தொகுப்பு | சட்டம் RSS feed for this section

தொழிலாளர்கள் சட்டங்கள்

20 மார்ச்

கடையநல்லூர் மக்களில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வேலை என்ற பெயரில் தங்கள் இளமைக் காலத்தைக் கழிக்கின்றனர். ஆனாலும் அந்த நாடுகளின் சட்டங்கள் என்ன சொல்கின்றன. தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. நிறுவனங்களால் வஞ்சிக்கப்படும் தொழிலாளர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இருக்குமானால் அதற்கு எதிராக போராடுவதற்கான உந்துதல் சிறிதளவேணும் கிடைக்கும் என்பதால், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளின் தொழிலாளர்கள் சட்டத்தொகுப்பு வெளியிடப்படுகிறது.

வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் இருக்கும் இதை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தால் நல்லூர் முழக்கம் தளத்தின் பக்கப்பட்டியில் அவர்களின் பெயருடன் இணைக்கப்படும்.

இதை நமக்கு அனுப்பித்தந்த நண்பர் துராப் ஷா அவர்களுக்கு நன்றி

 

சௌதி அரேபிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு

ஐக்கிய அரபு தொழிலாளர்கள் சட்டத் தொகுப்பு

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

12 பிப்


இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்குநடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ,புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லைஎன்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமைசெய்தல்,

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,

4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால்பாதிக்கப்படுதல்,

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,

7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality)கொண்ட குற்றம் செய்தல்,

8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோஇல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்துமதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,

2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,

3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),

4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,

5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,

7. ஆண்மையற்று இருந்தாலோ

… மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி

1.  நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

2. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

3. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

4. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

5. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் …

…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள்(இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு!

 

நன்றி: மக்கள் சட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்! என்ன சிக்கல்? யாருக்கு சிக்கல்?

22 டிசம்பர்
தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தைத் தவிர மற்ற நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது வழக்கு தொடுப்பது, வழக்கு மறுப்பது, விசாரணை நடைமுறைகள், தீர்ப்பு வழங்கல் உள்ளிட்ட அனைத்தும் தமிழில் நடைபெறலாம் – நடைபெறுகிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை செய்திகள் இல்லை 

ஆனால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்துவதில் பல சர்ச்சைகள் உள்ளன. இது குறித்து பெரும்பாலான நீதிபதிகளும், உயர் குலத்தோர் என்று குறிப்பிடப் படுபவர்களும், மூத்த வழக்கறிஞர்களும் பொருள் பொதிந்த மவுனம் சாதிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பட்டியலில் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது இல்லை என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
அரசியல் பார்வையற்ற சராசரி குடிமகனுக்கு மேற்கூறப்பட்ட வாக்கியம் அதிர்ச்சி அளிக்கலாம். தமிழாய்ந்த முதல் அமைச்சருக்கு, தமிழை நீதிமன்ற மொழியாக்குவதில் தடை என்ன இருக்கக்கூடும் என்ற கேள்வி எழலாம். உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் ஏற்காத ஒரு பிரச்சினைக்கு தமிழக அரசை குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது என்ற எண்ணமும் வரலாம். ஆனால் அது முழுமையான சிந்தனையாகாது.
எந்த ஒரு அரசிலும், அதை மக்கள் நேயமுள்ள ஒரு தலைவர் வழி நடத்தினாலும் அந்த ஆட்சியில் சிலர் பாதிக்கப்படுவது இயல்பானதே! அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் தங்கள் குறைபாடுகளை ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வழியில் எடுத்துச் சொல்லி தீர்வு காண்பது மக்களாட்சியின் வரம்புக்குள் அடங்கும் அம்சமே ஆகும்.

