தொகுப்பு | ஒக்ரோபர், 2010

சமூக விரோதி என்பதற்கு என்ன அளவுகோல் இருக்கிறது இவர்களிடம்?

31 அக்

இன்று குழும அஞ்சலாக எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அது கடையநல்லூரைச் சேர்ந்த பல நண்பர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதைப் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் அந்தக் கடிதத்திலிருந்த அரசியலைப் புரிந்துகொண்டே. நீங்களும் அந்த மடலைப் படித்துப்பாருங்கள்,

 

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பிற்கினிய சகோதரர்களே

நல்லூரின் பெயரில் தன்னை யார் என்று காட்டிக் கொள்ள இயலாத ஒருவர் ஒரு இணையதளம் தொடங்கிவிட்டார், சமுதாய அக்கரையொடு எழுகிறார்.  என்பதற்காக பல சொந்த கதைகளை, ரகசிய செய்திகளை, சந்தேகங்களை நல்லெணத்தில் கூட எழுதி விடாதீர்கள்.

இந்த இணைய தளத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி குறிப்பிடவில்லை. ஏற்கனவே இருக்கிற இணையதளம் சரியான செய்திகளை தரவில்லையாம். அவர்கள் முகவரி கொடுத்திருக்கிறார்கள். தொடர்பு எண் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் ஆக்கக்களை எழுத வேண்டியது தானே. தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது தானே.ஆலோசனை வழங்க வேண்டியது தானே.

ஆகவே இந்த இணையதளம் சமூக விரோதியாகவோ, தீய சக்தியாகவோ கூட இருக்கலாம்.

அல்லாஹூ ஆலம்.

அமீன்.

 

இதில் நல்லூர் முழக்கம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்கள். இதை அவர்கள் இங்கு பின்னூட்டமாக வைத்திருந்தால் தகுந்த பதிலளித்திருக்கலாம். இங்கு பின்னூட்டமாக வைப்பதும் வைக்காமலிருப்பதும் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது என்றாலும், இந்தத் தளத்தை சமூக விரோதமானதாக, தீய சக்தியாக வதந்தி ப‌ரப்பியிருக்கிறார்களே, இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டாமா? பதில் கூறுவது அவர்கள் கடமையல்லவா?

முதலில் சமூக விரோதம் என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறார்கள் இவர்கள்? இந்தத்தளத்தில் பதியப்பட்டிருக்கும் எது இவர்களுக்கு சமூக விரோதமானதாக, தீய சக்தியாக தெரிந்திருக்கிறது? சுட்டிக்காட்டத் தயாரா இவர்கள். விளக்கமளிக்க நல்லூர் முழக்கம் தயாராக இருக்கிறது. தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லமுடியாமல் சமூகவிரோதி என்றும் தீய சக்தி என்று வதந்தி பரப்பும் இவர்களை நல்லூர் முழக்கம் அலட்சியம் செய்கிறது. இருப்பினும் இவர்களின் குள்ளநரித்தனங்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை.

அந்த மின்னஞ்சலுக்கு நான் அளித்த பதில் கீழே,

அன்பிற்கினிய நண்பர்களே,

நான் என்னுடைய நோக்கத்தை தெளிவாகவே கூறியிருக்கிறேன். சமூகத்தைவிட தனிமனிதன் முக்கியத்துவம் வாய்ந்தவன் அல்லன்.

கடையநல்லூர் தளங்களில் நான் எழுதிய விமர்சனங்களும், ஆக்கங்களும் மறுக்கப்பட்ட சூழலில்தான் நான் தனியாக ஒரு தளம் தொடங்க முன்வந்தேன். நீங்கள் குழும‌மடலாக அனுப்பியிருக்கும் இந்தச் செய்தியையைக்கூட நல்லூர் முழக்கம் தளத்தில் நீங்கள் மறுமொழியாக வைக்கலாம். தகுந்த பதில் தரப்படும்.

தனிப்பட்ட தகவல்களோ, ரகசியச் செய்திகளையோ நான் யாரிடமும் கோரவில்லை, அது எனக்குத் தேவையுமில்லை.

