தொகுப்பு | இந்தியா RSS feed for this section

இவர்களை உரசிப்பார்க்க இன்னொரு உரைகல்லும் வேண்டுமோ …?

9 ஜன

கறுப்புப் பணம் சம்பந்தப்பட்ட கணக்கு விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும், யாராவது வற்புறுத்திக் கேட்டாலும் சொல்லவே கூடாது என்றும் வருமான வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணம் வைத்திருப்பது சட்டப்படி குற்றம். தேசிய அவமானம். ஆனால் இதனை சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் பலரே பல ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது குறித்து பல காலமாகப் பேசப்பட்டாலும், எந்த அரசும் இந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர முயற்சிக்கவில்லை.

இப்போது கறுப்புப் பணம் குறித்து அதிகம் பேசத் தொடங்கிவிட்டதால் உஷாராகிவிட்ட பலர், பணத்தை இடம் மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ரகசிய வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்றுள்ளது. லிச்டென்ஸ்டீனில் உள்ள எல்.ஜி.டி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை ஜெர்மனி அரசிடம் இருந்து வருமான வரித்துறையின் உயர் அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் (சி.பி.டி.டி.) பெற்றுள்ளது. மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து 9,900 தகவல்கள், ஆவணங்களைப் பெற்றுள்ளது.

இந்த பெயர் பட்டியலின் ரகசியத்தை பாதுகாப்பதில் சி.பி.டி.டி. மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

ஒருவேளை இந்தப் பெயர்ப் பட்டியல் வெளியாகிவிட்டால், வெளிநாடுகள், கறுப்பு பண முதலைகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதை நிறுத்தி விடும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முன்வராது என்றும் சி.பி.டி.டி. கூறி வருகிறது.

இந்த பெயர் பட்டியல், ஏற்கனவே கொச்சி, மும்பை, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், இந்த பெயர் பட்டியலைக் கேட்டு வருகின்றன.

சொல்லவே சொல்லாதீங்க…

அப்படி கேட்கும் அரசுத் துறைகளிடம் எழுத்துமூலம் உறுதிமொழி பெற்ற பிறகே பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. உத்தரவிட்டுள்ளது. ‘பெயர் பட்டியலை வரிவசூலுக்காகவோ அல்லது வரிஏய்ப்பு விசாரணைக்காகவோ மட்டுமே பயன்படுத்துவோம்’ என்று எழுதி கையெழுத்து பெற்ற பிறகே, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு இந்த பெயர் பட்டியலை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்களை கைது செய்யவோ, இவர்கள் பற்றி செய்தி வெளியிடவோ கூடாது.

மேலும், இந்த பெயர் பட்டியல், எந்த அதிகாரி பெயரில் பெறப்படுகிறதோ, அவரே இந்த பட்டியலை ரகசியமாக பாதுகாப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், எத்தகைய சோதனையிலும் இந்தப் பட்டியல் ரகசியமாகவே இருக்க வேண்டும் என்றும் சி.பி.டி.டி. கூறியுள்ளது.

பெயர் பட்டியலை கேட்டு வாங்கும் அரசு விசாரணை அதிகாரிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணிக்கும் பணியிலும் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மானத்தை இத்தனை அக்கறையோடு காக்கும் அரசு, உள்நாட்டில் வரி செலுத்தாதவரிடத்திலும் இதே கரிசனம், கவனம், ரகசியக் காப்பைக் காட்டுமா?

*************************************************

ஓட்டுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் எனும் கழிசடை அரசியலின் அடிப்படையைக் கூட இழந்து வெட்கமின்றி அம்மணமாகி நிற்கிறார்கள். இன்னுமா இவர்களை ந‌ம்ப வேண்டும் மக்களே? இன்னுமா இவர்களை ஆட்சியாளர்கள் என்று அழைக்க வேண்டும்? இன்னுமா  இவர்களை தேர்ந்தெடுக்க வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு அதை கடமை என்று ஏமாந்து கொள்வது? இந்த ஓட்டுப் பொறுக்கிகள் அத்தனை பேரையும், அவர்களை தாங்கி நிற்கும் இந்த அமைப்பையும் தூக்கி எறிவதைத்தவிர வேறு மாற்று ஏதும் உண்டா நமக்கு?

