Tag Archives: இருப்பு

இற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்

28 ஜன

அண்மையில் தம்பி குலாம் ‘கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு’ எனும் ஓர் அரிய(!) கட்டுரையை பதிவேற்றியிருக்கிறார். தமிழ் இணையப் பரப்பில் அன்றாடம் இதுபோன்ற மதவாத குப்பைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. தம்பி குலாம் கூட இன்னும் ஏராளமான கட்டுரைகளை தன்னுடைய தளத்தில் தந்து கொண்டே இருக்கப் போகிறார். இவைகளுக்கெல்லாம் நான் மறுப்பெழுதிக் கொண்டிருக்கப் போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அவை குறுகிய வட்டத்தின் சுய சொரிதல்களை திருப்திப்படுத்தும் நோக்கில் நேர்மையற்று, பரந்த பார்வையற்று, பரிசீலனையற்று, முன்முடிவில் தேங்கி, அந்த முன்முடிவுகளுக்கு ஏற்ப வளைத்து வெளித்தள்ளப்படும் குப்பைகள். ஆனால் தம்பி குலாமின் மேற்கண்ட இடுகை இதே வார்ப்புகளில் வந்ததுதான் என்றாலும், கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? எனும் தலைப்பில் நடந்த விவாதத்தின் தொடர்ச்சியாக வந்திருப்பதால் அதற்கு மறுப்பளிப்பது அவசியமாகிறது. அந்த நோக்கில் விளைந்தது தான் இந்தக் கட்டுரை.

 

முதலில் அந்த விவாதத்தின் தொகுப்பை மிகச் சுருக்கமாக பார்த்து விடுவோம். அறிவியல் ரீதியான சான்றுகள், வரலாற்று ரீதியான சான்றுகள், சமூக ரீதியான சான்றுகள் என மூன்று அடிப்படைகளின் மேல் நின்று கடவுள் என்ற ஒன்று இல்லை, இருக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்திருந்தேன். மறுபக்கம் தம்பி குலாமோ அறிவியலால் கடவுளை அளக்க முடியாது, இந்த உலகில் கடவுளின் வெளிப்பாடு எந்த வகையிலும் இருக்காது. எனவே, இவற்றுக்கு வெளியில் தான் கடவுளை உறுதிப்படுத்த முடியும் என்றார். அவ்வாறான உறுதிப்படுத்தல்களாக சில கேள்விகளையும் முன்வைத்தார். தம்பி முன்வைத்த அத்தனை கேள்விகளையும் அவை கடவுளின் இருப்பை உறுதிப்படுத்தாது என்பதையும், ஆத்திகர்கள் முன்வைக்கும் இது போன்ற எதிர்நிலைக் கேள்விகள் அனைத்தும் அறிவியலின் நிகழ்கால எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்பதையும், கடவுளின் இருத்தலோடு தொடர்பற்று இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தினேன். இதன் தொடர்ச்சிக்கு தம்பி குலாமிடம் பதிலில்லை. மட்டுமல்லாது கடவுளின் இருப்பை நேரடியாக உறுதி செய்ய முடியாது என்றால் புறநிலைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் செய்யுங்கள் என்று தம்பி குலாமுக்கு சில கேள்விகளை எழுப்பினேன். பலமுறை வலியுறுத்தியும் பதிலளிக்க முன்வராத அவர் கடைசியில் வேறு வழியின்றி பதில் எனும் போர்வையில் சில சமாளித்தல்களை செய்திருந்தார். அவை எந்த அடிப்படையில் சமாளித்தல்களாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினேன். இவைகளுக்கு நேர்மையாக பதில் கூற மறுக்கும் தம்பி குலாம் தன்னுடைய நம்ப்பிக்கையை வேறு வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது கடவுள் மறுப்புக்கு எந்த சான்றையும் அளிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 

விவாதக் கேள்வி பதில்களுக்கு அப்பாற்பட்டு தம்பி குலாம் மீதான விமர்சனங்களாக பொய் சொல்கிறார், கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார், கூறப்பட்ட விளக்கங்களை பரிசீலிக்க மறுக்கிறார் என்றெல்லம் விமர்சனம் செய்தேன். செய்யப்பட்ட இந்த விஅர்சனங்களுக்கு எந்தவித மறுப்பையோ, விள்க்கத்தையோ தம்பி குலாம் கூறவில்லை. மாறாக நான் புலம்புகிறேன் என்றும், சந்தர்ப்பவாதமாக கூறுகிறேன் என்றும் என் மீது விமர்சனங்களை வைத்தார். தம்பி குலாம் மௌனமாக இருந்தது போல நானும் இருக்க முடியாதே. அதனால், நான் கூறியவை எந்த விதத்தில் புலம்பல்களாக இருக்கின்றன, சந்தர்ப்பவாதமாக இருக்கின்றன என்பதை விளக்குங்கள் என்று கேட்டேன். கடைசி வரை பதில் கூறவே இல்லை. எனவே, கடவுள் இருப்புக்கு எந்தவித சான்றுகளையும் வைக்காததாலும், கடவுள் மறுப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்காததாலும் கடவுள் என்பது மனிதர்களின் நம்பிக்கை தானேயன்றி, உறுதியாக நிலவுவதல்ல என விவாதம் முடிவுக்கு வந்தது.

 

இப்படி இருக்கும் நிலையில் தான் மேற்கண்ட கட்டுரையை வழக்காமன திருகல்களுடன் புதிதாக பதிவேற்றியிருக்கிறார். எனவே, மீண்டும் கடைசியாக மீண்டும் ஒருமுறை அந்த திருகல்களுக்கு ‘டிங்கரிங்’ செய்து விடலாம்.

 

அந்தக் கட்டுரையில் தம்பி குலாம் கூறியிருப்பது என்ன? 1. கடவுள் இருப்பு நம்பிக்கை எனும் வகையில் கடவுள் மறுப்புக்கே அதிக சான்றுகள் தரவேண்டும். 2. கடவுளை எப்படி ஏற்க வேண்டும் என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன, அந்த முறைகளல்லாது வேறு முறைகளில் கடவுளை ஏற்க முடியாது. 3. கடவுளை மனிதன் அறிவதற்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவதான புறக் கேள்விகள் மூலம் தான் அறிய முடியும். ஏனென்றால் கடவுள் உலகில் தோன்றவே மாட்டார். 4. கடவுளை மறுப்பதற்கு காரணங்கள் எதுவும் இல்லை. 5. கடவுளின் தகுதிகளாக என்ன கூறப்பட்டுள்ளதோ அவைகளை வைத்தே கடவுளை மறுக்கக் கூடாது. 6. கடவுளுக்கு அறிவியல் எந்த வரையறையையும் ஏற்படுத்தவில்லை. 7. மறுப்பவர்கள் கூறும் கடவுள் எது? அல்லது எப்படி இருந்தால் கடவுளை ஏற்றுக் கொள்வீர்கள்? 8. கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் எந்த சான்றையும் அளிக்கவில்லை. 9. பல கேள்விகளுக்கு அறிவியல் புரிரையே பதிலாக கொண்டிருக்கிறது. 10. கடவுள் ஏற்பாளர்கள் எழுப்பும் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பளர்கள் விரல் நுனியில் பதில் வைத்திருக்க வேண்டும். இந்த பத்து அம்சங்களில் எதிலாவது கடவுளை ஏற்பதற்கான சான்றுகள் இவைதான் என அடையாளம் கட்டப்பட்டுள்ளதா? இல்லை. என்றால் தெளிவாக தெரிவது ஒன்று தான் கடவுள் என்பது மனிதனின் கற்பனைகளில் உலவும் ஒன்று என்பது தான்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம். தம்பி குலாம் கடவுளின் இலக்கணங்கள் என்று சிலவற்றை தந்திருக்கிறாரே அவை இஸ்லாமிய மதக் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும், ஏனைய மதக் கடவுளுக்கு பொருந்தாது. தம்பி குலாம் கூறுவது போலவே கடவுள் எந்த விதத்திலும் மனிதனுக்கு தன்னை வெளிப்படுத்த மாட்டார் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டே தொடர்வோம். ஏதாவ்து ஒரு வழியில் கட்வுள் தன்னை மனிதனுக்கு உணர்த்திக் கொள்ள வேண்டுமல்லவா? அந்த வழிகள் என்ன? எந்தெந்த வழிகளில் கடவுள் மனிதர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்? இதற்குத்தான் தம்பி குலாம்போன்ற மதவாதிகள் பேரண்டத்தைப் படைத்தது யார்? அதை இயக்குவது யார்? மழையை அனுப்பியது யார்? அதை கட்டுப்படுத்த முடியுமா? பிறக்கும் இறக்கும் நேரத்தைக் கூற முடியுமா? போன்ற கேள்விகளை முன்வைக்கின்றனர்? இந்த இட்த்தில் தான் மதவாதிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் தான் படைத்து இயக்குகிறார், எல்லா நேரமும் கடவுளுக்குத் தான் தெரியும் என்பதெல்லாம் ஆத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நாத்திகர்களுக்கு இருக்க முடியுமா? எனவே கடவுள் தான் படைத்து இயக்குகிறார் என்பதற்கும், கடவுளுக்குத்தான் அனைத்து நேரமும் தெரியும் என்பதற்கு ஏதாவது சான்று காட்ட வேண்டும். எந்த ஆத்திகவாதியோ, மதவாதியோ இப்படி ஏதாவது சான்றுகள் காட்டியிருக்கிறார்களா? அக அவர்கள் கூறுவது என்ன? கடவுள் எந்த வழியிலும் தென்படவும் மாட்டார். அதேநேரம் அவர் படைத்தவைகளையும் அவர்தான் படைத்தார் என உறுதிப்படுத்தவும் முடியாது. இதை ஈடுகட்டத்தான் கடவுள் படைக்கவில்லை என்றால் மனிதனா படைத்தான் அறிவியலா இயக்குகிறது என்று எதிர்க் கேள்வி எழுப்புகிறார்கள். எந்த நாத்திகவாதியாவது இப்பேரண்டத்தைப் படைத்தது மனிதன் தான் என்றோ, பேரண்டத்தின் இயக்கவிதிகளை அறிவியல் கட்டுப்படுத்த வல்லது என்றோ கூறியிருக்கிறானா? ஆக நாத்திகர்கள் யாரும் கூறாத ஒன்றை அவர்கள் கூறுவது போல் பவித்துக் கொண்டு எதிர்க் கேள்வியை எழுப்பி ஆத்திகர்களின் நம்பிக்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்கிறார்கள். இது தான் தம்பி குலாம் போன்றவர்கள் கூறும் ஏதாவது வழியில் உணர்த்துவது என்பதின் லட்சணம்.

 

இது போன்ற கேள்விகளை கேட்பதைக் கொண்டு தான் விரல் நுனியில் பதிலை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் தம்பி குலாம். யாரிட்ம் பதில் இல்லை? விரல் நுனியில் பதில் கூறியிருக்கிறேன். இன்னும் எத்தனை கேள்விகளை அள்ளிவந்தாலும் அவ்வாறே பதில் கூற முடியும். ஆனால் தற்செயல் என்று கூறக்கூடாது, எதிர்காலம் சார்ந்து பதிலைக் கூறக்கூடாது என்று நிபந்தனைகளை விதிப்பது யார்? இதை எடுத்துக்காட்டுடன் கூறினால் தான் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இப்பேரண்டம் ஏன் உருவானது? எனும் கேள்வியோடு பார்ப்போம். பெருவெடிப்பு என்பது ஓர் அறிவியல் யூகம் தான். அது அப்படித்தான் நடந்தது என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் ஏன் உருவானது என்பதை ஆராய முடியும் இப்போது முடியாது. அண்ட வெளியின் பருப்பொருட்களை யார் இயக்குவது? என்றால் அது எந்த ஆற்றலாலும் முன்திட்டமிட்டு இயக்கப்படுவதல்ல. அவைகளின் இயக்கமும் தோற்றமும் தற்செயலானவை என்று பதில் கூறியதற்குத்தான் தற்செயல் என்றோ, எதிர்காலம் சார்ந்தோ பதில் கூறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் தம்பி குலாம். ஆனால் தன்னுடைய வசதிக்காக மறந்து விட்ட இரண்டு அம்சங்கள் அதில் இருக்கிறது. அவை என்னவென்றால் 1. நிகழ்கால அறிவியல் எல்லைகளை மீறி கேட்கப்படும் பதில்களுக்கு எதிர்காலத்தில் தான் பதில் கூற முடியும். 2. அறிவியல் ரீதியாக இது தான் சரியான, மெய்யான பதில். கூறப்படும் பதில் சரியான பதிலா அறிவியல் ரீதியான பதிலா எனும் அம்சங்களெல்லாம் மதவாதிகளுக்கு தேவையில்லை. இந்த மாதிரியெல்லாம் பதில் கூறினால் கடவுளை எங்களால் தூக்கிப் பிடிக்க முடியாது எனவே, அப்படி பதில் சொல்லாதீர்கள், இப்படி பதில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக பிரிதொரு இடத்தில் பதிலே கூறவில்லை என்று கதையளப்பார்கள்.

 

கடவுள் மறுப்புக்கு வருவோம். காரணமே இல்லாமல் கடவுள் மறுப்பு கூறப்படுகிறதா? கடவுள் இருப்பு வாதங்களை மறுப்பதால் மட்டுமே கடவுள் மறுப்பு முன்வைக்கப்படுகிறதா? இரண்டுமே ஆற்றாமையால் கூறப்படும் அற்பவாதங்கள். கடவுள் இல்லை என்பதற்கு என்னென்ன காரணங்களை நான் முன்வைத்திருக்கிறேன்.

 

அறிவியல் ரீதியான காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

 

வரலாற்றுரீதியான காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

 

சமூக ரீதியான காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

 

கடவுள் மறுப்புக்கு இவைகளெல்லாம் தூலமான காரணங்கள் இல்லையா? கடவுள் இருப்பு வாதங்களின் பதிலாக முன்வைக்கப்பட்டவைகளா இவை? எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ’கொய்த பழம் கொய்யாப் பழம் என்றால் எய்த அம்பு எய்யா அம்பு’ எனும் சொலவடைக் கேற்ப கூறப்படும் அங்கலாய்ப்புகள் அவ்வளவு தான்.

 

அடுத்து தம்பி குலாம் என்ன சொல்கிறார்? கடவுள் வாழும் உலகில் மனிதனுக்கு எந்தவிதத்திலும் தன்னை வெளிப்படுத்த மாட்டார். இதை ஏற்றால் தான் கடவுள் ஏற்பு. எனவே கடவுள் மறுப்பும் இதை ஏற்ற நிலையில் தான் இருக்க வேண்டும் என்கிறார். இது அறிவுக்கு உகந்ததல்ல என்றாலும், வாதத்துக்காக அதை ஒப்புக் கொள்வோம். நாம் கேட்பது என்ன? இவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படி உறுதியாக கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள்? என்பது தான். இந்தக் கேள்வி எழுப்பும் விசயத்திற்கும் வாதத்துக்காக ஏற்கும் அம்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? ஒன்றுமில்லை. சரி அறிவியல் ரீதியான காரணங்களைப் பார்ப்போம்.  எந்த விதத்திலும் கடவுள் தன்னை வெளிக்காட்டமாட்டார் என்பதிலா அந்தக் காரணங்கள் அமைந்திருக்கின்றன? அல்ல. கடவுளுக்கு என்னென்ன தகுதிகளைக் கூறுகிறார்களோ அந்த தகுதிகளையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்தக் காரணங்கள். கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, தொடக்கமும் முடிவும் அற்ற எதுவும் இல்லை என்கிறது அறிவியல். இதை மறுக்க முடியுமா? கடவுள் உலகில் தன்னை வெளிப்படுத்துவாரா மாட்டாரா என்றல்ல, எந்த ஒன்றை சாராமலும் எந்த ஒன்றுக்கும் சார்பை பெறாமலும் தனித்தது என்று எதுவுமில்லை என்கிறது அறிவியல் இதை மறுக்க முடியுமா? இப்படிக் கேட்டால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார் என்று தோசையை திருப்பி போடுகிறார் தம்பி குலாம். 

 

வரலாற்று ரீதியான காரணங்களைப் பார்ப்போம். ஆதிமனிதர்கள் வாழ்வில் தற்போது கற்பிக்கப்படும் விதத்தோடு பொருந்தத்தக்க கடவுள் என்ற ஒன்று இல்லை. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா? இதற்கு என்ன பதில் தம்பி குலாம் கூறுவாரா? புவியில் மனிதன் மட்டுமல்லவே பல்கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளில் மனிதனைத் தவிர வேறெந்த உயிரினத்திற்கும் கடவுள் எனும் உணர்வு இல்லையே. இது கடவுள் தன்னை வெளிப்படுத்த மாட்டார் எனும் வாதத்துடனோ, கடவுளின் தகுதி குறித்த எதிவாதமோ இல்லையல்லவா, இதற்கு என்ன பதில்? தம்பி குலாம் கூறுவாரா

 

சமூக ரீதியான காரணங்களைப் பார்ப்போம். இதில் முதல் காரணம் மனிதர்களைப் படைத்தது சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் என்பதோடு உரசுகிறது என்பதால் அதை விட்டு விடுவோம். மனிதன் கேட்டு கடவுள் நிறைவேற்றிய சோதித்தறியத் தக்க ஏதேனும் சான்று இதுவரை ஒன்றுமில்லையே எப்படி? இது என்ன தம்பி குலாம் கூறுவது போல கடவுளின் வருகையோடும் தகுதியோடும் மோதுகிறதா? இல்லையே பின் பதில் கூறுவதில் தம்பிக்கு ஏன் தயக்கம்?

 

இவ்வளவு காரணங்களும் இருக்கும் நிலையில் கடவுள் குறித்து நாம் கூறுவது என்ன? அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக கடவுள் என்ற ஒன்று இருப்பதற்கான எந்தத் தடயமும் இதுவரை கிடைக்கவில்லை. கடவுளின் துணைநிலைகளும் இப்படியான எந்த தடயங்களும் இல்லாதிருக்கின்றன. அதுமட்டுமன்றி, துணை நிலைகள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் போதும் அந்த இயங்கு விசைகள் கண்டறியப்பட முடியாததாக இருக்கிறது. மட்டுமல்லாது எக்காலத்திலும் அதைக் கண்டறிய முடியாது என ஆத்திகர்கள் கூறுகிறார்கள். எனவே தான் நான் கடவுள் இல்லை என மறுக்கிறேன். இது சான்றாதாரங்களின் அடிப்படையிலான என்னுடைய நிலைப்பாடு. அதேநேரம் எதிர்காலத்தில் கடவுள் குறித்தோ, அதன் துணை நிலைகள் குறித்தோ ஏதேனும் சின்னஞ்சிறு தடயம் கிடைத்தாலும் கூட என்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறேன். இது சாத்தியங்களின் அடிப்படையிலான என்னுடைய நேர்மை. மறு பக்கம் ஆதாரங்களோ சான்றுகளோ எதுமற்ற நிலையிலும் கூட பேரண்டத்தை படைத்துவிட்டு மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கிடாதிருக்கும் கடவுள் என்றால் அதை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்று தெரிவித்திருக்கிறேன். இது உலகின் கோடிக்கணக்கான மக்கள் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனும் அடிப்படையில் எழுந்த என்னுடைய பரிசீலனை.

 

மறுபக்கம் தம்பி குலாம் போன்ற ஆத்திகர்களிள் கடவுள் குறித்து கொண்டிருக்கும் கருத்து என்ன? கடவுள் என்பதற்கு எந்த விதத்திலும், எந்த அடிப்படையிலும் எக்காலத்திலும் எந்த ஏற்புச் சான்றுகளும் தர இயலாது, ஆனாலும் கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக நம்புகிறோம். அதனால் நீங்களும் நம்புங்கள். இது எப்படி இருக்கிறது? கேட்பவன் கேணையனாக இருந்தால் எருமை ஏரோப்ளேன் ஓட்டும் என்பார்களே அது போன்று இல்லையா?

 

அறிவியலின் தகுதி குறித்துப் பேசுகிறார் தம்பி குலாம். தான் ஓர் உள அறிவியல் துறை மாணவன் எனக் கூறும் தம்பிக்கு அறிவியல் குறித்து பேசும் தகுதி இருக்கிறதா? அறிவியல் குறித்து தம்பி குலாம் அவிழ்த்து விட்ட சில முத்துகளைப் பார்ப்போம்.

 

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே

துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி

சொல்லி இருக்க வேண்டும் .. .. .. தற்செயல் என்று ஒன்று அறிவியல் இல்லவே இல்லை

.. .. .. அண்ட வெளியில் நடைபெற்ற, நடைபெரும் மோதல்களும், நிகழ்வுகளும் அறிவியலால் தான் நிகழ்ந்தது என்பதற்கு சகோ செங்கொடி சான்றுகள் தரவேண்டும்

.. .. .. பெருவெடிப்பு நிகழவில்லையென்றால் ஒட்டுமொத்த அறிவியலும் அர்த்தமற்றதாகி விடும்

.. .. .. அறிவிலை கொண்டு தான் ஒருவர் மீதான பாசமும், அன்பும் கொள்வது சாத்தியமென்றால் பல நேரங்களில் ஒருவரின் பாசமும், அன்பும் பொய்த்துவிடுகின்றன… இவ்விடத்தில் அறிவியல் எப்படி செயலற்று போனது .. .. .. உங்கள் சொல்லில் உண்மையாளராக இருந்தால் அண்டவெளி இயக்கத்தை எந்த அறிவியல் இயக்கி கொண்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பட்டியலிடுங்கள்///

 

இவைகளெல்லாம் அறிவியல் குறித்து தம்பி குலாம் உதிர்த்த முத்துகளில் சில. அறிவியல் என்பதை தன் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தும் நெளித்தும் திருகல்களுடனும் எப்படியெல்லாம் கூறினால் அது கடவுளை சார்ந்திருக்கும்படி வருமோ அப்படியெல்லாம் கூறுகிறார் தம்பி குலாம். சுருங்கச் சொன்னால் அறிவியல் என்று தம்பி குலாம் கூறியிருப்பதெல்லாம் அறிவியலல்ல. இதை தெளிவாகவும் துல்லியமாகவும் விவாதத்தில் விளக்கியிருக்கிறேன்.

 

\\\அறிவியல், அறிவியலின் மூலம் பெறப்பட்ட முடிவு, மனிதனின் அறிவு இந்த மூன்று தனித்தனியான விசயங்களை ஒன்றாக கலந்து குழப்பி வைத்துக் கொண்டு அதைத்தான் அறிவியல் என்று கூறிக் கொண்டிருக்கிறார் நண்பர் குலாம். அறிவியல் என்பது தேடும் முறை. சான்றுகள் இல்லாத எதையும் அறிவியல் ஏற்பதில்லை. சான்றுகள் இல்லாமல் எதையும் ஏற்காத தேடும் முறையான அறிவியலைக் கொண்டு தான் இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு ஆற்றலையும் நாம் கண்டறிந்து கொண்டிருக்கிறோம்///

 

இன்னொரு அம்சத்தையும் கவனிக்கலாம். கடவுளுக்கு அறிவியல் வரையறை ஏற்படுத்தி இருக்கிறதா என்பதை எத்தனை முறை பதில் சொன்ன போதிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அறிவியல் எதற்கெல்லாம் வரையறை தந்திருக்கிறதோ அதையெல்லாம் அறிவியல் கண்டடைந்திருக்கிறது என்பது பொருள். அறிவியல் கண்டடையாத ஒரு பொருளுக்கு எந்த வரையறையும் தர முடியாது. அந்த வகையில் கடவுளுக்கு அறிவியல் ரீதியில் எந்த வரையறையும் இருக்க முடியாது. ஆனால் தம்பி குலாமோ நீங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டவர்? கடவுளுக்கு அறிவியல் வரையறை உண்டா? என்று கேட்பதில் அலாதி ஆர்வமுள்ளவர், அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்பதை உணராமலேயே. ஒரு கையால் கடவுளை பிடித்து தூக்கிக் காட்டி இதோ பாருங்கள் இது தான் கடவுள் (கடவுளுக்கான வரையறை) இந்தக் கடவுளைத்தான் நாங்கள் மறுத்துக் கொண்டிருக்கிறோம் என கூறவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலும். எவ்வளவு விளக்கினாலும் புரியாதது போலவே நடித்துக் கொண்டிருக்கும் தம்பி குலாமுக்கு கடைசியாகவு ஒருமுறை விளக்கி விடுவோம். இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் செய்யலாம், ஒரு இரும்புத் துண்டும் அருகில் ஒரு கண்ணாடித் துண்டும் இருக்கிறது என்று கொள்வோம். இதில் இரண்டு விதத்தில் நாம் தர்க்கம் நிகர்த்தலாம். ஒன்று இரும்பு கண்ணாடியை உடைக்கும் வல்லமை கொண்டதா இல்லையா? என்பது, இரண்டு இரும்பு எனும் பொருள் இருக்கிறதா இல்லையா? என்பது. இதில் இரும்பு என்பதை கடவுளுக்கு உவமையாக கூறியுள்ளேன். இரும்பு தூலமாக உலகில் இருக்கிறது, கடவுள் தூலமாக இல்லை என்பது தான் வேறுபாடு. இங்கு முதல் விவாதத்தில் நாம் ஈடுபடுகின்றோம் என்றால் அதன் பொருள் இரும்பு இருக்கிறது என்பதை இரண்டு தரப்பு ஒப்புக் கொண்டு அதற்கு கண்ணாடியை உடைக்கும் வல்லமை இருக்கிறதா என்பதில் மட்டுமே கருத்து வேறுபாடு. ஆனால் இரண்டாம் விவாதத்தில் இரும்பு இருக்கிறது என்பதை ஒரு தரப்பு ஏற்றுக் கொள்கிறது மறுதரப்பு மறுக்கிறது. இந்த இரண்டுவிதமான நிலையில் இரும்புக்கான அறிவியல் ரீதியான வரைவிலக்கணம் என்றால் முதல் நிலையில் மட்டுமே சாத்தியம். ஏனென்றால் முதல் நிலையில் இரும்பின் இருப்பில் ஐயம் ஒன்றுமில்லை அதன் வல்லமையில் மட்டுமே பிரச்சனை. ஆனால் இரண்டாம் நிலையிலோ இருப்பே ஐயமாக இருக்கிறது. இருப்பே ஐயமாக இருக்கும் நிலையில்; இருக்கிறது எனும் தரப்பு இல்லை எனும் தரப்பை நோக்கி நீங்கள் இல்லை எனும் பொருளுக்கு அறிவியல் வரைவிலக்கணம் தாருங்கள் என்று கேட்டால் .. .. ? இது தான் பிரச்சனை. கடவுளின் வல்லமையை மட்டும் நாம் மறுக்கவில்லை. கடவுளையே இல்லையென மறுக்கிறோம். இதை தெளிவாக உணராத வரை அந்தக் கேள்வியிலுள்ள அபத்தத்தை தம்பி குலாமால் உணர்ந்து கொள்ள முடியாது.

 

கடவுளை ஏற்பவர்கள் அதற்கு நம்பிக்கை என்ற ஒன்றைத் தவிர வேறு எதையும் காரணமாக காட்ட முடியாது, முடியவில்லை என்பதே இதுவரையான யதார்த்தம். மாறாக கடவுள் இல்லை என்பவர்கலோ காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் மேலாக வேறு சிலவற்றையும் காண வேண்டியதிருக்கிறது. கடவுளின் தகுதிகள் என்பதென்ன? ஆதி மனிதர்களிடம் கடவுள் எனும் பேறாற்றல் இல்லை. ஆனால் பின்னர் அது மக்களிடையே தோன்றுகிறது. திடீரென கடவுள் உருக் கொள்ள முடியுமா? அப்படி ஓரிரவில் கடவுள் உருவாகிவிடவும் இல்லை. படிப்படியாக மக்களிடம் நிலவிய நம்பிக்கைகள், பயங்கள், இறந்த பிற்கு என்ன நேர்கிறது எனும் அறியாமை போன்ற அனைத்தும் ஒன்று திரண்டு மெல்ல மெல்லவே கடவுள் உருவாகிறார். தற்போது உலகில் நிலவும் அத்தனை கடவுளர்களுக்கும் அதைக் கூறியவர்கள் என்று திட்டமாக சிலர் இருக்கிறார்கள். அவ்வாறு கடவுளைக் கூறிவர்கள் தாம் கடவுளுக்கான தகுதிகளையும் வகுத்திருக்கிறார்கள். அந்த தகுதிகளும் கூட காலத்தால் திருத்தியமைக்கப்பட்டே வந்திருக்கின்றன. தம்பி குலாம் போன்ற மதவாதிகள் அவ்வாறான தகுதிகளில் தான் கை வைக்கக் கூடாது என்கிறார்கள். அதாவது கடவுளுக்கு என்னென்ன தகுதிகள் கூறப்படுகிறதோ அவைகளை கேள்வி கணக்கின்றி ஏற்பது தான் கடவுள் ஏற்பு, எனவே அதற்கு உட்பட்டே தான் கடவுள் மறுப்பைக் கூற வேண்டும் என்பதன் பொருள் அது தான். இது அறிவார்த்த ரீதியாக தவறு. ஒரு நிலையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோமென்றால் அதன் அனைத்து அம்சங்களையும், அதன் அனைத்து கோணங்களையும் ஆராய வேண்டும். அப்போது தான் சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால் மதவாதிகளோ புனிதம் கற்பிப்பதன் மூலம் மறைத்து வைக்கிறார்கள். சரி, அந்த தகுதிகள் எந்த கண்ணோட்டத்துடன் இருக்கின்றன? வரலாற்று காலம் தொடங்கி கடவுளை எதிர்த்து கேட்கப்பட்ட கேள்விகளின் தாக்கத்தில், அந்த கேள்விகளை எதிர் கொள்ளும் இயலாமையிலிருந்து தப்பிக்கும் கண்ணோட்டத்திலிருந்தே கடவுளுக்கான தகுதிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கடவுளைக் காட்டு என்றால் காட்ட முடியாது எனவே கடவுள் இந்த உலகில் தோன்ற மாட்டார். கடவுள் எங்கிருக்கிறார் என்றால் கூற முடியாது எனவே கடவுள் அண்ட சராசரங்களை கடந்து சஞ்சரிப்பவர். கடவுளைப் பெற்றவர் யார் வாரிசுகள் உண்டா அவர்களின் தன்மைகள் எப்படி என்றால் பிரச்சனைகள் ஏற்படும் எனவே பெறவும் இல்லை, பெறப்படவும் இல்லை. இப்படி கூறிக் கொண்டே போகலாம். ஆக கடவுளின் தகுதிகள் என்பது கடவுளை வெற்றிகரமாக யதார்த்தத்திலிருந்து மறைக்கும் உத்திகள்.