காமராஜர், அண்ணாதுரை போன்ற தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானாலோ, மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக்கூறினாலோ அந்த பிரசினைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தீராத பிரசினைகளுக்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அதையும் இயல்பாக ஏற்றுக்கொண்டு அந்தப் பிரசினையை தீர்க்க முயலும் பக்குவம் அந்த தலைவர்களுக்கு இருந்தது.
அண்மைக்கால ஆட்சிகளிலோ மக்களின் எந்த நியாயமான கோரிக்கைகளும் போராட்ட வடிவம் எடுக்கும் வரை கேட்காமலே புறக்கணிக்கும் போக்கு நிலவுகிறது. எனவே தவிர்கக இயலாமல் நடக்கும் போராட்டங்களையும் அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாக கருதாமல், தமது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வாக ஆட்சியாளர்கள் கருதுவதும், அதனால் கதிகலங்கி போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முனைவதும் வாடிக்கையாகி வருகிறது. மக்களுடைய போராட்டங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடாமலிருக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் சரிக்கட்டப் படுகின்றன. எதிர்க் கட்சிகள் வெளியிடும் கோரிக்கைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகின்றன. அரசின், ஆட்சியாளர்களின் புகழ்பாடும் கருத்துகளே ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கப் படுகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நியாயமான உரிமைகளை எடுத்துப் பேசும் களமாக நீதிமன்றம் அமைகிறது. மக்கள் பிரசினைக்காக வழக்கு தொடுக்கும்போது அந்த பிரசினை ஊடகங்கள் மூலமாக மக்களிடம் சென்றடைவதோடு, அந்த பிரசினை குறித்து பதில் அளிக்கும் நிர்பந்தமும் அரசுக்கு ஏற்படுகிறது. நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் அனைத்து வழக்குகளும் முறையாக விசாரிக்கப்படுகின்றவா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கிறதா? என்பது ஒருபுறமிருக்க, மக்களின் பாதிப்பு குறித்து விவாதிப்பதற்கு ஒரு களம் உருவாகிறது என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு எழுப்பப்படும் கேள்விகளுக்கு அரசுத்தரப்பில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் கூடுதல் நற்பலனே.
மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுநல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மட்டுமே தொடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் என்பது வெகு தொலைவில் இருக்கும்போது அன்றாட பிரசினைகளுக்கு தீர்வு காண உயர்நீதிமன்றமே அருகில் உள்ளது. இவ்வாறு மக்களின் நியாயமான பிரசினைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்போது மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களுக்கு மொழியும் ஒரு தடையாகிறது. ஆங்கிலம் நன்று கற்ற வழக்கறிஞர்கள் பொருளீட்டும் வழக்குகளில் முழுமையாக ஈடுபடும் வாய்ப்பு கிடைத்துவிடுவதால் அவர்களில் பலருக்கும் சமூகம் குறித்த உணர்வுகள் விரைவில் அற்றுப்போய்விடுகிறது. அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றுவோருக்கு அரசு அமைப்புகள் செய்யும் அனைத்து முறைகேடுகளையும் – அநீதிகளையும் நியாயப்படுத்த வேண்டிய “தொழில் தர்மம்” வந்து விடுகிறது.

இந்நிலையில் மக்களின் பிரசினைகளை முழுமையாகவும், அனுபவ பூர்வமாகவும் புரிந்து கொண்டு அந்தப் பிரசினைக்கு சட்டரீதியாக தீர்வு காண முனைபவர்கள் முழுமையான ஆங்கிலப் புலமை இல்லாமல் (ஆங்கிலப் புலமை வேறு: சட்ட அறிவு, சமூக உணர்வு வேறு!) சாமானியனின் வாழ்வை வாழும் சாதாரண வழக்கறிஞர்களே. இந்த வழக்கறிஞர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் மனு அளித்தல், தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் கோருதல் போன்றவையே அரசை பல்வேறு அம்சங்களிலும் முட்டுச்சந்தில் நிறுத்தி விடுகின்றன.

தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியே அரசையும், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கலங்கடிக்கும் இந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவதில் அவர்களுக்கு தடையாக இருப்பது மொழி மட்டுமே. இந்தத் தடையை தவிர்ப்பதற்காகவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக மக்கள் சார்பு வழக்கறிஞர்களாலும், சமூக பொறுப்புள்ளவர்களாலும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிப்பது என்பது, தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதைப் போன்ற சாதாரணமான அம்சம் அல்ல என்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தால் கிடைக்கும் வாழ்த்துகளுக்கு எந்த பொருள் மதிப்பும் இல்லை என்பதும், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கச் செய்வதால் ஏற்படும் விளைவுகளால் பொருள் ரீதியான பெரும் இழப்பு ஏற்படும் என்பதும் பொருள்முதவாதிகளான தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகவேத் தெரியும். எனவேதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு இணையான இந்த செயலை செய்வதற்கு அவர்களுக்கு துணிவில்லை.

தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தேவையான சட்ட நூல்கள் தமிழில் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் நீதிபதிகளாலும், பெரும்பான்மை வழக்கறிஞர்களாலும் எழுப்பப்படுகிறது. அண்டை நாடான இலங்கையில் மருத்துவம் தமிழ் வழி கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே பொறியியலை தமிழ்வழி கற்பிப்பதற்கான பாடநூல்கள் வெளியாகிவிட்டன. தமிழில் வாதாடும் வழக்கறிஞர்கள் பெருகும் நிலையில் சட்டநூல்களும் தேவையான அளவுக்கு வெளியாகும். தமிழை வளர்ப்பதற்காக இல்லை என்றாலும், வணிக நோக்கத்திலாவது தமிழில் தரம் வாய்ந்த சட்ட நூல்கள் வெளியாகும்.

தமிழில் வாதாடும் வாய்ப்பு கிடைத்தால் பொதுமக்களே நேரடியாக வழக்கை நடத்த முன் வந்து விடுவார்கள்: வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற கருத்தும் சில வழக்கறிஞர்களிடம் உள்ளது. ஒரு வழக்கை நடத்த வெறும் சட்ட நூல்கள் (Bare Act Books) மட்டுமே போதாது என்பது வழக்கு நடத்தி அனுபவம் பெற்ற அனைத்து மக்களுக்கும் தெரியும். ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்த அந்த விவகாரம் குறித்து நீதிமன்ற முன்மாதிரி தீர்ப்புகளும், வேறு பல அம்சங்களும் தேவை என்ற உண்மை சாதாரண மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தமிழில் வழக்கு நடத்தினால், வழக்கு நடத்தப்படும் விதம் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற வழி பிறக்கும். இது வழக்காடும் மக்களுக்கு நல்லதே. இதனால் நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