ஊழலுக்கு எதிரான மெழுகுதிரி போராளிகளே! உங்கள் முகம் எங்கே?

7 ஜன

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம், போராட்டம், அரசுக்கு சவால் என பெரிய அளவில் பேசி வரும் ஹஸாரே குழுவின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தி பூஷண் ரூ 1.33 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது அம்பலமானது.

இந்த வரித் தொகையையும், அதற்கான அபராதப் பணம் ரூ 27 லட்சத்தையும் செலுத்துமாறு அலகாபாத் வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக பணியாற்றும் சாந்தி பூஷன், 1970 வரை அலகாபாத்தின் பிரதானமாக உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் பெரிய வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டின் பரப்பளவு 7818 சதுர மீட்டர் (அதாவது 84 153 சதுர அடி – 36 கிரவுண்ட்!).

பின்னர் அவர் டெல்லிக்கு குடிபெயர்ந்தார். ஆனால் வீட்டைக் காலி செய்யவில்லை. வீட்டு உரிமையாளர் கேட்டபோதும் காலி செய்ய மறுத்து தகராறு செய்துள்ளார். அது பின்னர் மிகப் பெரிய சட்டப்போராட்டமாகிவிட்டது உரிமையாளருக்கு.

சாந்தி பூஷண் வழக்கறிஞர் என்பதாலும், அரசியல் செல்வாக்கு காரணமாகவும் இந்த வீட்டை கடைசி வரை உரிமையாளருக்கு கொடுக்கவே இல்லை. ஒருவழியாக அந்த வீட்டை சாந்தி பூஷணுக்கே விற்றுவிட்டார் உரிமையாளர்.

இந்த சொத்து 2010-ம் ஆண்டு சாந்தி பூஷண் பெயரில் கிரையம் செய்யப்பட்டது. அலகாபாத் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த சொத்தின் அரசாங்க மதிப்பு ரூ 20 கோடி (மார்க்கெட் மதிப்பு ரூ 100 கோடிக்கு மேல்!) இதற்கு முத்திரைத்தாள் வரியாக ரூ 1.33 கோடி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சாந்தி பூஷண் கட்டியது வெறும் ரூ 46,700 மட்டுமே. இவ்வளவு பெரிய இடம் மற்றும் பங்களாவை வெறும் ரூ 5 லட்சத்துக்கு மட்டுமே பதிவு செய்துள்ளார் அவர்!

இதுகுறித்து கடந்த ஓராண்டாக உத்திரப் பிரதேச மாநில முத்திரைத்தாள் துறை விசாரித்து, இதில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து சாந்தி பூஷண் மீது வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை இன்று விசாரித்த நீதிமன்றம் சாந்தி பூஷண் ரூ 1.35 கோடி முத்திரை வரி மோசடி செய்திருப்பதை உறுதிப்படுத்தி, அவர் இந்த தொகையை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் இந்த தொகையை ஏய்த்ததற்காக கடந்த நவம்பர் 2010 முதல் நடப்பு தேதி வரை 1.5 சதவீத வட்டியாக ரூ 27 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். தவறினால் சொத்து பறிமுதல் செய்ய மாநில வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வரி ஏய்ப்புத் தொகை ரூ 1.35 கோடி மற்றும் அபராதம் ரூ 27 லட்சத்தை செலுத்த ஒரு மாதம் கெடு விதித்துள்ளது வருவாய் நீதிமன்றம்.

ஆனால் வழக்கம் போல இதை அரசின் பழிவாங்கல் என்றும் சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார் சாந்தி பூஷண். முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வருவாய்த் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஜனதாஆட்சியில் (மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில்) சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சாந்தி பூஷண். அமைச்சர் அந்தஸ்தைக் காட்டிதான் இவர் தனது வீட்டு உரிமையாளரை மிரட்டி வந்ததாக புகார் கூறப்பட்டது.

சாந்தி பூஷண் மீது ஊழல் குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை அல்ல!

