கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? விவாதம்

20 நவ்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

மீண்டும் பதிவர் குலாமுடன் விவாதம். இந்த முறை சற்று சீரிய கட்டுடன் இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கான அடித்தளம் குறித்து அறிய விரும்புவோர் அவருடைய கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல் எனும் பதிவின் பின்னூட்டங்களைப் பார்வையிடுங்கள்

இந்த விவாதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக இவ்விவாதத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் முதன்மையான சில கூறுகளைப் பற்றிய தெளிவுகள் தேவைப்படுகின்றன.

அறிவியல் என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், மனிதனுக்குள் எழும் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியிலான தேடல். மனிதன் இதுவரை கண்டடைந்த அனைத்தும் அறிவியலாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. மனிதன் உழைப்பில் ஈடுபடும் போது இயற்கையை எதிர்கொண்டாக வேண்டியதிருக்கிறது. அப்படி எதிர்கொள்ளும் வழிகளில் இயற்கை வழங்கும் ஏராளமான புதிர்களை, தனக்கு ஏற்கனவே இருக்கும் அறிவைக் கொண்டும், புதிய பரிசோதனைகளைக் கொண்டும் விளக்கி புதிய உண்மைகளைக் கண்டடைவதும், அந்த புதிய உண்மைகளை மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தி அவைகளைச் சமன்பாடாக்குவதும், அந்தச் சமன்பாடுகளை சமூகத்தில் பயன்படுத்திப் பார்த்து விளைவுகளைக் கண்காணிப்பதும், அதன் அடிப்படையில் புதிய புதிர்களைத் தேடிப் போவதுமே அறிவியல். அறிவியல் முழுமையடையாத ஒன்றல்ல, அனைத்துக்கும் காரணிகளைக் கண்டறிந்து முழுமைப்படுத்துவதே அறிவியலின் பணி. சாராம்சத்தில் அறிவியல் என்பது ஒரு பயணம். அடுத்தடுத்த இலக்குகளைத் தேடி அது பயணித்துக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவடைவதே இல்லை. அறிவியலுக்கு என்றேனும் முற்றுப் புள்ளி விழுமாயின் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல ஒற்றை ஒரு மனிதன் கூட உயிருடன் இல்லை என்பதே பொருள்.

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன? எனும் கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியாது. ஏனென்றால் இது பொருளாகவோ கருத்தாகவோ, அல்லது இரண்டுமல்லாத வேறொன்றாகவோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மட்டுமல்லாது அடையாளம் காண முடியாது என்பதே கடவுளின் தகுதிகளில் ஒன்று என்கிறார்கள் ஆத்திகர்கள். இதுவரை மனித இனம் கண்டறிந்த, இன்னும் கண்டறியப் போகும் அனைத்து வித நுட்பங்களாலும், எந்தக் காலத்திலும் கண்டறியப் படமுடியாததும், அதேநேரம், மனிதனின் செயல்களில் அற்பமான ஒன்றைக்கூட விட்டுவிடாமல் அனைத்தையும் இயக்குவதும் கடவுள் என்ற ஒன்றே.

மனிதனின் அறிதல் என்றால் என்ன?

மனிதன் ஒரு பொருளை அல்லது கருத்தை எப்படி அறிந்து கொள்கிறான். தன்னுடைய ஐம்புலன்களின் வழியே பெற்ற அனுபவங்களைக் கொண்டும், அந்த அனுபவங்களை மூளை எனும் பொருளில் நினைவுகளாக சேகரித்து வைத்துக் கொண்டு அவைகளை தேவையான பொழுதுகளில் தேவைப்படும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுவதே மனிதனின் அறிவு அல்லது அறிதல் எனப்படுவது. பகுத்தறிவு என்பதும் மூளை தன்னிடமிருக்கும் அனுபவங்களை அலசி பொருத்தமான முடிவை எடுக்க உதவும் ஒரு பயன்பாட்டுமுறைதான். இதுவரை மனிதன் கண்டடைந்த அனைத்தும் புலன்களின் மூலமும், அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமும் பெற்றவைகளே தவிர வேறெந்த வழியிலும் அல்ல. அதேவேளை மனிதன் ஐயமுற்றிருக்கும் ஒன்றில் தெளிவடைவதற்கு தகுந்த உரைகல் அறிவியலைத் தவிர வேறு ஒன்றில்லை. அறிவியலைத் தவிர வேறு உரைகல் இருக்கக் கூடும் என்றுகூட இதுவரை யாரும் கண்டறிந்ததில்லை.

கடவுள் பற்றிய அறிதல் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது?

