மனிதனின் ஆரம்பம் குறித்த குர் ஆனின் குழப்பங்கள்

17 ஜன

 

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 19


உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….

(குர்ஆன்   2:30)

                அல்லாஹ், மலக்கு(என்ற வானவர்)களிடம்  தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன?  இதில் மலக்குகளின் முடிவை அறிவதன் முலம் இரண்டாம் கருத்து தேவை என்ற நிலையே தெரிகிறது.

குர்ஆனின் மூலம் மனிதர்களுடனே உரையாடும் அல்லாஹ், மலக்குகளுடன் உரையாடியதில் புதுமை ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். ஆனால் இந்த உரையாடலின் தன்மை சற்று வேறுபட்டதே.

“நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள்…

(குர்ஆன்   2:30)

                தெளிவு பெறும் விதமாக  கேட்கப்பட்டதாக தோன்றும்  இவ்வினா, அல்லாஹ்வின் முடிவிற்கு ஒரு மாற்று கருத்து. இதில் அனைத்து மலக்குகளின் முடிவும் ஒன்றே என்பதும் தெளிவாகிறது.

 

                மனிதன் தெளிவற்றவன், குழப்பவாதி, போர்க்குணம் கொண்டவன் என்பதே மலக்குகளின் கணிப்பு. மேலும் அல்லாஹ், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை (ஒருமை) பூமியில் படைக்க இருப்பதாக மட்டுமே இங்கு தெரிவிக்கிறான். ஓரே தவணையில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதாக கூறப்படும் ஆன்மாக்களைப்பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.

குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விவரங்களும் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தெரியாது. கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்களும், அநீதிகளும், படுகொலைகளும், கலவரங்களும் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. மனிதர்களால் உருவாகும் குழப்பங்களால் இரத்த ஆறு ஒடும் என்ற மலக்குகளின் கூற்று மிக மிகச் சரியானது. அவர்களின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை. வானவர்கள் அறிந்தது அல்லாஹ் தன்னுடைய பிரதிநிதியை  பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!. அல்லாஹ் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?.

“அல்லாஹ்வின் பிரதிநிதி” என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், மனிதனை அவன் விருப்பத்திற்கு பூமியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க அல்லாஹ் முடிவு செய்து விட்டான் என வானவர்கள் உணர்ந்தனர். அல்லாஹ்வின் ஆட்சி அல்லாமல் வேறு யாருடைய ஆட்சி எங்கு இருந்தாலும் குழப்பம்தான் ஏற்படும் என குறிப்பால் உணர்ந்து மறுப்பு தெரிவித்தனர் என்பதே மார்க்க அறிஞர்களின் விளக்கம். இவ்விளக்கத்தின் மறைவான உட்கருத்து மலக்குகள் பகுத்தறிவைப் பெற்றவர்கள் என்பதே. ஆனால் மலக்குகள் பகுத்தறிவற்ற படைப்பினம் என்பதே மார்க்க அறிஞர்களின் விளக்கம்.

மலக்குகளிடமிருந்து இப்படியொரு துடுக்குத்தனமான பதிலை அல்லாஹ் எதிர்பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. அவர்களின் இந்த பதில் அவனை எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும்.

…”நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்” என்று அவன் கூறினான்      

(குர்ஆன்   2:30)

இவ்வாறு கூறியதோடு நிற்கவில்லை. மனிதனைப் படைத்து, வானவர்களின் துடுக்குத்தனத்திற்கு சரியான பாடம்புகட்ட விரும்பினான். ஆதமைப் படைத்து, அவருக்கு பெயர்களை அறிவிக்கும் பயிற்சியையும் அளிக்கிறான்.

மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன்கற்றுக் கொடுத்தான்.…

(குர்ஆன்   2:31)

ஆதமுக்கு வழங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகளுக்கு மலக்குகள் அழைக்கப்படவில்லை. அல்லாஹ்வின் இந்த ரகசிய திட்டத்தைப் பற்றி அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.

புஹாரி ஹதீஸ் : 7517        

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

…பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள் …

…பிறகு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.

(குர்ஆன் 2:31)

மலக்குகள் (வானவர்கள்)  பகுத்தறிவற்றவர்கள் என்ற விளக்கம்  உண்மையாக இருப்பின், அல்லாஹ்வின் இந்த சவால் அர்த்தமற்றது. இந்தப் போட்டியின் மூலம் மலக்குகளின் கருத்து தவறென்று நிருபிக்க விரும்பியிருக்கலாம் அல்லது படைப்பின் ரகசியத்தைத் தவிர அவர்கள் அறியாத உண்மைகளும் உண்டென்பதை வானவர்களுக்கு உணர்த்த விரும்பி இருக்கலாம். எனவே  மலக்குகளின் மனிதனைப் பற்றிய மாற்றுக் கருத்து அவர்களின் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் காரணமாகவே கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லாஹ்வின்  இந்த போட்டியில் மலக்குகள்  தோல்வியை ஒப்புக் கொள்கின்றனர்.