நீங்கள் நாள்தோறும் இணையத்தில் படிக்கும் எத்தனையோ தகவல்களை எழுதுவது யார்? என்ன முகவரி என்பனவற்றை தெரிந்துகொண்டுதான் படிக்கிறீர்களா?

சமூக விரோதியாகவோ தீயசக்தியாகவோ நீங்கள் என்னை ஐயுறும் வண்ணம் அத்தள‌த்தில் என்ன இருக்கிறது? சுட்டிக்காட்ட முடியுமா?

அதில் செய்திகளை, நல்லூர் செய்திகளை என்னுடைய பார்வையுடன் கூடி பதிவுசெய்கிறேன். அதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கும்பட்சத்தில் அதை நீங்கள் தாராளமாக மறுக்கலாம். தளத்திற்கு வரும் எந்தக்கருத்தையும் மறைக்கவோ தள்ளிவிடவோ மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

வாருங்கள், கலந்துரையாடுவோம். மாறாக சமூகவிரோதி என என்னை தூற்றுவது முறையான செயலல்ல என்பதுடன் உங்கள் நேர்மையை சந்தேகப்படவைக்கும் எனவும் எச்சரிக்கிறேன்.

 

மீனவர்களை வதைக்கும் சட்டங்களை எதிர்க்காவிட்டால் ஓட்டு கிடைக்காது

31 அக்

மீனவர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அரசியல்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் ஓட்டு கிடையாது என நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலோர மக்கள் கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

 

கடற்கரையில் கடற்பரப்பில் இருந்து மீனவர்களை வெளியேற்றும் மத்திய அரசின் கடலோர ஒழுங்காற்று அறிவிப்பாணை 2010க்கு கடலோர கிராம மக்கள், மீனவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த அறிவிப்பாணையை கைவிட வலியுறுத்தி மீனவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முன்பு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அமைப்பாளர் ராயப்பன், சாத்தை செல்வராஜ், மீனவர் கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஏராளமான பெண்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வந்த வாகனங்களால் நெல்லை ஜங்ஷன் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

 

தீர்மானங்கள்: ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மீனவர்களுக்கு எதிராக அறிவிப்பாணையை  ஆங்கிலத்தில் வெளியிடுவது, மீனவ மக்களுக்கு புரியாத வகையில் இணைய தளத்தில் கருத்து கேட்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபடும் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தை கண்டிப்பது, மீனவர்கள் தொடர்பாக அரசு மேற்கொள்ளும் முடிவுகளை அவரவர் தாய்மொழியில் செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலம் அறிவிப்பது, அறிவிப்பாணை வெளியிட்டு 45 நாட்கள் ஆகியும் மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காத ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பது, மீனவர்களின் ஓட்டுக்களை வாங்கிக்கொண்டு கடற்கரையில் கடல் பரப்பில் பன்னாட்டுக்கம்பெனிகளின் நலன்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட சட்ட, திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத  அரசியல்கட்சிகளை வரும் தேர்தலில் புறக்கணிப்பது, சுனாமி பேரலைக்கு பின் மீனவர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வரும் நடவடிக்கைகளை கைவிடுவது, உவரியில் கடல் அரிப்பு அதிகமாகி கடல்நீர் மீனவர் வீடுகளுக்குள் புகும் நிலையுள்ளதால் கடல் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுப்பது, கத்தார் சிறையில் வாடும் நெல்லை, குமரி மாவட்டங்களை சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

