தொகுப்பு | செப்ரெம்பர், 2012

அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது

29 செப்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது: பகுதி 2-3

பின்னூட்டங்களா பிற்போக்கு ஊட்டங்களா’ பதிவுக்கு நண்பர் குலாம் இரண்டாவது தொகுதி பின்னூட்டங்களை அளித்துள்ளார். ஆனால் முதல் தொகுதி பின்னூட்டங்களை விட இரண்டாவது தொகுதி பின்னூட்டங்கள் சற்று தெளிவாக இருப்பதாய் உணர்கிறேன். வாதங்களுக்கு கடக்குமுன் ஒன்றை தெளிவு படுத்திவிடலாம் என எண்ணுகிறேன். நண்பர் குலாம் இப்படி எழுதியிருக்கிறார் \\\எனக்குள் உங்கள் குறித்த நடுநிலைபார்வை மீது ஐயங்கொள்ள வைக்கிறது/// ஐயமெலாம் தேவையில்லை நண்பரே. நான் நடுநிலைவாதி அல்லன், மட்டுமல்லாது நடுநிலை என்பதையே மோசடியான ஒன்றாக கருதுபவன். எந்த ஒன்றிலும் என்னுடைய நிலைப்பாடு என்பது நான் எதை சரிகாண்கிறேனோ அதைச் சார்ந்தே இருக்கும். நான் ஒரு கம்யூனிஸ்டாய் இருக்க விரும்புவதால், எந்த ஒன்றையும் இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகியே சரியா தவறா என்று ஆய்கிறேன். ஆனால் என் கருத்துகளுக்கு நான் நேர்மையானவன். என் கருத்து தவறு என உணரும் அந்தக் கணமே எந்தவித அசூயைகளுமின்றி உதறிவிட்டு சரியானதின் பக்கம் வந்துவிடுவேன். சரியானதாய் இருக்கும் போது என்ன இழப்பு வந்தாலும் அஞ்சாமல் கடைசிவரை போராடுவேன். எனவே நான் சரியானதின் மீது பக்கச் சார்பாய் இருப்பவன் தானேயன்றி, நடுநிலையானவன் அல்லன்.

நண்பர் குலாம் இப்படி தொடங்குகிறார் \\\கடவுள் இல்லையென்பதை அறிவியல் ரீதியாக மெய்பிக்க சொன்னேன். அறிவியல் ரீதியாக மெய்பிக்க கண்ணெதிரே இல்லை என்ற ஒரு நிலைப்பாடு மட்டும் போதாது/// மீண்டும் நான் நண்பருக்கு கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் முதல் பதிவிலும், இரண்டாவது பதிவிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். கடவுள் நிலையாக நின்று இயங்கும் ஒன்றா? அல்லது ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் -அது எவ்வளவு நீண்ட காலமாய் இருந்தாலும்- மட்டும் இயங்குவதா? நிலையானது என்றால் அதை அறிவியல் ஒப்புக் கொள்ளாது. நிலையாக நிலைத்து இயங்கும் ஆற்றல் கொண்ட எதுவும் அறிவியலின்படி இல்லை. எனவே கடவுள் இல்லை. ஏற்கனவே இரண்டுமுறை கூறிவிட்ட பிறகும் அதை பரிசீலிக்காமல் மீண்டும் அப்படியே உங்களை கேட்கத் தூண்டியது எது சகோ.? \\\ஆய்வு ரீதியாக கடவுளின் இருப்பை மெய்பித்தால் அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// இதையும் தெளிவாகவே மறுத்திருக்கிறேன். முதலில் நீங்கள் இப்படி எழுதினீர்கள் \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும்/// இப்போது சொற்களை மட்டும் மாற்றி \\\அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// என்கிறீர்கள். இரண்டுக்கும் இடையில் நான் கூறிய பதிலை மட்டும் ஏன் சகோ பரிசீலிக்கவில்லை. சுநாமியைக் கூட மனிதன் ஆய்ந்திருக்கிறான் அளந்திருக்கிறான். அது மனிதனின் ஆளுமைக்குள் வந்துவிட்டதா என்ன? நண்பரே! இது போன்றவைகளெல்லாம் உருவேற்றப்பட்ட கடவுளின் தகுதிகள் உதிர்ந்து விடாதிருப்பதற்காக செய்யப்படும் சமாளித்தல்கள். \\\நம் ஆளுகைக்கு உட்படும் ஒன்றை எப்படி நாம் கடவுளாக ஏற்போம் என்பதே என் இப்போதைய கேள்வி/// இப்போது மட்டுமல்ல எந்தக் காலத்திலும் இதுவே ஆன்மீகவாதிகளின் கேள்வி. ஆன்மீகவாதிகள் எனும் சொல்லின் பொருளே கடவுளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதிகளுக்கு (சொத்துகளுக்கு) பங்கம் வராமல் காப்பவன் என்பது தான் பொருள். எனவே ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது.

\\\சர்வ வல்லமைப்பெற்ற கடவுளின் இருப்பை எந்த ஆளுகைக்குள்ளும் அகப்படாமல் நாத்திகவாதிகளுக்கு எப்படி நிருபிக்க வேண்டும்/// நண்பர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி மிகவும் முதன்மையானது. இந்தக் கேள்வியை குறையற உணர வேண்டுமென்றால் பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் இருப்பை இதுவரை எந்த மதவாதியும் நிரூபித்ததில்லை. நிரூபிக்க முடியாது என்பதும் அவர்கள் அறியாததல்ல. ஆனால் நிரூபிக்கக் கோரும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்படி நிரூபிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கும் ஆத்திகர்கள் தற்போது அந்தக் கேள்வியையும் நாத்திகர்களின் பக்கம் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே கூறியது தான், ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது. என்றாலும், அந்தக் கேள்வியின் உட்கிடையை சற்றே விளக்கலாம்.

‘சர்வ வல்லமை பெற்ற’ ‘எந்த ஆளுமைக்குள்ளும் அகப்படாமல்’ இவை இரண்டும் என்ன? கடவுள் என்ற ஒன்றுக்கு கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தகுதிகள். இப்படி கடவுளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள் தாம் அதை புனித வட்டத்துக்கு உரியதாக்குகிறது. அதாவது, தகுதிகள் தான் கடவுள். இப்படிப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒன்று இருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இப்படிப்பட்ட தகுதிகள் கடவுளுக்கு எப்படி வந்தன? பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இன்னோரின்ன தகுதிகளுடன் உண்மைக் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆக, சாராம்சத்தில் அந்த மனிதர் சொன்னது உண்மையா பொய்யா என்பது தான் சரியான கேள்வி. அதை ஆய்வதற்குப் பதிலாகத்தான், பேரண்டத்தின் நீள அகலங்கள், எந்த ஆளுமைகளுக்குள்ளும் அகப்பட்டு விடக்கூடாதே போன்ற பரிதவிப்புகள் எல்லாம். அவர் சொன்னது உண்மை தான் என்பதை எப்படி நிரூபிப்பது? (நண்பர் குலாமுக்கான மறுப்புரைகளை இதுவரை நான் பொதுவாகவே வைத்துக் கொண்ருந்தேன். காரணம், பொதுவான கடவுளை கேட்டாலும் இஸ்லாத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று முன்பொருமுறை அவர் பொருதியது தான். இப்போது அப்படியில்லாமல் அவரே வெளிப்படுத்திக் கொண்டதால் நாமும் அப்படியே தொடர்வோம்)

இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். கடவுள் என்பது மனிதர்களின் கற்பனை தான் என தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். அந்த கற்பனைக்குச் செய்யப்பட்ட அலங்காரத் தகுதிகளுக்கு பங்கம் வந்து விடாமல் நிரூபிக்க வேண்டும் என்று கோருவதை இன்னொரு கற்பனை வாயிலாக அறிய முயலலாம். பேரண்டப் பெருவெளியில் ரசகுல்லா எனும் பால்வீதியில், குலோப் ஜாமுன் எனும் சூரியக் குடும்பத்தின் ஜாங்கிரி எனும் கோளில் அல்வா எனும் ஆற்றல் ஒன்று இருக்கிறது. அது அனைத்தையும் மிகைத்த பேராற்றல் வாய்ந்தது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அப்படி ஒன்று இல்லை என்று அறிவியலின் படி ஐயந்திரிபற நிரூபிக்க முடியுமா? என்றால் முடியாது என்பது தான் பதில். காரணம் பேரண்டத்தில் மனிதன் அறிந்திருப்பது கொஞ்சமோ கொஞ்சத்திலும் கொஞ்சம் மட்டுமே. அப்படி ஒன்று இருக்கிறதா? என்றால் இருக்கக்கூடும். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அப்படி ஒன்று மெய்யாகவே இருக்கிறது. அப்படி ஒரு அல்வா இருப்பதால் தான் நேற்று மாலையில் நீ குடித்த தேனீர் இனிப்பாக இருந்தது, அல்வா இல்லையென்றால் தேனீருக்கு இனிப்பே வந்திருக்காது என்று சொன்னால்.. .. .. அல்வா இல்லாமல் தேனீருக்கு தனியே இனிப்பு வந்தது எப்படி? அல்வா இல்லை என்று உன்னால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? ரசகுல்லா பால்வீதியைப் பற்றியோ, ஜாங்கிரி கோளைப் பற்றியோ அறிந்து கொள்ளும் தகுதியோ, அறிவியல் உயரமோ மனிதர்களுக்கு இல்லை எனவே அல்வா இருப்பது மெய்யாகிவிட்டது. நீங்கள் அல்வாவை எந்த விதத்திலும் நம்பாத சர்க்கரை வியாதிக்காரர்களென்றால் உங்களுக்கு அல்வாவை எந்த விதத்தில் நிரூபிக்க வேண்டும் என்று பகுத்தறிவோடு சொன்னால் அந்த விதத்தில் நிரூபிக்கிறோம் என்று சொன்னால் .. .. .. சிரிக்காதீர்கள், நண்பர் குலாம் கூறுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறோம், அதில் கடவுளூக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தகுதிகளுக்கு எந்தக் குறைவும் வந்துவிடாமல் ஒரு வழி சொல்லுங்கள் அந்த வழியில் நிரூபிக்கிறோம் என்றால் அதை என்னவென்பது. கடவுளை புரிந்து கொள்ளவில்லையே என வேதனைப்படும் நண்பர் கடவுள் மறுப்பை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார். கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் பொருள் கடவுளின் தகுதிகளோடு சேர்த்து கடவுளை மறுக்கிறோம் என்பது தான். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? கடவுளின் தகுதிகளை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் மறுக்கிறோம் என்றா?

நண்பர் குலாம் அடிக்கடி ஓர் ஒப்பீட்டுவமை கூறுவார், ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமானல் அதனருகே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைந்து விட வேண்டும் என்று. அறிவியல் விசயத்தில் இதுவே எதிர் விகிதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, கடவுள் கோட்டை மிக்குயர்வாக காட்ட வேண்டுமென்பதற்காக அறிவியல் கோட்டை குட்டையாக வரைந்து விடுகிறார்கள். அதனால் தான் எல்லா மதவாதிகளும் அறிவியல் குறைபாடுடையது எனும் பொருளிலேயே பேசுகிறார்கள். குலாமும் அதையே எழுதியிருக்கிறார், \\\எல்லாவற்றையும் மனித அறிவு அறிநது அதை ஆராயும் வழிமுறைகளை கண்டு அவற்றை வரையறுத்தாலும் அவை அவற்றின் எல்லைக்குள் மட்டுமே பிரயாணப்படும். மாறாக மாற்று செய்கைகளின் மீது மனித அறிவின் அறிவியல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆக ஐந்தாம் நிலையில் உள்ள ஒன்றை அதற்கு கீழாக உள்ள நான்கு நிலை கருவிகளால் ஆராய முடியாத போது எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்கு கீழுள்ள நிலைகளில் உள்ள அளவுகோல்கள் நாம் இதுவரை நம்மிடம் உள்ளது. அதை மட்டும் வைத்து எப்படி கடவுள் இல்லையென்ற முடிவுக்கு வர முடியும் சகோ/// கடவுள் ஐந்தாம் நிலை மனிதன் நான்காம் நிலை என நண்பர் வரையறை செய்திருக்கிறார். இந்த ஐந்தாம் நிலை, நான்காம் நிலை என்பது என்ன? மனித தேடலின் பாற்பட்ட நிலைகளா? அதாவது மனிதன் அறியா நிலையிலிருந்து ஒன்று, இரண்டு எனக் கடந்து நான்காம் நிலைக்கு வந்திருக்கிறானா? ஆம் என்றால் என்றேனும் ஒருநாள் மனிதன் ஐந்தாம் நிலைக்கு எட்டுவான். அப்போது இந்த விவாதத்தை என்னுடைய பேரனும், நண்பர் குலாமின் பேரனும் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் மனிதன் என்றேனும் கடவுளின் நிலையான ஐந்தாம் நிலையை அடைய முடியுமா? இதை ஒருபோதும் எந்த மதவாதியும் ஒப்பமாட்டார்கள். என்றால், நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் மெய்யான பொருள் என்ன? கடவுள் உயர்ந்தவன் மனிதன் அவன் படைப்பு. தகுதியில் படைத்தவனும் படைக்கப்பட்டவையும் ஒருபோதும் ஒன்றாகிவிட முடியாது எனும் மதக் கற்பனையை பொது உண்மை போல முன்வைக்கிறார். நான்காம் நிலை கருவிகள் ஐந்தாம் நிலையை அளக்க முடியாது என்று ஏன் கூற வேண்டும்? கடவுளை அளக்கும் தகுதிகள் மனிதனுக்கோ அவன் கருவிகளுக்கோ இல்லை எனும் நண்பர் நம்பும் நிதர்சனத்தை வெளிப்படையாக கூறிவிடலாமே. அதில் சிக்கல் இருக்கிறது. எங்கள் கடவுளே உண்மையானது என்று பிற மதத்தினிரிடையேயும், கடவுள் இல்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று நாத்திகர்களிடையேயும் வினவுவதற்கு அவர்களுக்கு அறிவியல் தேவைப்படுகிறது. மனிதர்களின் எல்லா போதுகளிலும் உடன் பயணப்படும் அறிவியலை, கடவுளை பெரிதுபடுத்த அறிவியல் குறைவுபடுத்திக் காட்டப்பட்டாக வேண்டும் எனும் தேவையை அவ்வளவு எளிதாக மதவாதிகளால் உதறிவிட முடியாது. அதனால் தான் அறிவியலைப் பிணைத்தே கடவுளை முன்னிருத்துகிறார்கள்.

