Tag Archives: சௌதி

மீண்டும் சௌதியில் சலுகைகள், உரிமைகளுக்கான மக்கள் போராட்டம் என்னானது?

19 மார்ச்

நேற்று (18/03/2011 வெள்ளி) சௌதியின் மன்னர் அப்துல்லா, சௌதி மக்களுக்கு 500 பில்லியன் ரியால் அளவுக்கு சலுகைகளை, திட்டங்களை அறிவித்திருக்கிறார். சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் சலுகைகளையும் மானியங்களையும் அள்ளிவீசும் அளவிற்கு அரசை தங்களின் சிறு அசைவின் மூலம் தள்ளியிருக்கிறார்கள் மக்கள். இதுவரை சௌதியில் ஆங்காங்கே நடந்த கிளர்ச்சிகளுக்கும், போராட்டங்களுக்கும் துப்பாக்கி ரவைகளையும், கவச வாகனங்களையும் காட்டிய சௌதி அரசு இப்போது சலுகைகளை காட்டியிருக்கிறது என்பதே சௌதி மக்கள் இனியும் அமைதியாக இருப்பார்களா எனும் ஐயம் ஆள்பவர்களுக்கு தோன்றியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அதேநேரம் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதாக காட்டிக்கொண்டே அவர்களை ஒட்டச் சுரண்டும் ஏகாதிபத்திய தந்திரங்கள் தான் இவைகளில் தொழிற்படுகிறது. அறிவிக்கப்பட்ட 500 பில்லியன் திட்டங்களை உற்று நோக்கினாலே இதைக் கண்டுகொள்ள முடியும். 5 லட்சம் வீடுகள் கட்டித்தருவதற்காக 250 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 16 பில்லியன் மருத்துவமனைகள் கட்டுவதற்கு. வீடு கட்டுவதற்கான கடன் 3 லட்சம் ரியாலிலிருந்து 5 லட்சம் ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட சலுகைகளில் பாதிக்கு மேலாக ரியல் எஸ்டேட் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான இந்த அம்சங்களை மறைப்பதற்காக, சௌதி அரசு பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பன போன்ற இனிப்புகள் தடவப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலைவசதி வேண்டும் என்று காலம் காலமாக போராடிய கிராமப்புற மக்களுக்கு காவல்துறை மூலம் குண்டாந்தடி பரிசு வழங்கிய மத்திய மாநில அரசுகள், திடீரென உள்கட்டுமானத்தை பெருக்குகிறோம் என்ற பெயரில் கிராமங்களை வழவழப்பான சாலைகளால் இணைத்தன. கிராம மக்களின் நலன்களுக்காக செய்ததாக பிரச்சாரம் செய்தன. ஆனால், தானியக் கொள்முதலை தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, கொள்முதல் செய்த தானியங்களை தங்களின் தங்களின் கிடங்குகளுக்கு கொண்டு செல்வ‌தற்காக தனியார் நிறுவனங்களுக்காக சாலை வசதிகளை ஏற்படுத்தித்தந்தன என்பது தான் மெய்யான காரணம்.

அது போலவே, கடந்த உலக பொருளாதார நெருக்கடியில், அரபுலகின் நாடுகளில் திவால் நிலைக்கு செல்லுமளவுக்கு பொருளாதாரம் தள்ளாட ஓரளவுக்கு சமாளித்து நின்றது சௌதியின் பொருளாதாரம் மட்டுமே. காரணம் எமிரேட்டுகளைப்போல சௌதியின் பொருளாதாரம் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் தொழில்களையே சார்ந்து நிற்காதது தான். ஆனால், அதன்பிறகு பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சௌதியில் காலூன்றத் துடித்தன. இப்போது அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. மத ரீதியான வரலாற்று தலங்களான மக்கா, மதீனா உட்பட சௌதியில் பல பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கின்றன.

முகம்மது நபி பிறந்த வீடு நூலகமாக மாற்றப்பட்டதை கண்டித்தும், கதீஜாவின் வீடு கழிப்பிடமாக மாற்றப்பட்டதை எதிர்த்தும், அப்ரஜ் அல் பைத் கோபுரம் (மக்கவின் கடிகார கட்டிடம்) வெளிநாட்டு உதவியுடன் கட்டப்பட்டதற்கும், மக்காவின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சீனாவிலிருந்து முஸ்லீமல்லாத நிறுவனங்களை ஒப்பந்தம் செய்ததற்கும் எதிர்ப்புத் தெரிவித்து கிளம்பிவரும் எதிர்ப்பை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் வீட்டுக் கடன்கள் உயர்த்தப்பட்டிருப்பதையும், கட்டுமான திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படுவதையும் புரிந்து கொள்ள முடியும். ஆக மக்களுக்கு வழங்குவது போல் போக்கு காட்டிவிட்டு பகாசுர நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் போகின்றன. தெளிவாகச் சொன்னால் மக்களை போராடத்தூண்டும் புறக்காரணிகள் தீவிரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் (11/03/2011 வெள்ளி) மக்கள் பொது இடங்களில் கூடி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக செய்தி பரவியது. சிறிய அளவில் நடந்த சில நிகழ்வுகளைத் தவிர பெரிதாக எதுவும் நிகழவில்லை. ஆனால் குறித்த நாளுக்கு முன்னதாகவே சௌதி அரசு, முன்னணியில் செயல்படப்போகும் பலரை உளவறிந்து ரகசியமாக கைது செய்து விட்டிருக்கிறது. அந்தவகையில் சிறு சிறு எதிர்ப்புகளைத் தவிர வேறொன்றும் நிகழாதவாறு சௌதி அரசு வெற்றிகரமாய் நிலமையை சமாளித்திருக்கிறது. ஆனால் இவைகளை எதிர்காலத்திலும் அப்படியே சௌதி அரசால் கையாண்டுவிட முடியாது. நஜ்ரான் பகுதிகளில் முன்பொருமுறை தோன்றிய கம்யூனிச இயக்கத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கியதைப் போல் இனியும் சௌதி அரசு செய்து விட முடியாது என்பதையே இந்நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

எகிப்து, பஹ்ரைன் வழியில் கிளர்ந்தெழத் தயாராகும் சௌதி அரேபியா

10 மார்ச்


தொடர்ந்து அரபு நாடுகளில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். துனீசியாவிலும், எகிப்திலும் ஆட்சியாளர்கள் தூக்கியெறிப்பட்ட நிலையில்; பஹ்ரைனில் சமரசத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில்; லிபியாவில் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில்; சௌதி அரேபியா குமுறிக்கொண்டிருக்கிறது.

