தொகுப்பு | மார்ச், 2011

தோழர் ஸ்டாலினை தவறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை புறக்கணிப்போம்!

31 மார்ச்

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெற்றி சரித்திரம்’. இதில் இரண்டாம் உலக போருக்கு வித்துட்டு கோடிக்கணக்கான மக்களை கொன்ற பாசிச ஹிட்லரை நல்லவன் போலவும், அவனுடைய பாசிசத்திலிருந்து உலகையே காப்பாற்றிய சோவியத் அரசு மீதும் அவ்வரசை தலைமை தாங்கி நடத்திய தோழர் ஸ்டாலின் மீதும் போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டு செல்கின்றனர்.

ஹிட்லர் என்ற பாசிச மிருகம் முன்னர் ஓவியனாக இருந்தது பின்னர் அவனுக்கு ஏற்பட்ட ஆசையால் (அதாவது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற காலனிபடுத்தும் நாடுகளையே தான் காலனி நாடுகளாக ஆக்க வேண்டும்) தான் இந்தியாவின் விடுதலை கூட சாத்தியமாயிற்று என்று ஹிட்லரை அணுஅணுவாக புகழும் இந்நிகழ்ச்சி உலகத்தின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனையும், அதன் தலைவரையும் சர்வாதிகாரி என்றும் லட்சக்கணக்கான மக்களை கொலை செய்தார் என்றும் இட்டு கட்டி செய்தியை அள்ளி விசிவிட்டு போகிறது.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என முடிவு செய்து முரசொலியில் இந்த ’யோக்கியகர்கள்’ எழுதி கிழிப்பது போல அல்ல வரலாறு என்பது. அது மக்கள் உயிர் ஓவியம்.

 

தோழர் ஸ்டாலின் என்ற மாபெரும் மக்கள் தலைவரையும், அவர் தலைமை தாங்கி உருவாக்கிய சோசலிச அரசையும் பற்றி அறிய பல்வேறு நாட்டு தலைவர்கள், எழுத்தாளார்கள் அங்கு சென்று வந்து எழுதியவற்றை கூடவா கலைஞர் படிக்காமலா இருந்து இருப்பார். நிச்சியம் படித்து இருப்பார். குறிப்பாக பெரியாரின் அனுபவத்தையும் படித்து இருப்பார். இதனால் தான் தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார் என்பது உண்மைதான்.

ஆனால் இன்று கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து நிற்கும் முதலாளியான கருணாநிதிக்கு கம்யூனிச கொள்ளை தனது இருப்புக்கே ஆப்பு வைக்கும் என நன்றாக தெரியும். அதனால் தான் ஹிட்லர் ஹிரோவாகி விட்டார், தோழர் ஸ்டாலின் வில்லன் ஆகி விட்டார்.

தனது குடும்பத்தினரின் அதிகார, பதவி சுகத்துக்காக வாழும் கலைஞர் போன்ற சுயநல நோய்கள் வாழும் இன்றைய காலத்தில், “உலகை பாசிசத்திலிருந்து விடுவிக்க சொந்த வாழ்க்கையையும், சொந்த மகனையும் இழந்த தோழர் ஸ்டாலினை”  பற்றி உழைக்கும் மக்களாகிய நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் ஆன ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் இதே கலைஞர் தான் நமது வாழ்வாதரத்தை அழித்து இலவசங்களுக்காக அலைபவர்களாக நம்மை ஆக்கியவர்.

நமீதாவின் தொப்புள்ளை வெளிச்சமிட்டு காட்டி கல்லா கட்டும் கலைஞர் தான் , நமது தலைவரை இருட்டடிப்பு செய்கிறார்.

நம்முடைய் விடுதலையினை ஸ்டாலினுடைய கொள்கையை பற்றி நிற்கும் போது தான் அடைய முடியும்!

அதற்கு முதல் படியாக

தோழர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை நாம் புறக்கணிப்போம்!

நன்றி: அதிகாலை இளமாறன்

ஓட்டுப் போடாதே, புரட்சி செய் 1

30 மார்ச்

ஒவ்வொருமுறை தேர்தல் நடக்கும் போதும் மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுப்போடுவதால் பலன் ஒன்றுமில்லை என்பதும் மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள் என்றால் அதன் காரணம் வேறு வழி எதுவும் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது தான். மாற்று இருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும், உணர்த்த வேண்டும் என்பதற்காக “ஓட்டுப் போடாதே புரட்சி செய்” எனும் குரலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட ஒரு சிறு வெளியீடு தொடராக இங்கு வெளியிடப்படவிருக்கிறது. படியுங்கள். பரப்புங்கள்.