******************************************************************

எதிர்த்து கண்டனக் குரல் கொடுத்தால் மட்டும் போதாது எனபதை மீனவர்கள் உணர வேண்டும். மக்களிடம் ஓட்டுக்கேட்டு வரும் எந்தக் கட்சிக்கும் மீனவர்களை வதைக்கும் கடற்புற மேலாண்மைத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தும் எண்ணமும் இல்லை, அதற்கான ஆற்றலும் கிடையாது. உலக வர்த்தக கழகத்திடமும், நிதி ஆணையத்திடமும் விலை போன கைக்கூலிகள் அவர்கள். இதில் எந்த ஓட்டுக்கட்சியும் விதிவிலக்கில்லை. மீனவர்கள் மட்டுமல்ல அனைத்து உழைக்கும் மக்களையும் வதைக்கும் திட்டங்களையே அவர்கள் தங்கல் செயல் திட்டங்களாக வைத்துள்ளார்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தால், இது போல் மக்கள் கொதித்தெழும் சமயங்களில் அவர்களுக்கு ஆதரவானவர்கள் போல் குரல் கொடுப்பது. ஆளும் கட்சியாக இருந்தால் இலவச திட்டங்களால் மக்களை மயக்குவது. இதைத்தவிர வேறு எதையும் எந்தக்கட்சியிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. மக்களின் கரங்கள் ஒன்றிணைந்து உயரவேண்டும், அதுதான் தீர்வை நோக்கித் தள்ளும்.

 

மின் தடைக்கான நேரம் மாறலாம், மின் தடை மாறுமா?

31 அக்

கடையநல்லூர் மின்கோட்டத்தில் மின்தடை சுழற்சிநேரம் நாளை (1ம் தேதி) முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் கூறியிருப்பதாவது: கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள வீரசிகாமணி, நாரணபுரம், கடையநல்லூர், புளியங்குடி, விஸ்வநாதபேரி துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் கால சுழற்சி நேரம் நாளை (1ம் தேதி) முதல் மாற்றியமைக்கப்படுகிறது.அதன்படி கடையநல்லூர் உபமின் நிலையத்தில் டவுன்-1, டவுன் -2 பீடர்களில் மதியம் 2-4, மில் பீடரில் காலை 6-8, கம்பனேரி பீடரில் காலை 10-12, கடையநல்லூர் ரூரல் பீடரில் காலை 6-8, நயினாரகரம் பீடரில் காலை 8-10 ஆகிய நேரங்களில் மின்தடை இருக்கும்.புளியங்குடி உபமின் நிலையத்தில் டவுன் பீடரில் காலை 6-8, சொக்கம்பட்டி பீடரில் மாலை 4-6 நேரங்களிலும், வீரசிகாமணி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேர்ந்தமரம் பீடரில் மாலை 4-6, ஊத்தான்குளம் பீடரில் காலை 8-10, வலசை பீடரில் மதியம் 2-4 ஆகிய நேரங்களில் மின்தடை இருக்கும்.

 

நாரணபுரம் உபமின் நிலையத்தில் சிந்தாமணி பீடரில் காலை 10-12, நெல்கட்டும்செவல் பீடரில் மதியம் 12-2, ராயகிரி பீடரில் காலை 10-12 நேரங்களிலும், விஸ்வநாதபேரி உபமின் நிலையத்திற்குட்பட்ட சிவகிரி பீடரில் காலை 6-8, வழிவழிகுளம் பீடரில் காலை 6-8, விஸ்வநாதபேரி பீடரில் 10-12, தேவிப்பட்டணம் பீடரில் மதியம் 2-4 ஆகிய நேரங்களில் மின்தடை இருக்கும்.இவ்வாறு மின்கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

***************************************************************************

மின் தடைகான நேரம் என்று அறிவித்து விடுகிறார்கள். ஆனால் மின் தடை அந்த நேரத்தில் மட்டுமா இருக்கிறது. அறிவிப்பின்றி திடீர் திடீரென எல்லா நேரத்திலும் மின் வெட்டு தாக்குகிறது. காற்று வீசவில்லை என்பதில் தொடங்கி மழை பெய்யவில்லை என்பது வரை மின்வெட்டுக்கு ஆயிரம் காரணங்கள். இந்த காரணங்களெல்லாம் மக்களாகிய நமக்குத்தான். லட்சம் காரணங்கள் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என எழுத்துபூர்வ உத்திரவாதம் அளிக்கப்படுகிறது.

கோடையில் மின்வெட்டு அதிகமாக இருக்கும், அதனால் மக்களிடம் அரசின் மீதான கோபமும் இருக்கும் என்பதால்தான் கோடை வருவதற்கு முன்பே தேர்தலை நடத்திவிட துடிக்கிறார்கள்.

