற்கவில்லை, அப்படியான ஒன்றை வழங்கும் தகுதியும் யாருக்குமில்லை. அதேநேரம் எந்த மதத்தின் மலத்தையும் அள்ளி என்மேல் பூசிக்கொள்ளும் தேவையும் எனக்கில்லை. மட்டுமல்லாது என்னுடைய ஈமச்சடங்குகள் குறித்து நண்பர் கவலைப்படவேண்டாம். அதற்கான ஏற்பாடுகள் என்னிடம் உண்டு, நண்பருக்கு தேவைப்பட்டால் பள்ளிவாசல் மையவாடி நிலத்தை என்னுடல் தீண்டாமல் காக்கும் உரிமையைத் தருகிறேன். ஆவன செய்துகொள்ளட்டும்.

கடையநல்லூர் ஆணாதிக்கப் பொறுக்கிகளின் முதல் பட்டியல்

13 மே

 

கடையநல்லூரின் ஆணாதிக்கப் பொறுக்கிகள் பெண்களை தங்களின் பண்டங்களாக பயன்படுத்தும் போக்கு குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்,

இதில் பயணப்பட்டவர்களில், பலனடைந்தவர்களில் சமூகத்திலும், அரசியல் அதிகார வர்க்கத்திலும் இதுவரையிலும் உயர்ந்த நிலையில் இருப்ப‌வர்களும் அட‌க்கம். தங்களின் அதிகாரத்தை, பணபலத்தை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு முன் இதுபோன்ற பிரச்சனைகள் வெளிவந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தும் இருக்கிறார்கள்.

எனவே இந்தமுறை அவ்வாறு தப்பித்துக்கொள்ள முடியாமல் அனைத்து வழிகளையும் அடைத்து அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திக் காட்டவேண்டியது சமூக அக்கரையுள்ள ஒவ்வொருவருக்கும் கடமையாகும். அந்தவகையில் தகுந்த ஆவணங்கள் கிடைத்ததும் இங்கு அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள்.

இதில் தொடர்புடைய ஆணாதிக்கப் பொறுக்கிகள் அனைவரையும் புகைப்படத்துடன் அம்பலப்படுத்தும் திட்டம் இருக்கிறது

அந்தவகையில் காவல்துறையின் நடவடிக்கை வட்டத்துக்குள் நால்வர் வந்திருக்கிறார்கள்.

1)   சிட்டி என்ற பெயரில் தையலகம் வைத்திருந்ததால் சிட்டி பீர் என அடையாளம் காணப்பட்ட பேட்டையில் வசிக்கும் பீர் முகம்மது என்பவன். குறிப்பிட்ட நிகழ்வின் மூளையாக இவன் செயல்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த கும்பலின் மூளை இவனல்ல.

2)   தாருஸ்ஸலாம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஜபருல்லா. அறிமுகம் செய்து வைத்தது மட்டும்தானா வேறு பங்களிப்புகளும் உண்டா என்பது ஆய்வில் இருக்கிறது. தற்போது தேடப்படுபவராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், செங்கோட்டையில் ஒரு வழக்குறைஞரின் பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற பிணை ஆணை கிடைத்ததும் வெளிப்படலாம்.

3)   கானித ஏர்செல் முகமைக் கடையில் பணிபுரிந்த காளியம்மாள்.

4)   கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் முத்துராஜ்

இவர்கள் நால்வர் மட்டுமே தற்போது அம்பலபட்டிருக்கிறார்கள். ஆனாலும் இதன் பின்னிருக்கும் வலைப்பின்னல் மிகப் பெரியது. அந்தப் பெண்ணின் செல்லிடப் பேசியிலிருந்து மட்டும் 450 தொலைபேசி இலக்கங்களுக்கு மேல் பெறப்பட்டிருக்கிறது என்பதோடு இணைத்துப்பார்த்தால் தான் இதன் கரங்கள் எங்கெங்கெல்லாம் நீண்டிருக்கின்றது என்பது புரியும்.

அதே நேரம் இதை காவல்துறைக்கு கொண்டு செல்லாமலேயே முடித்துக் கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. முறையீடு செய்த பின்னரும் கூட காலதாமதம் செய்யப்பட்டது. தற்போதும்கூட மாவட்ட அளவிலான உயரதிகாரியின் தலையீட்டிற்குப் பின்னரே விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இன்னும்கூட இந்தமட்டில் இந்த வழக்கை முடித்துக்கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல்துறை, நகராட்சி உயரதிகாரிகள் வரை தொடரும் இந்த இணைப்பின் கடைசி கண்ணி வரையில் வெளிக்கொண்டுவந்து அம்பலப்படுத்துவதற்கு கடையநல்லூர் மக்கள் விழிப்போடிருந்தே ஆகவேண்டும்.

தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…

13 மே

அன்பார்ந்த பெற்றோர்களே!

தனியார் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால்

கட்டணம் செலுத்த வேண்டாம்!

மாணவர்கள் மீது நடவடிக்கை என்று மிரட்டினால்

உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணக் கொள்ளை அத்து மீறிச் செல்கிறது!

நீதியரசர் கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க பள்ளி நிர்வாகங்கள் மறுக்கின்றன.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான்!

கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக பெற்றோர்கள் சில நகரங்களில் கொதித்தெழுந்து போராடுகின்றனர். ஆனால்

ஒருங்கிணைந்த போராட்டமே இதற்குத் தீர்வு!

நீதியரசன் கோவிந்தராசன் நிற்ணயித்த கட்டணம் போதாது என்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிஷன் முன் தனியார் பள்ளி முதலாளிகள் முறையிட்டுள்ளனர். வரும் கல்வியாண்டில்  (2011-2012) கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.

தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கையை எற்று கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டால் அதனை எதிர்த்து-அரசை எதிர்த்து-பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்! அதற்கு

மனித உரிமை பாதுகாப்பு மையத்தை நீங்கள் உடன் அனுகலாம்.

பள்ளி நிர்வாகத்தின் மிரட்டல்களுக்குப் பெற்றோர்களை அஞ்ச வேண்டாம். நாம் பெற்ற பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று படித்தால் தானே கல்வி நிறுவனங்களுக்கு வாழ்வு!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-Aயின் படி-இலவசக் கல்வி பெறுவது இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை. இலவசக் கல்வி அளிப்பது அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்துள்ளது.

கட்டாய இல்வசக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி சென்ற ஆண்டு (2009-2010) முதலே 1-ம் வகுப்பு முதல் 25%ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.

L.K.G முதல் +2 வரை கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் தடை செய்யும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு இல்லை.

கட்டணத்துக்காக மாணவர்களையோ, பெற்றோர்களையோ துன்புறுத்த, அவமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கட்டணம் செலுத்திய பெற்றோர்கள் கட்டண ரசீதுடன் வந்தால் கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறலாம். அதற்கான படிவம் எங்களிடம் கிடைக்கும்.

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்குப் புகார் அளிக்கலாம். பெற்றோர்களே ஏமாறாதீர்கள்!

கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டு மனதுக்குள் புழுங்கி வேகும் பெற்றோர்களே ஒன்றுபட்டு உங்கள் உணர்வுகளை செயல்களாக வெளிப்படுத்தினால் நமது பிள்ளைகளின் கட்டாய இலவசக் கல்வி உரிமையைப் பெற்று விடலாம். மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கல்விக் கட்டணக்கொள்ளைக்கு எதிரான இயக்கத்தினை கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறது

விரைந்து செல்படுவோம்!                   வெற்றி பெறுவோம்!

அனைத்து விபரங்களும் படிவங்களும் எங்களிடம் கிடைக்கும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

மதுரை மாவட்டக் கிளை

150 – இ, ஏரிக்கரை சாலை (மாடி)

அப்பலோ மருத்துவமனை அருகில், கே.கே நகர், மதுரை 20

தொலைபேசி: 9443471003,    9865348163

கவிஞர் ரசூலின் ஊர்விலக்கம் சட்டவிரோதமானது: நீதிமன்றம்

12 மே

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான

தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை

சட்டவிரோதமானது

பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும் அவர்தம் குடும்பத்தின் மீது தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன் (அபீமுஅ)ஜமாத்

கடந்த 12-07- 2007 ம் தேதி முதல் ஊர்விலக்கம் சமூக புறக்கணிப்பை நடத்தி வருகிறது.இதற்கு காரணமாக மே 2007 உயிர்மை மாத இதழில் வெளிவந்த இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கள் என்ற கட்டுரையாகும்

