Tag Archives: பிஜே

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே

25 ஜன

tntj appalam

திருச்சி ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெரியாதவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் வேறு எங்கோ இருந்து தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்திருக்கிறார்கள் என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்காக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. விளம்பரத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 30 கோடிக்கும் மேல் என்று சொல்கிறார்கள். இது அதிகமா குறைவா என்ற விவாதம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் டி.என்.டி.ஜே வினருக்கே விளப்பரத்துக்காக இந்த அளவில் – அப்பளத்தில் மாநாட்டு விளம்பரம் செய்யும் அளவுக்கு – சென்றிருப்பது முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் பிஜேவே எழுந்தருளி சமாதானம் செய்யும் அளவுக்கு நிலமை சென்றிருக்கிறது. ஆனால் பொருட் செலவுகளுக்கு அப்பாற்பட்டு வேறு சில விசயங்கள் நமக்கு தேவையாய் இருக்கின்றன. இஸ்லாமிய இளைஞர்களின் முகம் எங்கு நோக்கி திருப்பபடுகிறது என்பதில் நமக்கு கவலையுண்டு. இஸ்லாமிய இளைஞர்களை இந்த சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தனித் தீவுகளாக, இலக்கற்று அலைந்து திரியும் எதோ ஒன்றாக எம்மால் கருத முடியாது. அந்த அடிப்படையில் சில கேள்விகளை இஸ்லாமிய இளைஞர்களிடம் எழுப்புவது அவசியம் எனக் கருதியதால் இந்தக் கட்டுரை வடிவம் பெறுகிறது.

முதலில் ஷிர்க் என்றால் என்ன? இறைவனுக்கு இணை வைக்கும் குற்றத்தைச் செய்வது ஷிர்க் எனப்படுகிறது. இந்த ஷிர்க் எனும் அரபு கலைச் சொல்லுக்கு முழுமையான பொருளைத் தேடினால் அது இஸ்லாமிய இறையியலுக்குள் பல சுய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். அந்த சுய முரண்பாடுகளை சுரம் பிரித்து ஆலாபிப்பது நம்முடைய நோக்கமில்லை. ஏனென்றால், இங்கு நாம் நாத்திகம் பேச வரவில்லை. மெய்யாகவே இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது? என்பது குறித்த தெளிவை இஸ்லாமிய இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையும் கவலையும் இருக்கிறது.

சரி. ஷிர்க் என்பது இணை வைத்தல் என்றால் எதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும்? இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு இணையாக அறிந்தோ, அறியாமலோ எதையெல்லாம் கருதுகிறோமோ அதுவெல்லாம் ஷிர்க் ஆக கருதப்படும். இப்படி ஷிர்க் ஆக கருதப்படும் வாய்ப்புள்ள அனைத்தையும் எதிர்த்து ஒழிக்கும் முயற்சியில் இறங்கினால் தான் அது ஷிர்க் ஒழிப்பு எனப்படும். ஆனால் தற்போது டி.என்.டி.ஜே வினரால் திருவிழாவாக கொண்டாடப்பட எதிர்நோக்கியுள்ள ஷிர்க் ஒழிப்பு மாநாடு இவ்வாறான அனைத்தையும் ஒழிக்கும் முயற்சிகளை தன்னுள்ளே கொண்டுள்ளதா? இந்த கேள்விக்கு ஆம் என பதில் சொல்ல எவராவது முன் வருவார்களா? டி.என்.டி.ஜே வினரின் கொண்டாட்ட மாநாடு ஒரே ஒரு அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. அது தர்ஹா எனும் கலாச்சாரத்தை ஒழிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில் டி.என்.டி.ஜே வினர் அதாவது இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசும் ஜாக் தொடங்கி பல்வேறு குழுக்கள் ஏற்கனவே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளனர். இது வெற்றியா என்பது குறித்து மாற்றுக் கருத்து இருந்தாலும், 80களில் இருந்த நிலை இன்றில்லை. சின்னச் சின்ன தர்ஹாக்கள் பல வழக்கொழிந்து போயுள்ளன. பிரபலமான பேரளவு வருமானம் கொண்ட தர்ஹாக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவைகளும் கூட முன்பிருந்த நிலையில் இல்லை. தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைஞர்கள் தர்ஹா கலாச்சாரத்தை விட்டு இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பாதைக்கு வந்துள்ளனர். இன்று தர்ஹா கலாச்சாரம் எஞ்சியிருப்பது கூட அதனால் வருவாய் பெறுபவர்களும், அதனை விட்டுவிட இயலாத அகவை கூடிய அகத்தினர்களும் மட்டுமே தர்ஹாக்களை நீர்த்துப் போகாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் எனும் நிலையில், மிகப்பெரும் பொருட்செலவில் தர்ஹாவை மட்டுமே முதன்மைப் படுத்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்பது முக்கியமான கேள்வி.

