ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

6 நவ்

அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட வெகு சிலரைத் தவிர ஏனையோர் விடுதலை செய்யப்படவில்லை. அதுவும் தளபதி அளவுக்கு செயல்பாடு கொண்ட ஒரு பெண் போராளி வன்புணர்ச்சியுடன் வேறு தண்டனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யப்பட்டார் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை இலங்கை இராணுவம் ஒருபோதும் செய்திருக்காது. எனவே, அந்த செவ்வி புனைவாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அந்த புனைவினூடாக தெறிக்கும் கேள்விகள்.. .. ..?

 

அந்தப் புனைவு கூறும் செய்தி என்ன? இரண்டு செய்திகளை அது அழுத்தமாக கூற விரும்புகிறது. ஒன்று ஈழப் போராட்டம் முடிந்து விட்டது. இனி அங்கு போராடுவதற்கு யாரும் தயாராக இல்லை, சூழலும் இல்லை. இரண்டு, தமிழகத்தில் ஈழ மக்கள் நலனுக்காக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும் ஈழம் குறித்து அக்கரையும் புரிதலும் இல்லாதவை. இப்படிக் கூறுவதன் மூலம் ஈழப் பிரச்சனை தொடர்பாக தமிழத்திலிருக்கும் ஆதரவு நிலையை நீர்த்துப் போக வைப்பது; அவர்களை அப்புறப்படுத்திய இடத்தில் அரசு சாரா நிறுவனத்தையோ, வேறு குழுக்களையோ வைத்து, இந்திய அரசு செய்து கொண்டிருக்கும் துரோகத்தையும், பிராந்திய நலன்களுக்கான செயல்களை இன்னும் வீரியமாகவும், நுட்பமாகவும், மறைமுகமாகவும் செய்வதற்கான முந்தயாரிப்பாகக் கூட அந்தப் புனைவு இருக்கலாம்.

 

ஆனால் இந்தப் புனைவு யாரைத் தாக்குகிறதோ அவர்கள், அதாவது வைகோ, நெடுமாறன், சீமான் இன்னபிற தமிழ் தேசிய கட்சிகள் போன்றவை இது குறித்து எந்தக் கருத்தையும் இதுவரை கூறவில்லை. ஏனென்றால் அவர்களெல்லாம் ‘ஏசு இருக்கிறார், வந்து கொண்டே இருக்கிறார்’ என்பது போல் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், இதோ துப்பாக்கியோடு வந்து விட்டார் என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள். அவர்கள் பேசினாலுமே கூட அது கற்பனையாக எழுதப்பட்டது என்பதை தாண்டி வேறெதையும் கூறப் போவதில்லை. அது கற்பனை உரையாடலாகத்தான் இருக்கும் என்றாலும், மெய்யாகவே தற்போதைய இலங்கையின் யதார்த்த நிலை அது தான்.

 

தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியா எனும் பிராந்திய வல்லாதிக்கத்திற்காக முற்றிலுமாக தகர்த்தெறியப் பட்டிருக்கிறது. தனி ஈழ தாகம் கொண்டிருந்த மக்கள் கொன்றொழிக்கப் பட்டிருக்கிறார்கள். போராளிகள் போரின் போதும் அதன் பிறகும் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள், உயிருடன் எஞ்சியவர்கள் சிறைக் கொட்டடிகளில் சித்திரவதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வெளியே ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகவோ, போராளிகளுக்கு ஆதரவாகவோ நிலை எடுப்பது குற்றச் செயலாக, அரசு ஒடுக்குமுறைக்குள் வலிந்து மாட்டிக் கொள்வது போன்ற செயலாக மக்களிடம் ஆழமாக விதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு போராட்ட அமைப்பு முற்றிலுமாக குலைக்கப்படுவது முன்னெப்போதும் நடந்தே இராத ஒன்றல்ல. அது அவமானகரமான ஒன்றும் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் விசயத்தில் இவ்வாறான புரிதலுக்கு அதன் ஆதரவாளர்கள் ஏன் வர மறுக்கிறார்கள்? எந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இயக்கம் தான் முதன்மையான ஒன்றேயன்றி அதன் தலைவர்களோ, தனிநபரோ அல்ல. புலி ஆதரவாளர்களிடம் இது தலைகிழாக இருக்கிறது. அதனால் தான் படையணிகளும், ஆயுதங்களும் எதிரியால் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்பும் பிரபாகரன் வானத்திலிருந்து குதித்து விரல் சொடுக்கினால் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகிவிடும் என்பதைப் போல கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