நாளை 11/03/2011 வெள்ளியன்று பொது இடங்களில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று கிளர்ச்சியாளர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். நிர்வாகத் தலைநகர் ரியாத்திலும், வர்த்தகத் தலைநகர் ஜித்தாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின் கூடப் போவதாக த்கவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே ஓரிரு நாட்களுக்கு முன் சௌதியின் மூன்றாவது பெரிய நகரான தம்மாமில் ஷியா பிரிவைச் சேர்ந்த இளஞர்கள்

“எகிப்து, துனீசியாவிலுருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் ஆட்சியாளர்களே”

எனும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்றுக்கும் அதிகமானோர் இதில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

செய்தி ஊடகங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசு, கிளர்ச்சியாளர்கள் குறித்த எந்த தகவலும் வெளியில் பரவிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சௌதி அரேபியாவில் போராட்டங்களுக்கோ, கிளர்ச்சிகளுக்கோ அனுமதி இல்லை. மட்டுமல்லாது இஸ்லாத்திலும் அவ்வாறு போராடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்படி ஏதாகிலும் நடந்தால் அதைக் கட்டுப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேசிய பாதுகாப்புப் படைக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக சௌதியின் உள்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, சில பெரிய நிறுவங்கள் ‘நாளை தேவையின்றி வெளியில் செல்லவேண்டாம்’ என காரணம் எதுவும் குறிப்பிடாமல் தமது ஊழியர்களை அறிவுறுத்தியிருக்கின்றன. இதனால் நாளை தொலைபேசிகள், செல்லிடப் பேசிகள் இயங்காது என்றும், இணைய இணைப்பு இருக்காது என்றும் வதந்திகள் பரவி வருகின்றன. ஏனைய அரபு நாடுகளைப்போல டுவிட்டர், ஃபேஸ்புக் களில் தொடர் தகவல் வருவதாகவும் விசாரித்தவரை தகவல் கிடைக்கவில்லை. அதே நேரம் இந்தியாவில் ஹைதராபாத் நகரிலிருந்து வெளிவரும் எதேமாத் நாளிதழ் மட்டும் இது குறித்த குருஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆனாலும் சௌதி வழக்கம் போல இயங்கி வருகிறது. ஆங்காங்கே சில சீருடைக் காவலர்கள் தென்படுவதைத் தவிர பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. எதிர்பார்ப்போம், நாளை என்ன நடக்கிறதென்று?

கடையநல்லூர் நண்பர்களே!

சௌதி அரேபியாவைப் பொருத்தவரை சின்னஞ்சிறு கிராமங்கள் உட்பட கடையநல்லூர்காரர்கள் இல்லாத இடமில்லை எனும் அளவிற்கு அவர்கள் பரவியுள்ளார்கள். எனவே இது குறித்து உங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் தயங்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். டுவிட்டர், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் செய்திகளை ‘#saudirevolution,kdnl#‘ எனும் குறியீட்டுடன் இணைத்து டுவிட்டினால் தேடிக் கண்டுபிடிப்பதற்கு எளிதாக இருக்கும்.

எனதருமை கடையநல்லூர் நண்பர்களே,

போராட்டம் நடைபெற்றால் தயங்காமல் போராட்டக்காரர்களுக்கு உதவுங்கள். தண்ணீர் கொடுப்பது உட்பட எந்தவிதத்தில் முடியுமோ அந்த விதத்தில் உதவுங்கள், உங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யுங்கள்.

சவுதியின் சலுகைகள் பயத்தின் வெளிப்பாடுகள்

24 பிப்

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். உடல் நலம் குன்றியிருந்து மன்னர் மொராக்கோவில் சிகிச்சை பெற்ற பின்னர் இன்று (23.02.2011) சவுதி திரும்பினார்.

நாடு திரும்பியதும் அவர் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தில் 15 சதவிகிதம் உயர்வு வழங்குவதாக அறிவித்தார். இது தவிர வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவி, வேலையில்லாமல் இருக்கும் சவுதி பிரஜைகளுக்கு உதவித் தொகை, கடன் வாங்கி செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்களின் கடனை அரசு வழங்கும் என பல சலுகைகளை அளித்துள்ளார். இவ்வாறு ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உதவித் திட்டங்களை அப்துல்லா அறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் பொருளாதார நெருக்கடியால் ஆளுகின்ற அரசுக்கெதிராக கிளர்ந்தெழுவது தொடர்ந்து நடைபெற்று வருகையில் சவுதி மன்னரின் இந்த அறிவிப்பு மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியாக தெரிகிறது.

**************************************************

அரபு நாடுகள் என்றில்லாமல் கிட்டத்தட்ட சௌதியின் தொங்குசதை நாடான பஹ்ரைனில் கூட மக்கள் எழுச்சியடைந்திருப்பது சவுதி ஆளும் வர்க்கத்திற்கு கிலியைத் தரும் ஒன்றுதான். ஏற்கனவே நஜ்ரான், ஜிசான் போன்ற எல்லையோரப் பகுதிகளில் பதட்டம் அதிகரித்து பலரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதன் மறுபக்கமாகவே புதிய சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்படுகிறது. மக்கள் விழிப்புணர்வடைந்து விட்டால் இதுபோன்ற பிச்சைத்திட்டங்கள் எடுபடாது என்பது கடைசிவரை ஆளும் வர்க்கத்திற்கு விளங்குவதில்லை.

