இஸ்லாமிய இளைஞர்களே! எங்கு செல்கிறீர்கள்?

23 டிசம்பர்

 

இன்றைய தமிழ் சூழலில் இஸ்லாமியர்களின் துடிப்பான ஆதரவை பெற்ற அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு. 1980களின் பிறகான இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பணிகளில் பிஜே என்றழைக்கப்படும் ஜெய்னுலாப்தீன் என்பவரின் பங்களிப்பு முதன்மையானது. மத அமைப்பு என்றாலும், பெருமளவில் இளைஞர்களை ஈர்த்ததில் பிஜேவின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. 1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை. தொடக்கத்தில் இருந்த ஜாக் அமைப்பு முதல் இன்று வரை அவர் இருந்த அமைப்புகளை இருந்தபோது, வெளியேறிய பிறகு என இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் பிஜே எனும் தனிமனித ஆளுமையை உய்த்துணரலாம். இந்த தனிமனித ஆளுமையே அந்த அமைப்பு பலத்தின் ஆதாரசுருதியாக இருக்கிறது.

 

அதேநேரம், இந்த தனிமனித ஆளுமை மதத்தின் மீதான பற்றுறுதியாக இஸ்லாமிய இளைஞர்களிடம் பொருள்மாற்றம் செய்து உணரப்பட்டிருக்கிறது. தவ்ஹீத் ஜாமாத்தில் செயல்படும் இளைஞர்களிடம் அரசியல் ரீதியான பேச்சுகளில் ஈடுபடும் போது இதை அவர்கள் மறுக்கிறார்கள். தங்களின் அமைப்பு உறுதிக்கான அடிப்படை மத ஒழுங்கில் தங்கியிருக்கிறதேயன்றி குழுவாதத்திலோ, தனிநபர் வழிபாட்டிலோ அல்ல என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நேரும் சொந்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வில் அழுத்தங்களை ஏற்படுத்தும் வரை; தங்களின் மத ஒழுங்கை சமூக அரசியல் அரங்குகளில் உரசிப்பார்ப்பதற்கோ, ஒப்பீட்டு முறையில் மீளாய்வு செய்வதற்கோ ஆகுமான தூரத்தில் அவர்கள் இருக்கப் போவதில்லை. என்றாலும் சில கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்தியாக வேண்டியதிருக்கிறது. எனவே சில தொடக்கநிலை கேள்விகளை முன்வைப்பதற்காகவே இந்தப் பதிவு.

 

கீழே இருக்கும் காணொளியின் சில துணுக்குகளைக் காணுங்கள்.

 








இது ஒன்றும் புதிய காணொளி அல்ல, கமுக்கமான காணொளி என்றும் கூறமுடியாது, அமைப்பில் செயல்படும் பலர் ஏற்கனவே இதைக் கண்டும் இருக்கலாம். அமைப்பில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருந்த பாக்கர் (தற்போது தனியாக இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார்) என்பவர் மீது கூறப்பட்ட பாலியல் அத்துமீறல் முறையீட்டில் என்ன முடிவு எடுப்பது என்பதற்காக நிர்வாகிகள் ஒரு விடுதி அறையில் கூடி விவாதிக்கும் காணொளி இது. பின்னாளில் அவர் அமைப்பை விட்டு நீக்கப்பட்டது, தனி அமைப்பை தொடங்கியது, இன்று அந்த இரு அமைப்புகளும் ஒன்றின் மீது மற்றொன்று வசைமாரி பொழிந்து கொள்வது போன்றவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

 

ஆனால், தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து, பரப்புரை, கேள்விபதில் நிகழ்சிகளின் மூலம் இஸ்லாமிய கோட்பாட்டு வாதத்தை இஸ்லாமிய மக்களின் முனைப்பாக மாற்றுவதற்கு ஒழிச்சலின்றி பாடுபட்ட பிஜே, பாக்கர் பாலியல் விவகாரத்தில் பரிந்துரைக்கும் வழிமுறை இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையிலானது தானா? பாக்கர் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிந்துள்ளார் என்பதும், அது அமைப்பில் முறையீடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதனடிப்படையில் அமைப்பு நிர்வாகிகள் முறையிட்ட பெண்ணிடம் விசாரணை செய்திருக்கிறார்கள் என்பதும், பாக்கரின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார் என்பதும், பாலியல் தவிர்த்து பொருளாதார முறைகேடுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதும், அமைப்பு ரீதியான விதிமீறலும் கூட அவர் மீது இருக்கிறது என்பதும் அங்கு நிர்வாகிகளால் மறுக்கவியலாத முறையில் வெளிப்படுத்தப் படுகிறது. இந்த நிலையில் பீஜே பரிந்துரைக்கும் வழிமுறைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவர், இது வெளிப்பட்டால் அது இயக்கத்தை பாதிக்கும் என்பதால் முடிந்தவரை விவகாரத்தை அமுக்கிவிட முயற்சிக்கிறார். சில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் வற்புறுத்துவதாலும், பாக்கரே பொதுக்குழுவோ, செயற்குழுவோ அதில் நேர்நிற்க தயார் என்றும் அறிவித்ததாலும் இறங்கி வரும் பிஜே, அப்போதும் பொதுக்குழுவா? செயற்குழுவா? என்பதையும் தன்னுடைய கருத்துக்கு இசைவாக தீர்மானிக்க அறிவுறுத்துகிறார்.

 

தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.

 

யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரச்சனை உங்கள் முன் வந்தால் அவர் காஃபிர் என்பதால் நீங்கள் நீதம் தவற வேண்டாம் என்கிறார் முகம்மது. ஆனால், முஸ்லீம்களுக்குள்ளேயான பிரச்சனையில் கூட மூடி மறைக்க முயல்கிறார் பீஜே.

 

இந்த விவகாரத்தில் பிஜே காட்டிய வழிமுறை சரியா? தவறா? சரி என்றால் எந்த அடிப்படையில்? கட்டிக் காத்த இயக்கம் அவப்பெயரை சந்திக்க நேரக் கூடாது என்னும் உன்னத(!) நோக்கம் அவருக்கிருந்தது என்று நம்புபவர்கள், இயக்கம் மீதும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அவர் என்ன மாதிரியான எண்ணம் கொண்டிருந்தார்? இயக்கத்தின் மீதான அவர் கருத்து என்ன? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இதோ கீழே உள்ள காணொளி துணுக்கை பாருங்கள்.