 

“…(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை…”

(குர்ஆன்   2:32)

ஆதமின் அறிவு கூர்மையை வானவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம்  மனிதனைப் பற்றிய அவர்களின் (தவறான?) கருத்தை மாற்ற முயற்சிக்கிறான். அல்லாஹ் முன்பே பயிற்சி அளித்த பொருட்களிலிருந்து, ஆதமின் முன் சில பொருட்களைப் காண்பித்து அவற்றின் பெயர்களைக் அறிவிக்கக் கூறுகிறான்.

(அப்பொழுது) ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக என்று கூறினான். (அவ்வாறே) அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த பொழுது, (மலக்குகளை நோக்கி) “நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக் கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று அவன் கூறினான்.

(குர்ஆன்   2:33)

அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கை பதிலிலிருந்து, மலக்குகள் (வானவர்கள்)என்ன பதில் கூறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டே மனிதனைப் படைப்பதைப் பற்றிய செய்தியை அவர்களிடம் கூறியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. ஒருவேளை ஆதம், பொருட்களின் பெயர்களைத் தப்பும் தவறுமாக ஏதாவது உளறியிருந்தாலும் வானவர்களால் அதை அறிந்திருக்க முடியாது. ஏனென்றால், அதைப் பற்றிய எந்தவிதமான அறிவும் தங்களுக்கில்லை என்ற பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம். இதன் மூலம் மனிதனைப் பற்றி அல்லாஹ் முன்பே வானவர்களிடம் கூறியிருக்க வேண்டும் என்பதும் அவனால் கற்றுக் கொடுக்கப்பட்டதையே அவர்கள் அல்லாஹ்விடம் கூறியுள்ளார்கள். எனவே வானவர்களின் துடுக்குத்தனமான பதில் அவர்களின் பகுத்தறிவால் கூறப்படவில்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே, அல்லாஹ் ஒரு கருத்தை வெளியிட்டு, அதற்கொரு மாற்று கருத்ததையும் மலக்குகளின்  மூலமாக வெளியிட்டுக் கொண்டான் என்று கூறலாம். இவ்விடத்தில் மலக்குகள், அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்டதை  அல்லது அவர்களின் சிந்தனையில் பதிவு செய்யப்பட்டதை  மட்டும் வெளிப்படுத்தும்  ஒருவகை இயந்திரமே (Audio recorder cum player). (இத்தகைய இயந்திரங்களில் எண்ணற்றவைகள் ஸஜ்தாவில் சதா சர்வகாலமும் அல்லாஹ்வை புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதாகவும் மார்க்க அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்)

எனவே, மலக்குகள் என்ற பகுத்தறிவற்ற வழிபடும் இயந்திரங்களின் வாயிலாக  அல்லாஹ், தனக்கு தானே பேசிக் கொண்டான் என்று முடிவு செய்யலாம். எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் இவ் உரையாடல்கள் நிகழ்ந்தது என்று மனிதனுக்கு தெரியாது. அல்லாஹ் – மலக்குகள்   இவர்களிடையே நிகழ்ந்த இந்த செய்திகளின் பரிமாற்றம்  எவ்வகையில், எதன்மூலம் நிகழ்ந்ததென்பது நமக்கு தற்சமயம் தேவையற்றது.

 

(மலக்குகளை நோக்கி) “நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக் கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று அவன் கூறினான்.

(குர்ஆன்   2:33)

வானவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு  அல்லாஹ்வின் இந்த மறுமொழியிலிருந்து. மலக்குகள் மட்டுமல்லாமல் படைப்பினங்களின் அனைத்து வகையான சிந்தனையையும் அல்லாஹ் அறிவான்  என்பதே  இதன் நேரடிப் பொருள். ஆனால் அல்லாஹ், மலக்குகள்  வெளிப்படுத்திய கருத்தை மறுத்த விதமும் இறுதியில் அவர்களுக்கு அளித்த பதிலையும் கூர்ந்து கவனித்தால் மலக்குகள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுடையவர்களாகவே தோன்றுகிறது. ஏனென்றால் அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் தாங்களாகவே அறிந்து கொள்ளமுடியாத ஒரு படைப்பினத்திடம் இந்த விதமான பதிலைக் கூறுவது அர்த்தமற்றது.

                    உதாரணத்திற்கு, இணைய தளத்தில் பதிவு  செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுபவைகளாக இருக்கிறது. அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரைப் பார்த்து  இதுதான் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று நாம் கூறுவதில்லை. அல்லது அதில் பதிவு செய்யப்படாத தகவலைத் தரவில்லையென்றவுடன் கம்ப்யூட்டரைப் பார்த்து உனக்குத் தெரியாத செய்திகள் எனக்குத் தெரியும் என்று பெருமையடித்துக் கொள்வதுமில்லை. அப்படி ஒருவர் கம்யூட்டரைப் பார்த்து  கூறுகிறார் என்றால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அந்த கம்ப்யூட்டர் சுயமாகக் கற்று பகுத்தறிந்து  செயல்படக் கூடியதாக இருக்கலாம்.