*******************************************************

காந்தி குல்லா அணிந்து பட்டினி கிடந்தாலும், நேரு குல்லா அணிந்து செரிமாண பிரச்சனைக்கு மருத்துவம் செய்து கொண்டாலும் அல்லது வேறு எந்த வண்ணத்தில் குல்லா போட்டு சீன் காட்டினாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை கட்டமைத்த தீரர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் அம்பலப்படுவதால் மட்டுமே ஊழலை அதனால் ஒழிக்க முடியாதுஎன்று கூறவில்லை. ஒரு லோக்பால் அல்ல, ஒன்பது ஜோக்பால் வந்தாலும் அதனால் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல் ஒழிப்பு என்று பொதுமைப்படுத்தி பேசுவதால் குறிப்பாக வெளிப்பட்ட ஊழல்களை ஒளிப்பதற்கு மட்டுமே உதவும்.

 

இந்த நாட்டின் பொருளாதாரக் கொள்கை ஊழலுக்கு உரமிடுகிறது. நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு செய்யப்படும் ஒப்பந்தங்களை மீறுவது மட்டுமே ஊழல் என்று சாதிக்கிறது. ஒப்பந்தப்படி கொள்ளையடித்தால் அது ஊழலும் இல்லை, சட்டப்படி குற்றமும் இல்லை. அன்னா கோமாளிகளோ அந்த ஒப்பந்தங்களை மீறினால் பிரதமரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூவுகிறார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் அவர்களின் உழைப்புக் கருவிகளையே ஆயுதமாக ஏந்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் திட்டங்கள் அதை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வெண்ணெய் வெட்டி வீரர்களோ கையில் மெழுகுதிரியுடன் பொழுதுபோக்கிக் கொண்டு, அதையே போராட்டம் என்று நம்பச் சொல்கிறார்கள்.

பகவத் கீதை: தடை செய்யப்பட வேண்டிய நச்சுக்கிருமி

21 டிசம்பர்

ரஷியாவில் பகவத் கீதை நூல் வன்முறையினை தூண்டக்கூடியது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என வழக்கு போட்டு உள்ளனர். இதனை தடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டு பாஜக இந்து மதவெறி கும்பல் அமளியில் ஈடுபட்டு உள்ளது.

 

மக்களை நான்கு வர்ணங்களாக பிரித்து நாலாயிரம் சாதிகளாக பிளவுபடுத்தி, மக்கள் அனைவரும் சமம் இல்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சீர்க்குலைக்கும் மனுதர்மம் தான் ’பகவத் கீதை’ முழுவதும் விரவிக்கிடக்கிறது.

வன்முறையின் கீழ் பார்ப்பன மனுதர்ம வர்ண ஆதிக்கத்தை நிறுவும் பகவத் கீதையினை ரஷியாவில் தடை செய்ய கூடாது என இங்குள்ள காவி கும்பல் கூச்சல் போடுகின்றனர்.

பாரதி குறித்து அவருடைய நூல்களை படிக்காமலேயே பாரதி பக்தர்களாக இருப்பது போல, மனுதர்மம், பகவத் கீதை போன்றவைகளை படிக்காமலேயே மக்கள் இந்துமத பகதர்களாக இருக்கும் தைரியத்தில் தான் இந்த காவி கும்பல் ஆட்டம் போடுகிறது,

ஆனால் பகவத் கீதையினை படித்து பார்த்தால் புரியும், இது விஷக்கிருமி என்பதும்; ரஷியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தடை செய்யப்பட வேண்டியதுதான் ’பகவத் கீதை’ எனும் விஷக்கிருமி என்பதும்.

 

முதல் பதிவு: புமாஇமு

 

பொதுத்துறையை நட்டப்படுத்துவது அரசின் கடமையே

12 நவ்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு நிதியுதவி செய்ய மத்திய அரசின் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

இந்த நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமையைக் காரணம் காட்டி பைலட்க்ள், ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்காத அந்த நிறுவன அதிபர் விஜய் மல்லையா, விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிய மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ரூ. 600 கோடி அளவுக்கு கட்டணத்தை செலுத்தவில்லை.

மேலும், விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கும், தனியார் விமான நிலையங்களுக்கும் கட்டணம் செலுத்தவில்லை.