சௌதியில் போராடத் தயாராகும் பெண்கள்

6 பிப்

சவுதி அரேபியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையிருந்த போதிலும் மத்திய ரியாதிலுள்ள சவுதி உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னால் சனிக்கிழமை அணிதிரண்ட பெண்கள் எவ்வித விசாரணையுமின்றி பல வருடங்களாக சிறையில் வாடும் தமது உறவினர்களை விடுவிக்குமாறு சவுதி அரசை கோரியிருக்கின்றனர். ஏஎப்பி செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

இஸ்லாமிய மதத்சட்டதின் போர்வையில் மனித உரிமையை மிக மோசமாக மீறும் நாடான சவுதியில் மன்னர்களுக்கும், அமெரிக்காவிற்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் தள்ளப்படுகின்றனர்.

மனித உரிமை அமைப்பான Human Rights Watch  தனது வருடாந்த அறிக்கையில்  சவுதியில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏகாதிபத்தித்தின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் சவுதி அரசு, கடந்த காலங்களில் அமெரிக்காவோடு இணைந்து ஜிஹாத் போராட்டம் என்ற ரீதியில் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் ஆயதப்போராட்டங்களை உருவாக்கியது. இதில் ஆப்கான், செச்னியா, பொஸ்னியா, காஷ்மீர் போன்ற நாடுகளின் போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.

இஸ்லாம் விரும்பாத பாதக செயல்களில் ஈடுபடும் அல்கைதா, தாலிபான்  போன்ற அமைப்புகள்  நூற்றுக்கு நூறு சவுதியும், சீஐஏ யும் இணைந்து பிரசவித்தவையாகும்.

இன்று சவுதி மக்கள் மன்னர்களின் இந்த இஸ்லாத்திற்கு முரணான செயற்பாட்டை உணர்ந்து வருகின்றார்கள் என்பதையே இந்தப் பெண்களின் பேரணி உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் !
அடுத்த
புரட்சியின் கைகள்
தட்டும் கதவு
உன்னுடையதாக இருக்கலாம்!
புறப்பட தயாராய் இரு!

நன்றி: பத்ர் களம்

************************************************

சௌதியை எண்ணெய் வளம் கொழிக்கும் பணக்கார நாடாக அறிந்திருப்பவர்களுக்கு, அங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கலாம். பெண்கள் 1800 ரியால் சம்பளத்திற்கு துப்புறவு பணியை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். சாலையோரங்களில் தற்காலிக கடைகளைப் போட்டு கடலை வறுத்து விற்பனை செய்வது போன்ற வேலைகளை ஆண்கள் செய்யும் காட்சியும் எளிதாகவே காணக்கூடியதாக இருக்கிறது. 9இதுவரை இது போன்ற வேலைகளை வெளிப்படையாக செய்ய வேண்டிய அவசியமின்றி சௌதி அரசு அளித்துவந்த மானியங்கள் படிப்படியாக வெட்டப்பட்டு வருகின்றன. அதேநேரம் முன்பைவிட அதிக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வேலையில்லாத் திண்டாட்டமே அங்கு ஒருவித போராட்ட மனப்பான்மையை தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது.

முன்னொருமுறை நஜ்ரான் பகுதியில் தோன்றிய சௌதி கம்யூனிஸ்ட் கட்சியை சௌதி அரசு எளிதில் நசுக்கி விட்டது. இனியொரு முறை சௌதி அரசால் எளிதில் இல்லாமல் போகச் செய்துவிடமுடியாது என்பதையே, இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ரியாத் வீதியில் உலாவந்த வேங்கை

6 ஜன

உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று வேங்கை(சிறுத்தைப் புலி)யொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் அளிக்க, விரைந்து வந்தது காவல்துறை, அந்த வேங்கையை சுட்டு வீழ்த்தியது. அதன்பின் பொதுமக்கள், சிறுத்தைப் புலி வீழ்த்தப்பட்ட செய்தி அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அந்த வேங்கையை அருகிலிருந்து கண்ட ஒரு வங்காளத் தொழிலாளி அளித்த தகவல்படி அவருடைய குடியிருப்புக்கு அருகில் தான் அந்தச் சிறுத்தை வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அந்த வீட்டில் மேலும் இரு குட்டிச்சிறுத்தைகள் அங்கே விளையாடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை வீழ்த்தப்பட்ட தகவலறிந்ததும் விரைந்து வந்த அதன் உரிமையாளர் அந்தப் ‘பூனைகளின் பெரியண்ணனை’ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறாராம்.

********************************************

சௌதி மேட்டுக்குடிகளின் வீட்டில் வன விலங்குகளையும், அரிய வகை பறவைகள், குரங்குகள் எனப் பலவும் செல்ல விலங்குகளாக வள‌ர்க்கப்படுகின்றன. இவைகளைப் பராமரிக்கவும் தனித்தனியாக பணியாளர்கள் உண்டு. மதரீதியாக தடை செய்யப்பட்ட விலங்கு என்பதால் பன்றிக்கு மட்டும் அங்கு இடமில்லை. வனவிலங்குகளை வீட்டில் வளர்க்கலாமா? என்றெல்லாம் யோசிக்கத்தேவையில்லை. ஏனென்றால் அது குறித்து சட்டம் எதுவுமில்லை. லட்சக்கணக்கான ரியால் செலவில் இறக்குமதி செய்யப்படும் விலங்குகள், மாத பராமரிப்புக்கு பல ஆயிரம் ரியால்களை கோரும் இந்த விலங்குகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன என்றால்…….? ஆம். சௌதியில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் பின்ன‌ணியில், இந்தச் செய்தியில் கவனிக்கப்படத்தக்கது அது மட்டும்தான்.

