தொகுப்பு | உலகம் RSS feed for this section

இலங்கையில் புத்த மதம் படும்பாடு

28 டிசம்பர்

 

பௌத்த பிக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு தனியான நீதிமன்ற மொன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர் பான வரைவுத் திட்ட சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

பௌத்த பிக்குகளுக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்படும் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இந்த தனி நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரதமரும், பௌத்த சாசன அமைச்சருமான டி.எம். ஜயரட்ன இந்த சட்ட மூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார்.

 

மன்னராட்சி காலத்தில் பௌத்த பிக்குகள் தொடர்பான முறைப்பாடுகள் விஹாரைகளிலேயே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. உத்தேச பௌத்த பிக்குகளுக்காக நீதிமன்றம் கண்டியில் அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, கொலை, கொள்ளை, சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு, பாலியல் வன்முறை, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பாசிசத்தின் வரலாறில் எப்போதும் மதம் பெரும் பங்கு ஆற்றி உள்ளது. கத்தோலிக்க திருச்சபையும், மற்றும் கிறீத்தவ நிறுவனங்களும் இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், ஸ்பானிய நாடுகளில் பாசிசம் நிலவிய போது, அப் பாசிச அரசுகளுக்கு ஆதரவு வழங்கின. இந்தியாவில் நவ பாசிச சிந்தனை இந்து மத நிறுவனங்களால் வளர்க்கப்படுகிறது. மன்னர் மஹிந்த எதை வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு இப்போ புத்தமதத்தின் முற்று முழுதான அதரவு தேவைப்படுகிறது .

 

ஜேவிபி யில் இருந்தும், ஜாதிக கெல உறுமயவில் இருந்து வெளியேறும் இனவாத பிக்குகளை தன் வசம் திருப்ப மஹிந்த பாவிக்கும் மூலோபாயத்தில் ஒன்று தான் இந்த நீதி மன்றம். ஜேசு கிறீஸ்து இன்று உயிரோடு இருந்திருந்தால், தனது சிந்தனையும் பெயரும் எவ்வளவு கீழ்த்தரமாக கிறீஸ்தவ பாதிரிகளால் பயன்படுத்தப்படுகிறதனை கண்டு தூக்கில் தொங்கி இருப்பர். அதே போன்று இலங்கையில் புத்த மதம் படும்பாட்டை கண் கொண்டு பார்த்தல் புத்தன் இந்து சமுத்திரத்தில் விழுந்து தன் உயிரை போக்கி இருப்பான் ! 

 

முதல் பதிவு: பு.ஜ.ம.மு

எகிப்தில் மீண்டும் பரவும் மக்கள் போர்

22 நவ்

எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகாலம் எகிப்து நாட்டை ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. இதையடுத்து முபாரக் பதவியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 

முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி நிர்வாகத்திலிருந்து அகலாமல் உள்ளது.

ராணுவத்திற்கு எதிராக போராட்டம்

இதையடுத்து தற்போது ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. 

போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினார். 

போராட்டக்காரர்கள் அதற்கும் அசையாமல் இருக்கவே பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த இரு தினங்களில் மட்டும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது.

பரவும் போராட்டம்

வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளனர்.

கெய்ரோ தவிர அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

**************************************************

சாராம்சத்தில் மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்தே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். ஆனால் அந்த கிளர்ச்சியின் பலன்களை அதே ஏகாதிபத்தியங்களும், மதவாதிகளும் அறுவடை செய்து கொள்கிறார்கள். கவர்ச்சிகரமான முழக்கங்கள் மூலம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள். காரணம் மக்கள் போராட்டங்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்கவும், தகுந்த விழிப்புணவுடன் போராட்டங்களை வழிநடர்த்தவும், அதனூடாக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புரட்சிகர கட்சிகள் ஏதும் இல்லாததே. சில மாதங்களிலேயே மீண்டும் மக்கள் திரண்டெழுந்திருப்பதே புரட்சிகர இடதுசாரி கட்சியின் தேவையை உணர்த்துவதாக இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு,

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

28 அக்

கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த புரட்சியாளர்கள், அங்கே இதுவரை என்னென்ன புரட்சிகளை செய்துள்ளனர்? கறுப்பின மக்களை இனச்சுத்திகரிப்பு செய்துள்ளார்கள். கறுப்பினப் பெண்களை தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து, பாலியல் அடிமைகளாக நடத்தியுள்ளனர். பலதார மண சட்டத்தை அமுல் படுத்தி பெண்ணுரிமைக்கு சமாதி கட்டியுள்ளனர். புரட்சிப் படையினால் விடுதலை செய்யப்பட்ட புதிய லிபியாவில், இன்னும் பல அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.“எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்.” – கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், “50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது.” என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், “அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன.” என்று சாடினார். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது “லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை.” என்று அறிவித்தார்கள். கடாபியிடம், “ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்,” மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.

கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட “கடாபியின் இஸ்லாத்தை” கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் “ஆப்பிரிக்க சகோதரத்துவம்” இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, “ஆப்பிரிக்க ஒன்றியம்” உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. “லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து,” இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் “புரட்சிப் படையினரால்” இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, “கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்.” என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.

“லிபியப் புரட்சி” ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. “புரட்சிப் படையினர்” கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. “புரட்சிப் படையினரின்” முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த “புரட்சிக் காரர்களின்” பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர். 

பிரத்தியேக “அகதி முகாம்களில்” தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். “அகதி முகாம்” என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் “பாதுகாப்பு ஏற்பாடுகளை” பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். “மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்.” 

துப்பாக்கிகளுடன் திரியும் “புரட்சிப் படையினர்” மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். “அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்.”

புரட்சிப் படையினரின் மற்றொரு மகத்தான சாதனை குறித்து, இதுவரை எந்த ஒரு ஊடகமும் வாய் திறக்கவில்லை. கடற்கரையோரமாக அமைந்துள்ள மிஸ்ராத்தா நகரில் இருந்து 25 கி.மி. தொலைவில் உள்ளது தவேர்கா (Tawergha ) எனும் சிறு நகரம். போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், மிஸ்ராத்தா சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது. மிஸ்ராத்தா நகரில் புரட்சிப் படையினரின் கை ஓங்கி இருந்ததால், கடாபியின் படைகள் சுற்றி வளைத்து தாக்கிக் கொண்டிருந்தன. மிஸ்ராத்தா நகர மக்களின் அவலம் குறித்து, ஊடகங்கள் தினசரி செய்தி வாசித்தன. “சர்வதேச சமூகமும்” ஐ.நா. அவையை கூட்டுமளவு கண்டனம் தெரிவித்தன. இறுதியில் நேட்டோ விமானங்களின் குண்டுவீச்சினால் மிஸ்ராத்தா முற்றுகை விலக்கிக் கொள்ளப் பட்டது. மிஸ்ராத்தா முற்றுகைக்கு பழிவாங்குவதற்காக, புரட்சிப் படையினர் தவேர்கா மீது பாய்ந்தார்கள். தவேர்கா நகரில் நுழைந்த புரட்சிப் படையினர், கிரனேட் குண்டுகளை வெடிக்க வைத்தனர். ஆண்கள், பெண்கள், வயோதிபர், குழந்தைகள் எல்லோரையும் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், “கறுப்பு லிபியர்கள்” என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக “புரட்சிப் படையினர்” தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், “கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே” தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, “சர்வதேச மன்னிப்புச் சபை” யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், “அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்.” என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம். 

லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த “லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு”, கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த “சர்வதேச பயங்கரவாதி” வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு: 

முதல் பதிவு: கலையரசன்

கடாஃபி: சர்வாதிகாரிகளுக்கான முடிவு என்றாலும் அவரைக் கொன்றவர்கள் ஜனநாயகவாதிகளல்லர்

22 அக்

புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடல் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்சில் உள்ள இறைச்சிக் கூடத்தில் கிடக்கிறது. அவரது உடலை ரகசியமாகப் புதைக்க இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புரட்சிப் படையினரால் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல் மிஸ்ரடா பகுதியில் இறைச்சி கூடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர்.

ஆனால், பின்லேடன் உடலை கடலில் புதைத்தது மாதிரி கடாபியின் உடலையும் ரகசியமாகப் புதைக்க வேண்டும் என இடைக்கால அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் உடலை தங்களது இனத்தைச் சேர்ந்த லிபிய பழங்குடியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் உடலை எங்கே புதைப்பது என்பது குறித்து லிபிய அதிகாரிகள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

ஒசாமா பின் லேடனை புதைத்தது போல் கடாபியின் உடலை கடலில் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் விவாதித்து வருவதாகத் தெரிகிறது. எதிர்காலத்தில் கடாபியின் கல்லறை புனிதச் சின்னமாக மாறிவிடக் கூடாது என்பதில் நேடோ நாடுகள் தீவிரமாக உள்ளன.