அண்மையில் காவல்துறையில் இந்த மாநாடு மத மோதல்களை ஏற்படுத்தக் கூடுமோ எனும் கேள்வி எழுப்பப்பட்ட போது, “அப்படி ஏதும் நிகழாது. நாங்கள் சிலை வணக்கத்தையோ, பிற மதங்களைப் பின்பற்றுவோர்களை நோக்கியோ இம்மாநாடு நடத்த திட்டமிடவில்லை. சிலை வணக்கம் குறித்து பேசப் போவதில்லை. எனவே மத மோதல்கள் ஏற்படாது” என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்ததாக முகநூல் பதிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் சிலை வணக்கம் ஷிர்க்கில் அடங்காதா? அல்லது சிலை வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தில் சிலை வணக்கம் தவிர்க்க முடியாதது. எனவே சிலை வணக்கம் கூடாது எனும் இஸ்லாத்தின் நிலைபாடு இந்தியாவுக்கு பொருந்தாது என்கிறார்களா? இதற்கு டி.என்.டி.ஜே வினர் கூறும் பதில், “நாங்கள் ஏற்கனவே இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளில் போதுமானவரை சிலை வணக்கம் குறித்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து அது குறித்து பேசியும் வருகிறோம். எனவே இந்த மாநாட்டில் அது தேவையில்லை” என்கிறார்கள்.

இந்த இடத்தில் மீண்டும் மேற்கண்ட கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. தர்ஹா ஒழிப்பு, தாயத்து, தகடு ஒழிப்பில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற்று பெருமளவு இளைஞர்களை ஈர்த்து வைத்திருக்கும் இந்த நிலையில். ஒப்பீட்டளவில் அந்த அளவுக்கு வெற்றி பெறாத சிலை ஒழிப்பில் நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே போதும் எனும் தெள்வுக்கு வந்திருக்கும் போது அதை விட அதிக வெற்ரி பெற்ரு மேலோங்கிய நிலையில் இருக்கும் தர்ஹா, தகடு தாயத்து ஒழிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும், பொருட்செலவும் செய்து மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

ஷிர்க் என்றால் தர்ஹா, தாயத்து மட்டுமோ, சிலை வணக்கம் மட்டுமோ அல்லவே. மருத்துவ முறையை எடுத்துக் கொண்டால், அது முழுக்க முழுக்க பரிணாம தத்துவத்தை அடிப்படையைக் கொண்டது. அதன் பரிசோதனை முறைகள், செயல்படும் விதம், புதிய கண்டுபிடிப்புகள் என அனைத்தும் பரிணாம அடிப்படையைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் அல்லா களிமண் மூலமும், இடுப்பெலும்பின் மூலமும் படைத்த ஆதம், ஹவ்வா விலிருந்து மக்களை படைத்ததாக கூறுகிறான். இதை மறுத்து பரிணாமம் மூலம் உயிரினப் பரவல் நடைபெற்றது என்பதே பரிணாமம். அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம், குரங்கு போன்றா மூதாதையிடமிருந்து வந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்வோம் என்பது அல்லாவை கேலி செய்வது போலில்லையா? அல்லா களி மண்ணால் படைத்தான் என்பதை மறுத்து பரிணாமம் மூலம் குரங்கிலிருந்து வந்தான் என்பதை ஏற்ருக் கொண்டு மருத்துவம் செய்பவர்கள் அனைவரும் ஷிர்க்கில் வீழ்ந்து விடவில்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க வேண்டாமா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு எதையாவது செய்யுமா?