 

கடவுளோ கடவுளோடு தொடர்புடையவைகளோ மனிதர்களுடன் தொடர்பு கொண்டவைகளே, மனிதத் தீண்டலின்றி சுயமான கடவுட் தாக்கம் என்று எதுவுமில்லை, அவ்வாறாக உலவும் கதைகளெல்லாம் எந்தவிதமான சான்றுகளுமின்றி தனிமைப்பட்டு நிற்கின்றன. இதை அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

 

எந்த ஒன்றை ஆராய்வதாக இருந்தாலும் அதற்கு இருக்கும் கருவிகள் அறிவியல் முறையில் உரசிப்பார்ப்பதும், வரலாற்று அறிவும் தான். ஆசான் ஏங்கல்ஸ் கூறுகிறார், “அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப் படாத எதும் இற்று வீழ்ந்துவிடும்” அறிவியலோடு உரசிப்பார்க்காத வரையில் தான் கடவுளுக்கு உயிர் வாழும் சாத்தியம் இருக்கும். அறிவியலோடு உரசிப் பார்க்கத் தொடங்கி விட்டால் கடவுளுக்கு சீழ் பிடிக்கத் தொடங்கும். இன்றைய சுரண்டல் சமூக அமைப்பு தன்னுடைய தேவைகளின் நிமித்தம் கடவுளை தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. அந்த அடிப்படையிலும் கடவுள் நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுரண்டல் அமைப்பு மக்களால் வீழ்த்தப்படும் போது கடவுளும் வீழ்த்தப்படும். இதில் ஐயம் ஒன்றுமில்லை.

ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவரின் பொய்யில் உறையும் கள்ள மௌனம்

10 அக்

கவுண்டமணியைவிட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க’ பதிவு வெளியிடப்பட்ட செய்தியை பின்னூட்டமாக குலாமின் நான் முஸ்லிம் தளத்தில் பதிவு செய்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆகி விட்டது. இன்னும் அது வெளியிடப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தளத்திற்கு வரும் பின்னூட்டங்களை வெடியிடுவது குறித்த உரிமை அத்தளத்தை நடத்துபவருக்கே உரியது, அதில் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் அவர் அதை என்ன காரணத்துக்காக முடக்கி வைத்திருக்கிறார் என்பதை ஆராய முடியும். இந்தப் பதிவு அந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. முதலில் அங்கு நான் பின்னூட்டமிட்டதற்கான ஆதாரத்தை கீழே தந்திருக்கிறேன்.

 

பொதுவாக பதிவர்கள் இந்த வகையில் ஒரு பின்னூட்டத்தை தடுக்கும் போது பரிசீலனையற்று திரும்பத் திரும்ப ஒரே செய்தியை கூறுவதால் அது வெளியாகவேண்டிய தேவையில்லை என முடிவு செய்வதாக கூறுவர். ஆனால் இவ்வாறான காரணத்தை குலாம் கூறமுடியுமா? அந்த கவுண்டமணி நடிப்பு இடுகையில் நான் எழுப்பியிருந்த விசயங்கள் என்ன? எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதை பொய் என்று நிரூபித்திருந்தேன். நடந்த விவாதத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுங்கள் என்று நிர்ப்பந்தம் செய்திருந்தேன். விவாதத்திற்கு அழைக்கிறீர்களே இப்போது நடப்பது என்ன? நேரடி விவாதத்தை நான் ஏன் மறுக்கிறேன் என்பதற்கான காரணங்களை குறிப்பிட்டு ஏற்கனவே பதிவெழுதி இருக்கிறேன் அதில் எழுப்பபட்டிருந்த அம்சங்களை எந்த விதத்தில் மறுக்கிறீர்கள்? என்று கோரியிருந்தேன். இப்படி கேள்வியெழுப்பும் பதிவை தன் பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல் ஒருவர் தடுக்க நினைக்கிறார் என்றால் அதன் பொருள் என்னவாக இருக்க முடியும், தன் குட்டு வெளிப்பட்டு விடக் கூடாது என எண்ணுகிறார் என்பதைத் தவிர.

 

குலாம் இரண்டு விதங்களில் பொய் கூறியிருக்கிறார். 1. நல்லூர் முழக்கம் தளத்தில் அவர் பின்னூட்டமிட்டு அது பதிவு செய்யக் கோருவதாக தெரிவித்ததை மறுத்து; அப்படியென்றால் அதை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தேன். இன்றுவரை அப்படி எதையும் வெளியிடவில்லை. எனவே, குலாம் அவ்வாறு கூறியது பொய். 2. அந்த திரைக்காட்சியை என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திருப்பதாக கூறினார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை என்று என்னுடைய மின்னஞ்சலின் உள்பெட்டியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிட்டிருந்தேன். மட்டுமல்லாது, மெய்யாகவே குலாம் அவ்வாறு அனுப்பியிருந்தால் தேதி நேரம் தெரியும்படி அனுப்பிய அஞ்சல் பகுதியை திரைக்காட்சியாக எடுத்து வெளியிடும்படியும் கோரியிருந்தேன். இதுவரை அவ்வாறு குலாம் எதையும் வெளியிடவில்லை. எனவே, எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குலாம் கூறியதும் பொய். தவிரவும் இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. எனக்கு மின்னஞ்சலில் திரைக்காட்சியை அனுப்பியதாக குலாம் ஏன் பொய் கூற வேண்டும்?

 

தன்னுடைய தளத்தில் குலாம், தன்னை ஒரு நேர்மையானவராக எதிர்பின்னூட்டங்களை வரவேற்கும் பண்புள்ளவராக எதையும் நேரிய முறையில் மென்மையாக அணுகும் பண்புள்ளவராக இடுகைகளின் மூலமும் வெளிப்படுத்தலின் மூலமும் தன்னை வெளிக்காட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஒருவர் இதுவரை அவர் காட்டியிருக்கும் நேர்மைப் பண்புக்கு மாற்றமாக பின்னூட்டம் இடாமலேயே இட்டதாக கூறுவதை ஆதாரபூர்வமாக மறுக்கவில்லை என்றால் அது அவரது பிம்பத்தை உடைக்கும். அதேநேரம் அவரால் ஆதாரபூர்வமாக மறுகவும் முடியாது. அதனால் தான் தன்னுடைய தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு தான் அனுப்பியதாக ஆதாரபூர்வமாய் காட்டவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தில் மின்னஞ்சலில் அனுப்பியதாய் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அது பற்றி குறிப்பிடுவதையோ கவனமாக தவிர்த்திருக்கிறார். இவைகளெல்லாம் அவரிடம் பதில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆனாலும் அதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமாட்டார். அது தான் மதத்தின் தன்மை. ஏனென்றால் அவர் மதத்தையும் கடவுளையும் நம்புகிறாரேயன்றி ஏற்கவில்லை.

 

குலாம் மட்டுமல்ல, இஸ்லாத்தை மீப்பெரும் இறும்பூறெய்தல்களாக காட்டி பதிவெழுதும் அனைவருக்கும் இவ்வாறு தனக்குத் தானே நேர்மையற்று இருப்பது தான் அடிப்படைப் பண்பாக இருக்கிறது. தான் கற்றறிந்ததை எழுதினாலும் அல்லது காப்பி பேஸ்ட் செய்து எழுதினாலும் அவர்களின் பண்பு இந்த எல்லையில் தான் நிற்கிறது. அதற்குக் காரணம் அவர்களிடம் பரிசீலனை இல்லாததே. பரிசீலனை எப்படி வரும்? மதம் என்றாலே அது பரிசீலனைக்கு அப்பாற்பட்டது தானே.

 

இப்படி பதிவெழுதி புழகமடையும் -தான் இம்மைக்காக அல்ல மறுமைக்காக எழுதுகிறேன் என்று ‘அல்டாப்பாக’ அலட்டிக் கொள்ளும்- பதிவர்களை விட்டுவிடுவோம். ‘சரியான நெத்தியடி கொடுத்திருக்கிறீர்கள் சகோ’ ‘நாத்திகர்களுக்கோர் செருப்படி’ ‘அல்லாஹு அக்பர், ஆண்டவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக’ ‘இனியும் நாத்திகர்கள் மறுத்துக் கொண்டிருக்க முடியுமா?’ என்றெல்லாம் அந்த பதிவுகளுக்கு பின்னூட்டமெழுதி தங்களைத் தாங்களே சுய சொரிதல்கள் செய்து கொள்ளும் சிலரையும் விட்டுவிடுவோம். ஆனால் இது போன்ற பதிவுகளை படித்து தங்கள் மத அறிவை விரிவுபடுத்திக் கொள்வதாக அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கும் பலரை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிறேன்.

 

உங்கள் மதத்தின் உண்மைத் தனமையையும், காலத்தால் வழுவாதிருக்கும், அறிவியலால் வீழாதிருக்கும் பண்பையும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து அறிந்து கொள்ளும் நம்பிக்கையாளர்களே, யாரின் எழுத்தைப் பார்த்து உங்கள் நம்பிக்கையை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்கிறீர்களோ அவர்கள், கேள்விக்கு பதில் கூற முடியாமல் ஓடி ஒழிவதையும் நேர்மையற்ற முறையில் திருகல்கள் செய்வதையும், கவலையற்று பொய்கள் கூறுவதையும் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? மதத்தை பிரச்சாரம் செய்பவர்களே இப்படி நேர்மையற்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவர்களை அப்படி தூண்டுவது எது? எல்லாம் வல்ல அந்த வல்லாற்றல் மிக்க கடவுள் ஏன் அவர்களின் நேர்மையற்ற செயல்களை விலக்கச் செய்யவில்லை? தூய மார்க்கம் என்று கூறுபவர்கள் அனைவருமே ஓர் இடத்தில் நழுவுகிறார்கள், பசப்புகிறார்கள், திசை திருப்புகிறார்கள், கோபப்படுகிறார்கள், அல்லது கள்ளமௌனம் சாதிக்கிறார்கள். இது ஏன்? நடந்து செல்பவர்கள் தொடர்ந்து செல்ல முடியும், ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் நின்றே ஆகவேண்டும். சமூகத்தோடும் யதார்த்தத்தோடும் பொருந்திச் செல்பவர்கள் தொடர்வார்கள், சமூகத்துடன் தொடர்பற்று உச்ச சப்தத்தில் பொய்களை பேசுவோர் நின்றே ஆக வேண்டும். அதனால் தான் மதவாதிகளால் ஒரு எல்லைக்கு மேல் செல்ல முடிவதில்லை, ஏனென்றால் அவர்களிடம் உண்மையில்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இதைப் படிக்கும் போது உங்களுக்கு கோபம் கூட வரலாம். ஏனென்றால், ஆண்டாண்டு காலமான மத அழுக்கு உங்களுக்குள்ளும் இருக்கக்கூடும். அந்த அழுக்கை நீங்கள் நீக்க விரும்புகிறீர்களா? என்றால் கேள்விகளைக் கேழுங்கள். கேட்கக் கேட்கத்தான் உண்மை விரியும். இதோ உங்களை வாரியணைக்க சமூகம் காத்துக் கிடக்கிறது.

 

முற்றும்.

 

பின்குறிப்பு: இந்த இடுகையும் வழக்கம் போல் குலாமின் தளத்தில் பின்னூட்டமாய் தெரிவிக்கப்படும். அதை வெளியிடுவதும் தடுத்துவிடுவதும் அவர் பொறுப்பு. ஆனால், இனியும் அதை திரைக்காட்சியாய் எடுத்து வைத்து அம்பலப்படுத்தப் போவதில்லை. ஏனென்றால், ஒட்டுக் கோமணமும் இல்லாமல் நிற்பவரிடம் எதை அம்பலப்படுத்த?

கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க

6 அக்

 

ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் .. .. .. எனும் பதிவுக்கு குலாம் கீழ்கண்டவாறு தன்னுடைய தளத்தில் கீழ்கண்டவாறு பதிலுரைத்துள்ளார்.

 

G u l a mOctober 4, 2012 8:46 AM

சற்றுமுன் செங்கொடிக்கு இட்ட மெயிலில்..

G u l a m gulamdhasthakir@gmail.com

11:43 PM (0 minutes ago)

 to செங்கொடி

சகோ செங்கொடி நான் இடும் பின்னூட்டம் அனைத்திற்கும் இப்படி தான் வருகிறது அதற்கான ஸ்கீன்ஸ்டார்ட் எடுத்து வைத்து என்னை மெய்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக நான் சொல்வது பொய்யில்லை என்பதற்காக தான் இந்த மெயிலிடுகை.

 வார்த்தைகளை கவனித்து பேசுங்கள் என்பது மட்டுமே என் வேண்டுகோள்

 அந்த மெயிலுடன் எனது தற்போதைய ஸ்கீன் ஸ்டார்டையும் இணைத்து அனுப்பியுள்ளேன்.

அவரது தளத்தில் தற்போது இட்ட பின்னூட்டத்திற்கும் இப்படி தான் வருகிறது

 நீங்கள் Gulam ?

 You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now.

 By logging in you’ll post the following comment to ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்:

அண்ணே, செங்கொடி., ரொம்பவும் பயம் காட்டாதீங்கண்ணே,.

 சுற்றி வளைத்து பேச ஒன்றுமில்லை., நீங்கள் சவுதி அரேபியாவில் மதம் சாராத குறிப்பாய் இஸ்லாமியன் என்ற அடையாளம் சாராத நாத்திகவாதியாக தான் அச்சமுகத்தில் தான் வேலை செய்து வருகிறார்களா? அதற்கு ஆதாரம் தர முடியுமா?

 ஏன் இங்கே மட்டும் பொய்யான பரப்புரை. சவுதியில் இருந்தால் உங்கள் அட்ரஸ் கொடுங்கள் நேரடியாக விவாதிக்க ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் அல்லது இந்தியாவில் இருந்தால் விவாதத்திற்கு வர தயாரா?

 இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கண்ணே.,

 எவருக்கும் ஸாரி., எவனுக்கும் ஓடி ஒளியும் எண்ணமும், பழக்கமும எனக்கு இல்லை. கவனித்து பேச கற்றுக்கொள்ளுங்கள்

 WordPress.com / Gravatar.com credentials can be used.

 

இதில் குலாம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். அப்படி எந்த மின்னஞ்சலும் எனக்கு வரவில்லை. இதோ என்னுடைய மின்னஞ்சல் உள்பெட்டியை திரைக்காட்சிப் படமாக கீழே இணைத்துள்ளேன். அவர் செய்ததெல்லாம் ஜிடாக்கில் ஒரு சிறிய அரட்டை தான், அதையும் படமாக கீழே இணைத்துள்ளேன்.

 

மெய்யாகவே குலாம் எனக்கு அவர் குறிப்பிட்டிருந்தபடி மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் அவரின் மின்னஞ்சலில் அனுப்பிய அஞ்சல் பகுதியை எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் விபரத்தை தேதி நேரம் தெரியும்படி திரைக்காட்சியாக(ஸ்க்ரீன் ஷாட்) எடுத்து அவர் தளத்தில் வெளியிடத்தயாரா? ஏன் அவரின் தளத்தில் வெளியிடக் கோருகிறேன் என்றால், மின்னஞ்சல் என்றால் அனுப்பாமலேயே அனுப்பிவிட்டேன் என்று கூறமுடியும் என்பதால் தான். ஐயோ சாமி! ஒரு பொய்யை மறைக்க இன்னும் எத்தனை பொய்களோ.

 

முதலில் குலாமுக்கு நன்றி கூறிவிட வேண்டும். ஓடி ஒழியும் இஸ்லாமிய பரப்புரை பதிவர் என்று தலைப்பு வைத்ததும் விரைந்து பதிலெழுதி ‘ஆம், நான் அப்படி ஓடி ஒழிபவன் தான்’ என நிரூபித்து விட்டாரே, அதற்கு நன்றி கூறாமலிருக்க முடியுமா? எப்படி நிரூபித்தார் என்கிறீர்களா? ஒரு கேள்வி கேட்டால் யோக்கியவான்கள் என்ன செய்வார்கள்? பதில் கூறுவார்கள். கேட்கப்பட்ட கேள்வி எதற்காவது குலாம் பதில் கூறி இருக்கிறாரா? இதை வேறு எப்படி எடுத்துக் கொள்வது?

 

வேறு என்ன தான் கூறியிருக்கிறார்? வேறென்ன நான் சௌதியில் இருந்தபோது எப்படி இருந்தேன்? இந்தியாவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யவா? பேரன்புமிக்க பெருந்தகையாளர் சகோ. குலாம் அவர்களே இதற்கும் கேட்ட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் கூற முடியவில்லை. அப்படித்தானே. முதலில் அதை ஒப்புக் கொள்ளுங்கள். அது தான் நேர்மை, கண்ணியம். இவைகள் உங்களுக்கு இல்லை என்று கூறுவதை விட அந்த இன்மைகளை மறைப்பதற்காகத் தான் நீங்கள் விவாதத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறுகிறீர்கள் என்பதே சரியானது.

 

விவாதத்துக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறும் பேராண்மை மிக்க சகோ. குலாம் அவர்களே, இதுவரை இங்கே நடந்து கொண்டிருந்ததன் பெயர் என்ன? நேரடி விவாதம் குறித்து நான் குறிப்பிட்டிருந்த இடுகையை படித்துப் பார்த்தீர்களா? அதில் கூறப்பட்டிருப்பவை குறித்து உங்கள் கருத்து என்ன? தர்க்கம், அறிவியல் என்று சொற்களின் இடைவெளியில் புகுந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடுவது; முடியாது போகும் போது நேரடியாக வா என்று கூப்பாடு போடுவது, மிஸ்டர் குலாம் இது போன்ற பூச்சாண்டிகளெல்லாம் நிறையவே கண்டு விட்டோம். சரி, கடவுளின் இருப்பு குறித்து நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் அவர்களை பதில் கூறச் சொல்லுங்கள், பின்னர் நான் முடிவு செய்கிறேன், என்னுடன் நேரடி விவாதம் செய்யும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்பதை.

 

வார்த்தைகளை கவனித்துப் பேச வேண்டும் என்று குலாம் கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அதை மீறி எந்தச் சொற்களையும் நான் பயன்படுத்தி விடவில்லை. ஆனாலும் ஒன்று சொல்லிக் கொள்ளலாம், தோற்றங்களைக் கண்டு அவருக்கான மதிப்பை முடிவு செய்யும் கெட்ட பழக்கம் எனக்கில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடை வெளியைக் கொண்டே அவருக்கான மதிப்பை தீர்மானிக்க முடியும். மட்டுமல்லாது சமூகத்தின் உயர்வுக்கு ஒருவரின் பங்களிப்பு எந்த உயரத்தில் இருக்கிறதோ அந்த உயரத்துக்குத் தான் அவர்களை மதிக்க முடியும். உள்ளத்தில் உங்களின் செயல்களை சீர்த்துக்கிப் பார்த்துவிட்டு வெளியில் போலியாய் மதிப்பளிக்க முடியாது. தவிரவும் கடந்த பதிவின் முன்குறிப்பில் இதை தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன்.

 

மதம் என்பது ஒரு போதை. ஆல்கஹால் போதையைப் பார்க்கிலும் மிகக் கடுமையாகவும், வெகு ஆபத்தானதாகவும் இருக்கும் போதை மதம். அந்த போதையை மூளையில் ஏற்றி வைத்திருப்பவர்கள் நேர்மையுணர்ச்சியை அரிக்கக் கொடுத்தவர்களாகிறார்கள். அதனால் தான் அவர்கள் வெளியில் நடித்துக் கொண்டே உள்ளுக்குள் தங்கள் மூடநம்பிக்கையை தக்கவைக்க சித்து வேலைகளில் இறங்குகிறார்கள். அவர்களிடம் தேடலைத் தூண்டுவதன் மூலமே அவர்களின் நேர்மையுணர்ச்சியை மீளமைக்க முடியும். அதற்கு உதவும் என நான் கருதுவதால் தான் அந்த சவால் அழைப்பு.

 

இறுதியாக, ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி கதவை அடைத்துக் கொண்டு மனைவியிடம் அடி வாங்குவார். ஆனால், சப்தம் மட்டும் ‘பிச்சுப்புடுவேன், அடி பின்னிப் போடுவேன்’ என்று வரும். முடிவில் கையில் கத்தியுடன் யாருகிட்டே என்று தெனாவெட்டாக கூறிக் கொண்டே வெளியில் ஓடி வருவார். மரியாதைக்குறிய சகோ. குலாம் அவர்களின் பதிலைப் பார்க்கும் போது அந்தக் காட்சி தான் நினைவில் வந்தது. ஆனாலும், கவுண்டமணியை விட சூப்பரா நடிக்கிறீங்க தம்பி நீங்க. (என்னை அண்ணன் என்று விளித்திருப்பதாலேயே நானும் தம்பி என விளித்திருக்கிறேன்)

ஓடி ஒழியும் ஓர் இஸ்லாமிய பரப்புரை பதிவர் ‘அல்லது’ அனைத்து இஸ்லாமிய பரப்புரை பதிவர்களுக்கும் ஒரு சவால்

4 அக்

 

முன் குறிப்பு: இந்தப் பதிவில் நான் பயன்படுத்தப் போகும் மொழிநடை என்னுடைய வழக்கமான நடையல்ல. மென்மையான மொழிநடையைக் கொண்டு ஒருவர் ஏமாற்ற முற்படுவது தெரியவரும் போது இயல்பான நடையில் இயம்புவது பொருத்தமாக இருக்காதல்லவா? ப.சிதம்பரம் மிக மென்மையாக பேசும் இயல்புடையவர்தான். ஆனால் தண்டகாரண்ய மக்கள் அவருக்கு மென்மையாக பதில் கூறுவதில்லையே. தவிரவும் நேர்மைக்கான குறியீடு மென்மை மட்டுமா என்ன?

 

முதலில் பின்னூட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்வோம், குலாம் இதை இரண்டாம் முறையாக கூறுகிறார், \\\அந்த ஆக்கத்தின் கீழாக பின்னூட்டமிட்டேன் இப்படி வருகிறது. நீங்கள் Gulam ? You are being asked to login because gulamdhasthakir@gmail.com is used by an account you are not logged into now. By logging in you’ll post the following comment to அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது: ஆக ஒருவேளை அங்கே பின்னூட்டம் வரவில்லையன்றால் .. அதற்காக இங்கே பதிகிறேன்./// நல்லூர் முழக்கம் தளம் ப்ளாக்கர் தளமல்ல வேர்ட்பிரஸ் தளம் என்பதை முதலில் குலாமுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டமிடுவதற்கு யாரும் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ப்ளாக்கர் தளத்தில் மட்டுமே அவ்வாறு பதிவு செய்யும் முறை இருக்கிறது. வேர்ட்பிரஸ் தளத்தில் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டால் போதும் பதிவு செய்ய வேண்டியதில்லை. பிளாக்கர் தளத்தை விட வேர்ட்பிரஸ் தளத்தில் பின்னூட்டமிடுவது வெகு எளிது. மட்டுமல்லாது குலாம் நல்லூர் முழக்கம் தளத்தில் பின்னூட்டமிடவில்லை என்பதை கீழிருக்கும் படம் தெளிவுபடுத்தும்.

 

மெய்யாகவே குலாம் பின்னூட்டமிட்டு அவர் குறிப்பிட்டபடியே பதில் வந்திருந்தால் அதை படமாக எடுத்து அவர் தளத்தில் வெளியிடட்டும் அதைக் கொண்டு வேர்ட்பிரஸ் தளத்தில் விளக்கம் கேட்கிறேன், “என்னப்பா பின்னூட்டமிடுவது வெகு எளிது என்று விளம்பரப்படுத்தியிருக்கிறீர்களே. வாசகர் ஒருவருக்கு இப்படியான அனுபவம் நேர்ந்திருக்கிறதே” என்று. அடித்து விடுவதற்கும் ஒரு அளவில்லையா?

 

குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\இங்கே உண்மையை தீர்மானிப்பதற்கு உங்களையும் என்னையும் சாராத ஆட்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்/// அப்படி சாராத ஆட்கள் ஆய்வு செய்து இன்னின்ன தவறுகள் உங்கள் வாதத்தில் இருக்கின்றன என எடுத்துக் கூறினால் அதை நிபந்தனையின்றி பரிசீலிக்க நான் தயார். நீங்கள் தயாரா? அது தான் என்னுடைய கேள்வி. ஆனால் பதில் கூறும் கடமையிலிருந்து தப்பிப்பதற்காகவே பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்று கூறுகிறீர்கள் என நான் உங்களை குற்றப்படுத்துகிறேன், இதற்கு உங்கள் பதில் என்ன? பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும். கடவுள் இருக்கிறதா? இல்லையா? எனும் தலைப்பில் நானும் நீங்களும் தானே விவாதம் செய்கிறோம். என்னுடைய வாதங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? அதைக் கூறுங்கள். கூறமுடியாத இடத்தில் என்னிடம் பதில் இல்லை என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ளுங்கள். மாறாக பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதை ஒரு திரையாக முன்வைக்காதீர்கள். (நீங்கள் பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று சுட்டும் இடங்களிலெல்லாம் பதில் கூறுவதிலிருந்து நீங்கள் ஒதுங்குகிறீர்கள் என்பதை நான் அழுத்தமாக முன்வைக்கிறேன்)

 

அடுத்து குலாம் கூறுகிறார், \\\நான் பக்கபக்கமாய் இடும் பின்னூட்டங்களை பரிசீலிக்காமல் அதற்கு பதில் தருவதாக எண்ணிக்கொண்டு உங்களின் சுய நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் சொன்னால்/// என்று. இப்படி கூறுவதற்கு குலாம் வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் கூறப்படும் வாதங்களை அவர் பரிசீலிக்க மறுக்கிறார் என்று அவர் எழுத்துகளை மேற்கோள் காட்டி நான் எழுதியிருந்தேன். அதை மறுத்து எதுவும் கூறாத குலாம் நான் பரிசீலிக்க மறுப்பதாக புழுகியிருக்கிறார். எங்கே, தன்னுடைய சொற்களில் குலாம் உண்மையுடையவராக இருந்தால் அவர் கூறிய எந்த வாதத்தை நான் பரிசீலிக்கவில்லை? எடுத்துக் காட்ட முடியுமா? முடியவில்லை என்றால் திருத்திக் கொள்ளட்டும், தேடலுள்ளவராக இருந்தால்.

 

அடுத்து குலாம் இப்படி எழுதியிருக்கிறார், \\\எனது அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் நீங்கள் பதில் தரவில்லை என்பதை முதல் இரண்டு ஆக்கத்தின் பின்னூட்டத்தில் பார்த்தால் புரியும். வேண்டுமானால் பட்டியல் தருகிறேன். அதை இன்னும் விவரித்து தான் “ஓர் அழைப்பு” தலைப்பின் கீழ் ஆக்கங்கள் ஆக நீங்கள் பதில் தருவதாக இருந்தால் அந்த ஆக்கங்களையும் உள்ளடக்கியதாக தான் இருக்க வேண்டும். அதை விடுத்து நான்காம் ஆக்கத்திற்கு இதையும் உங்கள் சுய தீர்மானிப்புக்கு ஒரு பகடையாய் வைத்தால் ஸாரி நான் உங்க ஆட்டத்திற்கு வரல/// ’என்னை விட்டுவிடுங்கள்’ என்பது தான் இதில் குலாம் எனக்கு விடுக்கும் செய்தி. ஆனால் அதை வெளிப்படையாய் கூறாமல் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தன் வாசகர்களுக்கு காட்டும் விதமாய்த் தான் மேற்கண்டவைகளை எழுதியுள்ளார் என்று நான் குற்றப்படுத்துகிறேன். எந்த அடிப்படை கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லை என குலாம் கருதுகிறார்? ஏற்கனவே எழுதியதில் இருந்து அதை அவர் எடுத்துக் காட்டட்டும், பதில் கூறியிருக்கிறேனா இல்லையா என்பதை நான் காட்டுகிறேன். பட்டியல் தருகிறாராம், தரட்டும். ஏற்கனவே நான் தெளிவாய் குறிப்பிட்டிருக்கிறேன், கேள்விகளுக்கு மருள்பவன் நான் அல்லன் என்று. ‘ஓர் அழைப்பு’ குறித்தும் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் பட்டியலிட்டிருக்கும் ஒவ்வொரு பதிவையும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு மறுபளிக்க அதாவது குலாமின் நிலைபாட்டை அதன் அனைத்து கோணங்கள் வாயிலாகவும் எதிர்கொண்டு மறுப்பளிக்க நான் தயார். குலாம் தயாரா? பாதியில் பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று கைவிடமாட்டார் என்று உறுதியளிக்க முடியுமா? குப்பைகளுக்கு எதற்கு வண்ணச் சோடிப்புகள்? ஆட்டத்திலிருந்து ஒதுங்க நினைத்தால் குலாம் தாராளமாக ஒதுங்கிக் கொள்ளலாம். அவரிடம் பொருதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனக்கு ஒன்றும் கட்டாயமல்ல, எனக்கும் வேறு வேலைகள் இருக்கிறது. ஆனால் அதை அவர் என்னுடைய தவறாக திரிப்பதை அனுமதிக்க முடியாது.