எனவே நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிப்பதில் சாதாரண மக்களுக்கு நன்மையே ஏற்படும். இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது ஆளும் வர்க்கமாகவே இருக்கும். ஆட்சியில் இருப்போர், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரே தமிழ் நீதிமன்ற மொழியாவதில் முதன்மையாக பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மக்களின் உழைப்பை சுரண்டி திரட்டப்பட்ட பொது நிதியை அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தாமல் கவர்ச்சித் திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாக்குகளை அள்ள நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழ் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாவதால் சிக்கல்கள் ஏற்படலாம். அரசின் பொறுப்பற்ற போக்கை, தொலைநோக்கற்ற குறுகிய அரசியல் பார்வைகளை, மக்களின் சிந்தனைகளை மழுங்கடிக்கும் சீர்கேட்டை பொதுநல வழக்கு என்ற பெயரில் பொதுமக்கள் கேள்வி கேட்டால், அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஆட்சியாளர்களுக்கு வரும். தங்களை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்களாக, போற்றுதலுக்கு மட்டுமே உரியவர்களாக கருதிக் கொள்ளும் ஆட்சியாளர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிலை ஏற்படுவதை எப்படி அனுமதிப்பார்கள்? எனவே இந்த அரசியல்வாதிகள், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பகல் கனவே!

இதையடுத்து உயர்குலம் சார்ந்தவர்களாக குறிப்பிடப்படும் வழக்கறிஞர்களும், ஆங்கிலம் அறிந்த காரணத்தாலேயே தம்மையும் உயர் குலத்தவராக கருதிக் கொள்ளும் வழக்கறிஞர்களும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பதால் பாதிக்கப்படுபவர்கள். ஆனால் இவர்கள் பாதிக்கப்பட்டால் அது மக்களுக்கு நன்மையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த வகை வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தில் நீதித்துறை இருப்பதாலேயே ஏராளமான வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.

சட்டம், சமூகம் ஆகியவை குறித்த ஆழ்ந்த அறிவிருந்தும் சரளமான ஆங்கிலப்புலமை இல்லாததால் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களை நாடும் நிலை உள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கறிந்த வழக்கறிஞர்களின் பணிச்சுமை அதிகரித்து பாதிக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை உடனே பெற்றுத்தராமல், அம்மக்களை அந்த அநீதிக்குள் பல காலம் வாழுமாறு நிர்ப்பந்தப் படுத்துகிறது.
இந்த அவல நிலையை மாற்றவதில், தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கும் செயல் முக்கிய பங்கு வகிக்கும். தமிழ் நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து வழக்கறிஞர்களும் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். எனவே மக்கள் நலன் நாடும் வழக்குகளில் தேவையின்றி காலநீட்டிப்பு (வாய்தா) பெற வேண்டிய அவசியம் இருக்காது. தாமதித்து வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று வசனம் பேசிக்கொண்டே அந்த அநீதியை தொடர்ந்து இழைத்து வரும் நீதித்துறை திருந்தும் காலம் வரும்.
சுருக்கமாக கூறினால் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மொழி வளர்ச்சிக்கான செயல்பாடு மட்டுமே அல்ல. இது கடைக்கோடி மனிதனுக்கும் சமூக நீதி உள்ளிட்ட மனித உரிமைகளை கொண்டு சேர்க்கும் அருமையான வாய்ப்பாகும். அரசின் கடப்பாடுகளை வலியுறுத்தி உரிமைகளை பெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டமைக்கவும் தமிழை நீதிமன்ற மொழியாக அங்கீகரிப்பது மிகவும் முக்கியமான செயல்பாடாகும்.

இந்தியாவின் குடியரசு உண்மையிலேயே மக்களுக்காக, மக்களால் கட்டமைக்கப்பட்ட குடியரசு என்பது உண்மையானால் தமிழ் மட்டுமல்ல – அனைத்து மாநில மக்களும் அந்தந்த மாநில மொழிகளை அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தும் நிலை ஏற்பட வேண்டும்.

நன்றி: மக்கள் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஒரு மோசடியா?

13 டிசம்பர்
அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு அதன் பணியை முடித்து நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்த நாள் நவம்பர் 26, 1949.
இந்த நாள் ஆண்டுதோறும் இந்தியாவிற்கான சட்ட நாளாக நினைவுகூறப்படுகிறது. 

அம்பேத்கார் தலைமையிலான குழு எழுதிய இந்திய அரசியல் சட்டத்தை பலரும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம்” என்பது மாற்றப்பட கூடாத வேதப்புத்தகம் அல்ல. குடி மக்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றத்திற்குரியதே என்பதை உணர்த்தி, தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்கு வழிவகுக்கும் வகையில் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டதிருத்தத்திற்கும் வழி வகுத்தவர் தோழர் பெரியார்.