                    எனவே, அல்லாஹ் தெளிவானவன் என்று கூறினால், மலக்குகளின் கருத்து அவர்களுடைய பகுத்தறிவால் கூறப்பட்டுள்ளது என உறுதியாக சொல்லலாம். (என்ன…! தலை சுற்றுகிறதா?)

                    மனிதனைப் படைப்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும்,  அல்லாஹ் ஆணையிட்டதும் மலக்குகள் ஆதமுக்கு ஸுஜூது (தலைகுனிந்து [காலில் விழுந்து] வணக்கம்) செய்தனர்.

மலக்குகள் அனைவரும் ஸுஜூது செய்தனர்.

இப்லீஸைத் தவிர; அவன் ஸுஜூது செய்தவர்களுடன் ஆவதை விட்டும் அவன் விலகிக் கொண்டான்.

(குர்ஆன் 15:30-31)

யார் இந்த இப்லீஸ்?     எங்கிருந்து வந்தான்?    எதற்காக வந்தான்?

இப்லீஸே ஸுஜூது  செய்பவர்களுடன் நீ ஆகாமல் இருப்பதற்கு உனக்கு என்ன வந்தது?

(குர்ஆன் 15:32)

“நான் உனக்குக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்வதை விட்டும் உன்னை எது தடுத்தது என்று அவன் (அல்லாஹ்) கேட்டான்…

(குர்ஆன் 7:12)

அல்லாஹ்வின் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். அவன் ஸுஜூது செய்யக் கூறியது மலக்குகளிடம் மட்டுமே. இப்லீஸிடம் ஆதமிற்கு ஸுஜூது செய்யக் கூறப்படவே இல்லை ஏனென்றால் அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்.

          அவன் வானவர்களுடனே இருந்து வந்ததால், ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸும் வானவர்களில் ஒருவனாகக் கருதப்பட்டு விட்டான் எனவே அல்லாஹ்வின் கட்டளை அவனுக்கும் பெருந்தக்கூடியதுதான் என்று மார்க்க அறிஞர்கள் “சப்பைக்கட்டு”கட்டுகின்றனர். தன்னை ஒரு வானவராக கற்பனை செய்து கொள்வதற்கு இப்லீஸிற்கு எந்தத் தடையையும் இல்லை. ஆனால் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அல்லாஹ்வை, இப்லீஸை அல்ல!

 மலக்குகளின் தன்மையும் ஜின்களின் தன்மையும் முற்றிலும் வெவ்வேறானவைகள் என்கிறது குர்ஆன். தான் படைத்த படைப்பினத்தின் வேறுபாடுகளைக்கூட அல்லாஹ்வால் அறிந்து கொள்ள முடியவில்லையா?

          யானைகளின் கூட்டத்தில் வளர்க்கப்பட்ட பன்றியை, யானை என்று கூறுவதில் தவறில்லை என்கிறார்கள்.

சரி நான் விவாதத்தை தொடர்கிறேன்

                ஆதமிற்கு, இப்லீஸ் ஸுஜுது செய்ய மறுப்பதும், அதற்கான காரணமும் அல்லாஹ்விற்கு முன்பே தெரியவில்லை என்பது மிகப்பெரிய வேடிக்கை. அதை அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

“மனிதனுக்கு ஓசை தரக் கூடிய, மாற்றத்திற்குரிய கருப்புக் களிமண்ணால் அவனை நீ படைத்திருக்க -நான் ஸுஜூது செய்பவனாக இருப்பதற்கில்லை”

(குர்ஆன் 15:33)

அல்லாஹ், தன்னைத்தவிர யாருக்கும், எதற்கும் தலைவணங்கி ஸுஜூது செய்யக் கூடாது என்று மனிதர்களிடம் வற்புறுத்திக் கூறுகிறான். ஆனால் மலக்குகளை ஆதமிற்கு ஸுஜூது செய்யச் சொல்கிறான். இது மிகவும் முரண்பட்ட நிலைப்பாடு. அப்படி ஒரு ஆணை இடப்பட்டதற்கான காரணம் என்ன? (ஷிர்க் எனப்படும்  இணைவைத்தலைத் துவக்கி வைத்ததே அல்லாஹ்தான்!)

                    மலக்குகளை விட மனிதன் உயர்ந்தவன் என்றாலோ  அல்லது மலக்குகள் ஸுஜூது செய்யுமளவிற்கு மனிதன் தகுதியானவன் என்றாலோ இன்றும் மனிதர்களுக்கு ஸுஜூது செய்து பணிவிடைகள் செய்ய மலக்குகளைப் பணித்திருப்பான். எனவே மலக்குகளை ஆதமிற்கு ஸுஜூது செய்யப் பணித்ததின் நோக்கம்,

                    மலக்குகளை இழிவுபடுத்தி தண்டிப்பது மட்டுமே! அதனால்தான் இவ்விடத்தில் இப்லீஸ் தகுதியைப் பற்றி பேசுகிறான்.

