திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு

21 ஆக

 

சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் காயிதேமில்லத் திடலில் தொழுகை நடத்த யாரை அனுமதிக்கலாம் எனும் கேள்வியுடன் ஒரு இடுகை இடப்பட்டிருந்தது.  அதுகுறித்தான என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை.

 

இதைக் கண்டதும் சிலருக்கு கோபம் வரலாம் ‘இது எங்கள் பிரச்சனை இதில் கருத்து கூறுவதற்கு நீயார்?’ என்று. பொதுவெளிக்கு வந்த ஒரு பிரச்சனையில் யாரும் தங்களுடைய கருத்தைக் கூறலாம். அடுத்து நாங்கள் நீ என பிரிப்பதற்கு இது ஆன்மீகப் பிரச்சனை அல்ல. பெருநாள் தொழுகை எத்தனை ரக் அத்துகள் நடத்துவது என்பதில் பிரச்சனை வந்தால் அது ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் ஒரு பொது இடத்தில் தனிப்பட்ட எந்தக் குழுவுக்கு தொழுகை நடத்த அனுமதி தருவது எனும் பிரச்சனையை தனிப்பட்டதாகவோ, ஆன்மீகம் சார்ந்ததாகவோ குறுக்கிவிட முடியாது.

 

நான் இங்கு பேசவிருப்பது குறிப்பிட்ட ஒரு குழுவுக்கு அனுமதி கொடுக்க வேண்டும், பிரிதொரு குழுவுக்கு அனுமதி கொடுக்கக் கூடது என்பது குறித்தல்ல.  தொழுகை நடத்துவது என்பதில் தொழிற்படும் அரசியல் குறித்தே நான் கூற விரும்புகிறேன்.

 

தற்போது தொழுகை நடத்த தங்களுக்கே அனுமதி தரப்படவேண்டும் என உரிமை கொண்டாடும் மூன்று குழுக்களும் முன்பு ஒரே குழுவாக இருந்தவை தான். ஆன்மீக பரப்பலை மட்டுமே தங்களின் முதன்மையான நோக்கமாக அறிவித்துக் கொண்ட இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் மொத்தக் குழுவிலிருந்து தனித்தனியாக பிரியும் போது கூறிக் கொண்ட காரணம் என்ன? மைய இலக்கான ஏகத்துவத்தில் கருத்து வேறுபாட்டுக்கோ, ஐயத்திற்கு கொஞ்சமும் இடமில்லை. மாறாக அதை அடைவதற்கான பாதை, நிர்வாகச் சிக்கல்கள், தனிப்பட்ட ஒழுக்கங்கள் போன்றவைகளே பிரிவதற்கான காரணங்கள் என முன்னிருத்தப்பட்டன.  இது சரியானால்; தொழுகை நடத்துவது என்பது அவர்களின் மைய இலக்கில் அடங்குவது. இதில் அவர்களுக்குள் பேதம் ஒன்றுமில்லை. ஆனால் அதை எங்கு நடத்துவது என்பதில் தான் சிக்கல்.

 

பெருநாள் தொழுகை திறந்தவெளியில் நடத்தவேண்டும் என்பது ஆன்மீக விரும்பம் (சுன்னத்) என்றால் கடையநல்லூரில் திடல்களுக்கு பஞ்சமா? அட்டக் குளம் இருக்கிறது, தெப்பத் திடல் இருக்கிறது, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் திடல் இருக்கிறது, அரசு ஆண்கள் பள்ளிக் கூடத்தில் இருக்கிறது, ஒவ்வொரு தெருவையும் திடலாக பயன்படுத்தலாம், அவ்வளவு ஏன்? போக்குவரத்தை மறித்து கடைவீதியையே திடலாக கருதி ஒரு குழு ஏற்கனவே தொழுகை நடத்தியிருக்கிறது. இவைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காயிதே மில்லத் திடலுக்கு போட்டி போடுகின்றன என்றால் அதில் உள்ளாடும் காரணம் என்ன?

 

ஏகத்துவ வணக்கத்தில் ஒற்றுமை உண்டு பாதையில் தான் வேறுபாடு என்றால் ஒரே திடலில் ஒருமைப்பட்டு தொழுகை நடத்தும் சகிப்பு அவர்களுக்கு வந்திருக்கும். அல்லது ஒன்றன்பின் ஒன்றாக கூட தொழுகை நடத்தியிருக்க முடியும். ஒரே பள்ளியில் ஒவ்வொரு குழுவும் தனித்தனி ஜமாத் நடத்திய இவர்களுக்கு இது முடியாத காரியமா என்ன? என்றால் இப்போது போட்டியிடுவதன் பொருள் என்ன?