பெரியாரின் தோழரான திருச்சி வே. ஆனைமுத்து அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஒரு மோசடி” என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் எழுப்பியுள்ள பல விவகாரங்களுக்கு இன்னும் பதில் அளிக்க முடியாத நிலையே உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் மக்களுக்கு தேவையான வகையில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மிகக்குறைவே. ஆட்சியில் இருப்பவர்களின் வசதிக்கும். அதிகாரத்தை ஒரிடத்தில் குவிப்பதற்குமே இந்திய அரசியலமைப்பு சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகளின் நடுவே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கார் முன்வைத்த பல கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. அந்த கொள்கைகளுக்கு எதிரான திசையிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4, அரசு கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாடுகள் (DIRECTIVE PRINCIPLES TO STATE POLICY) என்ற பிரிவின்கீழ் பல முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவையாவன…

38. மக்களின் நலமேம்பாட்டிற்காக அரசு சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல்:

(1) பொதுமக்களின் நலன் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பிற்காகவும், அரசு, நீதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தேசிய வாழ்வில் உள்ள எல்லா அமைப்புகளிலும் அவற்றைத்தெளிவு படுத்த வேண்டும்.

(2) அரசு, பொருளாதார ஏற்றதாழ்வுகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கிடையில், தனிப்பட்ட குழுக்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்.

39. சில கொள்கைகளை அரசு பின்பற்றுதல் வேண்டும்:
அரசு குறிப்பாக-
(அ) குடிமக்கள், ஆண்-பெண் பேதமின்றிச் சரிசமமாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளைப் பெறுவதற்கும்;

(ஆ) உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் சமுதாயத்தின் பொதுநலன் கருதி அனைவருக்கும் கிடைப்பதற்காக அவற்றின் உரிமை – கட்டுப்பாடு பொதுவாக பகிர்ந்தளிக்கப்படுவதற்கும்;

(இ) செல்வமும், உற்பத்தியும் பொதுத்தீங்கின்றி, தேக்கமடைவதைத் தவிர்க்கும் பொருளாதார அமைப்பை செயல்படுத்துவதற்கும்;

(ஈ) ஆண், பெண் இருபாலாருக்கும் இணையான வேலைக்கு, இணையான ஊதியம் அளிப்பதற்கும்;

(உ) வேலையாட்களின் உடல்நலத்தையும், திறத்தையும், ஆண், பெண், சிறு குழந்தைகள் ஆகியோரை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும், மற்றும் குடிமக்களைத் தமது வயதுக்கும் திறனுக்கும் பொருத்தமில்லாத ஒரு வேலைக்குப் பொருளாதார தேவையின் பொருட்டு தள்ளப்படாது தடுப்பதற்கும்;

(ஊ) குழந்தைகள் சுதந்திரமான நிலையில் கண்ணியத்தோடும் நல்வாழ்வுடனும் வளர்வதற்கும், அப்படி வாழ்வதற்கான வசதிகளையும், வாய்ப்புகளையும் அளிப்பதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சுரண்டப்படுவதினின்றும் பாதுகாப்பதற்கும், ஒழுக்கம் மற்றும் பொருளாதாரம் காரணமாக நிராதரவாக விடப்படாமல் காப்பதற்கும் தமது கொள்கையை தேர்வு செய்ய வேண்டும்.

40. கிராம ஊராட்சி அமைப்புகள்:
கிராம ஊராட்சிகளை அமைக்கவும், அவை தன்னாட்சி பெற்று செயல்பட தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

41. சில தறுவாய்களில் வேலை, கல்வி, பொது உதவிக்கான உரிமை:
வேலை, கல்வி உரிமையின் பொருட்டு, வேலையில்லாதபோது, முதிய வயதினர், நோயுற்றோர், தொழில் புரிய இயலாதோர் மற்றும் தேவையற்ற வறுமையில் வாடுவோர் ஆகியோரை பாதுகாக்கும் வகையில் அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும்.

42. நியாயமானதும், மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களுக்கான வகையங்கள்:
நியாயமானதும் மனிதத்தன்மையோடு கூடியதுமான தொழில் மற்றும் மகப்பேறு நிவாரணங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, அரசு வகையங்களை உருவாக்க வேண்டும்.

43. வேலையாட்களுக்கான வாழ்வூதியமும் இன்ன பிறவும்:
வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாழ்வூதியம், நாகரிகமான வாழ்க்கைத்தரத்திற்கு உறுதியளிக்கும் வகையிலான தொழில்கள், போதுமான ஓய்வு, சமூக மற்றும் பண்பாட்டுக்கான வாய்ப்பு ஆகியன கிடைப்பதற்கு உரிய முயற்சிகளைத் தகுந்த சட்டத்தின் வாயிலாகவும் அல்லது பொருளாதார அமைப்புகள் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் வகையிலும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

43அ. தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்றல்:
தொழிற்சாலைகளை நடத்தும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அல்லது நிர்வாகங்களின் நிர்வாகப்பணியில், தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் வகையில், அரசு தகுந்த சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும்வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

44. குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம்.
குடிமக்களுக்கு இந்திய நிலவரை முழுவதும் ஒரே மாதிரியான உரிமையியல் சட்டத்திற்கு அரசு முயற்சித்தல் வேண்டும்.