                    மலக்குகள்  துடுக்குத்தனமாக பதிலளித்து மாட்டிக் கொண்டனர்.     சரி… இப்லீஸ் என்ன செய்தான்?  இந்தக்  குழப்பத்தில் இப்லீஸ் எப்படி நுழைந்தான்?

                    இந்த தண்டனை தனக்குப் பொருந்ததென்று இப்லீஸ் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறதே? எனவேதான் நான் ஆதமைவிட நான் உயர்ந்தவன் என்ற பதிலைக் கூறுகிறான். இருப்பினும் அல்லாஹ், இப்லீஸை தண்டிக்கவில்லை. இங்கிருந்து வெளியேறி விடவேண்டுமென உத்தரவிடுகிறான். அவனுக்கு அவகாசமும் அளிக்கிறான். இந்த அவகாசம் முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தனை நீண்ட அவகாசம் தற்பெருமையை திருத்திக் கொள்வதற்கு அல்ல. மேலும் தவறுகள் செய்து மனிதர்களை வழி கெடுப்பதற்காகத்தான். ஆனால் இப்லீஸ் வெளியேறாமல் சொர்க்கத்தின் தோட்டங்களில் நுழைந்து திரிகிறான். அல்லாஹ்வும் இப்லீஸைத் தடுக்க எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை !

அல்லாஹ், ஆதாமிடம் கூறியதை நினைவு கூறுங்கள்,

“சுவர்கத்தில் உங்கள் விருப்பம் போல இருங்கள் ஆனால் அந்த தடுக்கப்பட்ட மரத்தை நெருங்காதீர்கள் மீறினால் சபிக்கப்பட்டவராவீர்”

 “நீர் பசியில்லாதிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் இதில் உண்டு.”

“இதில் நிச்சயமாக நீர் தகிக்கவும் மாட்டீர், வெயிலில் படவுமாட்டீர்.”

சைத்தான் அவருக்கு மனதில் ஊச்சாட்டத்தை உண்டாக்கினான்; ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அவன் கேட்டான்.

(குர்ஆன் 2:35, 7:19, 20: 118 – 123)

                இப்லீஸ்ன் மோசடியால் மீறினர், விளைவு அவர்களது வெட்கத்தலங்கள் வெளியாயின. இதன் விளைவு காமம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனிதர்களின் பெருக்கம், குழப்பம். ஆதம் தம்பதியருக்கு  தடைசெய்யப்பட்ட பழத்தைச் சுவைக்கும் வரையிலும் தங்களது ஆடையற்ற நிலையைப்பற்றி எதும் தெரியவில்லையென்பது குர்ஆன் நமக்குத் தெரிவிக்கும் தெளிவான செய்தி. அவர்களுக்கு எதுவுமே தெரியாது பொருட்களின் பெயர்களையும், மன்னிப்பு கோரும்விதம் கூட அல்லாஹ்தான் கற்றுக் கொடுக்கிறான். அல்லாஹ், ஆதமிற்கு விலங்குகளின் பெயர்களையோ, தாவர வகைகளின் பெயர்களையோ அல்லது இதர படைப்பினங்களின் பெயர்களையோ கற்றுக் கொடுக்கவில்லை. பிற்காலத்தில் பூமியில் மனிதர்கள் தங்களின் தேவைகளுக்கேற்ப உருவாக்கிக் கொண்ட பொருட்களின் பெயர்களையே கற்றுக் கொடுக்கிறான்.

                “ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்ற இப்லீஸின் கேள்வியை கூர்ந்து கவனியுங்கள். இப்லீஸ், ஆதமை சூழ்ச்சி செய்து ஏமாற்றினான் என்பது அல்லாஹ்வின் குற்றச்சாட்டு. உதாரணத்திற்கு நம்மை ஒருவர் சூழ்ச்சி செய்வதாகக் கொள்வோம். சூழ்ச்சி  செய்யக் கூடிய அந்த நபரின் தந்திர வார்த்தைகளை  நம் அறிவிற்கு எட்டிய வரை ஆய்வு  செய்து, அந்த செய்திகளை உண்மையென்று ஏற்றுக் கொண்ட பிறகே சூழ்ச்சிக்கு ஆளாகி பின்னர் வருந்துவோம். இங்கு சூழ்சிக்காரரின் வார்த்தைகளை நம்புதல் என்பது அவர் கூறும் செய்திகளை ஏதோ ஒருவிதத்தில் அது ஆய்வு செய்த பின்னரே நிகழ்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

                “ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிந்து விடாத ஆட்சியையும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்ற வார்த்தைகளில் மறைந்துள்ள  மரணத்தையும், ஆட்சி அதிகார வீழ்ச்சியைப் பற்றியும் ஆதமிற்கு எதுவும் தெரியாது அவருக்கு அதற்கான  அவசியமுமில்லை.