மனிதன் உயிர் வாழ வேண்டுமென்றால் அவன் உற்பத்தியில் அதாவது உழைப்பில் ஈடுபட்டே ஆக வேண்டும். மனிதன் உழைப்பில் ஈடுபடுகிறான் என்றால் அவன் தன் வழியில் இயற்கையை எதிர்கொள்கிறான் என்பதே அதன் பொருள். அவ்வாறு இயற்கையை எதிர்கொள்ளும் போது அறியாத, தெளிவில்லாத, தீவிரம் புரியாத பல இன்னல்களுக்கு அவன் ஆளாகிறான். எடுத்துக்காட்டு நெருப்பு, மழை, இடி, மின்னல், இருள், கடும் பனி, கொடுங்கோடை, வெள்ளம், வறட்சி.. .. .. இவைகளைக் கண்டு அவன் அஞ்சுகிறான். ஏனென்றால் உயிர் என்பதன் பயன்மதிப்பு மட்டுமே தெரிந்திருந்தாலும் அதன் இழப்பு அவனை அஞ்சச் செய்கிறது. அடுத்து, மரணம். தன்னுடன் உண்டு, களைத்து, களித்துக், கழித்துக் கொண்டிருந்த தன் கூட்டத்தில் ஒருவன் திடீரென தன் செயல்களை நிறுத்திக் கொள்வது ஏன்? மீண்டும் என்றாவது ஒரு நாள் அவனின் நீள் தூக்கத்திலிருந்து எழும்பக் கூடுமோ எனும் கேள்வி. இந்த இரண்டும் சேர்ந்து தான் அதாவது இயற்கை குறித்த பயம், மரணம் குறித்த கேள்வி ஆகிய இரண்டும் சேர்ந்து தான் கடவுள் எனும் உருவகத்தை மனிதனிடம் கொண்டு வந்திருக்கின்றன. கடவுள் எனும் கருத்து உருவகம் மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரே ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னரே மதங்கள் தோன்றத் தொடங்கின. இவைகள் வெறும் யூகங்கள் அல்ல. பண்டைக்கால குகை ஓவியங்கள் சுட்டும் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.

இனி நண்பர் குலாமின் கட்டுரைக்குள் பயணிக்கலாம். அந்தக் கட்டுரையில் சாராம்சமாக அவர் கூறியிருப்பது என்ன? அறிவியல் தன்னளிவில் முழுமையடையாத ஒன்று. அறிவியல் இன்னும் விடையளிக்காத வினாக்கள் இருக்கின்றன. எனவே குறைபாடுடைய அந்த அறிவியலைக் கொண்டு கடவுளை அளக்கவோ, அங்கீகரிக்கவோ முடியாது, கூடாது. நண்பரின் கருத்து தவறானது என்பதை அவரின் வாதங்களினூடாவே பார்ப்போம்.

\\\எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும்/// நண்பர் குலாம் ஒரு ஆத்திகர் என்பதால் அவரளவில் அவர் கடவுளை உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் ஒரு மனிதர் எனும் அடிப்படையில் இதுவரை ஏராளமான விசயங்களை தன் வாழ்வில் உறுதிப்படுத்தியிருப்பார். தயவு செய்து அப்படியான உறுதிப்படுத்தல்களில் அறிவியலை விலக்கி வைத்துவிட்டு உறுதிப்படுத்தியவற்றை குறைந்தது ஒரு பத்து விசயங்களையாவது அவர் பட்டியலிட வேண்டும் எனக் கோருகிறேன். முடியாது. ஒன்றைக்கூட அவரால் கூற முடியாது. ஆக அனைத்தையும் முழுமைப்படுத்திச் சொல்லாத அறிவியலை மட்டுமே துணைக்கழைத்துக் கொண்டுதான் தன் வாழ்வின் அத்தனை உறுதிப்படுத்தல்களையும் செய்திருக்கிறார். ஆனால் கடவுள் விசயத்தில் மட்டும் அவருக்கு அறிவியலில் போதாமை வந்துவிடுகிறது. இதன் மூலம் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் வாழ்வின் மெய்யான விசயங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் ஒரு பேதம் இருக்கிறது.