ராகுலின் புதிய படம்: பொதுமக்களுடன் ரயில் பயணம்

30 அக்

30 மணி நேரம் பொதுமக்களுடன் ரயிலில் பயணித்தார் ராகுல் காந்தி  . இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்து குஷியாக அவருடன் பேசினர்.

மக்களுடன் மக்களாக இருக்க விரும்புவராக மாறி வருகிறார் ராகுல் காந்தி. மும்பைக்கு முன்பு வந்தபோது திடீரென மின்சார ரயிலில் ஏறி அசத்தினார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எந்த வித அறிவிப்பும் இன்றி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறைக்கே தெரியாதாம்.

பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும் ராகுல் திடீர் என்று பாதுகாப்பு  வளையங்களைத் தாண்டி மக்களுடன் உரையாடுவார். காரில் சென்று கொண்டிருக்கும்போது வழியில் விவசாயிகளைக் கண்டால் கீழே இறங்கி அவர்களுடன் பேசுவார்.

கடந்த 18-ம் தேதி ராகுல் டெல்லியில் இருந்து விமானம்  மூலம் கோரக்பூர் வந்தார். அங்கிருந்து பொதுமக்களுடன் ரயிலில் பயணம் செய்ய விரும்பினார். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் மும்பை செல்லும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். 2-ம் வகுப்பில் பயணிகளுடன் பயணியாக மக்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டே பயணித்தார்.

திடீர் என்று ராகுல் தங்களுடன் 30 மணி நேரம் பயணம் செய்ததில் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்

***************************************************************************

ராகுலை அடுத்த பிரதமருக்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ரயிலில் பயணிப்பது, கிராமப் பெண்களுடன் சேர்ந்து மண்சுமப்பதுபோல் போஸ் கொடுப்பது, பழங்குடியினருடன் தங்குவது, அவர்களுக்கு ஆதரவாய் பேசுவது என விதவிதமான கெட் அப் களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நடிப்பின் உள்நோக்கம்…..?

அதை முழுமையாக அறிய இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்

சட்டமும் கூட்டங்களும் கிடக்கட்டும்; காவிரியில் தண்ணீர் எப்போது வரும்?

29 அக்

காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கை பெறுவதற்கு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

 

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று புதன்கிழமை அறிவித்தது. எனவே தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதி இதைக் கூறினார்.

 

தி.மு.க.வின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அவருடைய தலைமையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் பதில் சொல்ல விரும்பவில்லை. அப்படிக் கூறி, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட நான் இடம் தர விரும்பவில்லை. சட்டப்படி நமக்கு வந்து சேர வேண்டிய நீருக்காக தொடர்ந்து நாம் வாதாடுவோம்; நடவடிக்கை எடுப்போம்.

 

கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாகவும், தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று அதில் முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் செய்திகளை இன்னும் பார்க்கவில்லை. அவற்றைப் பார்த்த பிறகுதான் அதுபற்றி கருத்து கூற முடியும். காவிரியில் தண்ணீர் திறப்பது பற்றி ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாக கூறியிருக்கிறோம். எனவே கடிதம் எழுத வேண்டியதில்லை. அவருக்கு இதுபற்றித் தெரியும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அது குறித்து சட்டப்படி நாங்கள் அணுகுவோம் என்று முதல்வர் கூறினார்.

 

காவிரியில் 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு: இந்நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டது என கர்நாடகத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 124.70 அடியாக இருந்தது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து அதிகரித்தது. அதன்படி அணைக்கு விநாடிக்கு 25,043 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 25,099 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. புதன்கிழமையைவிட வியாழக்கிழமை அணையில் இருந்து கூடுதலாக 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். காவிரி பாசனப் பகுதியில் உள்ள மற்றோர் அணையான கபினியில் நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

***************************************************************

பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் ஆற்றுநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் சிக்கலின்றி செயல்படுத்தப்படும்போது, மாநிலங்களுக்கிடையேயான பங்கீட்டில் மட்டும் ஏன் சிக்கல் எழுகிறது? அனைத்து மாநிலங்களிலும் விவசாயப் பரப்புகளை வரைமுறையின்றி அதிகரித்ததும், அணைகட்டியதும், விவசாயத்தை வேர‌றுத்ததும் என எதுவும் மக்கள் நலனுக்காக செய்யப்பட்டதல்ல. பெரு விவசாயிகள், பண்ணைகள், முதலாளிகள், ஓட்டுப்பொறுக்கி அரசியல் நலன்களுக்காகத்தான் அனைத்தும் நடந்தன.