விண்வெளியில் பயணம் செய்த முதல் மனிதன் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? இப்படி ஒரு கேள்வி பள்ளித் தேர்வில் கேட்கப்பட்டு அதற்கு முகம்மது நபி என்று பதில் எழுதினால் மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்கசில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? மறுத்து முகம்மது நபி தான் என்று ஆசிரியரிடம் வாதாடுவீர்களா? அல்லது யூரி காக்ரின் என எழுதாதது என்னுடைய தவறு தான் என ஒப்புக் கொள்வீர்களா? இதன் பொருள் அல்லாவை நம்பவில்லை என்பது தானே. குரானில் நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்கள் என முகம்மது நபிக்கே எச்சரிக்கை செய்யும் அல்லாவின் வார்த்தையை மீறி நீங்கள் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது யூரி காக்ரின் என்று கூறினால் அது ஷிர்க் இல்லையா? இந்த ஷிர்க்கை ஒழிக்க திருச்சி மாநாடு என்ன செய்யும்?

ஆக, ஷிர்க் ஒழிப்பு எனும் பெயரில் டி.என்.டி.ஜே வினர் நடத்த இருப்பது அவர்களே சொல்லும் காரணங்களுக்கு பொருந்தாத ஒன்று என்பது தெளிவு. இனி ஏன் இவ்வளவு விலை உயர்ந்த மாநாடு அவர்களுக்கு அவசியப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

அவர்கள் கூறுவது என்ன? ‘முஸ்லீம் மக்களிடம் இருக்கும் மூடப்பழக்க வழக்கங்களான தர்ஹா, தாயத்துகளை ஒழிக்கப் போகிறோம்’ என்பது. இதற்காக பத்து லட்சம் மக்களை திரட்டப் போகிறோம் என்கிறார்கள். இந்தக் கணக்கு சாத்தியமற்றது. சும்மா ஒரு பேச்சுக்கு கூறுவது என்பது அவர்களுக்கே தெரியும். முன்னர் தீவுத் திடல் மாநாட்டின் போதும் இப்படித்தான் கூறினார்கள். பின்னர் நல்ல காரியத்துக்காக பொய் சொல்வது தவறில்லை என்று விளக்கமும் சொன்னார்கள். எனவே, அதை விட்டு விடுவோம். இப்படி அவர்கள் திரட்டுவது யாரை? டி.என்.டி.ஜே வினரை மட்டும் தான். வேறு யாரும் வரப்போவதில்லை என்பதுடன் மட்டுமல்லாது, இதற்காக விளம்பரம் செய்யும் டி.என்.டி.ஜே வினரும் வேறு யாரையும் வர விடக்கூடாது என்பது போல் தான் செயல்படுகிறார்கள். பல ஜமாத்கள் இந்த மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. இதையும் மீறி வந்தாலும் அது சொற்பமான அளவில் தான் இருக்கும். ஆக, யாரை தர்ஹா, தாயத்து கலாச்சாரங்களிலிருந்து மாற்றி ஷிர்க் இல்லாதவர்களாக கூறுகிறார்களோ அவர்களைக் கூட்டி வைத்து ஷிர்க் கூடாது என்று மேடை போட்டு பேசப் போகிறார்கள். இந்த செலவுகளும் படாடோபமும் இதற்குத் தானா?