இதை இன்னொரு கோணத்திலும் புரியவைக்க வேண்டியதிருக்கிறது. கடவுள் எத்தனை உயரத்திலிருக்கிறார் என்று அளந்து பார்ப்பதற்கு மனிதன் மிகுந்த முனைப்பெடுத்து புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நான் ஏற்கனவே கூறியது தான். கடவுளின் தகுதிக்கு மனிதன் உயர்ந்து அல்லது கடவுளின் இடம் தேடி சோதித்துப் பார்ப்பது மனிதனுக்கு தேவையில்லாதது. இந்த பூமியில் மனிதனுடன் ஊடாடிக் கொண்டிருக்கும் கடவுளின் ஆற்றலை சோதித்துப் பார்ப்பதே மனிதனுக்கு போதுமானது. மனிதனல்லாத எந்த உயிரினத்தின் சிந்தையிலும் கடவுள் இல்லை. பூமியல்லாத வேறெங்கும் மனிதனும் இல்லை. எனவே கடவுளின் இருப்புக்கான தேவை, அதன் ஒட்டுமொத்த செயல்பாடு என அனைத்துமே பூமியை மையப்படுத்தியே இருக்கிறது. நண்பர் குலாம் கூறும் அந்த உண்மையான(!) கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் மனிதர்களை ஒவ்வொரு கணமும் ஆட்டுவித்துக் கொண்டே இருக்கிறான். ஆக, இந்த பூமியில் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றலைத் தானே மனிதர்கள் அளக்க வேண்டியுள்ளது. பூமியை மனிதன் தன் அறிவியல் கண்களால் சல்லடை போட்டு அலசிக் கொண்டிருக்கிறான். மனிதன் மழையை அளப்பான், ஆனால் அந்த மழையை யாரும் தன் கட்டளையால் அனுப்பியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். மனிதன் மலையை அளப்பான், அதன் நீள அகலங்கள் உட்பட எந்தக் காலத்தில் அவை உயரத் தொடங்கின, ஆண்டுக்கு எத்தனை மில்லிமீட்டர்கள் உயருகின்றன என்றல்லாம் கணக்கிடுவான். ஆனால் அந்த மலையை யாரும் தன் கட்டளையால் தூக்கி நிறுத்தியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். இந்த பூமியில் அமீபா, கிளாமைடோமோனஸ் தொடங்கி நீலத் திமிங்கலங்கள் வரை படம் வரைந்து பாகங்கள் குறிப்பான் மனிதன். ஆனால் அவ்வுயிர்களை யாரும் புடம் போட்டுக் கொடுத்தது போல் தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். பூமியில் மேற்பகுதியான கிரஸ்ட் தொடங்கி மையப் பகுதியான இன்னர் கோர் வரையிலும் தன் அறிவுக் கோல்களை நீட்டுவான் மனிதன். ஆனால் அதை யாரும் வடிவமைதிருப்பதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். தன் வாழ்வின் பற்களில் எங்கெல்லாம் மனிதன் கடிபட்டு நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுளின் ஆயத்துகள் வெள்ளமென பாய்ந்துவரும். எங்கெல்லாம் மனிதன் கடவுளுக்கு நிரூபணம் கோரி நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுள் பூடகங்களுக்குள் ஒழிந்து கொள்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், குலாம் கூறும் நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் கருப் பொருள் இது தான். தெளிவாகச் சொன்னால் கடவுளின் தகுதிகள் என்பது கடவுளின் பேராற்றல்களை மட்டும் குறிப்பதல்ல, தேவைப்படும்போது கடவுளை ஒழித்து வைப்பதற்கான சூக்குமங்களையும் உள்ளடக்கியதே கடவுளின் தகுதிகள். எனவே நண்பர் குலாம் கடவுளின் தகுதிகள் என்று இறுபூறெய்தலாக குறிப்பிடும் அனைத்தையும் உள்ளடக்கி எப்படி வேண்டுமானாலும் நிரூபித்துக் கொள்ளட்டும். ஆனால், மனித வாழ்வின் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்றை ஏற்பதற்கு நம்பிக்கை மட்டும் போதாது என்பதை உணர்ந்து கொண்டாக வேண்டும்.

நண்பர் குலாம் இப்படியும் கேட்டிருக்கிறார், \\\ஆய்வு ரீதியாக அல்லது நேரடியாக கடவுளின் இருப்பை உணர்த்துங்கள் என்ற கேள்வி தாண்டி கடவுளை மறுக்க உங்களுக்கு ஏதும் காரணம் சொல்ல முடியுமா? /// எனக்கு நகைக்கக் கூட முடியவில்லை. கடவுளின் இருப்புக்கு மட்டுமே நிரூபித்தல்கள். மாறாக சமூகத் தளங்களில் கடவுளின் தேவை குறித்த தார்மீகங்கள் என்றோ இல்லாதொழிந்து விட்டன. இவற்றுக்கு ஒன்றல்ல ஓராயிரம் காரணங்கள் கூறலாம். இது குறித்து ஏற்கனவே நண்பர் குலாமுடன் சிறு விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அதை பின்னர் கவனிக்கலாம். ‘ஓர் அழைப்பு’ எனும் தலைப்பில் நண்பர் பழைய ஆக்கங்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்த விவாதத்திற்கு தேவைப்படுமாயின் நண்பர் குலாம் அந்தக் கேள்விகளை இங்கு வைத்தால் தகுந்த பதிலளிக்கலாம். அவ்வாறன்றி அந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு ஆக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் .. .. .. மன்னிக்கவும், அது தற்போது சாத்தியப்படாது, மட்டுமல்லாது திசை திருப்பலாகவும் அமையும்.

நண்பர் குலாம் அடுத்ததாக \\\மனிதர்கள் பாதிக்கபடுவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்து அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்தால் கடவுளின் இருப்பை தெளிவாய் உணர்த்தலாமே., சபாஷ்! என்ன ஒரு அறிவுப்பூர்வமான கடவுள் மறுப்பு சிந்தனை., உண்மையாகவே உங்கள் அறியாமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சகோ செங்கொடி/// என்று ஆச்சரியப்படுகிறார். எது அறியாமை? கடவுளின் இருப்பு குறித்த விவாதத்தில், அது மெய்யாக நிலவவில்லை என்பதற்கான தரவுகளாக அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக என்று மூன்று தளங்களிலும் கடவுளை மறுத்திருந்தேன். அதில் அறிவியலையும் வரலாற்றையும் நீக்கிவிட்டு சமூகத் தளத்திலுள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு எங்க கடவுளின் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறீர்களே என்று அங்கலாப்பது, எந்த விதத்தில் அறியும் ஆமையோ எனக்குப் புரியவில்லை. இதையே நான் எதிர்க் கேள்வியாக கேட்கிறேன். உங்களின் வேத வசனங்களின்படி, உங்கள் கடவுளின் கேரக்டரின்படி இந்த உலகம் மனிதர்களுக்கு அவகாசமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் இவ்வுலகிலேயே தவறுகளுக்கு தண்டனை அளித்தது ஏன்? தற்போது ஆங்காங்கே மழைத்தொழுகை நடந்து கொண்டிருக்கிறது, பிராத்தித்து மழை வரச் செய்ய முடியும் என்றால், அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிடாது என்றால், முதலாளிகளுக்கு எதிராக என்று வந்தால் அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிட்டுவிடும் என்றால், எது அறியாமை? எது அறியும் ஆமை? அந்தக் கேள்வி மக்களின் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிடுவார் என்பதற்காகவோ, கேட்க மாட்டார் என்பதற்காகவோ முன்வைக்கப்படவில்லை. கடவுளின் இருப்பு குறித்த கேள்விக்கு உலகமே பிரார்த்தித்தாலும் கடவுளின் இருப்பை நிரூபிக்கும் வாய்ப்பில்லை என்பதற்காக முன்வைக்கப்பட்டிருந்தது.

அடுத்து நண்பர் குலாம் விவாதம் குறித்தும் சில கருத்துகளை கூறியிருக்கிறார், \\\விவாதங்கள் என்பது கருத்துக்களை பரிமாறும் ஒரு கூடம் அவ்வளவே .இதில் நான் சொல்வது தான் சரியென்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் விவாதத்தின் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பொதுவில் வைக்கிறேன். மீதமுள்ள ஐம்பது சதவீகிதம் நீங்கள் வைக்கிறீர்கள். பார்வையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்/// இதை என்னால் ஒப்ப முடியாது. காரணம் இது விவாதம் என்பதன் வடிவத்தை மாற்றுவது போலிருக்கிறது. உடன்பாடில்லாத இருவேறு கருத்துகளைக் கொண்ட ஒரு விசயத்தில் விவாதம் நடத்தப்படுகிறது என்றால் அதன் பொருள், நேரடியாக அந்த இருவரின் கருத்துகளில் எது சரியான கருத்து என்பதை காரண காரியங்களுடன் இருவரின் மட்டத்தில் தீர்வை அடைவது என்பதும்; மறைமுகமாக அந்த விவாதத்தை கவனிக்கும் பார்வையாளர்கள், வாசகர்களின் அகப்பார்வையும் இது பாதித்து கேள்வியை எழுப்பி தீர்வை நோக்கி முன்தள்ளும் என்பதுமே ஆகும். அஃதன்றி, உங்களின் கருத்தை நீங்கள் கூறுங்கள் என் கருத்தை நான் கூறுகிறேன், பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றால் அது குறைபாடுடையது. விவாதத்தில் என்னுடைய பதிலை பரிசீலித்து நீங்கள் பதில் கூற வேண்டும், உங்களுடைய பதிலை பரிசீலித்து நான் பதில் கூற வேண்டும். வெறுமனே அவரவர் கருத்துகளை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தால் பரிசீலனை எங்கிருந்து வரும்? எனவே விவாதம் அதன் உள்ளார்ந்த பொருளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் ஆவல், நண்பர் குலாம் அதற்கு ஆவன செய்வார் என எண்ணுகிறேன்.

என் கருத்தை நான் கூறுகிறேன் உங்கள் கருத்தை நீங்கள் கூறுங்கள் என்று சொல்லப்படுவதன் விளைவு இப்போதே தலை காட்டியிருக்கிறது என்று கருதுகிறேன். பதில் கூறும் கடமையிலிருந்து நழுவிக் கொள்வது, கூறப்பட்ட பதிலை பரிசீலிக்க மறுப்பது போன்றவற்றையே விளைவு என கூறுகிறேன். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார். அறிவியல் ரீதியாகவும் நிரூபித்தேன், வரலாற்று ரீதியாகவும் நிரூபித்தேன். இதன் தொடர்ச்சியாக எந்த மறுப்பும் விளக்கமும் நண்பரிடமிருந்து வெளிவரவில்லை. என்றால் ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கொள்ளலாமா? மனிதன் தவிர்த்த வேறெந்த உயிரினத்துக்கும் கடவுள் குறித்த எண்ணம் இல்லை என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என்று கேட்டார், விளக்கப்பட்டது, அதன் பிறகு அது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? கடவுளை சோதிக்கும் கருவிகள் கடவுளை விட வல்லமையுடையதாய் இருக்கும் என்றார். அதை மறுத்தேன், அந்த மறுப்பை பரிசீலிக்காமலேயே அதே கேள்வியை வேறு சொற்களால் மீண்டும் கேட்டிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? இதை விவாதம் குறித்த நண்பர் குலாமின் பார்வை மீதான மீளாய்வு என்பதாக மட்டும் கொள்ளாமல் \\\இதில் எங்கே நழுவுதலும் வழுதலும் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை சகோ செங்கொடி/// என வினவப்பட்டதற்கான புரிதலும் என்பதாகக் கொள்க.

மீண்டும் வருகிறேன்.

பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?

26 செப்

 

உதாரணங்கள் மட்டுமே உண்மையாகி விடுவதில்லை எனும் பதிவுக்கு மிகு விரைவாக சில பின்னூட்டங்களில் பதில் கூறியிருக்கிறார் நண்பர் குலாம். ஆனால் வழக்கமான மதவாத உத்திகளுடனே அவர் பதில் இருக்கிறது. உறைந்து போயிருக்கும் அந்த மதவாதத்தை உடைப்பதற்கு ஏதுவாக இன்னும் எத்தனை பின்னூட்டங்களை வேண்டுமானாலும் எழுதட்டும், நான் காத்திருக்கிறேன் உருக்குவதற்கு.