 

அடுத்து குலாம் கூறியிருப்பது இது \\\கருத்து பரிமாற்றம் அல்லது விவாதங்கள் என்பது வேறு. தனது செய்கை தான் உண்மையானது என்பதை பொதுவில் சுய தீர்மானிப்பில் முடிவெடுப்பது என்பது வேறு. அதை உங்கள் எழுத்தில் அதிகம் காண்கிறென்/// இங்கு நடப்பது விவாதம் தானே தவிர கருத்து பரிமாற்றம் அல்ல. விவாதத்தில் என்னுடைய நிலைப்படு சரியானது எனும் அடிப்படையிலிருந்து தான் என்னுடைய வாதத்தை நான் எடுத்து வைக்க முடியும், அந்த வாதம் தவறானது என்று நிரூபிக்க வேண்டியது தான் எதிராளியின் வேலை. குலாமின் வாதங்களை அப்படித்தான் நான் தவறு என்று காட்டியிருக்கிறேன். அதை மறுக்க வேண்டிய இடத்தில் நின்று கொண்டு நான் சுய தீர்மானிப்பில் முடிவெடுக்கிறேன் என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறார் குலாம். அவர் என்ன நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அவருடைய நிலைப்பாட்டை சுய தீர்மானிப்பில் முடிவெடுத்தாரா அல்லது என்னிடம் கேட்டுக் கொண்டு முடிவெடுத்தாரா? ஆம் என்னுடைய நிலைப்பாட்டை நான் சுய தீர்மானிப்பு தான் செய்கிறேன். முடிந்தால் அதை மறுத்துப் பாருங்கள், அதற்காகத் தானே விவாதம் செய்கிறோம். அதை விட்டுவிட்டு தங்கள் சிறுபிள்ளைத் தனங்களை இப்படியா வார்த்தைகளுக்குள் ஒழித்துக் கொள்வது?

 

\\\அதுவுமில்லாமல் என்னை வெறுப்பேதுவதாக நினைத்து நகைச்சுவை எனும் பெயரில் உங்கள் எழுத்துக்களை வீணடித்திட வேண்டாம்/// மன்னிக்கவும் யாரையும் வெறுப்பேற்றுவது என்னுடைய நோக்கமில்லை. என்னுடைய வாதங்களை நகைச்சுவையாய் எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறலாமே தவிர வீணடித்திருக்கிறேன் என்று கூற முடியாது.

 

\\\எப்போதுமே நாம் சொல்வது ஒன்று தான் எந்த ஒன்றை தவறேன்று சொல்கிறோமோ அதற்கு மாற்றமாக எதை உண்மையெங்கிறோமோ அதை விளக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் உங்களை பொறுத்தவரை கடவுள் இல்லையென்றால் குறைந்த பட்சம் உங்கள் கொள்கை அல்லது கடவுளில்லா நிலையில் எப்படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வது என்று சொல்வீர்களா..?/// தாராளமாக. கம்யூனிசத்தை நோக்கியே எங்கள் வாழ்முறை. அதை நீங்கள் விரும்பும் எல்லை வரை விளக்கவும் விவரிக்கவும் தயார். ஆனால் அதை ஒரு விவாதமாக எடுத்துக் கொண்டு செய்வோம். இப்போது இந்த விவாதத்தை என்ன செய்வது? ஒவ்வொரு தலைப்பாக தாவிக் கொண்டே இருக்க வேண்டுமா? இந்த விவாதத்தில் முடிவு காணும் வரை தொடருங்கள், முடிவை காண்பதற்கு ஒத்துழைப்பைத் தாருங்கள். அதன் பிறகு அதை தனித்தலைப்பாக எடுத்துக் கொண்டு விளக்குகிறேன். இப்போது இந்த விவாதத்திற்குறிய தலைப்பில் நில்லுங்கள்.

 

\\\அவ்வாறு ஆக்கம் வரைந்து எனக்கு மெயிலிடுங்கள் கேள்விகளோடு உங்களை சந்திக்கிறேன்/// ஆம் இதையே தான் கிட்டத்தட்ட நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கேள்விகளோடு தான் எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், ஆனால் பதில் கூறும் கடமைக்கு மட்டும் தான் நீங்கள் தயாராக இல்லை. உங்களை நோக்கி வீசப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமை உங்களுக்கு இருக்கும் போது மட்டுமே உங்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் வரும். அவ்வாறன்றி கேள்விகளை மட்டும் வீசிக் கொண்ண்டிருப்பேன் என்றால் அதற்கு வேறு பெயர்களுண்டு வையத்தில்.

 

\\\வர தாமதமானால் பெருமையாக சொல்லிக்கொள்ளுங்கள் குலாம் ஓடி விட்டாரென்று. ஏனெனில் என்னுடைய இலக்கு செங்கொடி மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த நாத்திக சிந்தனையை…/// ஆம் உண்மையை உரத்துச் சொல்வதில் எனக்கு தயக்கமேதும் இல்லை. அது எவ்வளவு கேவலமாக இருந்த போதிலும். அதனால் தான் தலைப்பையே ‘ஓடி ஒழியும்.. .. ..’ என்று வைத்திருக்கிறேன். உண்மையை பொய் போலச் சொல்வதும், பொய்யை உண்மை போலச் சொல்வதும் எனக்கு பழக்கமில்லாதவைகள். குலாம், செங்கொடியை மட்டும் உங்கள் இலக்காக கொள்ளுங்கள் என்று யாரும் உங்களைக் கோரவில்லை. உங்களை நோக்கி உங்கள் கருத்துகளை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றால் அதற்கு பதிலளிக்கும் கடமை உங்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த நாத்திக சிந்தனையில் செங்கொடி அங்கமில்லையா? செங்கொடி நாத்திக சிந்தனைக்கு வெளியில் நிற்பவரா? நாளை சிவப்புக் கொடிக்கு பதில் கூற முடியவில்லை என்றால் என்னுடைய இலக்கு சிவப்புக் கொடி மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த நாத்திக சிந்தனையை என்று கூறுவீர்களா? இன்னொரு நாள், கருப்புக் கொடிக்கு பதில் கூறமுடியாத போது என்னுடைய இலக்கு கருப்புக் கொடி மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த நாத்திக சிந்தனையை என்று கூறுவீர்களா? சிவப்புக் கொடியோ, கருப்புக் கொடியோ அல்லது வெறெந்தக் கொடியுமோ இல்லாமல் நாத்திக சிந்தனை மட்டும் தனியே முகிழ்த்தோடிவருமா என்ன? அல்லது காற்றில் அட்டைக் கத்தி வீசுவது மட்டும் தான் உங்கள் தொழிலா?

 

குலாம் நீங்கள் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் இப்படித்தான் பதிலளிக்க முடியாத இடம் வரும் போது போக்குக் காட்டி திசை மாறி ஓடியிருக்கிறீர்கள். இதோ சான்றுகள்,

 

கடவுளை நிரூபிப்பதற்கு அறிவியலைவிட தர்க்கமே சரியான வழி என நீங்கள் கூறியதும் அதனடிப்படையிலேயே கடவுள் நம்பிக்கை தவறு என்று என் மறுப்பு வாதங்களை வைத்தேன், பதிலளிக்க முடியாத இடம் வந்ததும் விட்டுவிட்டு வேறு கேள்விகளுக்கு நகர்ந்து விட்டீர்கள். அதற்கான சுட்டி இது

தொடர்ந்து நடத்த விவாதத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் பின்னூட்டத்தில் சரியாக விவாதிக்க முடியாது என ஒதுங்கிக் கொண்டீர்கள். அதற்கான சுட்டி இதோ

ஆனால் இன்றுவரை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பதிவுக்கு எதிர்பதிவு எனும் முறையில் விவாதிக்கலாம் என்று கூறிவிட்டு, கடைசிவரை ஒரு காலவரைக்குள் என்று நீங்கள் அடம்பிடித்ததற்கான சுட்டி இதோ,

 

குலாம் பதில் கூற மறுக்கும் கேள்விகள் இதோ,

 

  1. கடவுள் உண்டு என்பது நம்பிக்கையா? உறுதியானதா?
  1. அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடவுள் இல்லை என்று விளக்கிய என்னுடைய மறுப்புகளுக்கு என்ன பதில்?
  1. கடவுளை அளக்கும் கருவிகள் கடவுளை விட மிகைத்திருக்க அவசியமில்லை என்றேன், அதற்கான மறுமொழி என்ன?
  1. பூமியில் மட்டுமே இயங்கும் கடவுள் மனிதர்களின் கருவிகளில் அகப்பட மாட்டான் என்பது ஏமாற்றும் உத்தி என்று கூறியிருக்கும் என் கருத்துக்கான மறுப்பு என்ன?
  1. கடவுள் உண்டா இல்லையா எனும் விவாதத்தின் சாரம்சமே முகம்மது கூறியது உண்மையா பொய்யா எனும் கேள்விதான் என்றேனே அதற்கான விளக்கம் எங்கே?
  1. மனிதனைத் தவிர வேறு உயிரினங்களிடம் கடவுள் குறித்த சிந்தனை இல்லை என்றேன், நிரூபிக்க முடியுமா என்றார், நிரூபித்தேன், பின் அமைதியாகி விட்டாரே ஏன்?

 

ஆக மூடநம்பிக்கையை வைத்துக் கொண்டு தான் இத்தனை பீற்றல்களா? இனியேனும் சிந்தியுங்கள்.

 

குலாம் மட்டுமல்ல தமிழ் இணையப் பரப்பில் உலாவரும் பெரும்பாலான இஸ்லாமிய மதப் பரப்புரை பதிவர்கள் இப்படி மூடநம்பிக்கைச் சகதியில் ஊறிய அட்டைக் கத்திகள் தாம். ஆனால், உள்ளுக்குள் உண்மையில் புடம் போட்ட தீரர்களாய் தங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் அதே அவர்களே எல்லாவித தில்லுமுல்லுகளிலும் -உப்புச் சப்பற்ற மறுமொழிகளுக்குக் கூட பதில் மொழி இட்டு அதிக கவனம் பெற முயல்வது, குழுமமாக இயங்கி மாறிமாறி பின்னூட்டங்களை இட்டுக் கொள்வது, திரட்டிகளில் ஓட்டுப் போடுவது- இறங்குகிறார்கள். சொந்த வாழ்வில் ஒழுங்கீனமாக செயல்படும் அநேகர் பொதுவாழ்வில் மதப் புனிதர்களாக உலாவருவதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். இவர்கள் மதப் பரப்புரை பதிவர்களாக உலாவரவும் செய்கிறார்கள். ஆகவே, பொழுது போக்காகவும் முகமூடியாகவும் செய்யும் இந்த மதப்பரப்புரைகளை அடையாளம் காணவும், சரியான எல்லையில் தடுத்து நிறுத்தவும் தேவை இருக்கிறது. தங்கள் பதிவுகளில் விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும், தங்களின் கூறுகளில் உளப்பூர்வமான பிடிப்புடன் இருப்பதாகவும், உச்சபட்ச நேர்மையை கடைப்பிடிப்பதாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் இவர்கள், விவாதம் என்று வந்து விட்டால் திசை திருப்புவது, வார்த்தைகளுக்குள் ஒழிந்து கொண்டு சதிராடுவது என்று தங்கள் மூட நம்பிக்கைகளை தக்க வைப்பதற்கு அனைத்து விதமான தந்திரங்களிலும் இறங்குகிறார்கள். அவர்களின் இந்த புளித்துப்போன போலித்தனங்களின் நெடிகளில் தாக்குண்டு உப்பிசத்துக்கு ஆளானவன் எனும் முறையில் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

 

இதனால் சகலமான இஸ்லாமிய மதப் பரப்புரை பதிவாளர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்ன வென்றால், நீங்கள் விரும்பும் எந்த தலைப்பிலும் உங்களுடன் எழுத்து விவாதம் செய்ய நான் தயாராய் இருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே தேடலுடன் பரிசீலனைக்கு தயாரானவர்களாக இருந்தால், இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு களம் காண வாருங்கள் என அழைக்கிறேன்.

 

இதை குறிப்பிட்ட ஒருவருடன் நேரடி விவாதத்துக்கு வாருங்கள் என்பதன் மூலம் எதிர் கொள்ள விரும்புபவர்கள் இந்த இடுகையை பாருங்கள். இதில் எழுப்பப்பட்ட்டிருக்கும் அம்சங்களை பரிசீலித்துப் பாருங்கள் என கோருகிறேன். மட்டுமல்லாது அவருக்கும் சேர்த்தே இந்த அழைப்பு. மாறாக இதை அலட்சியத்துடன் கடந்து செல்ல விரும்புவர்கள் குறித்து நான் ஒன்றும் கூறுவதற்கில்லை, அவர்கள் அவர்களுக்கே உண்மையாளர்களாய் இல்லை என்பதைத் தவிர.

அல்வாவை விட அதன் இனிப்பே முதன்மையானது

29 செப்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது: பகுதி 2-3

பின்னூட்டங்களா பிற்போக்கு ஊட்டங்களா’ பதிவுக்கு நண்பர் குலாம் இரண்டாவது தொகுதி பின்னூட்டங்களை அளித்துள்ளார். ஆனால் முதல் தொகுதி பின்னூட்டங்களை விட இரண்டாவது தொகுதி பின்னூட்டங்கள் சற்று தெளிவாக இருப்பதாய் உணர்கிறேன். வாதங்களுக்கு கடக்குமுன் ஒன்றை தெளிவு படுத்திவிடலாம் என எண்ணுகிறேன். நண்பர் குலாம் இப்படி எழுதியிருக்கிறார் \\\எனக்குள் உங்கள் குறித்த நடுநிலைபார்வை மீது ஐயங்கொள்ள வைக்கிறது/// ஐயமெலாம் தேவையில்லை நண்பரே. நான் நடுநிலைவாதி அல்லன், மட்டுமல்லாது நடுநிலை என்பதையே மோசடியான ஒன்றாக கருதுபவன். எந்த ஒன்றிலும் என்னுடைய நிலைப்பாடு என்பது நான் எதை சரிகாண்கிறேனோ அதைச் சார்ந்தே இருக்கும். நான் ஒரு கம்யூனிஸ்டாய் இருக்க விரும்புவதால், எந்த ஒன்றையும் இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அணுகியே சரியா தவறா என்று ஆய்கிறேன். ஆனால் என் கருத்துகளுக்கு நான் நேர்மையானவன். என் கருத்து தவறு என உணரும் அந்தக் கணமே எந்தவித அசூயைகளுமின்றி உதறிவிட்டு சரியானதின் பக்கம் வந்துவிடுவேன். சரியானதாய் இருக்கும் போது என்ன இழப்பு வந்தாலும் அஞ்சாமல் கடைசிவரை போராடுவேன். எனவே நான் சரியானதின் மீது பக்கச் சார்பாய் இருப்பவன் தானேயன்றி, நடுநிலையானவன் அல்லன்.

நண்பர் குலாம் இப்படி தொடங்குகிறார் \\\கடவுள் இல்லையென்பதை அறிவியல் ரீதியாக மெய்பிக்க சொன்னேன். அறிவியல் ரீதியாக மெய்பிக்க கண்ணெதிரே இல்லை என்ற ஒரு நிலைப்பாடு மட்டும் போதாது/// மீண்டும் நான் நண்பருக்கு கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் முதல் பதிவிலும், இரண்டாவது பதிவிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். கடவுள் நிலையாக நின்று இயங்கும் ஒன்றா? அல்லது ஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் -அது எவ்வளவு நீண்ட காலமாய் இருந்தாலும்- மட்டும் இயங்குவதா? நிலையானது என்றால் அதை அறிவியல் ஒப்புக் கொள்ளாது. நிலையாக நிலைத்து இயங்கும் ஆற்றல் கொண்ட எதுவும் அறிவியலின்படி இல்லை. எனவே கடவுள் இல்லை. ஏற்கனவே இரண்டுமுறை கூறிவிட்ட பிறகும் அதை பரிசீலிக்காமல் மீண்டும் அப்படியே உங்களை கேட்கத் தூண்டியது எது சகோ.? \\\ஆய்வு ரீதியாக கடவுளின் இருப்பை மெய்பித்தால் அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// இதையும் தெளிவாகவே மறுத்திருக்கிறேன். முதலில் நீங்கள் இப்படி எழுதினீர்கள் \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும்/// இப்போது சொற்களை மட்டும் மாற்றி \\\அவர் நம் ஆளுகைக்கு வந்துவிடுவார்/// என்கிறீர்கள். இரண்டுக்கும் இடையில் நான் கூறிய பதிலை மட்டும் ஏன் சகோ பரிசீலிக்கவில்லை. சுநாமியைக் கூட மனிதன் ஆய்ந்திருக்கிறான் அளந்திருக்கிறான். அது மனிதனின் ஆளுமைக்குள் வந்துவிட்டதா என்ன? நண்பரே! இது போன்றவைகளெல்லாம் உருவேற்றப்பட்ட கடவுளின் தகுதிகள் உதிர்ந்து விடாதிருப்பதற்காக செய்யப்படும் சமாளித்தல்கள். \\\நம் ஆளுகைக்கு உட்படும் ஒன்றை எப்படி நாம் கடவுளாக ஏற்போம் என்பதே என் இப்போதைய கேள்வி/// இப்போது மட்டுமல்ல எந்தக் காலத்திலும் இதுவே ஆன்மீகவாதிகளின் கேள்வி. ஆன்மீகவாதிகள் எனும் சொல்லின் பொருளே கடவுளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகுதிகளுக்கு (சொத்துகளுக்கு) பங்கம் வராமல் காப்பவன் என்பது தான் பொருள். எனவே ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது.

\\\சர்வ வல்லமைப்பெற்ற கடவுளின் இருப்பை எந்த ஆளுகைக்குள்ளும் அகப்படாமல் நாத்திகவாதிகளுக்கு எப்படி நிருபிக்க வேண்டும்/// நண்பர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்வி மிகவும் முதன்மையானது. இந்தக் கேள்வியை குறையற உணர வேண்டுமென்றால் பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் இருப்பை இதுவரை எந்த மதவாதியும் நிரூபித்ததில்லை. நிரூபிக்க முடியாது என்பதும் அவர்கள் அறியாததல்ல. ஆனால் நிரூபிக்கக் கோரும் கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எப்படி நிரூபிப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கும் ஆத்திகர்கள் தற்போது அந்தக் கேள்வியையும் நாத்திகர்களின் பக்கம் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே கூறியது தான், ஆன்மீகவாதிகளின் கவலையை நாத்திகவாதிகள் நாங்கள் படமுடியாது. என்றாலும், அந்தக் கேள்வியின் உட்கிடையை சற்றே விளக்கலாம்.

‘சர்வ வல்லமை பெற்ற’ ‘எந்த ஆளுமைக்குள்ளும் அகப்படாமல்’ இவை இரண்டும் என்ன? கடவுள் என்ற ஒன்றுக்கு கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் தகுதிகள். இப்படி கடவுளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிகள் தாம் அதை புனித வட்டத்துக்கு உரியதாக்குகிறது. அதாவது, தகுதிகள் தான் கடவுள். இப்படிப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒன்று இருக்க முடியுமா என்பது தான் கேள்வி. இப்படிப்பட்ட தகுதிகள் கடவுளுக்கு எப்படி வந்தன? பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இன்னோரின்ன தகுதிகளுடன் உண்மைக் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போனார். ஆக, சாராம்சத்தில் அந்த மனிதர் சொன்னது உண்மையா பொய்யா என்பது தான் சரியான கேள்வி. அதை ஆய்வதற்குப் பதிலாகத்தான், பேரண்டத்தின் நீள அகலங்கள், எந்த ஆளுமைகளுக்குள்ளும் அகப்பட்டு விடக்கூடாதே போன்ற பரிதவிப்புகள் எல்லாம். அவர் சொன்னது உண்மை தான் என்பதை எப்படி நிரூபிப்பது? (நண்பர் குலாமுக்கான மறுப்புரைகளை இதுவரை நான் பொதுவாகவே வைத்துக் கொண்ருந்தேன். காரணம், பொதுவான கடவுளை கேட்டாலும் இஸ்லாத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று முன்பொருமுறை அவர் பொருதியது தான். இப்போது அப்படியில்லாமல் அவரே வெளிப்படுத்திக் கொண்டதால் நாமும் அப்படியே தொடர்வோம்)

இதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். கடவுள் என்பது மனிதர்களின் கற்பனை தான் என தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். அந்த கற்பனைக்குச் செய்யப்பட்ட அலங்காரத் தகுதிகளுக்கு பங்கம் வந்து விடாமல் நிரூபிக்க வேண்டும் என்று கோருவதை இன்னொரு கற்பனை வாயிலாக அறிய முயலலாம். பேரண்டப் பெருவெளியில் ரசகுல்லா எனும் பால்வீதியில், குலோப் ஜாமுன் எனும் சூரியக் குடும்பத்தின் ஜாங்கிரி எனும் கோளில் அல்வா எனும் ஆற்றல் ஒன்று இருக்கிறது. அது அனைத்தையும் மிகைத்த பேராற்றல் வாய்ந்தது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அப்படி ஒன்று இல்லை என்று அறிவியலின் படி ஐயந்திரிபற நிரூபிக்க முடியுமா? என்றால் முடியாது என்பது தான் பதில். காரணம் பேரண்டத்தில் மனிதன் அறிந்திருப்பது கொஞ்சமோ கொஞ்சத்திலும் கொஞ்சம் மட்டுமே. அப்படி ஒன்று இருக்கிறதா? என்றால் இருக்கக்கூடும். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அப்படி ஒன்று மெய்யாகவே இருக்கிறது. அப்படி ஒரு அல்வா இருப்பதால் தான் நேற்று மாலையில் நீ குடித்த தேனீர் இனிப்பாக இருந்தது, அல்வா இல்லையென்றால் தேனீருக்கு இனிப்பே வந்திருக்காது என்று சொன்னால்.. .. .. அல்வா இல்லாமல் தேனீருக்கு தனியே இனிப்பு வந்தது எப்படி? அல்வா இல்லை என்று உன்னால் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? ரசகுல்லா பால்வீதியைப் பற்றியோ, ஜாங்கிரி கோளைப் பற்றியோ அறிந்து கொள்ளும் தகுதியோ, அறிவியல் உயரமோ மனிதர்களுக்கு இல்லை எனவே அல்வா இருப்பது மெய்யாகிவிட்டது. நீங்கள் அல்வாவை எந்த விதத்திலும் நம்பாத சர்க்கரை வியாதிக்காரர்களென்றால் உங்களுக்கு அல்வாவை எந்த விதத்தில் நிரூபிக்க வேண்டும் என்று பகுத்தறிவோடு சொன்னால் அந்த விதத்தில் நிரூபிக்கிறோம் என்று சொன்னால் .. .. .. சிரிக்காதீர்கள், நண்பர் குலாம் கூறுவதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. கடவுள் என்ற ஒன்றே இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறோம், அதில் கடவுளூக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தகுதிகளுக்கு எந்தக் குறைவும் வந்துவிடாமல் ஒரு வழி சொல்லுங்கள் அந்த வழியில் நிரூபிக்கிறோம் என்றால் அதை என்னவென்பது. கடவுளை புரிந்து கொள்ளவில்லையே என வேதனைப்படும் நண்பர் கடவுள் மறுப்பை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார். கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் பொருள் கடவுளின் தகுதிகளோடு சேர்த்து கடவுளை மறுக்கிறோம் என்பது தான். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? கடவுளின் தகுதிகளை ஏற்றுக் கொண்டு கடவுளை மட்டும் மறுக்கிறோம் என்றா?

நண்பர் குலாம் அடிக்கடி ஓர் ஒப்பீட்டுவமை கூறுவார், ஒரு கோட்டை சிறிதாக்க வேண்டுமானல் அதனருகே அதைவிட பெரிய கோடு ஒன்றை வரைந்து விட வேண்டும் என்று. அறிவியல் விசயத்தில் இதுவே எதிர் விகிதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதாவது, கடவுள் கோட்டை மிக்குயர்வாக காட்ட வேண்டுமென்பதற்காக அறிவியல் கோட்டை குட்டையாக வரைந்து விடுகிறார்கள். அதனால் தான் எல்லா மதவாதிகளும் அறிவியல் குறைபாடுடையது எனும் பொருளிலேயே பேசுகிறார்கள். குலாமும் அதையே எழுதியிருக்கிறார், \\\எல்லாவற்றையும் மனித அறிவு அறிநது அதை ஆராயும் வழிமுறைகளை கண்டு அவற்றை வரையறுத்தாலும் அவை அவற்றின் எல்லைக்குள் மட்டுமே பிரயாணப்படும். மாறாக மாற்று செய்கைகளின் மீது மனித அறிவின் அறிவியல் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆக ஐந்தாம் நிலையில் உள்ள ஒன்றை அதற்கு கீழாக உள்ள நான்கு நிலை கருவிகளால் ஆராய முடியாத போது எண்ணிடலங்காத தன்மைகளை தன்னுள் கொண்ட கடவுள் என்ற பண்பை அளக்கும் அளவுகோல் நம்மிடம் இல்லை. அதற்கு கீழுள்ள நிலைகளில் உள்ள அளவுகோல்கள் நாம் இதுவரை நம்மிடம் உள்ளது. அதை மட்டும் வைத்து எப்படி கடவுள் இல்லையென்ற முடிவுக்கு வர முடியும் சகோ/// கடவுள் ஐந்தாம் நிலை மனிதன் நான்காம் நிலை என நண்பர் வரையறை செய்திருக்கிறார். இந்த ஐந்தாம் நிலை, நான்காம் நிலை என்பது என்ன? மனித தேடலின் பாற்பட்ட நிலைகளா? அதாவது மனிதன் அறியா நிலையிலிருந்து ஒன்று, இரண்டு எனக் கடந்து நான்காம் நிலைக்கு வந்திருக்கிறானா? ஆம் என்றால் என்றேனும் ஒருநாள் மனிதன் ஐந்தாம் நிலைக்கு எட்டுவான். அப்போது இந்த விவாதத்தை என்னுடைய பேரனும், நண்பர் குலாமின் பேரனும் தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் மனிதன் என்றேனும் கடவுளின் நிலையான ஐந்தாம் நிலையை அடைய முடியுமா? இதை ஒருபோதும் எந்த மதவாதியும் ஒப்பமாட்டார்கள். என்றால், நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் மெய்யான பொருள் என்ன? கடவுள் உயர்ந்தவன் மனிதன் அவன் படைப்பு. தகுதியில் படைத்தவனும் படைக்கப்பட்டவையும் ஒருபோதும் ஒன்றாகிவிட முடியாது எனும் மதக் கற்பனையை பொது உண்மை போல முன்வைக்கிறார். நான்காம் நிலை கருவிகள் ஐந்தாம் நிலையை அளக்க முடியாது என்று ஏன் கூற வேண்டும்? கடவுளை அளக்கும் தகுதிகள் மனிதனுக்கோ அவன் கருவிகளுக்கோ இல்லை எனும் நண்பர் நம்பும் நிதர்சனத்தை வெளிப்படையாக கூறிவிடலாமே. அதில் சிக்கல் இருக்கிறது. எங்கள் கடவுளே உண்மையானது என்று பிற மதத்தினிரிடையேயும், கடவுள் இல்லை என அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று நாத்திகர்களிடையேயும் வினவுவதற்கு அவர்களுக்கு அறிவியல் தேவைப்படுகிறது. மனிதர்களின் எல்லா போதுகளிலும் உடன் பயணப்படும் அறிவியலை, கடவுளை பெரிதுபடுத்த அறிவியல் குறைவுபடுத்திக் காட்டப்பட்டாக வேண்டும் எனும் தேவையை அவ்வளவு எளிதாக மதவாதிகளால் உதறிவிட முடியாது. அதனால் தான் அறிவியலைப் பிணைத்தே கடவுளை முன்னிருத்துகிறார்கள்.