இதற்கிடையே கடாபி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் புரட்சிப் படையினர் அவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. பின்னர் அமெரிக்கா தலைமையிலான நேடோ போர் விமானங்கள் அவரது வாகனத்தை குண்டு வீசித் தாக்கி சிதறடித்ததும், காயமடைந்த அவர் ஒரு சாக்கடைக் குழாயில் பதுங்கியபோது புரட்சிப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந் நிலையில் அவரை எடுத்தவுடன் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அவரிடம் போர்க் குற்றங்கள் குறித்து சில மணி நேரம் அடித்து, உதைத்து விசாரணை நடத்திவிட்டு, தெருவில் இழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி விட்டே சுட்டுக் கொன்றதாகவும் தெரிகிறது. அவரை தெருவில் உதைத்து இழுத்துச் செல்லும் வீடியோவும், அவர் கெஞ்சுவது போன்ற வீடியோவும் இப்போது வெளியாகியுள்ளது.

இந் நிலையில் தங்களது ‘லிபியப் பணி’ முடிவடைந்து விட்டதாக நேடோ அறிவித்துள்ளது. கடாஃபி இறந்துவிட்டார் என்றால், லிபியாவில் நேட்டோவின் ராணுவத் தலையீடும் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள் என்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸி கூறியுள்ளார்.

ஐஆர்ஏ உள்ளிட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து இங்கிலாந்திலும் தீவிரவாதத்தை வளர்த்த கடாபி கொல்லப்பட்டது, தீவிரவாதிகளால் பலியான குடும்பங்களுக்கு நிம்மதி தரும். கடாபியின் அரசை முடிவுக்குக் கொண்டு வருவதில் இங்கிலாந்தும் பங்கு வகித்தது பெருமை என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

கடாபியை கொன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவரை வேண்டுமென்றே திட்டமிட்டு அமெரிக்கா தலைமையின நாடுகள் கொன்று விட்டன என்று வெனிசூலா அதிபர் ஹுயூகோ சாவெஸ் கூறியுள்ளார்.

********************************************************

கடாஃபி தன்னுடைய அரசை மக்களுக்கான அரசாக நடத்தியவரல்லர். அவர் சர்வாதிகாரி தான், மக்களைப் பொருட்படுத்தாதவர்தான். சர்வாதிகாரிகளின் முடிவு இப்படித்தான் இருக்கும். ஆனால் அவரின் இந்த முடிவு அவருடைய சர்வாதிகரத்திற்கான முடிவல்ல. ஏகாதிபத்தியங்களை அனுசரித்துப் போகாததற்கான முடிவு. இன்னும் தெளிவாகச் சொன்னால் லிபியாவின் வளங்களை அமெரிக்கா கொள்ளையடிக்க அனுமதிக்காததற்கான முடிவு. அப்படி அவர் அனுமதித்திருந்தால் இன்றும் லிபியாவின் அசைக்க முடியாத அரசுத் தலைவராக அவரால் நீடித்திருந்திருக்க முடியும்.

 

லிபியாவிற்கான ஏகாதிபத்திய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் லிபிய மக்கள் போர் வெல்லட்டும்!

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

 

கடாஃபியின் கடைசி நிமிடங்கள்

விரிவடைகிறது வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு

17 அக்

தொழில் அதிபர்களின் பேராசையை கண்டித்து அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டம், 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. நான்கு கண்டங்களுக்கும் போராட்டங்கள் பரவிவருகின்றன. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு

தொழிற்சாலை அதிபர்கள் பேராசைக்காரர்களாக உள்ளனர், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், வேலைவாய்ப்பு இல்லை, பொருளாதார நெருக்கடி போன்ற பல காரணங்களை கூறி ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஒருமாதத்துக்கும் குறைவான இந்தக் கால அளவில், வால் ஸ்ட்ரீட் ஆக்ரமிப்பு இயக்கம் நன்கு வலுவடைந்து, அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. வாஷிங்டன் ஆக்ரமிப்பு இயக்கம், லாஸ் ஏஞ்சலீஸ் ஆக்ரமிப்பு இயக்கம் என்ற நகர்சார் பெயர்களில் கிளைகளாகப் பரவும் ‘ வால்ஸ்ட்ரீட்’ ஆக்ரமிப்பு’ (Occupy Wall Street) இயக்கம் மிக அமைதியான முறையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தை நோக்கி போராட்டக்குழுவினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணியாக சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் மான்ஹட்டன் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஐரோப்பா, ஆசியாவில் பரவுகிறது

இந்த போராட்டம் இப்போது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில நாடுகள் உள்பட 80 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்த 950 முக்கிய நகரங்களில் தினமும் போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டன் போராட்டம்

லண்டனில் செயின்ட்பால் கத்தீட்ரல் அருகில் நூற்றுக்கும் அதிகமானோர் டென்ட் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ரோமில் இளைஞர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். போலீசார் தடுத்ததால் அங்கும் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கும்பலை கலைத்தனர்.