அறிவியல் அனைத்தையுமே முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஒரு குண்டூசி உடலில் குத்தினால் ஏன் வலிக்கிறது என்பது தொடங்கி இப்பேரண்டத்தின் கோள்களின் இயக்கம் வரை அனைத்தையும் கண்டறிந்து முழுமைப்படுத்திச் சொல்லியிருக்கிறது. எதை முழுமைப்படுத்தாமல் குறையுடன் விட்டு வைத்திருக்கிறது? இந்த இடத்தில் நாம் ஒரு புரிதலுக்கு வந்தாக வேண்டும். அறிவியல் குறைபாடுடையது என்று ஆத்திகர்கள் என்ன நோக்கில் கூறுகிறார்கள்? அதற்கு என்ன சான்றுகள் தருகிறார்கள்? என்பதை நுணுகிப் பார்க்க வேண்டும். அறிவியல் இன்னும் கடக்காத எல்லை இருக்கிறதா? என்றால், ஆம் இருக்கிறது. எடுத்துக் காட்டாக பெருவெடிப்புக் கொள்கைக்கு முன்னர் நடந்த மாற்றங்கள் என்ன? என்று கேட்டால் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதே பதில். ஆனால் ஆத்திகர்கள் அறிவியலின் இந்த தொடர்ந்து தேடும் தன்மையை சுட்டிக்காட்டி அறிவியல் குறைபாடுடையது என்று கூறுகிறார்கள். இதோ நண்பர் குலாம் இதற்கு பயன்படுத்தியிருக்கும் வாசகங்களை கவனித்துப் பாருங்கள். \\\ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும்.. .. ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு.. .. அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது/// கடவுளை அதை நம்பாதவர்களும் கூட அதன் இயல்புகளை ஏற்றுக் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று கோரும் நண்பர் குலாம். அறிவியலுக்கு மட்டும் அதன் இயல்புகளை தூக்கிக் கடாசி விட்டது ஏன்? அறிவியல் என்பது ஒரு தேடல். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஒரு விசயத்தில் குறைபாடுடையது என ஒன்றை கூற வேண்டுமாயின் அந்த விசயத்தின் அதன் இயலாமை வெளிப்பட்டிருக்க வேண்டும். அறிவியல் எந்த விசயத்திலாவது இப்படி தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறதா? அல்லது அறிவியலால் முடியாதவைகள் என்பதற்கு பட்டியல் ஏதும் குலாம் வைத்திருக்கிறாரா? அறிவியலின் இந்த எட்டப்படாத உயரம், தொடர்ந்து பயணப்படும் தன்மைகள் குறித்து குலாம் அறியாதவராக இருக்க முடியாது. என்றால் ஏன் அறிவியலை குறைபாடுடையது என காட்ட முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுளை மெய்ப்பிக்க அதைத்தவிர வேறு வழி இல்லை. நண்பர் குலாமுக்கு மட்டுமல்ல எல்லா மதவாதிகளுக்கும் இது பொருந்தும்.

அடுத்து நண்பர் குலாம் பொருத்தமான ஒரு வாதத்தை எடுத்து வைக்கிறார். \\\எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்/// சரிதான். இதை யாரும் மறுக்கப் போவதில்லை. தெளிவாகச் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை. ஆனால் நண்பர் குலாம் இதை ஏற்றுக் கொள்கிறாரா? என்பது தான் என்னுடைய கேள்வி. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதத்தை நான் இரண்டு விதங்களில் நேர்கொள்கிறேன்.

1. கடவுள் உறுதியானவர், அவர் நிலைத்திருந்து காரியமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுவதைத்தான் நாத்திகர்கள் எதிர்க்கிறார்கள். அது ஒரு கருத்து, ஆத்திகர்களின் நம்பிக்கை என்றால் யாரும் அதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்த விவாதத்தின் தலைப்பு கூட வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? என்றுதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அது ஒரு நம்பிக்கை என்றால் அதில் எந்த உரசலுக்கும் இடமில்லை. இப்போது குலாம் கூறுவதைப் பாருங்கள், அவர் எந்த விதத்திலிருந்து இதை அணுகுகிறார்? கடவுள் உறுதியாக நிலவுகிறது எனும் அடிப்படையிலிருந்தே மேற்கண்ட வாதத்தை அவர் வைக்கிறார். துல்லியமாகக் கூறினால், அது நம்பிக்கையா? மெய்யான இருப்பா? என்பது தான் இங்கு விவாதமாகியிருக்கிறதேயன்றி கடவுளல்ல. இதை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

2. நண்பர் குலாம் கூறியிருக்கும் இந்த வாதம் ஒரு பாதி தான். “எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிரூபணம் தரவில்லையோ அது இருக்கிறது என்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அது குறித்த தகவல்களோ, வாய்ப்புகளோ உறுதி செய்யப்படாதவரை அது உறுதியாக இருக்கிறது என கூறவியலாது என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும்” என்பது தான் அந்த மறுபாதி. இதற்கு குலாம் என்ன பதில் கூறுவார்?