இதை இன்னொரு கோணத்திலும் புரியவைக்க வேண்டியதிருக்கிறது. கடவுள் எத்தனை உயரத்திலிருக்கிறார் என்று அளந்து பார்ப்பதற்கு மனிதன் மிகுந்த முனைப்பெடுத்து புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது நான் ஏற்கனவே கூறியது தான். கடவுளின் தகுதிக்கு மனிதன் உயர்ந்து அல்லது கடவுளின் இடம் தேடி சோதித்துப் பார்ப்பது மனிதனுக்கு தேவையில்லாதது. இந்த பூமியில் மனிதனுடன் ஊடாடிக் கொண்டிருக்கும் கடவுளின் ஆற்றலை சோதித்துப் பார்ப்பதே மனிதனுக்கு போதுமானது. மனிதனல்லாத எந்த உயிரினத்தின் சிந்தையிலும் கடவுள் இல்லை. பூமியல்லாத வேறெங்கும் மனிதனும் இல்லை. எனவே கடவுளின் இருப்புக்கான தேவை, அதன் ஒட்டுமொத்த செயல்பாடு என அனைத்துமே பூமியை மையப்படுத்தியே இருக்கிறது. நண்பர் குலாம் கூறும் அந்த உண்மையான(!) கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் மனிதர்களை ஒவ்வொரு கணமும் ஆட்டுவித்துக் கொண்டே இருக்கிறான். ஆக, இந்த பூமியில் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆற்றலைத் தானே மனிதர்கள் அளக்க வேண்டியுள்ளது. பூமியை மனிதன் தன் அறிவியல் கண்களால் சல்லடை போட்டு அலசிக் கொண்டிருக்கிறான். மனிதன் மழையை அளப்பான், ஆனால் அந்த மழையை யாரும் தன் கட்டளையால் அனுப்பியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். மனிதன் மலையை அளப்பான், அதன் நீள அகலங்கள் உட்பட எந்தக் காலத்தில் அவை உயரத் தொடங்கின, ஆண்டுக்கு எத்தனை மில்லிமீட்டர்கள் உயருகின்றன என்றல்லாம் கணக்கிடுவான். ஆனால் அந்த மலையை யாரும் தன் கட்டளையால் தூக்கி நிறுத்தியதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். இந்த பூமியில் அமீபா, கிளாமைடோமோனஸ் தொடங்கி நீலத் திமிங்கலங்கள் வரை படம் வரைந்து பாகங்கள் குறிப்பான் மனிதன். ஆனால் அவ்வுயிர்களை யாரும் புடம் போட்டுக் கொடுத்தது போல் தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். பூமியில் மேற்பகுதியான கிரஸ்ட் தொடங்கி மையப் பகுதியான இன்னர் கோர் வரையிலும் தன் அறிவுக் கோல்களை நீட்டுவான் மனிதன். ஆனால் அதை யாரும் வடிவமைதிருப்பதாக தெரியவில்லையே என்றால் அது ஐந்தாம் நிலையாகிவிடும். கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாம். தன் வாழ்வின் பற்களில் எங்கெல்லாம் மனிதன் கடிபட்டு நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுளின் ஆயத்துகள் வெள்ளமென பாய்ந்துவரும். எங்கெல்லாம் மனிதன் கடவுளுக்கு நிரூபணம் கோரி நிற்கின்றானோ அங்கெல்லாம் கடவுள் பூடகங்களுக்குள் ஒழிந்து கொள்கிறார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், குலாம் கூறும் நான்காம் நிலை ஐந்தாம் நிலை என்பதன் கருப் பொருள் இது தான். தெளிவாகச் சொன்னால் கடவுளின் தகுதிகள் என்பது கடவுளின் பேராற்றல்களை மட்டும் குறிப்பதல்ல, தேவைப்படும்போது கடவுளை ஒழித்து வைப்பதற்கான சூக்குமங்களையும் உள்ளடக்கியதே கடவுளின் தகுதிகள். எனவே நண்பர் குலாம் கடவுளின் தகுதிகள் என்று இறுபூறெய்தலாக குறிப்பிடும் அனைத்தையும் உள்ளடக்கி எப்படி வேண்டுமானாலும் நிரூபித்துக் கொள்ளட்டும். ஆனால், மனித வாழ்வின் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்றை ஏற்பதற்கு நம்பிக்கை மட்டும் போதாது என்பதை உணர்ந்து கொண்டாக வேண்டும்.

நண்பர் குலாம் இப்படியும் கேட்டிருக்கிறார், \\\ஆய்வு ரீதியாக அல்லது நேரடியாக கடவுளின் இருப்பை உணர்த்துங்கள் என்ற கேள்வி தாண்டி கடவுளை மறுக்க உங்களுக்கு ஏதும் காரணம் சொல்ல முடியுமா? /// எனக்கு நகைக்கக் கூட முடியவில்லை. கடவுளின் இருப்புக்கு மட்டுமே நிரூபித்தல்கள். மாறாக சமூகத் தளங்களில் கடவுளின் தேவை குறித்த தார்மீகங்கள் என்றோ இல்லாதொழிந்து விட்டன. இவற்றுக்கு ஒன்றல்ல ஓராயிரம் காரணங்கள் கூறலாம். இது குறித்து ஏற்கனவே நண்பர் குலாமுடன் சிறு விவாதம் நடத்தப்பட்டிருக்கிறது. தேவைப்பட்டால் அதை பின்னர் கவனிக்கலாம். ‘ஓர் அழைப்பு’ எனும் தலைப்பில் நண்பர் பழைய ஆக்கங்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்த விவாதத்திற்கு தேவைப்படுமாயின் நண்பர் குலாம் அந்தக் கேள்விகளை இங்கு வைத்தால் தகுந்த பதிலளிக்கலாம். அவ்வாறன்றி அந்த பட்டியலிலிருந்து ஒவ்வொரு ஆக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் .. .. .. மன்னிக்கவும், அது தற்போது சாத்தியப்படாது, மட்டுமல்லாது திசை திருப்பலாகவும் அமையும்.

நண்பர் குலாம் அடுத்ததாக \\\மனிதர்கள் பாதிக்கபடுவதற்கு இறைவனிடம் பிரார்த்தித்து அவர்களின் பாதிப்பை நிவர்த்தி செய்தால் கடவுளின் இருப்பை தெளிவாய் உணர்த்தலாமே., சபாஷ்! என்ன ஒரு அறிவுப்பூர்வமான கடவுள் மறுப்பு சிந்தனை., உண்மையாகவே உங்கள் அறியாமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது சகோ செங்கொடி/// என்று ஆச்சரியப்படுகிறார். எது அறியாமை? கடவுளின் இருப்பு குறித்த விவாதத்தில், அது மெய்யாக நிலவவில்லை என்பதற்கான தரவுகளாக அறிவியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, சமூக ரீதியாக என்று மூன்று தளங்களிலும் கடவுளை மறுத்திருந்தேன். அதில் அறிவியலையும் வரலாற்றையும் நீக்கிவிட்டு சமூகத் தளத்திலுள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு எங்க கடவுளின் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறீர்களே என்று அங்கலாப்பது, எந்த விதத்தில் அறியும் ஆமையோ எனக்குப் புரியவில்லை. இதையே நான் எதிர்க் கேள்வியாக கேட்கிறேன். உங்களின் வேத வசனங்களின்படி, உங்கள் கடவுளின் கேரக்டரின்படி இந்த உலகம் மனிதர்களுக்கு அவகாசமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்றால் இவ்வுலகிலேயே தவறுகளுக்கு தண்டனை அளித்தது ஏன்? தற்போது ஆங்காங்கே மழைத்தொழுகை நடந்து கொண்டிருக்கிறது, பிராத்தித்து மழை வரச் செய்ய முடியும் என்றால், அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிடாது என்றால், முதலாளிகளுக்கு எதிராக என்று வந்தால் அது கடவுளின் கேரக்டரில் குறுக்கிட்டுவிடும் என்றால், எது அறியாமை? எது அறியும் ஆமை? அந்தக் கேள்வி மக்களின் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிடுவார் என்பதற்காகவோ, கேட்க மாட்டார் என்பதற்காகவோ முன்வைக்கப்படவில்லை. கடவுளின் இருப்பு குறித்த கேள்விக்கு உலகமே பிரார்த்தித்தாலும் கடவுளின் இருப்பை நிரூபிக்கும் வாய்ப்பில்லை என்பதற்காக முன்வைக்கப்பட்டிருந்தது.

அடுத்து நண்பர் குலாம் விவாதம் குறித்தும் சில கருத்துகளை கூறியிருக்கிறார், \\\விவாதங்கள் என்பது கருத்துக்களை பரிமாறும் ஒரு கூடம் அவ்வளவே .இதில் நான் சொல்வது தான் சரியென்று சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் விவாதத்தின் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே பொதுவில் வைக்கிறேன். மீதமுள்ள ஐம்பது சதவீகிதம் நீங்கள் வைக்கிறீர்கள். பார்வையாளர்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்/// இதை என்னால் ஒப்ப முடியாது. காரணம் இது விவாதம் என்பதன் வடிவத்தை மாற்றுவது போலிருக்கிறது. உடன்பாடில்லாத இருவேறு கருத்துகளைக் கொண்ட ஒரு விசயத்தில் விவாதம் நடத்தப்படுகிறது என்றால் அதன் பொருள், நேரடியாக அந்த இருவரின் கருத்துகளில் எது சரியான கருத்து என்பதை காரண காரியங்களுடன் இருவரின் மட்டத்தில் தீர்வை அடைவது என்பதும்; மறைமுகமாக அந்த விவாதத்தை கவனிக்கும் பார்வையாளர்கள், வாசகர்களின் அகப்பார்வையும் இது பாதித்து கேள்வியை எழுப்பி தீர்வை நோக்கி முன்தள்ளும் என்பதுமே ஆகும். அஃதன்றி, உங்களின் கருத்தை நீங்கள் கூறுங்கள் என் கருத்தை நான் கூறுகிறேன், பார்வையாளர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றால் அது குறைபாடுடையது. விவாதத்தில் என்னுடைய பதிலை பரிசீலித்து நீங்கள் பதில் கூற வேண்டும், உங்களுடைய பதிலை பரிசீலித்து நான் பதில் கூற வேண்டும். வெறுமனே அவரவர் கருத்துகளை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்தால் பரிசீலனை எங்கிருந்து வரும்? எனவே விவாதம் அதன் உள்ளார்ந்த பொருளுடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் ஆவல், நண்பர் குலாம் அதற்கு ஆவன செய்வார் என எண்ணுகிறேன்.

என் கருத்தை நான் கூறுகிறேன் உங்கள் கருத்தை நீங்கள் கூறுங்கள் என்று சொல்லப்படுவதன் விளைவு இப்போதே தலை காட்டியிருக்கிறது என்று கருதுகிறேன். பதில் கூறும் கடமையிலிருந்து நழுவிக் கொள்வது, கூறப்பட்ட பதிலை பரிசீலிக்க மறுப்பது போன்றவற்றையே விளைவு என கூறுகிறேன். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார். அறிவியல் ரீதியாகவும் நிரூபித்தேன், வரலாற்று ரீதியாகவும் நிரூபித்தேன். இதன் தொடர்ச்சியாக எந்த மறுப்பும் விளக்கமும் நண்பரிடமிருந்து வெளிவரவில்லை. என்றால் ஏற்றுக் கொண்டார் என்று பொருள் கொள்ளலாமா? மனிதன் தவிர்த்த வேறெந்த உயிரினத்துக்கும் கடவுள் குறித்த எண்ணம் இல்லை என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள் என்று கேட்டார், விளக்கப்பட்டது, அதன் பிறகு அது குறித்து எதுவும் இங்கு பேசப்படவில்லை என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? கடவுளை சோதிக்கும் கருவிகள் கடவுளை விட வல்லமையுடையதாய் இருக்கும் என்றார். அதை மறுத்தேன், அந்த மறுப்பை பரிசீலிக்காமலேயே அதே கேள்வியை வேறு சொற்களால் மீண்டும் கேட்டிருக்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? இதை விவாதம் குறித்த நண்பர் குலாமின் பார்வை மீதான மீளாய்வு என்பதாக மட்டும் கொள்ளாமல் \\\இதில் எங்கே நழுவுதலும் வழுதலும் உள்ளது என்று எனக்கு தெரியவில்லை சகோ செங்கொடி/// என வினவப்பட்டதற்கான புரிதலும் என்பதாகக் கொள்க.

மீண்டும் வருகிறேன்.

பின்னூட்டங்களா? பிற்போக்கு ஊட்டங்களா?

26 செப்

 

உதாரணங்கள் மட்டுமே உண்மையாகி விடுவதில்லை எனும் பதிவுக்கு மிகு விரைவாக சில பின்னூட்டங்களில் பதில் கூறியிருக்கிறார் நண்பர் குலாம். ஆனால் வழக்கமான மதவாத உத்திகளுடனே அவர் பதில் இருக்கிறது. உறைந்து போயிருக்கும் அந்த மதவாதத்தை உடைப்பதற்கு ஏதுவாக இன்னும் எத்தனை பின்னூட்டங்களை வேண்டுமானாலும் எழுதட்டும், நான் காத்திருக்கிறேன் உருக்குவதற்கு.

 

நண்பரின் முதல் பின்னூட்டத்தின் படி, இதுவரையில் மதவாதிகள் கடவுள் என்பதை எல்லாவித புரிதலுக்கும் அப்பாற்பட்ட நிலையிலேயே கூறிவருகிறார்கள். ஏனென்றால் எந்தவிதத்திலும் கடவுளுக்கு என்னனவிதமான ஆதாரக் குறியீடுகளையும் காட்டிவிட முடியாது. அதற்கு பதிலாக நண்பர், கடவுளை இங்கு பார்க்க முடியாது என்பதற்கான பதிலாக கூறியிருக்கிறார். கண்ணால் காண்பது மட்டுமே இங்கு பிராச்சனையல்ல. ஏதாவது ஒரு ஆதாரக் குறியீடு .. .. இதுதான் மையம், அந்த இடுகையின் சாராம்சமும் அதுதானல்லவா? எந்த ஒரு ஆதாரக் குறியீடும் கடவுளின் இருப்பை முன்வைத்து காட்டிவிட முடியாது என்றால் மதவாதிகள் எந்த அடிப்படையில் கடவுள் இருக்கிறது என்கிறார்கள்? நான் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டும் பதில் சொல்லப்படாத கேள்வி இது தான். நம்பிக்கையாளர்கள் கடவுளை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் உறுதியான ஒன்றாகவா? நம்பிக்கையாகவா? இப்போது குலாம் உறுதிப்படுத்தலாம். கடவுள் என்பது அவரது நம்பிக்கைதான் என்றால் இந்த இடத்திலேயே விவாதத்தை முடித்து விடலாம். ஆனால் அவர் கடவுள் உறுதியாக நிலவுகிறது என்கிறார். உறுதியாக ஒன்று நிலவ வேண்டும் என்றாலே அங்கு ஆதாரம் வேண்டும். ஆதாரம் எதுவும் இல்லையென்றாலும், ஆதாரம் காட்ட முடியாது என்றாலும் அது நம்பிக்கை. ஏதாவது ஒரு நிலையில் இருக்க வேண்டும். இரண்டிலும் இருக்க முடியாதல்லவா? விக்ஸ் எப்போதும் விக்ஸ் தான். ஆனால் அது என்ன பொருளில் ஆளப்பட்டது. விக்ஸ் என்பது நம்பிக்கை, மருந்து என்பது ஆதாரம். நம்பிக்கையை சுற்றிச்சுற்றி எழுதிவிட்டு அதை ஆதாரம் என்று கூறக்கூடாது. ஆனால் குலாம் உட்பட மதாவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். விக்ஸை சுற்றிச் சுற்றி எழுதி விட்டு அதை மருத்துவர் எழுதிய மருந்து போல காட்டுகிறார்கள்.

 

நண்பரின் இரண்டாவது பின்னூட்டத்தில் கூறப்பட்டவைகளுக்கும் மேலுள்ளதே போதுமானது. ஆனால் அதில் ஒரு துணைக் கேள்வி இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது \\\அறிவியலால் உணர்த்த முடியாதது கடவுள் என்கிறேன். அதற்கு அறிவியலால் உணர்த்த முடியும் கடவுள் இல்லையென்பதற்கு என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள்/// இதற்கு நான் மறுப்புக் கட்டுரையில் நேரடியாகவே பதில் கூறியிருக்கிறேன். \\\எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும்/// அறிவியலுக்கு ஆட்படும் கடவுள் அறிவியலுக்கு ஆட்படாத கடவுள் என்றெல்லாம் தனித்தனியாக ஒன்றுமில்லை. கடவுள் என்ற ஒன்று உறுதியாக இருப்பதாக ஒரு சாராரால் நம்பப்படுகிறது. அது நம்பிக்கையா? மெய்யா? எனும் பிரச்சனைக்குத்தான் அறிவியலின் துணை கொண்டு ஆராய்கிறோம். எனவே உட்பட்டது உட்படாதது என்றெல்லாம் பிரிவினை செய்வதற்கு வாய்ப்பில்லை. யாரை நோக்கி விரல் சுட்டப்பட்டிருக்கிறது என்பதை மறைத்து விரல் விளையாட்டுகள் வேண்டாமே.

 

நண்பரின் மூன்றாவது பின்னூட்டத்தில் ’தவறான புரிதல்’ கட்டுரையில் நண்பர் எழுதியிருந்த ஒரு வாக்கியத்துக்கு நான் கூறிய பொருள் தவறு என்று கூறி அவரே பொருளும் கூறியிருக்கிறார். அதற்கு இப்படி எச்சரிக்கையும் செய்திருக்கிறார். \\\ஒருவர் என்ன கூற விரும்புகிறார் என்பதை அவர் தான் சொல்ல முடியும். நாமாக தீர்மானித்தால் அது நமது சுய தீர்மானிப்பே!/// சரி இப்படியெல்லாம் பீடிகை போட்டுவிட்டு நண்பர் கூறும் பொருள் என்ன? \\\ஆரம்பத்தில் நான் கண்ட இறை நிராகரிப்பாளர் தங்களை நாத்திகவாதிகள் என இந்த சமூகத்தில் அடையாளம் காட்டுவதற்கு மறுத்த கடவுள் என்ன தெரியுமா? தீப்பெட்டி அட்டையிலும், பட்டாசுகளை சுற்றி இருக்கும் தாளிலும் அச்சாகி இருக்கும் உருங்களையும், பூஜை புனஸ்காரங்கள் தேவைப்படும் கடவுள்களையுமே/// இது நண்பரின் வாக்கியத்திற்கு அவரே கூறும் அருஞ்சொற்பொருள். அதன் பொருளாக நான் குறிப்பிட்டிருந்தது என்ன? \\\வெவ்வேறு மதங்களில் கூறப்படும் கடவுளின் தன்மைகள் குறைவுடையதாய் இருக்கின்றன, கடவுளை மறுப்பவர்கள் இந்த குறை தன்மையுடைய கடவுளின் குறைகளையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நாங்கள் கூறும் கடவுள் குறைகளே இல்லாதவர். எனவே குறைவுடைய கடவுளை மறுத்து கடவுள் மறுப்பாளரான நீங்கள் அதையே குறையில்லாத கடவுளுக்கும் நீட்டிக்கிறீர்கள் என்பது தான் அவர் கூற வருவது/// இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? அவர் என்ன கூறியிருக்கிறாரோ அதையே நான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறேன். பின் ஏன் இந்த சுற்றாடல்கள்? இதே பின்னூட்டத்தில் இப்படியும் கூறியிருக்கிறார் \\\இப்படி இருந்தால் கடவுள் இல்லை, இப்படி இருக்கவும் கடவுளால் முடியாது, – ஆக கடவுள் என்று ஒன்று இல்லை என கூற வேண்டும்/// இப்படித்தான் நான் கூறியிருக்கிறேன். கடவுள் என்பதன் தன்மையாக பொதுவாக கூறப்படுவது என்ன? ஒரு குறிப்பிட்ட காலவரை இல்லாமல் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் என்பது தானே. இதற்குத்தான் நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை. எனவே கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்று கூறியிருக்கிறேன். நண்பர் படிக்கவில்லையா? \\\எப்போதும் நிலைத்து நின்று இயங்கிக் கொண்டே இருக்கும் பொருள் என்று எதுவும் இருக்க முடியாது, நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை என அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது/// கடவுள் இல்லை என்பதற்கு இதைவிடவும் வேறு சான்று வேண்டுமா? இதுபோல் கடவுளாக கூறப்படுவனவற்றின் தன்மைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டும் அறிவியலோடு உரசிப் பார்க்கலாம்.

 

இந்த இடத்தில் மதவாதிகள் செய்யும் வழக்கமான குயுக்தி ஒன்றையும் நினைவு படுத்திவிடலாம். கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விடுவார்கள். நிரூபித்தால் கடவுள் அறிவியலுக்குள் அகப்படமாட்டார், அகப்பட்டால் அவர் கடவுளாகவும் இருக்க முடியாது என்பார்கள். எந்த வழியிலும்(கவனிக்கவும் கண்ணால் காண்பது மட்டுமல்ல) தென்படாத கடவுளை நீங்கள் எப்படி அவ்வளவு உறுதியாக இருக்கிறது என நீங்கள் கூற முடியும் என்றால், அவ்வாறு நாங்கள் நம்புகிறோம் என்பார்கள். அப்படியென்றால் அது நம்பிக்கை தானே உறுதியானது இல்லையே என்றால், இல்லையில்லை கடவுள் உறுதியாக இருக்கிறது என்பார்கள். உறுதியாக இருக்கிறது என்றால் அறிவியல் ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டால், கடவுள் இல்லை என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா? என்பார்கள் .. .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .. .. அப்பா இப்பவே கண்ணைக் கெட்டுதே .. .. என்ற வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. நண்பர் குலாம் தாம் இப்படி அல்லர் என கூற விரும்பினால் நம்பிக்கையா உறுதியானதா என்று தெளிவுபடுத்தலாம், அவரால் முடிந்தால்.

 

நண்பரின் நான்காவது பின்னூட்டத்தில் சுரண்டலின் வடிவமாக இருப்பதால் தான் கம்யூனிஸ்டுகளால் கடவுள் மறுக்கப்படுகிறார் எனும் என்னுடைய கருத்துக்கு பதில் கூறியிருக்கிறார். பதில் கூறியிருக்கிறார் என்பதைவிட திசை திருப்பியிருக்கிறார் என்பதே சரியாகும். சுரண்டலின் வடிவமாக கடவுள் இருக்கிறார் அதாவது சுரண்டலின் வடிவமாக கடவுள் ஆக்கப்பட்டிருக்கிறார் என்பது என்னுடைய கேள்வி. நாங்கள் சுரண்டலுக்காக கடவுட் கொள்கையை ஆதரிக்கிறோமா? கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இல்லையா? சுரண்டலை எதிர்க்கும் விதத்தில் ஒரு கடவுட் கொள்கை இருந்தால் ஒப்புவீர்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்வி எழுப்பியிருப்பதுதான் இதற்கான  நண்பரின் பதில். இன்னொரு முறை நிதானமாக படித்துப் பார்த்தால் நான் கேட்டிருப்பது அதுவல்ல என்பது புரியும். சாராம்சத்தில் கடவுட் கொள்கை சுரண்டலே. அது நம்பிக்கை எனும் அடிவாரத்தின் மேல் மக்கள் மனதில் கட்டப்பட்டிருப்பதால் அந்த சுரண்டல் மக்களுக்கு புரியவில்லை. மக்களிடம் இருக்கும் அந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை போக்க வேண்டும் என்பதில் தான் எங்களின் ஆர்வம். கம்யூனிச நாடுகளில் வர்த்தக ரீதியான கலவரங்கள் இருக்காது, கூடுதல் தகவலாக இப்போது கம்யூனிச நாடுகள் என்று எதுவுமில்லை. கடவுட் கொள்கையிலிருந்து சுரண்டலை நீக்கிவிட்டால் அதில் எஞ்சுவது ஒன்றுமிருக்காது. சுரண்டலே இல்லாத கடவுட் கொள்கை என்ற ஒன்று தோன்றவும் முடியாது. ஏனென்றால் சுரண்டல் தீர்ந்து போய் விட்டால் கடவுளின் அவசியமும் தீர்ந்து போய்விடும். திசை திருப்பல் இல்லாமல் என்னுடைய கேள்விக்கு நண்பர் எதிர்க் கேள்வி எழுப்ப வேண்டுமென்றல் கடவுள் எங்கணம் சுரண்டலின் வடிவமாக இருக்கிறார்? என்று தான் கேட்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான கேள்வி இந்த கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் தர்க்க ரீதியான இந்த விவாதத்தை, அதில் ஒரு முடிவை எட்டாத நிலையிலேயே அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கும். அதற்கும் நாம் ஆயத்தமே என்றாலும் முடிவை எட்டிவிட்டு தொடரலாம்.

 

நண்பரின் ஐந்தாவது பின்னூட்டத்தில், அறிவியலின் புலம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நம்மால் அறியமுடியாத உயரத்தில் இருக்கிறது என்று கூறிவிடுவது மட்டுமே ஒன்று இருக்கிறது என்பதற்கான உறுதிப்படுத்தல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நண்பரோ இன்றிருக்கும் நவீன கண்டுபிடிப்புகளை 5000 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்திருக்க முடியுமா என்கிறார். இதையும் நான் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன் நண்பர் கண் கொடுக்க மறுத்திருக்கிறார். ஐந்தாயிரம் ஆண்டுகளல்ல, ஐந்து லட்சம் ஆண்டுகள் கூட ஆகட்டும் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? என்பதல்லவா கேள்வி. எக்காலத்திலும் கண்டுணரப்பட வாய்ப்பே இல்லை எனும் போது அதை உறுதியாக நிலவுகிறது என்று கூறாதீர்கள் எங்கள் நம்பிக்கை மட்டுமே என்று கூறுங்கள் என்கிறேன்.

 

இன்னொன்றும் கூறியிருக்கிறார், \\\கடவுளை உறுதி செய்யும் சாதனங்கள் அதை காட்டிலும் சக்தி மிகுந்தாக இருக்கவேண்டும். அப்படி அவற்றால் கடவுளை கண்டறிந்தால் கண்டறியப்பட்ட அது எப்படி கடவுளாக ஏற்க முடியும்?? கடவுளை கண்டறிந்த அதுவல்லவா கடவுளை காட்டிலும் சக்தி மிகுந்ததாக இருக்கும்/// அதாவது கடவுளை விட எதுவும் சக்தி மிகுந்ததாக ஆகிவிடக் கூடாதே என்பது தான் நண்பரின் கவலையாகத் தெரிகிறது. இவைகளெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை. ஒன்றைக் கண்டறியும் சாதனம் அதைவிட உயர்ந்ததாகிவிடுமா? நுண்ணுயிர்களைக் கண்டறியும் சாதன் உருப்பெருக்கி என்றால் உறுப்பெருக்கி சாதனங்கள் நுண்ணுயிர்களை விட உயர்ந்தது என்று என்ன பொருளில் கூற முடியும்? ஒரு சாதனம் என்றாலே அது தானே இயங்கும் வல்லமை பெற்றதல்ல என்பது பொருள். தானே இயங்கும் பொருளைக் காட்டியில் இயக்கும் ஒரு பொருள் உயர்ந்தது என்று எவ்விதத்திலும் கூறமுடியாது. எனவே நண்பர் மாச்சரியங்களை விட்டுவிட்டு தேடலில் முனைவாராக.

 

நண்பரின் ஆறாவது பின்னூட்டத்தில் நம்பிக்கையா உறுதியானதா எனும் கேள்வி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆதாரம் காட்டமுடியாது என்றால் நம்பிக்கை என்று ஒப்புக் கொள்ளுங்கள், உறுதியானது என்றால் ஆதாரம் காட்டுங்கள். உறுதியானது ஆனால் ஆதாரமில்லை என்றால் அது போங்காட்டம் என்று கூறியிருந்தேன். நண்பர் குலாம் இதற்கு நேர்மையாக பதில் கூற வேண்டுமென்றால் நம்பிக்கையா உறுதியானதா என்பதையல்லவா தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் நண்பரிடமிருந்து இதற்கு பதில் வராது, மட்டுமல்ல, எந்த மதவாதியிடமிருந்தும் பதில் வராது. இதைத்தான் போங்காட்டம் என்பது. ஆனால் நண்பர் என்ன கூறியிருக்கிறார்? \\\கடவுளின் இருப்பு நம்பிக்கையென்றால் அதை பொய்பிக்கும் அறிவியல் நிருபணம் என்ன? அறியலை பொருத்தவரை இல்லாத ஒன்று என்று ஒன்று இல்லை. எங்கே நீங்கள் நிருபணம் தாங்களேன் கடவுள் இல்லையென்று.. கேட்காத ஒலியலைகள் உதாரணே ஆனாலும் அது உண்மை என்பதை எவரும் ஒப்பு கொள்வர். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை மதவாதிகளின் நம்பிக்கையாக நிறுவ முயலும் நீங்கள் கடவுள் இல்லா நிலையில் கேட்கும் பல கேள்விகளுக்கு போங்காட்டம் ஆட கூட வர மாட்டேன் எங்கீறீர்களே அது ஏன் சகோ?/// யாரிடம் நிரூபணம் கேட்கிறார் நண்பர் குலாம். அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிரூபணம் தந்திருக்கிறேன் கடவுள் இல்லை என்பதற்கு. இன்னும் என்ன வேண்டும்? கடவுள் இல்லா நிலையில் நீங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கு நான் பதில் தரவில்லை? கூறமுடியுமா? வேறேதாவது இடுகைக்குள் நீங்கள் அந்தக் கேள்விகளை பதிந்து வைத்திருந்தால் இங்கு அதை கேள்விகளாகக் கேளுங்கள். கேள்விகளுக்கு நான் மருள்பவன் அல்லன். இப்போது கூறுங்கள் போங்காட்டம் ஆடுவது யாரென்று.