 

 

மேலே குற்றம் சாட்டப்படும் அதே பாக்கர் பிஜே மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டை வைக்கிறார். அதாவது டிசம்பர் ஆறில் அயோத்தி சென்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட முடிவை பிஜே கிடப்பில் போட்டுவிட்டர் என்பது பாக்கரின் குற்றச்சாட்டு. இதற்கு பிஜே அளிக்கும் பதிலைக் கவனியுங்கள். மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? அல்லது மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?

 

மனைவியைப் பிரிந்து அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு மேல் தனித்திருக்கக்கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ஆனால் பிஜே உட்பட இஸ்லாமிய அமைப்புகளை நடத்தும் அனைவரின் பொருளாதார அடிப்படைகளும் வெளிநாடுகளில் ஆண்டுக் கணக்கில் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் முஸ்லீம் உழைக்கும் மக்களையே சார்ந்திருக்கிறது. வரதட்சனையை இஸ்லாம் தடுக்கிறது. எனவே வரதட்சனை வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று உதார் விடும் அண்ணன்கள்; குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனவே, அவ்வாறு பிரிந்திருந்து அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவிப்பார்களா?

 

இப்போது கூறுங்கள் இளைஞர்களே! இந்த இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு மதத்தின் மீதான பற்றுறுதியினாலா? ஒரு தனிமனிதரின் ஆளுமையினாலா? எனக்குத் தெரியும் இதைப் படிக்கும் பலர் இந்தக் கேள்விகளை அலட்சியப்படுத்தி புறந்தள்ளிவிடக் கூடும் என்பது. ஆனால், குறுகிய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கும் திறனுள்ளவர்களின் மனதில் ஒரு வீழ்படிவாகவேனும் இந்தக் கேள்விகள் தங்கியிருக்கும்.

 

நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் நிகழும் எந்த ஒரு செயலும் நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, நம்மைப் பிசைந்து உருக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மீது தாக்கம் செலுத்தும் செயல்களை நம்மால் கவனிக்காமல் கடந்துவிட முடியுமா? விலைவாசி உயர்வில் தொடங்கி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் வரை ஒவ்வொன்றின் மீதும் உங்களின் கருத்து என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து தனக்கு சாதகமா பாதகமா எனும் அடிப்படையில் எழுந்ததா?, சரியா தவறா எனும் அடிப்படையில் எழுந்ததா? இதை சரிப்படுத்தாமால் உங்களுக்குள் எழும் எந்தக் கருத்தும், – அது மத ரீதியாக ஏற்படும் கருத்தானாலும் கூட – தவறாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

 

எந்த விசயத்திலும் தவறான கருத்தைக் கொண்டிருக்கக் கூடாது என எண்ணுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, தங்களிடம் இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமூகத்துடன் உரசிப்பார்ப்பது தான்.

வாருங்கள் இளைஞர்களே!

உங்களின் சமூகப் பார்வை இந்தக் கணத்திலிருந்தே தொடங்கட்டும்.

9 பதில்கள் to “இஸ்லாமிய இளைஞர்களே! எங்கு செல்கிறீர்கள்?”

  1. S.Ibrahim திசெம்பர் 24, 2011 இல் 12:25 பிப #

    ////1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை.///

    நீங்கள் எண்ணியதும் மட்டும் தவறல்ல .உங்கள் கட்டுரையே தவறு.1989 இல் ஜெபமணியுடன் விவாதம் நடந்தது.

    ////தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.///

    செங்கோடியே ,பீஜெவிடம் நீங்கள் அதிகமாகவே எதிர்பாக்கிறீர்கள் .இன்னும் சொல்லப்போனால் நபி[ஸல்] அவர்களின் நேர்மையை பீஜே அவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமன்று. இருப்பினும் நபி[ஸல்] அவர்களைப் போன்றே சொல்லடி ,சொல்லவொண்ணா சொல்லடிகள் பட்டு கல்லடி பட்டவர். இன்னும் அடிகளும் உதைகளும் அல்லாமல் ,1990 இல் நெல்லை ,மேலப்பாளையத்தில் அதுவரையில் பொது கூட்டம் நடத்த முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அரங்கை விட்டு வெளியேறி ஒரு தெருவில் இரவில பிரச்சாரகூட்டம் முதலாக நடந்த பொழுது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது.இறையருளால் அவர் தப்பித்தார் .அவர் கையில் பலமான வெட்டு விழுந்தது.அந்த சமயத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நூற்றுக் கணக்கானோர் அங்கெ இருந்தும் ஐந்து பேர் மட்டுமே அவருடன் செல்லும் நிலை ஏனெனில் ,தாக்குதல் நடத்தியவர்கள் ,அன்று நெல்லையில் முதலிடத்தில் இருந்த தாதாவின் ஆட்கள். அன்று இரவில் மழை பெய்ய துவங்கியதால் தெருவில் போடப்பட்ட மேடை யில் பேசுவது ரத்து செய்யப்பட்டு அதன் அருகில் சிபகத் என்பவர் வீட்டின் திண்ணையில் வைத்து சொற்பொழிவு ஆற்றினார்.இதனால் முதல் வெட்டு கையில் விழுந்த பொழுது அடுத்த வெட்டில் மைக்கை வைத்து தடுத்து உடன் வீடுஉகுள் நுழைந்து கொண்டார். மேடையில் மட்டும் அந்த கூட்டம் நடந்திருக்குமானால் ,நிலைமை விபரீதமாக இருந்திருக்கும்.அரசு மருத்துவ மனையில் அவரை அட்மிட் செய்த பிறகு அவரை காண சிலர் வந்தாலும் அவர்கள் அனைவரும் அவருக்கு பாதுகாப்பாக அங்கு தங்குவார்கள் எனஎதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அன்று நானும் அவருடன் ஒரு வெளியூர்காரர் [திண்டுகளை சேர்ந்தவர் ‘] அரசு மருத்துவமனயில் உடன் இருந்தோம் இரவில்முழுவதும் உறக்கம் இன்றி கடும் வேதனையுடன் கழித்தார். மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட அன்று இரவில் உடன் இல்லாமல் போனது வேதனைக்கு உரியது.அன்று இரவு முழுவதும் இரும்பு கட்டிலில் கழித்த அவருக்கு மறுநாள் காலை வந்த லுஹா அவர்களுடன் தலையணையும் பெட்சீட்டும் எடுக்க அன்று முன்னனணி தலைவராக இருந்த ஒரு நபரிடம் சென்றபொழுது அவர்தரவில்லை அதன் பின்னர் சிபகத் என்ற சகோதரர் கொடுத்த தலையனைகளுடன் அவரை படுக்க செய்தோம் . இந்த கொலை வழக்கில் என்னை சாட்சியாக இருக்குமாறு வேண்டினார்கள் .நான் இரண்டுகெட்டான் நிலையிருந்த வேளையில் ,அது தெரிந்த அந்த ரவுடி கும்பல் எனது கடைக்கு வந்து என்னை அழைத்து வெட்டியவர்கள் முகவரியைத் தருகிறோம் ,நீங்கள் சாட்சி சொல்லாம் என்று கூறினார்கள். இதனால் அந்த வழக்குக்கு சாட்சி கூட இல்லாமற்போயிற்று.இந்த நிலையிலும் பீஜே அவர்கள் விரக்தி அடையாமல் நெஞ்சுரமாக நின்று தனது கொள்கை பிரச்சாரத்தை தொய்வில்லாமல் செய்தார்.அதன்பிறகு அவரை லெப்பைகுடிகாட்டில் பிரச்சாரம் செய்யவென்று அழைத்து அடித்து உதைத்தார்கள் .இத்தனை வேதனைகளுக்கு இடையில் அவர் கட்டிகாத்த அமைப்பை ,பாதுகாக்க வேண்டும் என்ற அவரது உணர்வு உங்களுக்கு நியாயமாக தெரியவில்லையா? உடன் இருந்தவர்கள் எல்லாம் அவர் மீது பொல்லாங்கு கூறி பிரிந்துவிட்ட நிலையிலும் பல அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாது நிலைகுலையாமல் நிமிர்ந்து நிற்கும் தலைவரை விட்டு ,புரட்சிகரமான தியாக தலைவரை விட்டு தங்களை போன்று பெயர் மாற்றம் செய்யவே இயலாத நீங்கள் ,இஸ்லாமிய இளைஞர்களை எங்கு அழைக்கிறீர்கள்?

