Tag Archives: கிளர்ச்சி

எகிப்தில் மீண்டும் பரவும் மக்கள் போர்

22 நவ்

எகிப்து நாட்டில் ராணுவத்தினருக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. தக்ரீர் சதுக்கத்தில் திரண்டு இருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

30 ஆண்டுகாலம் எகிப்து நாட்டை ஆட்டிப் படைத்து வந்த ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். சுதந்திர சதுக்கத்தில் குழுமி மக்கள் நடத்திய போராட்டத்துக்கு ராணுவமும் மறைமுக ஆதரவு அளித்தது. இதையடுத்து முபாரக் பதவியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 

முறைப்படி தேர்தல் நடத்துவோம் என்று அது கூறிய நிலையிலும், இன்னும் அது ஆட்சி நிர்வாகத்திலிருந்து அகலாமல் உள்ளது.

ராணுவத்திற்கு எதிராக போராட்டம்

இதையடுத்து தற்போது ராணுவம் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிமக்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்தபடி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நடந்து வரும் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. 

போராட்டம் நடத்த திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு போலீஸாரும், ராணுவத்தினரும் உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் அகல மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினார். 

போராட்டக்காரர்கள் அதற்கும் அசையாமல் இருக்கவே பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். கடந்த இரு தினங்களில் மட்டும் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை காணப்படுகிறது.

பரவும் போராட்டம்

வன்முறை மூலம் தங்களை ஒடுக்க போலீஸாரும், ராணுவமும் முயல்வதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன நடந்தாலும் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் மக்களாட்சி மீண்டும் மலரும் வரை போராடப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கூறியுள்ளனர்.

கெய்ரோ தவிர அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கூட போராட்டம் வெடித்துள்ளதால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

**************************************************

சாராம்சத்தில் மக்கள் ஏகாதிபத்தியங்களை எதிர்த்தே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். ஆனால் அந்த கிளர்ச்சியின் பலன்களை அதே ஏகாதிபத்தியங்களும், மதவாதிகளும் அறுவடை செய்து கொள்கிறார்கள். கவர்ச்சிகரமான முழக்கங்கள் மூலம் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகிறார்கள். காரணம் மக்கள் போராட்டங்கள் திசை திருப்பப்படுவதைத் தடுக்கவும், தகுந்த விழிப்புணவுடன் போராட்டங்களை வழிநடர்த்தவும், அதனூடாக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புரட்சிகர கட்சிகள் ஏதும் இல்லாததே. சில மாதங்களிலேயே மீண்டும் மக்கள் திரண்டெழுந்திருப்பதே புரட்சிகர இடதுசாரி கட்சியின் தேவையை உணர்த்துவதாக இருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு,

அரபுலக எழுச்சி: தேவை அரசை மாற்றுவதா? ஆளை மாற்றுவதா?

இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

13 ஆக
“இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை.” – லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள்.
லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொண்டது. வழக்கம் போலவே, “போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக” பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் கிளம்பியது. கும்பல் கும்பலாக கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக ஸ்தாபனங்களை அடித்து நொறுக்கினார்கள். கடைகளை சூறையாடினார்கள். லண்டன் நகரில் மட்டும் நின்று விடாது, பேர்மிங்ஹாம் போன்ற பல நகரங்களுக்கு கலவரத்தீ பரவியது. கலவரத்தில் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர் எல்லோரும் ஈடுபட்டனர். ஏழ்மை மட்டுமே இனவேற்றுமை கடந்து அவர்களை ஒன்று சேர்த்தது. “லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், போலீசுடன் மோதுவதை விட, கொள்ளையடிப்பது இலகுவானது என்று கருதுகிறார்கள் ….” இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஊடகவியலாளர். அவர் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கலவரம் பற்றி தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோர் குறித்து ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. “சமூகவிரோதிகள்!”. “கொள்ளையடிப்பது, திருடுவது சமூகவிரோதிகளின் செயல். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.” என்று அரசு கூறி வருகின்றது. பொதுமக்களில் ஒரு பகுதி இதனை ஆதரிக்கின்றது.
அரசியல் மயப்படுத்தப் படாத மக்கள் எழுச்சி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டன் கலவரம் ஒரு உதாரணம். கலகக்காரரின் அறியாமையை பூர்ஷுவா வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. கலவரத்தில் ஈடுபட்டோர், காப்பரேட் நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பெரும் முதலாளிகளை பாதித்த கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பெரும் வணிக நிறுவனங்களின் காட்சியறைகள் நிறைந்திருக்கும் லண்டன் மத்தி, விரைவிலேயே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆரம்பத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரின் தார்மீகக் கோபம், பெரும் வணிக நிறுவனங்கள் மேல் தான் குவிந்திருந்தது. நாள் தோறும் கண்கவர் விளம்பரங்கள் மூலம், பாவனையாளர்களை சுண்டி இழுக்கும் நிறுவனங்கள், தமது பொருட்களை வாங்குவதற்கு வசதியற்ற மக்கள் இருப்பதை மறந்து விடுகின்றனர். “பணமிருப்பவனுக்கு விற்கிறோம். இல்லாதவன் மூடிக் கொண்டு படுக்க வேண்டியது தானே…” என்று திமிராக பதிலளிப்பார்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, ஒரு ஊடகவியலாளர் எகத்தாளமாக குறிப்பிட்டார்: “முன்பு மக்களிடம் பணம் இருந்தது. கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது கடைகளில் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை.” ஆனால்…. இங்கிலாந்து, “பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத கிழக்கு ஐரோப்பிய நாடு அல்லவே?” பணக்கார மேற்குலகை சேர்ந்த இங்கிலாந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருந்தெல்லாம், கையிலே பணமில்லாமல் வந்து குடியேறும் தற்குறியைக் கூட பணக்காரனாக்கும் நாடல்லவா? அத்தகைய சொர்க்கபுரியில் கலவரமென்றால் நம்பக் கூடியதாகவா இருக்கின்றது? இங்கிலாந்தில் கணிசமான ஏழை மக்கள், சேரிகள் போன்ற குடியிருப்புகளில் விளிம்புநிலையில் வாழ்வதாக கூறினால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். நான் முன்னர் கூறிய படி, ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த அரசியலைப் பேசுவார்கள். உங்களுக்குத் தெரிந்த, இங்கிலாந்தில் வாழும் தமிழ் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். வெள்ளையின வறிய மக்கள் குறித்த பொதுவான கருத்து இவ்வாறு இருக்கும். “இங்கிலாந்தின் வெள்ளையின குடிமக்கள் பலர் உழைத்து வாழ விரும்பாத சோம்பேறிகள். அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், இலவச சலுகைகளை பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்கின்றவர்கள்.”
பூர்வீக ஆங்கிலேயர்களையும், பன்னாட்டுக் குடிவரவாளர்களையும் பிரித்து வைப்பதில், அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்களை நெருங்க முடியாத கலவரக்காரர்கள், தமது பிரதேசத்தில் உள்ள சிறு வணிகர்களின் வியாபார நிலையங்களை தாக்குகின்றனர். அநேகமாக, இங்கிலாந்தின் சிறுவணிகர் குழாம் பன்னாட்டுக் குடியேறிகளைக் கொண்டது. அவர்கள், தமது சமூகத்தினருக்கான பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, நடைபாதையோர பெட்டிக்கடைகள் கூட வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் சிறு வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பேர்மிங்ஹாம் பகுதியில் சீக்கியர்கள் தமது வியாபார நிறுவனங்களையும், குருத்வாராக்களையும் தாமே பாதுகாக்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் பேட், வாள்கள் சகிதம் சீக்கிய தொண்டர் படைகள் காவலுக்கு நிற்கின்றன. இந்த தொண்டர் படை, கலவரக்காரர்களை அண்ட விடாமல் விரட்டி அடிப்பதை, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. “பிரிட்டன் எமது தாயகம். நாங்கள் எங்கள் ஏரியாக்களை பாதுகாக்கிறோம்…” என்று கூறும் சீக்கியரின் “நாட்டுப் பற்றை” ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. 