அடுத்து குலாம் எழுப்பியிருக்கும் ஒன்று ‘அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் கடவுள்’ என்பது. முதலில் ஒரு விசயத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான். நண்பர் குலாம் கடவுள் மறுப்பு குறித்து தவறான புரிதலோடு இருக்கிறார். கடவுளின் தகுதிகளாக, வல்லமைகளாக ஆத்திகர்கள் கூறுகிறவைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் எனும் கருத்தை மட்டும் மறுப்பது தான் கடவுள் மறுப்பு என்பதாக அவரின் புரிதல் இருக்கிறது. அவ்வாறல்ல, கடவுளை மறுக்கிறோம் என்றால் அதன் தகுதிகள், வல்லமைகள் என கடவுளின் மீது ஏற்றப்பட்டிருக்கும் அத்தனை புனிதங்களோடு சேர்த்துத்தான் கடவுளை மறுக்கிறோம். அறிவியலால் அளக்கப்படுவதைவிட கடவுள் உயர்வானவர் எனவே அறிவியலில் அகப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று கூற முடியாது என்பது அபத்தமான வாதம்.

அடுத்து நண்பர் குலாம் இப்படி கூறியிருக்கிறார், \\\நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை/// இப்படிக் கூறுவதற்கு நிரம்பவும் அசட்டுத் துணிச்சல் வேண்டும். கண்ணெதிரே காணப்படவில்லை என்பதால் மட்டுமல்ல, 1. அறிவியல் ரீதியாகவும் 2. வரலாற்றியல் ரீதியாகவும் 3. சமூகவியல் ரீதியாகவும் கடவுள் இல்லை என்பதற்கான காரணிகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

இனி, நண்பர் குலாமின் அமெரிக்கா லாம்கு எடுத்துக்காட்டை கொள்ளலாம். இதில் அமெரிக்கா பற்றிய விளக்கங்கள் புரிதலுக்காகவும், லாம்கு வாதமாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால் ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா குறித்த விளக்கத்தில் இருக்கும் தெளிவு,லாம்கு குறித்த விளக்கத்தில் இல்லை. அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? இதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் செலவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் கண்ணால் கண்டுவிட்டு வந்துவிடலாம். ஆனால் லாம்கு?

லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா? இல்லையா? அமெரிக்கா விசயத்தில் நாடு என்பதற்கு என்னென்ன வரையறைகள் பயன்படுத்தப்பட்டனவோ அதே வரையறைகளை இங்கும் பயன்படுத்தினால் எளிதாக முடிவு கிடைத்துவிடும். லாம்கு எனும் நாடு புவிப்பரப்பில் தற்போது எங்கும் இல்லை. லாம்கியர்கள் எனும் தேசிய இனத்தை உலகில் தற்போதுள்ள எவரும் கண்டதில்லை. வேறு எந்த சான்றுகளும் கிடைக்காத நிலையில் நாம் இரண்டு முடிவுகளுக்கு வந்தாக வேண்டும். 1. லாம்கு என்றொரு நாடு இல்லை. 2. முன்னெப்போதோ இருந்து பின்னர் அழிவுபட்டுப் போயிருக்கலாம். இப்போது இரண்டாவது முடிவை எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கியக் குறிப்புகளோ, மரபு சார்ந்த கதையாடல்களோ அது இருந்ததாக கருதப்படும் பகுதி மக்களிடையே உலவ வேண்டும். தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த இலக்கியக் குறிப்புகளையோ, மரபுக் கதையாடல்களையோ உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் லாம்கு எனும் கருத்தாக்கம் யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது? அதற்கு தனிப்பட்ட பலன்கள் ஏதும் அவருக்கு உண்டா? அது குறித்த பின்னணிகள் ஆராய்ந்து அதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இப்படி ஏதுவுமே கிடைக்காத பட்சத்தில் லாம்கு என்ற நாடு இல்லை, இருந்ததில்லை என்று முடிவு செய்து விடலாம்.

இது தான் அறிவியல் முறை. அதவது ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதனதற்குறிய ஆதாரங்கள் வேண்டும். குலாம் இதை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்? லாம்கு குறித்த எந்த தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதைக் கூறியவரின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் முறை என்கிறார். அதாவது லாம்கு குறித்த எந்தத் தகவலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் லாம்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டவர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாலும் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றாலும் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி புனைவான ஒரு கருத்தைக் கூறிவிட்டு \\\இப்படி தான் அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம்/// என்று துணிந்து கூறியிருக்கிறாரே நண்பர் குலாம். எப்படி இது?

இந்த லாம்குவை அப்படியே கடவுளுக்கு ஒட்டுவோம். கடவுள் என்றொருவர் உண்டு, அவருக்கு இன்னின்ன வல்லமைகளை உண்டு, அவரால் தான் எல்லாம் நடந்தது என்று ஒருவர் கூறினால், லாம்குவைப் போல கடவுள் குறித்த தகவல்களைத் தேடுவோம். எந்தத் தகவலும் எப்படியான குறிப்புகளும் கிடைக்கவில்லை என்றால் என்ன நிலை எடுப்பது? நண்பர் குலாமின் முடிவுப்படி அந்த ஒருவர் கூறியதை ஏற்ககலாம். அறிவியலின் வழியில் கிடைத்த சான்றுகளின் படி மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதால் கடவுள் இல்லை என்று முடிவுக்கு வரலாம். இரண்டில் எது சரியான முடிவு என்றால் நண்பர் குலாமின் முடிவை புறந்தள்ளுவதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?