                செர்க்கத்தின் பூங்காவில் வசித்து வரும் ஆதம், தான் மரணமடைந்து விடுவோம் என்று எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு மரணத்தைப் பற்றியும், வீழ்ந்த  ஆட்சிகளைப் பற்றியும் எதுவும் தெரியாது. அல்லாஹ், ஆதம் தம்பதியருக்கு உணவுக் கட்டுப்பாட்டை மட்டுமே விதித்திருந்தான். உண்மை இப்படி இருக்கையில், அவருக்கு நித்திய வாழ்வும், வீழ்ந்து விடாத ஆட்சியின் அவசியம் என்ன? செர்க்கத்தில் ஒரு அழிந்து விடாத ஆட்சியை செலுத்த விரும்பினாரா? அப்படி ஒரு ஆட்சியை நிறுவினாலும் அவர் ஆளப்போவது யாரை?

குர்ஆனின் செய்திகளின்படி, அந்த நேரத்தில் ஆதமிற்குத் தெரிந்தது தன்னைப் படைத்த அல்லாஹ், தன்னை ஸுஜூது செய்த மலக்குகள், தனது விலா எழும்பிலிருந்துப் படைக்கப்பட்ட தனது மனைவி, இறுதியாக ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கும் இப்லீஸ் மேலும் அல்லாஹ்வால் கற்றுத் தரப்பட்ட பொருட்களின் பெயர்கள். இதில் பொருட்கள் அஃறிணை அதை விட்டு விடலாம்.  ஆதமின் மனைவி அவருக்குக் கட்டுப்பட்டவர் அவரையும் விட்டு விடலாம். எஞ்சியிருப்பது அல்லாஹ், மலக்குகள் மற்றும் இப்லீஸ் இவர்களில் யார் மீது அழிந்து விடாத ஆட்சியைச் செலுத்த ஆதம் விரும்பினார்? ஒருவேளை ஆதம் இறந்தாலும் அதே இடத்திற்குத்தானே வரப் போகிறார்?

அல்லது

அல்லாஹ்வால் பூமியில் இறக்கி விடப்பட்டால் அங்கு நித்திய வாழ்வையும், அழிந்து விடாத ஆட்சியையும் நிறுவுவதற்கு தயாரகிக் கொண்டிருந்தாரா? பூமியின் வாழ்க்கையைப்பற்றி அவருக்கு அனுபவம் ஏதேனும் இருந்ததா? குர்ஆனின் விளக்கங்கள் முட்டாள்த் தனமாகத் தெரியவில்லையா?

தடைசெய்யப்பட்ட பழத்தைச் சுவைக்கும் வரை அல்லாஹ் எங்கே போயிருந்தான்? அவர்கள் இருவரும் பழத்தைசுவைத்து தங்களது வெட்கத் தலங்களை அறிந்து கொள்ளும் வரை அல்லாஹ் வரவில்லை. பிறகு அவர்களைப் பார்த்து, “ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க பகைவனென்று முன்னமே உங்களிடம்  சொல்லவில்லையா?” என்று கேட்கிறான்.

                ஆதம் ஒரு அறிவுக் குருடர். குர்ஆனின் தகவல்களின் படி ஆதம் ஒரு குழந்தையல்ல! முழு வளர்ச்சியடைந் ஒரு ஆண். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அறுபது முழ உயரம் கொண்ட  அறிவில்லா ஆண் (பூதம்?). இப்லீஸைப் பற்றியும், அவனால் நிகழவிருக்கும் ஆபத்துக்களைப்பற்றியும் அவருக்கு ஒன்றுமே தெரியாது. அல்லாஹ்வின் ஆணையை ஏற்க மறுத்து இப்லீஸ் எதிர்வாதம் புரிந்து கொண்டிருந்த பொழுது, பிரச்சினையின் மூல காரணமாக இருந்த ஆதம், அப்பொழுது அங்கிருந்த போதும், தனது எதிரியான இப்லீஸை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை.  ஆதம், இப்லீஸைப்பற்றி அறிந்து கொண்டவராக இருப்பின் நித்திய வாழ்வையும், வீழ்ந்து விடாத ஆட்சியின் மகத்துவத்தைப் பற்றியும் இப்லீஸ் கூறும் பொழுது எச்சரிக்கையடைந்திருப்பார். ஆதம் தம்பதிகள் இப்லீஸைத் தங்களது இரு கண்களால் கண்டதாக் குர்ஆனும் கூறவில்லை.  இத்தகையதொரு அறிவுக் குருடரிடம் “ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க பகைவனென்று முன்னமே உங்களிடம்  சொல்லவில்லையா?” என்று கேட்பதின் பயன் என்ன?