இந் நிலையில் தினந்தோறும் ஏராளமான விமானங்களை ரத்து செய்து பயணிகளை திண்டாட வைத்துள்ள மல்லையா, தனது நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை கோரியுள்ளார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக, கிங்பிஷர் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்ய வைக்க வங்கிகளிடம் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

தயங்கும் வங்கிகள்:

ஆனால், ஏற்கனவே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்து ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துவிட்ட ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் மூண்டும் அதில் பணத்தைக் கொட்ட தயாராக இல்லை.

கிங்பிஷர் நிறுவனம் தடுமாறி வருகிறது என்றவுடனேயே அதன் பங்குகள் வெகு வேகமாக சரிந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலை சரிந்துவிட்டது. அத்தோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசியை வங்கிகளின் பங்கு விலையும் சரிந்துவிட்டது.

ரூ. 2,000 நிதி திரட்டும் கிங்பிஷர்:

இந் நிலையில் சந்தையில் மேலும் ரூ. 2,000 கோடியைத் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார் விஜய் மல்லையா. ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளும் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று மல்லையா கோரியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கையைத் தான் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆதரித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்கி கையை சுட்டுக் கொண்ட வங்கிகள், மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

அடமானம் வைக்கும் திட்டமில்லை-மல்லையா:

இதற்கிடையே, கிங்பிஷர் நிறுவனத்தின் இன்றைய சிக்கலுக்கு எரிபொருள் விலை உயர்வு தான் முக்கிய காரணம் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். மேலும் 130 பைலட்டுகள் ராஜினாமாவால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பைலட்டுக்கள் இரவோடு இரவாக ராஜினாமா செய்துவிட்டுப் போக முடியாது. 6 மாத நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போக முடியும் என்று கூறியுள்ள மல்லையா, நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க பெங்களூரில் உள்ள தனது சொத்துக்கள் எதையும் வங்கிகளில் அடமானம் வைக்கும் திட்டம் இல்லை என்றும், இவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.

மேலும், விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயணிகளுக்கு இ-மெயிலில் விளக்கம்:

இதற்கிடையே, தனது விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வரும் கிளப் மெம்பர்களுக்கு கிங்பிஷர் அனுப்பியுள்ள இ-மெயிலில், இந்திய விமானத்துறை அதிக செலவு, குறைந்த வருவாய் என்ற வட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள, சில திட்டங்களை கிங்பிஷர் முன் வைத்துள்ளது. அதன்படி சில விமானங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பைலட்டுகள் ராஜினாமாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.

இது தான் எங்களுக்கு வேலையா-மல்லையா?:

அதே போல டிவிட்டரில் விஜய் மல்லையா எழுதியுள்ள குறிப்பில், அரசு ஏராளமான வரியைப் போட்டு திணறடித்துக் கொண்டிருக்கும் போது, நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா? அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது எங்கள் கடமையா? என்று கேட்டுள்ளார்.

******************************************************

நட்டமடையும் தடங்களில் விமானங்களை இயக்குவது எங்கள் கடமையில்லை என்கிறார் மல்லையா. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் லாபம் தந்து கொண்டிருந்த வழித்தடங்களை கிங்ஃபிஷர் போன்ற தனியார்களுக்கு வழங்கியதால் தான் ஏர் இந்திய நட்டமடைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். தாமதமாகிறது, ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற காரணங்களைக் கூறித்தான் இந்திய வானில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இப்போது தனியார் முதலாளிகள் திடீரென நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து பயணம் செய்யும் மக்களை தவிக்க விட்டுள்ளன. இப்போது என்ன சொல்வார்கள் தனியார்மய தாசர்கள்?

இந்திய விமானத்துறை நட்டமடையவும் தனியார்கள் கொழிக்கவும் காரணம் என்ன?

1. 90களில் இந்திய விமானத்துறை நன்றாக இயங்கிக் கொண்டிருந்தபோது 26 விமானங்களை வாங்கவேண்டும் என்று வைத்த கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்தது. அதாவது அரசு விமானங்கள் பழையதாகத்தான் இருக்கும், பாதுகாப்பற்றதாக இருக்கும், எனவே தனியார் விமானங்களே சிறப்பு எனும் எண்ணத்தை அரசே மக்கள் மத்தியில் விதைத்தது.