துருக்கியரும் தமது வியாபார நிறுவனங்களை தாமே பாதுகாக்கின்றனர். “நாங்கள் துருக்கியர்கள். எங்களிடம் வாலாட்ட முடியாது…” என்று தேசியவாதப் பெருமிதத்துடன் கூறுகின்றனர். போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தோரும், கொள்ளையடிக்க வருவோரை தாமே அடித்து விரட்டுகின்றனர். “எங்களுக்கு அடைக்கலமளித்து முன்னேற வைத்த பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்போம்” என்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். நகைக்கடை உட்பட பல தமிழ்க்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. “மத்திய லண்டனையும், பெரிய வணிக நிறுவனங்களையும் பாதுகாக்கும் பொலிஸ், இந்தப்பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை…” என்று குறைப்படுகின்றனர். சீக்கியரைப் போல, துருக்கியரைப் போல, அடியாட்களை வைத்து வர்த்தகத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் தமிழ் சமூகம் உள்ளது. “ரோம் நகரம் பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக…” வரலாறு கூறுகின்றது. லண்டன் நகரம் பற்றியெரியும் பொழுது, தமிழர்கள் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதை, லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

லண்டனில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகள் பெரும்பான்மையாக இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடிவரவாளர்கள் மத்தியிலும் ஏழைகள் பெருகி வருகின்றனர். என்ன வித்தியாசம் என்றால், வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநலக் கொடுப்பனவுகளில் வாழ்வதை தமது உரிமையாக கருதுகின்றனர். மாறாக, குடிவரவாளர்கள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை சம்பளத்தை விட குறைவாக கொடுத்தாலும், தினசரி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டாலும், சலிக்காமல் சம்மதிக்கின்றனர். அநேகமாக அவர்களின் சொந்த இனத்தை சேர்ந்த முதலாளிகள் தான் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். வெள்ளயினத்தவர்களை அவ்வாறு சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை. அரசும், தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாவிட்டால், சமூகநலக் கொடுப்பனவுகளை வழங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் இது அரசின் கடமையாக கருதப்பட்டது. 

சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகம் மாறிவிட்டது. மித மிஞ்சிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், வேலையற்றோரின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரு வருடங்களுக்கு முந்திய பொருளாதார நெருக்கடி, பிரிட்டனை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தாலும், நாட்டில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசின் திட்டங்கள், பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப் படாமையை சுட்டிக் காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் தான், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இனி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தனர். அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் கலகக்குரல்கள், வெளி உலகத்தை எட்டவில்லை. அவர்களும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி, நாசம் விளைவித்திருந்தால், சர்வதேச ஊடகங்களின் கவனம் அங்கே குவிந்திருக்கும்.

பிரிட்டிஷ் அரசின் உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதல் அண்மைய கலவரத்தை தூண்டி விட்டது. இது வரை காலமும், விளிம்பு நிலை மக்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. “சும்மா இருக்க பணம் கிடைப்பதால், மக்கள் வேலைக்கு போக மறுக்கிறார்கள்…” என்று தீவிர வலதுசாரிகள் செய்து வந்த பிரச்சாரத்தை அரசு கொள்கையாக வரித்துக் கொண்டது. முந்தைய சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. (கவனிக்கவும்: சோஷலிச நாடுகளில் மக்களுக்கு சிறந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முதலாளித்துவவாதிகள் இந்த இடத்தில் ஒத்துக் கொள்கின்றனர்.) ஆனால், சோஷலிச நாடுகளில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், வேலை வாய்ப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை. முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எஞ்சியவர்களை “வேலையற்றோர் படையில்” சேர்த்து விடுகின்றனர். வேலையற்றோர் படைக்கு வேதனம் வழங்குவது மட்டுமே அரசின் கடமையாகின்றது.
அரசோ பட்ஜெட்டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படலாம். ஒருவர் முன்பு பொறியியலாளராக வேலை செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். “விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படலாம்…” என்று சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளா விட்டால், உதவித் தொகை நிறுத்தப்படும். இவ்வாறு எத்தனையோ காரணங்களை காட்டி, உதவித் தொகை நிறுத்தப் படுகின்றது. அரசு பணம் கொடுக்கா விட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது? அது அரசின் கவலை அல்ல. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது: “வேலயில்லா விட்டால், பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்.” இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் அதைத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தாங்கள் வறுமையில் வாழ்கையில், இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர். 

