தொகுப்பு | ஏப்ரல், 2012

கடையநல்லூர் காட்டுமிராண்டித்தனம் குறித்து…

9 ஏப்

இந்த விவாதத்தின் நான்காவது பகுதியாக மக்களின் மனோநிலை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுவரை ஆதரவு நிலைகளை விமர்சித்திருக்கிறோம். அதாவது கடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தை அது சரியானது தான் என ஆதரித்து நிற்பவர்களை பார்த்தோம். இப்போது அதற்கு மாற்றமான நிலையில் இருப்பவர்கள், தெளிவாகச் சொன்னால் அது காட்டுமிராண்டித்தனம் தான் எனக் கூறும் எங்களை எதிர்க்காமல் அமைதிகாக்கும் எங்களின் நலம் விரும்பிகளின் மனோநிலையையும் அலசிப்பார்ப்பது அவசியமாக இருக்கிறது.

 

பெரும்பான்மையாக எங்களின் உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் இந்த மனோநிலையில் இருக்கிறார்கள்.  இது அவர்கள் மீதான விமர்சனம் அல்ல. என்றாலும், அவர்கள் உளக்கிடக்கையின் தன்மையை, அது என்ன விதத்தில் பிறரிடத்திலிருந்து மாறுபட்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தேவையிருக்கிறது எனும் அடிப்படையில் இது எழுதப்படுகிறது.

 

இந்தப் பிரச்சனையை நாங்கள் அணுவதற்கும் பிறர் அணுவதற்கும் உள்ள பாரிய வேறுபாடு காணும் உரைகல்லில் இருக்கிறது. அது சரியா? தவறா? எனும் அடிப்படையிலிருந்து நாங்கள் அணுகுகிறோம். பிறரோ, அது சாதகமானதா? பாதகமானதா? எனும் அடிப்படையிலிருந்து அணுகுகிறார்கள்.  அதனால் தான் தற்போதைய நிலை எங்களுக்கு பாதகமானது என்பதால் வருந்துகிறார்கள், ஆலோசனைகள் கூறுகிறார்கள், எச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துகிறார்கள்.

 

முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடுவது அவசியம்.  எங்களின் தற்போதைய நிலை, அதாவது பிறந்து வாழ்ந்த ஊரிலிருந்து தனிமைப் பட்டிருப்பது, ஊராரின் புரிதலற்ற தண்டனைகளுக்கு ஆட்பட்டு நிற்பது போன்றவை எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாக எந்த விதத்திலும் நாங்கள் கருதுவதில்லை. வாழ்க்கை எனும் சாலையில் ஏற்படும் திருப்பங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் அவ்வளவு தான். எங்கும், எப்படியும் எங்களால் வாழ முடியும். ஏனென்றால் அடிப்படையில் நாங்கள் சர்வதேசியவாதிகள். அதனால் தான் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் நடந்தது தவறானது என்று எங்களால் உறுதியாக நிற்க முடிகிறது.

 

ஆனால் எங்களின் நலம் விரும்பிகள் இதை இவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. இப்படி ஆகிவிட்டதே என்று கைசேதப் படுகிறார்கள். எந்த வகையிலாது இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் தான் நடந்தது சரியா? தவறா? எனும் கேள்விக்குள் அவர்களால் புகுந்து செல்ல முடியவில்லை. தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த அவலம் ஏன் நேர்ந்தது?, அப்படி நேர்ந்ததற்கான கூறு தங்களுக்குள் இருக்கிறதா? எனும் சிந்தனைக்கு அவர்களால் வர முடியவில்லை. ஆம். அந்தக் கூறு எங்களுக்கு நெருக்கமானவர்களான இவர்களிடமும் இருக்கிறது.

 

தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்த பாதிப்பு எனும் தளத்தின் மேல்தான் இவர்களுடைய எங்களுக்கான ஆதரவு நின்று கொண்டிருக்கிறது. நெருக்கமானவர்களாக இல்லை என்றால் இன்னும் இரண்டு அடி சேர்த்துப் போடு என்று கூறியிருக்கக் கூடும். “எங்கள் உயிரிலும் மேலான நபிகளை கேவலப்படுத்திய இவனை கொன்றாலும் தப்பில்லை” என்று பின்னூட்டம் எழுதியவரின் உறவினர் ஒருவர் இப்படி இருந்திருந்தால் நிச்சயமாக அப்படி ஒரு பின்னூட்டத்தை அவரால் எழுதியிருக்க முடியாது. கைசேதப்பட்டிருக்கவும் கூடும். இதில் இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. அவர்களின் கருத்தியலில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லாதது தான் காரணம். கருத்தியல் ரீதியாக இருவருமே ஒரே நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தாம், நடைமுறையில் மட்டுமே சற்று வேறுபாடு. இதுவும் ஒருவகையில் சுயநலம் தான்.