45. ஆறு வயதுக்கு உட்பட்ட இளங்குழந்தைகளைப் பாதுகாப்பதும் கல்வி அளிப்பதும்:
ஆறு வயது நிறைவடைகின்றவரையில் அனைத்து இளங்குழந்தைகளையும் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கல்வி அளிக்கவும் அரசு முயற்சிக்க வேண்டும்.

46. பட்டியல் மரபினர், பட்டியல் பழங்குடி மரபினர் மற்றும் வேறு பலவீனப்பிரிவினர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்:
பலவீனப் பிரிவு மக்களிடையே பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாகப் பட்டியல் மரபினர் மற்றும் பட்டியல் பழங்குடி மரபினரின் பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கு அரசு சிறப்பாகக் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். மற்றும் அவர்களை சமூக அநீதியினின்றும், அனைத்து வித சுரண்டல்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும்.

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:
ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும் உடல்நலத்தை உயர்த்துவதையும் அரசு தமது கடமையாக கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள், போதைமருந்துகள் ஆகியன மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

48. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கான அமைப்பு:
வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புக்கு நவீன அறிவியல் முறைகளைப் புகுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக உயர்ரகக் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவற்கும் பசுக்கள், கன்றுகள் மற்ற பால்தரும் விலங்குகள் வறட்சியுள்ள கால்நடைகள் ஆகியவற்றைக் கொல்வதைத் தடுப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை அரசு எடுத்தல் வேண்டும்.

48அ. சுற்றுச்சூழலை பாதுகாத்தலும், மேம்படுத்தலும் மற்றும் வனங்கள் வனவிலங்குகளை பாதுகாத்தலும்:
நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும். மற்றும் நாட்டின் வனங்கள், வனவிலங்குகளை பாதுகாத்தல் வேண்டும்.

49. தேசிய முக்கியத்துவமுள்ள நினைவுச்சின்னம், இடங்கள், பொருள்களைப் பாதுகாத்தல்:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்ட நினைவுச்சின்னம், அல்லது இடம் அல்லது கலைப்பொருட்கள் அல்லது வரலாற்றுச்சின்னங்களைச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிதைப்பது, நீக்குவது, முடிவு செய்வது அல்லது ஏற்றுமதி செய்வதினின்று பாதுகாப்பது ஆகியவை அரசின் கடமை.

50. நிர்வாகத்தினின்று நீதித்துறையைத் தனியே பிரித்தல்:
அரசின் பொதுப்பணியிலிருந்து நீதித்துறையைத் தனியாகப் பிரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

….என்பன உள்ளிட்ட மக்கள் நல அம்சங்கள் அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 37, “இந்தப்பகுதியில் காணப்படும் கொள்கைகள் அனைத்தும் நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையானவைகள்; இந்த கொள்கைகளின் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது அரசின் கடமை” என்று கூறப்பட்டிருந்தாலும்,“இந்த அம்சங்களை நீதிமன்றத்தின் மூலம் அமல்படுத்த முடியாது”என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, இந்த அம்சங்களை நிறைவேற்றுமாறு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது சுதந்திர இந்தியாவின் வயது இரண்டுதான். அந்த நிலையிலேயே மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் கோரி வழக்குகள் தொடரப்பட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்துவிடக்கூடும் என்ற நிலையில் இந்த பிரிவு 37 எழுதப்பட்டது. காலப்போக்கில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் சொல்லப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய சட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது.

ஆனால் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இந்த அம்சங்கள் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு இந்த அம்சங்களுக்கு எதிரானதும், மக்கள் விரோத தன்மை கொண்டதுமான பல சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் அரசியல் சட்டத்தின் பிரிவு 37 நீடிப்பது மக்களுக்கு எதிரானது.

இந்தியாவில் உள்ள சட்டங்களில் அரசியலமைப்பு சட்டமே மேலானது; இந்த அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டியதே உச்ச நீதிமன்றம் உள்ளடக்கிய நீதித்துறையின் முதன்மை பணியாகும். ஆனால் இன்றைய நிலையில் உலகமயம்; தனியார்மயம்; தாராளமயம் என்ற அடிப்படையில் இயங்கும் அரசு அமைப்புகள் உலக வர்த்தக கழக நிபந்தனைகளின்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு நேரெதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

புதிய பொருளாதாரக்கொள்கை இந்தியர்களின் வாழ்வை மருத்துவத்துறையில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தலைகீழாக மாற்றி வருகிறது.

மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, மருத்துவம், உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வினியோகம் உள்ளிட்ட அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்ற தேவையற்ற துறைகளில் அரசு ஈடுபடுகிறது. 

தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் செயலற்றுப்போகும் வகையில் நடைமுறைகள் மாற்றியமைக்கப்படுகின்றன.

அனைத்துத்துறை பணியாளர்களும் எந்தவிதமான சமூக பாதுகாப்புமின்றி நிராதரவான நிலையில் உள்ளனர். இந்த நிலை காரணமாக முதியவர்கள் மற்றும் நோயாளிகள் வீட்டில் இருந்து விரட்டப்படும் நிலை உருவாகி வருகிறது.