இல்லாதவன் இருக்கிறவனிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுக்கிறான். இதிலே வேதனை என்னவென்றால், தமது எதிரி யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் கொள்ளையடிக்கின்றனர். சிறு வணிகர்கள் தாக்கப்படுவதும் இவ்வாறு தான். சில இடங்களில் சாதாரண உழைக்கும் மக்களின் வீடுகளில் கூட திருடி இருக்கிறார்கள். அவர்களின் கார்களை கொளுத்தி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் கூட எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு பெற்றோர், சரியான இலக்குகளை காண்பிப்பது அவசியம். அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் எதிரிக்கே சாதகமாக அமைந்து விடுகின்றது. உழைக்கும் மக்களை கூறு போட வழி வகுத்து விடுகின்றது. சில நேரம், உழைக்கும் வர்க்கத்தை இனரீதியாக பிரித்து வைக்கவும், அரசியலற்ற அராஜக செயல்கள் உதவுகின்றன.

பிரித்தானியாவின் இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? தனது வீட்டின், கடையின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசு கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள். இடதுசாரிகள் தமது எதிர்ப்பியக்கத்தை வளர்க்காமல், பிற சக்திகளின் போராட்டங்களின் நிழலில் தங்கியிருந்த தவறை உணர்கின்றனர். உதாரணத்திற்கு, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும், தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர். வர்க்கப்போராட்டத்திற்கு முற்றிலும் மாறான கொள்கைகளைக் கொண்ட இது போன்ற சக்திகளின் போராட்டம், எந்தளவு இடதுசாரிகளுக்கு உதவியுள்ளது? ஏகாதிபத்தியத்தின் பலமும் குறையவில்லை. இடதுசாரிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கவில்லை.
இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரம், பிற நாடுகளிலும் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது முழுவதும் பாட்டாளி மக்களின் எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். அதனை சரியாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய சிறுவணிகர்களின் வியாபாரங்களை பொலிஸ் பாதுகாக்க தவறியதும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். வெளிநாட்டு குடிவரவாளர்களின் நிறுவனங்களை தானே கொள்ளையடிக்கிறார்கள், என்று அலட்சிய மனப்பான்மை ஒரு காரணம். அவர்கள் தமது வியாபாரத்தை பாதுகாப்பது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தால், சூறையாட வருவோர் அவர்களையும் தாக்குவார்கள். (அவ்வாறான சம்பவம் ஒன்றில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.) பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வெள்ளையின ஏழைகளின் கோபம், வெளிநாட்டவர் மீதும் திரும்பலாம். இது ஏற்கனவே வெள்ளையின உதிரிப்பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளின் கரத்தை பலப்படுத்தும். அதைத் தான் அரசும் எதிர்பார்க்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், பல்வேறு இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைப்பதும், இடதுசாரிகள் முன்னால் உள்ள இமாலயப் பணியாகும்.
முதல் பதிவு: கலையகம்

மீண்டும் சௌதியில் சலுகைகள், உரிமைகளுக்கான மக்கள் போராட்டம் என்னானது?