 

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

அப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?

தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?

பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். ‘இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.

‘எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். ‘அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், ‘வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ க்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.

‘ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன்சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமரமக்கள்தான்.

ஏனென்றால், ‘தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.

தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.

‘மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ ‘நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!
தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.

தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.

வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

‘கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. ‘இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. ‘மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும். இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.

யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் கப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?

இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி – என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.

போர்டு, ஹண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?

2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். னால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?

ஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை யிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!

தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?

கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?

பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?

2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?

ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்… என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?

இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.

தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?

அரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்…….. என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என றாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக்காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்டமிட்டே மாற்றி வருகிறது ஜெயா – சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாகக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.

தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் ‘எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்’ சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.

கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.

 

தொடரும்

மின்சாரம் தயாரிக்கும் செயற்கை இலை

30 மார்ச்

அமெரிக்காவின் மசாகூசட்ஸ் தொழில்நுட்ப கல்வியகத்தின் பேராசியரான முனைவர் தானியேல் நோசேரா தலைமையிலான குழு, உலகின் முதல் செயற்கை இலையினை உருவாக்கியுள்ளனர். இந்த ஆக்கமானது அறிவியல் உலகில் குறிப்பிடத்தக்கதொரு சாதனை ஆகும். இதன் உருவம் ஆனது உண்மையான இலை போன்று இருக்காது, ஆனால் ஒரு இலையின் செயற்பாடுகளை துள்ளியமாக இது செய்யவல்லது. இந்த செயற்கை இலை தண்ணீரின் மீது மிதக்க விடப்படும் எனவும், இயற்கையில் கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை உள்வாங்கி தண்ணீரின் ஹைட்ரஜன், ஆக்சிஜனை இது பிரித்து அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் தெரிகிறது.

இயற்கை அன்னையின் செயல்பாடுகள் எப்போதுமே மனிதனுக்கு பல ஆக்கங்களுக்கு ஊக்கம் தந்துள்ளது. அந்த வகையில் மெய் இலையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து இந்த இலையினை உருவாக்கியுள்ளனர். இதன்படி இந்த இலைகளை நீர்நிலைகளில் மிதக்க விடப்படும். அந்த இலைகளானது நீரில் இருக்கும் ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் சூரிய ஒளியினைக் கொண்டுப் பிரித்து அவற்றை வீடுகளுக்கு அருகே இருக்கும் fuel battery-களில் சேமித்து வைத்துக் கொள்ளும். அந்த பேட்ரிகளில் இருந்து மின்சாரத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த முறையிலான மின்சார ஆற்றலை பெறுவதன் ஊடாக சுற்றுப்புறச்சூழல் சீர்கேடு மிகவும் குறைவான முறையிலும், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளில் கிராமப்புறங்களிலும் கூட மின்சாரத்தை எளிதாகப் பெறக்கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன் ஞசான் டேர்னர் என்பவரால் செயற்கை இலையினை உருவாக்கிவிட்ட போதிலும், அவரது  ஆக்கம் வெகுவாக பயன்படுத்தக் கூடியதாக இல்லாமல் இருந்தது. அவரது கருவியானது அரிதான உலோகங்களால் கட்டப்பட்டு இருந்ததாலும், அவர் கண்டுப்பித்த பேட்ரியானது நிலையற்ற தன்மை வாய்ந்ததாக இருந்ததாலும் ( ஒரு நாள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் ) அவற்றை பொதுமக்களும் பயன்படுத்தக் முடியாமல் போனது.

ஆனால் தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலையானது இயல்பான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது, அனைத்து வித சுற்றுச்சூழலிலும் பயன்படுத்தக் கூடியதாகவும், நிலையான பேட்ரி என்பதாலும் இதனை கிராமங்களில் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையான இலையை விடவும் பத்து மடங்கு அதிக ஆற்றல் பெற்றதாகவும் உள்ளது.