பொதுவாக இஸ்லாமிய மீட்டுருவாக்க இயக்கங்களின், குறிப்பாக டி.என்.டி.ஜே வின் திட்டங்கள் என்ன? தூய வடிவில் இஸ்லாத்தை பரப்புவது. தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லீம் சமூகப் பணிகளை செய்வது. இதில் இஸ்லாத்தைப் பரப்புவது என்பதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. பிற இஸ்லாமிய இயக்கங்கள் டி.என்.டி.ஜே வினர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய தத்துவார்த்த ரீதியில் முரண்பாடுகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. மீட்டுருவாக்கக் குழுக்களே பலவாறாக உடைந்து சிதறிக் கொண்டிருக்கின்றன. இவைகளை மீறி டி.என்.டி.ஜே வினர் மக்களை ஈர்த்திருக்கிறார்கள். இதற்கு முதற் காரணம் பிஜே எனும் அதன் தலைவரின் ஈர்ப்புக் கவர்ச்சி மிக்க வாதத் திறமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, டி.என்.டி.ஜே வினரின் மதத்தைப் பரப்புதல் என்பது ஒரு ஜாதிக் கட்சியைக் கட்டுவது எனும் அளவில் சுருங்கியிருக்கிறது.

சமூகப் பணிகள் என்பதில் டி.என்.டி.ஜே வினர் மட்டுமல்லாது மீட்டுருவாக்கக் குழுக்கள் அனைத்துக்குமே கடும் வரட்சி நிலவுகிறது. பாபரி பள்ளிவாசல், இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவர்களின் சமூகப் பணிகள் விரியவே இல்லை. நாங்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் அரசியல் கட்சியாகவே செயல்படுகிறார்கள். நேரடியாக ஓட்டரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும், அந்த ஓட்டரசியலை முன்வைத்தே இவர்களின் பணிகள் அமைந்திருக்கின்றன. அதாவது இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்கள் இயக்கத்துக்குத் தான் உண்டு. எனவே, எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசுவது. இதில் தான் இவர்களின் வெற்றியே அடங்கியுள்ளது.

பரபரப்பாக செயல்படுவதன் மூலம் மக்களை தங்களிடம் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் ஒரே அரசியல் உத்தி. நேரடி விவாத அழைப்புகள், லட்சம் கோடி என சவடால் அறிவிப்புகள், தடாலடிப் பேச்சுகள் என நாலாந்தர அரசியல்வாதிகளின் உத்தியைகளைத் தாண்டி மக்களைத் திரட்ட அல்லது தக்க வைக்க வேறெந்த திட்டமும் இவர்களிடம் இல்லை. இந்த அடிப்படையிலிருந்து தான் இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.

மேலே இந்த மாநாட்டுக்கு அவர்கள் கூறும் ஷிர்க் ஒழிப்பு என்பது மெய்யான காரணம் அல்ல என்பதைக் கண்டோம். கடந்த காலங்களில் தேர்தல் காலத்தில் மாறி மாறி எடுத்த நிலைபாடுகள் டி.என்.டி.ஜே வினரிடமே ஒரு அதிருப்தியான நிலையை ஏற்படுத்தி இருந்தது. இதை மறைக்கத் தான் அகோரி மணிகண்டனுடனான சவடால் பயன்பட்டது.

இப்போது சில நிகழ்வுகளைக் கவனிப்போம். தொடக்கத்திலிருந்தே ஆன்லைன்பிஜே எனும் இணைய தளம் பிஜே வின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. திடீரென ஏதேதோ காரணம் கூறி அதிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இதே போல் காரணங்கள் உருவாக்கப்பட்டு தலைமைப் பொறுப்பு உட்பட பல விசயங்கள் அவரிடமிருந்து விலக்கப்படுகின்றன. இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் டி.என்.டி.ஜே வினரை வேண்டுமானால் சமாதானமடையச் செய்யலாம். ஆனால் கூர்ந்து கவனிப்போர்க்கு அவை போதுமானதல்ல. இதற்கு பின்னணியாக பி.ஜே மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பி.ஜே மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்படுவது இது முதன்முறையல்ல என்ற போதிலும், அதில் நம் கவனம் குவிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் டி.என்.டி.ஜே அணியினருக்கு ஏதோ ஓர் அதிருப்தி பி.ஜே மீது இருக்கிறது என்பதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இதனுடன் பிஜேவின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளலாம்.