 

நண்பரின் முதல் பின்னூட்டத்தின் படி, இதுவரையில் மதவாதிகள் கடவுள் என்பதை எல்லாவித புரிதலுக்கும் அப்பாற்பட்ட நிலையிலேயே கூறிவருகிறார்கள். ஏனென்றால் எந்தவிதத்திலும் கடவுளுக்கு என்னனவிதமான ஆதாரக் குறியீடுகளையும் காட்டிவிட முடியாது. அதற்கு பதிலாக நண்பர், கடவுளை இங்கு பார்க்க முடியாது என்பதற்கான பதிலாக கூறியிருக்கிறார். கண்ணால் காண்பது மட்டுமே இங்கு பிராச்சனையல்ல. ஏதாவது ஒரு ஆதாரக் குறியீடு .. .. இதுதான் மையம், அந்த இடுகையின் சாராம்சமும் அதுதானல்லவா? எந்த ஒரு ஆதாரக் குறியீடும் கடவுளின் இருப்பை முன்வைத்து காட்டிவிட முடியாது என்றால் மதவாதிகள் எந்த அடிப்படையில் கடவுள் இருக்கிறது என்கிறார்கள்? நான் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டும் பதில் சொல்லப்படாத கேள்வி இது தான். நம்பிக்கையாளர்கள் கடவுளை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் உறுதியான ஒன்றாகவா? நம்பிக்கையாகவா? இப்போது குலாம் உறுதிப்படுத்தலாம். கடவுள் என்பது அவரது நம்பிக்கைதான் என்றால் இந்த இடத்திலேயே விவாதத்தை முடித்து விடலாம். ஆனால் அவர் கடவுள் உறுதியாக நிலவுகிறது என்கிறார். உறுதியாக ஒன்று நிலவ வேண்டும் என்றாலே அங்கு ஆதாரம் வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லையென்றாலும், ஆதாரம் காட்ட முடியாது என்றாலும் அது நம்பிக்கை. ஏதாவது ஒரு நிலையில் இருக்க வேண்டும். இரண்டிலும் இருக்க முடியாதல்லவா? விக்ஸ் எப்போதும் விக்ஸ் தான். ஆனால் அது என்ன பொருளில் ஆளப்பட்டது. விக்ஸ் என்பது நம்பிக்கை, மருந்து என்பது ஆதாரம். நம்பிக்கையை சுற்றிச்சுற்றி எழுதிவிட்டு அதை ஆதாரம் என்று கூறக்கூடாது. ஆனால் குலாம் உட்பட மதாவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். விக்ஸை சுற்றிச் சுற்றி எழுதி விட்டு அதை மருத்துவர் எழுதிய மருந்து போல காட்டுகிறார்கள்.

 

நண்பரின் இரண்டாவது பின்னூட்டத்தில் கூறப்பட்டவைகளுக்கும் மேலுள்ளதே போதுமானது. ஆனால் அதில் ஒரு துணைக் கேள்வி இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது \\\அறிவியலால் உணர்த்த முடியாதது கடவுள் என்கிறேன். அதற்கு அறிவியலால் உணர்த்த முடியும் கடவுள் இல்லையென்பதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள்/// இதற்கு நான் மறுப்புக் கட்டுரையில் நேரடியாகவே பதில் கூறியிருக்கிறேன். \\\எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும்/// அறிவியலுக்கு ஆட்படும் கடவுள் அறிவியலுக்கு ஆட்படாத கடவுள் என்றெல்லாம் தனித்தனியாக ஒன்றுமில்லை. கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக ஒரு சாராரால் நம்பப்படுகிறது. அது நம்பிக்கையா? மெய்யா? எனும் பிரச்சனைக்குத்தான் அறிவியலின் துணை கொண்டு ஆராய்கிறோம். எனவே உட்பட்டது உட்படாதது என்றெல்லாம் பிரிவினை செய்வதற்கு வாய்ப்பில்லை. யாரை நோக்கி விரல் சுட்டப்பட்டிருக்கிறது என்பதை மறைத்து விரல் விளையாட்டுகள் வேண்டாமே.

 

நண்பரின் மூன்றாவது பின்னூட்டத்தில் ’தவறான புரிதல்’ கட்டுரையில் நண்பர் எழுதியிருந்த ஒரு வாக்கியத்துக்கு நான் கூறிய பொருள் தவறு என்று கூறி அவரே பொருளும் கூறியிருக்கிறார். அதற்கு இப்படி எச்சரிக்கையும் செய்திருக்கிறார். \\\ஒருவர் என்ன கூற விரும்புகிறார் என்பதை அவர் தான் சொல்ல முடியும். நாமாக தீர்மானித்தால் அது நமது சுய தீர்மானிப்பே!/// சரி இப்படியெல்லாம் பீடிகை போட்டுவிட்டு நண்பர் கூறும் பொருள் என்ன? \\\ஆரம்பத்தில் நான் கண்ட இறை நிராகரிப்பாளர் தங்களை நாத்திகவாதிகள் என இந்த சமூகத்தில் அடையாளம் காட்டுவதற்கு மறுத்த கடவுள் என்ன தெரியுமா? தீப்பெட்டி அட்டையிலும், பட்டாசுகளை சுற்றி இருக்கும் தாளிலும் அச்சாகி இருக்கும் உருங்களையும், பூஜை புனஸ்காரங்கள் தேவைப்படும் கடவுள்களையுமே/// இது நண்பரின் வாக்கியத்திற்கு அவரே கூறும் அருஞ்சொற்பொருள். அதன் பொருளாக நான் குறிப்பிட்டிருந்தது என்ன? \\\வெவ்வேறு மதங்களில் கூறப்படும் கடவுளின் தன்மைகள் குறைவுடையதாய் இருக்கின்றன, கடவுளை மறுப்பவர்கள் இந்த குறை தன்மையுடைய கடவுளின் குறைகளையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நாங்கள் கூறும் கடவுள் குறைகளே இல்லாதவர். எனவே குறைவுடைய கடவுளை மறுத்து கடவுள் மறுப்பாளரான நீங்கள் அதையே குறையில்லாத கடவுளுக்கும் நீட்டிக்கிறீர்கள் என்பது தான் அவர் கூற வருவது/// இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? அவர் என்ன கூறியிருக்கிறாரோ அதையே நான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறேன். பின் ஏன் இந்த சுற்றாடல்கள்? இதே பின்னூட்டத்தில் இப்படியும் கூறியிருக்கிறார் \\\இப்படி இருந்தால் கடவுள் இல்லை, இப்படி இருக்கவும் கடவுளால் முடியாது, – ஆக கடவுள் என்று ஒன்று இல்லை என கூற வேண்டும்/// இப்படித்தான் நான் கூறியிருக்கிறேன். கடவுள் என்பதன் தன்மையாக பொதுவாக கூறப்படுவது என்ன? ஒரு குறிப்பிட்ட காலவரை இல்லாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் என்பது தானே. இதற்குத்தான் நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை. எனவே கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்று கூறியிருக்கிறேன். நண்பர் படிக்கவில்லையா? \\\எப்போதும் நிலைத்து நின்று இயங்கிக் கொண்டே இருக்கும் பொருள் என்று எதுவும் இருக்க முடியாது, நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை என அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது/// கடவுள் இல்லை என்பதற்கு இதைவிடவும் வேறு சான்று வேண்டுமா? இதுபோல் கடவுளாக கூறப்படுவனவற்றின் தன்மைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டும் அறிவியலோடு உரசிப் பார்க்கலாம்.

 

இந்த இடத்தில் மதவாதிகள் செய்யும் வழக்கமான குயுக்தி ஒன்றையும் நினைவு படுத்திவிடலாம். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விடுவார்கள். நிரூபித்தால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார், அகப்பட்டால் அவர் கடவுளாகவும் இருக்க முடியாது என்பார்கள். எந்த வழியிலும்(கவனிக்கவும் கண்ணால் காண்பது மட்டுமல்ல) தென்படாத கடவுளை நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக இருக்கிறது என நீங்கள் கூற முடியும் என்றால், அவ்வாறு நாங்கள் நம்புகிறோம் என்பார்கள். அப்படியென்றால் அது நம்பிக்கை தானே உறுதியானது இல்லையே என்றால், இல்லையில்லை கடவுள் உறுதியாக இருக்கிறது என்பார்கள். உறுதியாக இருக்கிறது என்றால் அறிவியல் ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டால், கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்பார்கள் .. .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .. .. அப்பா இப்பவே கண்ணைக் கெட்டுதே .. .. என்ற வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நண்பர் குலாம் தாம் இப்படி அல்லர் என கூற விரும்பினால் நம்பிக்கையா உறுதியானதா என்று தெளிவுபடுத்தலாம், அவரால் முடிந்தால்.

 

நண்பரின் நான்காவது பின்னூட்டத்தில் சுரண்டலின் வடிவமாக இருப்பதால் தான் கம்யூனிஸ்டுகளால் கடவுள் மறுக்கப்படுகிறார் எனும் என்னுடைய கருத்துக்கு பதில் கூறியிருக்கிறார். பதில் கூறியிருக்கிறார் என்பதைவிட திசை திருப்பியிருக்கிறார் என்பதே சரியாகும். சுரண்டலின் வடிவமாக கடவுள் இருக்கிறார் அதாவது சுரண்டலின் வடிவமாக கடவுள் ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது என்னுடைய கேள்வி. நாங்கள் சுரண்டலுக்காக கடவுட் கொள்கையை ஆதரிக்கிறோமா? கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இல்லையா? சுரண்டலை எதிர்க்கும் விதத்தில் ஒரு கடவுட் கொள்கை இருந்தால் ஒப்புவீர்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்வி எழுப்பியிருப்பதுதான் இதற்கான  நண்பரின் பதில். இன்னொரு முறை நிதானமாக படித்துப் பார்த்தால் நான் கேட்டிருப்பது அதுவல்ல என்பது புரியும். சாராம்சத்தில் கடவுட் கொள்கை சுரண்டலே. அது நம்பிக்கை எனும் அடிவாரத்தின் மேல் மக்கள் மனதில் கட்டப்பட்டிருப்பதால் அந்த சுரண்டல் மக்களுக்கு புரியவில்லை. மக்களிடம் இருக்கும் அந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை போக்க வேண்டும் என்பதில் தான் எங்களின் ஆர்வம். கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இருக்காது, கூடுதல் தகவலாக இப்போது கம்யூனிச நாடுகள் என்று எதுவுமில்லை. கடவுட் கொள்கையிலிருந்து சுரண்டலை நீக்கிவிட்டால் அதில் எஞ்சுவது ஒன்றுமிருக்காது. சுரண்டலே இல்லாத கடவுட் கொள்கை என்ற ஒன்று தோன்றவும் முடியாது. ஏனென்றால் சுரண்டல் தீர்ந்து போய் விட்டால் கடவுளின் அவசியமும் தீர்ந்து போய்விடும். திசை திருப்பல் இல்லாமல் என்னுடைய கேள்விக்கு நண்பர் எதிர்க் கேள்வி எழுப்ப வேண்டுமென்றல் கடவுள் எங்கணம் சுரண்டலின் வடிவமாக இருக்கிறார்? என்று தான் கேட்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான கேள்வி இந்த கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் தர்க்க ரீதியான இந்த விவாதத்தை, அதில் ஒரு முடிவை எட்டாத நிலையிலேயே அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கும். அதற்கும் நாம் ஆயத்தமே என்றாலும் முடிவை எட்டிவிட்டு தொடரலாம்.

 

நண்பரின் ஐந்தாவது பின்னூட்டத்தில், அறிவியலின் புலம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நம்மால் அறியமுடியாத உயரத்தில் இருக்கிறது என்று கூறிவிடுவது மட்டுமே ஒன்று இருக்கிறது என்பதற்கான உறுதிப்படுத்தல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நண்பரோ இன்றிருக்கும் நவீன கண்டுபிடிப்புகளை 5000 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்திருக்க முடியுமா என்கிறார். இதையும் நான் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன் நண்பர் கண் கொடுக்க மறுத்திருக்கிறார். ஐந்தாயிரம் ஆண்டுகளல்ல, ஐந்து லட்சம் ஆண்டுகள் கூட ஆகட்டும் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதல்லவா கேள்வி. எக்காலத்திலும் கண்டுணரப்பட வாய்ப்பே இல்லை எனும் போது அதை உறுதியாக நிலவுகிறது என்று கூறாதீர்கள் எங்கள் நம்பிக்கை மட்டுமே என்று கூறுங்கள் என்கிறேன்.

 

இன்னொன்றும் கூறியிருக்கிறார், \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும். அப்படி அவற்றால் கடவுளை கண்டறிந்தால் கண்டறியப்பட்ட அது எப்படி கடவுளாக ஏற்க முடியும்?? கடவுளை கண்டறிந்த அதுவல்லவா கடவுளை காட்டிலும் சக்தி மிகுந்ததாக இருக்கும்/// அதாவது கடவுளை விட எதுவும் சக்தி மிகுந்ததாக ஆகிவிடக் கூடாதே என்பது தான் நண்பரின் கவலையாகத் தெரிகிறது. இவைகளெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. ஒன்றைக் கண்டறியும் சாதனம் அதைவிட உயர்ந்ததாகிவிடுமா? நுண்ணுயிர்களைக் கண்டறியும் சாதன் உருப்பெருக்கி என்றால் உறுப்பெருக்கி சாதனங்கள் நுண்ணுயிர்களை விட உயர்ந்தது என்று என்ன பொருளில் கூற முடியும்? ஒரு சாதனம் என்றாலே அது தானே இயங்கும் வல்லமை பெற்றதல்ல என்பது பொருள். தானே இயங்கும் பொருளைக் காட்டியில் இயக்கும் ஒரு பொருள் உயர்ந்தது என்று எவ்விதத்திலும் கூறமுடியாது. எனவே நண்பர் மாச்சரியங்களை விட்டுவிட்டு தேடலில் முனைவாராக.