தற்சமயம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இலை ஒன்று தொடர்ந்து 45 மணிநேரம் இயங்கி மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதாகவும், இதன் ஆயுளை அதிகப்படுத்தும் ஆய்வில் ஈடுப்பட்டுள்ளதாகவும், விரைவில் இன்னும் ஆற்றல் மிக்க இலைகளை உருவாக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் தானியேல் நோசேரா.

 

நன்றி: தமிழ்ச்சரம்

காந்தி குறித்த புத்தகம்: ஏன் தடை செய்ய வேண்டும்?

29 மார்ச்

மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை மகாராஷ்டிர மாநில அரசு தடை செய்யவுள்ளது.

 

புலிட்சர் விருது பெற்ற ஜோசப் லெலிவெல்ட் என்னும் பத்திரிகையாளர் “காந்தியும் அவரது இந்தியப் போராட்டமும்” என்னும் தலைப்பில் காந்தியின் வரலாற்றை கூறும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த புத்தகத்தில், காந்தியின் குணத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே, சட்ட மேலவையில் கண்டனம் தெரிவித்து பேசினார்.இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் நாராயண் ராணே கூறுகையில், “அந்த புத்தகத்தை மாநிலத்தில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், அந்த புத்தகம் இந்தியாவில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.” என்றார்.

***********************************************

காந்தியின் போராட்டங்களையும் பொதுவாழ்க்கையையும் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். காந்தி குறித்த அம்பேத்காரின் விமர்சனங்கள் மறுக்க முடியாதவை. அதனால் தான் அவைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். விடுதலை வாங்கித்தந்தவர் என்று கொண்டாடப்படும் காந்தியின் போராட்டங்கள் மக்களின் விடுதலைக்கு துரோகம் இழைத்திருக்கிறது என்பதை அவரை மகாத்மா என்று கருதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் வெளியீடான இந்த சிறு நூலை அவசியம் படித்துப் பாருங்கள்

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

 

மரபணு மாற்று முறையில் மனித உறுப்புகள்

28 மார்ச்

மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் சீன மருத்துவ விஞ்ஞானிகள்.

இப்போது தேவையான உடல் உறுப்புகளை மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவருகிறார்கள்.

மனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

*****************************************************

அறிவியல், மருத்துவ ஆய்வுகள் எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்பாடுள்ளதாக, பயன்தரத் தக்கதாக இருக்கிறது என்பதைத் தான் இது போன்ற ஆய்வுகளில் முதன்மைத் தனமுள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது போன்ற முதன்மைத் தனமுள்ள ஆய்வுகளெல்லாம் சந்தைப் படுத்தப்பட்டு மக்களை சுரண்டும் நோக்கிலேயே இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது வலிதரக் கூடிய யதார்த்தம். இந்த நிலை மாறவேண்டும், மாற்ற மக்கள் முன்வரவேண்டும்.

பார்ப்பனியம் சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் எதிரானது தான்

27 மார்ச்

இந்து தேசம் என்பது தங்கள் கட்சி பயன்படுத்தும் சந்தர்ப்பவாத விஷயம் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளாகிடம் 2005 மே 6-ம் தேதி அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்து தேசம் என்ற விஷயத்தை தங்கள் கட்சி எப்போதும் பேசிவருகிறது என்று கூறிய நான், சந்தர்ப்பவாதம் என்று வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மீது கற்களை வீசக்கூடாது என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். விக்கிலீக்ஸ் கூறியதாக பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் மீதும் மத்திய அரசு மீதும் பாஜக குற்றம்சாட்டி வந்தது. இப்போது விக்கீலீக்ஸ் “பூமராங்’ போல பாஜகவையே திருப்பித் தாக்கியுள்ளது என்றார்.