ஜாக் தொடங்கி இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழு பலவாறாக உடைந்து போனதன் பின்னணியில் சரியாகவோ, தவறாகவோ பிஜே இருந்திருக்கிறார் என்பது உண்மை. அதேநேரம் பிஜே இல்லாத எந்தக் குழுவும் தமிழக இஸ்லாமிய மக்களை ஈர்க்க முடியவில்லை என்பதை கவனிக்க வேண்டும். டி.என்.டி.ஜே வின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் இப்போதைப் போல் எப்போதும் இந்த அளவு அதிகமாக மக்களைத் தூண்டும் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை எடுத்தாண்டதில்லை. எடுத்துக்காட்டாக உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடைகளின் மூலமாக தமிழ்நாட்டில் பல பள்ளிவாசல் உருவாக்கப்பட்டன. எந்த இடத்திலும் மையவாடி (இடுகாடு) அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த ஊர்களில் உள்ள மையவாடிகளைத் தான் அந்தந்த ஊர் ஜமாத்துக்கு உட்பட்டு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளாக இதில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தால் நாம் வந்தடையும் முடிவு என்ன? டி.என்.டி.ஜே நிர்வாகிகளின் தற்போதையே ஒரே கவலை பிஜேவுக்குப் பிறகு அமைப்பை எப்படி கட்டிக் காப்பது என்பதாகத் தான் இருக்க முடியும். இந்த கவலையிலிருந்து தான் மாநாடு உள்ளிட்ட அனைத்தும் கிளைத்து வருகின்றனவே தவிர, இஸ்லாமிய இறையியலைக் காக்கும் நடவடிக்கை இதில் ஒன்றும் இல்லை.

இன்னமும் சிலர் நினைக்கலாம். அவர்கள் அமைப்புக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் ஷிர்க் ஒழிப்பு என்பது இஸ்லாத்தின் மையமான பிரச்சனை அல்லவா? அதைத்தானே அவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என்று. அப்படி அல்ல. இதற்கு குறிப்பான சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம். ந.ந. ஒரு நிமிடம், திடல் யாருக்கு என்பதை முன்னிட்டு எனும் இரண்டு இடுகைகளை படித்துப் பாருங்கள். பிரிந்து போன பல குழுக்களில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாகவே டி.என்.டி.ஜே வினரின் பெரும்பாலான செயல்பாடுகள் இருக்கின்றன. இந்தக் கண்னோட்டத்தை விலக்கி விட்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டைப் பார்க்க முடியுமா? முடியாது என்பதே யதார்த்தம்.

ஆக, பிஜேவுக்குப் பிறகு ஏற்படப் போகும் வெற்றிடத்தை நிரப்ப இப்போதிலிருந்தே தயார் செய்து கொள்வது, தமிழக முஸ்லீம்கள் அளவில் பெரிய அமைப்பு நாங்களே என மீண்டும் நிருவிக் கொள்வது இந்த இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே ஷிர்க் ஒழிப்பு மாநாடு கொண்டாடப்பட விருக்கிறது. ஓர் அமைப்பின் உள்வசமான பார்வையில் இவை தவறான நோக்கங்கள் என்று கருத முடியாது. நேர்மையாக அதை தம் அணியினருக்கு தெரிவிக்காமல் இஸ்லாமிய இறையியலை ஏன் மறைக்கும் திரைச் சீலையாக பயன்படுத்த வேண்டும்? இது முக்கியமான கேள்வி அல்லவா?