 

நண்பரின் ஏழாவது பின்னூட்டத்தில், கடவுள் பூமியில் மட்டுமே இயங்கும் தன்மை குறித்து எடுத்துக் கொள்ளப்பட்டுளது. அதில் நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன், \\\பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா?/// இதற்கு எந்த வித பதிலையும் கூறாத நண்பர் குலாம் அதையே எதிர்க் கேள்வியாகவும் கேட்டிருக்கிறார் \\\மனித மூளையை தவிர வேறந்த உயிரின அறிவிற்கும் கடவுள் குறித்து அறிந்துக் கொள்ளவில்லை யென்பதற்கு ஆதாரம் தர முடியுமா சகோ/// என்று. பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி நண்பர் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார். நான் பதில் கூறுகிறேன், மனிதனைத்தவிர வேறெந்த உயிரினத்திற்கு கடவுள் குறித்த சிந்தனை இல்லை. எப்படி? மனிதன் கொண்டிருக்கும் மேம்பட்ட சிந்தனை வடிவம் மனிதன் சமூகவயப்பட்டதன் எதிர்வினை. இப்படி மேம்பட்ட சிந்தனை வடிவம் விலங்குகளுக்கு இல்லை. ஏனைய உயிரினங்களின் சிந்தனை எல்லாம் உண்பதற்கும் உண்ணப் படாமலிருப்பதற்குமேயான பயன்பாட்டு வடிவம் தான். கடவுள் என்ற சிந்தனை தன்னைப்பற்றிய அறிதலுள்ள, தனக்கு மேலாகவும் ஒரு சக்தி இருக்கக் கூடும் எனும் புரிதலுள்ள உயிரினங்களுக்கு மட்டுமே ஏற்பட முடியும். இந்தப் புரிதல் மேம்பட்ட சிந்தனை இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே, மனிதனைத் தவிர வேறெந்த உயிரினங்களுக்கும் கடவுள் எனும் சிந்தனை வந்திருக்காது. இதை இன்னொரு வாயிலாகவும் பார்க்கலாம். ஒரு உயிரினத்திற்கு ஒரு சிந்தனை இருக்கிறது என்றால் அது செயலில் வெளிப்பட்டால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மனிதனுக்கு கடவுள் எனும் சிந்தனை இருக்கிறது என்பது அவனது செயல்களின் மூலம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. மனிதனைத்தவிர வேறெந்த உயிரினங்களிடமாவது கடவுட் சிந்தனை இருக்கிறது என்பது செயல்களில் வெளிப்பட்டிருக்கிறதா? இல்லையே, வேறெப்படி கடவுள் சிந்தனை இருப்பதாக கூறமுடியும்? நண்பர் குலாம் கேட்ட எதிர்க் கேள்விக்கு நான் பதில் கூறிவிட்டேன். என்னுடைய கேள்விக்கு பதில் கூற முடியுமா நண்பரால்?

 

அந்த பின்னூட்டத்தில் நண்பர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கிறார். மனிதனுக்கு மட்டும் தனிச்சிறப்பாக கடவுள் எனும் சிந்தனை தோன்ற வேண்டிய அவசியம் என்ன? மனிதன் இயற்கை ஆற்றல்களின் மிகையைக் கண்டு பயந்தான். அதற்காக சடங்குகள் செய்தான். மறுபுறம் இனக்குழுத் தலைவர்கள் இனத்தைக் காக்கும் போரில் காட்டிய தீரமும் வீரமும் அவர்கள் இறந்த பிறகும் நினைவு கூறத்தக்கதாக, அனுபவப் பாடமாக கடந்து வந்தது. இவை இரண்டும் இணைந்தே கடவுள் எனும் சிந்தனை மனிதனுக்கு தோன்றியது. அதுவே பின்னர் சுயநலமிகளின் கைகளில் மதமாக மாற்றம் கண்டது. இனி நண்பர் குலாம் ஏன் கடவுளை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவராக உருவகப்படுத்துகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கட்டும்.

 

நண்பரின் எட்டாவது பின்னூட்டத்திலும் கடவுட் சிந்தனை ஏன் மனிதனுக்கு வந்தது என்பதே கேள்வியாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மனிதன் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் இருக்கின்றதாக குறிப்பிடுகிறார். நான் கேட்பது ஆதாரங்கள் நிரூபணங்கள் தகவல்கள் அல்ல.

 

நண்பரின் கடைசி பின்னூட்டத்தில், சமூக ரீதியாக நான் கேட்டிருந்த அன்னிய முதலீடு குறித்த கேள்வியை திசை திருப்பி இருக்கிறார் நண்பர் குலாம். நான் கேட்டிருந்தது என்ன? கோடிக்கணக்கானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றை உறுதியாக இருக்கிறது என்று நம்பப்படும் கடவுளின் துணை கொண்டு ஏன் அகற்றக்கூடாது. அதாவது பிரார்த்தனை எனும் முயற்சியைத் தவிர வேறெந்த மனித முயற்சியும் இல்லாமல் தனியார்மயம் திடீரென்று நீங்கி விட்டால் அதன் மூலம் கடவுள் இருப்பை உறுதிப் படுத்திக் கொள்ளலாமல்லவா? இந்த அடிப்படையில் தான் என்னுடைய கேள்வி அமைந்திருந்தது. இதை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கடவுள் இல்லை என்கிறீர்களா? என்று மடை மாற்றுகிறார். திசை திருப்பாமல் என்னுடைய கேள்விக்கு பதில் கூறுங்கள் நண்பரே.

 

அடுத்து ஒரு வாசகம் எழுதியிருக்கிறார் பாருங்கள், புளகமடைந்து விட்டேன். \\\உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமோ போதாதோ.. அதை நடு நிலை வாசிப்பாளர்கள் தீர்மானிப்பார்கள். நிச்சயமாக சுய ப்ய்ரிதலை உலக உண்மையாக்க நினைக்கும் எந்த எண்ணங்களும் மக்கள் மன்றத்தில் உயிர் பெறாது/// முதல் வாக்கியத்தில் நடுநிலை வாசகர்கள் தீர்மானிப்பார்கள் என்கிறார். ஆனால் மறு வாக்கியத்திலேயே, என்னுடைய பதிலை சுயபுரிதல் என்று சுருக்கி அவருடைய விருப்பத்தை உயிர் பெறாது என்று தீர்ப்பாக கூறிவிட்டார். ஏன் உயிர் பெறுமா பெறாதா என்று அந்த நடுநிலை வாசிப்பாளர்கள் தீர்மானிக்க மாட்டார்களா? .. .. பலே! கெட்டிக்காரர் தான்.

 

நான் தெளிவாக மீண்டும் மீண்டும் கேட்க விரும்புவது இதைத்தான். கடவுள் என்பது நம்பிக்கையா? உறுதியானதா? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதிலிருந்து இன்னும் எத்தனை முறை நண்பர் நழுவிச் செல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

உதாரணங்கள் மட்டுமே உண்மையாகிவிடுவதில்லை

22 செப்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது பகுதி 2-1

”கடவுள் ஏன் இருக்கக் கூடாது” இந்த தலைப்பில் நண்பர் குலாம் அவர்களுடன் ஒரு விவாதமாக நான்கு பகுதி வரை வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு மதவாதிகளின் இடையூறுகள் உள்ளிட்ட இன்ன பிறவற்றால் அவற்றை தொடர முடியாமல் போய்விட்டது. இதற்கிடையே நண்பர் குலாம் கடவுளின் இருப்பு குறித்து வேறு சில கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவற்றிலொன்று தான் ‘ஓர் அழைப்பு’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை. அதைப் படித்ததும் மீண்டும் இந்தப் பகுதியை தொடர வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து நண்பர் குலாமுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்த போது இணக்கம் தெரிவித்தார். மட்டுமல்லாது ‘கடவுள் ஒரு மெகா தவறான புரிதல்’ என்றொரு ஆக்கம் வரைந்து அதையே இரண்டாம் பகுதிக்கு முதலாவதாய் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். இதோ நானும் ஆயத்தமாகி விட்டேன்.

முதலில் நண்பர் குலாமுக்கு ஒரு வேண்டுகோள், கடவுள் ஏன் இருக்க வேண்டும், கடவுள் ஏன் இருக்கக் கூடாது என்பதை தலைப்பாகக் கொண்டு; புரிதலை நோக்கிய, தேடலை நோக்கிய தெளிவாகச் சொன்னால் முடிவை நோக்கிய விவாதமாக ஏன் இதை நகர்த்திச் செல்லக் கூடாது? ஐயத்திற்கு துளியும் இடமின்றி உங்களுக்கு நேர நெருக்கடி இருக்கிறதென்பதை நான் அறிவேன். அதிலும் முன்பைவிட தற்போது உங்கள் நேரம் அதிகம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் நான் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோள் உங்களின் நேரமின்மையை மட்டும் குறிப்பதல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல். எனவே தர்க்கத்தைக் குழைத்து பூடகமான பதிவுகளுக்குப் பதிலாக குறிப்பான, தொடர்ச்சியில், தேடலில் தங்கியிருக்கும் பதிவாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

‘கடவுள் ஒரு மெகா தவறான புரிதல்’ எனும் கட்டுரையில் நண்பர் குலாம் கூறியிருப்பது என்ன? கடவுளை எந்த மனிதனாலும் அறிந்து கொள்ள முடியாது. கடவுளை அளக்கும் உயரமோ, தகுதியோ அறிவியலுக்கு இல்லை. கடவுளை மறுப்பவர்கள் எந்த ஆதார குறியீடுகளையும் காட்டவில்லை. கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தானே எல்லா மதவாதிகளும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் குலாம் புதிதாக இதில் கூறுவதற்கு என்ன இருக்கிறது? தர்க்கத்தைக் குழைத்து எழுதிவிட்டால் .. .. .. சுத்திச் சுத்தி எழுதினாலும் விக்ஸ் விக்ஸ் தான்(விவேக் காமெடி)

\\\கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை/// \\\கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு/// இப்படியெல்லாம் எழுதும் குலாமுக்கு மிகுந்த துணிவு தான். கடவுளை நம்பும் எவரும் குலாம் உட்பட இதுவரை கடவுள் என்றால் என்ன? என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்களா? கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஆதாரக் குறியீடுகள் தந்திருக்கிறார்களா? பாவம் எதிர்நோக்கி சுட்டுவிரல் நீட்டும் முன் தம்மை நோக்கி மூன்று விரல்கள் நீண்டிருக்கின்றன என்பதை மறந்துவிட்டார்.

கடவுளை மறுப்பவர்கள் எந்தக் கடவுளை மறுக்கிறார்கள்? எந்தக் கடவுள் இருப்பதாக நம்பப்படுகிறதோ அந்தக் கடவுளைத்தான் மறுக்க முடியும். மறுப்பதற்கென்று இன்னொரு கடவுளையா உருவாக்க முடியும். \\\ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை// இப்படியும் குலாம் எழுதியிருக்கின்றார் என்றால், அவர் கூற விரும்புவதன் பொருள் என்ன? வெவ்வேறு மதங்களில் கூறப்படும் கடவுளின் தன்மைகள் குறைவுடையதாய் இருக்கின்றன, கடவுளை மறுப்பவர்கள் இந்த குறை தன்மையுடைய கடவுளின் குறைகளையே மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக நாங்கள் கூறும் கடவுள் குறைகளே இல்லாதவர். எனவே குறைவுடைய கடவுளை மறுத்து கடவுள் மறுப்பாளரான நீங்கள் அதையே குறையில்லாத கடவுளுக்கும் நீட்டிக்கிறீர்கள் என்பது தான் அவர் கூற வருவது. ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் எந்த மதத்துக் கடவுள் என்பதை பிரதானமாக எடுத்துக் கொள்வதில்லை. கடவுளின் பொதுவான தன்மைகளான படைத்து காத்து அழிக்கிறார், அவனின்றி அணுவும் அசையாது போன்றவற்றை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் கடவுளையே மறுக்கிறார்கள். இன்னும் தெளிவாகவே சொல்லிவிடலாம், கடவுளை மறுத்தே ஆகவேண்டும் எனும் அவசியம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. சமூக ரீதியான போராட்டத்தில் கடவுளின் வடிவம் சுரண்டலை தக்க வைப்பதற்கு பயன்படுகிறது என்பது தான் அதில் முதன்மையான அம்சம், அந்த அடிப்படையில் நின்றுதான் நாங்கள் கடவுளை மறுக்கிறோம். எனவே ‘கடவுள் மறுப்பை’ பிழையற புரிந்து கொள்ளும் கடமையும் நண்பருக்கு உண்டு.

கடவுள் உண்டு என்பதற்கு நண்பர் கூறும் நிரூபணம் என்ன? குறைந்த அல்லது அதிகமான செசிபல் சப்தங்களை நம்மால் கேட்க முடியாது என்பதால் அவ்வாறான ஒலிகள் இல்லை என முடியுமா? அது போலத்தான் கடவுளும். இதைத்தான் காலங்காலமாக எல்லா ஆத்திகர்களும் கூறி வருகிறார்கள். போலக்காட்டி ஒருவித பொருள் மயக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் சாத்தியங்களை தன் விருப்புகளுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்வது. எல்லா மதவாதிகளின் உத்தியும் இதுதான். விரிவாக இதை விளக்கலாம்.

மனிதனின் அறிவு என்பது இதுவரை மனிதகுலம் புலன்களால் புலன்களால் பெற்ற தகவல்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது தான். அறிவியல் என்பது தன்னிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு தனக்கு தேவையான புதிரை அவிழ்க்கும் முயற்சி, தொடர் சோதனைகளால் உண்மையை மட்டுமே உறுதிப்படுத்தும் ஒழுங்கு. மனிதனுக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்து வைப்பதற்கு இருக்கும் ஒரே உரைகல் அறிவியல் மட்டுமே, வேறொன்று இல்லை. இப்போது குலாம் கூறும் எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம். \\\எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது/// சரிதான் அதேநேரம் அதை உறுதியாக இருக்கிறது என்றும் கூறிவிட முடியாதே. ஏதாவது வகையில் ஒரு மெய்ப்பித்தல் இருந்தால் மட்டுமே அதை உண்மை என்று ஏற்க முடியும் அல்லவா? ஒலியலைகள் குறிப்பிட்ட அளவுக்கு மேலோ கீழோ இருக்கும் போது மனிதனுக்கு அவ்வாறு இருக்கிறதா இல்லையா எனும் ஐயம் இருந்திருக்கவில்லை. ஏதோ ஒரு ஆய்வில் அவ்வாறு இருப்பதற்கான தடயம் கிடைத்த போது தயங்காமல் ஏற்றுக் கொண்டான் மனிதன். இதில் இரண்டு விசயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். 1. மனிதன் அறியாதபோதும் அந்த ஒலியலைகள் இருந்தன, ஆனால் அவைகளைப் பற்றிய எந்த உணர்வும் மனிதனுக்கு இல்லாமலிருந்தது. 2. ஒலியலைகளை மெய்ப்பித்த பிறகே மனிதன் ஏற்றுக் கொண்டானேயன்றி வெறும் நம்பிக்கையை மட்டும் கொண்டு ஏற்கவில்லை. இந்த இரண்டு விசயங்களும் நமக்கு உணர்த்துவது என்ன? மனிதனின் உணர்வுக்கு அப்பாற்பட்டு எதாவது இருந்தால் அதால் மனிதனுக்கு ஏதொரு காரியமும் இல்லை. தேவை இல்லாத போது அதை ஏற்கவும் இல்லை, தடயம் கிடைத்தபோது அதை மறுக்கவும் இல்லை. இதை எப்படி புரிந்து கொள்வது? அதாவது முதலில் மனிதனுக்கு இப்படி ஒன்று இருக்கக் கூடும் எனும் சிந்தனையே மனிதனுக்கு இருக்கவில்லை, ஆனாலும் அது இருந்தது. பின்னர் மனிதனின் ஆய்வுகளில் அது மெய்ப்பட்டது. இப்போது அந்த ஒலியலைகளை கடவுளுக்கு பொருத்திப் பார்ப்போம். முற்காலத்தில் மனிதனுக்கு கடவுள் குறித்த எந்த ஒரு சிந்தனையும் இல்லை. பின்னர் அப்படி ஒன்று இருக்கக்கூடும் எனும் கற்பனை ஏற்பட்டது. இனி எந்தக் காலத்திலாவது ஏதாவது ஒரு அறிவியல் ஆய்வில் கடவுளின் இருப்பு மெய்ப்பிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதா? இதை எந்த ஆத்திகராவது மதவாதிகளாவது ஒப்புவார்களா? கடவுள் ஆய்வுகளில் அகப்படுவாரா என்பதைவிட அவ்வாறு அகப்படுவதை கடவுளாக ஒப்புவர்களா என்பதே சரியான கேள்வியாக இருக்கும்.

நான் அடிக்கடி இப்படிக் கேட்பதுண்டு. கடவுளின் இருப்பு என்பது நம்பிக்கையா? உறுதியானதா? நம்பிக்கையானது என்றால் அதில் கேள்வி கேட்பதற்கு ஒன்றுமில்லை. உறுதியானது என்றால் சான்றாதாரங்களைக் காட்டுங்கள். ஆதாரம் ஒன்றுமில்லை ஆனால் உறுதியானது என்றால் அது போங்காட்டம். ஆமாப்பா நம்பிக்கைதான் என்று தெளிவுபடுத்திவிடுவதில் ஆத்திகவாதிகளுக்கு என்ன சிக்கல்? அப்படிச் செய்தால் மதவாதமே அடிபட்டுப்போகும். அதனால் தான் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள், உண்மையை ஒருபோதும் பேச மாட்டார்கள்.

ஆன்மீகவாதிகள் எப்போதும் கடவுளை பேரண்டத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக, மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே காட்டுவார்கள். ஆனால் கடவுள் பேரண்டத்திற்கு அப்பாற்பட்டு, மனித அறிவுக்கு அப்பாற்பட்டு இயங்குகிறாரா? இல்லை. பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைசிக் கட்ட உயிரினமான மனித மூளையைத் தாண்டி வெறெதிலாவது கடவுள் குறித்த சிந்தனையோ, கற்பனையோ தோன்றியிருக்கிறது என்று எந்த கடவுள் நம்பிக்கையாளராவது நிரூபிக்க முடியுமா? அல்லது இப்பூமியைத் தாண்டி பேரண்டத்தின் வேறெந்த மூலையிலாவது மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று கூற முடியுமா? ஆக பேரண்டத்தில் வேறெங்குமே வாழாத, பூமியில் தோன்றி வாழ்ந்த பல்கோடி உயிரினங்களில் வெகு அண்மையில் தோன்றிய மனித மனங்களில் மட்டும் உயிர் வாழ்வதாக இவர்கள் கூறும் கற்பனைக் கடவுளுக்கு ஆதாரம் கேட்டால் கேட்காத ஒலியலைகள் தொடக்கம் உதாரணத்துக்கு மேல் உதாரணமாக காட்டிக் கொண்டிருப்பார்கள் என்றால் அதன் பொருள் வெறும் சப்பைக்கட்டு என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா?

வேறொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். ரிக்டர் அளவுகோலால் அளந்து சாம்பாருக்கு கத்திரிக்காய் நிறுத்து வாங்க முடியாது எனும் போது மனித அறிவால் கடவுளை எடை போடக் கூடுமோ! \\\மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே/// இதுவரை மனிதன் அறிவியலால் சோதனை செய்ய முடியாதவற்றை இல்லை என்று மறுத்தே வந்திருக்கிறான், அல்லது யூக நிலையில் வைத்திருக்கிறான். இதுதான் மனிதன் கடந்து வந்த வரலாறு. ஆனால் அந்த வரலாறுக்கு முரணாக அறிவியலால் சோதித்தறிய முடியாத ஒன்றை யூகமாக அல்லாமல் உறுதியாக ஏற்க வேண்டும் என்று எந்த அடிப்படையில்  கூறுவது? அப்படிக் கூறுவதற்கு ஏதாவது முகாந்திரம் இருக்கிறதா? கற்பனையான கடவுள் நம்பிக்கையை உறுதியாக ஏற்பதற்கு அறிவியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வழியில்லை.

அறிவியல் ரீதியாக கடவுள் இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஆம். ஓர் எளிய கேள்வியே இதற்குப் போதுமானது. எப்போதும் நிலைத்து நின்று இயங்கிக் கொண்டே இருக்கும் பொருள் என்று எதுவும் இருக்க முடியாது, நிலையான இயக்கம் என்று எதுவுமில்லை என அறிவியல் அறுதியிட்டுக் கூறுகிறது. வரலாற்று ரீதியாக கடவுள் இல்லை என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? ஆம். தொல் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த முறை பற்றி அறிவதற்குறிய குறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன. என்ன உண்டார்கள் எப்படி உண்டார்கள் என்பது தொடங்கி எப்படி வாழ்ந்தார்கள் என்பது வரை படிமங்களும் கல்லோவியங்களும் கிடைத்திருக்கின்றன. அவை எவற்றிலும் கடவுள் எனும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை அவர்களுக்கு இருந்தது என்பதை விளக்குவது போல் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பலவிதமான சடங்குகளின் சாட்சிகள் அப்படி ஒரு சிந்தனை அவர்களுக்குள் இல்லை என்றும், அந்த வழிபாடுகள் இயற்கைக்கு அவர்கள் பயந்து வழிபட்டதையும் உணர்த்துகின்றன.

வரலாறும் அறிவியலும் இப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? மதவாதிகள் காட்டும் உதாரணங்களின் அடிப்படையிலா? அறிவியல் ஆய்வுகளோ, வரலாற்று படிமங்களோ வேண்டாம். சமூக ரீதியிலாவது கடவுளின் இருப்பை உணர முடியுமா? இதோ, சில்லரை வர்த்தகத்தில் 51 நூற்றுமேனிக்கு அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ளது அரசு. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படப் போவது உறுதி. எங்கே அனைத்து நம்பிக்கையாளர்களும் ஒன்றுகூடி கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். தனியார்மயம், தாராளமயத்திலிருந்து அரசை பின்வாங்கச் செய்துவிட முடியுமா? பின் எந்த அடிப்படையில் கடவுளை ஏற்பது? உதாரணங்கள் மட்டும் உண்மைக்கு போதுமானதில்லையே. இன்னொன்று தெரியுமா திரு குலாம் அவர்களே! உங்களின் கடவுள் வெறு நம்பிக்கையாய் இருந்தால் கூட, அது மூடநம்பிக்கை இல்லை என்பதற்கும் நீங்கள் நிரூபணங்கள் காட்டியாக வேண்டும்.

கடவுள் ஒரு மெகா தவறான புரிதல் எழுதிய நண்பர் குலாமுக்குக் கூட கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதல்கள் இருக்கின்றன. அதை அவர் திருத்திக் கொள்ள முன்வந்தால் தேடலுக்கான வழி விரைவிலேயே திறக்கும்.

மீண்டும் சந்திப்போம்

 

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 4

22 ஜன

 

விவாதப் பகுதி 3 க்கு நண்பர் குலாம் ஒற்றை வரியில் தன் பதிலை முடித்துவிட்டிருக்கிறார். ”உங்கள் மீது நம்பகத்தன்மை இல்லை” அவ்வளவு தான். நம்பகத்தன்மை குறித்து கடந்தமுறை அவர் கூறிய பொருந்தாக் காரணத்தை, அது எவ்வாறு பொருந்தாமல் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியிருந்தும், அதற்கு பதிலேதும் கூறாத நிலையில் மீண்டும் அதே காரணத்தைக் கூறி பதில் கூறும் கடமையை தட்டிக் கழித்திருக்கிறார். இதன் மூலம் அவர் மீது இரண்டுவித முடிவுகளுக்கு என்னால் வரமுடிகிறது.

 

1) என்னுடன் விவாதம் செய்ய குலாம் தயாராக இல்லை. காரணம், அவ்வாறு செய்தால் தன்னுடைய நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி, அம்பலப்பட நேரலாம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த பதிவுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பதைக் கொண்டு மட்டும் இதை கூறவில்லை. அவருடைய முறைமைகளைக் கொண்டே கூறுகிறேன். கடவுளுக்கான வரைவிலக்கணம் குறித்தும், சட்டப் போதாமை குறித்தும், தர்க்க ரீதியான கடவுள் இருப்பு குறித்தும் செங்கொடி தளத்தில் என்னுடன் விவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்று கூறி நழுவினார். பின்னூட்டத்தில் முழுமையாக விவாதிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதன் பிறகும்கூட வேறுசில தளங்களில் சென்று பின்னூட்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார், அல்லது ஈடுபட ஆர்வம் தெரிவித்திருக்கிறார். ஆக பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது எனும் அவரது முடிவு எனக்கு மட்டுமானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சரி, பின்னூட்டங்களில் முழுமையாக விவாதிக்க முடியாது என உணர்ந்ததன் பின்னர் அவருடைய தளத்தில் பல இடுகைகளை இதுவரை இட்டுள்ளார், அதில் கடவுளின் இருப்பு குறித்த இடுகைகளும் அடங்கும். ஆனால் அவைகள் எதிலும் நான் எழுப்பிய கேள்விகள் எவற்றுக்கும் பதிலில்லை. மட்டுமல்லாது அவ்வாறான பதிலை கூறும் ஆர்வம் இருப்பதாகவும் வெளிக்காட்டப் படவில்லை. இவைகளெல்லாம் செங்கொடி தளத்திற்கானவை.

 

நல்லூர் முழக்கம் தளத்திலும் பின்னூட்டங்களில் விவாதிக்க ஆர்வப்படுவதாக தெரிவித்திருந்தார். காரணம், செங்கொடியான நான் தான் நல்லூர் முழக்கம் தளத்தையும் நடத்துகிறேன் என்பது அவர் அறியாதது. நான் செங்கொடி என்பதை வெளிப்படுத்தி அவருக்கு பதிலளித்த பிறகு தான், விவாதத்தை தவிர்ப்பதற்காக மடக்கி, மடக்கி பொருந்தாத விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார். அதுவும் பலிக்காது என அறிந்ததும் மௌனமாகி விட்டார். அதிக பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு பதிவு என்றாலும் பதில் கூறுவதற்கு பிடிவாதமாக மறுக்கிறார். ஆகிய இவைகளிலிருந்து தான் அந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

 

இது தொடர்பாக விளக்கம் ஒன்றையும் நண்பர் குலாமுக்காக இங்கு பதிவு செய்து விடலாம். விவாதம் என்பது ஒரு நிலைப்பாட்டில் எது சரியானது என்பதை தம்மளவில் தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு கருவி. அறிதல் எனும் நிலையில் வெற்றியும் தோல்வியும் சமமானதே. தோல்வி ஏற்புக்குறியதல்ல எனும் கருத்து இருப்பதால் தான் நண்பர் தவிர்க்க முயல்கிறார். ஆனால் அது தேவையற்றது. தோல்வி என்பது நம் தேடலை, அறிதலை அகலமாகவும், ஆழமாகவும் செய்வதற்கு உதவக்கூடியது. அதை முன்னிட்டு தவிர்க்காதிருப்பதே சிறந்தது.

 

2) மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் மீது கேள்வி எழுப்பும் தார்மீக உரிமை நண்பர் குலாமுக்கு இல்லை. தன்னுடைய கருத்தைத்தான் பிறரும் கொண்டிருக்க வேண்டும் என யாரும் வற்புறுத்த முடியாது, அதேநேரம் பொதுவிலிருக்கும் ஒரு கருத்தை யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால் ஒருவர் அவ்வாறு விமர்சனம் செய்கிறார் என்றால் அவருக்கு பதில் கூறும் கடமை இருக்கிறது என்பதே அதன் பொருள். பதில் கூறும் கடமையை கையில் எடுத்துக் கொள்ளாத யாரும் விமர்சனம் செய்வதற்கு தகுதியற்றவர்கள். குலாம் பதில் கூறும் கடமையிலிருந்து நழுவி விடுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்கிறார் என்பதால் விமர்சனம் செய்யும் உரிமையும் அவரிடமிருந்து நழுவி விடுகிறது.

 

தமிழ் இணைய உலகில் எகிறிக் குதிக்கும் இஸ்லாமிய பரப்புரை பதிவர்கள் அதிகம். அவர்களின் மத்தியில் நண்பர் குலாம் விதிவிலக்கானவர் என்று நான் மதிப்பிட்டிருந்தேன். காரணம், மதத்தில் அறிவியல் என்று இறுபூறெய்தாத தன்மை(வெகுசில பதிவுகள் அவ்வாறு இருந்த போதிலும்), உணர்ச்சி வயப்படாமல் அறிவுவயப்பட்டு பதில் கூறும் பாங்கு, தர்க்க ரீதியாக அணுகும் முறை போன்றவற்றால் அவ்வாறு கருதினேன். அதனால் தான் அவர் விவாதத்திற்கு வரமறுக்கிறார் என்பது புரிந்த பிறகும், தொடர்ச்சியாக விவாதத்தில் பங்கெடுக்குமாறு அவரை வற்புறுத்தினேன். என்னுடைய அந்த முயற்சியில் தோல்வி தான் என்றாலும் குலாமும் ஏனையோரைப் போல நேர்மை உணர்வற்ற மதப் பரப்புரை பதிவர் தான் என்பதை அறிந்து கொண்ட வகையில் மகிழ்ச்சியே.