செப்டம்பர் 17 தொடக்கம்

இப்போராட்டத்திற்கான முதல் அழைப்பு, கனடாவில் இருந்து வெளிவரும், “ஆட்பஸ்டர்ஸ்’ இதழில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதலில் வெளிவந்தது. அந்த இதழில், எகிப்திய போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, லட்சக்கணக்கானோர் வால் ஸ்டிரீட்டில் திரள வேண்டும் என்று, பிப்ரவரி 2ம் தேதி, தலையங்கம் அறைகூவல் விடுத்தது.

தொடர்ந்து, ஜூலை 13ம் தேதி, இந்தப் போராட்டத்திற்காக,”ஆக்குபை வால்ஸ்ட்ரீட்’ என்ற “ட்விட்டர்’ கணக்கை, “ஆட்பஸ்டர்ஸ்’ துவங்கியது. இதையடுத்துத் தான், செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு வால் ஸ்டிரீட்டில், புகழ்பெற்ற பங்குச் சந்தையின் அடையாளமான காளைச் சிற்பத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்’ முழக்கம், “நாங்கள் 99 சதவீதம்” என்பதாகும். மீதமுள்ள ஒரு சதவீதம் தான், அரசியல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பது இதன் உட்பொருள்.

கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்ததைப் போல, நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டுள்ள மக்கள், தங்கள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கும், பூங்காவின் தூய்மைக்கும், தாங்களே பல குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றனர்.

சிக்கலில் நாடுகள்

ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், அகிம்சை வழியிலேயே திகழ வேண்டும் என, “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு’ இயக்கத்தின் இணையதளத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை உலகளவில் ஆதரவைப் பெறும் எனவும், இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் மையங்கொண்டிருந்தாலும், இந்த கிளர்ச்சிப் புயலானது ஐரோப்பாவின் ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று பரவி, அங்கும் போராட்டங்கள் நடந்துள்ளன. இதனால் ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சிக்கலில் தவிக்கின்றன.

பரவும் போராட்டம், தவிக்கும் அமெரிக்கா

7 அக்

அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில்

வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.

7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பரவி வரும் போராட்டம்

நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

அதிபர் ஒபாமா கருத்து

போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.

பரவி வரும் போராட்டம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.

தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

ரியாத்தில் புதிய ஜனநாயகம்

22 ஆக

 

 

 

 

 

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

தற்போது ”புதிய ஜனநாயகம்” எனும் மார்க்சிய லெனினிய மாத இதழ் ரியாத்திலும் கிடைக்கிறது. சமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி மார்க்சியக் கண்னோட்டத்தில் எடுத்தியம்பும், மக்களை அரசியல் விழிப்புணர்வை நோக்கி நகர்த்திச் செல்லும் மாத இதழான புதிய ஜனநாயகம் இப்போது ரியாத் மாநகரில் பத்தாவில் லக்கி ரெஸ்டாரண்ட் எதிரிலுள்ள பானூஸ் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிறது. நண்பர்கள் இச்செய்தியை தமிழ் தெரிந்த அனைவரிடமும் கொண்டு சேர்க்குமாறு வேண்டுகிறோம்.

 

சரிகிறது அமெரிக்க அட்டை கோபுரம்

15 ஆக

அடுத்த மாதம் நிச்சயம் அமெரிக்கப் பொருளாதாரம் பலத்த அடியைச் சந்திக்கும் என்கிறார் அமெரிக்க பொருளாத நிபுணர் ஜின் மெய்க்கா.

இந்த வீழ்ச்சிக்கு ‘ஹிண்டன்பர்க் பயங்கரம்’ எனப் பெயரிட்டிருக்கிறார் ஜின் மெய்க்கா. அமெரிக்க மார்க்கெட் வீழ்ச்சி எப்படி சாத்தியம் என்று தெரிந்து கொள்ளுமுன் ஹிண்டன்பர்க் பயங்கரம் பற்றி…

ஹிண்டன்பர்க் என்பது ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியில் தயாரான விமானம். 1936-ம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்கும் ஜெர்மனிக்கும் பயணிகள் சேவையைத் துவங்கியது. முதல் ஆண்டு வெற்றிகரமாக சேவையைப் பூர்த்தி செய்த இந்த விமானம், 1937-ம் ஆண்டு நியூஜெர்ஸியின் லேக்கர்ஸ்ட் கடற்படை விமான தளத்தில் தரையிறங்கும்போது வெடித்துச் சிதறியது.