இங்கு தான் இஸ்லாமிய இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மதம் குறித்த உன்னதங்களைப் பேசிக் கொண்டு உங்களுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த அமைப்புகள் உங்கள் சொந்த வாழ்க்கைக்கு செய்தது என்ன? உங்கள் சொந்த வாழ்வின் பிரச்சனைகள் என்ன? அதற்கான காரணங்கள் எங்கிருந்து வருகின்றன? அதை எப்படி தீர்ப்பது? உங்களைச் சூழ்ந்திருக்கும் சமூகத்தை விட்டுவிட்டு உங்களால் தனித்து இயங்க முடியுமா? அல்லது உங்களைச் சூழ்திருக்கும் சமூகத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் அது உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தாதா? ஒரு விலைவாசி உயர்வு உங்களை மட்டும் விலக்கி விடுமா? ஒரு ஆற்றில் கலக்கப்படும் நச்சுக் கழிவுகள் எல்லோரையும் பாதிக்கும் போது உங்களுக்கு அது நேராதா? உங்கள் நிலத்தடி நீர் பன்னாட்டு நிறுவனங்களால் சூரையாடப்பட்டு தன்னீர் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் மட்டும் தாகம் தீர்ந்து இருக்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளில் உங்கள் அமைப்பு உங்களுக்கு என்ன வழிகாட்டல் வழங்கியது?

ஒவ்வொரு மனிதனும் இறப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆனால் வாழும் காலத்தில் சொர்க்கமா நரகமா என்பதைத் தவிர வேறு பிரச்சனைகள் தன்னாலே சரியாகி விடுமா? உங்கள் ஆன்மீக நம்பிக்கைகளை புண்படுத்துவது நோக்கமல்ல. ஆனால் சமூகப் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விலக்கி விட்டு ஆண்மீகம் மட்டுமே போதுமானதாகி விடுமா? என்பது மட்டுமே கேள்வி.

நீங்கள் உணர வேண்டும். உங்கள் அமைப்புகளுக்கு உணர்த்த வேண்டும். ஏகாதிபத்தியம், பார்ப்பன பயங்கரவாதம் எனும் இரண்டு பாசிசங்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகளை மோதி வீழ்த்துவதற்கு ஜாதி, மத, இன இன்னும் பிற பேதங்களை கடந்து வர்க்கமாக ஒன்றிணையும் தேவை நமக்கு முன் பூதாகரமாக நிற்கிறது. இதை சாதிப்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா? உங்களின் பங்களிப்பு என்ன?

இஸ்லாமிய இளைஞர்களே! எங்கு செல்கிறீர்கள்?

23 டிசம்பர்

 

இன்றைய தமிழ் சூழலில் இஸ்லாமியர்களின் துடிப்பான ஆதரவை பெற்ற அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு. 1980களின் பிறகான இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பணிகளில் பிஜே என்றழைக்கப்படும் ஜெய்னுலாப்தீன் என்பவரின் பங்களிப்பு முதன்மையானது. மத அமைப்பு என்றாலும், பெருமளவில் இளைஞர்களை ஈர்த்ததில் பிஜேவின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. 1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை. தொடக்கத்தில் இருந்த ஜாக் அமைப்பு முதல் இன்று வரை அவர் இருந்த அமைப்புகளை இருந்தபோது, வெளியேறிய பிறகு என இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் பிஜே எனும் தனிமனித ஆளுமையை உய்த்துணரலாம். இந்த தனிமனித ஆளுமையே அந்த அமைப்பு பலத்தின் ஆதாரசுருதியாக இருக்கிறது.