இக்கட்டுரையில் ரசூல் குரானியகருத்துப்படிபாலியல்குற்றம்,திருட்டுக்குற்றம் போல் குடியை தண்டனைக்குரியகுற்றமாய் சொல்லப்படவில்லை, வெறுக்கத்தக்கதாய் சொல்கிறது,ஆனால் ஹதீஸ்களின்படி குடிக்கு தண்டனை உண்டு, தற்போது அரபுநாடுகளிலும் குடிக்கு தண்டனை வழங்கப்படுகிறது மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் குடிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என்பதாக அக்கட்டுரை அமைந்ததற்காக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த ஊர்விலக்கத்தை எதிர்த்து அபீமுஅஜமாத் மீது தொடரப்பட்ட வழக்கு எண் 231/2007.கடந்த நான்காண்டுகளாக பத்மனாப்புரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில்நடை பெற்றது. இதற்கு 12 – 04 – 2011 அன்று தீர்ப்புரை பகரப்பட்டது. இப்போது நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக பெறப்பட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்டுள்ள இத்தீர்ப்புரையின் சில முக்கியப்பகுதிகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

1)வாதியின் தன்னிலை விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் அபீமுஅ ஜமாஅத்தால் வாதிக்கு எதிரான எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் வாதியின் விளக்கம் ஏன் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதற்கு மேற்படி ஜமாஅத்தால் எவ்வித காரணமும் கூறப்படவில்லை.வாதிக்கு எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுப்பதற்கு முன் வாதியின் விளக்கத்தைக் கேட்டுள்ள ஜமாத் வாதியின் விளக்கம் ஏன் ஏற்கத்தக்கதல்ல என்பதற்கு எவ்வித காரணிகளையும் கூறாமல் வாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது இயற்கை நெறியை மீறிய செயல் என்றும் சட்டவிரோதமானது என்றுமே இந்நீதிமன்றம் கருதுகிறது.

2) பிரதிவாதியின் சாட்சியம் வாதியையும், அவரது குடும்பத்தினரையும் பிரதிவாதிகள் ஜமாஅத்திலிருந்து சமூகவிலக்கம் செய்துல்ளனர் என்ற வாதியின் வழக்கை உறுதிபடுத்தும்வகையில் உள்ளது.வாதியின் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்வகையில் பிரதிவாதிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டப்படி ஏற்கக் கூடியதாக இல்லை என்றே இந் நீதிமன்றம் கருதுகிறது.

3)வாதிக்கு எதிரான ஊர்நீக்க உத்தரவு வக்புவாரிய தீர்மானத்திற்கு எதிரானது என்று வக்பு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டபின்னரும் வாதிக்கு எதிரான மேற்படி ஊர்நீக்க உத்தரவை ரத்துசெய்யாததை பார்க்கும் போது வாதியின் மேல் உள்ள தனிப்பட்டவிரோதம் காரணமாக வாதிக்கு எதிராக பிரதிவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்ற வாதியின் வாதம் ஏற்கத்தக்கதாக உள்ளது என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது.இவ்வாறு அபீமுஅ ஜமாத் தன்னிச்சையாக வக்புவாரியத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டுல்ளதும் சட்டவிரோதமானது என்றே இந் நீதிமன்றம் கருதுகிறது.

4)இவ்வழக்கை விசாரிக்க வக்ப்வாரிய டிரிபியூனலுக்குத்தான் அதிகாரம் உண்டு என்பதற்கு எவ்வித சட்டவிதிமுறைகளும் பிரதிவாதிகள் தரப்பில் சுட்டிக்காட்டப்படாத நிலையில்பிரிவு 9 உரிமையியல் நடைமுறை சட்டத்தின்படி இவ்வழக்கை விசாரிக்க அதிகாரம் உண்டு.வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரங்கள் வாதிக்கு கிடைக்கத்தக்கது.

5)தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன்(அபீமுஅ) ஜமாத் வாதியையும் அவரது குடும்பத்தினரையும் ஊர்நீக்கம் செய்துள்ளது சட்டவிரோதமானது,வாதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் அரசியலமிப்பு உரிமைகளும் சிவில் உரிமைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன்.அபீமுஅவின் 12 – 07 – 2007 தேதியிட்ட ஊர்விலக்க உத்தரவு சட்டவிரோதமானது. வாதியயும் அவரது குடும்பத்தையும் பிரதிவாதிகள் ஊர்விலக்கம் செய்வதிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்காக இவ்வழக்கு விளம்புகை மற்றும் நிரந்தர தடை உத்தரவு கட்டளைப் பரிகாரம் கோரப்பட்டது.

6) முடிவாக இவ்வழக்கு வாதி கோரியபடி விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி செலவுத்தொகையின்றி தீர்ப்பாணை பிறப்பித்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த தீர்ப்பை அபீமுஅ ஜமாஅத் நடைமுறைப்படுத்த முன்வருமா? இல்லை மனித உரிமை     மீறலை தொடருமா?