 

இனி அவரின் ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?” எனும் பதிவை எதிர் கொள்ளலாம். கடவுளை விமர்சிக்கும் அறிவாளிகள் என்று பொதுத் தலைப்பை தன் பதிவுக்கு இட்டிருந்தால் அதை பொதுவானதாக கருதியிருக்கலாம். ஆனால் ‘ஓர்’ எனும் இலக்க உருபை பயன்படுத்தியிருப்பதால் தனிப்பட்ட யாரையோ உத்தேசித்துத்தான் தன் பதிவை இட்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஆனால் அது யார் என்பதை அவர் வெளிப்படுத்தாததால் (வெளிப்படுத்தினால் பதில் கூறும் கடமை வந்துவிடுமே) பொதுவில் நானும் ஒருவன் என்பதாகவே அதை அணுகுகிறேன். நண்பர் குலாம் அந்த பதிவை எழுதி வெளியிடுவதற்கு முன் சற்று சீர்தூக்கி பார்த்திருக்கலாம். என்ன சொல்கிறோம்? அதை எந்த அடிப்படையில் நின்று சொல்கிறோம்? அவைகளில் உண்மையோ பொருத்தப்பாடோ இருக்கிறதா? போன்ற எதுவும் அவருக்கு அவசியமில்லை. கடவுள் இருக்கிறார், அவர் இந்த பேரண்டத்தை நிர்வகிக்கிறார் என்பது அவரது நம்பிக்கை. அதை உண்மைப்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். இந்த நம்பிக்கையும் நோக்கமும் தான் அதில் இருக்கிறதேயன்றி தர்க்கமோ, அறிவியலோ துளியும் இல்லை.

 

தன்னுடைய பதிவின் தொடக்கத்திலேயே குலாம் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\கடவுள்! மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை// மெய்தான். கடவுள் என்பது இயற்கையாக மனிதனுடன் பிணைந்த சொல்லல்ல, திட்டமிட்டு செயற்கையாக திணித்து பிணைக்கப்பட்ட ஒரு சொல்.

 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு அறிவியல் ரீதியாகவோ, தர்க்க ரீதியாகவோ அல்லது வேறொந்த வடிவிலோ ஒரு நிரூபணமும் இல்லை. ஆனால் நம்பிக்கை சார்ந்த அந்த கற்பிதத்தை, அறிவியல் இன்னும் தொடாத உயரங்களில் நின்று கொண்டோ, மக்களின் அறிதல் ஐயங்களை பயன்படுத்திக் கொண்டோ சில கேள்விகளை எழுப்பிவிடுவதன் மூலம் மெய்ப்படுத்திவிட முனைகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை இது தான் நடந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கடவுள் இல்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியாது என நாங்கள் நம்புகிறோம், அதுவே கடவுள் இருப்பதற்கான ஆதாரம், என்பது தான் அவர்களின் வாதமுறைமை. ஒன்று இருக்கிறது என உறுதியாக கூறவேண்டும் என்றாலே அதன் இருப்பு ஐயந்திரிபற நிரூபிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப் பட்டிருக்கவில்லை என்றால் அதை யூகமாக மட்டுமே கொள்ள முடியும். கடவுள் இருக்கிறார் என்பது ஐயந்திரிபற நீருபிக்கப்பட்டிருக்கிறதா? என்றால் இல்லை என்பார்கள். கடவுள் மெய்யாக இருக்கிறாரா? என்றால் ஆம் என்பார்கள். இந்த முரண்பாடுகளுக்கு இடையில் நம்பிக்கை எனும் பாலத்தை கட்டிவைத்திருக்கும் வரையில், அவர்களால் உண்மைக்கு அருகில் வரமுடியாது.

 

கடவுள் மறுப்பு என்பது, கடவுள் இருப்பின் விளைவால் ஏற்பட்ட சீர்கேடுகளைக் கண்டு உருவானதல்ல. என்று கடவுள் எனும் சிந்தனை தோன்றியதோ அந்தக் கணமே அதன் மறுப்பும் தோன்றிவிட்டது. கடவுள் இருப்பு எப்படி மனிதச் சிந்தையில் தோன்றியதோ ஆதுபோலவே கடவுள் மறுப்பும் மனிதச் சிந்தையில் தோன்றியது தான். அதை மதத்தின் பெயரால் செய்யப்படும் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தான் தோன்றியது என்பது, கடவுள் இருப்பும் கடவுள் மறுப்பும் சமநிலையில் இருப்பதல்ல நிலை தாழ்ந்தது என்பதை உணர்த்தும் ஒருவித குறியீடு.

 

கடவுள் மறுப்பு அறிவியலை மட்டும் சார்ந்ததல்ல, சமூகவியல், பயன்பாடு உள்ளிட்டவைகளையும் சார்ந்தியங்குவது. ஆனால் கடவுள் மறுப்பு என்றதும் மக்களின் மூடநம்பிக்கைகளைப் பார்த்து தோன்றியது என்பதும், அறிவியல் விளக்கமளிக்காததையும்(இது குலாமின் விளக்கங்களை ஒட்டி பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்) நாம் ஏற்கவில்லையா என்பதும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதைதான். கடவுள் மறுப்பு கடவுள் இருப்பு என்பதை அறிவியலை விளங்கி வாழ்பவர்கள், அறிவியலை விலக்கி வாழ்பவர்கள் என்று பிரிவினை செய்ய இயலாது. அனைவருமே அறிவியலை ஏற்று அறிவியலுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். அதேநேரம் சொந்த சாதக பாதகங்களை, கலாச்சார மரபுகளை முன்வைத்து சில நம்பிக்கைகளயும் கொண்டிருக்கிறார்கள். இது இருப்பு, மறுப்பு என்ற இரு நிலையிலுள்ளவர்களுக்கும் பொருந்தும். இதைக் கொண்டு அறிவியல் விளக்கமளிக்காதையும் கூட ஏற்றுக் கொள்பவர்கள் கடவுளை மறுக்கக் கூடாது என கூற முடியுமா?

 

அறிவியல் விளக்கமளிக்காததை ஏற்பதும், அறிவியலை மறுப்பதும் வேறுவேறான நிலைகள். கடவுளை ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலை. விளக்கமளிக்காததையும் ஏற்பது என்பது அறிவியலை மறுக்கும் நிலையல்ல. தெளிவாகச் சொன்னால் அறிவியல் விளக்கமளிக்காத நிலை என்று உலகில் எதுவுமில்லை. குலாம் எடுத்துக் காட்டியிருப்பவைகளையே நானும் எடுத்துக் கொள்கிறேன். கெடு தேதிக்கு முன்பே கெட்டுப் போகும் உணவு, கெடு தேதி முடிந்த பிறகும் நல்ல நிலையில் இயங்கும் மின்கலம்; இவைகள் அறிவியல் முரண்பாடா? ஒரு பொருளின் கெடுதேதி என்பது அந்தப் பொருளில் இருக்கும் சேர்மங்கள், அவற்றின் வேதி வினைபாடுகள், வினைபுரியும் வெளித்தனிமங்கள், நொதிகளால் ஏற்படும் பயன்மாற்றம் முதலியவைகளைக் கொண்டு எந்த தன்மையில் அது மக்களுக்கு பயன்படுகிறதோ அந்த தன்மையை எவ்வளவு காலத்தில் அது இழக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கணிப்பது. இந்த கணிப்புகள் வெகுசில போதுகளில் தவறிப்போகலாம். அப்படி தவறுவது அறிவியல் தவறல்ல. முன்னதாகவே கெட்டுப் போன உணவையோ, பின்னாலும் இயங்கும் மின்கலத்தையோ ஆய்வுக்கு உட்படுத்தினால் ஏன் அவை கணிப்பை மீறின என்பது புலப்படும். அவை கணிப்பை மீறிய காரணமும் அறிவியலுக்கு உட்பட்டு இருக்குமேயன்றி அறிவியல் முரண்பாடாக இருக்காது. இதை அறிவியல் முரண்பாடாக சுட்டுவதே சூழலை தனக்கு சாதகமாக வளைக்கும் நரித்தனம் தான்.

 

சுண்டி விடப்படும் நாணயத்தில் எந்தப்பக்கம் மேலாக விழும் என்பது வெற்று யூகமா? அல்ல அதுவும் அறிவியல் தான். எந்தப் பக்கம் விழுவதற்கும் 50:50 வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக செய்யப்பட்டிருக்கும் அச்சுக்கோர்ப்புகளின் கனத்தைக் கணக்கிட்டு எந்தப் பக்கம் விழுவதற்கு அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதைக் கூட அறிவியலால் கூறமுடியும். இதை அறிவியலல்லாத வெற்று யூகம் என்று கூற முடியுமா? அறிவியல்லாமல் செய்யப்படும் வெற்று யூகங்கள் கூட தன்னிச்சையாக மனிதனுக்குள்ளிருந்து கிளைத்து விடுவதில்லை. வாழ்ந்த சூழல், கற்ற கல்வி, பெற்ற அனுபவங்கள் ஆகியவற்றின் துணைகொண்டே யூகங்கள் எழும். ஆக வெற்று யூகங்களைக்கூட அறிவியலுக்குள் வகைப்படுத்த முடியும்.. குறிப்பிட்ட மனிதன் ஒன்றை அறிந்திருக்கிறனா இல்லையா என்பதையும் தாண்டி வாழ்வில் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் பார்க்கலாம்.

 

நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு மனிதன் அதைவிட்டு எழும்போது தன் கால்களை செங்கோணத்திலோ, விரிகோணத்திலோ நிலத்தில் ஊன்றி எழுவதில்லை. உள்வசமாய் சற்று மடக்கி குறுங்கோணத்தில் வைத்தே எழுகிறான். இதன் அறிவியல் காரணத்தை எல்லா மனிதர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமர்ந்திருக்கும் போது மனிதனின் மொத்த எடையும் பிட்டப் பகுதியிலுருந்து நாற்காலியின் நான்கு கால்களின் மையப்பகுதில் புவியீர்ப்பு நிலை கொண்டிருக்கும். எழும்போது எடையின் புவியீர்ப்பு மையத்தை நாற்காலியிலிருந்து பாதங்களுக்கு மாற்றும் போது புவியீர்ப்பு மையத்திற்கு வெளியிலிருந்தால் எழுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பாதங்களை அந்த மையத்திற்குள் கொண்டுவந்து எடையை மாற்றி பின் நகர்கிறார்கள். இந்த அறிவியல் விளக்கம் ஒருவருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் அந்த அறிவியல் விதிக்கு உட்பட்டே அவரின் செயல்கள் இருக்கும். இது போல் மனித வாழ்வின் ஒவ்வொரு செயலும் அறிவியலுக்கு உட்பட்டே அமைகிறது. இவ்வாறு செயல்படும் அறிவியலை யாரும் மறுப்பதில்லை, மறுக்கவும் முடியாது, ஒருவர் கடவுளை ஏற்றாலும் மறுத்தாலும் இது தான் நிலை. இதில் எங்கிருந்து அறிவியல் மெய்பிக்காத நிலை வருகிறது?

 

மனிதன் மரபு ரீதியாக, கலாச்சார ரீதியாக சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறான். இதை காரணமாக காட்டியும், மக்களின் அறிதல் குறைகளை காரணமாக காட்டியும் கடவுளின் இருப்பை மெய்பிக்க முயல்வது ஒருவழியில் கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்வது தான். ஏனென்றால் ஒரு நிலைப்பாடு சரியா? தவறா? ஏற்கலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிக்க அறிவியலைத் தவிர வேறொரு கருவி மக்களிடம் இல்லை. எந்த ஒன்றில் ஐயம் ஏற்பட்டாலும் அதை அறிவியலைக் கொண்டு தீர்ப்பது தான் சரியானதாக இருக்கும். அதேநேரம் அறிவியல் என்பது மனித அனுபவங்களை தொகுத்து சோதித்தறிந்து அந்த சோதனையின் முடிவுகளைக் கொண்டு பொதுவிதிகளை அடைவது. மீண்டும் மீண்டும் அவை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இயங்கியலுக்கு இயைபவை ஏற்றுக் கொள்ளப்படும், மாறானவை தள்ளப்படும். அறிவியல் மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டது தான் என்றாலும் அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது, புதிய உயரங்களை எட்டிக் கொண்டே இருக்கிறது. அது எட்டாத உயரங்கள் இருக்கிறதா? ஆம். அடுத்து அடுத்து என உயரங்களைத் தேடிக் கொண்டே இருப்பதால், நுண்ணியமாக நுழைந்து கொண்டே இருப்பதால் எப்போதும் அது தேடலிலேயே தொடரும், அதுதான் அறிவியலின் இயல்பு. ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அறிவியல் இந்த இடத்திற்கு மேல் எட்டவில்லை எனவே, அதற்கு மேல் இருப்பதாக எங்களால் கூறப்படும் கடவுளை ஏற்றுக் கொள் என்பது இயலாமை. இயலாமை மட்டுமல்ல அயோக்கியத்தனமும் கூட. எப்படியென்றால், எதையும் மக்களுக்கு விளக்கிக்கூறி புரியவைப்பதுதான் மக்களை உயர்த்துவதற்கான வழியேயன்றி, மக்களிடம் இருக்கும் அறியாமையை பயன்படுத்தி ஒருவரிடம் இருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கையை இன்னொருவரிடம் பதியவைப்பதல்ல.

 

சரி, ஒருவன் அறிவியலின் அடிப்படையில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை. எப்போதும் சரியாக இருப்பது சாத்தியமும் அல்ல. சரி, தவறு என்பதும் உண்மை என்பதும் எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்தக் கூடியதும் அல்ல. சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது பூமியில் தான் உண்மை வேறொரு சூரியக் குடும்பத்திலுள்ள கோளில் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று கூற முடியுமா? வேண்டுமானால் எந்த திசையில் உதிக்கிறதோ அந்த திசைக்கு கிழக்கு என பெயர் வைத்துக் கொள்ளலாம். பூமியிலேயே கூட பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் திசையை மாற்றிக் கொண்டால் (அப்படி மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது) அப்போது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது உண்மையாக இருக்காது. நிரந்தரமான உண்மை என்று எதுவுமில்லை. மனிதனின் சூழல், ஆற்றல், வாய்ப்புகள், தேவைகளைப் பொருத்து உண்மைகளும், சரியா தவறா என்பதும் மாறுபடும். இதை முகம்மதியர்களுக்கு குறிப்பாக குலாமுக்கு எளிமையாக புரியவைக்க ஒரு எடுத்துக்காட்டை கூறலாம். பன்றியை உண்ணக்கூடாது என்பது முகம்மதியர்களுக்கான விதி. இந்த விதி எப்போதும் எல்லா இடத்திலும் பொருந்துமா? முக்காலமும் அறிந்த எல்லாவற்றையும் செய்யும் திறனுள்ளதாக இவர்களால் கூறப்படும் அல்லாவுக்கே எல்லா நேரத்திலும் இது ஒன்றே சரியானது என்று கூற முடியவில்லை எனும்போது, மனிதர்களின் சிந்தனை எப்போதும் சரியாக இருக்காது என்பதை தன்னுடைய நம்பிக்கைக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்கள் என்றால் அவர்களுக்கு என்ன பெயரிடுவது? நடப்பு உலகில் அரசை எதிர்த்து போராடுவதும், போராடத் தூண்டுவதும் கம்யூனிஸ்டுகளின் கடமை, இதையே ஆளும் வர்க்க கோணத்திலிருந்து பார்த்தால் அது அரச துரோகம். இங்கு எது சரியானது என்று பார்த்து அதை ஆதரிக்க வேண்டுமேயல்லாது, சிந்தனை மனிதனுக்கு மனிதன் வேறுபடக் கூடியது எனவே கடவுளை நம்பு என்றால் அது எப்படி சரியாக இருக்க முடியும்?

 

பொதுவாக மனிதர்கள் எந்த ஒரு பிரச்சனையிலும் தனக்கு சாதகமானதா? பாதகமானதா? என்பதைக் கொண்டே முடிவெடுக்கிறார்கள். ஆனால் அது சரியா? தவறா? எனும் அடிப்படையில் எடுக்கும் முடிவே அவர்களை சரியான நிலைப்பாட்டில் இருத்தி வைக்கும். சரியான நிலைப்பாட்டில் தாம் இருக்க வேண்டும் எனும் நினைப்பு இருக்கும் வரை ஒருவனால் சொந்த சாதக பாதகங்கள் குறித்து கவலைப்பட முடியாது. கடவுள் இருப்பு மறுப்பு எனும் பிரச்சனையில் நம்பிக்கையாளர்களை விட மறுப்பாளர்களே சரியா தவறா எனும் கேள்விக்கு அருகில் நிற்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் தான் விமர்சனம் இருக்கிறது, அவர்களிடம் தான் மீளாய்வு இருக்கிறது. அவ்வாறன்றி குலாம் உள்ளிட்டவர்கள் தாங்களும் சாதகமான நிலைப்பாட்டில் அல்ல சரியான நிலைபாட்டில் இருக்கவே விரும்புகிறோம் என்று கூறுவார்களாயின் தங்களை மீளாய்வு செய்து கொள்ளட்டும்.

 

கடவுளை மனிதன் விமர்சிக்க முடியுமா? மனிதன் என்பவன் யார்? அவனது தகுதிகள், எல்லைகள் என்னென்ன? என்பதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். இது போன்ற தெளிவு கடவுளுக்கு இருக்கிறதா? மனிதன் எவ்வாறு ஐயங்களுக்கு ஆட்படாதவாறு தூலமாக இலங்குகிறானோ அது போன்று கடவுளும் தூலமாக இலங்கினால் தான் இரண்டையும் ஒப்பிட முடியும். அவ்வாறன்றி மனிதன் தூலமான நிலையிலும் கடவுள் மாயமான நிலையிலும் இருக்கும் போது இரண்டையும் ஒப்பிடுவது எப்படி சரியாக இருக்க முடியும்? மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளின் தகுதிக்கு அருகில் வருவதாக நம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? கடவுள் எனும் கருத்து மனிதனுக்கு தோன்றிய காலத்தில் கடவுளுக்கு என்னென்ன தகுதிகளை மனிதன் ஏற்படுத்தியிருந்தானோ அதைவிட அதிக தகுதிகளோடு இன்று மனிதன் இருக்கிறான். வேறு வடிவத்தில் கூறினால் மனிதனின் அறிவும் தகுதியும் உயர உயர கடவுளின் அறிவும் தகுதியும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

 

சிறு குழந்தைகள் ஒருவித கணித விளையாட்டொன்றை விளையாடுவார்கள். யார் அதிக மதிப்புள்ள எண்ணை கூறுவது என்பது போட்டியாக இருக்கும். மாறிமாறி அதிக மதிப்பை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்த்து நீ எவ்வளவு கூறினாலும் அதைவிட ஒன்று அதிகம் என்று கூறினால் என்ன நிலை வருமோ அந்த நிலை தான் கடவுளின் தகுதி. அதாவது மனிதனின் தகுதி எவ்வளவு உயர்ந்தாலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் இருப்பதாக கருதப்படும் இடைவெளி எப்போதும் குறையாது தக்கவைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் போது கடவுளை விமர்சிக்கும் தகுதி மனிதனுக்கு இல்லை என்று கூறினால் அதன் பொருள் என்ன? கடவுளின் மீது என்ன கற்பனைகளை நாங்கள் ஏற்றிவைத்தாலும், ஏற்றுக் கொள் அல்லது விலகிச் செல் மாறாக அதை விமர்சிக்கக் கூடாது என்பது தான். இதைவிட கடவுளை வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. மனிதனுக்கு மனிதனே அடிமையாக இருத்தல் கூடாது எனும் போது ஆண்டவனுக்கு தான் அடிமை என அறிவித்துக் கொள்பவர்களிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்?

 

ஒன்றின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது என்றால், அது சரியாக செய்யப்பட்டிருக்கிறதா? தவறாகவா? என்று பார்ப்பது தான் சரியான அணுகுமுறை. சரியாக செய்யப்பட்டிருந்தால் அதை எதிர்கொண்டு விளக்கம் கூறுங்கள். தவறாக செய்யப்பட்டிருந்தால் எந்த விதத்தில் அது தவறான விமர்சனம் என்று தெளிவியுங்கள். அதை விடுத்து, கடவுளை விமர்சிக்க மனிதனுக்கென்ன தகுதி இருக்கிறது என்றால் அது நாலாம்தர அரசியல் வியாதிகளின் அணுகுமுறை.

 

கோடிக்கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் இப்பேரண்டத்தில் ஒரு துளியைப் போன்ற சூரியக் குடும்பத்தில் அதனில் தூசைப் போன்ற பூமியில் பல லட்சம் உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து பூண்டற்றுப் போன பின்னில் துணுக்கைப் போன்ற மனிதர்களுடைய மனதில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் இப்பேரண்டத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டு அதையும் தாண்டி வியாபித்திருக்கிறார் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறியாமை. அதிலும் அதை விமர்சிக்கவும் தகுதியில்லை என்பது அறியாமையினும் அடங்காமை. இவ்வாறு அடங்காத அறியாமையை கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்கள் அந்த அடங்காத அறியாமையையே முற்று முழுமை என்பது மனமுரண்டா அல்லது அதனிலும் மேலா?

 

முந்திய பதிவுகள்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 1

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 3

கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 3

3 ஜன

 

விவாதப்பகுதி இரண்டு வெளியான அடுத்த நாளிலேயே நண்பர் குலாம் தன்னுடைய தளத்தில் சில பின்னூட்டங்களில் பதில் கூற முயன்றிருக்கிறார். அதுவும் பதிவின் கேள்விகளை முழுமையாக உள்ளடக்காமல் ஒன்றிரண்டை மட்டும் குழப்பமான முறையில் தொட்டுச் சென்றிருக்கிறது. தொடர்ந்து அவர் பின்னூட்டத்தில் பதில் கூறுவார், அல்லது தனிப்பதிவாக எழுதுவார் என்று இதுவரையில் காத்திருந்தேன். அப்படி எதுவும் நடக்காததால் பகுதி 3 வெளிவருகிறது. மட்டுமல்லாது, இந்த தலைப்பு குறித்து இனி அவர் தன்னுடைய தளத்தில் எழுதும் கட்டுரைகள் என்னுடைய கவனத்திற்கு வந்தால், உகந்த காலத்தில் பதிலளிக்கப்படும். அதாவது, நண்பர் குலாம் பதிலளித்தாலும் அளிக்காவிட்டாலும் இந்த விவாதப்பகுதி தொடரும்.

 

நண்பர் குலாம் விவாதம் குறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார். இப்படி கள்ளத்தனமாக இருப்பதற்கு ஏன் அவர் என்னை விவாதத்திற்கு அழைக்க வேண்டும்? இதற்கு அவர் பதில் கூறியாக வேண்டும். பதில் கூறும் கடமை அவருக்கு இருக்கிறது என்பது அவரின் விளக்கங்களுக்கு அளித்த மறுப்பில் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இனியும் அவர் கள்ள மௌனம் சாதித்தாலோ, நேரமில்லை என்று பல்லவி பாடினாலோ, என்னிடம் விவாதம் செய்தால் பதில் கூற முடியாமல் அம்பலப்பட நேரும் என்பதை உணர்ந்து கொண்டதால் தான் விவாதத்தை தவிர்க்க முனைகிறார் என்றும், அதுவும் வெளிப்படையாக தெரிந்துவிடக்கூடாது என்பதால் ஏதேதோ கூறி சமாளிக்கிறார் என்றும், நான் முடிவு செய்ய நேரிடும் என்பதை இதன் மூலம் அவருக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

 

நண்பர் குலாம் தன்னுடய பதிவை வெளியிட்டதும் எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவிக்காதன் காரணமாக என்மீது ஒரு குற்றச்சாட்டையும் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் எனக்கு தெரிவிக்காததற்கு என்மீதான நம்பகத்தன்மையின் குறைபாடு என்று காரணம் சொன்னதை இந்தளத்தில் தெரிவித்திருக்கிறார். என்றால் ‘நம்பகத்தன்மையின் குறைபாடு’ சரியாகி விட்டதா? நான் எதுவும் செய்யாமலேயே சரியாகிவிடக்கூடிய குறைபாட்டால் தான் அவரது பதிவை எனக்கு தெரிவிக்காமல் இருந்தாரா? இந்தக் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். அவர் வைக்கும் குற்றச்சாட்டே அபத்தமாகவும், பொருந்தாததாகவும் இருக்கிறது. ராபின் என்பவர் \\குலாம் விவாதத்தை தவிர்க்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்// என்றொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார். இது குலாம் மீது வைக்கப்பட்ட விமர்சனம். இதை மறுத்து நண்பர் குலாம் விளக்கமளித்தும் இருக்கிறார். (அதுவும் விமர்சனத்தின் மீதான விளக்கமாக இல்லாமல் திசைதிருப்பலாக இருக்கிறது என்பது வேறு விசயம்) ஆனாலும் நான் “நண்பர் குலாம் வல்லவர், மெய்யாகவே அவருக்கு நேரமில்லாததால் தான் விவாதத்தில் பங்கெடுக்க சிரமப்படுகிறாரேயன்றி, இதில் சமாளிப்பு எதுவுமில்லை” என்று நான் பதில் கூறியிருந்தால் என்னுடைய நம்பகத்தன்மையில் குறைபாடு எதுவும் நண்பருக்கு வந்திருக்காது போலும்.

 

இந்த நம்பிக்கை குறைபாட்டில் என்ன தான் சொல்ல வருகிறார் நண்பர். \\இந்த பின்னூட்டத்தை வெளியிட்ட நீங்கள் அதுக்குறித்து எதும் சொல்லவில்லையே., சகோ ராபின் கிறித்துவ மதத்தை பின்பற்றினாலும் உங்களை பொருத்தவரை கடவுள் உண்டென்கிறார் என்ற நிலைப்பாட்டின் கீழ் வருகிறார். அவர் உங்களை நோக்கி கருத்தை முன்வைக்கா விட்டாலும் உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துடையவர். ஆக நீங்கள் அவருக்கு எந்த வித மறுப்போ அல்லது விவாத அழைப்போ ஏன் விடுக்க வில்லை. குறைந்த பட்சம் அவரது கொள்கையும் குறைபாடுடையாதாக ஏன் அங்கு ஒரு வரியை முன்வைக்கவில்லை. நீங்கள் சொல்லலாம் அவர் என்னை நோக்கி கருத்தை பதியவில்லை என… பின் அவரது வருகை அங்கு எதற்காக? என்னை விமர்சிக்கவா…? எனக்கும் முகவரி இருக்கிறது சகோ ஆக உங்கள் நோக்கம் கடவுள் கோட்பாட்டை எதிர்ப்பதில் இல்லை. மாறாக இஸ்லாத்தை (மட்டும்) விமர்சிப்பதே என்பது தெளிவாகிறது. இதுவே உங்களுக்கு தெரியப்படுத்தாதற்கு காரணம்// அந்த ராபின் பின்னூட்டம் குலாம் என்பதற்குப் பதிலாக செங்கொடி என்று குறிப்பிட்டு நான் ஏதேதோ கூறி சமாளிப்பதாக இடப்பட்டிருந்தாலும் அதுவும் வெளியிடப்பட்டு என்னிடமிருந்து பதிலேதும் கூறப்படாமல் விடப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் நடந்த விவாதங்களை படித்துப் பார்க்கலாம். பல பின்னூட்டங்கள் அவ்வாறு எழுதப்பட்டும் இருக்கிறது, அவை வெளியிடப்பட்டும் இருக்கிறது. விவாதம் என்று வந்துவிட்டால் அதில் பதியப்படும் வேறு எந்த கருத்துக்களையும் நான் கண்டு கொள்ள மாட்டேன் என்பதை பலமுறை நான் அறிவித்திருக்கிறேன். மட்டுமல்லாது, இப்படியான கருத்துக்கள் வருவதற்கான வாய்ப்புண்டு, வந்தால் அவைகளை பொருட்படுத்தத் தேவையில்லை என்று நான் நண்பர் குலாமுக்கு ஏற்கனவே செங்கொடி தளத்தில் நேரடியாக அறிவுறுத்தியிருக்கிறேன். இதன் பின்னரும் அவருக்கு பதிலளிக்காதது நண்பருக்கு என்மீதான நம்பகத்தன்மையில் குறைவை ஏற்படுத்துகிறது என்றால் அதன் பொருள் என்ன?

 

நண்பரின் விளக்கங்களில் திருப்தியுறாத ஒருவர், நீங்கள் சமாளிக்கிறீர்கள் என்று நண்பரைக் கூறினால், அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கண்டறிந்து, நீங்கள் கடவுளை நம்புபவர் எனும் பொதுப் பிரிவில் வருகிறீர்கள். அது என்னுடைய நிலைபாட்டுக்கு எதிரிடையானது எனவே நான் உங்களை எதிர்க்கிறேன் என்று கருத்து கூற வேண்டுமா? என்ன அபத்தம் இது. என்னுடைய வாதங்களை எதிர்த்து அவர் கருத்துக் கூறியிருந்தால் கூட நீங்கள் ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்பதற்கு குறைந்தபட்ச நியாயமாவது இருக்கும். அவ்வாறில்லாத போதிலும் கூட அது என்மீதான நம்பகத்தன்மையில் குறைவை ஏற்படுத்துகிறது என்று கூறினால் அதன் பொருள் என்ன? எதையாவது கூறியாக வேண்டுமே எனும் நிர்ப்பந்தத்தில் தேடிப்பிடித்து இதை காரணமாக நண்பர் காட்டியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை என்பது தெளிவு.