விடுதலைப் புலிகள் ஏன் அழிந்தார்கள், எது அவர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது என்பதை விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் என்றால் பிரபாகரன் தான் எனும் நாயக மனப்பான்மைக்கு இவர்களை இட்டு என்றது யார்? எது? லட்சக் கணக்கில் தங்கள் கட்சிக்கு உறுப்பினர்கள் இருப்பதாக காட்டிக் கொள்ளும், தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள் அந்தக் கடைசிக்கட்டப் போரில் இங்கிருந்து செய்த பங்களிப்பு என்ன? பாசிச ஜெயாவுக்கு ஓட்டுக் கேட்டது தான் இவர்களின் ஒரே பங்களிப்பு. அங்கு மக்களின் மேல் ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தபோது, இங்கே இவர்கள் இலைமலர்ந்தால் ஈழம் மலரும் என்று அறிக்கைக் கணைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள், ஈழ ஆதரவு என்பதை கருணாநிதியை திட்டுவது என்று குறுக்கிக் கொண்டிருந்தார்கள். எந்த இந்திய ஆளும்வர்க்கத்திற்காக போர் நடத்தப்பட்டுக் கொண்டிருந்ததோ அந்த ஆளும் வர்க்கத்தின் பலன்களைப் பெறுவதில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

 

இலங்கை அரசு தமிழர்கள் விசயத்தில் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே தான் இந்திய அரசு காஷ்மீர் விசயத்திலும், மத்திய கிழக்கிலும் செய்து கொண்டிருக்கிறது. அதை ஆதரித்துக் கொண்டு, இந்திய பாராளுமன்றத்தில் அங்கம் பெற துடித்துக் கொண்டு விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் ஆதரிக்கிறோம் என்பது அவர்கள் கொள்கையில் இருக்கும் ஓட்டாண்டித் தனமா இல்லையா? இந்த ஓட்டாண்டித் தனத்தை மறைக்கத்தான் பிரபாகரனை ஒரு நாயகனைப் போல தாங்கிப் பிடிக்கிறார்கள். நாளையே அவர் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு களத்துக்கு வந்து விடுவார் என்று பிரமையூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரன் வெறுமனே தலைவராகப் பிறந்தவரல்லர். அங்கிருந்த சூழல் அவரை தலைவராக பரிணமிக்க வைத்தது. ஆனால் இன்று அங்கிருக்கும் சூழல் துப்பாக்கியை அல்ல புரசிகர மக்கள் திரள் இயக்கத்தையே கோரி நிற்கிறது. அரசில் அங்கம் வகிக்கத் துடிப்பவர்களால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியுமா? அதனால் தான் அவர்கள் துப்பாக்கியை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக பிரபாகரனுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இருந்தாலும் வெளியில், சொந்த இடத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஈழப் போரை நினைத்தாலே வலிக்கும் அளவுக்கு அவர்கள் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். தொட்டால் நொறுங்கிவிடும் அளவுக்கு அவர்களுக்குள் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இதை வெல்ல, அவர்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனை தொடங்கி, வர்க்க அடிப்படையில் திரட்டி, உணவுப் பிரச்சனையினூடாக உலகப் பார்வையை ஊட்டி ஆயத்தப்படுத்தும் பெரும்பணி தேவையாக இருக்கிறது. அதை ஒரு புரட்சிகர இடதுசாரி இயக்கத்தாலல்லாது பிரிதொரு கொள்கையால் செய்யவியலாது.

 

அண்மையில் பலநாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிமிகு போராட்டங்கள் புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் இல்லாததால் நீர்த்துப் போய், மக்கள் போராடியதன் பலன் யாருக்கு எதிராக போராடினார்களோ அவர்களுக்கே கிடைத்திருக்கிறது. அங்கெல்லாம் புரட்சிகர இயக்கத்தின் தேவை அவர்களின் சொந்த அனுபவங்களினூடாகவே உணரப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தோல்விக்கும் அவர்களின் சிதைவுக்கும் இந்த இன்மையே தொடக்கமாக இருந்திருக்கிறது. பெண் போராளியின் பெயரால் புனையப்பட்டிருக்கும் அந்தக் கற்பனை உரையாடல், அது என்ன நோக்கத்திற்காக புனையப்பட்டிருந்தாலும் இதையே உணர்த்துவதாய் இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

மாவீரர் நாள் எனும் சடங்கு

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பின்னூட்டமொன்றை இடுக