2. தனியார் நிறுவங்கள் பெருகி இந்திய விமானத்துறை நலிவடையத் தொடங்கிய பிறகு 2003ல் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் 68 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்கிறது. அதுவும் இந்திய விமானத்துறைக்காக இல்லை. 2004ல் மன்மோகன் அமெரிக்கா செல்லுமுன் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் நிர்ப்பந்தம் செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது தான் விமானத்துறை வெளியில் கடன் வாங்கவும் நட்டமடையவும்முக்கியமான காரணம்.

3. தேவையான நேரத்தில் விமானங்களை வாங்காமலிருந்த அரசு, தேவையற்ற நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் விமானங்களை வாங்கிய அரசு, அதேநேரத்தில் உள்நாட்டு வெளிநாட்டு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. இதை கிங்ஃபிஷர்,ஜெட் ஏர்வேய்ஸ் உள்ளிட்ட நிறுவங்கள் பிடித்துக் கொண்டன.

பலநூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் விதமாக அரசு விமானத்துறை திட்டமிட்டு நசுக்கப்பட்டதை எந்த ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை. இதை ஊழலாக யாரும் கருதவும் இல்லை. இப்படித்தான் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களும் சீரழிக்கப்படுகின்றன. லாபம் வரும் நேரங்களிலெல்லாம் வாரிக் குவித்துவிட்டு பொய்யாக நட்டக் கணக்கு காட்டி, நட்டமடையும் வழித்தடங்களில் விமானம் இயக்குவது என்னுடைய கடமையில்லை என்று திமிர்த்தனமாக கூறுவதற்கு எது அடிப்படை? பலநூறு கோடியை கடனாக வைத்துள்ள மல்லையாவை சட்டையை உலுக்கி கடனை வசூலிக்காமல் வங்கிகள் உதவ வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்கிறது. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்களின் கொட்டத்தை அடக்க முடியாது.

அன்னா ஆர்எஸ்எஸ்: உள்ளே வெளியே ஆட்டம் நல்லாருக்கு

11 நவ்

ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அன்னா ஹசாரே மறுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்சின் முகமூடி தான் அன்னா ஹசாரே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஹசாரேவும் பாஜகவும் மறுத்து வருகின்றன. இந் நிலையில் எங்களுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் மிக நீண்ட காலமாக தொடர்பு உண்டு என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத் கூறினார்.

அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் ஹசாரேவுக்கும் நீண்ட காலமாகவே தொடர்பு உண்டு. மேற்கொண்ட கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில்ஹசாரே எங்களுக்கு உதவினார் என்றார் பகவத்.

ஆனால், இதை அன்னா ஹசாரே மறுத்துள்ளார். எனக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் எந்தத் தொடர்பும் இலலை. அன்னாவை யாரென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஆர்.எஸ்.எஸ்சின் உதவியைப் பெற வேண்டிய அவசியம் என்ன என்றார்.

***********************************************

ஊழலுக்கு எதிராக என்று இவர் பட்டினி கிடக்க முற்பட்ட நாள் முதல், இது மக்களை திசை திருப்ப செய்யப்படும் நாடகம் என்றும் ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்றும் அதற்கு நடப்பு அமைப்புமுறையும் அரசியல்வாதிகளும் இடம்தர மாட்டார்கள் என்பதால் மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் இந்த அமைப்பை மாற்றுவதே ஊழலை ஒழிப்பதற்கான வழி என்றும் புரட்சிகர இடது சாரிகள் கூறிவருகிறார்கள். இப்போது ஆர்எஸ்எஸ் பகவத் அதை அம்பலப்படுத்தியிருக்கிறார், அன்னா எங்களின் பொம்மை தான் சாவி கொடுத்தது நாங்கள் தான் என்று. பொம்மைகளோ இல்லையென்று மறுத்துப் பார்க்கின்றன. அன்னா குழுவினரின் ஊழல்கள் சந்தி சிரிப்பது மட்டுமல்ல, அன்னாவின் கிராமமான ராலேகான் சித்தியில் புகுந்து புறப்பட்டாலே தெரியும் அன்னா இந்துத்துவா தயாரிப்பு தான் என்பது.