 

காயிதே மில்லத் திடல் என்பது கடையநல்லூரில் பொதுக் கூட்டங்களுக்கு பொதுக் காரியங்களில் கூடுவதற்காக பரவலாக அறியப்படும் திடல். இந்தத்திடலில் அதிகக் கூட்டம் திரட்டி தொழுகையை நடத்திக்காட்டினால் தான் கடையநல்லூரைப் பொருத்த அளவில் அந்தக் குழுவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருதப்படும். அதற்காகத்தான் இந்தப் போட்டி. ஆம், இது எந்தக் குழுவுக்கு கடையநல்லூரில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க நடத்தப்படும் போட்டியே அன்றி, தொழுகை நடத்துவதற்காக நடத்தும் போட்டியல்ல.

 

ஓட்டுக்கட்சி அரசியல் இயக்கங்கள் தங்களின் செல்வக்கை காட்டுவதற்காக பிரியாணிப் பொட்டலமும் குவாட்டரும் கொடுத்து கூட்டம் காட்டுகிறார்கள். இவர்களோ ஆன்மீகத்தை பொட்டலம் கட்டிக் கொடுத்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க முனைகிறார்கள்.  இவர்களின் செல்வாக்கை நிரூபிக்கவா உங்கள் ஆன்மீகத்தை அடகுவைக்கப் போகிறீர்கள்?  கடையநல்லூர் முஸ்லீம்களே சிந்தியுங்கள்.

 

அடுத்து ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது. கடையநல்லூர் முஸ்லீம்களின் ஆன்மீகப் பற்று எத்தகையது? இது விலகி நிற்கும் தனித்த ஒரு கேள்வியல்ல. ஏன் இவர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க போட்டியிடுகிறார்கள் என்பதற்கான காரணமும் இதில் உள்ளடங்கியிருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் மதத்தையும் சமூகத்தையும் பிரித்துப் பார்ப்பதில்லை. மதம் சமூகம் உள்ளிட்ட அனைத்திற்குமான வழிகாட்டி தான் இஸ்லாம் என்று கூறுவார்கள். அந்த வகையில் ஆண்டுக்கொருமுறை ஜக்காத்தையும், பித்ராக்களையும் வாரி வழங்குவார்கள்.  அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிறார உண்ணுவது ஆகுமானதல்ல என்று ஹதீஸ்களை நீட்டி முழக்குவார்கள். ஆனால் கடையநல்லூரில் எத்தனை குடும்பங்கள் வருமானமின்றி பசித்திருக்கின்றன என்பது தெரியுமா இவர்களுக்கு? எத்தனை வீடுகளில் பெண்கள் உழைப்பின்றி தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருக்க அவர்களின் துவைத்தல், பாத்திரம் துலக்குதலை ஏழைப் பெண்கள் செய்து வயிறு காக்கிறார்கள் தெரியுமா இவர்களுக்கு? இங்கு முஸ்லீம்களின் ஈகை குணத்தை இடித்துக் காட்டுவதோ, அவர்களின் மதப்பற்றை கேள்விக்குள்ளாக்குவதோ என்னுடைய நோக்கமல்ல. அவர்கள் செயல்களின் விளைவறியாத் தன்மையை உணர்த்துவதே நோக்கம். 

 

கடையநல்லூரின் ஏழ்மைக் குடும்பங்களைத் திரட்டி அவர்களின் முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்திற்கு நன்கொடை தாருங்கள் என்று கேட்டால் சில ஆயிரங்கள் பிரியுமா? ஆனால் கடையநல்லூரில் ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என நன்கொடை கேட்டபோது நாற்பதே நாளில் நாற்பது லட்சம் பிரிந்திருக்கிறது.  கடையநல்லூரில் இன்றும் சில பள்ளிவாசல்கள் நோன்புக் கஞ்சிகளை ஊற்றிவைத்துக் கொண்டு பேரித்தம் பழத்திற்கு யாரும் தானம் தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்க, சில ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பள்ளிகளோ ஸகருக்கும், இஃப்தாருக்கும் பிரியாணி வழங்கிக் கொண்டிருக்கின்றன.

 

இந்த வித்தியாசம் தோன்றியது எப்படி? கடையநல்லூரின் பாரம்பரியத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழில் கைத்தறிகளுக்கான சிறப்பு ரகங்கள் எனும் காப்பு நீக்கப்படுகிறது எனும் ஒற்றை உத்தரவால் நசிவுற்றபோது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கைகொடுத்தது. அதேநேரம் வெளிநாட்டு பணமதிப்பின் மிகைவித்தியாசம் கடையநல்லூர் மக்களை செழிக்க வைத்தது. (இதன் விளைவுகள் குறித்து விரைவில் இன்னொரு கட்டுரை வெளிவரும்) இதேவேளையில் இந்தியாவில் பார்ப்பனிய பயங்கரவாதிகளால் அயோத்தி பாபரி பள்ளி இடிக்கப்பட முஸ்லீம்கள் மனதில் தோன்றிய அச்ச உணர்வை இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் 80களின் பிற்பகுதியில் தோன்றிய இஸ்லாமிய இயக்கங்கள், ஏற்கனவே இருந்த நடைமுறை சார்ந்த இயக்கங்களை பின்னுக்குத் தள்ளி வெகுவேகமாக முன்னேறின. அவர்களின் உழைப்பும், தர்க்க ரீதியான பேச்சும் மக்களை ஈர்த்தன. கடையநல்லூரில் இதன் பலன் பொருளாதாரத்தில் எதிரொலித்தது.