    உங்கள் பாசையில் சொல்ல வேண்டும் என்றால் ,எந்த மேடையிலும் தன்னை பற்றி சுய சொரிதல் விரும்பாத அவர் தனது நலனுக்காக் அன்றி இஸ்லாமிய மக்களுக்காக ,பொது நலனுக்காக மிகைப்படுத்தி பேசுவதாக கூறுவதை தவறு காண முன்பு நீங்கள் இஸ்லாம் பற்றி இந்த வலைதளத்தில் எத்தனை பொய்கள் சொல்லியுள்ளீர்கள்?

    போராட்ட களத்தை ஆர்வப்படுத்தும் நோக்கில் அனைவரும் சொல்லக்கூடிய மேடை பேச்சுகளை பீஜே பேசிவிட்டதால் இஸ்லாமிய இளைஞர்கள் மீள்பார்வை செய்ய வேண்டுமா? உங்களைப்போல அல்லாமல் முல்லைபெரியாறு வில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அங்கு உள்ள கட்சிகள் கருத்து தெரிவிக்காமல் ஒரே கருத்தை கூறிய அமைப்புதான் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்.

  2. nallurmuzhakkam திசெம்பர் 24, 2011 இல் 9:29 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    நீங்கள் கதை சொல்லி இருக்கிறீர்கள். பதில் கூற முன்வந்தால் நாம் தொடர்ந்து பேசலாம்.

  3. S.Ibrahim திசெம்பர் 25, 2011 இல் 9:05 பிப #

    செங்கொடி,உண்மைகள் உறுத்தும்பொழுது கதை என்று கூறி சமாளிக்கலாம். நீங்கள் நம்பியது மட்டும் உண்மையாகாது. இராயகரன் என்பவர் எழுதிய ”இந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம் ”கதைகளை கண்மூடித்தனமாக நம்பி சொர்க்கத்தை படைக்க,மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியுள்ள தங்களுக்கு ஹதித் களில் உள்ள அதிசயிக்கத் தக்க நேர்மையான சம்பவங்கள் சொன்னால் உடன் அந்த ஹதித்களை கதை என்று கூறுவீர்கள். அதே சமயத்தில் பொய்யான ,இட்டுக்கட்டப்பட்ட ஹதித்களை சுமந்து கொண்டு முஹம்மது நபி[ஸல்]அவர்களை விமர்சித்து வருவதும் உங்களது வாடிக்கையாக உள்ளது.
    கொண்ட கொள்கைக்காக பெயர் மாற்றம் செய்யவே சோம்பேறியான உங்களுக்கு, TNTJ என்ற ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்க அவர்பட்ட கஷ்டங்கள் கதையாகவே தெரியும் .
    4/1/2009 அன்று சேலத்தில் நடை பெற்ற தவ்ஹித் ஜமாஅத் செயற்குழுவில் வெளியிடப்பட்ட வெளிப்படையான விசாரணைகளுடன் உங்களது மகஇக உட்பட அனைத்து இயக்கங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.இது போன்று இங்கு எந்த அமைப்பாவது செயல்பட்டுள்ளனவா?என்று உங்கள் நெஞ்சுக்கு நீதி தேடுங்கள். இரண்டு கோடி மக்களை ரசியா என்னும் நரகை விட்டு இந்த மண்ணிலே சொர்க்கத்தை காட்டிய உங்களது தலைவர் ஸ்டாலினிசத்திற்கு அழைக்கும் முன் இஸ்லாமியர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டாமா?புதிதாக இஸ்லாத்திற்குள் இணையும் மக்களின் எண்ணிக்கையை ,உங்களால் உண்மை கம்யுனிசம் என்று நம்பப்படும் கொள்கைக்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மலைக்கும் கடுகுக்கும் உள்ள வித்தியாசம். இதை நினைக்க மறந்து என்ன நினப்ப்பில் இஸ்லாமிய இளைஞர் களுக்கு அழைப்பு விட்டீர்கள் என்பது புரிய வில்லை.
    http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.ஹ்த்ம்ல்
    http://www.ethirkkural.com/2011/01/blog-post.ஹ்த்ம்ல்
    இதை எல்லாம் தாங்கள் கவனத்திற் கொள்ளாமல் இஸ்லாமிய இளைஞர் களுக்கு அழைப்பு விட்டடது சரியா?
    இஸ்லாமியத்தை இப்போதே நுகர்ந்து கொண்டிருக்கும் இளைஞர் களிடம் ,உங்களது நடைமுறைபடுத்த இயலாத கானல் நீராக தோணும் கம்யுனிசத்திற்கு அழைக்கும் முன்னர் ஒருமுறை சிந்தித்து இருக்க வேண்டாமா?
    எண்பதுகளில் வரதட்சணை வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தோம் அதில் வெற்றி கண்டு இப்போது வரதட்சணை வாங்கும் ஆண்களை திருமணம் செய்யாதீர்கள் என்றோம் .மணமகன் தான் விருந்து வைக்க வேண்டும் என்ற நபி வழியை அமல்படுத்தினோம் .அதிலும் வெற்றிகண்டு வரதட்சணை வாங்கும் திருமணம் களில் கலந்து கொள்ளாதீர் என்று நடைமுறைபடுத்தி வருகிறோம்.அதைப்போலவே இப்போது வெளிநாடுகளில் வேலை செய்வதைவிட உள்நாட்டு வேலையே சிறந்தது என்று வற்புறுத்தி வருகிறோம் .இங்கே இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி வருகிறோம் ,ரங்கநாத் கமிசன் பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு தந்து மக்களும் அதை அனுபவிக்கும் நாள்கள் வரத்துவங்கும் வேளைகளில் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வேலைக்கு செல்லாதவர்களிடம் நன்கொடை பெற மாட்டோம் என்னும் முடிவு எடுக்க செய்வார்கள் .மில்லியன் ஆண்டுகால கம்யுனிசத்திற்கு பொறுமையாக அழைக்கும் தாங்கள் ஓர் பத்து ஆண்டுகள் பொறுக்கக் கூடாதா?

