முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்

6 நவ்

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 11

 

சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள்,  ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக குர் ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவ்வாறு அருளப்பட்ட வசனங்களின் முழுமையான தொகுப்பு குர்ஆன். 

புகாரி ஹதீஸ் : 0003          

ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். அதற்காக (பலநாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, ஓதுவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக அவனே மனிதனை அலக் (அட்டை போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி எனும் இறைவசனங்களை (96:1-5) அவர் ஓதினார். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்„) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள் எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள் (சிரமப் படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள் வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள் சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள். -வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ்  நாடிய அளவிற்கு ஹீப்ரு  மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.

இவ்வாறாக அவ்வப்போது தேவைகளுக்கேற்ப தீர்ப்புகளாகவும், அனுமதிகளாகவும், விதிமுறைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் குர்ஆன் வசனங்கள் வஹீயாக  வெளிப்பட்டது.

முஹம்மது நபியிடம் கொண்டு வரப்பட்டது இறைவனின் கட்டளைகள்தான் என்பதற்கும் செய்திகளைக் கொண்டு வந்தவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கும் உள்ள ஆதாரங்கள் என்ன?

குர்ஆனின் வசனங்கள் நேடியாக மனிதர்களை வந்து அடையவில்லை. அல்லாஹ் கூறியதாக ஜிப்ரீல் என்ற வானவர் தன்னிடம் கூறியதாக முஹம்மது நபி கூறிக் கொண்டார். ஜிப்ரீலும் முஹம்மது நபியும் உரையாடியதை நேரடியாக கண்களால் கண்டவர்கள் ஒருவருமில்லை.

 Ibn Ishaq’s Sirat Rasul Allah, translated by Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, Page.106-153)

        இத்தகைய திடீர்த் தோற்றங்களினாலும், அசரீரீ குரல்களினாலும் மிகுந்த மனக் குழப்பமடைந்து, வாழ்நாளின் ஏனைய பகுதிகளையெல்லாம் மெக்கா நகரின் முட்டாளாக கழிக்க விரும்பாத முஹம்மது, மலை உச்சியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்:

“இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகிலேயே நான் மிகவும் வெறுத்ததெல்லாம் இது போன்றதொரு ஆவேச நிலையடையும் கவிஞன் அல்லது ஆவியின் ஆளுமைக்குட்பட்ட மனிதனையே. இனி நாசமாய்ப் போவேனாக என்று நினைத்துக் கொண்டேன். ஜின்னால் பீடிக்கப்பட்டவன் அல்லது பைத்தியக்கார கவிஞனென்று என்னை குரைஷிகள் ஏளனம் செய்ய அனுமதிக்க மாட்டேன்! மலைஉச்சியிலிருந்து வீழ்ந்து எனது உயிரைத் துறப்பேன், இந்தத் துயரநிலையிலிருந்து விடுதலை பெறுவேன்”

        முஹம்மது கூறுகின்றார்: “ஆகவே, இந்த முடிவை நிறைவேற்றும் வண்ணம் நான் மேலே செல்லலானேன். அப்போது பாதிவழியில், வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. ‘ஓ முஹம்மதுவே! நீரே அல்லாஹ்வின் தூதர், நான்தான் ஜிப்ரீல்” என்றது.” அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன், முன்னேயும் செல்லாமல் பின்னேயும் போகாமல். அந்த நேரத்தில் கதீஜா தன்னுடைய ஆட்களை மெக்கா நகருக்கு வெளியே அனுப்பி என்னைத் தேடிப் பிடித்து அழைத்து வருமாறு கூறியிருந்தார். இந்நிலையில், அவர் (ஜிப்ரீல்) என்னிடமிருந்து விலகினார், நானும் அவரிடமிருந்து மீண்டேன்”

        இத்தகைய ‘வஹீ வெளிப்பாடுகள்’ அடிக்கடி தொடர்ந்து ஏற்பட ஆரம்பித்த நிலையில், கதீஜாதான் அவரை ஆறுதல்படுத்தி, அவருக்கு ஏற்படும் வஹீ வெளிப்பாடு நிலைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனஉறுதியை முஹம்மதுவுக்கு வழங்கினார். இதையெல்லாம் விடவும் (கதீஜாவின்) முக்கியமானதொரு பங்களிப்பு என்னவென்றால், முஹம்மதுவுக்கே தமக்கு ஏற்படும் இந்த வஹீ குறித்த சந்தேகங்கள் இருந்த நேரத்தில், கதீஜா அவருக்கு தெம்பை ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்தார்.