 

வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுருவும் விஷயத்தால் அப்பகுதியில் இந்துத்துவா கோஷம் சிறப்பாக எடுபடுகிறது. இந்துதேசம் என்ற கோஷம் இப்போது தில்லியில் வலுவிழந்து விட்டது. பாகிஸ்தானுடனும் நல்லறவு இருந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் எல்லை தாண்டி மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினால் இந்த நிலை மாறிவிடும் என்ற ஜேட்லி கூறியதாக ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இதனை மறுத்துள்ள ஜேட்லி, இந்துத்துவம் என்பதை சந்தர்ப்பவாதம் என்று ராபர்ட் பிளாக் தானாவே அர்த்தப்படுத்தி பயன்படுத்தியுள்ளார். பல விஷயங்கள் நான் கூறியபடி இல்லாமல் மாறுபட்டு வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்ளும்படி வெளியிட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சந்தர்ப்பவாதம் என்று வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

*****************************************************

மத பேதங்களைக் கடந்து பார்ப்பனியம் என்பது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான ஒன்று தான். தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்க்காகத்தான் அது இந்துக்களை ஒற்றுமைப்படுத்த முயல்கிறதேயன்றி; சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து இந்துக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை. பிற சிறுபான்மை மதத்தினரி எதிரிகளாக சித்தரித்து, அதைக்காட்டி இந்துக்களை ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்று தான் பார்ப்பனியத்தின் நோக்கமேயன்றி, இந்து மக்களின் நலன் அதற்கு கொஞ்சமும் இல்லை. இது மீண்டுமொரு முறை விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

27 மார்ச்

நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.

அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.

முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.

மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும்  ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின்  பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.

இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும்  சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.

பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை  போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.

எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்  இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.

இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில்  கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?

மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.

லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.

அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.

லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.

பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.

ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.

1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில்  ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.

மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்

இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.

அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.

ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?

அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.

தற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.

ஒரு உலக ரவுடியாக  உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!

ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.

நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.

அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

 

நன்றி: வினவு

தெலுங்கானா: கிருஷ்ணா கமிட்டி அமைத்ததன் நோக்கம் என்ன?

25 மார்ச்

“ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னை பரவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியின் ரகசிய அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.”ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை, சில மாதங்களுக்கு முன், மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த அறிக்கையுடன், இணைப்பாக ஒரு ரகசிய அறிக்கையையும் ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்திருந்தது.

இதில் இடம் பெற்றிருந்த விவரங்கள், இதுவரை வெளியில் தெரியாமல் இருந்தது. அந்த ரகசிய அறிக்கையில், உள்துறை அமைச்சகத்துக்கு, ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்த பரிந்துரையில், “ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம், அதிகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஆளும் கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும்.தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கு, துணை முதல்வர், நிதி அமைச்சர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவி கொடுப்பதன் மூலம், தெலுங்கானா விவகாரத்தை பரவ விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானா போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இத்தனை நாளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த ரகசிய தகவல், நேற்று முன்தினம் ஆந்திர ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாராயண் ரெட்டி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட போது, இந்த ரகசிய தகவல் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், ஆந்திராவில் அதிக பரபரப்பு ஏற்படும்.

******************************************************

ஒரு நாட்டைப் பிரித்து தனி நாடாக்குவதும், ஒரு நாட்டிலுள்ள மாநிலங்களை பிரித்து தனி மாநிலமாக உருவாக்குவதோ நிர்வாக வசதிக்காக என்று கரணம் கூறப்படும். ஆனால் நிர்வாக வசதி என்பதன் பொருள் பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். பெரிய அளவில் கோரிக்கைகள் எதுவும் எழாத நிலையிலேயே சில மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்படுவதிலும், எவ்வளவு தீவிரமாக போராட்டங்கள் நடத்தினாலும் அந்தக் கோரிக்கைகள் மறுக்கப்படுவதிலும் பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணங்களை சீர்தூக்கிப் பார்த்தாலே இது வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த வகையில் ஹைதராபாத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கணிணித் தொழில்நுட்ப நிறுவனங்களுமே தெலுங்கானா பிரியவேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தான் தெலுங்கானா பிரிந்தால் ஏற்படப்போகும் சாதக பாதகங்கலை அலசுவதற்காக அமைக்கப்பட்ட கிருஷ்ணா கமிட்டி, தெலுங்கானா பிரச்சனையை எப்படி அடங்கச் செய்யலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் செயல்பட்டு அறிக்கை தந்திருக்கிறது.