ராலேகான் சித்தியில் பயணப்பட வேண்டுமா? – புதிய கலாச்சாரம் நவம்பர் 2011 இதழில் வெளிவந்திருக்கும் ”அன்னா ஹஸாரேயின் ராலேகான் சித்தி புரட்சிக் கிராமத்தின் புரட்டு உண்மைகள்” என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள்

எதியூரப்பா கைதும் அத்வானி யாத்திரையும்

15 அக்

பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் ‘டிராமாவுக்கு’ பின் கைது செய்யப்பட்டார்.

இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் எதியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.

எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எதியூரப்பா அந்த வீட்டில் இல்லை.

இதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எதியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.

இதனால் அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ் குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எதியூரப்பா அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை கைதாகாமல் இருக்கவும் எதியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந் நிலையில் எதியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக இன்றைய விசாரணையின் போது எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் முதுகு வலி காரணமாக ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், முதுகு வலியை வைத்துக் கொண்டு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எப்படி ஈடுபட்டார் என எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

எதியூரப்பா இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால், அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று எதியூரப்பாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீடுகளுக்கு வந்தபோது, ஒரு அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கூட அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அசோக் மற்றும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னருடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை நடத்தினார்.

*******************************************************

காங்கிரசுக்கும் ஊழலுக்கும் இருக்கும் காதலை தனியாக கூற வேண்டியதில்லை. ஊழலுக்கு எதிராக அத்வானி யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார், அதேநேரம் ஊழலுக்காக எடியூரப்பா கைதாகியிருக்கிறார். இன்னும் என்ன வேண்டும் ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒழிப்பு யோக்கியதையை அறிந்து கொள்ள. ஊழல் ஓட்டுப் பொறுக்கிகளின் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, ஒரு தேர்தலில் தோற்கச் செய்தால் திருந்திவிடுவார்கள் என்று இன்று யாரும் நம்பவில்லை. அரசின் கொள்கையே ஊழலாக இருக்கும்போது ஆளை மாற்றினால் வேலைக்காகுமா? அமைப்பையே மாற்ற வேண்டுமல்லவா? அதை தேர்தல் புறக்கணிப்பிலிருந்து தொடங்குவோம்.

அன்னா ஹஸாரேவாம், உண்ணாவிரதமாம், ஊழல் ஒழியுமாம்

17 ஆக

அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம். 25,000 பேர் வரை அங்கு கூட அனுமதிக்கிறோம். தேவைப்பட்டால் உண்ணாவிரதத்தை நீட்டிக்க அனுமதிக்கிறோம் என்று கூறிய டெல்லி காவல்துறையின் நிபந்தனையை ஏற்க அன்னா ஹஸாரே மறுத்து விட்டார். இதனால் அவர் இன்றைக்குள் திஹார் சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்புகள் மங்கியுள்ளன. இழுபறி நீடிக்கிறது.

காவல்துறையின் எந்த நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என ஹஸாரே கூறிவிட்டார். மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திஹார் சிறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டார்.

நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.

ஆனால் அன்னாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க அரசு தயாராக இல்லை. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க அன்னா தயாராக இல்லை. இந்நிலையில் அன்னா 1 மாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் அரசோ 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அன்னா டெல்லி ராம்லீலா மைதானத்தில் 1 வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் அரசு விரும்பினால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளறது.

ஆனால், அரசின் நிபந்தனைகளை ஏற்க அன்னா மறுத்துவிட்டார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அவர் விரும்பும் இடத்தில், விரும்பும் காலம் வரை உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார்.

ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் இதே ராம்லீலா மைதானத்தில் தான் உண்ணாவிரதம் இருக்க வந்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசு மேலும் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்லீலா மைதானத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகளை எந்த நேரத்தில் எந்த அளவில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அவற்றை அன்னா சட்டையே செய்யவில்லை.

இன்றைக்குள் வர மாட்டார் அன்னா-கிரண் பேடி:

இதற்கிடையே இன்று திஹார் சிறை முன்பு கூடியிருந்த அன்னா ஆதரவாளர்களிடையே கிரண் பேடி பேசுகையில், அன்னா இன்றைக்குள் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை. எனவே இங்கு யாரும் கூடியிருக்க வேண்டாம். மாறாக இந்தியா கேட்டுக்குச் செல்லுங்கள். இது அன்னாவின் வேண்டுகோள் என்றார்.