19 மார்ச்

நேற்று (18/03/2011 வெள்ளி) சௌதியின் மன்னர் அப்துல்லா, சௌதி மக்களுக்கு 500 பில்லியன் ரியால் அளவுக்கு சலுகைகளை, திட்டங்களை அறிவித்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் சலுகைகளையும் மானியங்களையும் அள்ளிவீசும் அளவிற்கு அரசை தங்களின் சிறு அசைவின் மூலம் தள்ளியிருக்கிறார்கள் மக்கள். இதுவரை சௌதியில் ஆங்காங்கே நடந்த கிளர்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் துப்பாக்கி ரவைகளையும், கவச வாகனங்களையும் காட்டிய சௌதி அரசு இப்போது சலுகைகளை காட்டியிருக்கிறது என்பதே சௌதி மக்கள் இனியும் அமைதியாக இருப்பார்களா எனும் ஐயம் ஆள்பவர்களுக்கு தோன்றியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேநேரம் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக காட்டிக்கொண்டே அவர்களை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்திய தந்திரங்கள் தான் இவைகளில் தொழிற்படுகிறது. அறிவிக்கப்பட்ட 500 பில்லியன் திட்டங்களை உற்று நோக்கினாலே இதைக் கண்டுகொள்ள முடியும். 5 லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்காக 250 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பில்லியன் மருத்துவமனைகள் கட்டுவதற்கு. வீடு கட்டுவதற்கான கடன் 3 லட்சம் ரியாலிலிருந்து 5 லட்சம் ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட சலுகைகளில் பாதிக்கு மேலாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான இந்த அம்சங்களை மறைப்பதற்காக, சௌதி அரசு பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பன போன்ற இனிப்புகள் தடவப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலைவசதி வேண்டும் என்று காலம் காலமாக போராடிய கிராமப்புற மக்களுக்கு காவல்துறை மூலம் குண்டாந்தடி பரிசு வழங்கிய மத்திய மாநில அரசுகள், திடீரென உள்கட்டுமானத்தை பெருக்குகிறோம் என்ற பெயரில் கிராமங்களை வழவழப்பான சாலைகளால் இணைத்தன. கிராம மக்களின் நலன்களுக்காக செய்ததாக பிரச்சாரம் செய்தன. ஆனால், தானியக் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை தங்களின் தங்களின் கிடங்குகளுக்கு கொண்டு செல்வ‌தற்காக தனியார் நிறுவனங்களுக்காக சாலை வசதிகளை ஏற்படுத்தித்தந்தன என்பது தான் மெய்யான காரணம்.

அது போலவே, கடந்த உலக பொருளாதார நெருக்கடியில், அரபுலகின் நாடுகளில் திவால் நிலைக்கு செல்லுமளவுக்கு பொருளாதாரம் தள்ளாட ஓரளவுக்கு சமாளித்து நின்றது சௌதியின் பொருளாதாரம் மட்டுமே. காரணம் எமிரேட்டுகளைப்போல சௌதியின் பொருளாதாரம் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில்களையே சார்ந்து நிற்காதது தான். ஆனால், அதன்பிறகு பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சௌதியில் காலூன்றத் துடித்தன. இப்போது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. மத ரீதியான வரலாற்று தலங்களான மக்கா, மதீனா உட்பட சௌதியில் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றன.

முகம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாற்றப்பட்டதை கண்டித்தும், கதீஜாவின் வீடு கழிப்பிடமாக மாற்றப்பட்டதை எதிர்த்தும், அப்ரஜ் அல் பைத் கோபுரம் (மக்கவின் கடிகார கட்டிடம்) வெளிநாட்டு உதவியுடன் கட்டப்பட்டதற்கும், மக்காவின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சீனாவிலிருந்து முஸ்லீமல்லாத நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கிளம்பிவரும் எதிர்ப்பை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் வீட்டுக் கடன்கள் உயர்த்தப்பட்டிருப்பதையும், கட்டுமான திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதையும் புரிந்து கொள்ள முடியும். ஆக மக்களுக்கு வழங்குவது போல் போக்கு காட்டிவிட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் போகின்றன. தெளிவாகச் சொன்னால் மக்களை போராடத்தூண்டும் புறக்காரணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் (11/03/2011 வெள்ளி) மக்கள் பொது இடங்களில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்தி பரவியது. சிறிய அளவில் நடந்த சில நிகழ்வுகளைத் தவிர பெரிதாக எதுவும் நிகழவில்லை. ஆனால் குறித்த நாளுக்கு முன்னதாகவே சௌதி அரசு, முன்னணியில் செயல்படப்போகும் பலரை உளவறிந்து ரகசியமாக கைது செய்து விட்டிருக்கிறது. அந்தவகையில் சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர வேறொன்றும் நிகழாதவாறு சௌதி அரசு வெற்றிகரமாய் நிலமையை சமாளித்திருக்கிறது. ஆனால் இவைகளை எதிர்காலத்திலும் அப்படியே சௌதி அரசால் கையாண்டுவிட முடியாது. நஜ்ரான் பகுதிகளில் முன்பொருமுறை தோன்றிய கம்யூனிச இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதைப் போல் இனியும் சௌதி அரசு செய்து விட முடியாது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