        கதீஜா, முஹம்மதுவுக்கு நம்பிக்கையூட்டியவிதம் இவ்வாறிருந்தது. (முதல் வஹிக்குப் பிறகு) முஹம்மது வீடு திரும்பியபோது கதீஜாவிடம் கூறினார்: “கவியான அல்லது ஜின் பீடித்த நான் நாசமாய்ப் போவேனாக!”. ஆனால் கதீஜாவோ, “அபுல் காசிமே அல்லாஹ்விடம் நான் தஞ்சமடைகின்றேன்! உமது நிலை அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் உம்மை அந்த நிலைக்குத் தள்ள மாட்டான். உமது நேர்மை, நம்பகத்தன்மை, நற்பண்புகள், காருண்யம் ஆகியவற்றை அல்லாஹ் அறிவான். உண்மையிலேயே நீங்கள் எதையாவது கண்டிருக்கக் கூடும்” என்று கூறினார். அதற்கு முஹம்மது, “ஆம், நான் எதையோ கண்டது நிஜம்தான்” என்று பதிலளித்தார்.

        அடுத்தமுறை முஹம்மதுவுக்குள் அசரீரீ கேட்கும்போது தம்மிடம் சொல்லுமாறும், பின்னர் அது ஜிப்ரீலா அல்லது வேறு ஏதாவது வழக்கமான ஜின்னா என்று முடிவு செய்வோம் என்றும் அவர் முஹம்மதுவைக் கேட்டுக் கொண்டார்.

        அப்படியே மறுமுறை முஹம்மதுவுக்கு ஜிப்ரீல் காட்சி தந்தவுடன் “இதோ ஜிப்ரீல் வந்துவிட்டார்” என்று கதீஜாவை உடனே அழைத்தார்.  “எழுந்திருங்கள் !” என்று அவரை எழுப்பிய கதீஜா, “எழுந்து என் இடதுதொடைப் பக்கம் அமர்வீராக” என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. “என்ன இன்னும் அவரைக் காண்கிறீர்களா?” என்று கேட்க “ஆம்” என்றார் முகம்மது. “சரி, இப்போது வலதுதொடைப் பக்கம் வந்து அமர்வீராக!” என்று சொல்லி “இன்னும் உள்ளாரா?” என்று கேட்க “ஆம்” என்று பதில் சொன்னார் முஹம்மது.

        பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள முஹம்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் ஜிப்ரீலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா ஆடையை விலக்கினார். தம் அழகை வெளிக்காட்டி “இப்போது (ஜிப்ரீலைக்) காண்கிறீர்களா?” என்று கேட்க “இல்லை” என்றார் முகம்மது. “மகிழ்ச்சி கொள்ளுங்கள்  நீங்கள் கண்டது ஜிப்ரீலையே, சைத்தானை அல்ல!” என்று உறுதி செய்தார் கதீஜா.

        இதைத் தொடர்ந்து வர்ணிக்கும் இபின் இஷாக் இது குறித்து இரண்டம் நிலை ஹதீஸையும் சேர்த்துச் சொல்கிறார். அதன்படி கதீஜா நபியவர்களை உறவு கொள்ள அழைத்ததாகவும், அதைக் காண விரும்பாத ஜிப்ரீல் உடனே விலகிச் சென்றதாகவும்  அதைக் கேட்ட கதீஜா “இது உண்மையில் ஜிப்ரீலேயன்றி சைத்தானில்லை” என்று அறிவிக்கிறார் என அந்த ஹதீஸ் கூறுகிறது.

        அக்கால நம்பிக்கைப்படி, முஹம்மது கண்டது இச்சை மிகுந்த கெட்ட ஜின்னாய் இருக்குமாயின் அது கதீஜாவுடன் உறவு கொள்வதைக்  கண்டு களித்திருக்கும் என்றும், உலகவாழ்வை விரும்பாத ஜிப்ரீலுக்கு இக்காட்சியில் விருப்பமில்லாததால் நகர்ந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

        தனது மனைவி நடத்திய இந்தச் சோதனையின் மூலம் தாம் கண்டது ஜிப்ரீலையா என்ற முஹம்மதின் சந்தேகம் தீர்ந்தது. இதன்மூலம் தாமே இறைவனின் தூதர் என்று நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய முகம்மது அதன் பின்னர் தொடர்ந்து ஜிப்ரீலின் மூலம் வெளிப்பட்ட செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இவை உதவியாளர்களால் தொகுக்கப்பட்டுப் பின்னர் குர்ஆன் என்ற வேத புத்தகமானது.