இந்தியா கேட்டில் மக்கள் கூட்டம்:

அன்னாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று மாலை முதல் இந்தியா கேட் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். அங்கு ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும், அன்னாவை வாழ்த்தியும் கோஷமிட்டிபடி மக்கள் குழுமியிருந்தனர்.

*********************************************

ஊழலின் கோரங்களிலிருந்து மக்களை மறக்கடிக்க இப்படியும் சில கோமாளிக் கூத்துகள். விரிவாய் தெரிந்து கொள்ள கீழ்காணும் கட்டுரைகளைப் படியுங்கள்.

அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0

 “உண்ணா” ஹஜாரேயும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

 அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்

முதல் தலித் மில்லியனர்: இது ஒடுக்கப்பட்டோருக்கான நற்செதியா?

29 மே

Rajesh Saraiya

இந்தியாவின் முதல் பெரும் பணக்காரர் என்ற பெயரையும், பெருமையும் பெற்றுள்ளார் ராஜேஷ் சரையா.

டேராடூனில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ராஜேஷ். ரஷ்யாவில் ஏரோநாட்டிகல் என்ஜீனியரிங் படித்தார். தற்போது உக்ரேனில் வசித்து வருகிறார். அங்கு பல கோடி மதிப்புள்ள ஸ்டீல்மான்ட் பிரைவேட் லிமிட்டெட் என்கிற ஸ்டீல் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.

சமீபத்தில் டேராடூன் வந்திருந்த ராஜேஷ் கூறுகையில், மக்கள் முதலில் தங்களுக்குள் மாற வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். மனநிலையை மாற்ற வேண்டும். உலகைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். நமக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்பதை உணர வேண்டும் என்றார் ராஜேஷ்.

டேராடூனில் தலித் சிறு தொழிலதிபர்களின் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு நடந்தது. அதில்தான் கலந்து கொண்டு ராஜேஷ் பேசினார்.

அங்கீகரிக்கப்படாத பிரிவுக்கான தேசிய ஆணையத்தின் கணக்குப்படி, 88 சதவீத தலித் மக்கள் ஆதிவாசி மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்தான் செலவழிக்கிறார்களாம்.

தலித் மக்கள் சிறுதொழில் பிரிவில் பெரும் பணக்காரர்களாக என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறியும் நோக்கில்தான் இந்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராஜேஷ் சரையாவின் வளர்ச்சி இந்திய தலித் தொழிலதிபர்களுக்கு உத்வேகம் அளிக்கும். மேலும் பல பெரும் பணக்கார தலித்களை நாடு காணும் நிலையும் ஏற்படும் என நம்புவோம்.

****************************************

இந்தியாவிலிருக்கும் பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்டவர்களுக்கு இது ஊக்கத்தைத் தரும் செய்தியைப் போல, தலித்களும் முயன்றால் பெரும்பணக்காரர்கள் ஆகலாம் தடையொன்றுமில்லை என்று காட்டுவதைப்போல் இச்செய்தி இருப்பதாக பலரும் கருதலாம். ஆனால் இப்படி ஒருவர் பெரும் பணக்காரர் ஆகிவிடுவதால் ஒடுக்கப்படுபவர்களுக்கு சமூக ரீதியாக ஏதேனும் நல்லது நடந்துவிடுமா? பல லட்சக்கணக்கானோரை இழி நிலையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் கோலோச்சிக் கொண்டிருக்கும் வரையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக பொருளாதார அளவில் எந்தவித நன்மையையும் செய்துவிட முடியாது. தலித் இயக்கங்கள் கூட இச்செய்தியை கொண்டாடலாம். இருபது ரூபாயில் தன் ஒரு நாளைக் கடக்கும் ஒருவரும், இந்த மில்லியனரும் தலித் என்ற அடிப்படையில் ஒன்று என்றால் தலித் இயக்கங்களின் அடிப்படையே தகர்ந்து போகும். வர்க்க ரீதியான பார்வையே சரியானது என்பதற்கு இது ஒரு தூலமான எடுத்துக்காட்டு.

காந்தி குறித்த புத்தகம்: ஏன் தடை செய்ய வேண்டும்?