இதில் 36 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியைத் ஏற்படுத்திய விமான விபத்து இது. தரையிறங்குவதற்கு மிக சமீபத்தில் விமானம் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் வெடித்தது ஹிண்டன்பர்க். இதற்கான சரியான காரணத்தை யாரும் இதுவரை கூறவில்லை.

இப்போது சாதாரணமாகத் தெரியும் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் இதுபோன்ற பெரும் விபத்து நேரும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஜிம் மெய்க்கா.

அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பொருளியல் நிலவரங்களை, பல்வேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரும் வீழ்ச்சியை அமெரிக்க பங்குச் சந்தையும், பொருளாதாரமும் சந்திக்கும் என்பதை உறுதி செய்துள்ளார் ஜிம்.

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க பங்குச் சந்தை பெரும் ஊசலாட்டத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவின் 92 நிறுவனங்களின் பங்குகள் 52 வார உச்ச கட்ட விலைக்குக் கைமாறின. அதேபோல 81 நிறுவனங்கள் இதுவரை காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மெக்லீன் ஆஸிலேட்டர் (பங்குச் சந்தைப்போக்கைக் கணிக்கும் முறை) முறையில் பங்குச் சந்தை போக்குகள் அடுத்த சில மாதங்களுக்கு மிக மோசமாகவே இருப்பதாகவும், இந்த மோசமான போக்கின் துவக்கம் செப்டம்பர் மாதம் என்றும் ஜிம் தெரிவித்துள்ளார்.

பொருளியல் வீழ்ச்சியோ வளர்ச்சியோ, இதுவரை ஜிம் கணித்துச் சொன்ன எதுவும் பொய்யானதில்லை என்பதால், இந்த முறை அவர் கூறியிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள அமெரிக்கர்கள் விரும்பவில்லை.

**************************************************

அமெரிக்கா என்றால் பணக்கார நாடு என்று தான் பலரும் நினைப்பர். ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடன்களில் உருண்டு கொண்டிருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் பலம் வாய்ந்த நாடு என்ற பெயரினாலும் உலகின் வர்த்தகங்கள் பெரும்பாலும் டாலரில் நடப்பதாலும் எல்லா நாடுகளும் அமரிக்காவுக்கு கடன் கொடுக்க தயாராக இருக்கின்றன. ஏற்கனவே கொடுத்த கடன்கள் மீட்கப்படவேண்டுமென்றால் அமெரிக்க பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டும். பொருளாதாரம் நிலையாக இருக்க வேண்டுமென்றால் மீண்டும் கடன் கொடுக்க வேண்டும். இப்படியான கடன் சுழற்சியிலேயே அமெரிக்க பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் மொத்தக் கடன் தொகை எவ்வளவு தெரியுமா? மூச்சுவிட மறந்து விடாதீர்கள், 14 லட்சத்து 30 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிபிற்கு 45 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்) இப்போது கடன்களுக்கான அமெரிக்காவின் மதிப்பீடு சரிந்திருப்பதால் உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன.

 இன்று அல்லது நாளை; நாளை அல்லது இன்னொரு நாள் அமெரிக்கா வீழ்வது உறுதி.

இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

13 ஆக
“இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை.” – லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள்.
லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொண்டது. வழக்கம் போலவே, “போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக” பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் கிளம்பியது. கும்பல் கும்பலாக கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக ஸ்தாபனங்களை அடித்து நொறுக்கினார்கள். கடைகளை சூறையாடினார்கள். லண்டன் நகரில் மட்டும் நின்று விடாது, பேர்மிங்ஹாம் போன்ற பல நகரங்களுக்கு கலவரத்தீ பரவியது. கலவரத்தில் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர் எல்லோரும் ஈடுபட்டனர். ஏழ்மை மட்டுமே இனவேற்றுமை கடந்து அவர்களை ஒன்று சேர்த்தது. “லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், போலீசுடன் மோதுவதை விட, கொள்ளையடிப்பது இலகுவானது என்று கருதுகிறார்கள் ….” இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஊடகவியலாளர். அவர் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கலவரம் பற்றி தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோர் குறித்து ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. “சமூகவிரோதிகள்!”. “கொள்ளையடிப்பது, திருடுவது சமூகவிரோதிகளின் செயல். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.” என்று அரசு கூறி வருகின்றது. பொதுமக்களில் ஒரு பகுதி இதனை ஆதரிக்கின்றது.
அரசியல் மயப்படுத்தப் படாத மக்கள் எழுச்சி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டன் கலவரம் ஒரு உதாரணம். கலகக்காரரின் அறியாமையை பூர்ஷுவா வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. கலவரத்தில் ஈடுபட்டோர், காப்பரேட் நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பெரும் முதலாளிகளை பாதித்த கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பெரும் வணிக நிறுவனங்களின் காட்சியறைகள் நிறைந்திருக்கும் லண்டன் மத்தி, விரைவிலேயே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆரம்பத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரின் தார்மீகக் கோபம், பெரும் வணிக நிறுவனங்கள் மேல் தான் குவிந்திருந்தது. நாள் தோறும் கண்கவர் விளம்பரங்கள் மூலம், பாவனையாளர்களை சுண்டி இழுக்கும் நிறுவனங்கள், தமது பொருட்களை வாங்குவதற்கு வசதியற்ற மக்கள் இருப்பதை மறந்து விடுகின்றனர். “பணமிருப்பவனுக்கு விற்கிறோம். இல்லாதவன் மூடிக் கொண்டு படுக்க வேண்டியது தானே…” என்று திமிராக பதிலளிப்பார்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, ஒரு ஊடகவியலாளர் எகத்தாளமாக குறிப்பிட்டார்: “முன்பு மக்களிடம் பணம் இருந்தது. கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது கடைகளில் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை.” ஆனால்…. இங்கிலாந்து, “பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத கிழக்கு ஐரோப்பிய நாடு அல்லவே?” பணக்கார மேற்குலகை சேர்ந்த இங்கிலாந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருந்தெல்லாம், கையிலே பணமில்லாமல் வந்து குடியேறும் தற்குறியைக் கூட பணக்காரனாக்கும் நாடல்லவா? அத்தகைய சொர்க்கபுரியில் கலவரமென்றால் நம்பக் கூடியதாகவா இருக்கின்றது? இங்கிலாந்தில் கணிசமான ஏழை மக்கள், சேரிகள் போன்ற குடியிருப்புகளில் விளிம்புநிலையில் வாழ்வதாக கூறினால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். நான் முன்னர் கூறிய படி, ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த அரசியலைப் பேசுவார்கள். உங்களுக்குத் தெரிந்த, இங்கிலாந்தில் வாழும் தமிழ் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். வெள்ளையின வறிய மக்கள் குறித்த பொதுவான கருத்து இவ்வாறு இருக்கும். “இங்கிலாந்தின் வெள்ளையின குடிமக்கள் பலர் உழைத்து வாழ விரும்பாத சோம்பேறிகள். அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், இலவச சலுகைகளை பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்கின்றவர்கள்.”
பூர்வீக ஆங்கிலேயர்களையும், பன்னாட்டுக் குடிவரவாளர்களையும் பிரித்து வைப்பதில், அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்களை நெருங்க முடியாத கலவரக்காரர்கள், தமது பிரதேசத்தில் உள்ள சிறு வணிகர்களின் வியாபார நிலையங்களை தாக்குகின்றனர். அநேகமாக, இங்கிலாந்தின் சிறுவணிகர் குழாம் பன்னாட்டுக் குடியேறிகளைக் கொண்டது. அவர்கள், தமது சமூகத்தினருக்கான பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, நடைபாதையோர பெட்டிக்கடைகள் கூட வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் சிறு வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பேர்மிங்ஹாம் பகுதியில் சீக்கியர்கள் தமது வியாபார நிறுவனங்களையும், குருத்வாராக்களையும் தாமே பாதுகாக்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் பேட், வாள்கள் சகிதம் சீக்கிய தொண்டர் படைகள் காவலுக்கு நிற்கின்றன. இந்த தொண்டர் படை, கலவரக்காரர்களை அண்ட விடாமல் விரட்டி அடிப்பதை, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. “பிரிட்டன் எமது தாயகம். நாங்கள் எங்கள் ஏரியாக்களை பாதுகாக்கிறோம்…” என்று கூறும் சீக்கியரின் “நாட்டுப் பற்றை” ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. 