 

சரி, இதில் என்னுடைய நோக்கம் நாத்திகமல்ல, இஸ்லாத்தை மட்டும் விமர்சிப்பது என்பதை எந்த அடிப்படையிலிருந்து நண்பர் கண்டு கொண்டார்? குலாமின் பதில் சமாளிப்பாக ஒருவருக்கு தெரியும் கருத்திலிருந்து நுணுகி ஆராய்ந்து, வளைத்து நெளித்து இஸ்லாத்தை விமர்சிப்பது மட்டுமே என்னுடைய நோக்கம் என்பதைக் கண்டுபிடித்து, அதனால் என் மீது நம்பகத்தன்மையில் குறைபாடு என்று முடிவுக்கு வரமுடியும் என்றால், நேரடியாக அவரை நோக்கி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலைக் கூறாமல் “அர்த்த புஷ்டியுடன் அமைதியாக இருக்கும்” நண்பர் குறித்து நான் என்ன முடிவுகளுக்கு வருவது? முடிவாகச் சொல்வதானால் ராபினின் பின்னூட்டத்தை காரணமாக காட்டிக் கொண்டே, அந்தப் பின்னூட்டத்தை உறுதிப்படுத்தும் சான்றை தந்துள்ளார்.

 

இனி நண்பரின் தலைப்புக்குட்பட்ட பின்னூட்டக் கருத்துகளைப் பார்க்கலாம். \\ஒரு கோட்பாட்டை ஏற்காமல் இருப்பது வேறு., மறுப்பதென்பது என்பது வேறு. ஏற்காவிட்டால் விளக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் ஏற்பது என்ற அடிப்படை போன்று நம்பிக்கையின் கீழ் அதைக்கொண்டு வரலாம்// ஒன்றின் மீது நம்பிக்கை கொள்வதற்கும் அதை ஏற்பதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் இருக்கிறது. நம்பிக்கை என்பது சான்றுகள் இல்லாத நிலையிலும் கூட அதை சரி காண்பது. ஏற்பு என்பது சான்றுகள் இருந்து அதை சோதித்தறிந்த பின்னர் ஏற்படுவது. எனவே அடிப்படையில் இரண்டும் வேறு வேறானது. அதே நேரம் ஏற்காமல் இருப்பதும் அதையே மறுப்பதும் இருவேறு பக்கங்கள் தான். நான் இஸ்லாத்தை மறுக்கிறேன் என்றால், அதன் பொருள் ஏற்காமால் இருக்கும் நிலையை வெளிப்படுத்து மட்டுமல்ல. தரவுகளின் அடிப்படையில் காரண காரியங்களை விளக்கி மறுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

நான் கம்யூனிசத்தை ஏற்கிறேன், அந்த அடிப்படையில் நின்று இஸ்லாம் எனும் நம்பிக்கையை மறுக்கிறேன். மறுப்பதை நான் மேலெழுந்தவாரியாக செய்திருக்கிறேனா? இல்லை. ஆழமாகவும் அழுத்தமாகவும் செய்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக நண்பர் கூறும் சட்டப் பிரச்சனையையே எடுத்துக் கொள்வோம். சட்டங்களின் தன்மை என்ன என்பதை விளக்கியிருக்கிறேன். அதன் பயன்பாடுகள், கடந்து வந்த பாதை, இதுவரையான சட்டங்களின் வீச்சு என அனைத்தையும் விளக்கிவிட்டு, அதன் பிறகு மனிதச் சட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும், மனிதச் சட்டங்களின் நோக்கம், அவை செயல்படும் விதம் குறித்தும் விளக்கியிருக்கிறேன். எதிர்நிலையில் இறைச் சட்டம் என்று ஒன்றுமில்லை எல்லாம் மனிதச் சட்டங்களே என்பதை வாதமாக வைத்திருக்கிறேன். இவ்வளவுக்கும் பிறகு நடப்பில் இருக்கும் சட்டங்களை கற்பனைகளுடன் ஒப்பீடு செய்யமுடியாது என்பதையும் உறுதி செய்திருக்கிறேன். இவைகளை மறுத்து நண்பர் செய்திருப்பது என்ன? மனிதச் சட்டங்கள் குறையுடையவை என்று கூறி அதற்கு மாற்று என்பதாக தன்னுடைய நம்பிக்கையை, வெற்று கற்பனையை கூறியிருக்கிறார். மெய்யாகவே மனிதச் சட்டங்களுக்கு ஒரு மாற்றை கூறவேண்டும் என்றால் இறைச் சட்டம் என எதையாவது முன்வைத்து அது நடப்பில் செயல்படும் தன்மையுடன் இருக்கும் நிலையில் அதை மனிதச் சட்டத்துடன் பொருத்திக் காட்டி, இறைச்சட்டமே சிறந்தது எனக் காட்டினால் அதை சரியான வாதமாக கொள்ள முடியும். ஆனால் நண்பரோ மனிதச் சட்டங்களுக்கு மாற்று என்று கற்பனையை முன்னிருத்துகிறார்.

 

ஆனால் இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு மாற்றாக நான் சோசலிச நோக்கங்களை முன்வைத்திருக்கிறேன். சோசலிச சட்டங்களும் சாராம்சத்தில் நடப்பிலிருக்கும் மனிதச் சட்டங்களைப் போன்றது தான். ஆனால் அதன் நோக்கம் நடப்பிலிருக்கும் சட்டங்களைப் போலல்லாது, குற்றங்களை செய்யத் தூண்டும் மனோநிலை, சமூகச் சூழல் ஆகிய அனைத்தையும் மாற்றுவதன் மூலம் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்க முயற்சிக்கும் என்றும் கூறியிருக்கிறேன். இவைகளை மறுத்து நண்பர் ஏதாவது கூறியிருக்கிறாரா? ஒன்றுமில்லை. ஆனால் \\இவ்வுகலகில் உண்டான மனித உருவாக்க சட்டத்தால் சாத்தியமில்லையென்கிறேன்// என்று வாதங்களை வைக்கு முன்பு தானே தீர்ப்பெழுத முயற்சிக்கிறார். எந்த அடிப்படையில் சாத்தியமில்லாதவை விளக்க முடியுமா அவரால்?

 

எடுத்து வைத்தவற்றுக்கு முறையான பதிலில்லை. தன்னுடைய பக்கத்தின் வாதங்களை முழுமையாக எடுத்து வைக்கவில்லை. ஆனாலும் இப்படி கூறிக் கொள்கிறார் \\இல்லை .. செங்கொடி தளத்தில் விளக்கம் போல் புனையப்பட்டு இருக்கிறது// இதை பிதற்றல் என்பதாகவன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்வது? இப்படி பிதற்றல்களை அள்ளிக் கொட்டுவது யாரை ஏமாற்ற?

 

\\நீங்களோ மனித உருவாக்கசட்டங்கள் குறைப்பாடுடையவை அவை வர்க்கரீதியாக வாழும் மக்களின் சூழ்நிலைக்கு தக்கவாறு நெகிழ்வடையும். எனினும் அதிகப்பட்ச நீதமான ஆட்சிமுறை கம்யூனிசத்தால் மட்டுமே முடியும் என்கிறீர்கள்.- இது பதில் அதிகப்பட்ச சாத்திக்கூறுகள் எதில் என்பதல்ல.. நூறு சதவீகிதம் முழுமையான சட்டங்கள் எங்கே என்பதே என் கேள்வி// சோசலிசத்தால் மட்டுமே அதிகபட்ச நீதமான ஆட்சிமுறை வழங்க முடியும் என்று மட்டுமா கூறியிருக்கிறேன். சட்டங்கள் என்பது குற்றங்களுக்கு எதிரான எதிர்வினை மட்டுமே, அது குற்றங்களுக்கு எதிரான தீர்வு அல்ல. கம்யூனிசம் குற்றங்கள் நிகழ்வதற்கான சமூகச் சூழலை, மனோநிலையை மாற்றுவதன் மூலம் குற்றமற்ற சமூகத்தை கட்டியமைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.  எதில் முழுமை இருக்கிறது? குற்றங்கள் நிகழவிட்டு தண்டனை வழங்குவதிலா? குற்றங்களே நிகழாமல் மாற்றுவதா? சட்ட ரீதியாக மட்டுமல்ல, குற்றங்களையும் மனித முன்னேற்றங்களுக்கு எதிரான அத்தனையையும் சமூகத்திலிருந்தே நீக்குவதற்கான முனைப்பு சோசலிசத்தைத் தவிர வேறு எதற்காகவது இருக்கிறதா? இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மாறாக சாத்தியமில்லை என்று ஒற்றைச் சொல்லில் கடந்து செல்லாமல், உங்களின் முன்முடிவுகளையே உண்மை என திரிக்காமல், முடிந்தால் எப்படி சாத்தியமில்லை என்பதை கூறுங்கள் பின்னர் நான் விரிவான தரவுகளுடன் வருகிறேன்.

 

இந்த விசயத்தில் இன்னொரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார், சட்டத்தின் முன் கொண்டு வரப்படாதவர்களை என்ன செய்வது? என்று. ஒன்றும் செய்யமுடியாது. நடப்பில் இருக்கும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் நடைமுறையில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி சட்டத்தின் முன் வராமல் ஒருவரால் தப்பிக்க முடிகிறது என்றால், சட்டத்தின் முன் கொண்டுவராதவரை அவரை எதுவும் செய்ய முடியாது. மனிதச் சட்டமானாலும், இறைச் சட்டமானாலும், சோசலிசச் சட்டமானாலும் இதில் மாற்றம் ஒன்றுமில்லை. மாறாக, இதற்கு மாற்று என்று கூறிக் கொண்டு ஆண்டவன் தண்டிப்பான் என்று கற்பனை செய்து கொள்வதில் திருப்தியடைய முடியுமா? ஆனால் சோசலிச நோக்கத்தில் இதற்கான மாற்று இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன். சோசலிசத்தின் நோக்கம் குற்றங்களுக்கான மனோநிலையை நீக்குவதிலும், குற்றத்திற்கான சமூகச் சூழலை நீக்குவதிலும் முனைப்பு கொண்டிருக்கிறது என்பதால் நண்பர் எதிர்பார்க்கும் நூறு நூற்றுமேனிக்கு முழுமையான சமூகம் சோசலிசத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உரத்துக் கூறுகிறேன்.

 

கம்யூனிசம் எங்களின் நம்பிக்கையல்ல, எங்களின் ஏற்பு. அதை ஒரு மதத்தின் மீதான நம்பிக்கையைப் போல் உருவகப்படுத்துவது மடமை. இஸ்லாம் முன்னிருத்தும் கேள்விகளை மட்டுமல்ல அதையும் தாண்டி விளக்கமளிக்கவும், பதில் தரவும் தயார். உங்களிடம் கேள்விகள் இருக்கின்றனவா? இருந்தால் எடுத்துவாருங்கள் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன்.

 

அடுத்து, கடவுள் என்ற ஒரு நிலை இல்லையென்றால் இயற்கை எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி இருக்க வேண்டும் என்பது போல் எழுதியிருக்கிறார். இதற்கான விளக்கம் அவரின் வேறொரு கட்டுரையில் கிடைத்தது. அதாவது பறவைகள் யாரும் சொல்லித்தராமல், பயிற்சியெடுக்காமல் பறக்கின்றன. இதுபோல பல விலங்குகள் தங்களுக்கென்று இயற்கையாக அமைந்த சில பண்புச் செயல்கள் இருக்கின்றன. அதுபோல மனிதனுக்கு இல்லையே, நடப்பதற்குக் கூட பெற்றோரின், மற்றோரின் உதவிகள் தேவைப்படுகின்றன. இதனால் கடவுள் இருப்பதை நம்புங்கள் என்கிறார். கடவுள் இருக்கிறார் என்பதைத் தவிர வேறெந்த கருத்தையும் படித்தறியத் தேவையில்லை எனும் முன்முடிவுதான் இது போன்ற கேள்விகளை எழுப்ப காரணமாக அமைகிறது.

 

முதலில், இப்படி ஒரு நிலை இருப்பது கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துமா? மனிதனைத்தவிர ஏறக்குறைய அனைத்து உயிரினங்களுக்கும் ஏதாவது ஒன்றோ, பலவோ பண்புச் செயல்கள் இருக்கின்றன. மனிதனுக்கு அவ்வாறு இல்லை என்பதால் கடவுள் அவசியம் என்றால் பிற உயிர்களுக்கு இருக்கிறது என்பதால் கடவுள் அவசியமில்லை என எடுத்துக் கொள்ளலாமா? தர்க்க ரீதியான இந்தக் கேள்வியில் கடவுளின் இருப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்றல்ல மனிதனுக்கு மட்டும் சிறப்பான ஒன்று என்றாகிறது. இதை குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல எந்த கடவுள் நம்பிக்கையாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுவான ஒன்றாக இல்லாமல் மனிதனுக்கு மட்டும் என்றாலே அதன் உட்பொருள் பிற உயிரினங்களில் இல்லாத மனிதனிடம் இருக்கும் ஒன்றுதான் கடவுளின் இருப்புக்கு காரணமாக இருக்கிறது என முடிவு செய்யலாம். பிற உயிரினங்களிடம் இல்லாத மனிதனிடம் இருக்கும் ஒன்று என்றால் அது கருத்தியல் வளர்ச்சி தான். இது பொருள், இது அதனைச் சார்ந்த கருத்து என்று பிரித்தரியத் தெரிந்த ஒரே உயிரினம் மனிதன் மட்டும் தான். எனவே மனிதனின் கருத்தியல் வளர்ச்சி தான் கடவுளை உருவாக்கியிருக்கிறதேயன்றி அது மெய்யான ஒன்றல்ல.

 

இதை இன்னொரு கோணத்தில் பார்த்தால், சிறப்பான பண்புச் செயல்களைத் தவிர்த்து பார்த்தால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுமே சில செயல்களை கற்றுக் கொள்வதற்கு அவசியமின்றி இயல்பாகவே கொண்டிருக்கின்றன. வெளியிலிருந்து ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொள்வது, உணவை வாய் வழியாக இரப்பைக்கு செலுத்துவது என்பன போன்று சில செயல்கள் எல்லா உயிரினங்களும் செய்கின்றன. ஆனால் மனிதனைத் தவிர வேறு உயிரினங்களுக்கு இவைகளைவிட மேலதிகமான சில செயல்கள் அந்த பட்டியலில் இருக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது? உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத செயல்கள் கற்றுக் கொள்வதற்கு அவசியமில்லாத இயல்பாக உயிரினங்களிடம் தங்கி நிற்கின்றன. பறக்கத் தெரியாத பறவையால் உயிர்வாழ முடியாது. ஆனால் நடக்கத் தெரியாத மனிதனால் உயிர்வாழ முடியும். மனிதன் தான் முயன்று பெற்ற சிந்தனை மேம்பாட்டால் கருவிகளின் வழியே வாழப் பழகிக் கொண்டான். செருப்பு இல்லாமல் மனிதன் நடப்பது மனிதனுக்கு வெகு சிரமமான செயல் இன்று, ஆனால் பிற உயிரினங்களுக்கோ அது வெகு இயல்பானது. இதுபோன்று கருவிகளின் பாவனையால் மனிதனின் உயிர்வாழும் பாதுகாப்பு மேம்பட்டிருக்கிறது. இந்த மேம்பாட்டினால் கற்றுக் கொள்ள அவசியமில்லாத இயல்பான பண்புச் செயல்களை மனிதன் இழந்து வருகிறான்.

 

 

இன்றிருப்பதைவிட மிகைத்த மோப்ப சக்தி, நிலத்தின் அதிர்வுகளை பாதத்தின் மூலம் உணர்ந்து பெருவிலங்குகளின் அருகாமையை அறிந்து கொள்வது போன்ற சில பண்புகள் இல்லாவிட்டால் ஆதி மனிதன் நீடித்து உயிர் வாழ்ந்திருக்க முடியுமா? ஆகவே இது போன்ற செயல்கள் உயிரினங்களின் உயிர்வாழும் பாதுகாப்பைப் பொருத்தது. ஏனைய அனைத்து உயிரினங்களையும் விட உயிர்வாழும் பாதுகாப்பை அதிகம் பெற்றிருப்பவன் மனிதன். அதனால் இதுபோன்ற செயல்களை குறைவாக பெற்றிருக்கிறான். ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பை உடைய பிற உயிரினங்கள் மனிதனை விட அதிக செயல்களைப் பெற்றிருக்கின்றன. இதுதான் காரணமேயன்றி இதில் கடவுளின் இருப்பு கொஞ்சமும் இல்லை. ஒரு திரைப்படத்தில் சிரிப்பு நடிகர் ஒருவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முன்பே ”விக்ஸ் என்பதைத்தான் அப்படி சுற்றிச்சுற்றி எழுதியிருக்கிறேன்” என்பார். அதைப் போல பண்புச் செயல்களை இயற்கை கடவுள் என்று வார்த்தைகளால் சுற்றிச்சுற்றி எழுதப்பட்டிருக்கிறதேயன்றி அதில் வேறொன்றுமில்லை.

 

என்னிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாகவும், விளக்கமாகவும் பதிலளித்திருக்கிறேன். இதில் ஐயமிருந்தாலும், இந்த தலைப்பில் புதிய கேள்விகளை எழுப்புவதென்றாலும் நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். மாறாக, பதில் கூறியது போலும் இருக்க வேண்டும், தப்பித்தும் செல்ல வேண்டும் என்று முகமயிரில் மண் ஒட்டாமல் பாதுகாத்துக் கொள்ளும் அவசியம் எனக்கில்லை. இந்த இடுகையை படர்க்கை வாக்கியங்களாகத் தொடங்கிய நான் படிப்படியாக முன்னிலை வாக்கியங்களுக்கு மாறிக் கொண்டேன். படர்க்கையாக கொண்டாலும், முன்னிலையாக கொண்டாலும் எனக்கு சம்மதமே.

 

பின்குறிப்பு 1: பகுதி இரண்டில் எழுப்பப்பட்டிருந்த பலவற்றுக்கு நீங்கள் விளக்கமோ, மறுப்போ தராமல் கடந்து சென்றுள்ளீர்கள். அவைகளை உங்களால் மறுக்க முடியவில்லை என்றோ, ஏற்கிறீர்கள் என்றோ கொள்ளலாமா?

 

பின்குறிப்பு 2: இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய பின்னர், இந்த தலைப்புக்குட்பட்டு ஒரு கட்டுரையை ”கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி” என்ற பெயரில் வெளியிட்டுள்ளீர்கள். இதை எழுதத் தொடங்கிய பின்னரே அது என் கவனத்திற்கு வந்தது என்பதாலும், அதையும் உள்ளடக்கினால் மிக நீண்டதாக அமைந்துவிடும் என்பதாலும் அதற்கான மறுப்பு அடுத்த பகுதியாக வெளிவரும்.

 

முந்திய பதிவுகள்

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 1

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 2

17 டிசம்பர்

நண்பர் குலாம் எந்த அறிவிப்பும் இன்றி எதிர்ப்பதிவை இட்டிருக்கிறார். எதிர்ப்பதிவு குறித்த விவரங்களுக்கு, விளக்கங்களுக்கு செல்லுமுன் பொதுவான வேறு விளக்கங்களும் தேவையாய் இருக்கிறது. எனவே இந்த இடுகையை பொது விளக்கங்கள், பின்னூட்டங்களுக்கான விளக்கங்கள், எதிர்பதிவுக்கான மறுப்பு என மூன்றாய் பிரித்துக் கொள்ளலாம்.

கடந்த இடுகையில் நான் இரண்டு விதிமுறைகளை முன்னிருத்தியிருந்தேன். ஒன்று, எதிர்ப்பதிவு இட்டவுடன் தொடர்புடைய பதிவில் இதற்கான மறுப்பு இடப்பட்டிருக்கிறது என்பதை பின்னூட்ட வாயிலாக தெரிவிக்க வேண்டும். இரண்டு, பதிவுகளை இடுவதற்கு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயிக்க வேண்டும். இவற்றில் கால அளவு குறித்து சில கருத்துக்களை நண்பர் கூறியிருந்தார். ஆனால் எதிர்பதிவை தெரிவிப்பது குறித்து எந்த மறுப்பும் நேரடியாக அவர் கூறாத நிலையில், பதிவிட்டதும் இத்தளத்தில் தெரிவிப்பார் என எண்ணியிருந்தேன். ஆனால், செங்கொடிக்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல என அவர் வலியுறுத்தியதின் பின்னே தெரிவிப்பதற்கான மறுப்பும் அடங்கியிருக்கிறது என்பதை, அவர் தெரிவிக்காததன் பின்னரே உணர்ந்து கொண்டேன்.

முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், என்னை கடவுள் குறித்த விவாதத்திற்கு அழைத்தது நண்பர் குலாம் தான். அவர் அழைப்பை ஏற்றே நான் தொடர்ந்தேன். இந்த நிலையில் ஒரு ஒழுங்கில் உடன்பட மறுப்பது நேர்மையானவர்களின் செயலாக இருக்க முடியுமா? நான் குறிப்பிட்டிருந்த இரண்டு விதிமுறைகளும் ஒரு நேரிய விவாதத்திற்கு தேவையற்றவை என்றும் ஒதுக்கிவிட முடியாது. இதில் நண்பருக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் அதை வெளிப்படுத்தி ஒரு உடன்பாட்டுக்கு வரலாம். அவ்வாறன்றி நண்பரின் வாதங்கள் இந்த விவாதத்தை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதே என்னுடைய புரிதல்.

நேரமின்மை என்பது தவிர்க்கவியலாதது. யாருக்கும் ஏற்படக் கூடியது. எனவே நண்பரின் நேரமின்மையில் நான் எந்தவித விமர்சனத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக நேரமின்மை என்பதை முன்னிருத்தி கால அளவு குறிப்பதை தள்ளிப்போட முனைவதையே விமர்சிக்கிறேன். தன்னுடைய அதிகபட்ச இலக்காக மாதத்திற்கு மூன்று பதிவுகள் என்று நண்பர் கூறியிருக்கிறார். என்றால் இரண்டு மாதத்திற்குள் ஒரு எதிர்ப்பதிவு போடுவதொன்றும் அவருக்கு கடினமாக இருக்கப் போவதில்லை. ஆனால் நான் குறைந்த அளவாக ஒரு வாரம் என்றும் அதிக அளவாக ஓர் ஆண்டு என்பதையும் முன்வைத்திருக்கிறேன். ஆயின் அவருக்கு ஏதுவான கால அளவை கூறுவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?

நான் எழுப்பியவைகளுக்கான மறுப்பைத்தான் நண்பர் கூறியிருக்கிறார் எனும் போது அதை என்னிடம் தெரிவிப்பதில் அவருக்கு என்ன பிரச்சனை இருந்துவிட முடியும்? மட்டுமல்லாது, \\பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்// என்றே அவரது பதிவை முடித்திருக்கிறார். நான் எழுப்பியவைகளுக்கான பதிலைக் கூறி என்னிடமிருந்து பதிலையும் எதிர்பார்த்திருக்கும் நண்பர், அதை என்னிடம் தெரிவிக்கவில்லை என்றால், பதிலை எதிர்பார்ப்பதில் அவருக்கு தார்மீகம் இருக்க முடியுமா? இதற்கு, அது செங்கொடிக்கான பதிலோ, செங்கொடியிடமிருந்து பதிலை எதிர்பார்த்தோ எழுதப்பட்டதல்ல என நண்பர் கூறுவாராயின், \\அதில் உங்களின் கேள்வியும் உள்ளடக்கியிருந்தால் அதற்கான தெரிதல்களையும் சேர்த்து பதிவிடுவதற்காக அப்படி சொன்னேன்// என்று ஏற்கனவே அவர் கூறியிருந்ததற்கான பொருள் என்ன?

என்னுடன் விவாதம் செய்வதும், மறுப்பது நண்பரின் விருப்பு, வெறுப்புகளின் பாற்பட்டது. அதில் நான் எந்தவித வற்புறுத்தல்களையும் செய்வதற்கில்லை. ஆனால், அப்படியான விவாதத்திற்கு என்னை அழைத்து, அதை நானும் ஏற்றுக் கொண்டதன் பின், அதிலிருந்து நண்பர் பின்வாங்க விரும்புவாராயின்; அதை தெளிவாகவும், வெளிப்படையாகவும், அதற்கான காரணத்தையும் சேர்த்து அறிவிப்பது அவருடைய கடமை. ஏனென்றால், விவாதத்திற்கு அழைத்தது அவர் தான். மட்டுமல்லாது, செங்கொடி பின்னூட்ட விவாதத்திற்குப் பிறகு, பின்னூட்டங்களில் ஆழமாக விவாதிக்க முடியாது என்று கூறியதன் பிறகு, சில தளங்களில் நண்பர் பின்னூட்ட விவாதங்கள் செய்திருக்கிறார், அழைத்திருக்கிறர். பின்னூட்டமென்றாலும், எதிர்ப்பதிவு என்றாலும் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. இதை நான் ஏற்கனவே தெரிவித்தும் இருக்கிறேன். ஏனையவை நண்பரின் தெரிவுகளுக்கே. விவாதத்திற்கு வருவதாக இருந்தாலும் விலகுவதாக இருந்தாலும் அதை நண்பர் சுற்றிவளைக்காமல் வெளிப்படையாக கூறவேண்டும், அவ்வளவுதான். இதற்குமேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

அடுத்து நண்பரின் பின்னூட்டங்களுக்கான விளக்கங்களைக் காணலாம். அவரது முதல் பின்னூட்டத்தில் சலித்துக்கொண்டு சமூகத்தின் மீது அக்கரை கொள்ள வேண்டாம் என என்னைக் கோரியிருந்தார். மேற்கோள் காட்டப்பட்ட அந்த வாக்கியத்தில் சலிப்பு தென்படுகிறதா? கடவுள் குறித்த விவாதத்தைவிட சமூக அரசியல் விவாதங்களையே நான் விரும்புகிறேன் என்பதை ஒரு தகவலாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான். நண்பர் குறிப்பிடுவது போன்ற சலிப்பு மனோநிலை எனக்கு இருந்திருக்குமாயின் இந்த விவாதத்தை நான் ஏற்றிருக்கும் நிர்ப்பந்தம் ஏதும் என்மீது இருந்திருக்கவில்லை என்பது நண்பரின் கவனத்திற்கு.

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் தொடர் இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நூல். அதன் நோக்கம் இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் சார்ந்து அதை விமர்சிப்பது. எங்களைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் ஒன்றுதான். சகதியின் அடர்த்தியில் கூடுதல் குறைவு இருக்கலாமேயன்றி எல்லாமே குட்டையில் ஊறிய மட்டைகள் தாம். நாங்கள் முன்வைக்கும் தீர்வு கம்யூனிசம். ஏன் இத்தொடரை எழுதுகிறேன் என்பதற்கு அதன் நுழைவுவாயில் பகுதியில் காரணங்களைக் கூறியிருக்கிறேன். மட்டுமல்லாது, நான் பிறந்து, குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்த மதம் என்பதால் சற்று கூடுதல் கவனம். நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் நடப்புகளை விமர்சிப்பதினூடாக கம்யூனிச விழிப்புணர்வை நோக்கியே இருக்கும். எனவே கம்யூனிசத்தை எழுதுவதைவிட மதம் குறித்தே அதிகம் எழுதுகிறேன் என்று எளிதாக கூறிவிட முடியாது. நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளபடி மதங்களுக்கானவைகள் 10 நூற்றுமேனிக்கு அதிகமாக போய்விடக்கூடது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறேன்.

செங்கொடிக்கான பதிலல்ல என்பதை நண்பர் சில தடவைகள் கூறியுள்ளார். செங்கொடி குலாம் என்று பெயர் குறிப்பிடப்பட்டால் அதை படிக்கும் யாரும் அவற்றை ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றமாக கருதமாட்டார்களா? செங்கொடி குலாமின் கருத்தாக ஒதுங்கிவிடுமா? ஏன், பிஜே திக விவாதத்தில் அதை நீங்கள் தனிப்பட்ட இரண்டு குழுக்களின் கருத்தாகத்தான் கருதினீர்களா? குறிப்பாக எழுதினாலும் பொதுவாக எழுதினாலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பது தான் முதன்மையானதேயன்றி யாரை முன்னிருத்தி கூறப்பட்டிருக்கிறது என்பதல்ல. மட்டுமல்லாது, விவாதம் என்று வந்துவிட்டால் குறிப்பிட்டு எழுதுவது தான் இருவருக்கும் மறுப்புக்கான கடப்பாட்டை ஏற்படுத்தும்.

\\என்னிடம் முன்னிருத்தப்பட்ட கேள்விகளுக்கு- என் விளக்கங்களில் எதுவும் மிச்சமில்லை., மாறாக நான் முஸ்லிம் தள பதிவுகளுக்கு விளக்கம் இல்லை// என்றும் கூறியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது தான். ஒன்றைத்தொட்டு ஒன்றாக தாவிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. உங்கள் பதிவு ஒன்றை பரிந்துரை செய்யுங்கள், அது குறித்து எது சரியானது? என்று விவாதம் செய்வோம். ஒரு முடிவுக்கு வந்தபின் அடுத்த தலைப்பை எடுத்துக் கொள்ளலாம். அப்படி நண்பர் பரிந்துரைத்த தலைப்பு தான் “கடவுள் ஏன் இருக்கக்கூடாது” என்பது. எனவே இதில் கவனம் செலுத்துமாறு நண்பரை கோருகிறேன்.