 

அதேநேரம், இந்த தனிமனித ஆளுமை மதத்தின் மீதான பற்றுறுதியாக இஸ்லாமிய இளைஞர்களிடம் பொருள்மாற்றம் செய்து உணரப்பட்டிருக்கிறது. தவ்ஹீத் ஜாமாத்தில் செயல்படும் இளைஞர்களிடம் அரசியல் ரீதியான பேச்சுகளில் ஈடுபடும் போது இதை அவர்கள் மறுக்கிறார்கள். தங்களின் அமைப்பு உறுதிக்கான அடிப்படை மத ஒழுங்கில் தங்கியிருக்கிறதேயன்றி குழுவாதத்திலோ, தனிநபர் வழிபாட்டிலோ அல்ல என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நேரும் சொந்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வில் அழுத்தங்களை ஏற்படுத்தும் வரை; தங்களின் மத ஒழுங்கை சமூக அரசியல் அரங்குகளில் உரசிப்பார்ப்பதற்கோ, ஒப்பீட்டு முறையில் மீளாய்வு செய்வதற்கோ ஆகுமான தூரத்தில் அவர்கள் இருக்கப் போவதில்லை. என்றாலும் சில கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்தியாக வேண்டியதிருக்கிறது. எனவே சில தொடக்கநிலை கேள்விகளை முன்வைப்பதற்காகவே இந்தப் பதிவு.

 

கீழே இருக்கும் காணொளியின் சில துணுக்குகளைக் காணுங்கள்.

 








இது ஒன்றும் புதிய காணொளி அல்ல, கமுக்கமான காணொளி என்றும் கூறமுடியாது, அமைப்பில் செயல்படும் பலர் ஏற்கனவே இதைக் கண்டும் இருக்கலாம். அமைப்பில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருந்த பாக்கர் (தற்போது தனியாக இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார்) என்பவர் மீது கூறப்பட்ட பாலியல் அத்துமீறல் முறையீட்டில் என்ன முடிவு எடுப்பது என்பதற்காக நிர்வாகிகள் ஒரு விடுதி அறையில் கூடி விவாதிக்கும் காணொளி இது. பின்னாளில் அவர் அமைப்பை விட்டு நீக்கப்பட்டது, தனி அமைப்பை தொடங்கியது, இன்று அந்த இரு அமைப்புகளும் ஒன்றின் மீது மற்றொன்று வசைமாரி பொழிந்து கொள்வது போன்றவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

 

ஆனால், தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து, பரப்புரை, கேள்விபதில் நிகழ்சிகளின் மூலம் இஸ்லாமிய கோட்பாட்டு வாதத்தை இஸ்லாமிய மக்களின் முனைப்பாக மாற்றுவதற்கு ஒழிச்சலின்றி பாடுபட்ட பிஜே, பாக்கர் பாலியல் விவகாரத்தில் பரிந்துரைக்கும் வழிமுறை இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையிலானது தானா? பாக்கர் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிந்துள்ளார் என்பதும், அது அமைப்பில் முறையீடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதனடிப்படையில் அமைப்பு நிர்வாகிகள் முறையிட்ட பெண்ணிடம் விசாரணை செய்திருக்கிறார்கள் என்பதும், பாக்கரின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார் என்பதும், பாலியல் தவிர்த்து பொருளாதார முறைகேடுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதும், அமைப்பு ரீதியான விதிமீறலும் கூட அவர் மீது இருக்கிறது என்பதும் அங்கு நிர்வாகிகளால் மறுக்கவியலாத முறையில் வெளிப்படுத்தப் படுகிறது. இந்த நிலையில் பீஜே பரிந்துரைக்கும் வழிமுறைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவர், இது வெளிப்பட்டால் அது இயக்கத்தை பாதிக்கும் என்பதால் முடிந்தவரை விவகாரத்தை அமுக்கிவிட முயற்சிக்கிறார். சில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் வற்புறுத்துவதாலும், பாக்கரே பொதுக்குழுவோ, செயற்குழுவோ அதில் நேர்நிற்க தயார் என்றும் அறிவித்ததாலும் இறங்கி வரும் பிஜே, அப்போதும் பொதுக்குழுவா? செயற்குழுவா? என்பதையும் தன்னுடைய கருத்துக்கு இசைவாக தீர்மானிக்க அறிவுறுத்துகிறார்.

 

தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.