இதில் இன்னொரு உத்தியும் இருக்கிறது. அமெரிக்கா எனும் நாடு இருக்கிறதா இல்லையா? லாம்கு என்றொரு நாடு இருக்கிறதா இல்லையா? என்று நண்பர் குலாம் கேள்வி எழுப்பவில்லை. அமெரிக்கா என்றொரு நாடு இல்லை என்றால், லாம்கு என்றொரு நாடு இல்லை என்றால் என்றுதான் கேள்வியை எழுப்புகிறார். அப்போது தான் அவர் விரும்பும் முடிவை வந்தடைய முடியும். அப்போதும் கூட லாம்கு வை கடவுளோடு இணைக்கும் விசயத்தில் அவர் இடறியிருப்பதை ஊன்றிக் கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். லாம்கு என்றொரு நாடு குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் கூறுவதை ஏற்று லாம்கு இல்லை என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் கடவுள் எதிரான தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் சொல்வதை ஏற்று கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். இதைத்தான் நண்பர் குலாம் கூற விருப்புகிறார். ஆனால் முடிவுகள் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. ஒரு விசயத்தை தெளிவாக முன்வைத்து விடலாம். இப்பேரண்டத்தில் இருக்கும் அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் இருக்கும் ஒரே அளவுகோல் அறிவியல் தான். அறிவியலை விலக்கி வைத்துவிட்டு எதையும் அறிந்துவிட முடியாது.

அடுத்து குலாம் கடவுள் பற்றி கூறப்படுவது வரட்டுத் தத்துவமல்ல என்கிறார். எப்படி? \\\கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள். இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும்/// எந்த நிரூபணமும் தராமல் தாங்கள் கூறுவதை அப்படியே ஏற்க வேண்டும் என்று அடம் பிடிப்பதே ஆத்திகர்களின் வேலையாகி விட்டது. கடவுள் அறிவிலுக்கு அகப்பட மாட்டார், அப்படி வரமாட்டார், இப்படி தெரியமாட்டார் என்று கூறி அதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு கடவுள் இல்லையென்று நிரூபி என்கிறார்கள். எப்படியுமே தெரியமாட்டார் எதிலுமே அகப்படமாட்டார் என்றால் அவர் உறுதியாக இருக்கிறார் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

\\\கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது/// இதுவும் குலாமின் கூற்று தான், கலப்படமில்லாத சுத்தமான பொய்யான கூற்று. அறிவியலின் தொடக்கத்துற்கு முன்னர் கடவுள் எனும் ஒன்று இருக்கிறது என மனிதனால் உணரப் பட்டிருந்ததா? என்று மனிதன் நெருப்பை கண்டறிந்தானோ அன்றே அறிவியல் யுகம் தொடங்கி விட்டது. ஆனால் மனிதனின் வாழ்வில் அதற்கும் வெகு காலத்திற்குப் பின்பே கடவுள் அறிமுகமாகிறார். இது மதவாதிகளுக்கு வழக்கம் தான் அவர்களின் உளக்கிடக்கைகளை பொது உண்மைகளைப் போல் ‘ஜஸ்ட் லைக் தட்’ கூறிக் கொண்டே செல்வது. நண்பர் குலாம் அவரது கூற்றில் உண்மையுள்ளவராக இருந்தால் இதற்கு சான்றுகள் தரட்டும்.

இனி நண்பர் குலாமின் கேள்விகளின் பக்கம் முகம் திருப்பலாம். பொதுவாக மதவாதிகள் அன்றிலிருந்து இன்றுவரை கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணம் என்ன? எனும் கேள்வியால் துளைக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் இது வரை யாரும் பதில் கூறியதில்லை. அப்படியான பதில் கூறும் முயற்சிகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒது ஒரே விதமாக தோற்றமளிப்பதைக் காணலாம். அவை அனைத்தும் கேள்விகளின் விளக்கங்களாகவே இருக்கும். ஒருபோதும் அவை பதில்களின் தொகுப்பாக இருந்ததில்லை. தெளிவாகச் சொன்னால் எதிர்க் கேள்விகள் கேட்பதே கடவுளுக்கான நிரூபணம். அந்த வகையில் தான் குலாமின் இந்தக் கேள்விகளும் அடங்கும். பழைய பாட்டையில் பயணிக்கும் பசலிக் கேள்விகள்.