வருத்தம் தெரிவித்தால் உயிர் மீளுமா? தூதரகங்களின் அலட்சியம்

10 அக்

பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

*************************************************************

வளைகுடா நாடுகளில் தூதரக அலுவலர்களின், தூதர்களின் பணி கேளிக்கை கூடல்களில் கலந்துகொண்டு திளைப்பதும், பொழுதுபோக்குவதும்தான். லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வளைகுடாவில் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கான பிரச்சனை குறித்தோ, அவர்களுக்கான உதவிகள் குறித்தோ கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. நியூசிலாந்து நாட்டு தொலைக்காட்சி ஷீலாவை விமர்சித்ததற்காக எகிரிக்குதிக்கும் இந்திய அரசு தன்னுடைய தூதரக அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு உயிர் பரிக்கப்பட்டதற்கு என்ன செய்யப் போகிறார்கள்.

வளைகுடாவில் இந்தியர்களின் நிலையை படம்பிடித்துக்காட்டும் கட்டுரைகள்

வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள்

சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?

27 செப்

சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் உளக்கிடக்கையோடு மோதும் பரிசீலனையை கோருவதால் மக்களும் கூட இதுபோன்ற செய்திகளின் கணபரிமாணங்களை நிறுத்துப்பார்க்க விரும்புவதில்லை.

“லிபியாவில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் 80 தமிழர்கள்” இது நேற்று வந்த செய்தி. நேற்றோ இன்றோ மட்டுமல்ல இதுபோன்ற செய்திகள் அடிக்கடி வந்து யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் கரைந்து போய்விடுகின்றன. இதிலிருந்து தப்பி வந்த இளையான்குடியைச் சேர்ந்த ஒருவர் இதை விவரிக்கிறார், “மதுரையில் வில்லியம்ஸ் டிராவல்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. அது லிபியாவில் தங்கும் வசதியுடன் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி அந்த வேலையை எப்படியாவது வாங்கிட வேண்டுமென்று அந்த நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் கொடுத்தேன். அவர்களும் சொன்னபடி என்னை லிபியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்று அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. எனக்கு தோட்ட வேலை கொடுத்தனர். இவ்வளவு பணம் கொடுத்து வந்துவிட்டோம் என்ன செய்வது என்று நான் அந்த வேலையைச் செய்தேன். அதிக சம்பளம் என்று சொன்னார்கள் அல்லவா. ஆனால் அங்கு இது நாள் வரை சம்பளமே கொடுக்கவில்லை. என்னைப் போன்று ஏமாந்த சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை , விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் 80 பேர் உள்ளனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சம்பளத்தைக் கேட்டதற்கு எங்களை கட்டிடத்தில் வைத்து பூட்டி வைத்தனர். அங்கிருந்து ஒரு வகையாக தப்பித்து இளையான்குடியில் இருக்கும் என் உறவினர்கள் உதவியால் இந்தியாவுக்கு வந்தேன். அங்கு ஆதரவின்றி அவதிப்படும் தமிழர்களை மீட்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறேன். அவரும் உடனடியாக நடவடிக்கை  எடுப்பதாகக் கூறினார்” மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பு எழுதி முன்நக‌ர்த்தலாம் அல்லது தன்னுடைய பணியில்(!) மூழ்கி மறந்துபோகலாம். நடவடிக்கை கோரிய தப்பிவந்த அந்த இளைஞரேகூட காலத்தின் சக்கரங்களுக்கிடையில் தன்னுடைய கோரிக்கையை நினைவுபடுத்த இயலாமல் போகலாம். ஆனால் புதிது புதிதாய் ஆயிரக்கணக்கான இளஞர்கள் இதுபோன்ற செய்திகளை உருவாக்க மஞ்சள் பையில் பணத்துடன் உள்ளடங்கிய கிராமங்களிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றனர்.

நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருந்த விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழில்களையும் உலகமயமாக்கலின் விளைவாக அரசு புற‌க்கணிக்கத் தொடங்கிய 80களின் பிற்பகுதிக்குப் பிறகு, இனியும் விவசாயம் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இருக்கப்போவதில்லை என்பது விவசாயிகளுக்குப் புரியத் தொடங்கியது. நிலங்களில் விளைவிப்பது கடினமாகியது, விளைவித்தாலும் அதற்குறிய விலைகிடைப்பது அதனிலும் கடினமாகியது. நிலம் வைத்திருந்தவர்கள் வந்த விலைக்கு விற்றுவிட்டு மாற்றுத்தொழிலில் முடங்கினார்கள், விவசாயக் கூலிகளோ முதலில் தொழில் நகரங்களுக்கும், பின்னர் வெளிநாடுகளுக்கும் நவீன கொத்தடிமைகளாய் தங்களை மாற்றிக்கொண்டனர். வெளிநாடுகளில் என்னவிதமான சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் தங்களை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு வாங்கிவந்த பெரும்கடன் அவர்களுக்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்துகொண்ட தரகர்கள், தெரிந்தே, துணிந்தே போலியான விசாக்களிலும், பொய்யான வாக்குறுதிகளிலும் அனுப்பிவைத்துப் பணம் கறந்துவிடுகின்றனர்.

வெளிநாடு செல்லுமுன் விசாரித்துக்கொள்ளவேண்டாமா? பணத்தைக் கட்டுமுன் உரிமம் பெற்ற முகவர்தானா? முறையான ஆவணங்கள் தானா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டாமா? அளவுக்கு விஞ்சிய பேராசையினால்தான் ஏமாந்துபோகிறார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்கள் அவர்களின் நடப்புச் சூழலை கருத்தில் கொள்வதில்லை. அடுத்த நாளை எப்படிக் கடப்பது எனும் சுழலில் சிக்கியிருப்பவர்களின் சஞ்சலங்கள் எதிர்காலம் குறித்த அச்சமில்லாமல் இருப்பவர்களுக்குப் புரிவதில்லை. கடன் சுமை, கடமைகள் என தத்தளிப்பவர்கள் பொய்யாக என்றாலும் சிறு நம்பிக்கை காட்டினாலும் பற்றிக் கொண்டுவிடுகிறார்கள். இதில் அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும், சீர்தூக்கிப் பார்க்கவியலா நிலையில் அவர்களைத் தள்ளியிருக்கும் அரசு தான், அவர்களின் நிலைக்கு அவர்களைவிட பெரிய குற்றவாளி.