நீதிமன்றம், சட்டம், மாநிலங்களுக்கிடையேயான கூட்டம் போன்ற அனைத்து அக்கப்போர்களும் அந்தந்த நேரத்து அரசியல் திசைதிருப்பல்களுக்காக நடத்தப்படுபவை. ஆண்டுகள் கடந்துபோகும், சிக்கல்கள் தீரப்ப்போவதில்லை. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையுடனான கூட்டிணைவு மாநிலங்களுக்கிடையே இருந்தால்தான் இதுபோன்ற சிக்கல்களை எளிதில் தீர்க்கமுடியும்.

இலவச தொலைக்காட்சியைப் போட்டால் ஓட்டு தெரியுது

28 அக்

நெல்லை மாவட்டத்திற்கு 50 ஆயிரம் இலவச கலர் “டிவி’க்கள் விரைவில் வர இருப்பதாகவும், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் இந்த ஒதுக்கீட்டில் இலவச கலர் “டிவி’ வழங்கப்படும் எனவும் கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.கடையநல்லூரில் சிறுபான்மை மாணவியர் விடுதி திறப்பு விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் இப்ராகிம், துணைத் தலைவர் காளிராஜ், பிற்பட்டோர் நல அலுவலர் காசிவிஸ்வம் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் அக்பர் அலி வரவேற்றார்.

 

விழாவில் யூனியன் சேர்மன் சட்டநாதன், மாவட்ட திமுக பொருளாளர் சேக்தாவூது, நகர திமுக செயலாளர் முகமதுஅலி, தென்காசி ஆர்டிஓ சேதுராமன், தாசில்தார் விஜயா, எம்எல்ஏ அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், தொகுதி இளைஞர் காங்., துணைத் தலைவர் செய்யதலி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா உட்பட பலர் பேசினர்.
விழாவில் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “”சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக வாழும் கடையநல்லூரில் சிறுபான்மை மாணவியர் விடுதி அமைத்திட பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் அனுமதி வழங்கப்பட்ட ஒரே ஒரு சிறுபான்மை மாணவியர் விடுதியினை தமிழக முதல்வர் கருணாநிதி கடையநல்லூருக்கு வழங்கியுள்ளார். அனைத்து வசதிகளும் இந்த விடுதியில் மாணவிகளுக்கு செய்து கொடுக்கப்படும். நகராட்சி பகுதியில் காணப்படும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க 3 லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
சிறுபான்மை மாணவியர் விடுதியினை திறந்து வைத்து கலெக்டர் ஜெயராமன் பேசியதாவது:
எதிர்காலத்தில் கல்விதான் முக்கியத்துவமாக அமையும். இதனை கருத்தில் கொண்டு இதுபோன்ற மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெண் கல்வி அவசியத்தையடுத்து மாணவியர் விடுதி திறக்கப்பட்டு வருகிறது. கடையநல்லூரில் திறக்கப்பட்டுள்ள இந்த விடுதுயில் தற்போது 35 மாணவியர் தங்க வந்துள்ளனர். அனைத்து வசதிகளும் கொண்ட விடுதியாக மாணவியர் விடுதி அமைக்கப்படும்.கடையநல்லூர் நகர பகுதிகளில் குடிநீர் கஷ்டம் உள்ளது தெரிகிறது. நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க எம்எல்ஏ., வேண்டுகோள் விடுத்துள்ளதன் அடிப்படையில் 3 லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இலவச கலர் “டிவி’ டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 ஆயிரம் இலவச கலர் “டிவி’க்கள் மாவட்டத்திற்கு வரவழைக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில் கடையநல்லூர் நகராட்சி பகுதி மக்களுக்கு இலவச கலர் “டிவி’ வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் செங்கோட்டை யூனியன் சேர்மன் சட்டநாதன், மாவட்ட காங்., துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், முருகேசன், மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், வட்டார தலைவர்கள் ஆலங்குளம் செல்வராஜ், பண்பொழி மீரான், தொகுதி இளைஞர் காங்., தலைவர் பண்பொழி வினோத், கரடிகுளம் அண்ணாமலை, பஞ்., தலைவர் மாணிக்கம், செல்லத்துரை, இளைஞர் காங்., தொகுதி செயலாளர்கள் கதிரவன், காந்தி, முன்னாள் நகர காங்., தலைவர் பெரியசாமி, நகர செயலாளர்கள் பட்டு, முகமதுஷா, வடகரை காங்., தலைவர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

