சுயமும் தகைமையும்

19 ஜன
Bio-data என்பதைச் ‘சுயவிவரம்’ எனவும் வழங்கலாமா என நண்பர் ராஜா கேட்டிருக்கிறார். ‘சுயம்’ என்பது சமஸ்கிருதச் சொல். சுயம், சுயம்பு, சுய சரிதை என இச்சொல் தமிழில் பல இடங்களில் பயன்படுகிறது. சுயம்பு என்பதைத் ‘தான்தோன்றி’ என மக்கள் வழங்குகின்றனர். ‘தான்தோன்றி’, தான்தோன்றிப்பயல்’, ‘தான்தோன்றித்தனம்’ ஆகியவை  வசையாகப் பயன்படுகின்றன.

கரூரில் கோயில் கொண்டுள்ள சிவன் பெயர் ‘தான் தோன்றீஸ்வரர்’ (சுயம்புலிங்கம்). சரிதம், சரிதை, சரித்திரம் எல்லாம் ‘வரலாறு’ என்றானபின் ‘சுயசரிதை – தன்வரலாறு’ ஆகிவிட்டது. ஆகவே சுயம் என்பதைத் தமிழில் ‘தன்’ என்று பயன்படுத்துவது பொருத்தம். சுயவிவரம் வேண்டாம்; தன்விவரம் நல்லது. தன்னைப் பற்றிய விவரம் என விரிந்து பொருள் தரும்.

இன்னொரு நண்பர் பாலாஜி ‘தகைமை திரட்டி’ என்னும் சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தப் பயன்பாட்டை இப்போதுதான் அறிகிறேன். இந்தப் பயன்பாடு மிகவும் சிந்தித்தற்குரியது.

திரட்டு என்பது பெயராக நம் மரபில் வழங்கி வருகிறது. தனிப்பாடல் திரட்டு, பன்னூல் திரட்டு என்பன உண்டு. சமீபத்தில் ப. சரவணன் பதிப்பில் ‘அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு’ வெளிவந்திருக்கிறது. திரட்டு எனில் தொகுப்பு எனப் பொருள். சிதறிக் கிடப்பவற்றைத் திரட்டித் தருவதால் திரட்டு. மிகப் பழைய காலத்தில் இதைத் ‘தொகை’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ‘திரட்டி’ என்பது புதிதாக ஆக்கப்பட்டிருக்கிறது. இணையத்தில்தான் இது பயன்படுகிறது என நினைக்கிறேன். சுட்டி, காட்டி ஆகியவை பெயராக ஏற்கனவே பயன்படுகின்றன.

திருக்குறளிலேயே ‘தகைமை’  இருக்கிறது. ‘கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்’ என்பது குறள். தகைமை என்பதற்குத் தகுதி, பெருமை, அழகு, மதிப்பு எனப் பல பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி தருகிறது. ‘தகைமை திரட்டி’யில் தகுதி எனப் பொருள்படும். தகுதிக்கு உரியவற்றைத் திரட்டித் தருவதால் ‘தகைமை திரட்டி’ என்பது மிகவும் பொருத்தம். தகைமைசால் பெரியோர் முதலிய ஓரிரு இடங்களில் மட்டுமே இச்சொல் இன்று அருகிய வழக்காகப் பயன்படுகின்றது. ஆகவே ‘தகைமை’ என்பதையே Bio-data வுக்குக் கலைச்சொல்லாகப் பயன்படுத்தலாம். திரட்டியைச் சேர்க்கத் தேவையில்லை.
ஆனால் ‘தன்விவரம்’ ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது.  தன்விவரத்திற்குப் பதிலாக அருகியதும் பொருத்தமானதுமான ‘தகைமை’யை வழக்கிற்குக் கொண்டு வர இயலுமா?  தமிழர்களைப் பொருத்தவரை மொழி உணர்வு மிகக் குறைவு. ஏற்கனவே வழக்கில் உள்ளதும் சட்டெனப் புரிவதுமான சொல்லையே பயன்படுத்தத் தயங்குகிறார்கள். ‘தகைமை’யை ஏற்று வழக்கிற்குக் கொண்டு வர முடியுமா? முடிந்தால் மிகவும் நல்லது. அருமையான கலைச்சொல் ஒன்றை நம் மரபிலிருந்து பெறுவதாகவும் அச்சொல்லுக்கு  மீள்வாழ்வு கொடுத்து அதைத் தக்க வைத்துக் கொள்வதாகவும் இச்செயல் அமையும்.

பின்னூட்டமொன்றை இடுக