 

அடுத்து எங்களின் நலம் விரும்பிகள் முன்வைக்கும் ஓரிரு அறிவுரைகளையும் பார்த்துவிடலாம். ஊரொடு ஒட்ட ஒழுகல் என்பது ஏற்றுக் கொள்ளத் தகாததா?

“உலகத்தொடு ஒட்ட ஒழுகார் பலகற்றும்

கல்லார் அறிவி லாதார்” என்பது திருக்குறள். இதுமட்டுமன்றி பல்வேறு பழமொழிகளும், சொலவடைகளும் ’உலகொடு ஒட்டி ஒழுகலுக்கு’ மாறாக செயல்பட வேண்டாம் என வலியுறுத்துவதாக இருக்கின்றன. அதேநேரம் இதற்கு எதிரான நிலை கொண்ட பழமொழிகளும், சொலவடைகளும், வழக்காறுகளும் இருக்கவே செய்கின்றன.

“சொல்லுக சொல்லை பிரிதொருசொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு”

”எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு” இவைகளும் திருக்குறள் தாம். இதை எப்படி எடுத்துக் கொள்வது?

 

எந்த ஓர் அனுபவக் குறிப்பையும் அநீதிக்கு ஆதரவாக ஒருபோதும் கொள்ளக் கூடாது. கடையநல்லூரில் நடந்தது அநீதியா? இல்லையா? என்ற பார்வையிலிருந்து இதை அணுகுவது தான் சரியானதாக இருக்க முடியும். அந்தக் கேள்விக்குள் நுழையாமலேயே ஊரே அப்படித்தான் ஒழுகுகிறது எனவே நீயும் அப்படியே ஒழுகு என்பது பக்கப்பட்டை கட்டிய பார்வையாக மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்டவனின் கோணத்தை மறுக்கும் அராஜகப் போக்கவும் அது இருக்கும் என்பதையும் உணர வேண்டும். சரி, ”இந்த உலகொடு ஒட்ட ஒழுகல்” என்பதை இவர்கள் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவார்களா? எண்பதின் முற்பகுதிகளில் தர்கா கலாச்சாரமே ஒட்ட ஒழுகலாக இருந்தது. அதை ஏன் இவர்கள் மறுத்தார்கள்? ஆக ஒட்ட ஒழுகல் என்பதைத் தாண்டி சரியா? தவறா? எனும் பார்வையும் அவர்களுக்கு இருந்திருக்கிறது(அது சரியான பார்வையா என்பது வேறு விசயம்). அந்த பார்வையைக் கொண்டுதான் உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறையாக இருந்த தர்கா கலாச்சாரத்தை ஒழித்தார்கள். அந்த அளவுகோலை ஏன் இந்த விசயத்தில் பயன்படுத்த மறுக்கிறார்கள்? ஏனென்றால் இது அவர்களின் விருப்பத்திற்கு மாறானதாக இருக்கிறது. அவர்களின் கருத்துக்கு எதிரானதாக இருக்கிறது. அதேவேளை நீ செய்தது தவறு என்று உறுதியாக நின்று சுட்டிக் காட்டவும் முடியவில்லை. அதனால் தான் அவர்களுக்கு ‘ஒட்ட ஒழுகல்’ எனும் முக்காடு தேவைப்படுகிறது. நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