**********************************************************

அன்னிய முதலீட்டையும் உள்னாட்டு தொழிலதிபர்களையும் கவர்வதற்கு கர்ணாநிதியின் திமுக அரசு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வழங்குவது முதல் உற்பத்தியை தொடங்கிய பின்னரும் சலுகைகளை கொட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலை. இது எல்ல விதத்திலும் மக்களைப் பாதித்து அவர்களை முடக்குகிறது. ஆனாலும் ஓட்டு வாங்க வேண்டுமே, தேர்தல் நெருங்குவதால் இலவசங்களும், நலத்திட்டங்களும் தூள் பறக்கிறது.

மக்களே, கடையநல்லூர் மக்களே, எந்தக் கட்சிக்கு ஓட்டுப்போடுவது என்று யோசிப்பதுதானே உங்கள் வழக்கம், ஏன் ஓட்டுப்போடவேண்டும்? என மாற்றி யோசித்துப் பாருங்களேன்.

தமிழில் மணிப்பிரவாக நடைக்கு மீண்டும் சூழ்ச்சியா?

28 அக்

யுனிகோட் ஒருங்குறி முறையில் 26 சமஸ்கிருத எழுத்துகளைச் சேர்க்க ஆரிய சக்திகள் முயற்சித்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.

ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணையத்தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.
இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.

ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோடு சேர்த்தியம் அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ம் நாள், சிறீ ரமண சர்மா என்ற பார்ப்பனர், யுனிகோடு சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு ‘லிபி’யாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!.

இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.

இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீ ரமண சர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம்
அடிவயிற்றிலிருந்து எழுப்பும், ப, பா, மா, உட்ட், தா உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.

சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!.

யுனிகோடு குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை!.
அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல! ‘‘புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா?’’ என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள்விக்கு, “இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார்.

“இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் “சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ சதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ்’ மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ம் ஆண்டு வெளியான டி.எளி. நாராயண சாஸ்திரி என்பாரின் ‘போஜ சரிதம்’ என்னும் நூலுமாகும்.

இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து ‘விரிவாக்கப்பட்ட தமிழ்’ என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத்தான் இருக்க முடியும்.

இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காஞ்சி காமகே(ட்)டிகளின் கரம்தான் இருக்கிறது என்பது அய்யமில்லாமல் தெரியும் ஒன்றாகும். சிறீ ரமண சர்மா தந்திருக்கும் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல. இது குறித்த அவர் விவாதித்ததாகக் கூறியிருக்கும் வல்லுநர்கள் மதராஸ் சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால் ஷர்மா போன்றவர்களாவர்.

தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர்களிடம் கேட்பானேன்?. வேலிக்கு ஓணான் சாட்சியா?. இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது!.

இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

ஆயினும், இது குறித்த கடுமையான கண்டனமும், மறுப்பும் உடனடியாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு சென்றால்தான் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இப்பிரச்சனையில் உடனடி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். முதல்வர் கருணாநிதி காலத்திலேயே தமிழக அரசுக்குத் தெரியாமல் கொல்லைப்புற வழியாக தமிழுக்குக் கேடு பயக்க நினைக்கும் ஆரியத்தின் சதிச்செயல் வெற்றிபெற்று விடக் கூடாது.