துருக்கியரும் தமது வியாபார நிறுவனங்களை தாமே பாதுகாக்கின்றனர். “நாங்கள் துருக்கியர்கள். எங்களிடம் வாலாட்ட முடியாது…” என்று தேசியவாதப் பெருமிதத்துடன் கூறுகின்றனர். போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தோரும், கொள்ளையடிக்க வருவோரை தாமே அடித்து விரட்டுகின்றனர். “எங்களுக்கு அடைக்கலமளித்து முன்னேற வைத்த பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்போம்” என்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். நகைக்கடை உட்பட பல தமிழ்க்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. “மத்திய லண்டனையும், பெரிய வணிக நிறுவனங்களையும் பாதுகாக்கும் பொலிஸ், இந்தப்பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை…” என்று குறைப்படுகின்றனர். சீக்கியரைப் போல, துருக்கியரைப் போல, அடியாட்களை வைத்து வர்த்தகத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் தமிழ் சமூகம் உள்ளது. “ரோம் நகரம் பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக…” வரலாறு கூறுகின்றது. லண்டன் நகரம் பற்றியெரியும் பொழுது, தமிழர்கள் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதை, லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

லண்டனில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகள் பெரும்பான்மையாக இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடிவரவாளர்கள் மத்தியிலும் ஏழைகள் பெருகி வருகின்றனர். என்ன வித்தியாசம் என்றால், வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநலக் கொடுப்பனவுகளில் வாழ்வதை தமது உரிமையாக கருதுகின்றனர். மாறாக, குடிவரவாளர்கள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை சம்பளத்தை விட குறைவாக கொடுத்தாலும், தினசரி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டாலும், சலிக்காமல் சம்மதிக்கின்றனர். அநேகமாக அவர்களின் சொந்த இனத்தை சேர்ந்த முதலாளிகள் தான் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். வெள்ளயினத்தவர்களை அவ்வாறு சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை. அரசும், தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாவிட்டால், சமூகநலக் கொடுப்பனவுகளை வழங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் இது அரசின் கடமையாக கருதப்பட்டது. 

சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகம் மாறிவிட்டது. மித மிஞ்சிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், வேலையற்றோரின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரு வருடங்களுக்கு முந்திய பொருளாதார நெருக்கடி, பிரிட்டனை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தாலும், நாட்டில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசின் திட்டங்கள், பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப் படாமையை சுட்டிக் காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் தான், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இனி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தனர். அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் கலகக்குரல்கள், வெளி உலகத்தை எட்டவில்லை. அவர்களும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி, நாசம் விளைவித்திருந்தால், சர்வதேச ஊடகங்களின் கவனம் அங்கே குவிந்திருக்கும்.

பிரிட்டிஷ் அரசின் உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதல் அண்மைய கலவரத்தை தூண்டி விட்டது. இது வரை காலமும், விளிம்பு நிலை மக்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. “சும்மா இருக்க பணம் கிடைப்பதால், மக்கள் வேலைக்கு போக மறுக்கிறார்கள்…” என்று தீவிர வலதுசாரிகள் செய்து வந்த பிரச்சாரத்தை அரசு கொள்கையாக வரித்துக் கொண்டது. முந்தைய சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. (கவனிக்கவும்: சோஷலிச நாடுகளில் மக்களுக்கு சிறந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முதலாளித்துவவாதிகள் இந்த இடத்தில் ஒத்துக் கொள்கின்றனர்.) ஆனால், சோஷலிச நாடுகளில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், வேலை வாய்ப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை. முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எஞ்சியவர்களை “வேலையற்றோர் படையில்” சேர்த்து விடுகின்றனர். வேலையற்றோர் படைக்கு வேதனம் வழங்குவது மட்டுமே அரசின் கடமையாகின்றது.
அரசோ பட்ஜெட்டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படலாம். ஒருவர் முன்பு பொறியியலாளராக வேலை செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். “விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படலாம்…” என்று சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளா விட்டால், உதவித் தொகை நிறுத்தப்படும். இவ்வாறு எத்தனையோ காரணங்களை காட்டி, உதவித் தொகை நிறுத்தப் படுகின்றது. அரசு பணம் கொடுக்கா விட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது? அது அரசின் கவலை அல்ல. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது: “வேலயில்லா விட்டால், பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்.” இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் அதைத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தாங்கள் வறுமையில் வாழ்கையில், இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர். 

இல்லாதவன் இருக்கிறவனிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுக்கிறான். இதிலே வேதனை என்னவென்றால், தமது எதிரி யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் கொள்ளையடிக்கின்றனர். சிறு வணிகர்கள் தாக்கப்படுவதும் இவ்வாறு தான். சில இடங்களில் சாதாரண உழைக்கும் மக்களின் வீடுகளில் கூட திருடி இருக்கிறார்கள். அவர்களின் கார்களை கொளுத்தி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் கூட எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு பெற்றோர், சரியான இலக்குகளை காண்பிப்பது அவசியம். அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் எதிரிக்கே சாதகமாக அமைந்து விடுகின்றது. உழைக்கும் மக்களை கூறு போட வழி வகுத்து விடுகின்றது. சில நேரம், உழைக்கும் வர்க்கத்தை இனரீதியாக பிரித்து வைக்கவும், அரசியலற்ற அராஜக செயல்கள் உதவுகின்றன.