 

புகாரி ஹதீஸ் :        3217          

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கின்றார் என்று கூறினார்கள். நான், வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கூறுனேன். ஆயிஷா (ரலி) அவர்கள் நீங்கள் என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.

முஹம்மது நபி அவர்களின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஆதரங்கள் ஒன்றுமில்லை…! இறைவன் தன்னுடைய கட்டளைகளை இன்றுவரை மனிதர்களுக்கு இப்படியோரு வலுவான சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே கூறுவது ஏனென்று புரியவில்லை. சரி, வஹீ எப்படியெல்லாம் வெளிப்பட்டது?

புகாரி ஹதீஸ் :  3215         

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) எப்படி வருகின்றது என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவையெல்லாம் (இப்படித்தான்) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக் கொண்ட நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.

ஆக, இன்றை சாமியார்களின் அருள்வாக்கு கூறும் முறையில்தான் குர்ஆன் வசனங்கள் வெளியாகியுள்ளது. இந்த அருள்வாக்கு முறையை அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மாபெரும் அற்புதம் என்கிறார் முஹம்மது நபி.

 

முஸ்லீம் ஹதீஸ் :217,   அத்தியாயம்: 1, பாடம்: 1.70

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).

“அற்புதங்கள் வழங்கப்படாத நபிமார்கள் இல்லை. அவ்வற்புதங்களைக் கண்ணுற்ற மனிதர்கள் (நபிமார்கள் கூறியவற்றை) நம்பினர். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பான வஹீயைத்தான் எனக்கான அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறேன். …”

 

அருள்வாக்கு சாமியார்கள் தங்களது சொந்த சரக்குகளை கடவுளின் பெயரில் அவிழ்த்து விடுவது நாம் தெளிவாக அறிந்த உண்மை. அருள்வாக்கு கூறுபவர்களுக்கும் முஹம்மது நபியின் “வஹீ”க்கும் உள்ள வேறுபாட்டை அறிய விரும்பினேன்.  சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்ததில் நான் உணர்ந்து கொண்ட உண்மைகளைக் கூறுகிறேன்.

 

மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்

 

ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து புனையப்பட்ட செய்தி… (புகாரி 2661, 3388, 4141, 4750, 4757) (பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை!)

புகாரி ஹதீஸ் -2661

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

…நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன், அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னாலில் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் – நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் பை பின் ஹலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

…அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள்.  அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி) தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார், வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும், அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்….

 

….அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன். சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும் ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறிவிட்டு ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில் அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம் அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம் அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் மீதாணயைக! நீங்கள் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். …..நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்….. நீங்கள் அதை நம்பப் போவதில்லை, நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது) (இதை) சகித்துக் கொள்வதே நல்லது நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (குர்ஆன் 12-83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும் திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்தவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே – வேதவெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவன் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை, அதற்குள் அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தெடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். நான் மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன்….

 

ஆயிஷாவின் மீதான இந்தக் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிற்கு முஹம்மது நபியின் மருமகன் அலீ பின் அபூதாலிப் அவர்களின் முடிவு வேறுவிதமாக இருந்துள்ளதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

 

புகாரி ஹதீஸ் :4142   

இப்னு ஷிஹாப்(முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்ததா என என்னிடம் வலீத் பின் அப்தில் மலிக் கேட்டார். நான், இல்லை (அலீ-ரலி-அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்ததைச் சேர்ந்த அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர் என்று பதிலளித்தேன். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்டபோது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத முஸல்லிமன் – அலீ – ரலி – அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிகபட்சமாகக் கூறவில்லை).