    • S.Ibrahim திசெம்பர் 26, 2011 இல் 10:37 முப #

      ///மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ////
      மேடையில் சில விசயங்களை மிகைப்படுத்தி பேசவேண்டியது வரும் . மக்களை ஆர்வமூட்டுவதர்க்காக சில பொய்களை சொல்லவேண்டியது வரும். தமிழகத்தில் டிசம்பர் ஆறில் அதிகமான மக்களை திரட்ட ,நாம் அயோத்திக்கு சென்று போராடுவது போல் கூறி பிறகு சென்னை போன்ற இடங்களுக்கு அழைத்து போராட்டம் நடத்துவதையே அங்கே கூறுகிறார். அவர் தவறான நோக்கத்தில் சொல்வதாக இருந்தால் வீடியோ எடுத்து வெளியிடுவாரா? மேலும் மேடையில் மட்டும் பேசி இயக்கத்தை அவர் வளக்கவில்லை .அடி உதைகளும் வெட்டுகளும் மற்றும் அவருடைய செயல்பாட்டின் வெளிப்பாடாக அமைந்த நேர்மை ,எளிமை, போன்றவைகளே அவருக்கு வெற்றியை தந்தது. சூழ்நிலை இன்று அவரை மக்களிடமிருந்து பிரித்துவிட்டதே தவிர அவரின் எளிமைக்கு அவரே உதாரணம். அவரது பிரிண்டிங் பிரசில் கம்போசிங் முதல் பல வேலைகளை அவரே செய்து வந்தார். இன்று பல இளம் அறிஞர்களிடம் போனில் மார்க்க சந்தேகங்களை கேட்டால் கூட அட்டென் பண்ணுவது அரிது. ஆனால் பீஜே அவர்கள் மார்க்க கேள்விகளுக்கு பத்திரிக்கையில்,மேடையில் மட்டும் அல்ல ,கடிதங்களிலும் பதில் அளித்து வந்தார்.இன்னும் சொல்லப்போனால் அவர் பணத்துக்கு அடிமையாகவில்லை
      ///மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? ///
      மக்களை ஆட்டு மந்தையாக கருதினால் மொத்த சமுதாயத்திற்கும் மாற்றமான கொள்கையில் இத்தனை காலம் அவரால் நீடித்திருக்க முடியுமா?சவுதியிலிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்ற மற்றவர்களின் குற்றசாட்டி வந்த நிலையில் மத்ஹப் விட்டு விலகாமல் ,மவ்லிது,தரிக்கா ,வரதட்சணை ஒழிப்பு போன்றவற்றை மட்டும் சொற்பொழிவு ஆற்ற பீஜே வை அழைத்தோம் .ஆனால் அதன்பிறகு எனக்கும் பணம் வருவதாக புரளியை கிளப்பிவிட்டார்கள்.அப்போதுதான் உண்ம்மை புரிந்தது.பல எதிர்ப்புகளுக்கிடையே இயக்கத்தை வளர்த்தவரை எப்படி ஆட்டு மந்தைபோல் அந்த இயக்கத்தினரை கருத முடியும்? அவரது எதிர்ப்பாளர்களே ,பீஜேவுக்கு எதிராக ஆட்டு மந்தை போல் மக்களை பாவித்து பீஜே மீது அவதூறுகளை அவிழ்த்துவிட்டனர். இன்று வரை பீஜே மீது சொல்லப்படும் அவதூறுகளை ; படித்தவர்கள் கூட அப்படியே நம்புகிறார்கள்.
      ///மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?///

      மக்களை உந்தாற்றலாக கருதிய ஜனதா கட்சி சரியான நிலைப்பாட்டினால் உடைந்து நொறுங்கி இல்லாமற்போனது. ஆனால் மக்களை ஆட்டு மந்தையாக கருதிய காங்கிரஸ் நீடித்திருக்கிறது. அரசியலில் மக்களை மாட்டு மந்தையாக கருதினாலே நீடிக்க முடியும். ஆனால் சமுதாய சேவை இயக்கங்கள் மக்களை உந்தாற்றலாக கருதவில்லைஎன்றால் நீடிக்க இயலாது .உண்மையே .அதனாலே பீஜே அவர்கள் சரியான நிலைபாட்டிருக்காக பல இயக்கங்கள் காணவேண்டியது ஆயிற்று. சரியான் நிலைபாட்டில் உறுதி இல்லைஎன்றால் ,ஒரே இயக்கத்திலே இருந்திருப்பார்.

  4. தஜ்ஜால் திசெம்பர் 27, 2011 இல் 4:18 பிப #

    மிக நியாயமான ஆதங்கம்.
    ///மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று./// பீஜே, மதத்தின் பெயரைக்கூறி மக்களை மடையர்களாக்கிய ஒரு கபடவேடதாரி. மேடையில் மாற்றுமத சகோதரர்கள் என்று தேனொழுக பேசுவதெல்லாம் கைதேர்ந்த நாடகமே. முரண்பாடான கேள்வியை முன் வைத்த எனது நண்பர் ஒருவருக்கு, பீஜே தனது அமைப்பைச் சேர்ந்த அப்துந்நாஸருக்கு பதில் கூறவேண்டாம் என்று அறிவுறுத்தி எழுதிய கடிதம் இது.
    <<<<அஸ்ஸலாமு அலைக்கும் இவன் கிறித்தவ நாய்களில் ஒருவன். சான் விவாதக் கும்பலில் உள்ள் நெட்டையன். இவனை விவாதத்தில் உரிய முறையில் நாம் சந்திப்போம். எந்த பதிலும் சொல்ல வேண்டாம். நேருக்கு நேர் வராமல் இது போல் கள்ள வேலை செய்வது தான் கள்ள பைபிள் கூறும் போதனை. எனவே தான் அவன்க்கும் நானே சிசி போட்டு விட்டேன்.
    2011/10/28 அப்துந் நாஸிர் >>>