கல்வி தனியார் மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிக விலை கொடுத்தே உயர்கல்வி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எதைச்செய்தாவது பொருள் ஈட்டுவதே பிழைக்கும் வழி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்பவன் சாமர்த்தியசாலி என்ற கருத்தாக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

பெரிய தவறுகளை செய்பவர்கள், அரசியல் தலைவர்களாகவும், சிறிய தவறுகளை செய்பவர்கள் குற்றவாளிகளாகவும் மாறும் நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக சமூகத்தில் யாருக்குமே எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாத நிலை நிலவுகிறது.

இதெல்லாம் இப்போதுதான் தெரியுமா? அப்போதே எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அப்போதும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தன.

உலக வர்த்தக கழகத்தின் முன்னோடியான காட் (General Agreement on Trade and Tariff) ஒப்பந்தத்தை வரைந்த டங்கல் என்பவரின் பரிந்துரைகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஏ.தேசாய், சின்னப்ப ரெட்டி, வி.ஆர். கிருஷ்ணய்யர், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் ஆகியோர் பரிசீலித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த அறிக்கை மிக முக்கியமானது.“சந்தைக்கு இணக்கமான பொருளாதாரம், தாராளமயமாக்கல், உலகப்பொருளாதாரத்துடன் இணைத்தல், பெருமளவு அன்னிய முதலீட்டுடன் கூடிய தனியார் மயமாக்கல் முதலியன இந்திய தொழில்களின் வளர்ச்சி, இந்திய அரசியல் சட்ட விதிகள் 14, 19, 21-ன் கீழான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானவை ஆகும்.”
“இந்திய அரசியல் சட்டம் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களுக்கென சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அரசியல் சட்டவிதி 13, 14-ன் கீழ் மத்திய அரசுக்குக் கிடைக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இந்த கூட்டாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் எதுவும் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த விமரிசனம் விழ வேண்டியவர்களின் காதுகளில் இன்று வரை விழவில்லை. எனவே மக்கள் எக்கேடு கெட்டாலென்ன? என்ற போக்கிலேயே அனைத்து அரசு அமைப்புகளும் இயங்குகின்றன. மாநில சுயாட்சி குறித்து உரத்து முழங்கிய கட்சித்தலைவர்கள்கூட பில்கேட்ஸூக்கும், அவரது உள்நாட்டு எடுபிடிகளுக்கும் காவடி தூக்கும் அவலநிலை நிலவுகிறது.

இதற்குத்தானா இந்தியா சுதந்திரம் பெற்றது?

அப்படியானால் “இந்திய அரசியல் அமைப்பு சட்டம்” உண்மையிலேயே ஒரு மோசடிதானா?

இந்த கேள்விகளுக்கான பதில் அரசியல்வாதிகளிடமும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களிடமும், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமே இல்லை.

இந்தியாவில் உருவாகும் அனைத்து சட்டங்களும், பொது மக்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம்தான் நிறைவேற்றப்படுகிறது. எனவே நல்ல சட்டங்களோ, கெட்ட சட்டங்களோ – அவை உருவாவதில் நமது பங்கும் இருக்கிறது.

என்ன செய்யப்போகிறோம்?

 

நன்றி: மக்கள் சட்டம்

மனித உரிமைகளை கொல்லும் மத்திய, மாநில அரசுகள்!

6 டிசம்பர்

ஒரு தேசத்திற்கு இறையாண்மை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதே அளவிற்கு அந்நாட்டு குடிமக்களுக்கு மனித உரிமைகளும் முக்கியமானது. குடிமக்களின் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத ஒரு நாடு எவ்வளவு ஆயுதங்களை வைத்திருந்தாலும் இறையாண்மை பெற்ற நாடாக செயல்பட முடியாது.

மனித உரிமை என்ற விரிந்த பொருளைக் கொண்டது. ஆனால் பொதுமக்கள் மனித உரிமைகளை முழுமையாக புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக மனித உரிமைகள் குறித்த கருத்துகள் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பதில் அரசு அமைப்புகள் முனைந்து நிற்கின்றன.

தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக நிற்பதே மனிதஉரிமை ஆர்வலர்களின் செயல்பாடு என்ற கருத்து ஆட்சியில் இருப்போராலும், பெரும்பாலான ஊடகங்களாலும் மக்களிடம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதையடுத்து மனித உரிமைகள் என்ற கருத்து சமூகத்தில் பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் மனிதர்கள் தோன்றிய நாள் முதலாகவே மனித உரிமை கருத்தியல் வெவ்வேறு மனித இனங்களிலும், மனிதக் குழுக்களிலும்  பேசப்பட்டு வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும்கூட  பல்வேறு இடங்களில் மனித உரிமைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் மிக எளிய உதாரணமாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…” என்ற திருக்குறளைக் கூறலாம்.

எனினும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே மனித உரிமைக் கோட்பாடுகளின்  அரசியல்ரீதியான முக்கியத்துவத்தை உலகம் அறிந்து கொண்டது.

உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்களில் சாமானிய மக்கள் படும் அவஸ்தைகளை கண்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கினர். அங்கு நடந்த நீண்ட விவாதங்களின் விளைவாக 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் நாள் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தின்படி, “மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும்” ஆகும். இந்த உரிமைகள் “மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக” கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை.