(ஆயிஷாவின் மீது கூறப்பட்ட கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டை அலீ அவர்கள் மறுக்கவில்லை. மேலும் ஆயிஷாவை விவாகரத்து செய்ய முஹம்மது நபி ஆலோசனை செய்த பொழுதும் அலீ அதைத் தடுக்க விரும்பவில்லை. நான்தேடலின் ஆரம்பத்தில் கூறியதை நினைபடுத்திக் கொள்ளுங்கள். தனது மருமகனான அலீ அவர்களை எதிர்த்து போர்க்களம் சென்ற ஆயிஷவின் செயலுக்கு அடிப்படைக் காரணம் இதுதானா?)

 முஹம்மது நபி  அவர்களின் தோழர்கள் மனைவி ஜைனப், பணிப்பெண் பரீரா  இன்னும் பலர் ஆயிஷா  அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அகில உலகத்திற்கே அருட்கொடையாக வந்த நபி  அவர்களுக்கு தன் காதல் மனைவி ஆயிஷா  அவர்கள் மீது ஏன் இல்லாமல் போனது?. தன்னுடைய ரசூல்(தூதர்) தவறான முடிவை எடுக்க போகிறார் என்பதை இவ்வளவு சாட்சியங்கள் கிடைத்த பிறகே அல்லாஹ்விற்கும் தெரிகிறது.

24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; அ(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.

24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?

24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.

24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

மற்றவர்களை நோக்கி “இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?“, “இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?” என்று கேட்கும் அல்லாஹ், இந்த அவதூறு செய்தியை உண்மையென நம்பி விவாகரத்து வரை சென்ற முஹம்மது நபியை அல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்?

முஹம்மது நபி மனைவியின் மீது சந்தேக குணமுடையவர் என்பதை சில ஹதீஸ்கள் உறுதி செய்கிறது

புகாரி ஹதீஸ் -5102

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அந்த மனிதர் அங்கு இருந்ததை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்

புகாரி ஹதீஸ் :  3330         

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டார்கள்.”

 ஊரார் ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், ஆயிஷாவின் மீது முதன்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டியவர் யார்?  முஹம்மது நபியா? இல்லை மதீனா வாசிகளா?

ஆயிஷாவின் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான ஹதீஸ் பலவிதமான கேள்விகளை தூண்டுகிறது.

  •   ஆயிஷா இயற்கைத் தேவைகளுக்காக சென்றுள்ளார் என்பது படையினர் தெளிவாகவே அறிவார்கள். தங்களின் உயிருக்கும் மேலான தலைவரின் காதல் மனைவி தன்னுடைய தேவைகளை முடித்து திரும்பி விட்டாரா என்று உறுதி செய்ய மாட்டார்களா ?
  •   படைவீரர்கள் கவனக் குறைவுடன் செயல்பட்டனர் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். படைபரிவாரங்கள் மதீனா சென்றடையும் வரை, முஹம்மது நபி  அவர்கள் தன்னால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அழைத்து வரப்பட்ட மனைவியின் மீது கவனம் செலுத்த அளவிற்கு கவனக்குறைவை ஏற்படுத்தியது எது?
  •   ஒரு படை தன் பரிவரங்களுடனும், போரில் கைப்பற்றப்பட்ட  600 அடிமைகள், 2000 ஒட்டகங்கள், 5000 கால்நடைகள் இன்னும் ஏராளமான ஆயுதங்களுடன்  உள்ள முகாம் இடம் மாற தேவைப்படும் கால அவகாசம் மிக அதிகம். ஆயிஷா அவ்வளவு காலம் கடத்தியது ஏன்?
  •   மேலும்  இரவு தங்குவதற்காகவே படைமுகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆயிஷா தற்செயலாக படையினரை தவறவிட்டதாக கூறுவது முரண்படுகிறது.
  •   அல்லாஹ்வும், முஹம்மது நபி  அவர்களும் உண்மையை உணர ஒரு மாதகாலம் கடத்தியது எதற்காக?