    முஸ்லீம்களை சிந்திக்கச் சொல்கிறீகள். சிந்தித்தால் அவர்கள் முஸ்லீமாக இருக்க முடியாது.
    தஜ்ஜால்

    • S.Ibrahim திசெம்பர் 28, 2011 இல் 5:47 பிப #

      தச்ச ஆள் ,///மேடையில் மாற்றுமத சகோதரர்கள் என்று தேனொழுக பேசுவதெல்லாம் கைதேர்ந்த நாடகமே. முரண்பாடான கேள்வியை முன் வைத்த எனது நண்பர் ஒருவருக்கு,,,////
      மாற்றுமத சகோதரர்களிடம் தேனொழுக பேசினார் ஆமாம் உங்கள் நண்பர் என்ன கிறிஸ்தவரா? .உங்கள் கேள்விகளை சொல்லியிருந்தால் பீஜே பதிலின் நியாயம் தெரிந்திருக்கும். இஸ்லாம் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லவில்லை.

  5. nallurmuzhakkam திசெம்பர் 29, 2011 இல் 11:06 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

    குறிப்பாக பேசவே தெரியாதா உங்களுக்கு? ஸ்டாலின் தொடரில் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் அங்கு வாருங்கள். ஹதீஸ்கள் குறித்து மீண்டும் நீங்கள் வாதிக்க விரும்பினால் அந்த தலைப்புக்கு வாருங்கள் பார்த்துவிடலாம். மாறாக இங்கு எது பேசு பொருளோ அதை மட்டும் பேசுங்கள்.

    இனி எத்தனை கோடி ஆண்டுகளுக்கு பிறகென்றாலும் முகம்மதே முஸ்லீம்களின் முன்மாதிரி எனும் நீங்கள், அந்த முகம்மதோடு பிஜேவை ஒப்பிட்டுக்காட்டினால் அவர்கள் இருவரும் உங்களுக்கு தனித்தனி மனிதர்களாகிவிடுவார்களோ. முகம்மது உயர்ந்தவரா பிஜே உயர்ந்தவரா என்பது இங்கு கேள்வியே அல்ல. மாறாக பிஜேவின் செயல் இஸ்லாத்தின் அடிப்படையில் இல்லை என்பதே இங்கு சுட்டிக்காட்டப்படுவது. அதற்கு உங்கள் பதில் என்ன?

    படிப்படியாக வெளிநாட்டு நிதியை பெறமாட்டோம் என்று எடுத்துக்காட்டுடன் கூறியுள்ளீர்கள். ஆனால் அதை நீங்கள் அறிந்து கூறினீர்களா அறியாமல் கூறினீர்களா என்பது தெரியவில்லை. வரதட்சனை இல்லா திருமணம் என்பது அமைப்பு மக்களிடம் ஏற்படுத்த விரும்பிய மாற்றம், அதை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை யாரும் தவறு காண முடியாது. ஆனால் தவறான நிலைப்பாட்டில் இருக்கும் மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில்லை என்பது அமைப்பு கைக் கொள்ளவேண்டிய முடிவு. மக்கள் அறியாதவர்கள் என்பதால் அவர்களிடம் படிப்படியாக கொண்டுவரலாம். அமைப்பே அறியாமல் தான் தற்போது நன்கொடை பெற்றுக் கொண்டிருக்கிறதா? சமாளிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

    என்ன சொன்னீர்கள், டிஎன்டிஜே வையும் மகஇக வையும் ஒப்பிடுவதா? வீடியோ எடுத்து வைத்துக் கொள்வது ஜனநாயக நடவடிக்கையா? எடுத்துவைக்கும் வீடியோக்களை எந்த நோக்கில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மறந்துவிட்டதா?

    ஆக மொத்தம் உங்கள் சமாளிப்புகள் தெரிவிப்பது என்ன? இடுகையில் எழுப்பியிருப்பது போல் உங்களிடம் இருப்பது மதப்பற்று அல்ல, தனிமனித வழிபாடு தான் என்பதே.