 

நண்பரின் ஆறாவது பின்னூட்டத்தில் நம்பிக்கையா உறுதியானதா எனும் கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதாரம் காட்டமுடியாது என்றால் நம்பிக்கை என்று ஒப்புக் கொள்ளுங்கள், உறுதியானது என்றால் ஆதாரம் காட்டுங்கள். உறுதியானது ஆனால் ஆதாரமில்லை என்றால் அது போங்காட்டம் என்று கூறியிருந்தேன். நண்பர் குலாம் இதற்கு நேர்மையாக பதில் கூற வேண்டுமென்றால் நம்பிக்கையா உறுதியானதா என்பதையல்லவா தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் நண்பரிடமிருந்து இதற்கு பதில் வராது, மட்டுமல்ல, எந்த மதவாதியிடமிருந்தும் பதில் வராது. இதைத்தான் போங்காட்டம் என்பது. ஆனால் நண்பர் என்ன கூறியிருக்கிறார்? \\\கடவுளின் இருப்பு நம்பிக்கையென்றால் அதை பொய்பிக்கும் அறிவியல் நிருபணம் என்ன? அறியலை பொருத்தவரை இல்லாத ஒன்று என்று ஒன்று இல்லை. எங்கே நீங்கள் நிருபணம் தாங்களேன் கடவுள் இல்லையென்று.. கேட்காத ஒலியலைகள் உதாரணே ஆனாலும் அது உண்மை என்பதை எவரும் ஒப்பு கொள்வர். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை மதவாதிகளின் நம்பிக்கையாக நிறுவ முயலும் நீங்கள் கடவுள் இல்லா நிலையில் கேட்கும் பல கேள்விகளுக்கு போங்காட்டம் ஆட கூட வர மாட்டேன் எங்கீறீர்களே அது ஏன் சகோ?/// யாரிடம் நிரூபணம் கேட்கிறார் நண்பர் குலாம். அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிரூபணம் தந்திருக்கிறேன் கடவுள் இல்லை என்பதற்கு. இன்னும் என்ன வேண்டும்? கடவுள் இல்லா நிலையில் நீங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கு நான் பதில் தரவில்லை? கூறமுடியுமா? வேறேதாவது இடுகைக்குள் நீங்கள் அந்தக் கேள்விகளை பதிந்து வைத்திருந்தால் இங்கு அதை கேள்விகளாகக் கேளுங்கள். கேள்விகளுக்கு நான் மருள்பவன் அல்லன். இப்போது கூறுங்கள் போங்காட்டம் ஆடுவது யாரென்று.

 

நண்பரின் ஏழாவது பின்னூட்டத்தில், கடவுள் பூமியில் மட்டுமே இயங்கும் தன்மை குறித்து எடுத்துக் கொள்ளப்பட்டுளது. அதில் நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன், \\\பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா?/// இதற்கு எந்த வித பதிலையும் கூறாத நண்பர் குலாம் அதையே எதிர்க் கேள்வியாகவும் கேட்டிருக்கிறார் \\\மனித மூளையை தவிர வேறந்த உயிரின அறிவிற்கும் கடவுள் குறித்து அறிந்துக் கொள்ளவில்லை யென்பதற்கு ஆதாரம் தர முடியுமா சகோ/// என்று. பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி நண்பர் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். நான் பதில் கூறுகிறேன், மனிதனைத்தவிர வேறெந்த உயிரினத்திற்கு கடவுள் குறித்த சிந்தனை இல்லை. எப்படி? மனிதன் கொண்டிருக்கும் மேம்பட்ட சிந்தனை வடிவம் மனிதன் சமூகவயப்பட்டதன் எதிர்வினை. இப்படி மேம்பட்ட சிந்தனை வடிவம் விலங்குகளுக்கு இல்லை. ஏனைய உயிரினங்களின் சிந்தனை எல்லாம் உண்பதற்கும் உண்ணப் படாமலிருப்பதற்குமேயான பயன்பாட்டு வடிவம் தான். கடவுள் என்ற சிந்தனை தன்னைப்பற்றிய அறிதலுள்ள, தனக்கு மேலாகவும் ஒரு சக்தி இருக்கக் கூடும் எனும் புரிதலுள்ள உயிரினங்களுக்கு மட்டுமே ஏற்பட முடியும். இந்தப் புரிதல் மேம்பட்ட சிந்தனை இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் எனும் சிந்தனை வந்திருக்காது. இதை இன்னொரு வாயிலாகவும் பார்க்கலாம். ஒரு உயிரினத்திற்கு ஒரு சிந்தனை இருக்கிறது என்றால் அது செயலில் வெளிப்பட்டால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மனிதனுக்கு கடவுள் எனும் சிந்தனை இருக்கிறது என்பது அவனது செயல்களின் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. மனிதனைத்தவிர வேறெந்த உயிரினங்களிடமாவது கடவுட் சிந்தனை இருக்கிறது என்பது செயல்களில் வெளிப்பட்டிருக்கிறதா? இல்லையே, வேறெப்படி கடவுள் சிந்தனை இருப்பதாக கூறமுடியும்? நண்பர் குலாம் கேட்ட எதிர்க் கேள்விக்கு நான் பதில் கூறிவிட்டேன். என்னுடைய கேள்விக்கு பதில் கூற முடியுமா நண்பரால்?

 

அந்த பின்னூட்டத்தில் நண்பர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார். மனிதனுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கடவுள் எனும் சிந்தனை தோன்ற வேண்டிய அவசியம் என்ன? மனிதன் இயற்கை ஆற்றல்களின் மிகையைக் கண்டு பயந்தான். அதற்காக சடங்குகள் செய்தான். மறுபுறம் இனக்குழுத் தலைவர்கள் இனத்தைக் காக்கும் போரில் காட்டிய தீரமும் வீரமும் அவர்கள் இறந்த பிறகும் நினைவு கூறத்தக்கதாக, அனுபவப் பாடமாக கடந்து வந்தது. இவை இரண்டும் இணைந்தே கடவுள் எனும் சிந்தனை மனிதனுக்கு தோன்றியது. அதுவே பின்னர் சுயநலமிகளின் கைகளில் மதமாக மாற்றம் கண்டது. இனி நண்பர் குலாம் ஏன் கடவுளை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராக உருவகப்படுத்துகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.

 

நண்பரின் எட்டாவது பின்னூட்டத்திலும் கடவுட் சிந்தனை ஏன் மனிதனுக்கு வந்தது என்பதே கேள்வியாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மனிதன் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் இருக்கின்றதாக குறிப்பிடுகிறார். நான் கேட்பது ஆதாரங்கள் நிரூபணங்கள் தகவல்கள் அல்ல.

 

நண்பரின் கடைசி பின்னூட்டத்தில், சமூக ரீதியாக நான் கேட்டிருந்த அன்னிய முதலீடு குறித்த கேள்வியை திசை திருப்பி இருக்கிறார் நண்பர் குலாம். நான் கேட்டிருந்தது என்ன? கோடிக்கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றை உறுதியாக இருக்கிறது என்று நம்பப்படும் கடவுளின் துணை கொண்டு ஏன் அகற்றக்கூடாது. அதாவது பிரார்த்தனை எனும் முயற்சியைத் தவிர வேறெந்த மனித முயற்சியும் இல்லாமல் தனியார்மயம் திடீரென்று நீங்கி விட்டால் அதன் மூலம் கடவுள் இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ளலாமல்லவா? இந்த அடிப்படையில் தான் என்னுடைய கேள்வி அமைந்திருந்தது. இதை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கடவுள் இல்லை என்கிறீர்களா? என்று மடை மாற்றுகிறார். திசை திருப்பாமல் என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள் நண்பரே.

 

அடுத்து ஒரு வாசகம் எழுதியிருக்கிறார் பாருங்கள், புளகமடைந்து விட்டேன். \\\உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமோ போதாதோ.. அதை நடு நிலை வாசிப்பாளர்கள் தீர்மானிப்பார்கள். நிச்சயமாக சுய ப்ய்ரிதலை உலக உண்மையாக்க நினைக்கும் எந்த எண்ணங்களும் மக்கள் மன்றத்தில் உயிர் பெறாது/// முதல் வாக்கியத்தில் நடுநிலை வாசகர்கள் தீர்மானிப்பார்கள் என்கிறார். ஆனால் மறு வாக்கியத்திலேயே, என்னுடைய பதிலை சுயபுரிதல் என்று சுருக்கி அவருடைய விருப்பத்தை உயிர் பெறாது என்று தீர்ப்பாக கூறிவிட்டார். ஏன் உயிர் பெறுமா பெறாதா என்று அந்த நடுநிலை வாசிப்பாளர்கள் தீர்மானிக்க மாட்டார்களா? .. .. பலே! கெட்டிக்காரர் தான்.

 

நான் தெளிவாக மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது இதைத்தான். கடவுள் என்பது நம்பிக்கையா? உறுதியானதா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதிலிருந்து இன்னும் எத்தனை முறை நண்பர் நழுவிச் செல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

உதாரணங்கள் மட்டுமே உண்மையாகிவிடுவதில்லை

22 செப்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது பகுதி 2-1

”கடவுள் ஏன் இருக்கக் கூடாது” இந்த தலைப்பில் நண்பர் குலாம் அவர்களுடன் ஒரு விவாதமாக நான்கு பகுதி வரை வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு மதவாதிகளின் இடையூறுகள் உள்ளிட்ட இன்ன பிறவற்றால் அவற்றை தொடர முடியாமல் போய்விட்டது. இதற்கிடையே நண்பர் குலாம் கடவுளின் இருப்பு குறித்து வேறு சில கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவற்றிலொன்று தான் ‘ஓர் அழைப்பு’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை. அதைப் படித்ததும் மீண்டும் இந்தப் பகுதியை தொடர வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து நண்பர் குலாமுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்த போது இணக்கம் தெரிவித்தார். மட்டுமல்லாது ‘கடவுள் ஒரு மெகா தவறான புரிதல்’ என்றொரு ஆக்கம் வரைந்து அதையே இரண்டாம் பகுதிக்கு முதலாவதாய் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதோ நானும் ஆயத்தமாகி விட்டேன்.

முதலில் நண்பர் குலாமுக்கு ஒரு வேண்டுகோள், கடவுள் ஏன் இருக்க வேண்டும், கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை தலைப்பாகக் கொண்டு; புரிதலை நோக்கிய, தேடலை நோக்கிய தெளிவாகச் சொன்னால் முடிவை நோக்கிய விவாதமாக ஏன் இதை நகர்த்திச் செல்லக் கூடாது? ஐயத்திற்கு துளியும் இடமின்றி உங்களுக்கு நேர நெருக்கடி இருக்கிறதென்பதை நான் அறிவேன். அதிலும் முன்பைவிட தற்போது உங்கள் நேரம் அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் உங்களின் நேரமின்மையை மட்டும் குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல். எனவே தர்க்கத்தைக் குழைத்து பூடகமான பதிவுகளுக்குப் பதிலாக குறிப்பான, தொடர்ச்சியில், தேடலில் தங்கியிருக்கும் பதிவாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

‘கடவுள் ஒரு மெகா தவறான புரிதல்’ எனும் கட்டுரையில் நண்பர் குலாம் கூறியிருப்பது என்ன? கடவுளை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. கடவுளை அளக்கும் உயரமோ, தகுதியோ அறிவியலுக்கு இல்லை. கடவுளை மறுப்பவர்கள் எந்த ஆதார குறியீடுகளையும் காட்டவில்லை. கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தானே எல்லா மதவாதிகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் குலாம் புதிதாக இதில் கூறுவதற்கு என்ன இருக்கிறது? தர்க்கத்தைக் குழைத்து எழுதிவிட்டால் .. .. .. சுத்திச் சுத்தி எழுதினாலும் விக்ஸ் விக்ஸ் தான்(விவேக் காமெடி)

\\\கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை/// \\\கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு/// இப்படியெல்லாம் எழுதும் குலாமுக்கு மிகுந்த துணிவு தான். கடவுளை நம்பும் எவரும் குலாம் உட்பட இதுவரை கடவுள் என்றால் என்ன? என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்களா? கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரக் குறியீடுகள் தந்திருக்கிறார்களா? பாவம் எதிர்நோக்கி சுட்டுவிரல் நீட்டும் முன் தம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டிருக்கின்றன என்பதை மறந்துவிட்டார்.