1. பெருவெடிப்பு ஏன் நிகழ வேண்டும்? பெருவெடிப்பு உறுதியாக நிகழ்ந்தது என்று எந்த அறிவியலாளனும் கூறவில்லை. அது ஒரு அறிவியல் யூகம். அது எப்படி நிகந்திருக்கக் கூடும் என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். படிப்படியாக தொடர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஏன் நிகழ வேண்டும். அது ஒரு தற்செயல் நிகழ்சி. அண்டத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பவை அனைத்தும் தற்செயல் நிகழ்ச்சிகளே. எதுவும் திட்டமிட்ட நிகழ்ச்சிகளல்ல. ஒரு குவளைத் தேனீர் தரையில் கொட்டினால் என்ன வடிவத்தில் பரவும் என்பது எப்படி தற்செயலானதோ அது போன்றே பெருவெடிப்பும் தற்செயல் நிகழ்ச்சி தான். காட்டாக ஒரு கோள் ஏன் கோள வடிவில் இருக்கிறது? கோள வடிவில் இருப்பதால் தான் அது கோள். அவ்வாறின்றி வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்தால், அப்போது வேறு ஏதாவது ஒரு பெயரில் அழைத்துக் கொண்டிருப்போம். ஏன் இந்த வடிவில் இருக்கிறது கோள வடிவில் இருந்திருக்கக் கூடாது? என்று கேள்வி கேட்ட்க் கொண்டிருப்போம். அதேபோல் தான் பெருவெடிப்பு ஏன் நிகழ்ந்தது என்பதும். பெருவெடிப்பு நிகழ்ந்ததால் இந்தப் பேரண்டம் உருவானது எனும் யூகம் வேறு விதமாய் இருந்திருக்கும், அவ்வளவு தான். ஏனென்றால் ஏன் நிகழ்ந்தது? ஏன் இப்படி இருக்கிறது? எனபன போன்ற ஆத்திகக் கேள்விகளெல்லாம் அறிவியலிலிருந்தோ தேடலிலிருந்தோ எழுந்ததல்ல. அது ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்திலிருந்து எழுந்தது. அவ்வாறன்றி பெருவெடிப்பு நிகழ்ந்ததற்கு திட்டமிடப்பட்ட காரணம் உண்டு என நண்பர் குலாம் நம்பினால், அந்தக் காரணத்தை அவர் விளக்கட்டும். பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம்.

2. கோள்கள் சரியாக சுற்றுகிறதே எப்படி? இது அறியாமையினால் எழுந்த கேள்வி. வான் வெளியில் கணந்தோறும் எத்தனையோ ஒழுங்கீனங்கள், மோதல்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. பிறிதொரு கோளால், அஸ்ட்ராய்டால், விண்கற்களால், எறிகற்களால், வால் நட்சத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளாகாத பருப்பொருள் என்று விண்ணில் எதுவுமில்லை. சந்திரனின் மேற்பரப்பு சிறுவர்களின் பம்பரம் போல் அத்தனை காயங்களுடன் இருப்பது ஏன்? செவ்வாயின் ஒருபகுதி சற்று வீக்கத்துடன் காணப்படுவது குறுங்கோளின் மோதலால் தான் எனக் கண்டறிந்திருக்கிறார்களே. சூரியனின் பாதைக்குள் ஷூமேக்கர் லெவி வால் நட்சத்திரம் பாதை மாறி வந்து போகவில்லையா? ஏன் பூமியில் விண்கல் வந்து மோதிய பள்ளம் சைபீரியாவில் இன்னும் இருக்கிறதே. மரியானா ட்ரன்ச் பூமியிலிருந்து பிய்ந்து போனது என்று தானே அறிவியலாளர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பூமியே கூட ஒருமுறை தன் துருவத்தை தலை கீழாக மாற்றியிருக்கிறது. இந்த ஒழுங்கீனங்களும் மோதல்களும் ஏன் நிகழ்கின்றன? மதவாதிகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு புளகமடைவார்கள். இதுவும் அதுதான்.

3. உயிர்கள் வாழத் தகுதியற்ற பல கோள்கள் விண்ணில் இருக்கின்றனவே, இது ஏன்? உண்மையில் இது ஆத்திகர்களை நோக்கி நாத்திகர்கள் கேட்க வேண்டிய கேள்வி. இப்பேரண்டம் ஏதோ ஒரு ஆற்றலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தான் ஆத்திகர்களின் நிலை. அப்படியென்றால் இந்தக் கேள்விக்கு பதில் கூறும் பொறுப்பும் ஆத்திகர்களுக்கே, அதாவது நண்பர் குலாமுக்கே உண்டு.

4. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரணங்களை இப்போதே துல்லியமாக கணித்திருக்கிறார்களா? இது எள்ளல், அதுவும் தன் கருத்துக்கு சாதகமான பயன் கருதிய எள்ளல். போகட்டும். குழந்தை பிறக்கும் நேரத்தை மருத்துவ அறிவியல் இயற்கையாகவும், செயற்கையாகவும் வெகு தெளிவாக கணிக்கிறது. தொடக்கத்தில் மனிதன் மாதக்க்கணக்காக, பின் நாட்கணக்காக, தற்போது மணிக்கணக்காகக் கூட துல்லியமாக கூற முடிந்திருக்கிறது. பெரும்பாலான பிரசவங்களில் நிமிடக்கணக்கில் கூட இந்த துல்லியம் இருப்பதுண்டு. அறிவியல் இதை சாத்தியமாக்கி இருப்பது அனைவரும் அறிந்தது தான். மற்றொருபுறம் வினாடி துல்லியத்தில் தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் செய்பவர்களும் இருக்கிறார்கள். இது அறிவியலின் வளர்ச்சி. ஆனால் இந்தக் கேள்வியின் சாரம் இருக்கிறதே அது ஏற்கனவே கூறியது போல் ஆன்மீகவாதிகளின் சந்தர்ப்பவாதத்தின் வளர்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பிறக்கும் நாளை சரியாக கணித்துக் கூற முடியுமா? என்று கேட்டார்கள், இன்று வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்கிறார்கள், நாளை மைக்ரோ வினாடி துல்லியமாக கூற முடியுமா? என்று கேட்பார்கள், அதனிலும் பிறகு நானோ வினாடி துல்லியமாக குழந்தை பிறப்பதை கணித்துக் கூற முடியாத அறிவியல் என்ன அறிவியல் என்பார்கள்.இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது கேள்வியை அல்ல, கேள்வியின் நோக்கத்தை.

5. மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? இது அறிவுபூர்வமான கேள்வியா அறிவுக்கு முரணான கேள்வியா? மனிதன் ஒரு பொருள். எல்லாப் பொருளுக்கும் மூன்று பரிமாணங்கள் இருப்பதைப் போல் திட்டவட்டமாக நான்காவது பரிணாமமாகிய காலமும் இருக்கிறது. காலத்தின் ஒரு புள்ளியில் தொடங்கும் ஒரு பொருள் மற்றொரு புள்ளியில் முடிந்தே தீர வேண்டும். இது அறிவியல் விதி. இதற்கு மாறாக ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அதில் அறிவியலுக்கு கொஞ்சமும் இடமில்லை. அறிவுபூர்வமான கேள்வியாக நினைத்து கேட்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அறிவியல் இல்லை. ஆனால் மரணத்தை மனிதன் வெற்றிகரமாக தள்ளிப் போட்டிருக்கிறான். ஆதிகாலத்தில் மனிதனின் அதிகபட்ச வாழ்நாளே முப்பது முதல் முப்பத்தைந்து ஆண்டுகள் தான். தெளிவாகச் சொன்னால் முப்பதைக் கடப்பவர்கள் வெகு அரிது. ஆனால் இன்றோ எழுபதைக் கடந்து இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் கடந்த மூன்று லட்சம் ஆண்டுகளில் மனிதன் தன் வாழ்நாளை இரண்டு மடங்குக்கும் அதிகமாக மாற்றிக் காட்டியிருக்கிறான். இதை அவன் ஏதோ ஒரு ஆற்றலின் துணை பலத்தால் அல்ல, தன் சொந்தப் பலத்தில் அடைந்திருக்கிறான்.

கடைசி இரண்டு கேள்விகளிலும் பிறக்கும் மரணிக்கும் நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இரண்டுமே கணிப்புகளை கோருகின்றன. கணிப்பு என்றாலே அது எதிர்காலம் தொடர்பானது. எதிர்காலம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டால் அது முழுமையாக துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பில்ல்லை. ஏனென்றால் அவை கணிப்புகள். அப்படி கணிக்கப்படுபவைகளும் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்பதிலிருந்து அறிவியலின் ஆளுமையை புரிந்து கொள்ளலாம். மாறாக இப்படியான கணிப்புகளுக்கு அவசியமின்றி ஏதோ ஒரு ஆற்றலுக்கு துல்லியமாக இவைகள் தெரியும் என்றால் கூறட்டும்; மனிதனின் அறிவியல் கணிப்பு துல்லியமாக இருக்கிறதா? அல்லது அந்த ஏதோ ஒன்றின் அறிவிப்பு துல்லியமாக இருக்கிறதா? என்று பார்த்துவிடலாம்.

