பொதுத்துறையை நட்டப்படுத்துவது அரசின் கடமையே

12 நவ்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு நிதியுதவி செய்ய மத்திய அரசின் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

இந்த நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமையைக் காரணம் காட்டி பைலட்க்ள், ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்காத அந்த நிறுவன அதிபர் விஜய் மல்லையா, விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிய மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ரூ. 600 கோடி அளவுக்கு கட்டணத்தை செலுத்தவில்லை.

மேலும், விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கும், தனியார் விமான நிலையங்களுக்கும் கட்டணம் செலுத்தவில்லை.

இந் நிலையில் தினந்தோறும் ஏராளமான விமானங்களை ரத்து செய்து பயணிகளை திண்டாட வைத்துள்ள மல்லையா, தனது நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை கோரியுள்ளார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக, கிங்பிஷர் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்ய வைக்க வங்கிகளிடம் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

தயங்கும் வங்கிகள்:

ஆனால், ஏற்கனவே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்து ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துவிட்ட ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் மூண்டும் அதில் பணத்தைக் கொட்ட தயாராக இல்லை.

கிங்பிஷர் நிறுவனம் தடுமாறி வருகிறது என்றவுடனேயே அதன் பங்குகள் வெகு வேகமாக சரிந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலை சரிந்துவிட்டது. அத்தோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசியை வங்கிகளின் பங்கு விலையும் சரிந்துவிட்டது.

ரூ. 2,000 நிதி திரட்டும் கிங்பிஷர்:

இந் நிலையில் சந்தையில் மேலும் ரூ. 2,000 கோடியைத் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார் விஜய் மல்லையா. ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளும் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று மல்லையா கோரியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கையைத் தான் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆதரித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்கி கையை சுட்டுக் கொண்ட வங்கிகள், மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

அடமானம் வைக்கும் திட்டமில்லை-மல்லையா:

இதற்கிடையே, கிங்பிஷர் நிறுவனத்தின் இன்றைய சிக்கலுக்கு எரிபொருள் விலை உயர்வு தான் முக்கிய காரணம் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். மேலும் 130 பைலட்டுகள் ராஜினாமாவால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பைலட்டுக்கள் இரவோடு இரவாக ராஜினாமா செய்துவிட்டுப் போக முடியாது. 6 மாத நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போக முடியும் என்று கூறியுள்ள மல்லையா, நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க பெங்களூரில் உள்ள தனது சொத்துக்கள் எதையும் வங்கிகளில் அடமானம் வைக்கும் திட்டம் இல்லை என்றும், இவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.

மேலும், விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பயணிகளுக்கு இ-மெயிலில் விளக்கம்:

இதற்கிடையே, தனது விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வரும் கிளப் மெம்பர்களுக்கு கிங்பிஷர் அனுப்பியுள்ள இ-மெயிலில், இந்திய விமானத்துறை அதிக செலவு, குறைந்த வருவாய் என்ற வட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள, சில திட்டங்களை கிங்பிஷர் முன் வைத்துள்ளது. அதன்படி சில விமானங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பைலட்டுகள் ராஜினாமாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.

இது தான் எங்களுக்கு வேலையா-மல்லையா?:

அதே போல டிவிட்டரில் விஜய் மல்லையா எழுதியுள்ள குறிப்பில், அரசு ஏராளமான வரியைப் போட்டு திணறடித்துக் கொண்டிருக்கும் போது, நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா? அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது எங்கள் கடமையா? என்று கேட்டுள்ளார்.

******************************************************

நட்டமடையும் தடங்களில் விமானங்களை இயக்குவது எங்கள் கடமையில்லை என்கிறார் மல்லையா. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் லாபம் தந்து கொண்டிருந்த வழித்தடங்களை கிங்ஃபிஷர் போன்ற தனியார்களுக்கு வழங்கியதால் தான் ஏர் இந்திய நட்டமடைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். தாமதமாகிறது, ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற காரணங்களைக் கூறித்தான் இந்திய வானில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இப்போது தனியார் முதலாளிகள் திடீரென நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து பயணம் செய்யும் மக்களை தவிக்க விட்டுள்ளன. இப்போது என்ன சொல்வார்கள் தனியார்மய தாசர்கள்?

இந்திய விமானத்துறை நட்டமடையவும் தனியார்கள் கொழிக்கவும் காரணம் என்ன?

1. 90களில் இந்திய விமானத்துறை நன்றாக இயங்கிக் கொண்டிருந்தபோது 26 விமானங்களை வாங்கவேண்டும் என்று வைத்த கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்தது. அதாவது அரசு விமானங்கள் பழையதாகத்தான் இருக்கும், பாதுகாப்பற்றதாக இருக்கும், எனவே தனியார் விமானங்களே சிறப்பு எனும் எண்ணத்தை அரசே மக்கள் மத்தியில் விதைத்தது.

2. தனியார் நிறுவங்கள் பெருகி இந்திய விமானத்துறை நலிவடையத் தொடங்கிய பிறகு 2003ல் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் 68 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்கிறது. அதுவும் இந்திய விமானத்துறைக்காக இல்லை. 2004ல் மன்மோகன் அமெரிக்கா செல்லுமுன் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் நிர்ப்பந்தம் செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது தான் விமானத்துறை வெளியில் கடன் வாங்கவும் நட்டமடையவும்முக்கியமான காரணம்.

3. தேவையான நேரத்தில் விமானங்களை வாங்காமலிருந்த அரசு, தேவையற்ற நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் விமானங்களை வாங்கிய அரசு, அதேநேரத்தில் உள்நாட்டு வெளிநாட்டு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. இதை கிங்ஃபிஷர்,ஜெட் ஏர்வேய்ஸ் உள்ளிட்ட நிறுவங்கள் பிடித்துக் கொண்டன.

பலநூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் விதமாக அரசு விமானத்துறை திட்டமிட்டு நசுக்கப்பட்டதை எந்த ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை. இதை ஊழலாக யாரும் கருதவும் இல்லை. இப்படித்தான் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களும் சீரழிக்கப்படுகின்றன. லாபம் வரும் நேரங்களிலெல்லாம் வாரிக் குவித்துவிட்டு பொய்யாக நட்டக் கணக்கு காட்டி, நட்டமடையும் வழித்தடங்களில் விமானம் இயக்குவது என்னுடைய கடமையில்லை என்று திமிர்த்தனமாக கூறுவதற்கு எது அடிப்படை? பலநூறு கோடியை கடனாக வைத்துள்ள மல்லையாவை சட்டையை உலுக்கி கடனை வசூலிக்காமல் வங்கிகள் உதவ வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்கிறது. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்களின் கொட்டத்தை அடக்க முடியாது.

பின்னூட்டமொன்றை இடுக