கடவுளை மறுப்பவர்கள் எந்தக் கடவுளை மறுக்கிறார்கள்? எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும். \\\ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை// இப்படியும் குலாம் எழுதியிருக்கின்றார் என்றால், அவர் கூற விரும்புவதன் பொருள் என்ன? வெவ்வேறு மதங்களில் கூறப்படும் கடவுளின் தன்மைகள் குறைவுடையதாய் இருக்கின்றன, கடவுளை மறுப்பவர்கள் இந்த குறை தன்மையுடைய கடவுளின் குறைகளையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நாங்கள் கூறும் கடவுள் குறைகளே இல்லாதவர். எனவே குறைவுடைய கடவுளை மறுத்து கடவுள் மறுப்பாளரான நீங்கள் அதையே குறையில்லாத கடவுளுக்கும் நீட்டிக்கிறீர்கள் என்பது தான் அவர் கூற வருவது. ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் எந்த மதத்துக் கடவுள் என்பதை பிரதானமாக எடுத்துக் கொள்வதில்லை. கடவுளின் பொதுவான தன்மைகளான படைத்து காத்து அழிக்கிறார், அவனின்றி அணுவும் அசையாது போன்றவற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கடவுளையே மறுக்கிறார்கள். இன்னும் தெளிவாகவே சொல்லிவிடலாம், கடவுளை மறுத்தே ஆகவேண்டும் எனும் அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. சமூக ரீதியான போராட்டத்தில் கடவுளின் வடிவம் சுரண்டலை தக்க வைப்பதற்கு பயன்படுகிறது என்பது தான் அதில் முதன்மையான அம்சம், அந்த அடிப்படையில் நின்றுதான் நாங்கள் கடவுளை மறுக்கிறோம். எனவே ‘கடவுள் மறுப்பை’ பிழையற புரிந்து கொள்ளும் கடமையும் நண்பருக்கு உண்டு.

கடவுள் உண்டு என்பதற்கு நண்பர் கூறும் நிரூபணம் என்ன? குறைந்த அல்லது அதிகமான செசிபல் சப்தங்களை நம்மால் கேட்க முடியாது என்பதால் அவ்வாறான ஒலிகள் இல்லை என முடியுமா? அது போலத்தான் கடவுளும். இதைத்தான் காலங்காலமாக எல்லா ஆத்திகர்களும் கூறி வருகிறார்கள். போலக்காட்டி ஒருவித பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் சாத்தியங்களை தன் விருப்புகளுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்வது. எல்லா மதவாதிகளின் உத்தியும் இதுதான். விரிவாக இதை விளக்கலாம்.

மனிதனின் அறிவு என்பது இதுவரை மனிதகுலம் புலன்களால் புலன்களால் பெற்ற தகவல்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது தான். அறிவியல் என்பது தன்னிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு தனக்கு தேவையான புதிரை அவிழ்க்கும் முயற்சி, தொடர் சோதனைகளால் உண்மையை மட்டுமே உறுதிப்படுத்தும் ஒழுங்கு. மனிதனுக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைப்பதற்கு இருக்கும் ஒரே உரைகல் அறிவியல் மட்டுமே, வேறொன்று இல்லை. இப்போது குலாம் கூறும் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம். \\\எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது/// சரிதான் அதேநேரம் அதை உறுதியாக இருக்கிறது என்றும் கூறிவிட முடியாதே. ஏதாவது வகையில் ஒரு மெய்ப்பித்தல் இருந்தால் மட்டுமே அதை உண்மை என்று ஏற்க முடியும் அல்லவா? ஒலியலைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேலோ கீழோ இருக்கும் போது மனிதனுக்கு அவ்வாறு இருக்கிறதா இல்லையா எனும் ஐயம் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு ஆய்வில் அவ்வாறு இருப்பதற்கான தடயம் கிடைத்த போது தயங்காமல் ஏற்றுக் கொண்டான் மனிதன். இதில் இரண்டு விசயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1. மனிதன் அறியாதபோதும் அந்த ஒலியலைகள் இருந்தன, ஆனால் அவைகளைப் பற்றிய எந்த உணர்வும் மனிதனுக்கு இல்லாமலிருந்தது. 2. ஒலியலைகளை மெய்ப்பித்த பிறகே மனிதன் ஏற்றுக் கொண்டானேயன்றி வெறும் நம்பிக்கையை மட்டும் கொண்டு ஏற்கவில்லை. இந்த இரண்டு விசயங்களும் நமக்கு உணர்த்துவது என்ன? மனிதனின் உணர்வுக்கு அப்பாற்பட்டு எதாவது இருந்தால் அதால் மனிதனுக்கு ஏதொரு காரியமும் இல்லை. தேவை இல்லாத போது அதை ஏற்கவும் இல்லை, தடயம் கிடைத்தபோது அதை மறுக்கவும் இல்லை. இதை எப்படி புரிந்து கொள்வது? அதாவது முதலில் மனிதனுக்கு இப்படி ஒன்று இருக்கக் கூடும் எனும் சிந்தனையே மனிதனுக்கு இருக்கவில்லை, ஆனாலும் அது இருந்தது. பின்னர் மனிதனின் ஆய்வுகளில் அது மெய்ப்பட்டது. இப்போது அந்த ஒலியலைகளை கடவுளுக்கு பொருத்திப் பார்ப்போம். முற்காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லை. பின்னர் அப்படி ஒன்று இருக்கக்கூடும் எனும் கற்பனை ஏற்பட்டது. இனி எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு அறிவியல் ஆய்வில் கடவுளின் இருப்பு மெய்ப்பிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? இதை எந்த ஆத்திகராவது மதவாதிகளாவது ஒப்புவார்களா? கடவுள் ஆய்வுகளில் அகப்படுவாரா என்பதைவிட அவ்வாறு அகப்படுவதை கடவுளாக ஒப்புவர்களா என்பதே சரியான கேள்வியாக இருக்கும்.

நான் அடிக்கடி இப்படிக் கேட்பதுண்டு. கடவுளின் இருப்பு என்பது நம்பிக்கையா? உறுதியானதா? நம்பிக்கையானது என்றால் அதில் கேள்வி கேட்பதற்கு ஒன்றுமில்லை. உறுதியானது என்றால் சான்றாதாரங்களைக் காட்டுங்கள். ஆதாரம் ஒன்றுமில்லை ஆனால் உறுதியானது என்றால் அது போங்காட்டம். ஆமாப்பா நம்பிக்கைதான் என்று தெளிவுபடுத்திவிடுவதில் ஆத்திகவாதிகளுக்கு என்ன சிக்கல்? அப்படிச் செய்தால் மதவாதமே அடிபட்டுப்போகும். அதனால் தான் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள், உண்மையை ஒருபோதும் பேச மாட்டார்கள்.

ஆன்மீகவாதிகள் எப்போதும் கடவுளை பேரண்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே காட்டுவார்கள். ஆனால் கடவுள் பேரண்டத்திற்கு அப்பாற்பட்டு, மனித அறிவுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறாரா? இல்லை. பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா? அல்லது இப்பூமியைத் தாண்டி பேரண்டத்தின் வேறெந்த மூலையிலாவது மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று கூற முடியுமா? ஆக பேரண்டத்தில் வேறெங்குமே வாழாத, பூமியில் தோன்றி வாழ்ந்த பல்கோடி உயிரினங்களில் வெகு அண்மையில் தோன்றிய மனித மனங்களில் மட்டும் உயிர் வாழ்வதாக இவர்கள் கூறும் கற்பனைக் கடவுளுக்கு ஆதாரம் கேட்டால் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள் என்றால் அதன் பொருள் வெறும் சப்பைக்கட்டு என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா?

வேறொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். ரிக்டர் அளவுகோலால் அளந்து சாம்பாருக்கு கத்திரிக்காய் நிறுத்து வாங்க முடியாது எனும் போது மனித அறிவால் கடவுளை எடை போடக் கூடுமோ! \\\மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே/// இதுவரை மனிதன் அறிவியலால் சோதனை செய்ய முடியாதவற்றை இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறான், அல்லது யூக நிலையில் வைத்திருக்கிறான். இதுதான் மனிதன் கடந்து வந்த வரலாறு. ஆனால் அந்த வரலாறுக்கு முரணாக அறிவியலால் சோதித்தறிய முடியாத ஒன்றை யூகமாக அல்லாமல் உறுதியாக ஏற்க வேண்டும் என்று எந்த அடிப்படையில்  கூறுவது? அப்படிக் கூறுவதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா? கற்பனையான கடவுள் நம்பிக்கையை உறுதியாக ஏற்பதற்கு அறிவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வழியில்லை.

அறிவியல் ரீதியாக கடவுள் இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஆம். ஓர் எளிய கேள்வியே இதற்குப் போதுமானது. எப்போதும் நிலைத்து நின்று இயங்கிக் கொண்டே இருக்கும் பொருள் என்று எதுவும் இருக்க முடியாது, நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை என அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது. வரலாற்று ரீதியாக கடவுள் இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஆம். தொல் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த முறை பற்றி அறிவதற்குறிய குறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன. என்ன உண்டார்கள் எப்படி உண்டார்கள் என்பது தொடங்கி எப்படி வாழ்ந்தார்கள் என்பது வரை படிமங்களும் கல்லோவியங்களும் கிடைத்திருக்கின்றன. அவை எவற்றிலும் கடவுள் எனும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை அவர்களுக்கு இருந்தது என்பதை விளக்குவது போல் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பலவிதமான சடங்குகளின் சாட்சிகள் அப்படி ஒரு சிந்தனை அவர்களுக்குள் இல்லை என்றும், அந்த வழிபாடுகள் இயற்கைக்கு அவர்கள் பயந்து வழிபட்டதையும் உணர்த்துகின்றன.

வரலாறும் அறிவியலும் இப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? மதவாதிகள் காட்டும் உதாரணங்களின் அடிப்படையிலா? அறிவியல் ஆய்வுகளோ, வரலாற்று படிமங்களோ வேண்டாம். சமூக ரீதியிலாவது கடவுளின் இருப்பை உணர முடியுமா? இதோ, சில்லரை வர்த்தகத்தில் 51 நூற்றுமேனிக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது அரசு. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படப் போவது உறுதி. எங்கே அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றுகூடி கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். தனியார்மயம், தாராளமயத்திலிருந்து அரசை பின்வாங்கச் செய்துவிட முடியுமா? பின் எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமானதில்லையே. இன்னொன்று தெரியுமா திரு குலாம் அவர்களே! உங்களின் கடவுள் வெறு நம்பிக்கையாய் இருந்தால் கூட, அது மூடநம்பிக்கை இல்லை என்பதற்கும் நீங்கள் நிரூபணங்கள் காட்டியாக வேண்டும்.

கடவுள் ஒரு மெகா தவறான புரிதல் எழுதிய நண்பர் குலாமுக்குக் கூட கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதல்கள் இருக்கின்றன. அதை அவர் திருத்திக் கொள்ள முன்வந்தால் தேடலுக்கான வழி விரைவிலேயே திறக்கும்.

மீண்டும் சந்திப்போம்

 

புரிதலை மறுக்கும் புதிர்கள்

21 செப்

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 2

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக் கின் பதிவு: புரியாதப் புதிர்கள்..

 

பரிணாமக் கோட்பாடு. மனிதன் எப்படி தோன்றினான் வளர்ந்தான் எனும் சிந்தனை எப்போதும் மனிதனுக்கு இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதற்கு அறிவியல் அடிப்படையில் முதலில் விளக்கமளிக்க முயன்றவர் டார்வின். இந்த ஆய்வுகளை டார்வின் தான் முதலில் தொடங்கினார் என்று கூறமுடியாவிட்டாலும் – டார்வினின் சம காலத்தில் லாவொஷியர் போன்ற பலர் இந்த ஆய்வை செய்து வந்தனர் – டார்வினே இந்தக் கோட்பாட்டை பருண்மையாக உருவாக்கியவர். மட்டுமல்லாது தொடர்ந்து வந்த பலராலும் இக் கோட்பாடு செழுமைப்படுத்தப்பட்டு வந்தது, வருகிறது. மனித வாழ்வை புரட்டிப் போட்ட வெகுசில அறிவியல் கோட்பாடுகளில் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பான இடம் உண்டு. அதே நேரம் முன்வைக்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசில அறிவியல் கோட்பாடுகளிலும் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பிடம் உண்டு.

 

பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்ப்பவர்களில் முதன்மையானவர்கள் மதவாதிகள். ஏனென்றால் கடவுளே மனிதனைப் படைத்தான் எனும் சிந்தனையின் அடி வேரிலேயே பரிணாமம் வெடி வைத்து விட்டது. ஆனாலும் ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதைப் போல் இந்தியாவின் பார்ப்பனிய (இந்து)மதம் அத்தனை மூர்க்கமாக எதிர்ப்பதில்லை. காரணம் அதன் அவதாரப் புரட்டுகளுக்கு ஓர் அறிவியல் பொருளை தந்திருப்பதாக அவர்கள் நம்புவது தான். மற்றொரு வகையில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பவர்கள் யாருமில்லை என்று கூறிவிடலாம். எளிதாக இப்படிக் கூற பலரும் ஒப்புவதில்லை என்பதால் அதை இரண்டாகப் பிரிக்கலாம். 1. பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் 2. கோட்ப்பாட்டு ரீதியாக ஏற்பவர்கள். கோட்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் குறிப்பாக மருத்துவர்கள் பொதுவாக மக்கள் அனைவரும். ஏனென்றால் அல்லோபதி மருத்துவம் முழுமையாக பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆய்கிறது, தீர்க்கிறது, மருத்துவம் செய்கிறது. மற்றப்படி பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அதன் பொருள் பயன்பாட்டு ரீதியாக ஏற்று கோட்பாட்டு ரீதியில் மறுக்கிறார்கள் என்பதே.