பிறகு, ஆதம் தன் தவறை உணர்ந்ததாகக் குர்ஆன் கூறுகிறது. ஆனால் அதை மனப்பூர்வமான உணர்வை அல்லாஹ் ஏற்கவில்லை. மன்னிப்புக் கேட்பதற்கு என்னென்ன வார்த்தைகளை எப்படி உபயோகிக் வேண்டும் என்று தனது பயிற்சி வகுப்பை மீண்டும் துவக்குகிறான். ஆதம் கற்றுத் தேர்ந்த பின்னர் அல்லாஹ்வால் கற்றுத் தரப்பட்ட மன்னிப்புரையை அல்லாஹ்விடம் வாசித்துக் காண்பிக்கிறார். அல்லாஹ், ஏற்றுக் கொண்டதாகக் கூறினாலும் தண்டனையை ரத்து செய்ய விரும்பவில்லை. ஆதம் தம்பதியரைத் தண்டிப்பதையே அவனது மனதிற்கு அழகாகத் தோன்றியது.

அல்லாஹ்விற்கு இப்லீஸைத் தண்டிப்பதற்கும், நேர் வழிப்படுத்துவதற்கும் ஏனோ விருப்பமில்லாமல் போனது. மாறாக ஆதமின் சந்ததிகளை வழிகெடுக்க அனுமதியையும், ஆதிகாரத்தையும், சக்தியையும் இப்லீஸிற்கு வழங்கி, அதற்குத் தேவையான காலஅவகாசத்தைஅளவில்லாமல் வழங்குகிறான்.

                இன்னொரு குழப்பம். ஆதம் முதலில் மன்னிப்பு கேட்ட பொழுது அல்லாஹ் அதை ஏற்கவில்லை. செய்வதறியது திகைத்த ஆதம் வேறொரு யுக்தியை செயல்படுத்துகிறார். மறுமுறை அல்லாஹ்வை மன்னிப்பை கேட்டு பிரார்த்திக்கும் பொழுது “முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் மன்னிக்க வேண்டுமெனகேட்க அல்லாஹ்வும் ஆதம் (அலை) அவர்களைப் பொருந்திக் கொள்கிறான்.

பிறகு அல்லாஹ் ஆதமை நோக்கி, “உங்களுக்கு முஹம்மதை எப்படி தெரியும்?” என்று கேட்கிறான். அதற்கு ஆதம்,  “நான் சொர்கத்திலிருந்த பொழுது உன்னுடைய அர்ஷ்ல் லாஹிலாஹா இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலில்லாஹி என எழுதியிருந்ததைக் கண்டேன். எனவே முஹம்மது உனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும் என நினைத்து அவர் பொருட்டால் மன்னிக்க  கோரினேன் என்றார்.

அல்லாஹ் முதலில் படைத்த மனிதன் ஆதம் (அலை) அவர்களை ஆனால் முதலில் படைத்த ரூஹ் முஹம்மது நபி அவர்களுடையது என்று பல மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறேன். அந்த ஒளியானது (உயிர்) ஆதம் (அலை) அவர்களிடமிருந்து  பயணத்தை துவங்கி ஒவ்வொரு நபியின் முதுகந்தண்டுகளில் பாதுகாக்கப்பட்டு இறுதியாக முஹம்மது நபி அவர்களின் தந்தையார் அப்துல்லா அவர்களை வந்தடைந்தது. அந்த ஒளி அப்துல்லா அவர்களின் முகத்தில் பிரகாசித்தது  எனவே பல பெண்கள் அப்துல்லா அவர்களை திருமணம் செய்ய போட்டியிட்டனர். ஆமீனா அவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது என்கின்றனர்.

சிலர் இது ஆதாரமற்ற செய்தி என்கின்றனர் பர்னபாஸ் சுவிசேஷம் கூட அல்லாஹ்வின் அர்ஷில் பிரகாஷமான எழுத்துக்களைக் கண்டதாகவும் அதன் பொருள் இன்றுள்ள கலீமாவை பிரதிபளிப்பதாகவும் கூறுகிறது .

ஆதாமை, அல்லாஹ் தன்னுடைய இரு கைகளால் உருவாக்கிக் கொண்டிருந்த பொழுது தானும் அங்கே இருந்ததாக முஹம்மது நபி கூறியதாகவும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

Hadith Qudsi-ல் முஹம்மது நபி கூறுகிறார், உம்மைப் படைக்கவில்லையென்றால் இப்பிரபஞ்சத்தையே படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாகக் கூறுகிறார்.

(Were it not for you, I would not have created the universe -Hadith Qudsi)

The very first thing that Allah Almighty ever created was my soul.”

“First of all things, the Lord created was my mind.”

இப்பொழுது திரைவிலகிவிட்டது. நமக்குக் காட்சிகள் தெளிவாகத் தெரிகிறது.

ஒருவேளை, ஆதம் தம்பதிகளும், இப்லீஸும் அல்லாஹ்வின் ஆணைகளுக்கு அடிபணிந்து நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டிருந்தால் ஆதமைப் படைப்பதற்கு முன்பே படைக்கப்பட்ட வானங்களும், பூமிகளும் சொர்க்கங்களும் நரகங்களும் குறிப்பாக சொல்வதென்றால் முஹம்மது நபியின் ரூஹ், மற்றுமுள்ள ஒரே தவனையில் படைக்கப்பட்ட இதர  படைப்பினங்களின் உயிர்களை என்ன செய்வது? ஆதம் சொர்கத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் முஹம்மது நபியின் மகத்தான சேவைகளை மனிதகுலம் எப்படி அடைய முடியும்?