  6. S.Ibrahim திசெம்பர் 30, 2011 இல் 3:37 பிப #

    .நல்லூர் முழக்கம் ////குறிப்பாக பேசவே தெரியாதா உங்களுக்கு? ஸ்டாலின் தொடரில் உங்களுக்கு விமர்சனம் இருந்தால் அங்கு வாருங்கள். ஹதீஸ்கள் குறித்து மீண்டும் நீங்கள் வாதிக்க விரும்பினால் அந்த தலைப்புக்கு வாருங்கள் பார்த்துவிடலாம். மாறாக இங்கு எது பேசு பொருளோ அதை மட்டும் பேசுங்கள்.////
    செங்கொடி,டிஎன்டிஜே தலைவரை பற்றி நீங்கள் பேசும்பொழுது உங்களது மறைந்த தலைவரோடு ஒப்பு நோக்கினால் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?.நான் நேரில் கண்டதை கதை என்னும்பொழுது ,முன்பு ஹதித்களை கதை என்னும் பொழுது இந்த மண்ணிலே சொர்க்கத்தை படைப்போம் நிலையை ஒப்பு நோக்கவே செய்வோம் .ஆதலின் ஆத்திரத்தை அடக்குங்கள் .ஸ்டாலின் பற்றியோ ஹதித்களை பற்றியோ நான் இங்கு விவாதித்திருக்கேனா?
    ////ஹதீஸ்கள் குறித்து மீண்டும் நீங்கள் வாதிக்க விரும்பினால் அந்த தலைப்புக்கு வாருங்கள் பார்த்துவிடலாம். ////
    ஹதித்கள் குறித்து நான் உங்களிடம் முன்பு விவாதிக்கவில்லை.வேறொரு தலைப்பில் விவாதிக்கையில் ஹதீதை கதை என்று கூறுனீர்கள் நான் அதை மறுத்து ஹதித் வரலாறு என்பதை நிருபித்தேன் .ஆனால் அதை தாங்களால் மறுக்க முடியாத நிலையில் ஹதித் குறித்து அடுத்த விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம் ,இப்போது நாம் எடுத்துக் கொண்ட தலைப்பில் விவாதிப்போம் என்று கூறுனீர்கள் .
    ////இனி எத்தனை கோடி ஆண்டுகளுக்கு பிறகென்றாலும் முகம்மதே முஸ்லீம்களின் முன்மாதிரி எனும் நீங்கள், அந்த முகம்மதோடு பிஜேவை ஒப்பிட்டுக்காட்டினால் அவர்கள் இருவரும் உங்களுக்கு தனித்தனி மனிதர்களாகிவிடுவார்களோ,,,,,,,////
    “செங்கோடியே ,பீஜெவிடம் நீங்கள் அதிகமாகவே எதிர்பாக்கிறீர்கள் .இன்னும் சொல்லப்போனால் நபி[ஸல்] அவர்களின் நேர்மையை பீஜே அவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமன்று. இருப்பினும் நபி[ஸல்] அவர்களைப் போன்றே சொல்லடி ,சொல்லவொண்ணா சொல்லடிகள் பட்டு கல்லடி பட்டவர். ”
    இவ்வாறே கூறியுள்ளேன் .ஸ்டாலின் போலவே செங்கொடியும் இந்திய மண்ணிலே மக்களுக்கு சொர்க்கத்தை காட்ட விரும்புகிறார் என்று கூறினால் ஸ்டாலினோடு உங்களை ஒப்பிடுகிறேனா?அல்லது ஸ்டாலின் வழியை பின்பற்றுகிறார் என்று கூறுகிறேனா? செங்கொடி சாஹிப் ,இன்னுமஎத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் முஹம்மது நபி[ஸல்]அவர்களே முன்மாதிரி .எத்தனை பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் சோஷலிச ரோடு கூட உங்களால் போட முடியாது.
    ///ஆனால் தவறான நிலைப்பாட்டில் இருக்கும் மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில்லை என்பது அமைப்பு கைக் கொள்ளவேண்டிய முடிவு. மக்கள் அறியாதவர்கள் என்பதால் அவர்களிடம் படிப்படியாக கொண்டுவரலாம். அமைப்பே அறியாமல் தான் தற்போது நன்கொடை பெற்றுக் கொண்டிருக்கிறதா? சமாளிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.///
    அவர்கள் தவறான நிலைப்பாட்டில் இருக்கவில்லை,தவிர்க்க முடியாத நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.நிர்ப்பந்தமான நிலைப்பாட்டில் தனது சந்ததிகளை சரியான நிலைப்பாட்டிற்கு கொண்டுவர தங்களை தியாகம் செய்து வருகிறர்கள்.எண்பதுகளில் உழைப்பாளிகளாக சென்ற அவர்களில் பலர் இன்று அவர்களது சந்ததிகளை ,பொறியாளர்களாக ,தொழில் நுட்பர்களாக அவர்களது மனைவிகளுடன் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர் .இன்னும் சிலர் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கிடையே விடுமுறையில் வந்து செல்பபவர்களாக உள்ளனர்.பீஜேயின் உரைகேட்டு பலர் வெளிநாடு வேலைகளை உதறிவிட்டு இங்கு தொழில் துவங்கி நல்ல நிலையில் உள்ளனர் .மேலும் பலர் கூட்டுறவு முறையில் தொழில் பெரிய அளவில் துவங்கியும் செயல்படுத்தியும் வருகின்றனர் .
    ///மனைவியைப் பிரிந்து அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு மேல் தனித்திருக்கக்கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ////
    இது வழிகாட்டும் நெறிகள் ஒழிய கட்டாயம் இல்லை.அவ்வாறு இருப்பது பாவம் இல்லை.ஹராம் இல்லை.
    மேலும் வரதட்சணை என்பது ஹராம் .இந்திய அரசியல் சட்டத்தின் படி பார்த்தாலும் ஏழாண்டுகள் சிறைதண்டனைக்கான குற்றம் .வெளிநாட்டு வருமானம் ஹராமல்ல .இந்திய அரசியல் சட்டப்படியும் குற்றமில்லை.ஹராமாக இருந்தால் ,இந்திய அரசியல் சட்டப்படி குற்றமாக இருந்தால் இந்த அமைப்பு நன்கொடை பெறுவதில் குற்றம் காணலாம்.ஹராமில்லை என்பதாலும்
    வெளிநாட்டவரின் நன்கொடை பெறுவதில்லை என்பதாலும் உள்நாட்டில் பணக்காரர்களோ எங்கள் முதல் எதிரிகளாக உள்ளனர்என்பதாலும் உழைக்கும் மக்களின் நன்கொடை கொண்டே டிஎன்டிஜே இயங்கி வருகிறது .அதில் உள் நாட்டினர் மற்றும் வெளிநாட்டு உழைக்கும் மக்களின் பங்கும் தவிர்க்கமுடியாத சூழ்நிலை. அமைப்பு அறியாமல் நடக்கவில்லை இக்கட்டான சூழ்நிலையில் அவ்வாறு இருக்கலாம்.நான் அமைப்பு ரீதியாக பதில் தரவில்லை எனது கருத்தையே இங்கே கூறியுள்ளேன் .
    ////இப்போது கூறுங்கள் இளைஞர்களே! இந்த இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு மதத்தின் மீதான பற்றுறுதியினாலா? ஒரு தனிமனிதரின் ஆளுமையினாலா? ///
    மறைக்கப்பட்ட மதம் கூறிய பல உண்மைகளை திரிக்கப்பட்ட பல உண்மைகளை மக்கள் மத்தியில் ,உங்களைப் போன்று வேறொரு பெயரில் ஒழிந்து கொள்ளாமல் ,இணையதளத்தில் அல்லாமல் வீதி களத்திலே நின்று போராடினார் .அவர் மதத்தை சொல்லாவிட்டால் அவரை யார் சீண்டுவார்கள்? அவர் மீது மார்க்க அடிப்படையிலான குற்றங்களை சொல்லியே பலரை பலர் வழி கெடுக்கின்றனர்.தனி மனித வழிபாடு இருந்தால் ஒரே இயக்கமாக இருந்திருக்கும் .
    ////என்ன சொன்னீர்கள், டிஎன்டிஜே வையும் மகஇக வையும் ஒப்பிடுவதா? ///
    தவறுதான் டிஎன்டிஜே தனது கொள்கைகளே செயல்பாடாக கொண்டது.மகஇக அப்படியா?ஆணாதிக்கம் பற்றி ஆயிரம் விளக்கம் அளிப்பீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் சொல்லும் ஆணாதிக்கம் இருக்கிறதே என்றால் காணாமல் போய்விடுவீர்கள்.