மனித குல வரலாற்றின் இந்த முக்கியமான அம்சத்தை உள்வாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் அம்பேத்கார், இந்த பிரகடனத்தில் உள்ள ஏராளமான அம்சங்களை இந்திய அரசியல் சட்டத்திலேயே இணைத்துள்ளார்.

எனினும் இன்றுவரை இந்தியாவையும், இந்தியாவின் மாநிலங்களை ஆட்சி செய்த அரசுகள் அம்பேத்கார் திட்டமிட்ட இந்தியாவை உருவாக்குவதில் பத்து சதவீதம்கூட செயல்படவில்லை என்பதே உண்மை. சமூக, பொருளாதார உரிமைகள் குறித்த விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக செயல்படும் இந்த அரசுகள், அடிப்படை உரிமைகளைக்கூட திட்டமிட்டு மீறியே வருகின்றன.

உதாரணமாக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 20(3)ன் படி “குற்றம் சாட்டப்பட்ட எந்த நபரையும், தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு 20(1), “சட்டப்படி குற்றம் எனக்கருதப்படும் செயலுக்காக, அந்த சட்டத்தை மீறிச் செய்ததற்காக அன்றி, எந்த நபரும் தண்டிக்கப்படக்கூடாது. அந்த குற்றத்துக்காக சட்டப்படி விதிக்கப்பட்ட தண்டனையைவிட அதிகமான தண்டனையை விதிக்கக்கூடாது!” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு அரசு இயங்கவேண்டிய விதத்தை கூறவேண்டிய அரசியல் அமைப்புச் சட்டம் எதற்காக இதுபோன்ற விவகாரங்களை விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எழலாம். ஆனால் அரசு அமைப்புகள் இவ்வாறுதான் இயங்கும் என்பது நமது அரசியல் சட்ட சிற்பிகளுக்கு அன்றே தெரிந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபரை, தமக்கு எதிராக தாமே சாட்சியம் கொடுக்கும்படி வற்புறுத்தக்கூடாது என்று அரசியல் அமைப்புச் சட்டமே எச்சரித்துள்ளது. ஆனால், ஒரு குற்றச்செயலை செய்ததாக சந்தேகப்படும் அல்லது அகப்படும் நபர்களை சித்திரவதை செய்து அந்த குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துவதே அனைத்துக் காவல்நிலையங்களிலும் அன்றாட நிகழ்வாக உள்ளது. அதேபோல குற்றநிகழ்வுகளில் குற்றம் சாட்டப்பட்டோரையும் அரசு அமைப்புகளை விமர்சனம் செய்வோரையும் விசாரணையின்றியே “என்கவுண்டர்” போன்ற முறைகளில் தீர்த்துக்கட்டும் சட்டவிரோதப் போக்கும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை முதன்மை கடமையாக மேற்கொள்ள வேண்டிய அரசே, மனித உரிமைகளை மறுக்கும் – மீறும் முதன்மை அமைப்பாக இருப்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பான்மையான உலக நாடுகளில் வழக்கமாக உள்ளது.  இந்நிலையை மாற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையும், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கொண்ட மிகநீண்ட நடவடிக்கைகளின் விளைவாக இந்தியாவில் “மனித உரிமை பாதுகாப்புச் சட்டம்” கடந்த 1993ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் தேசிய மற்றும் மாநில உரிமை ஆணையங்களை அமைப்பது இந்த சட்டத்தின்படி வலியுறுத்தப்பட்டது. அரசு அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அமைப்புகளை நாடி தீர்வு பெறுவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் நடைமுறையில் இந்த அமைப்பு எந்தவிதமான அதிகாரங்களும் அற்று, பதவி ஓய்வு பெற்ற சிலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது.

மனித உரிமை ஆணையங்களுக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை ஆயுதப்படையினரின் அத்துமீறல்கள் குறித்த புகார்களே! ஆனால் அந்தப் புகார்களை விசாரிப்பதற்கு காவல்துறையினரையே பயன்படுத்த வேண்டிய நிலையில்தான் மனித உரிமை ஆணையங்கள் இருக்கின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் தலைமை  ஏற்று நடத்தும் இந்த ஆணையங்களின் அதிகாரம் மிகவும் சொற்பமானவை. மனித உரிமை மீறலில் ஒரு அதிகாரி ஈடுபட்டார் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால்கூட அவர்களை தண்டிக்கும் அதிகாரம் இந்த ஆணையங்களுக்கு கிடையாது. அவர்களை தண்டிக்குமாறு அவர்கள் பணியாற்றும் துறைகளுக்கு இந்த மனித உரிமை ஆணையங்கள் பரிந்துரை செய்யலாம். அதை ஏற்பதும், மறுப்பதும் அந்தத்துறையின் விருப்புரிமையே.

தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட பொடா சட்டத்தை அதன் துவக்க நிலையிலேயே தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி “பொடா” சட்டம் கொண்டுவரப்பட்டது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கருத்தை மத்திய அரசு எந்த அளவுக்கு கருத்தில் கொள்கிறது என்பதற்கு இதையே உதாரணமாக கொள்ளலாம்.