 

இது ஒருபுறமிருக்கட்டும் கடவுளை மறுப்பது என்பதற்கு பரிணாமக் கோட்பாடு மட்டுமே அடிப்படையா என்றால் இல்லை என்பதே பதில். இயங்கியல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையிலேயே கடவுள் மறுப்பு இயங்கி வருகிறது, பரிணாமம் அதற்கு உற்ற துணைவன். இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதன் கருப்பொருள் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே. கடவுளை ஆதாரப்படுத்த விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது இயங்கியல் பொருள்முதல் வாதத்தை மறுப்பதுதான். யாரும் அதைச் செய்வதில்லை என்பதோடு மட்டுமில்லாமல் அதை புரிந்து கொள்வதற்கும் முயல்வதில்லை. எனவே தான் பரிணாமக் கோட்பாடு எளிய இலக்காகி விட்டது. இதற்கு ‘எதிர்க்குரல்’ ஆஷிக் பாய் மட்டும் விலக்காகி விட முடியுமா என்ன?

 

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இதைத் தீர்ப்பதற்கு பரிணாமக் கோட்பாட்டை துணைக்கழைப்பது தேவையில்லாதது. ஏனென்றால் பரிணாமக் கோட்பாட்டின் பணி பூமியில் உயிரினம் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிப்பது மட்டுமே. அறிவியலின் அடிப்படையில் கடவுள் இருக்கக் கூடுமா என்று கேட்டால் அது எளிமையான பதில் தான். எப்போதும் நிலைத்து நின்று இயங்கக் கூடிய ஆற்றல் ஒன்று உண்டா என்றால் அறிவியலின் பதில் இல்லை என்பதே. எனவே கடவுள் என்று ஒன்று இல்லை.

 

பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கிறதா? இது தான் நண்பர் ஆஷிக் முன்வைத்திருக்கும் கேள்விகளுள் முதன்மையானது. இதை விரிவாகப் பார்க்கலாம். முதலில் பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்பட்டதா? இல்லை. கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்படாத ஒரு கோட்பாட்டை, அது கடவுளை மறுக்கவில்லை எனவே கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும். அதேநேரம் அந்தக் கோட்பாட்டை அலசினால் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு நம்மால் வரமுடியும். உலகில் தற்போது நிலவும் அனைத்து மத, கடவுட் கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டால்; உலகில் மனிதர்களின் தோற்றம் குறித்து அவை கூறுவது கடவுள் எந்த முன்மாதிரியும் இல்லாமல் மனிதனைப் படைத்தார் என்பது தான். ஒவ்வொரு மதமும் தனித்தனியே இதன் விகிதங்களில் மாறுபட்டாலும் சாராம்சத்தில் கடவுள் படைத்தார் என்பதில் அனைத்து மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும் ஒன்றுகின்றன. ஆக, உலகிலிருக்கும் எல்லா மதங்களும் அதாவது எல்லா கடவுள் நம்பிக்கைகளும் ஏற்கும் ஒன்றை பரிணாமக் கோட்பாடு மறுக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது, கடவுளை பரிணாமக் கோட்பாடு மறுக்கவில்லை என்றா? தம் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளைத் திரிப்பது என்பது இதுதான்.

 

நண்பர் ஆஷிக் தன்னுடைய விருப்பங்களுக்காக ரிச்சர்ட் டாக்கின்சையோ, டாக் ஆர்ஜின்ஸ் தளத்தையோ துணைக்கழைப்பது உள்நோக்கம் கொண்டது. தன்னுடைய நிலையை விளக்கி அதன் தெளிதலுக்கான எடுத்துக்காட்டாய் டாக்கின்சின் கூற்றையோ, இணையதளக் கட்டுரைகளையோ காட்டினால் அது தவறல்ல, ஆனால் தன்னுடையை நோக்கம் குறித்த எந்த விளக்கங்களும் இல்லாமல் பரிணாமம் குறித்து அதன் ஆதரவாளர் ஒருவர் கூறிய கூற்றை எடுத்துக் கொண்டு அலசி ஒட்டுமொத்தமாக பரிணாமக் கோட்பாடே தவறு என்பது போலும் படைப்புவாதமே சரி என்பது போலும் தோற்றத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்? அதாவது பரிணாமமா படைப்புவாதமா என்று கட்டுரையை நகர்த்துவதும்; பரிணாமக் கோட்பாட்டிலிருக்கும் நுண்ணிய பேதங்களை நிறம் பிரித்துக் காட்டி, படைப்புவாதம் குறித்து மூச்சே விடாமல் படைப்புவாதமே சரி என தோற்றம் காட்டுவதும் முரண்பாடானவை. இந்த முரண்பாட்டை தன்னுடைய விருப்ப நோக்கம் (கடவுள் நம்பிக்கை) கொண்டு பூசி மெழுகியிருக்கிறார் நண்பர் ஆஷிக்.

 

இந்த இடத்தில் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் மேலும் சில விளக்கங்கள் அளிப்பது சரியானதாகவும், எதிர்காலப் பயன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றையும் கடவுள் பின்னாலிருந்து இயக்குகிறார் என்பது நம்பிக்கையாளர்கள் நிலைப்பாடு, எல்லாம் தானாகவே வந்தது என்பது மறுப்பாளர்களின் நிலைப்பாடாக நம்பிக்கையாளர்கள் முன்வைப்பது. ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், எல்லாம் தானே வந்தது என்று கூறுபவர்கள் அல்ல மறுப்பாளர்கள். காரணகாரியங்களுக்கு ஆட்பட்டு ஒன்றன் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கிறது, குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அந்த தொடர்ச்சியை இன்னும் மனிதன் அறியவில்லை, அறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் மறுப்பாளர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கையாளர்களோ எதுவுமே இல்லாமலிருந்து கடவுள் நினைத்ததும் எல்லாம் வந்துவிட்டது என்கிறார்கள். ஆக தானாகவே எல்லாம் வந்தது என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்கள் தானேயன்றி மறுப்பாளர்கள் அல்ல.

 

டாக் ஆர்கின் தளத்தை மறுப்பாளர்களின் ஆதர்ச தளமாக, அடையாளமாக கருதிக் கொண்டே நண்பர் ஆஷிக் தன் அனைத்து ஆக்கங்களையும் முன்வைக்கிறார். அவ்வாறல்ல, அந்தத்தளம் மறுப்பாளர்களால் நடத்தப்படுகிறதா இல்லை நம்பிக்கையாளர்களால் நடத்தப்படுகிறதா எனும் கேள்விகளுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் அதன் கட்டுரைகளுக்குள் புகுந்து செய்யப்படும் வார்த்தை விளையாடுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்வதைவிட அவருடைய கேள்விகளாக வெளிப்படையாக முன்வைக்கலாம்.

 

பரிணாமம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார் நண்பர் ஆஷிக், அதேநேரம் பரிணாமக் கோட்பாடு கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ தீர்க்காது என்றும் கூறிவருகிறார். என்றால் பரிணாமத்தின் மீது அவர் திணிக்கும் சுமைகளை நீக்கிவிட்டு அதாவது கடவுளை நீக்கிவிட்டு அந்தக் கோட்பாடு குறித்து ஆஷிக் என்ன கருதுகிறார் என்பதை நண்பர் வெளிப்படுத்த முன்வர வேண்டும். ஏனென்றால் பரிணாமத்தை ஏற்கலாம் அதை கடவுள் பின்னிருந்து இயக்குகிறார் எனும் திருத்தலுடன் என்பது போன்று அவருடைய சில கட்டுரைகள் பொருள் தருகின்றன.

 

இனி நண்பர் ஆஷிக் எழுப்பும் கேள்விகளுக்கு வருவோம், \\\ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது/// அல்ல. நிச்சயமாக முடியும். ஆதியும் அந்தமும் இல்லாத பொருள் என்று எதையாவது அறிவியல் ஏற்குமா? பதில் கூறிப் பார்க்கலாம். மாறாக மனிதன் அத்தனை உயரமில்லை, அறிவியலுக்குள் அடங்காது, இத்யாதி .. இத்யாதி .. .. என நழுவாமல் பரீட்சார்த்த ரீதியாக இதற்கான பதிலை தேடிப் பார்க்கலாம்.

 

கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்பது வெறுமனே உளவியல் ரீதியான கேள்வி மட்டுமல்ல. சமூக ரீதியாக கடவுளை மறுக்கும் கேள்வி. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? ஏன் அனைவரும் அனைத்து வளங்களும் வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று இருக்க முடியாது எனும் கேள்வி சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்றால்; கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா எனும் கேள்வி ஒரு தவறான பாதையை விலக்க உதவும்.

 

முந்திய பதிவு

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல்

அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!

11 செப்

 

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டார்களே அன்று. இன்று இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஆராய்ந்து அணுமின்நிலையம் செயல்படலாம் என்று தீர்ப்பினை அளித்த பிறகு அணுமின்நிலையத்தை முடக்குவது பொருத்தமாகாது என்றும் ‘சட்டத்தின்’ ஆட்சியை நினைவு படுத்துகிறார் ஜெயா. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று இதே உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும் நடுராத்திரியில் உச்சநீதிமன்ற நீதிபதியை எழுப்பி தடை வாங்க முயன்றவர்தான் இந்த ஜெயலலிதா. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தையே வாய்தா மன்றமாக ஆக்கி வாய்தா ராணி என்று பட்டமும் பெற்றவர் நீதிமன்றத்தை எதிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கும் சாத்தான் வேதம் ஓதுவதற்கும் என்ன வேறுபாடு?

போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும்  மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

“தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்” என்கிறார் ஜெயலலிதா.  இடிந்தகரையிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் அமைதி வழியில் முற்றுகை நடத்துவதாகத்தான் அறிவித்தார்கள், செய்தார்கள். அவர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்பதை இப்போது அல்ல கடந்த ஓராண்டுகளாகவே பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது வன்முறையை யார் கட்டவிழ்த்தார்கள்?

அணிதிரண்டு வந்த மக்களிடம் பேசிய போலீசு அதிகாரிகள் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது, அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்றுதான் மிரட்டியிருக்கிறார்கள். இது தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது. போராடவே கூடாது என்று தடை போட்டு விட்டு பிறகு வன்முறை என்று திரிக்க வேண்டிய அவசியம் என்ன?

அணுமின்நிலையம் வந்தால் அப்பகுதி மக்கள் அனைவரின் வாழ்க்கையும் மரண அபாயத்தில் தள்ளப்படும். அந்த அபாயத்தை எதிர்த்து போராடுவதை ஒடுக்கி அணுமின்நிலையத்தை காப்பாற்றுகிறோம் என்றால் என்ன பொருள்? அணுமின்நிலையம் வந்தாலும் மரணம், அதை எதிர்த்து போராடினாலும் மரணம் என்று மிரட்டுவது யார்?

இத்தனை ஆயிரம் மக்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசு நடத்திய திட்டமிட்ட தாக்குதல்தான் அந்த தடியடி. இதைத்தான் நாசுக்கான நயவஞ்சக மொழியில் பாசிச ஜெயலலிதா நியாயப்படுத்துகிறார். இதற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட்டு அணுமின்நிலையத்தை சேமமாக நடத்தலாமே?

 

முதல் பதிவு: வினவு

புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து!

6 செப்

புதிய-தலைமுறை

 

புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன?

புதிய தலைமுறை டி.வி.யை மட்டும் பார்க்கும் பலருக்கு இதன் உரிமையாளர் யார் என்று தெரிவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் முதலாளி பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்தான் புதிய தலைமுறையின் உரிமையாளர். பச்சைமுத்துவின் மகன் சத்தியநாராயாணா இந்த டி.வி. நிர்வாகத்தை கவனித்துக்கொள்கிறார். காட்டாங்கொளத்தூர் அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் எஸ்.ஆர்.எம். கேம்பஸ், ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை போல பிரமாண்டமாக மிரட்டுகிறது. 1969-ல் மேற்கு மாம்பலத்தில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேள் என்ற பெயரில் துவங்கப்பட்ட ஒரு பிரைமரி ஸ்கூல் இன்று தமிழகத்தின் மாபெரும் கல்வி சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது எப்படி? இதற்கான பதிலில்தான் பச்சைமுத்து பாரிவேந்தரான கதையும் ஒளிந்திருக்கிறது.