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது எந்த ஒரு அரசுக்கும் பெரும் கவலையளிக்ககூடிய, மிகுங்கவனம் தேவைப்படக்கூடிய ஒன்று. வேலையில்லா நிலையை அரசுதான் தன் செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்துகிறது என்பது ஒருபுறமிருந்தாலும், அந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்கேனும் சமாளிக்கக்கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அரசு தானே செய்யலாம் அல்லது முறைப்படுத்தலாம். நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலேயே தயங்காமல் தனியார்மயத்தைப் புகுத்துவதில் ஈடுபடும் அரசு இதுபோன்றவற்றைச் செய்யும் என்று பொய்யாகவேனும் நம்பமுடியுமா?

மக்களின் வாழ்வாதாரங்களை குலைப்பதன்மூலம் அவர்களை வறுமையில் தள்ளுவதும் அரசு, அவர்களின் வறுமைக்காப்பு நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவர்கள் ஏமாந்துபோவதற்கான வழிமுறைகளை அடைக்காமலிருப்பதும் அரசு, அதன்பிறகும் மீட்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதும் அரசு. எல்லாமுனைகளிலும் உழைக்கும் மக்களை வதைக்கும் அரசை விட்டுவிட்டு; ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ எனும் நிலையிலிருக்கும் தனிப்பட்ட மனிதனை அவன் கவனமாக இல்லாததால் நேர்ந்தது இது எனக்குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் சரியாகும்?

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரின் ஷரஃபியா பாலத்தின் அடியில் சம்பளமின்றி ஊர் திரும்ப வழியுமின்றி மாதக்கணக்காக சில இந்தியர்கள் பரிதவித்துக்கிடந்தார்கள். எந்தத் தூதரக அதிகாரிகளும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அண்மையில் சௌதி வந்த மன்மோகன் சிங் அனேக மனமகிழ் மன்றங்களில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தினார். ஆனால் மறந்தும் கூட சௌதியில் வதைபடும் தொழிலாளர்கள் நிலை குறித்து ஒரு வார்த்தையும் பேசினாரில்லை. ஆஸ்திரேலிய தாக்குதலுக்கு பிரதமர் தொடங்கி வெளியுறவு அமைச்சர்வரை கண்டனம் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் கைதாகும் குற்றவாளிகளுக்குக் கூட அரசின் சார்பில் பரிந்துபேச ஆளிருக்கிறது. மேற்குலகில் வாழும் சில ஆயிரம் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு என்ன செய்யலாம் என யோசிக்கும் அரசு (வாக்களிப்பதால் பலன் ஒன்றுமில்லை என்றாலும்) வளைகுடாவில் இருக்கும் லட்சக்கணக்கானோர் குறித்து சிந்திப்பதில்லை.

ஏனென்றால் அரசு என்பது எல்லோருக்குமானது அல்ல. எல்லோருக்கும் சமமானது எனும் பாவனையில் இயங்கும் பக்கச்சார்பானது. பணக்காரர்களுக்கான அரசாங்கம் இது என்பதை அது மறைவின்றி வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. பணக்கார வர்க்கத்தினருக்கு அரசு யாருக்கானது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. பாட்டாளி வர்க்கத்தினருக்குத்தான் அரசு என்பது பொதுவானது எனும் மாயை இன்னும் மிச்சமிருக்கிறது. வாருங்கள், பொய்த்திரைகளை விலக்கி உண்மைகளின் வெளிச்சத்தைக் காண்போம்.

நன்றி: செங்கொடி தளம்

காலத்தே பின்னோக்கி பயணிக்கும் கடையநல்லூர்

26 ஆக


அன்பார்ந்த நண்பர்களே, கடந்த சில வாரங்களாக “கடையநல்லூரின் சூழ்நிலை” குறித்து பல்வேறு மின்னஞ்சல்கள் தினமும் வந்துகொண்டிருக்கின்றன. ஒருங்கிணைந்த ஜமாத் என்றும், அவர்களின் தீர்மானங்கள் என்றும், அதற்கு மறுமொழிகள், சேர்க்கைகள் திருத்தங்கள் என்றும், அண்மை நாட்களில் இணையத்தில் கடையநல்லூர் பற்றி எரிகிறது. இவைகளை தற்செயல் வாய்ப்பாக காணநேரும் பிற பகுதி நண்பர்கள் பூடகமான சில மின்னஞ்சல்களை கண்டு என்ன பிரச்சனை என்று குழ‌ம்புகிறார்கள். வெளிப்படையான சில மின்னஞ்சல்களைக் கண்டு மிகையாக புறிந்து கொண்டு கலக்கமடைகிறார்கள். தொடக்கத்தில் இவை குறித்து நான் அலட்சியம் காட்டினாலும், கூடும் இடங்களிலெல்லாம் இவை பற்றிய பேச்சும், அதை ஒட்டிய அவர்களின் மனோநிலைத் திருப்பங்களும் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரைச்சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அலட்சியம் செய்து ஒதுங்கியிருப்பது பிழையெனப்பட்டதால் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.