என்ன தான் நீ கூறுவது சரியாக இருந்தாலும் ஊரே எதிர்த்து நிற்கும் போது அதற்கு பணிவது தானே சரியான அணுகுமுறை? இல்லை. தனக்கு ஏற்பில்லாத ஒன்றை ஊர் ஏற்று நிற்கிறது என்பதற்காக சரியான நிலைப்பாட்டை விட்டு மாறுவது பிழைப்புவாத அணுகுமுறை. ஊரே ஏற்று நிற்கும் ஒன்றை கருத்தியல் ரீதியாக தவறு என்று உணரும் போது அணுக்கமான செயலுத்திகள் மூலம் அதை ஊருக்கு புரியவைக்க முயலலாம், அதில் தவறில்லை. இந்த அணுக்கத்தை நான் எழுதும் தொடர் நெடுக நீங்கள் காணலாம். ஆனால், நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதை பிழைப்புவாதிகள் மட்டுமே செய்யமுடியும். சரி, இந்த ஊரே எதிர்த்து நிற்கிறது என்பதை எல்லாவற்றுக்கும் இவர்கள் பயன்படுத்துவார்களா? இன்று ஈரான் விசயத்தில் அமெரிக்கா எடுத்து வரும் அராஜக, மேலாதிக்க நடவடிக்கைகள் அனைவரும் அறிந்தது தான். ஊரே எதிர்த்து நிற்கிறது எனும் அளவுகோலை பயன்படுத்தி அமெரிக்கவிடம் பணிந்து போக முயலுங்கள் என்று ஈரானிடம் இவர்கள் கூறுவார்களா? இன்று ஈரான் தன்னந்தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வெகுசில நாடுகள் கூட எதிர் அரசியல் நிலைப்பாட்டில் தனக்கு கிடைக்கும் ஆதாயங்களை மனதில் கொண்டே ஆதரவு நிலை எடுத்திருக்கின்றன. ஐநா அமைப்பு தொடங்கி பன்னாட்டு நிதியியல் அமைப்புகள் ஈறாக ஈரானை எதிர்க்கின்றன. இந்த பலத்துடன் ஒப்பிட்டால் ஈரானும் அதற்கான ஆதரவும் ஒன்றுமே இல்லை. இந்த நிலையில் ஈரான் குறித்த இவர்களின் மதிப்பீடு என்ன? உலகமே எதிர்த்து நிற்பதால் அமெரிக்காவிடம் பணிந்து போக வேண்டும் என்று விரும்புவார்களா? ஊரே எதிர்த்து நின்றாலும் ஈரானுக்கு ஆதரவான தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரென்ன உலகமே எதிர்த்து நின்றாலும் ஈரான் விசயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் அளவுகோல் கடையநல்லூர் விசயத்தில் ஏன் பயன்படாது? நலம் விரும்பிகளே இதை பரிசீலித்துப் பாருங்களேன்.

 

அடுத்து, என்னை சற்றே வருத்தம் கொள்ள வைத்த ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மிக நெருங்கிய உறவினர் ஒருவர், என் கையை பிடித்து முதன் முதலில் ‘அ’ எழுத சொல்லித்தந்தவர், என்னுடைய கருத்தியல் வளர்ச்சியின் ஒவ்வொரு அலகையும் அருகிருந்து கவனித்தவர், சில போதுகளில் உற்சாகம் தந்தவர் அண்மையில் என்னுடைய தாயாரை அழைத்து, “நீ ஒழுங்காக வளர்க்காததால் தான் அவன் இப்படி ஆகி விட்டான்” என்று திட்டியிருக்கிறார். அதிர்ச்சியாக இருந்தது. இன்று நான் கொண்டிருக்கும் கொள்கை உறுதி, சமூகத்தின் மீதான பற்றார்வம் போன்றவை எல்லாம் வெறும் வளர்ப்பில் நேர்ந்த பிழை தானா? என்னை சிறு வயதிலேயே அடித்து ஒடுக்கி ஊரோடு ஒட்ட வளர்த்திருந்தால் நான் இன்று மனிதனாகி இருந்திருப்பேனா? நான் மனிதனா இல்லையா என்பதை கேவலம் ஒரு மதத்தின் நடத்தைகளா தீர்மானிப்பது? என்னிடம் பேசும் போது நேரடியாக என்னை விமர்சிக்காமல் என்னின் பாதிப்புகள் குறித்து மட்டுமே பேசியதை என்மீதான பாசம் என்றுதான் இப்போதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என் தாயாரிடம் பேசும்போது நீங்கள் வேறு முகம் காட்டியிருக்கிறீர்களே. எது உங்கள் மெய்முகம் என்பதை அடையாளம் காட்ட நீங்கள் உதவினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் என்னை அருகிருந்து கவனித்து வந்திருக்கும் நீங்கள் இதை வளப்புக் கோளாறு என்று எண்ணியிருக்கிறீர்கள் என்றால்; இதுவரை நான் பார்த்த நீங்கள் திடீரென்று நான் பார்க்காத நீங்களாய் மாறியிருக்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.

 

தெளிவாக ஒன்றைக் கூறவிடலாம். நாங்கள் விமர்சனம் சுயவிமர்சனத்தை மூச்சாக கொண்டிருப்பவர்கள். எங்களை மாற்ற வேண்டும் என எண்ணினால் அது வெகு எளிது. நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்படு தவறானது என்பதை உணர்த்திவிட்டால் போதுமானது. தவறான நிலைப்பாட்டில் நாங்கள் ஒருபோதும் இருக்க விரும்புவதில்லை. மாறாக,  சமுகரீதியான பார்வைக்கு அப்பாற்பட்டு எங்களை மாற்ற நினைத்தால் அது வெகு கடினம். ஊரல்ல, உலகமே எதிர்த்தாலும் பிழைப்புவாதியாய், காரியவாதியாய் நாங்கள் சுருங்க முடியாது. இதை நாங்கள் பெருமையாகவே அறிவித்துக் கொள்கிறோம்.வெறுமனே உங்கள் உறவினர்கள் மட்டுமல்ல, நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

 

முதல் பதிவு: செங்கொடி