 

யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரச்சனை உங்கள் முன் வந்தால் அவர் காஃபிர் என்பதால் நீங்கள் நீதம் தவற வேண்டாம் என்கிறார் முகம்மது. ஆனால், முஸ்லீம்களுக்குள்ளேயான பிரச்சனையில் கூட மூடி மறைக்க முயல்கிறார் பீஜே.

 

இந்த விவகாரத்தில் பிஜே காட்டிய வழிமுறை சரியா? தவறா? சரி என்றால் எந்த அடிப்படையில்? கட்டிக் காத்த இயக்கம் அவப்பெயரை சந்திக்க நேரக் கூடாது என்னும் உன்னத(!) நோக்கம் அவருக்கிருந்தது என்று நம்புபவர்கள், இயக்கம் மீதும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அவர் என்ன மாதிரியான எண்ணம் கொண்டிருந்தார்? இயக்கத்தின் மீதான அவர் கருத்து என்ன? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இதோ கீழே உள்ள காணொளி துணுக்கை பாருங்கள்.

 

 

மேலே குற்றம் சாட்டப்படும் அதே பாக்கர் பிஜே மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டை வைக்கிறார். அதாவது டிசம்பர் ஆறில் அயோத்தி சென்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட முடிவை பிஜே கிடப்பில் போட்டுவிட்டர் என்பது பாக்கரின் குற்றச்சாட்டு. இதற்கு பிஜே அளிக்கும் பதிலைக் கவனியுங்கள். மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? அல்லது மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?

 

மனைவியைப் பிரிந்து அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு மேல் தனித்திருக்கக்கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ஆனால் பிஜே உட்பட இஸ்லாமிய அமைப்புகளை நடத்தும் அனைவரின் பொருளாதார அடிப்படைகளும் வெளிநாடுகளில் ஆண்டுக் கணக்கில் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் முஸ்லீம் உழைக்கும் மக்களையே சார்ந்திருக்கிறது. வரதட்சனையை இஸ்லாம் தடுக்கிறது. எனவே வரதட்சனை வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று உதார் விடும் அண்ணன்கள்; குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனவே, அவ்வாறு பிரிந்திருந்து அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவிப்பார்களா?

 

இப்போது கூறுங்கள் இளைஞர்களே! இந்த இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு மதத்தின் மீதான பற்றுறுதியினாலா? ஒரு தனிமனிதரின் ஆளுமையினாலா? எனக்குத் தெரியும் இதைப் படிக்கும் பலர் இந்தக் கேள்விகளை அலட்சியப்படுத்தி புறந்தள்ளிவிடக் கூடும் என்பது. ஆனால், குறுகிய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கும் திறனுள்ளவர்களின் மனதில் ஒரு வீழ்படிவாகவேனும் இந்தக் கேள்விகள் தங்கியிருக்கும்.

 

நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் நிகழும் எந்த ஒரு செயலும் நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, நம்மைப் பிசைந்து உருக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மீது தாக்கம் செலுத்தும் செயல்களை நம்மால் கவனிக்காமல் கடந்துவிட முடியுமா? விலைவாசி உயர்வில் தொடங்கி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் வரை ஒவ்வொன்றின் மீதும் உங்களின் கருத்து என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து தனக்கு சாதகமா பாதகமா எனும் அடிப்படையில் எழுந்ததா?, சரியா தவறா எனும் அடிப்படையில் எழுந்ததா? இதை சரிப்படுத்தாமால் உங்களுக்குள் எழும் எந்தக் கருத்தும், – அது மத ரீதியாக ஏற்படும் கருத்தானாலும் கூட – தவறாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

 

எந்த விசயத்திலும் தவறான கருத்தைக் கொண்டிருக்கக் கூடாது என எண்ணுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, தங்களிடம் இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமூகத்துடன் உரசிப்பார்ப்பது தான்.

வாருங்கள் இளைஞர்களே!

உங்களின் சமூகப் பார்வை இந்தக் கணத்திலிருந்தே தொடங்கட்டும்.