 

இவைகளுக்கு சுருக்கமான பதில்கள்

  •   நபிக்கு, ஆயிஷாவின் நினைவின்றி போனதற்கு  காரணம் புதிதாக கைப்பற்றப்பட்ட பெண்  ஜுவாரியா மீது ஏற்பட்ட மோகம்.
  • ஜுவாரியாவின் பக்கம் சாய்ந்துவிட்டார் என்று நபியின் மீது ஆயிஷா கொண்ட கோபம். ஏனென்றால் நபி – ஜுவாரியா சந்திப்பை ஆயிஷா முதலிலிருந்தே விரும்பவில்லை
  • ஆயிஷாவின் கற்பின் மீது, நபி  கொண்ட சந்தேகம்.
  • ஆயிஷாவின் மாதவிலக்கை வைத்து, அவரது பத்தினி தனத்தைப் பற்றி முடிவெடுக்க.

சில Instant வேதவெளிப்பாடுகள்

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ என்னுமிடத்திலிருந்த கால்வாய் விஷயத்தில் முஹம்மது நபியின் (அன்சாரித்) தோழர் ஒருவருவருக்கும் முஹம்மது நபியின் உறவினரான ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது. அந்த அன்சாரித் தோழர், ‘தண்ணீரைத் திறந்து ஓடவிடு” என்று கூறினார். ஸுபைர் (ரலி) ‘தண்ணீரைத்திறந்து விட) மறுத்துவிட்டார்கள். இந்தத் தகராறு முஹம்மது நபியிடம் பஞ்சாயத்திற்கு வந்தது.  முஹம்மது நபி கூறிய தீர்ப்பு ஸுபைருக்கு சாதமாக இருந்தது. தீர்ப்பில் அதிருப்த்தியடைந்த அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, ‘உங்கள் அத்தை மகன் என்பதால் அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறி சிவந்து விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, ‘உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகைளச் சென்றைடயும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றுகூறினார்கள்.

அல்லாஹ்வால் அமைதியாய் இருக்க முடியவில்லை உடனே இறக்கிவிட்டான் வஹீயை!

புகாரி ஹதீஸ்- 2359

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது

‘இறைவன் மீதாணையாக! ‘(முஹம்மேத!) உங்களுடைய இறைவன் மீதுசத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’

(குர்ஆன் 04:65)

திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்” என்று ஸுபைர் (ரலி) கூறினார்கள்.

 

முஹம்மது நபி அவர்களின் மனைவியர்கள் தங்களின் இயற்கை தேவைகளுக்காக இரவு வேளைகளில் திறந்தவெளியில் வருவதை உமர் அவர்கள்  காண்கிறார்.  எந்தக் காரணத்திற்காகவும் பெண்கள் வெளியில் வருவதை அவர் விரும்பவில்லை.  அப்படியே வந்தாலும் அப் பெண்கள் தங்களை இனம் காண முடியாதவாறு  கடுமையாக மறைத்துக் கொள்ள வேண்டுமென்று  விரும்பினார்

புகாரி ஹதீஸ்- 4795

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.


பெண்களைப் பர்தாவுக்குள் மூடிவைக்கப்பட வேண்டிய பொருள் என்ற உமர் நச்சரித்துக் கூறிய  கருத்துக்களையே அல்லாஹ், முஹம்மது நபி அவர்களிடம் வஹீயாக அனுப்பினான் (குர்ஆன் 33:33,59). அதன் காரணமாகவே சவ்தா பர்தாவுடன் கழிப்பிடத்திற்கும் செல்கிறார். அங்கும் விடாது பின்தொடர்ந்து வந்து பர்தாவைப்பற்றி கூறுவதிலிருந்து உமர் அவர்களின் நச்சரிப்பின் வலிமையைப் புரிந்துகொள்ளலாம். இவரது வேறு சில நச்சரிப்புகளும் உடனடியாய் வஹீயாக வெளிப்பட்டுள்ளது. அவைகளிலிருந்து ஒன்றைக் காணலாம்,

புஹாரி ஹதீஸ் : 1269

இப்னு உமர் (ரலி ).அவர்கள் கூறியதாவது

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான்.அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்கேள! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடேன நபி (ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி) நபி (ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்கைளத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெதடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்கு பாவமன்னிப்பு தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்பு தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (குரான் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே “அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் ஜனாஸா தொழ வேண்டாம்” என்ற (குரான் 09:84) வசனம் அருளப்பட்டது.

எனக்கு பிறகு ஒருவரை அல்லாஹ் நபியாக தேர்வு செய்தால், அது நிச்சயமாக உமராகத்தான் இருப்பார் என முஹம்மது நபி அவர்களும் பெருமை பாராட்டுகிறார்.