சரி மேற்கண்ட கேள்விகளை நண்பர் குலாம் ஏன் எழுப்பியிருக்கிறார். அறிவியலெல்லாம் ஒன்றுமில்லை, ஆண்டவனே எல்லாம் என்று காட்டுவதற்காக. மீண்டும் ஒருமுறை சுருக்கமாக அவற்றை பார்த்து விடலாம். கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்விக்கான பதிலை நாம் அறிவியலிலும், பேரண்டப் பருப் பொருட்களிலும் அவற்றுக்கிடையேயான இயங்கு விசைகளிலும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. கடவுள் உண்டா இல்லையா எனும் கேள்வியின் சாராம்சம் கடவுளைச் சொன்னவன் கூறியது உண்மையா பொய்யா என்பது தான். இந்தக் கேள்வியின் வலியை எதிர்கொள்ள முடியாமல் தான் அதை அறிவியலுடன் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி, கடவுள் என்பது அறிவியலுக்குள் சிக்காது என்பதை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம், கடவுள் என்பது வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா என்பதை உறுதி செய்ய கீழே சில கேள்விகளை தருகிறேன், பதில் வந்த பின் தொடர்ந்து பரிசீலிக்கலாம்.

1. கடவுள் ஒரு சுயம்பு என்பதை வாதத்துக்காக கொள்வோம். பேரண்டம் உட்பட அனைத்தையும் அவர் படைப்பதற்கு முன் எங்கு இருந்தார். அதாவது அவர் முதலா? அவர் இருந்த இடம் முதலா?

2. கடவுள் எல்லா ஆற்றல்களையும் கொண்டவர் என்பதை ஒப்புக்கு ஒப்புக் கொள்வோம், அவரின் பிற படைப்பினங்களான, வானவர்கள், சைத்தான்கள் உள்ளிட்ட வேறு சிலவைகளையும் தடம் பிடிக்க முடியவில்லையே ஏன்?

3. கடவுளை அளக்க முடியாது, ஆனால் கடவுள் தன் உதவியாளர்கள் மூலம் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அந்த வானவர்கள் இயங்குவதற்கு என்ன விசையை பயன்படுத்துகிறார்கள்? அதையும் ஏன் அளக்க முடியவில்லை.

4. மழையைக் கூட பிரார்த்தித்து கேட்க முடியும் எனும் போது இந்த உலகில் சோதித்தறிய முடியும்படியான, மனிதர்கள் கோரிக்கையை இறைவன் நிறைவேற்றியதற்கான சான்று ஏதாவது கூற முடியுமா?

அறிவியலின் நோக்கத்தையும் பயன்பாட்டையும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற முடிவை வந்தடைய வேண்டும் என்பதற்காக வளைப்பதை விட, நேரிய முறையில் பாரிசீலித்துப் பார்க்கலாம். அப்படியான பரிசீலனைக்கு நண்பர் குலாமை அழைக்கிறேன்,

2 பதில்கள் to “கடவுள்: வெற்று நம்பிக்கையா? உறுதியான இருப்பா? விவாதம்”

  1. iniyavan நவம்பர் 21, 2012 இல் 7:33 முப #

    அருமையான விவாதம் தோழரே.

    //கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான்.//
    நூறு சதவீதம் சரியானது, இதைச் சொன்னால் அந்த அறிவுதான் ஆறாவது பகுத்தறிவாம்,அதனால் தான் ஆடுமாடுகள் கடவுளைப் பற்றிய சிந்தனை இல்லையாம். ஆறாவது அறிவைப் பயன்படுத்தித்தான் கடவுளை உணர்கிறார்களாம். நாமெல்லாம் அதை பயன்படுத்தவில்லையாம்,என்னத்த சொல்ல….மூமீன்களுக்கு ஒரு அறிவும் நாத்திகர்களுக்கு ஒரு அறிவையும் படைத்தவன் எவனோ??

  2. iniyavan நவம்பர் 22, 2012 இல் 8:09 முப #

    வணக்கம் தோழரே,

    //கடவுள் என்பது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல, கூறப்பட்ட ஒன்று. வானிலிருந்தோ அல்லது பூமிக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்தோ வெளிப்பட்டு, அந்த வெளிப்பாடு பாதுகாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட அந்த வெளிப்பாட்டின் வாயிலாக கடவுள் என்பது உருவெடுக்கவில்லை. மாறாக கடவுள் என்பதை மனிதர்கள் தான் கூறியிருக்கிறார்கள், இந்த நிலையில் அறிவியலால் கண்டுபிடிக்கப்படுவதை விட உயர்வானவர் எனும் தகுதி கடவுளுக்கு எப்படி ஏற்பட்டிருக்கும்? கடவுளைக் கூறியவர்களின் மற்றுமொரு கூற்று, அவ்வளவு தான.//

    கடவுள் பற்றிய நல்ல தெளிவான விளக்கம். மதவாதிகள் மதக் கோட்பாடுகளுக்கு ஆப்பு வைக்கும் என்பதால் ஏற்க மறுப்பார்கள் ஆனாலும் அதுதான் உண்மை என்பதும் அவர்களுக்கும் தெரியும்.நன்றி!!!!!!!!!!!

பின்னூட்டமொன்றை இடுக