அப்படி என்ன பிரச்சனை நம்முடைய ஊரில்? நம் ஊரிலிருந்து வெளியூர் சென்று கல்லூரிகளில் படிக்கும் சில மாணவிகள் காதல் என்ற பெயரில் ஊரைவிட்டு ஓடிப்போனார்கள். திருமணமான சில பெண்கள் அன்னிய ஆடவரோடு பழகினார்கள். இதனுடன், ஆர் எஸ் எஸ் போன்ற இந்து வெறிக்கும்பல்கள் இஸ்லாமிய பெண்களுடன் காதல் என்ற பெயரில் கலந்து பழகி அவர்களின் வாழ்வை சீர்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கென ஒரு அமைப்பாகிச் செயல்படுவதாக கூறப்படும் வதந்தி, இது தான் மையமான பிரச்சனை. எனக்கு குழும அஞ்சலாக அனுப்பிய பலரிடம் இது குறித்து கேட்டேன். ஒரு பிரசுரம் ஒரு வெளியீடு ஏதாவது ஆர் எஸ் எஸ் இப்படி ஒரு அமைப்பை தொடங்கியிருப்பதற்கான சான்று தர இயலுமா என்று. யாரிடமும் அப்படி எதுவும் இல்லை. எல்லோரும் செவியுற்றவர்களே. இதன் மூலம் காவிக்குண்டர்கள் யோக்கியமானவர்கள் என்றோ, இப்படி ஒரு அமைப்பைக்கட்டும் சாத்தியம் இல்லை என்றோ நான் கூறுவதாக பொருளில்லை. ஆனால் இந்த சில நிகழ்வுகளைக்கொண்டு ஏற்கனவே அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களை இன்னும் அடிமைத்தனத்தில் கட்டிவைக்கும் முயற்சியை தீர்மானம் என்ற பெயரில், இது தான் பெண்களை முன்னேற்றும் என்ற பெயரில் தந்திருப்பது பிற்போக்குத்தனமானது மட்டுமல்ல, கண்டிக்கப்படவேண்டியதும் கூட.

மிகப்பெரும் பிரச்சனையாக, எல்லோர் மனதையும் அரித்துக்கொண்டிருக்கும் ஒன்றாக மிகைப்படுத்திக் காட்டப்படும் ஓடிப்போவதும் கூடிப்போவதும் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இது அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்றாலும் அதற்கு தீர்வாக வந்திருப்பது சிரிப்பை வரவழைத்தாலும் வலி தந்தவை. பெண்களை கீழ்மைப்படுத்தி அடைத்து வைத்தால் பெருமை வரப்போவதில்லை. +2 வரை மட்டுமே பெண்களை படிக்கவைப்பது சிறந்தது என்றொரு பரிந்துரை. கல்லூரியில் படிக்கப்போனால் காதல் செய்கிறார்கள் எனவே +2 போதும். வீட்டைவிட்டு வெளியில் சென்றால் கேலி செய்வார்கள் எனவே வீட்டில் முடங்கி இருங்கள். பால்காரர், துணி தேய்ப்பவர் போன்றோரெல்லாம் வீட்டிற்கு வர வாய்ப்பிருக்கிறது எனவே பகலில் மட்டும் தக்க துணையுடன் அணுகுங்கள்….. இவைகளின் பொருள் என்ன? பெண்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக நினைத்திருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகள் மனதில் எழும். பிரச்ச்னையை சரியான கோணத்தில் புறிந்து கொள்ளாமலும், அதன் போக்கை கண்டுணராமலும் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் மதரீதியான தீர்வை முன்தள்ளுவது பிரச்சனையை மேலும் வெடித்துப்பரவச்செய்யுமா? தணிக்குமா? முதலில் இது கடையநல்லூருக்கு மட்டுமேயான தனிப்படையான விசயமா? அல்லது முன் எப்போதும் இல்லாதிருந்து இப்போது திடீரென்று வந்து குதித்ததா? இது போன்ற பிரச்சனைகள் இல்லாத ஊர் என்று எதையாவது சுட்டிக்காட்ட இயலுமா உங்களால்? அப்படி என்றால் இது போன்ற தீர்மானங்களை கொண்டு வந்து சொந்த வீட்டுப்பெண்களையே வீட்டுக்குள் முடக்கிவைக்கும் அளவிற்கு உங்களை தள்ளிச்சென்றது எது?