மொத்தம் 43 வருடங்கள்… பச்சைமுத்து குடும்பம் கொள்ளையடித்திருப்பதோ பல லட்சம் கோடி ரூபாய். இரண்டு தலைமுறைகளாக தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து பெற்றோர் சம்பாதித்துக் கொட்டிய பணம்தான் காட்டாங்கொளத்தூரில் பிரமாண்ட கட்டடங்களாக எழும்பி நிற்கின்றன. கொஞ்சநஞ்சமில்லை… ஒரு பொறியியல் சீட்டுக்கு 20 லட்சம், மெடிக்கல் சீட்டுக்கு 80 லட்சம், எம்.பி.ஏ. சீட்டுக்கு 15 லட்சம்… என நினைத்துப் பார்க்க முடியாத கல்விக் கொள்ளை. அண்மை வருடங்களாக சென்னையை தாண்டி தமிழகம் எங்கும், தமிழகத்தை தாண்டி இந்தியாவெங்கும் தனது வியாபாரத்தை விரித்திருக்கிறது எஸ்.ஆர்.எம். குழுமம். சில மாதங்களுக்கு முன்பு எஸ்.ஆர்.எம். உரிமையாளர் பச்சைமுத்து தங்களது வட இந்திய கல்வி முதலீடுகள் பற்றி ‘தி ஹிந்து’வில் தனி பேட்டியே கொடுத்திருந்தார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் எத்தனை கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? கொஞ்சம் மூச்சுவாங்கிக்கொண்டு படியுங்கள்…

  1. Nightingale Matriculation Higher Secondary School,
  2. Valliammai Polytechnic Institute,
  3. SRM Engineering College,
  4. SRM College of Nursing and SRM College of Pharmacy,
  5. SRM School of Nursing and SRM College of Physiotherapy,
  6. SRM Institute of Hotel Management,
  7. SRM Arts & Science,
  8. SRM Polytechnic Institute,
  9. Easwari Engineering College,
  10. SRM College of Occupational Therapy,
  11. SRM Institute of Management & Technology,
  12. Valliammai Engineering College,
  13. SRM Institute of Science and Technology,
  14. SRM Dental College,
  15. SRM Medical College Hospital and Research Centre,
  16. SRM Institute of Management and Technology, Modinagar, Delhi
  17. Chennai Medical College, Trichy
  18. Inter Disciplinary School of Indian System of Medicine,
  19. TRP Engineering College, Trichy,
  20. Faculty of Science and Humanities, Vadapalani,

இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். ஹோட்டல்கள், எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், இந்திய ஜனநாயக கட்சி என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. மீடியாவில் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி என்ற இரண்டு பத்திரிக்கைகளும், புதிய தலைமுறை என்ற செய்தி தொலைகாட்சியும் இயங்குகிறது. விரைவில் ‘யுவா’ என்ற இன்ஃபோடைன்மென்ட் சேனலும், வேந்தன் என்ற பொழுதுபோக்கு சேனலும், புதிய தலைமுறை ஆங்கில செய்தி சேனலும் வரப்போகிறது. இதுபோக, ‘வேந்தன் மூவீஸ்’ என்ற பெயரில் சினிமாக்களை வாங்கி விற்கும் வேலையும் நடக்கிறது.

****

ந்த பிரமாண்ட வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதிதான் புதிய தலைமுறை டி.வி. இதன் வெற்றியை கொண்டாடும் யாரும் எஸ்.ஆர்.எம். எப்படி இந்த பணத்தை சம்பாதித்தது என்பதை பற்றி பேச மறுக்கின்றனர். ஏனெனில் ஆதாயம் அடையும் சந்தர்ப்பங்களை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. புதிய தலைமுறையின் ஓராண்டு வெற்றிக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் மனுஷ்யபுத்திரன், ‘எப்போது எதைப்பற்றி பேசக் கூப்பிடுவார்கள் என்று தெரியாது என்பதால் தினசரி எல்லா பேப்பர்களையும் படிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் இதில் உள்ள ஒரே கஷ்டம்”’ என்று செல்லமாக ஒரு கம்பெனி ஆர்ட்டிஸ்டுக்குரிய வகையில் அலுத்துக் கொள்கிறார். எல்லா நேரமும் வாடிக்கையாளரை எதிர்பார்த்தால் எல்லா நேரமும் மேக்&அப் செய்துகொண்டுதானே ஆக வேண்டும்? மனுஷ்யபுத்திரன் தனது பிராண்ட் இமேஜ் அதிகரிப்பதற்கு பு.தவை நாடுகிறார். பு.தவுக்கு கருத்து கந்தசாமிகள் நிறைய தேவை. பரஸ்பர ஆதாயம்.

இவராவது பரவாயில்லை. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஞாநி அவரது ‘தீம்தரிகிட’’ காலத்தில் இருந்து ‘நடுநிலை’’ பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அதாவது “நடுநிலை என்று ஒன்று கிடையாது. ஒன்று நன்மையின் பக்கம் இருக்க வேண்டும். அல்லது தீமையின் பக்கம் இருக்க வேண்டும்’” என்ற ஞாநியின் கருத்துதான் நமது கருத்தும். ஒரு குறிப்பிட்ட பிரச்னையில் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு எதிராக இருப்பதாகத்தான் கருத முடியும். அதைவிடுத்து, சாம்பல் நிற கட்டங்களை’ தேட முடியாது. இப்போது புதிய தலைமுறை தொலைகாட்சி, “சிலர் இந்தப் பக்கம், சிலர் அந்தப் பக்கம், நாங்கள் நடு சென்டரில்”’ என்கிறது. தனது கருத்துப்படி ஞாநி இதை எதிர்த்திருக்க வேண்டும். மாறாக, பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவிக்கிறார். புதியதலைமுறையின் நடுநிலை’ அவருக்கு தொந்தரவாக தெரியவில்லை.

எந்தப்பிரச்சினையிலும் யாரையும் புதிய தலைமுறை எதிர்ப்பதில்லை. அதிகபட்சம் இவர்கள் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள், சில்லறை அதிகாரிகளைத்தான் எதிர்க்கிறார்கள். அதற்கு மேலே கலெக்டர், மாவட்ட செயலாளர், ஜெயலலிதா என்றெல்லாம் மறந்தும் போக மாட்டார்கள். இந்த ‘நடுநிலை’ அப்ரோச் ஞாநிக்கு ரொம்ப பிடித்திருக்கிறது போலும். மேலும் 49ஓ-வுக்கு ஓட்டுப்போடச் சொல்லி சில வருடங்களாக பிரசாரம் செய்து வருகிறார். ‘ஓட்டுக்கட்சிகள் சீரழிந்துவிட்டன. ஆகவே அவர்களுக்க் ஓட்டுப்போட வேண்டாம். அதற்காக ஜனநாயக கடமையை ஆற்றாமல் இருக்க முடியாது. என்ன செய்யலாம்? வாருங்கள் நடுவில் நின்று ஓ போடுவோம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். கிழிந்து தொங்கும் போலி ஜனநாயகத்தின் டவுசரை ஓ போட்டு ஒட்ட வைக்க முடியும் என்பது ஞாநியின் நம்பிக்கை. மூடநம்பிக்கை பாமரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சர்வமும் உணர்ந்த ஞானிகளுக்கும் கூட இருக்கலாம்.

புதிய தலைமுறையை கொண்டாடுபவர்களும், அண்ணா ஹஸாரேவின் பக்தர்களும் வேறு வேறு அல்ல. இருவரும் ஒன்றே. பாம்பும் சாக வேண்டும். தடியும் உடையக்கூடாது வகையறா. போராட வேண்டும், 24 மணி நேரமும் சமூகத்துக்காகவே தன்னை அர்ப்பணிக்க வேண்டும், ஆனால் சின்ன சேதாரம் கூட வரக்கூடாது.  மிஸ்டு காலில் போராடுவது, மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவது, ஸ்டேட்டஸ் போட்டு போராடுவது, எஸ்.எம்.எஸ்ஸிலேயே போராடுவது என்ற இந்த தொழில்நுட்பத்தில் அண்ணா ஹசாரே குழுவினர் கை தேர்ந்தவர்கள். புதிய தலைமுறை தொலைகாட்சியோ… மக்களுக்கு இந்த சிரமத்தை கூட தரவில்லை. ‘எங்கள் டி.வி.யை பாருங்கள், நீங்களும் போராளிதான்’ என்கிறது. உலகில் ஏதேனும் ஒரு மூலையில் புதிய தலைமுறை டி.வி. பார்த்தால் நீயும், நானும் போராளியே. இதுதான் நம் நடுத்தர வர்க்கத்துக்கு தேவையான நாட்டுமருந்து.

அய்யப்பன் கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லா தவறையும் செய்துவிட்டு கடைசியில் காலணா குத்தக்காசு கட்டி புனிதமடைவதைப் போல… தங்களது சமூக பொறுப்பற்ற வாழ்க்கை முறை உருவாக்கும் குற்றவுணர்ச்சியில் இருந்து எளிமையான வழியில் புனிதமடையும் வாய்ப்புகளை நடுத்தர வர்க்கம் தேடிக்கொண்டே இருக்கிறது. அதில் ஹஸாரேவும், புதிய தலைமுறையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அண்ணா ஹஸாரேவின் உண்ணாவிரத்தை நேரலை செய்து தனது முதல் நாள் ஒளிபரப்பை புதிய தலைமுறை துவங்கியது எதேச்சையான ஒற்றுமைதான் எனினும் பொருத்தமானதே.

புதிய தலைமுறை தொலைகாட்சி, கடந்த ஒரு வருடத்தில் வியாபார ரீதியிலான வெற்றிகளை பெற்றிருக்கலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு. ஏனெனில் வட இந்தியாவில் மிடிள்கிளாஸ் மக்களின் கோபம், ஆவேசம், கண்ணீர், மகிழ்ச்சி போன்றவற்றை இறக்கி வைக்க ஏராளமான தொலைகாட்சிகள் உண்டு. தமிழ்நாட்டில் அப்படி ஒன்று இல்லை. புதிய தலைமுறை, அந்த வெற்றிடத்தின் சிறு பகுதியை நிரப்பியிருக்கிறது. ஆனால் இது கொண்டாடத்தக்கதல்ல. ஒன்றுமில்லாததை ஊதி பெரிதாக்கும் செய்தி தொலைகாட்சிகளின் ஆபத்தை புதிய தலைமுறை முன்னறிவிக்கிறது.

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சகல மக்கள் பிரச்னைக்கும் உண்மையின் பக்கமிருந்து வினை புரிவதாக புதிய தலைமுறை காட்டிக்கொள்கிறது. தனது பார்வையாளர்களும் அவ்வாறே நம்ப வேண்டுமென விரும்புகிறது. அதனால்தான் கலாநிதிமாறனுக்கும், இவர்களுக்குமான தொழில்போட்டியில் புதிய தலைமுறை தொலைகாட்சி முடக்கப்படுவதை மக்கள் பிரச்னையை போல முன்வைத்து நீதி கேட்கிறார்கள். இந்த நீதியின் வரம்பு என்ன என்பதும் நமக்குத் தெரியும்.

பேருந்து ஓட்டையில் சிக்கி மாணவி ஸ்ருதி இறந்துபோன செய்தியை திரும்பத் திரும்ப பல்வேறு கோணங்களில் அலசினார்கள். அதன் தன்மை ஒரு சிறுமியின் மரணத்தால் விளைந்த மனிதாபிமானத்தை அறுவடை செய்வதாய் இருந்ததே ஒழிய, தனியார் கல்வியின் கோர முகம் பற்றி பேசுவதாய் இல்லை. அப்படிப் பேசினால் எஸ்.ஆர்.எம். கல்வி கொள்ளை பற்றியே முதலில் பேச வேண்டிவரும். சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோன செய்தியை மற்ற மீடியாக்களை போல அடக்க ஒடுக்கமாக அடக்கித்தான் வாசித்தது புதிய தலைமுறை.

பதவியேற்ற சில மாதங்கள் மௌனமாக இருந்த ஜெயலலிதா, இப்போது சகட்டுமேனிக்கு ஊடகங்கள் மீது வழக்குகளை தொடுக்கிறார். ஓர் அரசியல் தலைவர் அறிக்கை விடுவதை பத்திரிகையில் வெளியிட்டால் அதற்கும் வழக்கு. ஊடகங்கள் மீதான இந்த அநீதியான தாக்குதல் குறித்து மற்ற ஊடகங்கள் பேசாதது போலவே புதிய தலைமுறையும் பேசவில்லை.

ல தமிழினவாதிகள், இலங்கை பிரச்னை, மூவர் தூக்கு போன்றவற்றில் புதிய தலைமுறை தமிழர் நலன் சார்ந்து இயங்குவதாக சொல்கின்றனர். அப்படி குறிப்பாக சொல்லாதவர்கள் கூட, ‘அவங்க நல்லா பண்றாங்க, பரவாயில்லை’’ என்கிறார்கள். சமீபத்தில் எஸ்.ஆர்.எம். குழுமம் இலங்கையில் ‘எஸ்.ஆர்.எம். லங்கா’’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட செய்தி ஆதாரத்துடன் அம்பலமானது. இப்போதுவரை தமிழினவாதிகள் இதைப்பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இலங்கை போனால் ஆவேசத்துடன் எதிர்ப்பவர்கள் கல்வி வியாபாரம் செய்யும் பச்சைமுத்துவை எதிர்க்க முன்வரவில்லை. ஏனெனில் அப்படிப் பேசும் தமிழினவாதிகளில் பலருக்கு புதிய தலைமுறையில் முகம் காட்டும் ஆசை இருக்கிறது. முகம் காட்டிய நன்றிவுணர்ச்சி இருக்கிறது.

சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்துக்கு மாற்றாக எஸ்.ஆர்.எம்மை முன் வைக்க முடியாது. ‘அஞ்சு வருஷம் அய்யா கொள்ளையடிச்சார். இந்த அஞ்சு வருஷம் அம்மா கொள்ளையடிக்கட்டும்’’ என நாட்டை சுரண்டும் உரிமையை இவருக்கும், அவருக்கும் மடைமாற்றிவிடுவதை போல… ஊடகங்களை ஆக்கிரமிக்கும் உரிமையை கலாநிதிமாறனுக்கும், பச்சைமுத்துவுக்கும் தாரைவார்க்க முடியாது. கலாநிதிமாறன் எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டிய நபரோ அதே முக்கியத்துவத்துடன் எஸ்.ஆர்.எம். குழுமமும் எதிர்க்கப்பட வேண்டும். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் நல்ல கொள்ளியல்ல!