அதேபோல சர்ச்சைக்குரிய “என்கவுண்டர்” மரணங்கள் குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையம் திட்டவட்டமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி அனைத்து என்கவுண்டர் சம்பவங்கள் குறித்தும் முறைப்படியான கொலை வழக்கை தொடுத்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விதிவிலக்கான மிகச்சில சம்பவங்களைத் தவிர நாடு முழுவதும் நடைபெறும் என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் கண்துடைப்பு விசாரணைகளோடு முடிக்கப்படுகின்றன.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் இருக்க வேண்டும். இவர்களோடு மனித உரிமை கோட்பாடுகளில் அறிவும், ஈடுபாடும் கொண்ட மேலும் இருவர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது. அரசு சாராத மனித உரிமை ஆர்வலர்களை மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக்கவே இந்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனஆல் நடைமுறையில் அரசுக்கு இணக்கமாக பணிபுரிந்த உயர் அதிகாரிகளுக்கு  மறு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. இதன் உச்சகட்டமாக தேசிய மனித உரிமை  ஆணையத்தில் கடந்த 2004ம் ஆண்டு பி.சி.சர்மா என்ற ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மனித உரிமைகளை ஒடுக்குவதாக அதிக அளவில் புகாருக்கு உள்ளாகும் காவல்துறையில் இருந்து ஒரு உயரதிகாரியை தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் செய்வதற்கு நாடு முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு அவருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதோடு, கடந்த 2009ம் ஆண்டு அவருடைய ஐந்தாண்டு பணிக்காலம் முடிந்தவுடன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த 1996ம் ஆண்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. இங்கும் மனித உரிமைச் செயல்பாடுகளில் ஈடுபடும் உண்மையான ஆர்வலர்கள் யாருக்கும் உறுப்பினர் வாய்ப்பளிக்கப்படவில்லை. அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கே உறுப்பினர் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்திலோ மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் அந்த ஆணையம் முடக்கப்பட்டது.

மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தில் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த புகார்களை விசாரிக்கும் பொறுப்பு காவல்துறையினரிடமே ஒப்படைக்கப்படுகிறது. அந்த  காவல்துறை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறையினரிடம் சித்திரவதையின் சான்று தெரியாமல் எச்சரிக்கையாக செயல்படுமாறு – அதாவது வெளிக்காயம் படாமல் சித்திரவதை செய்யுமாறு அறிவுரை கூறுவதை வழக்கமாக  கொண்டுள்ளனர் என்று  கூறப்படுகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில மனித உரிமை ஆணையமும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை கல்வி வாயிலாகவும் மற்ற வழிமுறைகள் வாயிலாகவும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

தேசிய மனித உரிமை ஆணையமோ, மனித உரிமைகளை மீறும் அரசுத்துறையினருக்கே ஏதேதோ பயிற்சிகளை கொடுப்பதாக இணையதளம் மூலம் கூறுகிறது. மக்களிடம் பணியாற்றுவதற்கான திட்டங்கள் அந்த அமைப்பிடம் இருப்பதாக தெரியவில்லை.

தமிழ்நாடு அரசோ மனித உரிமை என்ற சொல்லையே தடை செய்யும் முயற்சியில் உள்ளது. “மனித உரிமை என்ற சொல்லை பயன்படுத்தி யாரும் அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது: இதுவரை அந்தப் பெயரில் செயல்பட்டு வரும் அமைப்புகளும் பெயரை உடனடியாக மாற்றவேண்டும்” என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளிடம் தவறாக நடப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. நியாயமாக நடந்துகொள்ளும் எந்த துறையும், எந்த அதிகாரியும் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளே, அம்மக்களின் மனித உரிமைகளை மீறும்போது சமூக ஆர்வம் கொண்ட குடிமக்கள் திரண்டு மனித உரிமை அமைப்புகளை உருவாக்கி மனித உரிமை கலாசாரத்தை வளர்த்தெடுப்பது இயல்பானது. இத்தகைய முயற்சிகளை அரசு அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ மனித உரிமை கோட்பாட்டின் மாண்புகள் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் மனித உரிமை என்ற பெயரைத் தாங்கிய அமைப்புகள் செயல்படக்கூடாது என்பது போன்ற கருப்புச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

குடிமக்களின் மனித உரிமைகளை வழங்க மறுக்கும் ஒரு அரசு குடியரசாக செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அவ்வாறான அரசுகள் மற்ற நாட்டு அரசுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், மற்ற சக்திகளுக்கும் குற்றேவல் புரியும் கூலிப்படை அமைப்புகளாகவே செயல்படும். எனவே ஒரு நாட்டின் இறையாண்மையை தீர்மானிக்கும் அம்சங்களில் முக்கிய அம்சமாக அந்நாட்டு குடிமக்களுக்கு அனுமதிக்கப்படும் மனித உரிமைகளே முக்கிய அளவுகோலாகும்.

மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு அரசுகள் விதிக்கும் தடைகளை எல்லாம் தாண்டி மனித உரிமைக் கோட்பாடுகளை கற்றுக்கொள்வதும், மனித உரிமைக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதுமே நமது உரிமைகளை பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை கடமையாகும்.

 

நன்றி: மக்கள் சட்டம்