எகிப்து, பஹ்ரைன் வழியில் கிளர்ந்தெழத் தயாராகும் சௌதி அரேபியா

10 மார்ச்


தொடர்ந்து அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். துனீசியாவிலும், எகிப்திலும் ஆட்சியாளர்கள் தூக்கியெறிப்பட்ட நிலையில்; பஹ்ரைனில் சமரசத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்; லிபியாவில் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில்; சௌதி அரேபியா குமுறிக்கொண்டிருக்கிறது.

நாளை 11/03/2011 வெள்ளியன்று பொது இடங்களில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கிளர்ச்சியாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். நிர்வாகத் தலைநகர் ரியாத்திலும், வர்த்தகத் தலைநகர் ஜித்தாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின் கூடப் போவதாக த்கவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே ஓரிரு நாட்களுக்கு முன் சௌதியின் மூன்றாவது பெரிய நகரான தம்மாமில் ஷியா பிரிவைச் சேர்ந்த இளஞர்கள்

“எகிப்து, துனீசியாவிலுருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் ஆட்சியாளர்களே”

எனும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கும் அதிகமானோர் இதில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

செய்தி ஊடகங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசு, கிளர்ச்சியாளர்கள் குறித்த எந்த தகவலும் வெளியில் பரவிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சௌதி அரேபியாவில் போராட்டங்களுக்கோ, கிளர்ச்சிகளுக்கோ அனுமதி இல்லை. மட்டுமல்லாது இஸ்லாத்திலும் அவ்வாறு போராடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்படி ஏதாகிலும் நடந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேசிய பாதுகாப்புப் படைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக சௌதியின் உள்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, சில பெரிய நிறுவங்கள் ‘நாளை தேவையின்றி வெளியில் செல்லவேண்டாம்’ என காரணம் எதுவும் குறிப்பிடாமல் தமது ஊழியர்களை அறிவுறுத்தியிருக்கின்றன. இதனால் நாளை தொலைபேசிகள், செல்லிடப் பேசிகள் இயங்காது என்றும், இணைய இணைப்பு இருக்காது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. ஏனைய அரபு நாடுகளைப்போல டுவிட்டர், ஃபேஸ்புக் களில் தொடர் தகவல் வருவதாகவும் விசாரித்தவரை தகவல் கிடைக்கவில்லை. அதே நேரம் இந்தியாவில் ஹைதராபாத் நகரிலிருந்து வெளிவரும் எதேமாத் நாளிதழ் மட்டும் இது குறித்த குருஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனாலும் சௌதி வழக்கம் போல இயங்கி வருகிறது. ஆங்காங்கே சில சீருடைக் காவலர்கள் தென்படுவதைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. எதிர்பார்ப்போம், நாளை என்ன நடக்கிறதென்று?

கடையநல்லூர் நண்பர்களே!

சௌதி அரேபியாவைப் பொருத்தவரை சின்னஞ்சிறு கிராமங்கள் உட்பட கடையநல்லூர்காரர்கள் இல்லாத இடமில்லை எனும் அளவிற்கு அவர்கள் பரவியுள்ளார்கள். எனவே இது குறித்து உங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் தயங்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். டுவிட்டர், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் செய்திகளை ‘#saudirevolution,kdnl#‘ எனும் குறியீட்டுடன் இணைத்து டுவிட்டினால் தேடிக் கண்டுபிடிப்பதற்கு எளிதாக இருக்கும்.

எனதருமை கடையநல்லூர் நண்பர்களே,

போராட்டம் நடைபெற்றால் தயங்காமல் போராட்டக்காரர்களுக்கு உதவுங்கள். தண்ணீர் கொடுப்பது உட்பட எந்தவிதத்தில் முடியுமோ அந்த விதத்தில் உதவுங்கள், உங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள்.