                எனவே இந்த நாடகத்தின் மூலம், அல்லாஹ்வுடைய பிரம்மாண்ட திட்டத்தின் முதல் பகுதி நிறைவேறியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இந்த திட்டத்தில் ஆதமும், இப்லீஸும் அல்லாஹ்வின் கருவிகளே என்பதை எளிதாக அறியலாம்.

மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம்.

பிறகு அவனைக் கீழானவர்களிலும் மிக கீழானவனாய் நாம் ஆக்கினோம்.

(குர்ஆன்   95: 4-5)

ஆதம் தம்பதியருக்கு  சொர்கம் தற்காலிகமே ! பூமியே மனிதர்களுக்கான இருப்பிடம் என்பதை  குர்ஆன்   2:30 வசனம் தெளிவாக உணர்த்துகிறது.  மனிதர்களை பூமியில் படைப்பது மட்டுமல்லாமல் அவனது  மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் அல்லாஹ்வின்  நாட்டமே  என்பதை விதியைப்பற்றி கூறம் குர்ஆன்  வசனங்கள்  2:6-7, 2:272, 4:78, 6:9, 6:35, 6:126, 7:179, 13:33, 16:93, 10:35, 10:100,11:118, 11:119, 14:4, 32:13, 35:8, 36:7, 47:23, 76:30 மிகத் தெளிவாக உறுதி செய்கிறது. (விதியின் விளையாட்டை அடுத்துவரும் தலைப்புகளிலும் காணலாம்).

புஹாரி  ஹதீஸ் : 6614       

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள் ஆதம் அவர்களே, எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள், சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் மூசாவே, அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான், அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் வேதத்தை) வரைந்தான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் வித்ததுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா? என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள், தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி)

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான்.

நூல்கள் : முஸ்லிம், திர்மிதி

        இங்கு ஒரு ஹதீஸ் படைப்பினத்தின் விதி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டதாகவும், மற்றொன்று ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து விதிகளையும் தீர்மானித்துவிட்டதாக கூறுகிறது இவையிரண்டுமே மிக நம்பகமான ஹதீஸ்களே. நாற்பது ஆண்டோ  அல்லது ஐம்பதாயிரம் ஆண்டோ படைப்பினங்கள் விதியுடன்தான் படைக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. எனவே, ஆதம் (அலை) அவர்களின் தவறு ஏதுமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் மிகத் தெளிவாக  விளக்குகிறது. இப்லீஸ் தற்பெருமை கூறி அல்லாஹ்வின் ஆணையை ஏற்கவில்லை என்றும், மனிதனின் மீது இப்லீஸ் கொண்ட கோபத்தின் காரணமாக,  அவன் (இப்லீஸ்) செய்த சூழ்ச்சியாலே மனிதன் இழிநிலையடைந்தான் என்று குறை கூறுவது அல்லாஹ்  தன்னைதானே குறை கூறுவதாகவே  பொருள் விளங்குகிறது. ஆதமை படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ்வால் இறுதி செய்யப்பட்ட விதியின் பயனால் விளைந்தவைகளுக்காக, ஆதாம் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்?

இப்லீஸாஅல்லாஹ்வா?

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

முகம்மதின் குழந்தைத் திருமணம்

முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

சக்களத்திச் சண்டையும் வேத வெளிப்பாடும்

தகாத விருப்பமும் வேத வெளிப்பாடும்

சஹாபாக்கள் மீது சந்தேகமும், வன்புணர்ச்சியும் வேதத்தை வெளிப்படுத்தின

இஸ்லாம் போதிப்பது ஒழுக்க நெறிகளையா? ஒழுக்கக் கேட்டையா?

குர் ஆனும் முரண்பாடுகளும்

பூமியின் வடிவத்தில் அல்லாஹ்வுக்கு ஏன் இத்தனை குழப்பம்

மூக்கிலிருந்து உதிக்கும் சூரியன்

5 பதில்கள் to “மனிதனின் ஆரம்பம் குறித்த குர் ஆனின் குழப்பங்கள்”

  1. iniyavan ஜூன் 16, 2012 இல் 10:48 முப #

    சூப்பர் பவர் சூப்பராயாஅல்லாவுக்கு இவ்வளவு குழப்பமா?இப்படிப்பட்ட கதையை ஏன் இதுவரையில் எந்த கதாசிரியரும் நெருங்கவில்லை? படம் எடுத்து காசுபண்ணியிருக்கலாமே யாருக்கும் யோசனையில்லையோ?