 

லெனினை கொல்ல இங்கிலாந்து சதி செய்தது உண்மைதான்

24 மார்ச்

முதலாம் உலகப்போரின் போது ரஷ்யாவின் போல்ஷ்விக் தலைவர் லெனினைக் கொலை செய்திட பிரிட்டன் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் பல காலமாக ஒரு கற்பனை என்று புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலாம் உலகப்போர் காலத்தில் ரஷ்யாவின் போல்ஷ்விக் தலைவராக இருந்த லெனினைக் கொலை செய்ய இங்கிலாந்து முயன்றதாக கூறப்பட்டது. இது ஒரு கற்பனை செய்தி என இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், அது உண்மைதான் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய செய்தியில், 1918 ல் ஒரு ரஷிய பெண்மணி லெனினை இரு முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் மாஸ்கோவிற்கான அப்போதைய லண்டன் பிரதிநிதி ராபர்ட் ப்ரூஸ் லாகர்ஹர்ட் சம்பந்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விஷயம் சோவியத் பள்ளிகளிலும், திரைப்படங்களிலும் காட்டப்பட்டிருந்தாலும் பிரிட்டன் இதனை மேற்கிற்கு எதிரான பிரச்சாரம் என்று கூறி மறுத்தே வந்துள்ளது.

லாகர்ஹர்ட்டும் இதனை மறுத்தே உள்ளார். ஆனால் 1918 வேனிர்காலங்களில் அனுப்பப்பட்ட தந்திகளில் லாகர்ஹர்ட் இந்தக் கொலை முயற்சிக்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி அப்போதைய பிரிட்டிஷ் போர் கவுன்சில் உறுப்பினரான கர்சன் பிரபுவிடம் விவாதித்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவிக்கிறது. லெனினின் இடத்தை போல்ஷேவிக்குகளில் எதிர் அணியினரில் ஒருவரான சவின்கோவைக் கொண்டு நிரப்புவது பற்றி அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.  அந்தச் செய்திக்குக் கீழே கர்சன் பிரபுவின் இனிஷியலை கொண்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு லாகர்ஹர்ட் ரஷிய ரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆனாலும் தன்னுடைய சுயவிபரகுறிப்பில் அது பிரிட்டனுக்கான பிரபல ரஷிய உளவாளி சிட்னி ரீலியின் வேலை என்றே பதிவு செய்துள்ளார்.

**************************************************

கம்யூனிசம் தோற்றுவிட்டது என்பதை ரஷ்யாவில் சோசலிச அரசு பின்னடைவுக்கு உள்ளானதை முன்னிட்டே கூறி வருகின்றனர். அதேநேரம் உலக ஏகாதிபத்தியங்கள் கம்யூனிச தலைவர்களை கொல்வதற்கும், சோசலிச அரசை அகற்றுவதற்கும் செய்த சதிகள் ஏராளம். பொய்யை உண்மையைப் போல உலகம் முழுதும் பரப்பி வைத்திருக்கும் ஏகாதிபத்தியங்கள், ஆசான் லெனினை கொல்ல‌ நடத்த சதி குறித்த விசாரணையை கற்பனை என்றே இதுவரை கூறிவந்தன. ஆனால் இன்று அவை அவர்களிடமிருந்தே வெளிவருகின்றன.

 

டெயிலி மெயில் செய்தி

தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

23 மார்ச்

வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் பொதுத்தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் பணநாயக ஓட்டுத்தலைவர்கள். நாங்களும் செயல்படுகிறோம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யும் தேர்தல் கமிசன் மீது ‘குடி’மக்கள் தாக்குதல் தொடுக்க நினைக்குமளவுக்கு இடைத்தேர்தல் பிரியாணிகள் மக்களை பணருசியில் கட்டிவைத்திருக்கின்றன.

 

தேர்தல் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக(!) முறையில் தங்களை ஆள்வதற்கு யாருக்கு உரிமை உண்டு என்பதை தேர்ந்தெடுப்பது என்று நினைப்பதை பழம்பஞ்சாங்கமாக்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னென்ன பொருட்களை இலவசமாய் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதாக மாற்றி வைத்திருக்கின்றன ஓட்டுக்கட்சிகள். மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு மிக்ஸி அல்லது கிரைண்டர், இலவச அரிசி, வயதானவர்களை தேடி மருத்துவர்கள் இன்னும் ஏராளம் என திமுக. நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று அதிமுகவும் செல்போன் உட்பட வரப்போகும் அவர்களின்  அட்டவணையை நாளிதழ்களுக்கு கசியவிட்டிருக்கிறது. வீசப்படும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு குலைக்காமல் திருடனுக்கு வாலாட்டும் நாயைப் போல் மக்களை மாற்றி வைத்திருக்கின்றன இந்த ஓட்டுக் கட்சிகள்.