 

முதல் பதிவு: வினவு

அறிவார்ந்த வடிவமைப்பு என்றால் என்ன? பகுதி 5

4 செப்

 

நண்பர்களே அறிவார்ந்த வடிவமைப்பின் முக்கியமான கொள்கையாக்கமான எளிமைப் படுத்தப்பட முடியாத சிக்கலான‌ வடிவமைப்பு குறித்து இப்பதிவில் அறிவோம்.இது திரு மைக்கேல் பெஹே 2004 ல் வெளியிட்ட ஒரு கட்டுரையின் தமிழாக்கமே. இதனை கல்விக்காக யாரும் பயன் படுத்தலாம் என்று அனுமதி அளித்த அவருக்கு நம் நன்றிகள்.[Copyright © 2004, IDEA Center. All Rights Reserved. Permission Granted to Reproduce for Non-Profit Educational Purposes.www.ideacenter.org]

 
 

எளிமைப் படுத்தப்பட முடியாத சிக்கலான‌ வடிவமைப்பு: டார்வினின் கொள்கை விள்க்கத்திற்கு உயிர்வேதியியல் சிக்கலான அமைப்புகளின் சவால்

“எந்த ஒரு சிக்கலான உடல் உறுப்பும் எண்ணற்ற‌, தொடர்ந்த சிறு மாற்றங்களினால் எளிய அமைப்பில் இருந்து உருவாகி இருக்க‌ முடியாது என்று நிரூபிக்கப்ப்ட்டால் பரிணாம கொள்கை முற்று முழுதும் தவறாகி விடும்”

சார்லஸ் டார்வின் “உயிரினங்களின் தோற்றம்” புத்தக்த்தில்

 
“If it could be demonstrated that any complex organ existed which could not possibly have been formed by numerous, successive, slight modifications, my theory would absolutely break down.”
–Charles Darwin, Origin of Species
 
இந்த கூற்று மூலம் சார்லஸ் டார்வின் தன் கொள்கை எப்போது, எப்படி தவறாக முடியும் என்பதன் விள்க்கம் தந்திருக்கிறார். இதில் ஒரு சின்ன விடயம் என்னவெனில் பரிணாமம் என்பது தொடர்ந்த சிறு மாற்றங்கள் சிக்க்லான அமைப்புகளை முந்தைய (எளிய or சிக்க்லான) அமைப்புகளில் இருந்து படிப் படியாக  மாற்றி உருவாக்குமே தவிர குறைவான கால கட்டத்தில் எந்த சிக்கலான் அமைப்பும் திடீரென்று  உருவாக முடியாது. இந்த டார்வினின் கூற்றை நிரூபிக்கும் ஆதாரத்தை அளிக்க முடியும் என மைக்கேல் பெஹே [biochemical researcher and professor at Lehigh University in Pennsylvania.]  கூறுகிறார். இதன் ஆதாரமாக  எளிமைப் படுத்த முடியாத சிக்கலான வடிவமைப்பு[“irreducible complexity.”] என்னும் கொள்கையாக்கத்தை முன் வைக்கிறார்.
 
இதனை எளிமையாக வ்ரையறுப்பது என்றால் பல இன்றியமையாத பாகங்களை கொண்ட ஒரு ஒரு இயந்திரத்தை எடுத்துக் கொள்வோம்.எந்த ஒரு பகுதி இல்லா விட்டாலும் இயந்திரம் அதனுடைய பணியை செய்யாது. எளிமைப் படுத்த முடியாத சிக்கலான வடிவமைப்பில் [எ.சி.வ] அதன் ஒவ்வொரு பகுதியும் அதனதன் இடத்தில்  பணி தொடங்கும் முன் இருந்து, அதன் தனிப்பட்ட&இணைந்த‌ செயலை செய்தால் மட்டுமே இயந்திரம் முழுமையாக இயங்க முடியும்.
 
இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு பெஹே எலிப்பொறி மூலம் தருகிறார். கீழே படத்தில் காட்டப் பட்டுள்ள எலிப்பொறியில் 5 பாகங்கள் உள்ளன.
 
இந்த ஐந்து பகுதிகளாவன‌
 
  1. மர பலகை [the wooden platform]
  2. ஸ்பிரிங் [the spring],
  3.  சுத்தியல் [the hammer (the bar which crushes the mouse against the wooden base), ]
  4. தாங்கி பிடிக்கும் கம்பி [the holding bar]
  5. பிடிப்பான்[ a catch]
 
இந்த 5 பகுதிகளுமே எலிப்பொறி செயலாற்ற மிக தேவை.எந்த ஒரு பகுதி இல்லாவிடினும் எலிப்பொறி பணி செய்யாது.இதனை எ.சி.வ என்று கொள்ளலாம் இது எப்படி பரிணமிக்க முடியும்?.மரப்பலகை[அல்லது ஏதோ ஒரு பகுதி] மட்டும் இருந்து எலிகளை பிடித்து பிறகு ஸ்பிரிங்+,… அப்படியே அனைத்தும் வந்து சேர்ந்து முழு எலிப்பொறி ஆக் முடியுமா? . இப்படி முடியாது.அனைத்து பகுதிகளும் அதன‌தன் இடத்தில் இல்லாமல் பொறி செயல் புரியாது. இது நிச்சயம் படிப்படியாக‌ பரிணாம மாற்றத்தில் உருவாக முடியாது.
 
சரி இந்த எ.சி.வ கொள்கையாக்கம் உயிரின‌ங்களில், உயிர்வேதியியலில் எப்படி பயன்படுத்த முடியும்? இதனையும்  விளக்குகிறார் பெஹே.
 
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரியல் ஆய்வாளர்கள் செல்[உயிரணு] என்பதை எளிமையான அமைப்பு,செயலாக்கம் கொண்டதாகவே கருதினர்.ஆனால் அதி நுட்ப மிண்ணனு நுண்ணோக்கிகள் [electron microscopes ] கண்டுபிடிக்கப் பட்ட பின் செல்லின் உள் அமைப்பு,செயல்முறை பற்றிய பல விள்க்கங்களை அளிக்க முடிந்தது. அப்போதைய காலகட்டத்தில் செல் என்பது கண்டறிய முடியாத [பல] செயலாற்றும் அமைப்பு[black box] என்றே கருத இயலும். . அதாவது சில மூலக்கூறுகளின் தொகுப்பே செல்.
 
ஆனால் இப்போதைய‌ செல் ஆய்வில்   முன்னேற்றங்கள் பல சாதனைகள் நிகழ்ந்துள்ளன. மைக்கேல் டென்டன் தனது Evolution: A Theory in Crisis,1985 C.E புத்தக்த்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
 
“Although the tiniest bacterial cells are incredibly small, weighing less than 10^-12 grams, each is in effect a veritable microminiaturized factory containing thousands of exquisitely designed pieces of intricate molecular machinery, made up altogether of one hundred thousand million atoms, far more complicated than any machine built by man and absolutely without parallel in the non-living world”
 
“பாக்டீரிய செல்கள் மிக சிறிய‌ அளவாக இருந்தாலும், எடை 10^12 கிராம் மட்டுமே இருந்தாலும் அது ஒரு பல்லாயிரக்கணக்கான நுட்பமான  கணிணி மயமாகப்பட்ட இயந்திரங்கள் ஒன்றாக செய்லாற்றுவது போன்ற அமைப்பை உடையது. அவற்றில் சுமார் 100 பில்லியன் அணுக்கள் இணைந்தும் உள்ள‌தால் இது மனிதனால் கட்டமைக்கப் பட்ட எந்த ஒரு நுட்பமான் இயந்திரத்தை விட சிக்க்லான அமைப்பை உடையவை. இதற்கு ஈடு இணை இப்போதுள்ள எந்த‌ இயந்திர‌ங்களும் இல்லை”
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் செல்லின் அமைப்பு சிக்கலானது.மிக மிக… சிக்கலானது.
 
மைக்கேல் பெஹே எலிப்பொறியின் சிக்கலான கட்டமைப்பு போலவே செல்களிலும் இன்னும் அதிக சிக்கலில் உள்ளது என்கிறார். இவை இரண்டிலுமே உள்ள பகுதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இயங்கும்.ஆகவே முற்று முழுதும் இயங்கும் அல்லது  [ஒன்று குறைந்தாலும்] இயங்காது.
 
இப்படி ஒரு அமைப்பு டார்வினின் பரிணாம செயல் முறையில்[evolutionary mechanism] நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டார்வினின் செயல்முறையில் சிறு படிப்படியான மாற்றங்கள்தான் சிக்கலான அமைப்பை உருவாக்க முடியும்.இந்த இரு எடுத்துக் காட்டுகளிலும் இது நடை பெற முடியாது. ஒரு வேளை பரிணாம செயல்முறையில் பாதி உருவான சிக்கலான அமைப்பு இயற்கைத் தேர்வில் தோல்வியுறும். ஆகவே நிலைக்காது. மைக்கேல் பெஹேவிற்கு முன்னர் Michael J. Katz,      ம் Templets and the explanation of complex patterns (Cambridge: Cambridge University Press, 1986) புத்தகத்தில் சிக்கலான வடிவமைப்பை பற்றி கூறியுள்ளார்.
“In the natural world, there are many pattern-assembly systems for which there is no simple explanation. There are useful scientific explanations for these complex systems, but the final patterns that they produce are so heterogeneous that they cannot effectively be reduced to smaller or less intricate predecessor components. As I will argue … these patterns are, in a fundamental sense, irreducibly complex…”
 
” இயற்கை உலகில் பல் பொருள்களை தன‌னக்த்தே கொண்ட  ஒழுங்கு வடிவமைப்புகளின் உருவாக்கத்திற்கு எளிய விளக்கம் தர இயலாது.அறிவியல் சில விளக்கங்களை அளித்தாலும் இந்த பல் பொருள்கள் இணைந்த அமைப்பு ஒரே குறிப்பிட்ட பணியாற்றுவதால்,  இதனை [சில] பகுதி பொருள்களின் எளிய செயலாக விளக்க முடியாது.அதாவது இவை எளிமைப் படுத்தப் பட முடியாத சிக்கலான அமைப்புகள் ஆகும்”.
 
Michael J. Katz இன்னும் உயிரியலில் காணப்படும் சிக்கலான அமைப்பை பற்றியும் இவ்வாறு கூறுகிறார்.
 
“செல்கள் சிக்க‌லான ஒழுங்கு வடிவமைப்பை கொண்டவை.அவற்றின் பகுதிகளும் சிக்கலான அமைப்பை கொண்ட குறிப்பிட்ட பணியாற்றுபவை, அப்பகுதிகள் இணைந்தும் (i.e. செல்) குறிப்பிட்ட பணியாற்றுபவை.ஒரு செல் இன்னொரு செல்லில் இருந்தே உருவாகியிருக்க மட்டுமே முடியும். அந்த முன்னோர் செல்லும் உயிரியல் வகையின் அதிகபட்ச‌ சிக்கலான ஒழுங்கு வடிவமைப்பை கொண்டிருக்க வேண்டும்.”
 
“Cells and organisms are quite complex by all pattern criteria. They are built of heterogeneous elements arranged in heterogeneous configurations, and they do not self-assemble. One cannot stir together the parts of a cell or of an organism and spontaneously assemble a neuron or a walrus: to create a cell or an organism one needs a preexisting cell or a preexisting organism, with its attendant complex templets. A fundamental characteristic of the biological realm is that organisms are complex patterns, and, for its creation, life requires extensive, and essentially maximal, templets.”
 
 
 
The bacterial flagellum is a cellular outboard motor that bears the marks of intelligent design. Taken from http://www.arn.org/docs/mm/motor.htm.
 
மைக்கேல் பெஹே இது போல் எ.சி.வ க்கு bacterial flagellum  உள்ளிட்ட‌  பல எடுத்துக்காட்டுகள் அளிக்கிறார். Bacterial flagellum 200 ப்ரோட்டின் உட்பட பல சிக்க‌லான வடிவமைப்பு உடைய பகுதிகளை உடையது, இது பரிணமிக்க முடியாது என்றே வாதிடுகிறார். ‌
 
மைக்கேல் பெஹே எ.சி.வ விற்கு தனது மேம்படுத்தப்ப்ட்ட வரையறுப்பை இவ்வாறு அளிக்கிறார்.
 
 
“An irreducibly complex evolutionary pathway is one that contains one or more unselected steps (that is, one or more necessary-but-unselected mutations). The degree of irreducible complexity is the number of unselected steps in the pathway.” (A Response to Critics of Darwin’s Black Box, by Michael Behe, PCID, Volume 1.1, January February March, 2002; iscid.org/)
 
“எளிமைப்படுத்த முடியாத[நடக்கும் வாய்ப்பில்லாத] சிக்கலான பரிணாம பாதை என்பது ஒன்று அல்லது மேற்பட்ட [தேவையான ஆனால் நிகழாத] பரிணாம் படிகள்(random mutations) கொண்டவை. எ.சி.வ ன் அளவு என்பது அப்பரிணாம பாதையின் ,தேவையான ஆனால் தேர்ந்தெடுக்கப் படாத பரிணாம படிகளின் எண்ணிக்கையே ஆகும்”.
 
bacterial flagellum ல் உள்ள 200 ப்ரோட்டின்களையும் ஒரே தலைமுறையில் பரிணமித்தல் நடக்க முடியாது.ஒருவேளை ஒவொரு தலைமுறையிலும் ஒரு சில ப்ரோட்டின் மட்டும் பரிணமித்து உருவாகிறது என்றால் அவை இணைந்து பணியாற்ற முடியாது என்பதால் இயற்கைத் தேர்வில் நிலைக்காது.ஆகவே மைக்கேல் பேஹேவின் கொள்கையாக்கத்தின் படி டார்வினின் கொள்கை தவறாகி விட்டது!!!!!!!! 
 
 
 
முந்திய பதிவுகள்

பகுதி 3