  2. Rahamathulla நவம்பர் 2, 2012 இல் 10:54 பிப #

    டேய் இப்லிஸ் …,
    இப்படி ஒரு உலகம் உருவாக வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்துவிட்டால் அது நடந்துவிடும் .

    நீ கூறிய அணைத்து விசயங்களும் திருகுரான் மூலம் அல்லாஹ் மனிதருக்கு கூறிய உண்மைகள்.

    உன்னை இந்த அளவிற்கு யோசிக்க வைத்தது அல்லாஹ் கொடுத்த பகுத்தறிவு என்பதை மறந்து விடாதே….

    நீ மேல்கூறிய கருத்தில் அல்லாஹ் கூறும் உண்மை அல்லாஹ்வே கூறியது ,அவன் அனைத்தையும் அறிந்தவன் …..அவன் அவாறு செய்யவில்லை என்றால் நீயும்& நானும் இந்த உலகத்தில் இருந்துருக்க முடியாது .அல்லாஹ் தான் நினைத்திருந்தால் நம்மை சுவர்கத்திலே அல்லது அவனுடனே வைத்திருக்கலாம் . அவன் தன் படைப்பை சோதிக்கிறான் .
    நன்மை& தீமை இரண்டிற்கும் அவற்றின் உவமையை அவனே உருவாகினான் . இப்படிஎல்லாம் பேசுற நீ யோக்கியமா..

    அனைத்தையும் கட்டி ஆளும் என் அல்லாஹ்விற்கு மட்டுமே இது உரித்தான ஆளுமை.படிவதும் &அவனுக்கு அஞ்சுவதும் நமது கடமை ….மறந்துவிடாதே

    மறைவான விஷயங்கள் அனைத்தையும் அவன் நமக்கு அறிவிக்கவில்லை என்பதை முதல்லில் தெரிஞ்கிகோ,

    உண்மை விளங்காமல் உளறுவதை நிறுத்து ..நிந்திப்பது அல்லாஹ்வை ..அவன் நினைத்தால் கண் மூடி திறபதர்க்குள் காணாமல் போய்விடுவாய்..

    • தஜ்ஜால் திசெம்பர் 4, 2012 இல் 4:13 பிப #

      ரஹ்மத்துல்லா, முதலில் சற்று அமைதியாக இருங்கள்.
      ///உன்னை இந்த அளவிற்கு யோசிக்க வைத்தது அல்லாஹ் கொடுத்த பகுத்தறிவு என்பதை மறந்து விடாதே…. /// நான் பகுத்தறியுடன் யோசித்துதான் எழுதுயிருக்கிறேன் என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றிகள். இப்படியே தொடர்வீர்களென்றால் முழு உண்மையும் விளங்கிவிடும்.
      //நன்மை& தீமை இரண்டிற்கும் அவற்றின் உவமையை அவனே உருவாகினான் . இப்படிஎல்லாம் பேசுற நீ யோக்கியமா..// தீமையை அவன்தான் உருவாக்கினான் இல்லையா? கடவுளேதீமையைச் செய்யத் துண்டிவிடும் பொழுது பலவீனமான மனிதன் என்ன செய்யமுடியும்? பிறகுநான் எப்படி நான் யோக்கியமாக இருக்க முடியும்? தெரியாமல்தான் கேட்கிறேன் எனது யோக்கியத்தில் என்ன குறை கண்டீர்கள்? இபொழுது நீங்கள் என்னைத் திட்டுவதாக நினைத்துக் கொண்டு அல்லாவின் ஆளுமையில் தலையிடுகிறீகள், உங்களுக்காக சிறப்பு நரகம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
      ////படிவதும் &அவனுக்கு அஞ்சுவதும் நமது கடமை ….மறந்துவிடாதே///நண்பரே மீண்டும் மீண்டும் அல்லாஹ்வின் ஆளுமையில் தலையிடுகிறீகள் இது நல்லதற்கல்ல. யார் யாரெல்லாம் தனக்கு பணியவேண்டு, அஞ்சவேண்டுமென்பதெல்லாம் அல்லாஹ்வின் மஹ்ஃபூல் ஏட்டிலுள்ள விடயம் நீங்களும் நானும் ஒன்றும் செய்துவிட முடியாது. அதைத்தானே கட்டுரையில் எழுதியிருக்கிறேன் மீண்டுமொரு முறை வாசியுங்கள்.
      /////அவன் நினைத்தால் கண் மூடி திறபதர்க்குள் காணாமல் போய்விடுவாய்..// அவன் ஏன் இன்னும் கண்மூடித்திறக்கவில்லை? அவன் கண்ணில் ஏதேனும் பிரச்சினையா?

Trackbacks/Pingbacks

  1. விதியா? மதியா? என்னதான் கூறுகிறது குர் ஆன் « - ஜனவரி 28, 2012

    […] மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் கு… […]

  2. கிருஸ்தவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் « - ஜூலை 11, 2012

    […] மனிதனின் ஆரம்பம் குறித்த குரானின் கு… […]

பின்னூட்டமொன்றை இடுக