 

இன்னொருபக்கம் இந்தக் கட்சிகள் தங்களுக்குள் நடக்கும் பங்கீட்டுச் சண்டைகளையே அரசியலாக பேசவைத்திருக்கின்றன. 63 வேண்டுமாம் அதுவும் அவர்கள் கேட்பது வேண்டுமாம் என்று முறுக்கிக்கொண்டு இரண்டு மணி நேர உண்ணாவிரதம் நடத்திய அனுபவத்தில் இரண்டு நாள் ஆதரவு வாபஸ் நாடகத்தை நடத்திய‌ கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் என்னும் ஆலமர ஊழலில் ஒன்றிரண்டு இலைகளை எடுத்துக்காட்டி அதை நமுத்துப்போன ஓலைவெடியாக மாற்றிய சோனியா. பேசுகிறோம், பேசுகிறோம் என்று கூறிக்கொண்டே பார்ப்பன முகம் காட்டி 160க்கு ஆளை நிறுத்திய ஜெயலலிதா. கண் சிவந்து கொண்டே மூன்றாம் அணி போக்கு காட்டிய விசயகாந்து, காமெடி பீஸ் கம்மூனுஸ்டுகள். தன்மான சீன் காட்டிக்கொண்டே அழுவேன் என்று கோமாளி வேசம் கட்டி வெளிவந்த வைக்கோ. இந்த நாய்ச் சண்டைகளை மாற்றி மாற்றியோ; கூட்டிக் குறைத்தோ பேசுவது தான் அரசியலா?

 

அய்யா வந்தாலும் அம்மா வந்தாலும் நம்ம வயிற்றை நாம தானே பாத்துக்கணும் என்று நடப்பது நம‌க்கு தொடர்பில்லாத ஒன்று என நினைக்கும் மக்களின் அறியாமை ஒருபக்கம். ஏஸி காரில் அமர்ந்து எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் காலத்துல அரசியல் நேர்மை திராவிடக் கட்சிகள் வந்து கெடுத்துட்டான்க‌ள் என்று ரிட்டையர்டு பார்ப்பனியம் பேசும் காரியவாதிகள் மறுபக்கம். இரண்டுக்கும் இடையில் எல்லாவித தகிடுதத்தங்களுக்கும் தயாராக இருக்கும் ஓட்டுக் கட்சிகள். இது தான் அரசியலா? எது அரசியலோ அதை தவிர்த்து விட்டு அரசியலற்ற ஆரவாரங்களையும் சண்டைகளையும் பேசிக்கொண்டிருந்துவிட்டு அரசியலே சாக்கடை என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

 

திமுக ஆளும் கட்சி, அதிமுக எதிர்க்கட்சி இரண்டும் மாற்றி மாற்றி ஆளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுவருகின்றன. இரண்டின் கொள்கைகளும் வேறு வேறு. ஒரு கட்சி போட்ட திட்டங்களை இன்னொரு கட்சி செயல்படுத்துவதில்லை என்று பேசிக் கொள்கிறார்கள். சட்டசபைகளில் காராசாரமாக விவாதித்துக்கொள்கிறார்கள். பல்பொடி கொடுக்கும் திட்டத்தை ஒரு ஆட்சி கொண்டு வந்தது என்பதற்காக ரத்து செய்துவிடுகிறது மறு ஆட்சி. ஆனால், பெருநிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும் சலுகைகளை மட்டும் ரத்து செய்வதில்லையே ஏன்? ஒரு ஆட்சிக்கு தேவைக்க அதிகமாக சற்று நெருக்கம் காட்டினாலும் ஆட்சி மாறியதும் அந்த அதிகாரியை டப்பா துறைக்கு தூக்கியடிக்கும் கட்சிகள்; பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் ஒரு ஆட்சியோடு குழைந்தாலும் மறு ஆட்சி வந்ததும் அவர்களை தூக்கி வீசாமல் இவர்களும் ஓடிப்போய் ஒட்டிக்கொள்கிறார்களே எப்படி? அரைக்கால் பைசா உதவித்திட்டம் என்றாலும் போட்டோ பிடித்து நாளிதழ்களில் போட்டுக்கொள்ளும் கட்சிகள், முதலாளிகளுக்கு கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் வெளிக்காட்டிக் கொள்வதில்லையே ஏன்? ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்களிடம் வந்து ஓட்டு வாங்க வேண்டியதிருக்கிறது என்பதால் “ஆட்ரா ராமா, ஆட்ரா ராமா” என்று குரங்காட்டம் போட்டுக் காட்டும் ஓட்டுக் கட்சிகள்; ஓட்டு வாங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லாத முதலாளிகளிடம் “பொட்டிப் பாம்பு” போல் அடங்கி விடுகிறார்களே எதற்கு?