 

புஹாரி ஹதீஸ் : 2831

அல்பராஉ பின் ஆஸிஃப்  (ரலி ) கூறியதாவது.

”இறை நம்பிக்கை கொண்டோரில் (அறப் போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும், இறைவழியில் தம் உடைமைகளாலும் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் சம அந்தஸ்து கொண்டவர்களாக முடியாது…” என்னும் வசனம் அருளப்பட்ட போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் இப்னுஸாபித் (ரலி) அவர்களை  அழைத்தார்கள். அவர் அகலமான எலும்பு ஒன்றைக் கொண்டு வந்து, அந்த வசனத்தை எழுதினார். (அருகில் இருந்த கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ரலி) தம் கண்பார்வையில்லாத நிலை குறித்து முறையிட்டார்கள். அப்போது, ‘…. தகுந்த  காரணமின்றி ..” என்ற (வாசகம் சேர்ந்த) முழு வசனம் (குரான் 04:95)அருளப்பட்டது.

பார்வையற்ற ஒருவர் தனது இயலாமையைத் தெரிவித்த பின்னரே அல்லாஹ்விற்கு போருக்கு வராமலிருப்பதற்கு சில நியாயமான காரணங்களும் இருக்கிறதென்று தெரிந்ததா?

 

புஹாரி ஹதீஸ் : 4517

அப்துல்லாஹ் பின் மஃகல் (ரலி )கூறியதாவது.

நான் இந்தப் பள்ளிவாசலில் – அதாவது, கூஃபா நகரின் பள்ளிவாசலில் – கஅப்பின் உஜ்ரா (ரலி) அருகே அமர்ந்தேன். அவர்களிடம் (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பகாரமாக நோன்புகள் நோற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொட்டிக் கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிச் செல்லப்பட்டேன். அவர்கள், ‘உங்களுக்கு இந்த அளவிற்குச் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு ஓர் ஆடு கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள்! அல்லது தலா ஓர் ஏழைக்கு அரை ‘ஸாவு’ உணவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளியுங்கள்; உங்கள் தலையை மழித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். எனவே, இந்த (திருக்குர்ஆன் 02:196 வது) வசனம், குறிப்பாக என் விஷயத்தில் அருளப்பட்டது. ஆனால், (அதன் சட்டம்) உங்களுக்கும் பொதுவானதாகும்” என்று கூறினார்கள்.

மனிதர்களின் தலைகளில் பேன்களால் ஏற்படும் சிரமத்தைக்கூட அல்லாஹ் அறியவில்லையா? அவனது தூதர் பேன்களின் தொல்லையைப் பற்றி தகவல் கூறியவுடன் முடியை மழித்துக் கொள்ள அனுமதி. என்னுடைய கேள்வி என்னவென்றால் அல்லாஹ்விற்கு எதுவும் தெரியாதா? மிகச் சாதாரணமான இந்த மனிதர்கள் சொல்வதை மறுஒலிபரப்பு  செய்ய அல்லாஹ் எதற்கு? அற்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வேதவாக்குகள் வெளிப்படுகிறேதே என்று நினைக்க வேண்டாம் அருவருப்பான அனுமதிகளும் வேதவாக்குகளான அற்புதங்களும் உண்டு

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2

முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 3

பலதாரமணம் ஏன்?1

பலதாரமணம் ஏன்?2

 

முகம்மதின் குழந்தைத் திருமணம்

ஒரு பதில் to “முகம்மதின் வேத வெளிப்பாட்டு முறைகள்”

  1. iniyavan ஜூன் 20, 2012 இல் 10:08 முப #

    இன்று கக்கூசுக்குப் போனாகூட கைப்பேசியுடன் சென்று தன் நிலையை அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்தலாம். பாவம் அல்லாவுக்கு இந்த சமாச்சாரமெல்லாம் எப்படி தெரிந்திருக்க முடியும்? அல்லா நாடியிருந்தால் ஆயிசா கக்கூசுக்குப் போய் தாமதமாக வந்த செய்தியை முகம்மதுக்கு வஹி அனுப்பி தெரியப்படுத்தியிருக்கலாமே ஏன் முடியவில்லை? அச் சமயத்தில் அல்லாவின் வஹிக்கு பவர் இல்லையோ???

    இனியவன்…

பின்னூட்டமொன்றை இடுக