Tag Archives: பிரதமர்

கருப்புபண முதலைகள் அதை வெள்ளையாக்கிக் கொள்ள வாய்ப்பளிப்போம்: மன்மோகன் சிங்

20 ஜன

இந்தியாவின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ள நிலையில், கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வர உடனடி தீர்வு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

கருப்புப் பண விவகார வழக்கில் நேற்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். நாட்டையே கொள்ளையடித்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை திருடியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயங்குவது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக கேட்டுள்ளது. இந்தப் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டேயாக வேண்டும் என்றும் கண்டித்துள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் கண்டனம் குறித்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அமைச்சரவை மாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கருப்புப் பணத்தை உடனடியாக மீட்டுக் கொண்டு வர நம்மிடம் எந்தத் தீர்வும் இல்லை.

கருப்புப் பணம் தொடர்பாக அரசிடம் உள்ள தகவல்களை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிப்போம். அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.

நமக்கு சில தகவல்கள் (ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியல்) வந்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளிடமிருந்தும் தகவல்களைப் பெறுவோம். இவற்றுக்கு உரியவர்களிடமிருந்து உரிய வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்படும் என்றார் பிரதமர்.

பிரதமர் அளித்துள்ள பதிலைப் பார்க்கும்போது கருப்புப் பணம் வைத்திருப்போர் குறித்த பட்டியலை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்காது என்று தெளிவாகத் தெரிய வருகிறது. மேலும், இந்தப் பணத்துக்கு ஒரு வரியை போட்டு அதை வசூலித்து விட்டு, அந்தப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ள மத்திய அரசே வழி வகுத்துக் கொடுக்கப் போவதும் தெரிய வருகிறது.

ஆனால் நேற்று இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இதை ஏதோ ஒரு வரி ஏய்ப்புப் பிரச்சினை போல பார்க்கிறது மத்திய அரசு. ஆனால் உண்மையில் இது மிகப் பெரிய பொருளாதாரக் கொள்ளை என்று உச்சநீதிமன்றம் சாடியது குறிப்பிடத்தக்கது.

**********************************************************

ஆகவே மக்களே,

பிரதமர் தெளிவாக அறிவித்துவிட்டர், \\அதேசமயம், இதை பகிரங்கமாக அனைவருக்கும் தெரியப்படுத்த முடியாது// என்று.

அதாவது அரசு யார் பக்கம் நிற்கப்போகிறது, யாருக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இதைவிட தெளிவாக யாரும் அறிவித்துவிட முடியாது. எஞ்சியிருக்கும் கேள்வி நீங்கள் யார் பக்கம் நிற்கப்போகிறீர்கள் என்பது மட்டும் தான்.

ஊழலற்ற ஆட்சியை பையில் வைத்திருக்கும் விசயகாந்த்

4 டிசம்பர்

ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்றும் அதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் பட்டம் என்றும் கூறினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

இந்திய அப்போஸ்தல திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் இசைப் பெருவிழா மற்றும் விஜயகாந்துக்கு மனிதநேய சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள சர்வதேச தேவாலய மேலாண்மை நிறுவன தலைவர் ஜான் வில்லியம் மனிதநேய சமூக சேவைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

விழாவில் விஜயகாந்த் பேசுகையில், “கட்சி தொண்டர்களுக்கு இந்த டாக்டர் பட்டத்தை சமர்ப்பிக்கிறேன். சிறுபான்மையினர் என்று கூறி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் எல்லாம் பெரும்பான்மை என்பதை இன்னும் 7 மாதத்தில் நிரூபிப்பேன்.

இலவசம் என்று கொடுத்து மக்களை கெடுத்து வருகிறார்கள் என்று நான் கூறினால், விஜயகாந்த் கம்ப்யூட்டர் இலவசமாக கொடுக்கவில்லையா என்கிறார்கள். அது மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு. மக்களை வாழ வையுங்கள், சந்தோஷப்படுத்துங்கள். இந்த நாட்டில் ஏழைகள் இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டை சீரமைக்கத்தான் எனக்கு இந்த பட்டம் தரப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன். நிச்சயம் ஊழலற்ற ஆட்சியை என்னால் அமைக்க முடியும்…”, என்றார்.

*********************************************

சில ஆண்டுகளுக்கு முன்னர் விசயகாந்த் மதுரை தனது கட்சி அறிவிப்பை வெளியிட்டபோது இந்த முழக்கத்தைத்தான் வெளியிட்டார். ஆனால் ஊழலற்ற ஆட்சி என்ற தன் முதல் முழக்கத்தை நாளிதழ்களில் வெளியிட பத்திரிக்கையாளர்களுக்கு கவரில் பணம் வைத்துக்கொடுத்தார், என்று அப்போதே செய்தி வெளியிடப்ப‌ட்டுச் சிரித்தன. ஆனால் இப்போதும் இவர் நான் பைக்குள் வைத்திருக்கிறேன், எனக்கு ஓட்டுப்போட்டால் எடுத்துக்கொடுத்துவிடுவேன் என்கிறார்.