நன்றி: நிஸார் அகமது மின்னஞ்சலில்

பள்ளிக்கல்வி தளத்தின் மோசடி

11 மே

Pallikalvi.in தளம் தன்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக கூறிக் கொள்கிறது. தலைப்பில் அரசு சின்னம், பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தளத்தின் கீழே தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகமும் தனியார் நிறுவனம் ஒன்றும் கூட்டாக நடத்தும் தளம் என்று தெரிவிக்கிறது.

இத்தளத்தில் அளவுக்கு அதிகமான விளம்பரங்களும் அதன் மூலம் பெரிய வருவாயும் வருகிறது. உண்மை புரியாதவர்கள், அரசு ஏன் தனது தளத்தில் விளம்பரங்கள் வெளியிடுகிறது என்ற தவறான எண்ணத்துக்கு வருகிறார்கள்.

ஆனால், இது உண்மையிலேயே அரசு தளம் தானா என உறுதி செய்ய முடியவில்லை. வழக்கமான அரசு இணையத்தளங்கள் tn.gov.in முகவரியிலேயே இருக்கும்.

தனியார் தளத்தில் அரசு பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றம் / மோசடி. ஒரு வேளை, உண்மையிலேயே அரசு தளம் என்றால், இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்த விளம்பர வருவாய் எங்கு போகிறது என்று அறிய வேண்டும்.

கூகுளிடம் புகார் அளிப்பதற்கான முகவரி:

https://www.google.com/adsense/support/bin/request.py?contact=violation_report

அரசுத் துறையில் உள்ள சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். இன்னும் முறையான நடவடிக்கை இல்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க முயலுங்கள்.

இது குறித்த பேஸ்புக் உரையாடல்கள்:

http://www.facebook.com/ideamani008/posts/104975336256002

http://www.facebook.com/video/video.php?v=1859815889882

நன்றி: உளரல்

நண்பர் முஸ்தபா கமாலின் பதிலுரை குறித்து

10 மே

கடந்த என் பதிவில், குறிப்பிட்ட நிகழ்வு குறித்து எழுப்பட்ட கேள்விகள் எதற்கும் பதிலுரைக்காது, மத விழுமியங்களை மட்டுமே முன்வைத்து நண்பர் தன் பதிலுரையை தந்திருக்கிறார். இதில் இரண்டு முடிவுகளுக்கு நாம் வரலாம். ஒன்று, குறிப்பிட்ட அந்த நிகழ்வில் என்னுடைய நிலைப்பாட்டில் பெரிய அளவில் முரண்பாடு எதுவும் நண்பருக்கு இல்லை. இரண்டு, மதத்திற்கு எதிரான என்னுடைய நிலைப்பாடுதான் நண்பருக்கு முதன்மைத்தனமுள்ளதாக தெரிகிறதேயன்றி வேறொன்றுமில்லை. ஆக எதனை முன்வைத்து தொடங்கப்பட்டதோ அதனை விடுத்து மதம் குறித்த விமர்சனமாக இதனை தொடர வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

ஆள்பவன் ஆண், அதனை பேணுபவள் பெண் எனும் நிலப்பிரபுத்துவ சட்டகங்களுக்குள்ளிருந்து நண்பர் இன்னும் வெளியேறவில்லை போலிருக்கிறது. உலகில் பெண் என்பவளின் பங்களிப்பு என்ன? அவளுக்கு கிடைக்கும் மதிப்பீடு என்ன? போன்ற சமூகப்பார்வை எதுவும் நண்பருக்கு இல்லை. முடைநாற்றமெடுக்கும் மதத்தை நறுமணம் என்பதான மாயையில் சிக்கியிருப்பவர்களுக்கு அது இருக்குமென எதிர்பார்க்கவும் முடியாது. உடல்வலிமையிலும், மனவலிமையிலும் ஆணுக்கு நிகரான எல்லைகளை பெண்கள் எட்டிக்காட்டியிருக்கும் பொழுதிலும்கூட மனரீதியாக, உடல்ரீதியாக என்று பேதங்களை சுட்டிக்காட்டி ஆணுக்குப் பெண் கீழ் என நிருவத் துடிக்கும் போக்கு எந்த அடிப்படையில் சரியானது?