    ///வீடியோ எடுத்து வைத்துக் கொள்வது ஜனநாயக நடவடிக்கையா? எடுத்துவைக்கும் வீடியோக்களை எந்த நோக்கில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது மறந்துவிட்டதா?///
    கிடையாது. எவ்வித விசாரணையும் இன்றி இரும்புகோட்டைக்குள் ஹதம் பண்ணுவதுதான் ஜனநாயக நடவடிக்கை
    தேர்தலை கூட வீடியோ எடுக்கிறார்களே .வீடியோவை எந்த நோக்கில் பயன் படுத்தினோம்?////உங்களிடம் இருப்பது மதப்பற்று அல்ல, தனிமனித வழிபாடு தான் என்பதே.////
    மதம் இல்லைஎன்றால் அவர் யாரோ?நான் யாரோ? மேலும் அவர் தமுமுக ஆரம்பித்ததும் நான் அதில் சேரவில்லை.ஜாக் ஆதரவாளராகவே இருந்தேன் ,அதிலிருந்து விலகி தவ்ஹித் ஜமாஅத் ஆரம்பித்த பிறகே அதில் சேர்ந்தேன்,

  7. nallurmuzhakkam திசெம்பர் 31, 2011 இல் 7:14 பிப #

    நண்பர் இப்ராஹிம்,

     

    எங்கு எதைக் குறிப்பிட்டாலும் கேட்கப்பட்டதை விடுத்து சுற்றிவளைத்து ஏதேதோ கூறுவது தான் உங்கள் வழமை. அது விவாதமென்றாலும், பின்னூட்ட எதிர்வினை என்றாலும் உங்களிடம் மாற்றம் ஒன்றுமில்லை. அதுசரி அவ்வாறில்லை என்றால் நீங்கள் அம்பலப்பட நேரும் என்பதால் உங்களால் அதை தவிர்க்கவும் முடியாது.

     

    இந்த இடுகையின் நோக்கம் என்ன? பிஜே வின் இயக்கம் சார்ந்த நடவடிக்கைகள் இஸ்லாத்தின் அடிப்படையில் இல்லை என்பதை இஸ்லாமிய இளைஞர்களுக்கு உணர்த்துவது. இந்த வகையில் நான் முகம்மதையும் பிஜேவையும் தனி மனிதர்களாக ஒப்பிட்டுக் காட்டவில்லை. மாறாக, இஸ்லாத்தின் நிலைப்பாட்டுக்கு அமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு மாற்றமாக இருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டியிருக்கிறேன். இதற்கு நீங்கள் பதில் கூறுவதாக இருந்தால் அது எந்த அடிப்படையில் இருக்க வேண்டும்? ஒன்று, இஸ்லாமிய அடிப்படியில் தான் அமைப்பு செயல்படுகிறது என்று நிரூபித்திருக்க வேண்டும். இரண்டு, இஸ்லாத்திற்கும் அமைப்புக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த இரண்டையும் உங்களால் செய்ய முடியாது. அல்லது செய்தால் அம்பலப்பட நேரும். அதனால் தான் \\பீஜெவிடம் நீங்கள் அதிகமாகவே எதிர்பாக்கிறீர்கள்// என்று நீங்கள் மாற்றிப் போடுகிறீர்கள். முகம்மது அளவுக்கு பிஜே நடந்திருக்கிறாரா? அல்லது பிஜே அளவுக்கு முகம்மது நடந்திருக்கிறாரா? என்பது இங்கு கேட்கப்படவே இல்லை. பாக்கர் விசயத்தில் பிஜேவின் நிலைப்பாடு இஸ்லாமிய அடிப்படையிலானதா? இல்லையா? என்பதே இங்கு எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? முதலில் அதைச் செய்யுங்கள்.

     

    தவிர்க்க முடியாத நிலைப்பாட்டில் இருக்கிறார்களா? அப்படி என்ன தவிர்க்க முடியாத நிலைப்பாடு? ஒரு அமைப்புக்கு நிதி எப்போது தேவைப்படும்? முழுநேர ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க தேவைப்படும். உங்கள் அமைப்பில் சொந்த வேலை இல்லாமல் முழு நேர ஊழியர்கள் இருக்கிறார்களா? போராட்டங்கள் நடத்த நிதி தேவைப்படும். அயோத்தி இட ஒதுக்கீடு தவிர நீங்கள் நடத்தியிருக்கும் போராட்டங்கள் என்ன? அதுவும் எப்போதாவது ஒருமுறை. நிகழ்சிகள் நடத்த நிதி தேவைப்படும். இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற வெகுசில நிகழ்சிகளை ஊரில் இருப்பவர்களிடம் நன்கொடை பெற்று நடத்த முடியாதா? ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பெறும் நன்கொடையின் அளவு கோடிக்கணக்கில் இருக்கிறதே. ஒவ்வொரு ஊரிலும் பல லட்சக்கணக்கான சொத்துகள் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இருக்கிறது. மரபுசார்ந்த பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சியுடன் ஒரு பேரீத்தம் பழம் கொடுப்பதற்கு கூட வழியற்றிருக்கும் போது ஸகருக்கும் இஃப்தாருக்கும் பிரியாணி போடும் வசதி தான் தவிர்க்க முடியாத நிலைப்பாடா? வெளிநாட்டு நன்கொடை மூலம் நீங்கள் திரட்டியிருக்கும் கோடிக்கணக்கான பணம் தமிழகமெங்கும் சொத்துகள் வாங்குவதற்கும் ஆடம்பர செலவுகளுக்குமே பயன்படுத்தப்படுகிறது. இது தான் உங்கள் மொழியில் தவிர்க்க முடியாத நிலைப்பாடா?

     

    இப்போதும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பது ஹராமல்ல இந்திய சட்டப்படியும் குற்றமல்ல என விளக்களித்துள்ளீர்கள். அவ்வாறு நன்கொடை பெறுவது ஹராம் என்றோ, குற்றம் என்றோ நான் கூறியிருந்தேனா? வரதட்சனை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஹதீஸ்களிலோ குரான் வசனங்களிலோ கூறப்பட்டிருக்கிறதா? இல்லை என்றாலும் அமைப்பு ரீதியான ஒரு நிலைப்பாடாக அதை கொண்டிருக்கிறீர்கள். அதுபோல நீண்ட நாட்கள் குடும்பத்தை பிரிந்திருப்பது தவிர்க்க வேண்டியது என்பதால் அப்படி பிரிந்திருப்பவர்கள் தரும் நன்கொடையை பெருவதில்லை என்று அமைப்பு ரீதியாக உங்களால் முடிவெடுக்க முடியாது. காரணம், அது தான் அமைப்பின் -செயல்பாடுகளுக்கு மட்டுமல்ல தமிழகமெங்கும் வாங்கப்பட்டிருக்கும் சொத்துகளுக்கும்- நிதி ஆதாரமாக இருக்கிறது. இதுதான் கட்டுரையில் கேட்கப்பட்டிருக்கிறதேயன்றி ஹராமா ஹலாலா என்பதல்ல.