தமிழின் வளர்ச்சிக்கு ஆரிய சமஸ்கிருதத் திணிப்பு பெரும் தடையாக அமைவதோடு, தமிழைப் பின்னோக்கி படுகுழியில் தள்ளிவிடும். உடனடி நடவடிக்கை மட்டுமல்லாது, இத்தகைய திரிபு வேலைகளும், திணிப்புகளும், பண்பாட்டுப் படையெடுப்புகளும் எவ்வகையிலும் நிகழ்ந்துவிடாமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன. முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களும் தமிழுக்கு நேர இருக்கும் கேடுகள் குறித்து பலமுறை எடுத்துக் காட்டியுள்ளார் என்பதும் முக்கியமானதாகும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!.

முதல்வர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!

****************************************************************

ஒரு மொழியில் மாற்றம் என்பது காலந்தோறும் நடந்துவருவதுதான் என்றாலும், அந்த மாற்றம் இயல்பாக இருக்கவேண்டுமேயல்லாது சூழ்ச்சியாக இருக்கலாகாது. அபேட்சகர், போஜனம், காரியஸ்தர், ஸ்த்ரீ போன்ற மூச்சை நெரித்த சொற்களையெல்லாம் உதறி தற்போதுதான் தமிழ் உழைக்கும் மக்களுக்கு சற்றே நெருக்கமாகியிருக்கிறது.

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்யவேண்டுமென ஒரு கூட்டம் முயற்சித்துக்கொண்டிருக்கிறது. குறியீடுகளைக் குறைப்பதன் மூலம் எழுத்தைச் சீர்படுத்தலாம் என்பதை ஆதரித்தும், எதிர்த்தும் ஒருபக்கம் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் சதியின் மூலம் சத்தமின்றி மாற்றங்களை திணித்துவிட நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படவேண்டும்.

அனைத்து நிலைகளிலும் தமிழனின் வாழ்வை பறித்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்தி தமிழை வளர்த்துவிட்டோம் என பெருமிதம் கொள்பவர்களால் தமிழ் வளரப்போவதில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மொழியை காத்து வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் உழைக்கும் மக்கள். அவர்களின் கழுத்துக்கு கயிற்றை தந்துவிட்டு மொழியை சுவாசிக்கச் செய்ய முடியாது.

முதலில் மக்கள் பின்னரே அவர்கள் பேசும் மொழி.

 

கடையநல்லூரில் கோரமான விபத்து

28 அக்

கடந்த செவ்வாய்க்கிழமை கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோரமான விபத்து நடந்துள்ளது.

இரசாலியாபுரம் தெருவில் வசிக்கும் சேவநல்லி குடும்பத்தைச் சேர்ந்த முகம்மது கோயா விபத்து நடந்த கணத்திலேயே மரணமடைந்தார்.

40 வயதே ஆகும் இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.

*************************************************************

இருசக்கர வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க விபத்துகளும் அதிகரிக்கிறது. கடையநல்லூர் பகுதிகளில் குற்றாலம் அருவிகளில் நீர்கொட்டும் மே ஜூலை பருவத்தில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்து நடப்பது வழக்கமாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு அவ்வாறு விபத்துகள் ஏதும் நிகழவில்லை என மகிழ்ந்திருந்த வேளையில் இந்தக் கோரம்.

கடையநல்லூரில் மாணவியை காணவில்லை. கடத்தலா? காதலா?

26 அக்

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் மாணவி கடத்தப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மகள் சௌராபர்வீன் (21). வள்ளியூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாராம்.  இதே கல்லூரியில் படித்து வருபவர் ராதாபுரம் துரைகுடியிருப்பைச் சேர்ந்த கனகராஜ் ஜோசப் மகன் செபஸ்டியன் நிஷாந்த் (21). இவர் சௌராபர்வீனை காதலித்ததாக கூறப்படுகிறது.