மதம் கூறிவிட்டது அதனால் ஆணுக்குக் கீழ்தான் பெண் என நொண்டுவதற்குப் பதிலாக நடப்பு உலகைப் பார்க்க வேண்டுமென நண்பருக்கு கூறவிரும்புகிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்றத்தாழ்வுள்ள இரண்டு ஆண்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு எதுவும் கற்பிக்கப்பட்டிருக்காத நிலையில் அதே காரணங்களுக்காக பெண் தாழ்ந்தவள் என்பது எந்த விதத்தில் நீதி? உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனமான ஒருஆண் அவன் ஆண் என்பதால் சமூக மதிப்பில் உயர்ந்திருக்க; உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலமாக இருக்கும் ஒரு பெண் அவள் பெண் என்பதினால் சமூக மதிப்பில் தாழ்ந்திருக்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நீதி?

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலவீனமானவள் பெண் என்பது ஆணாதிக்கத்தை நிலைத்திருக்க வைப்பதற்கு நெடுங்காலமாக ஆண் கையாண்டு வந்திருக்கும் உத்தி. தொடக்கத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலமாக இருந்து சமூகத்தையும் மனித குலத்தையும் பெண்ணே தலைமைதாங்கி வழி நடத்தியிருக்கிறாள் என்பது ஆய்வுகள் கூறும் உண்மை. ஆனால் ஆண்களுக்கு ஆய்வு உண்மைகளைவிட ஆணாதிக்கமே அவசியமாய் இருந்து வந்திருக்கிறது.

சரி, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண் பலவீனமானவள் என்றே கொள்வோம், என்றால் பலவீனமானவளாய் இருக்கும் பெண்ணுக்கு பலமானவனாய் இருக்கும் ஆண் கை கொடுத்து தனக்குச் சமமாய் இருத்திக்கொள்வது தானே பகுத்தறிவாய் இருக்கமுடியும்? மாறாக அவள் பலவீனமாக இருக்கிறாள் என்பதையே காரணமாய்க் கொண்டு அவளை ஏறி மிதிப்பது எந்த விதத்திலும் அறிவு சார்ந்ததாய் இருக்கமுடியுமா?

பெண்களை அடிமைப்படுத்துவதற்கு மதங்களே கருவிகளாய் இருந்து வந்திருக்கின்றன. இதன் கூறுகளை எல்லா மதங்களிலிருந்தும் சான்றாய் காட்டலாம். அதற்கு இஸ்லாமிய மதமும் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. இஸ்லாம் பெண்களை அடங்கிப் போகச் சொல்கிறது அடக்கியாளச் சொல்லவில்லை என்பதிலுள்ள இரட்டைத் தன்மை ஏன் அடங்கிப் போகவேண்டும் எனும் கேள்வி எழுந்தால் அம்பலமாகிப் போகும். இஸ்லாம் பெண்களுக்கு விதித்துள்ள கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் நுணுகிப்பார்த்தால் பெண்ணை ஆணுக்கான போகப்பொருளாகவே கட்டமைத்திருப்பது தெரியவரும்.

வேதமறையும் வேந்தர் நெறியும் நண்பருக்கு போதுமென்றால் அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. ஆனால் அவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கமுடியாது என்பதை வெறுமனே நம்பிக்கை என ஒதுக்க முடியாது. ஏனென்றால் ஆணாதிக்கப் பிரச்சனைகளின் வீரியங்கள் நண்பர் கூறும் வேதமறையினாலும் வேந்தர் நெறியினாலும் தக்கவைக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் யாருக்கு எதிராகவும் குரல் கொடுப்பது பொதுவுடமைவாதிகளின் குணம் என்பதால் அவற்றில் இஸ்லாமியப் பெண் இஸ்லாமல்லாத பெண் என்றெல்லாம் பேதம் பார்க்க இயலாது.

உழுபவனுக்கே நிலம் சொந்தம் என இஸ்லாம் கூறியிருந்தால் அதை செயல்படுத்திக் காட்டுங்கள் அப்போது கம்யூனிஸ்ட்களின் தேவை எழாது. மற்றப்படி, திருமறை அறிவியல் போன்ற பதங்களெல்லாம் நமத்துப்போன பண்டங்கள் மீண்டும் அவற்றை விற்க முயல்வேண்டாம்.

சகாத் என்பதென்ன இரண்டரை விழுக்காடு வரிவிதிப்பு, அதிலும் யாராருக்கு கொடுக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன். இதை பெரிய பொருளாதார திட்டம் போல் விதந்தோதுபவர்கள் முதலில் சகாத் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ளட்டும்.

கம்யூனிசமும் தெரியாமல் இஸ்லாமும் புரியாமல் மேலெழுந்தவாரியாக விமர்சிப்பதிலிருந்து உங்களின் எல்லாம் வல்ல அந்த அல்லா உங்களை இரட்சிக்கட்டுமாக