    ஆட்களைத் திரட்டுவதற்காக மேடையில் பொய் சொல்வதில் தவறில்லை என்றால் இன்றைய ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் அதைத்தான் செய்து வருகிறார்கள். இரண்டுக்கும் வித்தியசம் இருப்பதாக நீங்கள் கருதினால் அதன் அடிப்படை என்ன? அதுமட்டுமா? குரானில் இருப்பது அறிவியல் என்று காட்டுவதற்காக பொய் சொல்லியிருக்கிறார். இத்தனை லட்சம் பேர் திரள்வார்கள் என்று முன்கூட்டியே கூறிவிட்டு அவ்வாறு கூடவில்லை என்றதும் முன்கூட்டியே பொய் கூறுவதற்கு குரானில் வழி இருக்கிறது என்றார். இவைகளெல்லாம் ஒரு இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கா? மதரீதியாக மக்களை வென்றெடுப்பதற்கா? மதம் தான் முதன்மை நோக்கம் என்றால் இந்த பொய்கள் அவசியமில்லை. பிஜேவுக்கு முன் எளிமையாக மதப்பிரச்சாரம் செய்த பலருக்கு ஆதரவுப் பின்புலம் இல்லை. பிஜேவுக்கு அந்த பின்புலம் இருக்கிறதென்றால் அதை அவர் மேடைகளின் வாயிலாகவே பெற்றார். சட்டங்களை நுணுகிக்கற்ற ஒரு வழக்குறைஞரின் வாதாற்றலோடு வசனங்களுக்கு இடையேயான இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டு பொய்யாக அணிவித்த அறிவியல் ஆடைகளின் வாயிலாகவே பெற்றார். இதை அவர் மதம் இயக்கம் இரண்டுக்காகவும் செய்தார் என குழையடிப்பதை விட மதத்தைக் காட்டி இயக்கத்தை வளர்த்தார் என்பது தான் தெளிவானது.

     

    அதனால் தான் அந்த அமைப்பில் இருப்பவர்களுக்கான என்னுடைய கேள்வி மதத்தில் ஊன்றியிருக்கிறீர்களா? தனிமனித ஆளுமையில் ஊன்றியிருக்கிறீர்களா? என்பதாக இருக்கிறது. இதற்கு பதில் கூற நீங்கள் முன்வந்தால் எழுதப்பட்டிருப்பதை துல்லியமாக உள்வாங்கி தெளிவாக முன்வையுங்கள். அப்போது தான் அது உங்கள் தேடலை பறைசாற்றும். மாறாக தேவையற்றவைகளைப் பேசினால் நீங்கள் கூறாத போதும் உங்களுள் படிந்திருக்கும் தனிமனித ஆளுமையையே திரை விலக்கிக் காட்டும்.

     

    பிஜேவினதும், அவரின் இயக்கத்தினதுமான இந்த இடுகையில் ஸ்டாலின் குறித்தும் ஹதீஸ் குறித்தும் பேச வேண்டிய அவசியமென்ன? தோழர் ஸ்டாலின் மேடையில் பொய்யாக கூறி கூட்டம் கூட்டுவதற்காக அப்படி பேசினேன் என்று கூறியிருந்தால் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டுவதாக கொள்ளமுடியும். அப்படியில்லாத போது எந்த அடிப்படையில் எதனால் ஒப்பிடுவீர்கள்? இந்த பதிவில் மட்டுமல்ல உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் எடுத்து நோக்கினால் பெரும்பாலானவற்றில் ஒரு திசைதிருப்பும் மாற்றீடாக ஸ்டாலினை கையாண்டிருப்பது புரியும்.

     

    ஹதீஸ் குறித்து தனித்த விவாதம் எதையும் நாம் நடத்தவில்லை. ஆனால் நடந்த விவாதத்தில் ஹதீஸ் உள்நுழைந்த போது, ஹதீஸ்கள் குறித்து நான் எழுப்பிய கேள்விகள் எவற்றுக்கும் நீங்கள் நேரிய பதிலைத் தரவில்லை. குதர்க்கமாகவும் திரித்தும் பதில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இது உங்கள் உத்தியாக, மைய விவாதத்திலிருந்து விலக்கிக் கொண்டுபோகும் வழியாக நீங்கள் கையாண்டதால் ஹதீஸ்கள் குறித்த துணை விவாதத்தை இடைமுறித்து மைய விவாதத்திற்கு உங்களை கொண்டுவரும் நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஆனால் அந்த விவாதமே பலமுறை எச்சரித்தும் திருந்தாத உங்களின் மடைமாற்றும் குயுக்திகளால் இடைமுறிந்து போனது தான் மிச்சம். அது முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்கு மறந்துவிட்டிருந்தால் இங்கு சென்று நினைவூட்டிக் கொள்ளலாம். நேரிய முறையில் விவாதம் செய்வதாக நீங்கள் உத்திரவாதம் தந்தால் ஹதீஸ் குறித்து செங்கொடி தளத்தில் ஒரு தலைப்பு இருக்கிறது. அங்கு வாருங்கள். என் கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கின்றன.

     

    பீஜே அடிபட்டார் மிதிபட்டார் என்பதையெல்லாம் விளக்கிக் கூற வேண்டிய அவசியம் இந்த இடுகையில் இல்லை. ஏனென்றால் அவைகளை நான் மறுக்கவில்லை. மாறாக நானும் அங்கீகரித்திருக்கிறேன். \\1980களின் பிறகான இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பணிகளில் பிஜே என்றழைக்கப்படும் ஜெய்னுலாப்தீன் என்பவரின் பங்களிப்பு முதன்மையானது. மத அமைப்பு என்றாலும், பெருமளவில் இளைஞர்களை ஈர்த்ததில் பிஜேவின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது// ஆக எது விவாதமோ அதைப் பேசாமல் விவாதமற்ற இடத்தை நிகழ்வுகளாக விளக்கிக் கொண்டிருப்பது தேவையற்றது. தேவையற்றவைகளை கதை என்று புறந்தள்ளுவது இயல்புதான், அவை மெய்யாகவே நடந்ததாக இருந்தாலும் கூட.

     

    இனியேனும் விலக்கங்களின்றி துல்லியமாக விவாதம் செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அவ்வாறாகும் பட்சத்தில் நான் தொடர்கிறேன்.

பின்னூட்டமொன்றை இடுக