 

இது தெரிந்த சௌராபர்வீனின் தந்தை காஜாமைதீன், தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாராம். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் மதுரை நீதிமன்றத்தில் தனது காதலியை காணவில்லை எனவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் செபஸ்டியன் நிஷாந்த் மனு தாக்கல் செய்தாராம்.  இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடையநல்லூர் போலீஸôர் சௌராபர்வீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினராம். இதையடுத்து, சௌராபர்வீன் தனது பெற்றோருடன் சேர்ந்து இருப்பதாக கூறினாராம்.

 

இந்நிலையில், கடையநல்லூரில் தனது பெற்றோருடன் இருந்த சௌராபர்வீனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தனது மகள் கடத்தி செல்லப்பட்டதாக கடையநல்லூர் போலீஸில் காஜாமைதீன் சனிக்கிழமை இரவு புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

********************************************************************

கடையநல்லூரின் பழமைவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மீண்டும் தீனியாத் வகுப்புகள், கல்லூரிக்கு அனுப்பக்கூடாது என தொடங்கி விடுவார்கள். இன்றைய நுகர்வுக்கலாச்சாரத்தில் காதல் காதலாக இருப்பதில்லை என்றாலும் காதல் ஒன்றும் செய்யக்கூடாத குற்றமோ, பாவமோ அல்ல. இதை மதம் குறுக்கிடுவதுதான் பிரச்சனை என்பதாக எடுத்துக்கொள்ள‌ முடியாது. சொந்த மதத்திற்குள் காதலித்தாலும் காதல் அங்கீகரிக்கப்படுவதில்லை.

இந்த நிகழ்வில், தன் காதலி துன்புறுத்தப்படுவதாக தகவல் கிடைத்த பின்னர்தான் அவன் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என கருத இடமிருக்கிறது. நீதிமன்றத்தில் முறையீடு செய்திருப்பதைக் கொண்டே அவர்கள் வாழ விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. பிறகென்ன?

அவர்களின் வாசலை அடைத்துவிட்டு செத்த பிறகு அழுவதைவிட அனுமதித்துவிடுங்கள். வாழ்வை அவர்கள் தங்கள் பரிசாகக் கொள்வார்கள்.

 

உண்மையைச் சொன்னால் உள்ளே தள்ளுவோம்

26 அக்

காஷ்மீர் விவகாரம் குறித்து தேச விரோதமாகப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ஹுரியத் மாநாட்டு பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீஸாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்ட் ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் பேசினார்.

தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அருந்ததி ராய் பேசுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இவர்கள் மீது எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கிலானி கூறுகையில், என் மீது ஏற்கெனவே 90 வழக்குகள் உள்ளன. இது 91வது வழக்கு என்றார்.

அருந்ததி ராய்க்கு காங்கிரஸ் கோரிக்கை:

இந் நிலையில் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை அருந்ததி ராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா கூறுகையில், இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது.

அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும். இதனால் தனது கருத்தை ராய் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

*************************************************************************

இந்தியவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் எப்போது இருந்தது? உண்மையைச் சொன்னால் வழக்கு பதிவதற்குத்தான் சுதந்திரம் என்று பெயரா? எது தேசபக்தி? எது தேசவிரோதம்? இருநூறு ரூபாய்க்காகத்தான் காஷ்மீரில் கல்லெறிகிறார்கள் என அப்பட்டமாக புழுகினால் அது தேசபக்தி. காஷ்மீரில் இராணுவம் செய்யும் கொடுமைகளைக் கூறினல் அது தேச விரோதம். திப்புவின் மெய்யான வரலாற்றை இது கற்பனையானது எனும் பெயருடன் தொடராக எடுக்கலாம். ஆனால் காஷ்மீர் எப்போது இந்தியாவுடன் இணைந்திருந்தது எனும் வரலாற்றுக் கேள்வியை எழுப்பினால் அது தேசவிரோதம்.

சுருக்கமாக இவர்கள் சொல்வது அதிகாரவ‌ர்க்கத்திற்கு ஒத்தூதுவதுதான் மக்கள் வேலை மீறினால் உள்ளே தள்ளுவோம். இதைத்தான் வெள்ளையர்களும் செய்தார்கள். நம்புங்கள் சுதந்திரம்(!) பெற்று அறுபத்து மூன்று ஆகிவிட்டது.