 

சமூகப் பிரச்சனைகளை விட பள்ளிவாசல் கட்டுவது கடையநல்லூர் மக்களை வெகுவாக ஈர்த்தன் பின்னணியை இதனுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் பள்ளிவாயில்களிலேயே ஐவேளைத் தொழுகைக்கு சில வரிசைகளைத்தாண்டி கூட்டம் சேராத போது இத்தனை பள்ளிவாசல்கள் ஏன்? எனும் கேள்வி யாரிடமும் எழவில்லை. இதை ஆன்மீகமாய் காட்டி அறுவடை செய்தபோது அவர்களுள் பிளவுகளும்  தவிர்க்க முடியாததாயின. இதோ அந்த பிளவுகள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க போராடுகின்றன.

 

இதை ஆன்மீகமாக, உங்களின் மத விவகாரமாக பார்த்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீகள் என்பதே பொருள். சிந்தித்துப் பாருங்கள், சிறுநீர் கழிப்பதற்குக் கூட வழிகாட்டியிருப்பதாக கூறும் இஸ்லாத்தைக் காட்டி ஒரே ஊரில் ஒரு பெருநாளை மூன்று வெவ்வேறு தினங்களில் கொண்டாட உங்களை வழி நடத்தியிருக்கின்றன இந்த இயக்கங்கள். நீங்கள் சிந்திக்க மறுக்கும் வரை இந்த இயக்கங்கள் உங்களின் முதுகில் அமர்ந்து கொண்டு ஆன்மீகம் எனும் கேரட்டை உங்கள் முகத்தின் முன்னே நீட்டிப் பிடித்து உங்களை குதிரையாகப் பயன்படுத்தும். இதை நீங்கள் எப்போது உணரப் போகிறீர்கள்? எப்போது உணர்த்தப் போகிறீகள்?

 

6 பதில்கள் to “திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு”

  1. KADIR ALI ஓகஸ்ட் 21, 2011 இல் 7:53 பிப #

    சகோதரா அருமையான ஆக்கம். உங்களின் இந்த கூக்குரல் சமூகமேல் அக்கறை கொள்ளும் அன்பர்கள் மத்தியில் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இன்ஷாஅல்லாஹ். உங்களின் சமூக அக்கறை தொடரட்டும்.
    சமூக இளைஞ்சர்களே இச்சகோதரர் சுட்டிக்காட்டும் இஸ்லாம் குறித்த கருத்துக்கள் நம்மை கட்டி ஆழ நினைக்கும் தலைவர்களுக்கு ஏன் தெரியவில்லை.

  2. SAIFULLAH-NMTSS ஓகஸ்ட் 21, 2011 இல் 10:08 பிப #

    திடல்,,,அரசியல்…
    நண்ப…அருமையான பதிவு…சம்பந்தப்பட்டவர்கள்… சிந்திப்பார்களா? வாய்ப்பில்லை என நினைக்கிறேன்…இவர்களுக்கு இஸ்லாம் பெரிதல்ல..இயக்கமே பெரிது…

  3. saleem7747d ஓகஸ்ட் 22, 2011 இல் 11:00 முப #

    That’s what every one is wondering, those senseless groups are now fortifying them as the faces of real dawa ? and takwa, but they forget that all those takwas and dhawa’s are behind the money which people sent from somewhere as our friends said.

    Who knows, may be kadayanallur soon have it’s own way of islam created by some one ?

  4. செந்தோழன் ஓகஸ்ட் 22, 2011 இல் 2:13 பிப #

    இஸ்லாத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் இஸ்லாமிய விற்பன்னர்களின் தொழில் போட்டியே! இந்த திடலை கைப்பற்றுதலில் ஒளிந்திருக்கும் அரசியல்.நல்லூர் முஸ்லீம் மக்கள் இதை புரிந்துகொண்டு இவர்களை புறக்கனிக்கவேண்டும்.அப்படி புறக்கனிப்பதன் மூலம்தான் இவர்கள் (இஸ்லாத்தை சொல்லி) கொள்ளை அடிப்பதை தடுக்கமுடியும்.சிந்திக்குமா? நல்லூர் இஸ்லாமிய சமுதாயம்..
    // நாற்பது நாட்களில் நாற்பது இலட்ச ரூபாய் வசூல் செய்துள்ளனர்// நல்லூர் முஸ்லீம்களின் ஈகை குணத்தையும் அவர்களின் அறியாமையையும் மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.

Trackbacks/Pingbacks

  1. திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு | Kadayanallur.org - ஓகஸ்ட் 21, 2011

    […] நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

  2. ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே | - ஜனவரி 25, 2016

    […] பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் […]

பின்னூட்டமொன்றை இடுக