நெசவுத்தொழிலை குடிசைத்தொழிலாக நாம் கொண்டிருந்தவரை பெண்களை முடக்குவது இந்த அளவுக்கு வேகமெடுத்திருக்கவில்லை, அப்போதும் சில கட்டுப்பெட்டித்தனங்கள் இருந்தன என்றாலும். உலகமயமாக்கலின் காரணமாக கைத்தறிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ரகங்கள் நீக்கப்பட்டுவிட கைத்தறித்தொழில் நசியத்தொடங்கியது. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து நமது ஊரிலுள்ள ஆண்கள் வெளியூர் வெளிநாடுகளில் சென்று சம்பாதிப்பது இருந்து வந்திருக்கிறது. பழைய காலத்து பர்மா, ரங்கூன் கதைகள் இன்னும் சிலருக்கு ஞாபகம் இருக்கக்கூடும். அதற்கு அடுத்த தலைமுறையில் பினாங்கு சென்று சம்பாதித்தவர்கள், அதன் விளைவால் குடியுறிமை பெற்றவர்கள் இன்னும் கடையநல்லூருக்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். பின்னர் சிங்கப்பூரும் அப்படியே. அதன் பிறகுதான் வளைகுடா நாடுகள் பர்மா, மலேயா, சிங்கப்பூரைப்போன்றே வளைகுடா நாடுகளுக்கும் முதலில் பெருவாரியாகச்செல்லவில்லை. காரணம் தறிநெசவு என்னும் தொழில் அவர்களிடம் இருந்தது. பீஸ் ஓணம் என்றும், சொஸைட்டிக்கு எதிரான போராட்டம் என்றும் தங்களின் கூலிப்பற்றாக்குறையை வசதி வேட்கையை சரியான திசைவழியில் தீர்த்துக்கொள்ள முயன்ற நம் முந்தைய தலைமுறையினரிடம் உலகமயமாக்கம் விழைவித்த சம்மட்டி அடி, ஊரோடு வளைகுடா நடுகளில் தஞ்சமடைய வைத்தது. பெண்கள், வயோதிகர்கள், வேலையிலிருப்போர் ஆகியோரைத்தவிர அனைவரும் இன்று வெளிநாடுகளில். எரிபொருள் கண்டுபிடிப்பால் வளைகுடா நாடுகளின் குடிமக்கள் பெற்ற வளம், அந்த எண்ணெய் வளத்தை அமெரிக்கா கொள்ளையடிக்க ஏற்படுத்தப்பட்ட மறுகட்டுமான வேலைவாய்ப்புகள் குறைந்த கூலியில் கடுமையான வேலைகளை செய்யத்தயாரான ஆட்கள். நமதூரினருக்கு மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கிய காரணிகள் இவை. குறைவான கூலி என்றாலும் நாணய மாற்று வீதத்தால் கிடைத்த செல்வம், அதோடு வளைகுடாவின் மதமும் அதன் நடைமுறைகளும் ஏற்படுத்திய தாக்கம் இவை எல்லாம் சேர்ந்து நமதூரின் முகத்தை மாற்றத்தொடங்கியது. யாரேனும் வீட்டிற்கு வந்தால் வீட்டுப்பெண்களை அறையில் அடைத்துவைத்துவிட்டு ஆண்கள் மட்டும் அளவளாவுவதும், புர்கா போன்ற பழக்கவழக்கங்களும் நம்முள் கலக்கத் தொடங்கின. வசதியான வீடுகளைக்கூட இடித்து புதிதாய் கட்டுவது. முதலீடு என்ற பெயரில் ஊரைச்சுற்றிய பொட்டல் காடுகளில் கோடிகளைக்கொண்டு முடக்கியது. வீட்டு வசதி சாதனங்கள் தாராளமாய் வீட்டுக்குள் நுழைய நுழைய உடலுழைப்பு வீட்டை விட்டு வெளியேறியது. நகரியமாக்கலின் கோரப்பிடிக்குள் கடையநல்லூர் வீழும் போது அதன் விளைவுகளிலிருந்து மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? வாழ்க்கை வசதிகள் வேண்டும், அது தரும் சொகுசு வேண்டும், விளைவுகளை நிதானிக்காத மாற்றம் வேண்டும், உணவு வகை தொடங்கி இசை ரசனை வரை புதுப்புது மாற்றங்கள் நித்தமும் வேண்டும்; ஆனால் அவைகளால் விளையும் சீரழிவுகள் மட்டும் வேண்டாம் என்றால் அது முரண்பாடில்லையா? இந்த மாற்றங்களுக்கெல்லாம் பெருமளவு காரணமாக இல்லாத பெண்கள் விளைவுகளின் போது மட்டும் அடக்குமுறையை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? சீர்தூக்கிப்பார்த்து நிஜத்தை சொல்லுங்கள், பெண்கள் கெட்டுப்போகவேண்டும் என்று விரும்புவதால் இம்மாதிரி சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்கிறதா? இல்லை ஒட்டுமொத்த ஊரின், குறிப்பாக ஆண்களின் மாற்றங்களும் போக்கும் ஒருசில பெண்களை இம்மாதிரியான முடிவுகளுக்கு தள்ளுகிறதா? எது சரி?

வேற்று மத‌த்தவரை காதலித்து ஓடிப்போவது உங்களுக்கு அவமானகரமான ஒன்றாக தெரிகிறது. இஸ்லாமிய மதத்துக்குள்ளேயே ஒரு ஆணைக் காதலித்தால் அதனைப் பரிசீலிக்க உங்களில் எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்? திருமணம் நிச்சயிக்கப்போகும் பெண்ணின் விருப்பம் எந்த அளவுக்கு உங்களிடம் முக்கியத்துவம் பெறும்? நீங்கள் பார்த்துவைத்திருக்கும் ஒரு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று ஒரு பெண் சொன்னால் அதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்? சிறுமியாக இருக்கும் போது ஆடைகள், தின்பண்டங்கள், விளையாட்டுப்பொருட்களைத்தவிர ஒரு பெண்ணின் விருப்பங்கள் எங்கெல்லாம் நிறைவேற்றப்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். இவைகளையெல்லாம் நேர்மையான முறையில் பரிசீலிக்க முடியாத உங்களிடம் காதலைப்பற்றி பேசும் தகுதி எங்கிருந்து வரும்? இப்போதைய இளைஞர்களும், இளைஞிகளும் வயப்படுவது காதலல்ல என்றாலும் அதற்காக காதலை எப்படி மறுப்பது? பெற்றோர்களிடமும், சகோதரர்களிடமும், உறவினர்களிடமும் அடங்கி நடப்பதே பெண்களின் கடமை என்று நிர்ப்பந்திக்கப்படும் போது; அவ்வாறான நிர்ப்பந்தங்கள் இல்லாத இடத்தில் அவர்களின் சுதந்திரம் வெளிப்படத்தான் செய்யும், தவறாக என்றாலும். அந்தத்தவறு நிகழக்கூடாது என விரும்பினால் அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான் அதற்கான தீர்வாக இருக்குமேயல்லாமல் மேலும் அடக்குவது ஒருபோதும் தீர்வைத்தராது. வாழ்வைப்பற்றியும், அதன் வலிசுகங்களைப்பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். அதற்கு உழைப்புதான் சிறந்த வழி. அவ்வாறன்றி பெண்களை பாதுகாக்கபடவேண்டிய பொருளைப்போல் எண்ணாமல் போகப்பொருளாக்காமல் சக மனிதப்பிற‌வியாய் அங்கீகரியுங்கள். அவ்வாறன்றி தர்பிய்யாக்களும், தீனியாத் வகுப்புகளும் வாழ்வை புறிந்து கொள்ள உதவாது.