பிரித்தானியாவின் இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? தனது வீட்டின், கடையின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசு கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள். இடதுசாரிகள் தமது எதிர்ப்பியக்கத்தை வளர்க்காமல், பிற சக்திகளின் போராட்டங்களின் நிழலில் தங்கியிருந்த தவறை உணர்கின்றனர். உதாரணத்திற்கு, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும், தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர். வர்க்கப்போராட்டத்திற்கு முற்றிலும் மாறான கொள்கைகளைக் கொண்ட இது போன்ற சக்திகளின் போராட்டம், எந்தளவு இடதுசாரிகளுக்கு உதவியுள்ளது? ஏகாதிபத்தியத்தின் பலமும் குறையவில்லை. இடதுசாரிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கவில்லை.
இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரம், பிற நாடுகளிலும் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது முழுவதும் பாட்டாளி மக்களின் எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். அதனை சரியாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய சிறுவணிகர்களின் வியாபாரங்களை பொலிஸ் பாதுகாக்க தவறியதும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். வெளிநாட்டு குடிவரவாளர்களின் நிறுவனங்களை தானே கொள்ளையடிக்கிறார்கள், என்று அலட்சிய மனப்பான்மை ஒரு காரணம். அவர்கள் தமது வியாபாரத்தை பாதுகாப்பது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தால், சூறையாட வருவோர் அவர்களையும் தாக்குவார்கள். (அவ்வாறான சம்பவம் ஒன்றில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.) பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வெள்ளையின ஏழைகளின் கோபம், வெளிநாட்டவர் மீதும் திரும்பலாம். இது ஏற்கனவே வெள்ளையின உதிரிப்பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளின் கரத்தை பலப்படுத்தும். அதைத் தான் அரசும் எதிர்பார்க்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், பல்வேறு இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைப்பதும், இடதுசாரிகள் முன்னால் உள்ள இமாலயப் பணியாகும்.
முதல் பதிவு: கலையகம்

பின்லேடன் கொல்லப்பட்டதை முன்வைத்து சில புரிதல்கள்

2 மே

சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்கா  வை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அப்போடாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை பாகிஸ்தானின் சிஐஏ உதவியுடன் அமெரிக்கப் படையினர் கொன்றுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி என்றும் ஒபாமா வர்ணித்துள்ளார்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள் புடை சூழ வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு விட்டார். அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்லேடன் பதுங்கியுள்ள இடம் குறித்த உறுதியான தகவல் படையினருக்குக் கிடைத்ததும் என்னிடம் தெரிவித்தனர். நான் உடனடியாக தாக்குதல்  நடத்தி பின்லேடனைக் கொல்லுமாறு உத்தரவிட்டேன். அதன்படி நடந்துள்ளது.

இத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிந்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. தொடர்ந்து அதில் ஈடுபடுவோம் என்றார்.

டிஎன்ஏ பரிசோதனையின்படி ஒசாமா இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்…

பின்லேடன் கொல்லப்பட்ட இடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

அந்த இடத்தின் பெயர் அப்போடாபாத். இது இஸ்லாமாபாத்திலிருந்து 2 மணி நேர தொலைவில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்குப் பெயர் போனது இந்த நகரம். மேலும் இந்தப் பகுதியில் பல தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் மிகச் சிறந்த சுற்றுலாத்தளமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள ஒரு மேன்சனில் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார் பின்லேடன். இங்கு தங்கியிருந்த பெண்களும், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கப் படையினரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பின்லேடன் குடும்பத்தினரா என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதியில் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

**********************************************

அல் கைய்தாவுக்கும் அமெரிக்காவிற்கும் மதத்திற்கும் இடையிலான தொடர்புகளை புரிந்து கொள்ளாதவரை பின் லாடனைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது. அப்படியான முழுமையான புரிதலை விளக்கமாகவும் தெளிவாகம் தருகிறது இந்தக் கட்டுரை. அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கப்படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார் ஒபாமா அறிவிப்பு

அல் கைய்தா என்ற அமைப்பே இல்லை எல்லாம் அமெரிக்காவின் வேலைதான் என்று கூறுகிறது இந்த ஆவணப்படம்

பகுதி ஒன்று பகுதி இரண்டு