தொகுப்பு | 2:47 பிப

தெலுங்கானா: கிருஷ்ணா கமிட்டி அமைத்ததன் நோக்கம் என்ன?

25 மார்ச்

“ஆந்திராவில் தெலுங்கானா பிரச்னை பரவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியின் ரகசிய அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது, தற்போது தெரிய வந்துள்ளது.”ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தனது அறிக்கையை, சில மாதங்களுக்கு முன், மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த அறிக்கையுடன், இணைப்பாக ஒரு ரகசிய அறிக்கையையும் ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்திருந்தது.

இதில் இடம் பெற்றிருந்த விவரங்கள், இதுவரை வெளியில் தெரியாமல் இருந்தது. அந்த ரகசிய அறிக்கையில், உள்துறை அமைச்சகத்துக்கு, ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டி அளித்த பரிந்துரையில், “ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம், அதிகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஆளும் கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும்.தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தலைவர்களுக்கு, துணை முதல்வர், நிதி அமைச்சர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவி கொடுப்பதன் மூலம், தெலுங்கானா விவகாரத்தை பரவ விடாமல் பார்த்துக் கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தெலுங்கானா போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இத்தனை நாளாக வெளியிடப்படாமல் இருந்த இந்த ரகசிய தகவல், நேற்று முன்தினம் ஆந்திர ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாராயண் ரெட்டி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட போது, இந்த ரகசிய தகவல் பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், ஆந்திராவில் அதிக பரபரப்பு ஏற்படும்.

******************************************************

ஒரு நாட்டைப் பிரித்து தனி நாடாக்குவதும், ஒரு நாட்டிலுள்ள மாநிலங்களை பிரித்து தனி மாநிலமாக உருவாக்குவதோ நிர்வாக வசதிக்காக என்று கரணம் கூறப்படும். ஆனால் நிர்வாக வசதி என்பதன் பொருள் பெரு நிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்கு உட்பட்டதாகத்தான் இருக்கும். பெரிய அளவில் கோரிக்கைகள் எதுவும் எழாத நிலையிலேயே சில மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்படுவதிலும், எவ்வளவு தீவிரமாக போராட்டங்கள் நடத்தினாலும் அந்தக் கோரிக்கைகள் மறுக்கப்படுவதிலும் பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணங்களை சீர்தூக்கிப் பார்த்தாலே இது வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த வகையில் ஹைதராபாத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், கணிணித் தொழில்நுட்ப நிறுவனங்களுமே தெலுங்கானா பிரியவேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதனால் தான் தெலுங்கானா பிரிந்தால் ஏற்படப்போகும் சாதக பாதகங்கலை அலசுவதற்காக அமைக்கப்பட்ட கிருஷ்ணா கமிட்டி, தெலுங்கானா பிரச்சனையை எப்படி அடங்கச் செய்யலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் செயல்பட்டு அறிக்கை தந்திருக்கிறது.