உலகமய சூழலில் பிரதமர் உட்பட யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்ட சூழலில், இவர் கூறுவதைக் கேட்டு எந்தவாயால் சிரிப்பது?

சு. சாமி பல்டி, பிரதமர் நேர்மையானவரா?

22 நவ்

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் இழுத்தடிப்பதாக பிரதமரையும், பிரதமர் அலுவலகத்தையும் குறை கூறி வந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தற்போது சட்ட அமைச்சக அதிகாரிகள்தான், பிரதமருக்கு தவறான வழியைக் காட்டிவிட்டதாக பல்டி அடித்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக 9 பக்க அபிடவிட் ஒன்றை அவர் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜா மீது வழக்கு தொடர அனுமதிக்குமாறு கோரி நான் அனுப்பிய மனுவை சட்ட அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் அனுப்பியுள்ளது. ஆனால் சட்ட அமைச்சக அதிகாரிகளும், அரசின் சட்ட நிபுணர்களும், இதுதொடர்பான ஆதாரம் கிடைக்கும்வரை காத்திருக்கவும் என்று பிரதமருக்கு தவறான அறிவுரையை வழங்கி தாமதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

நான் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு தொடரலாம் என்ற சட்ட அம்சத்தை பிரதமருக்கு தெரிவிக்க தவறிய சட்ட நிபுணர்களி்ன் போக்கு வருத்தம் தருவதாக உள்ளது.

எனது கடிதங்கள் மூலம் நான் கொடுத்த ஆதாரங்கள் குறித்து பிரதமர் தனிப்பட்ட முறையில் விசாரித்துள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத செயலாகும் என்றார் சாமி.

முன்னதாக சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பிரதமரும், பிரதமர் அலுவலகமும் செயலற்று இருந்தது தொடர்பாக கடுமையான கேள்விகளைக் கேட்டிருந்தது. இதையடுத்து அட்டர்னி ஜெனரல் வாகனாவதியை பிரதமர் சார்பில் வாதாட நியமித்த மத்திய அரசு அவர் மூலம் விரிவான பதில் மனுவை சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது நினைவிருக்கலாம்.

**************************************************************

ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விசயத்தில் மன்மோகன் சிங்கின் ‘நேர்மையாளர்’ பிம்பத்தை தக்கவைக்க கடும் முயற்சிகள் நடக்கின்றன. நீளமான பிரமணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சுசாமி பின்வாங்க வைக்கப்பட்டிருக்கிறார். இடதுசாரிகள் என தம்மைக் கூறிக்கொள்வோர், பிரதமரின் நேர்மை மீது நாங்கள் சந்தேகப்படவில்லை என அறிவிக்கிறர்கள். சுசாமி மீது வழக்கு தொடுக்கலாமா என காங்கிரஸ் ஆலோசிக்கிறது. ஆக மொத்தத்தில் ஒரு அமைச்சர் தான் ஊழலுக்கு காரணம், அவரும் பதவி விலகிவிட்டார், இனி என்ன? என்று வழக்கம்போல் பிரச்சனைக்கு தண்ணீர் தெளித்து மூடிவிடப் பார்க்கிறார்கள். எல்லா ஓட்டுக் கட்சிகளும் அரசு இழந்த பணத்தை எப்படி திரும்பப் பெறுவது என்பது குறித்து மூச்சுக் கூட விடமறுக்கின்றன. காரணம் இந்த ஊழலில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது என்பது மட்டுமல்ல, முதலாளிகளைப் பகைக்க வேண்டியதிருக்கும் என்பதும் சேர்த்துத்தான். இதில் பிரதமர் மட்டும் எந்த வகையில் விதிவிலக்கு? தொன்னூறுகளில் அரசியல் அரங்கில் அவர் நுழைந்தது முதல் இப்போதுவரை நாட்டின் வள‌ங்களை கொள்ளையடித்து தனியாரிடம் சேர்க்கவேண்டும் என்பதுதான் அவரது தாரக மந்திரமாக இருந்து வருகிறது. தனியாரிடம் வாரிக்கொடுக்கப்பட்ட அனைத்திலும் நாட்டிற்கு இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்? இதில் பிரதமரென்ன அமைச்சர்களென்ன? எல்லாம் குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

ராகுலின் புதிய படம்: பொதுமக்களுடன் ரயில் பயணம்

30 அக்

30 மணி நேரம் பொதுமக்களுடன் ரயிலில் பயணித்தார் ராகுல் காந்தி  . இதைப் பார்த்து மக்கள் வியப்படைந்து குஷியாக அவருடன் பேசினர்.

மக்களுடன் மக்களாக இருக்க விரும்புவராக மாறி வருகிறார் ராகுல் காந்தி. மும்பைக்கு முன்பு வந்தபோது திடீரென மின்சார ரயிலில் ஏறி அசத்தினார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் எந்த வித அறிவிப்பும் இன்றி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த தகவல் காவல் துறைக்கே தெரியாதாம்.

பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும் ராகுல் திடீர் என்று பாதுகாப்பு  வளையங்களைத் தாண்டி மக்களுடன் உரையாடுவார். காரில் சென்று கொண்டிருக்கும்போது வழியில் விவசாயிகளைக் கண்டால் கீழே இறங்கி அவர்களுடன் பேசுவார்.

கடந்த 18-ம் தேதி ராகுல் டெல்லியில் இருந்து விமானம்  மூலம் கோரக்பூர் வந்தார். அங்கிருந்து பொதுமக்களுடன் ரயிலில் பயணம் செய்ய விரும்பினார். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் மும்பை செல்லும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். 2-ம் வகுப்பில் பயணிகளுடன் பயணியாக மக்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டே பயணித்தார்.

திடீர் என்று ராகுல் தங்களுடன் 30 மணி நேரம் பயணம் செய்ததில் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்

***************************************************************************

ராகுலை அடுத்த பிரதமருக்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் ரயிலில் பயணிப்பது, கிராமப் பெண்களுடன் சேர்ந்து மண்சுமப்பதுபோல் போஸ் கொடுப்பது, பழங்குடியினருடன் தங்குவது, அவர்களுக்கு ஆதரவாய் பேசுவது என விதவிதமான கெட் அப் களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த நடிப்பின் உள்நோக்கம்…..?

அதை முழுமையாக அறிய இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.

ராகுல் காந்தி : பழங்குடி அவதார்

காமன்வெல்த்: முதலில் ஊழலைப் பார்வையிட்ட பிரதமர் இப்போது மைதானத்தைப் பார்வையிடுகிறார்.

29 ஆக

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழா, நிறைவு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பிரதமர் மன்மோகன் சிங் .

காமன்வெல்த் விளையாட்டுக்கான ஸ்டேடியங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இன்னும் முடிந்தபாடில்லை. இன்னும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று ஏகப்பட்ட ஊழல் புகார்கள் வேறு.

இதையடுத்து மத்திய அரசு தலையிட்டது. முதலில் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தலைமையிலான அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பின்னர் 11 அரசு அதிகாரிகள் அடங்கிய கமிட்டிஅமைக்கப்பட்டது. இதன் மூலம் சுரேஷ் கல்மாடி முன்பு குவிந்து கிடந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் அதிரடியாக நேரடி ஆய்வில் குதித்தார்.

போட்டி தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நடைபெறும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்குச் சென்று அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளையாட்டு மைதானம், மீடியாக்காரர்களுக்கான வசதிகள், ராயல் பாக்ஸ், ஸ்டேண்டுகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு விளக்கம் கேட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், இது அழகான மைதானம். இங்கு அனைத்துப் பணிகளையும் விரைவில் முடிக்க வேண்டியது அவசியம். எந்த வேலையாக இருந்தாலும் விரைவில் முடித்து விடுங்கள் என்று அறிவுரை கூறினார்.

அக்டோபர் 3ம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன. 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இவற்றுக்கான ஸ்டேடியங்கள் அனைத்தையும் செப்டம்பர் 15ம்தேதிக்குள் கொடுத்து விட வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அதற்குள் முடியுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

**********************************************************

கடந்த சில ஆண்டுகளாகவே தில்லியில் காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் போட்டியை ஒட்டி வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளுக்கு அசிங்கமாய்த் தெரிவார்கள் என்று சாலையோரம் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களை தில்லியைவிட்டுத் துரத்தியது அரசு. லட்சக் கணக்கானோருக்கு உணவளித்துவந்த, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்துவந்த‌ நடைபாதை உணவகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆப்பிரிக்காவைவிட வறுமை அதிகமுள்ள நாட்டில் சில நாட்கள் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு கோடிகோடியாய் கொட்டப்பட்டது. இவைகளையெல்லாம் ரசித்த‌ பிரதமர், ஊழல், அரங்கங்கள் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்கப்படுமா? என ஐயம் கிளம்பியதும் பதறிப் போகிறார். ஏனென்றால் அவர்களின் வல்லரசு கனவுக்கு விளையாட்டுப்போட்டிகள், தமிழர்களின் இன அழிப்புக்கு திட்டம் தீட்டிக் கொடுப்பது போன்றவை தேவையாய் இருக்கிறது. அவர்களின் வியாபரத்திற்கும், கொள்ளை லாபத்திற்கும் தான் இந்தியா வல்லரசு என்பது பயன்படும். தில்லியைவிட்டு துரத்தப்பட்ட லட்சக்கணக்கான நடபாதை வாசிகள், உணவகங்களை நடத்தியவர்கள் போன்றோருக்கு இந்தியா வல்லரசானால் என்ன? காமன்வெல்த போட்டியை சிறப்பாக நடத்தினால்தான் என்ன?