\\கடவுளை நம்புவதென்பது நம்பிக்கை சார்ந்த விசயம் – ஆனால் மறுப்பதென்பது ஒரு சாரார் கொண்ட நம்பிக்கையில் சிந்தனைரீதியான உடன்பாடில்லாமல் இருப்பது அப்படியான மறுப்புக்கு விளக்கம் முடிந்தவரை நேரடியாக விளக்கப்பட வேண்டும். ஏனெனில் நம்பிக்கை தான் விளக்கப்பட முடியாதது. ஆனால் அந்த நம்பிக்கை போலியானது என நிருபிக்க நேரடி நிருபணம் தந்தாக வேண்டும். அப்படியில்லாமல் “இருப்பதாக நம்பக்கூடாதென்றால்” அதுவும் அவர் சார்ந்த நம்பிக்கை எனும் வட்டத்திலே பதிவு செய்யக்கூடியது// இதன் உள்ளார்ந்த பொருள் என்ன? நம்பிக்கையாளர்கள் நிரூபிக்க வேண்டியதில்லை, அதை மறுப்பவர்கள் தான் நிரூபிக்க வேண்டும் என்பதா? இது பிறழ்தலான கருத்து. கடவுள் என்பது நம்பிக்கை என்றால் அங்கு எந்தவித விமர்சனத்திற்கும் இடமில்லை. பொதுவில் கடவுள் நம்பிக்கையை யாரும் விமர்சிப்பதுமில்லை. ஆனால், அதுதான் உண்மை எனும்போது தான் விமர்சனம் வருகிறது. உங்களின் அத்துனை ஆக்கங்களையும் எடுத்துக் கொண்டால் அவைகளின் ஆதாரப்புள்ளி கடவுள் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கான வாதங்களாகத்தான் இருக்கிறது. அந்த மெய்ப்பிப்புகள் தான் விமர்சனங்களைக் கிளப்புகிறதேயன்றி நம்பிக்கையல்ல. நீங்கள் அறிவித்து விடுங்களேன், ”கடவுள் மெய்யாக நிலவுகிறதா இல்லையா என்பது குறித்து எனக்கு கவலையில்லை, அது எனது நம்பிக்கை மட்டுமே” என்று. விவாதங்களுக்கு நாம் இங்கேயே முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். அவ்வாறன்றி அது மெய்யாக நிலவுகிறது என்றால் அதை நிரூபிக்கும், மறுக்கும் கடமை இருவருக்கும் உண்டு.

இதுவரை கூறியவை தலைப்புக்கு வெளியிலான சுற்றாடல்கள். இனி தலைப்புக்குள் செல்லலாம். முதலில் ஒன்றை பதிவு செய்துவிடுவது சிறப்பு என கருதுகிறேன். இஸ்லாமிய நிலைப்பாட்டையே பொதுக்கருத்து போல் நண்பர் கூறியதற்கான எதிர்வினையில் பொதுவாக கூறப்பட்டவைகளை இஸ்லாத்தை முன்னிருத்தியே செங்கொடி பதிலிறுத்திருந்தார் என்று என்னை குற்றப்படுத்தியிருந்தார். அதனால் என்னுடைய முதல்பதிவில் இஸ்லாத்தை முன்னிருத்தாமல் பொதுவாகவே பதிவிட்டிருந்தேன். ஆனால் நண்பர் குலாம் இஸ்லாத்தை முன்னிருத்தியே தனது விளக்கங்களை இட்டிருக்கிறார். எனவே, முன்னர் கூறியது போன்ற குற்றச்சாட்டை இனி அவர் கூறும் வாய்ப்பற்றுப் போய்விட்டது.

என்னுடைய பதிவின் மையக்கருத்தாக ஐந்து கருத்துகளை நண்பர் பட்டியலிட்டிருக்கிறார். \\1. கடவுளின் பெயரால் மனிதர்களிடையே சண்டை சச்சரவுகள். 2. விதி என்ற ஒன்றை நம்புவதால் வாழ்வியல் முன்னற்றமின்மை 3. கடவுளை நம்புவோரும் சமூகத்தில் தவறு செய்தல் 4. மத குறுக்கீட்டால் அறிவியல் ரீதியான வளர்ச்சியின்மை. 5. ஏனைய உயிரனங்கள் போலல்லாமல் கடவுள் என்ற நிலை ஏன் மனித சமூகத்திற்கு மட்டும் தேவைப்படுகிறது//

இதில் முதல் கருத்து குறித்து நண்பர் கூறுவதென்ன? \\மனிதர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகளுக்கு காரணம் மதம் தான் காரணமென்றால் மதங்களை பின்பற்றாவர்கள் வீடுகளிலும் தந்தை- மகன் அண்ணன்-தம்பிக்கு மத்தியில் சண்டைகள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும் அளவிற்கு கூட செல்கிறதே அதையும் நாம நியூஸ் பேப்பர்ல பார்க்கதான் செய்யுறோம். ஆனா அவர்கள் ஏதெனும் மதகுறீயிட்டு பெயர்களை சார்ந்திருப்பதால் அவர்கள் சார்ந்த கொள்கை முன்னிருத்தி பேசப்படுவதில்லை// ஆனால் இது தொடர்பாக நான் கூறியிருந்ததென்ன? \\கடவுள் எனும் அப்பாற்பட்ட சக்தி இருக்கிறது எனும் எண்ணம் மனிதர்களுக்கு ஏற்படவே இல்லை என்று கொண்டால் இன்று மனிதன் கண்டிருக்கும் எந்த முன்னேற்றமும் தடைபட்டிருக்காது என்பதோடு மட்டுமன்றி இன்னும் மேலதிக உயரங்களை மனிதன் எட்டியிருக்கக் கூடும். எப்படி என்றால், கடவுள் இருப்பு, கடவுள் மறுப்பு என்ற நிலை மட்டுமே பூமியில் இல்லை. கடவுள் இருப்பின் அடிப்படையில் பல்வேறு மதங்கள் கட்டமைக்கப் பட்டிருப்பதால், வரலாற்றில் மனிதனின் ஆற்றல் பெருமளவில் மதங்களுக்கிடையேயான முரண்பாட்டிற்காகவே செலவழிக்கப்பட்டிருக்கிறது, செலவு செய்யப்பட்டும் வருகிறது// மதங்கள் மட்டுமே மக்களிடையேயான சண்டை சச்சரவுகளுக்கு காரணம் என்று நான் கூறவும் இல்லை. மதங்களைப் பின்பற்றாதவர்களின் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதில்லை என்றும் நான் கூறியிருக்கவில்லை. கடவுள் நம்பிக்கை மனிதர்களுக்கு ஏற்படவில்லை என்றால் இதுவரையான முன்னேற்றங்கள் தடைபட்டிருக்கும் என்று கூறமுடியாது. அதேநேரம் இதுவரையான வரலாற்றில் மனிதர்களின் ஆற்றல் பெருமளவில் மத ரீதியான சண்டை சச்சரவுகளில் செலவிடப்பட்டிருப்பதால் அஃதில்லாதிருந்தால், இன்னும் அதிக உயரங்களை பெற்றிருக்கக் கூடும். ஆக நான் கூறியதற்கும் நண்பர் கூறியிருப்பதற்கும் தொடர்பு ஒன்றுமில்லை. எழுப்பியவற்றுக்கு சரியான விளக்கங்களை நண்பர் வைத்த பிறகு மீண்டும் இது பற்றி விளக்கலாம்.

இரண்டாவதாக, விதி குறித்து நண்பர் கூறுவதில் பொருள் ஒன்றுமில்லை. நடந்து முடிந்தவற்றுக்குத்தான் விதி, நடக்கவேண்டியவைகளுக்கு விதி இல்லை என்று கூற வருகிறாரா? அப்படி ஒன்றுமில்லை என்பதை நண்பரை வைத்தே வெளிப்படுத்த முடியும். பின்னூட்டமானாலும், பதிவானாலும் ’இறை நாடினால்’ என்பதை நண்பர் எழுத மறப்பதில்லை. இஸ்லாத்தை ஏற்றிருக்கும் எந்த ஒருவரும், ”நடக்கவிருக்கும் காரியங்களில் மனித முயற்சியே முழுப்பங்கு வகிக்கிறது, இறையின் தெரிவு அதை ஆள்வதில்லை” எனும் எண்ணத்தில் செயல்படுவதில்லை. மாறாக, ’அவனன்றி அணுவும் அசையாது’ என்பதுதான் எல்லோரின் கருத்தாகவும் இருக்கிறது. நாளைக்குத் தேர்வென்றால் இன்றைக்கு படி என்பது தான் இஸ்லாமிய நிலைப்பாடு என்றால், இன்றைக்கு படிப்பதன் பலன் தான் தேர்வுகளில் வெளிப்படுமேயன்றி இறைவன் அதை முடிவு செய்வதில்லை என்று நண்பர் கூறுவாரா? அவரால் கூறமுடியாது. ஏனென்றால், அடுத்த கணத்தில் ஒரு இலை அசைவதிலிருந்து அனைத்தும் ஏற்கனவே ஏட்டில் எழுதப்பட்டுவிட்டது. ஏட்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது தான் நடக்குமேயன்றி மனித முயற்சியினால் எதுவும் நடக்காது. இது தான் இஸ்லாமிய விதிக் கொள்கையின் சாராம்சம். இதற்கு மாறாக நடந்து முடிந்தவற்றிலிருந்து ஆறுதல், நடக்கவிருப்பதில் முயற்சி என்பதெல்லாம் அதை சமன் செய்வதற்காக கூறப்படும் மேலோட்டமான கருத்துகள். நண்பர் குலாம் உட்பட அம்மதத்தை பின்பற்றும் அனைவரும் விதியின் சாராம்சத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், அதேநேரம் மனிதமுயற்சி எனும் வெளி அலங்காரங்கள் மூலம் ஆறுதலடையவும் செய்கிறார்கள். இரண்டில் எது முதன்மையானது என்றால் சாராம்சம் தானேயன்றி அலங்காரமல்ல. ஆக நான் எழுப்பியிருக்கும் கேள்வி சாராம்சத்தில், பதில் தந்திருப்பது அலங்காரத்தில் இதை நண்பர் உணர வேண்டும்.

மூன்றாவதாக, கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்தல் என்பதில், நான் எந்த அடிப்படையில் அதைக் கூறியிருந்தேன். கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களை தவறு செய்வதிலிருந்து தடுக்கிறது எனும் கூற்றுக்கு எதிராகவே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் தவறு செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன். இப்போது நண்பர் கடவுளை உண்மையாக நம்புபவர்கள், வெறுமனே மதத்தை பின்பற்றுபவர்கள் என்று பிரிவினை செய்திருக்கிறார். ஆனால் இங்கு சுட்டப்படவேண்டியது கடவுள் நம்பிக்கையைவிட அதிகமாக சமூக மதிப்பிழத்தலே குற்றம் செய்வதிலிருந்து மக்களை தடுக்கிறது என்பதே. குற்றம் செய்பவர்கள் மெய்யாக கடவுளை நம்புகிறார்களா? வெறுமனே மதத்தை பின்பற்றுகிறார்களா? என்பது தேவையற்ற விசாரணை. குற்றம் செய்வதிலிருந்து எது மக்களை தடுக்கிறது? கடவுள் நம்பிக்கையா? சமூகமா? இதில் சமூகமே அதிக பங்களிப்பை செய்கிறது என்பதால் அதை ஏற்றுக் கொள்வதும் மேலதிக இலக்குகளை எட்ட சீர் செய்வதும் தானே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.

நான்காவதாக மதக்குறுக்கீட்டால் அறிவியல் வளர்ச்சியின்மை என்பது. மதம் அறிவியல் சமூக வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று நான் நேரடியாக கூறவில்லை. வரலாற்றில் மத முரண்பாடுகளிலேயே மக்களின் பெரும் ஆற்றல் செலவிடப்பட்டிருக்கிறது. இது இல்லாமலிருந்தால் தற்போது மனிதன் கண்டிருக்கும் முன்னேற்றங்களை விட அதிக உயரங்களை எட்டியிருக்கக் கூடும். நான் கூறியிருப்பது இது தான், இதற்கு மறுப்பேதும் கூறமுடியாது. மாறாக இந்த விசயத்தில் நண்பர் கூறியிருப்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அவை இந்த விவாதத்திற்கு வெளியில் அமைந்திருப்பதால் தேவை ஏற்படின் அது குறித்து பின்னர் பார்க்கலாம்.

ஐந்தாவதாக ஏனைய உயிரினங்கள் போலன்றி மனிதனுக்கு மட்டும் ஏன் கடவுள் எனும் கருத்தியல் தேவைப்படுகிறது? என்பது குறித்து, \\மனித – ஜீன் வர்கங்களுக்கு மட்டுமே இவ்வுலகை தேர்வு களமாக்கி வைத்திருக்கிறான் இறைவன். அதற்கு துணைப்பொருட்களாக தான் இவ்வுலக உயிர்களும் – அஃறிணைப்பொருட்களும். ஆக மனித சமூகத்தை இங்கு முன்னிருத்துவது தான் பிரதான செயலாக இருப்பதால் ஏனைய உயிரினங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவைகளும் இறைவனுக்கான -இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட உயிரினம் தான். சரி பிற உயிரினங்களுக்கு கடவுளின் தாக்கம் இல்லை என்பதை எந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து கண்டறீந்தீர்கள் சகோ?// என்று கூறியிருக்கிறார் நண்பர். உலகில் பல்விதமான உயிரினங்கள் இருக்கின்றன. இவற்றில் மனிதன் மட்டுமே மேம்பட்ட நிலையை தன் முயற்சியின் மூலம் எட்டியிருப்பதால் அவன் ஏனைய உயிரினங்களையும் இயற்கையும் தனக்கு இசைந்த வழியில் பயன்படுத்திக் கொள்கிறான். இதை மனிதனின் வசதிக்காகவே அவைகள் இருக்கின்றன என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. கடவுள் என்பது கருத்தியல் சார்ந்தது. மனிதனைத்தவிர ஏனைய உயிரினங்களுக்கு கருத்தியல் வளர்ச்சி வெகு சொற்பமான அளவே இருப்பதால் அவைகளுக்கு கடவுள் எனும் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை. மட்டுமல்லாது, அவைகளின் செயல்கள் எதுவும் கடவுளின் இருப்பை பிரதிபலிப்பதில்லை.

\\இப்போதும் பாருங்கள் கடவுளின் பெயரால் மக்களுக்கு மத்தியில் நிலவும் சமூகரீதியான பிரச்சனைகள், மூட நம்பிக்கை தான் கடவுள் மறுப்புக்கு பிரதான காரணமாக சொல்கீறீர்கள் மாறாக நேரடியாக இல்லை// என்றும் நண்பர் கூறியிருக்கிறார். கடவுள் இருக்கிறாரா? இல்லையா? எனும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தால் தான் நேரடியாக கடவுள் இல்லை என்பதற்கான மறுப்பை கூற முடியும். இந்த விவாதம் கடவுள் ஏன் இருக்கக் கூடாது? எனும் கேள்வியை முன்வைத்து தொடங்கியிருக்கிறது. எனவே கடவுள் எனும் தாக்கம் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகளைக் கொண்டே வாதங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடவுள் ஏன் இருக்கக்கூடாது என்பதற்கு, மையச் சரடில் கோர்க்கப்பட்டதாகவே என்னுடைய வாதங்களை வைத்திருந்தேன். ஆனால் நண்பர் மையச்சரடை உருவிவிட்டு தனிப்பட்டு வாதங்களுக்கு எதிரான உதிரிப் பதில்களாக கூறியிருக்கிறார். எனவே என்னுடைய பதிலும் அவ்வாறான தோற்றத்தில் இருக்கிறது. அவ்வாறன்றி ஒருங்கிணைந்த முறையில் நண்பர் தன்னுடைய வாதங்களை வைத்தால் அது இவ்விவாதத்தை இன்னும் சீரியதாக ஆக்கும்.

இனி நண்பரின் கடவுள் ஏன் இருக்க வேண்டும்? எனும் எதிர்ப்பதிவுக்குள் கடக்கலாம். நண்பரின் பதிவை முழுமையாக அலசினால், கடவுள் நம்பிக்கை, முதலாளித்துவம் இந்த இரண்டு தாக்கங்களின் கலவையாக இருக்கிறது. 1) நன்மை செய்து வாழ்வதற்கும், 2) தீமை மறுத்து வாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத உலகில் என்ன தேவை இருக்கிறது? 3) மனிதச் சட்டங்களின் போதாமை எனும் மூன்று பகுப்புகளின் அடிப்படையில் நண்பரின் பதிவு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

எந்த மனிதனும் தன்னுடைய செயல்களில் திருப்தியுறாத நிலையில் அச்செயலை மீண்டும் செய்ய வேண்டிய தேவை அவனுக்கில்லை. இந்த திருப்தி பொருளாதார பலன்கள், சமுக மதிப்பு, குடும்பத்தேவை, அங்கீகாரம் உள்ளிட்டவைகளை கொண்டதாக இருக்கும். இவை மனிதனுக்கு நன்மை செய்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தும் என்பது நண்பரின் கணிப்பு. இது முதலாளித்துவ சிந்தனையின் மரூஉ. தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ ஏதோ ஒரு வகையில் பலன் இல்லாவிட்டால் அதை செய்வதினின்று தவிர்த்துக் கொள்வது என்பது மனிதனை தான், தன் குடும்பம் தன் சுற்றம் என தனியுடமைப் பாட்டையில் செலுத்தும் உந்து விசையாக இருக்கிறது. அதே நேரம் எந்தவிதமான பலனும் இல்லாவிட்டாலும் கூட கடவுளின் விருப்பத்திற்காக அதை செய்வது என்பது ஆன்மீக சாரம். இந்த இரண்டுவித சிந்தனைகளையும் மீறி வேறொரு சிந்தனை இருக்க முடியாதா?

உலகம் உனக்குக் கிடைத்த வாய்ப்பு. இதில் முடிந்தவரை பொருளாதார ஏனைய பலன்களை பெற்று உன்னையும், குடும்பத்தையும், சுற்றத்தையும் சிறப்பாக வைத்துக் கொள். இது ஒருபுறம், மறுபுறமோ, இந்த உலகம் ஒரு தற்காலிக தங்குமிடம். அதில் முடிந்தவரை இறை விருப்பத்தை பூர்த்தி செய்து நிரந்தரமான மறு உலகத்தில் உனக்கான இடத்தை உறுதி செய்து கொள். ஒன்று தனக்காக உலகை சுரண்டச் செய்வதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. மற்றதோ தனக்காக உலகை அலட்சியம் செய்யக் கோருவதன் மூலம் சமூகத்தை பொருளற்றதாக்குகிறது. ஆனால் இரண்டுமே தம்முடைய வேலைத் திட்டங்களை இவ்வுலகை மையப்படுத்தியே முன்வைக்கின்றன. இங்கு தான் சமூகம் என்பதன் பிறழ்தலற்ற பொருள் விஞ்சி நிற்கிறது.

சமூகம் என்பதன் சரியான பொருளில் நன்மை என்பதென்ன? அது யாருக்கும் தனிப்பட்ட முறையில் பொருளாதரமோ அல்லது வேறு விதங்களிலோ பலன்களை பெற்றுத்தருவதல்ல. மாறாக சமூகம் முழுமைக்குமான மக்களின் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவது. இந்த உலகில் மட்டுமே மனிதனின் வாழ்வு இருக்கிறது. ஒருவன் மரணித்துவிட்டால் சிலரின் நினைவுகளிலன்றி தூலமான முறையில் அவன் எங்கும் என்றும் வாழமுடியாது. இருக்கும் உலகில் கிடைக்கும் வளங்களை அனைவருக்குமானதாக பொதுவில் வைப்பதற்கான நோக்கில் செய்யப்படும் அனைத்தும் நன்மை. அதை மறுக்கும் அனைத்தும் தீமை. அவைகளை இணைப்பது போராட்டம்.

இந்த அடிப்படையில் நன்மை செய்வதற்கும் தீமையை எதிர்த்து போராடுவதற்கும் தேவையான உந்தாற்றலை சமூகம் பற்றிய புரிதலே வழங்கும். இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக பார்க்கலாம். ஒரு குழாயிலிருந்து நிறுத்தப்படாமல் தண்ணீர் வழிந்தோடி வீணாகிக் கொண்டிருக்கிறது. வீணாகும் தண்ணீரை நிறுத்துவது நன்மை, நிறுத்தாமல் விட்டுச் செல்வது தீமை, விட்டுச் செல்பவர்களிடம் எடுத்துக் கூறி புரியவைப்பது போராட்டம். இதை கண்ணுறும் ஒருவன் “உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்” என்று கடவுள் கூறியிருக்கிறார் அதனால் நிறுத்துகிறேன் என்பதை விட; இந்த தண்ணீரை புட்டியில் அடைத்து விற்றால் பொருளாதார பலன் கிடைக்குமே என்றோ, அல்லது இன்னொருவனுக்கு சொந்தமான தண்ணீர் கவனக் குறைவினால் வீணாகிக் கொண்டிருக்கிறது, அந்த நட்டத்தை தடுக்க வேண்டும் எனும் உந்துதலினால் நிறுத்துவதை விட; இந்த உலகம் என்பது நானோ, இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களோ மட்டும் அல்ல, தொடக்கத்திலிருந்து இன்னும் எத்தனை நூற்றாண்டு காலம் மனிதகுலம் வாழ்கிறதோ அது வரைக்குமானது, நேற்றைய மனிதகுலம் இந்த நீர்வளத்தை எப்படி என்னிடம் தந்திருக்கிறதோ அதே தன்மையில் நாளைய மனித குலத்திடம் கைமாற்ற வேண்டும் எனும் புரிதலோடு அந்த குழாயை நிறுத்துவதே சரியானது. சமூகம் பற்றிய இந்த சரியான புரிதலுக்கு கடவுள் நம்பிக்கையோ, இவ்வுலகை இன்று ஆண்டு கொண்டிருக்கும் முதலாளியமோ கொஞ்சமும் உதவாது.

ஆனால், நண்பருக்கு கடவுள் நம்பிக்கை, முதலாளியம் தாண்டி வேறெந்தப் புரிதலும் இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் கடவுள் நம்பிக்கையோ, முதலாளித்துவப் பார்வையோ இல்லாவிட்டால் வேறெதுவும் மனிதனை நன்மை செய்யத் தூண்டவும், தீமையை தடுக்கவும் முடியாது என்று கருதுகிறார். பொதுவுடமைச் சிந்தனை மனிதர்களுக்கு இல்லாவிட்டால் கடவுளியத்திலும், முதலாளியத்திலும் கூட நன்மை செய்யும் சிந்தனை தோன்றியிருக்க முடியாது என்பதே மெய்.

அடுத்து, நண்பர் மனிதச் சட்டம் இறைச்சட்டம் எனும் பாகுபாட்டையும் இதனுள் புகுத்தியுள்ளார். இந்த பாகுபாடு குறித்தும், சட்டம் என்பதன் தன்மை குறித்தும் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது. அவைகளை உள்வாங்கியதற்கான எந்த அறிகுறியும் நண்பரிடம் தென்படவில்லை. ஆகையால் வேறொரு கோணத்தில் இதை அணுகலாம்.

குற்றம் என்பது தனியுடமையின் விளைவு. ஒன்று, பிறருக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு அது கிடைத்தாக வேண்டும் எனும் மனோநிலைதான் குற்றச் செயலை தூண்டுகிறது. குற்றம் செய்யத் தூண்டும் மனோநிலை வசதி வாய்ப்புகளை, சூழல்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடத்திலிருந்து குற்றம் தொடங்குகிறது. இந்த மனோநிலை நிலைத்திருக்கும் வரை குற்றம் இருக்கவே செய்யும். சட்டம் என்பது இதற்கு மாற்றோ, தீர்வோ அல்ல. ஒரு இடைக்கால ஏற்பாடாக மட்டுமே சட்டம் இருக்க முடியும். சமூகம் குறித்த சரியான புரிதல் மனிதனுக்குள் ஏற்படும் விகிதத்தில் குற்றத்தை தூண்டும் மனப்போக்கும், அதற்கு அணை கட்டும் சட்டங்களும் விடைபெறும்.

நடைமுறைப் படுத்தப்படும் சட்டங்கள், நிகழ்ந்து விட்ட குற்றத் தன்மைகளுக்கான எதிர்வினைகள் எனும் அடிப்படையில் தான் குற்றங்களுக்கான தண்டனைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு கொலையா ஒன்பது கொலையா என்று பார்த்து தண்டனைகள் தீர்மானிக்கப்படுவதில்லை. வன்புணர்ச்சி செய்ய முயலும் ஒரு பொறுக்கியை ஒரு பெண் கொன்றால், கொலைக்கு கொலை என்று தண்டனை அளிப்பதை நண்பர் ஏற்பாரா? பல உயிர்களை காக்கும் நோக்கில் செய்யப்படும் சில கொலைகளை எண்ணிக்கை கணக்கிட்டு தீர்ப்பளிக்க முடியுமா? ஆக வழங்கப்படும் தண்டனை என்பது குற்றத்தின் தன்மையைப் பொருத்தது. குற்றத்தின் தன்மையைப் பொருத்து அதை செய்தவனுக்கு சமூகத்தில் வாழும் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று தீர்மானிப்பது தான் தண்டனையேயன்றி, எண்ணிக்கையை பார்ப்பதல்ல. வன்புணர்சியை தடுக்கும் நோக்கில் செய்யப்பட்ட கொலைக்கு விடுதலையும், திருடும் நோக்கில் செய்யப்பட்ட காயமேற்படுத்தலுக்கு தண்டனையும் வழங்கப்பட்டால், இது நியாயமல்ல, கொலைக்கு விடுதலையும், காயமேற்படுத்தியதற்கு தண்டனையுமா? மனிதச் சட்டம் குறையுடையது என்று நண்பர் கூறுவாரா?

சட்டங்கள் குற்றத்தை எந்த முறையில் அணுகுகின்றன என்பது முக்கியமானது. குற்றத்தைச் செய்வதும் அதை குற்றம் எனத் தீர்மானித்து தண்டனை வழங்குவதும் மனிதர்கள் தாம். அதை சூழலின் சான்றுகள் மூலமே கண்டடைகிறார்கள். இதில் தவறுகள் நேர்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்றால், மறுப்பதற்கு ஒன்றுமில்லை. ஆம், இருக்கிறது. தொழில்நுட்ப அறிவையும், சூழல் சாட்சிகளையும் கொண்டு குற்றத்தை தீர்மானிக்கும் நடைமுறை குறையுடையதாகவே இருக்க முடியும். மேம்பட்ட அறிவையும் தொழில்நுட்பங்களையும் குற்றவாளிகளும் பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்பதால் சட்டம் முற்றிலும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது.

சரி, முக்கியமான விசயத்திற்கு வருவோம். மனிதச் சட்டம் குறையுடையதாக இருப்பதைக் கொண்டு நண்பர் முன்வைப்பது என்ன? மனிதச் சட்டம் குறையுடையது என்பதால் இறைவனின் இருப்பை ஏற்க வேண்டும் எனும் வாதத்தில் என்ன தொடர்பு இருக்க முடியும்? வாதத்திற்காக இறைவனின் இருப்பை ஏற்பதாகக் கொள்வோம். குறைபாடுகளுடைய மனிதச் சட்டம் தொடர்ந்து நிலுவையில் இருக்கும். அதோடு, இங்கு தண்டனை வழங்கத் தவறியவர்களுக்கு செத்ததன் பின்னர் தண்டனை கிடைப்பதாக ஒரு கற்பனை இருக்கும். இந்தக் கற்பனை என்னவிதமான தாக்கத்தை சமூகத்தின் மீது ஏற்படுத்தும்? அல்லது ஏற்படுத்தியிருக்கிறது? தன்னுடைய பலம் பலவீனங்களுக்கு உட்பட்டு ஒரு எல்லையின் பின் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுள் பார்த்துக் கொள்வார் எனும் முடக்கத்தை தோற்றுவிக்குமா? அல்லது போராடும் உத்வேகத்தைத் தருமா? எந்தக் கற்பனை சமூகத்தின் நோயாக இருக்கிறதோ அந்த கற்பனையையே மருந்தாக சுட்டுவது பேரவலம்.

வறட்டுக் கற்பனைகளுக்கு நேர்மாற்றமாக உலகை மாற்றியமைக்க மக்களை அழைக்கிறது கம்யூனிசம். இவ்வுலகில் மக்களின் முழுமையான வாழ்வுக்கு எதிராக இருக்கும் அனைத்தும் தனியுடமையிலிருந்தே தொடக்கம் பெற்றன. இதை வரலாற்று ஆய்வின் மூலமும், உழைப்புக் கருவிகளின் உடமை மாற்றங்களினால் சமூகம் மாற்றமடைந்த வழிகளின் மூலமும் மிகத் தெளிவாக நிருவி இருக்கிறது கம்யூனிசம். உழைப்புக் கருவிகளையும் உற்பத்தியையும் பொதுவுடமை ஆக்குவதன் மூலம் எல்லாவகை சுரண்டலுக்கும் முடிவுகட்டி அனைத்து வகையிலும் வளர்ச்சியடைந்த பொதுவுடமை சமுதாயத்தை கட்டியமைப்பதற்கு போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. இதன் மூலம் மட்டுமே கடவுள் எனும் மாயக் கற்பனையின் தேவையற்று மக்கள் சமவாய்ப்பும் சமவசதியும் பெற்று மனிதச் சட்டமோ, இறைச்சட்டமோ அவசியமற்ற குற்றம் செய்யும் மனோநிலையின்றி வாழவதற்கான வகையேற்படும்.

இது ஒரு மிக நீண்டகால இலக்கு. ஆனால் இந்த இலக்கை நோக்கி பயணப்படும் கொள்கையோ, கோட்பாடோ, இசங்களோ, மதங்களோ வேறொன்று இல்லை, கம்யூனிசத்தை தவிர. இதில் ஐயுற்றிருப்பவர்கள் தொடருங்கள், விளக்கமுண்டு. எதிர்நிற்பவர்களே, முடிந்தால் மறுத்துப் பாருங்கள்.

முந்திய பதிவு

கடவுள் ஏன் இருக்கக் கூடாது? – விவாதம்: பகுதி 1