29 மார்ச்

மகாத்மா காந்தி குறித்த சர்ச்சைக்குரிய புத்தகம் ஒன்றை மகாராஷ்டிர மாநில அரசு தடை செய்யவுள்ளது.

 

புலிட்சர் விருது பெற்ற ஜோசப் லெலிவெல்ட் என்னும் பத்திரிகையாளர் “காந்தியும் அவரது இந்தியப் போராட்டமும்” என்னும் தலைப்பில் காந்தியின் வரலாற்றை கூறும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்த புத்தகத்தில், காந்தியின் குணத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே, சட்ட மேலவையில் கண்டனம் தெரிவித்து பேசினார்.இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் நாராயண் ராணே கூறுகையில், “அந்த புத்தகத்தை மாநிலத்தில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், அந்த புத்தகம் இந்தியாவில் வெளியாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.” என்றார்.

***********************************************

காந்தியின் போராட்டங்களையும் பொதுவாழ்க்கையையும் பலரும் விமர்சித்திருக்கிறார்கள். காந்தி குறித்த அம்பேத்காரின் விமர்சனங்கள் மறுக்க முடியாதவை. அதனால் தான் அவைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். விடுதலை வாங்கித்தந்தவர் என்று கொண்டாடப்படும் காந்தியின் போராட்டங்கள் மக்களின் விடுதலைக்கு துரோகம் இழைத்திருக்கிறது என்பதை அவரை மகாத்மா என்று கருதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் வெளியீடான இந்த சிறு நூலை அவசியம் படித்துப் பாருங்கள்

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு

 

பார்ப்பனியம் சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமல்ல, இந்துக்களுக்கும் எதிரானது தான்

27 மார்ச்

இந்து தேசம் என்பது தங்கள் கட்சி பயன்படுத்தும் சந்தர்ப்பவாத விஷயம் என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ராபர்ட் பிளாகிடம் 2005 மே 6-ம் தேதி அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்து தேசம் என்ற விஷயத்தை தங்கள் கட்சி எப்போதும் பேசிவருகிறது என்று கூறிய நான், சந்தர்ப்பவாதம் என்று வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று அருண் ஜேட்லி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

 

இந்த விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மீது கற்களை வீசக்கூடாது என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். விக்கிலீக்ஸ் கூறியதாக பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் மீதும் மத்திய அரசு மீதும் பாஜக குற்றம்சாட்டி வந்தது. இப்போது விக்கீலீக்ஸ் “பூமராங்’ போல பாஜகவையே திருப்பித் தாக்கியுள்ளது என்றார்.

 

வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஊடுருவும் விஷயத்தால் அப்பகுதியில் இந்துத்துவா கோஷம் சிறப்பாக எடுபடுகிறது. இந்துதேசம் என்ற கோஷம் இப்போது தில்லியில் வலுவிழந்து விட்டது. பாகிஸ்தானுடனும் நல்லறவு இருந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் எல்லை தாண்டி மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினால் இந்த நிலை மாறிவிடும் என்ற ஜேட்லி கூறியதாக ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் இதனை மறுத்துள்ள ஜேட்லி, இந்துத்துவம் என்பதை சந்தர்ப்பவாதம் என்று ராபர்ட் பிளாக் தானாவே அர்த்தப்படுத்தி பயன்படுத்தியுள்ளார். பல விஷயங்கள் நான் கூறியபடி இல்லாமல் மாறுபட்டு வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்ளும்படி வெளியிட்டப்பட்டுள்ளது. முக்கியமாக சந்தர்ப்பவாதம் என்று வார்த்தையை பயன்படுத்தவே இல்லை என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

*****************************************************

மத பேதங்களைக் கடந்து பார்ப்பனியம் என்பது அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான ஒன்று தான். தன்னுடைய அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்க்காகத்தான் அது இந்துக்களை ஒற்றுமைப்படுத்த முயல்கிறதேயன்றி; சாதி, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து இந்துக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை. பிற சிறுபான்மை மதத்தினரி எதிரிகளாக சித்தரித்து, அதைக்காட்டி இந்துக்களை ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்று தான் பார்ப்பனியத்தின் நோக்கமேயன்றி, இந்து மக்களின் நலன் அதற்கு கொஞ்சமும் இல்லை. இது மீண்டுமொரு முறை விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.