சில பெண்கள் அன்னிய ஆடவருடன் உறவு கொண்டிருப்பது வெளிப்பட்டிருக்கிறது. இதுவும் புதிதான நடைமுறையோ வேறெங்கும் இல்லாத நடைமுறையோ அல்ல. ஆனால் ஆணைப்பொருத்தவரை இது பொழுதுபோக்கு என்றும், வீரம் என்றும் வகைப்படுத்தப்படும்போது பெண்ணைப்பொருத்தவரை இதை கற்பாக வைப்பது என்ன நியாயம்? ஊர் கெட்டுவிட்டதாய் கொதித்தெழும் இளைஞர்களை கேட்கிறேன். எந்தக்காலத்தில் ஆண்கள் இதுபோன்ற தவறைச்செய்யாமலிருந்தார்கள்? அப்போதெல்லாம் கெட்டுப்போகாத ஊர் இப்போது மட்டும் கெட்டுப்போனது எப்படி? உடலுறவு என்பது பசியைப்போன்றது அதற்கு உணவளிக்காத ஆண்களின் வெளிநாட்டு மோகம் பெண்களை கதற வைக்கிறது என்பதை முதலில் நாம் புறிந்து கொள்ளவேண்டும். தற்போதைய வசதிகளும் வாய்ப்பும் அதற்கு வழி ஏற்படுத்தித்தருகிறது. இதற்கு முதற்காரணம் ஆண்களேயன்றி பெண்களல்ல. தலைமுறை தலைமுறையாய் வெளிநாட்டு மோகம் குடி கொண்டிருக்கும் நம்முடைய ஊரில் நம்முடைய தலைமுறையில் அதற்கு முற்றுப்புள்ளிவைப்போம். பட்டினியாக கிடக்க நேர்ந்தாலும் நம் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவதில்லை என்று தீர்மானம் ஏற்போம். வெளிநாட்டு மோகத்திலிருந்து தான் நம்முடைய பிரச்சனைகளும் குழப்பங்களும் தொடங்குகின்றன. எங்கு பொந்து இருக்கிறதோ அங்கு தான் அடைக்கவேண்டும். எலிகளை சுதந்திரமாக உலவவிட்டுவிட்டு உழுந்தவடையை சுற்றி காவலிருக்கிறேன், கண்காணிப்பை ஏற்படுத்துகிறேன் என்பதெல்லாம் கவைக்குதவாதது. எலியை ஒழித்துக்கட்டுவோம் அதுதான் சரியான செயல். நம்முடைய வெளிநாட்டு மோகம் தீரும் போது பிரச்சனைகளும் குறையத்தொடங்கும்.

இந்த இடத்தில் இதனோடு தொடர்புடைய இன்னொரு விசயத்தையும் சொல்லியாகவேண்டும். நம்முடைய வெளிநாட்டு மோகம் குறைந்தாலும் இல்லையென்றாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் குறுகிவருகின்றன. தனியார்மயம் தாராள மயம் உலகமயம் என்னும் பொருளாதார கொள்ளைக்கொள்கை பணக்கார வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, நெருக்கடிகள் முற்றுகின்றன. இந்தவகையில் நம் வெளிநாட்டு மோகம் குறையவில்லை என்றாலும் இன்னும் சில காலத்தில் வாய்ப்பிழந்து ஊர் திரும்புவது நிச்சயம். அப்போது இது போன்ற பிரச்சனைகள் எழாமலிருக்குமா? என்றால் குறையலாமே தவிர முற்றிலும் இல்லாது போகாது. ஏனென்றால் ஊரிலிருப்பது என்பது தற்காலிக தீர்வுதான். என்றால் நிரந்தரத்தீர்வு என்ன?

வாழ்வு குறித்தும் வாழ்முறை குறித்துமான நம் பார்வை. குறிப்பாக வறுமை குறித்த நமது எண்ணம். ஒருவன் பணக்காரனாக சுகிப்பதும், ஏழையாக சிரமப்படுவதும் ஆண்டவன் தந்தது, அவனுடைய தீர்மானம். உலகில் வேதனையில் வாடினாலும் இறந்த பிறகு சொர்க்கத்தில் சேரலாம் எனும் மத ரீதியான சிந்தனைகள். ஒருவன் பணக்காரனாக இருக்கிறான் என்றால் பல ஏழைகள் உலகில் இருக்கிறார்கள் என்று பொருள். ஒருவனைச்சுரண்டாமல் இன்னொருவன் பணக்காரனாக முடியாது. நாம் சந்திக்கும் துன்பமும் துயரங்களும், ஏழ்மையும், இயலாமைகளும் இந்த சுரண்டல்களிலிருந்தே வெளிப்படுகின்றன. நீங்கள் வெட்டியாக கதைபேசி, சுற்றித்திரிந்து, சினிமா பார்த்து இன்னும் பலவாறாக போக்கும் பொழுதுகளில் பத்தில் ஒரு பங்கு நேரத்தை பொதுவுடமை தத்துவ‌த்தை படிப்பதில் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். புதிய வாழ்க்கை ஒன்று உங்கள் கண்முன்னே விரியத்தொடங்குவதை காண்பீர்கள். இதுதான் சர்வரோக நிவாரணி, இந்தப்பக்கம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நான் கூறவரவில்லை. பலவற்றையும் தெரிந்து கொள்ளும்போது தான் சிந்தனை விரிவடையும். இதைத்தவிர வேறெதையும் பார்க்கமாட்டோம், பேசமாட்டோம் என்பது குருகிய மனப்பான்மை. அதை விடுத்து பல்வேறு தத்துவங்களையும் படியுங்கள். பின் எது சரியானது என சிந்தித்து தீர்வு காணுங்கள்.

இறுதியாக இவைகுறித்து உங்களுடன் நான் விரிவாக பேச விரும்புகிறேன். ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம். காத்திருக்கிறேன்.


பின்குறிப்பு: இக்கட்டுரை பல மாதங்களுக்கு முன் எழுதப்பட்டு மின்ன‌ஞ்சலில் சுற்றுக்கு விடப்பட்டிருந்தாலும், இக்கட்டுரையின் கருவோ, இதன் உள்ளீடோ காலங்கடந்துவிடவில்லை என்பதற்கு சமகால நிகழ்வுகளே சான்று, என்பதால் இந்த மீள்பதிவு.