 

 

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள் என கூறிக்கொண்டாலும், ஓட்டு வாங்கவேண்டியதிருக்கிறது என்பதைத் தவிர மற்றெல்லா விதத்திலும் மக்களை அலட்சியம் செய்கிறார்கள். எந்தத்தேவையும் இல்லாவிட்டாலும் முதலாளிகளை எல்லாவித வசதிகளையும், சலுகைகளையும் செய்து கொடுத்து எஜமானர்களாக கொண்டாடுகிறார்கள். என்றால் இதை மக்களாட்சி என்று கூறுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமல்லவா? வெளிப்படையாக முதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளையும், வரித் தள்ளுபடிகளையும், மானியங்களையும் எதிர்த்து யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பது ஒரு புறமிருந்தாலும் மக்களுக்கான திட்டங்கள் என்று கூறப்படுபவையும் உள்ளடக்கத்தில் முதலாளிகளுக்கான திட்டங்களாகவே இருக்கின்றன.

 

விவாசாயக் கடன்கள் என அறிவிக்கிறார்கள், ஆனால் அது விதைகளுக்காகவும், இடுபொருட்களுக்கவும் செலவிடப்படுவதால் அந்த நிறுவனங்களுக்குத்தான் அதன் பலன் போய்ச் சேர்கிறது. உரக்கம்பனிகளின் லாபம் குறையும் நேரத்தில் உர மானியம் என்று அறிவித்து விவசாயிகளை கடனாளிகள் ஆக்கிவிட்டு உரக்கம்பனிகள் லாபமடைய உதவுகிறார்கள். வீடு கட்ட உதவிக்கடன் என்கிறார்கள் அது போய்ச் சேர்வதோ ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்கிறார்கள், ஆனால் அது ஏழை மக்களுக்கு இலவச மருத்துவசேவை என்ற பெயரில் மக்களிடமிருந்து வரிகளாக பிடுங்கப்படும் பணம் தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளிவிடப்படுவதாக இருக்கிறது. தனியார் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக சாலைகளை அமைத்துவிட்டு கிராமப்புற மக்கள் மேம்பாடு என்கிறார்கள்.

 

மக்கள் குடி நீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது ஆறுகளையும் ஏரிகளையும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். தரகு முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு எத்தனை சைபர் என்று எண்ணமுடியாமல் திணரும் அளவுக்கு அலைக்கற்றை என்றும் எஸ் பேண்ட் என்றும் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்து மறைத்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவர முடியாது என முதலாளிகளை காப்பவர்கள் புழுத்த அரிசியைக்கூட பட்டினி கிடக்கும் ஏழைக்கு கொடுக்க முடியாது என்று திமிராக பேசுகிறார்கள்.

 

ஆக சட்டபூர்வமாக திட்டங்கள் தீட்டினாலும், சட்டவிரோதமாக கொள்ளையடித்தாலும் அது முதலாளிகளுடன் முதலாளிகளுக்கு சாதகமாக என்றானபின் ஓட்டை மட்டும் ஏன் நம்மிடம் கேட்கிறார்கள்? ஓட்டு போடுவதைத்தவிர உங்களுக்கு எங்களுக்கும் வேறு எந்த உறவும் இல்லை என்று தெளிவாக அறிவிக்க முடியுமா இவர்களால்? அல்லது இது ஜனநாயகம் என்றால், நடப்பது மக்களாட்சி என்றால் தைரியமாகச் சொல்லுங்கள்,

 

“எந்த நாய்க்கும் ஓட்டு கிடையாது” என்று.

 

நன்றி: செங்கொடி